நேற்றுக் கிடைக்காத அருணகிரிநாதரின் ராமாயணத்தில் வில் முறிந்தது பற்றிய பாடல் கீழே தந்திருக்கிறேன். திரு புஷ்பா ராகவன் அவர்கள் தான் கண்டுபிடித்துக் கொடுத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. திருவிடைக்கழி, திருப்புகழில் 799-ம் பாடல் இது. திருவிடைக்கழியிலேயே தேடியும் நேற்றுக் கண்ணில் படாமல் போய் விட்டது! :(
//அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே //
*************************************************************************************
பாலகாண்டத்தின் இறுதியில் அயோத்தியை வந்தடைந்துத் தத்தம் மனைவிமாருடன் இன்பமாய் வாழ்ந்து வந்தனர் சகோதரர்கள் நால்வரும். அப்போது கேகய நாட்டு அரசன் ஆன கைகேயியின் தந்தை, தன் மகனை அயோத்திக்கு அனுப்பித் தன் பேரனும் கைகேயியின் மகனும் ஆன பரதனைக் கேகய நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறி இருக்கவே, அதன்படி கைகேயியின் சகோதரனும், பரதனும் மாமனும் ஆன யுதாஜித், பரதனைச் சகல மரியாதைகளுடனும் கேகயநாட்டுக்கு அழைத்துச் செல்கின்றான். கூடவே பரதனை விட்டுப் பிரியாத சத்ருக்கனனும் செல்கின்றான். அங்கே கேகய நாட்டில் இளவரசர்கள் இருவரும் ராஜ உபசாரங்களில் மகிழ்ந்திருக்கும் வேளையில் இங்கே அயோத்தியில் மன்னன் தசரதன் உரிய காலம் வந்துவிட்டதாயும், இளவரசுப் பட்டம் கட்டி நாட்டை அவனிடம் ஒப்புவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாய் நினைத்தான். நான்கு மகன்களிலும் ஸ்ரீராமனிடம் தனிப் பிரியம் கொண்ட மன்னன், இவ்வாறு நினைத்ததில் தவறும் இல்லை. தாய்மார் மூவருக்குமே மிகப் பிரியமானவனாக இருந்து வந்தான். ஆகவே யாரும் எதிர்க்கப் போவதில்லை. மன்னன் மன மகிழ்ச்சியுடனேயே தன் மந்திரி, பிரதானிகளுடன் கலந்து ஆலோசிக்கின்றான். வால்மீகி எழுதி இருப்பது இளவரசுப் பட்டம் என்றே. ஆனால் கம்பரோ மன்னன் ஆகவே முடிசூட்ட எண்ணியதாய்த் தெரிவிக்கின்றார். அருணகிரிநாதரோ என்றால் அதை வெகு சுலபமாய் நாலே வரிகளில் முடிக்கின்றார்:இவ்வாறு:
"திண்சிலை முறியாவொண்
ஜானகி தனங்கலந்த பின்
ஊரில் மகுடங்கடந்தொரு
தாயர் வசனம் சிறந்தவன்" எனக் காட்டுக்கு உடனடியாக அனுப்புகின்றார்.ஆற்புத அழகு மட்டுமின்றி, அன்பு, இரக்கம், பொறுமை என்னும் செல்வங்களும் வாய்க்கப் பெற்றவள் ஜானகி என்பதையே "ஜானகி தனங்கலந்தபின்" எனக் கூறுகின்றார். ஜானகியிடம் இருந்த தனங்கள், அதாவது செல்வங்கள் ஆகியவ மேற்கூறும் நற்குணங்கள். கம்பரோ என்றால் நிதானமாய் வர்ணிக்கின்றார்.
முடிசூடப் போகும் ராமனுக்கு அதன் முக்கியத்துவம் பற்றியும், ராமன் இருக்கவேண்டிய நியதிகள், அனுசரிக்க வேண்டிய கடமைகள், மற்றும் செய்யவேண்டிய கடமைகள், இருக்கவேண்டிய உபவாசங்கள் போன்றவற்றைப் பற்றி தசரதன் எடுத்துக் கூறியதாய் வால்மீகியும், தசரதன் கட்டளையின் பேரில் வசிஷ்டர் கூறுவதாய்க் கம்பனும் கூறுகின்றார்கள். மேலும் கம்பன் கூற்றுப் படி தசரதன் ராமனுக்குப் பட்டம் சூட்டிவிட்டுக் காட்டில் வாசம் செய்யப் போவதாய்க் கூறுகின்றது, இவ்வாறு:
"ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி, இப்
பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்:
யாது நும் கருத்து? என இனைய கூறினான்"
என்று தசரதன் ஆலோசனை கேட்டதாய்க் கம்பர் கூறுகின்றார். சுமந்திரரைக் கூப்பிட்டு ராமரை அழைத்து வரும்படிக் கூறிப் பின்னர் சபைக்கு வந்த ராமருக்குத் தசரதன் தானே நேரில் தன் விருப்பத்தை ராமனிடம் தெரிவித்துப் பின்னர் ராமர் ஒரு யுவராஜாவாகக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தை உபதேசித்ததாய் வால்மீகி கூறுகின்றார். அவ்வளவில் மறுநாளே ராமனுக்குப் பட்டம் கட்டவேண்டிய நன்னாள் இருப்பதாயும் கூறும் தசரதர், மற்ற அரசவை மந்திரி, பிரதானிகள், குலகுரு வசிஷ்டர் ஆகியோரிடம் விடைபெற்றுச் சென்ற ராமனைத் திரும்பவும் அழைத்து வருமாறு சுமந்திரரைப் பணிக்கின்றான் தசரதன். வந்த ராமனிடம், தான் கண்டு வரும் கெட்ட கனவுகளையும், காணும் துர்ச்சகுனங்கள் பற்றியும் எடுத்து உரைக்கும் தசரதன்,"ராமா, என் உயிர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன்னர் நான் செய்ய வேண்டிய கடமை உன்னுடைய பட்டாபிஷேகம் மட்டுமே! ஆகையால் நீ உன் மனைவியுடன் இன்றிரவு உபவாசம் மேற்கொள்வாயாக! தர்ப்பைப் படுக்கையில் படுத்து, செய்யவேண்டிய தானங்களை முறைப்படி செய்து, தெய்வ சிந்தனையில் மனத்தை ஒருமைப் படுத்துவாயாக!" என்று கூற ராமனும் அவ்வாறே ஒப்புக்கொண்டு தன் மாளிகைக்குத் திரும்ப, மன்னன் தசரதன் அடுத்து நேரப் போவதைக் கற்பனை கூடச் செய்யாமல் மிக்க மன மகிழ்ச்சியுடனேயே கைகேயியின் அந்தப் புரம் நாடிச் சென்றான். தசரதன் வேண்டுகோள் படி வசிஷ்டர் கூறுவதாய்க் கம்பர் சொல்வது:
"யாரொடும்பகை கொள்ளல னென்றபின்
போரொடுங்கும் புகழொடுங்குங் காதுதன்
தாரோடுங்கல்செல்லாதது தந்தபின்
வேரொடுங்கெடல் வேண்டல் உண்டாகுமோ"
கம்பர் சீதையும் உடன் உபவாசம் இருந்ததாய்க் கூறவில்லை. இது இவ்வாறிருக்கக் கைகேயியின் அந்தப் புரத்திலே மந்தரை என்பவள் கைகேயியின் தகப்பனால் அவளுக்கு அனுப்பப் பட்டிருந்த அந்தரங்கப் பணிப்பெண், இதற்கு மேல் வால்மீகியில் எதுவும் அவளைப் பற்றிச் சொல்லவில்ல. ஆனால் கம்பரோ சிறுவயதில் ராமரின் விளையாட்டால் மந்தரை கோபமுற்றதாய்ச் சொல்லுகின்றார். அது நாளை!
அக்கா... இன்னும் எவ்வளவோ பதிவு இருக்கே ராமர் பட்டாபிஷேகத்துக்கு.நான்னெல்லாம் டீடீ மெட்ரோவுல முழுசா பாத்தவனாக்கும்:)
ReplyDeleteஇடைஇடையே உங்க/வீட்டு அனுபவப் பதிவுகளையும் போட்டா நல்லாயிருக்கும்ல்ல..,:)
உள்ளேனம்மா.
ReplyDelete:))