
தசரதர் செய்த பாபம் என்றால் சிரவணகுமாரனை யாரெனெத் தெரியாத நிலையில் கொன்றது ஒன்றே. பாபம் என்பதை அறியாமல் செய்த அவருடைய அந்தத் தவற்றின் பலனை அவர் இனி அனுபவிக்கப் போகின்றார். மேன்மை வாய்ந்த மன்னன் ஆனாலும் சரி, கடவுளே, மனிதராய் அவதரித்தாலும் சரி, அவரவர்களின் கர்மவினையை அவரவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு மட்டுமின்றிக் காலதேவனின் நியாயமும் கூட. அந்தப் புரத்துக்குள் செல்லும்போது மிகுந்த மனக்கவலையுடனேயே சென்ற தசரதர், புயல் காற்றில் அறுந்து விழுந்த பூங்கொடி போல் கீழே படுத்துக் கிடந்த கைகேயியைப் பார்த்து மனம் பதறுகின்றார். அவள் அருகே அமர்ந்து மெல்ல அவளைத் தூக்கிச் சமாதானம் செய்ய முயலுகின்றார். ஆனால் கைகேயியோ துள்ளி எழுந்து ஒதுங்கி நிற்கின்றாள். மனம் வருந்திய மன்னன் அவள் துயரத்தின் காரணம் கேட்க, அவளோ, "மன்னா, நீங்கள் எனக்கு அளிப்பதாய்ச் சொல்லி இருந்த இரு வரங்களையும் இப்போதே தரவேண்டும்! தருவதாய் வாக்குக் கொடுத்தால் அவை என்ன எனச் சொல்லுவேன்" எனக் கேட்கின்றாள். மன்னனோ, "தேவி, ராமன் மீது ஆணை! எது வேண்டுமோ கேள், என் மகன்களில் நான் அதிகப் பிரியம் வைத்திருப்பவன் ராமன் என்பது உனக்கும் தெரியுமே? அவன் மீது ஆணை!" என ஆணை இடுகின்றான், நடக்கப் போவதை அறியாமலேயே. இதைக் கம்பர், வால்மீகி இருவருமே ஒரே மாதிரியாகச் சொல்கின்றனர். கம்பர் இவ்வாறு கூறுகின்றார்:
"கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்
உள்ளம் உவந்துள செய்வேன் ஒன்றும் லோபேன்
வள்ளல் ராமன் உன் மைந்தன் ஆணை என்றான்."
இவ்விதம் ராமனின் மேல் கைகேயி நிறைந்த அன்பு வைத்திருந்ததையும் வெளிப்படுத்துகின்றார் கம்பர்.
பின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் கேட்கின்றாள். அவள் சூழ்ச்சி அறியாத மன்னனோ உடனே ஒத்துக் கொள்கின்றான். உடனேயே கைகேயி, "இப்போது ராமன் பட்டாபிஷேகத்துக்குச் செய்யப் பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டே என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும். இது முதல் வரம். இரண்டாம் வரம் என்னவெனில் ராமன் மரவுரி தரித்துப் பதினான்கு வருஷம் காட்டில் வாசம் செய்யவேண்டும்." எனக் கூறுகின்றாள். மன்னன் மனம் கலங்கியது. மூர்ச்சித்துக் கீழே விழுந்தான். அதைக் கம்பர் எவ்வாறு பதிவு செய்கின்றார் எனில் :
"நாகம் எனும் கொடியாள் தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடர துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்" நாகப் பாம்பின் நஞ்சைத் தன் நாவிலே வைத்திருக்கும் கைகேயியின் சொற்களைக் கேட்ட மன்னன், அந்த விஷம் உடம்பில் பரவியதால் விஷம் உண்ட யானையைப் போலத் தரையில் வீழ்ந்தான் என்கின்றார் கம்பர்.
மேலும்: "உலர்ந்தது நா உயிர் ஓடலுற்றது உள்ளம்
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி
சலம் தலைமிக்கது தக்கது என்கொல் என்று என்று
அலைந்து அலையுற்ற அரும்புலன்கள் ஐந்தும்!"
நாக்கு வரள, உயிர் போகும் நிலையில், கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்க ஒளியிழந்து போய், தன் ஐம்புலன்களும் அடங்க, இவை செய்யத் தக்க தொழில்கள் என்ன என எண்ணி மனம் சோர்ந்தான் மன்னன் தசரதன். கைகேயியின் காலில் விழுந்து அவளிடம் கெஞ்சுகின்றான், ராமனுக்குப் பட்டம் வேணுமானால் கட்டவில்லை, ஆனால் அவன் காட்டுக்குப் போகவேண்டாம், அவன் என்னைப் பிரிந்தால் அடுத்த கணமே என் ஆவியும் பிரிந்து விடும் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கின்றான். கெடுமதியால் மனம் நிறைந்திருந்த கைகேயி இது எதையும் கேட்கவே இல்லை. ஒரே பிடிவாதமாகத் தன் காரியத்தில் உறுதிபட நிற்கின்றாள். வால்மீகி ராமாயணத்தில் கடைசி வரையிலும் ராமன் காட்டுக்குச் செல்வதை தசரதன் ஒப்புக் கொள்ளவே இல்லை. ஆனால் கம்பரோ எனில் தசரதன் அந்த வரத்தையும் அளித்ததாகவே சொல்கின்றார்:
"நின் மகன் ஆள்வான், நீ, இனிது ஆள்வாய்,நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே, ஆளுதி தந்தேன் உரை குன்றேன்
என் மகன், என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடு இறவாமை நய என்றான்."
சொன்ன சொல் தவறாமல் பரதனுக்கேப் பட்டம் கட்டுவதாயும், அனைவருக்கும் பிரியன் ஆன ராமனைக் காட்டுக்கு அனுப்பவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளும் தசரதனைக் கைகேயி பல விதங்களிலும் ஏசப் பின்வருமாறு சொல்வதாய்ச் சொல்கின்றார் கம்பர்:
"வீய்ந்தாளே இவ் வெய்யவள் என்னா மிடல் வேந்தன்
ஈந்தேன் ஈந்தேனிவ்வரம் என் சேய் வனம் ஆள
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வேன் வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் எஇன் மகனொடும் நெடிது என்றான்."
என் அன்பு மகன் ராமன் காட்டுக்குச் செல்லட்டும், உனக்கு அந்த வரத்தையும் ஈந்தேன், பின்னர் நான் மாண்டு போய் விடுவே, நீ நீண்ட காலம் உன் மகனோடு சேர்ந்து இந்த நாட்டையும்,உலகையும், மக்களின் ஏச்சுக்களுக்கிடையே ஆண்டு வருவாயாக! எனச் சொல்கின்றானாம் தசரத மன்னன்.
இது இவ்வாறிருக்க பொழுதும் விடியத் தொடங்க, வசிஷ்டர், பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியவராய் தசரதன் மாளிகையை நெருங்க, மன்னனின் அந்தரங்க மந்திரியும், மெய்க்காப்பாளனும் ஆன சுமந்திரர் வசிஷ்டரை நோக்கிவருகின்றார். அவரிடம் வசிஷ்டர் மன்னனைப் பட்டாபிஷேகத்துக்குத் தயார் ஆகும்படி சொல்லச் சொல்கின்றார். சுமந்திரரும் கைகேயியின் அந்தப் புரம் நோக்கிச் சென்று, தசரதரை நோக்கி வசிஷ்டர் சொன்னதைச் சொல்லி விட்டு ஒதுங்கி நிற்க, மனம் நொந்த மன்னன், சுமந்திரரிடம் உன் வார்த்தைகள் எனக்கு மிக்க துன்பம் அளிக்கின்றது என்று கூறுகின்றான். அப்போது கைகேயி சுமந்திரரைப் பார்த்து ராமனை உடனேயே மன்னன் பார்க்கவேண்டும் எனச் சொல்லி அழைத்து வரும்படி பணிக்கின்றாள்.
**********************************************************************************88
ஸ்ரீராமநவமி அன்று பட்டாபிஷேகத்துடன் முடியும் எனப் பலரும் நினைப்பதாய்த் தெரிகின்றது. முடியாது. இத்தனைக்கும் உபகதைகள், கிளைக்கதைகளைத் தொடவே இல்லை. ராமாயணம் ஒரு சமுத்திரம். மூழ்கிக் கொண்டிருக்கிறேன். முத்தெடுத்துக் கொண்டு வரவேண்டும். அனைவரின் நல்லாசிகளோடும், வாழ்த்துகளோடும்.
//இது நான் படித்த ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் எழுதப் போகிறேன். .... எழுதப் போவது ராமாயணத் தொடர். வால்மீகி ராமாயணம் தான், ஆனால் ஆர்ஷியா சத்தார் என்னும் பெண்மணி இந்தத் தொடரை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்.//
ReplyDeleteஇப்படி எழுதிவிட்டு கடைசியில் கம்ப ராமாயணம் அடிக்கடி வருகிறது. தமிழ் காதல் வால்மீகியை சாப்பிட்டுவிட்டது போலிருக்கே!
//இப்படி எழுதிவிட்டு கடைசியில் கம்ப ராமாயணம் அடிக்கடி வருகிறது. தமிழ் காதல் வால்மீகியை சாப்பிட்டுவிட்டது போலிருக்கே!//
ReplyDeleteரீப்பீட்டே!!!!