
ஆர்ஷியா சத்தாரின் ராமாயணத்தை மறந்துட்டேனோன்னு திவா கேட்கின்றார். அப்படி எல்லாம் இல்லை, கடைசியில் அவரின் கருத்துக்களைக் கூடியவரை சொல்லிக் கொண்டே வருகின்றேன். அவர் எழுதி இருக்கும் கருத்தை ஒட்டிய என் குறிப்புக்கள் மட்டுமே ஒரு 50 பதிவுகளுக்கு வரும் என்பதால் அதிகமாய் எழுதவில்லை. ராமாயணம் எழுதும் நோக்கம் மாறிவிடும். இந்த அலசல் பற்றிப் பின்னர் நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன்.
திவா, ஆரம்பத்தில் இருந்தே ஒப்புவமை செய்ய ஆரம்பிச்சுட்டேன், நிறுத்த முடியலை, தவிர, வால்மீகி ராமாயண ஸ்லோகம் போடணும், அதையும் போட்டால் ரொம்பப் பெரிசாப் போகும், படிக்கிறதுக்குக் கஷ்டமாப் போயிடுமோனு போடலை! :))))))) உண்மையில் எழுத ஆரம்பிச்சால் நிறுத்தக் கட்டுப்படுத்திக்க வேண்டி இருக்கிறது. மற்றபடி வால்மீகி ராமாயணம் தான் அடிப்படை! சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
*************************************************************************************
மயங்கிக் கிடக்கும் மன்னனைக் கண்டு மனம் கலங்கிய சுமந்திரரைக் கைகேயி, ராமன் நினைவினால் அவர் தன்னை மறந்த நிலையில் இருப்பதாயும், அவர் உடனே சென்ரு ராமனை அழைத்து வருமாறும் கூறுகின்றாள். கம்பரும் அவ்வாறே கூறுகின்றார். சுமந்திரரும் ராமனின் அரண்மனைக்குச் சென்று சீதையுடன் உரையாடிக் கொண்டிருந்த ராமரிடம், கைகேயியின் மாளிகையில் இருக்கும் தசரத மன்னன் அழைத்துவரச் சொன்னதாய்க் கூறப் பட்டாபிஷேகம் தொடர்பாய்ப் பேச அழைத்துவரச் சொல்லி இருப்பதாயும், தான் சென்று வருவதாயும், அனைத்தும் நல்ல செய்தியே என்றும் சீதையிடம் தெரிவிக்கும் ராமர், உடனேயே வெளியே சென்று தசரதனைக் காணக் கிளம்புகிறார். லட்சுமணன் பின் தொடர்கின்றான். தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பட்டாபிஷேகத்துக்காக அலங்கரிக்கப் பட்டிருந்த வீதிகளையும், அலங்காரங்களுடன் வந்த பொதுமக்களைப் பார்த்துக் கொண்டே கைகேயியின் மாளிகைக்குச் சென்றார் ராமர். ஆனால் கம்பரோ முதலில் தசரதன் மாளிகைக்கு ராமன் சென்றதாயும், அங்கே மன்னன் இல்லை எனக் கண்டு பின்னர் கைகேயியின் மாளிகையை அடைந்ததாயும் தெரிவிக்கின்றார்.
"ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன்
தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர்
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும்."
அங்கே ஒரு பீடத்தில் அரசன் அமர்ந்திருப்பதையும், முக வாட்டத்துடன் இருப்பதையும் கவனித்துக் கொண்டார், ராமர். தந்தையை வணங்கி நிமிர்ந்தார். "ராமா!" என்ற ஒற்றைச் சொல்லுடன் அமைதியானான் மன்னன் தசரதன். தந்தையின் முகவாட்டத்தைக் கண்டு தன் சிறிய தாயான கைகேயியை ராமன் கேட்டதாய் வால்மீகி கூறுவது: " தாயே! நான் அறியாமல் கூட எந்தத் தவறும் செய்யவில்லை என நினைக்கின்றேன். தந்தை என்னைக் கண்டதும், முகம் வாடியவராய் ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கும் காரணம் என்ன? தந்தையின் துயரைப் போக்க நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்பதாய் வால்மீகி கூறக் கம்பரோ எனில் கைகேயி ராமன் வந்த உடனேயே தன் காரியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததாய்க் கூறுகின்றார்.
"நின்றவன் தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்
இன்று எனக்கு உணர்த்துதல் ஆவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்று எனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள்"
ஆனால் அருணகிரிநாதர் இவ்வாறு பூசி மெழுகாமல் உடைத்துச் சொல்கின்றார், கைகேயியே கூறுவதாய். மன்னன் சொல்வதாய்க் கம்பரும், ராமன் என்னவெனக் கேட்பதாய் வால்மீகியும் கூற அருணகிரிநாதரோ, "எனது மொழி வழுவாமல் நீயேகு கான்மீதில்" எனக் கைகேயி கூறுவதாய்ச் சொல்லி முடித்துவிடுகின்றார். வால்மீகியின் கைகேயியோ, ராமனிடம் தசரதன் தனக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றியும் அதை நிறைவேற்ற வேண்டிய வேளை நெருங்கிவிட்டதையும் கூறுவதோடு, தான் அந்த வாக்குறுதி என்ன என்பதைச் சொல்ல வேண்டுமானால், ராமனிடம் அதை விவரிப்பதால் பயன் இல்லை என்ற அவலம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுவதாய் ராமனை உறுதி மொழி கேட்கின்றாள். சத்திய நெறியைக் கடைப்பிடிக்கும் ராமரோ, தான் அந்த வாக்கைக் கொடுப்பதாயும், மன்னனின் துக்கம் மாற தீயில் புகவோ, விஷம் அருந்தவோ, கடலில் மூழ்கவோ எதுவானாலும் தயார் எனவும், சொன்ன சொல்லை மாற்ற மாட்டேன் எனவும் உறுதி கொடுக்கின்றார். பின்னர் கைகேயி தான் வரம் வாங்கிக் கொள்ள நேர்ந்த சந்தர்ப்பங்களை விவரித்து விட்டு, அந்த இருவரங்களைத் தான் இப்போது மன்னனிடம் கேட்டதாயும் கூறுகின்றாள்.
மேலும் ராமனைப் பார்த்து அவள் கூறுவதாவது: ராமா! உனக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் எனவும், நீ காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டும் எனவும் மன்னனிடம் நான் இரு வரங்கள் கோரி உள்ளேன். அந்த வரங்கள் பூர்த்தி அடைவது உன் கையில் தான் உள்ளது. நீ மரவுரி தரித்து, சடை முடி தாங்கிக் காட்டில் வாழவேண்டும், இதை எவ்வாறு சொல்வது என்றே உன் தந்தை தயங்குகின்றார். அவர் சத்தியத்தில் இருந்து தவறாமல் இருக்கும்படி அவர் மூத்த மகனாகிய நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும். தசரத மன்னன் கொடுத்த வரங்களைக் காப்பாற்றுவான் என்ற பெயர் அவருக்கு நிலைக்குமாறு நீதான் செய்யவேண்டும்!" என்று சொல்ல, மன்னன் தசரதன் "ஓ"வெனப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கின்றான். மன்னனின் துக்கம் பெருகுகின்றது. ஆனால் ராமனோ இதைக் கேட்டுச் சற்றும் கவலையின்றி, "தாயே! நீங்கள் கூறியவையே நடக்கும். பரதனுக்காக நான் எதையும் விட்டுக் கொடுப்பேன். ஆனால் தந்தை என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கின்றாரே, அது தான் துக்கமாய் உள்ளது. மன்னர் உத்தரவின் படியே நான் நடப்பேன். பரதனை அழைத்து வரத் தூதர்களை அனுப்பச் சொல்லுங்கள். நான் வனம் செல்கின்றேன்." என்று கூறியதும் கைகேயி உடனேயே காரியம் நிறைவேற வேண்டும் எனக் கவலை அடைந்தாள்.
"இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே யாரும்
செப்ப அருங்க்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா."
என்று ராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்ததாய்க் கம்பர் இந்தக் காட்சியை வர்ணிக்கின்றார். பரதன் வரும் வரையில் தாமதிக்க வேண்டாம் எனவும், உடனேயே புறப்படுமாறும் கைகேயி அவசரப் படுத்துகின்றாள் என வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி சொல்கின்றார். தந்தை தன்னிடம் நேரில் சொல்லவில்லையே என மனம் நொந்த ராமர், கைகேயியிடம் என்னிடம் நல்ல குணம் உண்டு என நீங்கள் மனதில் கொள்ளவில்லையா? நீங்களே நேரில் எனக்குக் கட்டளை இட்டாலும் நான் செய்ய வேண்டியவனே அல்லவா? இவ்விஷயத்தில் மன்னரை வேண்டி நிற்றல் தகுமோ? பரவாயில்லை!" என்று சொல்லிவிட்டு, இருவரையும் வலம் வந்து வணங்கிவிட்டுப் பின்னர் புறப்படும்போது பெரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்கும் லட்சுமணனைக் கண்டார்.
************************************************************************************
பல இந்தியக் குழந்தைகளுக்கும் படுக்கை நேரக் கதையான இந்த ராமாயணக் கதையின் கதாபாத்திரங்களை வடித்திருக்கும் நேர்த்திக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விதத்தில் உள்ளது. ஒரு பேரரசனுக்கு மகனாய்ப் பிறந்தும், பட்டத்து இளவரசனாய் இருந்தும், ஒரு பேரழகியை மணந்தும் இருக்கும் கதாநாயகன் ஆன ஸ்ரீராமன் ஒரு சாதாரண மனிதனாகவே தன்னை எண்ணிக் கொள்வதோடு அல்லாமல் அப்படியே நடந்தும் கொள்கின்றான். ஆனால் எவ்வாறு? மிக்கக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒருவனாய், ஒழுக்கத்தில் சிறந்தவனாய், கோபம் என்பதே இல்லாதவனாய், பெரியோர்களிடத்தில் மரியாதை நிறைந்தவனாய், பெற்றோரை மதிப்பவனாய், மனைவியை உயிராய்க் கொள்பவனாய், சகோதரர்களிடத்தில் பாசம் மிகுந்தவனாய், நாட்டு மக்களைத் தன் மக்களாய் நினைப்பவனாய் இவ்வாறாகப் பூரணமான நற்குணங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றவனாய், ஒரு முன் மாதிரியான மகனாய், சகோதரனாய், கணவனாய், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு அரச குமாரனாய், அரச நீதியைப் போற்றுபவனாயும், காப்பாற்றுபவனாயும் உள்ளான், இதனுள் ஒளிந்திருக்கும் அவன் வாழ்க்கையின் தனிப்பட்ட சோகங்கள் தான் எத்தனை? எத்தனை? அவன் சந்திக்கப் போகும் மனிதர்களின் வாழ்விலும் எத்தனை விதங்கள்? ஒரு தகப்பன் - மகன், சகோதரர்களின் உறவின் முறையில் வித்தியாசங்கள், நட்பின் வட்டத்தில் மாற்றம், நட்பின் ஆழம், கணவன், மனைவியின் உறவின் ஆழம், பிரிவின் துக்கம், தன்மதிப்பின் விளைவுகள், தனிப்பட்ட வாக்குறுதிகளின் விளைவுகள், இனக்கவர்ச்சி, ஏமாற்றுதல், ஒரு தலைக்காதல், அதன் விளைவால் ஏற்பட்ட பழிகள், சுமந்த பாவங்கள், பேரிழப்புகள், அரசனின் கடமை, நேர்மை, குணநலன்கள், என்று அனைத்தையும் பற்றியும், அதன் வித்தியாசங்களையும் இந்தக் கதையின் பாத்திரங்களிடையே நாம் பார்த்தாலும் கடைசில் நாம் காணப் போவது, ஒரு தனிமனிதனின் நல் ஒழுக்கத்தினால் வெளிப்படும்/ ஏற்படும் அவன் உறவுகளின் தனிப்பட்ட சோகங்களே.
//தவிர, வால்மீகி ராமாயண ஸ்லோகம் போடணும், அதையும் போட்டால் ரொம்பப் பெரிசாப் போகும், படிக்கிறதுக்குக் கஷ்டமாப் போயிடுமோனு போடலை! :))))))//
ReplyDeleteசரி, ஒரு 2-3 ஸ்லோகமாவது போடலாமே?...
இராம ஜனன ஸ்லோகம் போடுங்களேன். இன்னைக்கு பாராயணத்துக்கு வசதியா இருக்கும்.
மைதிலி மணாளன் கானகம் ஏகுமாறு அன்னை சொன்னதை நன்கு சொல்லியிருக்கிறீர்கள் அம்மா.
ReplyDelete