எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 26, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 27



பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர் ஆன புலஸ்தியர் என்பவர், ஒரு ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டிருந்தார். அந்த ஆசிரமத்தில் பெண்கள் நுழையக் கூடாது எனக் கட்டுப்ப்பாடும் விதிக்கப் பட்டிருந்தது. மீறி நுழையும் பெண்கள், புலஸ்தியரின் சாபத்தின் படி அவருடன் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பம் தரிப்பார்கள் எனச் சொல்லப் பட்டிருந்தது. ஆனால் ஒருமுறை த்ருணபிந்து என்னும் ரிஷி குமாரி, தவறுதலாய் அனுமதி இல்லாமல் புலஸ்தியரின் ஆசிரமத்தில் நுழைந்துவிட, சாபத்தின் பலனாய்க் கர்ப்பம் தரிக்கின்றாள். அழுது, புலம்பிய தன் மகளுக்காக த்ருணபிந்து, புலஸ்தியரை வேண்ட, அவரும் அவளை மனைவியாக வரிக்கின்றார். இவர்களுக்குப் பிறக்கும் மகன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் வளர்ந்து, பாரத்வாஜ முனிவரின் மகள் தேவ வர்ணனியை மணக்கின்றார். இவர்கள் இருவருக்கும் பிறக்கின்றான் ஒரு குமாரன், அவனுக்கு வைஸ்ரவணன் என்ற பெயர் வைத்து வளர்ந்து வருகின்றான். பெரும் தவங்களைச் செய்கின்றான் அவன். தேவர்களுக்கு எவ்விதத்திலும் உதவ வேண்டும் என்ற உள்ளத்துடனும், உலகத்து நாயகர்களாய் இருக்க வேண்டும் என்ற ஆவலுடனும் இருக்கின்றான் அவன். பிரம்மாவை நோக்கித் தவம் இருந்த அவன் முன்னர் பிரம்மா தோன்றி, "எமன், இந்திரன், வருணன் ஆகிய மூவரோடு நான்காவது உலக நாயகனைத் தேர்ந்தெடுக்க நினைத்த என் வேலையை நீ தீர்த்துவிட்டாய். அந்தப் பொறுப்பை உனக்கு அளிக்கின்றேன். இதோ! இந்தப் புஷ்பக விமானம், நினைத்த போது நினைத்த இடத்திற்குச் செல்லும் தன்மை வாய்ந்தது. இதைப் பெற்றுக் கொண்டு நீ பெரும் செல்வத்திற்கு அதிபதியாகின்றாய்!" என்று சொல்லி வைஸ்ரவணனுக்குக் குபேர பதவியை அளிக்கின்றார்.

தன் தந்தையிடம் சென்று, தான் வசிக்கத் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கேட்க, அவரும் தென் கடலுக்கு அப்பால், திரிகூட மலையை ஒட்டி, இலங்கை என்னும் பெயருடைய ஒரு அழகான நகரம் இருக்கின்றது. தேவதச்சன் விஸ்வகர்மாவால், ராட்சதர்களின் ஆணைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப் பட்ட அந்த நகரம் தற்சமயம் அரசனும் இல்லாமல், பிரஜைகளும் இல்லாமல் காலியாக இருக்கின்றது. ராட்சதர்கள் அனைவரும் விஷ்ணுவிற்குப் பயந்து ஓடிச் சென்று விட்டார்கள். அந்த நகரை நீ எடுத்துக் கொண்டு உலகிற்கு நன்மை செய்வாயாக!" என்று சொல்லி அனுப்புகின்றார். குபேரன் அனைவரும் பாராட்ட இலங்கையை அடைந்து அரசாட்சி புரிந்து வருகின்றான். அப்போது, மிஞ்சி இருந்த ராட்சதர்களில் முக்கியமானவன் ஆன சுமாலி, பாதாளத்தில் ஒளிந்திருந்தவன், இந்தச் செய்தியைக் கேட்டு மனம் வெதும்பினான். அவனுக்கு அழகே உருவான கைகஸி என்ற பெண்ணொருத்தி இருந்தாள். அவளுடன் ஒரு இடத்தில் நில்லாமல் அங்கேயும், இங்கேயும் அலைந்து திரிந்த ஒரு சமயம் விண்ணில் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருந்த குபேரனையும், அவன் தேஜஸையும், கம்பீரத்தையும் பார்த்தான். ஏற்கெனவே அவன் புகழையும் பற்றிக் கேள்விப் பட்டிருந்த சுமாலி இப்போது இன்னும் மனம் கொதித்தான். பொறாமையில் துவண்டு போனான். தன் அழகிய மகளைப் பார்த்து, " உனக்குத் திருமணப் பருவம் வந்து விட்டது, நீ குபேரனின் தகப்பனும், புலஸ்தியரின் மகனும் ஆன விஸ்ரவஸை அணுகி உன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்வாய். உனக்குக் குபேரனுக்கு நிகரான மகன் பிறப்பான். பெரும் புகழ் அடைவான் அந்த மகன். அவன் மூலம் இழந்த ராஜ்யத்தைத் திரும்பப் பெறலாம்!" என்று சொல்கின்றார். கைகஸியும் தகப்பன் யோசனையின் பேரில் விஸ்ரவஸை அடைந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, இரு கை கூப்பி வேண்டுகின்றாள்.

விஸ்ரவசோ, தன் தவ வலிமையால் அவள் எண்ணம் புரிந்தவராய், அவளிடம்,"பெண்ணே! உன் எண்ணம் என்னவென எனக்குப் புரிகின்றது. ஆனால் நீ என்னை வந்து அணுகி இருக்கும் இந்நேரம் நல்ல நேரம் அல்லவே! ஆகையால் உனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் கொடுமைக்காரர்களாயும், உருவத்தில் பயங்கரமாயும் இருப்பார்களே?" என்று கூறுகின்றார். அதுவும் அவள் உடனேயே ஆசிரமத்திற்குள் அனுமதி இன்றிப் புகுந்ததால் கர்ப்பமும், குழந்தைப் பேறும் தவிர்க்க முடியாது எனவும் கூறுகின்றார். அதிர்ச்சி அடைகின்றாள். கைகஸி, எனக்கு அப்படிப் பட்ட பிள்ளைகள் வேண்டாம் எனக் கதறுகின்றாள். ஆனால் விஸ்ரவஸோ, இதைத் தடுக்க முடியாது, எனவும், உனக்குப் பிறக்கும் கடைசி மகன் மட்டும் தெய்வ பக்தி நிறைந்தவனாய், என்னைப்போல தவ வலிமைகள் உள்ளவனாய் இருப்பான். உன் மகன்களின் குலமும் அவன் மூலமே விருத்தி அடையும்!" என்று கூறுகின்றார். பின்னர் சிறிது காலத்தில் கைகஸிக்கு ராவணன் பிறக்கின்றான். பிறக்கும்போதே ரத்த மழை, பயங்கரமான இடி முழக்கம், சூரிய ஒளி மங்கியது, வால் நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்தன, பேய்க்காற்று, பூமி நடுக்கம், கடல் கொந்தளிப்பு இத்தனைகளுடன் பத்துத் தலைகளுடன், பிறந்தான் ராவணன்.

இவனுக்கடுத்து பெரும்பலம் வாய்ந்தவனாய்க் கும்பகர்ணனும், கோர உருவத்துடன் கூடிய சூர்ப்பநகையும் பிறந்தார்கள். கடைசியில் விபீஷணனைப்பெற்றெடுத்தாள் கைகஸி. அப்போது விண்ணில் இருந்து பூமாரி பொழிந்தது, யக்ஷர்களும், தேவர்களும் இனிய கானம் இசைத்தார்கள், அசரீரிகள் வாழ்த்துச் சொல்லின. தசக்ரீவன் எனப் பெயரிடப் பட்ட ராவணனும், கும்பகர்ணனும், பிறரைத் துன்புறுத்துவதில் இன்புற்று வாழ, விபீஷணனோ, வேதங்களைக் கற்று அமைதியான முறையில் தன் வழிபாடுகள், தவங்கள் என வாழ்ந்து வந்தான். இந்நிலையில் ஓர் நாள் விண்ணில் அதசய புஷ்பக விமானத்தில் குபேரன் பறந்து செல்ல, குபேரனின் ஒளியையும் சிறப்பையும் கண்டுப் பிரமித்து நின்ற தசக்ரீவனை கைகஸி அழைத்து, அது உன் சகோதரன் தான், வேறு யாரும் இல்லை, மாற்றாந்தாய் மகன், அவன் ஒளியையும், கம்பீரத்தையும் பார்! நீ அவனைப் போல் ஆக வேண்டாமா? எனக் கேட்க ராவணனின் மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
*************************************************************************************

இந்த ராவணனின் பத்துத் தலைகளுக்கும் தனித் தத்துவமே உண்டு. நாமே ஒருவரிடத்தில் நடந்து கொள்கிறாப் போல் இன்னொருவரிடம் நடப்பதில்லை. தாய், தந்தையிடம் ஒரு மாதிரி, மனைவி, குழந்தைகளிடம் ஒரு மாதிரி, அலுவலகத்தில் சக ஊழியர் என்றால் ஒரு மாதிரி, மேல் அதிகாரி என்றால் வேறு மாதிரி, சிநேகிதர்களிடம் ஒரு மாதிரி, என்று பல்வேறு விதமான குண அதிசயங்கள் கொண்டவர்களே. ஒரே மாதிரி நடந்து கொள்ளுவதில்லை நாம் அனைவரிடமும். நமக்குள் நாமே புரிந்து கொள்கின்றோமா என்பதே சந்தேகம் தான். நாம் ஒருவர்தான் என்பதை நாம் அறிவோம், என்றாலும், நமக்குள் இருப்பவர்கள் எத்தனை பேர்கள்? இது தான் ராவணனின் பத்துத் தலைகளின் தத்துவம், மிகச் சிறந்த சிவ பக்தனும், வீணை விற்பன்னனும், வீரனும், சகோதர, சகோதரிகளிடம் பாசம் கொண்டவனும், முறை தவறி எதிலும் நடவாதவனும் ஆன ராவணன், முதல் முதலாய் முறை தவறி நடந்து கொண்டது சீதை விஷயத்தில் தான். ஆனால் ராமனோ என்றால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரியாக நமக்குள் இருக்கும், "நான்' விழிப்புற்றவனாய், தனக்கு நேரிடும் துன்பத்தைக் கூடப் பொருட்படுத்தாதவனாய், எப்போதும் தருமத்தின் வழி நடப்பவனாய் இருக்கின்றான். இரு பெரும் வீரர்களில் ஒருவன் தோல்வி அடைவதும், மற்றவன் வெற்றி அடைவதும் அதனால் தான் அல்லவா?

1 comment:

  1. அருமையாக இருக்கிறது கீதா. ராவணனின் பத்துதலைகளுக்கான விளக்கமும் கதையும்.

    எவ்வளவு பெரிய விஞ்ஞானிகளா க நம் முனிவர்கள் இருந்திருக்கிறார்கள்!!!
    கைகசி என்ற பெயரை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.பாவம் அந்த அன்னை.
    சுமாலியே தகப்பனாக இருந்தும் பொறாமையால் தன் பெண்ணையே அற்பக் கருவியாகப் பயன்படுத்தி இருக்கிறானே. முன் பதிவுகளையும் படிக்கிறேன். வெகு அழகாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete