எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 22, 2007

ஒரு வாரமாய் என்ன செய்தேன்?

சமீபத்தில் பார்த்த பட வரிசையில்
எங்கிருந்தோ வந்தாள் - பார்த்தது தான், இந்தி மூலம் இன்னும் நல்லா இருக்கும்.

பேரழகன் - அருமை, முதல் தரமாய்த் தான் பார்த்தேன்.

பம்மல்கே.சம்மந்தம் - படமா இது? கண்ணராவி! அந்தக் கோர்ட் காமெடி மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் ரஜினி ஏற்கெனவே இன்னொரு படத்தில் செய்துவிட்டார்.

புத்தகங்கள்:
சூர்ய காந்தம் - லஷ்மி
காஞ்சனையின் கனவு -லஷ்மி

ஆகாச வீடுகள் - வாசந்தி, அருமையான கதை, கதாநாயகி லலிதா மதிரி தான் என்னோட அம்மா! :(((((
பாரதியும் சமூகமும்,
பாரதியும் பெண்மையும் இரண்டுமே பெரியசாமி தூரன் எழுதினது.

மணிக்கொடி இதழ்களின் தொகுப்பு - (சிட்டி)சுந்தரராஜன், அசோகமித்திரன், முத்துக்குமாரசாமி தொகுத்தது. சுத்தானந்த பாரதியாரின் பிரசித்தி பெற்ற இரு கவிதைகளும் அடங்கி உள்ளது. இதில் தான் "ரசிகமணி" எழுதி உள்ள "கம்பனின் மாண்பு" என்ற கட்டுரையில் கம்பர் காலம் பற்றிய விவாதம் இருந்தது, இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். இவரின் கூற்றுப்படி "கம்பராமாயணம்" "திருவெண்ணெய்நல்லூரில்" அரங்கேறியது. கம்பர் வாழ்ந்த காலம் கி.பி.8 -ம் நூற்றாண்டு. என்று எடுத்துச் சொல்லுகிறார்.

வால்காவில் இருந்து கங்கை வரை -ஏற்கெனவே படிச்சது என்றாலும் அப்போது உள்ள வயசுக்கும் இப்போது உள்ள வயசுக்கும் வேறுபாடு இருப்பதால் எந்த அளவுக்கு என் கருத்து மாறப் போகிறது எனப் பார்க்க வேண்டும். இன்னும் மிச்சம் இருக்கு.

அகிலனின் வாழ்வு எங்கே?

இந்திரா செளந்திரராஜன் - சுற்றிச் சுற்றி வருவேன்! கதையும் சுற்றிச் சுற்றியே வருது! வழக்கமான பேய், பிசாசு, மறு ஜென்மம், பழி வாங்கல், ஜமீன் குடும்பம், மதுரைப்பக்கம் உள்ள உணர்ச்சிகளில் மூழுகும் மக்கள் படம் பிடித்துக் காட்டுகிறார்.

சி.சு.செல்லப்பாவின் "சுதந்திர தாகம்" வாங்கிட்டு வந்தாச்சு, ஆனால் கிளம்பும் முன்னர் படிக்க முடியுமா? தெரியலை, முதல் பாகம்தான் கொண்டு வந்தேன். அதுவே முடிக்க முடியுமா தெரியலை. பார்க்கணும்.

Tuesday, September 18, 2007

அவசரமாய்க் கரைக்கப் பட்ட விநாயகர்!
கொஞ்சமும் யோசிக்காமல் இன்னிக்குக் கடலில் பிள்ளையார் கரைக்கப் படுவார்னு அறிவித்து விட்டேன். இன்னும் எழுத வேண்டியது நிறையவே இருக்கிறது.ஆனால் "விசர்ஜனம்"னு அறிவிச்சதாலே (அவசரக்குடுக்கை) வலுக்கட்டாயமாய் இந்தப் புராணத்தை முடிக்கவேண்டும். விநாயகருக்கு அருகம்புல் ஏன் சாத்துகிறார்கள் என்பதற்குப் புராணங்கள் சொல்லும் கதை என்னவென்றால், அனலாசுரனைத் தன் பேழை வயிற்றில் அடக்கிக் கொண்டதால் அவர் வயிற்றினுள் இருந்த மூவுலகமும் வெப்பம் தாங்கமாட்டாமல் தவித்த காரணத்தால் குளுமையைக் கொடுக்கும் அருகைச் சாற்றி வெப்பத்தைத் தணித்தார்கள் எனச் சொல்லுவது உண்டு. ஆனால் விஞ்ஞான பூர்வமாய்ப் பார்த்தோமானால் இந்த மண்ணில் முதன் முதல் தோன்றியது புல் தான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது. மண்ணின் நாயகர் ஆன அவர் இந்த மண்ணில் விளைந்த எளிய பொருட்களைக் கொடுத்தாலே போதும், திருப்தி அடைவார். அந்தப் பூமியையே வழிபடும்போது அதில் விளைந்த தானியங்களையும், பழங்களையும், உணவு வகைகளையும் தானே அவருக்கு நிவேதனமாய்ப் படைக்க வேண்டும்.

தவிர, யானைக்குக் கரும்பு பிடிக்கும். இனிப்பு வகைகளில் பிரியம் கொண்டது யானை. அதனாலேயே கரும்புத் துண்டங்களும், அரிசியில் செய்த அன்னம், பாயாசம், கொழுக்கட்டை போன்றவையும் படைக்கிறோம். மேலும் கொழுக்கட்டையானது நம் உடலின் உள்ளே உள்ள மகத்தான பூரணத்துவத்தையும் அதன் இனிமையையும் மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறது. எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும். தேங்காய் உடைப்பது என்பதும் மிக அரிய ஒரு தத்துவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனுக்கு எவ்வாறு மூன்று கண்களோ அவ்வாறே தேங்காய்க்கும் மூன்று கண்கள். ஈசனைப் போன்ற உயர்ந்த தேங்காயைப் பிள்ளையாருக்குப் படைப்பதின் மூலம் நம்மிடம் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த வஸ்துவை இறைவனுக்குக் கொடுக்கிறோம். மேலும் தேங்காயின் ஓடு மிகவும் கெட்டியாய் நம் மண்டை ஓட்டைப் போல் இருக்கிறது. அதன் பருப்பும், உள்ளே உள்ள இனிப்பான நீரும் நம் உடலினுள் மூளைக்கு மிக அருகில் அமைந்துள்ள அமிர்தமய கோசத்தைக் குறிக்கும். நம் மண்டையையே சிதற அடிக்க்கிற பாவனையிலும், நம் அகங்காரம் அதன் மூலம் அகன்று உள்ளே உள்ள அமிர்தானந்த மய நிலையை நாம் அடைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தவும் தேங்காய் உடைக்கப் படுகிறது.

விநாயகரை நாம் வழிபடுவது போல் விநாயகர் யாரையாவது வழிபட்டிருக்கிறாரா என்றால் ஆம். விநாயகரின் குரு சூரியன். அந்த சூரியனிடமே நேரில் வேத சாஸ்திரங்களைக் கற்றவர் இருவர். ஒருவர் விநாயகர், மற்றவர் அனுமன். வாயு புத்திரன் ஆன அனுமன் வாயு வேகத்தில் சுழன்று, சுழன்று சூரியனின் ரதத்திற்கு முன்னே கை கூப்பி நின்று கொண்டே அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து கொண்டும், பாடங்களைக் கற்றார் என்றால் விநாயகரோ சூரியன் ஸ்ரிமன்நாராயணனை வலம் வரும்போது, சூரியனை வலம் வந்து வேத சாஸ்திரங்களைப் பயின்றார். அதனால் தான் மஹா கணபதி ஹோமம் செய்பவர்கள் சூரியோதயத்தில் செய்வதும் வழக்கம். இதைக் காரணம் வைத்தே தான் எந்த ஒரு பூஜையோ, வழிபாடோ, பஜனையோ ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்துப் பின்னர், அனுமனில் வந்து முடியும்.

நம் தமிழ் ஆண்டுகள் முற்காலத்தில் "ஆவணி" மாதத்துக்கு முன்னர் ஆரம்பித்ததாய்ச் சொல்லுவார்கள். இது பற்றி நேற்றுக் கூட ஒரு செய்தி படித்தேன். அது போல ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தியுடன் நம் பண்டிகைகளும் ஆரம்பித்து ஆண்டு இறுதியில் ஹனுமத் ஜெயந்தியுடன் முடிவடையும். இதைத் தான் பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிக்கவேண்டும் என்பதை "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" எனச் சொல்லி இருக்கிறார்கள். காலப் போக்கில் பழமொழியின் அர்த்தம் மாறியதைப் போல் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடும் மாதமும் மார்கழிக்கு மாறி விட்டது. ஆனால் இங்கே அமெரிக்காவிலும், இன்னும் சில குறிப்பிட்ட இந்தியக் கோவில்களிலும், பங்குனி கடைசியிலோ அல்லது சித்திரை மாதத் தொடக்கத்திலோ தான் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இந்த வருஷம் மெம்பிஸ் கோவிலில் "மே"மாதம் தான் அனுமத் ஜெயந்தி மிக விமரிசையாக நடந்தது.

பிள்ளையாரைக் கடலிலோ அல்லது நீரிலோ கரைக்க வேண்டும். ஏன்? சமுத்திரங்களால் நிரப்பப் பட்டிருந்த் இந்த பூமியானது, சமுத்திரம் உள்ளே போனதால் தான் தெரிய ஆரம்பித்து உள்ளது. அந்த சமுத்திரம் மீண்டும் பொங்கினால்? இந்த பூமி எங்கே? சமுத்திரத்தில் இருந்து வந்த இந்தப் பூமி சமுத்திரத்துடன் மீண்டும் கலப்பது என்றோ ஒரு நாள் நடக்கப் போவது நிச்சயம். அந்த நிலையாமையைத் தெரிவிக்கவும், ஒரு வகையில் இன்றளவும் சமுத்திரம் தன் கட்டுப்பாட்டை மீறாமல் பூமித் தாயைக் காத்து வருவதற்கும் நன்றி சொல்லும்விதமாய், உன்னிலே இருந்து வந்தோம், உன்னிலேயே அடங்கவும் போகிறோம், அது வரை பொறுத்திரு என்று சொல்லி "விசர்ஜனம்" செய்கிறோம்.

கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காச்சுது.

Monday, September 17, 2007

விநாயகருக்கு ஒரு வேண்டுகோள்!

தமிழ்மணம் திரட்டியை அடுத்த வாரத்தில் இருந்து அதாவது 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை காப்பாற்ற ஆள் தேவை! :P :P :P

விநாயகர் மகத்துவம் தொடருகிறது!

விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர். மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, அல்லது களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். களிமண்ணால் ஆன விநாயகருக்குத் தான் விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து பின்னர் அந்த விநாயகரைக் கடலிலும் கரைக்கிறோம். ஏன் தெரியுமா? இந்த உலகம் மண்ணால் ஆனது. ஒரு காலத்தில் முழுதும் கடல் நீரினால் சூழப் பட்ட இவ்வுலகம் கடல் பின் வாங்கியதால் தோன்றியது என்றும் சொல்வதுண்டு. அந்தக் கடல் பின்வாங்காமல் முன் வாங்கினால் இவ்வுலகம் மீண்டும் கடலுக்குள் போவதும் உறுதி! பூமித் தாய்க்கும், கடலரசனுக்கும் நன்றி செலுத்தும் விதமாய்க் களிமண்ணால் ஆன விநாயரைப் பிடித்து வைத்துப் பூஜை செய்துப் பின்னர் அதைக் கடலிலும் சேர்க்கிறோம். இன்னொரு விதமாயும் சொல்லலாம். உமையவளின் அழுக்கைத் திரட்டி வைத்து விநாயகர் உருவானார் என்பதாயும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையிலும் உள்ள உள்ளார்ந்த தத்துவம் என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்தைச் சக்தியாக நினைத்தோமானால் அந்த மாபெரும் சக்தியின் சுழற்சியால் தோன்றிய இந்தப் பூமியின், மாசு, மருக்களான அழுக்குகளைத் திரட்டி விநாயகர் உருவானார் என்றும் சொல்லலாம். இது பற்றித் திரு சுகி சிவம் அவர்கள் தன்னுடைய சொற்பொழிவிலும் மிக அழகாய்ச் சொல்லுவார்.


மேலும் நம் உடலில் மூன்று விதமான நாடிகளும் இணைந்துள்ள மூலாதாரத்துக்கும் அதிபதி "கணபதி"யே ஆவார். இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் சேரும் இடுப்புக்குக் கீழ் பாகத்தை பூமிக்குச் சமமாகச் சொல்லுவதுண்டு. இங்கே தான் மூலாதார சக்தி உறைந்து கிடக்கிறது. அது எழும்பி மேலே உள்ள "ஸ்வாதிஷ்டானம்" என்னும் நீரின் சக்தியுடன் சேர்ந்து கொண்டால் தான், பூமியில் உள்ளே கிடக்கும் விதையில் இருந்து முளை வெளிக் கிளம்பிப் பின்னர் அது வளர்ந்து பெரிய விருட்சமாய் ஆவதைப் போல் நம் "குண்டலினி சக்தி" படிப் படியாக மேலே எழும்பிப் பின் சகஸ்ராரத்தை அடைய முடியும். அந்த மூலாதாரத்துக்கு அதிபதியாகவும் கணபதி தான் விளங்குகிறார். அதற்காகவும் கணபதி வழிபாடு செய்யப் படுகிறது. என்றாலும் இது மிகுந்த ஞானிகளுக்கு மட்டுமே உணரக் கூடிய ஒன்றாகையால், நம் போன்ற சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டும் வகையில் இந்த பூமியைப் பெண்ணாக உருவகப் படுத்தி, அவளின் மண்ணில் இருந்து உருவான பிள்ளையாரைக் கும்பிடச் சொல்லி இருக்கிறார்கள் பெரியோர்கள். வழிபடும் விதம் எப்படி இருந்தாலும் நோக்கம் ஒன்று தானே.

கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும். விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகிறது. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?

நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பல எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு. விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்வோமே அதன் காரணம என்ன தெரியுமா? நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரண்டு கையையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு "தோர்பி கரணம்" போட வேண்டும். யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது. இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப் படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும். பள்ளியில் சில மாணவர்கள் அதிகமாய்ப் படிக்காமல் இருந்தால் அவர்களுக்குத் தோப்புகரணம் போடச் சொல்லித் தண்டனையை ஆசிரியர் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? அந்த மாணவர்களின் மந்த நிலை மாறி சுறுசுறுப்படைந்து பாடங்களை ஒருமைப் பட்ட மனதுடன் கவனிப்பான் என்பதால் தான்.

இப்போ விநாயகருக்கான பிரசாத வகைகளைப் பார்ப்போமா? சொல்லுவது என்னமோ விநாயக ருக்குன்னு தான். ஆனால் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு நாம் தானே சாப்பிடறோம்? அதனால் நமக்குப் பிடித்தமான உணவு வகைகளே அவருக்கும் படைக்கிறோம், பிடிச்சதுன்னும் சொல்லுகிறோம். அந்த உணவு வகைகள் என்னவென அருணகிரிநாதர் திருப்புகழில் ஒரு பட்டியலே போட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். அவரை-இதில் அவரைக்காய் மட்டும் அடங்காது. பொதுவாய்த் தமிழில் அவரை என்றால் உள்ளே விதை உள்ள எல்லாவிதமான பீன்ஸ் வகைக் காய்களும் அடங்கும். இந்த அவரை, கரும்பு, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, தேன், அப்பம், அதிரசம், வடை, பட்சணம் எல்லாவற்றிற்கும் மேலாய் மோதகம். இதில் சிலவற்றைப் பற்றியும் விநாயகருக்கு ஏன் அருகம்புல் விசேஷம் என்றும் பின்னால் பார்ப்போமா?

விநாயகர் நாளைக் கடலில் கரைக்கப் படுவார்!

Sunday, September 16, 2007

விநாயகரின் மகத்துவம் தெரியுமா?ஆதி சங்கரர் பத்தித் தெரிஞ்சிருக்கும் எல்லாருக்கும், இல்லையா? அவர் என்ன செய்தார்னால், சநாதன தர்மம் என்று சொல்லப் பட்ட, தற்காலத்தில் இந்து மதம் எனக் குறிப்பிடப் படும் நம் போன்றவர்களுக்காக வழிபாட்டு முறையை 6 விதமாய்ப் பிரித்தார். அதை "ஷண்மத வழிபாடு" எனச் சொல்லுவது உண்டு. அவை என்ன என்றால்:
பிள்ளையார் என்று நாம் அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு= காணபத்தியம் என்று கணங்களுக்கு எல்லாம் அதிபதியான "கணபதி" வழிபாடு முதன்மையானது. மற்றவை
சிவனை வழிபடுபவர்கள் =சைவர்கள்
சக்தியை வழிபடுபவர்கள்= சாக்தர்கள்
விஷ்ணுவை வழிபடுபவர்கள்=வைணவர்கள்
முருகனை வழிபடுபவர்கள்=கெளமாரம், குமாரக் கடவுளின் பெயரில் இருந்து கெளமாரம் வந்தது.
சூரியனை வழிபடுபவர்கள்=செளரம் என்றும் பிரித்தார். இறைவன் ஒருவனே. அத்வைதம் எனப்படும் ஆதிசங்கரரின் கோட்பாடும் அது தான். என்றாலும் சாதாரண மக்களுக்காக ஏற்படுத்தப் பட்டது இது. விநாயகரை வைணவர்கள் "விஷ்வக்சேனர்" என்ற பெயரில் வழிபடுகிறார்கல். அத்வைதிகளுக்கு கடவுள் வேறுபாடு கிடையாது. ஹரியும், கரனும் ஒருத்தரே! என்றாலும் விநாயக வழிபாடு அனைவரிடமும் இடம் பெற்றிருக்கிறது.

விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல் மஞ்சள் பொடியிலேயோ அல்லது, பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான் பூஜைக்கு ஏற்றவர். தற்காலங்களில் கிரிக்கெட் ஆடும் விநாயகர் முதல், கணினியை இயக்கும் விநாயகர் வரை விநாயக சதுர்த்தி அன்று பார்க்க முடிகிறது. அவை எல்லாம் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல. இவர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்.
விநாயக சதுர்த்தி இங்கே இன்று கொண்டாடியதாலே காலையிலே இருந்து ஒண்ணும் எழுத முடியலை. நாளைக்கு மிச்சம் வரும். அனைவருக்கும் மனமார்ந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Friday, September 14, 2007

சுலபமாய் வழிபடலாம் விநாயகரை!
விநாயக புராணம் -தொடர்ச்சி!

விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் மிகவும் உகந்தது. பொதுவாக நம் முன்னோர்கள் வழிபாட்டை நம் உடல் ஆரோக்கியத்துடன் சேர்த்தே யோசித்து நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நம் உடலில் வாதம்-பித்தம்- சிலேத்துமம் எனப்படும் கபம் என்று மூன்றுவிதமான தோஷங்கள் இருக்கின்றன. வாதம் நீர்த்தன்மை கொண்டது. வாதம் உள்ளவர்கள் எப்போதும் வெயிலையே விரும்புவார்கள் எனச் சொல்லப் படுவது உண்டு. நாராயணன் நீர் மேல் இருப்பவன். அவன் எப்போதும் நீர் மேல் இருப்பதால் அவன் வழிபாட்டுக்குச் சூடு உள்ள துளசியை வைத்திருக்கிறார்கள். பரமசிவனோ என்றால் எரிக்கும் சுடுகாட்டில் வசிப்பவர். அங்கே இன்னும் சூடு உதவுமா? அவரின் வழிபாட்டுக்கு வில்வம், குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்த சிலேத்துமம் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைமை. அதற்காகத் தான் அருகம்புல். அருகம்புல் மூலிகை வைத்தியத்தில் முதன்முதல் பயன்படுத்தப் பட்டதாய்ச் சிலர் சொல்கிறார்கள். இது நம் உடலில் படிந்திருக்கும் அதிகப் படியான உப்பைக் கரைத்து வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தமாக்கி நீரின் அளவை மிதப் படுத்தும். அதனால் தான் விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இதைத் தவிர நம் தமிழ்நாட்டில் விநாயகர் பிரம்மச்சாரி என்பதால் எருக்கம் பூ மாலையை அணிவிக்கிறார்கள். அது போல வன்னி மர இலைகளாலும் விநாயகரை வழிபடலாம். வன்னி மர இலைகளும் மருத்துவ குணம் மிகுந்தது. நச்சுத் தன்மையை முறியடிக்கும், அத்கோடு இல்லாமல சருமப் புண்களை இந்த மரத்தின் இடையே புகுந்து வரும் காற்று நீக்கும் தன்மை கொண்டது. விஷக்கடி, சொறி, சிரங்கு, அலர்ஜி போன்றவை குணமாக வன்னி மரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து தேனோடு கொடுப்பது உண்டு, அல்லது சொறி, சிரங்குகளில் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவதும் உண்டு. இலையைச் சுத்தமான பசும்பாலில் அரைத்து உட்கொண்டால் கடும் நோய்கள் குணம் ஆகும்.

விநாயகரை வலம் வரும்போது ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. விநாயகரை வழிபடுவதால் ஏழரைச் சனி உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும். அது போல் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பதிலும் ஒரு பெரும் தத்துவம் அடங்கி இருப்பதாய்ப் பரமாச்சாரியார் அவர்கள் கூறி உள்ளார். தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. இது ஈஸ்வரனுக்குச் சமமாகக் கருதப் படுகிறது. ஈஸ்வரனைப் போன்ற மூன்று கண்கள் உடைய காயை விநாயகருக்கு நிவேதனம் செய்வதின் மூலம் நம்மை விட உயர்ந்த ஒன்றை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் தத்துவமும், அதனாலும், நம் மனத்தில் உள்ள ஆணவம் அகன்று மனம் நிர்மலம் ஆகவும் சிதறுகாய் போடுகிறோம். மண்டை ஓட்டைப் போலக் கெட்டியான தேங்காயை உடைத்துச் சிதற அடிக்கிறோம் அல்லவா? அதன் அர்த்தமே நம் மனதில் உள்ள ஆணவமும் அதுபோல் சிதறிப் போய்த் தேங்காயின் உள்ளே உள்ள இனிப்பான நீர்போல் இனிமை நிரவ வேண்டும் என்பதற்கும் தான்.

விநாயக வழிபாடு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் வடமாநிலங்களிலும் உண்டு என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். அது தவிர, பர்மாவில் "மகாபிணி" என்றும், மங்கோலியாவில் "தோட்கர்" என்றும், திபெத்தில் "சோக்ப்ராக்" என்றும், (நேரிலேயே பார்த்திருக்கேன் இந்த வழிபாட்டை), கம்போடியாவில் "பிரசகணேஷ்" என்றும், சீனாவில் "க்வான்ஷிடியாக்" என்றும், ஜப்பானில் "விநாயக் ஷா" என்றும் வணங்கப் படுகிறார். சயாமில் விநாயகருக்கு ஆமை வாகனமும், இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி (பாதி பெண், பாதி ஆண்) உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது.

விநாயகர் இன்னும் வருவார்!
விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தங்கள் தொழில் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:

பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரனன் ஆகும். ஏனெனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்து போன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்கவேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில் , காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.


செப்டெம்பர் திங்கள் 15-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் அருமை நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Thursday, September 13, 2007

காயத்ரி மந்திரத்தை!
காயத்ரி மந்திரம் பற்றிப் பல பேர் சில நாட்களாய்ச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். பிரணவ மந்திரமான "ஓம்" என்ற வார்த்தைக்கு அடுத்தபடி இந்தக் காயத்ரி மந்திரம் தான் சொல்லப் படுகிறது. பரப்ரும்மத்தின் ஸ்வரூபமான இந்த மந்திரத்தின் அதி தேவதையான காயத்ரி மாதா, மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் சேர்ந்த உருவமாகப் போற்றப் படுகிறாள். விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப் பட்டதான இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. வேதமாதாவான காயத்ரியை ப்ரப்ரும்ம சொரூபம் என்ற அளவில் மட்டுமில்லாமல், ஆத்ம ஞானத்தைக் கொடுக்கும் ஒரு சக்தியாகவும் கருதுகிறார்கள்.

செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் காயத்ரி தேவி செல்வத்துக்கு அதிபதியாகவும் கருதப் படுகிறாள். ஐந்து தலைகளுடனும், பத்துக் கண்களுடனும், எட்டுத் திசைகள் மட்டுமின்றி, ஆகாயத்தில் உதிக்கும் சூரிய, சந்திரரையும், கீழே பூமியையும் பார்க்கும் விதமாக இருக்கும் காயத்திரியின் , பத்துக் கரங்களும், அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கும். வெண்ணிற அன்னத்துடன் இருக்கும் இவளை வணங்கினால் அறிவு வளரும் எனவும், கல்விக்கும் இவள் அதிபதி எனவும் சொல்கிறார்கள். மேலும் இவளின் மூல மந்திரத்தை ஜெபிக்கும் முறைப்படி ஜெபித்து வந்தால் மனதில் அதைரியம் மறைந்து எதையும் எதிர்நோக்கும் மனம் தானாகவே ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். மனதில் தெய்வீக சக்தி அதிகரித்து, புத்தியும், மனமும் இணைந்து ஆத்ம ஞானத்தை அறிய முற்பட இந்த மந்திரம் உதவுகிறது.

முக்கியமாக மனச் சஞ்சலம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து வருவதால் மனச் சஞ்சலம் மறைந்து மன உறுதி தோன்றுவது நிச்சயம்.

"இவ்வுலகைப் படைத்த அந்த பிரபஞ்ச சக்தியைப் போற்றுவோம்! நம்முடைய மன இருள் அகன்று ஒளி பிறக்கட்டும்" என்பதே இதன் அர்த்தம். "ஓம்" என்னும் வார்த்தை, ஆரம்பத்திலும் முடிவிலும் சேர்க்கப் படும்.

எனக்குத் தெரிஞ்ச வரை விளக்கி உள்ளேன்.

உதவி: விக்கிபீடியா

அறுவை தான் என்ன செய்யறது?

ஹிஹிஹி, முதலிலே யாருக்கும் பதில் சொல்ல முடியலை, மன்னிக்கவும். எல்லாம் இந்த ஜி3 பண்ணறப்போ வர தகராறுலே தான் பதில் சொல்லலை. போஸ்ட் மட்டும் எப்படிப் போடறேன்னு கேட்கறீங்களா? போஸ்ட் ஜி3 ஆகறதும் அந்த தெய்வச் செயல் தான். வந்தால் போச்சு. இல்லைனால் மீண்டும் மீண்டும், விடா முயற்சிதான். வரவரைக்கும் விட முடியாதே! கமென்டுக்குப் பதில் சொல்றது அப்படி இல்லையே! இருந்தாலும் சிலருக்குச் சந்தேகம், சொல்லித் தான் ஆகணும். வடுவூர் குமார் எந்த டீச்சர்னு கேட்டிருக்கார், இது குழந்தைகளுக்குனு தனியா எழுதினதா, அதை அப்படியே ஜி3 பண்ணிப் போட்டு இருக்கேன். :)))) நான் தான் எடிட் செய்யறதோ அல்லது இந்த ப்ரீவியூனு ஒண்ணு இருக்கே அதைப் பார்க்கிறதோ வழக்கமே இல்லையா, அப்படியே ஜி3 பண்ணினேன், அதிலே வந்த வினை.

அப்புறம் எந்த ராமராஜன் படம்னு நம்ம "நிமோஉலகம்" கேட்டிருக்கார். எந்த நிமோ சார் நீங்க? "Finding Nemo"விலே வர நிமோ மீனா? நமக்கு எல்லாம் புரியாத ஒரு விஷயத்தை எப்படி சுலபமாக் கேட்டிருக்கீங்க? விநாயகர் அவதாரம் பத்திப் பல்வேறு கதைகள் இருந்தாலும் "பார்கவ புராணம்" லெ இருக்கிறதைக் கொஞ்சம் பசங்களுக்காக எளிமையாத் தர முயற்சி பண்ணினேன்.. தேவைன்னால் மத்தக் கதைகளும் வரும். அப்புறம் சின்ன அம்மிணி, "நான் கிருஷ்ண தேவராயன் - 2" எடுத்துட்டு வந்தாச்சு. இன்னும் படிக்க ஆரம்பிக்கலை. இந்தியாவிலே எங்கே கேட்டீங்க நீங்கனு புரியலை. "வானதி பதிப்பகம்" வெளியீடுனு நம்பறேன்.

அம்பி, எனக்கு ஒண்ணும் பிள்ளையாரைக் காக்காயோ குருவியோ பிடிக்க வேணாம். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர், அவரோட பிறந்த நாளைக் கொண்டாடறதிலே என்ன உங்களுக்குக் கஷ்டம்? உங்களுக்குக் "கணேசன்" தயவு இல்லாமல் சமைக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதுக்காக எல்லாரும் அப்படியா? இங்கே "தன் கையே தனக்கு உதவி" தெரியுமா?

அப்புறம் மதுரையம்பதிக்கு என்னோட அனுபவங்களைப் பார்த்தால் சிரிப்பு வருது? க்ர்ர்ர்ர்ர்., இருங்க, அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்"னு எழுதி உங்களையும் விடறதில்லையே? கோபிநாத்துக்கும், சின்ன அம்மிணிக்கும் "மாயாவி" பார்க்க இத்தனை வருஷமான்னு கேள்வி. யாரு, இந்தியாவிலே சினிமாவெல்லாம் போறாங்க? டி.வியிலே போடற சினிமாவே பார்க்க மாட்டோம். இங்கே வந்து வேறே வழி இல்லை, வீட்டிலே உட்கார்ந்து என்ன செய்யறது? ராத்திரி ஒரு 2 மணி நேரம் பார்க்கிறது, அதிலே பார்த்த படங்கள் தான் இவை எல்லாம். இந்த வாரம் ஜாஸ்தி இல்லை.

மைக்கேல், மதன,காம,ராஜன் - எத்தனாவது முறைன்னு சொல்ல முடியாது. ஆனால் ஒரு முறையும் பூராவும் பார்த்தது இல்லை.

அவ்வை ஷண்முகி _ டிட்டோ, டிட்டோ, டிட்டோ, ஒரிஜினல் இன்னும் நல்லாவே இருக்கும், ஒரு காலத்தில் ஸ்டார் எல்லாம் பணம் வாங்காமல் இருந்தப்போ பார்த்தது., ம்ம்ம்ம்ம் இப்போ ஸ்டார் வானத்தில் மட்டும் தான்.

மேஜர் சந்திரகாந்த்- ரொம்பவே லாஜிகல் ஆன படம். நல்ல யதார்த்தமான முடிவும் கூட. பலமுறை பார்த்தது தான்.

கல்லுக்குள் ஈரம் முடிச்சாச்சு. கண்ணீர் இன்னும் காயவில்லை. எப்போப் படிச்சாலும் கண்ணீர் வரும்.

மிஸ் ஜானகி - தேவன்
கோமதியின் காதலன் - தேவன்
நளபாகம் - தி.ஜானகி ராமன்,

என்ன கதை, என்ன எழுத்து, இது? உயிரோட்டம்னு சொல்றது இதைத் தானோ? இதைப் படிக்கிறவரை, எனக்கு ஜானகிராமன் எழுதினதிலே "அன்பே, ஆரமுதே!" தான் ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போ இதுவும்.

காணாமல் போன தொண்டர் படை! தலைவி சந்தேகம்! விரைவில்!

ஆனை முகத்தோனின் தோற்றமும், விளக்கமும்!விநாயகருக்கு ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. ஆறு எழுத்துக்கள் உடையவர். அவரை வழிபட்டால், ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று , சம்"பத்து"டன் வாழ்வார்கள். அவருடைய திருமேனியோ என்றால், கீழே பூத உடல், இடைக்கு மேல் கழுத்துவரை, தேவ உடல், தலை யானை என்ற மிருகத் தலை, ஒரு கொம்பு, இந்த ஒற்றைக் கொம்பு ஆண்தன்மையையும், கொம்பில்லாத மற்றொரு பகுதி பெண் தன்மையையும் குறிக்கிறது.

யானைத் தலை என்பது அஃறிணையைக் குறிக்கும். தேவ உடலோ என்றால் உயர்திணை. இவ்வாறு, அவர் அஃறிணையும் தானே, உயர் திணையும் தானே என்கிறார். தேவராய், விலங்காய், பூதமாய், பெண்ணாய், ஆணாய் எல்லாமாய் விளங்குபவர் விநாயகர். "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் சொரூபம் ஆவார் விநாயகர். அவருடைய காதுகளும், வளைந்த துதிக்கையும், அகன்ற தலையும் இந்த "ஓம்" என்ற எழுத்தின் வடிவைக் காட்டுகிறது. இரு திருவடிகளும், ஞான சக்தியையும், கிரியா சக்தியையும் குறிக்கும். இவருடைய பேழை வயிற்றில் அகில அண்டமும் அடங்கும். துதிக்கையைச் சேர்த்த ஐந்து கரங்களும் ஐந்து திருத் தொழில்களைச் செய்யும்.

எழுத்தாணி பிடித்த கரம் படைப்புத் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் கொண்ட கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தல் தொழிலையும், அமுத கலசம் ஏWதிய துதிக்கையானது அருள்தலையும் குறிக்கிறது. மூன்று கண்கள் முறையே சூரியன், சந்திரன், அக்னியைக் குறிக்கும். இவரின் உருவ அமைப்பில அனைத்துத் தெய்வங்களும் இணைந்திருக்கிறார்கள். நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சிவ ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சூரிய ரூபம் ஆகும்.

யாராக இருந்தாலும் ஒரு நல்ல காரியம் துவங்கும்போது விநாயகரை வழிபட்டு ஆரம்பித்தால் அந்தக் காரியத்துக்கு இடையூறு வராது என்பது ஆன்றோர் வாக்கு. விநாயகர் என்றால் தனக்கு நிகரில்லாதவர் என்றும் பொருள் கொள்ளலாம். "வி"என்றால் தனக்கு நிகர் எவருமில்லாதவர் என்றும், "நாயகர்" என்பது தலைவனையும் குறிக்கும்.

Monday, September 10, 2007

வாழ்க, வாழ்க, பாரதி சமுதாயம் வாழ்கவே!செப்டம்பர் 11 பாரதியின் நினைவு தினம். வாழ்நாள் பூராவும் வறுமையில் சிக்கித் தவித்த ஒரு கவிஞன் பாரதி. கிட்டத் தட்டப் பத்து வருடங்கள் போல் 1908- 1918 வரை தாய்நாட்டைக் காண முடியாமல், ப்ரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியிலேயே வாழ்ந்து வந்தவர். 1918-ல் வறுமை மிகுந்து போகக் குடும்பம் மட்டும் கடையம் செல்கிறது. தங்கம்மாள் பாரதியின் திருமணம் ஒரு காரணமாய்ச் சொல்லப் பட்டாலும் முக்கிய காரணம் வறுமையும், பாரதி தாய்நாட்டுக்கு வரவேண்டும் என்ற ஆசை கொண்டிருந்ததும் தான். ஆனால் அவர் பாண்டிச்சேரியை விட்டுக் கடலூர் எல்லையில் கால் வைத்ததுமே கைது செய்யப் பட்டார்.

1918 நவம்பர் 20-ல் கைது செய்யப் பட்டு ரிமான்டில் 34 நாட்கள் கடலூர் ஜெயிலில் வைக்கப் படுகிறார். வலுவான காரணங்கள் இல்லை. ஆகவே விசாரணையும் செய்ய முடியாமல் பாரதியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை செய்வதாய்க் கூறவே, அனைவரும் அதையே ஆதரிக்க, பாரதியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை ஆகிறார்.இதைப் பற்றி எழுதும் "நடேசன் சத்யேந்திரா" அவர்கள், "He was released after he was prevailed upon to give an undertaking to the British India Government that he would eschew all political activities. , என்கிறார். இந்த இடத்தில் "prevailed " என்ற வார்த்தையை பாரதி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டார் என்ற அர்த்தத்திலேயே சொல்கின்றார். பாரதி கடையத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் முக்கிய நிபந்தனை. ஆகவே 1920 வரை அங்கேயே கட்டாய வாசம் செய்கிறார். இந்தச் சமயம் தான் எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக் கவி எழுதுகிறார். பயன் இல்லை. சென்னையில் ரவீந்திர நாத் தாகூருக்கு நோபல் பரிசு கொடுத்ததுக்குப் பெரும் விழா நடப்பதும் அப்போது தான். 1920 டிசம்பரில் அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஒப்ப ஆங்கிலேய அரசு பாரதிக்கான நிபந்தனைகளைத் தளர்த்துகிறது. அவர் சென்னை வருகிறார்.

"சுதேசமித்திரனின்" உதவி ஆசிரியர் ஆகிறார். பல கட்டுரைகள் எழுதியதும் இப்போது தான். 1921 ஜூனிலேயே யானை மிதித்தகாச் சொல்கின்றனர். ஆனால் பாரதி இறந்தது என்னமோ செப்டம்பரில் தான். வறுமை தான் காரணம் என்றும், அரசு அதை மூடி மறைப்பதாகவும் சொல்கின்றர்.ஷண்முகம் சபேசன் தன்னுடைய "பாரதியார் யார்" என்னும் ஆஸ்திரேலிய வானொலிக்கான ஆய்வுப் பேச்சு ஒன்றில் 2004 செப்டெம்பர் பாரதி நினைவு நாளில் இவ்வாறு கூறுகிறார். எது எப்படியோ தன்னுடைய கவிதைகளாலேயே நாட்டு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியதும், ஆங்கில அரசு அதைக் கண்டே மிரண்டதும் உண்மை! அவரின் கிளிக்கண்ணியின் இந்த வரிகள் இத்தனை வருடங்கள் கடந்து இப்போதும் மனித சுபாவத்துக்குப் பொருந்துவதைக் காணலாம்.

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திரமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டதிற் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ!

சொந்த அரசும் புவிச்
சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க்குண்டாகுமோ? - கிளியே
அலிகளுக்கின்பமுண்டோ?

கண்களிரண்டிருந்தும்
காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ - கிளியே
பேசிப் பயனென்னடீ?"


நிறையவே எழுதலாம் பாரதியின் எழுத்தைப்பற்றி. "பொதுவுடமை" பற்றி அனைவருக்கும் முன்னாலேயே அவர் நிறையப் பேசி விட்டார். அவர் கண்ட சமுதாயம் இன்னும் நாட்டில் ஏற்படவில்லை. அவர் வார்த்தைகளை நினைவு கூருவோம்.

"வாழ்க, வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - ஜெய ஜெய ஜெய,

முப்பது கோடி, ஜனங்களின் சங்கம், (இப்போ 100 கோடினு பாடணும்)
முழுமைக்கும் பொது உடமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை! "

Saturday, September 08, 2007

என்ன தவம் செய்தேன்!- 2

வேளை வந்து விட்டது


சரியா ஜெய்சங்கர் வில்லத் தனமா (அம்பி மாதிரி?) சிரிக்கும்போது அலார்ம் அடிக்கத் தொடங்கினதும் ஒரு நிமிஷம் நான் சினிமாவிலோன்னு நினைச்சேன். ஆனால் பஞ்சவர்ணக் கிளி படத்தில் அப்படி எல்லாம் காட்சி இல்லையேனு நினைப்பும் வந்து முதலில் இது ஸ்மோக் அலார்ம் இல்லையேனு உறுதிப் படுத்திக் கொண்டேன். அதுக்குள்ளே பையனும், என்னோட மறுபாதியும் வீட்டில் எல்லா இடமும் சுத்திப் பார்த்தாங்க. எல்லாக் கதவும் சாத்தினபடியே தான் இருக்கு. ஒண்ணும் திறக்கவும் இல்லை, மூடவும் இல்லை. அதுக்குள்ளே எனக்கு ஒரு எண்ணம். ஒருவேளை இது ஏதானும் பயிற்சிக்காக இங்கே அபார்ட்மென்ட் நிர்வாகம் ஏற்பாடு செய்ததோன்னும் தோணிச்சு. அபார்ட்மென்டுக்கு வெளியே போனோம். மு.ஜ. முத்தக்காவான நான், ஒருவேளை போலீஸ் வந்து என்ன ஏது, நீங்க யாருனு கேட்டால் என்ன செய்யறதுனு பாஸ்போர்ட், டிக்கெட் அடங்கிய பையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.

வெளியே போய்ப் பார்த்தால் மேலே 2-வது மாடியில், (இங்கே அது 3வது மாடி, அந்தக் குழப்பம் தனி) இருந்தும், எதிர் ஃப்ளாட்டில் இருந்தும் குடியிருப்போர் வந்து என்ன, ஏது என விசாரிக்க ஆரம்பித்தனர். ஒருத்தர் "barbeque" போட்டீர்களா எனக் கேட்க இன்னொருத்தர், மின் அடுப்பை அணைக்கவில்லையா எனக் கேட்க, நாங்கள் இது ஸ்மோக் அலார்ம் இல்லை, செக்யூரிட்டி கால் எனச் சொல்லவும், எதிர் ஃப்ளாட் பெண்மணி வீட்டுக்கு உள்ளே போய் எல்லாக் கதவுகளையும் நன்றாகச் சார்த்திவிட்டால் பின்னர் அது தானாக நிற்கலாம் எனச் சொன்னார். ஏற்கெனவே சாத்திய வீட்டுக்குள் தானே இருந்தோம். இதை நிறுத்தவெனத் தனியாகக் கடவுச் சொல், அல்லது எண் உண்டு. அதையும் எங்கேயோ மறந்து வச்சாச்சு. அன்று தொழிலாளர் தின விடுமுறை என்றாலும் நிர்வாக அலுவலகத்துக்குத் தொலை பேச வேண்டியது தான் எனத் தொலை பேசினோம். அவங்க கொடுத்த நம்பரில் இருந்த பணியாளர் வீட்டுக்குப் போய்விட்டதால் அன்று அவரைப் பிடிக்கவே முடியலை.

பல முயற்சிகளுக்குப் பின்னர் அவர் மாலை 7- 30 மணிக்குத் தொலைபேசியில் கிடைத்தார். அவரிடம் தொடர்பு கொண்டு பேசியதில் அவர் சொன்ன மாதிரி இணைப்பை எல்லாம் நீக்கினோம். இது முன்னரே தெரியும் என்றாலும், நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நாமாகச் செய்வது முறை இல்லை என்பதால் செய்யவில்லை. இணைப்பை நீக்கியும் கூட சிவப்பு விளக்கு ஒளிர்வதும், சின்னக் குரலில் அலார்ம் கூப்பிடுவதும் நிற்கவே இல்லை. அவரிடம் சொன்னதில், தான் நேரே 1/2 மணி நேரத்துக்குள் வருவதாய்ச் சொல்லிவிட்டு அது போலவே வந்தார். அவர் வந்ததும் கடவு எண்ணைக் கொடுத்து அதை நிறுத்தி விட்டுப் பின்னர் எங்களிடமும் கடவு எண்ணைக் குறித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போனார். இவ்வளவு அமர்க்களத்துக்கும் காரணம் யாருனு நினைக்கிறீங்க? ஒரு வெட்டுக் கிளி தான். அது போய் அலாரத்தினுள் புகுந்து கொண்டு எப்படியோ வெளியே வர முடியாமல் அதை "ஆன்" செய்திருக்கிறது. 2மணி நேரம் ஸ்தம்பித்துப் போனோம், செய்வது அறியாமல்!

இந்த வாரம் பார்த்த சினிமா ஒண்ணே ஒண்ணுதான். இந்த ஐகாரஸ் கண்ணு போட்டதாலேயோ? :P

"மாயாவி" - சூர்யா, ஜோதிகா நடிச்ச படம். நல்லா எடுத்திருக்காங்க. சூரியா நடிப்பு நல்லா இருந்தது. ரொம்பவே இயல்பா இருக்கு. கடைசியில் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பாசமும், நட்பும் கொண்ட நண்பர்களாய் மாறுவது மிகவும் அழகாய்ச் சொல்லப் படுகிறது. நட்பையும் அதனால் வரும் பாசத்தையும் கொச்சைப் படுத்தவில்லை. சிவப்பியாக நடிக்கு பெண் யாருனு தெரியலை! அவங்களும் ரொம்பவே இயல்பா தான் எப்போவும் இருக்கிற படியே வந்துட்டுப் போறாங்க! படம் ஏன் வெற்றி பெறவில்லைனு புரியலை!

படித்த புத்தகங்கள்: இந்திரா செளந்திர ராஜன் - காற்று, காற்று, உயிர், -பேத்தல்!

ரா.கி.ரங்கராஜன் : நான் கிருஷ்ண தேவ ராயன் -முதல் பாகம். விகடனில் வந்தப்போவே படிச்சது தான், என்றாலும் திரும்பவும் படிக்கிற பழக்கம் உண்டே! 2-ம் பாகம் கிடைக்கலை.
சின்னக் கமலா - கிட்டத் தட்ட "நிஷ்ஷப்த்" படத்தின் கதைக் கரு என்றாலும் வேறு விதமான முடிவு இந்தக் கதைக்குத் தர முடியுமா? யோசிக்கணும்!

தேவன் - கோமதியின் காதலன் - ஹிஹிஹி பையனுக்கு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ராஜத்தின் மனோரதம் - மீண்டும்
ராஜியின் பிள்ளை
மாலதி
மிஸ்டர் வேதாந்தம் 1&2

பச்சை மண் - பி.வி.ஆர்.
எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

இப்போ படிக்கிறது "கல்லுக்குள் ஈரம்" கல்கியில் வெளி வந்தபோது அதில் நீக்கப் பட்டிருந்த சில விஷயங்களையும் சேர்த்து திரு ர.சு. நல்ல பெருமள் அவர்கள் மீண்டும் பதிப்பித்த காப்பி, இன்னும் முடிக்கலை.

ராஜம் கிருஷ்ணனின் "வேருக்கு நீர்" இன்னும் ஆரம்பிக்கணும். நேரம் கிடைக்கலை. :((((

பிள்ளையார் எப்படித் தோன்றினார்?
பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகதமுனிவர்னு ஒரு முனிவர் இருந்தராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப்
பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட முனிவர் மறுத்தும்,பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு
அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன்பேர் கஜமுகாசுரன்.

இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான். (பொதுவாகவே
நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ,
கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க
பெரியவங்களா இருக்கும்போது எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம்.இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களெ முடிவு எடுப்பாங்க.கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க,அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட
மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இது கூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ சுகமோ எது வேணாலும் கிடைக்கும்.
எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.)

அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது.மிருகமாயும் இருக்கக் கூடாது. ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக்
கூடாது. ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று
ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம
பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான்.

அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான்.
தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும்,தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம்
ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும்,பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத்தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப்
பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள்.பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத்
தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க.
விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும் என தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன்செவி சாய்த்தார்.

திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள"வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடிமந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தது. அவை இரண்டும் "சமஷ்டிப்பிரணவம்" "வியஷ்டிப் பிரணவம்" என்றபெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும்
பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க அவை இரண்டும் இணைந்து அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானைமுகத்துடன் தோன்றினார். பிள்ளையாரின் உருவம் பற்றிய விளக்கம் அடுத்தாப்போல் பார்ப்போமா?


வந்தே விட்டது! செக்யூரிட்டி அலார்ம் அடித்த விதம் பற்றிய வர்ணனை! விரைவில் எதிர் பாருங்கள்!

Friday, September 07, 2007

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப்பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக்கீழே 2 கோடு போடணும். இது "ஓம்"
என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான்
ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு ஆரம்பிக்கிற வேலை தடங்கல்
வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை.அதனால் தான். நாம செய்யற காரியத்தில்
தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா?
அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அது எப்படி வேணாலும் இருக்கலாம்.

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க
வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் --
விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் பணிந்து.!"

என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற,
செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன்
என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி
வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா,

"விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய
தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி
பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகையே அடக்கி இருக்கும் இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான்.

அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு,
உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம்
விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த
இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம்
சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்ப்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!"

மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும்,வெள்ளை உடை அணிந்தவரும்,ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக்கொண்டவருமான அந்த விநாயகரைக்கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்துவேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்."
என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம்,பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து. அடுத்து நாம் விநாயகர் எப்படி வந்தார்னு பார்க்கலாம். அடுத்த வாரம் சந்திக்கலாமா?

அருமை நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டுச் சில சிறப்புப் பதிவுகள்

Wednesday, September 05, 2007

என்ன தவம் செய்தேன்?????!!!!!!! - 1
காஃபி பத்தித் தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனால் திங்கள் அன்று நடந்த ஒரு விஷயம் இந்தப் பதிவை எழுத வச்சுட்டது. யு.எஸ். வந்ததில் இருந்தே நாங்க இரண்டு பேரும் ஏதானும் ஒண்ணு மாத்தி ஒண்ணு வம்பில் மாட்டிக்கிட்டே இருக்கோம். பொண்ணு வீடு தனி வீடுங்கறதாலே ஒரு மாதிரி, கவனிக்கவும், ஒரு மாதிரித் தான் சமாளிச்சுட்டோம். இங்கே அபார்ட்மென்ட். என்னதான் 2 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அபார்ட்மென்டாக இருந்தாலும் இவங்க சமையல் அறை இருக்கே, ஒருத்தர் போனால் தான் சரியா வரும். சமைக்கும்போது எனக்கு ஏதாவது சாமானை எடுக்க முடியாமல் திண்டாடுவதைப் பார்க்கும் என்னொட மறுபாதி எனக்கு உதவி செய்ய வந்து நிப்பார். இங்கே தான் நுழைஞ்சதுமே உள்ள பெரிய அறையை முடிஞ்சவரைச் சின்னச் சின்னதாத் தடுத்து வரவேற்பு அறை, சாப்பிடும் அறை, சமையல் அறை எனப் பாகம் பிரிக்கிறாங்களே! :P அதில் சமையல் அறை தனியாக எல்லாம் வராது. எல்லாமே வரவேற்பு அறையின் பகுதி தான். கவுன்டர் தான் பிரிக்கும். ஆகவே நான் சமைக்கும் போது சாமான்களை வைக்கவும், எடுக்கவும் இருக்கிற 1/2 அடி இடத்தில் திண்டாடறது நல்லாவே தெரியும்.

இவர் வந்து நிக்கிறது தெரியாமல் நான் ஏதாவது சூடாக எடுத்து அதைச் சமையல் அறை ஸிங்கில் வடிகட்டத் திரும்ப, அல்லது காய் நறுக்கின கத்தியுடன் திரும்ப, அல்லது தாளிதம் செய்த இரும்புக் கரண்டியுடன் திரும்ப, அதில் ஏதாவது ஒன்று அவர் மேல் பட்டுத் தொலைக்க,உடனே பாரத யுத்தம் ஆரம்பிக்கும்.
"என்னை ஏண்டி கத்தியாலே குத்தறே? அல்லது சுடறே?" என அவர் ஆரம்பிக்க, "உங்களை யாரு இங்கே கூப்பிட்டாங்க?" என நான் கத்த, "நல்லதுக்கே காலம் இல்லை"னு அவர் முணு முணுக்க அலுவலகம் போகும் அவசரத்திலும் பையன் நின்று ரசித்துவிட்டுப் போவான்.:P இது இவ்வாறிருக்க, திங்கள் அன்று "தொழிலாளர் தினம்" என விடுமுறை விட்டிருந்தார்களா? அன்று சாயந்திரம் ரொம்ப சாவகாசமாய்ச் சப்பாத்திக்கு மாவு பிசைந்து விட்டுக் கத்திரிக்காய்க் கூட்டும் செய்து வைத்து, (அம்பிக்கு அனுப்பி இருக்கலாமோ?) இந்திரா செளந்திர ராஜனின் மர்ம(?)த் தொடரான, "காற்று, காற்று, உயிர்" படிக்க உட்கார்ந்தேன். கதையில் ஏற்கெனவே பேய் கதாநாயகன் உடலில் புகுந்து கொண்டிருந்தது. அது பத்தாதுன்னு ஒரு மந்திரவாதியான குடுகுடுப்பை வேறே. ரொம்ப திரில்லிங்காப் படித்துக் கொண்டிருந்தேன்.

டிவிடியில் "பஞ்சவர்ணக் கிளி" படம் வேறே ஓடிக் கொண்டிருந்தது. அதில் வில்லனாக வரும் ஜெய்சங்கர் உள்ளே நுழைந்து வில்லத் தனம் பண்ணிக் கொண்டே "ஹா ஹா ஹா" எனச் சிரிக்கும் காட்சி. அப்போது பார்த்துத் திடீரென "செக்யூரிட்டி அலார்ம்" அலற ஆரம்பித்தது. ஒரு நிமிஷம் யாருக்கும் எதுவும் புரியவில்லை.

Monday, September 03, 2007

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கிருஷ்ணன் பிறப்புப் பத்தி நான் ஒண்ணும் புதுசா எழுத வேண்டாம். இந்தியா பூராவையும் கவர்ந்த ஒரு குழந்தை கிருஷ்ணன் தான். "கனையா" என்று இந்தியிலும், "கண்ணன்" என தமிழிலும் அழைக்கப் படும் கண்ணன் பிறப்பு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்க வல்லது. இந்த ஒரு அவதாரம் தான் மனிதன் இல்லை என நிரூபித்துக் கொண்டே இருந்தது கடைசி வரையிலும். நான் கிருஷ்ண ஜன்ம பூமியான "மதுரா"வுக்குப் போய் இருக்கிறேன். போன போது நல்ல மழைக் காலம் தான். கிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலையைப் புனிதமான இடமாகக் கருதி யாத்திரீகர்கள் வருகின்றனர். அங்கே சிலா ரூபமாகக் கிருஷ்ணர் சிலை ஏதும் இல்லை. ஒரு படம் தான் வைத்திருந்தார்கள். பக்கத்திலேயே மசூதியும் இருப்பதால் பாதுகாப்புச் சோதனைகள் அதிகம். அங்கிருந்து நாங்கள் "கோகுலம்" "பிருந்தாவன்" இரண்டு இடத்திற்கும் போய்ப் பார்க்க வேண்டும் என்று போனோம். கோகுலமும் பிருந்தாவனமும் யமுனைக் கரையிலேயே இருக்கிறது.

உண்மையில் கோகுலம் இன்றளவும் கோகுலமாகவே இருக்கிறது. தாழ வீழ்ந்த ஆலம் விழுதுகளும், அதில் ஊஞ்சல் கட்டி விளையாடும் சிறுவர், சிறுமிகளும், தன்னுடைய நிறமும் அந்தக் கண்ணன் நிறம்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லும் காளிந்தி நதி என அழைக்கப் படும் யமுனையும், அந்தக் கரையில் இருக்கும் பெரிய பெரிய மரங்களை ஒட்டிய மண்டபங்களும், அதில் வந்து முதுகைச் சொறிந்து கொண்டு நிற்கும் பசுக்களும், குழந்தைகளால் மேய்க்கப் படும் பசுங்கன்றுகளும், அவற்றைத் தேடிக் கூப்பிடும் பசுக்களின் குரல்களுமாக காணக் கண்கொள்ளாக் காட்சி தான். கிருஷ்ணருக்கு ரொம்பவே கொடுத்து வச்சிருக்கு இதை எல்லாம் அனுபவிக்க. கிருஷ்ணர் விளையாடிய, ஓடியாடிய இடத்தில் நாமும் நடக்கிறோம் என்ற நினைப்பே ஆனந்தமாய் இருந்தது. கரைக்கு அப்பால் இருக்கும் மதுராவில் இருந்து வசுதேவர், கூடையில் வைத்து எம்பெருமானைச் சுமந்து வந்து யமுனையைக் கடக்க இறங்கிய துறை மிகவும் பவித்திரமாய்ப் போற்றப் படுகிறது.

பிருந்தாவனமும் யமுனைக் கரையிலே தான் இருக்கிறது. இங்கே தான் முக்கியமாகக் கிருஷ்ண ஜெயந்திக் கோலாகலங்கள் நடக்கின்றன. ராதாவுடன் கிருஷ்ணன் விளையாடிய இடங்களையும், இன்னும் கிருஷ்ணருக்கு உபநயனம் நடந்த இடம், கிருஷ்ணர் ராசலீலா நடத்திய இடம் எனக் காட்டுகிறார்கள். அனைத்தும் பார்த்து அனுபவிக்க வேண்டிய இடங்கள் தான். குழந்தைக் கிருஷ்ணனின் தவழ்ந்த கோலத்தில் உள்ள உருவச் சிலையைத் தொட்டிலில் இட்டு அலங்காரம் செய்து வைத்து, நம்மை உட்கார்த்தி வைத்துத் தொட்டிலை ஆட்டச் சொல்கிறார்கள். தரிசனம் எல்லாம் நல்லாவே கிடைக்கும். ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் பணம் கேட்கும் முறைதான் பிடிக்கவில்லை. குறைந்த பட்சமாக இந்திய ரூபாயில் 5,000/-த்தில் ஆரம்பித்துப் பின்னர் ஒருத்தருக்கு 50ரூ என்று முடித்தார்கள். நாங்கள் இருவருக்கும் சேர்த்து 50ரூதான் கொடுத்தோம். :((((

நகரமும் ரொம்பவும் மோசமான நிலையில் சற்றும் பராமரிப்பு இல்லாமலே இருக்கிறது. சென்னைத் தெருக்களைத் தூக்கிச் சாப்பிடும்போல உள்ளது மதுரா நகரின் தெருக்கள். பேருந்து நிலையமோ மழைத் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது. பயணிகள் நிற்கவோ, ஒதுங்கவோ இடமும் இல்லை. பேருந்துகள் உள்ளே போகவும் முடியவில்லை. சாலையிலேயே நிற்கவேண்டியதாய் இருந்தது. நாம் பயணம் செய்ய வேண்டிய பேருந்தைத் தேடிப் பிடித்துத் தான் ஏற வேண்டும். மொழி படிக்கத் தெரியாமல் போனால் கொஞ்சம் கஷ்டம் தான். மொழி தெரியாதவர் குழுவாகப் போவது தான் நல்லது. துவாரகை கிருஷ்ணரும் பார்த்திருக்கேன். அவர் குழந்தை இல்லை, பெரியவர் தவிர ராஜா! ஒரு நாட்டை ஆட்சி செய்தவர். ஆகையால் அவரைப் பற்றிப் பின்னர் ஒருநாள் எழுதுகிறேன். குஜராத்தில் பெரும்பான்மையான மக்கள் தாங்கள் கிருஷ்ணருடன் வந்தவர்கள் தான் எனச் சொல்கிறார்கள். துவாரகை தரிசனம் பின்னர்.


விரைவில் வெளி வருகிறது "காஃபி ரகசியம்"!

Sunday, September 02, 2007

என்ன தலைப்புக்கொடுக்கலாம்? தெரியலை!

இந்தப் பத்து நாட்களில் படித்த புத்தகங்கள்:

மலர்கள்- ராஜம் கிருஷ்ணன் - எத்தனாவது முறை? நினைவில்லை!

மானசரோவர் - அசோகமித்திரன் - முதல் முறை - மனதில் இன்னும் பாரம் இருக்கிறது.

ராஜத்தின் மனோரதம்
விச்சுவுக்குக் கடிதங்கள்
நடந்தது நடந்தபடியே
மிஸ்டர் வேதாந்தம்
கல்யாணி - தேவனின் படைப்புக்கள் -அலுக்காத ஒன்று. எத்தனை முறை படித்தாலும் புத்துணர்ச்சி ஊட்ட வல்லது.

விடாது கருப்பு - இந்திரா செளந்திர ராஜன், இன்னும் 2 புத்தகங்கள் பேர் நினைவில் இல்லாதது.

கடல்வேந்தன் - சாண்டில்யன் - சேரன் செங்குட்டுவன் காலத்தில் நடந்த கடல் போரைப் பற்றிக் கபிலர் பாடிய சங்கப் பாடலை ஒட்டி எழுதப் பட்ட கதை. வழக்கமான சாண்டில்யன் பாணி.
ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும் நந்திவர்ம பல்லவனும் நடத்திய "பெண்ணாகம்? பெண்ணாடம்? இந்த ஊரே இப்போ இல்லைனு சொல்லுகிறாரே?" போர் பற்றிய கதை ஒன்று, சாண்டில்யன் எழுதியதும், இதே கருத்தை வைத்து இந்திரா செளந்திரராஜன் எழுதியதும். இரண்டுமே சுமார். காதல் பற்றி மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ரோஜா இதழ்கள் - ராஜம் கிருஷ்ணன்

சென்ட்ரல் - பி.வி. ஆர்.
தெய்வத்தின் குரல் - ரா. கணபதி
சக்தி பீடங்களின் தொகுப்பு - எழுதினவர் பேர் மறந்து போச்சு.
திருமந்திரம் - கொஞ்சம்

ராம மூர்த்தி - எஸ்.வி.வி. - நல்ல சரளமான நடை
சம்பத்து - எஸ்.வி.வி.

கல்கியின் தியாக பூமி - பல முறை படித்தது தான் - அலுக்க வில்லை.

லட்சுமி. அனுத்தமாவின் சில புத்தகங்கள். "ஆல மண்டபம்" அநுத்தமாவுடையது தான் வல்லி, இந்திரா பார்த்தசாரதினு நான் சொன்னது தப்பு. :))))))))

தமிழ்வாணனின் சில புத்தகங்கள் - இப்போப் படிக்கும்போது சிரிப்பாய் வருது. தவிர்க்க முடியலை.

இன்னும் படிக்கக் காத்திருக்கும் புத்தக வரிசையில்
கல்லுக்குள் ஈரம் - ர.சு. நல்ல பெருமாள் 2 முறையோ என்னவோ படிச்சிருக்கேன் என்றாலும் சில புத்தகங்கள் படிக்கப் படிக்கப் புது அர்த்தம் வரும், இன்னும் நல்லாப் புரியும். அதில் இதுவும் ஒன்று.
இந்திரா செளந்திர ராஜனின் ஒரு புத்தகம்
இது தவிரவும் சில மனதில் நிற்காத எழுத்துக்கள்.

இது தவிரவும் சில புத்தகங்கள் படித்தாலும் மனதில் நிற்கவில்லை. :(

பார்த்த படங்கள்:
ப்ளாக் - சிறுவயது ராணி முகர்ஜியாக நடிக்கும் பெண் நடிக்கவே இல்லை வாழ்ந்திருக்கிறாள். வயதான அமிதாபின் மேக்கப்பில் சற்றுக்குறைபாடு இருந்தாலும், அமிதாபின் நடிப்பு அதை மறக்கடிக்கிறது. என்றாலும் கண் தெரியாத, காது கேளாத, அதனால் பேசவும் முடியாத ஒரு பெண்ணை இவ்வாறு அடித்துத் துன்புறுத்திப் படிய வைக்கலாமா என்னும் கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. பாதியிலேயே என்னோட மறுபாதி "ச்சீசீ, இந்தப் படம் பிடிக்கலை" என்று சொல்லி எழுந்து பொயிட்டார்.

நிஷப்த்- இந்தப் படமும் பலருக்குப் பிடிக்கலை. வேதாவுடன் சாட்டும்போது வேதாவும் படம் பார்க்கவில்லை எனவும், படத்தின் ஸ்டில்களே தனக்குப் பிடிக்கவில்லை என்றே சொன்னாள். "முதல் மரியாதை" கதையின் கருத்தை ஒத்துக் கொண்டால் இதையும் ஒத்துக் கொள்ளலாம் என்றாலும் இதில் கதாநாயகியின் கண்ணை உறுத்தும் உடைகள் நம் மனதையும் உறுத்துகிறது. பொதுவாக ராம் கோபால் வர்மா படங்களிலேயே அவரின் கதாநாயகிக்கு உடைப் பஞ்சம் ஏற்படும் என்றாலும் இந்தப் பெண் கதைப் படி ஆஸ்த்ரேலியாவில் பிறந்து வளர்ந்த பெண். கதை முடிவு சொதப்பல் என்றாலும் படம் எடுத்திருக்கும் பாங்கும், ரேவதியும், அவரின் சகோதரர் ஆக வரும் நாசரும் நல்லாவே நடிச்சிருக்காங்க. இதுவும் நான் மட்டும் தான் பார்த்தேன்.

தோஷ்- கொஞ்சம் மர்மம், கொஞ்சம் அறுவை, என்றாலும் கதை நகரும் பாணியும், பிரானின் நடிப்பும் நல்லா இருக்கு.

இது தவிர சுமதி என் சுந்தரி- எத்தனை முறை? சவாலே சமாளி, அதே அதே, காதலிக்க நேரமில்லை, அலுக்கவே அலுக்காது, மூன்று தெய்வங்கள், கில்லி, வரலாறு, ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே(செம போர்), இதுக்கு மேலே நான் சொன்னால் அடிக்க வருவீங்க. அப்புறம வரேன்.4-ம் தேதி கிருஷ்ணன் பிறப்புக்காகப் படத்தை ஊருக்கு முன்னாலேயே சுட்டு, ஜி3 பண்ணி, 2 வரி எழுதி வச்சேன். மறந்து போய் பப்ளிஷ் பண்ணி இருக்கேன், ஹிஹிஹி, அ.வ.சி. அதுக்குக் கமென்டும் வந்துடுச்சு. பார்க்கறேன், கிருஷ்ணன் பிறப்புக்கு எழுத முடியுமா என்னனு! :P

கண்ணன் பிறந்தான்,கண்ணன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான்,
மனக்கவலைகள் மறந்ததம்மா!

காரணம் என்ன? தெரியலை!

காரணமே இல்லாமல் நட்பின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது, சிலரோட புறக்கணிப்புக்குக் காரணமே தெரியறதில்லை. என்னவோன்னு நினைச்சுப்பேன். பொதுவாக நான் மீள்பதிவு போட்டதே இல்லை. இருந்தாலும் இப்போதுள்ள மனநிலைமையில் மீள்பதிவு தான் அவசியமாப் படுகிறது.

"உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

வள்ளுவர் வாக்கு. எனக்குச் சில நண்பர்கள் இடுக்கண் களைந்திருக்கிறார்கள். இந்த வலை உலகிற்கு வந்ததில் நான் பெற்ற பெரும் பயன் இது.
"அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான்" என்று முண்டாசுக் கவிஞன் சொன்னது போல எல்லாரும் வந்திருக்கிறார்கள். "புதிய நட்பைப் பெறாத ஒவ்வொரு நாளையும் நான் இழந்ததாகக் கருதுகிறேன்." என்று சாமுவேல் ஜான்ஸன் என்ற அறிஞர் கூறிய மாதிரி ஒவ்வொரு நாளும் புதுப் புது நண்பர்கள். அதற்காக பழைய நண்பர்களை விட முடியுமா? முடியாது. நாம் போனாலும் அவர்கள் பார்க்காத மாதிரி இருந்தால் என்ன செய்வது? புரியவில்லை. பொறுத்துப் பார்ப்பது ஒன்று தான் வழி. நட்பு நீடிக்க வேண்டும் என்பது தான் நாம் விரும்புவது.

"வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ பகையே-துள்ளி வருகுது வேல்" என்று முண்டாசுக் கவிஞன் பாடியது போலப் பகையை வெல்ல அந்த ஆறுமுகன் உதவுவான். என்றாலும் நட்பை இழந்து விட்டோமோ என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கும். மனம் மிகவும் வலிக்கும்.

எனக்கு வலிக்கிறது.

Saturday, September 01, 2007

யார் என்ன சொன்னாலும் "அமெரிக்கா, அமெரிக்கா"வும் "கீதாஞ்சலி"யும் தொடரும். விரைவில் எதிர் பாருங்கள்!