எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 28, 2006

99. வ.வா. சங்கத்தின் அறிக்கை.

ஹி,ஹி,ஹி,ஹி, எக்கச்சக்க வரவேற்பு. நாம் ஊருக்குப் போறதிலே எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்? (பின்னே நீ எழுதறதைப் படிக்கிறதே ஜாஸ்தி, இதிலே சந்தோஷம் இல்லாமல் என்ன?) அடைப்புக் குறிக்குள் வரது எல்லாம் என்னோட மனசாட்சி பேசறது. அது இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா உளறும் கண்டுக்காதீங்க. இப்போ வ.வா.சங்கத்தின் அறிக்கை: (அதெல்லாம் அவங்க ஒண்ணும் கண்டுக்கலை. இவங்களாவேதான் தலைவினு சொல்லிக்கிறாங்க.) இந்தா சும்மா இரு. எனக்குத் தலைவரோட ஆதரவே இருக்கு தெரியுமா? இது நான். இப்போ மறுபடி சங்க அறிக்கை:

வ.வா.சங்கத்தின் கண்மணியும், ஒப்பற்ற தலைவருமான திரு கைப்புள்ள அவர்களால் ஏக மனதுடன் ஆதரிக்கப் பட்டவரானவரும், சங்கத்தின் நிரந்தரத் தலைவலியாகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டவரும், சங்கத்துக்காகச் சளைக்காமல் களப் பணி ஆற்றுபவரும், புரட்சித் தலைவியும்
ஆன திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் பத்து நாள் சங்கத்திற்காகக் களப்பணி ஆற்றச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுகிறார். அவர் ஏற்கெனவே இம்மாதிரி சுற்றுப் பயணம் மேற்கொண்டு சங்கத்தை வளர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. நடுவில் பொன்ஸ் புதரகம் போகும்போது பொற்குவியலை மறைத்து விட்டதால் அவர்தம் களப்பணி ஆற்ற முடியாமல் தடுமாறினார். அவர் தம் செலவுகளை சங்கத்தின் சார்பாக ஐ.நா. வினால் நியமிக்கப் பட்டிருக்கும் சூடான் நாட்டுத் தூதுவர் திரு நாகை சிவா பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கெனவே தலைவியின் பணியில் நாகை சிவா ஆற்றியுள்ள பணிகள் குறிப்பிடத் தக்கது. தலைவி இங்கே "எள்" என்று சொல்லி முடிப்பதற்குள் சிவா அங்கே இருந்து மெயில் அனுப்பி "தலைவி, எண்ணெய் அனுப்பி விட்டேன். வந்து விட்டதா?" என்று கேட்கும் தங்கமான உள்ளம் படைத்தவர். அவர் தம் சேவையில் பூரிப்படைந்த தலைவி அவர் இந்தியா வரும்போது அவர் பதிவு எழுத விஷயம் வேண்டுமே எனக் காட்ட இரண்டு பழைய போஸ்டர்களும், மூன்று மைனாக்களும் அனுப்புவதாகக் கூறி இருக்கிறார்கள்.

கீழே உள்ளவை எனக்கும் மனசாட்சிக்கும் நடந்த பேச்சு வார்த்தை:


(இதுக்கே எத்தனை பின்னூட்டம், நூத்துக் கணக்கில் போகுது, நீயும் எழுதறியே,) (நான்: அது சும்மா வயித்தெரிச்சலில் சொல்றது. எனக்கு என்ன? நான் எழுதறது கல்கி, தேவன் (ம.சா. இது கொஞ்சம் ஓவராயில்லை) ரேஞ்சுக்குப் புகழப்படுது உனக்கு என்ன பேசாமல் இரு. இப்போ இந்த தேவ், பாரு, இத்தனை நாள் குழந்தை பிறந்திருக்குதுனு வராமல் இருந்தார், நான் சுற்று பயணம் போறது தெரிஞ்சதும் வந்து வணக்கம் சொல்லிட்டுப் போறார். தலைவர் கைபுள்ள "கைபுள்ள" மாதிரி இல்லாமல் அப்போ அப்போ வந்து "நான் இருக்கேன்" அப்படிங்கிறார். இந்த பொன்ஸும் இனி இல்லை போலி பயம் அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. இந்த யானை மேலே அம்பாரி ஏறினதும் ரொம்ப ஸ்பீடுப்பா அவங்க. இந்த விவசாய அணித் தலைவர் வேறே வந்து "எப்படி இந்த மாதிரி எல்லாம் எழுதறீங்க?"னு பாராட்டிட்டுப் போறார்.) (ம.சா.ஆமாம், இதுக்கெல்லாம் மகிழ்ந்திடுவியே, உன்னோட படம் போடறேன்னு சொன்னாரே போட்டாரா?)

ஹி,ஹி,ஹி, மேலே உள்ளதைக் கண்டுக்காதீங்க. சுற்றுப் பயணம் போகும் வழியில் தோரணம், அலங்கார வளைவு, தொண்டர் படைக் கூடிக் கோஷம் எழுப்புதல், தொண்டர்களைக் கூட்டிவர லாரி, பஸ் ஏற்பாடு செய்தல் போன்றவை விவசாய அணித் தலைவர் இளா ஏற்றுக் கொண்டுள்ளார். பள்ளிக் குழந்தைகளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் தாயுள்ளத்தோடு ஒரு மூன்று மணி நேரம் மட்டும் காத்திருக்கும்படித் தலைவி ஏற்பாடு செய்திருக்கிறார். தலைவிக்கு எடைக்கு எடை பொன், பொருள், பணம், வெள்ளி போன்றவை கொடுப்போரின் வேண்டுகோளுக்கு இணங்கி தலைவி தன் எடையை 30 முதல் 40 கிலோ வரை ஏற்றி விட்டதாகப் பெரு மகிழ்வுடன் கூறினார். தலைவி ஓய்வு எடுக்கும் நேரமும், நேர் காணலுக்கான நேரமும் தலைவி அந்த அந்த ஊர்களுக்கு வந்ததும் மாவட்டத் தலைவர்களுக்கு அறிவிக்கப்படும். (ஒரு பயல் எட்டிக்கூடப் பார்க்க மாட்டான். சொல்லாமலே ஓடிடுவாங்க.)


இதன் இடையில் தலைவி கொடி நாட்டி உள்ள முத்தமிழ்க்குழுமம் மற்றும் தமிழ்மகள் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஏற்பாடுகளைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

தலைவி முத்தமிழ்க்குழுமத்திலும், தமிழ்மகள் குழுமத்திலும் கொடி நாட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே.

மறுபடி மனசாட்சித் தொந்தரவு:

(ம.சா. இது தெரிஞ்சு தான் சிபி, நீ இருக்கும்போதே தலை காட்டுவதில்லையா?) நான்: அது ஒண்ணும் இல்லை. அவரோட கனவில் கூட நான் குமாரகாவியத்தைப் பத்திக் கேட்டேனா? அதிலே அவர் பித்தாகிப் பித்தானந்தாவாகிட்டார்! தெரியாதா உனக்கு?

முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்த தொண்டர் படை மிகவும் உணர்ச்சிவசப்பட்டுத் தலைவிக்காகத் தீக்குளிக்கிற ரேஞ்சுக்குப் போயிட்டாங்க. தலைவியைப் பார்த்து, "இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" னு கேட்கிறாங்க. தலைவி அரண்டு போய், "வேண்டாம், இதுக்கு மேலே போனால் அரிப்புத் தாங்காது, ஏற்கெனவே கொசுத் தொல்லை" னு சொல்லிட்டாங்க. அவங்க அரிக்காதுனு உத்தரவாதம் கொடுத்திருக்கிறாங்க . வரவேற்பில் அவங்களும் சேர்ந்துப்பாங்க. ஆகவே நண்பர்களே, நண்பிகளே இம்முறை தலைவி பதிவு ஒண்ணும் போடாமல் பத்து நாள் விடுமுறையில் செல்வது எல்லாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிய வருகிறது.

Thursday, July 27, 2006

98. சமாதான உடன்படிக்கை

ஜல்லிக்கட்டுப் போட்டி

அசின் பற்றிக் கனவு காணும்உரிமை யாருக்கு என்பதில் அம்பிக்கும், கார்த்திக்குக்கும்

இருந்து வந்த தகராறும்,அதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியும், அம்பி

கையூட்டுக் கொடுத்து வேதாவின்மூலம் அதை ரத்து செய்யவைத்ததும் எல்லாரும் அறிந்ததே.

இப்போது கார்த்திக்குடன்எதிர்பாராமல் சமாதானமாகப் போய் விட்ட அம்பி தலைவியை

அவமதித்து விட்டதாகத் தலைவி எண்ணியதால் அவரிடம் வருத்தம் தெரிவித்தார்.

கறுப்புக் கொடி

தலைவி பங்களூர் வரும் சமயம் அம்பியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கறுப்புகொடிப்

போராட்டம் தடை செய்யப்பட்டது.அதற்குப் பதிலாகப் பூரண கும்ப மரியாதையுடன், மலர்மாலை, மலர்க்கிரீடம், பொன்னாடை,மற்றும் பணமுடிப்பு தருவதாக் அம்பி ஒத்துக் கொண்டார்.பொன்னாடை மற்றும் பணமுடிப்புக்கு ஆகும் பொருள் திரட்டும் பொறுப்பை நாகை சிவா ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அவருக்குக் கார்த்திக், மின்னல் தாத்தா, நன்மனம், வேதா,

சின்னக்குட்டி மற்றும் பல நாளாகத் தலை காட்டாமல் இருக்கும் மனசு ஆகியோர்
ஏற்றிருக்கிறார்கள்.

போஸ்டர் இல்லை

தலைவி அம்பிக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டும் போராட்டம்தொடங்க இருந்ததும் அவரால்

தாயுள்ளத்துடன் நிராகரிக்கப் பட்டது. ஆகவே அம்பி கொடுக்கும் சமாதான உடன்

படிக்கையை நிபந்தனை ஏதும் இன்றித் தலைவி ஏற்பார் என்று

எதிர்பார்க்கப் படுகிறது. தொண்டர் படை (அரிக்காது, பயப்படாதீங்க), திரண்டு வந்து தலைவியை ஆதரிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

97. மனசுக்குள்ளே மத்தாப்பு

ஹி,ஹி,ஹி, ஹி, எனக்கு இல்லை. உங்க எல்லாருக்கும் தான் மனசுக்குள்ளே மத்தாப்பு மாதிரி இருக்கும். அது என்னன்னா நான் 30-ம் தேதியில் இருந்து ஒரு பத்து நாளைக்கு லீவில் போகிறேன். எல்லாரும் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடத் திட்டம் போடறது எனக்கு நல்லாப் புரியுது. இருந்தாலும் வலை உலகின் ஒரு ஒப்பற்ற படைப்பாளியின் படைப்புக்களைப் படிக்க முடியாமல் போவது உங்கள் துரதிருஷ்டம் என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், என்னோட ரம்பம் தாங்க முடியாமல் இந்தப் பதிவுப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருப்பவர்களும் வேறு வழியில்லாமல் வருபவர்களும் (அம்மா, கை வலிக்குது, எப்படித்தான் எல்லா அரசியல் வாதிகளும் பேசறாங்களோ), என்ன வேணா பண்ணிக்குங்க. இப்போப் போகும்போது பங்களூரில் அம்பியுடன் ஒரு முக்கிய சந்திப்பு, மற்றும் சமாதான உடன்படிக்கைக் கையெழுத்திடுதல் எல்லாம் நடைபெறும் எனத் தெரிய வருகிறது. அம்பி என் கணவர் ஃபோனில் பேசுவது பற்றிக் கூறி இருப்பதை யாரும் கவனம் கொள்ள வேண்டாம் என்று கூறிக் கொள்கிறேன். நான் படுக்கப் போனதும் இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ சதித் திட்டம் தீட்டி இருப்பதாகச் சந்தேகம். நான் தினமும் 9-30-க்குள் படுக்கப் போய் விடும் விஷயம் அம்பிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். நான் சின்னப் பொண்ணு, சீக்கிரம் தாச்சிப்பேன் என்று அவருக்குத் தெரியுமே! அதனால் இதன் உள் நோக்கம் என்ன என்று கண்டு பிடிக்கும் வரை யாரும் இந்தச் செய்தியை நம்வ வேண்டாம். அம்பியுடனான சந்திப்புப் பற்றிய தகவல்கள் நான் வந்து கொடுப்பேன். அதற்குள் அம்பி கொடுக்கும் தகவல்களை நிஜம் என்று நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.

Wednesday, July 26, 2006

97.கிழக்கும் மேற்கும்-2

இந்த ப்ளாக்கர் வேதாளம் மறுபடிமுருங்கை மரம் ஏறிவிட்டது. வலைப்பக்கம் திறக்கவேமுடியவில்லை. tools.superhit.inவழியா வந்தால் வலைப்பக்கம் பார்த்துப் படிக்க மட்டும் வருகிறது. கடந்த இரண்டு நாளாserver வேறே down. பாதியில்
போய் விடுகிறது. எப்போ வருதுனுதெரியறது இல்லை. நேத்திக்கு Tata Indicom Broadband

Serviceவேறே வரவே இல்லை.Consumer Service-க்கு ஃபோன் செய்து கேட்டால் "All the

executives are busy. Please try after sometime."னு ஒரேஅலட்டல். எல்லாருக்கும்
வலைப்பக்கம் நேரடியாகத் திறக்க முடியுதுங்கறாங்க. எனக்கு மட்டும் இன்னும் வரவே இல்லை. நான்வலை உலகில் ரொம்பப் பிரசித்திஅடைஞ்சிருக்கிறதைப் பார்த்து யாரோ சதி செய்யறாங்கனு

நினைக்கிறேன். இதிலே இந்தஅம்பி வேறே எல்லாம் "சீன் காட்டறீங்க"னு சொல்றார்..

எல்லாம் மொக்கைப் பதிவு போடறவயித்தெரிச்சல். அதிலேயும் இந்தஜல்லிக்கட்டுப் போட்டியை வேறேரத்து செய்துட்டேனா, அதான்,அதோட இல்லை, என்கணவருக்கு சப்போர்ட் வேறே.

இந்த ப்ளாக்கர் தகராறே இந்த"கிழக்கும் மேற்கும்" பதிவுபோட்டதும் தான் ஆரம்பிச்சது.

அப்படிப் பார்க்கறச்சே இவங்க எல்லாம் சேர்ந்து என் எழுத்துசூரிய ஒளி போல பிரகாசித்து

வருவதைத் தடைசெய்யறாங்களோனு தோணுது.இவர் ஒருத்தர், நான் எதுசெய்தாலும், அதுக்கு நேர் மாறாசெய்வார்.

காலையில் பாருங்க, மிக்ஸியில் அரைத்து விட்டுக் கொஞ்ச நேரம்,என்ன ஒரு நிமிஷம் இருக்கும், வேறு வேலையாப் போனேன்.அரைத்தது போதுமானு பார்த்துட்டுத் திருப்பி

அரைக்கணும்னு மெயின் ஸ்விட்சை அணைக்காமல் வைத்திருந்தேன். திரும்ப வந்து

பார்த்துவிட்டு அரைச்சதுபோதாதுனு மிக்ஸியைப் போட்டசுத்தலை. என்னடா இது

மின்சாரம் கூடப் போகலியே,லைட் எரியுது ஃபான் சுத்துதுனுநினைச்சுக் கொண்டே

மறுபடிமறுபடி பார்க்கறேன். சுத்தவே இல்லை. சரி என்று அவரைக் கூப்பிட்டு மிக்ஸி என்னவோ ஆச்சுஎன்று சொல்ல இந்தச் சமயம்கரெக்ட்டா வந்துடுவார். பார்த்து

விட்டு, உடனேயே பதிலே சொல்லாமல் ஸ்விட்சைப் போட்டு விட்டுப் போகிறார். என்னத்தைச்

சொல்லறது?

நான் சீரியல் பார்க்கறதே"சிதம்பர ரகசியம்" மட்டும் தான்.அதுதான் கொஞ்சம்

இருக்கிறதிலேயேபரவாயில்லைங்கற ரகம். அதனாலும் எனக்கு இயல்பாவே

thriller and comedy தான்பிடிக்கும்ங்கிறதாலேயும் மற்றசீரியல் அவ்வளவா

பிடிக்கிறதில்லை. புதன்கிழமை "சிதம்பர ரகசியம்" பார்க்க சகலவிதமான் முன்னேற்பாடுகளுடன்

உட்காருவேன். சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, சமையல் அறை சுத்தம் செய்து முடித்து விட்டு

வந்தால், சரியாக இருக்குமென்றுஎல்லாம் முடித்து விடுவேன். வந்து உட்கார்ந்தால் உடனே மின்சாரம்போயிடும். ராத்திரி சரியாக 9 மணிக்கு வரும். அல்லது மின்சாரம் போகலைன்னால் யாராவது ஃபோன் செய்வார்கள்.சாதரணமாக ஃபோன் வந்தால் விழுந்தடித்துக் கொண்டு எடுக்க

வருவார். இப்போ வரவே மாட்டார்.அப்படித் தப்பித் தவறி ஃபோனைஎடுத்து விட்டால் என் கணவர் ஃபோனில் பேசும் போது பார்க்க வேண்டுமே! "நாகா" சிதம்பரரகசியத்தில் கொடுக்கும்

சஸ்பென்ஸ் எல்லாம் தோற்று விடும். எல்லாம் மோனோசிலபிளில் தான் பேசுவார். ம், அல்லது சரி,இதுக்கு மேலே வார்த்தை வராது. பேசுவது யார் என்று லேசில் கண்டு பிடிக்க முடியாது. நமக்குஇங்கே மண்டை காயும்.சமயத்தில் "அடடா, அப்படியா," என்றும் வார்த்தைகள் வரும்.

என்னவோ,ஏதோ என்று மனம்பதைக்கும். ஃபோனில் எங்க பெண்ணாயிருந்தால் உடனேயே, "இந்தா, உன் பெண் பேசுகிறாள். அவளுக்கு அம்மாகிட்டே தான்

பேசணுமாம்." என்று கொடுத்து விடுவார். தட்ட முடியுமா? மற்ற நேரத்தில் அவர் பெண், சீரியல் பார்க்கும்போது என் பெண்ணாகி விடுவாள். நான் தான் தாயுள்ளம் கொண்டவள் ஆச்சே? அதுவும்எங்க பொண்ணு எங்க வீட்டின் முடிசூடா ராணி. ஆனால் அதை

ஒத்துக்க மாட்டாள். எங்களோடபரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை அவள் தம்பிக்கு நாங்கள் எழுதி

வச்சுட்டதா நினைச்சுப்பாள். சாம்ராஜ்யமே இல்லைனாலும்நம்பறதில்லை,. தம்பிக்காரன்

வழியே தனி வழி. சரியா நான் யோகா அல்லது தியானம் பண்ணும் சமயம் டெலிபதியில்

பார்த்து விட்டு ஃபோன் செய்பவன்.என்னைப் பத்திய மற்ற புகார்களுக்கு அக்காவுடன் பாசம்

மிகுந்த தம்பியாக ஒத்துப்போகிறவன். சாம்ராஜ்யம் பற்றி மட்டும் வாய் திறக்காத மெளனி.

அப்பாவுக்குச் சரியான பிள்ளை. நான் தியானம் செய்யும்போது சும்மாவே சில சமயம் "இட்லிக்குச் சட்னி போதுமா? சாம்பார் வேணுமா? இனிமேல் போய் சாம்பார் வைக்க நேரம்இருக்குமா?" என்றெல்லாம் தோணும். (துளசி, நான் தியானம் பண்ணறேன்னு பெருமூச்சு

விட்டீங்களே,)இந்தக் கூத்து எல்லாம் முடிந்து நான் டி.வி. பார்க்க வந்தால் அதற்குள் சீரியல்

முடிந்திருக்கும். "என்ன நடந்தது?" என்று இவரிடம் கேட்டோமானால் உடனே அவர் "அதான் அந்த அபி இருக்காளே, அவள் தேவயானிக்குப் புருஷனா நடிக்கிறாரே அவர் வீட்டில்

இருக்காள் இல்லையா? அப்போமாதவி வந்து சோமுவுக்குப் ஃபோன் செய்து," என்று

ஆரம்பிப்பார். "என்ன உளறல் இது? அபி "கோலங்கள்" சீரியலில் வராள். அது இப்போதான்

ஆரம்பிக்குது. அதுக்குள்ளே வேறே என்னவோ கதை சொல்றீங்களே? சிதம்பர ரகசியம்

என்ன ஆச்சு?" என்று கேட்டால்உடனே அதிலே ஒரு பொண்ணு வருவாளே என்று ஆரம்பிப்பார்."அதிலே ஒரு பொண்ணூ என்ன 9 பொண்ணு வரா. உங்களுக்கு

இத்தனை சீரியல் பார்த்தும் உருப்படியா ஒரு கதை சொல்லத்தெரியலை." என்று சொன்னால்

"உன்னை யார் இவ்வளவு நேரம்பேசச் சொன்னது? " என்பார். அப்போ "நீங்க சிதம்பர ரகசியம்

கதை சொல்ல மாட்டீங்க? னு கேட்டால் சாவ காசமாக " நான் வந்து "என் தோழி, என் மனைவி, என் காதலி" சீரியலும் பார்த்தேனா, ஆனந்தத்தில் அபிராமியா வருவாளே ஒருத்தி

அவள் இதிலும் வராளே" என்று ஆரம்பிப்பார். மூன்றாவது உலக மகா யுத்தம்ஆரம்பிக்கும் .நான் இதிலேயே களைத்துப் போய்ப் படுக்கப் போய் விடுவேன்.

இப்படித்தான் ஞாயிற்றுக் கிழமை சீரியல் முடிந்திருக்கிறது. எந்த நேரம் என்று இரண்டு பேரும்

வாக்குவாதம் பண்ணிக் கொண்டதில் கடைசியில் முடிவே பார்க்கலை. யாராவது பார்த்தவங்க

சொல்லுங்களேன், ப்ளீஸ். :D
**************

ப்ளாக்கர் செய்யும் அட்டகாசத்தைக் கண்காணிக்க ஒரு நிபுணனையும், நிபுணியையும்

வரவழைத்தேன். இரண்டு பேரும் திகைத்துப் போய்ப் பேச்சே வரவில்லை. "இந்த மாதிரி மாஜிக் எல்லாம் எங்கே கத்துக்கிட்டீங்க"னு ஒரே ஆச்சரியம் போங்க. இரண்டு
பேரும் பின்னங்கால் பிடரியில் பட ஓடினாங்க. அப்புறம் வரவே இல்லை. நிபுணன் எங்க அண்ணா பையன். இரண்டு வருஷம் கழிச்சு நெதர்லாண்ட்ஸில் இருந்து

வந்திருக்கான். இப்போ சீக்கிரமே போகணும்னு சொல்லறானாம்.அண்ணாவுக்கு

வருத்தம். நிபுணி, இந்த வருஷம் தான் பாஸ் செய்து campus selection ஆனது பத்திச் சொல்ல வந்தாள். "இப்போ படிச்சதேமறந்துட்டேன்" என்று சொல்கிறாள் என்று அவங்க

வீட்டில் புகார். என்ன செய்யலாம்?
:D

இந்த ஒரு போஸ்ட் போட நான் பட்ட பாடு இருக்கே, சொல்ல முடியலை போங்க. நேத்திக்கு எழுத முடியலைனு இன்னிக்கு எழுதி சேமித்து வைத்துப் பின் திறந்தால் எக்ஸ்ப்ளோரர் ஒரே அடம். வரவே இல்லை. சரினு நெருப்பு நரியில் போய்க் கொடுக்கலாம்னு நினைச்சா அது என்னவோ ரொம்ப லேட் செய்யவே திருப்பிப் போடலாம்னு தட்டினேன் பாருங்க, சுத்தம் எல்லாம் அவுட். மறுபடி எழுதினால் வெளியே போயிட்டேன். சரினு மறுபடி சேமிப்பில் போட்டு விட்டு வந்து பார்த்தால் எல்லாம் புதுக் கவிதை வடிவம். சரி பண்ணிப் போடுகிறேன். வந்தால் என்னோட அதிர்ஷ்டம், வராட்டி உங்கள் எல்லாருக்கும் அதிர்ஷ்டம்/ யாருக்குன்னு பார்க்கலாம்.

Tuesday, July 25, 2006

94. நட்பின் வலிமை

எண்ணங்கள்சிவா, மின்னல் தாத்தா, ச்யாம்,
நன்மனம், வேதா, கார்த்திக் எல்லாருக்கும் நன்றி. நான்
எழுதியது இந்த வலைப்பூவிற்குச்சம்மந்தம் இல்லாதவர். நேற்றுநடைப் பயிற்சிக்குப் போக முடியாமல் வீட்டில் இருந்த சமயம் தோன்றிய சில பழைய நினைவுகள்

என்னை அந்தப் பதிவு போடத் தூண்டி விட்டது. ஒரு சில நிமிஷ உணர்வுகள், ஆனால் உடனேயேசரியாகி விட்டேன். நான்கொஞ்சம் போராட்ட குணம் உடையவள். அவ்வளவு சீக்கிரம் உடைய மாட்டேன். ஆனால் நேற்று என்னவோ அப்படி ஒரு மனக் கிலேசம்.

அப்புறம் அதை எடுத்து விடலாம்என்று ராத்திரி முயன்றபோது வலைப்பக்கம் திறந்தால் முகப்புப்பக்கம் திறக்கவில்லை,முகப்பில் இருந்து லைப்பக்கம்வரமுடியவில்லை. அதற்குள்சிவாவின் பின்னூட்டம் வந்தது. பப்ளிஷ் செய்து விட்டு இப்போதுதான் பார்த்தேன். இப்போவும்வலைப் பக்கம் tools.superhit.in வழியாக வந்து விட்டேன். ஆனால்
பதிவு போடப் போகமுடியவில்லை. blogger.com
வழியாகப் போய்ப் பதிவோஅல்லது பின்னூட்டமோ
வெளியிட்டால் அங்கிருந்துவலைப்பக்கம் வர முடியவில்லை.
என்ன காரணம் என்று யாராவதுதெரிந்தால் சொல்லவும். நேற்றில்இருந்து தான் இந்தப் பிரச்னை.நேற்று வரை tools வழி வந்து எல்லாம் செய்ய முடிந்தது. என் வலைப்பக்கம் நேரடியாகவும் திறக்க முடியவில்லை. யாராவது
உதவ முடியுமா? உண்மையில் நண்பர்கள் இத்தனை பேர் இருக்க நான் எழுதியது தப்புத்தான். ஆனால் எப்போவுமே திறந்திருக்கிற கதவின் பால் நம் கவனம் போவது இல்லை. மூடி விட்ட கதவிற்குப் பின்னால் என்ன நடக்கிறதோ என யோசிப்போம்.மனித மனம். நான் ஒரு விதி விலக்கு இல்லையே! அதான் இப்படி ஒண்ணு வந்து விட்டது. திருஷ்டிப் பரிகாரம்னு வச்சுக்குங்க.

Monday, July 24, 2006

94, நட்பின் இழப்பு

"உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

வள்ளுவர் வாக்கு. எனக்குச் சில நண்பர்கள் இடுக்கண் களைந்திருக்கிறார்கள். இந்த வலை உலகிற்கு வந்ததில் நான் பெற்ற பெரும் பயன் இது.
"அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான்" என்று முண்டாசுக் கவிஞன் சொன்னது போல எல்லாரும் வந்திருக்கிறார்கள். "புதிய நட்பைப் பெறாத ஒவ்வொரு நாளையும் நான் இழந்ததாகக் கருதுகிறேன்." என்று சாமுவேல் ஜான்ஸன் என்ற அறிஞர் கூறிய மாதிரி ஒவ்வொரு நாளும் புதுப் புது நண்பர்கள். அதற்காக பழைய நண்பர்களை விட முடியுமா? முடியாது. நாம் போனாலும் அவர்கள் பார்க்காத மாதிரி இருந்தால் என்ன செய்வது? புரியவில்லை. பொறுத்துப் பார்ப்பது ஒன்று தான் வழி. நட்பு நீடிக்க வேண்டும் என்பது தான் நாம் விரும்புவது.

"வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ பகையே-துள்ளி வருகுது வேல்" என்று முண்டாசுக் கவிஞன் பாடியது போலப் பகையை வெல்ல அந்த ஆறுமுகன் உதவுவான். என்றாலும் நட்பை இழந்து விட்டோமோ என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கும். மனம் மிகவும் வலிக்கும்.

எனக்கு வலிக்கிறது.

93.கிழக்கும் மேற்கும்

எங்க வீட்டிலே நானும் என் கணவரும் எல்லாத்திலேயும் நேர் எதிர்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன். நாங்கள் செய்யும் வேலைகளும் அப்படித்தான், நேர் எதிராக இருக்கும். இப்போ நான் முன் தூங்கி, முன் எழும் பத்தினி என்றால் அவர் பின் தூங்கிப் பின் எழும் பத்தினன். என்னிக்காவது காலையில் சீக்கிரம் எழுந்துட்டார்னு வைங்க, எனக்கு வயித்தைக் கலக்கும்.அன்னிக்குப் பால்காரன் வரமாட்டான்.
அது என்னமோ தெரியலை, எங்க பால்காரப்பையன் என் கணவர் சீக்கிரம் எழுந்துட்டா எப்படியோ தெரிஞ்சுக்கறான். அன்னிக்கு ஒண்ணு வர மாட்டான். அல்லது நேரம் கழித்து வருவான். அதிலே ஆரம்பிக்கும் பாருங்க ஒரு விவாதம், சாலமன் பாப்பையா நடத்தும் பட்டி மன்றம் எல்லாம் ஒண்ணும் இல்லை. அப்படி நடக்கும். சரி, அப்படியே பால் வந்துடுச்சு வைங்க, (லேட்டாத்தான்), நான் காஃபி கலக்க உள்ளே போனதும், இங்கே ஆள் obscond. எங்கே போவார் தெரியாது. கண்டு பிடிக்கணும். இத்தனைக்கும் நான் காஃபி குடிச்சுட்டு எங்கே வேணாலும் போங்கனு சொல்லி இருப்பேன். அதெல்லாம் மனைவி சொல் தட்டும் புருஷனிடம் எங்கே எடுபடும்? நான் காஃபியைக் கலந்து கொண்டு வந்து கொல்லைப் பக்கம் தோட்டம், ஸைடில் தென்னை மரத்தடி,(அவருக்குப் பிடித்த இடங்கள்), வாசலில் மல்லிச் செடி என்று தேடினால் மொட்டை மாடியில் தலை தெரியும். அங்கே இருந்து கூப்பிட்டுக் காஃபியைக் கொடுப்பதற்குள் அப்போது தான் ஃபோனுக்கு அவசரம் வரும். அடிக்க ஆரம்பிக்கும். அத்தனை அவசரத்திலும் கணவரைக் கூப்பிட்டுக் (கடமை தவறாத மனைவி) காஃபியைக் கொடுத்து விட்டு ஃபோனை எடுத்தால் வாசலில் தென்னை மரம் சுத்தம் செய்பவரோ, அல்லது வேறு யாராவதோ அல்லது கீரைக்காரியோ தலை போகிற அவசரத்துடன் கூப்பிடுவார்கள். கையில் ஃபோனுடன் (அது தான் லேட்டஸ்ட் ஸ்டைல்) பேசிக் கொண்டே அவர்களைச் சமாளிப்பதற்குள் ஃபோனில் இருப்பவர் என் கணவருடன் தான் பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். சரி என்று அவரைக் கூப்பிடலாம் என்று பார்த்தால் மறுபடி ஆள் இருக்க மாட்டார். இந்த வீட்டில் எனக்கு மட்டும் சமையல் அறை, கூடம் என்று பகல் நேரத்தில் மாறி மாறி இடம் இருக்க இவர் மட்டும் எங்கேயோ போய் விடுகிறாரே என்ற எரிச்சலுடன் போய்ப் பார்த்தால் செடிகளுக்குத் தண்ணீர் காட்டுவார்.(எனக்கும் சேர்த்துத் தான்) ஃபோனை அவர் கையில் கொடுத்து விட்டு உள்ளே வந்து செடிக்குத் தண்ணீர் விடுகிறாரே என்று மேலே தொட்டியில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டே மோட்டார் ஸ்விட்சைப் போடுவேன். ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்ம்ம்ம் என்று ஆரம்பிக்கும் மோட்டார் திடீரென நிற்கும். என்னடா இது மின்சாரம் கூடப் போகவில்லையே என மறுபடி போட்டால் மறுபடி போயிட்டுப் போயிட்டு வரும். அப்போதான் உரைக்கும் வெளியிலும் ஒரு ஸ்விட்ச் இருப்பது. இங்கே இருந்து நான் போட நான் போடுவது தெரியாமல் அவர் போட அது அணைய இப்படி இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எதிராக வேலை செய்வோம். தொட்டி நிரம்பி வழியும் போதும் இதே கதை தான். இப்படித் தாங்க எல்லாத்திலேயும், நான் குளித்து விட்டு வந்து ஹாலில் மின் விசிறியைப் போட்டு விட்டு ஒரு நிமிஷம் சமையல் அறைக்குள் போய் விட்டு வருவேன். இங்கே மின் விசிறி அணைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள். இது என்ன இக்ஷிணி வேலையா என வியப்புடன் மறுபடி உட்கார்ந்து கொண்டு மின்விசிறியைப் போடுவேன். அப்புறம் பார்த்தால் அவர் அணைத்திருப்பார். ரேடியோவில் சங்கீதம் கேட்க ரேடியோவைப் போட்டாலும் சரி போட்டுவிட்டுக் கிட்டேயே உட்காரச் சொல்லுவார். நம்ம உடம்பு ஒரு இடத்தில் உட்காரும் உடம்பா? பள்ளி நாட்களிலேயே ஆசிரியைகளிடம் தண்ணி காட்டி இருக்கேன். இப்போது எப்படி ஒரே இடத்தில் உட்காருவது?

தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதும் அவர்தான். நான் போய் எப்போவாவது உட்காருவேன். அது அநேகமாக நான் சாப்பிடும் சமயமாக இருக்கும். "ஆனந்தம்' சீரியல் பார்க்கிறார் என்றால் எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும், அவர் வயித்தைக் கலக்கும். என் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியாமல். இப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் பாருங்க. அபிராமி என்ற பாத்திரத்தின் தம்பி மாமனார் இறந்து போகிறார். அவர் சாவை இந்த சீரியல் எடுத்தவங்க வழக்கமான முறையில் காட்டவே இல்லையா? எனக்கு ஒரே சந்தேகம் இது தமிழ் சீரியல் தானா வேறே ஏதாவதா என்று? என் கணவரைப் போட்டுத் துளைத்து எடுத்ததில் அவர் சொன்ன பதில், "எனக்கு வெளியே எதிரியே இல்லை. வீட்டுக்கு உள்ளேயே நீ ஒருத்தி போதும். என்னை ஆளை விடு இல்லாட்டா நீயே உனக்குப் பிடித்தமாதிரி சீரியல் எடுத்துக்கோ." என்றார். நான் பல்லைக் கடித்தேன்.

Sunday, July 23, 2006

92.வேத மந்திரங்கள்- ஒரு பார்வை

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில், "Vedhik Science" "Vedhik Maths" என்று இரண்டையும் பற்றி ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை வேளையில் வந்து கொண்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகமே. மிகப் பயனுள்ள ஒர் நிகழ்ச்சி. அதைப் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பார்கள் தற்காலத்திலும் அவை ஏற்கத் தக்கவை என்று. சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:
என்று ஒரு மந்திரம். வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம். வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

Saturday, July 22, 2006

91. ஒரு அதிரடி நடவடிக்கை

வலை உலக நண்பர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. இதனால் தெரிவித்துக் கொள்ளப்படுவது என்னவென்றால், வருகிற நவம்பர் மாதம் கொட்டுகிற மழையில் நம்ம அம்பிக்கும் (Brutus), கார்த்திக் முத்து ராஜனுக்கும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிரந்தரமாக ரத்து செய்யப் பட்டது. இதைப் பற்றி நம் வலை உலகச் செய்தி சேகரிப்பாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால்:
************

சதி அம்பலம், வேதாவின் துரோகம்.

ஜல்லிக்கட்டுப் போட்டி

வலை உலகில் பிரசித்தி பெற்று இருக்கும் கீதா சாம்பசிவம் அந்த வலை உலகில் எப்போதாவது மொக்கைப் பதிவு எழுதும் அம்பிக்கும், முடிஞ்ச போது நல்ல பதிவு எழுதும் கார்த்திக்குக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி வைத்து விட்டு அதை நவம்பரில் கொட்டுகிற மழையில் வைத்தால் தான் நல்லது என்று தீர்மானித்தது நாம் அனவரும் அறிந்ததே.

அசினைப் பற்றிய கனவு

முன்னதாக அம்பிக்கும், கார்த்திக்குக்கும் இருந்து வந்த அசினைப் பற்றி யார் கனவு காண்பது என்ற விஷயத்தில், நடுவர் கோபாலன் ராமசுப்பு அவர்கள் அம்பி, அசினுக்குத் தம்பி என்று தீர்மானித்ததும் அதை அம்பி ஏற்றுக் கொள்ளாததும் நேயர்கள் அனைவரும் அறிந்ததே. அதனால் தவிர்க்க முடியாமல் தலைவி (நான் தான்) இந்த அறிவிப்பைச் செய்தார் என்பதும் நீங்கள் அறிந்த விஷயமே. வேதாவின் தலை மேல் ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்திருக்கும் வேளையில் வேதா அவங்க தலைவியான கீதாவின் மனம் புண்படும் வகையில்:-) அவரைப் பற்றி வயசானவர் என்று கூறி ஒரு பதிவு எழுதியதைப் பார்க்கும்போது இந்தச் செய்தியில் அம்பியும் சம்மந்தப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று அம்பி கீதாவிற்கு மெயில் அனுப்பி அதைப் பார்க்கச் சொல்லித் தூண்டியதில் அவர் மிகுந்த மனக்கிலேசம் அடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. தன் தலைமேல் நடக்கவிருக்கும் ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொண்டும் கூட, அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பைச் சுமந்து கொண்டும் கூட, வேதா அம்பியுடன் சேர்ந்து கொண்டு இந்தச் சதியைச் செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அம்பி வேதாவின் வலைப் பக்கத்தில் பின்னூட்டத்தில் தான் ஒரு பாட்டில் தேன் குடித்த மாதிரி இருக்கிறது என்று சொன்னதில் இருந்து இது அம்பியும் வேதாவும் சேர்ந்து செய்த சதி என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. (ஹி,ஹி,ஹி,ஹி, அந்தத் தேன் பாட்டிலை எடுத்துட்டு விளக்கெண்ணெய் பாட்டிலை வச்சுட்டேன். அம்பி இனிமேல் ஒரு பத்து நாள் வலைப்பக்கம் வரமுடியாது. ஹி,ஹி,ஹி,ஹி,). நாகை சிவா மற்றும் கார்த்திக் முத்துராஜன் இருவரும் மெளனமாக இருப்பதும் சந்தேகத்திற்கு அறிகுறிதான். புதரகம் சென்றதும் பொன்ஸ் மறைத்து வைத்த பொற்குவியலில் இருந்து நாகை சிவா எல்லாருக்கும் கையூட்டுக் கொடுத்து விஷயம் வெளியே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.(இன்னொரு Brutus). வ.வா.சங்கத்தின் கணக்கு, வழக்கு மற்றும் நாகை சிவாவால் செய்யப்பட்ட செலவு இதைப் பற்றி ஆராய ஒரு விசாரணக் கமிஷன் போட வேண்டும் என்று வலை உலக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் தலைவி, தாயுள்ளத்தோடு அவர்கள் தலைவியின் பதிவில் பின்னூட்டம் இட்டால் போதும், அதை விடப் பெரிய தண்டனை எதுவும் இல்லை என்று தெரிவித்து விட்டார்.

தலைமை

ஆனால் இது பற்றிய உண்மை நிலவரத்தை ஆராய தி.ரா.ச. தலைமையில் மின்னல் தாத்தா, சின்னக்குட்டி, நன்மனம், பெருசு, தம்பி ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்ப்பித்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிகிறது.
வ.வா. சங்கம்

வ.வா. சங்கத்தின் ஒப்பற்ற தலைவர் கைப்புள்ள அதன் மகளிர் அணியின் நிரந்தரத் தலைவலி கீதா சாம்பசிவத்தை ஆதரிப்பதும் தெரிந்ததே. ஆகவே இந்தக் கோணத்திலும் புலனாய்வு செய்யப்படுகிறது. தலைவர் "கைப்புள்ள' என்பதால் அசின் பற்றியும் 9தாரா பற்றியும் எதுவும் அறிந்திருக்கவில்லை. இது பற்றி அறிந்த தலைவி அவருக்கு இலவச ட்யூஷன் எடுத்தும் அவர் புரிந்து கொள்ளாததால் "கோவை சரளா" "கைப்பொண்ணு" போன்ற பெயர்களைக் கேட்டால் பயந்து நடுங்குவதாலும் தலைவரைக் கண்டு உண்மை நிலவரம் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நாளை சனிக்கிழமை

மறுநாள் சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு (என்ன ஒரு கண்டுபிடிப்பு) என்று இரண்டு நாள் விடுமுறை வருவதால், அந்தச் சமயம் தான் ஒளிந்து கொள்ள வசதி என்று அம்பி வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகப் பார்க்க முடிகிறது. யார் என்ன செய்தாலும் தலைவியின் வயதைக் கூட்டவோ, குறைப்பதோ தலைவியின் சொந்த இஷ்டம் என்பதும் அதில் யாரும் தலையிட முடியாது என்பதும் எல்லாரும் அறிந்த உண்மை.
வழக்கு

நாளை மறுநாள் திங்கள் அன்று வழக்குக் கோர்ட்டுக்கு வரும் என்றும், அம்பி கைது செய்யப் படுவாரா? அல்லது சரண் அடைவாரா என்றும் வலை உலகப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Thursday, July 20, 2006

90. ஒரு கஷ்டமான பதிவு.

அப்பாடி,
ஒரு வழியா யாரும் உதவி பண்ணாமல் என்னோட வலைப்பக்கம் திறந்து விட்டது. அதனாலே நான் என்னமோ தொழி நுட்பத்திலே சிறந்தவளா மாறிட்டேன்னு நினைக்கவேண்டாம். எல்லாம் இந்த tools.superhit, superhitஆ உதவி செய்தது. உதவியைக் கொடுத்த முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்த திரு நடேசன் அவர்களுக்கும், அதை வழி மொழிந்த சிவசங்கருக்கும் நன்றி. மற்ற URL எதுவும் அன்னியலோகம் உள்பட உபயோகித்ததில் என்னோட வலைப்பக்கத்தில் உள்ள நான் கடைசியாகப் பதிவிட்ட பதிவைப் படிக்க முடிந்ததே தவிர உள்ளே வர முடியவில்லை. நம்ம நாகை சிவா ஒரு அட்ரஸ் கொடுத்து இருக்கிறார். பின்னூட்டத்தில் வந்ததால் பார்க்க முடியவில்லை. அம்பி முந்தாநாளே எச்சரிக்கை செய்து விட்டு இரண்டு URL கொடுத்தும் அதில் ஒன்று non-existing. மற்றது வலைப்பக்கத்தில் உள்ள புதிய வலைப்பதிவு மட்டுமே வந்தது. நாம் தான் பைத்தியம் என்றால் அப்படி இல்லை வலை உலகிலே எல்லாருமே பைத்தியம் என்று இந்த விஷயத்தில் நிரூபணம் ஆகிவிட்டது. எல்லாருமே ஜகஜ்ஜோதியில் ஐக்கியம் ஆயாச்சு. வாழ்த்துக்கள். எல்லாருக்கும். நான் ஏன் இத்தனை நாள் பதிவு எழுதவில்லை என்று கேட்ட நாகை சிவாவிற்கு ஏற்கெனவே 20 தேதி வரை போயிட்டுப் போயிட்டுத்தான் வருவேன் என்று சொல்லி இருந்தேன். மறந்துட்டீங்க, போல இருக்கு. இன்னிக்கு இதுதான் பதிவு. தமிழ்மணம் திறக்குமா, இனிமேல் தான் பார்க்கணும். நீங்க யாரு படிக்கப் போறீங்க, அதுவும் தெரியாது. எல்லாருக்கும் சீக்கிரம் இந்தப் பிரச்னை சரியாகி முன் போல ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.
"கணபதிராயன் அவனிரு காலைப்
பிடித்திடுவோம்,
குணமுயர்ந்திடவே விடுதலை
கூடி மகிழ்ந்திடவே.
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம்
பரா சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்"

TRC Sir, போலி கிலி யெல்லாம் ஒண்ணும் இல்லை. இதை எல்லாம் வச்சு நான் சின்னப் பொண்ணு இல்லைனு சொல்லப்போறீங்களா, அது மட்டும் நடக்காது சார். பதிவு போட்டுட்டேனே!பதிவு வெளியிட முடியாதுனு ப்ளாக்கர் சொல்லுது, என்ன நடக்குமோ தெரியாது.
ஈஸ்வரோ ரக்ஷது.

Saturday, July 15, 2006

89. ஒரு முக்கிய அறிவிப்பு.

நேத்திக்கு ஜி-மெயிலில் பொன்ஸோட பெயரில் யாரோ போலிப் பின்னூட்டம் கொடுக்கிறதாகவும், போலி யாரோ இருக்கிறதாகவும், அதனால் பொன்ஸின் profile no. பார்த்துத் தெரிந்து கொள்ளும்படியும் நன்மனம் கிட்டே யிருந்து ஒரு மடல் வந்திருந்தது. நன்மனம் வலைப்பூவிற்கு நேரில் போய் விவரம் கேட்கலாம் என்றால் அவர் வலையில் சிக்காத மீனாகி விட்டார். அதனால் என்னோட அறிவிப்பை எதுக்கும் கொடுத்து வைக்கிறேன். வலை உலக நேயர்களுக்கு (சும்மா ஒரு build-up தான்) என்னோட அபாரமான எழுத்துத் திறமை பரிச்சயம் ஆகி இருந்தாலும் போலிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதை உணர்ந்து இந்த அறிவிப்புச் செய்யப் படுகிறது. என்னோட profile no.15021984. என்னோட பின்னூட்டத்தில் பெயரின் மேலே நீங்கள் பெருச்சாளிக் குட்டியை வைத்துப் பார்த்தால் என்னோட வலைப்பூவின் பெயரும் மேற்குறிப்பிட்ட நம்பரும் தெரியும். ஆகவே போலிகள் ஜாக்கிரதை. நம்ம வழீஈஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈ. யாரும் இவ்வளவு அபத்தமாக எழுத முடியாது. இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதை முத்தக்காவாக இருக்கலாமே என்று தான் இந்த ஏற்பாடு.

Friday, July 14, 2006

88. ஒரு ஒத்தி வைப்பு.

ஒண்ணும் இல்லைங்க. நம்ம அம்பிக்கும் கார்த்திக் முத்துராஜனுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். எதிலேனு கேக்கறீங்களா? அசினைப் பத்தி யார் கனவு காணறதுனு. இந்த கோபாலன் ராமசுப்பு இருக்காரே அவர் ஏதோ சமரசம் செஞ்சு பார்த்திருக்கார். ஒண்ணும் நடக்கலை. இரண்டு பேரும் ஒத்துக்கலை. நான் முதலில் ஒரு சின்ன ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் இப்போ அசின் கல்யாணத்துக்கு இன்னும் 3 அல்லது 4 வருஷம் போகும்னு சொல்லிட்டதாலே அந்த ஜல்லிக்கட்டை ஒத்தி வைக்கிறேன்.

மறு தேதி குறிப்பிடாமல் எல்லாம் ஒத்தி வைக்கலை. நம்ம சென்னையின் நீர்வளத்தைப் பத்திக் கிண்டல் அடிக்கும் அம்பி சென்னையின் நீர்வளத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதனாலே நவம்பர் 15 தேதிக்கு மேல் நல்ல மழை பெய்யும் நேரமாப் பார்த்து அதிகம் தண்ணீர் தேங்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதி, இடம் முடிவு செய்யப்படும். நம்ம வேதா சென்னை வாசிங்கறதாலே அவங்க தலைமை தாங்க அன்புடன் இசைந்துள்ளார். அவங்க தலை மேலே நடை பெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அலை கடலெனத் திரண்டு வராதீர். மழையில் நனைஞ்சு உடம்புக்கு வரும். அவங்க அவங்க வீட்டிலேயே இருந்து மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாட்டுக்குக் கொம்பு சீவவும், அதன் உடம்பில் விளக்கெண்ணை தடவவும், மூடிய டெண்டர்கள் கோரப்படுகின்றன. ஜாஸ்தி கமிஷன் யார் தராங்களோ அவங்களுக்கு ஆர்டர் தரப்படும். இல்லாட்டி பின்னூட்டங்கள் என்னோட பதிவிலே கொடுத்து வந்தாலே போதும்.

(இப்படியெல்லாம் கேட்டுப் பின்னூட்டம் வாங்கணுமா? கேவலம், கேவலம்) இது யாருனு பார்க்கறீங்களா? என்னோட மனசாட்சி, அப்போ அப்போ வந்து தொல்லை கொடுக்கும், தமிழ் சினிமா வில்லன் மாதிரி.

Thursday, July 13, 2006

87. திருப்பனந்தாள் காசி மடம்.

ரொம்ப நாளா இதைப்பத்தி எழுதணும்னு இருந்தேன். இது ஒண்ணு, ஐயப்பன் பத்தி ஒண்ணு இரண்டு பதிவும் போடணும்னு இருந்தேன். இது ஏற்கெனவே எழுத நினைச்சது. ரொம்ப நாளா தள்ளிப் போயிட்டே இருந்தது. இப்போ எழுத சரியான சமயம்னு நினைச்சு எழுதறேன்.

காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத் தவிர இந்தக் காசி மடம். கங்கையின் கரையிலேயே அனேகக் கோவில்கள். அதற்கு என்று உள்ள மடங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இந்தக் காசி மடம் ஸ்தாபித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? "ஸ்ரீகுமரகுருபரஸ்வாமிகள்" தான் 17-வது நூற்றாண்டில் இதை ஸ்தாபித்தார். 1625-ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவின் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர். திருச்செந்தூரிலேயே தங்கி முருகனை வழிபட்டு வந்த குமரகுருபரர் தல யாத்திரை கிளம்பும் சமயம், அசரீரியாக இறைவன், "நீ யாத்திரை செல்லும் சமயம் எந்த இடத்தில் உன் வாக்குத் தடை பெறுகிறதோ, அவரே உன் குரு. ஞான உபதேசம் அவரிடம் பெற்றுக்கொள்" என உத்தரவு வர மகிழ்ந்து தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் வந்து "கைலைக்கலம்பகம்" என்னும் நூலை இயற்றினார். இதன் ஒரு பகுதிதான் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பின் மதுரை வந்தார்,. திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம் அது. குமரகுருபரர் திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்க நாயக்கர் கனவில் மீனாட்சி அம்மை வந்து, "திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்கும் குமரகுருபரர் பெரிய மகான். புலமை மிகுந்தவரும் கூட.அவரை உரிய மரியாதையுடன் அழைத்து வந்து என் சந்நிதியில் அமர்த்தி என் பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்வாயாக." என்று கூறி மறைந்தாள். அம்மன் வாக்குப் படியே திருமலை மன்னர் குமரகுருபரரை அழைத்து வந்து சந்நிதியில் அமர்த்தி அரங்கேற்றம் நிகழச் செய்தார். அர்ச்சகரின் சிறு பெண் குழந்தை வடிவில் வந்த அன்னை மீனாட்சி மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்தாள். மதுரையில் இருந்து புறப்பட்ட குமரகுருபரர் திருவாரூரை அடைந்து தருமபுர ஆதீன மாசிலாமணி தேசிக ஸ்வாமிகளைச் சந்தித்தார். ஆதீனத்தின் ஆதி முதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளுபதேசம் பெற்ற இந்த ஊரில் மாசிலாமணி தேசிகர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி வரும்போது திடீரென குமரகுருபரர் வாக்கு தடை பெற்றது. "இவரே தன் குரு" எனத் தெளிந்த குமரகுருபரர் அவரிடம் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்படைத்தார்.இப்போதும் தருமபுர ஆதீனத்துடன் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்கிறார்கள்.

மாசிலாமணி தேசிக ஸ்வாமிகள் குமரகுருபரரைக் காசி சென்று வருமாறு பணிக்க,முதலில் கொஞ்சம் தயங்கிய குமரகுருபரர், பின் குருவே துணை என்று நம்பிக் கிளம்பச் சம்மதித்தார். காடு, மலைகளையும், சிங்கம், புலி போன்ற மிருகங்களையும் எதிர்கொண்டு காசிக்குச் சென்று வரக் கிளம்பினார். வழியில் திருவேங்கட மலைவாழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த சிங்கத்தைத் தன் தவ வலிமையால் அடக்கி அதன் மீது அமர்ந்தார். ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் படம் பலர் வீட்டில் இருக்கும். பார்த்திருப்பீர்கள். காசி நகரை குமரகுருபரர் அடைந்த சமயம் டெல்லியை ஆண்டு வந்த பாதுஷா இவரின் ஆற்றலை உணர்ந்து காசியில் கருடன் வட்டமிடும் இடங்களை இவரின் சமயப்பணிக்குத் தருவதாய் ஒப்புக் கொண்டார். காசியில் தான் தனக்கு இந்துஸ்தானியில் புலமை வேண்டி ஸ்ரீகுமரகுருபரர் "சகலகலாவல்லி மாலை" பாடி இந்துஸ்தானியில் பேசும் திறன் பெற்றார்.

காசியில் "பூ மணக்காது, பிணம் எரியும்போது நாறாது, கருடன் வட்டமிடாது, பசுமாடு முட்டாது," என்பார்கள். இந்நிலையில் கருடன் எப்படிப் பறந்து இவருக்கு இடத்தைக் காட்டுவது என எல்லாரும் திகைக்க, முனிவரின் தவ வலிமையால் கருடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டது. பாதுஷா தன் வாக்குறுதியை நிறைவேற்ற குமரகுருபரர் "ஸ்ரீகுமாரசாமி மடம்" என்ற பெயரில் ஒரு மடத்தை அங்கே நிறுவி ஆன்மீகப் பணி ஆற்றத் தொடங்கினார். கங்கைக் கரையில் பழுதடைந்திருந்த கேதாரீஸ்வரர் கோவிலைத் தென்னிந்திய முறைப்படிச் செப்பனிட்டுக் கும்பாபிஷேஹம் செய்வித்தார். இன்றைக்கும் "கேதார் காட்" டில் உள்ள கேதாரீஸ்வரர் கோவில் திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணலாம். பூஜை செய்பவர்களும் தமிழர்கள் தாம்.

குருநாதரைப் பார்க்க வேண்டி பொன், பொருளோடு வந்த குமரகுருபரரை மாசிலாமணி தேசிகர் காசியிலேயே அவற்றை அறப்பணிகளுக்குச் செலவிடுமாறு சொல்லித் திரும்ப அனுப்பினார். 1688-ம் ஆண்டு தன் சீடர்களுள் ஒருவரான சொக்க நாதரைத் தன் வாரிசாக நியமித்து விட்டுப் பூரணத்தில் இணைந்தார். முதல் 5 பரம்பரையில் வந்தவர்கள் காசியிலேயே தங்கி இருந்தார்கள். 6-வது குரு பரம்பரையில் தான் திருப்பனந்தாளிலும் காசிமடம் ஸ்தாபிக்கப்பட்டது. காரணம் சரபோஜி மஹாராஜா. இவர் அன்னம் பாலிக்கக் கொடுத்த பல கிராமங்களின் நிர்வாகத்தைக் கவனிக்கத் திருப்பனந்தாளிலும் காசி மடம் ஏற்பட்டது. இதன் 20-வது மஹாசந்நிதானமாக இருந்த ஸ்ரீ அருள்நம்பித் தம்பிரான் காலத்தில் மடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள காசித் திருமடங்களின் அறப்பணிகள் இவர் காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டது. 21-வது பொறுப்பில் இப்போது இருப்பவர் காசிவாசி முத்துக்குமாரஸ்வாமித் தம்பிரான். ஸ்ரீகுமரகுருபரர் காலத்தில் இருந்து எல்லாப் பணிகளும் இன்றைக்கும் குறைவின்றி நடந்து வருகிறது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது காசிமடம். திருப்பனந்தாளிலேயே நிறையப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்க ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கிறார்கள். தமிழ் இலக்கிய நூல்களும் தரமாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் படுகிறது. "ஸ்ரீகுமரகுருபரர் "பெயரில் ஒரு மாதப் பத்திரிகையும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் மாபெரும் சேவை செய்து வருகிறது. கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேஹத்திற்குத் தேவையான "அஷ்டபந்தன மருந்து" இங்குக் குறைந்த அளவு தொகை செலுத்திப் பெறலாம். மருந்து தயாரிக்கும் செலவு அதிகம் என்றாலும் ஆலயப் பணிகளும் ஆன்மீகமும் சிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு சேவையாகச் செய்து வருகிறார்கள். நாங்கள் 1999 ஆகஸ்ட்டில் காசி போயிருந்த போது கேதார்காட் போய்க் காசி மடம், கேதார் நாத் கோவில், அங்கு சாயங்காலம் சூரியன் மறையும் சமயம் கங்கைக்கும், கேதாரீஸ்வரருக்கும் ஒரே சமயம் காட்டப்படும் ஆரத்தி எல்லாம் தரிசனம் செய்தோம். இதைத் தவிர சிவ மடம் என்ற பெயரிலும் வேறு மடம் ஒன்று இருக்கிறது. அதன் பூர்வீகம் பற்றித் தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.

அடுத்த பதிவு இப்போதே தயாராகுங்கள்:
"ஸ்வாமியே சரணம் ஐயப்பா!" எப்போனு தெரியாது. நீங்க தயாராவே இருங்க.

Wednesday, July 12, 2006

86.எல்லாம் சிவமயம்.

தலைப்பைப் பார்த்ததும் இதுவும் நான் பார்த்த கோவில்களில் ஒண்ணுனு நினைக்க வேண்டாம். இது வேறே. எனக்கு இயல்பாவே கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு. என்னோட நட்சத்திரம், ராசி தான் காரணமோ என்னமோ தெரியலை. எப்பவுமே உண்டுங்கறார் என் கணவர். அதை எல்லாம் பொருட்படுத்தாதீங்க. என்னோட இயல்புப்படி ஒரு சீரியஸ் பதிவு போட்டா ஒரு நகைச்சுவைப்பதிவு போடணும். (அது நகைச்சுவைனு நானா நினைச்சாலும் சரி.) கொஞ்சம் கமல் பாட்டர்ன் அப்படினு வச்சுக்குங்க. கமல் ரசிகர்கள் திருப்தியா? அந்தப்படி பார்த்தா இப்போ 2 பதிவு சீரியஸ் போட்டாச்சு. ஒரு நகைச்சுவை போடணும். என்ன எழுதலாம்னு யோசிச்சேன்.

இப்படி யோசிக்கிறப்போ திடீர்னு ஒரு குரல், "மேடம், நான் தான் நாகை சிவா, எங்க ஊர் பத்தியும் எழுதச் சொன்னேனே? இங்கே வாங்க, சிட்டுக்குருவி எல்லாம் இருக்கு." என்றார். "நீங்க சூடானிலே இல்லே இருக்கீங்க? நாகப்பட்டினம் எப்போ வந்தீங்க? எதைப் பத்தி எழுதணும்? சூடாமணி விஹாரம் பத்தியா? அது பத்திக் கல்கி ஏற்கெனவே பொன்னியின் செல்வனிலே எழுதிட்டாரே? சிட்டுக் குருவிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? நீங்க "கன்னி" வெடி இல்ல வைப்பீங்க?" என்று கேட்கும்போதே இன்னொரு குரல் கேட்டது. இது என்ன இன்னிக்கு ஒரே குரலா வருது, நமக்கு என்ன ஆச்சுனு பார்த்தா யாருனு நினைக்கறீங்க? நம்ம கால்கரி சிவா தான்.

அவர் கேட்கறார், "என்னங்க கீதா சாம்பசிவம், என்னோட பதிவுப்பக்கம் ரொம்ப நாளா வரவே இல்லை? நீங்க வாங்க, நான் சால்னா, பரோட்டா செய்து தரச் சொல்றேன்." என்றார். "கடவுளே, நான் சுத்த சைவ உணவு சாப்பிடறவள்." அப்படின்னேன். "அதனால் என்ன பரவாயில்லை. நீங்களும் மதுரை தானே? அப்போ இந்த ஜிகிர்தண்டா பத்தித் தெரிஞ்சிருக்குமே? அது பத்தி நான் ஒரு பதிவு கூடப் போட்டேன்." என்க, நான் "தெரியும் சார், படிச்சிருக்கேன்." என்றேன். "இப்போ என்னங்கறீங்க", என்றபோது, "அது ஒண்ணும் இல்லங்க, நான் அரேபியாவில் இருந்தபோது," என்று அவர் ஆரம்பிக்க "வேண்டாம், சார், உங்க பதிவிலேயே படிச்சுக்கறேன்." என்று ஓட்டம் பிடித்தேன். அப்போ வந்து (சிவ) புராணம் சிவா வந்து, "மேடம், நீங்க எப்போவாவது தான் என் பதிவுக்கு வரீங்க. " என்று சொல்ல "புதுப்பதிவு ஒண்ணும் பார்க்கலியே" என்றேன் பரிதாபமாக. அப்போ சிவசங்கர் அஸ்ஸாமிலிருந்து chatting-ல் "கீதாம்மா, வணக்கம்" என்று கூப்பிட "இது என்ன
குழப்பம்? முத்தமிழ்க்குழுமத்தில் இருப்பவர் இங்கே எங்கே வந்தார்?" என்று என் தலை சுற்ற நெருப்பு சிவா வந்து "நான் தான் நெருப்பு சிவா. நீங்க ஏன் என் வலைப்பக்கம் வரதே இல்லை?" என்று நெருப்பு மாதிரி முழிக்க, நான் பயந்து "நெருப்பு, நெருப்பு, சிவா, சிவா" என்று கத்தினேன்.

அப்போது எங்கேயோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் "கீதா, கீதா, என்ன ஆச்சு? ஏன் சிவா, சிவானு கத்தறே? என் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டியே?" என்று கேட்டது. "யாரு நீங்க? ஏன் உங்க பேர் சொல்லக்கூடாது?" என்று நான் கேட்டேன். "என்னடி இது? ஏதாவது சொப்பனம் கண்டியா? நான் தான் உன் புருஷன்." என்று குரல் சொல்ல "புருஷனா? யார் புருஷன்? யாருக்குப் புருஷன்?" என்று நான் கேட்க, "சரியாப்போச்சு, போ, நான் தான் உன்னோட புருஷன் சாம்பசிவம். எழுந்திரு." என்று குரல் சொல்ல, நான் திடுக்கிட்டுப் போய் "சாம்பசிவமா? யாரது?" என்று கண் விழித்தேன். நான் படுக்கையில் படுத்திருக்க இரவு மணி 2 ஆகி இருந்தது. அத்தனையும் சொப்பனம். வலைப்பூவிலும், முத்தமிழிலும் எத்தனை சிவா என்று கணக்குப் போட்டுக் கொண்டே தூங்கிப் போனதின் விளைவு. அசடு வழிந்தேன்.

Monday, July 10, 2006

84. பவானியைப் பார்த்தேன்.

முந்தா நாள் சுருட்டப்பள்ளி போய்விட்டுத் திரும்பும்வழியில் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர் பக்கத்தில் ரெட் ஹில்ஸ் வழியாகப் போனால் பெரிய பாளையம் போய்ப் பவானி அம்மனைப் பார்க்கலாம் என்று கேட்டார். வீட்டில் போய் ஒண்ணும் வெட்டி முறிக்கப் போவது இல்லை. அன்று பெண்ணோட chatting-ம் இருக்காது. போனால் இவர் வழக்கம்போல் ரிமோட்டும் கையுமாகத் தான் உட்காருவார். ஆகவே போகலாம் என்று சொன்னோம். சுருட்டப்பள்ளியில் இருந்து சற்று வடகிழக்கே பிரியும் பாதையில் சில கிலோமீட்டர் போனதும் பெரிய பாளையம் கோவில் வருகிறது. அநேகமாக இந்தக் கோவிலுக்கு இதுவரை போகாத சென்னை வாசிகள் கிடையாது என்று டிரைவர் சொன்னார். சரி, நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவோம் என்று இருவரும் முடிவு செய்து போனோம். சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைடஹ்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேDஉம் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று புரியவில்லை.

மொத்தத்தில் ரேணுகா தேவி மாதிரி இருக்கிறாள், பவானி அம்மனும். அங்கு தரிசனம் முடிந்ததும் டிரைவர் அங்கே பக்கத்தில் இன்னொரு சிவன் கோவில் இருப்பதாகவும் அதன் கோபுரம் லிங்க உருவில் இருக்கும் என்றும் கோவில் மிக அழகாக இருக்கும் என்றும் கூறினார். உடனே அங்கே போகலாம் என்று சொன்னோம். பெரிய பாளையத்தில் இருந்து 10 அல்லது 15 கி.மீ. தூரத்தில் தாமரைப்பாக்கம் என்னும் சிறு ஊர் இருக்கிறது. அங்கே போய் ஒரு வாசலில் நிறுத்தினார் வண்டியை. வேண்டுமானால் உள்ளே கூட வரலாம் என்றார். வேண்டாம் என்று சொல்லி விட்டு நாங்கள் இறங்கினோம். பார்த்தால் ஏதோ ஆசிரமம் மாதிரி இருந்தது. பாதை கொஞ்சம் கரடு முரடு தான்.வழி நெடுக ஏதோ சின்னச் சின்ன போஸ்டர்கள் ஏதோ எழுதப்பட்டிருந்தன. என்னவென்று நெருங்கிப் பார்த்தால் ஸ்வாமி சின்மயானந்தாவின் பொன்மொழிகள். அப்போதான் புரிந்தது ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆசிரமம் இங்கே எங்கேயோ இருப்பதாகக் கேள்விப்பட்டது. பொன்மொழிகள் எல்லாம் மிகவும் கருத்துச் செறிந்தவையாக இருந்தன. ஸ்வாமிகளின் கருத்துக்கு அபிப்பிராயம் சொல்ல நாம் யார்? இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த 2 வாசகங்கள்.
"YOUTH ARE NOT USELESS
THEY ARE USED LESS"

"வெளியே விழுந்தால் அது வீழ்ச்சி,
உனக்குள் விழுந்தால் அது எழுச்சி."
இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தன. கொஞ்ச தூரம் போனதும் ஒரு இடத்தில் வரிசை நின்று கொண்டிருந்தது. தரிசனம் செய்யவா என்று கேட்டதற்கு "இல்லை, பிரசாதம் தருகிறார்கள். தரிசனம் இலவசம். மேலே போய்ப் பார்க்கலாம்." என்று சொன்னார்கள். கீழே ஒரு பெரிய அறை இருந்தது. அதற்குள் போய்ப் பார்த்தால் அது "தியானக் கூடம்". ஒரு பெண் தியானம் செய்து கொண்டிருந்தாள், அவள் அருகில் போகும்போது எனக்குள் மெல்லிய அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தப் பெண் தியானத்தில் மூழ்கி விட்டாள் என்று புரிந்தது. கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தோம். ஆதிசிவனின் வெவ்வேறு ரூபங்கள் படங்களாக வரையப்பட்டுத் தொங்கின. சின்மயாநந்த ஸ்வாமிகளின் படம் நடுநாயகமாக இருந்தது. பின் அங்கிருந்து படிக்கட்டுகளின் வழியாக மேலே போனோம். முதல் மாடியில் அருமை நண்பர் விநாயகர் சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தார். அவரைத் தரிசனம் செய்து கொண்டுப் பின் படி ஏறும் போதே ஸஹஸ்ர லிங்க வடிவத்தில் ஒரு பெரிய கோபுரம் தெரிந்தது. அதனுள் ஒரு வாயில். உள்ளே நுழைந்தால் நேரே தரிசனம். ஆனால் இயற்கையான ஒளியில். சற்றும் செயற்கையான ஒளி இல்லை. குளிரொளி தரும் சில விளக்குகள் கீழே உட்கார்ந்திருந்த பக்தர்களுக்கு மட்டும் போதுமான வெளிச்சம் தந்தது. சன்னதியில் வெறும் நெய்த் தீபங்களின் ஒளிதான். மேலே பாதரச லிங்கம்.(திருமுலை வாயிலிலும் உள்ளது). கீழே லிங்கம். பிரதோஷம் ஆகையால் சர்வ அலங்காரத்துடன் காட்சி கொடுத்தார். நேரே எதிரே நந்திஎம்பெருமான்,. அவருக்கும் அபிஷேஹ ஆராதனைகள் நடந்து இருக்கிறது. நாங்கள் போன சமயம் அர்ச்சனையோ சஹஸ்ரநாமமோ முடிந்து தீப ஆராதனை நடந்தது. மிகவும் நல்ல திவ்ய தரிசனம். பிரசாதம் பெற்றுக் கொண்டு கீழே வந்தோம். ஆசிரம வாசிகள் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசி, வெல்லம் சேர்த்தும், பாலும் பிரசாதம் கொடுக்கிறார்கள். இன்னொரு இடத்தில் கேசரியும், பஞ்சாமிர்தமும் கொடுக்கிறார்கள். நாங்கள் போன சமயம் தீர்ந்து விட்டது. பஞ்சாமிர்தம் மட்டும் கிடைத்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறது. மிகவும் அமைதியான சூழலில் ஆசிரமம் நன்கு பராமரிக்கப் படுகிறது.
****************
சுருட்டப்பள்ளியிலும் சரி, அக்கம்பக்கத்து ஊர்களிலும் சரி, டீ, காஃபி குடிப்பவர்களுக்கு நல்ல ஓட்டல் கிடையாது. டீக்கடை ஒன்று சுருட்டப்பள்ளிக் கோவில் வளாகத்தில் இருக்கிறது. கழிப்பறை வசதியும் பெண்களுக்கு மட்டும்தான். நிர்வாகம் கவனிக்க வேண்டும். சாப்பாடு எல்லாம் கையில் கொண்டு போக வேண்டும்.இல்லாவிட்டால் அந்தப்பக்கம் புத்தூரிலும், இந்தப்பக்கம் திருவள்ளூரிலும் தான் ஹோட்டல். வெளி ஊரில் இருந்து வந்தால் கஷ்டம்தான்.

Sunday, July 09, 2006

83.நஞ்சுண்ட கண்டன்

நேற்று எதிர்பாரா விதமாகச் சுருட்டப்பள்ளி "பள்ளி கொண்டேஸ்வரர்" கோவிலுக்குச் சனி மஹாப் பிரதோஷம் பார்க்கப் போயிருந்தேன். என்னை நன்கு அறிந்தவர்கள் எல்லாம் நான் இந்த மாதிரிப் போவது பார்த்து "உனக்கு இறை அருள் நிறைய இருக்கிறது. இல்லாட்டி உன்னோட உடல் நிலையில் இப்படிப் போக முடியாது." என்று சொல்வார்கள். நான் அதைப் பூரணமாக ஒவ்வொரு முறையும் உணருகிறேன். நேற்றும் அப்படி உணர்ந்த ஒரு பிரயாணம். என்னோட பெருமை அப்புறம். இப்போ அந்த சிவன் பெருமை.

"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
இந்தத் தென்னாடுடைய சிவன் எல்லாக் கோவில்களிலும் லிங்க ரூபத்தில் இருக்கிறார். ஆனால் சுருட்டப்பள்ளியிலோ பள்ளி கொண்ட பெருமானாக இருக்கிறார். அதுவும் அன்னையின் மடியில் பள்ளி கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சி எங்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சி. மேலும் இந்தக்
கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வாம பாகத்தில் (இடப்பக்கம்) அன்னை உட்கார்ந்திருக்கிறாள். இப்படித் தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தியும் எங்கும் பார்க்க முடியாது. பரமாச்சார்யாள் 72-ம் வருடம் இந்தக் கோவிலில் தங்கி இருந்து தினமும் ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்திருக்கிறார். அப்போதுதான் இந்தக் கோவிலில் உள்ள எல்லாக் கடவுளர்களும் குடும்ப சமேதராகத் தரிசனம் செய்தது பற்றித் தெரிந்து கொண்டு கோவிலின் தலபுராணம் பற்றிக் கூறியதாவது:

பாற்கடலைக் கடைந்த போது வாசுகி கக்கிய "காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அதன் உக்கிரத்தால் அஞ்சிய தேவர்களையும் அசுரர்களையும் பரமேஸ்வரன் உலக நன்மைக்காகத் தான் விழுங்க எண்ணித் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அதை எடுத்து வரச் செய்கிறார். அது ஒரு கருநாவல்பழம்போல் உள்ளது. அதை வெளியே வீசினாலும் சரி, ஆண்டவன் உண்டாலும் சரி, சகல உயிர்களுக்கும் ஆபத்து. ஆகவே ஈசன் "விஷாபகரணமூர்த்தி" ஆகி விஷத்தை முழுங்க அம்பிகைத் தன் தளிர்க்கரங்களால் அதைத் தடுத்து விஷம் உள்ளே போகாதவாறு கண்டத்திலேயே அடக்குகிறாள். விஷத்தை உண்ட ஈசன் "விஷாபகரணமூர்த்தி" என்று அழைக்கப் பட்ட மாதிரி அன்னை அகிலத்தோர் வாழ்வை அமுதம் ஆக்கியதால் "அமுதாம்பிகை" என அழைக்கப் படுகிறாள். அபிராமி அந்தாதியில்
"பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால்
வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார். அன்று முதல் திருநீலகண்டனான ஐயன் கைலாயம் செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கம் தீர அம்மை மடியில் படுத்து இளைப்பாறுகிறார். அந்த அரியக் காணக் கிடைக்காத காட்சியைத் தான் நேற்று கண்டு வந்தோம். அன்னை மடியில் ஐயன் படுத்திருக்கச் சுற்றி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பிரான், நாரதர், மார்க்கண்டேயர், இந்திரன், சந்திரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கெளதமர், தும்புரர், வஸிஷ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி, எல்லாரும் இருக்கிறார்கள். மரகதாம்பிகை சன்னதி தனியாக இருக்கிறது. மற்றபடி காமதேனு, கற்பகவிருஷம், மற்ற மூர்த்திகளுடன் தட்சிணாமூர்த்தித் தன் மடியில் அன்னையுடன் காட்சி தருகிறார். மற்றக் கோயில்களில் ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதட்சிணாமூர்த்தி, மேதாதட்சிணாமூர்த்தி என்று இருக்கும். இங்கு மட்டும் இடப்பாகத்தில் தன் மனைவியுடன் காணப்படுகிறார்.
"மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்" என்று கோளறு பதிகத்தில் திருஞானசம்மந்தர் இவரைத்தான் சொன்னாரோ என்னவோ?

இந்தத் தலத்தில் பக்தர்களுக்குப் பெருமாள் கோவில் மாதிரிச் சடாரி சாதித்துத் தீர்த்தமும் பிரசாதமாகத் தருகிறார்கள். பகவானின் பாத தரிசனம் இருப்பதால் சடாரியும், மஹாவிஷ்ணுவும் உடன் இருப்பதால் தீர்த்தமும் தருவதாய்ச் சொல்லுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்துப் புத்தூர் செல்லும் பேருந்துகள் சுருட்டப்பள்ளியில் நிற்கும் என்று சொன்னார்கள். இங்கிருந்துதான் ஆந்திர எல்லை ஆரம்பிக்கிறது. கோவிலும் ஆந்திர மாநில அறநிலையத் துறை வசம்தான் இருக்கிறது. தரிசனம் செய்யப் பணம் நிறைய ஆகிறது. பிரதோஷ நாளில் போனால் தர்ம தரிசனம் கிடையாது. ஒரு ரூபாய் ஒருவருக்குச் செலுத்திப் போய்ப் பார்க்கவேண்டும்.
அதைத் தவிரச் சிறப்புத் தரிசனம் ஒருத்தருக்கு ரூ.50/ என்று வைத்திருக்கிறார்கள்.
-கூகூகூகூகூகூகூகூகூட்ட்ட்ட்ட்ட்ட்டடடடடடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தாங்கவில்லை. என்னால் பிரதோஷ அபிஷேகம் முடியும் வரை நிற்கமுடிந்தது. மஹாதீப ஆராதனைக்கு நிற்கமுடியவில்லை. கூட்டத்தில் மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. ஆகவே தரிசனம் மட்டும் போதும் என்பவர்கள் சாதாரண நாளில் போவது உத்தமம். பொதுவாக நான் கோவில்களுக்கு சாதாரண நாளில் தான் போவேன்.
நேற்று அப்படி முடியவில்லை.

சங்கரன் கோவில்
கோமதி மகிமையில் பாரதியார் கூறுகிறார்.

"இக்கடலதனகத்தே-அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன்குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்:-திசைத்
தூவெளியதனிடை விரைந்தோடும்,
மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்,
மெய்க்கலை முனிவர்களே!-இதன்
மெய்பொருள் பரசிவன், சக்தி கண்டீர்!

எல்லையுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?"
இந்தப் பாட்டை அவர் முடிக்கவில்லை. காரணம் அவர் கண்ட காட்சியில் அவரால் மேற்கொண்டு விளக்க முடியாமல் போனதோ என்னவோ? ஆனால் கோமதி அம்மனுக்காக அவர் எழுதிய வார்த்தைகள் இங்கும் பொருந்துகின்றன.

ஓம் நமச்சிவாய:

83. திரும்பி வந்தாச்சு.

அப்பாடி, ஒரு வழியாகப் பத்து நாள் கழிச்சு கணினி முன்னாலே தொந்திரவு ஒண்ணும் இல்லாமல் எழுத முடியுது. ஆனால் இது இன்னும் ஒரு வாரம் தான். அதுக்கு அப்புறம் ஒரு வாரம் கொஞ்சம் கஷ்டம் தான். சந்தோஷப்படுகிறவர்கள் இப்போவே எகிறிக் குதிக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியத்தின் ஒரு பொற்காலப் பதிவுகளை இழக்கிறீர்கள்.

என்னோட அருமையான (!!!!!!!!!!!!!)பதிவுகளைப் படிக்க ஆள் இருக்க மாட்டாங்கனால் வருத்தமாத் தான் இருக்கு! என்ன பண்ணறது? ஒண்ணும் புரியலை.வழக்கமான ஆட்கள் எல்லாம் இப்படி "Brutus" மாதிரி மாறுவாங்கனு நினைக்கலை. ஒருத்தர் என்னடானா "அந்த 2 நாட்கள்" திரும்பி வராதானு ஏங்கறார். அவரை ஆதரிச்சுச் சிலபேர். இன்னொருத்தர் கல்யாணம் ஏன் 5 நாள் வச்சுக்கலைனு கேட்கிறார். ஒரு இரண்டு நாள் போயிட்டு வந்தா இப்படியா மாறுவாங்க? :-)

இந்தப் பின்னூட்டம் வாங்கறதுக்கு என்ன வழினும் புரியலை. தங்கிலீஷ் எழுதற அம்பிக்கு எத்தனை பின்னூட்டம்? என்னோட ப்ளாக் ஆரம்பிச்ச மனு இன்னிக்கு எங்கேகேகேகேகேகேயோயோயோயோ போய் உயரத்தில் நிற்கிறார். நேத்திக்குப் பதிவு ஆரம்பிச்ச தி.ரா.ச. அவர்களுக்கு எத்தனை பின்னூட்டம்? ரொம்பப் பொறாறாறாறாறாமையாயாயா இருக்கு. என்னங்க புகை வருதா? வாசனை வருதா? அது ஒண்ணுமில்லை. என்னோட காது, மூக்கு இதிலிருந்துதான் வருது. இந்த வவ்வாலுக்கு நிறையப் பின்னூட்டம் வருதாம். அவர் மாதிரித் தலைகீழா நின்னா வருமோ என்னவோ? இல்லாட்டி அறிவுஜீவியா இருக்கணும். எனக்கு அறிவே இல்லைங்கறது எங்க வீட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. (அதான் என் கணவர்). இதிலே நான் எங்கே அறிவு ஜீவியாகிறது. நானும் தான் இ.கொ. மற்றும் ரஷ்ய மருத்துவர் ராமநாதனின் பின்னூட்டக் கோனார் நோட்ஸை விழுந்து விழுந்து படிச்சேன். என்ன பிரயோஜனம்? கீழே விழுந்ததிலே அடிபட்டது தான் மிச்சம். இதுக்காவது ஏதும் வருதா பார்க்கலாம்.

இப்படிக்குப் பெருமூச்சுடன் "சின்னப்பொண்ணு".

Friday, July 07, 2006

82.என்னை அழைத்த கற்பகம்.

நேற்றுத் திடீரெனக் கற்பகாம்பாள் அழைப்பு வந்தது. காலை 10 மணி வரை நான் போகப் போவது எனக்கே தெரியாது. திடீரென ஒரு முடிவு. போகலாம் என. அதற்குப்பின் வேகமாக வேலைகளை முடித்துக் கொண்டுச் சற்று ஓய்வு எடுத்ததும், ரெயிலேயே போகலாம் என முடிவு எடுத்தோம். "மாநரகப் பேருந்து" பயணம் பல வருடங்களாகத் தவிர்த்து விட்டோம். அந்தக்கூட்டத்தில் நேரம் விரையம் ஆகிறது. ரெயிலில் போனாலும் செண்ட்ரலில் இருந்து வேறு ஊர்களுக்குப் போவதற்குப் போவதோடு சரி. முக்கால் வாசிப் பிரயாணங்கள் கோயம்பேடு 100 அடி சாலை வழியாகப் போய் விடுகிறது. இந்தப் பக்கம் எல்லாம் பார்த்து 4,5 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆகவே ரெயிலில் போய் செண்ட்ரலில் இறங்கி அங்கிருந்து "ஆட்டோ" வைத்துக் கொண்டு மைலாப்பூர் போனோம். பல வருடங்களுக்குப் பின் மவுண்ட் ரோடில் பிரயாணம். ஆச்சரியம் என்ன என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் பேரம் பேசவே இல்லை. நம்ம சென்னை ஆட்டோதானா என்று சந்தேகம் வந்தது. நாங்கள் போன வேலை முடிந்ததும் கோவிலுக்குப் போய்க் கற்பகாம்பாள் சமேதக் கபாலீஸ்வரர் தரிசனம் நல்லபடியாகக் கிடைத்தது. போகும் வழியிலேயே குளத்தைச் சுற்றிக் கொண்டு போனோம். புதியதாக வந்திருக்கும் விருந்தாளிகளைப் பற்றித் தினமும் பேப்பரில் படிப்பதால் அவற்றையும் பார்த்தோம். சிருங்கேரி துங்கா நதியில் இருக்கும் மீன்களை விட மிகச் சிறியவைதான். இருந்தாலும் குளத்தில் தண்ணீரையும், குளம் மற்றும் அதன் கரைகள் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருப்பதையும் பார்க்க மிகவும் மனம் நிறைவாக இருந்தது. முன் நாட்களில் அண்ணா ஆழ்வார்ப்பேட்டையில் ராமசாமி நாயக்கன் தெருவில் இருந்த சமயம் அடிக்கடி போவோம். அதற்குப் பின் சந்தர்ப்பமே வரவில்லை.

அம்பாள் மிகச் சிறிய பெண்ணாக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள். படியில் ஏறும்போதே பார்க்கும் வண்ணம் படிகள் மிக உயரமாக இருப்பதால் ஜாஸ்திக் கூட்டத்தில் அடிபடாமல் பார்க்கவும் முடிகிறது. கூட்டமும் அவ்வளவு இல்லை. அவள் கண்களின் கடைக்கண் பார்வையும், இதழ்களின் முறுவலும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டியது. எல்லா உயிருக்கும் ஆதாரமான அவளை நாம் நம்முடைய இஷ்டத்துக்கு அலங்கரித்துப் பார்க்கிறோம். நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அலங்கரித்துப் பார்ப்பதைப் போலத்தான் இதுவும். நிதானமாகத் தரிசனம் செய்து கொண்டு உள்பிரஹாரம் சுற்றிவிட்டுப் பின் ஸ்வாமி சன்னதி வந்து அங்கேயும் தரிசனம் செய்தோம். நடராஜருக்கு தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. அதற்குப் பின் உற்சவருக்குத் தீப ஆராதனை. எல்லாம் நன்றாகப் பார்க்க முடிந்தது. கோவிலும் வெளிப் பிரஹாரமும் சுற்றுப் புறங்களும் மிகத் தூய்மையாக இருந்தது. அம்பாள் மயில் வடிவில் தவம் செய்வதால் தான் மைலாப்பூர் என்றும் சொல்வார்கள். எப்படி இருந்தால் என்ன? சக்தியை எப்படி வழிபட்டாலும் சக்தி சக்தி தானே. இங்கே உள்ள கோலவிழி அம்மன் கோவில் சோழர் காலத்தியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வள்ளுவருக்கும் மைலாப்பூரில் கோவில் இருக்கிறது. எப்போவோ போனேன். இன்னொரு முறை போக வேண்டும். இப்போது ஒரு சக்திப்பாட்டு, நம்ம மீசைக்காரர் பாடியதுதான். சக்தியைப் பற்றி அவரைவிட வேறு யார் சொல்ல முடியும்?

"துன்பமிலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி.
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி.
இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத்திருக்கும் எரியே சக்தி.
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி.
தீம்பழந்தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி.
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங்காக்கும் மதியே சக்தி.
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி.
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணையளக்கும் விரிவே சக்தி.
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத்தொளிரும் விளக்கேசக்தி."

இந்த உள்ளத்துள் ஒளிரும் விளக்கைப் பாரதி கண்டு உணர்ந்ததால் தான் இப்படி ஒரு பாட்டு வந்துள்ளது. எனக்குப் படித்து ஆச்சரியப்படத்தான் முடிகிறது.

81. வேலையில் சேர்ந்தேன்.

என் கணவரைத் திடீரென்று அங்கே பார்த்ததில் எனக்கு ஆச்சரியம். எப்படி வந்தார்? நான் எதுவும் கேட்கவில்லை. அவர் என்னிடம் "joining report" கொடுத்தாச்சா? "என்று கேட்டார். நான், "ம்ம்ம்" என்று சொல்ல "சரி, மணி 5 ஆகி விட்டது. வீட்டுக்குப் போகலாம்." என்று சொல்ல நானும் கிளம்பினேன். அங்கிருந்து செண்ட்ரல் போய்ப் பின் செண்ட்ரலில் இருந்து ரெயிலில் போனோம். வீட்டுக்கு வந்ததும் தான் என் நாத்தனார் என்னிடம், "ஆஃபீஸ் போனதும் அண்ணாவுக்கு ஃபோன் செய்யவில்லையா?" என்று கேட்டாள். நான் பதில் சொல்வதற்குள் அவளே "உங்களிடமிருந்து தகவல் இல்லாததால் அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கேட்டு விட்டுப் பின் ஆஃபீஸ் போய்ப்பார்ப்பதாகச் சொன்னார்." என்று சொன்னாள். பிறகுதான் தெரிந்தது, அவர் மெயின் ஆஃபீஸுக்குப் ஃபோன் செய்து விசாரித்து விட்டு நான் தண்டையார்பேட்டை ஆஃபீஸில் ஜாயின் பண்ணும் விவரம் தெரிந்து கொண்டு தண்டையார்பேட்டை வந்த விவரம். மறுநாளில் இருந்து எப்படிப் போவது என்று புரியவில்லை. என் கணவர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பதாகவும் அதுவரை செண்ட்ரலில் இருந்து போய் வருமாறும் சொன்னார். அங்கே என் அலுவலகத்தில் இருந்த எல்லாரும் மிண்ட், தண்டையார்பேட்டை, ராயபுரம், மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தவர்கள். யாரும் இவ்வளவு தூரத்தில் இருந்து வரவில்லை. மறுநாள் செண்ட்ரல் போயே போ என்று என் கணவர் சொன்னதால் அப்படியே போனேன். சிலர் வீடு மாற்று என்றார்கள். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யோசனை கொடுத்தார்கள். வால்டாக்ஸ் ரோடில் பஸ்ஸில் இருந்து இறங்கிப் பின் லோக்கல் வண்டியைப் பிடிக்க வெகு தூரம் தினமும் நடக்க வேண்டும். அதிலேயே ஒரு வண்டி போய் விடும்.இந்த மாதிரிக் கொஞ்ச நாள் போனதும் என் சிநேகிதி ஒருத்தித் தினமும் பெரம்பூரில் இருந்து வருவாள். அவள், "பெரம்பூர் வழியாகத் தானே இந்தப் பேருந்து வருகிறது. நீ பெரம்பூரில் இறங்கு. நாம் இருவரும் சேர்ந்து போகலாம். நீ ரெயிலில் வரும் நேரம் வரை நான் காத்திருப்பேன்." என்று சொல்ல மறு நாளில் இருந்து நான் பெரம்பூரில் இறங்கிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் வீட்டில் ஏதோ வேலை. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. 9-15 வண்டியை விட்டு விட்டேன். அடுத்த வண்டியில் தான் போனேன். சேர்ந்த புதிது. நேரம் கழித்துப் போனால் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. கவலையுடன் உட்கார்ந்திருந்தேன். கூட இருந்தவர்கள் எல்லாம் பயப்படாதே என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. பெரம்பூரும் வந்தது. ரெயில் வேகம் குறைய ஆரம்பித்தது. நான் இறங்கத் தயார் ஆனேன். அப்போது ஒரு வினாடி ரெயில் நின்றதும், நான் ஒரு காலைக் கீழே வைத்து இறங்க முயன்றேன். வண்டி outer-ல் இருந்திருக்கிறது. அதைக் கவனிக்கவில்லை. வண்டி சட்டென்று ஒரு குலுக்கலுடன் முன்னே போக நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்.

Wednesday, July 05, 2006

80.கல்யாண சமையல் சாதம்

"கல்யாண சமையல் சாதம்
அந்தக் காய்கறிகளும் பிரமாதம்,
இந்தக் கெளரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்."

கடோத்கஜன் மாதிரி போயிட்டு வரலாம்தான். ஆனால் முடியலையே? என்ன செய்யறது? கல்யாணத்துக்கு போயிட்டு நேத்து மத்தியானம் வந்தோம். கூடவே விருந்தினர் வந்ததால் நேத்து ஒண்ணும் பார்க்க முடியலை. சும்மா பின்னூட்டம் மட்டும் பார்த்தேன். இனிமேல் தான் எல்லாரையும் குசலம் விசாரிக்கணும். அம்பியோட ஐஸ்குட்டியும், அசினும் செளக்கியமா? மனசோட 9தாரா, நமீதா, நவ்யா நாயர் இன்னும் "ந"விலே ஆரம்பிக்கிற எல்லாரும் செளக்கியமா? மின்னல் தாத்தாவுக்கு என்னோட பின்னூட்டம் காரண்டி. அப்புறம் trc Sir, பதிவிலே எனக்குப் புதிசாக ஒரு பட்டம் கிடைத்து இருக்கிறது. தெரியாதவங்க அவர் பதிவிலே போய்ப் பார்த்துக்குங்க. ஏதோ நம்மால் ஆனது அவர் பதிவுக்கு ஒரு விளம்பரம். மனு(வல்லி), துளசி, நுனிப்புல் உஷா எல்லாரும் என்ன எழுதி இருக்காங்கனு தெரிஞ்சுக்கணும். பெனாத்தலாருக்கு ஒரே ஆச்சரியம். அவர் மத்தவங்க கிட்டே சொன்னது எனக்கு எப்படித் தெரியும்னு? அவர் சொல்லும்போது கேட்டேனே? நான் கேட்டேனே? மத்தபடி "Brutus" ஆக மாறின நாகை சிவா, வேதா, நன்மனம் எல்லாருக்கும் ஜூலியஸ் சீஸர் back to the pavilion. கைப்புள்ள, கவலை வேண்டாம், தலைவலி கொடுக்க வந்தேன் நிரந்தரத் தலைவலி. பொன்ஸ் சோறு வடிச்சுப் பழகி இருப்பாங்கனு நினைக்கிறேன். சங்க வேலை எல்லாம் எப்படி இருக்கு?

எல்லாருக்கும் என்னோட
"வணக்கம் பலமுறை சொன்னேன்,
சபையினர் முன்னே, தமிழ்மகள் கண்ணே"

தங்கையோட கல்யாணத்தை நல்லபடி முடிச்சுட்டு வந்த கார்த்திக் முத்துராஜன், மற்றும் நான் வந்ததில் ரொம்ப சந்தோஷப் படும் (ரம்பம்னு தெரியாமல்) ச்யாமுக்கும் என் நன்றி.

Saturday, July 01, 2006

79. எல்லாருக்கும் விடுதலை

என்னங்க பார்க்கிறீங்க? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நிரந்தரமான விடுதலை கிடையாது. சும்மா தாற்காலிகமாத் தான். நான் ஒரு கல்யாணத்திற்குப் போறேன். அநேகமாச் செவ்வாய்க்கிழமை வந்துடுவேன். அது வரை உங்கள் எல்லாருக்கும் என்னிடமிருந்து விடுதலை. இதைக் கேட்டதும் யார், யார் என்ன நினைப்பாங்கனு என் மனசில் ஒரு ரீல் ஓடுகிறது. அது கீழே:

அம்பி: அப்பாடி, ஒரு ரெண்டு நாளாவது நாம பாட்டுக்கு ஐஸ் குட்டியையும், அசினையும் கனவு காணலாம். இவங்க ரோதனை தாங்க முடியலை.

நாகை சிவா: நல்லவேளையாப் போச்சு. இவங்க எப்போ எந்த மாதிரி மாஜிக் காட்டுவாங்கனு பயப்படவேண்டாம். ப்ளாக்கரும், கணினியும் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். நம்ம பாட்டுக்குக் குண்டு வைக்கப் போகலாம்.

ச்யாம்: இன்னும் 2 நாள் என்னைக் கவனிக்க மாட்டாங்களே! நம்ம பதிவிலே இவங்க பேரைக் கொடுத்தது சரியா தப்பா? தெரியலை. பார்க்கலாம்.

வேதா: இன்னும் 2 நாளாவது Tata Indicom காரங்க இவங்க கிட்டே இருந்து தப்பிச்சாங்க. பாவம் அவங்க.

trc Sir: அப்பாடி, நான் முன்னமே சிங்கப்பூர் போறதாச் சொன்னேனோ தப்பித்தேன். தெரியாத் தனமா சி.ஐ.டி. சந்துருவோட ஒப்பிட்டுப் பேசிட்டேன், இவங்க ரம்பம் தாங்க முடியலை, உமா, சீக்கிரம் மூட்டை கட்டு, அடுத்த விமானத்திலேயே நாம போறோம். மறக்காம மாத்திரை எடுத்து வச்சுக்கோ.

சின்னக்குட்டி: ஏதோ நம்ம பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுவாங்கனு கூப்பிட்டா தாங்கலையே, 2 நாள் நிம்மதி.

மனசு: நாம் பாட்டுக்கு 9தாரா, நமீதா, நவ்யா நாயர்னு "ந"விலே ஆரம்பிக்கிற பேராப் பார்த்து (வீட்டுக்குத் தெரியாமல்) கனவு காணலாம்.

நன்மனம்; நன்மனம்னு பேரை வச்சிக்கிட்டு இவங்களை ஒண்ணும் சொல்ல முடியலை. இப்போவாவது வயசைச் சொல்றாங்களா, பார்ப்போம்.

தேவ்: எப்போவாவது தான் தலை காட்டுவேன். அதனால் இரண்டு நாள் இல்லைனால் பரவாயில்லை.

பொன்ஸ்:சோறு வடிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கிட்டு பிஸ்ஸா,, பர்கர்னு சாப்பிடற தொல்லை போதாதுனு இவங்க வேறே ஒரு வாரத்துக்கான பதிவை ஒரே நாள் போட்டுட்டுப் படிங்கறாங்க. முன்னேயே தெரிஞ்சா இன்னும் ஸ்கூலிலேயோ, காலேஜிலேயோ படிக்கிறேன்னு சொல்லித் தப்பிச்சிருப்பேன்.

கைப்புள்ள;ஆரம்பத்திலே இருந்து நம்மளை ஆதரிக்கிறாங்க. வலுவிலே வந்து நாந்தான் நிரந்தரத் தலைவலினு சொன்னாங்க. அதனாலே பரவாயில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்னு நான் இருக்கிற இடம் எல்லாம் வேறே தெரியுது. விட்டுப் பிடிப்போம்.

துளசி:யானையை என்ன செய்தாங்களோ தெரியலை. ஆனால் இவங்களுக்கும் யானைனா பிடிக்கும்னு சொல்றாங்க, பொறுத்துப் பார்ப்போம்.

மனு(வல்லி): (வல்லியா, வள்ளியா) இப்போ எல்லாம் மூணு ப்ளாக் வச்சிக்கிட்டு என்னாலே இவங்க ப்ளாக் படிக்க முடியலை. அதனாலெ இரண்டு நாள் வராட்டா பரவாயில்லை.

நுனிப்புல் உஷா:எத்தனை தரம் சொல்றது இவங்களை எடிட் செய்யுங்க, பத்தி பிரிச்சு எழுதுங்கனு. இன்னும் பழக்கம் ஆகலை. போயிட்டு வந்து எழுதும்போது பார்க்கிறேன். எனக்கு இந்த வகுப்பு எடுக்கிறதா, என் ப்ளாக் எழுதறதா? சிறப்பு ஆசிரியர் பதவி வகிக்கிறதா? ஒண்ணும் புரியலை. நல்லவேளை இரண்டு நாள் கிடைச்சுது.

மின்னுது மின்னல்: ம்ம்ம்ம், இவங்க பின்னுட்டமாவது வரும்னு நினைச்சேன். பரவாயில்லை. 2 நாளில் வந்துடறாங்களே.

இளா(விவசாயி):நேத்திக்குத் தான் இவங்க பதிவையே பார்த்தேன். அதுவும் கூப்பிட்டாங்களேனு. தெரியாத்தனமா "புதுமைப்பெண்"பட்டமெல்லாம் கொடுத்துட்டேனோ? சரி, பரவாயில்லை. 2 நாளைக்கு அப்புறம் பார்த்துக்குவோம்.

பெனாத்தல் சுரேஷ்:இதெல்லாம் தெரிஞ்சுதான் நான் முன்னேயே இவங்க பின்னூட்டமே புரியலைனு சொல்லிட்டேன். இப்போ படிக்க வேண்டாம் பாருங்க. எப்படி என் ஐடியா?

எல்லாரும் "என் முதலிலேயே சொல்லலைனு சுரேஷை நோக்கிப் பாய்கிறார்கள்.
**********************

கவலை வேண்டாம், தோழர்களே, தோழியர்களே,
செவ்வாய்க்கிழமை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவேன்.