எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 29, 2022

என்ன பிசியோ போங்க! :(

 நானும் எவ்வளவோ முயற்சி செய்து திருவாரூர்ப் பயணக் கட்டுரையைத் தொடர நினைச்சாலும் எழுத உட்காரவே நேரம் இல்லை. :( ஏப்ரல் மாதம் பதினைந்து தேதியில் இருந்து ஒரே வேலை மும்முரம். அதற்கு முன்னால் வீட்டில் கழிவறை மாற்றம், கதவுகள் மாற்றம், வெள்ளை அடித்தல், பெயின்டிங் செய்தல் என்று கிட்டத்தட்ட 20 நாட்கள் பிழிஞ்சு எடுத்துட்டாங்க. வேலை செய்தது என்னமோ அவங்க தான். அவங்க கேட்கும் நேரத்தில் கேட்டதை எடுத்து வைச்சு, ஒழிச்சுக் கொடுத்து, திரும்ப எடுத்து வைச்சு சமையலறைப் பொருட்களைக் கணினி அறைக்கு மாற்றி, அதைத் தற்காலிகப் பூஜை அறையாக மாற்றி, இன்னொரு படுக்கை அறையில் சமைச்சு, 2,3 நாட்கள் அங்கேயே குடி இருந்துனு எல்லாம் சரியாக மே மாதம் பதினைந்து தேதிக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின்னர் நாத்தனார் பேத்தி கல்யாணம். இங்கேயே எங்க குடியிருப்பில் இருந்து தெரியுமே! அதான் செண்டை மேளம் எல்லாம் வாசிச்சுக் காதையும், உடம்பையும் பாடாய்ப் படுத்துவாங்களே அந்தச் சத்திரம்.

நாத்தனார் பெண்ணிடம் கல்யாணத்தில் எந்த சங்கீதம் வைச்சாலும் இந்த லைட் ம்யூசிக்கும், செண்டை மேளமும் மட்டும் வைக்காதேனு கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். வைக்கலைனு உறுதிமொழிப் பத்திரமும் கொடுத்துட்டாங்க. ஆனாலும் ரிசப்ஷனில் சங்கீத் நிகழ்ச்சி, இந்தக் கால இளைஞர் பட்டாளங்கள் விரும்பியதால் வைச்சிருந்தாங்க. மெஹந்தியும் இருந்தது. ஆனால் நான் மெஹந்திக்கெல்லாம் போகலை. அதோடு வீட்டில் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அவங்க  இங்கே வரச்சே கூடவே வந்து உபசரித்து விட்டு அப்புறமாத் திரும்பச் சத்திரம் போய்னு ஒரு வாரம் போனதே தெரியலை.  அதுக்கப்புறமாச் சரியாகும்னு நினைச்சால் இங்கே நம்ம வளாகத்தில் ஒரு கல்யாணம். அதற்குக் கல்யாணத்துக்குப் போவதா./ரிசப்ஷனுக்குப் போவதானு சீட்டுப் போட்டுப் பார்த்தோம். முதல்லே நான் அவரை மட்டும் போகச் சொன்னேன். அவரும் சரினுட்டுப் பின்னர் இரவு ரிசப்ஷனுக்குப் போவதெனில் தனியாகப் போக முடியாதுனு யோசிச்சார். சரினு அப்புறமா நானும் கிளம்பினேன். இங்கே ஓலா மாதிரி ஒரு ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவில் ஆட்டோவை வெயிட்டிங்கில் இருந்து கூட்டி வரமாதிரி ஏற்பாட்டில் அனுப்பி வைக்கிறாங்க. அவங்க கிட்டே ஆட்டோ முன்பதிவு செய்தோம். ரெட் டாக்சி எல்லாம் ட்ராப் தான் வெயிட்டிங்கோ பாக்கேஜோ இல்லைனு சொல்லிட்டாங்க.  அப்புறமா அந்த ஆட்டோவில் போனோம். ஏழு மணிக்கு ரிசப்ஷன்னு போட்டிருந்தும் ஆரம்பிக்கையில் எட்டரை ஆகிவிட்டது. இங்கே சங்கீத் வேறே பெண்/பிள்ளை வரும்போதே எப்போவும் போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வந்தாங்களா. அது முடிஞ்சு நலுங்கு முடிஞ்சு ஆரத்தி எடுத்துப் பின்னர் ரிசப்ஷன் ஆரம்பிச்சது. அதன் பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வரச்சே ஒன்பதரை.  சாப்பாடு நன்றாக இருந்தாலும் நான் எப்போவும் போல் உணவுக்கட்டுப்பாடு! சாம்பார் இட்லியும் தயிர்சாதமும் மட்டும் சாப்பிட்டேன். ருமாலி ரொட்டி என்னும் பெயரில் மைதாவில் ரொட்டி போட அப்படியே ஒதுக்கிட்டேன். மற்றவை கொண்டு வரும்போதே நோ! நல்லவேளையாக இலைகளில் பரிமாறி வைச்சுட்டு ஈ மொய்க்கச் சாப்பிடச் சொல்லலை. உட்கார்ந்ததுமே பரிமாறினார்கள். நாத்தனார் பேத்தி கல்யாணத்திலும் அப்படியே. உட்கார்ந்தால் தான் பரிமாறினார்கள்.

மறுநாள் நெருங்கிய உறவினர் வருகை. அவங்களுக்காகச் சின்ன வெங்காயம்/முருங்கை போட்டு சாம்பார், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் போட்டு அந்தக் காலத்துக் காரக்கறி, பருப்பு ரசம், சதசதயம் என்னும் எங்க பக்கத்துப் பாயசம். (அரிசி தான் குழையவே இல்லை. திருஷ்டி) வாழைக்காய் வறுவல், மாங்காய்த் துண்டம் ஊறுகாய், தொக்கு எனச் சமைத்துச் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்ததில் நாள் ஓடியே விட்டது. நேத்திக்குப் பதினைந்து நாட்களாகக் கவனிக்காமல் விட்டிருந்த வேலைகளைச் செய்து முடித்துச் சாப்பிடும்போதே ஒரு மணி ஆகிவிட்டது.  அதன் பின்னர் இணையத்தில் உட்கார்ந்தாலும் பதிவுகளில் இந்தக் கருத்துரைகள் போய் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடியதில் ஒரே வெறுப்பு.  முந்தா நாள் வந்திருந்த உறவினர்கள் நான் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து என் ஆதரவாளர்கள். ஆகவே புதுசா என்ன எழுதினேன்னு கேட்டதில் ரொம்பவே வெட்கமாக இருந்தது. சும்மாவானும் வெளியீடு செய்திருந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன். பல பதிவுகளுக்கும் போகலை. என்னோட பதிவையும் கவனிக்க நேரமில்லை. என்னவோ இப்படி ஒரு சூழ்நிலை. ஒரு காலத்தில் நாலைந்து பதிவுகளிலும் எழுதிக் கொண்டு பெரிய வீட்டையும், பராமரித்துக் கொண்டு வருவோர்/போவோரையும் கவனித்துக் கொண்டு இருந்த நான் இப்போ இப்படி ஆயிட்டேன்! :(  

பார்க்கலாம். போகப் போக எப்படி முடிகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க நினைச்சாலும் முடியலை.  உடல்நிலையும் இடம் கொடுக்கணும். 

Monday, May 16, 2022

நேரில் பார்க்கும் கர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும்!

 ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜயந்திக்கு வந்து பிரசாதம் வாங்கிச் செல்ல அழைப்பு மேல் அழைப்பு. இருவராலும் போக முடியலை. நான் மட்டும் போனேன். சர்க்கரைப்பொங்கல், கறுப்புக் கொ.க.சுண்டல், வடை, பலாச்சுளைகள்,வாழைப்பழம் ஆகியவற்றோடு வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் மனைவி சுமார் 20 வருடங்களாகப் படுத்த படுக்கை தான். :(  அதுக்கும் மேலேயே இருக்கலாம். இரு பிள்ளைகள். ஒருத்தர் அம்பேரிக்காவில் மனைவியுடன். இன்னொருவர் சென்னையில் மனைவியுடன். அவ்வப்போது வந்து போவதுடன் சரி. இங்கே மாமா தான் மனைவியைக் கவனித்துக் கொண்டு சுயம்பாகமும் கூட. கிரைண்டரில் மாவு அரைத்து வைத்துக் கொள்ளுவார். நாங்க இந்தக் குடியிருப்புக்கு வந்த புதுசிலே வீல் சேரிலே மாமியை உட்கார வைத்துக் கொண்டு லிஃப்ட் மூலம் கீழே அழைத்து வருவார். பெருமாள் மண்டகப்படியின் போது மாமியையும் உடன் அழைத்து வருவார். நாளாக ஆக ஆக மாமியை எழுப்பி உட்கார வைக்க முடியலை. கீழே சரிந்து விட்டார் போல! அதன் பின்னர் அழைத்து வருவதில்லை. அதனால் அவரும் பெருமாளைப் பார்க்க வருவதில்லை. அவ்வப்போது கொஞ்சம் நினைவு வரும். காஃபி, ஹார்லிக்ஸ், சூப், ஜூஸ் போன்ற திரவ ஆகாரங்கள் தான். குழாய் மூலம் ஏற்றப்படும். கவனிச்சுக்க ஒரு செவிலிப் பெண்மணி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் போகும்போதெல்லாம் பார்த்ததே இல்லை.

அந்த மாமிக்கு அம்மா எண்பது வயதுக்கும் மேல் ஆகிறது. இன்னமும் இருக்கிறார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் அவ்வப்போது வந்து பார்ப்பார். படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணை மாப்பிள்ளை கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்வதைப் பார்த்து மனம் வேதனையுறலாம். என்னமோ தெரியலை. அந்தப் பெரிய மாமியை நான் ஓரிரு முறை பார்த்தது தான். சமையல் எல்லாம் மாமாதான் என்று சொன்னேனே! இத்தனை அமர்க்களத்திலும் பெரிய பெரிய படிகளாக ஐந்து படி கட்டிக் கொலு வைத்துவிடுவார் மாமா!  எங்கள் வளாகத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் அழைத்து வெற்றிலை, பாக்குக் கொடுப்பார். பூக்கடையிலிருந்து பூக்களை வாங்கி வந்து எல்லா உம்மாச்சிங்களுக்கும் வைச்சு, வரும் பெண்களுக்கும் கொடுப்பார். முன்னெல்லாம் நவராத்திரிக்குப் பரிசுப் பொருளும் ஏதானும் வாங்கிக் கொடுப்பார். இப்போல்லாம் போக முடியலை போல! தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், சுண்டல் தான். சுண்டல் நன்கு குழைந்து அளவாய்க் காரம் போட்டு நன்றாகவே இருக்கும். சின்ன மருமகள் அந்தச் சமயம் சென்னையிலிருந்து வந்தால் அவளை விட்டுக் கொடுக்கச் சொல்லுவார். வரலைனால் குற்றமோ, குறையோ சொல்லுவதில்லை. இன்று வரை தன் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதற்கோ அவங்க உயிர் இருந்தும் ஓர் அசையா பொம்மையாக இருப்பதற்கும் அலுத்துக் கொண்டதே இல்லை.  இரண்டு பையர்கள் பிறந்ததும் நடந்த ஏதோ ஓர் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால் இப்படி ஆகிவிட்டார் எனக் கேள்விப் பட்டேன். அவர் முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ, கவலையோ, விரக்தியோ தெரியாது. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார். குடியிருப்பு வளாகத்தில் நடைபெறும் அசோசியேஷன் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு நகைச்சுவைத் துணுக்குகளால் அனைவரையும் சிரிக்க வைப்பார். எந்தவிதமான பித்ரு கர்மாக்களையும் விட்டதில்லை.  அவரால் முடிந்த அளவுக்குச் செய்வார். 

எனக்கு எல்லாம் இந்த வேலையே செய்ய முடியாமல் அலுப்பும்/சலிப்புமாக இருப்பதை நினைத்துக் கொண்டு அவரையும் பார்க்கையில் வெட்கமாகவே வரும். :( அவர் அனுபவிப்பது எல்லாம் "கர்மா"! இதை அவர் அனுபவித்தே ஆகணும் என்கிறார்கள். என்னவோ! 

***********************************************************************************

கர்மா  பாம்பே சாணக்கியாவின் இந்தத் தொடர் பார்க்கப் பார்க்க அசத்துகிறது. பார்ப்பதைத் தவிர்க்கவும் முடியலை.  ஆரம்பத்தில் 2006 ஆம் வருடமோ என்னமோ இந்தத் தொடர் "ராஜ் தொலைக்காட்சியில்" தொடராக வந்து பாதியில் நின்று விட்டது. அதன் காரணம் அப்போது இதைத் தயாரித்தவர் தான் என்பதை இப்போத் தான் பாம்பே சாணக்கியா சொன்னதன் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் என்னவோ தெரியலை திடீரென முகநூலில் இந்தத் தொடர்கள் ஃபாஸ்ட் ஃப்ளிக்ஸ் என்னும் பெயரில் வர ஆரம்பித்தன. பின்னர் பாம்பே சாணக்கியா ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து மீண்டும் இதைத் தொடரவும், தொடர்ந்து இதில் வரும் வாழ்க்கைப் புதிர்களை விடுவிக்கவும் ரசிகர்கள் விரும்புவதால் தன்னால் பத்துப் பகுதிகள் மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் நன்கொடை அளித்தால் தொடர்ந்து எடுப்பதாகவும் வேண்டுகோள் விடுக்க அப்படியே ரசிகர்கள் மூலம் கிடைத்த நன்கொடையால் "கர்மா -2" பகுதி வெளிவந்து இணையத்திலே சக்கைப் போடு போடுகிறது.  கர்மா முதல் பகுதியில் வந்தவர்களில் எல்லோரும் இதில் வரவில்லை. சிலர் கிட்டத்தட்டப் பதினாறு வருடங்கள் ஆனதில் உயிருடன் இல்லை/சிலரால் முடியாமல் போய் விட்டது.

ஆனால் முக்கியக் கதாபாத்திரமான "ருக்கு"வாக அதே ப்ரீத்தி ஶ்ரீநிவாஸ் இப்போ ப்ரீத்தி சஞ்சய் என்னும் (கணவர் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டு ) பெயருடன் அதே ருக்கு கதா பாத்திரத்தில் வருகிறார். மூத்த மாப்பிள்ளையாக அதே சாய்ராமும், முக்கியமான கதாபாத்திரமான சோமசேகர கனபாடிகளாக அதே பூவிலங்கு மோகனும் நடிக்கின்றனர். இரண்டாவது மருமகளாக கமலா காமேஷின் பெண் உமா ரியாஸ் அதே பாத்திரத்தில் தொடர்ந்தார். இப்போது சில பகுதிகளாக அவரைக் காணவில்லை.  வயதான ருக்குப் பாட்டியாக நடித்த பெரியவர் இப்போ இல்லை. இப்போ அந்தக் கதா பாத்திரத்தில் யார் வரப் போறாங்க என்பது இனிமேல் தான் நான் பார்க்கணும். பழைய முதல் பகுதி சுமார் 75 எபிசோட் போன வருஷம் உடம்பு முடியாமல் படுத்திருந்தப்போப் பார்த்தேன். பின்னர் பார்க்கவே முடியலை. இப்போ ஒரு மாதமாக மறுபடி பார்க்க ஆரம்பித்துக் "கர்மா-2" இல் 45 எபிசோட் வரை பார்த்துவிட்டு முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கேன். இதுவும் 77 எபிசோட் வரை யூ ட்யூபில் இருக்கின்றன. அவற்றையும் பார்க்கணும்.

கதை ஒண்ணும் பெரிசா இல்லை. வேத வித்தான சோமசேகர கனபாடிகளின் குடும்பம் (கதை ஆரம்பிப்பது 1934 ஆம் ஆண்டில்) காலப்போக்கிலும் வெள்ளையரின் ஆங்கிலப்படிப்பு மோகத்திலும் எப்படி அக்ரஹார வாழ்க்கையை விட்டு நகர வாழ்க்கைக்கு இடம் பெயர நேர்ந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களும் தான் முக்கியக் கரு. அக்ரஹாரத்திலிருந்து பிராமணர்கள் வெளியேறியது/வெளியேற்றப்பட்டது (மறைமுகமாக) எப்படி ஒரு கலாசாரச் சீரழிவுக்குக் காரணமாய் அமைந்தது என்பதும் சநாதன தர்மத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பிராமணர்கள் இப்போது ஏதோ கொஞ்சம் போல் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் தான் முக்கியக் கரு. கதையின் முக்கியக் கதாபாத்திரமான சோமசேகர கனபாடிகளுக்கு அவர் காலத்திலேயே இவை எல்லாம் தீர்க்க தரிசனமாகத் தெரிய வருகிறது. அப்போது ஒரு நாள் அவர் கனவில் அவர் தினமும் வணங்கும் ஶ்ரீராமர் வந்து தன்னுடைய இந்தப் படம் தான் அவருடைய ஐந்தாம் தலைமுறையை ஒன்று சேர்க்கும் என்கிறார். அப்படி என்ன விசேஷம் அந்த ஶ்ரீராமர் படத்தில் என்றால் ஶ்ரீராமர் பட்டாபிஷேஹப் படமான  அதில் ஶ்ரீராமர் நின்று கொண்டிருப்பார். பரிவாரங்கள் அனைவரும் நிற்பார்கள் அனுமன் உள்பட. ஶ்ரீராமரின் வலக்கரத்தில் ஒரு மச்சம் காணப்படும். இப்படி வரையப்பட்ட அந்தப் படம் சோம சேகர கனபாடிகளால் அவர் குடும்பத்தின் அனைத்து நபர்களுக்கும் திருமணப் பரிசாகக் கொடுக்கப் படுகிறது. இந்தப் படம் தான் குடும்பத்தை ஒன்றாக இணைக்கப் போகிறது. தன்னோட ஐந்தாவது தலைமுறையாவது மீண்டும் கிராமத்திற்கு வந்து இழந்தும்/மறந்தும் போன அக்ரஹார வாழ்க்கை முறையைத் தொடர வேண்டும் என கனபாடிகள் நினைக்கிறார். அது நடந்ததா என்பது இனிமேல் தான் தெரியணும். 


கர்மா தொடர் முதல் பகுதி 1933 ஆங்கில ஆண்டு  தமிழ் ஈஸ்வர ஆண்டில் ஆரம்பிக்கும் முதல் பகுதியை இந்தச்  சுட்டியில் காணலாம்.  ஆரம்பத்தில் கோனேரிராஜபுரம், பாலூர், போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்டது இரண்டாம் பகுதியிலும் அங்கேயே அதே வீடுகளிலேயே எடுக்கப்பட்டாலும் கணபதி அக்ரஹாரத்திலும் படப்பிடிப்பு நடந்திருக்கு. அரையபுரத்தில் ஒரு கிராமத்து அக்ரஹார வீட்டைத் தற்காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கட்டி இருப்பது அசத்தி விட்டது.  விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். நம்மை எழுந்திருக்க விடாமல் கட்டிப் போடும் தன்மை உள்ள தொடர். பக்கத்து வீட்டில்/அல்லது நம் வீட்டில் நடப்பதை நாம் நேரில் பார்ப்பது போலவே உணர்வோம். 

திருவாரூர்ப் பதிவுகளைத் தொடரணும். இந்தக் கீ போர்ட் ஒரே தகராறு. பிடிவாதம் பிடிக்கிறது. பார்ப்போம். இதைத் தட்டச்ச அரை மணி ஆகிவிட்டது கீ போர்ட் படுத்தலினால். :(

Friday, May 06, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே! உன் நிலைமை! :(

 திருவாரூரின் அவல நிலை!


அஞ்சணை கணையி னானை யழலுற வன்று நோக்கி

அஞ்சணை குழலி னாளை யமுதமா வணைந்து நக்கு

அஞ்சணை யஞ்சு மாடி யாடர வாட்டுவார் தாம்

அஞ்சணை வேலி யாரூ ராதரித் திடங்கொண் டாரே.



"தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக் கார் ஊரா நின்ற கழனிச்சாயல் கண்ணார்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும் ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி உமையாள் மணவாளா என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர் தம் பெருமானே எங்குற்றாயே!" திரு ஆரூர். இதன் பெருமையைச் சொல்லித் தெரியவேண்டுவதில்லை. பன்னிரு திருமுறைகளிலே அநேகமாய் எல்லாத் திருமுறைகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரே தலம் திருஆரூர். எப்போது எனத் தெரியாத காலத்தில் இருந்தே, நம் சிற்றறிவால் யோசித்துப் பார்க்கமுடியாத காலந்தொட்டே இங்கே ஈசனும், அம்பிகையும் குடி கொண்டிருக்கின்றனர். எப்போது எனத் தெரியாத காலத்தே முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளாய் ஐயனும், அம்மையும் வீற்றிருப்பதால் அந்தரகேசபுரம் எனவும், இந்தத் தலத்து ஈசன்,அம்மையோடு மட்டுமில்லாமல், தன் அருமை மகனான ஸ்கந்தனோடு காட்சி அளிப்பதால் ஸோமாஸ்கந்தர் என்னும் பெயர் பெற்று அந்தத் தத்துவத்தை விளக்குவதால் இவ்வூருக்கு ஸ்கந்தபுரம் என்னும் பெயரும் உண்டு. 

அம்பிகை இங்கே யோக மாதாவாக யோக சாத்திரத்தின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் விளக்கும் வண்ணம் யோகசக்தியாக வீற்றிருக்கிறாள். மூன்று தேவியரும் ஒன்றாகக் குடி இருக்கும் அந்தக் கமலாம்பிகையே இங்கே யோகசக்தியாக இருப்பதால் கமலாயபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. க என்னும் எழுத்து கலைமகளையும், ம என்னும் எழுத்து மலைமகளையும், ல என்னும் எழுத்து மகாலக்ஷ்மியையும் குறிக்கும். இம்முன்று தேவியரும் ஒருங்கே இந்தக் கோயிலில் வடமேற்குத் திசையில் ஈசான்யதிசையை நோக்கியவண்ணம், தலையில் பிறை சூடி, கங்கையும் கொண்டு யோகசக்தியாக விளங்குகிறாள் அன்னை. அம்பிகையின் அனைத்து சக்திகளும் ஒருங்கே இங்கே குடி கொண்டிருப்பதால் ஸ்ரீபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. ஆயிற்று, இவ்வளவு பெருமையுடனே அன்னையும், ஈசனும் குடி வந்தாயிற்று. குடிமக்கள் வரவேண்டாமா?? 

ஆடல்வல்லானின் சிவகணங்களே இங்கே குடி வந்தனராம். சிவகணங்களாக இவ்வூர்மக்களே விளங்குகின்றனராம். அதனால் இவ்வூரைக் கலிசெலா நகரம் எனவும் அழைக்கின்றனர். இந்த ஊரை ஒரு தட்டிலும், மற்ற தலங்களை இன்னொரு தட்டிலும் வைத்துத் தராசில் நிறுத்துப் பார்த்தபோது இவ்வூரின் பக்கமே தட்டு நிறை மிகுந்து காணப்பட்டதாக ஐதீகம். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரவரபுரம் எனவும் பெயர் உண்டு. திரு வாகிய திருமகளே இந்தத் தலத்தில் வழிபட்டு வரம் பெற்றதாலும் திருஆரூர் எனப் பெயர் வந்ததாகவும் சொல்கின்றனர். தேவாதிதேவர்கள் எந்நேரமும் கூடி வழிபட்டுக்கொண்டே இருப்பதாலும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த சிவனடியார்கள் குழுமி ஈசனைத் தொழுவதாலும் தேவாசிரியபுரம் எனவும் பெயர் பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் இது நிலம் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது. ப்ருத்வித் தலம் எனப் படுகிறது.

உடலின் ஆறு ஆதாரங்களில் மூலாதாரத் தத்துவத்தை இது உணர்த்துகிறது. மூலட்டானமாக விளங்குவதால் மூலாதாரபுரம் எனவும், தேவேந்திரன் புற்று அமைத்து ஈசனை வழிபட்டதால் வன்மீகநாதபுரம் எனவும், முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு உதவி செய்து கிடைத்த ஈசனின் திருவடிவைப் பிரதிஷ்டை செய்திருப்பதால் முசுகுந்தபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. இந்நகரம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானது. சப்தவிடங்கம் என்றால் என்ன என்பவர்களுக்கு. ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். கோயில் ஐந்துவேலியாம், தீர்த்தக்குளம் ஐந்துவேலியாம், செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்துவேலியாம், என்று சொல்லுவதுண்டு. திருவாரூர் கோயில் இந்த நிலப்பரப்பைப் பற்றி அப்பர் பெருமான் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோயில் என அழைக்கப் படும் தில்லைச் சிற்றம்பலத்தை விட அதிகமான பாடல்கள் பெற்றதி திருஆரூரே ஆகும்.

மூவர் பாடிய பாடல்களில் கிட்டத் தட்ட இருநூறு பாடல்களுக்கு மேல் திருவாரூர் பற்றிய பாடல்கள் உள்ளன. திருஞாநசம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில், “ சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப் பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே. பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை மறவா தேத்துமின் , துறவி யாகுமே. துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர் நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே. “ என்றும், திருநாவுக்கரசர், “ பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும் கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும் ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும் ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. எனவும் பாடியுள்ளார். இதைத் தவிரவும் திருவாரூர் அறநெறி என்னும் பாடல்களையும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருவாரூர்க் கோயிலின் நில அளவைக் குறிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. பாடல் தேடினேன். தட்டச்சுத் தேடலில் கிடைக்கவில்லை. “அஞ்சணைவேலி” என ஆரம்பிக்கும் பாடல். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தில் “ பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர்குவிமுலையாள் கூறாவெண் நீறாடீ ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் பகழேனே!” என்கின்றார். இது தவிர திருமூலர் தம் திருமந்திரத்திலும் திருவாரூர் பற்றி அஜபா மந்திரம் என்னும் பகுதியில் சொல்கிறார்என்று தெரியவருகிறது.

*********************************************************************************

இந்தப் பதிவு 2010 ஆம் வருஷம்  ஃபெப்ரவரி மாதம் பதினைந்து தேதிக்கு எழுதப்பட்டது. அதற்கு ஒரு மாதம் முன்னே தான் திருவாரூரெல்லாம் போயிட்டு வந்தோம்னு நினைக்கிறேன். அப்போது எந்தமாதிரியான அவல நிலையில் திருவாரூர்க் கோயில் இருந்ததோ அதே அவல நிலையில் சொல்லப் போனால் இன்னமும் மோசமான நிலையில் இப்போதும் உள்ளது. ஆயிரம் வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் ஆன தியாகராஜர் ஏழ்மை நிலைமையில் இருக்கார் எனில்  அங்கே திருப்பணி செய்யும் குருக்கள் அனைவருமே ஏழ்மையில் காணப்படுகிறார்கள் சிலர் வயது மூத்தவர்களும் கூட. உடனே நம்ம அரசு இவங்க கோயிலில் திருப்பணிக்கு லாயக்கில்லை என மூட்டை கட்டிவிடும். மாதவப் பெருமாள் கோயில் பட்டர் அழுதாப்போல் இவங்களும் அழுவாங்க பிழைக்க வழி இல்லாமல்/தெரியாமல்.

ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி புதன்கிழமை அன்று திருவாரூர்க் கோயிலில் அர்ச்சனை.அபிஷேஹங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காகச் செவ்வாயன்றே கிளம்பித் திருவாரூர் போயிட்டோம். குருக்களே லாட்ஜில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அறை எல்லாம் சுத்தம் தான். உயர்தரத் தொலைக்காட்சிப் பெட்டி, தற்போது அறிமுகம் ஆகி இருக்கும் இன்வெர்டர் ஏசி என எல்லாம் தரமாகவே இருந்தது. முக்கிய்மாய்க் கழிவறையும் வாஷ் பேசினும் வெண்மை கண்ணைப் பறித்தது. குளிக்க வைத்திருந்த வாளி எப்போ வாங்கினதுனு தான் தெரியலை. படுக்கை எல்லாம் சுத்தம் தான். ஆனால் பத்துக்குப் பத்துப் படுக்கை அறையில் ஒரு பக்கம் தொலைக்காட்சிப் பெட்டி மற்ற் மின்சார உபகரணங்கள் சுவரில் இடம் பிடிக்க எதிரே கட்டிலில் நாங்கள் உட்கார்ந்தால் எழுந்திருக்கும்போது தொலைக்காட்சிப் பெட்டியில் தான் இடிச்சுக்கணும். பின்னால் கட்டிலைத் தள்ள இடமில்லாமல் சுவரோடு ஒட்டிப் போட்டிருந்தது. டபுள் காட் கட்டில் வேறே. அதில் உட்கார்ந்து கொண்டு பின்னால் போய்த் தான் சுவர்ப் பக்கம் போய்ப் படுத்துக்கணும். அதிலிருந்து இறங்குவது எனில் கால்மாட்டில் ஜன்னலுக்கும் கட்டிலுக்கும் நடுவே அரை அடி இடம் விட்டிருந்தார்கள். அதில் இறங்கி ஒருக்களித்துக் கொண்டே நகர்ந்து நகர்ந்து வந்து வெளியே வரணும். முன் பக்கம் படுப்பவர்கள் கூட எழுந்திருப்பது ரொம்பக் கஷ்டம். ஒரு ராத்திரி தானேனு எப்படியோ அனுசரித்துக் கொண்டு விட்டோம்.

ஆனால் போய்ச் சேர்ந்த அன்றிரவு சாப்பாட்டுக்கு நாங்க பட்ட கஷ்டம்! அந்தத் தியாகேசனுக்குத் தான் தெரியும். நான் என்னமோ உள்ளுணர்ச்சியில் இம்முறை வீட்டிலேயே பண்ணி எடுத்துக்கலாம்னு சொன்னதுக்கு நம்ம ரங்க்ஸ் திருவாரூரில் இல்லாத ஓட்டலா என்று சொல்லிவிட்டார். குருக்களிடம் விசாரித்த போது அவ்வளவு நல்ல பதில் கிடைக்கலை. சந்தேகமாகவே இருந்தது. அதே போல் அன்று ரம்ஜான் என்பதால் முக்கியமான பல ஓட்டல்கள் மூடி இருக்க அங்கே/இங்கே எனக் காரில் அலைந்து கடைசியில் கீழ வீதியில் வாசன் என்னும் ஓட்டலுக்குப் போகச் சொன்னார்கள். அங்கே அன்று திறந்திருந்தது அந்த ஒரு ஓட்டல் தான் என்பதால் தெருவெல்லாம் கூட்டம் காத்திருந்தது. இவரைப் பார்த்ததும் அந்தக் கூட்டத்தில் மேலே ஏற முடியாமல் தடுமாறுவதைப் பார்த்தக்  காஃபி, தேநீர் போடுபவர் பார்த்துக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று டோக்கன் வாங்கிக் கொடுத்துவிட்டார். உள்ளே உட்கார்ந்து சாப்பிடும்படி இருந்தாலும் கூட்ட நெரிசலில் போகவில்லை. அது மூப்பனார் குடும்பத்தினர் நடத்தும் ஓட்டல் என்பது அங்கிருந்த சில அறிவிப்புப் பலகைகளில் இருந்து தெரிந்தது. சரினு இட்லி, சட்னி, சாம்பார் வாங்கி வந்தார்.  ஐந்து இட்லிகளுக்கு ஒரே பாக்கெட்டில் சட்னி, சாம்பார் கொடுக்கப் போதாதுனு சொல்லி இன்னொன்று வாங்கினால் அதில் ஒரு ஸ்பூன், சாம்பாரும் அரை ஸ்பூன் சட்னியும் இருந்தது. அதுவும் பூண்டு போட்டது. நான் எப்படியோ வெறும் இட்லியை விழுங்க அவர் தொட்டுக்க இல்லாமல் சாப்பிட முடியலைனு சொல்லி அந்தச் சட்னி சாம்பாரையே தொட்டுக் கொண்டு சாப்பிட்டார். 

மிச்சக்கதை/சொச்சக்கதை தொடரும்!

Monday, May 02, 2022

அக்ஷய திரிதியைக்கு என்ன வாங்கணும்? உப்பு வாங்கலையோ உப்பு! மீள் பதிவு

 உப்பு வாங்கலையோ உப்பு!


அன்னக்கொடி விழா



அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?


அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!


மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.


அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.


அன்ன தானம்

எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்

ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,

பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்

வந்திருந்தனர்.


குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்

உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான

பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து

கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து

வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.


பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய

சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.

மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்

வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்

செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய

தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து

இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்

வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்

அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.


2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம். 


இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!





வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.



உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்




ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.




சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன். 

தண்ணீர் வைத்திருந்த பாத்திரம், நிவேதனம் ஆகியவற்றைக் குறித்த படங்கள் ஏனோ வரலை. பழைய பதிவுகளிலும் இல்லை. அநேகமாக அவை அழிந்திருக்க வாய்ப்பு உண்டு. :( மன்னிக்கவும்.