எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 29, 2017

மழையில் உதித்த சிந்தனைகள்! :)

இந்த ஐந்து வருடங்களில் இன்று தான் காலை சுமார் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்திருக்கிறது. நடுவில் ஓர் அரைமணி நேரம் கன மழை! அதாவது இந்த ஊருக்கு கனமழை! :) சற்று நேரம் ஓய்வு கொடுத்திருந்த வானம் மறுபடி இப்போ ஆரம்பம். இது தொடரப் பிரார்த்திக்கிறேன். அதே சமயம் சென்னை மக்களுக்குத் தாங்கக் கூடிய அளவில் மழை பொழியட்டும்! 

இன்னிக்கு ஒரு கிரஹப்பிரவேசத்துக்குப் போனோம். நல்ல அருமையான சாப்பாடு! சாம்பார் சாதமே பிடிக்காத எனக்குக் கூடப் பிடித்திருந்தது. ரசம் மிக அருமை! கேட்டுக் கேட்டு நிதானமாகப் பரிமாறினார்கள். அவசர கதியில் அடுத்தடுத்துப் பண்டங்களைப் போடுபவர்களையே பார்த்த கண்களுக்கு இவங்க நிதானமாக் கேட்டுக் கேட்டுப் போட்ட விதம் ரசிக்கும்படி இருந்தது. சாப்பிடும் வரை பொறுமையாகக் காத்திருந்து பரிமாறினார்கள். நமக்கெல்லாம் இப்படி அமைய மாட்டேங்கறாங்களேனு வருத்தமா இருந்தது. இதிலே இன்னொரு ஆச்சரியம் என்னன்னா தாம்பூலம் கொடுக்கும்போது ஆண்களுக்கும் துண்டு வைத்துக் கொடுத்திருந்தார்கள். பொதுவாகப் பெண்களுக்கு மட்டுமே எங்கேயும் தாம்பூலத்தோடு பரிசுப் பொருளோ அல்லது ரவிக்கைத் துணியோ வைத்துக் கொடுப்பார்கள். ஆண்களுக்குப் பெரும்பாலும் தேங்காய் மட்டும் கிடைக்கும். சில வீடுகளில் சாத்துக்குடி! இங்கே அதெல்லாம் இல்லாமல் நல்ல துண்டாக ஆண்களுக்கும், பெண்களுக்கு ரவிக்கைத் துணியும் தேங்காயோடு வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு நம்ம ஜிஎம்பி சார் நினைவில் வந்தார். அவர் தான் சொல்லிட்டே இருப்பார். எனக்கு யாரும் எதுவும் தருவதில்லை. என் மனைவிக்குத் தான் கொடுக்கிறாங்கனு சொல்லுவார். அவர் இங்கே வந்தப்போப் போய் வாங்கிட்டு வரணும்னு! ஆனால் அப்போதிருந்த உடல்நிலையில் வெளியே போகவே முடியலை! ரங்க்ஸ் வாங்கிட்டு வரேன்னு தான் சொன்னார் . குருக்ஷேத்திரத்தைத் தவிர்க்க வேண்டி வேணாம்னு சொல்லிட்டேன். :)

பள்ளிக் குழந்தைகளுக்குத் தேர்வு முறையைத் திரும்பக் கொண்டு வரணும். எதுவுமே எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பதை அவங்களுக்குப் புரிய வைக்கணும்! பாடச் சுமையைக் குறைப்பது என்பது வேறு. இப்படி ஒரேயடியா எல்லோரும் தேர்வு அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு! இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கல்வியாளர்களுக்கே தெரியலையோ!  முன்னெல்லாம் வீட்டுப்பாடம் செய்து வருவதற்கே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதோடு வகுப்பில் வேறே கேள்விகள் கேட்டு பதில் சொல்வதற்கு! திருத்தமான கையெழுத்துக்கு! இப்படி அநேகமான தேர்வு முறைகள் இருந்தன. இதைத் தவிர்த்தும் ப்ராக்டிகல்ஸ் என்னும் அறிவியலின் செய்முறைப் பயிற்சிக்கு எனத் தனியாக மதிப்பெண்கள் கொடுப்பார்கள். வருடம் முழுவதும் செய்திருக்கும் பயிற்சிகளின் அடிப்படையிலும் அவற்றில் நம்முடைய பங்களிப்பின் அடிப்படையிலும் அந்த மதிப்பெண்கள் அமையும்.

முழு ஆண்டுத் தேர்வின் போதும் இந்தப் பயிற்சிகளைச் செய்ய வைத்து மதிப்பெண்கள் கொடுப்பது உண்டு. நான் அறிவியல் பாடம் தேர்ந்தெடுக்காததால் எனக்கெல்லாம் இல்லை! இந்தப் பயிற்சிப் பாடங்கள் எழுதுவதற்கு எனத் தனியான நோட்டும் உண்டு! அதில் சரியாக எழுதி வரவில்லை எனில் அறிவியல் வகுப்பில் முட்டிக்கால் போட்டு உட்காரச் சொல்லுவார்கள். அல்லது பள்ளி மைதானத்தை மூன்று முறை சுற்றி வரச் சொல்லுவார்கள். இப்படியான தண்டனைகளை இன்று எந்த ஆசிரியராவது மாணாக்கருக்குக் கொடுக்க முடியுமா? அவ்வளவு ஏன்? ஏன் எழுதி வரவில்லை? என்றாவது கேட்க முடியுமா?  எங்க பொண்ணு, பிள்ளைங்க படிக்கும்போதெல்லாம் ஆசிரியர்கள் அவங்க எந்தப் பாடத்திலாவது குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலோ சரியாகச் செய்யவில்லை என்றாலோ அவங்க நோட்டுப் புத்தகத்திலேயே, "என்னை வந்து நேரில் சந்திக்கவும்!" என்று எழுதிக் கொடுத்திருப்பாங்க. குழந்தைங்க உடனே வந்து சொல்லிடுவாங்க. நானோ, என் கணவரோ மறுநாள் போய் வகுப்பு ஆசிரியை, சம்பந்தப்பட்ட பாடத்தில் ஆசிரியை ஆகியோரைப் பார்ப்போம். தேவையானால் பிரின்சிபலைக் கூடப் பார்க்கச் சொல்லுவாங்க. இதுக்கெல்லாம் ஆசிரியர்கள் யாரிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு சொன்னதில்லை. குழந்தைகள் படிப்பில் சிறப்பாக இருக்கவேண்டி அவங்க தன் முனைப்பாகச் செய்வது இது! இதை எல்லாம் குற்றமாய் எடுத்துக்கறது என்பதை இப்போது தான் பார்க்க முடிகிறது. 

அதைத் தவிர்த்துப் பள்ளியில் வருடா வருடம் டயரி ஒண்ணு கொடுத்திருப்பாங்க. அதில் குழந்தைகளின் அந்த வாரத்து நடவடிக்கைகள், படிப்பு சம்பந்தமான விபரங்கள், எந்தப் பாடத்தில் அவங்களுக்கு ருசி இல்லை, எந்தப் பாடம் அதிகம் படிக்க வேண்டி இருக்கு! எதில் கவனம் செலுத்தணும் என்பதிலிருந்து அவங்க உணவுகள் இப்படி இருக்கட்டும் என்று கூடச் சொல்லி இருப்பாங்க. இது பிரின்சிபலிடம் போய் அவருடைய கையொப்பத்துடன் வரும், நாம் பார்த்து அங்கீகரித்ததற்கு நாமும் குறிப்புகள் எழுதிக் கையெழுத்துப் போட வேண்டும். மற்றக் குழந்தைகளுடன் கலந்து பழகவில்லை என்றால் கூட அதைக் குறிப்பிட்டுக் காரணம் கேட்பாங்க. அல்லது அவங்களே குழந்தைகளுடைய கூச்ச சுபாவத்தை நீக்கும் வழிகளைச் சொல்லி இருப்பாங்க. 

பெற்றோரும் மாணாக்கர்களும் ஆசிரியர்களின் கண்டிப்புப் பிள்ளைகளின் நன்மைக்கே எனப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து ஆசிரியர் கண்டித்தால் மாணாக்கர்கள் தூக்குப் போட்டுக் கொள்ளுவதும், கிணற்றில் விழுவதும் அவர்களின் மனம் பக்குவம் அடையவில்லை, பெற்றோரின் வழிகாட்டுதல் சரியான முறையில் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். மாணாக்கர்களும் இப்போதெல்லாம் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு மற்றப் போராட்டங்களில் பங்கேற்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர். இதை எந்த ஆசிரியரும் தடுத்ததாகத் தெரியவில்லை என்பதோடு பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பாடங்கள் கற்று மனதில் பதிய வைக்க வேண்டிய வயதில் அரசியல்வாதிகளின் உணர்வு பூர்வமான பேச்சுக்களால் கவரப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்காலத்தைத் தொலைப்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதிலும் சமீபத்தில் ஓர் பதினைந்து வயது கூட நிரம்பாத மாணவி பள்ளிச்சீருடையோடு வந்து போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டதைப் பார்த்தப்போ, பேசப்படும் விஷயத்தின் உள்ளார்ந்த காரண, காரியங்களை அந்தக் குழந்தை நன்கு அறிந்து கொள்ளவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. சொல்லிக் கொடுத்ததைச் சொன்னது! பாவம்!

அதோடு இப்போ எல்லாவற்றுக்கும் பிரதமரே காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இதைத் தவிர வேறே வேலையே இல்லையா என நினைக்கத் தோன்றுகிறது. எத்தனை எத்தனையோ தீவிரமான நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதாரம், விவசாயம், கல்வி என விஷயங்கள் குவிந்திருக்க, இங்கே தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் மோதி தான் காரணம் எனச் சொல்கின்றனர். ஒரு பக்கம் பிஜேபியை வர விடமாட்டோம் எனச் சொல்கின்றனர். இன்னொரு பக்கம் கொல்லைப்புறம் வழியா வரப் பார்க்கிறது என்கின்றனர். இவங்க தான் தடுக்கப் போறாங்களே! அப்புறமும் ஏன் பயம்? கருத்துச் சுதந்திரம் இல்லைனு எல்லாவற்றுக்கும் சொல்றாங்க! கருத்துச் சுதந்திரம் இல்லாதப்போவே எல்லாத்துக்கும் மோதியைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பது எந்தச் சுதந்திரத்தில் சேர்த்தி? மற்ற அரசியல்வாதிகளைச் சொல்ல முடியுமா?

நானும் சொல்ல வேண்டியது தான்! எனக்கு ஆஸ்த்மா அட்டாக் வந்ததுக்கே மோதி தான் காரணம்! இல்லைனா வந்தே இருக்காது! 

Tuesday, November 28, 2017

நல்லவேளையாப் படிப்பை முடிச்சுட்டேன்!

இப்போல்லாம் எதற்குத் தற்கொலை பண்ணிக்கிறது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது! சில நாட்கள் முன்னர் பள்ளியில் படிக்கும் சிறுமிகளைச் சரியாப் படிக்கவில்லை என்பதற்காகப் பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர்கள் சொல்லி இருக்க அந்தப் பெண்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இன்னிக்குப் பார்த்தா +2 படிக்கும் ஓர் மாணவன் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டானாம்.

நான் படிக்கிறச்சே எல்லாம் அப்பா பள்ளிக்கே வந்து ஆசிரியர்களிடம் வீட்டிலே இவ படிக்கிறதே இல்லை. விகடன், கல்கி, குமுதம் தான் படிக்கிறாள். நல்லா அடிச்சுச் சொல்லுங்க! என்று வந்து சொல்லி விட்டுப் போவார்.  இத்தனைக்கும் பள்ளியிலேயே பள்ளி நேரம் முடிந்த பின்னர் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசிரியர் சிறப்பு வகுப்பு வைச்சிருப்பாங்க. அன்றன்றைய பாடங்களை அந்தச் சிறப்பு வகுப்பிலேயே தேர்வு வைச்சு எழுதச் சொல்லியும் பயிற்சி கொடுத்திருப்பாங்க. வீட்டுப் பாடங்களையும் சிறப்பு வகுப்பிலேயே முடிப்போம். தினம் தினம் காலை, மாலை இரு நேரமும் சிறப்பு வகுப்புக்கள் உண்டு. இப்படிப் படிச்சப்புறமும் வீட்டிலே வந்து படிக்கலைனு ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் எங்களைக் கண்டிச்சாங்க. அடிகளும் விழுந்தன. ஆனால் நமக்கெல்லாம் எருமைத் தோலாச்சே! அதை எல்லாம் கண்டிக்கலை.

எல்லாத்தையும் துடைச்சுப் போட்டுட்டுப் போயிடுவோம். இப்போதைய ஆசிரியர்கள் போலவா அப்போதைய ஆசிரியர்கள்? இப்போதைய ஆசிரியர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்! வருமானம் என்னமோ முன்னை விட இப்போது பரவாயில்லை தான்! ஆனால் ஒரு பையனையோ, பெண்ணையோ படிக்கலை என்று கண்டிச்சுட்டு அந்த ஆசிரியர் அப்புறமா அந்தப் பள்ளியிலே வேலை செய்ய முடியுமா? கஷ்டம்! அப்படியும் மீறிச் சொல்லிட்டா அந்த மாணவன் அல்லது மாணவி தற்கொலைக்கு முயன்றாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் நேரே சிறைக்குத் தான் போகணும். சம்பந்தப் பட்ட மாணவன் படிச்சால் என்ன, படிக்காட்டி என்னனு கண்டுக்காமப் போனால் தான் ஆசிரியர்கள் பிழைச்சாங்க. இல்லைனா அவங்க பாடு சிரமம் தான்!

ஏற்கெனவே கல்வியின் தரம் தாழ்ந்து கிடக்கிறது. எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்னு வேறே போட்டுடணும். ஒன்பதாம் வகுப்பிலே இருந்தாவது படிம்மா கண்ணே, முத்தேனு கொஞ்சிக் கெஞ்சிப் படிக்கச் சொன்னாலும் படிக்காதவங்களை என்ன செய்ய முடியும்? அவங்க தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அதுக்கும் ஆசிரியர்கள் தான் காரணம்! சரியாச் சொல்லிக் கொடுக்கலை என்பாங்க. சரியாச் சொல்லிக் கொடுத்து மாணாக்கர்கள் சரியா அதைத் தேர்வில் எழுதறாங்களானு ஆசிரியர் கவனிச்சு அதைத் திருத்திட்டால் பொல்லாத ஆசிரியராகி விடுகிறார். நல்லவேளையா இந்தக் காலத்தில் பிறக்கலை.

ஆசிரியரை உண்மையாக குருவாக மதிச்சு வந்த காலத்திலேயே என்னோட படிப்பெல்லாம் முடிஞ்சு போச்சோ, பிழைச்சேன்! இப்போதைய ஆசிரியர்கள் சாபம் வாங்கிக் கொண்டு ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்கள். பாவம் ஆசிரியர்கள்! 

Tuesday, November 21, 2017

அப்போவும், இப்போவும், எப்போவும்! :)

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!!
Photo

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக அஷ்வின் ஜி!:)

இந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை! பின்னே என்னதான் நடந்தது? கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா? அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு! அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது! முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ? இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.

அதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு! அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம்! இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, "கிக்" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்.

எல்லாம் நம்ம "ஹெட்லெட்டர்" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, "நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்! அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது? இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது! சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன்! "படக்!" டிக்கி திறந்து கொள்ளும்! ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி "மூட் அவுட்" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய்! மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் "படக்"! டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக்!!!!! இப்போ அவர் கிட்டே இருந்து வரும்!

"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை!"

"இன்னும் எங்கே உட்காருகிறது? ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன்! இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்!"

'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

"நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"

"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்!"

"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க, பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு!"

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!ஹாஹாஹா, மேலே உள்ளவை 2007 ஆம் ஆண்டில் எழுதினது! அதுக்கப்புறமா இரண்டு முறை மீள் பதிவும் போட்டாச்சு! இப்போ நாங்க அதிகம் வண்டியிலே போகிறதில்லை என்றாலும் இப்போக் கொஞ்ச நாட்களாக, கொஞ்ச நாளா என்ன கொஞ்ச நாள்! இப்போ இரண்டு, மூன்று நாட்களாக நெபுலைசர் வைச்சுக்க வேண்டி வண்டியில் போக வேண்டி இருக்கு. என்ன தான் ஒரு வேளை ஆட்டோவில் போனாலும், மறுவேளை வண்டியில் தான் போக வேண்டி இருக்கு! ஆனால் பாருங்க, அதிசயத்திலும் அதிசயமா நம்ம ரங்க்ஸ் இப்போ இடமே இல்லைனு சொல்றதில்லை. ஒல்லியாயிட்டேனோ? தெரியலை என்னனு! அதிகம் வம்பு வைச்சுக்காமல் ரெண்டு பேரும் ஜாக்கிரதையா வண்டியிலே போயிட்டு வந்துட்டு இருக்கோம். கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே! சே! அது சினிமாப் பாட்டு இல்லையோ! கண்ணுபடப் போகுதம்மா உங்க ரெண்டு பேருக்கும்! 

Sunday, November 19, 2017

மெல்ல மெல்ல வந்துட்டேன்.

ஒரு வாரமாய்க் கடுமையான ஆஸ்த்மா தாக்குதல். இம்முறை பலமாகத் தன் வீரியத்தைக் காட்டி உள்ளது. போன ஞாயிறன்று இரவு லேசாய்த் தொண்டை வலிக்கையிலேயே கொஞ்சம் பயமாகவே இருந்தது. திங்களன்று முழு ஓய்வும் எடுத்துக் கொண்டேன். என்றாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. புதனன்று மருத்துவரிடம் செல்லும்படி ஆகி விட்டது. அன்றும், மற்றும் வெள்ளிக்கிழமையும் நெபுலைசர் வைத்துக் கொண்டு வந்தாச்சு. நேற்று மறுபடி போயிருக்கணும். திடீர் விருந்தினர் வரவால் போக முடியவில்லை. இன்று காலை போகணும். கணினி பக்கமோ, முகநூலோ, பதிவுகளோ எதுவும் பார்க்கவில்லை.  தலையே தூக்க முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து கொஞ்சம் பரவாயில்லை. அதோடு ஜூரம் வேறு!  நேற்று இரவு ஒரு நிமிடம் கூடக் கண் அசரவில்லை. ஒரே இருமல் மயம்! விதவிதமான சப்தங்களில் வெவ்வேறு சுருதிகளில் என்னோடமூச்சுக்காற்று என்னையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

நானும் எழுந்து உட்கார்ந்து பிராணாயாமம் எல்லாம் பண்ணிப் பார்த்தேன். பண்ணிச் சிறிது நேரம் வரைக்கும் பேசாமல் இருக்கிறது அப்புறமாத் தன் வேலையைக் காட்டுகிறது. வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. சமையலறை மட்டும் தலைகீழா மாறி இருக்கு! ஹிஹிஹி, ரங்க்ஸ் கைவண்ணம்! காஃபி மட்டும் தான் நான் போட்டேன். அவர் போட்டால் குடிக்கிறதுக்கு ஆள் தேடணுமே! மெல்ல மெல்லச் சரியாகிக் கொண்டு வருகிறது. ஆனால் யாருமே நான் எங்கேனு தேடலை! அப்பாடானு நினைச்சிருப்பாங்க! ஹிஹிஹிஹி! இல்லைனா வம்புக்கு பதில் சொல்லணுமே! ஆனாலும் விடுவேனா என்ன? வந்துட்டேனே!

Saturday, November 11, 2017

கலாசாரம் மாறுகிறதா? மாறி விட்ட கலாசாரமா?

இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி சானல் ஒன்றிரண்டில் மும்பையில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சாப்பாடு நன்றாக இல்லை என்று சொன்னாராம். இதற்காக அங்கே வேலை பார்ப்பவர் அந்த இளைஞர் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுகிறார். அதுவும் துரத்தித் துரத்தி! இதை எல்லாம் பார்த்தால் தப்பைத் தப்புனு சொல்லவே பயமா இருக்கு! நானும் இம்மாதிரிச் சில சம்பவங்களில் மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கேன்.  முகநூலிலும் தான்!  கண்டமேனிக்குத் திட்டு வாங்கிண்டேன். :) அப்புறமா அவங்களோட தொடர்பையே துண்டிச்சாச்சு! இத்தனைக்கும் உறவினர் தான்! இப்போல்லாம் யார் தப்புப் பண்ணினாலும் ரொம்பவே யோசிச்சு அவங்க கிட்டே முதல்லே பேசிப் பார்த்துட்டு அப்புறமாத் தான் தப்பு, சரினு சொல்லணும் போல! அது போகட்டும். இப்போ சமீப காலமாக இணையங்களிலும் முகநூல் போன்ற பொதுவெளிகளிலும் மும்முரமாகப் பேசப்படும் விஷயம் "லக்ஷ்மி" என்னும் குறும்படம் பற்றி.

முகநூலில் ஒரு குழுமத்தில் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி ரொம்பவே சிபாரிசு செய்திருந்ததோடு, ஒப்புமை செய்ய முடியாத அளவுக்கு அருமையான காதல் என்றெல்லாம் சொன்னார்கள். இப்படியான காதல் குறிஞ்சி மலர் போலத் தான் என்றோ வரும் என்றும் சொன்னார்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. கதையை மட்டும் புரிந்து கொண்டேன். திருமணம் ஆகி எட்டு, பத்து வயசுக்கு ஒரு பையன் இருக்கும் ஓர் தம்பதிகள்.  கணவன் சேகர், மனைவி லக்ஷ்மி! இருவருக்கும் வழக்கமான இயந்திரத்தனமான வாழ்க்கை ஓடுகிறது. இதில் தமிழ்ப் படம் என்பதால் வழக்கத்தை மீறாமல் கணவனுக்கு ஓர் ஆசை நாயகி அல்லது சிநேகிதி! உறவு எல்லை மீறிப் பழகும் அளவுக்கு! இதனால் வெறுத்துப் போன லக்ஷ்மிக்கு வேலைக்குச் செல்லும்போது (?) ரயிலில் பழக்கம் ஆகும் கதிர் ஈர்க்கிறான். கதிரும் லக்ஷ்மியை அவள் அழகை, அவள் திறமையைப் பாராட்டுவதோடு அவளுக்குப்புதிய அலங்காரம் அறிமுகம் செய்து அவளுக்குச் சமைத்துப் போட்டு அவளைத் தன் பால் மேலும் ஈர்க்கிறான். 

கதிர் வீட்டுக்கு முதல்முறை செல்லும்போதே லக்ஷ்மியைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று விடுகிறான். கணவனைப் பழிவாங்குவதாக (?) நினைத்தோ என்னமோ லக்ஷ்மியும் உடன்படுகிறாள். பின்னர் அவள் வீட்டுக்குத் திரும்பும் போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பேருந்தில் பயணிக்க நேருகிறது. அப்போது லக்ஷ்மி அவனிடம், "தான் இன்னும் சில நாட்களுக்காவது பேருந்தில் பயணிக்கும்படி இருக்கும்!" என்று சொல்வாளாம்! இந்தப் படம் முதலில் லக்ஷ்மியின் வாழ்க்கையைக் குறிக்கும்போது கறுப்பு, வெள்ளையில் ஆரம்பித்துப் பின்னர் கதிரின் அறிமுகம் ஏற்பட்டு இருவருக்கும் தொடர்பு ஏற்படும் வரை வண்ணத்தில் வருகிறதாம். இது லக்ஷ்மியின் வாழ்க்கையின் வண்ணமயமான பகுதியாம். பின்னர் முடியும்போது மீண்டும் கறுப்பு, வெள்ளையில் வருவதால் இனி உன்னுடன் தொடர்பு இருக்காது என்பதைக் குறிப்பாக லக்ஷ்மி சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதற்காகத் தான் தான் இனி ரயிலில் வரமாட்டேன் என்று சொல்கிறாளாம். எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் லக்ஷ்மி தன் வீட்டுக்கே திரும்பிப் போகிறாளாம். 

இந்தப் படம் நான் பார்க்கவில்லை. பலரும் பகிர்ந்ததில் இருந்து போட்டிருக்கேன். உண்மையில் இது ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல். Unfaithful என்னும் பெயரில் 2002 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் The  Unfaithful Wife என்னும் பெயரில் ப்ரெஞ்ச் மொழியில் 1969 ஆம் ஆண்டிலும் வந்த இரு படங்களின் கதை! இதில் முதலில் சொல்லப்பட்ட ஆங்கிலப் படத்தில் இன்னொரு ஆணோடு தன் மனைவிக்கு இருக்கும் நீடித்த உறவைக் கண்டு பிடித்த கணவன் அந்த நபரைக் கொன்று விடுகிறான். அதன் பின்னர் இது த்ரில்லராகப் போகும். ஃப்ரெஞ்ச் படத்தில் எப்படினு தெரியலை! 

ஆனால் மேலே குறிப்பிட்ட லக்ஷ்மி என்னும் பெயரிலேயே வந்திருக்கும் இந்தத் தமிழ்க்குறும்படம் பல விருதுகளை வாங்கி இருக்காம். இத்தனைக்கும் கணவன் தவறான உறவு வைத்திருப்பது போல் எல்லாம் காட்டவே இல்லை என்கின்றார்கள். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு அவர் சிநேகிதியிடமிருந்து வருவதை வைத்து இப்படி முடிவு கட்டுகிறார்கள். கணவனின் உறவு இயந்திரத்தனமாக இருப்பதாக நினைக்கும் லக்ஷ்மிக்கு அதே உறவு வேறொரு ஆணிடம் சந்தோஷத்தைத் தருவதாகத் தோன்றுகிறது! என்னத்தைச் சொல்வது! கணவன், மனைவிக்குள்ளே அலுப்பு, சலிப்பு என்பது வரத் தான் செய்யும். அதை இருவரும் பேசி மாற்ற முயற்சிக்க வேண்டும். இத்தகைய தவறு மன்னிக்கவே முடியாத தவறு செய்து விட்டால் சரியாயிடுமா? 

கணவனோடு வாழப் பிடிக்கலைனால் விவாகரத்துப் பெற்றுப் பின்னர் இன்னொரு வாழ்க்கையையோ இன்னொரு ஆணையோ பற்றி சிந்தித்திருக்கலாம். அப்படியானும் இந்தக் கதிர் என்பவனாவது லக்ஷ்மியின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தருபவனாக இருக்கிறானா? இல்லை! அவன் பழகியதே லக்ஷ்மியுடனான இந்தத் தகாத உறவுக்குத் தான் என்று புரிகிறது. கடைசியில் ஏமாந்தது லக்ஷ்மி தான்! ஆனால் இதைப் போய் தெய்விகக் காதல் என்றும் எங்கும் எப்போதும் கிடைக்காத ஒரு மனத் திருப்தி லக்ஷ்மிக்குக் கிடைத்ததாகவும் இது ஒன்றும் முறைகேடான நட்பு அல்ல என்றும் இது தான் பெண் சுதந்திரம் என்றும், இத்தகைய சுதந்திரமே பெண்களுக்கு இப்போது தேவை என்றும் சொல்கிறார்கள். முறைகேடான உறவாக இருந்தாலும் பெண்களுக்கு இத்தகைய உறவு வைத்துக் கொள்வதே பெண்ணுக்கு சுதந்திரம் என்றும் பேசுகிறார்கள். 

இது வெளியே தெரிந்தால் லக்ஷ்மிக்கு என்ன மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்? அவள்  கணவனோ அல்லது மகனோ இதை ஏற்றுக் கொள்வார்களா? வாழ்க்கை சண்டை, சச்சரவின்றி நகர்வதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கையில் கணவனின் சின்னச் சின்னச் செயல்களுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டு தன்னைப் புகழவில்லை, தன் அழகை வர்ணிக்கவில்லை! தன் சமையலைப் பாராட்டவில்லை! தனக்குச் சமைத்துப் போடவில்லை என்றெல்லாம் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு இன்னொரு ஆணின் உறவை ஏற்றுக் கொள்பவள் எத்தனை நாட்கள் அவனோடு தாக்குப் பிடிக்க முடியும்? நாளாவட்டத்தில் அவனுக்கும் அலுக்க ஆரம்பிக்கும்? அப்போது இந்த லக்ஷ்மி என்ன செய்வாள்? இப்போதெல்லாம் பெண்கள் இப்படி நடந்து கொள்வது சகஜம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மனசு கொதிக்கிறது! வேதனை தாங்கவில்லை! 

மொத்தத்தில் கலாசாரச் சீரழிவு என்பது எப்போதோ தொடங்கி விட்டது! நாம் தான் இதைப் புரிந்து கொள்ளவில்லை! 


இங்கே  English Picture

இங்கே  French Picture

Wednesday, November 08, 2017

இல்லம், இனிய இல்லம்! :)
போன வருஷம் செப்டெம்பரில் அம்பத்தூர் போனப்போ எடுத்த படம். வாசல்லே வேப்பமரம்! வீடு சுத்தம் செய்தோம். நவம்பரில் வாடகைக்கு ஆள் வந்தாங்க! அம்பேரிக்காவிலிருந்து வந்ததும் போய்ப் பார்த்தோம்.  ரொம்ப மோசமான நிலையில் இப்போ வைச்சுட்டு இருக்காங்க! :( ஒண்ணும் புரியலை! கண்ணில் ரத்தம் வருது!

வேப்பமரம் அதன் வழக்கம்போல் தெருவுக்கே நிழல் கொடுத்துட்டு இருக்கு!

ம்ம்ம்ம், இது பழைய மடிக்கணினியில் சேமித்து வைக்கப் பட்ட படம். புதுக் கணினியிலே திடீர்னு மவுஸ் வேலை செய்யலை. எனக்குக் கையால் இயக்கும்போது வேகம் வரலை என்பதோடு கையும் தகராறு செய்யும்! ஆகவே பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுட்டு இருக்கேன். அதிலே தான் இப்போ வேலை செய்யறேன். சரியா வருதானு பார்க்கத் தான் இந்தப் பதிவு!
படங்களும் போன வருஷம் காமிராவில் எடுத்தது! 

Sunday, November 05, 2017

உங்கள் கருத்து என்ன?

இதுவரை இல்லாத அளவுக்கு என்னோட ரவாதோசை பதிவுக்கு எக்கச்சக்கப் பார்வையாளர்கள்! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.  கடந்த செவ்வாய்க்கிழமை வந்த காமாட்சி அம்மாவின் சிறுகதையின் தாக்கம் இன்னமும் என்னை விட்டுப் போகவில்லை. கணவன் எத்தனை வருஷங்கள் விட்டுப் பிரிந்திருந்தாலும் மனைவி கணவனுக்காகக் காத்துக் கொண்டு நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருப்பாள். ஆனால் மனைவி ஒரு பத்துநாட்கள் இல்லை எனில் கணவனால் அதைக் கட்டிக் காக்க முடிவதில்லை. எல்லோரும் இப்படி இல்லை என்றாலும் சிலர் அப்படித் தானே இருக்காங்க! இதிலே அந்தத் தவறுக்கு ஒத்துழைக்கும் பெண்கள் பேரிலும் குற்றம் தான்! இன்னொருத்தியின் கணவன் என்பது தெரிந்தும் தவறு செய்கிறார்கள். மனசாட்சி உறுத்தாதா? கண நேர சுகத்துக்காக ஒரு குடும்பத்துக்கே துரோகம் இழைக்கலாமா? இத்தனைக்கும் ஏற்கெனவே திருமணம் ஆன பெண்மணி! :(

இந்தக் கதை எனக்கு மற்ற இரு கதைகளை நினைவூட்டியது. ஒரு விதத்தில் காமாட்சி அம்மாவின் கதாநாயகி நடந்து கொண்ட விதம் கணவனை அவள் விவாகரத்து செய்ததற்குச் சமம். சட்டப்படியான விவாகரத்து இல்லை எனினும் தார்மிகப்படி விவாகரத்துத் தான் அது! அதே போல் இரண்டு விவாகரத்துகள் நான் பல்லாண்டுகளுக்கு முன்னர் படித்த இரு கதைகளில் வந்திருக்கிறது. ஒன்றின் பெயரே "டைவர்ஸ்"! ஆகும். எழுதியவர் பிரபல நாவலாசிரியர் திரு பி.வி.ஆர். அவர்கள். குடும்பத்தைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் சங்கடங்களையும் எளிதான சம்பாஷணைகள் மூலமே சொல்லி விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதையை நகர்த்துவதில் வல்லவர்.  அவரின் எழுத்தைப் படிக்கையில் நாம் அந்த இடத்திலேயே இருந்து நேரிடையாக அந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் உணர்வு வரும். எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த எழுத்தாளர்களில் இவரும் முக்கியமானவர்.

மேற்சொன்ன டைவர்ஸ் நாவலில் ஒருமித்து அந்நியோன்னியமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுவது குறித்து. அதுவும் மிகப் பணக்காரர்கள் ஆன தொழிலதிபர் ஆன கணவனின் பழைய வாழ்க்கை குறித்து மனைவிக்குத் தெரிய வருகிறது. அதுவும் பெண்ணின் மூலம் என நினைக்கிறேன். அந்தப் பெண் சாதாரணக் குடும்பத்துப் பிள்ளையைக் காதல் திருமணம் செய்யப் போகக் கதையில் ஒவ்வொன்றாக வெளியே வரும். கணவனின் பழைய காதல் வாழ்க்கையும் தன் தந்தையின் வற்புறுத்தலால் தன்னை மணந்ததும், ஆனால் இன்னமும் தன் காதலியை மறக்க முடியாமல் அவளுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரிய வந்ததும் அந்த மனைவிக்குக் கோபம் உள்ளூர வருகிறது. ஆனால் பெண்ணின் திருமண வாழ்க்கையில் இதனால் பிரச்னை வருமே என யோசித்துக் கணவனிடமிருந்து விலகி விடுகிறாள். காமாட்சி அம்மா சொன்னது போல் கணவனுக்கு அறுபது வயது சஷ்டி அப்த பூர்த்தி நிகழ்ச்சியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் முக மலர்ச்சியுடன் பங்கேற்கிறாள். துணை நின்று எல்லா வைதிக காரியங்களுக்கும் மனைவியாக நடத்தித் தருகிறாள். அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்கும்போது நினைவாகக் கணவனின் பழைய காதலிக்குக் கொடுக்காமல் தவிர்க்கிறாள். (எல்லாம் தெரிந்து விட்டதால் கணவர் தன் பழைய காதலியையும் தன் சஷ்டி அப்தபூர்த்திக்கு அழைத்திருப்பார்.)  இப்படிக் கணவனிடமிருந்து விலகி நிற்பதையே ஒரு வகையில் டைவர்ஸ் என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் பிவிஆர்.

ஒரு விதத்தில் இந்தக் கதை/நாவல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை! ஏனெனில் கதை ஆரம்பத்தில் பெண் தான் இஷ்டப்பட்டு மணந்து கொண்ட கணவனை விட்டு டைவர்ஸ் வாங்கப் போகிறாள் என்னும்படி போய்க் கொண்டிருக்கும். பெண்ணைத் திருத்துவதற்காக அல்லது வேறே என்ன என்பது இப்போது நினைவில் இல்லை! கணவன், மனைவி நாடகம் ஆடப் போக உண்மை நிலை வெளியே வரும்! பிவிஆர் வேறே ஏதோ சொல்ல வந்து கடைசியில் கதையின் போக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் அதன் போக்கில் போய்விட்டாரோ எனத் தோன்றும்படி இருக்கும்.  இதற்கு ஓவியர் ராமு படங்கள் வரைந்திருப்பார். குமுதத்தில் வந்தது என நினைக்கிறேன்.

இப்போ இன்னொரு கதை! இது ரா.கி.ரங்கராஜன் எழுதினது என நினைக்கிறேன்.  இதுவும் குமுதத்தில் வந்தது தான். ஆனால் சிறுகதை என நினைக்கிறேன். ஒரு நீதிபதி! நேர்மைக்குப் பெயர் வாங்கியவர். அவருடைய தீர்ப்புகள் உண்மையை ஒட்டியே இருக்கும்.. மனைவி பெயர் மீனாட்சியோ என்னமோ வரும்.இவர்களும் வெகு அன்னியோன்னியமான தம்பதிகள். ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த நீதிபதி நேர்மைக்குப் பெயர் போனவர்.  அவருடைய தீர்ப்புகள் எப்போதுமே குறிப்பிடத்தக்க அளவில் நேர்மையாகவே அமையும். யாருக்கும் எவ்விதமான குறைபாடுகளும் சொல்லத் தோன்றவில்லை. அப்போது ஓர் கொலை வழக்கில் கொலைகாரன் என்று தீர்மானமாகத் தெரிந்தபோதும் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்றிருந்த போதிலும் அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கிறார். (எனக்கென்னமோ கதைப்படி அவனை மன்னித்து விட்டு விட்டதாக நினைப்பு.) இது எல்லோருக்குமே ஆச்சரியத்தைத் தருகிறது. நிரூபணம் ஆன ஓர் குற்றவாளியைத் தண்டிக்காமல் விட்டுவிட்டாரே என நினைக்கின்றனர்.

அன்றிரவு மனைவியுடன் தனிமையில் இருக்கையில் மனைவி ஆச்சரியத்துடன் கேட்கிறாள். தீர்ப்பு ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவள் கேட்பதற்கு நீதிபதி சொல்கிறார். "உனக்கு நினைவில் இருக்கிறதா? நீ கல்லூரியில் படிக்கையில் வீட்டில் உன் அறைக்குள் ஓர் கொள்ளைக்காரன் புகுந்து கொண்டு உன்னைக் கட்டிப் போட்டுவிட்டுக் கொள்ளை அடிக்க முயன்றானே! அப்போது உன் அறைக்குள் யாருக்குமே நுழைய முடியாமல் இருந்தது! கடைசியில் நான் தான் எப்படியோ போலீஸை வரவழைத்துக் கதவை உடைத்து உன்னை அவனிடமிருந்து காப்பாற்றினேன்!" என்று கேட்கிறார்.

அந்தப் பெண்மணியும் கண்கள் கலங்க, "ஆமாம், நினைவில் இருக்கிறது. உங்களுக்கு என் மேல் எவ்வளவு அன்பும், காதலும் இருக்கிறது என்பதை நான் பூரணமாக உணர்ந்து கொண்ட நாள் அது!" என நாத்தழுதழுக்கச் சொல்கிறாள். (உண்மையில் கதையில் இப்படி வராது! வேறே ஏதோ சொல்லுவாள். ஆனால் பொருள் இது தான்!) அந்த நீதிபதியும், "ஆமாம், அதற்கப்புறமாய்த் தான் நம் கல்யாணம் நடந்தது!" என்றார். அவளும், "ஆம், நன்றாகத் தெரியும்! பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அத்தனை நேரம் ஓர் முரடனுடன் ஒரே அறையில் இருந்திருக்கிறாள். என்னென்ன செய்தானோ என என் காதுபடவே பேசிக் கொண்டார்கள்! ஆனால் நீங்கள் எதையும் லட்சியம் செய்யவில்லை!" எனப் பெருமிதம் பொங்கச் சொன்னாள்.

அதற்கு நீதிபதி, "ஆமாம், ஆனால் கல்யாணம் செய்து கொண்டபின்னரும் எனக்கு என்னமோ உறுத்தலாகவே இருந்தது. ஆனால் நீ எனக்கு உண்மையாக இருந்தாய்! என்னை மிகவும் நேசித்தாய். நேசிக்கிறாய். என்றாலும் இன்று தான் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது! இனி உன்னை முழு மனதோடு நேசிக்க எனக்கும் எவ்விதத் தடையும் இல்லை!"

"என்ன சொல்கிறீர்கள்?" அதிர்ச்சியுடன் மனைவி கேட்கிறாள்.

"இன்று வழக்கில் குற்றவாளி யார் என நினைக்கிறாய்? அதே குற்றவாளி தான். உன்னைக் கட்டிப் போட்டுத் தொந்திரவு செய்தானோ அவனே தான். அவன் இப்போது செய்த ஓர் குற்றத்துக்காக அவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நேர்ந்தது. அப்போது தான் தெரிய வந்தது அவன் சிறு வயதிலேயே ஆண் உறுப்பை விபத்தின் மூலம் இழக்க நேரிட்டது என்பதும் அவனுக்குச் சிற்றின்பம் என்பதோ, பெண் சுகம் என்பதோ தெரியவே தெரியாது என்பதும் புரிய வந்தது! அதைக் கேட்ட பின்னர், அந்தப் பரிசோதனையைப் படித்த பின்னர் தான் எனக்கு மனதில் ஆறுதல் வந்தது!" என்றார்.

கணவனைத் தழுவிய வண்ணம் படுத்திருந்த மனைவியின் கரங்கள் தளர்கின்றன.  திரும்பிப் படுக்கிறாள். கணவனும் மன நிம்மதியில் தூங்கி விடுகிறார். மறுநாள் இரவு படுக்கைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி! இணைந்திருந்த இரு கட்டில்களும் பிரிக்கப்பட்டிருந்தன. தனியாகப் படுத்திருந்த மனைவியைப் பார்த்து, "இது என்ன?" என்று கேட்கிறார். "விவாகரத்து! டைவர்ஸ்! நீங்கள் என்னிடம் கொண்ட நம்பிக்கையினால் என்னைத் திருமணம் செய்து கொண்டதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இல்லை! என்னைச் சந்தேகித்திருக்கிறீர்கள்! இப்படிப்பட்டவருடன் இத்தனை நாட்கள் வாழ்ந்ததை நினைத்து வேதனைப்படுகிறேன். வெளி உலகுக்குத் தான் நாம் இனி கணவன், மனைவி! உள்ளே நீங்கள் யாரோ, நான் யாரோ! இது தான் என்னுடைய தீர்ப்பு!" என்று சொல்லிவிட்டுப் படுத்து உறங்க ஆரம்பிக்கிறாள்.

நீதிபதி திகைத்து நிற்கிறார். தன் தவறும் புரிகிறது. நிரந்தரமாக மனைவியை இழந்து விட்டது தெரிந்து வேதனையில் ஆழ்கிறார்.

இது இரு வேறு பெண்கள் இருவேறு சூழ்நிலையில் தங்கள் கணவன் மார்களுக்குக் கொடுத்த தண்டனை! இதைக் குறித்த உங்கள் அனைவரின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.  இரு கதைகளுமே படித்து முப்பது ஆண்டுகளாவது ஆகி இருக்கும். கதையின் தன்மையாலும் அதன் முடிவாலும் இன்னமும் நினைவில் இருக்கிறது. சம்பவங்கள், சம்பாஷணைகள் நான் சொன்னபடி இருக்காது என்றாலும் கதைகளின் கரு நான் சொன்னபடி தான் அமைந்திருந்தது. 

Friday, November 03, 2017

அவசர உதவிக்கு அழைக்க!

வடகிழக்கு பருவமழையை தீவிரமடைந்ததையொட்டி,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் – மீட்பு,
கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள
தொழில்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் –

மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும்,
ஒரு கண்காணிப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது.

இதில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக
கீழ்க்கண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மண்டலம்: கே.நந்தகுமார் (7550225801)
மணலி மண்டலம்: மரியம் பல்லவி பல்தேவ் (7550225802)
மாதவரம் மண்டலம்: சந்தோஷ் பாபு (7550225803)

தண்டையார்பேட்டை மண்டலம்: டி.என்.வெங்கடேஷ் (7550225804 )
ராயபுரம் மண்டலம்: பி.உமா நாத் (7550225805)
திரு.வி.க. நகர் மண்டலம்:சி.காமராஜ் (7550225806)

அம்பத்தூர் மண்டலம்:எம்.பாலாஜி (7550225807)
அண்ணாநகர் மண்டலம்:ஆர்.நந்தகுமார் (7550225808)
தேனாம்பேட்டை மண்டலம்: ஆர்.செல்வராஜ் (7550225809)

கோடம்பாக்கம் மண்டலம்:சி.விஜயராஜ்குமார் (7550225810)
வளசரவாக்கம் மண்டலம்: ஆர் கிர்லோஷ் குமார் (7550225811)
ஆலந்தூர் மண்டலம்: கிரண் குர்ராலா (7550225812)

அடையாறு மண்டலம்: மைதிலி கே.ராஜேந்திரன் (7550225813)
பெருங்குடி மண்டலம்: ஆர்.பழனிச்சாமி (7550225814)
சோழிங்கநல்லூர் மண்டலம்: தாரேஸ் அகமது (7550225815)

மாநகராட்சி தலைமை இடம்: அனு ஜார்ஜ் (7598960125).

பொதுமக்கள் மேற்கொண்ட அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொண்டு, பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.நன்றி:- திரு காவிரி மைந்தன், விமரிசனம் வலைப்பக்கம்

Thursday, November 02, 2017

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

வடகிழக்குப் பருவ மழைக்காலம் இப்போத் தான் ஆரம்பம்! நான்கைந்து நாட்களுக்குள் தான் ஆகிறது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரண்டு நாட்களோ என்னமோ மழை பெய்திருக்கு போல! ஏனெனில் இங்கே திருச்சி/ஶ்ரீரங்கத்தில் அவ்வளவு மழை இல்லை! அதுவும் ஶ்ரீரங்கத்தில் தூறினாலே பெரிய விஷயம்! இங்கே வந்த இந்த ஐந்து வருஷங்களில் நல்ல மழை ஒரு இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் பெய்து பார்க்கவே இல்லை! இந்த வருஷம் இங்கேயும் தண்ணீருக்குக் கஷ்டம் தான் என்று திருச்சி வாழ் மக்கள் சொன்னார்கள். இங்கே எங்களுக்குக் காவிரிக்கரையோரம் என்பதால் அதிகம் பிரச்னை இல்லை. போரில் வேலை செய்தாலோ, அல்லது தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தாலோ அன்று தண்ணீர் வராது. முன்கூட்டியே சொல்லி விட்டால் பிடிச்சு வைச்சுடலாம். பெரிய அளவில் பிரச்னை இல்லை. மழை இல்லாமல் இங்கே காய்கறிகள் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடக்கின்றன.


சென்னைக்குப் பல இடங்களில் இருந்தும் காய்கள் வரும்! அப்படியும் அங்கும் விலை ஏற்றம் தான். ஏனெனில் மக்கள் பெருக்கம். காய்களுக்கு உள்ள தேவை! சுற்று வட்டாரங்களில் மழை பொழிந்து காய்கறிகள் பயிரிடுவோர் தண்ணீர்க் கஷ்டம் இல்லாமல் இருந்தால் தான் காய்கள் விலை குறைய வாய்ப்பு! 2015 ஆம் வருஷத்தில் பெய்த மழையினாலும் வெள்ளத்தினாலும் சென்னை வாசிகள் மழை என்றாலே பயப்படுகிறார்கள். இது ஓர் உளவியல் பிரச்னையாகவே இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில்
 சென்னையில் தண்ணீர்ப் பிரச்னை தீராத பிரச்னை! அங்குள்ள ஏரிகள் எல்லாம் கூறுபோடப் பட்டு வீடுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் மழைநீர் வாய்க்காலை எல்லாம் ஆக்கிரமித்தாயிற்று. இப்போ மழைநீர் சாலைகளில் தான் தேங்கும்! அது போகும் வழியெல்லாம் மூடி எந்தக் காலமோ ஆகிறது. இப்படி இருக்கும்போது தண்ணீர் சாலைகளில் தேங்குகிறது என அரசைச்  சாடுவது எந்த விதத்தில் நியாயம்?

மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தால் மின் வாரியத்தைத்திட்டும் நாமே மின்சாரத்தின் மூலம் இறப்போரைக் குறித்தும் அதே மின் வாரியத்தைச் சாடுகிறோமே! தண்ணீர் சாலைகளில் அதிகம் தேங்கி இருந்து மின்சாரக் கம்பங்கள் அருகே, மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அருகே எல்லாம் நீர்த் தேக்கம் இருந்தால் மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டிக்கத் தான் செய்யும். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இரு சிறு பிஞ்சுக்குழந்தைகள் உயிர் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் என்று சிலரைத் தாற்காலிகமாக வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே முன்கூட்டியே மின்சாரத்தை எச்சரிக்கை உணர்வோடு துண்டித்தால் பொதுமக்களாகிய நாம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இருக்கும் கொஞ்ச, நஞ்ச ஏரிகளையும் தூர் வாரி மழைநீர் சேமிக்கும்படி பண்ண வேண்டும், அதை விடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்கிறது.  சாலைகளில் வெள்ளம் என்று சென்னையை மட்டுமே தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். அரசைக் குற்றமும் சொல்கிறார்கள். ஆனால் முகநூலில் இன்று ஒரு நண்பர் எழுதி இருந்ததில் அவர் கொளத்தூரில் இருந்து மயிலாப்பூர் வரை சென்று திரும்பியதில் சாலைகளில் நீர்த்தேக்கத்தைக் காண முடியவில்லை என்றும், ஆங்காங்கே குப்பைகளைத் துப்புரவுப் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி வந்தார்கள் எனவும் சொல்கிறார். இத்தனைக்கும் அவர் ஷேர் ஆட்டோவில் கொளத்தூரில் இருந்து அண்ணாநகர் திருமங்கலம் வரையும், அங்கிருந்து மயிலாப்பூர், மந்தவெளிக்குப் பேருந்திலும் தான் சென்றிருக்கிறார். அதுவும் பகல் நேரம்! பீக் அவர்ஸ் எனப்படும் போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரம். எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் குடும்பம், வீடு, பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லவா? அவற்றை எல்லாம் மறந்து தான் நம்போன்றவர்க்கு சேவை செய்ய வருகின்றனர்.


அதோடு இல்லாமல் 2015--2016 மழை, வெள்ளத்தின்போது கொடுத்த செய்திகளை இப்போது புதிய செய்தி போல் வாட்ஸப், முகநூல் மூலம் பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அதை நம்பி யாருக்கும் அனுப்பாதீர்கள்! தேவை எனில் அதில் உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொலைபேசி உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் செய்தியை மற்றவர்க்கு அனுப்புங்கள்.

ஆகவே தொடர்ந்து நேர்மையான முறையில் செய்திகளைப் பொதிகை போல் தரும் செய்தி சானல்களை மட்டுமே பாருங்கள்! சென்னையில் மழை  நின்றால் போதும் என நினைக்காதீர்கள். மழை வேண்டும். அதிலும் சென்னை வாழ் மக்களுக்கு மழை கட்டாயம் தேவை. இல்லை எனில் இன்னும் இரண்டு மாதம் சென்றால் மார்ச்--ஏப்ரலில் இருந்தே குடிநீருக்குத் தட்டுப்பாடு வந்து விடும். மழை நன்றாகப் பொழிந்து புழல், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் மட்டுமில்லாமல் இங்கே தமிழ்நாட்டின் உள் பாகங்களிலும் மழை நன்கு பொழிந்தால் தான் சென்னை வாசிகளுக்கு வீராணம் ஏரி நிரம்பிக் குடி தண்ணீர்த் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். இங்குள்ள விவசாயிகளுக்கு வயல்களில் பயிரிட ஏதுவாக இருக்கும். காய்கறிகள் நன்கு விளையும். காய்கறிகள் விளைச்சல் அதிகமானால் தான் உங்களுக்கு வாங்கும் விலையில் கட்டுப்படி ஆகும்படி காய்கள் விற்க முடியும்!

உணவு தானியங்கள் என எல்லாவற்றிற்கும் மழை நீர் தேவை! மழையை யாரும் வேண்டாமென்று சொல்லாதீர்கள்! அவரவர் வீட்டுச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் மழை நீர் வடியும்படியும் வைத்துக் கொண்டாலே போதும். மழை நீர் தேங்காமல் ஓடி விடும்! அதை விடுத்துத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் கொடுத்து மழையை விரட்டி அடிக்காதீங்க! மழையையே நம்பி இருக்கும் மாவட்டங்கள் பல இருக்கின்றன தமிழ்நாட்டில்! அவங்களுக்காகவாவது மழை நன்றாகப் பொழிய வேண்டும்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!