எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 26, 2017

சித்தப்பாவுக்கு ஜெயமோகன் அளித்த பரிசு! :(

அசோகமித்திரன் க்கான பட முடிவு


சித்தப்பாவின் எதிர்பாரா மரணம் எங்கள் குடும்பத்திற்கு அளித்த அதிர்ச்சியைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது திருவாளர் ஜெயமோகன் அவர்களின் எஸ்.பி.எஸ். என்னும் வானொலிக்கு அவர் அளித்த பேட்டி! அதைப் பற்றி முழு விபரமும் காலையில் தெரியவரவில்லை. ஆனால் சித்தப்பாவின் கடைசி மகனும் ஹிந்துவில் பணி புரிபவருமான என் தம்பி திரு ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவு போட்டிருந்தார். என்ன விஷயம் என்று தெரியாத குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். இப்போது சற்று முன்னர் முகநூலில் நண்பர் ஒருவர் என்னை "செல்வம் நாயகம்" என்பவரின் பதிவில் என்னைப் படித்துக் கருத்துச் சொல்ல அழைத்திருந்தார். படித்ததும் அதிர்ச்சியாகிவிட்டது.

சாவி அவர்கள் சாவியைத் தொடங்கியபோதோ அல்லது அதற்குப் பிறகோ ஒருபோதும் சித்தப்பா அங்கே வேலை செய்ததே இல்லை. அதுவும் எல்லோருக்கும் தேநீர் வாங்கி வரும் பணியாளராக வேலை செய்ததே இல்லை! இது அப்பட்டமான பொய்! ஏற்கெனவே ஜெயமோகன் சித்தப்பாவைப் பற்றிய ஒரு பதிவில் உண்மையில்லாத சில கருத்துகள் இருந்தன. அவற்றிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவிட்டேன். முதல் காரணம் ஜெயமோகனின் பதிவில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. இரண்டாவது காரணம் அப்போது சித்தப்பா உயிருடன் இருந்தார். 

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜெயமோகன் எம்.எஸ். அம்மாவைக்  குறித்து அவதூறான பதிவு போட்டிருந்தபோதே அங்கே போய் என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தேன். அதே போல் இப்போதும் திரு ஜெயமோகனின் இந்தக் கருத்துக்கு முக்கியமாய்ச் சித்தப்பா "சாவி" அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளராக வேலை செய்தார் என்று சொல்லி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்குப் பத்து வயதிலிருந்து அவர் சித்தப்பாவாக இருக்கிறார். ஒருபோதும் எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையிலும் அவரால் இப்படி ஓர் பணியைச் செய்திருக்க முடியாது. அப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலையும் அவருக்கு இல்லை. அதற்காகக் கடைநிலைப் பணியாளர்களின் வேலைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் பணி போற்றத் தக்கதே!

சென்னை தியாகராய நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகே தாமோதர ரெட்டித் தெருவில் புராதன வீட்டில் குடியிருந்து வந்த சித்தப்பாவுக்கு வேலை இல்லை என்பது ஒரு சாதாரணக் காரணம் தான்! ஜெமினி அலுவலக வேலையை அவராகத் தான் விட்டார். யாரும் வேலையை விட்டுப் போகச் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 1967 ஆம் ஆண்டிலிருந்து என் கல்யாணம் வரை சித்தப்பாவின் வீட்டில் மாறி மாறி இருந்திருக்கிறேன். என் கல்யாணத்தை ஏற்பாடு செய்ததே அவரும் என் சித்தியும் தான். எங்கள் குடும்பத்து முக்கியமான விஷயங்கள் அவரிடமும் சித்தியிடமும் சொல்லிக் கலந்து ஆலோசித்தே எல்லோரும் முடிவெடுப்போம். அறுபதுகளின் மத்தியில் "கணையாழி" பத்திரிகை அச்சகத்திலிருந்து வந்ததும் சந்தாதாரர்கள், முக்கியமானவர்கள் என அந்தப் பத்திரிகையை அனுப்பி வரும் வேலையை நான் செய்திருக்கிறேன். அவருக்கு அந்த வேலையே நாள் முழுவதும் சரியாக இருக்கும்.  அதோடு பார்க்க வருபவர்கள் வேறு அப்போதே நிறைய வருவார்கள். 

நான் மட்டுமில்லாமல் என் பெரியம்மா, சித்தி குழந்தைகள், மாமா குழந்தைகள் என்று மட்டுமில்லாமல் சித்தப்பாவின் சகோதர, சகோதரிகளின் குழந்தைகள் என எல்லோருமே அந்தத் தியாகராய நகர் வீட்டில் வளர்ந்தவர்களே! எல்லோரையும் ஆதரித்த ஓர் ஆலமரமாக அந்த வீடும் சித்தப்பா, சித்தியும் இருந்தார்கள்! இப்படிப் பட்ட ஒரு மனிதரைக் கேவலம் பிழைப்புக்காகத் தேநீர் வாங்கிக் கொடுத்து வயிற்றைக் கழுவினார் என்று சொல்லி இருப்பது ஜெயமோகனுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் அவரின் கற்பனைகளை அவர் தன் கதைகளோடு நிறுத்திக்கொள்வதே நல்லது எனத் தோன்றுகிறது. "வெண்முரசு" கற்பனைகளோடு நிறுத்திக்கொள்வது நல்லது! இப்படி எல்லாம் தேவையில்லாக் கற்பனைகள் வேண்டாம். 


http://jeyamohanav.blogspot.sg/

 முன்னர் எம்.எஸ். அம்மாவைப் பற்றிக் கூறி இருந்தது போல் இப்போது சித்தப்பாவைப் பற்றியும் வக்கிரமாகக் கூறியுள்ளார் ஜெயமோகன். இதில் அவருக்கு ஏதேனும் சந்தோஷம் கிடைக்குமானால் கிடைக்கட்டும். ஆனால் இனிமேல் "நான் அசோகமித்திரனின் ரசிகன்" என்று சொல்லிக் கொள்வதை நிறுத்திக்கொள்ளட்டும். சித்தப்பாவுக்கு   ஞானபீட விருது கொடுக்கவில்லை என்பதால் ஜெயமோகன் இப்படி ஒரு விருதைக் கொடுத்து விட்டாரோ? எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் எங்கள் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். :( அவரைக் குறித்து அறியாதவர்கள் இது தான் உண்மை என நினைக்க நேரலாம். :( இது அப்பட்டமான பொய்!

இன்னொரு நண்பரின் முகநூல் பதிவில் எழுத்தாளர் இந்துமதியின் காரோட்டியாக இருந்தார் என்றும் சொன்னதாக எழுதப் பட்டு இருக்கிறது. சித்தப்பாவுக்குக் கார் ஓட்டவே தெரியாது! ஆகவே அதுவும் ஒரு பொய்யே!

Friday, March 24, 2017

மனதைப் பாதித்த சித்தப்பாவின் மரணம்!
சித்தப்பா காலம் ஆன செய்தியை உடனடியாகத் தெரிந்து கொள்ளவில்லை! :( அப்போது இங்கே காலை ஒன்பதரை மணி இருக்கும்! ஆகவே வழக்கமான குளியல், சமையல் என்று இருந்துவிட்டேன். கணினியைத் திறக்கவே இல்லை. :( பின்னர் இங்கேயே இருக்கும் எங்க பொண்ணு தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தாள். அதன் பின்னர் தான் சென்னைக்குத் தம்பிக்குத் தொலைபேசி எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டோம். சித்திக்கும் வயது ஆகி விட்டது. சமீபத்தில் தான் மூத்த தம்பியின் இன்னொரு பெண்ணின் திருமணம் நடந்தது. அதற்காகக் காத்திருந்தாற்போல் சித்தப்பா திருமணம் முடிந்ததும் இறந்து விட்டார்.  அநாயாசமான சாவு! இரவு உணவு முடித்துக் கொண்டு படுத்திருக்கிறார். உயிர் பிரிந்திருக்கிறது.

எனக்கு விஷயம் தெரிந்து சித்தியுடன் பேசுவதற்குள்ளாக முகநூல் முழுவதும் செய்தி வந்து விட்டது. என் வாழ்க்கையை முக்கியமாய்த் திருமண வாழ்க்கையை நிர்மாணித்தது சித்தப்பாவும், சித்தியும் தான். இன்று இம்மாதிரியான ஒரு வாழ்க்கையை நான் வாழக் காரணமானவர்கள் அவர்கள் இருவருமே! கடைசி வரை சித்தப்பா எங்களிடம் மாறாத அன்பு கொண்டிருந்தார். நான் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு பிதற்றுவதை எல்லாம் படித்து ரசித்திருக்கிறார்.  நாங்கள் சித்தப்பாவைக் கடைசியாகப் பார்த்தது அவரின் இரண்டாவது பேத்தியின் திருமண நிச்சயதார்த்தத்தில் தான். அதன் பின்னர் அந்தப் பேத்தியின் திருமணம் போன வாரம் நடந்த போது உறவுகள் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் மூலம் பார்த்தோம். உண்மையில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓர் அருமையான கதாசிரியர் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.

அவருக்கு வரும் பல புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கிறார். கடைசியில் பார்த்தப்போக் கூடப் புத்தகங்கள் கேட்கணும்னு நினைச்சுட்டுக் கேட்காமல் விட்டு விட்டேன்.  இலக்கிய உலகுக்கு மட்டுமில்லாமல் எங்கள் குடும்பத்திலும் ஓர் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. ஈடு செய்ய முடியாத இழப்பு. திரு பாரதி மணி சொல்லி இருக்கிறாற்போல் அவருக்குச் சாவு என்பதே இல்லை தான். அவர் புத்தகங்கள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.


நேற்று இருந்த மனக்குழப்பத்தில் சித்தப்பாவின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவைப் போட்டு விட்டேன். அதிலும் பாதி தான் எழுதி இருந்தேன். ஏதோ ஒரு மனநிலையில் வெளியீடும் ஆகி விட்டது. "அசோகமித்திரன்" என்ற புனைப்பெயரில் எழுதி வந்த என் சித்தப்பா திரு தியாகராஜன் அவர்கள் நேற்று மாலை இந்திய நேரப்படி இரவு எட்டுமணிக்கு இறைவனடியைச் சேர்ந்தார்.  இங்கே அமெரிக்கா வந்த இந்த மூன்று மாதத்தில் எங்களுக்கு நேர்ந்திருக்கும் இரண்டாவது இழப்பு என்பதாலும் இந்தச் சமயம் இங்கே இருக்கும்படி நேர்ந்திருக்கிறதே என்னும் வருத்தத்தாலும் என்னால் சரியாக யோசிக்கக் கூட முடியவில்லை! :( அதோடு பெரும்பாலான நண்பர்கள், என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஓர் ஆறுதலான விஷயம்!

Wednesday, March 22, 2017

இன்னிக்கும் திரை விமரிசனம் தாங்க! :)

நேத்திக்கும் ஒரு சின்னப்படம் பார்த்தேன். ஹிந்திப்படம்! 31 அக்டோபர் என்னும் படம்! நல்ல படம்! ஆனால் இது ஓர் உண்மைச் சம்பவத்தை வைத்து எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மனதைத் தொட்ட படம். நடிகர்கள் எல்லோருமே எனக்குத் தெரியாதவங்க! ஆகவே அவங்களைப் பற்றிச் சொல்ல ஒண்ணுமில்லை என்றாலும் எல்லோருடைய நடிப்பும் இயல்பாக இருந்தது. காட்சி அமைப்புகளும் அருமை!  கடைசி வரை படம் தொய்வில்லாமல் சென்றது.  மனதைத் தொட்ட படம்!

31st october க்கான பட முடிவு

இன்னிக்கு ஒரு படம் பார்த்தேன். ஹிஹிஹி, தமிழ்ப்படம்! நல்லவேளையா படம் பப்படம் இல்லை. ஏற்கெனவே பாதி பார்த்திருந்தேன்.  என்றாலும் இன்று மறுபடி முதலில் இருந்து போட்டுப் பார்த்தேன். இந்தப் படமும் கடைசி வரை விறுவிறுப்பு! இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் என்ற புதிய இளைஞர் மிக அருமையாகக் கோர்வையாகப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். இதில் நடித்திருப்பவர்களில் கலையரசன் தான் ஹீரோ என்றாலும் வில்லியாக வரும் ஷிவ்தா நாயர் என்பவர் நடிப்பில் முந்துகிறார். சாதனாவாக வரும் ஜனனி ஐயருக்குச் சும்ம்ம்ம்ம்ம்மா வந்துட்டுப் போகும் காட்சிகள் தான்.

அதே கண்கள் விமர்சனம் க்கான பட முடிவு
நல்லவேளையாகக் காதல் காட்சிகள், டூயட், மரத்தைச் சுற்றி ஓடுவது, வெள்ளை நிறத் தேவதைகள் புடைசூழ ஆடுவது என்றெல்லாம் படத்தைக் கொண்டு போகாமல் காட்சிகளை நிகழ்வுகளுக்கு ஏற்ப நகர்த்திக் கொண்டு சென்று இருப்பது ஒன்றே இயக்குநரின் திறமைக்கு சாட்சி. கலையரசன் கண் தெரியாதவராக நடித்திருக்கும்போதும் சரி, பின்னால் கண் தெரிபவராக வரும்போதும் சரி இயல்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய கண் தெரியாத போது இருந்த திறமையைப் பயன்படுத்தி வில்லியைப் பிடிக்கும் காட்சி மிகப் பொருத்தமாக அமைந்து விட்டது. கான்ஸ்டபிளாக வருபவர் மிக நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது வெறும் வார்த்தை. பின் பாதி முழுக்க அவரே ஆக்கிரமித்திருக்கிறார்.
அதே கண்கள் விமர்சனம் க்கான பட முடிவு
இத்தனை புகழும் அந்தப் படம் என்னவென்று கேட்கிறீர்களா? இதுக்குள்ளே தெரிஞ்சிருக்குமே! "அதே கண்கள்" என்ற படம் தான் அது! இது முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி ஏவிஎம் தயாரிப்பில் வந்த படத்தின் பெயராக இருந்தாலும் கதை அம்சம் முற்றிலும் வேறு.  இடைவேளை வரை கதையை யூகிக்க முடியாமல் கொண்டு சென்றிருக்கிறார். என்றாலும் அடுத்து கன்யாகுமரியில் மனோஜ் அறிமுகம் ஆகும்போது கதை ஓரளவுக்குப் புரிந்து விடுகிறது. என்றாலும் அடுத்து என்ன என்று கடைசிவரை திகிலாகவே கொண்டு சென்றிருக்கிறார் கதாசிரியர். இசை என்ற பெயரில் சப்தம் இல்லாமல் மென்மையான இசை!  பளிச்சென்ற ஒளிப்பதிவு, நன்றாகத் தொய்வே இல்லாமல் தொகுத்திருக்கும் விதம் என எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதுவே படத்தின் வெற்றிக்குச் சான்று!

ஒரு முறை பார்க்கலாம். 

Sunday, March 19, 2017

jolly LLB --2

ஜாலி எல்.எல்.பி என்னும் படம் இன்னிக்குப் பார்க்க நேர்ந்தது. சாப்பாடெல்லாம் ஆகி மதியம் ஒன்றரை மணிக்குப் போட்டதால் எனக்கும் வசதியாக இருந்தது. ஏற்கெனவே ஜாலி எல்.எல்.பி. பகுதி 1 வந்திருக்காம். அதெல்லாம் தெரியாது. ஹிந்திப் படங்களில் பகுதி 1, பகுதி 2 என்று போடும் சீசன் போல! கஹானி 1, கஹானி 2 என இரண்டு வந்திருக்கு. இரண்டிலும் வித்யா பாலன் தான் நடிச்சிருக்காங்க. இரண்டுமே சஸ்பென்ஸ் த்ரில்லர். அதே போல் இதுவும் இருக்குமோனு நினைச்சேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம் யதார்த்தமாகவும் எடுத்திருக்காங்க! ஆனாலும் விறுவிருப்புக்குக் குறைச்சல் இல்லை.

jolly llb 2 க்கான பட முடிவு

ஜாலி எல்.எல்.பி. ஒன்றில் நடிச்சவர் இதிலே நடிக்கலை. ஏன்னு தெரியலை!இதிலே அக்ஷய் குமார் தான் ஜாலி எல்.எல்.பியாக நடிச்சிருக்கார். அக்ஷய்குமார் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. அவ்வளவாப் பிடிக்காது. ஆனால் இதில் அவர் நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதையும் நன்றாகவே இருந்தது. சமீபத்தில் தான் வெளி வந்திருக்கிறது இந்தப் படம். சுபாஷ் கபூர் என்பவரால் எடுக்கப்பட்ட படம். அக்ஷய்குமாருக்கு ஜோடியாக ஹ்யூமா குரேஷி என்னும் நடிகை அவர் மனைவியாக வருகிறார். வருகிறார்னா வருகிறார் அவ்வளவு தான்! :) அதிகம் வேலை இல்லை அவருக்கு!

ஜாலி என்றழைக்கப்படும் ஜகதீஸ்வர் மிஸ்ரா என்னும் வக்கீல் லக்னோவில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். கான்பூரைச் சேர்ந்தவர், வக்கீல் தொழிலுக்கு நல்ல பிரபலமான வக்கீலான ரிஸ்வி சாஹேப் என்பவரிடம் பயிற்சி வக்கீலாகப் பணிபுரிகிறார். ஜாலிக்குத் தானும் சொந்தமாகத் தானும் ஓர் அலுவலகம் திறக்கவேண்டும் அதுவும் அந்த ஹைகோர்ட் வளாகத்திலேயே என்பது வாழ்நாள் கனவு! அதற்காகவும் வேலை செய்து வருகிறார். அவர் வக்கீலான ரிஸ்வி சாஹேப் மிகப் பெரிய வக்கீல் என்பதால் அதிகம் பணம் கொடுக்கும் பணக்காரர்களின் வழக்குகளை மட்டுமே பார்ப்பார். மற்றச் சின்னச் சின்ன வழக்குகளைத் தன்னிடம் பயிற்சி செய்பவரிடம் கொடுத்து விடுகிறார்.

ரிஸ்வி சாஹேபின் அலுவலக வாசலில் தினமும்  கர்ப்பிணியான ஒரு இளம்பெண் வந்து காத்திருக்கிறாள். அவள் ரிஸ்வி சாஹேப் தன்னுடைய வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறாள். அதற்காக ஜாலியை சிநேகிதம் பண்ணிக் கொண்டு அவர் சிபாரிசின் பேரில் ரிஸ்வி சாஹேபைச் சந்திக்க வேண்டும் என முயல்கிறாள். ஜாலிக்கு ஹைகோர்ட் வளாகத்தில் ஓர் அறையை அவரின் நண்பரான பீர்பல் என்னும் வக்கீல் ஏற்பாடு செய்து கொடுக்கிறார். ஆனால் அதற்கு அடுத்த நாளைக்குள்ளாக இரண்டு லக்ஷம் கொடுக்க வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என யோசிக்கும் ஜாலியிடம் அந்தப் பெண் வந்து  உன் பெரிய வக்கீல் என் கேஸை எடுத்துக் கொள்ளச் சம்மதித்துவிட்டாரா என்று கேட்க, இதான் சமயம் என நினைக்கும் ஜாலி அவர் சம்மதித்து விட்டார் எனக் கூறி விடுகிறான். எவ்வளவு அவருக்குச் சம்பளம் என அந்தப் பெண் கேட்க 2 லக்ஷம் என்று ஜாலி சொல்லவும் அந்தப் பெண் மறுநாளைக்குள்ளேயே 2 லக்ஷம் தயார் செய்து கொடுத்து விடுகிறாள்.

அந்தப் பணத்தை வைத்துத் தன் தந்தை, மனைவி, குழந்தையுடன் ஜாலி தன்னுடைய அலுவலகத் திறப்பு விழாவை ஆடல், பாடல், களியாட்டங்களுடன் கொண்டாடுகிறான். அப்போது அங்கே வந்த அந்தப் பெண் ஜாலி தன்னை ஏமாற்றியதை எல்லோர் முன்னிலையிலும் வெளியிடுகிறாள். பின்னர் தன் வீட்டுக்குச் சென்று வயதான தையற்காரர் ஆன தன் தந்தை முன்னிலையிலேயே மாடியிலிருந்து குதித்து வயிற்றில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறாள். பழி ஜாலி மீது விழுகிறது. அவன் வக்கீல் அவனை இந்தக் குற்றத்துக்காக அறைந்து விட்டு 30 வருஷமாக அவரிடம் வேலை செய்யும் ஜாலியின் தந்தையை வேலையை விட்டே நீக்கி விடுகிறார்.

ஜாலிக்குத் தன் தப்புப் புரியத் தன் நண்பன் பீர்பலுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வழக்கு விபரங்களைச் சேகரிக்கிறான். இக்பால் காசிம் என்னும் அந்த இளைஞனுக்கு இந்தத் தையற்காரரின் பெண்ணான ஹினா சித்திக்குடன் திருமணம் நிச்சயமாகி இருந்த சமயத்தில் போலீஸால் தவறாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறான். திருமணத்திற்காக பரோலில் வெளி வரும் காசிம் திருமணம் முடிந்து முதலிரவும் முடிந்து மறுநாள் சிறைக்குச் செல்லும் சமயம் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. ஏற்கெனவே தன் கணவன் நிரபராதி,அப்பாவி என்று புரிந்து கொண்டிருந்த ஹினா தன் கணவனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்கிறாள்.

மேலும் மேலும் தோண்டத் தோண்ட ஜாலிக்கு இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதும், தீவிரவாதி ஒருவனைப் பணம் வாங்கிக் கொண்டு போலீஸ் தப்ப விட்டதையும் அதை எதிர்த்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் பணி ஓய்வு பெற 20 நாட்களே இருந்த நிலையில் அவரையும் கொன்றதையும் கண்டு பிடிக்கிறான். பின்னர் என்ன செய்கிறான் எப்படி இந்த வழக்கு முடிகிறது என்பதை வெள்ளித் திரையிலோ, சின்னத் திரையிலோ, யூட்யூபிலோ காண்க! கடைசி வரை படம் விறுவிறுப்பு.

நீதிபதியாக நடித்திருக்கும் சௌரப் சுக்லா மிக அருமையாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் சூரியவீர் சிங்காக நடிக்கும் குமுத் மிஸ்ராவின் வக்கீலான அன்னு கபூர் நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியை அவதூறாகப் பேசிவிட்டு அங்கேயே தர்ணாவில் ஈடுபட நீதிபதியும் தர்ணாவில் ஈடுபடுகிறார். அவர் கூடவே ஹினாவின் தந்தை வயதான தையற்காரர், ஜாலியின் வயதான தந்தை ஆகியோரும் தர்ணாவில் உட்காருகின்றனர். இரவு பனிரண்டு மணி வரை நீதிபதியை எதிர்த்து வக்கீல் பிரமோத் மாதுராக நடிக்கும் அன்னு கபூர் உட்கார்ந்திருக்க, பனிரண்டு மணிக்குப் பின்னர் நீதிமன்றம் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே தப்பு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியவீர்சிங்கின் பக்கம் வாதாடிய பிரமோத் மாதுர் உண்மை வெளிப்படாமல் தடுக்கச் செய்யும் வேலைகள், வாதாடுதல் அனைத்தும் நன்றாகப் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன.

jolly llb 2 க்கான பட முடிவு

நீதிமன்றம் செயற்கையாக இல்லாமல் உண்மையான நீதிமன்றம் போலவே அமைத்திருக்கின்றனர். கடைசிக்காட்சியில் உண்மைக்குற்றவாளியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதில் செயற்கைத் தனமே கலக்காமல் இயல்பாகச் செய்திருக்கின்றனர். நீதிபதி சுந்தர்லால் திரிபாதியாக வரும் சௌரப் சுக்லாவின் கோமாளித் தனங்கள் தான்கொஞ்சம் சகிக்க முடியாமல் பானகத் துரும்பாக இருந்தது. அதே போல் தனி சேம்பர் திறந்ததை ஜாலி கொண்டாடிய காட்சியும் கொஞ்சம் அதிகப்படி தான்! என்றாலும் கதையில் கொஞ்சமானும் கவர்ச்சி இருக்கணும்னு செய்திருக்காங்க. அதோடு புஷ்பாவாக (ஜாலியின் மனைவி) நடிக்கும் ஹ்யூமா குரேஷிக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கணுமே!

நீதிபதி பிடிவாதமாக சாட்சியிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திடமான முடிவு எடுத்தது ஒரு நீதிபதி உண்மை வெளிவர எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டியது. குற்றவாளியின் வக்கீலான பிரமோத் மாதுர் எப்படியெல்லாம் தகிடுதத்தங்கள் செய்து தன் கட்சி ஜெயிக்கப் பாடு படுகிறார் என்பதைக் காட்டியதோடு அல்லாமல் கடைசியில் உண்மை வெளிப்படும் நேரம் அதை வெளிவராமல் தடுக்க மாதுர் நீதிபதியிடம் வாதாடும் கட்டத்தில் வயதான அவர் தந்தையால் தடுக்கப்படும் காட்சியும் அருமை!

jolly llb 2 க்கான பட முடிவு

இந்தப் படத்தை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அதோடு பாடா ஷூ கம்பெனியும் அவங்க ஷூவை இந்தப் படத்தில் காட்டுவதாகச் சொல்லி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். பாகிஸ்தானில் இந்தப் படத்தைக் காட்டக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2017  ஃபெப்ரவரி 10 ஆம் தேதி வெளிவந்த இந்தப்படத்தில் எவ்விதமான நீக்கங்களும் செய்யப்படவில்லை என்று விக்கி கூறுகிறது. படம் நல்ல வசூல் அடைந்ததாகவும், இதன் மூன்றாம் பாகம் விரைவில் வெளிவரும் என்றும் தெரிய வருகிறது. 

Wednesday, March 15, 2017

அலுப்புத் தட்டும் அமெரிக்க வாழ்க்கை! :)

இங்கே அம்பேரிக்காவின்  கிழக்கு மாநிலங்கள், மத்திய மாநிலங்களில் நேரம் மாற்றி அமைச்சிருக்காங்க. மலைப் பிரதேச மாநிலங்களின் நேரம் மாற்றப் படாது என நண்பர் அரிசோனா மஹாதேவன் அவர்கள் சொன்னார். எங்களுக்கெல்லாம் ஒரு மணி நேரம் முன்னால் தள்ளி அமைச்சிருக்காங்க. சனிக்கிழமை  இரவு பனிரண்டு மணிக்குப் பின்னர் மாற்றி வைக்கிறாங்க னு நினைக்கிறேன்.  நேற்றிலிருந்து ஒரு மணி நேரம் குறைந்து விட்டது. சனிக்கிழமை வரை காலை நாலு மணி என்பது நேற்றிலிருந்து காலை ஐந்து மணி ஆகி விட்டது! இப்போ சாயந்திரம் ஏழேகால் மணி! ஆனால் ஐந்து மணி மாதிரி வெளிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சம்! சூரியன் இன்னமும் மறையலை. சூரியனார் யோசிக்கிறார்.

இங்கே பாப்பாவோட விளையாடுவது தவிர வேறே பொழுது போக்கு வைச்சுக்கலை. எங்கேயும் போகவும் இல்லை! கொஞ்சம் குழப்பமான மனோநிலை!  சில எதிர்பாரா சம்பவங்கள்! நிகழ்வுகள்! அதனால் ஏற்பட்டிருக்கும் குழப்பம். மெல்ல மெல்லச் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் இந்தியா திரும்பணும்னு தான் ஆசை! ஆனால் அது முடியவில்லை! கோயில்கள் எதற்கும் போகலை!  போக முடியலை! நண்பர் ஒருவர் வந்திருக்கார். அவரைப் போய்ப் பார்க்கக் கூட முடியலை. :( இன்னைக்குக் காரடையான் நோன்பு இங்கே செய்தாச்சு! இந்திய நேரப்படி மாலை இரண்டரை மணிக்குள் என்றால் இங்கே காலை நான்கு மணிக்குச் செய்யணும்னே நினைக்கிறேன். ஆனால் இங்கேயும் செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டரைக்குத் தான் செய்தேன். அப்போ  இந்திய நேரப்படி அங்கே நடு இரவு தாண்டி ஒரு மணி இருக்கும். எல்லோரும் தூங்கிட்டு இருந்திருப்பீங்க!

இந்த நேரமாற்றம் இந்தியாவில் இல்லை. பார்க்கப் போனால் வடகிழக்கு மாநிலங்களிலும் வடமேற்கு மாநிலங்களிலும் இந்த நேர மாற்றத்தைக் கடைப்பிடிக்கலாமோனு தோணும் . ஒரிசா, கல்கத்தா போயிருக்கிறச்சே பார்த்தோம்.  சாயந்திரம் நான்கு மணிக்கே மாலை மயங்கி இருட்டாயிடும்! :) மாலை ஆறு மணிக்கு இரவு எட்டு, ஒன்பது மணி மாதிரி இருக்கும். காலம்பரயும் சீக்கிரம் விடியும்!இங்கே அம்பேரிக்காவில்  இந்த ராகு காலம், எமகண்டம் எல்லாம் இந்திய நேரப்படித் தான் கடைப்பிடிக்கணும்னு பையர் சொல்லுவார். அம்பேரிக்காவில் அதெல்லாம் பார்க்க வேண்டாம்னு அவரோட கருத்து. இந்திய நேரப்படித் தான் அதெல்லாம் பார்க்கணும்னு சொல்வார். ஆகவே இதெல்லாம் இந்தியாவோட விட்டுடுங்க என்பார். ஆனால் நம்ம ரங்க்ஸ் இதிலெல்லாம் ரொம்பவே நோண்டிட்டு இருப்பார். குளிக்கப் போறச்சே கூட ராகுகாலம், யமகண்டம், மட்டும் பார்க்காமல் இந்தியப் பிரதமர் மோதியால் ஒண்ணும் பிரச்னை இல்லையே னு எல்லாமும் பார்த்துட்டுத் தான் போவார்.

என்னவோ அமெரிக்க வாழ்க்கை ரொம்பவுமே இயந்திரத்தனமாக இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம நாட்டில் மாதிரி ஒரு ருசிகரமான வாழ்க்கை இங்கே இல்லை. எல்லா ஊர்களும் ஒரே மாதிரியாக வேறே காட்சி தருகின்றன. வீடுகளும் அப்படியே! நம்ம ஊரில் ஒரு வீடு உயரம்னா பக்கத்திலே குட்டையான ஓர் வீடோ, அகலமான வீடோ, அடுக்குமாடிக் கட்டிடமோ பார்க்கலாம். இங்கே அப்படி இல்லை. கவனித்துக் கவனித்துச் செதுக்கிய புல்வெளிகளோடு கூடிய வீடுகள். ஒரே மாதிரி வடிவமைப்புகள். உள்ளே வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். மற்றபடி ஒரே மாதிரிக் கட்டமைப்புத் தான்!  சுவரெல்லாம் கையால் தட்டினால் உதிர்ந்து விடும்போல் இருக்கும்.

  ஒரு தெருவில் ஒரு வீடு மாதிரியே அநேகமாய் எல்லா வீடுகளும் இருக்கும். ஒரு சில வீடுகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால் என்ன ஒன்றுன்னா ஒவ்வொரு குடியிருப்புக்களிலும் ஓர் ஏரி அமைச்சுடறாங்க. அதில் வாத்துக்கள், நீர் வாழ்ப்பறவைகள் வந்து விடுகின்றன. அந்த ஏரிக்கரையைச் சுற்றி வீடுகள் அமைக்கிறாங்க. சில வீடுகள் வாசலில் ஏரியைப் பார்த்தாப்போல் இருந்தால் ஒரு சில வீடுகள் பின் பக்கம் ஏரியைப் பார்த்து அமையும். அங்கே உட்கார்ந்து ஏரியை ரசிக்கிறாப்போல் நாற்காலிகள், பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருக்கும். நாங்க தினமும் நடைப்பயிற்சிக்குப் போகும்போதெல்லாம் அந்த ஏரிக்கரையில் சுற்றிவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்துட்டு வரோம்.

பண்டிகைகள் என்றெல்லாம் இங்கே இல்லாததால் காதலர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், கணவர் தினம், மனைவியர் தினம் என்று கொண்டாடுகிறார்கள். நம்ம பண்டிகைகள் எல்லாமும் சனி, ஞாயிறுகளில் தான். நேற்றுத் திங்கட்கிழமை ஹோலி கொண்டாட்டம் இங்குள்ள இந்தியர்களால் முதல் நாள் ஞாயிறன்றே கொண்டாடப்பட்டு விட்டது.  இதற்கு முன்னர் வந்தப்போ எல்லாம் அங்கே இங்கே போனதாலோ என்னமோ நேரம் போவது அவ்வளவு சிரமமாக இல்லை. அதோடு மீனாக்ஷி கோயில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் நிறைய எடுத்து வருவோம். இம்முறை எதுவும் இல்லை! :) கோயிலுக்கே போக முடியாத சூழ்நிலை!

Thursday, March 09, 2017

சர்வதேச மகளிர் தினமாமே!

சர்வதேச மகளிர் தினமாம் இன்று. மகளிர் தங்களைத் தானே சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலான மகளிர் பொறுப்புக்களைத் துறக்கவே விரும்புகின்றனர். இத்தனைக்கும் இப்போதெல்லாம் திருமணம் ஆனதும் சமையல், குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றிலும் ஆணின் பங்கு கட்டாயமாகி இருக்கிறது. பல ஆண்களும் வீட்டு வேலைகளிலும் மற்றவற்றிலும் தங்கள் மனைவிமார்களுக்கு உதவியாகவே இருந்து வருகின்றனர். அப்படியும் பெருகி வரும் விவாகரத்துக்கள்! எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவுடன் வாழ்க்கை நடத்தும் தம்பதியர்! அவரவரும் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பப் பார்த்து தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு அமைதியும் ஆனந்தமும் நிறைந்த இல்வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்.

ஒரு பெண் எத்தகைய ஆண் தனக்குத் தேவை என நினைக்கிறாளோ அதே போன்ற எதிர்பார்ப்பு ஆணிடமும் இருக்கும். ஆகவே ஒருவருக்கொருவர் தவறுகளைக் களைந்து அல்லது தவறுகளைப் பொருட்படுத்தாமல் தவறுகளுடனேயே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும். இன்னும் சில பெண்களுக்குப் படித்து விட்டால் தன் குடும்பத்துக்காகச் சமைப்பதே ஓர் அவமானமாகத் தோன்றுகிறது. இவ்வளவு படிச்சுட்டுச் சமைப்பதா என்னும் எண்ணம் இந்தக் காலப் பெண்களிடம் இருக்கிறது.

இப்போது பெண்கள் முன்னேற்றம் என்பது பல வகைகளிலும் சிறப்பாகவே இருக்கிறது. அதே சமயம் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் முன்னை விட அதிகமாக வெளியே வருகிறது. இதற்குத் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் காரணம்! இத்தனைக்கும் ஆணும், பெண்ணும் சரி சமமாகப் பழக ஆரம்பித்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது.  ஆனாலும் பெண்ணை ஓர் போகப் பொருளாகக் கருதும் மனப்பான்மை உள்ள ஆண்கள் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாகப் பல காரணங்களைச் சொன்னாலும் "தான் ஆண்!" என்னும் ஆணாதிக்க மனப்பான்மையே முக்கியக் காரணம்.

இப்போது ஒரு சில கேள்விகளைக் கேட்கிறேன். விருப்பம் இருந்தால் பதில் சொல்லலாம்.  ஆணும், பெண்ணும் நண்பர்களாகப் பழகும் இந்தக் கால கட்டத்தில் ஆண், பெண் பாலின வேறுபாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் பழகி வரும் இந்தக் காலத்தில் ஏன் சில பெண்கள் மட்டும் துன்புறுத்தப்படுகின்றனர்? ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்களையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை! அதிலும் ஐடி கலாசாரத்தில் தான் இது அதிகம் காணப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?  ஆண்களை எது தூண்டி விட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கின்றனர்? பெண்களூரில் சாதாரணமாகத் தெருவில் செல்லும் சக ஊழியரிடமே தவறாக நடந்து கொள்ளும் ஆண்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும்?  அந்த ஆணிற்கும் ஓர் அம்மா, அக்கா, தங்கை, சித்தி, பெரியம்மா அல்லது மனைவி, மகள் இருக்கலாம். அவர்களுக்கும் இப்படி நடந்தால் அவருடைய உடனடி நடவடிக்கை என்னவாக இருக்கும்?

கீழே இன்னும் சில கேள்விகள்:

ஒரு ஆணிடம் பெண்ணின் எதிர்பார்ப்பு என்ன?

அதே போல் ஒரு பெண்ணிடம் ஆணின் எதிர்பார்ப்பு என்ன?

மேலே கண்ட கேள்விகள் பொதுவான ஆண், பெண் உறவு சம்பந்தமாக மட்டுமே.

அடுத்த கேள்வி

ஒரு பெண் ஓர் ஆணைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன எதிர்பார்ப்பாள்? என்ன எதிர்பார்க்க வேண்டும்? அவள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை எனில் அவளின் மனப்பாங்கு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம்! :

அதே போல் ஓர் ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன எதிர்பார்ப்பான்? அவன் எதிர்பார்ப்புப் பூர்த்தி ஆகவில்லை எனில் அவன் மனப்போக்கு எப்படி இருக்க வேண்டும்?

இங்கே பெண் என்பவள் திருமணம் ஆனதும் தன் பிறந்த வீட்டை, சுற்றத்தை விட்டு விட்டு வருகிறாள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னதான் தனிக்குடித்தனம் இருந்தாலும் ஓர் ஆணை நம்பித் தானே தன் பெற்றோர், உற்றாரை விட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது! ஆகவே பெண்ணின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்!

உங்களுக்குப் பிறந்திருக்கும் ஆண் குழந்தை/பெண் குழந்தையை எப்படி வளர்ப்பீர்கள்/வளர்த்திருக்கிறீர்கள்?

இனி பிறந்தால் எப்படி வளர்க்க எண்ணி இருக்கிறீர்கள்?

Saturday, March 04, 2017

ஹூஸ்டனில் தினசரி வாழ்க்கை!

இங்கே வந்ததிலிருந்து ஒவ்வொரு நாள் போவதும் பெரிய விஷயமாக இருக்கிறது. காலை எழுந்து காஃபி மேக்கரில் காஃபி போட்டுச் சாப்பிட்டு வீடு சுத்தம் செய்தல், கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்தல், (இந்தியாவில் இரவு ஏழரை மணி எனில் இங்கே காலை எட்டு மணி! ஆகவே நேரடி அலைவரிசையிலேயே தொலைக்காட்சி பார்க்கிறோம்) அது முடிஞ்சு காய்கள் நறுக்கிட்டுக் குளிச்சுட்டு வந்தால் பத்து மணி ஆகி இருக்கும். உடனே சமைச்சால் சாப்பிட முடியாது என்பதால் பதினோரு மணி வரை குழந்தை முழிச்சிட்டு இருந்தால் விளையாட்டு! பின்னர் சமையல், சாப்பாடு, சமையல் சீக்கிரம் முடிஞ்சுட்டால் கொஞ்ச நேரம் நடை! அதுவும் இங்கே உள்ள காலநிலையை ஒட்டித் தான் போக முடியும்.

இன்னிக்கு வெயில் அடிச்சா நாளைக்குக் குளிர் அடுத்த நாள் மின்னல், மழை, மோகினினு இருக்கும்! நல்ல வெயில் அடிக்குதேனு நேத்திக்கு மத்தியானமா பதினோரு மணி அளவில் சமைச்சு வைச்சுட்டு வெளியே போனால் ஒரே குளிர்காத்து! சுழற்றிச் சுழற்றி அடிக்குது! நல்லவேளையா ஷால் கொண்டு போயிருந்தேன். இருந்தாலும் வெளியே குளிர் இன்னமும் இருக்கத் தான் செய்கிறது! சாயந்திரம் வழக்கம் போல் சமையல், சாப்பாடு, படுக்கை! ஶ்ரீரங்கத்திலாவது அக்கம்பக்கம் மனிதர்களைப் பார்க்க முடியும். இங்கே யாரையும் பார்க்க முடியலை! எல்லோரும் பிசியோ பிசி! நேரம் குறிச்சுட்டு என்னிக்கானும் ஒரு நாள் வந்துட்டுப் போவாங்க! தோட்டத்திலும் இப்போ எதுவும் போட முடியாது. தொட்டியில் வைச்சிருக்கிற கருகப்பிலையைக் காப்பாத்தறதே பெரிய விஷயமா இருக்கு! :)

கடந்த பத்து நாட்களாக மறுபடியும் (கிட்டத்தட்ட லக்ஷத்து ஒன்றாவது முறை) "சிவகாமியின் சபதம்" நாவலும், "பார்த்திபன் கனவு" நாவலும் படிச்சேன். எத்தனை முறை படிச்சாலும் அலுக்காமல் மறுபடி மறுபடி புதுசாப் படிக்கிறாப்போல் படிக்கிறேன் என்பதைப் பார்த்து ரங்க்ஸுக்கு ஆச்சரியம். எப்போவும் புத்தக வடிவில் தான் படிச்சிருக்கேன்.  இந்தியாவில் என்னுடைய கலெக்‌ஷனில் கல்கியிலிருந்து கிழிச்சு எடுத்தது பேப்பர் பேப்பராக (பைன்டிங் இல்லாமல்) இருக்கும். ஒவ்வொரு பேப்பராக எடுத்துப் படிப்பேன். அதில் பத்மவாசன் ஓவியமோனு நினைக்கிறேன். ஆனால் இங்கே படிச்சது ஐபாடில்!

ஐபாடில் தமிழ்ப் புத்தகங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. ஆனால் தினசரிகள் எல்லாமும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கிடைக்கின்றன. விகடன் புத்தகங்கள் எல்லாமும் கிடைக்கின்றன.  சக்தி விகடன், அவள் விகடன் போன்றவை கிடைக்கின்றன. மங்கையர் மலர் கிடைச்சது. ஆனால் பின்னால் அது தேடினாலும் கிடைக்கவில்லை. கல்கி குழுமத்தின் வெளியீடான நாவல்களும் இன்னும் பல ஆன்மிகப் புத்தகங்களும் கிடைக்கின்றன. அநேகமாக எல்லாமும் படிச்சாச்சு!   சீதா ரவியின் "ஸ்வர ஜதி" (முழுக்க முழுக்க இசை, சங்கீதம் சம்பந்தப்பட்ட கதைகள்), கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அருண் சரண்யாவின் "தீராத விளையாட்டு விட்டலன்" ஆகியவையும் சித்தர்கள் வரலாறும். இன்னும் சிலவும் இருக்கின்றன. அநேகமாக எல்லாத்தையும் முடிச்சுட்டேன். ஒரு சில மாத, வார இதழ்கள் கிடைக்கின்றன. என்றாலும் எல்லாமும் கிடைப்பதில்லை. வண்ணநிலவனின் "உள்ளும் புறமும்"  நாவலும் அதில் இருக்கிறது.  ஏற்கெனவே விகடனில் வந்தப்போப் படிச்சது தான். இப்போ  மறுபடி புத்தக வடிவில் படிக்கிறேன். இன்னும் முடிக்க நேரம் வரலை. இத்தனைக்கும் சின்ன நாவல்!

கணவனைச் சந்தேகப்படும் மனைவி! அதுவும் வேலைக்குச் செல்லும் மனைவி! இம்மாதிரிக் கதைகள் நிறையப் படிச்சாலும் இதன் அணுகுமுறை யதார்த்தமாக இருக்கிறது. முடிவு வழக்கம்போல் சுபம் என்றாலும் கதையின் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. தனுஷ் நடிச்ச "கொடி" படத்தைத் திரும்பத் திரும்ப இருமுறை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருமுறை மருமகள் போட்டார். அப்போ வேறே வேலை இல்லாததால் உட்கார்ந்திருந்தேன். மறுமுறை பையர் போட்டார். அப்போவும் வேலை எல்லாம் முடிஞ்சு சாவகாசமாக இருந்த நேரம்.  இம்முறை அதிகம் படங்கள் பார்க்கலை. என்னவோ மனம் அதில் பதியவில்லை. கோயில்களுக்கும் போக முடியாத சூழ்நிலை! ஆகவே மீனாக்ஷி கோயில் நூலகம் செல்லமுடியாத குறையை மிகவும் உணர்கிறேன்.  நூலகம் போயிருந்தால் புத்தகங்களாவது வாங்கி வந்திருக்கலாம். இந்தியாவிலிருந்து வரும்போது இம்முறை புத்தகங்கள் ஏதும் கொண்டு வரவில்லை. நண்பர் ஒருவர் கிளம்பும்போது பரிசாக அளித்த ஒரே ஒரு புத்தகமும் மற்றபடி ஸ்லோக புத்தகங்களும் தான் கொண்டு வந்தேன்.  அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். எனினும் விமரிசனம் செய்ய யோசனை! :)

"கொடி" வழக்கமான அரசியல் படம்! இரட்டை வேடத்தில் தனுஷ்! "கொடி" என்று பெயர் வாங்கின அரசியல்வாதி தனுஷ் இறந்து போக அவர் இடத்தில் தம்பியான மெத்தப்படித்த தனுஷ் வந்து எப்படித் தன் அண்ணன் இறந்தான் என்பதைக் கண்டு பிடிக்கிறார். கடைசியில் வில்லியான திரிஷாவைத் தப்பிக்க விட்டாலும் அண்ணனின் கையாள் அவரைக் கொல்வது சற்றும் எதிர்பார்க்காதது அல்ல! அந்தக் கதாபாத்திரம் அறிமுகம் ஆனதிலிருந்தே அதற்கு ஏதோ முக்கியத்துவம் என்று புரிந்து விட்டது. ஹிஹிஹி, வழக்கம் போல் நடிகர் யார்னு தான் தெரியலை. இந்தப் படத்திலே தனுஷ், திரிஷா, விஜயகுமார்(? இருக்கார்னு நினைக்கிறேன்.) தனுஷின் அம்மாவாக சமீப காலங்களில் அம்மா வேடத்தில் தொடர்ந்து நடிக்கும் சரண்யா!  இயல்பான நடிப்பு எப்போவுமே!

கொடி படம் க்கான பட முடிவு


கதைக்களம் வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் பாணி! தனுஷின் தலைவராக நடிப்பவர் முகம் எங்கேயோ பார்த்தாப்போல் இருக்கேனு நினைச்சாக் கடைசியிலே அது விஜயின் அப்பா டைரக்டர் சந்திரசேகராம்!படித்து வேலை பார்க்கும் தனுஷின் ஜோடியாக நடிக்கும் நடிகை யாரோ புதுமுகம் போல!  அதிகம் அவருக்கு வேலையில்லை! திரிஷாவும் குறிப்பிட்ட சில காட்சிகளிலேயே வருகிறார். பொதுவாக இது தனுஷின் படம்! மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. அடுத்து இன்னொரு படம் "அதே கண்கள்" என்னும் பெயரில்! படம் பாதி தான் பார்த்தேன். தன் காதலி தீபாவைக் காப்பாற்றச் செல்லும் கதாநாயகன் கொலைப்பழிக்கு ஆளாவது வரை , நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்கும் வரை பார்த்தேன். அப்புறமாப் பார்க்கலை. ஏவிஎம்மின் அதே கண்களை இரண்டு மூன்று முறை பார்த்தாச்சு! ஆகவே அதே பெயருள்ள இந்தப் படத்தை ஏன் பார்க்கணும்னு நினைச்சேனோ! :)

பானுமதி வெங்கடேஸ்வரன் துருவங்கள் பதினாறு படம் குறித்து எழுதி இருந்தார். அதையும் பார்க்கணும் முடிஞ்சால்! ஹிஹிஹி என்னமோ எல்லாத்தையும் முழுசாப் பார்த்துட்டாப்பல தான்னு யாருப்பா அங்கே கூவறது? இப்படிப் பார்க்கிறதுக்கே நம்ம விமரிசனத்தைத் தாங்க முடியலை! இன்னும் ஒழுங்காப் பார்த்துட்டால்! நல்லவேளையாப் பையர் ஜிவாஜி, எம்ஜார், உலக்கை நாயகர் படமெல்லாம் போடலையோ பிழைச்சேன்! :)