எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 29, 2023

மீண்டும் சந்திப்போம்!

 நான் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் செய்து கொண்டேன். அறிந்தவர், தெரிந்தவர், முகநூல் நண்பர்கள்/மத்யமர்கள்னு பலரும் அறுவை சிகிச்சை செய்துக்கப் போறாங்க அல்லது செய்து கொண்டிருக்காங்க. இன்னொரு கண்ணிற்கான அறுவை சிகிச்சைக்குப் போனால் மருத்துவர்  சர்க்கரை சோதனையின் தற்போதைய நிலவரம் சரியாக இல்லை என்பதாலும், எனக்குக் கடுமையான இருமல் இருந்ததாலும் (இப்போதும் அவ்வப்போது இருக்கு) மருத்துவரே இப்போதைக்கு இன்னொரு கண் அறுவை சிகிச்சை வேண்டாம்னு சொல்லிட்டார். அதோடு இப்போ வெயில் வேறே தாங்கலை. உடல் முழுவதும் கொப்புளங்கள், கட்டிகள். அரிப்பு, வலி, எரிச்சல்! :( ஆகவே மறுபடியும் வேப்பிலை+குப்பைமேனி+மஞ்சள் கலவைக்குப் போகணும் இப்போதிருந்தே. இல்லைனா தாங்க முடியாது.

பெண்ணுக்கும் சாப்பாடு எல்லாம் இன்னமும் வழக்கமான முறையில் இல்லை. அது வேறே கவலை. இந்தியா வரச் சொல்லிண்டு இருக்கோம். 2015 ஆம் ஆண்டில் வந்தது. அப்புறமா வரவே இல்லை. என்ன செய்யப் போறாங்களோ தெரியலை. கு.குவுக்கு இப்போது ஈஸ்டர் விடுமுறை என்பதால் அவங்க யு.எஸ். போறாங்க. அங்கே தான் அவங்க மருத்துவச் சோதனைகள் எல்லாம் செய்து கொண்டு கண், பல் என எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொள்ளணும். இது அங்கே உள்ள நடைமுறைப்படி ஒவ்வொருவரும் கட்டாயமாய்ச் செய்துக்கணும். குஞ்சுலு   நன்றாக வரைய ஆரம்பிச்சிருக்கு. அதுவாவே ஒரு  லூடோ போர்ட் (அட்டை) வரைந்து வண்ணம் கொடுத்துட்டு அவங்க அப்பாவோட விளையாடியது. அது தோத்துப் போனால் அழுதிருக்கும் போல. அவங்க அப்பா "அழுமூஞ்சி துர்கா" என்று சொல்லுவாராம். ஆகவே இதுவும் அவ அப்பாவை "அழுமூஞ்சி அப்பா" என்று சொல்லிக் கொண்டு கையைத் தட்டிக் கொண்டு குதிச்சது. குழந்தைக்கு அடிக்கடி ஜூரம் வந்து விடுகிறது. அங்கே உள்ள சீதோஷ்ணம் காரணமா என்னனு தெரியலை.

எங்க எதிர் வீட்டு மாமியும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாங்க போன வாரம். அவங்களுக்குக் கட்டெல்லாம் போடவில்லை. அன்னிக்கே ஒரு சாதாரண/அல்லது பவர் உள்ள கண்ணாடியைப் போட்டு அனுப்பிச்சுட்டாங்க. அறுவை சிகிச்சைக்காக நிறையப் பேர் இருந்ததால் காலை ஆறரைக்குப் போனவங்களுக்குப் பத்து மணிக்குத் தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கு. மகாத்மா காந்தி மருத்துவமனை, தென்னூரில் நடந்திருக்கு. இதே மாதிரித்தான் லென்ஸ்,மற்றவை எல்லாம். ஆனால் இவங்களுக்கு 20 நிமிடங்களில் சிகிச்சை முடிஞ்சிருக்கு. நாம தான் எல்லாத்திலேயும் சிறப்பானவங்க போல! 

நாட்டு நிலவரங்கள் எதுவும் சரியாக இல்லை. அதைப் பற்றி எழுதப் போனால் பிரச்னைகள் தான் வரும். அதிலும் முக்கியமாகக் கோயில்கள்! நல்லவேளையாகத் திரைப்பட நடிகை காஞ்சனா தன்னுடைய சொத்தைத் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கொடுத்தார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் கைகளில் வந்திருந்தால்! நினைச்சாலே நடுக்கமா இருக்கு! பெண்கள் சுதந்திரம் அது இதுனு சொல்லிக் கொண்டு ஒரு பக்கம் பெண்களுக்கு வன்கொடுமைகள் நிகழ்ந்தால் இன்னொரு ப்க்கம் பெண்களே கண்வனைக் கொல்வது, தீயிட்டு எரிப்பது என்றெல்லாம் போய்க் கொண்டு இருக்கு. தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதிகரித்து இருப்பதை அதிகரித்து வரும் விபத்துக்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பக்கம் இலவசம் கொடுப்பது போல் கொடுக்கும் அரசு இன்னொரு பக்கம் அதை டாஸ்மாக் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டு விடுகிறது. 

கட்டுப்பாடின்றி வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இங்கே காவிரிப் பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு சின்னப் பையர் ஸ்டன்ட் வேலை எல்லாம் செய்திருக்கார். அந்தப் பையரைப் பிடிச்சுட்டாங்களா என்னனு தெரியலை. இதை எல்லாம் வீடியோ எடுத்து முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவது இப்போதைய இளைஞர்களின் விருப்பம்.. அதோடு இல்லாமல் பேருந்தில் தொங்கிக் கொண்டு போறவங்களைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்/நடத்துநருக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. அதே போல் மின்சார ரயிலில் பயணம் செய்யும் இளைஞர்களையும் அடக்க ஒரு சிறப்புச் சட்டம்/அதிகாரம் ரயில்வே ஊழியர்களுக்குக் கொடுக்கணும். வேகமாகச் செல்லும் ரயிலில் தொங்கிக் கொண்டே போவதோடு அல்லாமல் பக்கத்தில் வரும் தூண்களின் மேலும் ஏறுவதற்கு முயற்சி செய்கிறார்கள், ரயில் ஓடும்போதே! இதை எல்லாம் சாகசம் என நினைக்கிறாங்க போல!


மீண்டும் சந்திப்போம்!

Sunday, February 19, 2023

தாத்தாவிற்குச் சற்றுத் தாமதமான அஞ்சலி!




தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சேர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்த பொழுது, உ.வே.சாவின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அனுப்பும் படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை எற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உ.வே.சா தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்கு கற்றார். மேலும் புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது, படித்தவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்பதையும் அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டார். பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் துவங்கினார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதி வரையிலும் இத்தொடர்பு உ.வே.சா விற்க்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அறிய தமிழ் தொண்டு ஆற்றவும் இது வழி வகுத்தது. உ.வே.சா தமது ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். தமது இறுதிக் காலம் வரை இவற்றில் இம்மியும் குறையவில்லை.


திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஸ்டபபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை அவரிடம் கற்றார். ஆசிரியரும் மிகவும் வருமையில் இருந்தார் என்று உ.வே.சா கூறுகிறார். “புலமையும் வருமையும் சேர்ந்தே இருப்பது இந்நாட்டின் சாபம்” இது உ.வே.சாவின் கூற்று. திருவாடுதுறை ஆதினம் திரு.சுப்பிரமணிய தேசிகரை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தை பெருமையுடன் கூறுகிறார். இசையுடன் பாடல்களை பாடி விளக்கம் அளித்த உ.வே.சா, தேசிகரிடம் நல்ல எண்ணத்தை உருவாக்கினார். ஆதினத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்பமும் கிடைத்தது. சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்கு புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உ.வே.சா கூறுகிறார். ஆசிரியரிடம் பாடம் கேட்டதால் தமக்கு எவ்வளவு பெருமை என்றும் மற்றும் ஆசிரியர், தேசிகர் ஆகியோர் அன்பு இவரை நெகிழவைத்தது எனவும் கூறுகிறார். “என்ன துன்பம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்று முடிவு செய்துள்ளார்.

Saturday, January 28, 2023

கின்டிலில் என்னுடைய புத்தகம்!

 https://kdp.amazon.com/en_US/bookshelf?ref_=kdp_kdp_TAC_TN_bs

தற்சமயம் மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் கின்டிலில் வெளியான என்னுடைய புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம். அதிலே "என்ன கல்யாணமடி கல்யாணம்" 2011 ஆம் ஆண்டில் நான் தொடராக எழுதி வந்தவை. அவற்றில் கடைசியில் சப்தபதிக்குப் பின்னர் மற்ற வைதிகக் காரியங்களைப் பற்றி விரிவாக எழுதணும்னு நினைச்சு எழுத முடியலை. இப்போது இதிலேயும் விரிவாக எழுத நினைத்தும் ஓரளவு தான் எழுதினேன். எடிட்டிங் செய்யக் கஷ்டமாக வேறே இருந்ததால் ரொம்ப விரிவாக எழுதாமல் முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதினேன். வெங்கட் ஸ்ரீரங்கம் வரப் போறார்னு தெரிஞ்சது. தொந்திரவு பண்ணணுமேனு நினைச்சேன். ஆனால் வேறே வழி இல்லை. அனுப்பி வைச்சேன்.  அவரும் ஒரு முறை எடிட் செய்துவிட்டுப் பின்னர் வெளியீடு செய்தார். ஜனவரி 25 ஆம் தேதி புத்தகம் வெளியானது பற்றி எனக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பி இருந்தார். ஆனால் என்னால் உடனே பார்க்க முடியலை. நேற்றுத் தான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆனாலும் வெங்கட் அனுப்பிய சுட்டிகளை எங்கள் குடும்பக் குழுவிலும், எங்கள் ப்ளாக் குழுவிலும் எங்க பில்டிங் அசோசியேஷன் குழுவிலும் போட்டேன். யாருமே கவனிக்கலை. எ.பியில் எப்போதும் போல் ரஹ்மான் மட்டும் வாழ்த்தி இருந்தார். இங்கேயும் ஒரு தரம் போட்டுடலாம்னு நினைச்சேன். அப்போத் தான் தோணியது எல்லாப் புத்தகங்களுக்குமே ஒரு விளம்பரம் கொடுத்துடலாமேனு.  மேலே கண்டிருக்கும் ஐந்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்போர் வாங்கிப் படிக்கலாம். கின்டில் அன்லிமிடெட் மூலம் படிப்பவர் படிக்கலாம். உங்கள் விமரிசனங்களை எனக்கு எழுதி அனுப்பவும்.


இன்றைய பரிக்ஷை முடிவு வெளிவந்து விட்டது. நல்ல மார்க் எடுத்துப் பாஸாகி விட்டேன். :))))) இனி அடுத்து என்ன என்பது தெரியணும். பார்க்கலாம். ஈசிஜி கூட வீட்டுக்கே வந்து எடுத்துட்டுப் போனாங்க. உண்மையில் ரிசல்ட் பார்த்து எனக்குமே ஆச்சரியம். முக்கியமாச் சர்க்கரை அளவு!!!!!!!!!!!!!!!!!!!


முந்தாநாள் பைத்தியம் மாதிரி ஒரு ப்ரின்ட் அவுட் எடுக்கையில் இந்த வையர்லெஸ் கீபோர்ட் நினைவே இல்லாமல் பழைய கீ போர்ட் மூலமாகத் தட்டச்சி அது வரவே வராமல் கடைசியில் மைக்ரோ சாஃப்ட் என்னை உள்ளேயே அனுமதிக்காமல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னர் கோட் எல்லாம் வாங்கி எல்லா செட்டப்பையும் மாத்தி, பாஸ்வேர்டை மட்டும் ஒரு பத்துத்தரம் மாத்தி! அது என்னமோ பாஸ்வேர்ட் டைப் பண்ணினால் கீபோர்டில் உள்ள குறி தட்டச்ச ஆரம்பித்த இடத்துக்கே போய் விடுகிறது. அதை மாற்றிப் பாஸ்வேர்டுக்காக எண்கள் எழுத்துக்களைச் சேர்த்தால் சேரவே இல்லை. கடைசியில் ஒருவழியாக வெறும் எண்களை மட்டுமே கொடுத்தேன். அது ஓகே ஆனது. சுத்தப் பைத்தியக்காரத்தனமான வேலையில் ஒரு நாள் மத்தியானம் தண்டமாகக் கழிந்தது தான் மிச்சம். :(

Thursday, January 26, 2023

தற்போதைய நிலவரங்கள்! ஒரு பார்வை!

 குட்டிக்குஞ்சுலுவுக்குப் பால் பல் விழ ஆரம்பித்து விட்டது. நேற்றுக் கீழ்ப்பல் ஒன்று விழுந்திருக்கு. அதைக் காட்ட மாட்டேன்னு முகத்தை மூடிக்கொண்டு ரகளை. ஸ்கூல் போக மாட்டேன்னு அடம். பின்னர் சரியாப் போச்சு. குழந்தை நாம் அறியாமலேயே வளர்ந்து கொண்டு வருகிறாள். இன்னும் கொஞ்ச நாட்களில் மழலையும் காணாமல் போகும். ஒரு வகையில் வருத்தம்/வேறு வகையில் சந்தோஷம். படிப்புத் தான் நைஜீரிய ஆங்கிலப் பள்ளிப்படிப்பு எனக்கு அவ்வளவா நல்லா இருப்பதாகத் தெரியலை. எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாய்ப் படிக்கட்டும். 

ஒரு வழியாய்க் கண்ணில் அறுவை சிகிச்சை என்பது உறுதியாகி விட்டது. இரண்டு, மூன்று நாட்களாய் இதான் கவலை. நேற்று கண் மருத்துவரிடம் போய் மணிக்கணக்காய்க் காத்திருந்து எல்லா விபரங்களும் கேட்டுக் கொண்டு வந்தாச்சு. சனிக்கிழமையன்று எல்லாச் சோதனைகளும் செய்தாகணும். அதோடு இப்போ என்னமோ புதுசா ஸ்கான் பண்ணணும்னு வேறே சொல்றாங்க. எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமானு புரியலை. முதலில் எம் ஆர் ஐ ஸ்கான் என்கிறாப் போல் சொல்லவும் நடுங்கிட்டேன். யாரு உள்ளே போயிட்டு வரதுனு கவலையாப் போச்சு. இந்தப் பரிசோதனைகள் முடிஞ்சதும் ஸ்கான் பண்ணுவாங்களாம். என்னமோ போங்க. நம்மவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டப்போ இப்படி எல்லாம் கெடுபிடி இல்லை. நல்ல நாள் பார்த்துப் போனோம். அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு.  நமக்கு எப்படியோ!

இதிலே இன்னொரு கவலை என்னன்னா அறுவை சிகிச்சை அன்னிக்கு வயிறு தொந்திரவு இல்லாமல் இருக்கணும். இரண்டு நாட்கள் முன்னாடி இருந்தே சாப்பாட்டில் கவனமாக இருந்துக்கணும். அதோடு இல்லாமல் அந்த உசரமான டேபிள் மேலே ஏறிப் படுத்துக்கறதும் கஷ்டம்னு நம்மவர் சொல்றார். எனக்கு ஆட்டோவிலேயே ஏற முடியறதில்லை. என்ன பண்ணப் போறேனோ! எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக் கவலைப் பட்டுக்கலாம்.

நாளைக்குக் குலதெய்வம் கோயிலில் மாவிளக்குப் போட நினைத்து ஏற்பாடுகள் செய்யப் போனால் பூசாரிக்கு அண்ணன் திடீரென இறந்து போய் விட்டதால் தீட்டு வந்து விட்டது. ஒரு பத்து நாட்களுக்கு அவரால் கோயிலுக்கு வர முடியாது. அதுக்கப்புறமாக் கோயிலுக்குப் போகலாம்னா அறுவை சிகிச்சைக்குத் தேதி என்ன கொடுக்கிறாங்களோ தெரியலை. போகப் போகத் தான் பார்க்கணும்.

காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தைப் பார்த்துட்டு ரொம்பவே வருத்தமாக இருந்தது. நல்லா எடுத்திருக்காங்க. சப் டைடில்ஸ் இருப்பதாகப் போட்டிருந்தாலும் எனக்கு வரலை. நான் ஹி(கி)ந்தியிலேயே பார்த்தேன். மிதுன் சக்ரவர்த்தி நடிப்பும் அனுபம் கேரின் நடிப்பும் சொல்லவே வேண்டியதில்லை. பல்லவி ஜோஷி ஒரு காலத்தில் எங்களுக்குப் பிடித்த நடிகை. அவர் நடித்த ம்ருகநயனி தொலைக்காட்சித் தொடர் தூர்தர்ஷனில் வந்தப்போ விடாமல் பார்ப்போம். பின்னரும் பல தொடர்கள் பார்த்திருக்கோம். இதில் ஜேஎன் யூ விற்குப் பதிலாக ஏன் என் யூவின் ப்ரொஃபசராக வருகிறார். கடைசியில் கோபத்துடன் வெளியேறுகிறார். நம் நாட்டின் படித்த அறிவு ஜீவிகளை நன்கு எடுத்துக் காட்டி இருக்கார். ஒரு முறைக்கு மேல் பார்த்தால் தாங்காது மனம். :(

அந்தப் பழைய வேலை செய்யும் பெண்மணி அடிக்கடி விடுமுறை எடுப்பதைக் கண்டித்ததும் திடீரென நின்றதுக்கப்புறமாப் பழைய, மிகப் பழைய வேலை செய்த பெண்மணி வந்து கொண்டிருந்தாள். எப்போ வேண்டுமானாலும் வருவாள். அதிலும் கரெக்டாகப் பனிரண்டு மணிக்குச் சாப்பிட உட்காரும்போது வந்துடுவாள். சாப்பிடறோம், பாத்திரங்களைத் தேய் என்றால் பெருக்கித் தான் துடைப்பேன்னு பிடிவாதம் பிடிப்பாள். போன வாரம் வியாழக்கிழமை மின்சாரக் கட்டணம் கட்டணும்னு 500 ரூ வாங்கிக் கொண்டு போனாள். எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை. இல்லைனு சொல்லிட்டேன். ஆனால் நம்மவர் பாவம் படிக்கிற குழந்தைங்க இருக்கு, மின்சாரம் இல்லைனா கஷ்டம்னு கொடுத்தார். மறுநாளில் இருந்து ஆளே வரலை. தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலமா இன்னொரு பெண் இன்று வந்தாள். இன்றே வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன். பாத்திரங்கள் மட்டும் தேய்க்கும் வேலைதான். காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் போவதால் கொண்டு விட்டுக் கூட்டி வரணும்னு வரமுடியாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே மத்தியானம் மூன்றரை மணி போல் வந்து பாத்திரங்களைத் தேய்க்கச் சொல்லி இருக்கேன். போகப் போகப் பார்க்கணும்.

Wednesday, January 18, 2023

கல்யாணத்துக்குப் போன கதை!

 நீண்ட நாட்கள் கழிச்சு இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போய் வந்தோம். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் எங்க சாலையிலேயே அமைந்திருக்கும் சிருங்கேரி மடத்துக் கல்யாண மண்டபத்தில் கல்யாணம். பெண் எதிர் வீடு. இரண்டு வருஷங்களாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது அமைந்துள்ளது. சிறப்பாகக் கல்யாணம் நடந்தது. நடுவில் எங்கேயுமே போகாமல் வீட்டிலேயே இருந்த நான் பையர் வந்தப்போக் குலதெய்வம் கோயிலுக்குப் போனது தான். அங்கேயும் மற்றக் கோயில்களுக்கு எல்லாம் இறங்கவே இல்லை. மாரியம்மனை மட்டும் பார்த்துவிட்டு வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்தேன். அவங்க எல்லோரும் போயிட்டு வந்தாங்க.

இன்னிக்குக் கல்யாணத்துக்கும் போக முடியுமா என்பது நேற்று வரை சந்தேகமே!நேற்று நம்மவரிடம் நான் வரலை. நீங்க மட்டும் போங்கனு தான் சொன்னேன். ஆனால் காலம்பர எழுந்ததும் அவர் நீயும் வா! என்று சொல்லிட்டார். கொஞ்சம் உள்ளூர பயம் தான். வயிறு என்ன சொல்லுமோஎன்ன பண்ணுமோ எனக் கவலை தான். கல்யாணத்தில் காலையிலேயே போய்விட்டதால் காலை ஆஹாரம் லேசாக எடுத்துக்கலாம்னு போனோம். மாத்திரைகள் சாப்பிட்டாகணுமே! ஃப்ரூட் கிச்சடி, அக்கார அடிசில், வெண் பொங்கல், இட்லி, தோசை, பூரி, சாம்பார் வடைனு மெனு. நான் ஒரே ஒரு இட்லி போட்டுக் கொண்டு ஒரு தோசையும் போட்டுக் கொண்டேன். வலுக்கட்டாயமாக சாம்பார் வடையைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் போட்டுட்டாங்க. ஒரே ஒரு இட்லி, ஒரே ஒரு தோசைக்கு மிளகாய்ப் பொடி மட்டும் தொட்டுக் கொண்டு, சாம்பார் வடையுடன் சாப்பிட்டு முடிச்சேன். மற்றது எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

இப்போதெல்லாம் வீட்டில் சாப்பிட்டாலே ஒத்துக்கறதில்லை சில சமயம். முந்தாநாள் அப்படித் தான் ஒரே ஒரு வடை சாப்பிட்டேன். அன்றிரவெல்லாம் தண்டனை மாதிரி வயிற்றுப் போக்கு! நேற்றுப் பூரா ஓ.ஆர்.எஸ். தான் குடித்துக் கொண்டிருந்தேன். அதுவும் எல்லா ஃப்ளேவரும் பிடிக்கலை/ஒத்துக்கலை. ஆரஞ்சு ஃப்ளேவர் மட்டும் தான். இன்னிக்குக் கல்யாணத்திலே கூட பெண்ணின் அம்மா/பிள்ளையின் அம்மா எல்லோருமே கையில் ஓ.ஆர்.எஸ். வைத்துக் கொண்டிருந்தார்கள். யாருக்கு உடம்போனு நினைச்சேன். இப்போதைய பருவமும் அடிக்கும் சில்லென்ற காற்றும் உடம்பு/வயிறு இரண்டுக்கும் ஒத்துக்கலை போல! பலருக்கும் வயிற்றுப் பிரச்னை இருக்கு. :(

கல்யாணம் சிறப்பாக நடந்தது. சாப்பாடையும் ஒரு வழியாக அங்கேயே முடிச்சுக்கலாம்னு உட்கார்ந்திருந்தோம். பதினோரு மணிக்குத் தான் சாப்பாடு ஆரம்பிச்சது. பொதுவாகவே எந்தக் கல்யாணமாக இருந்தாலும் நான் மதியச் சாப்பாடு சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். இன்னிக்கு வீட்டில் போய்ச் சமைக்கணும் என்பதால் ஒரு ரசம் சாதமாக முடிச்சுக்கலாம்னு உட்கார்ந்தேன். காய்களை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அவியல் தவிர்த்து. அதிலும் தேங்காயோ என்னமோ ஒரு வாசனை வந்தது என்பதால் சாப்பிடலை. முருங்கைக்காய் வேகவே இல்லை. மற்றபடி வேண்டாம்னு சொன்னாலும் கேட்காமல் சாம்பாரை விட்டுட்டாங்க. கொஞ்சமாக விடச் சொல்லியும் ஒரு கரண்டி விழுந்து விட்டது.. ஆனால் சாம்பார் நல்ல ருசி. காய்கள் நிறையப் போட்டிருந்தாலும் சாம்பார் கூட்டு மாதிரி இல்லாமல் நல்ல நீர்க்கவே இருந்தது. ரொம்ப நாட்கள்/வருஷங்கள்/மாதங்கள் கழிச்சு சாம்பார் சாதம் சாப்பிட்டேன். அடுத்து வத்தக்குழம்பு கொண்டு வந்தாங்க வேண்டாம்னு சொல்லிட்டு (மோர் சாதத்துக்கு விட்டுக்கலாமேனு) ரசம் விடச் சொன்னேன். ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! நல்ல ரசமான ரசம். சூடாக வேறே இருந்தது. அப்பளம் தான் ஒண்ணுக்கு மேலே கண்ணிலே காட்டலை, கருமி! :( பெரிய அப்பளமாக இருந்ததால் மிச்சத்தை வைச்சுண்டு சாப்பிட்டேன். அந்த ரசம் சாதத்தைச் சாப்பிட்டு முடிச்சேன். இரண்டாவது முறை அப்பளமே கேட்கலை. :( எவ்வளவு கஷ்டம் பாருங்க! அடுத்து சாதம் போட்டுக்கொண்டு (கொஞ்சமாக) தயிர் விட்டுக் கொண்டேன். தொட்டுக்க வத்தக்குழம்பு. மணத்தக்காளி வத்தல் குழம்பு, அருமை. கிடாரங்காய் ஊறுகாயும் புது மாதிரியாக இருந்தது. வடக்கே போடுகிறாப்போல் சர்க்கரை போட்டிருந்தாங்க. ஆக மொத்தம் நல்லதொரு சாப்பாடு. வடை எல்லாம் போடலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இனிப்பு பெங்காலி ரஹம். சேச்சே, மறந்துட்டேனே, தயிர் வடை போட்டாங்களே!

எல்லாம் முடித்துக் கொண்டு ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுவிட்டு பீடாவை வாயில் போட்டுக் கொண்டு வெளியே வந்தால் பக்கத்தில் மடத்து (வித்யார்த்திகள்) வேதம் பயிலும் மாணாக்கர்கள். ஏழு வயதிலிருந்து பதினாறு/பதினேழு வயது வரயிலான மாணாக்கர்கள். ஒட்டிய வயிறோடும், கண்களில் பளிச்சிடும் பிரகாசத்தோடும் வேஷ்டியைத் தட்டுச்சுற்றாகக் கட்டிக் கொண்டு வேதங்களை மனனம் செய்து கொண்டிருந்தார்கள். அவங்களைப் பார்த்ததும்  உடலில் இருந்து சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வெளியே போய்விட்டது! :( இந்த மாதிரியான சாப்பாடெல்லாம் அவங்களுக்கு எப்போக் கிடைக்கும்? சாப்பாடையே பிரதானமாக நினைச்சிருந்தால் வேத சம்ரக்ஷணம் பண்ணுவது எப்படி? இந்த வயதிலேயே எத்தனை மன உறுதி? உற்சாகம்! எதுக்கும் அசராமல் தங்கள் கடமையே கண்ணாக இருந்து வருவது எவ்வளவு போற்றத்தக்கது?  இது எதையும் நினைச்சுக் கூடப் பார்க்காமல் அவங்க உபாத்தியாயம் செய்ய வந்தால் நாம் நம்ம வழக்கப்படி அவங்களிடம் பேரம் பேசுவோம் இல்லையா? வாத்தியார் அதிகப் பணம் கேட்கிறார் எனப் புகார் கூறுவோம்! :(