எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 31, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே!

விழுந்து எழுந்து போய் உட்கார்ந்தால், அந்த அரை அடி இடத்தில் உட்காரவே முடியலை.  காலை மடக்கி உட்காரணும்.  அங்கே தான் பிரச்னையே! அதுக்குள்ளே நாங்க இருந்த கிளி மண்டபத்தின் கிரில் கதவுகளை மூடிப் பூட்டுப் போட்டுவிட்டார்கள்.  உள்ளே வந்த மக்களின் எண்ணிக்கையால் இருக்கிற இடமும் பறி போயிடும்போல ஆயிடுச்சு.  இதற்குள் நம்ம ஆனையார் ஆண்டாளம்மாள் வந்து பிளிறவே, சரி, உம்மாச்சி வர நேரம் ஆயிடுச்சுனு நினைச்சேன்.  அதுக்கு ஏத்தாப்போல் வாத்தியங்கள் முழங்க ஆரம்பித்தன.  கூட்டம் இடி,பிடி, தள்ளு,முள்ளு.  அருகே உட்கார்ந்திருந்த ஒரு அம்மையார் என்ன செய்வதெனத் தெரியாமல் என்னைப் பிடித்துத் தள்ள, தூணில் முட்டிக்க இருந்தவள் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டேன். அதைப் பார்த்துவிட்டு ரங்க்ஸ் தன் இடத்தை எனக்குக் கொடுக்க, அந்த அம்மாவுக்கு வந்ததே கோபம். நல்லவேளையாகச் சந்தனு மண்டபத்திற்கு ரங்கன் வந்தானோ, பிழைச்சேனோ!

இது தனிப்பட்ட முறையில் நடந்தது எனினும், சந்தனு மண்டபத்தில் ஸ்வாமி வரவும் எங்களுக்கு நான்கைந்து வரிசை முன்னால் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்து நிற்க பின்னால் இருந்தவர்களுக்கு தோளுக்கினியானின் உச்சி கூடத் தெரியவில்லை.  போததற்குக் கம்பிகள் கட்டி இருந்ததால் அதில் வேறு ஏறி நின்னு பார்க்க ஆரம்பித்தார்கள்.  நம்மால் முண்டி அடித்துக்கொண்டு பார்க்க இயலாது என்பதால் சும்மா இருந்தேன். சொல்லற விருந்தேன்.  சிறிது நேரத்தில் கீழே ரங்கன் இறங்கிப் பரமபத வாசல் நோக்கிப் போகிறான் என்பது அவனுடைய பாண்டியன் கொண்டையின் உச்சி தெரிந்ததில் இருந்து புரிந்தது.  அன்றைய தரிசனம் எனக்கு அந்தப் பாண்டியன் கொண்டையின் உச்சியைப்பார்க்க முடிந்தது தான்.  அதோடு 300 ரூ. போயாச்சு! :))) ரங்கன் பிராஹாரத்தில் வலப்பக்கம் திரும்பினதும் சந்தனு மண்டபத்தின் கூட்டம் ரங்கனோடு சென்றது.  எங்கள் பக்கம் கதவைத் திறக்கவே இல்லை.  ஆனால் பொறுமை இழந்த கூட்டத்தினர் கம்பி ஏறித் தாண்டிக் குதித்து, முத்தங்கி சேவை பார்க்கும் சீட்டுக்கான வரிசையில் நிற்க ஆரம்பிக்க, வெளியே யாரோ தர்ம தரிசன மக்களை உள்ளே அனுமதிக்க, சந்நிதிக்குள் நுழையும் குலசேகரன் படியருகே மீண்டும் மக்கள் வெள்ளம்.

நாங்கள் பின்னாலேயே நின்றிருந்தோம்.  கதவு திறந்தால் போனால் போதும் என.  ஏற்கெனவே தாறுமாறாகக் கூடி இருந்த கூட்டத்தைக் கட்டுப் படுத்திவிட்டு, எங்களுக்குக் கதவு திறக்க முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.  நாங்களும் முத்தங்கி சேவை பார்க்க வரிசையில் நின்றோம்.  அங்கிருந்து பரமபத வாசல் திறப்பும், ரங்கனின் பிரவேசமும் நன்றாகத் தெரிந்தது.  தொலைக்காட்சிப் பெட்டியும் நாங்கள் பார்க்கும் கோணத்தில் வசதியாக வைக்கப் பட்டிருக்கவே அதை நன்கு தரிசனம் செய்து கொண்டோம்லிதை வீட்டில் இருந்தே இன்னும் நன்றாகப் பார்த்திருக்கலாம் இல்லையா? :)))) மெல்ல மெல்லக் கூட்டம் நகர்ந்து சென்று கிட்டத்தட்ட ஐந்தே முக்கால் மணியளவில் நாங்கள் குலசேகரன் படியைக் கடந்து உள்ளே சென்றோம். நிறைய வட இந்தியர்கள் துவாரகையில் கிருஷ்ணனைப் பார்க்க இவ்வளவு கஷ்டம் இல்லை என்றும், காசியில் விஸ்வநாதரையோ, மதுராவின் கிருஷ்ண ஜன்ம பூமியிலோ இத்தனை சிரமம் இல்லை என்றோ சொல்லிக் கொண்டு வந்தார்கள்.  அதோடு ஒவ்வொரு இடத்திலும் படியை விழுந்து வணங்கிக் கொண்டும் வந்தார்கள்.  அதனால் ஏற்பட்ட தாமதம் காவல்துறையினரின் கோபத்தை அதிகப் படுத்தியது.

ஒரு வழியாகப் பெரிய பெருமாளின் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம்.  கிட்டே போறச்சேயே நன்கு கண்களைத் தீட்டி வைத்துக்கொண்டு முத்தங்கி சேவையை அடி முதல் முடி வரை நன்கு பார்த்துக் கண்கள் வழியாக மனதுக்குள் ஏற்றிக் கொண்டேன். அழகான முத்துக்களால் ஆன அங்கியை மார்பு முதல் கால் வரை அணிந்து கொண்டு பெரிய பெருமாள் சேவை சாதித்தார்.  ஒரு கணமே பார்க்க நேர்ந்தாலும் விடாமல் சிறிது விநாடி கூடவே நின்று பார்த்துவிட்டே நகர்ந்தேன்.  அந்தச் சமயம் அங்கே பட்டாசாரியார்கள் துரத்துவதை எல்லாம் கண்களோ, மனமோ பார்க்காமல் அதற்கு ஒரு மூடியைப் போட்டு மூடிவிட்டு நன்கு தரிசனம் செய்து கொண்டு வெளி வந்தோம்.  பின்னர் பரமபத வாசல் வழியே வெளிவர உள்ள வரிசைக்குப் போனோம்.  அங்கே வரிசையும் இல்லை;  எதுவும் இல்லை.  காவல்துறை கும்பலை அடக்குவதாக நினைத்துக்கொண்டு, மனிதச் சங்கிலி போட்டுத் தடுத்து ஒரு கும்பலை அனுப்பி வைத்துப் பின்னர் இன்னொரு கும்பலை அனுப்பினார்கள்.  அந்த இடத்தைக் கடக்கையில் எனக்கு மூச்சே திணற ஆரம்பித்து விட்டது.  கூட வந்த இன்னொரு அம்மாள் பார்த்து என்னை இழுத்து ஓரத்துக்குத் தள்ளினார்.  காவல்துறை நான்கு நான்கு  பேராக வரிசையில் விட்டால் கும்பலாக இருக்காது.  இந்த அழகில் எங்களை எல்லாம் சுற்றிக்கொண்டு வானு வெளியே வேறே அனுப்பினாங்க.  அப்புறமா இன்னொரு காவல்துறைக்காரர் பார்த்துக் கூப்பிட்டு இந்த வழியாகவே போங்கனு அனுப்பினார்.  எல்லாம் முடிந்து  வெளி வருகையில் தெற்கு கோபுர வாசலை மூடி விடவே எல்லாரும் கிழக்கு கோபுரம் வழியாகவே வெளி வரவேண்டி இருந்தது.  அதற்கு ஒரு கும்பல். கும்பலில் மாட்டிக் கொள்ளாமல் நாங்கள்  வீட்டுக்குத் தானே போகிறோம் என மெதுவாகவே வந்தோம்.  தெற்கு கோபுர வாசலில் கூட்டம் தாங்கவில்லை. தரிசனத்துக்கு வந்த மக்களை  உள்ளே செல்ல அந்த வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.  அதனாலேயே திரும்பிச் செல்லும் வழியை மாற்றி இருக்காங்க.வெளி வருகையில் மணி ஆறரை ஆகி விட்டது.  பின்னர் வீட்டுக்கு ஆட்டோ பிடித்து வந்தால் அன்றைக்கு ஆட்டோக்காரருக்கு வந்த வாழ்வு, அத்தனை நாள் முப்பது ரூபாய் கொடுத்த இடத்தில் இன்று ஐம்பதோ, நாற்பதோ வேண்டுமாம். வண்டியை எடுத்து வந்தால் வைக்கச் சரியாத வசதி இல்லை என்பதாலும் ஏகக் கூட்டமாக இருப்பதால் வண்டியைத் திரும்ப எடுக்க நேரமாகும் என்பதாலும் வண்டியை எடுத்து வரவில்லை.  வேறு வழியில்லாமல் நாற்பது ரூபாய் கேட்டவரிடம் வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.  காஃபி போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தது தான் தெரியும். எட்டரை மணிக்கோ, ஒன்பது மணிக்கோ தான் எழுந்தேன்.  அதற்கப்புறமும் உடம்பு வலி சரியாக மேலும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 

Sunday, December 30, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 4

இந்த அரங்கன் இருக்கானே, சும்மா இருக்காமல், ஊரெல்லாம் சுத்திட்டு இருந்தப்போ அங்கங்கே உள்ள மக்களை எல்லாம் தன் பக்கம் கவர்ந்து இழுத்திருக்கான்.  நினைப்பிருக்கா?  எந்தவிதமான ஆபரணங்களோ, பட்டுப் பட்டாடைகளோ இல்லாமல் அரங்கன் சென்றது?  அப்படி இருந்தும், அவனுடைய அழகு முகமும், அருள் பொங்கும் கண்களும், நான் இருக்கிறேன் என தைரியம் ஊட்டும் அபய ஹஸ்தமும்,  அவனுடைய பரிமள கந்த வாசனையும், சந்தனம், கஸ்தூரிப் பொட்டு வாசனையும், அவன் கழுத்திலே மாலையாக ஆன காட்டில் பூக்கும் பூக்களின் சுகந்தமும் அவன் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது.  ஆகவே  முன்னொரு காலத்தில் ஜராசந்தனிடமிருந்து தப்பிக்கக் கண்ணனாக ஊரை விட்டு, நாட்டை விட்டு ஓடி ஒளிந்தவன், இப்போ அர்ச்சாவதாரமாக மாலிக்காபூரிடமிருந்து தப்பிச்சுக்க ஸ்ரீரங்கத்தை விட்டு ஓட்டமாக ஓடினான் இல்லையா!  அங்கங்கே தங்கின இடங்களில் இருந்த மக்கள் எல்லாம் ரங்கனை வழிபட்டுத் தங்கள் குலதெய்வமாகக் கண்ணுக்குக் கண்ணானவனாக நினைக்க ஆரம்பித்தார்கள்.  அதுவே பரம்பரையாகத் தொடர, மக்கள் வெள்ளம் அவன் ஸ்ரீரங்கத்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே நிரந்தரமாய்த் தங்கிவிட்டான் என்பதை அறிந்ததும் இங்கே படை எடுக்க ஆரம்பித்து விட்டது.

ஆகவே அரங்கனுக்கு ஒரு விழா என்றால் உள்ளூர் மக்களை விடவும் வெளியூர் மக்களே அதிகம் வந்துவிடுகின்றனர்.  பல்வேறு விதமான கொட்டுக்களைக் கொட்டிக் கொண்டு அதிர்வேட்டுக்களை வெடித்துக்கொண்டு, ரங்கா, ரங்கா, ரங்கா என கோஷித்துக் கொண்டும், கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா எனக் கூவிக் கொண்டும் வந்த மக்கள் கணக்கில் இல்லை.  இவர்கள் இத்தனை பேருக்கும் மேல் காவல்துறையினர் வேறே. ஒரு ஆளுக்குக் குறைந்தது ஐந்து போலீஸ்காரர்கள் இருந்திருப்பார்கள்.  ரங்கா கோபுரத்தில் இருந்து எங்களை உள்ளே விடுவதற்குக் கிட்டத்தட்ட ஒன்றேமுக்கால் மணி ஆகிவிட்டது.  சரி, அங்கிருந்து நேரே உள்ளே போகவேண்டியது தானேனு நினைச்சுப் போனோம்.  இரண்டு, மூன்று இடத்தில் சீட்டுகளைச் சரி பார்த்து உள்ளே அனுப்பினார்கள்.  உள்ளே அப்படி ஒண்ணும் கூட்டம் இருக்கப் போறதில்லை.  இப்போத்தானே உள்ளே விடறாங்கனு நினைச்சுப் போனால் ஆர்யபடாள் வாசலிலே ஒரு மாபெரும் கூட்டம்.  கேட்டால் விவிவிவிவிஐபிக்களும், பத்திரிகைக்காரங்களுமாக முந்நூறு பேருக்கும் மேலே கையிலே பாஸை வைச்சுக் கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்க, போலீஸ் தள்ள, மீண்டும் ஒரு தள்ளு, முள்ளு.  நாங்க போக வேண்டிய வாயிலை மூடிப் பின்னால் போய் கம்பி கட்டி இருக்கும் இடத்திற்குச் சென்று அப்படித்தான் வரணும்னு ஒரு காவல்துறைக்காரர் சொல்ல, நாங்களும் பின்னால் சென்றோம்.

எங்களுக்கு முன்னால் பல பேர் அந்த வரிசையில் ஏற்கெனவே நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.  அது எப்படினு எங்களுக்கு ஆச்சரியமா இருந்தாலும் பின்னால் போனோம்.  ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஒரு மண்டபத்தின் கோடியில் அந்தக் கம்பி கட்டிய இடம் முடிகிறது.  அங்கே நிறையப் பேர் தூங்கிக்கொண்டிருக்க, அங்கே போய் நாங்கள் உள்ளே வர முடியாது.  என்ன செய்யலாம்னு யோசிக்க, எங்களுக்குப் பின்னால் வந்தவர்களில் சிலர் கம்பிகளின் மேல் ஏறி அந்தப் பக்கம் குதிக்கப் பெண்களில் சிலர் இரு கம்பிகளுக்கும் இடையில் புகுந்து அந்தப் பக்கம் செல்ல ஆரம்பிக்க நாங்கள் இருவரும் முழித்தோம்.  ஏனெனில் என்னால் கம்பிகளின் இடையே புகுந்து செல்ல முடிந்தாலும், இடக்காலைத் தூக்கி வைக்க முடியாது.  இடக்கால் தகராறு பண்ணும். அதை எப்படி மறுபக்கம் கொண்டு போவது?  அவருக்கோ கழுத்துப் பிரச்னை! குனியவே முடியாது.

அப்போது என்னை மாதிரிக் கால் பிரச்னையால் தவித்த இன்னொரு பெண்மணி கீழே படுத்துக்கொண்டு உருண்டு செல்ல, அதைப் பார்த்த மற்றவர்களும் என்னையும் அப்படியே வரும்படி சொல்ல, வேறு வழியில்லாமல், (பின்னே, 300 ரூ கட்டியாச்சே, அப்போது வெளியேயும் வர முடியாத நிலை) நானும் கீழே படுத்துக்கொண்டே அங்கப் பிரதக்ஷிணம் செய்தேன்.  அவர் என்ன செய்கிறார்னு பார்த்தால், கம்பிகளின் மேல் ஏறி மறு பக்கம் வந்தார். அப்பாடா!  ஒருவழியா இது முடிஞ்சதுனு நினைச்சால் மறுபடி உள்ளே அனுப்பறதை நிறுத்திட்டாங்க.  நாங்க காத்திருந்தோம்.  இதுக்கு நடுவிலே கோயிலில் தரிசனத்துக்காகக் கணவரோடு வந்த திருச்சி கலெக்டரிடம் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவங்க திருப்பி அனுப்பப்பட்டிருக்காங்க.  பின்னர் வீட்டுக்குப் போய் அடையாள அட்டையோடு வந்தும், அவர் கணவருக்கு அனுமதி மறுக்கப்படவே அவர் காரிலேயே உட்கார்ந்திருக்க அவங்க மட்டும் உள்ளே சென்றார்கள்.  அறநிலையத் துறை இயக்குநர் கல்யாணிக்கும் இதே நிலைமை.  அவங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட அப்புறம் அவங்க பதவியைச் சொல்லிக் கட்டாயம் உள்ளே இருந்தே ஆகணும்னு சொன்னதும் உள்ளே விட்டிருக்காங்க.

ஆனால் இந்த 300 ரூபாய் டிக்கெட்டை இலவசமாகப் பெற்றுக் கொண்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என நினைக்கிறேன்.  அதை எந்த அளவீட்டில் விநியோகம் செய்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை. பலரும் அந்த நீல வண்ணச் சீட்டையே எடுத்து வந்திருந்தனர்.  வெளி மாநிலக்காரர்கள் பலருக்கும் அந்தச் சீட்டு கிடைத்திருந்தது.  ஒரு வழியா இன்னும் ஒரு மணி காத்திருப்புக்குப் பின்னர் எங்களை ஆர்யபடாள் வாசல் வழியே உள்ளே அனுப்ப நேரே அர்ச்சுன மண்டபம் நோக்கிச் சென்றால் அர்ச்சுன மண்டபம் , கிளி மண்டபம், சந்தனு மண்டபம் எல்லாம் நிரம்பி வழிகிறது.  கிளி மண்டபத்தில் ஏறிய உடனே அருகிலிருந்து தூணுக்கருகே இடம் இருக்க, என்னால் தவழ்ந்து ஏறிக் குதித்து வந்த அலுப்புத் தாங்க முடியாமல் அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.  அங்கிருந்து பெருமாள் உலா வரும் இடம் நன்கு தெரிந்தது.  ஆனால்???????

Saturday, December 29, 2012

மதுரைக்குப் போகாதேடி! :))))

வியாழக்கிழமை மதுரையிலே ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்.  தெரியாத்தனமா இன்டர்சிடி எக்ஸ்பிரஸில் டிக்கெட் வாங்கிட்டார்.  போதும்டா சாமினு ஆயிடுச்சு.  ரயில் நடைமேடைக்கே ஏழு மணி ஐந்து நிமிடங்களுக்குத் தான் வந்தது.  அறிவிப்பும் செய்யலை.  அறிவிப்புப் பலகையிலும் தகவல்கள் தரவில்லை.  ஏழு ஐந்துக்கு வந்துட்டு உடனே ஏழு பதினைந்துக்கு வண்டி கிளம்பிடுது.  கூட்டமெல்லாம் இல்லை என்றாலும் வழியில் கொளத்தூரிலேயே போட்டுட்டாங்க ஒரு மணி நேரம்.  அதுக்கப்புறம் வையம்பட்டியிலே அரைமணி நேரம்.  ஒன்பதே காலுக்கு மதுரை போக வேண்டிய வண்டி பத்தரைக்குத் தான் போச்சு.  விசேஷம் முடிஞ்சாச்சு. :)))) கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :))))


என்றாலும் வழியில் திண்டுக்கல் தாண்டிக் கொடை ரோடு செல்லும் வழியில் கண்ட காட்சிகள் இவை.  தென்னந்தோப்பாக வரிசையாக வரும்.  அவற்றைக் கண்டதும் காட்சியாக்கக் கைகள் துடித்தாலும் காமிரா எடுத்துச் செல்லவில்லை.  செல்லில் முடிஞ்ச மட்டும் படமாக்கினேன். கீழே திராக்ஷைக் கொடிகள். பின்னணியில் தென்னந்தோப்பு.


காதல் என்பது எது வரை!

நினைத்ததை எழுதுகிறேன்.  இன்று காலை தான் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்.  இது என்ன கொடுமை! இதன் பாதிப்பு அடங்கப் பல நாட்கள்/மாதங்கள் ஆகலாம்.  அந்த அளவுக்கு மக்கள் கொதித்துப் போயிருக்கின்றனர்.  இதிலே மத்திய அமைச்சர் ஒருத்தரும், வேறொரு பெண்மணியும் பெண்களை இரவிலே நண்பர்களோடு போக வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.  இது இந்தக் காலகட்டத்தில் நடக்கக்கூடிய ஒன்றா? ம்ஹூம்! மருத்துவக் கல்லூரி மாணவி இரவு, பகல் பார்க்க முடியுமா?  ஐடியில் வேலையாக இருக்கும் பெண்ணால் இரவு, பகல் ஆண், பெண் என்ற பேதம் பார்க்க முடியுமா?   இதைக் குறித்து என்ன கருத்துகள் என்பதை எதிர்பார்க்கிறேன்.  அடுத்ததும் பெண்கள் சம்பந்தப் பட்டதே.


இப்போ அடுத்தது காதல் குறித்து.  சமீபத்தில் ஜீவி சார் எழுதின காதல் கதையில் கல்யாணம் செய்து கொண்டால் காதல் மறைந்துவிடும் என்ற ஒரு கருத்தைப் பின்னூட்டங்களில் படித்தேன்,  பொதுவாக அந்தக் காலங்களில் சிறு வயதில் கல்யாணம் செய்து விடுவார்கள். ஆகவே சின்ன வயதில் இருந்தே பழகிப் பழகி ஒரு பிடிப்பு வந்து விடும்.  இப்போவோ அப்படி இல்லை. குறைந்த பக்ஷ வயது 25 ஆகப் பெண்களுக்கு இருந்தது, இப்போது இன்னமும் கூடி விட்டது.  இப்போது கல்யாணம் என்பது பெற்றோர் பார்த்து நிச்சயம் என்பது மிகவும் குறைவே. அப்படியே ஏற்பாடு செய்யப் பட்ட கல்யாணம் என்றாலும் நிச்சயம் ஆனதில் இருந்து தொலைபேசிப் பேச்சு, அடிக்கடி சந்தித்தல், எதிர்காலத் திட்டமிடுதல் என எல்லாமும் இருக்கிறது.  ஆக இதுவும் ஒரு காதல் கதையே.

இப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் அதன் பின்னர் காதலிப்பதில்லையா? காதல் கல்யாணங்கள் எல்லாம் ஜெயிக்கிறதா?  ஏற்பாடு செய்யப் பட்ட கல்யாணங்கள் எல்லாமும் தோற்கிறதா?  உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன?  யார், யாருக்கு விட்டுக் கொடுக்கணும்?  அல்லது கொடுக்கக் கூடாது?  கல்யாணம் செய்து கொண்ட பின்னர் காதல் மலராதா? அல்லது அது காதல் இல்லையா?  காதலிக்கும் இருவர் மனமொப்பித் திருமணம் செய்து கொண்டால் அங்கே காதல் ஜெயிக்கிறதா?  தோற்கிறதா?  காதல் இருக்கிறதா?  அழிகிறதா?

ஒரே மண்டைக்குடைச்சல் தாங்கலைங்க! :))))))))))


25 வயதுக்கு மேல் பெண்கள் மனம் முதிர்ச்சி அடைந்துவிடும். அவர்களால் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப நடந்து கொள்ள முடியுமா?  ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் திண்டாடுகின்றனர்.  சிலர் வெளியே வருகின்றனர்.  சிலர் உள்ளுக்குள்ளேயே போராடுகின்றனர்.  சிலர் அழுகின்றனர்.  அங்கே வேறிடத்தில் அன்பு பிறக்கிறது.  அது உண்மையான அன்பா?  எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்துவது இந்தக் காலத்தில் முடியுமா? ஏதோ ஒரு விதத்தில் எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்கிறது.  என்றாலும் இந்தக் காதல்ங்கறது என்னங்க?  ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்புத்தான் காதலா? அப்படின்னா அவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டால் தப்பா? செய்து கொள்ளாமல் இருந்தால் தான் காதல் உயிர் வாழுமா?


உட்கார்ந்து யோசிப்போர் சங்கத் தலைவி!


பி.கு.  நாங்க ரெண்டு பேரும் தினம் ஒரு பத்துத் தரமாவது கத்திச் சண்டை போட்டுப்போம்! :)))))

Friday, December 28, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே!

விளக்குகளில் ஒளிரும் தெற்கு கோபுரம்.  எல்லா கோபுரங்களுக்குமே விளக்கு அலங்காரம் செய்யப் பட்டிருந்தாலும் தெற்கு கோபுரம் கம்பீரமாய்க் காட்சி அளிக்கிறது.  கிட்டப் போனால் சரியாப் படம் எடுக்க முடியலை. சுற்றிலும் உள்ள கடைகளின் வெளிச்சம் வேறு.  அதோடு கோயிலிற்காகப்போட்டிருக்கும் வேறு விளக்குகளின் வெளிச்சங்கள். வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு கோயிலுக்குச் செல்கையிலே எடுத்த படம். காமிரா எடுத்துப் போகலை.  கூட்டத்தில் காமிராவைக் கையாள முடியுமானு யோசனை. செல்லில் எடுத்த படம் தான்.


22--ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மறுபடி தேவஸ்தான அலுவலகம் சென்றார்.  அங்கே சென்றால் 2,000 ரூபாய் டிக்கெட் குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர், முதல் அமைச்சர் போன்றவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு, அவர்களின் சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்களுக்குனு சொல்லிட்டாங்க.  எங்களுக்கு இவங்க யாரையும் தெரியாதுனு சொல்ல முடியாது.  என்ன பிரச்னைனா அவங்களுக்கு எல்லாம் எங்களைத் தெரியாது.  அதான் விஷயம்.  :P :P :P  300 ரூ. டிக்கெட்டில் உங்க பெயர் வந்திருக்கானு போய்ப் பாருங்க, அது  வேறே இடம்னு சொல்லிட்டாங்க.  அதைத் தேடிப் போனால் தேர்ந்தெடுத்தவர்கள் பெயரை வரிசைக்கிரமப் படுத்தி எழுதி எங்கும் ஒட்டவில்லை. யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் எல்லாரிடமும் கேட்டால், ஒருத்தருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை.  அங்கேயே தேவுடு காத்து, ஒரு வழியா யாரோ ஒருத்தர் தான் சொல்வதாகச் சொல்லிச் சில பெயர்களைப் படிச்சுட்டு, உள்ளே போக, 250 பேர்னு சொல்லிட்டு, மத்தவங்க பெயர் இல்லையேனு எல்லாரும் கேட்க, உள்ளே போனவர் திரும்பி வந்து மூன்று தவணைகளில் 250 பெயர்களையும் படித்தார்.  எங்க பெயர் கடைசியில் இருந்தது.  அங்கேயே சித்திரை வீதியில் இருக்கும் ஐஓபியில் பணம் கட்டி டோக்கன் வாங்கச் சொல்ல, அங்கே இருந்த ஒரு வரிசையில் நின்றால் பணம் கட்டும் நேரம் பார்த்து, இது 2,000 ரூ. டிக்கெட், 300 ரூபாய்க்கு வேறே கவுன்டர்னு சொல்லி, அந்தக் கவுன்டர் திறக்கக் காத்திருந்து பணம் கட்டிட்டு வீட்டுக்கு வரச்சே 2-30 மணி ஆயாச்சு!

அடுத்த நாள் இரவு பனிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள்ளாகக் கிளிமண்டபத்திலோ, அர்ச்சுன மண்டபத்திலோ இருக்கணும்னு சொல்லிட்டாங்க.  ஞாயிற்றுக்கிழமை மத்தியானமே ராத்திரி தூங்க வேண்டியதைத் தூங்கிக்கறேன்னு ரங்க்ஸ் தூங்க, எனக்கு சும்மாவே தூக்கம் வராது;  அன்னிக்குப் படுக்கக் கூட நேரமில்லை. அப்புறமா ராத்திரி கொஞ்ச நேரம் படுக்கலாம்னு போனால் நீ தூங்கிடப் போறேனு 11-30 மணிக்கு அலாரம் வைச்சார்.  அவரும் வந்து கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டு உடனே தூங்கிப் போனார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  11-30 ஆகிற வரைக்கும் எழுந்து எழுந்து மணி பார்த்துட்டு, 11-30-க்கு அவரையும் எழுப்பிட்டு இரண்டு பேரும் கோயிலுக்குப் போகத் தயார் ஆனோம். வைகுண்ட ஏகாதசிச் சிறப்புக்காக ஞாயிறு, திங்கள் மட்டும் தடையில்லா மின்சாரம் இருந்ததால் லிஃப்ட் வேலை செய்தது.  இறங்கி ஒரு ஆட்டோ பிடிச்சுத் தெற்கு கோபுர வாசலில் இறங்கிக் கொண்டோம்.  அங்கே இருந்து போலீஸ்காரங்க கெடுபிடி ஆரம்பம்.  எல்லார் கிட்டேயும் டிக்கெட்டைக் காட்டிட்டு நேரே போய்க் கொண்டே இருந்தோம்.  ரங்கா கோபுரமும் வந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள போலீசெல்லாம் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப் பட்டு விட்டது போல் எங்கெங்கு காணினும் போலீஸ் தலை. இதிலே முதல் மந்திரி வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்ய வந்தாலும் வரலாம்னு ஒரு வதந்தீ பரவவே, ஏகக் கெடுபிடி.  மக்களைப் போட்டு வறுத்து எடுத்து விட்டனர்.  ரங்கா கோபுரத்துக் கிட்டே நுழையவே கெடுபிடி. எங்க டிக்கெட்டைக் காட்டினால் நேரே கிளி மண்டபம் வரை போகலாம், என்ன, 2,000 ரூபாய்க்கு ஒரு 250 பேர், 300 ரூபாய்க்கு ஒரு 250 பேர்னு நினைச்சுட்டு வந்த ரங்க்ஸுக்குத் தலை சுற்றல். ரங்கா கோபுரத்திலேயே எங்க டிக்கெட்டைப் பார்த்துட்டு கோபுர வாசலில் நின்று கொண்டிருந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வரிசையில் போய் நிற்கச் சொன்னாங்க.  அப்பாவியாய் நான், "நாங்க 300 ரூ. டிக்கெட் வைச்சிருக்கோம்."னு சொல்ல, "போங்கம்மா, 2,000ரூ டிக்கெட்டே அங்கே தான் நிக்குது.  எல்லாரையும் சேர்த்துத் தான் உள்ளே விடப் போறோம்.  அவங்க சந்தனு மண்டபம் போவாங்க, நீங்க அர்ச்சுன மண்டபம் அவ்வளவு தான்." என ஒரு உள்ளூர்ப் போலீஸ் சொல்ல, மயக்கமே வந்தது.  வரிசையில் எங்களுக்கு முன்னால் சுமார் ஐநூறு பேர் ஏற்கெனவே நின்றிருந்தனர்.  எங்கே இருந்து இத்தனை பேர் வந்தார்கள் என நினைத்தால் கூட்டம், கூட்டமாக எங்கிருந்தோ ஆந்திர மக்கள் வந்து கொண்டிருந்ததோடு எல்லார் கையிலும் இலவச பாஸ். வரிசையில் நிற்கக் கட்டி இருந்த கம்பிகளின் இடைவெளி வழியே உள்ளே நுழைந்து வரிசையில் முன்னாலும் நின்று கொண்டனர்.  மணி பனிரண்டரை ஆகி இருந்தது.  எப்போக் கதவு திறந்து உள்ளே விடுவாங்கனு தெரியலை.

எனக்கோ அதிக நேரம் நின்றால் கால் வீங்கிடும்.  அங்கே உட்கார வசதி இல்லாததோடு நிற்கவும் முடியாமல் கல்லும், மண்ணும் காலைக் குத்தின. வீட்டுக்குள்ளேயே செருப்பில்லாமல் நடக்கக் கூடாது என மருத்துவர்கள் சொல்லி இருக்க, அங்கே இந்தக் கல்லிலும், மண்ணிலும் எத்தனை நேரம் நிற்கணுமோ, தெரியவில்லை. நின்று கொண்டிருந்தோம்.

Tuesday, December 25, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 2


வெள்ளிக்கிழமையும் வந்தது,  அவசரம், அவசரமாச் சாப்பிட்டுட்டுக் கிளம்பினார்.  ஏன்னா அங்கே போனால் ரிசல்ட் தெரிஞ்சதும் உடனே பணம் கட்டணும்.  அதுக்கு எப்படிச் செய்யச் சொல்றாங்களோ, வரதுக்கு நேரமாச்சுன்னா என்ன செய்யறது! அங்கே போனால் இன்னும் ரிசல்ட்டே வரலைனு சொல்லிட்டாங்க.  சரி, எப்போ வரலாம்னு கேட்டால், சாயந்திரமா எதுக்கும் வந்து பாருங்கனு அலட்சியமா ஒரு பதில். என்ன சொல்ல முடியும்?  பேசாமல் திரும்பி வந்தாச்சு.  சாய்ந்திரமாத் தொலைபேசியில் அலுவலகத்தை அழைத்து இப்போ வரலாமா என்று கேட்டால் எதுக்கும் ஆறு மணிக்கு வந்து பாருங்க.  போட்டாலும் போடுவோம்னு பதில் வந்தது.

அப்போத் தான் எனக்கு நினைப்பு வந்தது, சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்துக்காக இரண்டு வருடங்கள் முன்னாடி நாங்க சிதம்பரம் போனதும், அங்கே அருமையான தரிசனம் கிடைத்ததும்.  உண்மையே.  சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்துக்காகச் சிதம்பரம் வரோம்னு எங்க கட்டளை தீக்ஷிதர் கிட்டேச் சொன்னதும்,அவர் எங்களுக்காக லாட்ஜில் நாங்க கேட்டுக் கொண்டதன் பேரில் தங்குமிடம் ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார்.  மற்றபடி உள்ளே அழைத்துக்கொண்டெல்லாம் செல்ல முடியாது என்பதைத் தெளிவாக்கி விட்டார். ஏனெனில் எங்களுக்கு அந்தச் சலுகையைக் கொடுத்தால், பின் அவரிடம் கட்டளை வைத்திருக்கும் அனைவருக்கும் அதே போல் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே யாருக்கும் எந்தவிதச் சலுகையும் கிடையாது எனக் கூறிவிட்டார்.  அதே போல் கோயிலின் அனைத்து தீக்ஷிதர்களும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர்.  எந்தவிதமான விஐபிக்கோ, விவிஐபிக்கோ அங்கே சலுகைகள் கிடையாது.  அன்றன்றைக்குக் கட்டளை நடத்தும் கட்டளைதாரர்கள் தவிர மற்றவர் யாரும் சந்நிதிக்கு அருகே வர முடியாது.  பொதுமக்களில் முன்னால் வந்து இடம் பிடித்துக்கொண்டவர்கள் இருக்கலாம்.  மற்றபடி உள்ளே நுழைய முடியாதவர்கள் வெளியே இருந்து பார்த்துக்கொள்ளலாம்.

http://sivamgss.blogspot.in/2010/12/blog-post_27.html  ஆருத்ரா தரிசனம் குறித்த வர்ணனைகளை இந்தத் தலைப்பில் உள்ள பதிவுகளில் காண முடியும்.  வெளியே இருந்து பார்ப்பவர்களும் எந்தவிதமான தள்ளுமுள்ளோ கூட்டத்தின் நெரிசலோ இல்லாமல் பார்க்க முடிகிறது.  நடராஜர் வரும் வழியில் இரு பக்கமும் பொதுமக்கள் ஒதுங்கி நின்று பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருப்பார்கள்.  அங்கே பொதுமக்கள் கூட்டமாக நின்றாலும் அனைவருக்கும் தெரியும் வண்ணமே நடராஜர் ஆடிக்கொண்டே செல்வார்.  நடராஜரைச் சுற்றி வரும் கூட்டம் தாங்க முடியாத அளவில் எல்லாம் இருக்காது.  திருவிழாக் கூட்டம் என்னமோ தாங்க முடியாமல் தான் இருக்கும்.  ஆனாலும் தடுப்புக்களோ, தர்மதரிசன வரிசை தனி, ஐம்பது ரூபாய் சீட்டுக்குத் தனி, 300 ரூபாய்க்குத் தனினு கம்பி கட்டிப் பிரிச்செல்லாம் போட்டிருக்க மாட்டார்கள்.  அனைவருக்கும் சிறப்பு தரிசனமே.  யாரையும் வரிசையில் மணிக்கணக்காய் நிறுத்திக் காக்க வைத்துத் துன்புறுத்தாமல் அனைவரும் ஒரே சமயத்தில் அழகாய்ப் பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருப்பார்கள்.  தினசரி சுற்றுலாவாக வரும் மக்களும் சரி, உள்ளூர் மக்களும் சரி, நடராஜரைத் தரிசிக்க எந்தவிதக்கட்டணமும் கிடையாது.  தாராளமாகச் சென்று பார்க்கலாம்.  கனகசபையில் ஏறிப் பார்க்க மட்டும் உள்ளூர் தீக்ஷிதர்கள் அனுமதியின் பேரில் தான் செல்ல முடியும்.  ஆனால் கீழே நின்றாலே நடராஜர் திவ்ய தரிசனம் தருவார்.  யாரும் மறைக்க மாட்டார்கள். போ, போனு விரட்டவும் மாட்டார்கள்.  அங்கேயே இருந்து நிதானமாகக் கால பூஜைகள் கூடப் பார்க்கலாம்.  உள்ளே சென்று தரிசனம் செய்ய எந்தவிதமான வரிசைகளும் இருக்காது.  கட்டணமும் கிடையாது. 

ஆனால் இங்கேயோ தினசரி தரிசனத்தில் கூட ரங்கநாதரைத் தரிசிக்க இயலாது.  கட்டணம் என்பதோடு மட்டுமில்லாம் கூட்டம் வேறே.  அரை நிமிஷம் தான் பெருமாளைப் பார்க்க முடியும்.  பிடிச்சுத் தள்ளிடுவாங்க.  திருப்பதியில் தள்ளுகிறாப்போல் இங்கேயும் தள்ளுவாங்க.  என்ன ஒரே வித்தியாசம்னா திருப்பதியில் காவல்துறை தள்ளிவிடும்.  இங்கே அந்த வேலைகளை ஒரு பட்டாசாரியாரே செய்வார். இவங்களோட கெடுபிடி இல்லைனா மக்கள் பாட்டுக்குத் தரிசனம் செய்து விட்டுச் செல்வார்கள்.  இதைவிடக் கூட்டம் அதிகமான சபரிமலையில் எல்லாம் எல்லாரும் நன்றாக தரிசனம் செய்கிறார்கள்.  இன்னும் பல கோயில்கள் பார்த்திருக்கேன்.  பண்டர்பூரில் பண்டரிநாதனைத் தொட்டுத் தடவி தரிசிக்க இயலும். பணம் கொடுத்தால் பிரசாதம் கிடைக்கும் என்பது ஒன்று மட்டுமே அங்கேயும், இங்கேயும் உள்ள வித்தியாசம்.  மற்றபடி பண்டர்பூரிலும்  தள்ளிவிடுதல் கிடையாது.  நாசிக், பஞ்சவடி, ஷிர்டி, உடுப்பி, மூகாம்பிகை, மந்த்ராலயம், அம்பாஜியில், துவாரகையில், சோம்நாத்தில், காசியில் எனப் பல ஊர்களைப் பார்த்தாச்சு.  குருவாயூரில் மட்டும் உள்ளூர் மக்கள் நம்மை முந்திக்கொண்டு செல்வார்கள்.  மற்ற ஊர்களில் எங்கேயும் கோயில்களுக்குச் சென்றால் எந்தவிதமான தடையும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.  ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோயிலிலும், (சிதம்பரம் நீங்கலாக) நாம் கட்டணம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என்பதோடு கட்டண தரிசனமும் அரை நொடி மட்டுமே.  இதை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த வடநாட்டு யாத்ரிகர்கள் பேசிக் கொண்டதைக் கேட்க நேர்ந்தது.

பொதுவாக குஜராத்திலேயே எந்தக் கோயில்களுக்குச் சென்றாலும் பெண்களுக்கு எனத் தனிவழி வைத்திருப்பார்கள்.  அது அனைவரும் பார்க்கும் பொது தரிசன மேடைக்கு முன்னாலேயே அமைந்திருக்கும்.  இதன் மூலம் ஆண்கள் தொந்திரவோ, அவர்கள் மறைப்பார்கள் என்பதோ இல்லாமல் பெண்கள் பார்க்க முடியும் என்பதோடு ஒவ்வொருவரும் மற்றவர் முன்னே நின்று பார்க்கவும் இடம் விட்டு, அனுசரித்து நடப்பார்கள் என்பதையும் கூற வேண்டும்.  ஆண்களோடு சேர்ந்தும் பெண்கள் தரிசனம் செய்ய எந்தத் தடையும் இல்லை.  என்றாலும் தனியாக ஒரு வழி எல்லாக் கோயில்களிலும் கட்டாயமாய் இருக்கும்.  கிருஷ்ணன் பெண்களுக்குப் பிரியமானவன் என்பதால் கிருஷ்ணன் கோயில்களில் எல்லாம், அதுவும் முக்கியமாய துவாரகையில் பெண்களுக்கே முன்னுரிமை.  தள்ளு, முள்ளு இல்லாத முன்னுரிமை.  இது குஜராத்தில் மட்டுமே நடக்கும்.

Monday, December 24, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 1

வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதைப் பல்லாண்டுகளாய்த் தொலைக்காட்சி மூலம் பார்த்து வருகிறோம்.  நாங்க மதுரையில் இருந்த வரையில் அப்பா மேலமாசி வீதி கூடலழகர் கோயிலுக்கும், நான், அண்ணா, தம்பி, அம்மா, வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கும் ஸ்வர்க வாசல் திறக்கப் போயிடுவோம்.  வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் கோஷ்டிகளில் நாங்கள் கலந்துக்காத நாட்கள் சொற்பமே.  அந்தப் பிரசாதத்தின் சூடுக்கும், சுவைக்குமே அங்கே போவோம் என்று சொல்வதில் தயக்கமே இல்லை.  பொதுவாய்ப் பெருமாள் கோயில்களில் எப்போவும் ஏதேனும் ஒரு சந்நிதியில் ஏதேனும் ஒரு சாப்பாடோ அல்லது லட்டு, அதிரசம், வடை போன்றவையோ கொடுத்துட்டுத் தான் இருப்பாங்க.  பெருமாள் கோயில்களுக்குப் போயிட்டு வெறும் வயிறோடு வந்தோம்னே இருக்காது. :))))

ஹிஹிஹி, சொர்க்க வாசல் பத்தி ஆரம்பிச்சுட்டுப் பிரசாதத்துக்குப் போயிட்டேனா!    வடக்குக் கிருஷ்ணன் கோயில் சொர்க்க வாசலுக்கு நிறையத் தரம் போயாச்சு.  கோயில் ஒரு மாடக்கோயில்.  பல படிகள் ஏறி மேலே போகணும்.  நாங்க முன்னாடியே போய் உள்ளே இடம் பிடிச்சுப்போம்.  மேலாவணி மூலவீதியிலேயே வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு பிரிவதால் சிரமம் ஒண்ணும் இல்லை. கிருஷ்ணரோட இராப்பத்து, பகல்பத்து உற்சவங்களை பள்ளியில் அரைப் பரிக்ஷை நேரமாக இருந்தாலும் பார்க்காமல் இருந்தது இல்லை.  ஸ்கூல் பாடமெல்லாம் படிச்சு முடிச்சுட்டு சாப்பாடும் சாப்பிட்டுட்டு இராப்பத்துக்குக் கிளம்புவோம்.  உற்சவக் கடைசி நாள் கண்ணாடிப் பல்லக்கு திருநெல்வேலிக் கண்ணாடிச் சப்பரம்னு அலங்காரம் தூள் பறக்கும்.  குதிரை வாகனத்தில் வையாளி சேவையும் பார்த்திருக்கேன்.  வையாளி சேவை குறித்துப் பழம்பாடல் ஒண்ணு எங்கோ படிச்சது அரைகுறை நினைவு.

வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி”


என்று நினைவு.   இதையெல்லாம் அவ்வப்போது ரங்க்ஸ் கிட்டே பேசிண்டு இருக்கிறச்சே சொல்லுவேன்.  இப்போ ஸ்ரீரங்கம் வந்ததும், அவருக்கு வைகுண்ட ஏகாதசிக்குச் சிறப்பு தரிசனத்துக்குப் போகணும்னு ஆவல்.  அவர் சிதம்பரம், கும்பகோணம் ஆகிய ஊர்களில் படிச்சாலும் இதெல்லாம் பார்த்ததில்லை.  ஆகவே வைகுண்ட ஏகாதசிக்குச் சில நாட்கள் முன்னால் இருந்தே தகவல்கள் திரட்டினார்.  அப்போ எதிர் வீட்டுக்காரங்க திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் அடங்கிய புத்தகத்தைக் கொடுக்க, அதிலே சிறப்புச் சேவைக்கட்டணமாக ௹. 2,000/- இது சந்தனு மண்டபத்திலே பெருமாள் முதல்லே வரச்சே பார்க்கக் கூடிய இடம் , அடுத்து ௹ 300/-  இது கிளி மண்டபம் தாண்டி அர்ச்சுன மண்டபத்திலே இருந்து பெருமாள் பிராஹாரம் சுத்திப் போறப்போப் பார்க்கிறதுக்கு என இரண்டு திட்டங்கள் போட்டிருந்தன.  கூடவே அலுவலகத் தொலைபேசி எண்ணும் கொடுக்க, தொலைபேசி விசாரிக்கையில் விண்ணப்பம் எழுதிக் கொண்டு கொடுக்கச் சொன்னாங்க.  நாங்க விசாரிச்ச அன்னிக்குத் தான் விண்ணப்பம் கொடுக்கக் கடைசி நாள்.  அவசரம் அவசரமாக ஓடினால், ஃபோட்டோ வேணும்னு கேட்க, அவரோட ஃபோட்டோ இருந்தது.  என்னுடையது கிடைக்கலை.  அங்கே இங்கே தேடிக் கண்டு பிடிச்சு ஒரு ஃபோட்டோவைத் தேத்தி எடுத்துக் கொண்டு கொடுத்தார்.

விண்ணப்பத்தை வாங்கினதுமே உங்களுக்கு ௹.2,000/- கிடைக்காது.  300௹ தான் கிடைக்கும்னு சொன்னாங்களாம்.  பார்க்கலாம்னு சொல்லிட்டு ரிசல்ட் என்னிக்குனு கேட்டுட்டும் வந்தார்.  பரிக்ஷை ரிசல்டை விட இந்த ரிசல்டை அதிகம் எதிர்பார்த்தோம்.  21, 22 தேதிகளில் ரிசல்ட் எனச் சொன்னார்கள்.  இதுக்கு நடுவே வீட்டில் விருந்தினர்கள் வருகையும், போகையுமாக இருக்க வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது.


பின் குறிப்பு:  இந்தப் பதிவுகளில் இம்மாதிரிப் பொதுவான விபரங்கள் மட்டுமே கொடுக்கிறேன்.  வைகுண்ட ஏகாதசி குறித்த விபரமான பதிவுகளை ஆன்மிகப் பயணம் பக்கத்தில் சென்று பார்க்கவும். நன்றி. :)))

Friday, December 21, 2012

இங்கே தான் இருக்கேன். :)

வீட்டிலே நண்பர்கள் வரவு.  இங்கே தான் இருக்காங்க.  அதனாலும், எனக்கு ஓய்வு கிடைக்கையில் மின்சாரம் கிடைக்காமையாலும் பதிவுகள் இல்லை.  மேலும் நண்பர்கள் வரலாம்.  ஆகவே நேரம் கிடைக்கையில் எல்லார் பதிவையும் (பெரிசா என்னமோ போறாப்பல) போய்ப் பார்க்கிறேன்.

யாருங்க அது முணுமுணுப்பு??  :)))))

போறதில்லை தான்.  வாய்க்கும் நேரம் அப்படி.  40 நிமிஷம் சேர்ந்தாப் போல் உட்கார்ந்தால் முக்கிய மடல்கள் மட்டுமே பார்க்க முடிகிறது.  

"யாரோ கேட்டாப்பல!"  (ஹிஹி,இது என் ம.சா. இப்படித் தான் சொல்லிக்காட்டும். திடீர்னு காணாமயும் போகும்.)

எதுக்கும் கொஞ்சம் பொறுங்க.  

Saturday, December 15, 2012

இதெல்லாம் ஒரு எழுத்தா!

//அப்பாடா! ஒரு வழியா முடிச்சாச்சு'லே ஒரு நிம்மதி தெரியறது. :))))//

நான் எழுதின கதைக்கு ஜீவி சாரின் கமென்டின் ஒரு பகுதி இது.  உண்மை தான். நிம்மதியாத்தான் இருந்தது.  என்னா நான் எழுத நினைச்சது ஒண்ணு;  அது எங்கேயோ போயிடுச்சு!  எழுதினது வேறே.  அதை முடிக்க நினைச்சது ஒரு மாதிரி.  ஆனால் அந்த முடிவைக் கூடக் கொடுக்கலாமா வேண்டாமானு யோசிக்க வைச்சது கதையோட போக்குப் போன விதம்.  இதுக்கு நான் பொறுப்பில்லை.  ஏன்னா எழுத ஆரம்பிச்சது கொஞ்சம் உண்மைக்கதை.  ஆனால் பின்னால் அது கற்பனையாக மாறிவிட்டது.  உண்மையை உள்ளது உள்ளபடியே சொன்னால் யாரு தாங்கிப்பா?  சரினு கதை போன போக்கிலே போக ஆரம்பிச்சுட்டேன்.

இதுக்கு நடுவிலே ஜீவி சார் அகிலாண்டம் மாதிரி அம்மாக்கள் இருக்க வாய்ப்பில்லை; அதனால் அவங்க ஏதோ ஒரு காரணத்துக்காகத் தியாகம் பண்ணினாங்கனு எழுதுங்கனு ஐடியா கொடுத்தார்.  அகிலாண்டத்தை விட மோசமான அம்மாக்களைப் பார்த்தாச்சு! :)))  நல்லதே பார்க்கலையானு கேட்க வேண்டாம்.  நல்ல அம்மாக்களையும், மாமியார்களையும், நாத்தனார்களையும், மருமகள்களையும் பார்த்தாச்சு!  ஆனால் இங்கே எழுத வந்ததோ சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் கண்டு கேட்டறிந்த ஒரு உண்மையான நபரின் உண்மையான வாழ்க்கை.  

இப்போ எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களை உடன் பிறந்த சொந்தங்களே ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுட்டாங்க என்பதை மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்தேன்.  திருமதி திலகவதி ஐபிஎஸ் மூலம் அவங்க முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டாலும் அவங்க நிம்மதியாகவோ சந்தோஷமாகவோ இல்லை;  இருக்கவும் இருக்காது.  ஏனெனில் அப்படிப் பட்டதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்க.  அம்மாதிரியான வாழ்க்கையை வாழாவிட்டாலும் கல்யாணம் ஆனது முதல் பிறருக்கு உழைத்துத் தனக்கென சொந்தமாக ஒரு குழந்தைக்கு ஏங்கிய ஒரு பெண்ணின் கதையை எழுதப் போய் கடைசியில் சொல்லத் தெரியாமல் எதையோ எழுதி ஒப்பேத்தினேன்.  அதுக்கும் பாராட்டுகளைப் பார்க்கிறச்சே மனம் கூசுகிறது.   ஏனெனில் நான் எதையோ எழுதி ஒப்பேத்தினேன் என்பதை நான் மட்டுமே அறிவேன்.  கடைசி நேர மாற்றமும் திடீர்னு தோன்றிய ஒன்று.  ஏனெனில் அகிலாண்டத்தை விட மோசமான அம்மாக்களைப் பார்த்திருக்கேன்.  அந்தப் பாத்திரப் படைப்பு ஓரளவு உண்மையானதே.  குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் சொல்வது தவிர.  நிஜத்தில் அப்படி நடக்கலை.  ஆனால் மகன், மருமகளுக்குக் குழந்தை பிறக்க வேண்டாம் என்று சொன்ன தாய்மார்களை சினிமாவில் மட்டுமில்லாமல் நேரிலும் பார்க்கலாம். ஆகவே அதில் மாற்றம் செய்ய விருப்பம் இல்லை.  ஆனால் பாராட்டுக்கள் தான் மனம் உறுத்துகிறது. 

அதிலும் இன்னிக்குக் கல்கியில் வந்திருக்கும் ரிஷபனின் கதையைப் படிச்சப்புறம்,  அதிலே வரும் குஞ்சம்மாவைப் பார்த்தப்புறம், அப்பாதுரையின் அறுந்த காற்றாடியைப் பார்த்தப்புறம், ராமலக்ஷ்மி மாமியும், பசுபதி சாரும் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தப்புறம் இதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு ஆகிவிட்டது.

இதெல்லாம் ஒரு எழுத்தானு தோன்றுகிறது.

Thursday, December 13, 2012

அப்பாடா! ஒரு வழியா முடிச்சாச்சு! :))))


மறுநாள் வரப் போவது யார் எனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள் ராதா.  ரம்யா அங்கே வந்து என்ன விஷயம் எனக் கேட்க, மறுநாள் அகிலாண்டத்தைச் சந்திக்க எவரோ வரப் போவதாய்ச் சந்துரு கூறியதையும், மற்ற விபரங்களையும் தெரிவித்தாள் ராதா.  ரம்யாவின் முகம் ஒரே கணம் கலங்கினாற்போல் மாறினாலும் சுதாரித்துக் கொண்டாள் அவள்.  அப்படியா என்ற வண்ணம் சித்தப்பா வீட்டுக்குப் போவதாய்க் கூறிவிட்டுக் கிளம்பினாள்.  அடுத்த நாள் காலை வந்தவர் வேறு யாரும் இல்லை.  கிருஷ்ணமூர்த்தியே தான்.  எனினும் ரம்யா மட்டுமே அவரைப் பார்த்திருந்ததால் சந்துருவுக்கும் அவரை முதல்முறையாகப் பார்ப்பதால் முதலில் புரியவில்லை.  ரம்யாவே அவரை வரவேற்றாள்.  பின்னர் தன் அண்ணாவான சந்துருவிடம், என் மாமியாரின் அக்கா புருஷர் என அறிமுகம் செய்தாள்.

ராதாவுக்குக் குழப்பம் தான் இன்னமும் மேலோங்கியது.  என்ன கேட்க அல்லது என்ன சொல்லப் போகிறார் இவர்!  இதற்குள்ளாக அகிலாண்டத்தை எங்கே என்று கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.  அகிலாண்டம் வர மறுப்பதாயும், அவள் வித்யாவிடமோ, லதாவிடமோ செல்ல வேண்டும் எனக் கிளம்ப ஏற்பாடுகள் செய்வதாகவும் ரம்யா கூறினாள்.  "அப்படியா!  சந்துரு, நீ உடனே போய் அவளை இங்கே அழைத்து வா!  அதற்குள் ராதாவுக்கு நான் அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்."  என்றார் கிருஷ்ணமூர்த்தி.  தம்பி வீட்டுக்குச் சென்ற சந்துரு அங்கே ஊருக்குக் கிளம்பாமல் உடல் நலம் சரியில்லை எனச் சொல்லிப் படுத்திருந்த அகிலாண்டத்தையே கண்டான்.  பின்னர் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.  கூடவே தன் இரண்டாவது பிள்ளையையும், நாட்டுப்பெண்ணையும் அழைத்தாள் அகிலாண்டம்.  சந்துரு திட்டமாக மறுத்துவிட்டான்.  "நீ மட்டும் வந்தால் போதும்!"  தீர்மானமாய்க் கூறினான்.  தயங்கித் தயங்கி வந்தாள் அகிலாண்டம்.  வீட்டு வாசற்படி ஏறவே அவளுக்குக் கூச்சமாக இருந்தது.  எப்போதும் போல் இவளைக் கண்ட ரம்யா உள்ளே செல்ல யத்தனிக்க, கிருஷ்ணமூர்த்தி தடுத்தார்.

ராதாவின் முகத்தில் காணப்பட்ட புதுப் பொலிவு அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதைக் காட்டியது.  அகிலாண்டம் நிற்க முடியாமல் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் சரிந்து அமர்ந்தாள்.  கிருஷ்ணமூர்த்தி, அவளைப் பார்த்து, "இப்போதாவது உண்மையை ஒத்துக் கொள்கிறாயா?  இல்லை எனில் நான் ஆதாரங்களோடு  ரம்யா சந்துருவின்/ ராதாவின் குழந்தை இல்லை என நிரூபிக்கவா?" என்று கேட்டார்.  அகிலாண்டம் வாயையே திறக்கவில்லை.  சற்று நேரம் மெளனம் காத்த கிருஷ்ணமூர்த்தி, "சந்துரு, நான் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்து சத்தமாய்ப் படி!" என்றார்.  சந்துருவுக்குக் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதினாரா?  எப்போது? சந்துரு ஏன் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை!  ராதா மட்டுமில்லாமல் அகிலாண்டமும் கலங்கினாள்.  சந்துரு உள்ளே போய்க் கடிதத்தைக் கொண்டு வந்தான்.  ரம்யாவின் கல்யாணத்துக்குச் சில நாட்கள் முன்னர் இந்தக் கடிதம் வந்ததாகவும், படித்ததில் இருந்து தான் எப்படி ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என நினைத்து மிகவும் வருந்தியதாகவும் அகிலாண்டத்தைப் பார்த்துச் சொன்னான்.   கடிதத்தில்:

"அன்புள்ள சந்துரு,

உன் அருமைத் தாய்மாமன் கிருஷ்ணமூர்த்தி ஆசிகளுடன் எழுதுவது.  இப்பவும் உன் பெண் ரம்யாவை பாஸ்கருக்குக் கொடுக்கப் போவதாய்ச் செய்திருக்கும் ஏற்பாடுகளும், கல்யாணப் பத்திரிகையும் எனக்குக் கிடைத்தது.  என்னடா, இது யார் புதுசா தாய் மாமன்?  அகிலாண்டத்துக்கு நமக்கும் தெரியாமல் கிருஷ்ணமூர்த்தினு ஒரு அண்ணாவா? என நினைக்கிறாய் இல்லையா?  இல்லை, குழந்தை, இல்லை.  நான் அகிலாண்டத்தின் அண்ணனோ, தம்பியோ இல்லை.  அந்தப் பாவியால் தான் நான் இத்தனை வருடமாக ஊர்ப்பக்கமே வராமல் இருந்தேன்.  ஆனால் இப்போது உன் குழந்தைக்குக் கல்யாணம்னு தெரிந்து எப்படி வராமல் இருப்பது!  எப்படி உனக்குச் சேர வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பது!  அதுதான் என்னை இந்தக் கடிதம் எழுதத் தூண்டியது.

அப்பா சந்துரு, நீ பிறந்தபோதே உன் அருமைத் தாயும் என் தங்கையுமான மீனாக்ஷி இறந்துவிட்டாள்.  பிரசவமே சிக்கலாகத் தான் இருந்தது.  என்றாலும் மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உன்னை மட்டும் காப்பாற்றி விட்டார்கள்.  அவர்களின் பலத்த முயற்சியாலும் உன் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த  அகிலாண்டம் உன் தாய்க்கு உதவி செய்ய வேண்டி சம்பளத்துக்கு வந்தவள்.  புண்யாஹவசனம் வந்த உன் அப்பா குழந்தையைக் கொஞ்ச நாட்கள் வைத்துக்கொள்ளும்படியும், தனக்கு மனம் கலங்கி இருப்பதால் நாங்கள் தான் குழந்தையை வளர்க்கும்படி இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.  ஆனால்  உன் அப்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்து உன் தாய் இறந்த ஒரே மாசத்துக்குள்ளே அவரைக் கல்யாணமும் செய்து கொண்டு விட்டாள், இந்த அகிலாண்டம்.  நாங்கள் குழந்தையோடு தவித்துக் கொண்டிருக்கையிலேயே, இங்கே கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. பின்னரும் குழந்தையான உன்னை அவள் கைகளில் ஒப்படைக்க எங்களுக்குச் சம்மதம் இல்லை.  ஆனால் உன் அப்பாவோ வக்கீல் மூலம் தான் குழந்தைக்காகவே இன்னொரு கல்யாணம் செய்து கொண்டிருப்பதாய்க் காட்டிக் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டார்.  சந்துரு, நீ அப்போது மூன்று மாதக் குழந்தை. பூர்வீகச் சொத்துக்களில் உன் தாய்க்கு எனத் தனிப்படச் சொத்துக்கள் உண்டு.  அவற்றுக்காகவே இந்த அகிலாண்டம் திட்டம் போடுகிறாள் என்பது எங்களுக்குப் புரிந்தது.  நல்லவேளையாகச் சொத்துக்களை உன் தாயின் பேரில் என் அப்பா இன்னமும் மாற்றாமல் இருந்தார்.  அகிலாண்டம் இதை எதிர்பார்க்கவில்லை.  சொத்துக்கள் உன் தாய் பெயரில் இருக்கும் எனவும் குழந்தையைக் காரணம் காட்டி அதை வளர்க்க வேண்டும் என உன் தந்தையை கார்டியனாகப் போட்டுச் சொத்துக்களைத் தன் வசம் கொண்டு வர நினைத்திருந்தாள்.  அது நடக்கவில்லை.

ஆனால் அகிலாண்டம் விடுவாளா?  குழந்தையைத் தாங்களே வளர்க்கப் போவதால் அதற்குச் சேர வேண்டிய தாய்வழிச் சொத்துக்களைக் கேட்டு வாங்கும்படி உன் அப்பாவை நச்சரித்தாள்.  உன் அப்பாவும் வந்து வந்து கேட்டான்.  ஆனால் என் அப்பா மசியவே இல்லை.  சொத்துக்களை உன் பெயரில் எழுதி வைத்தால் கூட ஆபத்து என்பதைப் புரிந்து கொண்ட அவர் உனக்குப் பிறக்கும் குழந்தை பெயரில் எழுதி வைத்தார்.  அந்தக் குழந்தைக்கும் கல்யாணம் என்னும்போது உண்மையைத் தெரிவிக்கும்படியும், சொத்துக்களைக் கொடுக்கும்படியும் எழுதி வைத்துவிட்டார்.  அதனாலேயே இப்போது உன் பெண்ணுக்குக் கல்யாணம் எனத் தெரிந்து கொண்டு இந்தக் கடிதம் எழுதுகிறேன்.  உன் பெண் கல்யாணத்தில் பாட்டி வீட்டுச் சீதனமாக அந்தச் சொத்துக்களை அளிக்கிறேன்.  இந்த ஒரே பெண் தானாமே உனக்கு!  ஏனப்பா மேலே குழந்தைகள் வேண்டாம் என இருந்துவிட்டாய்!  இந்தக் காலத்து இளைஞர்களே இப்படித்தான்.  ஒன்றிரண்டோடு நிறுத்தி விடுகின்றனர்.  நீயும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டாய்/  உனக்கும், உன் மனைவி ராதாவுக்கும் என் ஆசிகள்.  தற்சமயம் அகிலாண்டத்திடம் எதையும் சொல்ல வேண்டாம்.  மறுபடி ஏதேனும் பிரச்னை பண்ணுவாள். "

என முடித்திருந்தார்.  இதைப் படித்த சந்துருவுக்குத் தான் ஏமாற்றப் பட்டதை நினைத்து வருந்தினாலும் அகிலாண்டம் தன் தாய் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது எனலாம்.  ஆனாலும் தன் தாயின் நினைவாகக் கொடுக்கப் படும் சொத்துக்கள் தன் வயிற்றில் பிறந்த வாரிசு இருந்திருந்தால் அந்தக் குழந்தைக்குச்  சேருவதே  நல்லது என நினைத்தாலும் இனி என்ன!  அவற்றை ரம்யாதான் அனுபவிக்கட்டுமே என நினைத்தான். அவன், மாமாவுக்கு, ரம்யா தங்கள் வயிற்றில் பிறந்த பெண் இல்லை என்பதையும், (ஆனால் அகிலாண்டத்தின் பெண் அவள் என்பதைச் சந்துரு கூறவில்லை.) எனினும் வயிற்றில் பிறந்த பெண்ணாகவே பாவித்து அவளை வளர்த்து வந்ததாகவும், கூறிவிட்டுக் கல்யாணத்தில் அவரை எதிர்பார்ப்பதாகவும், ரம்யாவுக்கு அவர் அளிக்கப் போகும் பரிசுக்கு நன்றி எனவும் எழுதினான்.  சந்துருவின் பதிலைப் படித்த கிருஷ்ணமூர்த்திக்கோ, சந்துருவின் வயிற்றில் பிறக்காத ஒரு பெண்ணுக்கு ஏன் தங்கள் பூர்வீக சொத்தைத் தர வேண்டும் என்றே தோன்றியது.  சந்துரு அளவுக்கு அவரிடம் பெருந்தன்மை இல்லை.  ஆகையால் கல்யாணத்துக்குப் போகாமல் தட்டிக் கழித்தார்.  பின்னர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆசையுடன் தன் மைத்துனி வீட்டுக்கு வந்தவருக்கு ரம்யாவைப் பார்த்ததுமே அகிலாண்டத்தின் திட்டம் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்து விட்டது.  சந்துரு ஏன் அகிலாண்டத்தின் பெண் தான் ரம்யா எனச் சொல்லாமல் விட்டான் என்பதும் அவன் பெரிய மனதும் புரிந்தது. ஆனாலும் விடாமல் ரம்யாவிடமும் உண்மையைக் கூறினார்.

இந்தக் காலத்துப் பெண்ணான ரம்யாவுக்குத் தன் தாய் செய்தவற்றில் சம்மதம் இல்லை.  அவளைத் தன் தாய் என்று சொல்லவே மனம் கூசினாள்.  தன் சொந்த அண்ணா என நினைத்த சந்துருவும், தன் தாயின் மூத்தாள் மகன் ஆகிவிட்டான். ஆனால், தன் சொந்த அண்ணா தனக்கென ஒரு துரும்பைக் கூடத் தராமல் இருப்பதும் மூத்தாள் மகனான சந்துரு தன்னைப் பெற்ற பெண் போல் வளர்த்ததும், ராதா அநாவசியமாக அகிலாண்டத்தினால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதும் அவள் நினைவில் மோதி அவளை அவள் மனசாட்சியே  வாளாக அறுத்தது.  ஆகவே அவளே கிருஷ்ணமூர்த்தியை நேரில் தன் பிறந்த வீட்டுக்கு வந்து அகிலாண்டத்தின் உண்மை முகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டாள்.   எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் தவித்த அவள் இப்போது உண்மை வெளிவந்ததும், ஆறுதலே அடைந்தாள்.

அகிலாண்டமோ குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.   தான் போட்ட திட்டம் தவிடுபொடியாகித் தன் வயிற்றில் பிறந்த பெண்ணே தனக்கு எதிரியாகத் திட்டம் போட்டதும் அவள் மனதை அறுத்தது.  கிருஷ்ணமூர்த்தி அகிலாண்டத்தைப் பார்த்து, " இந்த வயசில் ராமா, கிருஷ்ணா எனச் சொல்லிக் கொண்டு போகும் காலத்துக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள் அகிலாண்டம்.  இனீயாவது திருந்து!" என்றார்.  ரம்யாவோ, "மாமா, அண்ணாவுக்கும், மன்னிக்கும் குழந்தை பிறக்கும்.  கட்டாயம் பிறக்கும்.  இந்தப் பாவி மட்டும் அதற்கும் தடை சொல்லாமல் இருக்க வேண்டும்."  என்றாள்.

"இனி அவளால் ஒன்றும் செய்ய முடியாது அம்மா;  அகிலாண்டத்தின் வயிற்றில் பிறந்தும் உன்னிடம் இவ்வளவு பெருந்தன்மை இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.  சந்துருவுக்கும், ராதாவுக்கும் குழந்தை பிறக்கட்டும்;  நிச்சயம் நான் உயிலைக் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன். அது வரை இந்த அகிலாண்டத்தை நம்ப முடியாது. "  என்றார் கிருஷ்ணமூர்த்தி.


இவ்வளவுக்கும் அகிலாண்டம் வாயையே திறக்கவில்லை.

முடிந்தது.

********************************************************************************

சந்துருவுக்கும், ராதாவுக்கும் அடுத்த ஒன்றரை வருடங்களில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பதைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். ரம்யாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது.

Wednesday, December 12, 2012

சந்திரசேகரரும், காவிரியும்

நேற்றைய வானில் சந்திரன் பிறையாகத் தெரிந்ததையும் கீழே சாய்வான கோணத்தில் ஒரு கிரஹத்தையும் பார்த்தேன்.  காவிரியில் கர்நாடகாவின் கருணையில் வந்த ஒரு நாள் தண்ணீரைப் படம் எடுக்கத் தயாராப் போனால், சந்திரன் முன்னே வந்து என்னை எடுனு சொல்ல, அவரை எடுத்துட்டுக் காவிரியையும் எடுத்தேன்.  அடுத்துக் காவிரியில் தண்ணீர்க் காட்சிகள்.  நான்  முதல்லே பார்த்தப்போ அகண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காவிரியின் அகலத்தைப் பார்த்துப் பிரமித்திருக்கேன்.  இப்போ மனிதர்கள் மனம் போல் சுருங்கிய காவிரியின் முகம்.

இது கொஞ்சம் தென் மேற்குப் பகுதியில் தெரியும் காட்சி.   எதிர்க்கரையில் திருச்சியின் சிந்தாமணிப் பகுதி விளக்குகளோடு தெரிகிறது.


இது மேற்குப் பக்கமாகத் தெரியும் காட்சி.  எதிர்க்கரையில் கரூர் செல்லும் ரயில், சாலைப் போக்குவரத்துத் தடங்கள் இருக்கும்.


கொஞ்சம் தென் கிழக்குப்பக்கத்தின் காட்சி.  அடர்த்தியாக வீடுகள் இருப்பதால் முழுக் காட்சியும் தெரியாமல் மறைக்கிறது.

Tuesday, December 11, 2012

நான் அமரன்!என்றென்றும் அமரனான மீசைக்காரருக்கு இன்று பிறந்த நாள்.  வணங்குகிறோம்.

Monday, December 10, 2012

இந்தக் கதையை எப்படியும் முடிச்சுடுவேன்!:))))))


ரம்யா பிறந்த வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. திடீர் என இரண்டு நாட்கள் முன்னாடி தான் வந்தாள்.  நல்ல வேளையாகத் தனியாக வரவில்லை. பாஸ்கருடனேயே வந்தாளோ, ஒரு கவலை விட்டதோ!  ராதாவின் மனதில் இரண்டு, மூன்று நாட்கள் முன்னர் நடந்த சம்பவம் ஓடியது.

அன்று காலை ஏழு மணி இருக்கும்.  செவ்வாய்க்கிழமை.  செவ்வாய்க்கிழமையிலேயே சஞ்சலம் வாய்ந்த செய்திகள் வரும் என சந்துரு சொல்லுவான்.  ராதாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் சந்துருவை மறுத்துப் பேசுவதில்லை.  காலை சந்துரு அலுவலகம் கிளம்பும்போது தொலைபேசி அழைப்பு வந்தது.  ராதா எடுத்துப் பேசினாள்.  ரம்யாவின் மாமியார் தான் பேசினார்.  ரம்யாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றும், அவர்களை எல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாள் என்பதால் பாஸ்கரே காரில் அழைத்து வந்து விடுவதாகவும், சில நாட்கள் அங்கே இருக்கட்டும், பின்னர் பாஸ்கரே வந்து அழைத்துச் செல்வான் என்றும், கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் கூறினாள்.  ஆனாலும் ராதாவுக்கு மனம் கிலேசம் அடைந்தது.  அன்று பேசினப்போ கூட நன்றாகத் தானே பேசினாள்!  திடீரென என்ன வந்துவிட்டது இந்தப் பெண்ணுக்கு!  கவலையுடன் சந்துருவிடம் விஷயத்தைத் தெரிவித்தாள்.  சந்துரு சிரித்தான்.

"நீ பெத்தியோ இல்லையோ, பாசம் உனக்கு அதிகமாய்த் தான் இருக்கு!  அதெல்லாம் ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு அவங்களே சொல்லி இருக்காங்க இல்லை! அப்புறம் என்ன!  அநாவசியமாக் கற்பனைகளைக் கிளறி விட்டுக்காமப் பேசாம இரு.  அவ வந்தா இங்கே இருக்கேன்னு சொன்னா இருக்கட்டும்;  இல்லைனா  அந்த வீட்டுக்குப் போகட்டும்!" என்றான் சந்துரு.  என்னவோ சில மாதங்களாக அகிலாண்டத்திடம் முகம் கொடுத்துப் பேசாததோடு மட்டுமின்றித் தம்பி வீடு எனச் சொல்லி வந்ததையும் அந்த வீடு என்றே சொல்கிறான் சந்துரு.  என்னவோ ஒவ்வொருத்தர் போக்கும் ஒவ்வொரு மாதிரியா இருக்கு.  இதிலே ரம்யா வந்ததும் அகிலாண்டத்தை வேறே சமாளிச்சாகணும்.  ராதாவுக்குக் கவலைதான்.

ரம்யாவும், பாஸ்கரும் வந்தார்கள்.  பயப்படும்படியாக உடல் நலக்கேடு ஒன்றும் இல்லை என்றாலும் ரம்யாவின் வாடிய முகமும், ஏதோ கவலையில், ஆழ்ந்த குழப்பத்தில் இருப்பது போல் தோற்றமளித்த கண்களும், கண்களைச் சுற்றிக் கட்டி இருந்த கருவளையமும்  ரம்யாவின் மனக்குழப்பத்தைக் கட்டியம் கூறின.  பாஸ்கர் கலகலப்பாக இருந்ததோடு அல்லாமல் ரம்யாவை வம்புக்கும் இழுத்து விளையாடினான்.  ரம்யாவின் குழப்பத்தை அவன் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை.  ரம்யாவோ எதிலும் ஈடுபாடு இல்லாமலேயே பதில் கொடுத்தாள். ராதாவின் கவலை அதிகம் ஆனது.  என்னவோ தெரியவில்லை. அகிலாண்டம் ரம்யா வந்திருக்கும் செய்தி தெரிந்தும் வந்தும் பார்க்கவில்லை.  ரம்யாவும் அகிலாண்டத்தைப் பார்க்க ஆசைப்படவில்லை.  கூப்பிட்டு அனுப்பறேன் என்றதற்கும் வேண்டாம் மன்னிம்மா என்றுவிட்டாள்.  ஒரு காலத்தில் அவள் அம்மா எனக் கூப்பிடாவிட்டாலும் மன்னினாவது என்றோ ஒரு நாள் கூப்பிட்டால் போதும்னு நினைத்த ராதாவுக்கு இப்போது அவள் மூச்சுக்கு மூச்சு மன்னிம்மா, மன்னிம்மா என்பது மன நிறைவைத் தந்தாலும் அவள் மனம் விட்டு எதுவும் சொல்லாதது உறுத்தவே செய்தது.

மத்தியானம் சாப்பிட்டுச் சிறிது நேரம் படுக்கலாம் எனத் தலை சாய்க்கும்போது வாசலில் அகிலாண்டம் வருவது தெரிந்தது.  என்னவோ புதுசாய் வருவது போல் தயங்கித் தயங்கி, பதுங்கிப் பதுங்கி வந்தாள் அகிலாண்டம்.  ராதாவுக்கு ஆச்சரியம்.  ரம்யாவோ அவளைக் கண்டதுமே தன் அறைக்குப் போய்க் கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.  அகிலாண்டம் வந்ததும் பெண்ணைப் பற்றிக் கேட்டாள்.  எதுக்கு வந்திருக்கா?  சும்மாத்தானே!  இல்லைனா குழந்தை உண்டாயிருக்காளா?  அங்கே மாமியார் எப்படி வைச்சுக்கறாங்க னு எல்லாமும் விசாரித்தாள்.  வந்த காரணம் என்னனு ஏதேனும் சொன்னாளானும் கேட்டாள்.  பல வகையிலும் ராதாவைத் துருவித் துருவிக் கேட்டும் அவளுக்கு எதுவும் தெரியாது என்பதில் அகிலாண்டம் நிம்மதி அடைந்ததாகவே தோன்றியது.  ரம்யா வெளியே வருவாளா என எதிர்பார்த்த அகிலாண்டம் அவள் வராதது குறித்து வருந்தினாலும் ஏதோ பெரிய சண்டை ஒன்றை எதிர்பார்த்து வந்துவிட்டு அது இல்லாமல் போனதில் உள்ளூர மகிழ்ந்தவள் போல் காணப்பட்டாள்.  அதற்குள்ளாகச் சந்துருவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

ராதா தான் எடுத்துப் பேசினாள். அகிலாண்டத்தைப் பார்க்க ஒருத்தர் மறுநாள் வரப் போவதாய்க் கூறினான்.  அதை ஏன் உங்களிடம் சொல்லணும்! நேரே உங்க தம்பிக்கே தொலைபேசிச் சொல்லி இருக்கலாமே என ராதா கேட்டதுக்கு வருபவர் தனக்கு உறவினர் என்றான் சந்துரு.  ராதா கேலியாகச் சிரித்தாள்.  "உங்களுக்கு உறவுன்னா உங்க தம்பிக்கும் உறவில்லையா!  என்ன பேசறீங்க நீங்க! " என்றாள். "ஆமாம், ராதா, அவனுக்கும் உறவு தான்!: சிரித்த சந்துரு, "கொஞ்ச நாட்களா நான் இப்படி இருக்கேன்;  அப்படி இருக்கேன்னு எல்லாம் கேட்டுட்டு இருந்தியே ! நாளைக்கு எல்லாத்துக்கும் விடை கிடைச்சுடும்.  உன் பிரச்னைகள் எல்லாமும் தீரும்.  இனிமே உன்னை யாரும் எதுவும் சொல்ல முடியாது. " என்றான்.

ராதா குழப்பமடைந்தாள்.  என்ன புதிர் போலப் பேசுகிறார் இவர்!

Sunday, December 09, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது?


ரம்யாவுக்குப் புகுந்த வீடு சொர்க்கமாகவே இருந்தது.  அன்பான கணவன்,  அவளை மதித்து அவள் ஆசைகளைக் கேட்டறியும் மாமனார், மாமியார்கள்,  அவளைத் தங்கள் சகோதரி போல் நடத்தும் நாத்தனார்கள் என அவளுக்கு இது நிச்சயமாய் ஒரு புது உலகம் தான்.  பிறந்த வீட்டில் எந்நேரமும் ராதாவை ஏதாவது ஒரு காரணத்துக்காகக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கும் வித்யாவின் நினைவு வந்தது அவளுக்கு.  இத்தனைக்கும் தப்பெல்லாம் ராதா மேல் இருக்காது.  இந்தச் சந்துரு அண்ணா கொஞ்சம் கண்டித்திருக்கலாமோ?  ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும்.  என்ன இருந்தாலும் தன் மனைவியை விட்டுக் கொடுத்திருக்கலாமோ?  ரம்யாவுக்குச் சந்துருவின் மேலும் தப்பு எனத் தோன்றியது.  இங்குள்ளவர்களுக்கு இவள் சந்துருவின் பெண் அல்ல எனத் தெரியாது.  அவ்வளவு ஏன்?  அவள் பிறந்த வீட்டிலேயே ரம்யா, அகிலாண்டம், ராதா, சந்துரு இவர்களைத் தவிர ராதாவின் சிநேகிதி ஒருத்திக்கு மட்டும் தான் ஓரளவு உண்மைகள் தெரியும்.  

வித்யாவுக்கெல்லாம்  எந்த விஷயமும் தெரியாது.  இது கொஞ்சம் கஷ்டமான  சூழ்நிலை.  முள் மேல் போட்ட சேலையை, சேலையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் எடுக்க வேண்டும்.  முதலில் நம் கணவன் பாஸ்கரிடம் சொல்லிவிட வேண்டும்.  ஏனெனில் ராதாவுக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்குத் தான் சந்துருவின் சொத்துக்கள் சேர வேண்டும்.  நாம் வாங்கிக் கொண்டால் அதைவிடப் பெரிய கொடுமை வேறு இல்லை.  உண்மை தெரியாமல் இவங்கல்லாம் எல்லாச் சொத்தும் எனக்கும் பங்கு இருக்குனு நினைச்சுப்பாங்க.  அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.   ரம்யாவின் எண்ணங்களில் மாமியாரின் அழைப்பு குறுக்கிட்டது.

"இதோ, அம்மா வந்துவிட்டேன்."  என ஓடினாள் ரம்யா.  "மெல்ல, பார்த்து வா அம்மா, அவசரம் ஒண்ணுமில்லை.  என்னோட அக்கா வீட்டுக்காரர் உன்னைப் பார்க்க வரப் போறார்.  கூடவே அக்காவும் வராங்க.  அவங்க  வட நாட்டிலேயே இருக்கிறாங்க.  இங்கே அக்கா வீட்டுக்காரர் அத்திம்பேரின் ஒரே தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தாங்க.  அந்தத் தங்கைக்காரி பிரசவத்திலே போயிட்டாளாம்.  மனசு வெறுத்துப் போன அவர் அதுக்கப்புறமா இங்கே வரதே இல்லை. அக்கா மட்டும் தான் வந்துட்டுப் போவாதங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்த இடமும் உங்க ஊர் தான். மத்த விபரங்களெல்லாம் நான் கேட்டுக்கலை.  தங்கை குழந்தையும் போய், தங்கையும் போனப்புறம் அவங்க உறவு எதுக்குனு இருந்துட்டார். இப்போ என்னமோ திடீர்னு மனசு மாறி இருக்காப்போல இருக்கு.  வயசாச்சு இல்லையா?  பழைய சொந்தங்களை எல்லாம் பார்க்க ஆசை வந்திருக்கும்.  அதான் வரார். " என்று முடித்தாள்.

"சரி அம்மா.  அவங்க கிட்டே நான் எப்படி நடந்துக்கணும்?"  ரம்யா கேட்க, "என் கண்ணே, நீ எப்போவும் போல் இருந்தாலே போதும்டி அம்மா.  உனக்கு என்ன குறை!  அதான் உன் அம்மாவும்,அப்பாவும் உன்னை நல்ல குணங்களோடும், பெரியவங்க கிட்டே மரியாதை காட்டறாப்போலயும் வளர்த்திருக்காங்களே.  இந்த ராதா ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் நிபுணி போல!  எனக்குக் கூடத் தெரியலை; உனக்கு எல்லாமும் சொல்லிக் கொடுத்திருக்காளே!"  என்றாள் அவள் மாமியார்.  ரம்யாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது.  இந்த ராதாவைத் தான் எப்படி எல்லாம் நடத்தி இருக்கோம் என நினைத்து மனம் வருந்தியது.  வெட்கமாகவும் வந்தது.  இன்னிக்கு அவள் வளர்ப்பினாலே தானே நாம இங்கே நல்ல பெயர் வாங்கிக்க முடியுது என எண்ணி அவள் மனம் நன்றியினால் நிறைந்தது.  உடனே ராதாவைப் பார்க்க வேண்டும் போலவும் இருக்க, தன் கைபேசியை எடுத்து ராதாவை அழைத்தாள்.

மறுமுனையில் ராதா எடுக்க, " என்ன அம்மா மன்னி? மன்னி அம்மா?  நான் சொல்லி இருந்தேனே,  அந்தக் கட்டளையை நிறைவேற்றினீங்களா ரெண்டு பேரும்?" எனக் கேட்டாள் ரம்யா.  ராதா சிரித்தாள்.  அவள் சிரிப்பில் தெரிந்த உள்ளார்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தாள் ரம்யா.  " என்ன ரிசல்ட்?" என்று கேட்க, "அவசரக்குடுக்கை,  அரசமரத்தைச் சுத்திட்டு அடிவயித்தைத் தடவினால் குழந்தை வந்துடுமா? கொஞ்சம் பொறு.  இன்னும் உங்க பாட்டியம்மா மனதை மாத்த முடியலை.  அவங்க இங்கேயே டேரா போட்டுக் கொண்டு நாங்க ரெண்டு பேரும் தனியாச் சந்திக்கிறதைக் கூடிய வரை தவிர்க்கிறாங்க. "  ராதா சொல்லிக் கொண்டு போக அப்போது அகிலாண்டத்தின் குரல் அங்கே கேட்டது.  "யாரோட பேசறே போனிலே?"

"ரம்யா தான் கூப்பிட்டாள்."  ராதா மென்று விழுங்க, "நகரு, பெரிசாப் பேச வந்துட்டா, பெத்து வளர்த்தாப்போல.  நான் பேசறேன் குழந்தை கிட்டே.  எப்படி இருக்காளாம்? எப்படி வைச்சுக்கிறாங்களாம்?  குழந்தை கண்கலங்காம வைச்சுக்கிறாங்களாமா?' என்றெல்லாம் கேட்டபடி ராதாவிடமிருந்த கைபேசியைத் தான் வாங்கினாள் அகிலாண்டம்.  "குழந்தை, எப்படிடி இருக்கே?"

மறுமுனையில் அமைதி.  விஷயம் புரிந்து கொண்ட  ரம்யா அகிலாண்டத்தோடு பேச விரும்பாமல் போனை வைத்துவிட்டாள்.  ரம்யா மாமியாரின் அக்கா  பார்வதியும் அவள் கணவர் கிருஷ்ணமூர்த்தியும் இரண்டு நாட்களில் வந்துவிட்டார்கள்.  அவர்கள் வந்து அவங்க சொந்தக்காரங்க வீட்டிலே இறங்கிட்டு பின்னரே இங்கே வந்தார்கள்.  வந்தப்போ ரம்யாவும், பாஸ்கரும் வெளியே போயிருந்தார்கள்.  ஆகவே அவர்கள் வரும்வரை காத்திருந்தார்கள் இருவரும்.  வெளியே சென்ற இருவரும் திரும்பி வருகையில் கிருஷ்ணமூர்த்தி மட்டும் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க, அக்காவும், தங்கையும் உள்ளறையில் பேசிக் கொண்டிருந்தனர். ரம்யாவின் மாமனார் ஷட்டகர் அருகே அமர்ந்து கொண்டு அவ்வப்போது ஏதானும் பேசுவதும் திரும்பித் தொலைக்காட்சியைப் பார்ப்பதுமாக இருந்தார்.  ரம்யாவும், பாஸ்கரும் உள்ளே நுழைவதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, ரம்யாவை ஏற, இறங்கப் பார்த்தார்.

"நீ அகிலாண்டத்தின் பெண்ணா?  அவள் ஜாடையை உரிச்சு வைச்சிருக்கே?" என்று கேட்டார்.

ரம்யாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இவருக்கு அகிலாண்டத்தை எப்படித் தெரியும்?  இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "நான் சந்துருவின் பெண்.  என் அம்மா ராதா."  என்றாள்  ரம்யா.  அவளையே கூர்ந்து கவனித்த கிருஷ்ணமூர்த்தி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார்.  அவர் முகத்தில் அவள் சொன்னதில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை அப்பட்டமாகத் தெரிந்தது.

ரம்யாவின் அடி வயிறு கலங்கியது.  தான் ஒன்று நினைக்க இப்போது வேறொன்று கிளம்புகிறதே.  இது என்னவாக இருக்கும்?   உடனே ராதாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது ரம்யாவுக்கு.


சீக்கிரம் முடிஞ்சுடும்;  கவலைப்படாதீங்க. :))))))))

Saturday, December 08, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது! தொடர்ச்சி


ரம்யாவின் திருமண தினமும் நெருங்கியது.  அகிலாண்டத்தின் விருப்பத்துக்கு மாறாக ராதாவே மணையில் அமர்ந்து கல்யாண விசேஷங்களில் கலந்து கொள்ள வைத்தாள் ரம்யா.  அவள் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது.  தான், தன் சுகம் என்றே வாழ்ந்து வந்த அகிலாண்டத்தைத் தன் தாய் எனச் சொல்லவும் அவளுக்கு இஷ்டமே இல்லை.  ஆகவே கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதையும் நிறுத்திக் கொண்டாள்.  ஏதேனும் கேட்டால் பதில், இல்லைனா எதுவும் இல்லை.  அகிலாண்டத்தின் கடைசிப் பொறுப்பும் தீரப் போகிறது.  ஆனால் ராதாவுக்குப் பொறுப்புத் தீர்ந்ததா?  அடுத்துத் தன் பிரசவம், குழந்தைப் பேறுனு நிற்காதே.  இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்.  தான் குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது.  ரம்யா முடிவெடுத்தாள்.  அதைச் செயலிலும் காட்ட வேண்டும்.  ஒரு குழந்தைக்கு ராதாவை ஏங்க வைத்த அகிலாண்டம் இனி தன் வாழ்நாள் முழுதும் எனக்குக் குழந்தை பிறந்து பார்க்கக் கூடாது.  ஆம்;  இதான் சரியான தண்டனை அவளுக்கு.

திருமணமும் முடிந்து அனைவரும் பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பும் நேரம்.  ரம்யாவுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது.  அங்கே ஓடோடி வந்த அகிலாண்டம் அவளை அணைத்துக் கொண்டு, "என் கண்ணே, உனக்குத்தான் எத்தனை பாசம்!" எனத் தானும் அழுதாள்.  அனைவர் எதிரிலும் கத்த வேண்டும்போல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட ரம்யா, அவள் காதுகளில் மட்டும் விழும் வண்ணம், " இதோ பார்!  நடிக்காதே.  நீ என்னைப் பெற்றிருக்கலாம்.  ஆனால் வளர்த்தது ராதா மன்னிதான்.  அவளுக்குத்தான்ன் முன்னுரிமை.  இப்போ நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கேள்.  நீ எப்படி ராதா மன்னியின் குழந்தையை வெளிவர முடியாமல் அழித்தாயோ/அழிக்கச் சொன்னாயோ, அப்படியே இப்போவும் நடக்கப் போகிறது.  அவ்வளவு ஏன்?  ஒரு குழந்தையை நான் வரவிடவே போகிறதில்லை.  நீ உயிரோடு இருக்கும் வரை எனக்கு ஒரு குழந்தை பிறந்து பார்க்கப் போவதில்லை. இதான் நான் உனக்குக் கொடுக்கும் தண்டனை!"  என்றாள் கடுமையான குரலில்.

அகிலாண்டத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.  ராதாவிடம் இவளை வளர விட்டதே தவறோ எனக் கூட ஒரு நிமிஷம் எண்ணினாள்.  அடுத்து ரம்யா செய்த காரியம் இன்னமும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட வைத்தது.  நேரே ராதாவிடம் சென்ற ரம்யா,  அவளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவளையும், அண்ணனையும் இழுத்து அருகருகே நிற்க வைத்து அழகு பார்த்தாள்.  மீண்டும் ராதாவைக் கட்டிக் கொண்டாள்.  " இந்த நாற்பத்தி ஐந்து வயசிலேயும் நீ எவ்வளவு அழகா இருக்கே!" என வியந்தாள்.

"இதோ பார் ராதாம்மா, என்னை வளர்க்கணும்னு நீ இன்னொரு குழந்தை வேண்டாம்னு இத்தனை நாள் இருந்தது போதும்.  இப்போத் தான் நான் கல்யாணம் ஆகிப் போகிறேனே.  இனி நீ எனக்குக் கொடுக்க வேண்டிய ஒரே பரிசு தம்பிப் பாப்பா தான்.  இதோ பார்.  இன்னும் நான்கே மாசங்களில் நீ என்னோட தம்பிப் பாப்பாவையோ, தங்கைப் பாப்பாவையோ சுமக்கணும்.  உன் பிரசவத்துக்கு நான் வந்து தான் உதவிகள் செய்யப் போறேன்.  உன்னை என்னோட அம்மாவா இல்லாம, பெண் போலப் பார்த்துக்கறேன்.  கவலைப்படாதே!"  என்றாள்.

ராதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இந்த வயசில் குழந்தையா எனக் கூறிவிட்டு மெளனம் ஆனாள்.  ஆனால் சந்துருவின் கண்களில் தெரிந்த அந்த ஆசை! அவனுக்குத் தன்னுடைய வாரிசு என ஒன்று வேண்டும் என நினைப்பதைப் புரிய வைத்தது.  ஆனால் அகிலாண்டம்????  அவள் ராதா-சந்துரு இருவரின் சேமிப்பெல்லாம் தன் குழந்தைகளுக்கே சேர வேண்டும் எனத் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாளே;  ராதாவுக்குக் குழந்தை பிறந்தால் பொறுப்பாளா?  என்ன இருந்தாலும் சொந்தப் பிள்ளைக்கு ஒரு வாரிசு என்பதை ஏன் இவள் எதிர்க்கிறாள்??? ராதாவுக்கு மனதில் சின்னக் குழப்பம்.  தனக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது.  ஆனால் அகிலாண்டமோ ஒரே பிடிவாதமாக அல்லவோ இருக்கிறாள்.  சொல்லப் போனால் இரண்டு பேரில் ஒருத்தரைக் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலாமே என்று கூட அல்லவோ யோசனை கொடுத்தாள்!  சந்துருவின் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அது கொஞ்சம் குறைந்தது.   ஆனாலும் இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். அது என்ன?

Thursday, December 06, 2012

எல்லாம் நல்லதுக்கே!

ஒரு நிமிஷம் திகைச்சுப் போய் உயிரே போயிட்டு வந்தது.  என்னோட ப்ளாக் Not Available Message வந்தது.  திகைப்பாய்ப் போயிட்டது.  நேத்திக்குக் காலம்பர மின்சாரம் போனப்போ லாப்டாப்பில் என்ன ஆச்சுனு புரியலை.  அப்புறமா மின்சாரம் வந்தப்போ மத்தியானமா போட்டப்போ Automatic Start Up Repair வந்தது. ஓகே கொடுத்தேன். அது ஸ்டார்ட் அப்பில் ஏதோ பிரச்னைகள் இருக்கிறதாச் சொல்லி சரி பண்ணறேன்னு சொல்லவும் அதுக்கும் ஓகே தான். அப்புறமாக் கணினியை ரீ ஸ்டார்ட் பண்ணினால் டெஸ்க் டாப் வருது; ஆனால் இணையம் வரலை.  சரி இணையத்திலேதான் ஏதோ பிரச்னைனு பேசாம இருந்துட்டேன். இதுக்கு முன்னாலேயும் ஒரு தரம் வராம இருந்து மறுநாள் வந்தது.  அது மாதிரித் தானே சரியாகும்னு நினைச்சுட்டேன்.

அப்புறமா என்னவோ தோணிப் போய் பிசியைப் போட்டால் அதிலே இணையம் நல்லாவும் வந்தது.  டவுன்லோடும் ஆச்சு.  சரி லாப்டாப்பிலே தான் பிரச்னைனு புரிஞ்சது.  நேத்து முழுக்கப் பல முறை முயன்றும் வராமல் போகவே மருத்துவரைக் கூப்பிட வேண்டியதாப் போச்சு.  நேத்திக்கு சாயந்திரமா வரேன்னு சொன்ன மருத்துவர் வரலை.  நமக்கோ என்னதான் பிசி இருந்தாலும் லாப்டாப் இல்லையேனு கவலை. துக்கம்.  அப்படியே வருத்தம் தாங்காமல் படுத்துத் தூங்கியாச்சு.  காலம்பர மறுபடி பார்த்தா அதே, அதே. சரினு மருத்துவர் நம்பரை அழைத்தால் அவர் எடுக்கவே இல்லை.  ஒன்பது மணி வரை பார்த்தேன்.        அப்புறமா அவருக்கு ஒரு எஸ் எம் எஸ் கொடுத்தேன்.  ம்ஹ்ஹூம் அசையவே இல்லை.

மின்சாரம் அதிசயமா இருந்ததாலே என்னோட வீட்டு வேலைகளை முடிச்சாச்சு.  அப்படியும் மின்சாரம் இருக்கவே ரங்க்ஸ் வெளியே போயிருந்தவர் வந்து, மருத்துவரை மின்சாரம் இருக்குனு சொல்லி உடனே வரச் சொல்லுனு சொல்ல, அவரும் அழைத்ததும் உடனே எடுத்தார். மின்சாரம் இருக்குனு நல்ல செய்தியைச் சொல்ல அவருக்கும் மூட் நல்லா இருக்க, சிறிது நேரத்தில் வந்தார்.  வந்து என்ன தவறுனு கண்டு பிடிச்சார்.  ஸ்டார்ட் அப் ரிபேர் எல்லாத்தையும் டிசேபிள் பண்ணி இருக்கு.  திரும்ப எல்லாத்தையும் போட்டு...........கடவுளே, பிசியில் என்னோட ப்ளாக் திறந்தது.  கமென்ட்ஸ் எல்லாமும் பப்ளிஷ் பண்ணினேன். இதிலே வராதுனு சொல்லவும் மயக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கமே வந்துடுச்சு.  ஒரு வழியா வந்திருக்கு.  இப்போக் கண்ணன் கதை எழுதற பக்கம் வராதுனு சொல்லிட்டு இருக்கு.  அதைப் போய்ப் பார்க்கணும். என்னவோ நேரம்! :((((((

இந்தத் துக்கத்திலே யவனராணியை ஒரு வழியாப் படிச்சு முடிக்கப் போறேன். இரண்டு நாளா இதான் வேலை. 

Tuesday, December 04, 2012

சிற்றம்பல நாடிகள் சமாதிக் கோயில் படங்கள்


அம்பிகை திரிபுர சுந்தரிகோயிலின் திருச்சுற்றில் காணப்பட்ட கல்வெட்டு.  படிக்கிறாப்போல் இல்லை. :(


சீடர்கள் சார்பாக அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள்  கீழேயும் அவையே


Monday, December 03, 2012

சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த சித்தர் காடு


மாயவரம் கல்யாணத்துக்குப் போனப்போ அங்கிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சித்தர்காடு சென்றோம்.  இன்னொரு சித்தர் காடும் இருப்பதாய்க் கேள்வி.  அது வட தமிழ்நாட்டில் அரக்கோணத்துக்கு அருகே உள்ளது என நினைக்கிறேன்.  அதைப் பார்த்ததில்லை.  ஆனால் இதைக் குறித்துப் பலமுறை கேட்டுள்ளேன்.  ஆகையால் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்ததும் சென்றோம்.   தருமை ஆதீனப் பரம்பரையில் காழிக்கங்கை மெய்கண்டாரின் சீடரான சிற்றம்பல நாடிகள் என்பவர் அடுத்து பட்டத்துக்கு வந்தார்.  அனைத்து சிவசாரியார்களும் சிற்றம்பலத்தையே நாடினார்கள் எனினும், இவர் ஒருவருக்கு மட்டுமே சிற்றம்பல நாடிகள் எனும் பெயர் அமைந்தது என்கின்றனர்.  இவரை மிகப் பெரிய சித்தராகவும் கூறுகின்றனர்.  இவர் இயற்றிய நூல்களில் துகளறு போதம், திருப்புன்முறுவல், செல்காலத்திரங்கல், நிகழ்காலத்திரங்கல், வருங்காலத்திரங்கல் ஆகியன மிக முக்கியமானவை என்றாலும் துகளறு போதத்தையே மிகவும் முக்கியம்மானதாய்க் கூறுகின்றனர்.

சைவ சித்தாந்த சாத்திரங்களைக் கற்போர் உண்மை நெறி விளக்கத்திற்குப் பதிலாக துகளறு போதத்தைப் படிப்பார்கள் எனவும், சித்தாந்த சாத்திரங்கள் கற்போருக்கு துகளறு போதம், தத்துவப் பிரகாசம் ஆகியன கற்பது இன்றியமையாத ஒன்று எனவும் சொல்லப் படுகிறது.  இந்தச் சிற்றம்பல நாடிகளின் திருக்கூட்டம் மிகப் பெரியது.  63 சீடர்கள் உள்ள இவருக்கு இவரையும் சேர்த்து 64 பேர் ஒரு திருக்கூட்டமாய்த் திகழ்ந்து வந்தனர்.  இவர்கள் அனைவரும் காழி சிற்றம்பல நாடிகளின் அருளால் ஒரே சமயத்தில் முத்தி பெற்றனர்.  திருஞான சம்பந்தருக்குப் பின்னர் தம் திருக்கூட்டத்துக்கு ஒரே சமயம் முத்தி பெறச் செய்தவர் காழி சிற்றம்பல நாடிகளே என்கின்றனர். 

ஒரு நாள் சிற்றம்பல நாடிகள் தம் திருக்கூட்டத்துடன் உணவு உண்ண அமர்ந்திருந்தார்.  உணவு பரிமாறிய சமையல்காரர் தவறுதலாக நெய் என எண்ணி வேப்பெண்ணையைப் பரிமாறிவிட்டார்.  சிற்றம்பல நாடிகளும் சீடர்களில் 62 பேரும் அமைதியாக வேப்பெண்ணெயை நெய்யாகக் கருதி உணவு உண்ண ஆரம்பிக்க, ஒரே ஒருவர் மட்டும் உணவை வாயிலிட்டதும் ஓங்கரித்துக் கொண்டு “வே” என வாயைத் திறந்தார்.  வேப்பெண்ணெய் எனச் சொல்லத் தான் அவர் வாயைத் திறக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட சிற்றம்பல நாடிகள் அவரைப் பார்த்து, “கண்ணப்பா, நம் திருக்கூட்டத்தில் இப்படிப் பக்குவமில்லாத ஒருவன் இருப்பது தகுமோ?” எனக் கேட்க மனம் வருந்திய அந்தக் கண்ணப்பர் என்னும் சீடர் திருக்கூட்டத்தினின்றும் நீங்கி வட தேச யாத்திரை செய்யப் போய்விட்டார்.  சிறிது காலத்திற்குப் பின்னர் சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியடையத் திருவுளம் கொண்டார்.  அப்பகுதியை ஆண்ட அரசனை அழைத்துத் தாம் தம் சீடர்கள் 62 பேரோடும் ஒரே சமயம் சமாதி அடையப் போவதாய்ச் சொல்லிச் சித்திரைத் திருவோண நாளில் அந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறினார்.  தாம் சமாதியில் இறங்க வசதியாகத் தனித்தனியாக 63 சமாதிகள் அமைக்கும்படியும் கூறினார்.  வியப்படைந்த மன்னனும் அவ்வாறே 63 சமாதிக் குழிகளை அமைத்தான்.  இந்த அதிசய நிகழ்வைக் காண மக்கள் கூட்டம் கூடியது.  சிற்றம்பல நாடிகள் கூடி இருந்த மக்களை வாழ்த்தி ஆசிகள் வழங்கினார்.  மூன்று வெண்பாக்களைப் பாடித் தமக்கென நிர்ணயிக்கப் பட்ட சமாதிக்குழியில் இறங்கினார்.  அவ்வாறே சீடர்களும் ஆளுக்கு ஒரு வெண்பாவைப் பாடிவிட்டு அவரவருக்கென நிர்ணயித்த சமாதிக் குழியில் இறங்கினார்கள். 

சிற்றம்பல நாடிகள் தம் குருநாதர் திருவடியில் மனம் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.  அவ்வண்ணமே மற்றச் சீடர்களும் தங்கள் குருநாதரான சிற்றம்பல நாடிகளின் திருவடியில் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து சமாதி அடைந்தனர்.  கூடி இருந்த மக்கள் 63 பேர் இருந்த திருக்கூட்டத்தில் ஒருவர் குறைவதைக் கண்டு வியப்புற்று ஒருவருக்கொருவர், அந்த மறைந்த சீடர் எங்கே சென்றாரோ, இங்கே நடக்கும் விஷயங்கள் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ எனப் பேசிக் கொண்டனர்.  அப்போது திடீரென அங்கே கண்ணப்பர் வந்து சேர்ந்தார்.  தம் குருவானவர் மற்றச் சீடர் திருக்கூட்டத்தோடு சமாதி அடைந்து கொண்டிருந்ததைக் கண்ட கண்ணப்பர், ஆஹா, நமக்கும் இங்கே சமாதிக்குழி அமைக்கவில்லையே, என் செய்வோம் என எண்ணி மனம் வருந்தி குருநாதரின் சமாதியை வலம் வந்து வணங்கித் தமக்கும் ஓர் இடம் தருமாறு வேண்டினார்.  அது ஒரு வெண்பாவாக அமைந்தது.

“ஆண்ட குரு சிற்றம்பலவா அடியேற்கா
மீண்டும் எழுந்தருள வேண்டாவோ--- நீண்டவனும்
ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்
பூரணமாய் வையாத போது

என அந்த வெண்பாவைப் பாடி முடித்ததுமே சிற்றம்பல நாடிகளின் சமாதி திறந்தது.  நாடிகள் கண் விழித்துத் தம் சீடனாம் கண்ணப்பரை நோக்கிக் கையைப் பற்றி அழைத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார்.  தம்மோடு இரண்டறக் கலக்கச் செய்தார்.  கூடி இருந்த மக்களும், மன்னனும் ஏற்கெனவே தாங்கள் அடைந்திருந்த வியப்புப் போதாது என இப்போது நேரில் கண்ட இந்நிகழ்வால் மேலும் வியந்து போற்றினர்.  இந்நிகழ்வு நடந்த இடம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு என்ற ஊராக உள்ளது. 

இப்போது இந்த இடம் ஒரு கோயிலாக  உள்ளது. சம்பந்தர் கோவில் என அழைக்கப்படும் இந்தக் கோயிலின் முக்கிய மூர்த்திகளாக  திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர்  அருள் பாலிக்கின்றனர்.  ஈசனின் லிங்கத் திருமேனி இருக்கும் இடமே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி அடைந்த இடம் எனவும், சுற்றிலும் மற்றவர்கள் சமாதி அடைந்தனர் எனவும் சொல்கின்றனர்.  ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவோணத்தில் இங்கே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.  கோயிலுக்கு நாங்க சென்ற அன்றைய தினம் பிரதோஷமாகவும் அமைந்தது.  கோயிலின் குருக்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சில படங்களை எடுத்தேன்.  சமீபத்தில் தான் ஊர் மக்களின் பெரு முயற்சியின் பேரில் இந்தக் கோயிலிற்குக் குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.   சித்தர் காடு.
பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி
சிற்றம்பல நாடிகளின் ஓவியம்.

தக்ஷிணாமூர்த்தி சந்நிதி திருச்சுற்றில்.  இருபக்கமும் 63 திருக்கூட்டத்தாருக்காக ஏற்படுத்தப்பட்ட சிவலிங்கங்கள்.  இந்தச் சிற்பங்கள் விமானத்தின் வெளிப்பக்கமே ஏற்படுத்தப் பட்டுள்ளது.  படங்கள் மீதம் நாளை பகிர்கிறேன்.

Sunday, December 02, 2012

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து ஆடுகிறான்!


காலை பத்துமணிக்குப் போற மின்சாரம் திரும்ப வர இரண்டு மணியோ மூன்று மணியோ ஆகிவிடுகிறது.  மின்சாரம் இருக்கும் நேரம் வீட்டில் வேலை செய்யாத நேரமாக இருந்தாலே பதிவுகளைப் போட முடியும்.  படிக்க, பின்னூட்டம் கொடுக்க இயலும்.  நான்கு மணிக்குப் போனால் திரும்ப மாலை ஏழு மணிக்கு வரும்.  அதிர்ஷ்டம் இருந்தால் ஆறு மணிக்குக் கிடைக்கும். மின்சாரம் இல்லாத நேரம் எழுதி வைச்சுக்கலாம்னா இன்வெர்டர் மூலம் சார்ஜ் ஆவது லாப்டாப்புக்குச் சரியாக இல்லை. ஆகவே அதுவும் முடியவில்லை.  ஏனெனில் திடீர்னு மின்சாரம் வந்தால் ஹை வோல்டேஜ் இருந்தால் இன்வெர்டர் மூலம் சார்ஜ் செய்வது அதிக அழுத்தம் தாங்காது என்கிறார்கள்.  ஏற்கெனவே ஒருமுறை லாப்டாப் தகராறு செய்தது. பிசியை மின்சாரம் இல்லாமல் தொடவே முடியறதில்லை. :(( கடந்த மூன்று மாதங்களாகப் பதிவுகளை எழுதியும் வைக்க முடியவில்லை. அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இப்போ மாயவரம் கல்யாணத்தில் அதி அற்புதமாக வாசித்த நாதஸ்வர வித்வான்களின் படங்கள் இவை.  மாயவரம் அருகிலுள்ள விளநகர் என்னும் ஆறுபாதி ஊர்க்காரங்களான இவங்க பெயர் வி.சி. அசோக் குமார், வி.டி. ரமேஷ் குமார்.  இரண்டு நாளும் அருமையான இன்னிசை மழை பொழிந்தனர். நாதஸ்வரம் ஊதுவது மறைந்து வருகிறது என எல்லாரும் சொல்லும் சமயத்தில் இளைய தலைமுறைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் விதத்தில் இவர்கள் நாதஸ்வரத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர் என்பது பாராட்டுக்கு உரியது.


மாயவரம் சித்தர் காடு போன விபரங்களும், திருமணஞ்சேரி போனதும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.

Saturday, December 01, 2012

எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர் கெளதமனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

காலம்பரத்திலே இருந்து மின்சாரம் இல்லை.  வந்து வந்து போயிடுச்சு.  இப்போத்தான் அரை மணி நேரமாத் தொடர்ந்து இருக்கு.  அதான் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்களில் ஒருவரான கெளதமன் அவர்களுக்குத் தாமதமாகப் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம்.


கீதா&சாம்பசிவம். 

Wednesday, November 28, 2012

சென்னையில் ஒரு வாரம்! :))))

சென்னையிலே தான் அண்ணா பையருக்குக் கல்யாணம்.  தீபாவளி கழிச்சு அந்த சனியன்று பல்லவனில் சென்னை கிளம்பினோம். ஞாயிறன்று சுமங்கலிப் பிரார்த்தனை, திங்கள் சமாராதனை.  செவ்வாயன்று எங்களுக்கு எங்க மருத்துவர் கிட்டே மாதாந்திர சோதனை(பல மாதங்கள் கழிச்சு).  அவர் கிட்டே சாதாரணமாவே ஒரு நாள் ஆயிடும்.  அன்னிக்கும் அது போல் ஆச்சு.  புதனன்று கல்யாணத்துக்குச் செல்ல வேண்டிய முன்னேற்பாடுகள், கோலம் போடுதல், சாமான்களைச் சரி பார்த்தல் இத்யாதி, இத்யாதி.  வியாழனன்று காலை நாலு மணிக்குப் போன மின்சாரம் ஆறு மணிக்குத் தான் வந்தது.  அதுவரை இருட்டிலே குருட்டடிச்சுட்டு இருக்க வேண்டியதாப் போச்சு.  :(அண்ணா வீட்டில் இன்வெர்டர் இல்லை. :(  ஏழரைக்கு அப்புறம் கிளம்பிச் சத்திரத்துக்குப் போறதுக்குள்ளே மயக்கமே வந்துடுச்சு. மூன்று நாட்கள் கல்யாணத்தில் கழிந்தது. வெள்ளியன்று  கல்யாண முஹூர்த்தம் முடிஞ்சதும் குரோம்பேட்டில் திரு நடராஜன் கல்பட்டு சாரைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி இருந்தேன்.  கிளம்பறச்சே 2 மணி ஆயிடுச்சு.

அவசரம் அவசரமா ஆட்டோவைத் திரும்பி வரவும் சேர்த்துப் பேசிக் கொண்டு போயிட்டு அவர் அளித்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு வந்தோம். இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.  தொட்டாலே தூள் தூளாகிடும் போல் இருக்கு. சரியா நூறு வருடங்கள் முன்னே பதிப்பித்த ராமாயணப் புத்தகம்.  சனியன்று வல்லி தொலைபேசியில் அழைச்சாங்க.  எங்கே போறது!  பேசிட்டு இருக்கிறச்சேயே அழைப்பு வேறே வந்தாச்சு. அன்னிக்கு அங்கே கட்டுச் சாதக்கூடை விசேஷம் முடிஞ்சு மத்தியான வண்டியிலே மாயவரம் போகணும்.  திங்களன்று அங்கே எங்க முக்கியமான நண்பர் மற்றும் உறவினர் பொண்ணுக்குக் கல்யாணம்.  பொண்ணு எங்க சொந்தப்பொண்ணு மாதிரி.  எங்களைப் பெரியப்பா, பெரியம்மானே கூப்பிடுவா.   அங்கே போயிட்டோம்.  ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு மேல் தான் நிச்சயதார்த்தம்னு சொன்னதாலே அங்கிருந்து சித்தர் காடும், திருமணஞ்சேரியும் போயிட்டு வந்தோம்.  எனக்குப் பூம்புகார் போகணும்னு ஆசை.  ஆனால் அங்கே புராதனச் சின்னங்கள் ஏதும் இல்லை;  பார்க்கறாப்போல் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டாங்க.  கொஞ்சம் ஏமாற்றம் தான்.

சென்னை வந்துட்டு யார் கிட்டேயும் சொல்லலைனு கோவிக்க வேண்டாம்.  சூழ்நிலை அப்படி.  ரொம்ப டைட்டான நிகழ்ச்சி நிரல். :( அதனால் தான் எங்கே போறேன்னு சொல்லாமலேயே போனேன்.  முகமூடி போட்டுக் கொண்டு கிளம்பிப் போயிட்டு முகமூடி போட்டுக் கொண்டே வந்தாச்சு.  மாயவரத்திலும் அபி அப்பாவுக்கு அங்கே வரப் போறதைச் சொல்லலை.  கல்யாணத்திலே பார்த்தாலும் பார்க்கலாம்னு நினைச்சேன்.  ஆனால் வேறு சில நிகழ்வுகளால் சில மாற்றங்கள்.   அபி அப்பாவுக்கும் காலம்பரத்தான் மாயவரம் வந்துட்டுப் போனதைச் சொல்லி இருக்கேன். நம்ம வலை உலக நண்பர்களைப் பார்க்கவென்றே சென்னைக்கு வரணும்.  சென்னையிலே இருந்தப்போ பிரச்னையே கிடையாது.  எல்லாரையும் எங்க வீட்டுக்கு வரச் சொல்லிடுவேன். இப்போ ஸ்ரீரங்கம் வாங்க எல்லாரும்.  எல்லாருக்கும் கொஞ்சம் கோபம் தணியறதுக்காக இரண்டு படங்கள் இப்போ.


இது எங்க அம்மா, அப்பா படம்.  கல்யாண மேடையில் வைச்சிருந்தாங்க. ஸ்வீட்டிலேயே புடைவை.  பாதாம் பருப்புப் புடைவை. :))))

 முந்திரிப்பருப்பு வேஷ்டி


பாதாம் ரவிக்கைத்துணி, முந்திரிப்பருப்பு அங்க வஸ்திரம்.   மற்ற சில படங்களும், சித்தர் காடு படங்களும் ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

Monday, November 26, 2012

லீவு முடிஞ்சு வந்துட்டோமுல்ல!

ஹிஹிஹி, அதுக்குள்ளே ஸ்ரீராம் மெமோ அனுப்பிட்டார். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) நான் ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ணப் போறதை மட்டும் சொன்னேன்.  இன்னொரு கல்யாணமும் இன்னிக்கு அட்டென்ட் பண்ணிட்டு சாயந்திரம் தான் வந்தேன்.

ரெண்டு கல்யாணமும் கிரான்டாக நடந்தது.

கல்யாண சமையல் சாதம்!
அந்தக் காய்கறிகளும் பிரமாதம்
இதுவே எனக்குப் போதும்!

ஆஹ அஹ அஹா, அஹாஹாஹஹா!

ரசம் சாதத்துக்கு அப்பளமும்  எல்லாப் பந்தியிலும்
இரண்டு முறை கிடைச்சது!

ஹிஹிஹி

ஆனாப் பாருங்க, இன்னிக்கு மத்தியானம்சாப்பிடறச்சே அப்பளம் போடச் சொன்னா முதல் அப்பளத்தையே முடிக்கலையேனு (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) கேட்டுட்டார். எத்தனை அப்பளம் போட்டால் என்ன? நாங்க சாப்பிட்டுக் காட்ட மாட்டோம்? 

Friday, November 16, 2012

லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

ஒரு வாரம் ஊரில் இருக்க மாட்டேன்.  அண்ணா பையர் கல்யாணம்.  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!


காணோமேனு ரசிகப்பெருமக்களும், தொண்டர்களும் தீக்குளிக்கிற அளவுக்குப் போயிடாதீங்க. 

Thursday, November 15, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்.ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தான் இந்தப் பதிவைப் போட்டிருந்தேன்.  யாரும் அங்கே ஜாஸ்தி வரதில்லையா! போணி ஆகிறதில்லை. :D, (பேரைப் பார்த்து பயந்துடறாங்க போல! :P, பரவாயில்லைனு இங்கே காப்பி, பேஸ்டி இருக்கேன். அரங்கன் கொண்டாடிய தீபாவளியைப் பத்திப் படிங்க.  இன்னிக்குக் காலம்பரத்தான் துலாக் காவிரி நீரை ஆண்டாளம்மா அரங்கன் அபிஷேஹத்துக்குத் தங்கக் குடத்தில் கொண்டு போறதைப் பார்த்தேன்.  கையிலே காமிராவோ, செல்லோ இல்லாததால் படம் எடுக்க முடியலை.  நான்எங்க குடியிருப்பின் மாடியிலே walking போறச்சே அங்கே இருந்து பார்த்தேன்.  மின்சாரம் அவுட்.  பதிவு போகுதானு தெரியலஅரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? ""ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும்.

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு?

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான்.

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்