எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 31, 2016

எல்லாமே தலைகீழ் விகிதம் தான்! பெண்களின் பங்கு!

குழப்பம் என்று ஜிஎம்பி ஐயா அவர்களும் நோக்கம் புரியவில்லை என்று எங்கள் ப்ளாக் ஶ்ரீராமும் சொல்கின்றனர். என்னுடைய நோக்கம் பெண்கள் வேலை பார்ப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் சொல்வது அல்ல. முக்கியமாய் ஐடி வேலை செய்யும் பெண்கள் படும் சிரமங்களையும் எடுத்துக் காட்டுவது தான். ஆனால் விபரமாகச் சொல்வதில் சில தர்மசங்கடங்கள் இருப்பதால் தொட்டும் தொடாமலும் சொல்லிச் சென்றிருக்கிறேன்.  ஆனாலும் எனக்குத் தெரிந்தவரையில் ஐடியில் வேலை பார்க்கும் பெண்களை அவர்களின் வேலைத்தகுதியை விட அவர்கள் அழகையே தகுதியாகக் கொண்டு எடுக்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது.

ஏனெனில் ஒரு சில ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர்க்கையில் நிரப்பச் சொல்லும் விண்ணப்பப் படிவங்களில் அந்தப் பெண்கள் அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வார்களா என்றும் அப்படி எனில் அதற்கு மாதம் செலவு செய்யும் தொகை எவ்வளவு என்றும் கேட்பதாக ஒரு தினசரியில் படித்தேன். அவங்க பார்க்கப் போகும் வேலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. பார்க்க அழகாக இருக்கும் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்வது ஒன்றே அந்தக் கம்பெனியின் நோக்கம் என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது அல்லவா? இதைச் சொல்லி இருப்பது பிரபலமான தமிழ் தினசரி ஒன்றே. அதுவும் சமீப காலங்களில் மிகப் பிரபலமாக இருக்கும் தினசரி!

அப்படி அழகு நிலையம் செல்லும் பெண்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கையில் வாடிக்கையாளர்கள் முக்கியமாய் ஆண் வாடிக்கையாளர்கள் எப்படிப் பேசினாலும், இரட்டை அர்த்தத்தில் பேசினாலும் அந்தப் பெண்கள் பொறுத்துப் போக வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்படுகிறதாகச் சொல்கின்றனர். இது பெண்ணுரிமையா?  பெண்களைக் கேவலப்படுத்துவது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதோடு இத்தகைய அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள ஆயிரங்களில் இந்தப் பெண்கள் செலவிட வேண்டி இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் அழகு நிலையத்துக்கே சம்பளத்தில் பாதி போய் விடும். பின்னர் மிச்சம் எங்கிருந்து வரும்? ஆனால் இப்போதெல்லாம் அழகு நிலையம் செல்லவில்லை எனில் அந்தப் பெண்ணுக்கு மதிப்பே இல்லை.

கட்டாயமாய் அழகு நிலையம் சென்று முகத்தை ப்ளீச் செய்து கொண்டு புருவங்களைத் திருத்தி, தலை மயிரை விரித்துப் போட்டுக்கொள்ளும் வண்ணம் வெட்டி ஒழுங்கு செய்து கொண்டு வந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு மரியாதையே கிடைக்கும்.  வேலையும் கிடைக்கும். ஆனால் இத்தகைய பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பெண்களைக் கண்டிக்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் பெண்ணின் சம்பளத்தைச் சார்ந்திருப்பார்கள். பெண் அதிகம் சம்பாதிப்பாள். அவள் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னால் ஆண்களோடு சேர்ந்து வெளியே செல்வதும் ஊர் சுற்றுவதும், எல்லாவற்றுக்கும் மேல் சில பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் மது அருந்துவதும் டிஸ்கோ நடனங்களுக்குச் செல்வதும் வார இறுதிகளில் பார்ட்டி என்று நடு இரவு தாண்டியும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுமாக இருக்கின்றனர். இதைத் தட்டிக் கேட்கும் பெற்றோருக்கு மதிப்போ மரியாதையோ கிடைக்காது.

தன் சம்பாத்தியத்தை எத்தனை பெண்கள் ஒழுங்காகக் குடும்பத்துக்குக் கொடுப்பார்கள் என்பதை எண்ணினோம் ஆனால் அதுவும் ஒரு சில பெண்களே இருப்பார்கள். பெற்றோரின் சிரமங்கள், குடும்பக் கஷ்டங்கள் புரிந்து கொண்ட பெண்களே தங்கள் சம்பளத்தைப் பெற்றோரிடம் முழுமையாகக் கொடுப்பார்கள். மற்றவர்கள் தனக்கு என ஒதுக்கிக் கொண்டு கொடுக்கலாம். அல்லது குடும்பத்துக்கு இவ்வளவு தான் என்று கணக்குப் பண்ணியும் கொடுக்கலாம். அது அந்தப் பெண்ணின் இஷ்டம். இதே பெண் கல்யாணம் ஆகிப் போனால் கணவனின் சம்பளத்தைத் தனக்குச் சொந்தம் என்று எண்ணுவாள். ஆனால் தன் சம்பாத்தியத்தைக் கணவனுக்கும் சொந்தம் என்று எண்ணவும் மாட்டாள். கொடுக்கவும் மாட்டாள். தனக்கு எனத் தனியாகத் தான் வைத்துக் கொள்வாள்.

முரட்டுக் கணவனாக இருந்தால் அவளை மிரட்டிப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளலாம். நல்ல மனைவியாக இருந்தால் அவளாகவே தன் சம்பளத்தையும் குடும்பத்தில் போடலாம். ஒத்துப் போகிறவர்களாக இருந்தால் இரு சம்பளங்களையும் சேர்த்துக் கணக்குப்போட்டுச் சேமிப்பைப் பொதுவில் வைத்து மற்றச் செலவுகளைச் செய்யலாம். ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்துச் செலவு செய்யலாம். ஆனால் இதற்கெல்லாம் மனப்பக்குவம் நிறைய வேண்டும். பொதுவாக ஆண் தன் சம்பளத்தைத் தனது என எண்ண மாட்டான். திருமணம் ஆகும் முன்னர் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் காப்பாற்றி வந்தாற்போல் திருமணம் ஆனதும் மனைவி, மனைவி வழி உறவினர்களுக்குச் செய்வதைப் பெரிய விஷயமாக எண்ண மாட்டான். ஒரு சில ஆண்கள் மனைவி வழி உறவினருக்குச் செய்வதைப் பெரிய விஷயமாக எண்ணலாம். பொதுவாக அப்படி இருக்காது. ஆனால் பெண் தன் பக்கம் தன் பிறந்தகத்து உறவினர்களை விடப் புக்ககத்து உறவினர்களையும் அவர்களுக்குச் செய்வதையும் கொஞ்சம் இல்லை நிறைய யோசித்துத் தான் செய்வாள். இதில் விதிவிலக்கான பெண்களைப் பற்றி இங்கே பேசவில்லை. 

Sunday, May 29, 2016

எல்லாமே தலைகீழ் விகிதம் தான்! 2

எனக்குத் தெரிந்தவரையில் ஐடி வேலை செய்யும் பெண்கள் பயங்கரமான மன அழுத்தத்தில் இருக்கின்றனர். முக்கியமாய் அவங்களுக்கு வேலை நேரம் ஒத்து வரதில்லை. இரவு நேர அலுவலில் அவர்கள் கண் விழித்திருப்பதாலும், கண்ட நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதாலும் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள். போதாக் குறைக்கு இரவுப் பயணங்களில் அவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்திரவுகள். சிலவற்றைச் சொல்லாமல் மறைத்தே வைக்கின்றனர் பெண்கள். இது தப்பு! வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் அவர்கள் நிலையில் அது சங்கடமாக இருக்கிறது என்பதே உண்மை! இவையெல்லாம் அறிந்தோ அறியாமலேயோ பெற்றோர் பெண்கள் சம்பாதிக்கும் தொகைக்காக அவர்களை வேலைக்கு அனுப்புகின்றனர். பல பெண்களும் மனம் விரும்பித் தான் வேலைக்குச் செல்லுகின்றனர். ஆனாலும் அதன் பின்னர் அதில் சந்தோஷமாக நீடித்து இருக்க விரும்பும் பெண்கள் எத்தனை பேர்! சந்தேகமே! பல பெண்களும் பெற்றோர் இனியாவது தாங்கள் வசதியாக வாழலாம் என எண்ணிப் பலவிதமான பொருட்களையும் இஷ்டத்துக்கு வாங்கிக் குவிப்பதற்குப் பணம் கட்டுவதிலேயே தங்கள் சம்பளத்தைச் செலவு செய்ய நேரிடுகிறது.

சில தனியார் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்துவிட்டுச் சலுகைகளை வழங்குகின்றன. அவற்றில் மளிகைப் பொருட்கள், துணிமணிகள், நக்ஷத்திர ஓட்டலில் சாப்பிடுதல், மலை வாசஸ்தலங்களில் தங்குதல் போன்றவை எல்லாம் உண்டு. பெண் திருமணம் ஆகிப் போய்விட்டால் இந்தச் சலுகைகள் எல்லாம் போய்விடுமே என நினைக்கும் பெற்றோரும் உண்டு. சொல்ல வருத்தமாய் இருந்தாலும் இது ஒரு சில வீடுகளிலாவது உண்மை நிலவரமாய் இருக்கிறது. அதோடு பெண்கள், ஆண் நண்பர்களோடு பழகுவதையும், வெளியில் செல்வதையும் இந்த மாதிரிப் பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

முன்னெல்லாம் பள்ளி, கல்லூரிகளிலேயே கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இப்போதும் ஒரு சில தனியார் கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்கள் முன்னை விட இப்போது கொஞ்சம் துணிச்சலாகத் தான் செயல்படுகின்றனர். ஆனால் அவர்களின் தைரியமும் துணிச்சலும் ஆக்கபூர்வமாக இருக்கிறதா? சந்தேகமே! கூடப் படிக்கும் நண்பனோடு வெளியே சென்று காஃபி ஷாப் போவதிலும், பிட்சா சாப்பிடுவதிலும் பெரிய பெரிய மால்களில் சுற்றுவதும் தான் பெண்ணுரிமை என நினைக்கின்றனர். இதைச் சொல்லப் போனால் நமக்குக் கட்டுப்பெட்டி என்னும் பெயர் வரும். ஆனால் இப்படி எல்லாம் சுற்றுவதால் நமக்கு எந்த உரிமையும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மாறாக நம்மைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்போது வரும் விளம்பரங்களைப் பார்த்தால் புரியும். ஒரு கால கட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளையே விரும்பினார்கள்.

பெற்றோரும் அப்படியே வரன் பார்த்தார்கள். ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளை மட்டும் உள் நாட்டு மாப்பிள்ளைக்குக் குறைந்தவர் அல்ல! அவர்களும் வரதக்ஷணை என்று கேட்காவிட்டாலும் கல்யாணத்துக்குப் பையர் வந்து போகும் செலவு, பெண்ணை வெளிநாட்டுக்கு அழைத்துப் போக விசாவுக்குச் செலவழிக்கும் தொகை, பெண்ணை வெளிநாட்டுக்குப் பிள்ளை அழைத்துப் போனாலோ அல்லது விசா கிடைத்துப் பெண் கொஞ்சம் தாமதமாய்ப் போனாலோ பெண்ணின் போக்குவரத்துச் செலவு எல்லாவற்றையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் உண்டு. இதற்கு உள்நாட்டு மாப்பிள்ளைக்கே வரதக்ஷணை என்று கொடுத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொடுத்தால் பெண் நம் கண்ணெதிரே வாழ்க்கை நடத்துவாளே என்று எந்தப் பெற்றோரும் நினைப்பதில்லை.

வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் பல்வேறு ஏமாற்றுப் பேர்வழிகளும் கலந்து போய் அவங்களோட சுயரூபம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பிச்சதும் தான் இப்போது வெளிநாட்டு மோகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால் அதற்காகப் பெண் வீட்டுக்காரர்கள் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை. பெண்ணிற்கு வயது ஏறிக் கொண்டே போகிறதே, இந்த வயதில் நாம் இரண்டு பிள்ளைகள் பெற்று விட்டோமே என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு என்றாவது நினைக்க வேண்டும்.அதோடு பெரும்பாலான பெற்றோர்களும் அதீதமாய்ப் பணம் செலவு செய்து படிக்க வைப்பதால் கொஞ்ச நாட்களாவது அந்தப் பெண்ணின் சம்பாத்தியத்தை நாமும் அனுபவிக்கலாமே என்ற எண்ணம் வந்து விடுகிறது. ஒரு சமயம் இரு பெண்கள் பேசிக் கொள்வதைக் கேட்க நேரிட்டது. அதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் தள்ளிப் போடப்பட்டே வருகிறது என்பதைக் கேட்ட இன்னொரு பெண் என்ன விஷயம், ஏன் சரியா வரலை? உனக்குப் பிடிக்காத வரனா? என்றெல்லாம் கேட்கிறாள். (தோழிகளுக்குள்ளான அந்தரங்கப் பேச்சில் கேட்டவை! பேருந்துப் பயணத்தில்!) அதற்கு அந்த இன்னொரு பெண், எவனாயிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயாராய்த் தான் இருக்கேன். அப்பா, அம்மா தான் இது வேண்டாம், அது வேண்டாம்னு சொல்றாங்க! என்பதே!

கடைசியில் இப்படிச் செய்யும் பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் திடீர்த் திருமணத்தால் ஏமாந்து மனம் நொந்து தான் போவார்கள். ஆம், காத்திருந்து, காத்திருந்து பொறுத்துப் பொறுத்து ஏமாந்த அந்தப் பெண் கடைசியில் தானாகவே தன்னை விரும்பிக் கேட்ட ஒரு பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு விடுவாள். இப்படித் தான் நடக்கும்! இல்லை எனில் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆக வழியே இல்லை! முனைந்து பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மிகக்குறைவாக இருக்கின்றனர்.

பி.கு. போன பதிவில் காரம், உஷ்ணம் அதிகமாய்த் தெரிந்ததாகப் பலரும் அபிப்பிராயப் பட்டதால் இந்தப் பதிவில் காரம், மணம், குணம் கம்மியாக இருக்கும். :)

Thursday, May 26, 2016

வெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு!

ரொம்ப நாட்கள் கழித்துத் தாய்மொழியிலே இன்னிக்குத் திரைப்படம் பார்த்தேன். ஹிஹிஹி, இப்போல்லாம் தாய்மொழிப் படங்களே பார்க்கிறதில்லை. இன்னிக்கு என்னமோ அதிசயமா நம்ம வீட்டிலே வேலை செய்யற பொண்ணு காலம்பர ஐந்தரை மணிக்கே வந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டுப்போனாளா?? ஐந்து நாட்களா அவ தினமும் லீவ் போடாமல் வரதுக்கே மழை கொட்டித் தீர்க்குது. இன்னிக்குச் சீக்கிரம் வந்ததுக்குக்கேட்கணுமா? மழை ஆரம்பிச்சுடுச்சு. வேர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சதை எல்லாம் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணவேண்டியதையும் பண்ணியாச்சு. திடீர்னு கணினியிலே உட்கார போரடிச்சது. குழுமங்களிலேயும் யாரையும் காணோம்.

சரினு தொலைக்காட்சியிலே ஏதாவதுபடம் பார்க்கலாம்னு ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தா, "ஆஹா, இன்ப நிலாவினிலே" னு கண்டசாலா பாடிட்டு இருந்தார். என்னடா இது ஆச்ச்ச்சரியம்னு பார்த்தா ஜெமினியும், சாவித்திரியும் படகிலே டூயட் பாடிட்டுப் போனாங்க. நல்லவேளையா அப்போ நான் துள்ளிக் குதிச்சதைப் பார்க்க அங்கே யாருமே இல்லை. ரங்க்ஸுக்கு உண்ட மயக்கம். போய்ப் படுத்துட்டார். நானே தான் ரசிச்சுக்க வேண்டி இருந்தது. நம்ம படமாச்சே. இந்தப் படம் எப்போ வந்ததுனு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கும், "ராம பக்த ஹனுமான்" படத்துக்கும் அப்பா தியேட்டருக்குக் கூட்டிப் போய்க் காட்டியது நினைவில் வந்தது. தம்பி அப்போ குழந்தை???? சரியாத் தெரியலை. ஆனால் அப்புறமா மூன்று மணிக்கு எழுந்து வந்த ரங்க்ஸ் இந்தப் படம் 1955-56-ல் வந்ததாகவும், அவர் சிதம்பரத்திலே படிக்கும்போது பார்த்ததாயும் சொன்னார். ஆனால் நான் விபரம் தெரிஞ்சு தான் பார்த்திருக்கேன்.

அதுக்கப்புறமா இந்தப் படத்தை ஒவ்வொரு வருஷமும் திருப்பாவை வகுப்பு நடத்தி வந்த ராஜம்மாள் சுந்தர ராஜன் குழுவினர் பக்தி கலா நிகழ்ச்சி ஒண்ணும் நடத்துவாங்க, பொங்கலுக்கு முன்னாடி. அப்போ முதல் நாள் ஒரு பக்திப் படம் இலவசமாப் போட்டுக் காட்டுவாங்க. வருஷா வருஷம் அது என்னமோ தெரியாது இந்தப் படம் தான் காட்டுவாங்க. அநேகமா அந்தப் பிரிண்டே கிழிஞ்சு சுக்குச் சுக்காப் போயிருக்கும். அவ்வளவு முறை காட்டி இருக்காங்க. அவ்வளவு முறை நானும் பார்த்திருக்கேன். முதல்லே எல்லாம் தம்பியைக் குழந்தைனு சொல்லிக் கூடவே கூட்டிப் போவேன். அப்புறமா பாய்ஸ் நாட் அலவ்ட் னு சொல்லிட்டாங்க. ஆக நான் தனியாவே நாலைந்து தரம் பார்த்திருப்பேனா?? என்றாலும் கடந்த பல வருஷங்களில் என் குழந்தைகளிடம் இந்தப் படத்தைப் பற்றியும், ரங்காராவ் நடிப்பைப் பற்றியும், "கல்யாண சமையல் சாதம்" பாடலைப் பற்றியும் சொல்லி இருக்கேன்.இந்தியாவிலே பார்க்க முடியாத எங்க பையர் அமெரிக்காவிலே போய்ப் பார்த்தேன்னு சொன்னார். :P

படத்தை நல்லா ரசிச்சுப் பார்த்தேன். நல்லதொரு நகைச்சுவைப் படம். அதுவும் அந்த ஜோசியர்கள்/புரோகிதர்களுக்கு வெற்றிலைத் தட்டு நகருவதும், கீழே விரித்திருக்கும் கம்பளம் சுருட்டிக்கறதும், கட்டில் கால் மண்டையிலே அடிக்கிறதும், சுத்தோ சுத்துனு சுத்தறதும் கடோத்கஜனோ ஆட்கள், "ஆஹூ தலைவா, இஹூ தலைவா, ஊஹூ தலைவா" னு சொல்றதும், பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. கொஞ்சம் இல்லை நிறைய விட்டலாசார்யா டைப்தான். என்றாலும் மனம் லயித்து, மனம் விட்டுச் சிரிச்சுப் பார்த்தேன். ரங்காராவை விடவும், சாவித்திரி ஆண்மகன் என்று தன்னை வித்தியாசப் படுத்தும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். மணமகனாக தங்கவேலு. அவருக்கு மணமகள் கருங்குரங்காயும், புலியாயும், ராக்ஷசியாவும் தெரியறதும் நல்லா இருந்தது. குழந்தைகள் படம்னு ரங்க்ஸோட தீர்ப்பு. ஆனாலும் அவரும் உட்கார்ந்து முடிவு வரை பார்த்தார். நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! இன்னொரு முறை வந்தாலும் பார்த்துட்டு எழுதறேன். ஓகேயா?

மாயாபஜார் க்கான பட முடிவு

இன்னிக்கு "எங்கள் ப்ளாக்"ஶ்ரீராமோட பதிவில் சுபத்ரை பலராமனின் மகள்னு சொல்லி இருந்தாரா! அதிலே போட்ட கருத்துப் பகிர்விலே இந்தப் பதிவை ம்ம்ம்மீள் பதிவாப் போடறதாச் சொல்லி இருந்தேனா! அதான் போட்டிருக்கேன்! எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்!  அர்ஜுனன் மகன் அபிமன்யூவாக ஜெமினியும், பலராமன் பெண் வத்சலாவாக சாவித்திரியும் நடித்த படம். துரியோட பிள்ளையாகத் தங்கவேலு!

Tuesday, May 24, 2016

எல்லாம் தலைகீழ் விகிதம் தான்!

இப்போதெல்லாம் பெண்களுக்கு  எளிதில் விவாகம் நிச்சயம் ஆகிவிடுகிறது. ஆனால் நிச்சயம் ஆன விவாகங்கள் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட முகூர்த்தத் தேதி வரை நிலையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. ஏனெனில் திடீர் திடீர் எனப் பெண் வீட்டுக்காரர்களின் மனோபாவங்கள், மனோநிலைகள் மாறி விடுகின்றன. ஜாதகம் பார்த்துச் செய்யும் பல திருமணங்களிலேயும் பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமே என்ற கவலையில் பெண்ணின் ஜாதகத்தைப் பிள்ளை விட்டுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர் மிகக் குறைவு.  இப்போது இதை எல்லாம் கல்யாணத் தரகு வேலை செய்யும் இணையங்கள் செய்கின்றன. அங்கிருந்து ஜாதகத்தை ப்ரின்ட் அவுட் எடுத்துப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்துப் பெண் வீட்டிற்குத் தகவல் தெரிவித்தால் அவங்க சொல்வது, நாங்க பார்த்துட்டுச் சொல்றோம் என்பது தான்.

அப்படி உடனே சொல்லிடவும் மாட்டாங்க. நாமளும் பொறுத்துப் பார்த்து விட்டுத் தான் கூப்பிட்டுக் கேட்போம். அவங்களுக்கு வருமே கோபம்! அப்படி ஒண்ணும் உங்க பிள்ளைக்காக எங்க பொண்ணு காத்திட்டு இருக்கலை. அவளுக்கு நிறைய வரன் வருதுனு சொல்வாங்க. நாம் பொருத்தம் பார்த்தாச்சானு கேட்கலைனால் நீங்க ஏன் முன்னாடியே கேட்கலை! இப்போ நாங்க வேறே இடம் நிச்சயம் பண்ணிட்டோம்னு சொல்லிடுவாங்க. எல்லாவற்றையும் மீறிப் பெண் வீட்டார் சம்மதம் சொல்லிப் பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு முடிவு செய்த பின்னரும் பிள்ளைக்குச் சரியான வேலை இல்லை; சம்பளம் பத்தலை! எங்க பொண்ணை வைச்சுக் குடித்தனம் நடத்த இந்தச் சம்பளம் போதுமா என்கிறார்கள்.  எங்க பொண்ணே ஐம்பதாயிரம்/ஒரு லட்சம் சம்பாதிக்கிறா! அவளுக்குச் சமமாக உங்க பையரும் சம்பாதிச்சா எப்படிப் போதும்னு கேட்கிறாங்க. இத்தனைக்கும் வயசு வித்தியாசமும் அதிகம் இருக்கக் கூடாது. கிட்டத்தட்ட சம வயசில் இருக்கணும். அப்போ எப்படிப் பையர் பெண்ணை விட அதிகமா சம்பாதிக்க முடியும்? அதற்கான அனுபவமும், வயசும் வர வேண்டாமா?  எடுத்த எடுப்பிலேயே இரண்டு லட்சம் சம்பளம் எல்லோருக்குமா கிடைக்கும்? இருக்கிற சம்பளத்துக்குள்ளே சிக்கனமாச் செலவு செய்தது எல்லாம் எந்தக்காலமோ ஆகி விட்டது! இப்போதெல்லாம்  ஆடம்பரச் செலவுகள் தான் அதிகம். கல்யாணம் ஆகி இருக்கும்போதே பிள்ளைக்கு வீடு, கார் அல்லது நல்ல பைக் இருக்கணும்.  பெரியவங்களோட அனுசரிச்சுப் போறதும் ரொம்பக் குறைவே!  ஒரு சில பெண்கள் இப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாகச் சரியாக இல்லைனு தான் சொல்லணும். கல்யாணம் ஆகிப் போகும்போதே பையருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் இருக்கணும்னா, அப்போத் தான் கட்டுபடி ஆகும்னா அப்போ அவங்க பொண்ணு செலவாளினு ஒத்துக்கறாங்களா? புரியலை! அதை ஜாதகம் பார்க்கிறச்சேயே கவனிச்சிருக்க மாட்டாங்களா? எல்லாம் பேசி முடிச்சுக் கிட்டத்தட்டக் கல்யாணம் நிச்சயம் பண்ணத் தேதி குறிப்பிடுகையில் சொல்வாங்க.

என்னதான் நினைச்சுட்டு இருக்காங்கனு தெரியலை! எங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஒரு பெண்ணோட ஜாதகம் வந்தது. தெரிஞ்ச பையருக்குப் பார்த்தோம். எல்லாம் சரியாக இருந்தது. பெண்ணுக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. சித்தப்பாதான் கவனிக்கணும். ஆனால் பெண்ணோடு கூடப் பிறந்த மற்ற இரு சகோதரிகளும் யார் மூலமாகவோ ஜாதகப் பொருத்தம் பார்த்துவிட்டு எங்களுக்குச் சம்மதம்னு பையர் வீட்டுக்குத் தொலைபேசிச் சொன்னாங்க. சரினு பெண்ணின் சித்தப்பாவைக் கூப்பிட்டுப் பேசினால் முதலில் அந்தப் பெண்ணுக்குப் பரிகாரம் பண்ணணும். அதுக்கப்புறமாப் பார்க்கிறோம். என்று சொன்னார். சொல்லி நாலு வருடங்கள் ஆகியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போ சமீபத்தில் அந்தப் பெண்ணின் இன்னொரு தங்கை மீண்டும் பையரின் வீட்டைத் தொலைபேசி மூலம் அணுகினால் மீண்டும் சித்தப்பா! ஜாதகம் பார்க்கவே இல்லை! பார்த்துட்டுச் சொல்றேன்னு சொல்லி ஒரு வருஷம் போல் ஆகிறது. கூப்பிடவே இல்லை! இத்தனைக்கும் பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்!

பெண் வீட்டுக்காரங்க எல்லாம் பிள்ளை பார்க்கையில் எடுத்த எடுப்பில் அந்தப் பையர்கள் ஒரு லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதிக்கணும் என்று எதிர்பார்க்கிறாங்க.  எல்லோருமே இஞ்சினியர் பிள்ளையாகப் பார்த்தால் மற்றத் துறைகளில் வேலை செய்யும் பையர்களைக் கல்யாணம் பண்ணிக்கப் பெண்களே முன் வரமாட்டாங்க போல! சம்பளம் பத்தலை, வேலை செய்யும் இடம் திருப்தி இல்லை! பையர் பார்க்கும் வேலையிலே எங்களுக்குத் திருப்தி இல்லைனு ஆயிரம் நொட்டுச் சொல்றாங்க! இத்தனைக்கும் பெண்களுக்கு 27 க்கு மேல் வயசு ஆகி இருக்கும். அப்படியும் பெண்ணின் தரப்பில் எங்களுக்கு அவசரமில்லை என்றே பதில் வருகிறது!  ஒரு பக்கம் மருத்துவர்கள் எல்லாம் 30 வயசுக்குக் குழந்தை பெத்துக்கறது ஆரோக்கியமானது இல்லைனு சொல்றாங்க. இன்னொரு பக்கம் பெற்றோர் முப்பது வயதுக்குக் குறைந்து பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதில்லைனு நிச்சயமா இருக்காங்க.

என்னதான் நினைக்கறாங்க இந்தப் பெண்களைப் பெற்றவர்கள்னு புரியவே இல்லை. அதையும் மீறிக் கல்யாணம் ஆகிவிட்டாலோ ஒரே வருஷத்திலே விவாகரத்து! :(  எதுக்குனே தெரியறதில்லை.  பார்க்கவும், பழகவும் இரண்டு பேரும் எளிமையாத் தான் இருப்பாங்க. ஆனால் எங்கேயோ எதிலேயோ மன வேறுபாடு வந்து ஒரே வருஷத்தில் விவாகரத்து ஆகி விடுகிறது! அப்போக் கல்யாணத்துக்குச் செலவு செய்த பணம்?  அதை எல்லாம் யாரும் நினைச்சுப் பார்ப்பாங்களா தெரியலை! பல நடுத்தரக் குடும்பங்களிலே கல்யாணக் கடனே முடிஞ்சிருக்காது. அதுக்குள்ளே விவாகரத்தும் ஆகி விட்டிருக்கும். அதிலேயும் இப்போல்லாம் கல்யாணங்களுக்கு ஆகிற செலவு பத்திக் கேள்விப் பட்டால் தலையைச் சுத்துது! எங்களால் எல்லாம் இப்படி ஆடம்பரக் கல்யாணம் நிச்சயமாப் பண்ணி இருக்க முடியாது. நல்லவேளையாகப் பெண்ணுக்கும், பையருக்கும் இந்த மாதிரி ஆடம்பரங்கள் எல்லாம் வரும் முன்னரே கல்யாணத்தைப் பண்ணி வைச்சுட்டோமோ, பிழைச்சோம்!


 தெரிஞ்சவங்க ஒருத்தர் வீட்டில் பெண் கல்யாணத்துக்குச் சத்திர வாடகையே ஒரு நாளைக்கு இரண்டு லட்சம்னு சொன்னாங்க. அதைத் தவிரச் சாப்பாடு இப்போது உயர்தர சமையல் கான்ட்ராக்டராக இருக்கும் ஏ.எஸ்.ராஜசேகரனைக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தால் ஒரு சாப்பாட்டின் விலை குறைந்த பட்சமாக 750 ரூபாய் ஆகிறது.  காலை டிஃபனுக்கு இரண்டு (சின்னதாய்த் தான் இருக்கும்.) இட்லி (ஸ்டிக்கர் பொட்டு சைஸில்) ஒரு சின்ன வடை, ஒரு சின்ன ஊத்தப்பம், ஒரு சின்னக்கரண்டி பொங்கல், ஏதேனும் (அநேகமாய் அசோகா போடுவாங்க) ஒரு ஸ்வீட்+ அரைக் கப் காஃபி (அந்தக் காஃபிக் கப்பே  ரொம்பச் சின்னது! அதிலும் அரைக்கப் தான் கொடுப்பாங்க)  இவற்றுக்கு 450 ரூபாய் ஆகிறது.  ஒருத்தருக்குக் குறைந்தது 1,200 ரூபாய்! இதிலே எல்லோரும் போட்டதைச் சாப்பிடுறாங்களானு பார்த்தால் இல்லை! இலையில் வைச்சது வைச்சபடியே இருக்கும்! நிறைய உணவு வீணாகும். இப்படியே மூணு நாள் கல்யாணம்னா ஒவ்வொரு வேளைக்கும் கணக்குப் போட்டுப் பாருங்க! தலை சுத்தல்! இவற்றைக் குறைக்கலாம்னு நாம் ஆலோசனைகள் சொன்னால் கிட்டத்தட்ட நம்மை அடிக்காத குறைதான்!

பெண் வீட்டுக் கல்யாணங்களில் இப்படிச் செலவுன்னா பிள்ளை வீடுகளிலும் ஒண்ணும் குறைச்சல் இல்லை! எல்லோருக்கும் கொடுக்கப் புடைவை, வேஷ்டி, டீ ஷர்ட்(இப்போல்லாம் இதான் கொடுக்கிறாங்க) அல்லது நல்ல ப்ரான்டட் கம்பெனி ஷர்ட் வாங்கறாங்க! இதுவே பட்ஜெட் மூணு லட்சத்துக்குப் போயிடும். அப்புறமாப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய முறைகள், பெண் வீட்டாருக்குப் பதில் மரியாதைக்குச் செய்ய வேண்டிய முறைகள், கல்யாணத்திற்கு வரும் உறவுக்கும் நட்புக்கும் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள், பிள்ளையும், பெண்ணும் ஹனிமூன் போகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. ஏதேனும் விட்டிருந்தால் நினைவு படுத்துங்க!

இனி போகப் போக என்ன ஆகுமோ? ஆனால் இதுவே மீண்டும் முப்பது வருடங்களில் சுற்றிக் கொண்டு வந்து நிலைமை தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் பெண்கள் பிறப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்கின்றனர். இப்போப் பெண்களே கிடைப்பதில்லை என்னும் நிலை! இது மாறிப் பெண்கள் அதிகமாயும் ஆண்கள் குறைவாயும் பிறப்பதால் காலம் மாறும் என்கின்றனர். இரண்டுமே சரியில்லை!  பெண்ணோ, ஆணோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் சென்றால் பிரச்னை இல்லை! 

Monday, May 23, 2016

பிறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்! இன்று பிறந்த நாள்!

காலைலேருந்து ஒரே பிசி! பிசியோ பிசி! (அப்பாடா, நானும் பிசிதான்னு சொல்லிட்டேன். எல்லோரும் சொல்றப்போ நமக்கு இப்படிச் சொல்ல முடியலியேனு நினைச்சுப்பேன்) இப்போத் தான் முகநூலுக்கு வந்து நன்றாக ஆழ்ந்து எல்லா வாழ்த்துகளையும் பார்க்கிறேன். ஒன்றிரண்டு காலையில் கண்ணில் பட்டப்போப் பார்த்தேன்.  ஹிஹிஹி, இந்த என்னோட பிறந்த நாள் விழா எப்போவும் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப் படும்னு தொண்டர்களுக்கும், குண்டர்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.

இன்னிக்குப் பதவியேற்பா, அதான் கொஞ்சம் தாமதம். அதோட நமக்கு மொத்தம் 3 பிறந்த நாள்! எப்படிங்கறீங்களா? எஸ் எஸ் எல் சி செர்டிஃபிகேட், பாஸ்போர்ட், ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், பான் கார்ட் எல்லாத்திலேயும் ஒரு மாசம் முன்னாடியே, அதிலும் ஒரு நாள் முன்னாடியே பிறந்த நாள் வந்து எல்லோரும் வாழ்த்தி முடிஞ்சாச்சு. அதைத் தவிரவும் உண்மையான ஆங்கிலத் தேதி மே 23, நக்ஷத்திரப் பிறந்த நாள் ஒரு சமயம் மேயிலும் ஒரு சமயம் ஜூனிலும் வரும். ஆக மொத்தம் மூணு பிறந்த நாள் ஆச்சா? மூணையும் சேர்த்து முப்பெரும் விழாவாக் கொண்டாடுவோம். இது இந்த வலையுலகத்தில் பத்து வருஷங்களாக இருப்பவர்களுக்குத் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க! :)

ஆச்சா! எல்லாத் தம்பிகளும், அண்ணன்களும் பரிசுகளை முட்டி மோதிக்காமல் கொண்டு வாங்க! யாருக்கு என்ன கொடுக்க முடியுதோ அதை வாங்கிக்கறேன். எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள்னு  கொடுப்பவங்களுக்குக் கொஞ்சம் லாபம் இருக்கும்! 2,3 கிலோ குறைஞ்சிருக்குனு மருத்துவர் சொன்னார். ஹிஹிஹி உங்களுக்காக 2.3 கிலோவை விட்டுக் கொடுத்திருக்கேன்.

மற்றபடி வஸ்த்ரகலா கொடுக்கிறவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா பட்டுங்கறவங்க பரம்பராவும், வானவில் நிறங்கள் கொடுக்கிறவங்க நினைவா எல்லாக் கலரிலேயும் வாங்கிடுங்க.  முக்கியமாக என்னோட அருமைத் தம்பிகள்

Vasudevan Tirumurti Ashwin Ji  மோகன் ஜி Sriram Balasubramaniam K V Vighnesh

அண்ணாக்களில் Ramaswamy Chandrasekaran திராச சார், சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு இருபதாயிரம் போட்டுப் புடைவை எடுத்துக் கொடுங்க போதும்! அது வஸ்த்ரகலாவோ, பரம்பராவோ, உங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை! மத்த அண்ணாக்கள் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக்கறேன். சீக்கிரமா வாங்கப்பா!

Wednesday, May 18, 2016

நம்பெருமாள் இளைச்சிருக்காரா?

நேத்திக்கு நம்ம பெரிய ரங்குவைப் பார்க்கப் போனோம். இம்முறையும் சில மாதங்கள் ஆகிவிட்டன. வெயில் காரணமாகப் போகவே இல்லை. திங்களன்று தான் நல்ல மழை பெய்ததே. ஆகையால் சூடு குறைவாக இருக்கிறதுனு நேத்திக்குப் போனோம். காலையிலேயே போய்விட்டோம்.  நேரே தாயார் சந்நிதிக்குப் போனால் கூட்டமே இல்லை. நின்று நிதானமாகத் தாயாரைப் பார்க்கலாம்னு நினைச்சால் பட்டாசாரியார், "போ!" "போ!" என்று விரட்டிட்டே இருந்தார். அப்படியும் கொஞ்சம் நின்னு பார்த்தாச்சு. வெளியே வந்ததும் தாயார் சந்நிதி வில்வமரத்தை அவசரமாகப் படம் எடுத்தேன். தொ.நு.நி. எல்லாம் பாக்காதீங்கப்பா! கண்ணை மூடிக்குங்க! 


பாட்டரி காருக்காகக் காத்திருந்தால் அது வரவே இல்லை. அரசு என்னமோ வயதானவங்க, குழந்தைக்காரங்க, மற்றும் நடக்க முடியாதவங்களுக்காக நான்கு பாட்டரி கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகச் சொல்றாங்க. இரண்டு பாட்டரி கார் தாயார் சந்நிதியிலிருந்து ஆர்யபடாள் வாசல் வரைக்கும் போகணும். மற்ற இரண்டு பாட்டரி கார் தாயார் சந்நிதியிலிருந்து சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப் போகணும். ஆனால் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு பாட்டரி கார் போயே நாங்க இதுவரை பார்த்ததில்லை. :(

தாயார் சந்நிதிக்கு மட்டும் போயிட்டுப் போயிட்டு வரும். அதுவும் ஒரே ஒரு கார் தான். இலவச சேவை. ஓட்டுநருக்கு கோயில் நிர்வாகம் சம்பளம் கொடுக்கிறது என்றாலும் ஒரு சிலர் அவருக்குப் பணம் கொடுக்கிறார்கள். இது சரியெனப் படவில்லை! :(  விடுங்க! பாட்டரி கார் வராததால் நடந்தே சென்றோம்.  ஆர்யபடாள் வாசலைத் தாண்டி உள்ளே சென்றதும் வழக்கமான பாதையில் போவதைத் தடுத்து வைச்சிருக்காங்க. கடந்த ஆறு மாசத்துக்கும் மேலே இப்படி! 50 ரூ சீட்டு வாங்கிட்டுப் போகலாம்னு பார்த்தா பக்தர்கள் வரிசை அங்கேயே ஆரம்பித்து உள்ள்ள்ளே வரை சென்றது. அவ்வளவு நீண்ட வரிசையில் நிற்க முடியாதேனு யோசிச்சோம். பின்னர் வேறு வழியில்லாமல் 250 ரூ சீட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். 

ஆனாலும் அரை மணி நேரம் ஆயிற்று. உள்ளே அதிக நேரம் இருக்க விடமாட்டாங்க என்பதால் உள்ளே நுழைகையிலேயே பெரிய ரங்குவின் முகத்தையும், உள்ளே நுழைந்ததுமே பாத தரிசனமும் பார்த்துக் கொண்டேன். பின்னர் நம்பெருமாளைப் பார்த்தேன். வழக்கம்போல் சிரிச்சுட்டு இருந்தார். எங்கே வந்தேனு கேட்டார். சாயந்திரமா அவருக்குப் புறப்பாடு இருக்கு. அப்போ உள்ளே விடமாட்டாங்க என்பதால் தான் காலம்பரயே வந்தோம். புறப்பாடு செல்லும் இடங்களில் எல்லாம் கோலம் போட்டுக் கொண்டிருந்தாங்க! நம்பெருமாள் ரொம்ப இளைச்சிருப்பதாக நம்ம ரங்க்ஸ் சொல்றார். எனக்கு ஒண்ணும் தெரியலை! ஒருவேளை சாயந்திரமாப் புறப்பாட்டின் போது மண்டகப்படி ஒண்ணும் இல்லையோ என்னமோ! சாப்பிட ஒண்ணும் கிடைச்சிருக்காது! அதனால் இளைச்சிருக்கார் போல! பெரிய ரங்குவும் கொஞ்சம் உயரத்திலே இருந்ததாகவும், இப்போக் கொஞ்சம் கீழே இறங்கி இருக்கார்னும் சொல்றார்.  எனக்கு எப்போதும் போல் தான் தெரிஞ்சது. இப்போல்லாம் உள்ளேயே துளசிப் பிரசாதம் கொடுக்கிறாங்க. அதை வாங்கிண்டோம். வெளியே வந்து தீர்த்தம் வாங்கிக் கொண்டோம். தாயார் சந்நிதியில் சடாரி சாதித்து மஞ்சள் விழுது பிரசாதமும் கொடுப்பாங்க. அங்கே அதையும் வாங்கிக் கொண்டிருந்தோம். 

திரும்பும்போது விஷ்வக்சேனர் சந்நிதி வழியா தொண்டைமான் மேட்டில் படிகள் ஏறி  இறங்கி மடப்பள்ளி வழியாகச் சுத்திண்டு தான் வரணும். அங்கே தான் அன்னமூர்த்தி சந்நிதி இருக்கு. ஆனால் எப்போவும் பூட்டியே வைச்சிருக்காங்க. ஆகையால் படமே எடுக்க முடியறதில்லை. பின்னர் மழை பிடிச்சுக்கறதுக்குள்ளே வீட்டுக்கு வந்தாச்சு! ஆண்டாளம்மாவைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தார் ரங்க்ஸ். அதையும் மறந்துட்டார் போல! ஆனால் வடக்கு வாசல் வழியாப் போனதாலே அப்படியே திரும்பி வர வேண்டி இருக்கு. தெற்கு வாசல் வழியாப் போனாத்தான் ஆண்டாளம்மாவைப் பார்க்க முடியும். நேத்துப் பார்க்கவில்லை. இன்னொரு முறை போனால் பார்க்கணும். 

Monday, May 16, 2016

கொட்டும் மழையில் கடமை ஆற்றியாச்சு!

ஒரு வாரத்துக்கும் மேலே என்னைக் காணலையேனு ஜேகே அண்ணா கேட்டிருக்கார். பதிவுகள் போடுவதைக் கொஞ்சம் நிறுத்திக்கலாம்னு முன்னரே முடிவு பண்ணித் தான் அவ்வப்போது பதிவுகள் போடுகிறேன். ஒரேயடியாக கணினிக்கு அடிமையானதில் இப்போதெல்லாம் படிக்கும் வழக்கமே விட்டுப் போச்சு! :( ஆகவே மீண்டும் படிக்க வேண்டும் என்று தான் கணினி பக்கம் முக்கியமான மடல்கள் பார்க்கவும், முகநூலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செய்திகளைப் பார்க்கவும் மட்டும் மொத்தமாய் இரண்டு மணி நேரமே செலவு செய்யும்படி வைத்துக்கொள்கிறேன். தீவிரமாக ஈடுபட வேண்டாம் என்று இருக்கிறேன். எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள்! ஆனால் முக்கியமான நண்பர்கள் பதிவுகளையும், எனக்கு மடல் அனுப்பிப் பார்க்கச் சொல்பவர்கள் பதிவையும் பார்த்து விடுகிறேன்.

மூன்று மாதமாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வெயில் கடுமை கொஞ்சம் குறைய ஆரம்பித்தது என்றே சொல்லலாம். இன்னிக்குக் காலையிலே லேசாத் தூற ஆரம்பிச்சது. சரி, சீக்கிரமாப் போய் வாக்கு அளித்துவிட்டு வந்துடலாம்னு கிளம்பினோம். கிளம்பும்போதே வண்டியில் உட்கார்ந்து குடை பிடிக்க முடியவில்லை. காற்று பின்னுக்குத் தள்ளியது.  குடையை மூடிவிட்டே போனோம். பெருந்தூற்றலாக இருந்தது வாக்குச் சாவடியை அடைகையில் பெரிய மழையாக மாறி விட்டது. பூத் ஸ்லிப் வேறே கொடுக்கலையா, எங்களோட அடையாள அட்டையைக் காட்டினால் இப்போப் பேரை எல்லாம் மாத்தி அகர வரிசைப்படி எழுதி இருக்காங்களாம். ஆகவே தேடணும்னு சொன்னாங்க. போன இடைத்தேர்தலிலே இருந்த எண்ணைக் கொடுத்தால் அதுக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் தெருப்பெயரைச் சொல்லித் தெருவின் மேற்குப் பக்கமா, கீழ்ப்பக்கமானு கேட்டு அதற்கான எண்ணை அவங்களே சொல்லிக் கண்டுபிடிச்சுக் கொடுத்தாங்க.

உள்ளே போனால் அங்கிருந்த காவல்துறை ஊழியர் என்னை வரிசையில் நிற்க வேண்டாம், நேரே உள்ளே போங்கனு சொல்ல, நம்ம ரங்க்ஸுக்கு பிபி எகிற, அவரிடம், "நான் அவங்களை விடப் பெரியவன்! என்னை நிற்க வைக்கிறீங்களே!" னு கேட்க அங்கிருந்த எல்லோரும் சிரிக்க நான் கையில் மையை வைத்துக் கொண்டு ஓட்டுப் போட்டே விட்டேன். கடைசியில் நம்ம ரங்க்ஸை உள்ளே இருந்த தேர்தல் அதிகாரி முன்னாடியே வரும்படி அழைச்சிருக்கார். ஆகவே அவரும் நான் ஓட்டுப் போட்ட கையோட தானும் வந்து ஓட்டுப் போட்டுவிட்டார். வந்து தான் காலை ஆகாரமே பண்ணினேன். இன்னிக்குக் கத்திரிக்காயில் நேற்று முகநூலில் பார்த்த மாதிரி கொத்சு பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால் அதில் வெங்காயம் சேர்க்கலை. நான் வெங்காயம் சேர்த்தேன். மற்றபடி இந்த கொத்சுவுக்குப் பருப்பெல்லாம் போடவில்லை. (ஜேகே அண்ணா, கவனிக்கவும்)  செய்முறை கீழே!

கத்திரிக்காய் நிதானமான அளவில் 2 அல்லது 3
பெரிய வெங்காயம் பெரிதாக இருந்தால் ஒன்று
பச்சை மிளகாய் ஒரு மிளகாயைப் பொடியாக நறுக்கவும்
கருகப்பிலை,
பெருங்காயம்
புளி ஜலம் ஒரு கிண்ணம்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள்
தாளிக்கத் தேவையான அளவு நல்லஎண்ணெய்
கொத்துமல்லி கடைசியில் தூவ (விருப்பப்பட்டால்)

அதிலே கொத்சுப்பொடிக்கு வறுத்து அரைக்க

 மிவத்தல்,  நான்கு
கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்
ஜீரகம், ஒரு டீஸ்பூன் (இதை மட்டும் எண்ணெயில் வறுக்காமல் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொண்டேன்.)
 துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன்,
பெருங்காயம்,தேவையான அளவு
 வெந்தயம் அரை டீஸ்பூன்

 மட்டும் போடச் சொல்லி இருக்காங்க.  வெறும் வாணலியில் வறுக்கச் சொல்லி இருந்தாங்க. ஆனால் நான் மறந்து போய் எண்ணெய் ஊற்றி வறுத்துட்டேன். சரி, இப்படியே இன்னிக்கு இருக்கட்டும்னு விட்டாச்சு. மற்றபடி புளி ஒரு  நெல்லிக்காய் அளவு ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாய் அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு மட்டும் போடச் சொல்லி இருக்காங்க. நான் கபருப்பு, உபருப்பு ஒரு சின்ன பமி, கருகப்பிலை, பெருங்காயம் எல்லாம் தாளித்துக் கொண்டேன். வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிவிட்டுக் கத்தரிக்காயையும் போட்டு வதக்கினேன். கத்தரிக்காய் வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்துப் புளி ஜலத்தை விட்டுக் கொதிக்க விட்டேன். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது பொடித்த பொடியையும், உப்பையும் சேர்த்தேன். விருப்பப்பட்டால் வெல்லத்தூள் இரண்டு டீஸ்பூன் சேர்க்கலாம். பின்னர் கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவினேன்.

ரவா இட்லியுடன் சாப்பிட்டோம். கொத்சுவுக்கு எங்க மாமியார் வீட்டில் பாசிப்பருப்பு வேக வைத்துக் கலப்பாங்க. இல்லைனா அதை கொத்சுனே ஒத்துக்க மாட்டாங்க! :) நான் பொதுவா கொத்சுவுக்குப் பருப்புப் போடுவதில்லை என்றாலும் இட்லிக்குக் கொத்சு செய்தால் பருப்புப் போட்டுடுவேன். ஆனால் இன்னிக்குப் போடலை. கொத்சுப் பொடியும் மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துப் போடுவோம். இன்னிக்கு மாறாகத் துவரம்பருப்பு! இதில் எல்லாம் ஜீரகம் சேர்ப்பதில்லை. ஆனால் இன்னிக்கு ஜீரகம் சேர்த்தேன்.

காலையிலிருந்து நல்ல மழை. இப்போது தான் கீழ்வானம் வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. இடி,மின்னல் இருந்ததால் கணினியைத் திறக்கவே இல்லை. இடி, மின்னலில் மோடம் போயிடுச்சுன்னா பிரச்னை! அதான்!  :)

Monday, May 09, 2016

அக்ஷய த்ரிதியைக்கு நகை வாங்குபவரா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள்!


அக்ஷய திரிதியை க்கான பட முடிவு


உப்பு வாங்கலையோ உப்பு!

அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.அன்ன தானம்


எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.

மேற்கண்டவை தமிழ்த்தாத்தா அவர்கள் எழுதியவற்றிலிருந்து எடுத்தது.

எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகாமையில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.


மீள் பதிவு, அக்ஷய த்ரிதியைக்காக!

Tuesday, May 03, 2016

சுத்திச் சுத்தி வருதுங்கோ! :(நேற்று இதற்கான பதிலை ஸ்வேதாவின் பதிவில் கூறி இருந்தேன். ராவணன் பெண் பித்தன். கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் தன் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பான். அப்படி அவன் கெடுக்க நினைத்த பெண்களுள் ஒருத்திதான் குபேரன் மகன் நளகூபரன் மனைவி. ராவணனுக்கும் மருமகள் ஆவாள். அவள் கொடுத்த சாபத்தினால் தான் அவன் சீதையை வற்புறுத்தவில்லை. தன் விரலால் கூடத் தொடவில்லை. இல்லை எனில் என்ன நடந்திருக்குமோ!

மேலும் வேதவதி கொடுத்த சாபமும் அவனுக்கு இருந்தது. விருப்பமில்லாப் பெண்களைத் தொட்டால் அவன் தலை சுக்கு நூறாகும் என்று அவனுக்கு சாபம் இருந்தது.  அதோடு சூர்ப்பனகையும் நல்ல எண்ணத்துடன் ராவணனிடம் சீதையைக் குறித்துச் சொல்லவில்லை. ராவணன் அழிவான் என்பது தெரிந்தே கூறினாள். இதற்குக் காரணம் சூர்ப்பனகையின் கணவனை ராவணன் ஒரு போரில் அழித்ததே ஆகும். அதற்காக மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொண்டாள் சூர்ப்பனகை.


சூர்ப்பனகை சொன்னாள் என்பதற்காக மட்டும் ராவணன் சீதையைத் தூக்கவில்லை. அதோடு சூர்ப்பனகையை ராமரோ, லக்ஷ்மணனோ மூக்கை அறுத்ததற்காகவும் தன் நாட்டையும், அரசுரிமையையும் விட்டுக் கொடுத்துப் போர் புரியவில்லை. போர் புரிந்தது சீதையைத் தூக்கி வந்ததற்காக! இங்கே ராவணன் எந்தத் தியாகமும் செய்யவில்லை. சுயநலத்துக்காகவே போர் புரிந்தான்.

ஆனால் ராமனோ ஊர் ஏதேனும் சொல்லுமோ என்னும் பழிச்சொல் தன்னையும் சீதையையும் சேராமல் இருக்கவே சீதையிடம் கோபமாகப் பேசுகிறான். அப்படியும் அவனாக சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்லவில்லை. சீதை தானாகவே அக்னிப் ப்ரவேசம் செய்கிறாள். அக்னிப்ரவேசம் செய்து தன்னை நிரூபித்துக் கொள்கிறாள். இதை வால்மீகியில் படிக்கலாம். மேலும் வண்ணான் சொன்னான் என்பதற்காகவெல்லாம் சீதையைக் காட்டுக்கு அனுப்பவில்லை.

வழக்கமாக ஒற்றர் படை நாட்டைச் சுற்றி வந்து நாட்டு நடப்புகளைத் தெரிவிக்கையில் ஒரு சிலர் இப்படிப் பேசிக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகின்றனர். அதுவும் வருத்தத்துடன் தான். அரசனுக்கு அதுவும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அரசனுக்கு அரச தர்மம் தான் முக்கியம். தன் குடிகளின் விருப்பம் முக்கியம். சீசரின் மனைவியே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்னும்போது நாம் ஏன் ராமன் இவ்வாறு செய்ததைக் குறை சொல்கிறோம். ஆங்கிலத்தில் சொல்வதை ஏற்போம். ஆனால் நம் நாட்டில் ஒரு மன்னன் தன் குடிமக்களுக்காகத் தன் இல்வாழ்க்கையைத் தியாகம் செய்தால் ஏற்க மாட்டோமா?

ராமன் சொன்னதை சீதை புரிந்து கொண்டே காட்டுக்குச் செல்கிறாள். இதில் ராமனின் அராஜகம் எங்கிருந்து வந்தது? ஒரு மனைவியாக, அரசியாகத் தன் கணவனின் கடமைக்குக் குறுக்கே வராமல் விலகி இருந்து ராஜ்யத்தைக் காப்பாற்றுகிறாள். தன் கணவனின் அரச தர்மத்தைக் காப்பாற்றுகிறாள். இன்றைய நாட்களில் ஆட்சியாளர்களுக்கு இரண்டுக்கு மேல் மனைவியர் இருப்பதை வைத்து நாம் அன்றைய ஆட்சியோடு ஒப்பிடல் கூடாது. இன்றைய அரசியலில் வில்லத்தனம் செய்யும் நபர்களே முக்கியக் கதாநாயகர்கள். நல்லது செய்பவர்களுக்குக் கெட்டபெயர் தான் கிடைக்கும்; கிடைக்கிறது. ஆனால் ராமர் காலத்தில் அப்படி அல்ல என்ற எண்ணத்தை மனதில் இருத்திக் கொண்டு படிக்க வேண்டும். அரச தர்மத்தைக் காப்பாற்றினான் ராமன். அதற்காகத் தன் மனைவியையே துறந்தான். மனைவியும் அதற்காக ஒத்துழைத்தாள். இது பெருமைக்கு உரியதே அன்றி சிறுமைக்கு உரியதல்ல.


ராவணனின் நல்ல குணங்களையும் பட்டியலிடும் வால்மீகி ராவணன் செய்த தவறையும் சுட்டிக்காட்டுகிறார். பிறன் மனை நோக்குதல் என்னும் பெரிய பிழையை ராவணன் செய்தான். ஆகவே இனி ஒரு முறை சூர்ப்பநகைக்காக ராவணன் தன் நாட்டை இழந்தான், தன்னையே மாய்த்துக்கொள்ளும்படி போர் புரிந்தான் தியாகம் செய்தான் என்று நினைக்காமல் வால்மீகியை முழுதும் படியுங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்!

 என்னைப் பொறுத்தவரையில் எனக்கோ அல்லது என் குழந்தைகளுக்கோ ராமனைப் போன்றதொரு பிள்ளை தான் தேவை. பிறன் மனைவியை தூக்கி வந்த ராவணனைப் போன்ற பிள்ளை தேவை இல்லை. சூர்ப்பநகைக்காக அவன் எதையும் இழக்கவில்லை என்னும் உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் இந்த ராவணன் குறித்த பதிவு சுற்றிச் சுற்றி வருகிறது. இதைப் படிப்பவர்கள் ராவணன் சூர்ப்பநகையை மூக்கறுத்ததற்காகவே ராமனோடு போர் புரிந்தான் என்பதாகவே நினைக்கலாம். ராவணன் செய்த அராஜகங்கள் எல்லாம் மறைந்து போய் விடும். குபேரனை விரட்டி விட்டே அவன் லங்காபுரியைத் தனதாக்கிக் கொண்டான் என்பதும் மறைந்து விடும்.
ராவணன் போற்றத் தக்கதொரு கதாநாயகனாகி விடுவான் வெகு விரைவில்! ராமாயணம் மாறி ராவணாயணமாக ஆகி விடும்!
இப்போது இருக்கும் அவசர உலகில் இப்போதைய மேம்போக்கான பாடத்திட்டத்தில் இத்தகைய எதிர்மறைக் கருத்துகள் தான் சரியானது என்னும் எண்ணத்தோடு குழந்தைகள் மனதில் புகுந்தால் எதிர்காலம் குறித்துக் கவலை ஏற்படுகிறது.

இப்போது இருக்கும் அவசர உலகில் இப்போதைய மேம்போக்கான பாடத்திட்டத்தில் இத்தகைய எதிர்மறைக் கருத்துகள் தான் சரியானது என்னும் எண்ணத்தோடு குழந்தைகள் மனதில் புகுந்தால் எதிர்காலம் குறித்துக் கவலை ஏற்படுகிறது. ராமாயணம் குறித்த ஆழமான பார்வை தேவை! இப்போதையப் பெண்ணியப் பார்வையில் அதைப் பார்க்கக் கூடாது. சமகாலத்தில் எழுதப்பட்டவைகளையே சமகாலத்தோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்

Sunday, May 01, 2016

அப்பாடா! ஒரு வழியாச் சொல்லிட்டேன்!

முகவரி: Rattan Bazaar Rd, Rattan Bazaar, Parrys, Chennai, Tamil Nadu
ஃபோன்:044 2535 5756

handloom house chennai வரைபடம்

சமீபத்தில் எனக்கு அதிர்ச்சி அளித்தஹிஹிஹிஹி) இரு விஷயங்கள் சென்னையில் ரத்தன் பஜாரில் ஹான்ட்லூம் ஹவுஸ் இல்லைனு துளசி சொன்னதும், மதுரையில் கோபு ஐயங்கார் கடை இல்லைனு ஶ்ரீராம் சொன்னதும் தான். சமீபத்திய சென்னை விஜயத்தின் போது ஒரே பகல் அதுவும் பனிரண்டு மணியிலிருந்து இரவு எட்டு வரை மட்டுமே இருந்ததால் எங்கேயும் போக முடியலை. ஆனாலும் ஒரு சென்னைப் பயணம் இருக்கிறது. அப்போது ஹான்ட்லூம் ஹவுஸ் போக நினைச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி அங்கே அந்தக் கடை இருக்கானு தினம் தினம் ஏதேனும் ஒரு காரணத்தை ஒட்டிச் சென்னை பாரிசுக்குச் செல்லும் அண்ணாவிடம் கேட்டேன். அவர் அங்கே தான் இருக்குனு திட்டவட்டமாகக் கூறினார்.

கடையை நோக்கி நாம் போகையில் நம் வலப்பக்கம் டி.பரஷுராம் கடையும் இடப்பக்கம் கண்ணாடிக்கடையும் இருக்கும். கடையிலிருந்து வெளியே வரச்சே இடம், வலம் மாறும். இந்த அடையாளங்களை எல்லாம் சொல்லிக் கேட்டாச்சு. கடை அங்கே தான் இருக்குனு அண்ணா சொல்றார். துளசி வேறே ஏதோ ஒரு கோ ஆப்டெக்ஸ் கடையைப் பார்த்திருக்காங்கனு நினைக்கிறேன். அங்கிருந்து சற்றுத் தூரத்தில் கோ ஆப்டெக்ஸ், காதி பவன் எல்லாமும் இருக்கு. இருந்தாலும் எனக்கு நேரில் போய் என் கண்ணால் பார்க்கும் வரை நிச்சயம் இல்லை தான். அதற்குச் சில நாட்கள் ஆகும். இப்போதைக்குக் கடை விலாசமும், தொலைபேசி எண்ணும், இருக்குமிடம் குறித்த கூகிள் படமும் கொடுத்திருக்கேன்.

அதே போல் ஶ்ரீராம் மதுரையில் கோபு ஐயங்கார் கடைக்குப் போன அன்னிக்குத் "திங்க"க்கிழமைனு நினைக்கிறேன். அன்னிக்கு வார விடுமுறை. விசாரித்தவரையில் கோபு ஐயங்கார் கடை அங்கே தான் இருக்கு. சமீபத்தில் மதுரை போகச் சந்தர்ப்பம் இல்லைனாலும் கோவை சிநேகிதி ஷோபா ராமகிருஷ்ணன் சென்ற மாதம் போயிட்டு வந்தாங்க. அங்கேயும் போயிருக்காங்கனு நினைக்கிறேன். ஆகவே வார விடுமுறைக்குக் கடை மூடி இருந்ததை ஶ்ரீராம் தப்பாய் நினைச்சிருக்கணும். இப்போ ஶ்ரீராம் ரொம்பவே வேலை மும்முரத்தில் இருப்பார். இன்னும் நான்கு நாட்களுக்கு அவரால் பதிவைப் பார்ப்பது முடியாதுனு நினைக்கிறேன். அதுக்கப்புறமாப் பார்த்துட்டு மதுரைக்காரங்களைக் கேட்டுட்டுச் சொல்லட்டும்! :)


இது ரொம்பவே மண்டையை உடைக்கிற தலை போகிற விஷயம் பாருங்க! பகிர்ந்துட்டேன்! :)