எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 30, 2013

பிள்ளையாரப்பா, தூக்கிவிடப்பா!

வழக்கமான மூச்சு விடற பிரச்னை தான்.  எப்போவுமே எனக்கும், என்னோட மூக்குக்கும் மூச்சு விடறதிலே சண்டை வந்துடும்.  இந்த முறை என்னால்  எழுந்து நடமாட முடியாத அளவுக்குக் கடுமையான சண்டை.  மூச்சோ ஒரேயடியா வந்துடலாமா, கொஞ்சம் கொஞ்சமா வரலாமானு யோசனை.  விடுவேனா! மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு! இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை தான்.  ஆனால் மருத்துவர் முறைக்கிறார்.  ஓய்விலேயே இருக்கணும்னு கண்டிப்புக் காட்டறார். முடிஞ்சவரை இருக்கேனு சொல்லித் தப்பிச்சுட்டு வந்திருக்கேன்.

ஒண்ணும் இல்லை;  அதிகமான அலைச்சல் காரணம்னு சொன்னாலும் வெளியே போன இடத்தில் ஆர்வோ தண்ணீர் தானேனு ஒரு ஹோட்டலில் மாத்திரை சாப்பிடவேண்டித் தண்ணீரைக் குடிச்சது தான் காரணம்.  எனக்கும் சரி,  அவருக்கும் சரி, உடனேயே சளி பிடித்துக் கொண்டு முதலில் அவர் படுக்க, அவரை டாக்டர் கிட்டே அழைத்துப் போய்க் காட்டிட்டு வர வரைக்கும் நடமாடிய நான் மறுநாளே எழுந்திருக்க முடியாமல் படுத்தேன்.  அப்புறமா 2 நாள் காலையா, மாலையானே தெரியாத அளவுக்கு மயங்கிக் கிடந்தேன்.  அதோடயே நானும் டாக்டர் கிட்டே போயிட்டு மருந்துகள் வாங்கிட்டு வந்து சாப்பிட்டிருக்கேன்.  நேத்திக்குத் தான் அந்த மாத்திரைகளை எல்லாம் தெளிவாக என்ன என்னனே பார்த்தேன்.  இப்படி இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் என்னோட பிறவியிலிருந்தே குடி இருக்கும்  ஆஸ்த்மா எட்டிப் பார்த்து நானும் இருக்கேன் உன்னுடன், நினைவிலிருத்திக்கொள்னு சொல்லிட்டுப் போகும். அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கப் பழகியாச்சு என்றாலும் அது விடுவதாயில்லை. :( துர்க்குணம்!

இருபது வருடத்துக்கு முன்னாடியே திருச்சிக்கு வந்தப்போ என் தம்பி என்னை உ.பி, கோயிலுக்கு அழைத்துப் போக மறுத்தார். அப்போப் போயிட்டு வந்திருக்கலாம். அதுக்கப்புறமும் பலமுறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போக நேர்ந்ததில்லை.  இப்போ இங்கே வந்ததில் இருந்து சொல்லிட்டே இருந்தேன்.  ஆனால் எங்க எதிர்க் குடியிருப்பில் இருக்கும் பெண்மணி ரொம்பவே பயந்தார் முடியுமானு!  ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு!  இது என்ன  பிரமாதம்னு ரெண்டு பேரும் தோள் கொட்டினோம். பிள்ளையார் நேர் எதிரே உச்சியில் இருந்து பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார்.  சரி, சரி இதுங்க வரட்டும், பார்த்துக்கலாம்னு இருந்திருக்கார்.


கடைசியா நாங்க, எங்க குழந்தைகளுடன் 86ஆம் வருடம் மலையில் ஏறியது தான்.  அப்புறமா இரண்டு பேரும் பல முறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போகலை.  முதல்நாள்  என் தம்பி தொலைபேசினப்போ மறுநாள் குறிப்பிட்ட நேரம் கூப்பிடச் சொன்னதுக்கு அப்போ உ.பி.கோயிலில் இருப்பேன்;  அதனால் அப்போ முடியாதுனு சொன்னேன்.  அவருக்கு உடனே பயம். நான் தான் ஏற்கெனவே உனக்கு ஆகாதுனு சொன்னேனேனு கேட்டார்.  இரண்டு பேரும் போகப் போறோம்னதும், பிள்ளையாரே துணைனு விட்டுட்டார்.  நாங்களும் மிகவும் தன்னம்பிக்கையுடனேயே சென்ற வியாழன் 24-ஆம் தேதி உ.பி. கோயிலுக்குக் கிளம்பினோம்.  கூட வந்தவர்கள் எங்களை விடவும் வயது ஆனவர்கள்.  இப்படி நான்கு இளைஞர்களாக உ.பி. கோயிலுக்கு மலை ஏறப் போய் மாணிக்க விநாயகரிடம் வேண்டுகோள் வைத்தோம்.

அதற்கு முதல்நாள் தான் முதலில் நம்ம அழகிய சிங்கரைப் பார்த்துட்டு, திருவானைக்கா சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சமயபுரம், ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம், மாகாளிக்குடி உச்சையினி மஹாகாளி, ஆனந்த செளபாக்கிய சுந்தரி, அழகம்மை, விக்ரமாதித்தனின் உச்சையினி மஹாகாளி, வேதாளம், சுளுவன் எல்லாரையும் பார்த்துட்டு வந்திருந்தோம்.  அங்கிருந்து குணசீலம் சென்றோம்.  எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்றேன்.  முதல்லே பிள்ளையார் கிட்டே இருந்து ஆரம்பிக்கலாமேனு.

Saturday, January 26, 2013

உபயகுசலோபரி!

ஹிஹிஹி, அந்தக் காலத்து ஆனந்தவிகடனிலே ஆசிரியர் வாசகர்களுக்குக் கடிதம் எழுதறப்போ உபயகுசலோபரினு போட்டு இரண்டு பக்கத்துக்கு போல்ட் அச்சில் வரும். உபயகுசலோபரின்னா, நானும், செளக்கியம், நீயும் செளக்கியம்தானேனு அர்த்தம்னு நினைக்கிறேன்.  அப்படித்தான் பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன்.  இன்னிக்கு இதைப் பத்தி மின் தமிழிலே ஒரு இழை ஓடிட்டு இருக்கிறதைத் தற்செயலாப் பார்த்தேன்.  ஹாஹா, தற்செயலாத்தான்.   இன்னும் கணினியில் முழுசா செட்டில் ஆகலை.  அதுக்குள்ளே நம்ம ரசிகப் பெருமக்கள் எங்கேயானும் தீக்குளிச்சு, அலகு குத்திண்டு, நெருப்புக்காவடி, பாம்புக்காவடினு எடுக்கப் போறாங்களேனு அவசரம் அவசரமா காலம்பர வந்து பார்த்தேன்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு ஈ /காக்காய் என்னனு கேட்கலை!  என்னத்தைச் சொல்றது!  அதுங்களுக்கெல்லாம் வலைப்பதிவு எப்படிப் படிக்க வரும்? சரியான மு.மு. நான்னு மனசைத் தேத்திண்டு, நம்ம தொண்டர் கூட்டம்/ரசிகப்பெருமக்கள்,  சரி, சரி, அவங்களுக்கு நாம ரொம்ப பிசினு தெரிஞ்சு தான் தொந்திரவு பண்ணலை;  தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்சு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன்.  :)))))))))


ஒரு வாரமா நெருங்கிய உறவினர் வருகை, அவங்களோட ஊர் சுற்றல், சுத்தி முடிச்சு வீட்டுக்கு வரச்சே நோ மின்சாரம். அதிகப்படியான ஊர் சுற்றலினால் உடம்புப் படுத்தல், அப்படியும் விடாமல் நேற்று மாலை வரை சுத்தி முடிச்சுட்டு இன்னிக்குத் தான் வீட்டிலே உட்கார்ந்து கொண்டோம். இப்படிப் போயிடுச்சு ஒரு வாரத்துக்கும் மேலே.  கொஞ்ச நாட்களாக மத்தியானமெல்லாம் இப்போ நோ மின்சாரம்.  ஆகவே கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோனு அன்பா ரங்க்ஸ் உபசரிக்க சரினு படுத்தா! ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு.  எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.  அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு.  போறததுக்கு அழைப்பு மணி வேறே "ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்!" னு கூப்பிட எழுந்து பார்த்தால்   குடியிருப்பு வளாகத்தின் பொதுவிடங்களைச் சுத்தம் செய்யும் வேலைக்காரப் பெண்மணி, கையெழுத்து வாங்க வந்திருக்காங்க.  மனசுக்குள் திட்டிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து நாலாம் முறையாப் படுத்தால்,  கீழே இருந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு ஜெனரேட்டர் ஓட ஆரம்பிக்க, வாழ்க்கையே வெறுத்தது.  காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

நல்லவேளையாப் போச்சு போனு ஒரேயடியா எழுந்துட்டேன்.  வாஷிங் மெஷினிலே இருந்து துணிகளை எடுத்து உலர்த்திட்டு வந்தால் மின்சாரம் வந்துட்டேனு சொல்லவே இப்போ, இந்த நிமிஷம் இதிலே உட்கார்ந்திருக்கேன். எத்தனை நேரம் இருக்கும்னு சொல்ல முடியலை.  இப்போல்லாம் எப்போ வேணாப் போகுது;  எப்போ வேணா வருது! ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

திங்களன்று கருட சேவை பார்த்தப்புறம் உறவினர்களோட நம்ம பெரிய பெருமாளைப் பார்க்கப் போனால் என்ன ஆச்சரியம்!  கூட்டமே இல்லை.  ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம்.  உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள்.  அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை.  போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா! மயக்கமே வந்தது.  கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம்.  ஆமாம், இல்லையா, பின்னே!  ஏற்கெனவே  அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே.  மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல! அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான்.  குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்;  குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்;  கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார்.  உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு.  இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம்! :P :P :P :P  சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு.  இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு.  ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு.  அவ்வளவு ஏன்?  வாசல்லே காவல் காக்கிற ஜய , விஜயர்கள் கூடக் கேட்கிறாங்கன்னா பாருங்களேன்.

இதோடு மட்டுமா?  வைகுண்ட ஏகாதசி சமயத்திலே ஆழ்வார்களுக்கு அருளிச் செய்தாப்போல், மற்றப் பொது ஜனங்களுக்கும் அருள் பாலிக்கிறாராம்.  அதுக்காகப் பள்ளிகள் எல்லாம் இந்தத் தை மாசம் பூபதித்திருநாளப்போ அவரை அவங்க பள்ளிகளுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு அனுப்பறாங்க.  அவரும் எல்லாப் பள்ளிகளுக்கும் போயிட்டு மாணவ, மாணவிகளை எல்லாம் பார்த்துப் பேசி, விளையாடி, விளையாட்டுக் காட்டிட்டு, சாப்பாடும் சாப்பிட்டுட்டு வரார்.  இவரை என்னனு சொல்றது?  இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க.  அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம்.  எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன?  என்ன நாஞ்சொல்றது?

என்ன கேட்கறீங்க?  ஊர் சுற்றல் பத்தியா?  வரும், வரும், மெல்ல வரும். கொஞ்சம் உடம்பு சரியாகட்டும்.  செரியா?Monday, January 21, 2013

ஶ்ரீரங்கத்தில் கருடசேவை


தினம் தினம் திருவிழா கண்டருளும் நம்பெருமாளுக்கு தை மாதத்தில் மட்டும் திருவிழா இல்லாமல் இருக்குமா என்ன?? இப்போத்தானே வைகுண்ட ஏகாதசித் திருவிழா முடிஞ்சது.  அதனால் என்ன?  இப்போ பூபதித் திருவிழா.  திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும்?  அதுவும் இந்த பூபதித் திருவிழா நம்பெருமாள் அழகிய மணவாளராக வெளியே போய் ஊரெல்லாம் நாடெல்லாம் சுத்தி முடிச்சுட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தாரில்லையா?  அப்போது முதல் நம்பெருமாள்னு பெயரையும் மாத்தி வைச்சுண்டார்.  அது தனிக்கதை.  ஆன்மிகப் பயணத்திலே வரும் விரிவாப் பார்ப்போம்.  இப்போ நம்பெருமாளாக ஆனவருக்கு எப்படித் தைத்திருவிழா வந்ததுனு மட்டும் தெரிஞ்சுப்போமா?

இரண்டாம் ஹரிஹரபுக்கரின் பேரன் ஆன பூபதி உடையார் என்பவர் கிட்டத்தட்ட 135 பொன் கொடுத்து அரங்கனுக்குத் தைத்திருவிழா கண்டருளவும், அந்தத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவும்  ஏற்பாடுகள் செய்தார்.  தைத்திருவிழாவை இவரே தொடக்கி வைத்ததால் இவர் பெயராலேயே இந்தத் திருவிழா பூபதித் திருவிழா என அழைக்கப் படுகிறது.  திருவிழா தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன.  இன்று காலை கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் தங்கி இருந்த நம்பெருமாள் அதிகாலை நாலரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி வழியெல்லாம் பக்தர்கள் செய்த மண்டகப்படி உபயங்களை ஏற்றுக் கொண்டார்.


பின்னர் அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு மண்டகப்படியாக முடித்துக்கொண்டு அம்மா மண்டபம் அருகே உள்ள கருட மண்டபம் வந்தடைந்தார்.  மதியம் முழுதும் அங்கு வேண்டிய ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை ஆறு மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, வாத்தியங்கள் மெல்ல ஒலிக்க நம்பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்தி வீர வாளும், கேடயமும் இடையில் தரித்துக் கிளம்பினார். நாங்க ஐந்தரை மணி போல கருட மண்டபத்திலிருந்து வெளிவரும் வாயிலில் போய் நின்று கொண்டோம்.  போகப் போகப் போகப் போகக் கூட்டம் வந்து எங்களைப் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் தள்ளி விட்டது.  இருந்தாலும் உயர்ந்த கருடனின் மேல் ஆரோகணித்த பெருமாளை நன்கு பார்க்க முடிந்தது.
கையில் காமிரா எடுத்துப் போவதைக் கூட்டம் காரணமாகத் தவிர்த்து விட்டேன்.  ஆனால் படம் எடுக்கையில் எடுத்துப் போயிருக்கலாமோ எனத் தோன்றியது.  ரொம்பவே சுமாராகப் படங்கள் வந்திருக்கு. பிகாசாவில் கருடன் நல்லாவே மூக்கை நீட்டிண்டு தெரியறார்.  இங்கே என்னமோ சரியா வரலை.  கொஞ்சம் வேலை செய்திருக்கணுமோ?   யாருப்பா அது?  தொழில் நுட்ப நிபுணரா?  ம்ஹூம், இந்தப் படங்கள் எல்லாம் உங்களுக்கு இல்லை.  என்னை மாதிரிக் கத்துக்குட்டிங்களுக்கு.  பேசாம இருக்கணும், புரிஞ்சுதா! :))))))

 கப் சிப் காரா வடை,
காலணாவுக்கு ஓசி வடை!

ஹிஹிஹி, காலணா ஏதுங்கறீங்களா?  அப்போ நோ வடை!

Wednesday, January 16, 2013

காதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை!

நேத்திக்கு மத்தியானம் கணினியிலே ஒரு முக்கியமான வேலையைச் செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, பார்த்தும் சரியாவராமல் போயிட்டதால் கணினி மேலேயே வெறுப்பு வந்து மூடி வைச்சுட்டேன்.  அப்புறமா கணினி  கிட்டேயே போகக் கூடாதுனு நினைச்சு என்னடா பண்ணலாம்னு யோசிச்சேன்.  மணி என்னமோ மத்தியானம் இரண்டரை தான்.  சாயந்திரம் வரைக்கும் ஒண்ணும் அவசர வேலை இல்லை!  அதிசயமாத் தொலைக்காட்சி இருக்கவே அதைப் போட்டு ஒவ்வொரு சானலா மாத்திட்டு இருந்தேன்.  ரங்க்ஸ் நல்லாக் குறட்டை.  யுடிவியில் முகல்-ஏ.ஆஜம் படம் ஓடிட்டு இருந்தது.  பதினைந்து வருஷங்கள் முன்னாடி இரண்டாம் முறையாவோ, மூன்றாம் முறையாவோ கறுப்பு வெள்ளையில் பார்த்தது.  இப்போக் கலரில்!  அதோடு டிஜிடைஸ் பண்ணி இருக்காங்களோ?  தெரியலை.   சரி மறுபடி பார்த்து வைப்போம்னு பார்த்தேன்.


வண்ணத்தில் இன்னும் அதிகமான தாக்கம் இருக்கிறது உண்மைதான்.  அனைவருமே நன்றாக நடிச்சிருக்காங்க.  அதிலும் மதுபாலாவின் நடிப்பைப் பார்க்கிறச்சே, மாதுரி தீக்ஷித் எந்த அளவுக்கு இவங்களோட சிரிப்பையும் தலை அலங்காரத்தையும், நாட்டியத்தையும் காப்பி அடிக்கிறாங்கனு புரிஞ்சது.   கதை உண்மையோ, பொய்யோ அதன் தாக்கமும் படத்தில் ப்யார் கியா தோ டர்னா பாடலுக்கான ஆடலும் அருமை.  ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்தக் காட்சி எடுத்ததாக நாங்க ஜெய்ப்பூர் போனப்போ சுத்திக்காட்ட வந்த வழிகாட்டிங்க சொல்லி இருக்காங்க.  நடுவிலே நின்று கொண்டு மேலே பார்த்தால் நம்மைப் போல் ஆயிரம் பேர் அந்தக் கண்ணாடித்துண்டுகளில் தெரிவாங்க.  அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கும் விதம் அந்தக் கால கட்டத்தில் அபூர்வம் தான்.  ஃபதேபூர் சிக்ரி அரண்மனையின் காட்சிகளும் அந்தப் படிகளில் அந்த வயசிலும் ப்ருத்வி ராஜ்கபூர் வேகமாய் இறங்கி ஏறுவதும் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். :( 

கதையைப் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.  சலீம், அனார்கலி கதை தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.  ஆனால் இங்கே திரைப்படத்துக்காக முடிவை மாத்தி இருக்காங்கனு நினைக்கிறேன்.  அக்பர் தன் அரண்மனைச் சேடிக்குக் கொடுத்த வாக்கைக் காக்கவேண்டி அனார்கலியை உயிரோடு தப்பித்துச் செல்ல விடுவதாக ரகசியச் சுரங்க வழியிலே அனார்கலியும் அவள் அம்மாவும் தப்பிப்பதாக முடிவு.  அதான் சொதப்பல். 

Tuesday, January 15, 2013

அண்ணன்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க


படத்துக்கு நன்றி கூகிளார்.  நம்ம கணுப்பிடி மஞ்சள் இலையிலே வைச்சாச்சு.  காமிரா எடுத்துட்டுப் போகலை. படம் எடுக்கணும்னு தோணலை! அதே!

யாரது அங்கே மந்திரி, வலை உலகத் தலைவி வந்தா நீ எந்திரி!
வணக்கம், வணக்கம், தலைவியாரே, இங்கு எனக்கிட்ட கட்டளை என்னவாக்கும்?

அன்புடனும், பாசத்துடனும் அண்ணன்மாருக்கும், தம்பிமாருக்கும்
வேண்டிக்கொண்டு கணுப்பிடி வைத்தேன் பாருங்க இங்கே

சீரனுப்பச் சொல்லி அண்ணன்மாரையும் தம்பிமாரையும் உசுப்பி விடுங்க மந்திரி

குறைந்த பக்ஷச் சீராக வஸ்த்ரகலா வாங்கிக்கப் படும். (மறக்கமாட்டோமுல்ல)


Monday, January 14, 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா? 3எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க.  இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா? பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா.  பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.  மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம்.  மழைக்கு தெய்வம் இந்திரன்.  ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும், வருணனையும் வழிபடுகிறோம்.  அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம்.  காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை.  மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்ஹ்டில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம்.  ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது.  தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம்.  ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும்  உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும்.  முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள்.  இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது.  என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம்.  மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள்,  மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும்.  அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும்.  இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை.  கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம்.  இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.

பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.  தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும்.  என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  இந்தத் தெப்பத்ஹ்டில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள்.  அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.  பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.

பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள்.  முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள்.  மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு.  இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம் ஏற்கெனவே சொல்லி விட்டேன்.  எனினும் திரும்பப் பகிர்கிறேன்.  அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள்.  அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம்.  வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள்.  ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.

தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்
பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்
சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துக்
கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்
தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக
மாமியான் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்
பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!

Sunday, January 13, 2013

கூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா?

அடுத்த பதிவுக்குப் போறதுக்கு முன்னாடி,பொங்கலுக்கான சிறப்புக் குழம்பு வகைகளைப்பார்க்கலாம். தஞ்சை மாவட்டத்தில் சில வீடுகளில் தனிக்கூட்டு எனச் செய்து காய்களைத் தனியே வேக வைத்துக் கூட்டைச் சேர்த்துத் தனித்தனியாகக் கலப்பார்கள்.  போன வருஷமே அதைக் குறித்து எழுதி இருக்கேன்.  ஆனால் அந்தப் பதிவில் போய் யாரும் பார்க்கவில்லை.  ஒரு சிலர் கேட்டிருப்பதால் இங்கே பகிர்கிறேன்.  பதிவு போணியும் ஆகுமில்ல! :P

தனிக்கூட்டு:

இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.

இதற்குத் தேவையான காய்கள்:

வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.

கத்திரிக்காய் கால் கிலோ

பறங்கிக்காய் கால் கிலோ

அவரைக்காய் கால் கிலோ

சேனைக்கிழங்கு கால் கிலோ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ

பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்

கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்

மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.

கிரேவி தயாரிக்க

புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைக்க

மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.

முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.

காய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.

பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும். அடுத்தது கூட்டாகச் செய்யாமல் காய்களை எல்லாம் போட்டுச் செய்யும் குழம்பு.  இதுக்குத் திருவாதிரைக் குழம்பு செய்முறைதான்.  அதுவும் போன வருஷம்போட்டேன்.  அதிலிருந்து மீள் பதிவு.

பொங்கல் அன்று சில வீடுகளில் செய்யும் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, செளசெள் எல்லாம் இரண்டாம் பட்சமே. கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான காய்கள்:
வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று
பறங்கிக்காய் ஒரு கீற்று
வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2
கத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று
பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்
அவரைக்காய் 100 கிராம்
சேனைக்கிழங்கு கால் கிலோ
சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)
சிறுகிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் 100 கிராம்

இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.

கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை

அரைக்க:
மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து
கொத்துமல்லி விதை 100 கிராம்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் ஒரு மூடி

ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.

காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும். தாளகம் எனில் சிலர் துவரம்பருப்போ, பாசிப்பருப்போ சேர்ப்பதில்லை. இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்ய வேண்டும்.


Saturday, January 12, 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா? 2


பொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும்.  சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள்.  ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள்.  சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள்.  இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம்  ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.

பொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள்.  மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம்.  மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள்.  அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.

சூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம்.  பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு  போன்றவையே பயன்படுத்துவார்கள்.  காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர்.  மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.

பொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள்.  ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.  மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள்.  இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.

நிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள்.  வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள்.  ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும்.  மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.


ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும்  என்று தெரிய வருகிறது. 

விவேகாநந்தரின் 150-ஆவது பிறந்த நாள்!

முதல்லே நம்ம விவேகானந்தருக்கு ஒரு வணக்கம் போட்டுக்கலாம். இன்னிக்கு அவரோட 150-ஆவது பிறந்த நாள்.  காலையிலே வேலை இருந்தது.  அதோட மின்சாரமும் படுத்தல், நெட்டும் சொதப்பல்! :))) ப.கு.க.தி னு ஆயிடுச்சு! :)))))))


ஹிஹிஹி, ஜாஸ்திப் போக்குவரத்து இல்லைனு கூகிள் சொல்லுது.  மக்களையும் கொஞ்ச நாட்களாக் காணோம்.  எல்லாரும் பண்டிகை தினங்களில் பிசி போல.  ஈ ஆடுது பதிவுகள் எல்லாம்.

Friday, January 11, 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா?

தீபாவளி வந்தாச்சானு மட்டும் தான் கேட்கணுமா என்ன?  பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை?  அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை. :))) எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம்.  இப்போக் கொஞ்சம் சாவகாசமா, அதோடு இரண்டு நாட்களாக மதியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் இருக்கவே பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  ஏற்கெனவே சிலது படிச்சிருக்கலாம்.  முன் பதிவுகளைப் போய்ப் பார்த்து வைச்சுக்கலை. பொறுத்து  அருள்க! :))))))
*********************************************************************************
சங்க காலத்தில் "தை நீராடல்", "பாவை நோன்பு" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று.  ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.  சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம்.  இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள்.  வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள்.  இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார்.  ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும்.  அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:

வட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே
உண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே
வார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே
போன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே
வாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே
வாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே
சிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே
போய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே
வர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே
என்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு.  முதல்நாளை போகி என்னும் "பழையன கழிதல்" நடைபெறும்.  ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள்.  இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது.  மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள்.  இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள்.  இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது.  அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.


தொடருவோமுல்ல!

படத்துக்கு நன்றி கூகிளாண்டவர்.  தகவல்கள், பல பத்திரிகைகளில் இருந்தும் ஆங்காங்கே கேட்டும் திரட்டியவை.

Wednesday, January 09, 2013

ராமனுக்கு ஏது மோதிரம்? சீதைக்கு ஏது சூடாமணி?

கவிநயா அக்கா அநுமன் பத்தின பதிவு ஒண்ணு எழுதி இருக்காங்க. அதிலே
 (http://kavinaya.blogspot.in/2013/01/blog-post_8.html)லிங்க் என்னமோ போகலை சரியா! :( அந்தப் பதிவின் பின்னூட்டத்திலே சூரி சார் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்குனு நினைச்சுத் தேடினப்போ சூடாமணி பத்திய ஒரு பதிவு கிடைச்சது.  அதை மீள் பதிவாப் பதிகிறேன். சூரி சாரின் கேள்வி இது:

ஒன்றிரண்டு கேள்விகள் வருகின்றன. 

ராமன் தன்னிடம் அடையாளச்சின்னமாக ஒரு கணையாழியை தந்திருப்பதாகச் சொல்லி அதை அசோக வனத்தில்
இருக்கும் சீதையிடம் தருகிறான் ஹனுமன். அந்தக் கணையாழியிலும் ராம என்ற எழுத்துக்கள் இருப்பதாக சீதை
பார்க்கிறாள். இந்த கணையாழி எப்படி ராமனிடம் வந்தது ? அவர்தான் எல்லாவற்றையும் துறந்து தானே காட்டுக்கு
கிளம்பினார் ? 

இது ஒரு ஐயமே. இன்னும் இது தீர்ந்த பாடில்லை. அது ஒரு புறமிருக்கட்டும்.சூடாமணியின் கதை!

வல்லி எழுதின சுந்தரகாண்டம் பத்திய பதிவிலே "சூடாமணி கொடுக்கும் படலம்" பற்றி எழுதிட்டு அவங்க அது என்ன ஆபரணம் தெரியலைன்னு சொல்லி இருந்தாங்க. மதுரையம்பதி சொன்னது ஓரளவு சரின்னாலும், அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு! :D எப்போ வாங்கிக் கொடுத்தேன்? அவரும் அதைப் பார்த்திருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ராமாயணம் புத்தகத்தைப் புரட்டினேன். அம்பி, எல்லாம் ஸ்டாக் கொண்டு வந்திருக்கேன் கையோடு. இங்கே வந்து பதில் சொல்லலாம்னு தான் முன்னாடி பேசாமல் இருந்தேன். புரியுதா?

வால்மீகி, கம்பர், துளசிதாசர் எல்லாருமே "சூடாமணி" பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது யார் சீதைக்குக் கொடுத்தது? அது என்ன ஆபரணாம் என்று விவரிப்பது வால்மீகிதான். முதலில் கம்பரைப் பார்ப்போம்.
"சூடையின்மணி கண்மணி ஒப்பது, தொல்நாள்
ஆடையின் கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன்ுயிர் நல்கினை, நல்லோய்!
கோடி என்று கொடுத்தனள், மெய்ப்புகழ் கொண்டாள்!"
என்னுடைய கண்ணின் மணி போன்ற இந்த ஆபரணத்தை என் புடவையில் முடிந்து வைத்திருந்ததை உன்னிடம் தருகிறேன்." என்கிறாள். அது தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணம் என்று சொன்னாலும் அது எந்த மாதிரி என்பது வால்மீகியில் தெரிகிறது.

"சூடா" என்றால் சம்ஸ்கிருதத்தில் "உச்சி முடி" என்று அர்த்தம் ஆகும். உச்சி முடியின் மீது அணிகின்ற இந்த ஆபரணம் ஒரு சங்கிலியில் கோர்க்கப் பட்டிருக்கும். அதன் முடிவில் ஒரு பதக்கம் போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பதக்கம் போன்ற அமைப்புப் பெண்களின் "ச்ரீமந்தம்" என்று சொல்லப் படும் உச்சிப் பொட்டு வைக்கும் இடத்தில் வந்து முடியும். இது தாய்வழிச் சீதனமாய்க் கொடுக்கப் படுகிறது. அதுவும் சீதையின் வார்த்தைகளின் மூலமே வால்மீகி சொல்கிறார்.
சீதை அனுமனிடம் சொல்வதாய் வால்மீகி சொல்கிறார்:
"இந்த நகையைப் பார்த்ததுமே ராமருக்கு நீ என்னைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறாய் என்பது புரியும். ராமருக்கு என் நினைவு மட்டும் இல்லாமல் தன் தந்தையாகிய தசரத மஹாராஜாவின் நினைவும், என் தாயாரின் நினைவும் கட்டாயம் வரும். ஏனெனில் இது தசரத ராஜாவின் முன்னிலையில் என் தாயார் எனக்குப் பரிசாகக் கொடுத்தது.!" இது வால்மீகி வாக்கு. துளசிதாசர் சூடாமணி என்னும் தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணத்தைச் சீதை கொடுத்தாள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.

டிஸ்கி: பொதுவாகவே வட இந்தியாவில் அநேகக் குடும்பங்களில் இன்றும் திருமணத்தின் போது இத்தகைய ஆபரணங்களைத் தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண்கள் அணிவது உண்டு. அங்கே இதற்கு மங்கலசூத்திரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படும்.

இது சூடாமணியின் கதை.  கணையாழி குறித்த கேள்விக்கு என்னோட பதில் ஜனகர் ராமனுக்குக் கல்யாணப் பரிசாக அளித்த மோதிரமாக இருந்திருக்கலாம்.  அல்லது காட்டிலேயே அநசூயை சீதைக்கு அளித்த ஆபரணங்களிலே அந்த மோதிரம் இருந்திருக்கலாம்.  இருவரிடமும் ஆபரணங்கள் இருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.  சில முக்கிய ஆபரணங்களைக் கழட்டுவதில்லை.  உதாரணமாகப் பெண்கள் நெற்றியில் அணியும் ஆபரணம், மூக்குத்தி, மங்கலசூத்திரம், கைவளையல்கள், கால் மெட்டி, கொலுசு போன்றவை.  அப்படியே ராமனின் மோதிரமும் இருந்திருக்கலாமோ?

இல்லைனா எப்படி?? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :))))

Tuesday, January 08, 2013

நிர்பயா அபயம் கேட்டிருக்க வேண்டும்! :(

நிர்பயா எனப் பெயரிடப் பட்டிருக்கும் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, தான் பலவந்தப் படுத்தப் பட்டபோது, பலாத்காரத்துக்கு ஆட்பட்ட போது, அவர்களை எதிர்க்காமல்அபயம் கேட்டிருக்க வேண்டுமாம்.  "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் சகோதரர்களே எனக் கெஞ்சி இருக்கணுமாம். கேட்கவில்லை என  எப்படித் தெரியும்?  அதான் கெஞ்சிக் காலில் விழுந்து கதறி இருக்காளே!  இதுக்கும் மேல் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்றால் அயோக்கியத் தனமாய் இல்லை?  ஆணாதிக்கத்தைக் காட்டுவதாய் இல்லை?  அதிலும் ஒவ்வொருத்தரையும் பார்த்துத் தனித்தனியாய்ச் சொல்லி இருக்கணுமாம்!  அப்படி அவங்க அந்தப் பெண்ணின் மேல் இரக்கமுள்ளவர்களாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணை சீரழிச்சதுக்கும் பின்னர் கம்பியாலும் குத்திக் காயப் படுத்தி இருக்க முடியுமா?  கொடூரமான மனசு இருந்தால் ஒழிய இது நடந்திருக்காது.  பல்வகையிலும் துன்புறுத்தப்பட்டு அதுவும் எந்தக் காரணமும் இல்லாதபோது வலுக்கட்டாயமாய் பலவந்தப் படுத்தப்பட்டு உடலளவிலும் மனசளவிலும் காயப்பட்ட  ஒரு அப்பாவிப் பெண், வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு பெண், இறந்து போனபின்னால் வாயில் வந்ததைப் பேசலாம்னு நினைக்கிறாங்க போல!  என்ன கொடூர மனிதர்கள்!  :((((((((((((((((((

Friday, January 04, 2013

உங்க கடவுள் ஒசத்தியா? எங்க கடவுள் ஒசத்தியா?

முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன்.  யார் மனதையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என்றாலும் இம்மாதிரியான வற்புறுத்தல் மனதைக் காயப் படுத்துகிறது.

முந்தாநாள் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க குடியிருப்பின் எதிரே குடி இருக்கும் பெண்மணி திருச்சி செல்வதற்காக அம்மாமண்டபம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்திருக்கிறார்.  அவருக்குக் கொஞ்சம் தோல் பிரச்னை உண்டு.  ஆகவே கைகளை மணிக்கட்டு வரை  மூடிய வண்ணம் ரவிக்கை அணிவார்.  அதைக் கவனித்த ஒரு பெண்மணி என்ன, ஏது என விசாரிக்கிறார்.  அவரும் ஏதோ கேட்கிறாங்களே என தன் பிரச்னையைச் சொல்ல,  உடனே அந்தப் பெண்மணி அவருடைய பேச்சை வைத்து அவர் அரங்கன் மேல் கொண்டிருக்கும் பக்தியை உணர்ந்து,

"இந்தப் பிரச்னைக்கு உங்க அரங்கனால் என்ன பண்ண முடியும்? அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே!  நீங்க எங்க மதத்தில் சேருங்க.  எங்க கடவுள் உடனே குணப்படுத்துவார்.  பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும்.  கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க?  அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது!   உங்க வீட்டுக்கு வந்து எல்லார் கிட்டேயும் பேசறேன். வீட்டு விலாசம் கொடுங்க.  இந்தக் குறிப்பிட்ட பணிக்காக நாங்க இந்தக் குறிப்பிட்ட சங்கத்திலே இருக்கோம். " அப்படினு சொன்னதோடு இல்லாமல் அரங்கனைப் பற்றியும் கொஞ்சம் ஏதேதோ பேசி இருக்காங்க.  அவங்களோட மதத்தில் சேர்ந்தால் எல்லாம் சரியாகும்னு சொல்லி சேரச் சொல்லி வற்புறுத்தி இருக்காங்க.  எங்க சிநேகிதிக்குப் பயம் வந்து அப்போது வந்து நின்ற ஒரு பேருந்து எங்கே போகுதுனு கூடப்பார்க்காமல் ஏறிட்டாங்களாம். நல்லவேளையா அந்த அம்மா பின் தொடரவில்லை.

இதோடு இல்லாமல் சமீப காலமாக வெளிநாட்டு மத போதகர்களுக்கான விசா சட்டங்களும் தளர்த்தப் பட்டு அவங்க எத்தனை காலம் வேணும்னாலும் இருக்கலாம் என்கிறாப்போல் மாற்றி இருப்பதாகச் சில மடல்களும் தெரிவிக்கின்றன.  இது அரசாங்க விஷயம்.  விட்டு விடுவோம்.  நமக்குத் தேவையில்லை.  ஆனால் தெருவோடு போகிறவங்களைக் கூப்பிட்டு மதம் மாறச் சொல்வது நியாயமா?

நம் சார்ந்திருக்கும் மதத்தில் நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தான் இன்னொரு மதத்தில் இருப்பவர்களை நம் மதத்துக்கு இழுக்கத் தோன்றும் என எனக்குப் படுகிறது.  அதே போல் மதம் மாறுபவர்களும் முதலில் அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் கடவுளர் மேல் நம்பிக்கை இல்லை என்பதால் தான் இன்னொரு மதக் கடவுளைத் தேடிப் போகின்றனர்.  இவர்கள் எப்படி பின்னர் தாங்கள் சார்ந்திருக்கும் மதக் கடவுளை நம்புவார்கள்?

இப்படி மாறச்சொல்லிக் கட்டாயப் படுத்த வேண்டாமே. அவரவராக இஷ்டப் பட்டு வந்து மாறுவது தனி.  அது சொந்த விஷயம்.  ஆனால் தெருவில் போகிற வருகிறவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மதம் மாறச் செய்வது என்பது கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை.   இதைப் போல இன்னும் சிலதும் இருக்கு.  ஆனால் ரொம்பவே குற்றம் காணுகிறாப்போல் வேண்டாம்னு விட்டுட்டேன். 
"............எங்கள் சமய நூல்கள் எதையும் படிக்காமலேயே எங்களை மிகக் கேவலமாக விமர்சிக்கத் துணியும் உங்கள் முட்டாள்தனத்தை என்னென்பது"

இவ்வாறு கம்பீரமாகக் கேட்டார் இந்த ஹிந்து மதக் காவலர்.