எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 27, 2021

குட்டிக் குஞ்சுலுவின் பாப்பாக்கள்.


 குட்டி அம்மாவின் பாப்பாக்களில் சில. இவை மேல் அன்னிக்குக் குட்டி அம்மாவுக்கு ஏதோ கோபம் என்பதால் இவற்றை வெளியே கொண்டு வந்து வைத்து விட்டார்கள். :)  மற்றவை குட்டி அம்மாவுடன் மெத்தையில் சுகமாகப் படுத்துக் கொண்டன.  சுமாராகப் பத்துப் பாப்பாக்கள் இந்தியா வந்திருக்கின்றன. இவற்றில் அம்மா வெளியே செல்லும்போது அன்னிக்கு யார் கூட வரணும்னு தேர்வு செய்து தூக்கிப்பார். :)))))) குல தெய்வம் மாரியம்மன், பரவாக்கரைதிருவாதிரைக்கு அம்பிகை புறப்பாடு கண்டருளி இருக்கிறாள். அந்த அலங்காரம் கலைக்காமல் இருந்தது. ஒரு படம் எடுத்துக் கொண்டேன். இவள் உற்சவர்.பரவாக்கரை பெருமாள் கோயில் வெங்கடேசப் பெருமாள். 2011 ஆம் வருடம் கும்பாபிஷேஹம் சுமார் 40 வருடங்கள் கழித்துக் கண்டருளினார். பெருமாள் அருளால் கைங்கரியம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. எங்க புக்ககத்துக் குடும்பப் பூர்விகக் கோயில் என்பதோடு இவங்க தான் அறங்காவலர்களாக 1977 வரை இருந்தனர். பின்னர் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டு அவங்க நியமிக்கும் நபர் தான் அறங்காவலர் என்றானது. 


கருவிலி சற்குணேஸ்வரர். கிட்டப் போய் எடுக்க மறந்துட்டேன். கைபேசியில் ஜூம் செய்ய வரலை. சரியாக இல்லை. ஆகவே ஏதோ ஒரு மாதிரி (வழக்கம் போல்) எடுத்தேன். 


சர்வாங்க சுந்தரி. அம்பிகை ஈசனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி சர்வ அலங்காரத்துடன் இங்கே வந்தாளாம்.

மற்றப்படங்கள் தரவிறக்கும்போது பிரச்னை ஆகிவிட்டதால் மெதுவாய்ப் போடுகிறேன்.


Saturday, December 25, 2021

தியாகராஜனும், ரங்கராஜனும்!

திருவாரூர் தியாகராஜர். ரொம்ப ஆவலோடு உச்சிகால பூஜை பார்க்கச் சென்றிருந்தோம். ஆனால் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. :( 


இப்போ நடந்த வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் ஒரு நிகழ்வான "திருக்கைத்தலச் சேவை!" வீடியோவாகவும் வந்தது. நம்பெருமாளை பட்டர்கள் தூக்கிக்கொண்டு  லயத்தோடு ஆடியபடியே இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிக் காட்டுகின்றனர்.  பக்தர்கள் பரவசம் அடைந்து "ரங்கா! ரங்கா!" எனக்கூவுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் நம்பெருமாள் சிரித்துக்கொள்கிறான். அவனோட வழக்கமான குமிண் சிரிப்பு. உள்ளடக்கிய சிரிப்பு. உதடுகளை மடித்துக்கொண்டு உள்ளுக்குள் சிரிக்கும் சிரிப்பு.  படம்/வீடியோ வாட்சப்பில் வந்தது. வீடியோ அப்லோட் பண்ண முடியலை. பார்ப்போம்.
 


புதன்கிழமை அன்று பையர் குடும்பத்தோடு நாங்கள் இருவரும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றிருந்தோம். மார்கழி மாதம் என்பதால் மாவிளக்குப்போடவில்லை. அம்பிகைக்கு அபிஷேஹம்செய்து குழந்தை கையால் மணி வாங்கிக் கோயிலுக்குக் கொடுத்தோம். 2019/20 ஆம் ஆண்டில் நாங்கள் சென்றிருந்த போது குழந்தை முழு வாக்கியமாகப் பேசவில்லை. ஆனால் ரைம்ஸ் எல்லாம் சொல்லுவாள். பாடல்கள் பாடுவாள். தன்னைத் தொட்டுக் கொண்டு "மீ துர்கா" என்பாள். என்றாலும் சகஜமான உரையாடல் இல்லையே என வருத்தமாக இருந்தது. ஆகவே குலதெய்வமான மாரியம்மனிடம் விண்ணப்பம் வைத்திருந்தோம். அதை இப்போது நிறைவேற்றினோம். 

இம்முறை முதலில் கருவேலி சென்றுவிட்டோம். ஏனெனில் தனுர் மாதம் என்பதால் கோயில் பதினோரு மணிக்கே மூடி விடுவார்கள். அங்கே தரிசனம் முடித்துக் கொண்டு பின்னர் பரவாக்கரை பெருமாளைப் பார்த்துவிட்டு அங்கே இருந்து கடைசியாக மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். அங்கே அபிஷேஹம், ஆராதனைகளை முடித்துக்கொண்டு கிளம்ப மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. எல்லா இடங்களிலும் முடிந்த வரை இம்முறை படம் எடுத்தேன். வரும் வழியில் வயல்களை எல்லாம் கூட எடுக்க முயன்றேன். வண்டி விரைவாகச் சென்றதால் ஓரளவு தான் வந்திருக்கின்றன. ஆனால் நல்ல வளப்பமாக உள்ளன நெல் வயல்கள். என்றாலும் பரவாக்கரையில் உளுந்து, பயறு போட்டதில் மழையினால் பெரும் நஷ்டம் என்று சொல்கின்றனர்.  ஆனால் நெல் பிழைத்துவிட்டது என்றே நினைக்கிறேன். 

படங்களைத் தொகுக்கவில்லை. ஆகவே இரண்டொரு நாட்களில் போடுவேன். 

Friday, December 17, 2021

மர்மம் என்ன சொல்லுங்க!

 எங்கள் ப்ளாக்


மேற்கண்ட சுட்டியில் உள்ள எ.பியின் இந்தப்பதிவில் நான் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கொடுத்தால் இரண்டோ, மூன்றோ தான் போயிருக்கு! மற்றவை தெரியவில்லை. :)))))) என்ன காரணமாய் இருக்கும்? நேற்று ரேவதியின் ஊஞ்சல் பதிவிலும் கருத்து இருமுறை கொடுத்தும் போகவே இல்லை. :)))) Geetha Sambasivam "வெள்ளி வீடியோ : பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும் போற்றும் உறவல்லவோ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:


இந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.


கருத்தை இடுகையிடுங்கள்.


கருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(


கருத்தை இடுகையிடுங்கள்.

இதுக்கு முன்னே இந்தப் பாடல் பத்திக் கருத்துச் சொல்லி இருந்தேன். படத்தில் சரோஜாதேவி வகுப்பில் பிள்ளைகளுக்காகப்பாடிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது என்பதாக. ஆனால் அந்தக் கருத்து எங்கே போச்சு? காக்காய்? ரோபோ? ரேவதியின் பதிவில் கூடக் கேட்டிருந்தேன். எதுவுமே வரலை. :(

இந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.

கருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(

என்ன ஆச்சரியம்? நான் கொடுத்த மூன்று கருத்துகளுமே காணாமல் போய்விட்டன. ஆனால் என் மெயில் பாக்ஸில் இருக்கு.

மயக்கமே வரும்போல இருக்கே! கொடுக்கும் கருத்துகள் எல்லாம் எங்கே போகின்றன? அல்லது ஶ்ரீராம் ஒருத்தர் இத்தனை தான் போடணும்னு ஏதாவது நிபந்தனை வெளியிட்டிருக்காரா? :))))))

இப்போ ஆறிலே நாலு போய் இரண்டு, இதைச் சேர்த்தால் 3 இருக்கு!

கொனஷ்டை அர்த்தம் வேறே! குறும்பு முழுக்க முழுக்க வேறே! கண்ணன் செய்தது எல்லாம் குறும்பு. கொனஷ்டை இல்லை.

ஹாஹா, கொனஷ்டை வேறே, குறும்பு வேறேனு பதில் கொடுத்திருந்தேனே! வழக்கம் போல் காணோம். அல்லது ஏணிமலை பூதம் தான் வந்து விழுங்குகிறதோ? தெரியலை. என்னொட மெயில் பாக்ஸில் இருப்பதால் நாளைக்கு வந்து காப்பி, பேஸ்ட் பண்ணிப் பார்க்கணும். :)))

Wednesday, December 15, 2021

மார்கழித் திங்கள் நினைவுகள்! மீள் பதிவு!

மதுரையும் மார்கழி மாதமும்

மீள் பதிவு!

 மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தை  2007 ஆம் ஆண்டு டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.


பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.


மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.


எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((


இப்போவும் மதுரை மீனாக்ஷி கோயிலில் கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் கழித்தும் இதே நிலைதான். ஆனால் இப்போ மதுரைக்குப் போயே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எப்போ வாய்க்குமோ! இந்தப் பதிவு "மதுரை மாந்கரம்" என்னும் வலைப்பக்கத்தில் மதுரைக்கார நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து அவரவர் அனுபவங்களை எழுதி வந்தோம். இம்மாதிரிக் குழுமப் பதிவுகள் இன்னும் சிலவும் இருந்தன அப்போது. மதுரை மாநகரம் தவிர்த்து "ப்ளாக் யூனியன்"  "ஆசார்ய ஹ்ருதயம்" என்னும் வலைப்பதிவுகளும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எழுதி வந்தோம். இப்போ அந்த நண்பர்களில் யாருமே வலைப்பக்கம் எழுதவில்லை. குழுமப் பதிவு தவிர்த்து சொந்த வலைப்பக்கங்களிலும் இப்போதெல்லாம் யாரும் எழுதுவதில்லை. பல நண்பர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. :( அநேகமாக நான் மட்டுமே பதினாறு வருடங்களாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். 

Saturday, December 11, 2021

மஹா கவிக்கு அஞ்சலி!

 


துச்சா தனன்எழுந்தே -- அன்னை

துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.

‘அச்சோ தேவர்களே!’ -- என்று

அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.

பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்

பேயனுந் துகிலினை உரிகையிலே,

உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை

உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88


‘ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -- கண்ணா!

அபய மபயமுனக் கபயமென்றாள்.

கரியினுக் கருள்புரிந்தே -- அன்று

கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,

கரியநன்னிற முடையாய், -- அன்று

காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!

பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!

பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89


‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!

சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!

அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!

அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!

துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!

தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!

தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்

சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90


‘வானத்துள் வானாவாய்; -- தீ

மண்நீர் காற்றினில் அவையாவாய்;

மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ

முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!

கானத்துப் பொய்கையிலே -- தனிக்

கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,

தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்

தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91


‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!

அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,

சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

மாதிக்கு வெளியினிலே -- நடு

வானத்திற் பறந்திடும் கருடன்மிசை

சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!

சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92


‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!

காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!

வம்புரை செய்யுமூடா” -- என்று

மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,

செம்பவிர் குழலுடையான், -- அந்தத்

தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!

நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை

நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93


‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்

வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,

ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்

அன்புடை எந்தை, என் னருட்கடலே,

நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு

நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,

தேக்குநல் வானமுதே! -- இங்கு

சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94


‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!

மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!

ஐய, நின் பதமலரே -- சரண்.

ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல

புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,

தையலர் கருணையைப்போல், -- கடல்

சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95


பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த

பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,

கண்ணபிரா னருளால், -- தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை

வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

எண்ணத்தி லடங்காவே; -- அவை

எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96


பொன்னிழை பட்டிழையும் -- பல

புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,

சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்

செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,

முன்னிய ஹரிநாமம் -- தன்னில்

மூளுநற் பயனுல கறிந்திடவே,

துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு

தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97


தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்

ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.

ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை

ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.

சாவடி மறவரெல்லாம் ‘ஓம்

சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.

காவலின் நெறிபிழைத்தான், -- கொடி

கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான். 98

Friday, December 10, 2021

"இப்போ வந்து" "பார்த்திங்கன்னா" என்னவா இருக்கும்? :)

 கல்யாணத்திற்குச் சென்ற கலாட்டாவைப் பற்றி எழுதும்போது ஶ்ரீராம் கேட்டிருந்த இருவிஷயங்களை எழுத மறந்துட்டேன். அதில் ஒன்று ட்ராப் டாக்சியின் வாடகைக் கட்டணம். ஒரு வழிக்கு 4500 ரூபாய் ஆகிறது. விமானத்தை விட மலிவு. ரயில் முதல் வகுப்பை விடக் கொஞ்சம் அதிகம்.  சாதாரணமாக வாடகைக் கார் எடுத்துப் போனால் இரு வழிக்கட்டணமாக ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும்.  ஆகவே இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. 

இன்னொன்று நாங்க தங்கின சர்வீஸ் அபார்ட்மென்டின் வாடகை. இதுவும் மிகக் குறைவு தான். அதோடு அரசாங்கம் நடத்துவது. எப்போதும் நடுத்தரமக்களின் வரவு செலவுத் திட்டத்தில் அடங்கும்படியே இருக்கும். இந்த செர்வீஸ் அபார்ட்மென்ட் வாடகையும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் தான். ஆனால் 3 அறைகள் கொண்ட அதில் இன்னும் நான்கு பேராவது தாராளமாகத் தங்கலாம். இதே போல் தான் கொடைக்கானலில் தமிழ்நாடு ஓட்டலில் வசதிகள் அதிகம்/வாடகை குறைவு/பராமரிப்பு மோசம். உணவு பரவாயில்லை ரகம். எல்லா ஓட்டல்களையும் போல இங்கேயும் தங்குபவர்களுக்குக் காலை உணவு இலவசம். அறையிலேயே காஃபி, தேநீர், பூஸ்ட் போன்றவை போட்டுக்கும் வசதிகள் மற்ற ஓட்டல்களைப் போல் இங்கும் உண்டு.  குளியலறையில் 24 மணி நேரமும் வெந்நீர் வந்தது. நாங்க போயிருந்தது முதல் முறை டிசம்பர் என்பதால் வெந்நீர் அப்போது மிகவும் தேவைப்பட்டது. சிவப்புக் கம்பளம் விரித்திருந்தாலும் அவை பராமரிப்பு மோசமாக இருந்தது. அறைக்கு ரூம் செர்வீஸ் உண்டு. ஆனால் உணவு ரூம் சர்வீஸில் தரமாக இல்லை. எங்களுக்கு முதல்நாள் இரவு உணவு எடுத்து வந்தவர் அதைப் பார்த்துட்டு எப்படிச் சாப்பிடப் போறீங்க? இவ்வளவு மோசமா இருக்கேனு கேட்டார்.  தோசை ஒரே கருகல். ஆனால் மறுநாள் காலை உணவில் தோசை, இட்லி, பூரி, பொங்கல், வடை எல்லாமே நன்றாக இருந்தது. 

ஆனால் அதே கொடைக்கானலுக்கு மறுமுறை போனப்போ நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் நம்ம ரங்க்ஸ் தனியார் ஓட்டல் ஒன்றை யாரோ நண்பர் சொன்னார்னு தேடிக்கொண்டு போகச் சொன்னார் ஓட்டுநரை. அங்கே போனால் ஓட்டலுக்குப் போகவே மலை ஏறி இறங்க வேண்டி இருந்தது. நல்லவேளையாக அன்னிக்குப் பிள்ளையார் சதுர்த்தி என்பதால் இட்லி, கொழுக்கட்டை, வடை, அப்பம் எல்லாம் கையில் கொண்டு போய்விட்டேன். இல்லாட்டி அந்த மலையில் ஏறி இறங்கிச் சாப்பிட ஓட்டலைத் தேடிப் போகக் கஷ்டமாக இருந்திருக்கும். சற்றே தூரத்தில் தான் தமிழ்நாடு ஓட்டல். அங்கே போகலாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. நாங்க போனதுமே கொடைக்கானலில் அந்தப் பகுதியில் மின்சாரம் போய்விட்டது. தமிழ்நாடு ஓட்டலில் ஜெனரேட்டர் போட்டுவிட்டார்கள். ஆகவே  அங்கு மட்டும் மின்சாரம் இருந்தது. இங்கே மறுநாள் காலை குளிக்க வெந்நீர் கிடைக்கவே இல்லை. சோலார் பவரில் ஓடும் கீசர் ஆகவே வெந்நீர் மெதுவாக வரும் என்று சொன்னார்கள். அந்த கீசர் குழாயைத் திறந்தால் வெந்நீராவது ஒண்ணாவது! அந்த நடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்தோம். பச்சைப் பொய்! வாடகையும்  2000 ரூபாயோ என்னமோ! 

**********************************************************************************

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கணும்னு வழக்குத் தொடர்ந்திருந்தாங்க. அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமே மத்திய அரசில் பணி புரியும் அடிக்கடி மாற்றல் ஆகும் நபர்களின் குழந்தைகள் இந்தியாவில் எங்கே சென்றாலும் எந்த மாதம் சென்றாலும் பள்ளியில் உடனே சேர்ந்து படிக்க முடிய வேண்டும் என்பதற்காகவே. எங்கள் குழந்தைகளை நாங்கள் எங்களுக்கு மாற்றல் வந்த செப்டெம்பர், ஜனவரி,  போன்ற மாதங்களில் கூடச் சேர்த்திருக்கோம். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான பள்ளி திறப்பு, பள்ளி விடுமுறைகள் என்பதாலும் பள்ளிப் பாடங்கள் நடத்துவதும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுவதாலும் ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது குழந்தைகளுக்குப் பாடம் விட்டுப் போய்விடும் என்னும் அச்சம் இருக்காது.  ஒரு வாரம் கழித்து வந்தாலும் வந்து உடனடியாகப் பாடங்களைப் புரிந்து கொண்டு விடலாம். பரிக்ஷைகள் நடப்பதும் அப்படியே!

முன்னெல்லாம் விடுமுறைகள் அறிவிப்பும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் சொல்லும்/அறிவிக்கும் நாட்கள் தான். உள்ளூர் விடுமுறை அன்று கேந்திரிய வித்யாலயா செயல்படும். மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அது வேண்டுமானால் இப்போது மாறி இருக்குமோ என்னமோ! மாதத்தின் கடைசி நாள் அது என்ன கிழமையாக இருந்தாலும் அரைநாள் பள்ளி. அது திங்களோ, செவ்வாயோ, அல்லது வேறு எந்தக்கிழமையானாலும்! இப்படிப் பட்ட பள்ளிகளில் நமக்குத் தமிழ்ப் பற்று இருப்பதைக் காட்டத் தமிழ் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் என்றால் எப்படி? ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் சிபிஎஸ் ஈ பள்ளிகளில் தமிழ் எட்டாவது வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கப்படுகிறதே! அதிலேயே பல மாணவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. தமிழ்வழிப் பள்ளிகளோ/அல்லது அரசு சொல்லிக் கொடுக்கும் தமிழ்ப் பாடங்களோ தரமானதாகவே இல்லை.  அவங்களுக்குச் சங்கப்பாடல்களோ, பக்தி இலக்கியங்களோ கற்பிக்கப் படுவதில்லை. மதச் சார்பு எனச் சொல்லிக் கொண்டு கம்பராமாயணம்/வில்லி பாரதம் போன்றவை கூடப் பாடத்திட்டத்தில் இல்லை. நீதிபோதனைகள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி, ஆத்திச்சூடி, போன்றவற்றின் பெயர்களைக் கூடக் கேட்டிருப்பாங்களோ என்னமோ! உண்மையான தமிழறிஞர்கள் பலரையும் இந்தத் தமிழ்ப் புத்தகங்கள் கற்பிப்பதில்லை. ஆகவே இப்போதுள்ளவர்களுக்குத் தமிழ் பேசவோ/எழுதவோ வருவதில்லை.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்/ செய்திகளில் கீழே ஓடிக்கொண்டிருக்கும்ஃப்ளாஷ் நியூஸ் எனப்படும் அவசரச் செய்திகள் ஆகியவற்றில் தமிழில் எழுத்துப் பிழையையும், பொருட்பிழையையுமே அதிகம் பார்க்கலாம். செய்திகள் வாசிப்பவர்கள் கேட்கவே வேண்டாம். முக்கியமான செய்திக்களங்களில் சென்று செய்தி சேகரித்து அதைத் தொலைக்காட்சிக்குச் சொல்ல வேண்டிய நபர்கள் பேசுவது காதால் கேட்கக் கர்ண கடூரமாக உள்ளது. "இப்போ வந்து" பார்த்தீங்கன்னா" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.  முதலமைச்சர் திரு ஸ்டாலின் என்று சொல்லலாம். அல்லது முதலமைச்சராக இருக்கும் திரு ஸ்டாலின் எனலாம். ஆனால் இவர்கள் சொல்வது, "முதலமைச்சராக இருக்கக் கூடிய" திரு ஸ்டாலின் என்கின்றனர். இது என்ன தமிழ்?  ஒருவேளை அவர் இருக்கலாமோ என்னும் சந்தேகத்தை அல்லவோ இது காட்டுகிறது. "நீடூழி வாழ்க" என்றே நாம் கேள்விப் பட்டிருக்கோம். ஆனால் இவங்களுக்கு "நீடுடி வாழ்க" வாம்.  மக்கள் எல்லோருமே ஆண்டவனைப் போற்றி வாழ்த்திப் பாடுகிறோம். அனைவருக்கும் தெரியும். ஆனால் இவங்க மனிதர்களுக்கு/அதாவது அவங்க தலைவர்களான மனிதர்களை வாழ்த்த மாட்டாங்களாம். வயதில்லையாம். வணங்கிப்பாங்களாம். எல்லாம் வல்ல இறைவனையே வாழ்த்தி வணங்கும்போது மனிதனை வாழ்த்தி வணங்குவதில் என்ன தப்பு?

இன்னும் இருக்கு. எழுதிண்டே போகலாம் போல. ஆனால் இதுவே கொஞ்சம் பெரிசாப் போயிடுத்தோனு தோணுவதாலே இன்னிக்கு இது போதும். 

குன்னூரில் விமான விபத்தில் இறந்த முப்படைத் தளபதிக்கும் அவருடன் கூடப்பயணம் செய்த ராணுவ வீரர்களுக்கும் முப்படைத் தளபதியின் மனைவிக்கும் நம் அஞ்சலிகள். அன்னாரின் குடும்பங்களுக்கு நம் ஆறுதல்களும்/தேறுதல்களும். நம்மையும் நம் நாட்டையும் இரவு, பகல் தூக்கமின்றிப் பாதுகாத்துவரும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி, வணக்கம்.'

ஜெய்ஹிந்த்!

Sunday, December 05, 2021

அப்பாடா! ஒரு வழியா முடிச்சுட்டேன்!

அப்பா, அப்பா எனக் கூவினாலும் அந்தக் கூட்ட இரைச்சலில் அவர் காதுகளில் விழவில்லை. அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார். அந்தத் திசையில் தான் நாங்கள் எங்கள் பயணச்சீட்டைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கச் சொன்ன நண்பர் நின்றிருந்தார். சரி,அப்பா அவரிடம் தான் போகிறார் என உறுதி ஆனது. இப்போது போர்ட்டர் எந்தப் பக்கம் போனார்? ஒரே கவலை. என்னோட பட்டுப்புடைவைகள், நகைகள், குழந்தைக்குச் செய்திருந்த நகைகள், கொஞ்சமாய்ப் பணத்தைக் கைப்பையில் வைத்துக் கொண்டு மிகுதிப் பணம்னு எல்லாமும் இருந்தது. ஒரே அடையாளம் கே.சாம்பசிவம் என ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் என்பதே! எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைக்கு அவசரத்துக்குக் கொடுக்க வேண்டும் வழியில் என வாங்கி வைத்திருந்த குழந்தை உணவான க்ளாக்சோ டப்பாவும் வெந்நீர் அடங்கிய ஃப்ளாஸ்க்கும், குழந்தையின் மாற்றுத் துணிகளும் ஒரு வயர் கூடையில் வைத்திருந்ததை அந்த சூட்கேஸ் மேல் தான் அவர் வைத்துக்கொண்டு சென்றார். மற்றச் சாமான்கள் போனாலும் குழந்தை உணவு கட்டாயம் தேவை. அப்போதெல்லாம் க்ளாக்சோ அவ்வளவு எளிதில் கிடைக்காது. கடைகளில் சொல்லி வைத்து வாங்கணும். இது அனுமதித்திருந்த விலையில். இல்லைனால் கூடுதல் விலையில் கடைக்காரர்கள் ஒளித்து வைத்திருக்கும் டப்பாவைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டும். ஒரே கவலை என்ன செய்வது என! சட்டென ஒருமுடிவுக்கு வந்தவளாய்ப் போர்ட்டரைத் தேடிச் செல்லலாம் என நினைத்தேன். 

உடனே அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அப்பா இருக்குமிடம் போகச் சொல்லிட்டு நான் போர்ட்டரைப் பார்க்கப் போவதாக அப்பாவிடம் சொல்லச் சொன்னேன். அதற்குள்ளாக ஒரு காவல் துறை நண்பர் என் பதட்டத்தைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க விஷயத்தைச் சொன்னேன். அவர் அங்கீகாரம் பெற்ற போர்ட்டர் தானா எனக் கேட்டார். ஆம் என்றேன். அதோடு விளையாட்டாக எண்களைக் குறித்து மனனம் செய்யும் வழக்கம் என்னிடம் எப்போதும் இருந்ததால் அவருடைய லைசென்ஸ் எண்ணையும் சொன்னேன். அதுக்குள்ளே சுரங்கப் பாதையில் யாரோ ஒருவர் தலையில் கறுப்பு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு இறங்குவதையும், சுற்றும் முற்றும் பார்ப்பதையும் பார்த்துவிட்டேன். காவல்துறை நண்பரிடம் அங்கே கையைக் காட்டினேன். எனக்குப் பதட்டத்தில் பேச்சும் வரவில்லை. ஒரே ஓட்டம் தான். அதற்குள்ளாக நான் சைகை காட்டியதைப் புரிந்து கொண்ட   காவல்துறை நண்பர் எனக்கு முன்னால் அந்தச் சுரங்கப்பாதைக்குப் போய்விட்டார். கீழே முற்றிலும் இறங்கி விட்டிருந்த போர்ட்டரையும் பிடித்து விட்டார்.

அவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கையில் நானும் சென்று விட்டேன். அவர் நாங்க வெளியே தான் போகணும்னு சொன்னதாகப் பிடிவாதமாகச் சாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆளும் கிடைத்துப் பெட்டியும் கிடைத்ததால் எனக்கு மேலே ஒன்றும் கேட்கவோ/பேசவோ தோன்றவில்லை. இதற்குள்ளாக அம்மா போய் விஷயத்தைச் சொல்லியதால் அங்கிருந்து அப்பாவும் ஓடோடி வந்து விட்டார். "கீதா! கீதா!" என அவர் என்னை அழைத்த குரலில் திருச்சி ஜங்க்‌ஷனே பிரமித்து நின்றிருக்கும்.  அந்தப் போர்ட்டர் சாமானைத் தூக்கிக் கொண்டு மறுபடி மேலே வர அங்கே வேறு பக்கம் என்னைத் தேடிக் கொண்டு போய்க் கொண்டிருந்த அப்பாவைக் கூப்பிட்டேன். பின்னர் காவல்துறை நண்பர் எங்களைப் பெட்டி வரை கொண்டு விட்டார். எங்களை வண்டியிலும் ஏற்றி விட்டார். சாமான்களையும் போர்ட்டர் கொண்டு கொடுத்துவிட்டார்.குழந்தையின் உணவும் கிடைத்து விட்டது. போர்ட்டருக்கும் காவல்துறை நண்பருக்கும் நன்றி சொன்னோம். சிறிது நேரம் ஆகிவிட்டது படபடப்பு அடங்கி நிதானத்துக்கு வர. ஒரே களைப்பு/பசி! ஆனால் அங்கே சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. கூட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ரயில்வே கான்டீனில் பண்ணுவது எல்லாம் உடனுக்குடன் காலி ஆகிக் கொண்டிருந்ததாம். எங்கள் பயண நண்பர் எங்கோ போய்ப் பழங்கள் வாங்கி வந்தார். அதைச் சாப்பிட்டு விட்டுக் குழந்தையைப் பாதுகாப்பாகப் போட்டுப் படுக்க வைத்தோம். இத்தனை அமர்க்களத்திலும் அவள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். பாவம். பாதுகாப்பான கைகளில் இருக்கோம் என்னும் நிம்மதிதானே அதுக்கும் அப்போ தோன்றி இருக்கும்!

வண்டி சிறிது நேரத்தில் கிளம்பியது. மேற்கே சென்றது. நாங்கள் அசதியில் உட்கார்ந்தவாறே தூங்கி விட்டோம். நடுவில் ஒரு தரம் குழந்தை விழித்துக் கொண்டு அழுதப்போ ஈரோடோ என்னமோ ரயில் நிலையம். சரியாய் நினைவில் இல்லை. காலை விழித்ததும் சேலம் ஜங்க்‌ஷனில் வண்டி நின்று கொண்டிருந்தது. எல்லோருக்கும் காஃபி வாங்கி வந்தார் நண்பர். பின்னர் டிஃபனும் வாங்கிக் கொடுத்தார். நாங்களும் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் மன அமைதி பெற்றோம். என்றாலும் கழிவறை எல்லாம் பயன்படுத்த முடியாமல் ஒரே பிரச்னை. அப்போ ரொம்பச் சின்ன வயசு. 20 வயசுக்குள் தான் என்பதால் எப்படியோ சமாளித்தேன். அம்மாதான் பாவம் திண்டாடினார்கள். கால் வைக்க முடியாமல் கழிவறைகள். 

இங்கே அம்பத்தூரில் சனிக்கிழமை மாலையே என் அண்ணாவோடு எழும்பூருக்கு வந்திருக்கார் நம்ம ரங்க்ஸ். அண்ணா அப்போது எங்களுடன் தான் இருந்தார். ஆழ்வார்ப்பேட்டையில் அலுவலகம். அம்பத்தூரில் இருந்து போய் வந்து கொண்டிருந்தார்.  இருவரும் எழும்பூர் வந்ததுமே சுமார் 3 மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்ட விபரமும் திரும்பத் திருச்சி போகிறது என்னும் தகவலையும் ரயில்வேக்காரர்கள் ஒலிபரப்பு/நோட்டிஸ் போர்டில் எழுதிப் போட்டு அறிவித்திருக்கிறார்கள். என்ன தான் விசாரித்தாலும் அந்த ரயிலில் வந்தவர்கள் எவருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதற்கு மேல் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சுமார் ஐந்தரை வரை காத்திருந்துவிட்டுத் திரும்ப அம்பத்தூர் போயிருக்கிறார்கள். மாற்று ரயில் விடப்பட்டிருக்கிறது என்பதை இரவு ரயில் நிலையத்துக்குத் தொலைபேசிக் கேட்டதில் சொல்லி இருக்காங்க. ஆனால் அதில் நாங்க வரோமா/திரும்பி மதுரையே போயிட்டோமா எனத் தெரியவில்லை. ஒரே குழப்பம். மறுபடி காலையில் விசாரித்தபோது திருச்சியில் இருந்து மாற்று ரயில் சேலம் வழியாகச் சென்னை சென்ட்ரலுக்கு மதியம் இரண்டு மணி அளவில் வந்து சேரும் எனச் சொல்லி இருக்காங்க.

ஆகவே சாப்பிட்டோம் எனப் பெயர் பண்ணிவிட்டு இருவருமாகக் கிளம்பி சென்னை சென்ட்ரல் வந்து விட்டார்கள். அங்கே அம்பத்தூரில் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் போய் என்ன ஆகப் போகிறது? அவங்க வராங்களா என்பது நிச்சயம் இல்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் அவதிப்பட்டு வர மாட்டாங்க. திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பேருந்து அல்லது ரயிலில் மதுரை போய்ச் சேர்ந்திருப்பாங்க என்று சொன்னார்களாம். ஆனாலும் வந்து பார்க்கலாம் என வந்திருக்காங்க. ஒரு கோடியில் அண்ணாவும், இன்னொரு கோடியில் நம்ம ரங்க்ஸும் நின்றிருக்கிறார்கள். நான் எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தப்போ அண்ணா மட்டும் கண்ணில் பட்டார். சரிதான், அவருக்கு என்ன ஆச்சு எனக் கவலையுடன் பார்த்தால் கொஞ்சம் தள்ளி அவரும் நின்று கொண்டிருந்தார். உடனே கையை ஆட்டினேன். நல்லவேளையாக அவரும் கவனித்துவிட்டார். பின்னர் ரயில் நின்றதும் எல்லோரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதும் அப்பாடா என இருந்தது. கூடவே வந்த நண்பர் எங்களைப் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்த நிம்மதியோடு எங்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றார்.  இப்படியாக என் பெண் பிடிவாதமாகச் சென்னை சென்ட்ரலில் தான் கால் வைப்பேன் என்று சொல்லி நேரடியாக அங்கே வந்து இறங்கினாள். அங்கிருந்து ஒரு டாக்சி வைத்துக் கொண்டு (அப்போல்லாம் ரொம்பச் சீப்) எல்லோரும் அம்பத்தூர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

கதையும் முடிந்தது/கத்திரிக்காயும் காய்ச்சது. கத்திரிக்காயைப் பார்த்தே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன! ஹிஹிஹி!

Friday, December 03, 2021

பயணம் எங்கே! எங்கே!

 வண்டி மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்து நின்றது. அப்பா போய் விசாரித்து வந்ததில் வெண்ணாறு/வெட்டாறு கரை உடைந்துவிட்டதால் கடலூர் மெயின் லைனில் தண்டவாளமெல்லாம் நீர் நிரம்பி இருப்பதாலும் அங்கிருந்து வரும் லைன்களிலும் நீராக இருப்பதாகவும் விழுப்புரம் தாண்டிக் கொஞ்ச தூரம் வரை ஒரே தண்ணீர் மயம் என்றும் ரயில் மேலே போக முடியாது எனவும் சொன்னார்கள். அதற்குள்ளாகக் கூச்சல், குழப்பம், ஆங்காங்கே ஒரே களேபரம். என்ன செய்வதுனு புரியலை. அப்பாவுக்கும் குழப்பம். இப்படி ஒரு நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்று சனிக்கிழமை நவம்பர் 25/26தேதினு நினைக்கிறேன். ஏனெனில் திங்களன்று நவம்பர் 28 தான் நான் வேலையில் சேரணும். நடுவில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் வேலைக்குச் செல்வதாகத் திட்டம். அப்பா/அம்மா கொஞ்ச நாட்கள் இருப்பார்கள். அப்பா வேலையில் இருந்தார் என்பதால் ஒரு வாரம் பத்து நாட்களுக்குப் பின்னர் அப்பா மட்டும் கிளம்பிப் போவதாயும் அம்மா ஒரிரு மாதங்கள் இருந்த பின்னர் போகலாம் எனவும் திட்டம். குழந்தைக்கு அறுபது நாட்கள் முடியவில்லை. மாதம் கணக்கில் தான் 3 ஆம் மாதம். எல்லாத் திட்டங்களும் இப்போது மாறிவிடுமே! யோசனையில் இருந்தோம். ரயில் நின்று கொண்டிருந்தது. மாலை நாலு மணி வரை யாருக்கும் எந்த முடிவும் தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது.


சற்று நேரத்தில் எங்கள் வண்டி கிளம்பவும் திரும்பச் சென்னை தான் போகிறதோ என நினைத்தோம். ஆனால் இல்லை. திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருச்சிக்குத் திருப்பி விடப்பட்டதாகச் சொன்னார்கள். இது என்னடா கூத்து என நினைத்தோம். ஒண்ணுமே புரியலை. அப்போது சிலர் விழுப்புரத்தை விடத் திருச்சியிலிருந்து மாற்று ரயில்கள் விடுவார்கள் என்று நம்பிக்கை கொடுத்தனர். வழியெங்கும் மக்கள் வெள்ளம் எங்கள் ரயிலை வரவேற்றது. தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் கூட்டமாக நின்ற வண்ணம்  மேலே போகாதே! நடுவில் எல்லாம் தண்ணீர்! தண்டவாளத்தில் விரிசல்! நதிப்பாலத்தின் மேல் ரயில் போக முடியாது. திருச்சியில் கொள்ளிடம் பாலத்தைக் கடக்க முடியாது. காவிரியில் வெள்ளம் கொள்ளிடம் பாலத்தை மூழ்க அடித்துவிட்டது. ரயிலோடு பயணிகள் அனைவரும் அடித்துக் கொண்டு போகப்போகிறது. நாளைக்கு தினத்தந்தியில் வரப்போகிறது என்றெல்லாம் மக்கள் கோஷமிட்டார்கள். ஆனால் ரயில்வேக்காரர்கள் அசரவில்லை. 

பின்னர் தெரிந்தது எங்களுக்கு முன்னால்  பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரு வண்டியில் ரயில்வே தொழில் நுட்ப ஊழியர்கள் அமர்ந்த வண்ணம் பாதையைப் பார்த்துக் கொண்டு ஆங்காங்கே சில இடங்களில் இறங்கியும் பார்த்துக் கொண்டு போவதாகவும், அவர்களை ஒரு திறந்த பெட்டியில் அமர வைத்து  ஒரு இஞ்சின் இழுத்துச் செல்வதாகவும் அதன் பாதையிலேயே இந்த ரயில் செலுத்தப்படுவதாகவும் சொன்னார்கள். முன்னால் ஏதேனும் பிரச்னை இருந்தால் அவங்க பார்த்துட்டு இந்த ரயிலை நிறுத்திவிட்டுப் பின்னர் மேலே போகலாமா/வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள். ஆகவே ரயில் மெதுவாகவே சென்றது. சுமார் மத்தியானம் 3 மணி/4 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து கிளம்பிய வண்டி திருச்சியை மறுபடி வந்தடைய இரவு எட்டு மணி ஆகி விட்டது. எல்லோருக்கும் பசி. வழியில் ரயில் எங்கும் நிறுத்தப்படவில்லை. காஃபியோ, தேநீரோ எதுவும் குடிக்கவில்லை. கழிவறை கூடப் போகவில்லை. 

ரயிலில் வந்த யாரோ ஒருவர் மேலதிகாரி வரை போய்க்கொடுத்த புகாரின் விளைவோ அல்லது ஒரு ரயில் கூட்டத்தையும் மேலே மேலே வந்து ஆங்காங்கே நின்று கொண்டிருந்த கூட்டத்தைச் சமாளிப்பது எப்படி என்பதனாலோ என்னமோ ரயில்வே அலுவலர்கள் மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தனர். பயணச்சீட்டு மறுபடி வாங்க வேண்டாம் எனவும் அதே பயணச்சீட்டிலேயே பயணிக்கலாம் எனவும் சொன்னார்கள். ஆனால் முன் பதிவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. சாமர்த்தியம் உள்ளவர்கள் ரயிலில் அவங்க சொந்த சாமர்த்தியத்தில் ஏறிக்கணும். என்பதே அவர்கள் சொன்னது. என்ன ஏற்பாடு? எப்படிப் போகப் போகிறோம். இந்தப் பக்கம் "கார்ட் லைன்"எனச் சொல்லப்படும் நம் ரயில் செல்லும் பாதையும்  போக முடியாது. அந்தப் பக்கம் கிழக்கே மெயின் லைன் எனச் சொல்லப்படும் பாதையும் உபயோகத்தில் இல்லை.  நடைமேடையிலோ ஒரே கூட்டம். கிட்டத்தட்ட ஐந்தாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அன்று திருச்சி ரயில் நிலையத்தில்.

சற்று நேரத்தில் அறிவிப்புச் செய்யப்பட்டது. சென்னை/கொல்லம் விரைவு வண்டிப் பயணிகளுக்காக ஓர் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச்  சொன்னார்கள். ஏன் அதே ரயிலிலேயே போகலாமே என நினைப்பவர்களுக்கு! அப்போது மெயின் லைன்'கார்ட் லைன் இரண்டுமே மீட்டர் கேஜ் தான். சின்ன ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில்.  நாங்க மதுரையில் வந்தது மீட்டர் கேஜிலே.  இப்போது விழுப்புரத்தில் இருந்து செல்ல வேண்டியது ப்ராட் கேஜிலே. மாற்றுப்பாதை எனில் முற்றிலும் மாற்றுப் பாதை. மேற்கே சென்று சேலம் வழியாகச் சென்னை செல்ல வேண்டும். ஆக மொத்தம் எங்க பெண் பிறந்த 3 மாதங்களிலேயே மீட்டர் கேஜில் சின்ன ரயிலில் எல்லாம் போக மாட்டேன்னு அடம் பிடித்து ப்ராட் கேஜ் ரயில் பாதைக்கு மாற்றிக் கொண்டாள். அதோடு இல்லாமல் காலை கிளம்பினால் மாலை போகும் தூரம் உள்ள சென்னைக்கு முதல்நாள் சனிக்கிழமை காலை கிளம்பி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை போகும்படி ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு போகும்படியும் ஆனது.

 சிறிது நேரத்தில் பயணிகளுக்குப் பயணச் சீட்டில் பரிசோதகரின் கையெழுத்து வாங்கும்படியாக அறிவிக்கப்பட ஒரே கூட்டமாக ஆங்காங்கே மக்கள் பரிசோதகரிடம் பாய்ந்தார்கள். எங்கள் கூடவே மதுரையிலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவர் எங்களுக்கும் அவரே சென்று மாற்று ஏற்பாட்டுக்கானக் கையெழுத்தை வாங்கி வந்து கொடுத்தார். திருச்சியிலிருந்து கிளம்பும் அந்த ரயில் வேறு நடைமேடையில் வருவதால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே அப்பா ஒரு போர்ட்டரைப் பிடித்து அந்தக் குறிப்பிட்ட நடைமேடையில் ஏதேனும் ஒரு பெட்டியில் வைக்குமாறும் எங்கள் மூவருக்கும் இடம் போட்டு வைக்கும்படியும் சொன்னார். போர்ட்டர் கேட்ட தொகைக்கும் ஒத்துக்கொண்டார். அந்தப் போர்ட்டர் சுரங்கப்பாதையில் இறங்கிச் செல்லக் கூடவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு அப்பாவுடன் நானும், அம்மாவும் சென்றோம். படியெல்லாம் மக்கள் வெள்ளம். போர்ட்டர் தூக்கிச் சென்றது என்னோட சூட்கேஸ். அதில் நம்மவரின் பெயர் கே.சாம்பசிவம் எனப் பொறித்திருக்கும். ஆகவே நான் அதைக் குறி வைத்துக் கொண்டு நான் சென்றேன். என்னுடன் அம்மாவும் வந்தார். அப்பாவும் போர்ட்டரும் எங்கோ ஓர் இடத்தில் திரும்பி இருக்க எனக்கு அப்பா மட்டும் தெரிந்தார். போர்ட்டரைக் காணவில்லை.