எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 28, 2019

இதுவும் எதுவும் எல்லாமும் கடந்து தான் போகும்!

ஏமாறுவதற்கு ஆள் இருந்தால் போதும் நம்மவர்கள். நல்லா தலையில் மிளகாய்ச் சட்னி, தக்காளிச் சட்னி எல்லாமும் அரைத்துவிடுகின்றனர். அதிலும் இந்தத் தொழில் நுட்ப வேலை தெரிந்தவர்கள் இருக்காங்களே! அவங்க தங்களுடைய பொருளை நமக்கு விற்பதெனில் கரெக்டா வருவாங்க! வியாபாரம் பேசுவாங்க! பொருளை நமக்காகச் சலுகை விலையில் கொடுப்பது போல் கொஞ்சம் பணம் குறைச்சுட்டுக் கொடுப்பாங்க! அதே நம்முடைய ஒரு பொருளை அவங்களிடம் விற்கக் கொடுத்தால் அது என்னமோ நம்ம ராசி போல, விற்கவே விற்காது. இதோ, இன்னிக்கு வித்துடும். , இதோ இன்னிக்கு வித்தாச்சு, பணத்தை எடுத்து உங்களிடம் கொடுக்கத் தான் கிளம்பினேன். நடுவில் வேலை வந்துவிட்டது என்பார்கள். அதுக்குள்ளாக அவங்களுக்கு அப்போத் தான் எக்கச் சக்க மீட்டிங் எல்லாம் ஏற்பாடு ஆகும். அல்லது வெளியூரில் போய் மாட்டிக் கொண்டிருப்பார்கள்! நாம் தொலைபேசியில் அழைத்தால் எட்டாத இடத்தில் இருப்பதாகச் செய்தி வரும்.

மீறி எடுத்துவிட்டால், அங்கே தான் வரப்போறேன், இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன் என்பார்கள். சரினு நாம கதவை எல்லாம் விரியத் திறந்து வைச்சுட்டு, கீழே பாதுகாவலரிடம் சொல்லிட்டுக் காத்திருப்போம். "காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி!" என்று நாம் பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான். வரவே மாட்டாங்க. சரினு மறுநாள் கூப்பிட்டுக் கேட்கலாம்னு தொலைபேசினால் மணி அடிக்கும்;அடிக்கும்;அடிக்கும்; அடித்துக் கொண்டே இருக்கும். மறுமுனையில் எவ்வித அசைவும் இருக்காது. இம்மாதிரி அலுத்துப் போன ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நம் நண்பர், நாம் பெரிதும் நம்பிய தொழில் நுட்ப நிபுணர்  தொலைபேசியின் உரிமையாளர்,  நாம் யாரை எதிர்பார்த்து அழைத்தோமோ அவர் தொலைபேசியை எடுக்க மாட்டார். வேறே யாரானும் எடுத்து ஏதோ பிசியான  நேரத்தில் நாம் அழைத்துத் தொந்திரவு கொடுக்கிறோம் என்னும் எண்ணம் வரும்படியான குரலில் , "அவர் இப்போ ரொம்ப பிசி. முக்கியமான மீட்டிங்க்! இப்போப் பேச முடியாது!" என்று சொல்லுவார். நாமும் அலுத்துப் போய்த் தொலைபேசியில் எஸ் எம் எஸ் கொடுத்துப் பார்ப்போமேனு கொடுப்போம்.

இந்த எஸ் எம் எஸ் மட்டும் கரெக்டா நாம் அனுப்புவதற்குப் பைசாவைக் கழித்துக் கொண்டேன்னு செய்தியை அனுப்பி வைப்பாங்க. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அதைப் பார்த்தாரா இல்லையா என்பதற்கான அடையாளமே எதுவும் இருக்காது. வாட்ஸப்பில் அனுப்பலாம் எனில் அப்போப் பார்த்து அது போகாது! அன்னிக்குப் பொழுது   இப்படியே போயிடும். மறுநாள் கூப்பிட்டால் ரொம்பக் கரெக்டா சம்பந்தப்பட்ட நபரே தொலைபேசியை எடுப்பார். அடடா! நீங்க இத்தனை முறை கூப்பிட்டீங்களா? மெசேஜ் அனுப்பினீங்களா? தெரியலையே மேடம், நான் பாருங்க இங்கே மதுரைக்கு வந்திருக்கேன். எங்களுக்குத் திருச்சி, ஸ்ரீரங்கம் மட்டுமில்லை. இங்கே சுத்துவட்டார ஊர்கள் எல்லாத்துக்கும் நாங்க தான் செர்வீஸ் செய்யறோமா! இங்கே அனுப்பிட்டாங்க! இன்னும் 2 நாள் பொறுங்க! நான் ஊருக்கு வந்ததும் நானே உங்களைக் கூப்பிட்டு எப்போ வரணும்னு கேட்டுட்டு பணத்தைக் கொடுத்து செட்டிலே செய்துடறேன். என்று ரொம்ப நம்பிக்கையாகத் தெரிவிப்பார். அவர் ஊரிலிருந்து வந்திருப்பார் என்று தோன்றும் நாள் நாம் அழைத்தால் அப்போதும் பொறுமையாய்த் தொலைபேசியை எடுத்து இன்னும் இரண்டே நாட்கள்! இருங்க இதோ வந்துடுவேன்! என்பார்.

இப்படிப் பல இரண்டு நாட்கள், பலமுறை வெளியூர் போய் வேலை செய்தல், பல முறை மீட்டிங் எல்லாம் ஆகிவிடும். ஒருவழியா இங்கே இருந்து ஒண்ணுமே பெயராதுனு நாம் அலுத்துப் போக ஆரம்பிச்சுடுவோம். பணம் போனால் போகட்டும்! எத்தனை பேர் ஏமாத்திட்டாங்க இந்த ஊரிலே! எலக்ட்ரீஷியன் ஆயிரக்கணக்கில் ஏமாத்தலையா? ப்ளம்பர் ஏமாத்தலையா? நாம நம்ம கணினியைச் சும்மாக் கொடுத்ததாக நினைச்சுப்போம் என்னும் எண்ணத்துக்கு இறங்கி வந்து விடுவோம். ஆனால் இதை எல்லாம் விடப் பெரிய பிரச்னை இனிமேல் நம்மிடம் இருக்கும் லாப்டாப்பிற்கு யார் வந்து ரிபேர் வேலைகள் செய்து தருவாங்க? பெரிதும் நம்பின இவரை இனிமேல் நம்மால் கூப்பிட முடியுமா? அப்படியே நாம் எல்லாவற்றையும் மறந்துட்டு இவரையே கூப்பிட்டாலும் இவர் வந்து செய்து தருவாரா?  நாம பணத்தைப் பத்திப் பேசுவோம்னு வராமல் இருப்பாரா? இது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி! 

Friday, June 21, 2019

தண்ணீர், தண்ணீர்!

சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம்! அம்பத்தூரில் இருந்து வந்திருந்த உறவினர்கள் அங்கே தண்ணீரே இல்லை.  ஆழ்துளைக்குழாயில் கூடத் தண்ணீர் வராமல் மோட்டார் போட்டால் சேறும் சகதியுமாக வருகிறது என்றார்கள். தமிழகம் எங்கும் வறட்சி நிலவினாலும் காவிரிக்கரையில் இருப்பவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நாமும் கடைசிச் சொட்டு வரை விடாமல் மாட்டைக் கறந்து கன்றைப் பட்டினி போடுவது போல் நடந்து கொள்வோம். அல்லது கன்றைப் போல வைக்கோல் அடைத்த பொம்மையைக் காட்டி மாட்டை ஏமாற்றுவது போல் காவிரித் தாயையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கெல்லாம் தண்ணீர் வருமோ அங்கெல்லாம் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். அறுபதுகளில் இம்மாதிரி ஒரு தண்ணீர்க் கஷ்டம் சென்னைக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் இதே போல் மக்கள் ஊரை விட்டு வெளியேறியதோடு யாரேனும் உறவினர் வந்தால் வீட்டில் தங்கக் கூட அனுமதிக்க யோசிப்பார்கள். இதைக் குறித்துச் சித்தப்பா ஓர் நாவலே எழுதினார்.

கிட்டத்தட்ட அதே நிலை இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் குறைந்த நபர்கள் இருந்தால் பிரச்னை இல்லை. ஓரளவு ஓட்டி விடலாம். ஆனால் இரண்டு பேருக்கு மேல் இருந்தால் பிரச்னை தான்! மாம்பலத்தில் தம்பி வீட்டில் ஒரு நாளைக்கு ஒருத்தர் என்னும் கணக்கில் குளிக்கும்படி இருக்கிறது என்றார் தம்பி!  சின்ன ஸ்பூன் கிடைத்தால் கூடத் தண்ணீர் நிரப்பி வைக்கும்படியாக இருக்கிறது என்கின்றனர். லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பினாலும் அதற்கும் நிறையப் போட்டிகள். இந்தச் சாக்கில் லாரிக்காரர்கள் கன்னாபின்னாவென்று எங்கெங்கிருந்தோவெல்லாம் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிடுவதோடு அதிகப் பணமும் கேட்கின்றனர்! அந்தத் தண்ணீர் ஒத்துக்காமல் உடல்நிலை பாதிப்பு வேறே வந்து விடும். அதோடு மட்டும் இல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள்,  ஓட்டல்கள், ஐடி கம்பெனிகள், சின்னச் சின்னத் தொழிற்சாலைகள் ஆகியவை தண்ணீர் இல்லாத காரணத்தால் விடுமுறை விடுகின்றனர். அல்லது ஒரே ஷிஃப்ட் வேலை கொடுக்கின்றனர். அல்லது ஓட்டல்களில் மதியச் சாப்பாடே இல்லை என்கின்றனர்.  பள்ளிகள், கல்லூரிகள் மதியமே குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி விடுவதாகச் சொல்கின்றனர். புதிதாகச் சென்னையில் தங்கவென்று வந்த சில சின்னச் சின்னக் குடும்பங்கள் அவரவர் ஊர்களுக்கே திரும்புவதாகச் சொல்கின்றனர். திரும்பட்டும். அது தான் நல்லதும் கூட! எல்லோரும் வேலை வாய்ப்பு, பிழைக்க வழி எனச் சென்னைக்கே வந்தால் அத்தனை பேரையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறது சென்னை!

சில ஓட்டல்களில் சாப்பாடு தயாரிப்பது கஷ்டம், தயாரித்துக் கொடுக்க வேண்டும் எனில் அதற்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என்கின்றனர். சிலர் சாப்பாடு உண்டு ஆனால் தண்ணீரை நீங்களே கொண்டு வாருங்கள் என்கின்றனர். இதற்கெல்லாம்  யார் காரணம்? அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக் கொண்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டாம். நாமே யோசிப்போம். தவறு நம்மீது தானே!  இப்போது சென்னையை மட்டும் எடுத்துக் கொண்டால் அங்கே நீர் ஆதாரங்களே இல்லையா? அல்லது இருந்ததே இல்லையா?  முந்தைய அரசுகள் தெலுங்கு கங்கை நீர்த்திட்டம், வீராணம் குடிநீர்த்திட்டம் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் சென்னைக்குக் குடிநீர் வழங்கி வந்தனவே அதெல்லாம் என்ன ஆனது? எனக்கு நினைவு தெரிந்து அறுபதுகளின் மத்தியில் இருந்து எண்பதுகள் வரை சென்னையைச் சுற்றிப் பல ஏரிகளைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் தண்ணீரையும் பார்த்திருக்கேன். அதான் முக்கியம். அவை எல்லாம் என்ன ஆனது? இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்? மக்களாகிய நாம் தான்!

ஏரிகள் இருந்த இடங்களைத் தூர்த்துக் குடி இருப்புக்கள் கட்டினால் நாம் தான் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினோம். வயல்களை அழித்துக் குடியிருப்புக்கள் வருவதை ஆதரித்தோம். குடி இருப்புக்களோடு நிற்காமல் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என ஏரிகள் தூர்க்கப்பட்டு வந்து விட்டன.  தொழில்கள் சென்னையில் மட்டும் தான் துவங்க வேண்டுமா? உள் நகரங்களில் துவங்கக் கூடாதா? ஆனால் நாம் யாருமே அதற்கு இடம் கொடுக்காமல் சென்னையை மையமாகக் கொண்டே அனைத்துத் தொழில்களையும் தொடங்கி இருக்கிறோம். அதே போல் மருத்துவமும்! சென்னையை விட்டால் மற்ற ஊர்களில் மக்கள் இல்லையா? அங்கெல்லாம் மருத்துவமனைகளைத் துவங்கலாமே! எல்லோருமே சென்னைக்கு வந்து வைத்தியம் செய்து கொள்ள முடியுமா? முக்கியமான சிகிச்சைகளுக்கு எல்லோரும் தண்ணீருக்கு எங்கே போவார்கள்? அங்கே வேலை செய்ய வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்கு என்ன செய்யும்? இது எதையுமே யோசிக்காமல் சென்னையிலேயே அனைத்து மக்கள் தொகையும் கூடி இருக்கிறது!  பத்துப் பேருக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரை ஆயிரம் பேருக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது.  சர்வதேச அளவில் சென்னையின் தண்ணீர்க் கஷ்டம் பேசப் படுகிறது. வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவுக்காக அதிகம் வருவது சென்னைக்கும், சென்னையைச் சுற்றி உள்ள தமிழகக் கோயில்களைப் பார்க்கவும் தான். அதெல்லாம் இப்போது பாதிப்படையும். சுற்றுலா பாதித்தால் அதைச் சார்ந்துள்ள மற்றத் தொழில்களும் பாதிக்கும்.

சென்னையில் தொழில், வர்த்தகம் பாதித்தால் தமிழக வருமானம் பாதிப்பதோடு அல்லாமல் தமிழகம் முன்னணி மாநிலங்களில் இருந்து பின்னுக்குத் தள்ளப்படலாம். இவை அனைத்தும் எதனால்? தண்ணீரால்! அந்தத் தண்ணீரைச் சேமிக்க நாம் என்ன செய்தோம்! என்ன செய்கிறோம்! இனி என்ன செய்யப் போகிறோம்! உலகிலேயே தமிழர்கள் தாம் கெட்டிக்காரர்கள் என நம்மை நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் தண்ணீர் விஷயத்தில் இப்படி ஏமாந்து நிற்கிறோமே! இதற்கு என்ன செய்வோம்? தண்ணீருக்கு எங்கே போவோம்?ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்தோமா? அல்லது இனியாவது செய்வோமா? ம்ஹூம்!  வழக்கம் போல் இதுவும் பேசி, எழுதி, விவாதங்கள் செய்து பின்னர் அடுத்த மழை அடித்துப் பெய்தபின்னர் மறந்தும் போகும். அடுத்த கோடையில் தான் தண்ணீரைப் பற்றியே நினைப்போம்.

இது தான் நாம்!

Monday, June 17, 2019

தேவராய சுவாமிகளின் கவசங்கள் ஆறு!

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய்!
ஒரு நாளும் என் நோவறியா இடும்பை கூர் என்
வயிறே உன்னோடு வாழ்தல் அரிது! (பெரிது)

இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கேன். 3 நாட்களாக எல்லாப் பாடும் பட்டாச்சு! ஒரு வழியா இன்னிக்குக் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்திருக்கேன். திரும்பத் திரும்ப இதை எழுத வேண்டாம்னு தான் இருந்தேன். ஆனால் அதையே சொல்லும்படி ஆகிறது. :( இத்தனைக்கும் நான் சமைச்ச சாப்பாடுதான்! :)))) எங்க வீட்டுக்கு வரவங்க பயப்படும்படி ஆயிடப் போகிறது. சாதாரணமான தினசரிச் சமையல் தான்! அதிகப்படி ஏதும் இல்லை. ஆனாலும் வயிறு என்னமோ வக்கரித்துக் கொள்கிறது. காரணம் ஏதும் வேண்டாம் அதுக்கு! இரண்டு நாட்கள் முழுப்பட்டினி போட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. கணினிக்கும் இரண்டு நாட்களாக வரவே இல்லை. மொபைலில் கூட வாட்சப்பெல்லாம் பார்க்கலையேனு என் தம்பி தொலைபேசிக் கேட்டார். நேத்திக்கு மத்தியானமாத் தான் பார்த்தேன். இரண்டு நாளும் படுக்கை தான்! நம்மவர் என்ன சாப்பிட்டார், என்ன செய்தார்னு எதுவும் தெரியாது! :(

இதைப் பற்றி நினைக்கையில் தான் நேற்று முருகனுக்கு உப்பில்லா விரதம் இருந்த நாட்கள் எல்லாம் நினைவில் வந்தன. அது மாதிரி வாரம் ஒரு நாள் உப்பில்லா விரதம் இருக்கணும்னு நினைத்துக் கொண்டேன். அப்போ கந்த சஷ்டி கவசம் நினைவில் வந்தது. அதைச் சொல்லும்போதே மற்றக் கவசங்களையும் தேடினால் என்னனு நினைத்தேன். நினைத்ததும் சஷ்டி கவசங்கள்னு தேடினால் கைமேல் வந்து நின்றன அனைத்துக் கவசங்களும். இத்தனை வருஷமாக இந்தத் தளத்துக்குப் பல முறை போயிருக்கேன். இந்தக் கவசங்கள் கண்களில் பட்டதே இல்லை. இப்போ ஒரே தேடலில் அனைத்தும் வந்து விட்டன. கௌமாரம். இணையதளத்தில் தேவராய சுவாமிகள் எழுதிய ஆறுபடை வீடுகளின் கவசங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நாம் அன்றாடம் சொல்லுவது திருச்செந்தூர்க் கவசம். மற்றக் கவசங்களும் அங்கே இருக்கின்றன. தேவையானவர்கள் படித்துப் பயனுறலாம்.
கவசங்கள் ஆறு

முறையே பரங்குன்றத்தில் ஆரம்பித்து, திருச்செந்தூர், ஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடும் குமரன்,  பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகள். நாம் வழக்கத்தில் வைத்திருக்கும் படைவீடுகளில் ஒரு சில வேறுபடுகின்றன. அதைக் குறித்து ஆராய வேண்டும். தற்சமயம் கவசங்கள் கிடைத்து விட்டன என்பதே மகிழ்ச்சியைத் தருகிறது.  திருமதி ரேவதி சங்கரன் எம்பி 3 ஆடியோவாகப் பதிந்துள்ளார். அதை இன்னமும் கேட்கவில்லை.

முதலில் வரும் நேரிசை வெண்பாவான
"துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம்
நெஞ்சிற்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை!"

என்பதுவும்,

"அமரர்  இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி!"
என்பதுவும் ஆறிலும் முதலில் வருகின்றன. அதன் பின்னர் கவசங்கள். தேவைப்படுவோர் படித்து இன்புறலாம். குமரன் அருளைப் பெறலாம். 

Wednesday, June 12, 2019

இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

சில வருடங்கள் முன்னர் தான் ஓர் இயற்கைப் பேரிடரில் தமிழ்நாட்டு யாத்திரிகர்கள் வட மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் மாட்டிக் கொண்டிருந்த போது எழுதி இருந்தேன். வடக்கே பயணம் செய்ய ஆசைப்படும் தென்னாட்டவர், முக்கியமாய்த் தமிழர்கள் அதற்கான சரியான மாதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  மார்ச்-ஏப்ரல் பயணம் கூடப் பரவாயில்லை போல! மே மாதத்துக்குப் பின்னர் ஜூலை-ஆகஸ்ட் 15 தேதி வரை வடக்கே பயணம் செய்ய ஆசைப்படுவதைத் தவிர்த்து விடுங்கள்.  ஏனெனில் வடக்கே மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலும் கடுமையான வெயிலும் வெப்பமும் நிலவும். ஜூன் மாதத்தில் பருவக்காற்று ஆரம்பித்து மழை அங்கெல்லாம் முழுவதுமாகப் பரவ ஜூன் 20 தேதிகளுக்கு மேல் ஆகும். இடைப்பட்ட காலங்களில் அங்கே பயணிக்கும் தென்னாட்டவர் அதீத வெப்பத்தால் அல்லல் பட்டு உயிரையும் இழந்து விடுகின்றனர். அதே போல் மழைக்காலத்தில் மாட்டிக்கொள்ளும் பயணிகள் மலைப்பகுதிகளில் பயணம் செய்கையில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்றவற்றில் சிக்கிக் கொண்டு அவதிப்படுகின்றனர்.

இங்கே தமிழகக் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் வெயில் காலத்தில் நமக்கு அதிகமாக வியர்வை வந்து விடும். அதனால் உடல் வெப்பம் சமன் நிலையில் பாதுகாக்கப்படும்.  மேலும்  நாம் அதற்கேற்ற உணவை எடுத்துக் கொண்டு நம்மைக் காத்துக் கொண்டு விடுவோம். குறைந்த பட்சமாகத் தண்ணீராவது அதிகம் குடிப்போம். ஆனால் வடக்கே போகப் போக வெப்பம் அதிகம் ஆக ஆக அனல்காற்று வீசத் தொடங்கும்! வெயில் கடுமையாக இருப்பதோடு உடலில் இருந்து வியர்வை எல்லாம் வராது! முதலில் அதைப் பார்த்துவிட்டு நமக்கு ஆஹா இத்தனை வெயில் அடித்தாலும் இங்கே புழுக்கமே இல்லையே எனத் தோன்றும். ஆனால் இது தான் கெடுதல் அதிகம் உள்ளது. உடலில் சேர்ந்த வெப்பம் வியர்வையாக வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடுவதால் நம் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். அதனால் மயக்கம், வாந்தி, உடல் சத்தை இழப்பதால் வரும் சோர்வு போன்றவை அதிகரிக்கும். வெயிலுக்குப் பழக்கம் இல்லாதவர்களுக்கு சன் ஸ்ட்ரோக் எனப்படும் ஒருவகைப் பக்கவாதம் கூட வரலாம். இதனாலும் உடல் நலன் மோசமாகக் கெட்டுப் போகும். மேலும் நாம் உண்ணும் உணவிலும் மாற்றம் ஏற்படுவதால் அந்த உணவைச் சரிவரச் செரிக்க முடியாமல் அவதியும் படலாம்.

ஆகவே கூடியவரை வடக்கே பயணம் செய்பவர்கள், சுற்றுலா செல்லுபவர்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களைக் கட்டாயமாகத் தவிர்க்கவும்.  இந்த நேரம் குளிரெல்லாம் இருக்காது அதனால் வடக்கே செல்லச் சரியான நேரம் என நினைத்தீர்களானால் அதைவிடப் பெரிய துன்பம் வேறே இல்லை. இன்றைய செய்தியில் வட மாநிலச் சுற்றுலா சென்றவர்கள், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் ரயிலிலேயே இறந்திருக்கின்றனர் எனச் சொல்கின்றனர். நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, பெங்களூர் போன்ற ஊர்களில் இருந்து பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு வெயிலின் கொடுமை தெரியாது! இதைச் சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் புரிந்து கொண்டு தக்க பாதுகாப்புடன் வருமாறு அறிவுறுத்தி இருக்க வேண்டும். மேலும் அவர்கள் பயணம் செய்த பெட்டியும் சாதாரணப் பெட்டி. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி அல்ல. சாதாரணப் பெட்டி. பயணத்திற்கான செலவு குறைவு என்பதால் இதில் ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கொஞ்சம் யோசித்துத் தங்களுக்குக் கொடுக்கப்படும் பயணச்சீட்டுச் சலுகை  பற்றி சுற்றுலா ஒருங்கிணைப்பாளரிடம் கலந்து பேசி அதற்குண்டான சான்றுகளை அளித்துப் பயணச்சீட்டில் சலுகை பெற்று வசதியாகக் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பிரயாணம் செய்திருக்கலாம்.

ஏனெனில் இறந்தவர்கள் அனைவருக்குமே மூத்த குடிமக்கள் சலுகைக்கு ஏற்றவர்களாக இருந்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் அந்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு குறைந்தது மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியிலாவது பயணம் செய்திருக்கலாம். பெண்களுக்கு 55 வயதில் இருந்தே சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வைப் பயணம் செய்பவர்களிடம் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்த வேண்டும். ரயில்வே நிர்வாகம் இனியாவது வருங்காலத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சாதாரணக் குளிர்சாதன வசதியற்ற இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்குப் பதிலாக முழுவதும் குளிர்சாதன வசதியோடு கூடிய மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் அதிகம் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும். அதுவும் முக்கியமாகத் தொலைதூரப் பயணத்திற்கு.  அதற்கான கட்டணம் சாதாரண இரண்டாம் வகுப்பிற்கு மக்கள் செலுத்திய கட்டணமாகவே இருந்தால் நல்லது. அல்லது 50 ரூ வரை ஏற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க முடியும். அதோடு இல்லாமல் ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இமயமலைப்பகுதிகளில் பயணம் செய்வோர் தங்கள் பயணத்திட்டத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். ஏனெனில் அங்கெல்லாம் அப்போது தென்மேற்குப் பருவ மழை முழு வீச்சில் இருக்கும். நம் ஊரில் தென்மேற்குப் பருவ மழை அவ்வளவாக இருக்காது. அதை நினைத்துக் கொண்டு வடக்கே சுற்றுப் பயணம் செய்யக் கூடாது. அதிலும், காசி, கயா, ப்ரயாகை போன்ற ஊர்களுக்குப் போகிறவர்கள் ஆகஸ்ட் 15 தேதிக்கும் பின்னர் சென்றால் நலம். அப்போது அங்குள்ள சீதோஷ்ணமும் ஏற்கும்படியாக இருக்கும். குளிரெல்லாம் நவம்பருக்குப் பின்னரே முழு வீச்சில் ஆரம்பிக்கும். நவம்பர் வரை நம்மால் தாங்கக் கூடிய குளிர் தான் இருக்கும்.

மலைப்பிரதேசங்களில் பயணம் மேற்கொள்வோர் நிலச்சரிவுக்குத் தயாரான மனநிலையுடன் செல்ல வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் மனோபாவமும் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அங்கெல்லாம் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். பல சமயங்கள் உணவோ, குடிக்க நீரோ இல்லாமல் மணிக்கணக்காகக் காத்திருக்க நேரிடும். இதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் மனோபாவம் வேண்டும். பொதுவாகத் தமிழ்நாட்டு மக்கள் ஆகஸ்ட், செப்டெம்பரில் போனால் அங்கெல்லாம் குளிர் வந்துவிடும் என நினைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது.  அப்படி எல்லாம் குளிர் வந்துவிடாது. இது போன்ற சுற்றுலாக்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்காகவே ஏற்படுத்தப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் தான்.

குலு, மனாலி, ஷிலாங், டார்ஜிலிங், காங்டோக் போன்ற நகரங்கள் மே, ஜூன் மாதங்களில் பயணம் செய்யச் சிறந்தவை! இவற்றுக்குக் குழந்தைகளையும் தைரியமாக அழைத்துச் செல்லலாம். ஆனால் புனிய யாத்திரை செய்யும் வயோதிகர்கள் மட்டும் கொஞ்சம் யோசித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

Wednesday, June 05, 2019

காஃபி வித் கீதா மறுபடியும்!


Coffee with Geetha 1

Coffee with Geetha



coffee pot க்கான பட முடிவு   coffee pot க்கான பட முடிவு

coffee pot க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார்


மேற்கண்ட சுட்டிகளில் காஃபி பற்றிய அனுபவங்களை எழுதி இருக்கேன். ஸ்ரீராம், அதிரடி எல்லாம் படிச்சிருக்காங்க. என்றாலும் மறுபடி போய்ப் பாருங்க. நெல்லைத்தமிழர் காஃபி பாட் பற்றிக் கேட்டதும் சும்மா விளையாட்டுக்குக் கேட்கிறார் என்றே நினைச்சேன். அவருக்குத் தெரியலை என்பதைப் புரிந்து கொண்டதும் படங்கள் தேடினேன். சரியாக் கிடைக்கலை. கிடைச்ச வரை போட்டிருக்கேன்.

ரயிலில் முதல் வகுப்பில் போனாலோ அல்லது ஏதேனும் பெரிய உணவங்கங்களிலோ காஃபி கேட்டால் தனித்தனியாக வட்டை/டபரா, தம்பளரில் கொடுக்க மாட்டாங்க! ஒரு பெரிய ட்ரேயில் காஃபி டிகாக்ஷன் தனியாக, பால் தனியாக, சர்க்கரை ஒரு கிண்ணத்தில் நான்கு(குறைந்த பட்சம்) ஸ்பூன்கள், நான்கு கப்/சாசர்கள் உள்படக் கொண்டு வந்து வைப்பாங்க. பல சமயங்களிலும் டிகாக்ஷன் இருக்கும் ஜக்கில் மேலே ஒரு சின்ன வடிகட்டி போன்ற கிண்ணத்தில் பொடியைப் போட்டுக் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி இருப்பாங்க. டிகாஷன் சொட்டுச் சொட்டாகக் கீழே உள்ள ஜக்கில் இறங்கும். பால் அதைவிடக் கொதிக்கும் பதத்தில் இருக்கும். இன்னும் சிலர் பொடியைப் போட்டு வெந்நீரை விடாமல் ஜக்கில் கொதிக்கும் டிகாஷன் மட்டும் வைப்பார்கள். நாம் நமக்கு ஏற்றபடி டிகாஷன் எடுத்துக் கொண்டு கொதிக்கும் பாலை ஊற்றிச் சர்க்கரை நமக்குத் தேவையான அளவு போட்டுக் கொண்டு குடிக்கவேண்டும்.

இந்தப் பாட் காஃபி குறைந்தது நான்கு நபர்கள் தாராளமாய்க் குடிக்கும்படி இருக்கும். தேநீர் என்றாலும் அதே முறை தான். சமயங்களில் ஜக்கில் கீழேயே பொடியைப் போட்டு( நம் ஊரில் போடுவது போல் டஸ்ட் இல்லை! நல்ல பெரிய இலைகள் கொண்ட தேயிலைகள்) வெந்நீரை ஊற்றி இருப்பார்கள். அது ஊறித் தேநீர் தயாராகப் பத்து நிமிஷமாவது ஆகும். பெரும்பாலும் ஜக்கில் தேநீர் ஊற்றும் முனையில் வடிகட்டி இருக்கும் என்பதால் தேநீரை அப்படியே ஊற்றலாம். இலைகள் பெரிது என்பதால் அவை வெளியே வராது. அதுவே டஸ்ட் என்றல் இம்முறை சரியாக வராது. ஆனால் பெரிய ஓட்டல்களில் மற்ற இடங்களில் தேயிலைகளே போட்டுத் தேநீர் தயாரித்துக் கொடுப்பாங்க!அதை ஒரு முறை குடித்துப் பார்த்தால் நாம் குடிப்பது தேநீரே இல்லை என்பது புரிந்து விடும்.

ஜக்கின் மேல் பாகத்தில் தேயிலையைப் போட்டு வெந்நீர் ஊற்றிக் கொடுக்கும் வகையில் தேநீருக்கு மட்டும் இருக்காது. ஏனெனில் வெந்நீரில் தேயிலை ஊற வேண்டும் என்பதால் ஜக்கிலேயே நேரடியாகப் போட்டுத் தான் கொடுப்பார்கள். நன்கு ஊற ஊறத் தேநீரின் சுவை அதிகமாக இருக்கும். பல சமயங்களிலும் காஃபிக்கு காஃபி ப்ரூயர் Coffee Brewer எனப்படும் ஜக்கை அப்படியே வைப்பதும் உண்டு. அதிலும் மேலே பொடி போட்டு வெந்நீர் ஊற்றி இருப்பார்கள்.


Tuesday, June 04, 2019

அப்பாடா! ஒரு வழியா முடிச்சுட்டேனே!

இன்னைக்கு மின்சாரம் போயிடும்னு நேற்றே மொபைல் மூலம் செய்தி வந்ததால் காலை ஒன்பது மணிக்குள்ளாக இன்றைய சமையலுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டேன். வறுத்தல், அரைத்தல் எல்லாமும் ஒன்பது மணிக்குள் முடித்துக் கொண்டேன். ஆனால் பாருங்க! மின்சாரமே போகலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வேறே ஏரியாவுக்குப் போல. எனக்குத் தப்பா வந்திருக்குனு நினைக்கிறேன். எதிர்பாராமல் ஒரு நாள் மின்வெட்டை அமல் செய்வாங்க! ஆனாலும் வீட்டு அன்றாட வேலைகள் முடிந்ததும் கணினிக்கு வரலை! காலைத் தொங்கப் போட்டு உட்கார முடியாததால் போய்ப் படுத்துட்டேன். இப்போத்தான் ஒன்றே முக்காலுக்குப் பின்னர் எழுந்து வந்தேன். சுருக்கமாய்ப்பார்த்துட்டு ராகு கால விளக்கு ஏற்றப் போகணும்!
*********************************************************************************

கடைசியாய்ப் பார்த்தது

நாங்கள் அறைக்குப் போய்ப் படுத்தோம். ஆனாலும் தூக்கம் ஏனோ வரவே இல்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் அந்த ஆட்டோக்காரர் வந்து அழைத்துச் செல்வதாய்க் கூறி இருந்தார்.  ஆனாலும் விழித்திருந்தோம். கொஞ்சம் நேரம் எழுந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் கண் அசருமோ என்னும் நேரம் மணி பார்க்க நாலரை எனத் தெரிந்தது. உடனே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு குளித்து முடித்துத் தயாராகிக் கீழே வந்தோம். இருட்டுப் பிரியவில்லை. மணி ஐந்து தானே! அந்த உள் அறையில் ஓட்டல்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் முதல்நாள் முன்பணமாகக் கொடுத்த தொகையில் 250 ரூ வரை அவர் கொடுக்கணும். எழுந்துப்பாரோ இல்லையோ என நினைக்கையில் வேறொரு இளைஞர் எழுந்து வந்தார். நம்ம ரங்க்ஸ் அவரிடம் சாவியைக் கொடுக்க அவரும் வாங்கிக் கொண்டு போய் முன் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு அறையைச் சோதிக்கக் கிளம்பினார். ஆட்டோக் காரருக்குத் தொலைபேசியதில் தொலைபேசியை அவர் எடுக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு நம்ம ரங்க்ஸே வெளியே போய் ஆட்டோ பிடிக்கலாம் எனக் கிளம்பினார். எனக்குக் கொஞ்சம் கவலை தான்.ஆனால்சிறிது நேரத்தில் ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.

எனக்கு ஏறுவது தான்சிரமமாக இருந்தது. எப்படியோ கொஞ்சம் பாறைக்கருகே போய் நிறுத்திக் கொண்டு அதன் மேலேறி நானும் ஆட்டோவில் ஏறிக் கொண்டேன்.அவரும் ஏறினதும் ஆட்டோக்காரர் விபரங்களைக் கேட்டுக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றார். அங்கே போனால் அந்த ட்ராவல்ஸ்காரங்க பேருந்து இருக்கும் இடமோ, கிளம்பும் இடமோ தெரியவில்லை. அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துச் சிலரிடம் கேட்டுவிட்டுப் பின்னர் முதல்நாள் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொலைபேசிக் கேட்டதில் அவர் சொன்னது எங்களுக்குப் புரியவில்லை. ஆட்டோக்காரரிடமே கொடுத்தோம்.  அவர் கேட்டுவிட்டு எங்களை ஆட்டோவிலேயே அமரச் சொல்லி இன்னும் சிறிது தூரம் சென்று நெடுஞ்சாலைக்கு வந்து அங்கிருந்த ஓர் இன்ஸ்டிட்யூட் எதிரே வந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கருகே எங்களை இறக்கி விட்டார். பேருந்து இங்கே தான் வரும் எனவும், இன்னும் அரை மணியில் வந்துவிடும் எனவும் சொல்லிவிட்டுக் காசை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார். அவ்வளவு அதிகாலையில் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு அவர் இறக்கிவிட்டுக் கிளம்பினாலும் 50 ரூ தான் வாங்கிக் கொண்டார்.

அங்கே இருந்த நடைமேடையில் கீழே காலைத் தொங்கப் போட்டு உட்காரும்படி இருந்ததால் அங்கேயே நான் உட்கார்ந்து விட்டேன். இவரோ நிலைகொள்ளாமல் அலைந்தார். எதிரே ஒரு தேநீர்க்கடை திறக்க என்னிடம் தேநீர் வேண்டுமா எனக் கேட்டார். நான் எதுவுமே வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். அவர் மட்டும் போய்த் தேநீர் குடித்துவிட்டுப் பேருந்தைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்தார். இங்கே தான் தினமும் அந்தப் பேருந்து நிற்கும் எனவும் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடும் எனவும் சொன்னார்கள் என்றார். ஆனாலும் எனக்குள் அங்கே வேறே யாருமே இல்லாததால் பேருந்து கிளம்பும் இடம்,எத்தனை பேர் இருப்பார்கள் என்னும் சந்தேகங்கள் எல்லாம் தோன்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஓர் கல்லூரி மாணவர் தன் தந்தையுடன் வந்தார். ஹோலியை ஒட்டிய விடுமுறைக்கு வந்துவிட்டுப் புனே கல்லூரிக்குத் திரும்பச் செல்வதாகத் தெரிந்தது. அதன் பின்னர் ஒருத்தர் வந்தார். அவர் அந்தப் பேருந்தில் வரும் பால் பாக்கெட்டுகளை எடுத்துப் போக வந்திருந்தார். பேருந்து கிளம்பும் இடத்தின் அருகேயே பால் பண்ணை இருப்பதாகவும். அங்கிருந்து வரும் பாலை இங்கே இறக்கித் தான் வியாபாரம் செய்வதாகவும் இது தான் நிரந்தரத் தொழில் எனவும் சொன்னார். அதன் பின்னரும் இன்னும் 2,3 நபர்கள் வந்தனர்.

ஒரு வழியாகப் பேருந்தும் வந்தது. வோல்வோ பேருந்து தான் ஆனாலும் ஏசி இல்லை. கதவு திறந்ததும் முதலில் அவர் பாலை இறக்கிக் கொள்ளட்டும் என்றனர். அதன் பின்னர் நாங்கள் ஏறினோம். எங்கள் இருவருக்கும் ஓட்டுநரின் இருக்கைக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்த இருவரை இடம் மாறி உட்காரச் சொல்லிவிட்டு அங்கே அமர வைத்தார் அதன் பின்னர் அனைவரும் ஏறி அமர்ந்ததும் பேருந்து கிளம்பியது. நல்ல நீண்ட நெடுஞ்சாலை. அருமையாகப் போட்டிருந்தனர். வண்டி வழுக்கிக் கொண்டு போயிற்று. நடுவில் எட்டரை மணி சுமாருக்கு ஓர் சுமாரான ஓட்டலில் தேநீருக்கு நிறுத்தினார்கள். நான் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். கழிவறை மட்டும் பயன்படுத்திவிட்டுத் திரும்பினேன். அங்கே ஒரே தண்ணீர் மயம்! வழுக்கல். ரொம்பக் கவனமாகப் போக வேண்டி இருந்தது. அதன் பின்னர் ஒன்றரை மணி நேரத்தில் புனே வந்து விட்டது. நம்மவருக்குத் தான் புனே தெரியுமே. இறங்க வேண்டிய இடம் வந்ததும் சொன்னார். சாமான்களை இறக்கிக் கொடுத்தார்கள். நாங்களும் இறங்கினோம். சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளாம். ஒரே கோலாகலம் எங்கு பார்த்தாலும்! எனக்கு நம்ம ஊர் கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும், மகேந்திர பல்லவனும், நரசிம்ம பல்லவனும் நினைவில் வந்தார்கள். அவர்கள் பிறந்த நாளெல்லாம் எப்போ வரும்? அதெல்லாம் வேண்டாம்! குறைந்த பட்சமாக நம்மை அந்நியப் படையெடுப்பில் இருந்து காப்பாற்றி ஶ்ரீரங்கம் ரங்கநாதரை மீட்டுக் கொடுத்த கம்பண்ண  உடையாரின் பிறந்த தினம்? ம்ஹூம்! சுத்தம் நமக்கு அதெல்லாம் தெரியவே தெரியாது!

கீழே இறங்கினதுமே வந்த ஓர் ஆட்டோக்காரரிடம் நாங்க போக வேண்டிய இடமும் ஓட்டல் பெயரும் சொன்னோம். அந்தப் பெயரிலேயே இரண்டு ஓட்டல் இருந்ததால் கேட்டுக் கொண்டு சரியான ஓட்டலில் போய் நிறுத்தினார். நாங்க இறங்கும்போதே அங்கிருந்த மானேஜர் (முன்னர் இருந்த அதே மானேஜர் தான்! இவருக்கு மட்டும் மாற்று ஆளே வரவே இல்லை!) ஊழியர்களைக் கூப்பிட்டு நாங்க வந்துவிட்டதைச் சொல்லிவிட்டு அறையைச் சுத்தம் செய்யச் சொல்லி மராத்தியில் சொன்னார். ஏற்கெனவே சொல்லி இருப்பார் போல! அந்தப் பையர்கள் நாங்க மாலை தான் வரப்போறோம்னு போக்குக் காட்டி இருக்காங்க! உடனடியாகத் தங்க இடம் வேண்டுமெனில் மாடியில் முதல் தளம் போகலாம் என்றார் மானேஜர். லிஃப்ட் இருந்தது தான். ஆனாலும் வேண்டாம்னு சொல்லிட்டோம். பத்து நிமிஷத்தில் அறை தயாரானதும் அறைக்குப் போகும்போதே நல்ல காஃபியாக இரண்டு வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனோம். 

பத்து நிமிஷத்தில் பாட் காஃபி வந்தது. எத்தனை வருடங்கள்! பாட்காஃபி, பாட்தேநீர் அருந்தி! என நினைத்துக் கொண்டேன். முன்னெல்லாம் பயணங்களில் முதல்வகுப்பில் ஆர்டர் எடுக்கும்போதே பாட் காஃபியா எனக் கேட்டுக் கொண்டு கொண்டு வருவார்கள். தேநீரும் அப்படித்தான். குறைந்தது நான்கு நபர்கள் தாராளமாய்க் குடிக்கும்படி இருக்கும் அந்தக் காஃபியும், தேநீரும். சுவையும் நன்றாக இருக்கும்.  கடைசியாய் இமாலயப் பயணம் செய்தபோது திருக்கயிலைப் பயணத்தின் முடிவில் நேபாள் ஓட்டலில் குடித்தது.  அதன் பின்னர் ஷிர்டியில் உட்லண்ட்ஸில்  குடித்தோமோ? நினைவில் இல்லை.  ஆவலுடன் காஃபியை எடுத்துக் கொண்டு குடித்தோம்! முதல்நாள் இரவில் பெயருக்குச் சாப்பிட்டது தானே! காலையிலிருந்து ஒரு மடக்குத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அந்தக் காஃபி தேவாமிர்தமாய் இறங்கிற்று. கொஞ்சம் மிச்சம் இருந்தது. குளித்துவிட்டு வந்து குடிக்கலாம் எனவைத்துவிட்டு ஒவ்வொருவராய்ப் போய்க் குளித்துவிட்டு வந்தோம். மிச்சம் காஃபியையும் குடித்தோம். ஓட்டல் மானேஜரிடம் சாப்பாடு சாப்பிட எங்கே செல்லலாம் எனக் கேட்டோம். இருபது வருஷங்கள் முன்னால் உள்ள ஓட்டல்கள் தான் நம்மவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவற்றில் சில ராஸ்தாப்பேட்டையில் இன்னமும் இருக்கு எனப் பின்னர் அறிந்தோம்.ஆனாலும் முதலில் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. பின்னர் மானேஜர் சொன்ன ஓட்டலுக்குச் சென்றோம்.தென்னிந்திய உணவும் உண்டு எனச்சொல்லி இருந்தார்.  ஆனால் அங்கே தென்னிந்திய உணவு இல்லை.

வேறே வழி இல்லாமல் சப்பாத்தி, சப்ஜி காரம் இல்லாமல் சொன்னோம். காரம் போட வேண்டாம் என்றதும் அந்த சமையல்காரர் மிளகாய்ப் பொடி போடாமல் பச்சை மிளகாயிலேயே தாளித்திருந்தார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பின்னர் வழக்கம்போல் சாஸ் எனப்படும் மசாலா மோர் அருந்திவிட்டுக் கிளம்பினோம். இந்த ஓட்டலில் கை கழுவ ஃபிங்கர் பௌல்ஸ் கொடுத்தார்கள்! எங்களுக்குத் தானா, எல்லோருக்குமா தெரியலை! ஓட்டலுக்கு வந்து ஓய்வு எடுத்தோம். ஓட்டல் மானேஜர் ஓட்டல் மூலமாகவே உணவு வரவழைத்துக் கொடுப்பதாகவும் சொல்லி இருந்தார். அநேகமாக அது ஸ்விகி என நினைக்கிறேன். ஆகவே மாலை காஃபி வரவழைத்துச் சாப்பிட்டதும் வெளியே எங்கும் போகாமல் அறையிலேயே தங்கி இருக்கத் தீர்மானித்து ஓட்டல் ஊழியரிடம் தென்னிந்திய இட்லி, தோசை கிடைக்குமா என விசாரித்ததற்கு அவர் தங்களிடம் இருந்த பட்டியலைப் பார்த்துவிட்டுத் தயிர்சாதம் தான் கிடைக்கும் என்றும் 125 ரூ ஒருத்தருக்கு என்றும் சொன்னார். சரினு அதையே வரவழைத்துத் தரச் சொன்னோம். ஏழரை மணிக்கு வரும் என்றார்கள்.

ஏழரைக்குத் தயிர்சாதம் வந்தது. பெரிய பொட்டலம்! ஒருத்தரால் சாப்பிட முடியாது போல் இருந்தது. உள்ளே மிகப் பெரிய மோர்மிளகாய்! குடமிளகாயையே மோர் மிளகாயாகப் போட்டு அதையே வறுத்து வைத்திருக்கின்றனர். ஊறுகாயும் இருந்தது. முடிந்தவரை சாப்பிட்டோம். சாதம் நன்றாகவே இருந்தது. மறுநாள் விமானத்தில் ஊருக்குக் கிளம்பணும். ஆகவே பெட்டி, படுக்கையைத் தயார் செய்து கொண்டோம். காலை எழுந்ததும் குளித்துத் தயாராகி இட்லி, தோசை கிடைக்குமிடம் தேடிச் சென்றோம். அந்த நேரம் ஒரே ஒரு ஓட்டல் திறந்திருந்தது. அன்று ஞாயிறு வேறே! கன்னடக்காரர்களால் நடத்தப்படும் ஓட்டல்! தோசையும், இட்லியும் சாப்பிட்டோம். மதியம் பனிரண்டு மணி இருபது நிமிடங்களுக்கு விமானம்.சென்னை போகும்போது இரண்டு மணி ஆகிவிடும். அங்கே என்ன கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். ஓட்டலில் இருந்து மறுபடி லாட்ஜுக்குத் திரும்பிய ஆட்டோவையே விமான நிலையம் வரை கொண்டுவிடப் பேசிக் கொண்டோம். சரியாகப் பதினோரு மணிக்கு வருவதாக அவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

அதன்படி அவர் வந்ததும் விமானநிலையம் போய்ச் சேர்ந்தோம். தொகை சரியாகவே வாங்கிக் கொண்டார். விமானம் கொஞ்சம் தாமதம் எனச் செய்தி மொபைலுக்கு வந்திருந்தது. ஆகவே பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு நுழைவாயிலுக்குச் சென்று காத்திருந்தோம். அங்கே தேநீர் 40 ரூபாய்க்கும் காஃபி 50 ரூபாய்க்கும் சமோசா 30 ரூபாய்க்கும் விற்பதாகப் போட்டிருந்தார்கள்.வாங்கிக் கொள்ளலாம் எனில் அது சரியாக வருமா என்னும் சந்தேகம். வேண்டாம்னு விட்டோம். எவ்வளவு பெரிய தவறு என்பது சென்னை போய்த் தான் தெரிந்தது. மதியம் விமானத்தில் ஏறிச் சென்னை வந்ததும் மறுபடி திருச்சி போக வேண்டி நாங்க செல்லவேண்டிய வாயிலில் உள்ள பாதுகாப்புச் சோதனைக்குச் சென்று அதை முடித்துக் கொண்டோம். திருச்சி விமானமும் ஏழு மணிக்குத் தான் கிளம்பும் என்றார்கள். இன்னமும் மூன்று மணி நேரம் இருக்கே, பசி தாங்கணுமே எனச் சுற்றும் முற்றும் பார்த்தோம். நாங்கள் இருந்த பனிரண்டாம் நுழைவாயிலுக்கருகே இருந்த ஓர் ரெஸ்டாரன்டில் ப்ரெட் இருக்கவே அதைப் போய்ப் பார்த்தோம். அது ப்ரெட் பிட்சாவாம். 125 ரூ ஒரு பீஸ் என்றார்.குடிக்க என்ன இருக்குனு பார்த்தால் காஃபி விலையில் காஃபி எஸ்டேட்டே வாங்கலாம்னு நினைச்சோம். பின்னர் அவர் ரொம்பவே பிகு செய்துவிட்டு எங்களுக்கு டிப் டீ இருக்குனு சொன்னார். அதை வாங்கிக்கலாம்னு வாங்கிக் கொண்டால்! பகவானெ! அதுவும் ஒருத்தருக்கு 110 ரூபாய்! ஙே!!!!!!!!!!!!!!!!!!! வேறே வழி இல்லை. இருவர் கையிலும் தேநீர்த்தம்பளர். வாங்கிய அந்தப் பிட்சா ப்ரெட்சகிக்கவில்லை. தூக்கிப் போட்டுவிட்டுத் தேநீரைக் குடித்தோம்.

இன்டிகோ க்கான பட முடிவு

ஏழு மணிக்கு விமானம் கிளம்பியது. ஏழரைக்குத் திருச்சி வந்து எட்டு மணிக்கு வெளியே வந்தால் அப்போப் பார்த்து என்னோட மொபைலில் ஜியோவும் அவுட்! பிஎஸ் என் எல்லும் அவுட். சரினு ரங்க்ஸோட மொபைல் மூலம் ரெட் டாக்சியைத் தொடர்பு கொள்ள நினைச்சால் சுத்தம்! மொபைலில் சார்ஜே இல்லை! அப்புறமா அங்கிருந்த வண்டி ஓட்டுநர்களிடம் பெரிய பேரங்கள் செய்து அறுநூறு ரூபாய்க்கு ஶ்ரீரங்கம் எங்க வீடு வந்து சேர்ந்தோம். ரெட் டாக்சியில் வந்தால் 200 ரூபாய்க்குள் தான்! நேரம்!