எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 25, 2015

இறைவன் என்ன நினைக்கிறான்!

 ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.


அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.


அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.
இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.


இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”


இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.
இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.


“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது. ஆனால் நீ தேவையில்லாமல் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாய்!  உன் எண்ணம் என்ன என்று புரிந்தும், நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நானும் பேசாமல் இருந்து விட்டேன். ” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.
————————————————-
நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது..
************************************************************************************

இது எனக்கு மின் மடலில் வந்த செய்தி. ஓரிரு வாக்கியங்களைச் சேர்த்துப் பிழைகளை நீக்கி வெளியிடுகிறேன்.

Monday, June 22, 2015

ரங்கு தரிசனம் கிடைச்சது!

ஒரு வழியா இன்னிக்குப் போய் ரங்குவைப் பார்த்துட்டேன். நேத்துத் தான் தினசரியில் அடுத்த வாரம் பவித்ரோத்சவம் எனப் போட்டிருந்தது. அதன் பின் ரங்குவுக்குத் தைலக்காப்புச் சாத்துவாங்க. அப்புறமா திருவடி தரிசனம் கிடைக்காது.  ஆகவே இன்னிக்குப் போய்ப் பார்த்துடலாம்னு காலம்பரத் தான் முடிவு செய்தோம். சாப்பிட்டு விட்டுக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு (நான் வழக்கம் போல் கணினியில்) பின் 3 மணி போலக் கிளம்பினோம். ரங்கா கோபுரம் வழியாகச் செல்கையிலேயே "அம்மாவுக்கு வீல் சேர் வேணுமா?"னு ஊழியர்கள் கேட்க,( போன முறையும் கேட்டாங்க)அவ்வளவு மோசமாவா நடக்கிறோம்னு நினைச்சுட்டே வேண்டாம்னு மறுத்தேன்.

பின்னர் உள்ளே போகும்போதே கூட்டம் குறைவுனு புரிஞ்சது. இலவச தரிசனத்துக்கு மட்டும் கூட்டம் நின்றது. 50 ரூ, 250 ரூக்கு ஆட்களே இல்லை. 50 ரூ டிக்கெட் எடுத்துக் கொண்டு சென்றோம். பத்தே நிமிடங்களில் தரிசனம் ஆகிவிட்டது. உள்ளே நுழையும்போதே கோயில் ஊழியர் ஒருவர் பிடித்து நகர்த்த, "நான் இப்போத் தான் வரேன், தள்ளாதீங்க"னு நான் சொல்ல, உள்ளே நின்றிருந்த பட்டாசாரியார், "விழுந்துடப் போறாங்கப்பா!" எனக் கடிய என்னை தரிசனம் செய்ய அனுமதித்தார். நம்பெருமாளை ஒரு அவசரப் பார்வை பார்த்துக் கொண்டேன். அங்கே இன்னொரு பக்கம் பெரிய ரங்குவின் காலடியில் நின்ற யாகபேரரைப் பார்த்தாயா என நம்ம ரங்க்ஸ் கேட்க அவரையும் பார்த்துக் கொண்டேன். இன்னிக்குத் தான் இரண்டு பேர் முகத்திலும் உள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது.

நம்பெருமாளுக்குக் குறும்புச் சிரிப்பு. யாகபேரருக்குக் கொஞ்சம் கவலை கலந்த சிரிப்பு. அப்போதைய நிலைமை அப்படி. இவரைப் பிரதிஷ்டை செய்யும்போதே இவருக்குத் தெரிஞ்சிருக்கணும். நாம் தாற்காலிகம் தான் என்பது! அதோடு இல்லாமல் அப்போது மக்கள் மாற்றி மாற்றி வந்த ஆட்சியில் இவரும் படாத பாடு பட்டிருக்கார்.  இடமும் புதுசு, அநேகமா நம்பெருமாள் வந்தப்புறமா இவருக்கு "அப்பாடா!" என்று  இருந்திருக்கும்போல! அந்த நிம்மதி உணர்வும் முகத்தில் தெரியுது.  சுத்திட்டே இருந்ததாலே நம்பெருமாள் இப்போவும் அயராமல் வீதி உலாக் கிளம்பிடறார். இவராலே அது முடியாது. அதோடு என்ன வேணும் உனக்கு னு நம்பெருமாளும் நம்மைக் கேட்பார்; நாமும் உரிமையாக அவரிடம் என்னப்பா இது! னு சொல்ல முடியும். அதே யாகபேரரிடம் ஒரு விவரிக்க முடியாத மரியாதை தோணுது. கொஞ்சம் தீவிர சிந்தனையில் யாகபேரர் காட்சி அளிக்க நம்பெருமாள் எல்லாத்தையும் விளையாட்டாப் பார்க்கிறார்.

இங்கே தரிசனம் முடிஞ்சி தீர்த்தமும் வாங்கிக் கொண்டு தாயாரையும் பார்த்தோம். தாயாரை அதிக நேரம் பார்க்க விடலை! பின்னர் அங்கிருந்து கிளம்பி வழியில் வீட்டுக்குச் சில, பல சாமான்களை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். தங்க விமான தரிசனத்தின் போது கைபேசியில் படம் எடுக்க முயன்றேன். கீழே இருந்து கோயில் ஊழியப் பெண்மணி படம் எடுக்காதே எனச் சத்தம் போட அதிர்ச்சியில் கை கீழே இறங்க சுமாராகப் படம் வந்திருக்கு! பார்க்கலாம்! இன்னொரு முறை போனால் எடுக்க முடியுமானு! மற்றபடி இன்னிக்கு வேறே எந்த சந்நிதிக்கும் போகலை. இந்தக் கோயிலின் சந்நிதிகள் எல்லாத்தையும் பார்க்கணும்னா 2,3 நாட்கள் வேணும்.

Sunday, June 21, 2015

கல்லுரலை மீட்ட சுந்தர பாண்டியத் தமிழச்சி!

இம்மாதம் பத்தாம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை சென்னை வாசம். ஒரு உபநயனம், ஒரு சீமந்தம் இரண்டும் சரியாக ஒரு வார இடைவெளியில் வர, எங்களுடைய மருத்துவப் பரிசோதனைக்கான காலமும் ஆகி இருக்க எல்லாவற்றையும் உத்தேசித்துக் கொண்டு சென்னை கிளம்பினோம்.  விடியற்காலையில் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். இறங்கிட்டோம். நல்லவேளையாகத் தம்பியை அந்த அர்த்தராத்திரியில் (அவருக்கு அர்த்தராத்திரி தான்; தூங்க ஆரம்பிக்கவே இரவு ஒரு மணிக்கு மேல் ஆகும்.) அங்கே வரச் சொல்லி இருந்தோம். நல்ல சுமைதூக்கியும் கிடைத்தார். ஆனால் ஆட்டோக்காரர்கள் தான் சரிப்பட்டு வரவில்லை. கடைசியில் ஒருத்தர் கிடைத்தார். வீடு போய்ச் சேர்ந்தோம். அந்த அதிகாலைக் காற்றின் மணத்தை நுகர முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்ற குப்பைகள் மலையாகக் கிடக்க, தெருக்கள் எல்லாம் மேடு, பள்ளங்கள்! :(

எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டும் சென்னை நரகத்தின் (எ.பி.இல்லை) குப்பைகள் கலாசாரம் முற்றிலும் மாறவில்லை.  அதே போல் ஆட்டோக்காரர்களும் மாறவில்லை! :( மீட்டர் என்ற ஒரு கருவி இருப்பதாகவே தெரியவில்லை யாருமே மீட்டர் போடுவதில்லை! சுத்தம்! நாங்க மாம்பலத்திலிருந்து தேனாம்பேட்டை சென்று விட்டு அங்கிருந்து  மயிலையில் இருக்கும் வித்யாபவன் செல்லச் சம்மதித்த ஆட்டோக்களை விட வர மறுத்தவர்களே அதிகம். ஒருத்தர் மீட்டர் போட்டு வருவதாகச் சொல்ல சந்தோஷத்துடன் அந்த ஆட்டோவில் சென்றால், அவர் எங்களுக்கு மயிலை முழுக்கச் சுற்றிக் காட்டிவிட்டுக் கடைசியில்  நான் ரொம்பச் சத்தம் போட ஆரம்பித்ததும்  மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயில் வழியாக (!!!!!!!!!!!!!!!!) வித்யாபவன் இருக்கும் கீழ மாட வீதிக்குப் போனார். மீட்டர் 90 ரூபாய் காட்டியது. மயக்கமே வந்துவிட்டது.  லஸ் சர்ச் ரோடிலிருந்து வலப்பக்கம் திரும்புவதற்கு பதிலாக இடப்பக்கம் திரும்பி சுத்தி வளைத்துக்கொண்டு! போதும்டா சாமினு ஆயிடுச்சு!

ஆட்டோ அனுப்பிய ஶ்ரீராம்! 

ஹிஹிஹி! ஶ்ரீராம் ஆட்டோவையே அனுப்பிட்டார். என்ன பார்க்கறீங்க? நீங்க நினைக்கிறாப்போல் ஒண்ணும் இல்லைங்க! அவங்க வீட்டைக் கண்டு பிடிச்சுப் போகக் கஷ்டமா இருக்கும் என்பதால் அவங்க குடும்ப ஆட்டோவை என் தம்பி வீட்டுக்கு அனுப்பிட்டார். குடும்பப் பாட்டுப் பாடித் தான் கண்டு பிடிக்கணுமோனு நினைச்சால் நல்லவேளையாக அந்த ஆட்டோக்காரருக்கு அதெல்லாம் தெரியலை! மாம்பலத்திலிருந்து ஶ்ரீராம் வீடு செல்ல 100 ரூபாய் தான் வாங்கிக் கொண்டார். சென்ற ஞாயிறு அன்று ஶ்ரீராம் வீட்டிலே தான் சாப்பாடு. ஶ்ரீராமின் மாமாவும் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்களில் ஒருவருமான  கே.ஜி. சுப்ரமணியம் அவர்களும் இருந்தார். ஒரு சின்ன பதிவர் சந்திப்பாக ஆகி இருக்கணும். ஏனெனில் பெண்களூரில் இருந்து கௌதமன் வர இருந்தார்; அவரால் வர முடியவில்லை. ரஞ்சனி நாராயணன் சென்னையிலேயே இருந்தும் அவர் வேலை மும்முரத்தினால் அவராலும் வர முடியவில்லை.

ஶ்ரீராம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர் குடும்ப ஆட்டோவிலேயே அம்பத்தூர் சென்றோம். கிளம்பும்போது எனக்கு வெற்றிலை, பாக்குக் கொடுத்த ஶ்ரீராமின் பாஸ் நம்ம ரங்க்ஸுக்கு ஒரு டப்பர்வேர் வாட்டர் பாட்டில் பரிசளிக்க ரங்க்ஸ் மிரண்டார். மறுபடி ஸ்கூல் போகச் சொல்றாங்களோனு அவருக்கு சந்தேகம். அப்புறமா அவங்களே இதைப் பயணத்தில் பயன்படுத்திக்கலாம்னு யோசனையும் கொடுக்க ரங்க்ஸ் அப்பாடா! :) அம்பத்தூர் சென்றதும் அண்ணா வீட்டில் இருந்து உறவினர்களைச் சென்று பார்த்துவிட்டு நான் திரும்ப அண்ணா வீட்டுக்கே வந்து விட ரங்க்ஸ் மட்டும் எங்க வீட்டுக்குச் சென்றார். அங்கே குடி இருந்தவங்க காலி செய்ததால் தான் இப்போது சென்னைப்பயணமே ஏற்படுத்திக் கொண்டோம். வீடு ரொம்பவே மோசமாக இருந்திருக்கிறது. எனக்கும் நேரில் சென்று பார்த்துப் படங்கள் எடுத்து வர ஆசை தான். ஆனால் குடி இருந்தவங்களைக் குற்றம் சொல்லும்படி ஆயிடும் என்பதால் படங்களே எடுக்கவில்லை.

திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்களும் ரங்க்ஸுக்கு வீடு சுத்தம் செய்யும் வேலைதான். தூசி மண்டலம் கருமேகங்கள் போல் சூழ்ந்து கொண்டதால் எனக்கு அங்கே செல்லத் தடா! அப்படியும் இப்போ இரண்டு நாட்களாகத் தொண்டை வலி, ஜலதோஷம், லேசாக ஜுரம்! ஓரளவு சுத்தம் செய்தானதும் குளியலறைக்கு மூன்று நாட்களாக ஆசிட் போட்டுச் சுத்தம் செய்தும் சரியாகவில்லை என்பதால் நான் கடைக்குப் போய் வேறே ஏதேனும் கறை நீக்கும் திரவம் வாங்கி வரவா என ரங்க்ஸுக்குத் தொலைபேசினால் உடனே அங்கே வரும்படி எனக்கு உத்தரவு. சென்றால் எங்க கல்லுரல், அம்மியை கிழக்குப் பக்கப் போர்ஷனில் குடி இருந்தவங்க அவங்களோடதுனு சொல்லி இருக்காங்க. நான் நேரில் போய் அடையாளங்களைக் காட்டி, (அவற்றைப் புதைத்திருந்தோம். சிமென்டில் இருந்து எடுத்த அடையாளங்களும், எங்களால் சிவப்புக் குறி போட்ட அடையாளமும் இருக்கும்.) அவற்றைக் காட்டிக் கல்லுரல், அம்மியைக் குழவிகளோடு மீட்டேன்.
கல்லுரல், அம்மி க்கான பட முடிவுகல்லுரல், அம்மி க்கான பட முடிவு


படங்கள் நன்றி கூகிளாண்டவர்
அவற்றைக் கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டுவிட்டு எங்களைக் காணாமல் வாடிக் கொண்டிருந்த தென்னை மரங்களையும், காக்கை, குயில், அணில், தவிட்டுக்குருவிகளையும் விசாரித்துவிட்டு, மைனா எங்கேனு கேட்டு விட்டு உட்கார்ந்தேன். மின் விசிறியே இல்லாமல் அப்படி ஒரு சுகமான காற்று. 32 வருஷம் ஆகிறதே இந்த வீட்டுக்கு. இது வெறும் வீடா? உணர்ச்சிக்கலவை அல்லவோ! ராமர் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் சாமி அலமாரியும், சாமான்கள் இல்லாமல் இருந்த சமையலறையும் கண்ணில் நீரை வரவழைத்தன. ஆங்காங்கே தேங்காய்கள் பறிக்கப்படாமல் கீழே விழுந்து தானாகவே முளைத்துக் கொண்டிருந்தன.  நாங்க நட்டிருந்த ஏலக்கி வாழைமரத்துக்குப் பதிலாக வேறொரு வாழை மரம் இருந்தது. மாமரம் ஒன்று புதிதாக வருகிறது. பழைய மாமரங்களைத் தான் பக்கத்தில் அடுக்குமாடி கட்டும்போது சிமென்ட் கலவையைப் போட்டுச் சாகடித்து விட்டார்களே! :)

அம்பத்தூரின் தெருக்கள் எல்லாம் சும்மா ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வென்று வழுக்கிக் கொண்டு தான் போகிறது. குப்பைகளும் காணவில்லை, எங்க வீட்டுப் பகுதி தவிர. எங்க வீட்டுக்கு மேற்குப் பகுதில் இருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்காரங்க எதைக் குறித்தும் கவலைப் படாமல் கழிவு நீரையும் வெளியே விடுவதோடு அவங்க வீட்டில் மிஞ்சும் சாப்பாடுகள், கழிவுகள் எல்லாவற்றையும் எங்க பக்கம் எங்க சுற்றுச்சுவரை ஒட்டிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். தோட்டத்திலும் அவங்க போட்டிருந்த குப்பைகள். முன்னர் இருந்த நாய்களின் குட்டிகள் போல! சின்னச் சின்னதாக நாய்க்குட்டிகள்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் படுத்துக் கிடக்கின்றன. குலைக்கவில்லை. அடையாளம் தெரிந்தாற்போல் வாலை மட்டும் ஆட்டின.  எங்க வீட்டு வாசலில் கிழக்குப் பக்கமாக நிரந்தரமாக ஒரு க்வாலிஸ் வண்டி யாருடையதோ தெரியலை நிற்கிறது. நாம் ஏதானும் வண்டியில் வந்தால் இறங்கி நடந்து தான் போகணும். எல்லாவற்றையும் மௌனசாட்சியாகப் பார்த்துக் கொண்டு அடர்ந்து பரந்து விரிந்து நிற்கிறது வேப்பமரம். 

Friday, June 19, 2015

நரசிம்மா எழுதிய "பஞ்ச நாராயணக் கோட்டம்!"

"காலச்சக்கரம்" நரசிம்மாவின் "பஞ்சநாராயணக்கோட்டம்" புத்தம்புதிய வெளியீடு! இன்னும் அதிகம் விளம்பரம் ஆகவில்லை. இப்போச் சென்னை வந்ததில் தம்பி வாசக சாலையில் எடுத்து வந்து கொடுத்ததன் மூலம் படிக்கக் கிடைத்தது. இதுவும் ஒரு சரித்திர நாவலே. ஹொய்சாளர்கள் குறித்தது. அதிலும் முற்றிலும் புதிய தகவல்களைக்கொடுக்கிறார் நரசிம்மா.  கர்நாடகப் பிரதேசத்தில் ஹொய்சாளர்கள் ஆட்சிசெய்தபோது நடந்ததாகச் சொல்கிறார். அந்தக் காலகட்டதில் ஶ்ரீராமாநுஜரும் வாழ்ந்திருக்கிறார். திரு அரங்கத்தில் இருந்த ராமாநுஜரைக் குலோத்துங்கன் தொந்திரவு பொறுக்க முடியாமல் அவரின் சீடர்கள் அவனுக்குத் தெரியாமல்  கர்நாடகம் அனுப்பி வைக்கின்றனர். இந்த நாவலின் நிகழ்வுகள் கிட்டத்தட்ட அந்தச் சமயங்களில் நடப்பவையே! அப்போது ஹொய்சாள மன்னனாக இருந்தவன் பிட்டி தேவன் என்னும் சமண மதத்தைச் சேர்ந்த மன்னன். (இவனுடைய பெயர் பின்னாட்களில் இவன் வைணவத்துக்கு மாறியதும், ஶ்ரீராமாநுஜரால் விஷ்ணுவர்த்தனன் என மாற்றப்பட்டது. இவன் அரசாண்டபோது நிகழ்ந்த சம்பவங்களே இந்தக் கதையில் சொல்லப்படுகின்றன.

முக்கியமாக இந்த அரசன் கர்நாடகாவில் எழுப்பியதாகச் சொல்லப்படும் ஐந்து விஷ்ணு கோயில்களுமே இங்கே பஞ்ச நாராயணக் கோட்டமாகச் சொல்லப்படுகிறது. அவை தொண்டனூரில் நம்பி நாராயணர் கோயில் கொண்டிருக்கும் நம்பி நாராயணக் கோட்டம், தலக்காடில் கோயில் கொண்டிருக்கும் கீர்த்தி நாராயணன், மேல் கோட்டையில் கோயில் கொண்டிருக்கும் செல்வப் பிள்ளையான செல்வ நாராயணன், வேளாபுரி என அப்போது அழைக்கப்பட்ட பேலூரில் உள்ள விஜய நாராயணன், மற்றும் வட கர்நாடகாவின் கதக் நகரில் கட்டப்பட்ட வீர நாராயணன் ஆகிய ஐந்து நாராயணர் கோயிலும் குறித்து இங்கே சொல்லப்படுகிறதுலொவ்வொரு கோயிலும் கட்டும்போது நடந்த நிகழ்வுகள்! அவற்றில் பங்கு பெற்றவர்கள்! அவற்றிற்குப் பின்னர் தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகரமான சம்பவங்கள்! எத்தனை சதிகள்! எத்தனை பேரின்  வாழ்வு ஒன்றோடு ஒன்று எப்படி எல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கிறது! எவ்வளவு மர்மங்கள்? இடையில் வந்து புகுந்து கொள்ளும் பிரம்ம ராக்ஷஸியின் பழிவாங்குதல்! மன்னனின் முதல் மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தையைக் கோரமாகப் பழிவாங்கி ஒன்றுமில்லாமல் செய்யும் இளைய  ராணியின் கொடூரம்! இவ்வளவுக்கும் பின்னர் கோயில்கள் எழும்பும் விதம். ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் வழிபாடுகள் நடத்தவிடாமல் செய்யப்பட்ட சதிவலை! என ஒவ்வொன்றையும் விவரிக்கிறார் ஆசிரியர். கடைசி வரை விறுவிறுப்பாகவே போகிறது.

மனதை உறுத்தும் பகுதி என்னவெனில் கதை ஆரம்பிக்கும்முன்னரே முன்னுரையாகச் சொல்லப்பட்ட தன்னுரையில் காலச்சக்கரம் நரசிம்மா, தேவையில்லாமல் பிரபலமான சரித்திர நாவலாசிரியரை மறைமுகமாகச் சாடி இருக்கிறார். "ச்ருங்கார ரசத்தில் தமிழ்ச் சொற்களைத் தோய்த்தெடுத்து, சரித்திர சம்பவங்கள் சிலவற்றை அவற்றுடன் கோர்த்து நான் ஒரு சரித்திர நாவலாசிரியர் என்று கூறிக் கொள்பவர்களின் பட்டியலில் சேர விரும்பவில்லை." என்கிறார். அந்தக் காலத்துக்கு அது தேவை! இப்போதைய காலத்துக்கு இது சரி!ஆகவே இந்த ஒப்புவமை எதுக்கு? அதுவும் உயிருடன் இல்லாத ஒருவரிடம்? இது நிச்சயம் தவிர்க்கவேண்டிய ஒன்று. அடுத்துக் கதையின் நிகழ்வுகளிலும் சில நெருடல்கள். அவற்றில் முக்கியமானது :


 சிற்பி ஜெக்கன்னா சிற்ப வேலை தொடங்குகையில் முதல் முதல் விநாயகரைச் சிலையாக வடிக்கத் தான் கல் கொண்டு வருகிறார். ஆனால் வைணவரான தாசரதி விநாயகரை வடிக்கக் கூடாது என்கிறார். இது கொஞ்சம் மனதை நெருடுகிறது. இதைத் தவிர்த்திருந்தால் கதையின் சுவாரசியம் குறைந்திருக்காது. அதே போல் சிவாலயங்களில் விஷ்ணுவை இழிவு செய்யும் வகையில் சிற்பங்கள் இருக்கும் என்றும் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்கிறார். இதுவும் தேவை இல்லை. ஏனெனில் நரசிம்மா சிவன் கோயிலுக்குப் போனாரோ போகவே இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாங்க நிறைய  சிவன் கோயில்களுக்குச் செல்கிறோமே. எல்லா சிவன் கோயிலிலும் சிவனுக்குப் பின்னர் அவரோடு இணைந்தவர் விஷ்ணு என்று சொல்லும்படி விஷ்ணுவின் சிற்பம் தான் இருக்கும் (கோஷ்டத்தில்) அதை இழிவு என எப்படிச் சொல்ல முடியும்? அதே போல் எல்லா சிவன் கோயிலிலும் நுழையும்போது த்வாரபாலகர்கள் இருக்கும் வாயிலில் மேலே பார்த்தீர்கள் ஆனால் மகாலக்ஷ்மி இருப்பாள். மகாலக்ஷ்மிக்கு முக்கியத்துவம் கொடுக்காத சிவன் கோயிலே இல்லை. இதையும் அவர் தவிர்த்திருக்கலாம். வைணவர்கள் மறந்தும் புறம் தொழமாட்டார்கள் என்றாலும் அவர்கள் கதைகளிலோ, புராணங்களிலோ விஷ்ணுவோடு சேர்ந்து சங்கரன் எனப்படும் ஈசனும் இடம் பெற்றே தீருவார். அவங்க ரெண்டு பேரும் நான் உயர்வா, நீ உயர்வா எனச் சண்டை போட்டுக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. மனிதர்களான நாம் தான் போட்டுக்கிறோம். :)

 இம்மாதிரி ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் கதை நன்றாகவே இருக்கிறது. பேலூர், ஹளேபேடு, ஆகிய இடங்கள் சென்று தரிசிக்காததால் அந்தக் கோயில்களின் அருமை, பெருமை புரியவில்லை தான். அங்குள்ள சிற்பங்களைக் குறித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பெயர் பெற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில்கள் என்ற அளவில் தெரியும். ருசிகரமாகக் கதை சொல்லும் திறமை கைவரப் பெற்றிருக்கும் திரு நரசிம்மா இம்மாதிரி ஒன்றிரண்டு குறைகளைத் திருத்திக் கொண்டால் நல்லது. மொத்தத்தில் பஞ்ச நாராயணக் கோட்டம் அருமையான நாவல்

கிடைக்கும் இடம்

வானதி பதிப்பகம்,
சென்னை 17.
விலை 300ரூ


இதைச் சென்னையிலேயே அங்கே சென்றபோது சுரதா.காம் மூலமாக எழுதி வைத்துவிட்டேன். என்றாலும் ஒரு சில எழுத்துக்கள் அதிலே வராது. முக்கியமாக "ஹ" "ஷ" "ஸ" போன்றவை! ஆகவே திருத்த வேண்டியதைத் திருத்திச் சேர்க்கவேண்டியதைச் சேர்த்து இன்று வெளியிடுகிறேன்.  நிறையப் புத்தகங்கள் படித்தேன்.  

Monday, June 08, 2015

நொந்து நூடுல்ஸ் ஆன கதை!

top ramen க்கான பட முடிவுஇப்போச் சுடச் சுட எல்லா சானல்கள் மற்றும் தினசரிகளிலும் அதிகமாக விற்பனை ஆவது நூடுல்ஸ் விவகாரம் தான். யாரானும் மனசு வருந்தினால் நொந்து நூடுல்ஸாகிட்டேன்னு சொல்லிட்டிருந்தாங்க எல்லோரும். இப்போ நூடுல்ஸே நொந்து நூலாயிடுச்சு பாருங்க. இந்தத் திடீர் உணவைக் கண்டு பிடித்தது மோமோஃபுகு ஆன்டோ என்னும் ஜப்பான் காரர் தான். நிஸ்ஸின் ஃபுட்ஸ் என்னும் கம்பெனிக்காகக் கண்டு பிடிச்சிருக்கார். 1958 ஆம் வருடம் சிகின் ரமென் என்னும் பிராண்ட் பெயரில் வெளி வந்திருக்கிறது. இந்தியாவில் அப்போதெல்லாம் நூடுல்ஸ் இருந்ததாகத் தெரியவில்லை. 1971 ஆம் ஆண்டு இதே நிஸ்ஸின் கம்பெனியே கப் நூடுல்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. இதில் உள்ள முக்கியப்பொருட்கள் கோதுமை மாவு, பாம் எண்ணெய், உப்பு என்று சொல்லப்பட்டாலும் வாசனைக்கும் சுவை ஊட்டுவதற்காகவும், மோனோசோடியம் க்ளுடமேட், உப்போடு சேர்க்கிறார்கள். தாளிதம், சர்க்கரை போன்றவைகளும் இருக்கின்றன. ரமென் என்பது ஜப்பானில் கிடைக்கும் நூடுல்ஸ் சூப் என்கின்றனர். திடீர் உணவான நூடுல்ஸுக்குச் சுவை கூட்ட இது பயன்பட்டது. அமெரிக்காவின் அனைத்து நூடுல்ஸ் தயாரிப்புக்களுக்கும் இவை ஏற்றவையாக இருக்கின்றன/இருந்தன,.

ஆரம்பத்தில் இந்தியாவில் டாப் ரமென் நூடுல்ஸ் தான் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. இதற்கான விளம்பரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்க்கலாம். அதிக விளம்பரம் இருந்தது இல்லை. மேல் தட்டு வர்க்கத்தினரே வாங்குவார்கள் என்பதாக ஒரு எண்ணம் அனைவரிடமும் இருந்தது. விலையும் அதிகமாக இருக்கவே இது ஓர் ஆடம்பர உணவாகவே கருதப்பட்டது. பின்னர் பிரமசாரிகள், கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளின் அவசரத்  தேவைக்குப் பசியை ஆற்ற இது பயன்பட்டது. பின்னர் பெண்கள் அதிக அளவில் வேலைக்குப்போக ஆரம்பிக்கவும் இது குழந்தைகளின் அன்றாட அத்தியாவசிய உணவாக மாற விழித்துக் கொண்டன அனைத்துப் பெரிய கம்பெனிகளும்.

maggi noodles க்கான பட முடிவு


அவரவர் தயாரிப்பில் நூடுல்ஸை விதம் விதமாய்க் கொண்டு வந்தனர். இந்தியாவின் சுவைக்கு ஏற்ப மசாலாக்கள் சேர்த்து நூடுல்ஸ் வர ஆரம்பித்தது. அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கொழுப்பு,உப்பு உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவு  130 முதல் 600 மில்லி கிராம் என்றால் அதில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறதாகச் சொல்கின்றனர். கொழுப்பும் மிகுதி. நார்ச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை மிகக் குறைவு. ஆகவே இதைச் சாப்பிடுவதால் சுவை வேண்டுமானால் நன்றாக இருக்கலாமே தவிர, உடல் நலனுக்குக் கேடே விளைவிக்கும். நாங்க திருக்கயிலை யாத்திரை சென்ற போது ராயல் நேபால் ஏர்லைன்ஸில் காட்மாண்டுவில் இருந்து திரும்பி வரும் வழியில் மாலை உணவுக்கு இந்த நூடுல்ஸ் தான் கப் நூடுல்ஸ் கொடுத்தார்கள். நானும், ரங்க்ஸும் அப்படியே திருப்பிட்டோம்.

கோகா கோலா க்கான பட முடிவு

அதே போல கோகா கோலா, பெப்சி, தம்ஸ் அப், மிரிண்டா வகைகளும். எங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் இந்த வகை ஜூஸெல்லாம் வைப்பதே இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் வந்திருந்த தம்பி மனைவி கூட குளிர்சாதனப் பெட்டியில் என்ன ஜூஸ் இருக்குனு கேட்டாள். எங்க வீட்டில் எதுவுமே வைப்பதில்லை. காலியாகவே இருக்கும்..

பெப்சி க்கான பட முடிவு    மிரிண்டா க்கான பட முடிவு

 முன்னாலெல்லாம் நானே வீட்டில் எலுமிச்சை காய்க்கும் நாட்களில் ஜூஸ் செய்து வைப்பேன். இப்போதெல்லாம் ஜூஸ் சாப்பிடக் கூடாது என ஆனபின்னர் சாப்பிடுவதே இல்லை. அல்லது இருந்தால் ரூஹ் அஃப்ஸா இருக்கும். இப்போது அதுவும் வாங்குவது இல்லை. தாகமாய் இருந்தால் மோர் அல்லது தண்ணீர் தான். வெளியே போனால் இளநீர் அல்லது கரும்புச் சாறு அல்லது நேரடியாகப் பழங்களில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை சேர்க்காத பழச் சாறு. விலை அதிகம் ஆனாலும் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்காதே!

இப்போதும் நூடுல்ஸ் மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. வட கிழக்கு மாகாணங்களில் சீனா தயாரிப்பான நூடுல்ஸுக்கு வரவேற்பு நிறைய இருப்பதால் மியான்மர் வழியாகக் கடத்திக் கொண்டு வருகின்றனர் என்று இப்போதைய தொலைக்காட்சிச் செய்தி கூறுகிறது.

படங்கள் நன்றி கூகிளார்

நூடுல்ஸ் குறித்த தகவல்கள் விக்கி பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டவை

இந்தியாவின் அதிலும் தமிழ்நாட்டின் சிறப்பான நூடுல்ஸ் தயாரிப்பையும் அதன் வகைகளையும் காண இங்கே செல்லவும்.

இங்கே