எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 30, 2022

பிரமாதம் போங்க!

 தட்டை மாவு பிசைந்தது. அதன் மேல் ஒரு பெரிய பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைச்சிருக்கேன்.


தட்டை செய்ய முடியாமல் மாவு கலந்ததை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென அக்கி ரொட்டி நினைவில் வந்தது, அக்கி ரொட்டி பற்றிப் பல்லாண்டுகள் முன்னரே அம்பத்தூரில் எங்க வீட்டில் குடி இருந்த மாமி மூலம் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் பண்ணும்போது எல்லாம் அந்த மாமியும் கொடுத்தது இல்லை. அநியாயமா இல்லையோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நானும் சுவாரசியமாகப் பண்ணும் முறை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. இணையத்துக்கு வந்த பின்னரே அதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நேர்ந்தது. ஆகவே அக்கி ரொட்டி செய்முறை பற்றித் தேடும்போது தி/கீதா அவர்கள் எ.பி.யில் "திங்க"க்கிழமைக்கு எழுதினது கண்களில் பட்டது. அதில் அவர் அரிசி மாவோடு கொஞ்சம் சமைத்த சாதமும் சேர்க்கச் சொல்லி இருந்தார்.  நமக்கு அது சரிப்படாது, சாதம் என்னமோ இருந்தது தான். அதைச் சேர்த்துப் பிசைந்து விட்டால் பின்னர் குளிர்சாதனப்பெட்டியில் மாவை வைக்க முடியாது. ஆகவே யோசித்தேன்.

மாவு பைன்டிங்கிற்காக/அதாவது சேர்ந்து வந்து தட்டும்போது பிரியாமல் வருவதற்காகத் தானே சாதம் சேர்க்கிறார். நாமோ மாவில் உளுந்த மாவு//பொட்டுக்கடலை மாவு எல்லாம் சேர்த்திருக்கோம். அதற்குத் தகுந்த காரமும் இருக்கு. போதாக்குறைக்கு ஊற வைச்ச கடலைப்பருப்பு/தேங்காய்க்கீற்று எல்லாமும் சேர்ந்திருக்கு. இனி! மேல் அலங்காரங்கள் தானே தேவை. கொத்துமல்லியைக் கழுவி நன்கு பொடியாக நறுக்கிக் கொண்டேன். 2,3 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். ஒரு பச்சை மிளகாயைக் கீறி உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். இஞ்சி ஒரு துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கினேன்.  எல்லாவற்றையும் தட்டைக்காகப் பிசைந்த மாவில் சேர்த்து நன்கு கலந்தேன். வாசனை தூக்கியது. இஃகி,இஃகி, இஃகி.


 


பச்சைக் கொத்துமல்லி


வெங்காயம்


எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்த மாவு


ப்ளாஸ்டிக் பேப்பரில் முதலில் தட்டினேன். பின்னர் பையர் சாப்பிடும்போது வெங்காயத்தின் நீர் சேர்ந்து கொண்டு மாவு தளர்ந்து விட்டதால் அப்படியே எடுத்து உருட்டித் தோசைக்கல்லிலே போட்டு நேரடியாகக் கையாலேயே தட்டிக் கொடுத்துவிட்டேன். இது இன்னமும் நன்றாக வந்தது. மெலிதாகத் தட்டவும் முடிந்தது. 


அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் அக்கி ரொட்டி. ஒரு பக்கம் வெந்திருக்கு என்றாலும் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்த படம் என்னமோ சொதப்பல்! வழக்கம் போல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 ராத்திரிக்கு என்னனு கேட்ட ரங்க்ஸுக்கும்/பையருக்கும் அரிசி மாவு அடைனு மட்டும் சொல்லி இருந்தேன். இரண்டு பேருமே பயந்துட்டு இருந்தாங்க. நம்மவர் சாதம் இருக்கோனு கேட்டுச் சந்தேகத்தையும் தீர்த்துக் கொண்டார்.  சாப்பிடும் நேரமும் வந்தது. தொட்டுக்க என்ன? காலையில் காடரிங்கில் கொடுத்த மணத்தக்காளி வத்தக்குழம்பு இருந்தது. பொதுவாக அடைக்கு எங்க வீட்டில் வத்தக்குழம்பே தொட்டுப்போம். ஆகவே அது போதும்னு நினைச்சேன். வெண்ணெய் வேறே முதல்நாள் தான் எடுத்து வைச்சிருந்தேன். அதையும் எடுத்து வெளியே வைச்சேன்.

முதலில் வாழை இலையில் தான் தட்டணும்னு நினைச்சேன். ஆனால் வாழை இலையே இல்லை. ஆகவே சர்க்கரை வந்த ப்ளாஸ்டிக் கவரை எடுத்து நன்கு அலம்பித்துடைத்து நெய்/எண்ணெய் தடவி வைத்துக் கொண்டேன். ஒரு சின்ன ஆரஞ்சு அளவுக்கு மாவை எடுத்துக்கொண்டு தண்ணீரும், எண்ணெயுமாகத் தொட்டுக் கொண்டு பின்னர் அதைக் கையில் எடுத்துத் தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டேன்.  சிறிது நேரம் வேகவிட்டுப் பின்னர் எண்ணெய் ஊற்றித் திருப்பிப் போட்டு மறுபடி எண்ணெய் ஊற்றி நன்கு வேக விட்டேன். முதலில் நம்ம ரங்க்ஸ் தான் சாப்பிட்டார். வெண்ணெய் போதும்னு சொல்லிட்டார். சாப்பிட்டதுமே நன்றாகவே இருக்குனு சான்றிதழும் கொடுத்தார். அப்பாடானு இருந்தாலும் பையர் என்ன சொல்லப் போறாரோனு நினைச்சேன். அவரும் தொட்டுக்க என்னனு கேட்டுட்டு வெண்ணெய் மட்டும் போதும்னு சொல்லிட்டார். பின்னர் சூடாகத் தட்டில் போட்டதைச் சாப்பிட்டதும், நன்றாகவே இருக்கு. இதுக்குத் தொட்டுக்கவெல்லாம் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம் எனச் சான்றிதழும் கொடுத்தார்.

அப்பாடா! உருப்படியாக மாவைத் தீர்த்த நிம்மதி எனக்குக் கிடைத்தது. அதே சமயம் நல்லா இருக்குனு பாராட்டும் கிடைச்சது.  இப்படியாகத் தானே அக்கி ரொட்டி சாப்பிடணும்/பண்ணணும் என்னும் என் நீண்ட கால ஆசை பூர்த்தி ஆனது. 

பிள்ளையாரப்பா! இதே மாதிரி எல்லாக் கஷ்டங்களையும் நிவர்த்தி பண்ணிடுப்பா! 

Saturday, January 29, 2022

என்ன திப்பிசம் செய்தால் நல்லது?

இங்கே யோசனைகளில் பல்வேறு விதமான குழம்பு பற்றி வந்திருக்கு. அது கிடக்கட்டும். நேற்று நான் பல நாட்கள் (நாட்கள் தான்) கழித்துக் கொஞ்சம் போல் தட்டை சாப்பிடப் பண்ணலாம்னு நம்ம ரங்க்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்த அரிசிமாவை எடுத்துக் கொண்டேன். அரிசியை ஊற வைச்சு மாவு அரைக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. புழுங்கலரிசியை ஊற வைத்து கிரைண்டரில் அரைத்துப் பண்ணவும் நேரம் இல்லை. ஒரே ஓட்டமாக இருந்து வருகிறது. ஆகவே கடையில் அதுவும் எப்போதும் வாங்கும் கடையில் அரிசி மாவு வாங்கிக் கொண்டு வந்தாச்சு. இந்த மாவில் தேன்குழல், முள்ளுத்தேன்குழல் எல்லாம் பண்ணி இருக்கேன். கொஞ்சம் போல் மிக்சரும் தேய்க்க ஓமப்பொடி, காராபூந்தி எல்லாமும் பண்ணி இருக்கேன். ஆகவே தைரியமாக மாவைத் தாம்பாளத்தில் கொட்டிப் பொட்டுக்கடலையைச் சூடு பண்ணி வறுத்து அரைத்து அதோடு உளுத்தமாவும் சேர்த்துக் கொண்டேன். எப்போதும் காரத்துக்கு மி.வத்தல் ஊற வைச்சுப் பெருங்காயம் உப்பு, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கலப்பேன். கொஞ்சமாக வெண்ணெய் போடுவேன்.

நேற்று மி,வத்தல் எல்லாம் ஊறவைக்கலை. திடீர்த்திட்டம் என்பதால் மி.பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கொண்டு தேங்காயைக் கீற்றாக்கி ஊற வைச்ச கடலைப்பருப்பும் சேர்த்து மாவைப் பிசைந்து கொண்டேன். மாவு என்னமோ நிறைய இருக்கிறாப்போல் தெரிந்தது. பரவாயில்லை, பண்ணிடலாம் கூடவே ஒரு பத்து நாள் வைச்சுக்கறாப்போல் இருக்கும்னு நினைச்சு எண்ணெயை வைத்துக் காய வைத்து அது காய்ந்ததும் தட்டைகளைத் தட்டிப் போட்டேன். முதல் ஈடு எடுத்ததும் உம்மாச்சிக்குக் காட்டிட்டு ரங்க்ஸிடம் ருசி பார்க்கக் கொடுத்துவிட்டு நானும் கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டேன். காரம் அவ்வளவா இல்லை என்பதைத் தவிர்த்து வேறே குறை தெரியலை. இரண்டு, மூன்று ஈடுகள் நல்லச் சிவக்க விட்டு எடுத்த தட்டைகளைச் சற்று நேரம் கழித்து எடுத்துப் பார்த்தபோது "வெடக்" வேகாதது போலத் தெரிந்தது. ஆகவே மறுபடியும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு இன்னும் சிவக்க எடுத்து வைத்தாலும் கடினமாகவே இருந்தது. என்ன காரணம்னு புரியலை. மாவு என்னமோ ருசி நன்றாகவே இருந்தது. ஆனால் தட்டைகள் கரகரவென வரவில்லை. அழுத்தமாக வந்தாலும் பரவாயில்லை. பல்லுக்கு வேலை கொடுக்கும் போல் இருந்தன. இனி இந்த விஷப் பரிட்சை வேண்டாம்னு வைச்சுட்டு மாவை எடுத்து மூடி வைச்சுட்டேன்.

இன்னிக்கு அந்த மாவை ஒரு வழி பண்ணியாகணும். என்ன செய்யலாம்? நேற்றே யோசித்து முடிவுக்கு வந்தாச்சு என்றாலும் அதைச் செயலாக்கி விட்டுப் படங்களுடன் (முடிந்தால்) போடறேன். என்ன பண்ணி இருக்கலாம்/இருப்பேன் என நீங்க நினைக்கிறீங்க? 

Tuesday, January 25, 2022

பச்சை மஞ்சள் சாறெடுத்து என்ன செய்யலாம்?

பொங்கல் அன்று
வாசலில் போட்ட கோலம். காலையில் வேலை மும்முரத்தில் படம் எடுக்க நினைவில் இல்லை. மாலை எடுத்தேன். அதைப் போடவும் மறந்துட்டேன்.

பச்சை மஞ்சள் தொக்கு

 நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்போப் பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது. ஒரு மாதிரியா எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன். இப்போத் தான் சமீபத்தில்  இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. இதுக்குத் தேவையான பொருட்கள்



பச்சை மஞ்சள் கால் கிலோ /தோல் சீவிக்கொண்டு துருவிக் கொள்ளவும்.




நல்லெண்ணெய் கால் கிலோ
மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி
உப்பு தேவைக்கு
பெருங்காயப் பொடி ஒரு தேக்கரண்டி
கடுகு தாளிக்க இரண்டு தேக்கரண்டி


வறுத்துப் பொடிக்க
மி.வத்தல் சுமார் 25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10,15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன். 
காரப்பொடி எனில் காரமாக இருந்தால் 5 தேக்கரண்டி. காரம் இல்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி
 மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணையில் வறுத்துப் பொடிக்கவும்.

வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகுப்பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். இதுக்கு மஞ்சள் பொடி தேவை இல்லை. கடைசியில் எலுமிச்சைச் சாறு சுமாராக 3,4 பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத்தான் பிழிந்து சேர்த்தேன். 

மஞ்சளைத் துருவிக் கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். 



எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும் பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும். துருவிய மஞ்சளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம். 

நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால் மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன். அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டுப் பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன். 


பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கிப் பின் ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கலாம். சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கும்போது போடலாம். வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கிய பின்னர் ஆற வைத்து எடுத்து வைக்கவும். இதற்கு வினிகர் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை. மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்.அதை நாளை போட்டுப் பின்னர் பகிர்கிறேன்.



ஊறுகாய் தயார் நிலையில். கொஞ்சம் காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது. ஆகவே ருசி பார்த்த பின்னர் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன்.  மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

பச்சை மஞ்சளோடு இஞ்சி, கிடைத்தால் மாங்காய் இஞ்சி, எலுமிச்சம்பழம், மாங்காய், காரட் விரும்பினால் கொஞ்சம் பட்டாணி, வேர்க்கடலை இவை சேர்த்து மிக்சட் வெஜிடபுள் ஊறுகாய் மாதிரிப் போடலாம். போட்டு வைச்சிருக்கேன். அது அடுத்து வரும்.  பச்சை மஞ்சளோடு நெல்லிக்காய், பாகற்காய், இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்துப் பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துச் சாறெடுத்து வடிகட்டிக் கொண்டு காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. அதுவும் செய்கிறோம்.

Saturday, January 22, 2022

நானும் இருக்கேன் வலை உலகில்!

 


நேற்று சங்கடஹர சதுர்த்தி அதோடு தைமாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை. ஆகவே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்தேன். அந்தப் படங்கள். கிண்ணங்களில் கொழுக்கட்டைகள். வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம். கற்பூர ஹாரத்தியைப் படம் எடுக்கலை.  ராகுகால விளக்கேற்றிப் பலகையில் வைச்சிருக்கேன்.


உம்மாச்சி அலமாரியில் விளக்கேற்றி வைச்சிருக்கேன், பின்னால் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பெருமாள், குடும்பச் சொத்து. இவரோடு சிவன், பார்வதி, ரிஷபாரூடராக இருந்திருக்கார். சிவன், பார்வதியைக் காணவில்லை. ரிஷபம் மட்டும் இருக்கு. நாங்க கயிலையிலிருந்து கொண்டு வந்த ஒரு விக்ரஹத்தை அதில் வைத்துள்ளோம்.  சோமாஸ்கந்தராக விக்ரஹம் தேடிக்கொண்டிருக்கோம், கிடைக்குமா தெரியலை. பிள்ளையாரும், தவழ்ந்த வெண்ணைக் கிருஷ்ணனும் உண்டு. இவங்க இரண்டு பேரும் தான் பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்திக்கு இப்போல்லாம் பக்ஷணம் சாப்பிட வராங்க.


ஶ்ரீராமர். அங்கே தெரிவது பிள்ளையாரும் (குடும்பச் சொத்து) ராமரின் இன்னொரு பக்கம் தவழ்ந்த கிருஷ்ணரும். சரியாக விழலை கிருஷ்ணர். இன்னொரு படம் இருக்கு. அதைப் போட்டிருக்கணும். ஶ்ரீராமர் படத்தில் மாலை போல் தொங்குவது சிதம்பரம் ஶ்ரீநடராஜரின் குஞ்சிதபாதம். தூக்கிய திருவடியில் மாலையாகச் சார்த்துவார்கள். வெட்டிவேரால் செய்யப்பட்டது. இப்படிப் பிரசாதமாகக் கட்டளைக்காரங்களுக்குக் கொடுப்பாங்க. ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் கிளியைக் கொடுப்பது போல். எங்களுக்கு இது போல் நிறையத் தரம் வந்திருக்கு. இது சமீபத்தில் தீக்ஷிதர் வந்தப்போக் கொடுத்தது. பழசைக் களைந்து விட்டோம்.


சங்கராந்தி சிறப்புப் படம். ஹிஹிஹி, தாமதம் ஆயிடுச்சே. என்ன செய்வது? இங்கே நிவேதனம் மட்டும் வைச்சிருக்கேன். தட்டில் கூட்டு வகைகள், பருப்பு , சின்ன வெண்கலப்பானையில் அவிசு. இன்னொன்றில் பொங்கல், பாத்திரத்தில் மஹா நிவேதனம் எனப்படும் அன்னம், நெய், தட்டில் அரிசி, வெல்லம். எங்க அப்பா வீட்டில் நெல் பரப்புவார்கள். தேங்காய் உடைத்து வெற்றிலை, பாக்கு, பழம் வைச்சிருக்கு.



இந்த வருஷம் கீழே உட்கார முடியாததால் ப்ளாஸ்டிக் டீபாயையே அலம்பித் துடைத்துக் கோலம் போட்டுக் கொடுத்தேன்.  அதிலேயே பூஜை பண்ணி விட்டார்.. மறுநாள் கனுப்பிடி படம் எடுக்க மறந்துட்டேன்.

Monday, January 03, 2022

படமும், பப்படமும்!

புத்தாண்டுக்கு வாழ்த்துப் பதிவு போடலையேனு சிலரோட எண்ணம். முன்னெல்லாம் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போல்லாம் நண்பர்களின் பதிவுகளில் போய் வாழ்த்துவதோடு சரி. 

பல படங்கள் எடுத்திருந்தேன். ஆனால் அவற்றைக் கணினியில் ஏற்றும்போது ஏதோ பிரச்னைகளால் அழிந்து விட்டன.  வந்த வரைக்கும் போட்டிருக்கேன்.  தலைப்பைப் பார்த்துட்டுப் பப்படம் எங்கே என நினைக்காதீங்க. சும்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு கவர்ச்சிக்கு/தலைப்பு ஈர்க்கணும் இல்லையோ, அதுக்குப் போட்டேன். :)


 





 மார்கழி மாதப் பதிவுகள் எதுவும் நான் போடவில்லையா இந்த வருஷம்னு பலரும் கேட்கின்றனர். ஏற்கெனவே 2,3 முறைகள் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு மாதிரியாகப் போட்டு அதில் குறிப்பிட்ட ஒரு வருஷம் போட்டவற்றை மின்னூலாக்கி 2 வருடங்கள் முன்னர் வெளியிட்டேன். அப்போல்லாம் அமேசானில் வெளியிடத் தெரியாது. ஆகவே  Freetamilebooks மூலம் வெளியிட்டேன். அதன் சுட்டியை இங்கே கொடுக்கிறேன். தேவைப்பட்டால் படித்துக்கொள்ளலாம். 


மார்கழித்திங்கள் மதி நிறைந்த


திருவெம்பாவைப் பதிவுகள் என்னோட இன்னொரு வலைப்பக்கமான "என் பயணங்களில்" வெளியிட்டிருக்கேன். அதை இப்போது எல்கே அவருடைய "பாகீரதி" மின்னிதழில் வெளியிட்டுக் கொண்டிருக்கார். 


ஆதியும் அந்தமும் இல்லா

இங்கே நீங்கள் திருவெம்பாவை விளக்கங்களை முடிஞ்சப்போப் பார்க்கலாம்.