நான் தான் முடியாமல் அடிக்கடி படுத்துப்பேன் என்பதால் எனக்கு முடியலைனால் யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக்கறதில்லை. ஆனால் இம்முறை நம்ம ரங்க்ஸ் படுத்து விட்டார். நவம்பர் 25ம் தேதிக்கு முன்னாடி இருந்தே முடியலை, முடியலைனு சொல்லிட்டு இருந்தார். மருத்துவரிடம் போகச் சொன்னால் போகமாட்டேன் என அடம். அன்னிக்கு சனிக்கிழமை காலம்பர மறுநாள் கார்த்திகைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரச் சென்றபோது மார்க்கெட்டில் வண்டியைப் போட்டுக் கொண்டு விழுந்திருக்கார். சொல்லவே இல்லை. எங்கே எப்படி அடிபட்டதுனு தெரியலை. வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டு விட்டார். குளிக்கலை. உம்மாச்சிங்களுக்குப் பூக்கள் எடுத்து வைக்கலை. என்னனு கேட்டால் முடியலை தொந்திரவு பண்ணாதே என்றார். சரினு விட்டுட்டேன். பதினோரு மணிக்கு எழுந்தவர் குளிக்கக் கிளம்ப நான் வற்புறுத்தி மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். அங்கேயும் வண்டியில் போயிருக்கார். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்த முடியாலை பின்னர் மருந்துக்கடைக்காரர் பார்த்துட்டு உதவி செய்து மருத்துவரிடம் அனுப்பி வைத்தால் 102க்கு மேல் ஜூரம் இருந்திருக்கு. மருந்தை ஐவியில் செலுத்தி எச்சரிக்கை செய்து ஒரு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்திருக்கார். வீட்டுக்கு வந்து ரசம் சாதம் சாப்பிட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு படுத்தவர் சாயந்திரம் தான் எழுந்தார். இப்போ ஒண்ணும் இல்லைனும் சொன்னார்.
மறுநாள் கார்த்திகைக்கு வேன்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நடு நடுவே இவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். கார்த்திகை அன்னிக்குக் காலம்பர இருந்து எழுந்துக்கவே இல்லை. ஆனால் என்னிடம் நீ தனியா எப்படி எல்லாவிளக்கையும் ஏத்திக் கொண்டு வைக்கப் போறேனு மட்டும் கேட்டார். எல்லா விளக்குகளையும் ஏற்றவில்லை. கொஞ்சமாத்தான் ஏத்தப் போறேன்னு சொல்லிட்டுக் கார்த்திகைப் பண்டிகையையும் கொண்டாடி முடிச்சாசு.
திங்களன்று பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரைப் பார்க்கலாம் என்றால் அவர் வேறொரு மருத்துவரைச் சொல்ல சரினு அவரைப் பார்க்க இருவரும் போனோம். அப்போக் கூட என்னை வர வேண்டாம், நான் மட்டும் போறேன்னு தான் சொன்னார். நான் பிடிவாதமாகக் கூடவே சென்றேன்.முதல் நாளில் இருந்தே தலையில் குத்துவலி மண்டையை உடைக்கிறாப்போல் இருக்குனு சொல்லிட்டு இருந்தார். இந்த மருத்துவர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டு அனுப்பினார். சாயந்திரம் கொஞ்சம் சரியாப் போனாப்போல் இருந்தது திடீரென அதிகமாக ஒரே கத்தல், புலம்பல். இரவு நரகமாக இருந்தது. அதுக்குள்ளே இது நரம்பு சம்பந்தமான பிரச்னை என்பதால் அதற்கேற்ற ஒரு மருத்துவ மனை நியூரோ ஒன் என்னும் பெயரில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருப்பதாகவும் அவங்களைத் தொடர்பு கொள்ளும்படியும் நம்ம ரங்க்ஸே சொல்ல அவங்களைத் தொடர்பு கொண்டுப் பேசினேன். உடனே வரச் சொன்னாங்க. ஆனால் நம்மவரோ அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மறுத்து விட்டார். இருந்த மாத்திரைகளை வைத்துக் கொண்டு வலியைக் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்தோம். ஆனால் அன்றிரவு முதல் நாளை விட மோசமாக ஆகி விட்டது. நடு இரவில் திடீரெனப் படுக்கையில் ஆளைக் காணோம். திகிலுடன் தேடினால் குரல் மட்டும் வருது, ஆள் எங்கேனு தெரியலை. அப்புறம் பார்த்தால் பொதுக் கழிவறை ஒண்ணு உண்டு. அதில் விளக்கே போடாமல் கம்மோடில் போய் உட்கார்ந்திருந்தார். மெல்ல மெல்ல பேசிப் பாதி தூக்கி, பாதி இழுத்துக் கொண்டு வந்து படுக்கையில் சேர்த்தேன். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து விடிந்ததும் முதலில் அந்த மருத்துவமனைக்குத் தொலைபேசி மருத்துவரைப் பார்க்க நேரம் குறித்துக் கொண்டேன். பத்தரைக்கு மேல் தான் வருவாராம்.
மனடில் கவலை/பயம். பையர், பெண், என் மைத்துனர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துட்டு எதிர் வீட்டு மாமா உதவியுடன் மருத்துவமனை கிளம்பினேன்.