எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 29, 2006

147.மீனாட்சி, உனக்கு என்ன ஆச்சு?

"சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!
காராரும் மேனிக் கருங்குயிலே!-ஆராயும்
வேதமுதல் ஆகி நின்ற மெய்ப்பொருளே! மின் ஒளியே!
ஆதி பராபரையே! அம்பிகையே!- சோதியே!"

அண்டர் எல்லாம் போற்றும் அரும்பொருளே! ஆரணங்கே!
எண்திசைக்கும் தாயான, ஈஸ்வரியே!"

மேற்குறிப்பிட்ட பாடல் "சிதம்பரர்" என்பவரால் பாடப்பெற்ற "மீனாட்சி கலி வெண்பா"வில் உள்ளது. ஆரம்பம் இது. அன்னையைத் தன் அகத்தும் , புறத்தும் வைத்த அவர் தம் வாக்கில் அன்னை தன் நோக்கை வைக்க அன்னையின் மேல் இந்தத் துதி பிறந்தது. அம்பிகையின் அதி ரகஸ்ய சேவை நுட்பங்கள் அடங்கிய இந்த நூலைப் படிக்கும்போது , " என்ன இப்படி அம்மனை அம்படைச்சி, ஆண்டிச்சி, இடைச்சி, ஒட்டச்சி, சடைச்சி,செட்டிச்சி, சேணிச்சி, வலைச்சி, வேடிச்சி" என்று அழைக்கிறாரே என்று தோன்றும். இருபொருள் கொண்ட இந்தக் கலிவெண்பா அன்னையைப் புரிந்து அவள் அருள் பெற்றவர்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. ஆளும் அரசி ஆன அவள் தன்னை எல்லாரும் உணரும்படியாக உலகில் உள்ள எல்லாக் குலங்களிலும் உதயம் ஆகிறாள். ஊன்றிப் படித்தால் ஒழியப்புரியாத இந்த விஷயம் சிதம்பரருக்குப் புரிந்து அவர் தன் கனவிலும் நனவிலும் நடமாடிய அம்பிகையைப் போற்றித் துதிக்கிறார். பின் தன் குருவின் கட்டளைக்கு ஏற்ப அன்னையின் விருப்பமும் அது என்று உணர்ந்து திருப்போரூர் வந்து எந்தையாம் கந்தனைத் தொழுது அவனில் தேவியை உணர்ந்து கந்தனுக்குக் கோயில் எழுப்பி அங்கேயே சமாதி அடைந்தார்.மூன்று நாளாகப் பேப்பர் படிக்கும் போதெல்லாம் மனசு ரொம்ப நொந்து போகிறது. உலகுக்கெல்லாம் தாயான, மதுரை மக்களின் அருமைக் கண்மணியான, அவர்களின் வீட்டுப் பெண்ணான எங்கள் அருமை மீனாட்சியின் வீட்டில் விரிசலாம். எல்லாரும் வந்து பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மதுரையின் இதயமே அன்னையின் இருப்பிடம் தான். அது பழுதுபட்டுக் கிடக்கிறது என்ற செய்தி நெஞ்சில் ஊவாமுள் போல் உறுத்திக் கொண்டே இருக்கிறது. பொதுவாக மதுரையில் நாத்திகவாதம் அதிகம் பார்க்க முடியாது. ஏன் என்றால் ஆட்சி செய்வது அவள் அன்றோ? மதுரை மக்கள் எல்லாரும் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்கும் அவள் திக்விஜயம் செய்து நாட்டையும், தன்னையும் அப்போதே காப்பாற்றிக் கொண்டது போல் இப்போதும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அவளருளாலே ஓரணுவும் அசையாது. இதுவும் அவளின் ஈசனின் ஒரு திருவிளையாடலோ என்னமோ? இந்தக் குழப்பத்தில் இருந்து தானும் மீண்டு, தன் மக்களையும் மீட்க அன்னை மீனாட்சியை வேண்டு கிறேன்.

"கொந்தளகப் பந்திக் குயிலே! சிவயோகத்து ஐந்தருவே! மூவருக்கும் அன்னையே!-எந்தம் இடர் அல்லல் வினை எலாம் அகற்றியே, அஞ்சல் என்று
நல்ல செளபாக்கியத்தை நல்கியே-வல்லபத்தின்
ஆக, மதுரம், சித்ர, வித்தாரம் என்று அறிஞர்
பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு-நேசமுடன்
தந்து என்னை ஆட்கொண்டு, சற்குருவாய் என் அகத்தில்
வந்து இருந்து, புத்தி, மதி கொடுத்துச்- சந்தமும்
நீயே துணையாகி நின்று இரட்சி!அம் கயல் கண்
தாயே! சரணம் சரண்!

Saturday, October 28, 2006

146. மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை"

வள்ளுவரும் சொல்லிட்டுப் போயிட்டார். .இளங்கோவடிகளும் சொல்லிட்டார். ஆனால் அவங்க

காலத்திலே இந்த மாதிரி ஏரியிலே வீடுகள் எல்லாம் வரலை. அதனாலே அவங்களுக்கு என்ன

புரியும்? மழையும் வேணும், அதே சமயம் தண்ணீரும் தேங்கக் கூடாதுன்னா இந்த ஆக்கிரமிப்பை அகற்றினாலே போதும். என்ன செய்யப் போறாங்களோ தெரியாது.

நேத்திக்கு எங்க தெருவிலே தேங்கின தண்ணீரை ஓடச் செய்ய வேண்டி கவுன்சிலருக்கு

தொலைபேசியதில் அந்த அம்மா அவங்க கணவரை அனுப்பினாங்க. முதலில் போய்ப் பார்த்து விட்டு வந்த என் கணவர் திரும்ப வேகமாக வந்து மறுபடி போகணும் டீ போட்டுத் தா குடிச்சுட்டுப் போறேன்னு சொன்னார். சரின்னு டீ போட்டுக் கொடுத்துட்டு வீரத் திலகம் இட்டு வழி அனுப்பி வைத்தேன். அக்கம்பக்கம் வீட்டுக் காரங்க எல்லாம் சேர்ந்து ஒரு 10,20 பேர் போனாங்க. முழங்கால் தண்ணீர் இருக்கிறதை ஓடப் பண்ணினால் போதும்னு கேட்டதுக்கு இணங்க அங்கங்கே தெருவில் சில மேடான இடங்கள் உடைத்து விடப் பட்டது. இப்போ

மழை பெய்தாலும் ஓரளவு கட்டுக்குள் அடங்கியே தண்ணீர் இருக்கிறது. இன்னும் முழுசும்

ஓடவில்லை. தண்ணீர் போய்ச் சேரும் இடம் அடைப்பு. கொஞ்ச நாள் ஆகும் போவதற்கு. நேத்து மத்தியானம் 1-00 மணிக்குப் போனவங்க எல்லாம் நடுவில் ஒரு 10 நிமிஷம் வீட்டுக்கு வந்துட்டு எல்லாம் முடிந்து வரும்போது மணி 5-00 ஆகி விட்டது. வெற்றித் திலகம் இட்டு ஆரத்தி எடுக்காத குறைதான். வேறே என்ன சொல்றது? நிறைய வீட்டில் நேத்துச் சாயங்காலம் மழை பெய்யும் போது இடித்த இடியில் தொலைக்காட்சிப் பெட்டி, கணினி என்று சில மின் சாதனங்களும் வீணாகி விட்டது. நாங்க முன் ஜாக்கிரதை முத்தண்ணா & முத்தக்காவாச்சே! அதனாலே மின் இணைப்பையே நேத்திக்கு எடுத்துட்டோம். சாமி அலமாரியில் மட்டும் ஒரே ஒரு மின் விளக்கு எரிய விட்டுட்டு ட்யூப் லைட்டைக் கூட அணைச்சுட்டோம். ஆனால்

borewell மூலம் தண்ணீர்இறைக்கும் மோட்டார் foot volveஇறங்கிப் போய் நேற்றுக்

காலையில் இருந்தே தண்ணீர் எடுக்க முடியவில்லை. புது ஊற்று வரும்போது மண் சரிவு

ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். நல்லவேளையாகக் கிணற்றை மூடாததினால்

வீட்டுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதுவும் கையால் எடுக்கும் அளவு கிட்டத்தில் கிணற்றில் தண்ணீர் இருக்கிறது. கைப்புள்ள, மழை வாஆஆஆஆஆஆரம் கொண்டாட இது போதுமா? இன்னும் வேணுமா?
**********************

இப்போ இந்த வார ஆனந்த விகடனில் நான் ரசித்த ஒரு ஜோக்:படங்களுடன் வந்திருக்கிறது. ஒரு நபர் பாடுகிறார்.. மற்ற இரண்டு பேர் அது பற்றிப் பேசுகிறார்கள்.

"அதுக்குள்ளே பத்து மாசம் ஆயிடுச்சா?

எதைக் கேக்கறேன்னு புரியலியே?

அந்த ஆள் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் சீமந்தம்னு பாடறாரே? "

நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. பொதுவாக ஜோக் எல்லாம் நன்றாக இருந்தாலும் இது

மாதிரி எனக்குப் பிடித்தவைனு வரது சிலது தான். என் மனசுக்குள் கற்பனை பண்ணிப் பார்த்துப்பேன்.அப்போ தன்னை அறியாமல் சிரிப்பு வந்தால் அது என்னைப் பொறுத்த வரை நல்ல ஜோக். இது அப்படிப் பட்டது. இனிமேல் இது மாதிரி எனக்குப் பிடித்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும்.

(ம.சா.: ஆரம்பிச்சுட்டியா? உன் தலைவி புத்தியை? ரொம்பவே பந்தா காட்டறியே? உன் பதிவுக்கு வரதே பெரிய விஷயம். இதிலே இது வேறேயா? பெரிய சுஜாதான்னு நினைப்பு. என்ன பரிசு கொடுக்கப் போறே? பின்னூட்டம் தானே?)

அது அப்படித் தான் பேசும். நீங்க வழக்கம் போல் கண்டுக்காதீங்க.

இப்போ நிஜமாவே சுஜாதா இந்த வார விகடனில் எழுதி இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்தி.

குஜராத்தில் இருந்து வெளிநாடு போன இந்திய மருத்துவர்கள் திரும்ப இந்தியா வரும்போது

அதுவும் குஜராத் வரும்போது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று பணி புரிகிறார்கள்

என்பதாக அவருக்கு மின்னஞ்சல் கணேசன் மஹாதேவன் என்பவர் கொடுத்திருப்பதாய் எழுதி

இருக்கிறார். மேலும் "medical tourism" "911 service about trauma care" துவங்கவும்

போவதாக எழுதி இருக்கிறார்.இது ஒண்ணும் புதிசு இல்லை. குஜராத்தில் எந்தக் கிராமத்துக்குப்

போனாலும் பள்ளிகள் மிகத் தரமான கட்டிடங்களுடன் இருக்கும். பள்ளியில் நுழையும்போதே சரஸ்வதியின் சிலை வீணையுடன் இருக்கும்படியாக எழுப்பி இருப்பார்கள். தினமும்

பிரார்த்தனை அங்கே தான் நடைபெறும். அவரவர் சொந்தக் கிராமங்களுக்குத் தரமான சாலை

வசதிகளுக்கு வேண்டிய பண உதவி, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, மதம்

பார்க்காமல் பண உதவி போன்ற நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன. அங்கங்கே

மருத்துவ ட்ரஸ்ட் ஏற்படுத்தி டாக்டர்களுக்குச் சம்பளம் கொடுத்து வாரம் இரு முறை,

மூன்று முறை என்று வரச் சொல்லி மருந்துகளைக் குறைந்த விலையில் கொடுத்து, அதாவது வெளியில் 50/-ரூ கொடுத்துத் தான்வாங்க வேண்டும் என்றால் இங்கே ஒரு ரூ. முதல் 5ரூ வரை மருந்தின் தரத்துக்குத் தகுந்த விலை இருக்கும். ஆயுர்வேத மருந்துகள் இன்னும் குறைவு. அரசும் பெண்களுக்கு எதுவரை படித்தாலும் இலவசம்தான். இது எல்லாம் நாங்க அங்கே

இருந்தப்போ அதுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எங்க பையன் இஞ்சினீரிங் சேரும்போது அரசாங்கக் கல்லூரியில் மெரிட்டில் தான் சேர்ந்தான். நாங்க கட்டின ஃபீஸ் பல்கலைக் கழகத்துக்கும் கல்லூரிக்கும் சேர்த்து வெறும் 250/-ரூ. தான். ஹாஸ்டல், சாப்பாடு, ட்ரஸ் என்றுதான் எங்களுக்குக் கொஞ்சம் தொகை செலவு செய்ய நேர்ந்தது. மேலும் அரசுப் பேருந்துகளில் போனால் கோடை நாட்களில் ஜூஸ், ,பெப்ஸி, போன்றவையும் குளிர் நாளில் டீயும் கொடுப்பார்கள்.காங்கிரஸ் முதலமைச்சரோ அல்லது பிஜேபி முதலமைச்சரோ அவரிடம் நாம் சென்றால் தோழமையுடன் பேச முடியும். சாதாரண மனிதர்கள் போல நடந்து போய்க் கொண்டு இருப்பார்கள். நாம் போய் நம்மோட வேலையைச் சொல்லலாம். எந்தத் தடையும்

இருக்காது. இது ராஜஸ்தானிலும் இருந்தது. குஜராத்தில் இப்பவும் இப்படித்தான் என்று ஜாம்நகரில் இருந்து வந்த எங்கள் சிநேகிதர் கூறுகிறார்.
**********************
இனி நாம் பம்பாய் பயணத்தைத் தொடரலாம். ரொம்பப் பேருக்குச் சந்தேகம் வருது, நான் எப்படி அம்மாதிரியான நிலையில் ஆட்டோவில் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஏறினேன் என்று. பொதுவாக எங்க வீட்டில் முடிவு எடுப்பது என் கணவர்தான் என்றாலும் அப்போது அவர் இல்லை. நானே முடிவு எடுக்கணும். இங்கே உட்காருவதை விட போரிவிலி போனால் அங்கே போய்ப் பார்க்கலாம் அல்லது ஸ்டேஷனிலேயே வெயிட்டிங் ரூமில் தங்கிக் கொண்டால் மறுநாள் லோக்கல் வண்டியில் அலுவலகம் செல்ல என் மைத்துனரகள் இருவருமோ அல்லது என் ஓரகத்தியோ அல்லது மூவருமோ வருவார்கள். அங்கே வந்துதான் ஆகணும். லோக்கல் வண்டியில் போய்ப் பார்க்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் இது எல்லாம் வெளியில் சொல்லிக்கலை.

ஆட்டோ டிரைவர் ரொம்பவே நல்லவராக அமைந்தது எங்கள் அதிர்ஷ்டம். பொதுவாய் அங்கே

எல்லாம் அவ்வளவு ஏமாற்ற மாட்டார்கள் என்றாலும் இவர் நன்கு படித்தவர். எம்.ஏ.

படித்துவிட்டு மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார். வண்டி மலைப்

பாதையில் போவதால் என்பெண்ணை முதலில் கம்பிக்குப் பக்கத்திலும், நான் நடுவிலும்

பையனை ஓரத்திலும் உட்காரச் சொல்லிவிட்டுக் கயிறைக் கொடுத்து இறுக்கிப் பிடித்துக்

கொள்ளச் சொன்னார். கொண்டை ஊசி வளைவுகளில் ஆட்டோ சக்கரம் கார், வான், பஸ் மாதிரி மெதுவாய்ப் போகாது. கொஞ்சம் வழுக்கும் ஆகவே பிடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழி சரியான வழிதான் என்று எங்கள் கூட வந்தவர்களின் வண்டி முன்னால் போனதில் இருந்து தெரிந்தது. இருந்தாலும் நான் எனக்குத் தெரிந்த ராமநாமாவையும், கந்த சஷ்டி கவசத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என்று நினைத்தால் டிரைவர் 21/2 மணி நேரம் ஆகும் என்றார்.
மலைப்பாதை முடியவே ஒரு மணி நேரம் ஆனது. பிறகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள். எல்லாம் முடிந்து போரிவிலி வருகிறது என்று டிரைவர் சொல்லும்போது அங்கே ஒரு ட்ராஃபிக்

போலீஸ்காரர் வந்து எங்கள் வண்டியையும் முன்னால் போன வண்டியையும் நிறுத்தினார்.

2 முறை பப்ளிஷிங்க் கொடுத்தும் error வந்து விட்டது. இப்போ 3-வது முறையாக் கொடுக்கிறேன். என்ன ஆகப் போகுதோ தெரியலை. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கணும்னு நினைக்கிறேன்.

Friday, October 27, 2006

145.மழையில் நாங்கள்

இன்னிக்கு நாங்கள் பம்பாய் போனோமா இல்லையானு தெரியலைன்னா வீட்டுக்கு ஆட்டோ வந்துடும் போல் இருக்கு. ஆனால் ஆட்டோ எதுவும் உள்ளே வர முடியாது. பேப்பர்காரன், பால்காரன் எல்லாம் நொந்து நூலாகிப் போயிட்டாங்க. பேப்பர் 10 மணிக்குத் தான் வருது. பால் வர 7-00 மணி ஆயிடுது. அவ்வளவு தண்ணீர், தண்ணீர், தண்ணீர். கொண்டு வராங்களே அதுவே பெரிசு. போன வருஷம் முதல் மழையில் இவ்வளவு தண்ணீர் வரலை. இந்த வருஷம் ஆரம்பிச்சதுமே எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர் தான். தண்ணீர் கொரட்டூர் ஏரிக்குப் போற வழியை வேறே அடைச்சுட்டாங்க. எங்க தெருவிலே போட் செர்வீஸ் ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறோம். போன வருஷம் மடிப்பாக்கத்திலே நிஜமாவே "போட் செர்வீஸ்" இருந்தது.போன வருஷம் மழையில் எங்க வீட்டிலே 2 ரூமைத் தவிர சமையல் அறை, ஹால், படுக்கை அறை எல்லாம் தண்ணீரால் நிரம்பி விட்டது. எல்லாம் தண்ணீர் போக வழி இல்லாத காரணத்தால் உள்ளே வந்தது தான். தண்ணீர் போகும் வாய்க்கால் அடைச்சாச்சு. அங்கே வீடுகள் வந்தாச்சு தண்ணீர் எங்கே போகும்? தெருவே மிதந்தது. இப்போவும் தோட்டம் எல்லாம் ரொம்பி வழியுது. வெளியே இப்போவே எங்க வாசல் வராந்தாவுக்கு வந்துட்டிருக்கு. . வெளியே தெருவில் தண்ணீர் ஓடினால் இங்கே உள்ள தண்ணீரை வெளியே விடமுடியும். ஆனால் இங்கே என்னடான்னா வெளியே ரோடில் உள்ள தண்ணீர் உள்ளே வந்துட்டு இருக்கு. எல்லாம் நம்ம head letter தான் வேறே என்ன? ச்யாம், இந்தப் பேரை அடிக்கடி உபயோகிக்கறதுக்கு no royalty.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பால்கரில் செளராஷ்ட்ரா மெயில் நின்று கொண்டு இருந்தது. நாங்களும் வண்டியில் உட்கார்ந்து கொண்டு எப்போது கிளம்பும்னு யோசித்துக் கொண்டிருந்தோம். பக்கத்துப் ப்ளாட்ஃபார்மில் ஒரு வண்டி பால்கரில் இருந்து தாதருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தது. எங்கள் வண்டியில் இருந்து சிலர் அதில் ஏறினார்கள். என்னடா இதுன்னு யோசிக்கும் போதே வண்டி சட்டுனு கிளம்பிவிட்டது. சரி, ஏதோ அவசரமாப் போவாங்கனு நினைச்சோம். ஒரு 1/2 மணி நேரத்துக்கு எல்லாம் விரார் என்னும் ஸ்டேஷனில் இருந்து ஒரு வண்டி வந்தது. இது போரிவிலிக்கு முன்னாலே அதாவது பால்கருக்கும், போரிவிலிக்கும் நடுவில் வரும். அந்த வண்டியில் இருந்து வந்தவர்கள் எங்களைப் பார்த்து, அதாவது எங்களை மட்டும் இல்லை பொதுவாக எங்கள் வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து நீங்க இன்னிக்குப் போக முடியாது. இங்கே இருந்து போன வண்டியும் பாதி வழியிலே நிக்குது. என்று சொன்னார்கள். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கீழே இறங்கி யாரையாவது கேட்கலாம்னு யோசிக்கும்போது ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தார்கள். பலத்த மழை காரணமாக வண்டி இன்று பம்பாய் செல்லாது எனவும், அங்கிருந்து வண்டி வர அறிவிப்பு வந்ததும்தான் கிளம்பும் எனவும் சொன்னார்கள். "இப்போ என்ன செய்யறது?" எங்களுக்கு அதிர்ச்சி. இதுக்கு முன்னாலே எல்லாம் இம்மாதிரி நடந்திருக்கு. அதுவும் முதல்முறை என் பெண் பிறந்து மதுரையில் இருந்து சென்னை வரும்போது சனிக்கிழமை காலை கிளம்பி ஞாயிறு அன்று இரவு மதுரை வந்து சேர்ந்தோம். அப்போவும் இதே மழை, வெள்ளம்தான். அப்போ அப்பாவும், அம்மாவும் கூட இருந்தார்கள். அதனால் பயம் எல்லாம் இல்லை.

இதே மாதிரி ஒரு 2 வருஷத்துக்கு முன்னால் நசிராபாத்தில் இருந்து செகந்திராபாத் "காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸில்" போகும்போது (மீனாட்சி எக்ஸ்ப்ரஸ்னு பேர் மாறிடுச்சு) வண்டி தடம் புரண்டு விட்டது. அதே வண்டி இஞ்சின் எரிந்து போனது. ஆனால் அப்போ எல்லாம் என் கணவர் எங்களுடன் இருந்தார். ஆகவே முடிவு எடுக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. நாங்கள் உண்மையில் அந்தப் பிரயாணங்களை ரொம்பவே ரசித்தோம். ரெயில் நடுக்காட்டில் தடம் புரண்டு நின்றதும் பக்கத்து ஸ்டேஷன்களுக்கு எப்படித் தகவல் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்து மீட்பு வண்டி வந்து எப்படி மீட்கிறது என்பது வரை பார்த்தோம். அங்கேயே கூட வந்தவர்களில் சிலர் கல்லை அடுக்கி அடுப்பு மூட்டித் தேநீர் தயார் செய்து (பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்தார்கள்) எல்லாருக்கும் கொடுத்தார்கள். ஏதோ பிக்னிக் மாதிரி இருந்தது. தவிர அந்த வழியில் ரெயில் பிரயாணமே ரொம்ப ரசிக்கும்படியாய் இருக்கும்.

இப்போ என்ன செய்யறது? பம்பாய் எங்களுக்குப் புதிசு. போரிவிலி கருப்பா, சிவப்பா தெரியாது. மச்சினன் இருப்பது தத்தபாடா ரோடு என்று தெரியும். ஆனால் அது மேற்கு, கிழக்கு இரண்டு பகுதிகளையும் இணைக்கும் என்பதோ அவன் கிழக்குப் பகுதியில் இருந்தான் என்பதோ தெரியாது. அப்போ எங்க 2 பேர் கிட்டேயும் வீட்டில் தொலைபேசி இல்லை. ஃபோனிலும் தகவல் தெரிவிக்க முடியாது. கீழே இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டதற்கு வேறு ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. எங்களுக்கு அலுவலகம் மூலம் தகவல் வந்தால்தான் செய்ய முடியும் என்றும் வண்டி சீக்கிரம் கிளம்பும் என்பதால் செய்யவில்லையோ என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். மணி 10, 12 என்று ஓடிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அங்கே ஸ்டேஷன் வாசலில் இருந்த ஆட்டோ, வாடகைக் கார் முதலியனவற்றில் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கள் பெட்டியிலும் உள்ளவர்கள் எல்லாம் இறங்கி நாங்களும், ராஜ்கோட்டில் ஏறியவர்களும்தான் பாக்கி. அவர்களும் போரிவிலிதான். ஆனால் அவர்கள் 7,8 பேர் இருந்தார்கள். மேலும் போரிவிலி மேற்கு என்றார்கள். நான் ரொம்பச் சமர்த்தாக நாங்கள் மேற்கா, கிழக்கா எனத்தெரியாது என்பதைச் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேன். வேறு வழியில்லாமல் 1 மணி போல் இருக்கும் நாங்களும் இறங்கினோம். மூட்டை, முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஒவ்வொருத்தராகக் கேட்டோம். அவர்கள் கேட்ட பணத்தில் நான் ஒரு ஆட்டோவே வாங்கலாம் போல் இருக்கே என்று நினைத்தேன். ஒன்றும் சரிவராமல் பேசாமல் உள்ளே போய் உட்காரலாம். வண்டி கிளம்பும்போது ஏறிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது ஒருத்தர் தான் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வருவதாகவும் 400ரூ கொடுத்தால் போதும் எனவும் சொன்னார். நாங்கள் 200ரூ தான் கொடுக்க முடியும் என்று சொல்ல அவர் கடைசியில் 250/க்கு ஒத்துக் கொண்டு எங்களை ஏற்றிக் கொண்டார். போரிவிலியில் எங்கே என்று கேட்க நான் ரொம்பத் தெரிந்த மாதிரித் "தத்தப்பாடா ரோடு," என்றேன். அவர், "பஹின் ஜி., தத்தபாடா ரோட் மே கஹான்? பூர்வ் யா பஸ்சிம்?" என்று கேட்க, நான், "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.

Wednesday, October 25, 2006

144. வெற்றி நமதே!!!!!!!

ஹிஹிஹிஹி, தலைப்புக்கும் எழுதப்போறதுக்கும் சம்மந்தம் இருக்கான்னு தெரியலை. சும்மா மனசிலே தோணினது இந்தத் தலைப்புத் தான் வச்சுட்டேன், அடிக்க வராதீங்க, உங்களை நீங்களே அடிச்சுக்கறது வரவேற்கப்படுகிறது. இப்போ நாம் ஜாம்நகருக்கு மறுபடி போறோம். இன்னிக்குச் செய்திகளிலே ரொம்ப அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் தீ விபத்தினாலே. நாங்க இருக்கும்போது ரிலையன்ஸ் கால் பதிக்க ஆரம்பித்து இருந்தது. டினா முனிமுக்கு (அம்பானியின் 2-வது மகனைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஜாம்நகரில் இருந்து தான் ஆடைகள் பாரம்பரிய வழக்கப்படித் தைத்து, புடவை நெய்து போனது. ஜாம்நகர் புடவைகள் ரொம்பப் பிரசித்தம். ரொம்பவே விலையும் குறைச்சல். தற்சமயம் எப்படினு தெரியாது. இருந்தாலும் இங்கே எல்லாம் பார்க்கும்போது அங்கே கட்டாயம் குறைச்சலாகத் தான் இருக்கும். இப்போ நம்ம பிரச்னைக்கு வருவோம்.
&&&&&&&&&&&&&&&&&&&

சாயந்திரம் பால் காய்ச்ச வேண்டும்னு சொல்றாரே சமையல் அறையைச் சுத்தம் செய்து விட்டுக் குளிக்கலாம் என்று உள்ளே போகப்போனால் தமிழ் சினிமாவில் மர்ம மாளிகையில் இருக்குமே சிலந்தி வலை அது மாதிரி இருக்கிறது. நிஜமாவேக் கையால் அதை விலக்கி விட்டுக் கொண்டுதான் போகணும். தரையில் அங்குலம் இல்லை அடிக்கணக்கில் தூசி. முதலில் ஒரு துடைப்பம் வேண்டுமே. கையில் அதை எடுத்து வரவில்லை. பக்கத்தில் கேட்டு வாங்கிப் பெருக்கிக் கழுவிவிட்டுப் பின் கதவைத் திறந்தேன் ரொம்ப ஆசையுடன், கிச்சன் கார்டன் எப்படி இருக்கும் என்று பார்க்க. பார்த்தால் ரொம்ப வறண்டு போய் இருந்த பூமி. வீட்டுக் காம்பவுண்டுக்கு அப்புறம் ஒரு சிறிய சாலை இருந்தது. அது பொதுச் சாலை என்றும், பொது மக்கள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பொது மருத்துவமனைக்கு அந்த வழியில் தான் போவார்கள் எனவும் சொன்னார்கள். அதற்கு அப்புறம் ஒரே வெட்ட வெளி தான். சில கிலோ மீட்டருக்கு அப்பால் சில வீடுகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்தன. அதற்கும் அப்பால் கடல் தான் இருந்தது. கப்பல்படைத் தளமும் இருந்தது. எங்கள் குழந்தைகள் இருவரும் எப்பவுமே எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஊரிலும் அனுசரித்துக் கொள்வார்கள். ரொம்பவும் யதார்த்தம் இரண்டு பேரும். ஆகவே சீக்கிரம் பொருந்தி விடுவார்கள் என நினைத்தேன்.

சென்னையில் என் அப்பா வீட்டில் ஒரு விசேஷம் என்பதால், நானும் குழந்தைகளும் ஜாம்நகரில் இருந்து சென்னை ஒரு 2 நாளில் போவதாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தது. இப்போது தான் வந்ததாலும், ஜாம்நகர் அலுவலகத்தைத் தவிர கட்சில் உள்ள "புஜ்" ஜில் உள்ள அலுவலகமும் என் கணவரின் கீழ் இருந்ததால் அவர் நாடாறு மாதம், காடாறு மாதம் தான் இங்கிருந்து மாற்றல் வரும் வரைக்கும். ஆகவே அவர் எங்களுடன் சென்னை வரவில்லை. நாங்கள் சென்னை போகும் திட்டம் என் கணவரின் முதல் தம்பிக்குத் தெரியும் ஆதாலால் அவன் எங்களை பம்பாய் வந்து விட்டுப் பின் சென்னை போகும்படிக் கூறி இருந்தான். நாங்கள் அதுவரை பம்பாய் போனது கிடையாது. ஒவ்வொரு லீவிலும் போக முடியாமல் ஏதாவது தடை இருக்கும். இப்போ அவனுக்குக் குழந்தை வேறே பிறந்திருந்தது. நாங்கள் இன்னும் அந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்தும் பம்பாயில் என் கணவரின் தாய்வழி உறவினர்கள் நிறைய இருந்ததாலும் அங்கே போய்விட்டே சென்னை போவதாக முடிவு செய்து அதற்குத் தகுந்தாற்போல் டிக்கெட் எடுக்கப் பட்டிருந்தது. செளராஷ்ட்ரா மெயில் துவாரகா அருகே இருக்கும் "ஓகா" என்னும் ஊரில் இருந்து ஜாம்நகர், ராஜ்கோட் வழியாகத் தான் அஹமதாபாத் வந்து பரோடா, சூரத் வழியாக பம்பாய் வரும். என் மைத்துனன் "போரிவிலி"யில் இருந்தான். அவன் அலுவலகக் குடியிருப்பு. அங்கே இருந்து "சர்ச் கேட்" பகுதியில் உள்ள அவன் அலுவலகத்துக்கு நேரே ரெயில் இருந்தது. அவன் மனைவியும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்தாள். இந்த செளராஷ்ட்ரா மெயில் காலை 6-20 மணி அளவில் "போரிவிலி" வரும். ஆகவே அவனுக்கு ஸ்டேஷன் வந்து கூட்டிப் போகவும் வசதி. இதற்கு முன்னால் என்றால் நாங்கள் அமர்க்களத்தோடு ஜாம்நகர் வந்தோமே அந்த
"ஹாப்பா ஜனதா" வண்டி தான். அது ஹாப்பாவில் இருந்து கிளம்புவதோடு இல்லாமல் போரிவிலிக்குக் காலை 4-30-க்கே போய்விடும். அவங்க தூக்கத்துக்கு இடைஞ்சல். எல்லாருக்கும் வசதியாக இந்த வண்டி ஏற்பாடு செய்து குறிப்பிட்ட நாளில் கிளம்பினோம்.

இதுவரை நான் தனியாகப் பிரயாணம் செய்தது என் பையன் பிரசவத்துக்கு மதுரை போகும் போதும், அங்கே இருந்து திரும்ப நசிராபாத் வரும்போதும் தான். மதுரை போகும்போது என் தம்பியும் ,அம்மாவும் நசிராபாத் வந்திருந்தார்கள் என்றாலும் தம்பி ரொம்பவே சின்னப் பையன். மொழிப் பிரச்னை. ஆகவே கிட்டத் தட்ட நான் தான் கூட்டிப் போனேன் என்று சொல்ல வேண்டும். திரும்ப வரும்போது அண்ணாவும், மன்னியும், என் சிறிய நாத்தனாரும் வந்தார்கள் என்றாலும் அதே பிரச்னைதான். அப்பவும் நான் தான் கூட்டி வந்தேன். இப்போ ரொம்ப நாள் கழிச்சு நாங்க 3 பேரும் தனியாகப் போகிறோம். அதுவும் முதல் முதல் பம்பாய்க்கு. என் மைத்துனன் வீட்டிலும் சரி, எங்களுக்கும் சரி அப்போ ஃபோன் வசதி இல்லை. ஆஃபீஸ் நம்பரில்தான் முக்கியமான விஷயம் இருந்தால் அண்ணா, தம்பி பேசிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் கடிதம் தான். ஆகவே என் மைத்துனன் போரிவிலியில் CWC க்வார்டர்ஸில் "தத்தபாடா ரோட்"டில் இருக்கிறான் என்று தெரியும். மற்றபடி அவன் அலுவலகம் சர்ச்கேட்டில் இருக்கிறது என்றும் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. என் கணவரிடம் எதற்கும் ஸ்ரீதர் விலாசம் கொடுங்கள் என்றதற்கு அவர், உன்னை ரெயில் ஏற்றிவிட்டு அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்து விடுகிறேன். மத்தியானம் 2-200க்கு ஏறினால் காலையில் போரிவிலி 7 மணிக்கு வீடு போயிடலாம் என்றார். என் மாமனார், மாமியார் வேறு அப்போ அங்கே தான் இருந்தார்கள். அதனாலும் நாங்கள் கட்டாயம் போக வேண்டி இருந்தது. வண்டியில் ஏறினோம். வண்டியும் கிளம்பியது. அப்பா வராமல் குழந்தைகளுக்குள் ஒரு வெறுமை, இருந்தாலும் வேறு வழி இல்லை. ராஜ்கோட் ஒரு மணி நேரத்தில் வந்தது. ராஜ்கோட்டில் ஒரு குடும்பம் ஏறியது. அவங்க வீட்டையே காலி செய்து இந்த ஸ்லீப்பர் க்ளாசில் ஏற்றினார்கள். எங்களுக்குக் கால் வைக்க மட்டும் இல்லை, கை வைக்கவும் இடம் இல்லை. பாத்ரூம் போகப் பச்சைக் குதிரை தாண்டிப் போகவேண்டி வந்தது. அவங்ககிட்டே சொன்னால் குஜராத்தியில் சண்டை மாதிரி ஏதோ சொல்கிறார்கள். ஏற்கெனவே வெறுப்பில் இருந்த நான் இன்னும் வெறுப்பில் ஆழ்ந்தேன். ஒரு வழியாகக் காலை வந்தது. 5-00 மணி இருக்கும். நான் தான் கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டு இருப்பேனே, அது போல எழுந்து உட்கார்ந்திருந்தேன். வண்டி "பால்கர்" என்னும் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. டீ வந்தது சாப்பிட்ட படி கேட்டேன், "போரிவிலிக்கு இன்னும் எத்தனை தூரம்?" சாய்வாலா சொன்னார்: "யே காடி டீக் ஸே ஜாதே தோ ஏக் கண்டே மே ஜாயேகி" என்றார். "என்ன இது இப்படிச் சொல்றாங்க!" என்று நினைத்தேன். வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எதிர்க்கட்சிகளின் சதியால் தலைவியின் வீட்டில் மின் தடை ஏற்பட்டது என்று உளவுப்படைத் தகவல். தலைவி அதை முறியடித்து இன்று பதிவு போட்டுள்ளார். அதான் "வெற்றி நமதே!!!!!!", அப்பாடி ஒரு வழியாத் தலைப்புக்கு அர்த்தம் கண்டு பிடிச்சாச்சு.

Sunday, October 22, 2006

143. நான் பார்த்த சினிமா

ஏற்கெனவே ஒரு சினிமா விமரிசனம் எழுதி இருக்கிறேன். படமே சரியாப் பார்க்காமல். இதுவும் கிட்டத் தட்ட அப்படித்தான் இருக்கும். நம்ம கார்த்திக்குக்கு ரொம்பக் குறை. அவரோட சினிமா பத்தின பதிவுகளிலே நான் பின்னூட்டம் கொடுக்கிறது இல்லைனு. அதான் இன்னிக்கு சினிமா பத்தி மட்டும் எழுதறதுன்னு ஒரு முடிவு. ஜாம்நகர் கதை நாளை வெளி வரும். இதிலிருந்து என்ன தெரிகிறதுன்னா நான் தான் நிரந்தரத் தலை(வலி)விங்கறதை அவர் அங்கீகாரம் செய்திருக்கிறதாலே தான் என்னுடைய பின்னூட்டம் முக்கியம்னு நினைக்கிறார்னு எனக்குப் புரிஞ்சது. அப்பா! எவ்வளவு பெரிய வாக்கியம் எல்லாம் எழுத வேண்டி இருக்கு பாருங்க, நான் தலைவிங்கறதாலே, ஆகவே சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, உடன் பிறப்புக்களே, உடன் பிறக்காதவர்களே எல்லாரும் என்னுடைய கஷ்டத்தைப் புரிந்து கொண்டு என்னைத் தலைவியாக அங்கீகரிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். சீச்சீ, இது என்ன தேர்தல் பிரசாரம் மாதிரிப் போகுது? சினிமா பத்தி இல்லை எழுதணும்? இருங்க விஷயத்துக்கு வரேன்.

நேத்திக்கு ஜெயா டி.வி.யிலே "காக்க காக்க" படம் போடப் போறதாக ஒரு வாரமாகச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். படம் சாயந்திரம் 4-00 மணிக்குத் தான் ஆரம்பிக்கும். வழக்கமாகப் போகும் நடைப்பயிற்சி நேத்து தீபாவளி என்பதால் லீவு விட்டாச்சு. பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். தியேட்டரில் எல்லாம் படம் பார்த்து ரொம்பக் காலம் ஆச்சு. நாங்க சென்னையில் கடைசியாப் பார்த்தப் படம் "மை டியர் குட்டிச் சாத்தான்" தான். அதுக்கே நாங்க அம்பத்தூரில் இருந்து ஒரு 15 பேர் போல முன்பதிவு செய்துட்டுப் போனோம். எங்க அண்ணாவீட்டில் மன்னியும், அண்ணன் பையன், தம்பி மனைவி, அவங்களோட கைக்குழந்தை, பக்கத்து வீட்டுக்காரங்க, அவங்களோட பசங்க, நாங்க இரண்டுபேர், எங்களோட இரண்டு குழந்தைகள்னு போனோம். ஏதோ பிக்னிக் போறது மாதிரி ஒருத்தர் பூரி, கிழங்கு, ஒருத்தர் புளியோதரை, தயிர் சாதம் ஒருத்தர் புலவு என்று செய்து எடுத்துப் போய்த் தியேட்டரில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டுப் படம் பார்த்தோம். படம் பார்க்க வந்தவர்களுக்கு எங்களைப் பார்க்கவே நேரம் போதவில்லை. ஏதோ எங்க சொந்தத் தியேட்டர் மாதிரி நினைத்துக் கொண்டு ரொம்ப சுதந்திரமாக உலாவினோம். ஏதோ காட்டில் இருந்து வந்திருப்பாங்க போலன்னு மத்தவங்க நினைச்சிருக்கலாம். எங்கள் தலைல விளக்கெண்ணெய் தடவிட்டு தலை வாரிக் கொண்டு மஞ்சள் கலரில் ஜவ்வந்திப் பூ வச்சுக்கலை. அதுதான் பாக்கி. மாட்டு வண்டிலே போகலை. பஸ்ஸில் போய் இறங்கினோம். அதுக்கு அப்புறம் நாங்க வடக்கே மாத்திப் போனதும் அங்கே திறந்தவெளித் திரையரங்கம் தான்.ராத்திரி 8-00 மணிக்கு மேல் தான் படம் ஆரம்பிக்கும். குளிர் நாட்களில் 7-00 மணிக்கு. எப்போ ஆரம்பிச்சாலும் வீடு தியேட்டர் கிட்டே இருந்ததாலே சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு நிம்மதியாப் போய்ப் படம் பார்க்கலாம். இல்லாட்டியும் பையனோ, பெண்ணோ போய்ப் பார்த்துக் கொண்டு வருவார்கள். படம் எப்போ ஆரம்பிக்கிறதுன்னு. அதெல்லாம் கவலையே இல்லை. எல்லாரும் வந்ததும் தான் ஆரம்பிப்பாங்க.

இந்த மாதிரி எல்லாம் படம் பார்த்துட்டு இங்கே தியேட்டரில் போய் யார் பார்க்கிறது? அதனாலே எப்பவாவது யாராவது இன்னுமா இந்தப் படம் பார்க்கலைனு கேட்டால் அப்போ அந்தக் குறிப்பிட்ட படத்தின் காசெட் வாங்கிப் பார்க்கறதோட சரி. அதான் டி.வி.யிலே ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ரசமாக நவரசத்திலேயும் படம் வருதே. இப்போவெல்லாம் அதுவும் பார்க்கிறது இல்லை. என் கணவருக்குக் குத்தகைக்குக் கொடுத்துட்டேன். நேத்துப் பார்க்க உட்கார்ந்தபோதே மணி 5-00 ஆயிடுச்சு. என்ன, வழக்கம் போல படம் பார்க்கணும்கிறதே மறந்துடுச்சு. என் கணவர் டி.வி. போட்டதும் தான் நினைவு வந்து ஜெயாவிலே நான் இன்னிக்குப் படம் பார்க்கணும்னு அறிவிப்பு செய்தேன்.

என் கணவர்:"என்ன படம்?"
நான்: "காக்க காக்க" சூர்யா, ஜோதிகா நடிச்சது.
அவர்:" என்னடி இது? கந்த சஷ்டி கவசம் சொல்றயோனு இல்லை நினைச்சேன்.
நான்: படத்தோட பேரே அதுதான். போலீஸைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்காமே? இத்தனை படம் பார்க்கறீங்க? இது தெரியலியே?"

அவர் உடனேயே சானலை மாற்றினார். படம் வந்தது. சூர்யா அடிபட்டு விழுந்திருக்க, (எங்கேன்னு எல்லாம் தெரியலை) அவர் நினைவுகளில் படம் ஓடுகிறது.

நான்: இது என்ன? எப்படி அடிபட்டது?
அவர்:அதெல்லாம் நினைவு இல்லை. ஆனால் ஜோதிகா செத்துப் போனதும் சூர்யா பழி வாங்குவார். அதான் முடிவு.
நான்:கோபத்துடன்,"இப்போ உங்களை யார் கதை கேட்டது? முன்னாலேயே சஸ்பென்ஸைச் சொல்லுவாங்களா?"
அவர்:நீ தானே கேட்டே? எனக்கு நினவு வரதைச் சொன்னேன்.

தலையில் அடித்துக் கொண்டு சானலை மாற்றினே. சன்னில் "சாமி"படம் ஓடிக் கொண்டிருந்தது. பார்க்க விருப்பம் இல்லாமல் பொதிகைக்குப் போனால் தேவதர்ஷிணி சீரியலுக்காக அழுது கொண்டிருந்தார். "பாதைகள்" சீரியல். ராஜ்ஜில் என்ன படம்னே புரியலை. விஜய்யில் ஜோடி நம்பர் ஒன். சரினு கே டி.வி.க்குப் போனால் ஸ்ரீகாந்த், சதா நடிச்ச ஏதோ ஒரு படம்.நாசர் ஊட்டி சேரிங் க்ராஸில் வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறார். சரி பார்க்காத படம், கதையும் தெரியாது, மேலும் ஸ்ரீகாந்த், சதா முதல்முறை ஜோடினு நினச்சுப் பார்க்க உட்கார்ந்தால் என் கணவர் மறுபடி (வெளியே எதுக்கோ போயிருந்தார்) உள்ளே வந்தார். படத்தைச் சில நிமிஷம் பார்த்துவிட்டு உடனேயே, "அட, இந்தப் படமா? இதிலும் சதா செத்துப் போவாங்க, அநேகமாகக் கொலை பண்ணுவாங்கனு நினைக்கிறேன்." என்றார்.பல்லைக் கடிச்சேன்.

இப்படி எல்லாப்படத்தையும் முன்னாலே பார்த்து விட்டு நான் பார்க்கும்போது கதையைச் சொன்னா என்ன செய்யறதுன்னு ஹிந்தி சானலுக்குப் போய் ஏதாவது பார்க்கலாம்னு சோனிக்குப் போனால் "சாந்தினி" படத்தை 108-வது முறையாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மற்ற சானல்களில் பார்க்கப் பிடிக்காமல் மனம் வெறுத்துப் போய்ப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.அவர் நிம்மதியாக ஏதோ ஒரு மலையாளச் சானலில் மோஹன்லால் படம் பார்க்க ஆரம்பித்தார்.

Thursday, October 19, 2006

142. ஜாம்நகரில் நாங்கள்

ஹாப்பா ஸ்டேஷனில் இறங்கிய நாங்கள் ஊரைப் பார்த்து அதிர்ந்தோம் என்றால், எங்களுக்கு என்றுவந்த வண்டியைப் பார்த்தும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். சாதாரணமாக நாங்கள் போவதற்கு ஜீப்பும், சாமான்கள் ஏற்ற வண்டியும் வரும். இந்த வண்டிகளில் ஏறுவது கஷ்டம். இன்னிக்கு இந்த நேரம் நாங்கள் வருவோம் என்று எதிர்பார்க்காத காரணத்தால் ஒரே ஒரு மட்டும் வந்திருந்தது.வண்டியை வெளியே எடுத்து வர அதுவும் ஜீப்பை எடுத்து வர முன்கூட்டி அனுமதி பெறவேண்டும். மேலும் நாங்கள் வரலை என்றால் என்ன செய்வது? அதனால் ஜீப்பை அனுப்பவில்லை. எல்லாரும் ரொம்பக் கஷ்டப்பட்டு அந்த வண்டியில் ஏறிக்கொண்டு கையில் கொண்டுவந்த சாமான்களையும் ஏற்றிக் கொண்டோம். ப்ரேக்வானில் வந்த மற்றசாமான்கள் ஸ்டேஷனிலேயே இறக்கி இருந்தார்கள்.அது பின்னால் பெரிய வண்டி கொண்டு வந்து ஏற்றிக் கொள்ளலாம் என்று வீட்டுக்குப் போனோம். அலுவலக நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன் வீட்டில் நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். போகும் வழி எல்லாம் பலநாள் மழை கண்டது போல்க் காய்ந்து இருந்தது. ஊரே ஒரு வித வெறுமையில் இருப்பது போல் இருந்தது. மனம் பதியவே இல்லை. திரும்ப ராஜஸ்தான் போக ஏங்கியது.

ஒருமாதிரியான தவிப்புடன் நாங்கள் எங்கள் க்வார்ட்டர்ஸ் இருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஜாம்நகர் ராஜா ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் ஊருக்கு நடுவே மக்கள் வசதிக்காகச் சில படை வீரர்களை வைத்துக் குடியிருப்பு ஏற்படுத்தி இருந்திருக்கிறார். பின்னால் ஆங்கிலேயர் காலத்திலும் அங்கேயே சில படைவீரர்கள் தங்கி இருந்திருக்கிறார்கள். . ஊருக்கு நடுவே இருப்பது வசதி என்பதால் அங்கேயே இருந்து வருகிறது. மற்ற ராணுவத்தினர் ஊரைவிட்டுத் தள்ளி கண்டோன்மெண்டில் இருந்து வந்தார்கள். அங்கேயும் குடியிருப்பு உண்டு என்றாலும், என் கணவரின் அலுவலகம் இங்கே இருந்த காரணத்தாலும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து என் கணவரின் பதவிக்கு ஏற்ற குடியிருப்பை இங்கே நிரந்தரமாக்கி வைத்திருந்த காரணத்தாலும் என் கணவர் இங்கேயே இருக்கலாம் என நினைத்தார். முன்னால் ராஜா காலத்தில் சொலேரியம் இருந்திருக்கிறது. ஆகவே ரோடின் பெயரே சொலேரியம் ரோடு தான். பக்கத்தில் அரசாங்கப் பொது மருத்துவ மனையும், அதைச் சேர்ந்த கல்லூரியும். ரோடில் திரும்பினால் செக்போஸ்ட் தாண்டி ராணுவக் குடியிருப்பு. அங்கே நுழைந்தோம். சாலையின் கடைசியில் போனால் அங்கேயும் ஒரு பெரிய தடுப்பு. பக்கத்தில் கிராமங்கள் இருந்ததால் பொதுஜனங்கள் இந்தப் பாதையை உபயோகிக்காமல் இருக்கவாம். சாதாரணமாக அனுமதி பெற்ற பால்காரரில் இருந்து அடிக்கடி வரும் சிலரைத் தான் உள்ளே விடுவார்கள். இது வேறே ஊருக்குள் இருக்கிறது. சுற்றி ஊர், நடுவில் இந்த அலுவலகங்களும், இதைச் சேர்ந்த குடியிருப்புக்களும். பார்த்தாலே வீடுகள் எல்லாம் கட்டிப் பல ஜென்மம் ஆகி இருக்கும் போல் இருக்கிறதே என நினைத்தேன்.

வீட்டுக்கு முன்னால் வண்டி நின்றது. இறங்கும் முன் குயில் கூவும் சப்தம். உடனேயே குழந்தைகள் இருவரும்," அம்மா உன் பறவை இங்கேயும் இருக்கு", என்றனர். அவ்வளவாக அதில் விருப்பம் இல்லாமல் கீழே இறங்கினேன். வீடு காம்பவுண்டில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்தது. என்றாலும் நசிராபாத் "மால் ரோடு" வீடு இன்னும் உள்ளே போக வேண்டும். காம்பவுண்டில் இருந்து உள்ளேயே ஒரு 1/2 கி.மீ போல் போக வேண்டும். போகும் பாதை பூராக் கவிதை தான். இது அப்படி இல்லை. சுற்றி வேப்ப மரங்கள் இருந்தாலும் பச்சை பார்த்தால் வெளிறிப் போய் இருந்தது. புத்தம்புதிய வேப்ப இலைகளை நல்ல பச்சை நிறத்துடனும், வேப்பம்பூக்களின் மணத்துடனும் பார்க்கும் போது மனதில் ஏற்படும் இனம் தெரியாத சந்தோஷம் ஏற்படவே இல்லை. சரினு ஒரு மாதிரியா மனசைத் தேத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

கூட வந்த ஆஃபீஸ் நண்பர்கள் இருவரும்," நேத்துத் தான் ஆளை வைத்துச் சுத்தம் செய்தோம்." என்றார்கள். தட்டிக் கதவு. மேலே ஏறச் சில படிகள். நடுவில் வண்டியை இறக்கச் சாய்வாகப் ப்ளாட்பார்ம் போட்டிருந்தது. மேலே ஏறிக் கதவைத் திறந்து செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே காலை வைத்தால் 2" புழுதி காலில் ஒட்டுகிறது. சரி, வராந்தா வெளியே இருக்கிறதாலே அப்படி இருக்கும்னு உள்ளே நுழைந்தோம். மூன்று பெரிய அறைகள். ஒன்று படுக்கை அறையாகவும்,சற்று உள்ளே இருந்தது. வெளியே இருந்த ஒரு அறை உட்காரும் இடமாகவும் அதற்கு அப்பால் ஒரு அறை சமையல், சாப்பாடு அறையாகவும் உபயோகிக்க வேண்டும் என்றனர். வராந்தாவை ஒட்டி ஒரு பத்துக்கு 4 என்ற அளவில் ஒரு சிறிய அறை. சாமான் போடலாம் என்றார்கள். சமையல் அறையில் சாமான் வைக்க எதுவுமே இல்லை. சமைக்க மேடை கூட இல்லை. முன்னால் இருந்தவர்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததால் சமையலுக்கு ஆள் இருந்ததாகவும் அவங்க மேஜையிலேயே சமைத்ததாகவும் சொன்னார்கள். பார்த்தால் ஏதோ விடுதி மாதிரி இருந்ததே தவிர வீடு என்ற எண்ணமே வரவில்லை. ஜன்னல் எல்லாம், கார்த்திக் ஏதோ ஒரு படத்தில், "இது ஜன்னல் மாதிரி," என்று ரோஜாவிடம் சொல்வாரே அது மாதிரிக் கையால் கழட்டி விட்டுப் பின் மீண்டும் மாட்டலாம். அப்படி இருந்தது. அப்போ அந்தப் படம் வரவில்லை. இல்லாட்டி அந்த வீட்டில் எடுக்கச் சொல்லி இருந்திருக்கலாம். அதுக்கு அப்புறம் அந்தப் படம் வந்தப்போ நினைச்சேன். நம்ம வீட்டைப் பார்த்துட்டுத் தான் எடுத்திருப்பாங்களோன்னு. இந்த வீட்டில் குடித்தனம் செய்ய வேண்டும், குறைந்தது மூன்று வருஷங்களுக்காவது. என்ன செய்யப் போகிறேன்? என் கணவர், "சாயந்திரம் பால் காய்ச்ச வேண்டும். பால்காரரை அனுப்புங்க." என்று சொன்னது கனவு மாதிரிக் கேட்டது. சத்தமாய் அழவேண்டும் போல் இருந்தது.

Tuesday, October 17, 2006

141. இடுக்கண் வருங்கால் நகுக.

சொல்றது என்னமோ சொல்லிட்டாங்க, "இடுக்கண் வருங்கால் நகுக"ன்னு. எங்கே இருந்து நகுகிறது. பின்னே பாருங்க, போன வாரம் பூரா பிரச்னை வாஆஆஆஆரமாப் போச்சு. எல்லாம் முதல் முதலில் ஏ.சி. யில் ஆரம்பித்தது. அதிலே panel எரிந்து போயிருக்கிறது. தெரியவே இல்லை. மெக்கானிக் வந்து பார்த்துட்டு, short circuit ஆகாமல் இருந்ததே உங்க அதிர்ஷ்டம் என்றார். சரினு இந்த இடுக்கண்ணிற்குச் சிரித்து விட்டு மெக்கானிக்கிடம் வேலை செய்யச் சொல்லிவிட்டுப் போய்க் கழிப்பறையைப் பார்த்தால் slimline flush ஆகவே இல்லை. சரினு வெளியே இருக்கும் நம்ம சிஸ்டம்தான் பெஸ்ட் என்று அதைப் புகழ்ந்துவிட்டு வந்து ரேடியோவில் FM Gold-ல் 3-00 மணிக் கச்சேரி கேட்க ரேடியோவைப் போட்டால் அது பாடவே இல்லை. இந்த இரண்டு இடுக்கண்ணிற்கும் சிரிக்கிறதா, அழுகிறதானு தெரியலை. Parryware company-க்குத் தொலைபேசினால், " உங்க நம்பரா? வீடா? எங்களுக்கு நல்லாத் தெரியுமே? உடனே ஆள் வருவார்." என்று சொல்கிறார்கள். அவங்க கிட்டே,"slimline never fails"னு விளம்பரம் செய்யாதீங்க"னு புத்திமதி சொல்லிவிட்டு ஃபோனை வைத்தேன்.

இதுக்கு முன்னாலேயே நாங்கள் அடிக்கடி ஊருக்குப் போய்க் கொண்டிருந்த காரணத்தால் gas regn. cancel செய்து விட்டார்கள். வீட்டில் இரண்டு பதிவு இருக்கிறதாலே இன்னொரு பதிவு மூலம் சிலிண்டர் வந்து கொண்டிருப்பதால் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. அவங்க கிட்டே தொலைபேசினால் அவங்க, "நாங்க வீட்டிற்கு வந்து சோதனை போடுவோம்" என்று சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே போகாமல் காவல் காத்ததுதான் மிச்சம். கடைசில பார்த்தால் அவங்க முன்னாடியே நாங்க வெளியே போயிருந்த ஒருநாள் வந்துட்டு வீடு பூட்டி இருக்குன்னுட்டுப் போயிருக்காங்க.

என்னத்தைச் சொல்றது? கம்ப்யூட்டரில் உட்கார்ந்து பதிவுகளைப் பார்த்து ஏதாவது பின்னூட்டம் கொடுக்கலாம், அல்லது ஜி-மெயிலுக்குப் போய் முத்தமிழ்க் குழுமத்தின் பதிவுகளைப் பார்க்கலாம்னு வந்தால் அதுக்கு மேலே அது பல்லை இளிக்கிறது. Google Message-ல் Internal Server Error-500 அப்படின்னு வருது. ஒரு வழியாகச் சனிக்கிழமை அன்னிக்கு எல்லாம் சரியாகிப் பதிவும் போட்டு விட்டு ஞாயிறு அன்று வந்தால் யாஹூ ஹோம் பேஜ் திறக்கவே இல்லை. மறுபடி என்னோட பதிவே எனக்குத் திறக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சரி, போன்னு நேத்திக்குப் பார்த்தால் காலையிலேயே கரண்ட் கட், அதோடு வீட்டு வேலைகளில் உதவும் அம்மாவும் லீவு. வாஷிங் மெஷின் குழாய் மாற்ற வேண்டும். கரண்ட் வந்தாலும் வோல்ட்டேஜ் சரியாக இல்லை. மத்தியானம் 2-00 மணிக்கு வந்தது, கம்ப்யூட்டரில் உட்கார்ந்தா கம்ப்யூட்டரில் டாட்டா இண்டிகாம் maintenance work னு இணைப்புக் கொடுக்கவே இல்லை. இரவு 7-30 மணிக்குத் தொலைபேசியில் பேசி இணைப்புக் கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள். இரவு யார் உட்காருகிறது. இன்னிக்குத் தான் பார்த்தேன். இணைப்பு வந்ததை. இப்போ உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன். இன்னிக்கு இதுக்கு மேலே எழுத நேரம் இல்லை. வேலை இருக்கிறது. "ஓம் நமச்சிவாயா" நாளைதான் எழுத வேண்டும். நம்ம அம்பிக்குத் தான் ரொம்பவே சந்தோஷம், நான் ஒண்ணும் எழுதாமல் இருக்கிறதில். மெயில் கொடுத்து மிரட்டி இருக்கிறார், புயல் வேகத்தில் எழுதினால் யார் பின்னூட்டம் கொடுக்கிறதுன்னு? grrrrrrrrrrrrrrrrrrrr நான் ஓட்டை வாயாம், அம்பி, போர்க்கொடி இரண்டு பேரும் வாயில் ஓட்டையே இல்லாதவங்களாம். பின்னே எப்படிச் சாப்பிடறாங்க? அவங்க சொல்லுனு சொல்ற விஷயத்தைத் தானே நான் சொல்றேன்? எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா வாங்க, அப்போதான் புரியும், இரண்டு பாசமலருக்கும்.

இடுக்கண்ணிற்கு இன்னும் சிரிக்கணுமா? இது போதுமா? :D

140. என்னோட ரயில் அனுபவங்கள்-2

ஏற்கெனவே எங்களுக்கு மூன்று பேருக்கும் ஊரை விட்டுப் போகவே இஷ்டம் இல்லை. இதிலே ரெயிலே வரலைன்னா இன்னும் ஜாஸ்தியாக் கோபம் வந்தது. எங்களுடன் என் கணவர் ஆஃபீஸில் அவர் கீழ் வேலை பார்க்கும் எல்லாரும் வந்திருந்தார்கள், கூடவே ராணுவ

வீரர்களும் சாமான்களை ஏற்றுவதில் உதவி செய்ய வந்திருந்தனர். "பாக்கிங்" ஆரம்பித்ததுமே வந்து உதவி செய்வார்கள். அதெல்லாம் கணக்கே இல்லை, அவங்க உதவிக்கு. எல்லாரும் ஒரு பெரிய படையாகத் திரண்டு போய் ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய் ரயில் வராத காரணத்தைக் கேட்கவே,அவர், "இப்போ தான் அஜ்மேரில் இருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அங்கே ரயில் மறியல் நடக்கிறதாம். போலீஸ் வந்து மறியல்காரர்களை அப்புறப்படுத்தியதுக்குப் பின் தான் ரயில் வர முடியும்." என்றார்.


எங்களுக்கு ரெயிலில் சாப்பிட உணவு எடுத்து வருவதாகச் சொன்னப் பெண்மணி அஜ்மேரில்

வீடு இருப்பதால் இந்த ரெயிலிலேயே வந்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தார். ரெயில்

கிளம்பவில்லை எனத் தெரிந்ததும் வழக்கம்போல் அங்கே போக்குவரத்துக்குப் பயன்படும்

"டெம்போ"வில் வந்து சேர்ந்து விட்டார். ரயில் ஒரு வழியாகப் பதினோரு மணி அளவில் வந்தது. மீட்டர் கேஜ் வண்டி என்பதால் அப்போது அதில் ஏ.சி. எல்லாம் கிடையாது. (கைப்புள்ள, இப்போவும் மீட்டர்கேஜ் தானா? ப்ராட்கேஜ் ஆகிவிட்டதா?) ஆகி யிருக்கும்னு நினைக்கிறேன். முதல்வகுப்பில் ஏற்றினார்கள். எங்களை மாலை மரியாதையுடன். சாமான்கள் எல்லாம் "ப்ரேக் வான்"னில் ஏற்றப்பட்டது. முதல் வகுப்பில் நாங்கள் உள்ளே போனதும் உடனே வெளியேற்றப் பட்டோம். என்ன என்றால் டெல்லியில் இருந்து வரும் ஒரு

பஞ்சாபிக் குடும்பம் எங்கள் வரவை விரும்பவில்லை. செய்வது அறியாது திகைத்து நிற்கையில்

என் கணவரின் ஆஃபீஸ்காரர்கள் எல்லாம் அங்கே போய் சண்டை போட்டு, உடனேயே டி.டி.ஆரை வரவழைத்துப் பகலில் முதல் வகுப்பில் உட்காரலாம் என்ற சட்டத்தை எடுத்துச்

சொல்லும்படிச் செய்து என் கணவரை உட்கார்த்தி வைத்தார்கள். எங்கள் பையன் வேறு ஒரு பெட்டியில், நானும் எங்கள் பெண்ணும் இன்னொரு பெட்டியில், அந்தப் பெட்டியில்

இருந்தவர் எங்களைப் பெரிய மனதுடன் அனுமதித்தார். இப்படியாக நாங்கள் டிக்கெட்

இருந்தும் ஒண்டுக் குடித்தனத்தில் இருப்பது போல் ஒண்டிக் கொண்டு போனோம். மேலும் அது நாள்வரை நாங்கள் எங்கே போனாலும் நாங்கள் நால்வரும் ஒரு பெட்டியிலும், என் மாமனார்,

மாமியார் கூப்பேயிலும்(பக்கத்திலேயே) வருவார்கள். இப்போது மாமனார், மாமியார் பம்பாயில் இருந்த அவர் தம்பியிடம் இருந்ததால் நாங்கள் 4 பேர் மட்டும். இது வரை சேர்ந்து

வந்த நாங்கள் உடலளவில் பிரிந்து உட்கார்ந்து வந்தது அதுவே முதல் முறை. என் பையன் மாற்றி, மாற்றி எங்கள் பெட்டி, அப்பா இருக்கும் பெட்டி என்று வந்து கொண்டிருந்தான்.


நசிராபாத்திலும் வண்டி உடனே கிளம்பவில்லை. ஒரே கவலையாக இருந்தது. கடைசியில் ஒருத்தர் போய் விசாரித்ததில் நசிராபாத்தில் இருந்து "ப்யாவர்" ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் கிட்டத்தட்ட ப்யாவர் ஸ்டேஷனின் அவுட்டரில் ஒரு கூட்ஸ் வண்டி தடம் புரண்டதில் (அது பெட்ரோல் ஏற்றிச் செல்லும் கூட்ஸ்) அது சரியானதும்தான் வண்டி கிளம்பும் என்றார்கள். ஒரு வழியாக வண்டி கிளம்பிப் பக்கத்து ஸ்டேஷன் போனதுமே ரயில்வே ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் வந்து வண்டியில் யாரும் புகை பிடித்தல், மற்றும் உடனடியாகத் தீப்பிடிக்கும் வஸ்துக்கள் இருந்தால் எடுத்து விடும்படி அறிவிப்புச் செய்தார்கள். இந்த அறிவிப்பு "ப்யாவர்" ஸ்டேஷன் வரை தொடர்ந்தது. ப்யாவர் ஸ்டேஷனில் வண்டி மிக மிக மெதுவாக ஊர்ந்தது. சக்கரங்களின் உராய்வால் ஏற்படும் தீயைத் தடுப்பதற்காக. வண்டி ஸ்டேஷனில் நுழைய 40 நிமிஷம் ஆச்சு என்றால் ஸ்டேஷனில் இருந்து மெதுவாக வெளியே வந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை மெதுவாக வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. அது வரை எல்லாரும் சாப்பிடக் கூட இல்லை. சாப்பாடு கையில் கொண்டு வந்த சாமான்களுடன் இருந்தது.கையில் கொண்டு வந்த சாமான்கள் எங்கேயோ இருந்தன. போன உடன் சமைக்கப் பாத்திரங்கள், ஸ்டவ் அடுப்பு, வாளி, சமையல் சாமான்கள், ஒருவாரத்திற்குத்
தேவையான உடுப்புக்கள் அதில் அடங்கும்.

ஒருவழியாக நாங்கள் இறங்கும் வரை அந்தப் பஞ்சாபி எங்களைத் திட்டிக் கொண்டே வர,

அஹமதாபாத்திற்கு மாலை வர வேண்டிய ரயில் இரவு 10-00 மணிக்குப் போய்ச் சேர்ந்தது.

நாங்கள் போகவேண்டிய செளராஷ்ட்ரா மெயில் நாங்கள் ப்ளாட்பாரத்தில் இறங்கி

சாமான்களை வைக்கும்போது சொல்லிவைத்தால் போல் கிளம்பிக் கொண்டிருந்தது. அவுட்டரில்

இருந்தே பார்த்துக் கொண்டு வந்தோம்.ரெயில் நின்று கொண்டிருந்தது. இன்னும் பத்து

நிமிஷம் இருந்தால் போய்ப் பிடிக்கலாம் என்று நினைத்தோம். சரியாக நாங்கள் போய்

ப்ளாட்ஃபார்மில் கால் வைக்கவும் வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது. அடுத்த வண்டி இரவு

12-00 மணிக்கு ஜாம்நகருக்கு முன்னால் உள்ள "ஹாப்பா" என்ற ஸ்டேஷன் வரை போகும். அந்த வண்டி வரும். அது காலை 10-30 மணி போல் ஹாப்பா போகும்.

அங்கிருந்து ஜாம்நகருக்கு ஆட்டோவோ அல்லது வேறு வண்டியோ பிடித்துப் போகவேண்டும். அதை விட்டால் மறுநாள் காலை பம்பாயில் இருந்து வரும் செளராஷ்ட்ரா எக்ஸ்ப்ரஸ்

வரும். அதில் நாள் பூராப் போக வேண்டும். அது காலை 8-00 மணி அளவுக்குத் தான் அஹமதாபாத் வரும். என்ன செய்வது என யோசித்தால், என் கணவரோ "ஹாப்பா"வண்டியில் போய்விடலாம் என்று கூறினார். டிக்கெட் வாங்க வேண்டாம். ஆனால் அதில் முதல்

வகுப்பு இல்லை. ஜனதா வண்டி, எல்லாம் 2-ம்வகுப்புத் தான். அதில் ஏதாவது இடம் இருக்கிறதா என்று பார்த்தால் எல்லாம் பூர்த்தி ஆகி இருந்தது. இரவு தூங்கவே இல்லை. குழப்பமாக இருந்தது. ஆனால் என் கணவர் முடிவு எடுத்து விட்டார்,ஜனதாவில்

போவது என்று. எங்க வீட்டில் ஜனநாயகம் தான். எல்லாரும் அவர் அவர் அபிப்பிராயத்தைத்

தாரளமாகச் சொல்வோம். கத்திச் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் இறுதி முடிவு அவர்

எடுப்பதுதான். அதில் மாற்றம் இல்லை. ஆகவே இரவு வண்டி வந்ததும் டி.டி.ஆரிடம் கேட்டால் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் ஒரு இடம் கூட இல்லை. நசிராபாத்தில்

கிட்டத்தட்ட 30,40 பேர் வந்திருந்து ஒரு மஹாராஜாவை வழி அனுப்புவது போல் அனுப்பி

வைத்திருக்க இங்கே சாமான்கள் ஏற்றமுடியாமல் தவித்துக் கொண்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு பொதுப் பெட்டியில் ஏறினோம். அந்தக் காலத்துப் பெட்டி, எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. உட்காரவே இடம் இல்லை.

எல்லாக்கூட்டமும் நர்மதை நதிக்கரையில் உள்ள "ஓங்காரேஷ்வர்" கோவிலுக்குப் போய்விட்டு வருகிறது. சாமான் செட்டுக்களுடன் உள்ளெ நுழைந்த எங்களைப் பார்த்து மிரண்டார்கள். சாமான்களை எல்லாம் போகும் வழி, வரும் வழியில் ஒரு மாதிரி, கவனிக்கவும், ஒருமாதிரிதான் அடுக்கிவிட்டுக் கழிப்பறைக்குப் போகும் வழியில் எங்கள் படுக்கையைப் பிரிக்காமல் போட்டுவிட்டு அதன்மேல் நானும், எங்கள் பெண்ணும் உட்கார்ந்தோம். ஒரு பெட்டியின் மேல் எங்கள் பையன் உட்கார, என் கணவரும் எங்களுடன் ஒண்டிக் கொண்டார். முதல் வகுப்பு டிக்கெட்டுடன் பொது 2-ம் வகுப்பில் கழிப்பறைப் பக்கம் உட்கார்ந்து வந்தது முதல் முதல் நாங்களாகத் தான் இருக்கும். டிக்கெட் பரிசோதிக்க வந்த அலுவலர் எங்கள் டிக்கெட்டையும், எங்களையும் விசித்திரமாகப் பார்த்துவிட்டு, "ஏன் காலை வண்டியில் போயிருக்கலாமே?" என்று கேட்டார். நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டோம். என் கணவர் பதிலே சொல்லவில்லை. சற்று நேரத்துக்கு எல்லாம் உட்கார்ந்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சம் அனுசரித்துக் கொண்டு எனக்கும், என் பெண்ணுக்கும் இடம் கொடுத்தார்கள். நேரம் போகப் போக என் கணவருக்கும், பையனுக்கும் இடம் கிடைத்தது. ஒரு வழியாக ரெயில் ஹாப்பா ஸ்டேஷனுக்குக் காலை 11-00 மணி அளவில் போய்ச் சேர்ந்தது. ஊரைப் பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. கண்ணுக்குக் குளுமையான ராஜஸ்தான் நசீராபாத்தில் இருந்து விட்டு,இங்கே வந்துட்டோமே இதுதான் உண்மையில் பாலைவனம் என்ற எண்ணம் தோன்றியது. மனம் கலங்கியது. ஸ்டேஷனுக்கு என் கணவரின் அலுவலகத்தில் இருக்கும் 2 நபர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த வண்டியில் எங்களை எதிர்பார்க்கவில்லை, முதல் வண்டியில் வரவில்லை என்றதும், எதற்கும் பார்க்கலாம் என்று வந்திருந்தார்கள். எங்களை இந்த வண்டியில் பார்த்த அவர்களுக்கும் அதிர்ச்சிதான். அவர்களிடம் நான் முதல் முதல் கேட்ட கேள்வி இது தான்: இங்கே மரங்கள் இருக்கிறதா?முக்கியமாக வேப்பமரம் உண்டா? பறவைகள் உண்டா?" என்பதுதான். உங்க க்வார்ட்டர்ஸிலேயே சுற்றி வேப்பமரங்கள் தான் என்றார் அவர்.

Sunday, October 15, 2006

139. என்னுடைய ரயில் அனுபவங்கள்

முதல் முதல் நாங்க ராஜஸ்தான் போன போது என் பெண் 11/2 வயசுக் குழந்தை. அங்கே இருந்து மாற்றலில் சிகந்திராபாத் வரும்போது பையனுக்கு 11/2 வயசு ஆகி இருந்தது. ஆகவே நாங்கள் நசிராபாத்தைப் பற்றிச் சொல்லும்போது எல்லாம் அவங்க இரண்டு பேரும் கதை மாதிரிக் கேட்பார்கள். மறுமுறை அதே ஊர் போனபோது நாங்க எல்லாரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சென்னையில் அவ்வளவாக நண்பர்கள் இல்லாத இரண்டு பேரும் அங்கே போய் நிறைய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இங்கே சென்னையில் எங்க ஏரியாவிலேயே இவங்க இரண்டு பேர் மட்டும்தான் கேந்திரிய வித்யாலயாவில் படிச்சது. மத்தக் குழந்தைகள் எல்லாம் மாநில அரசுப் பாடத்திட்டம். அதனாலேயும், இவங்க பள்ளி நேரம் வித்தியாசப் பட்டதாலேயும், எல்லாரும் பள்ளிக்குப் போகும் முன்னேயே போயிடுவாங்க, லீவு நாளில் இருந்து வேறுபடும். அதனால் இங்கே நண்பர்கள் குறைவு. இரண்டு பேருக்கும் அங்கே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அந்த மாதிரியான ஒரு சந்தோஷமான சூழ்நிலையில் தான் திடீரென எங்களுக்கு குஜராத்தில் ஜாம்நகருக்கு மாற்றல் ஆனது. நாங்கள் யாருமே எதிர்பார்க்கலை. எப்பவும் போல என் கணவர் எந்த மாற்றமும் காட்டாமல் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பிக்க எங்களுக்கு இஷ்டமே இல்லை.

குஜராத் போனால் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று எல்லாம் எங்களிடம் சொல்லப் பட்டது. ஒரு மத்திய அரசு ஊழியர், அதுவும் பாதுகாப்புக் கணக்கு அலுவலில் இருப்பவர், field area வில் போட்டாலும் போய்த்தான் ஆகணும். இது ஒண்ணும் அப்படி இல்லையே? அமைதியான இடம்தானே, மேலும் நமக்கு இந்த முறை ஊருக்குள்ளேயே க்வார்ட்டர்ஸ் இருக்கிறது. அதனால் நகர வாழ்க்கையும் கிடைக்கும் என்றெல்லாம் என் கணவர் சமாதானம் பண்ணி ஒரு வழியாக சாமான்கள் பாக்கிங் முடிந்து ஒரு வாரத்துக்கு எல்லார் வீட்டிலும் சாப்பாடு சாப்பிட்டு, (அதெல்லாம் அங்கே மாற்றல் ஆகிப் போனாலோ அல்லது மாற்றல் ஆகி வந்தாலோ ஒரு வாரத்துக்கு ஓசிச் சாப்பாடு கிடைத்து விடும். எல்லாவிதமான மாநிலச் சாப்பாடும் கிடைக்கும்.) ஒரு வழியாகப் புறப்படும் தினம் வந்தது. எனக்கோ அந்த வீட்டை விடவே இஷ்டம் இல்லை.

நசிராபாத்தில் நாங்கள் இருந்த பங்களாவில் தோட்டத்தில் தினமும் மயில்கள் வந்து நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும். மிக அழகிய லான். சுற்றிப் பலவிதமான பூச்செடிகள். அதிலே பலவிதமான வண்ணங்களில் பூக்கள். நம்ம குடியரசுத் தலைவரின் "மொகல் கார்டன்" ரேஞ்சுக்குப் பரிபாலனம் செய்து வந்தோம். எங்கள் மாலியும் (தோட்டக்காரர்) எங்கே எங்கே நல்ல செடிகள் கிடைக்குமோ தேடித் தேடிக் கொண்டு வைப்பார். போதாத குறைக்குப் பின்னால் உள்ள பெரிய தோட்டத்தில் பீன்ஸ், காரட், பட்டாணி, அவரை, கத்திரி, மிளகாய் என்று அந்த அந்த சீசனுக்கு ஏற்ற காய்கறிகள் என் கணவர் போடுவார். (தோட்டக் கலையில் ஆர்வம் அதிகம்.) என் மாமனாரும் அவர் பங்குக்கு எங்கே இருந்தோ எப்படிக் கேட்டாரோ தெரியாது, (ஹிந்தியே தெரியாது, பேசினாலும் புரியாது.) வாழை, முருங்கை போன்றவை சமையல் அறைக்குப் பக்கத்தில் வருமாறு போட்டிருந்தார்.

லானுக்கு அருகே ஒரு மேடை. அதில்தான் பறவைகளுக்குத் தானியங்கள் இறைப்போம். பலவிதமான பறவைகள் வரும். கிளிகள் கொத்துக் கொத்தாக வரும். எல்லாம் "கீக்கீ" என்று கத்திக் கொண்டே தானியங்களைக் கொத்தும்போதும், மாடப்புறாக்களும், மணிப்புறாக்களும், வெண்புறாக்களும் பறக்கும் சப்தமும், முயல்கள் ஓடும் நேர்த்தியும் பார்க்கவே பரவசம் ஊட்டும். மழை நாளில் வராந்தாவில் நாற்காலி போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் மயிலின் "அக்காவ்" என்ற கூவலும், செம்போத்துப் பறவைகளின் கூச்சலும், தேன் சிட்டுப் பறவைகள் பூச்செடிகளில் வந்து தேன் குடிக்கும்போது போட்டுக் கொள்ளும் சண்டையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பமாக இருக்கும். தன் நீண்ட பெரிய சிறகுகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மயில்கள் வந்து பறக்க முடியாமல் பறந்து வீட்டுக் கூரை மேல் உட்கார்ந்து சிறகுகளை விரித்துக் கொண்டு நாட்டியம் ஆடும். காக்கைகள் குயில்குஞ்சைத் துரத்தும் போது காக்கையை விரட்டி விடுவோம். வானில் இருந்து விர்ர்ரெனப் பறந்து வரும் பருந்துக்கு ஆகாரம் ஆன பறவைகளைப் பார்த்து வருத்தமாக இருக்கும். நான் வந்து உட்கார்ந்தால் ஏதோ போடப் போகிறேன் என்று சுற்றி வந்து உட்காரும் சிட்டுக் குருவிகள். பயமே இருக்காது. தினம் தினம் அரிசி போடுவதால் ஒருவிதப் பிணைப்பு உண்டாகி இருந்தது. இத்தனையும் விட்டுட்டுப் போகணுமே என்று நினைத்தால் மனம் தாளவே இல்லை. இதனாலும், சாப்பாடுகள் தவிர்க்க முடியாமல் வெளியே சாப்பிட்ட காரணத்தினாலும் எனக்கு வயிறு சரியில்லாமல் போய் உடல் நிலை சரியில்லை. ஊருக்குப் போகும் நாளும் வந்தது. எல்லாரும் ஸ்டேஷனுக்குப் போக வண்டியில் ஏறினோம். மாலை, மரியாதைகளுடன் வழி அனுப்பி வைத்தார்கள். ஸ்டேஷனில் அஹமதாபாத் போகும் வண்டிக்காகக் காத்து இருந்தோம். அது டெல்லியில் இருந்து அஜ்மேர் வழியாக வந்து நசிராபாத் வந்து பின் ப்யாவர், பிக்கானீர் வழியாக அஹமதாபாத் போகிறது. அஜ்மேரில் இருந்த் காலை 9-00 மணிக்குக் கிளம்பி நசிராபாத்துக்கு 9-15-க்கு வரும். மாலை7-30 அளவில் அஹமதாபாத் போய்ச் சேரும். அங்கிருந்து ஜாம்நகருக்கு பம்பாயில் இருந்து வரும் செளராஷ்ட்ரா மெயிலில் எங்களுக்கு டிக்கெட் வாங்கி இருந்தது. நசிராபாத் ஸ்டேஷன் வந்தோம். ரயில் காலை 10-00 மணி ஆகியும் வரவில்லை.

138. தலைவியின் தியாகம்

ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் பேர் வச்சு அது அங்கீகாரமும் ஆயிடுச்சு. அம்பிக்கு "ஆப்பு", வேதாவுக்கு "வேதா(ள்)", பொற்கொடிக்குப் "போர்க்கொடி" (courtesy:Vedha), ஸ்ரினிக்குக் குண்டர் படைத் தலைவர், நாகை சிவாவுக்கு "சூடான் புலியோதரை" சீச்சீ "சூடான் புலி". இன்னும் பாக்கி இருக்கிறது, கார்த்திக்,(தலையாம், முதல் அமைச்சராம், இருக்கட்டும், பார்த்துக்கிறேன்.) ச்யாம்(என்னமோ நாட்டாமையாமே, நாட்டாமை? என்னைக் கேட்காமல் எப்படிப் பட்டம், பதவி கொடுக்கலாம்? நற நற நற நற).

முதலில் இந்தக் கார்த்திக்குக்கு ஏதாவது பேர் வச்சே ஆகணும். அவர் பாட்டுக்குப் புதுசு புதுசா ஏதோ எழுதி 50, 60னு பின்னூட்டம் வாங்கிட்டிருக்கார். ரொம்பப் புகையா வருதே? கண், மூக்கு எல்லாம் எரியுதே? இந்த ச்யாம், TBI News கொடுத்துச் சொந்தச் சரக்குக் கூடக் கிடையாது நூற்றுக் கணக்கில் பின்னூட்டம் வாங்கறார். அவங்க அவங்க என்னை மாதிரி நல்ல பதிவாப் போட்டுட்டு ஒரு பின்னூட்டத்துக்கே தவியாய்த் தவிக்கிறச்சே ஒரே இடத்தில் இத்தனை பின்னூட்டங்களா? வலை உலகில் கூட இந்த மாதிரிப் பாரபட்சமா? ஒருத்தருக்கேவா இத்தனை பின்னூட்டம் கொடுக்கிறது? எல்லாத்தையும் பகிர்ந்து கொடுக்கிற சோஷலிஸம் யாருக்குமே தெரியலியே? யார் எடுத்துச் சொல்றது? அதான் நான் தலைமைப் பொறுப்பை வேறே வேறு வழியில்லாமல் சுமந்துக் கிட்டு இருக்கேனே (உடனே என்னை தலைமைப் பதவியில் இருந்து இறக்க முயலவேண்டாம். தலைவர்கள் எல்லாம் வழக்கமா சொல்ற டயலாக் இதுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்.)

அதுவும் கட்சியின் நலனுக்காகவும், சங்கத்தின் சிறப்புக்காகவும் எத்தனை எத்தனை கஷ்டப்பட்டு களப்பணி, களம் இல்லாமல் பணி, வெளிநாடு போய்க் கட்சிக்காக உழைத்தல்னு பண்ணிட்டிருக்கேன். அந்த உரிமையில்தான் சொல்லிட்டு இருக்கேன். பின்னூட்டம் கொடுக்கிறவங்க சமமாகக் கொடுங்க. ஹோல்சேல்,ரீடெயில் எப்படிக் கொடுத்தாலும் சரி மத்தபடி எனக்குப் பதவி ஆசை எல்லாம் இல்லை. இந்த அம்பி மாதிரி அல்வா மந்திரிக்கெல்லாம் ஆசையும் படமாட்டேன். நல்லதாக முதலமைச்சர் மட்டும்தான் என் குறிக்கோள். கார்த்திக்கைப் பதவியில் இருந்து இறக்கறதுதான் ஒரே நோக்கம். அதுக்காகத் தான் உழைக்கிறேன். என் உழைப்பின் மேன்மையைப் புரிந்து கொண்டு எனக்காகப் பாடுபடும் தொண்டர்களான வேதா(ள்), போர்க்கொடி,சூடான் புலி போனால் போகிறது என்று தொண்டர்களில் ஒருவராக நான்அனுமதித்திருக்கும் ஆப்பு அம்பி, போன்றவர்களைச் சிறப்பிக்கும் விதமாக இந்தப் பதிவு.

ஹி,ஹி,ஹி, வேதா(ள்), அம்பி, புலி, போர்க்கொடி, நான் ஒண்ணும் கார்த்திக்கிடம் உங்களை எல்லாம் போட்டுக் கொடுக்கவே இல்லை. நீங்க எல்லாம் எனக்கு மெயிலில் சொன்ன மாதிரிதான் எழுதி இருக்கேன். சரியா?

Saturday, October 14, 2006

137. சந்தோஷப்பட வேண்டாம்.

ஹி,ஹி,ஹி,ஹி, எல்லாரும் கொடுத்திருக்கிற பின்னூட்டத்துக்கு ரொம்ப டாங்க்ஸு., டாங்க்ஸு, டாங்க்ஸு. என்னடா மூணு நாளா ஆளே காணோம்னு ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பீங்க. அதான் ரொம்ப சோதிக்க வேண்டாம்னு வந்துட்டேன். (அப்புறமா நிஜமாவே மறந்துடுவீங்க.)செவ்வாய்க்கிழமை நிஜமாவே சில பிரச்னைகள் இருந்ததாலே அதைக் கவனிக்கிற

மூடில் இருந்தேன். அதான் ஹரிஹரனுக்கும், கார்த்திக்குக்கும் அவசரப் பின்னூட்டம் கொடுத்தேன். ஏன்னா நம்ம ஸ்டைல் பின்னூட்டம் கொடுக்கிற மாதிரி சமயம் இல்லை. அதுக்கு

அப்புறம்தான் ஹைலைட்டே. அன்னிக்கு ராத்திரி தற்செயலா ஜி-மெயில் பார்க்கும்போது

சூடானிலிருந்து புலி கூப்பிட்டது. புலி கூப்பிட்ட உடனே போகாமல் இருக்க முடியுமா? போனால் சிறிது நேரம் "சாட்'டறதுக்குள்ளேயே ஜி-மெயில் நாகை சிவா ஆஃப் லைன்னு சொல்கிறது. என்னடா இதுன்னு பார்த்தால், "There may be some technical problem. You

cannot give or receive chatting. Try after 30 seconds."அப்படின்னு message வருது. மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சேனு அலுப்போடு மறுபடி கனெக்ஷன் வாங்கிப் போய்ப் புலிகிட்டே விஷயத்தைச் சொன்னால் புலிக்கு ஒரே சிரிப்பு. "உங்க கம்ப்யூட்டருக்குக் கூட நீங்க கிள்ளுக்கீரையா இருக்கீங்கன்னு" சொல்லி ஒரே சிரிப்பு. :D நம்ம தலை எழுத்து

இப்படி இருக்கும்போது என்னத்தைச் சொல்றது? பேசாமல் வந்தேன்.

அதுக்கப்புறம் புதன்கிழமை சிறிது நேரம் உட்கார்ந்ததுமே கோவிந்தா, கோவிந்தா, தான்.

எல்லாம் போச்சு. என்னடான்னு பார்த்தால், google-ல் internal server error 500 அப்படின்னு message. பல்லைக் கடித்துக் கொண்டு கணினியை மூடினேன்.

சாயந்திரம் மெயில் பார்த்துட்டு ஏதாவது கமெண்ட் வந்திருக்கா பார்க்கலாம்னு கம்ப்யூட்டரைத்

திறந்தால் "Yahoo HomePage" வரவே இல்லை. மறுபடி மறுபடிமுயற்சித்ததில் யாஹூ வந்தது.

சரினு ப்ளாக் திறக்கப் போனால் என்னோட ப்ளாக்கை நான் பார்க்கக் கூடாது என்று சொல்லி

விட்டது. You are not authorized to see this page அப்படின்னு மெஸேஜ். நீயாச்சு உன்

மெஸேஜும் ஆச்சுனு ஒரே வெறுப்பு. போயிட்டேன். நேத்திக்கு வெளியே போயிட்டேன்.

வரமுடியலை.சாயங்காலம் தான் வந்தேன். சாயங்காலம் எல்லாம் கணினியில் உட்கார்ந்தால்

என்னோட "protocol" என்ன ஆறது? நடைப் பயிற்சி போயிட்டேன்.

அதுக்குள்ளே அம்பி காலைல கூப்பிட்டு "என்ன விஷயம்?" னு கேட்டார். நான் சொன்னதும் ரொம்ப சந்தோஷம்,என்னோட ப்ளாக் எனக்கே திறக்கல்லைன்னதும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு சொல்லி இருக்கார். திரு நடேசன் கூப்பிட்டு, "என்ன, ஓம் நமச்சிவாயா, அப்புறம் வரலை? என்னோட கமெண்ட் பார்த்து பயமான்னு கேட்டார். நான் தான் எல்லாரையும் பயமுறுத்திட்டு இருக்கிறப்போ நான் யாரைப் பார்த்துப் பயப்படறது? "அதெல்லாம் இல்லை. நான் ரொம்ப ஸ்போர்ட்டிவ் ஆக்கும். எது வேணா சொல்லுங்க," னு ரொம்பப் பெருமையாச் சொல்லி வச்சிருக்கேன். பின்னே என்னைப் பத்தி நான் பெருமையாப் பேசாமல் யார் பேசுவாங்க? இன்னிக்கு வேதா(ள்) கூப்பிட்டு," நேத்திக்கு மெயில் கொடுத்தேனே, ஏன் இன்னும் 2 நாளா ஒண்ணும் எழுதலை? உடம்பு சரியில்லையா?" னு ரொம்ப அன்பா விசாரணை. எனக்கு கண் கலங்கி, நாத் தழுதழுத்துப் பேச்சே வரலை. அதான் இப்போ எழுதிடலாம்னு.

இப்போ ஹரிஹரனுக்கும் கார்த்திக்குக்கும் நம்மளோட ஸ்டைலில் ஒரு பதில்: படிப்பாங்களா இல்லையா தெரியலை!
ஹரிஹரன், நான் குதிரையிலே ஏறி உப்புச் சத்தியாக்ரஹம் மட்டும் இல்லை, நம்ம ஜான்ஸி ராணி காலத்துக்கும், ராணி மங்கம்மா காலத்துக்குமே போயிட்டேன், குதிரை கூட என்னை அப்படித்தான் நினைச்சுட்டு இருந்திருக்கு.
காரத்திக்: ஒரு சின்னப் பொண்ணை எல்லாரும் வறுத்து எடுக்கிறாங்க பாருங்க, அவங்க வயசு பத்திச் சும்மாக் கேட்டு, நீங்க முதல் மந்திரியா(அதாவது தாற்காலிகமா) வரணும்னா முதலில் இதுக்கு ஒரு சட்டம் கொண்டு வாங்க, பார்க்கலாம். நீங்க முதல் மந்திரியா வரலாமா? வேண்டாமானு நான் முடிவு செய்யறேன்.

Tuesday, October 10, 2006

136. எனக்கு என்ன வயசு?

நேத்திக்கு ஹரிஹரன், தி.ரா.ச. எல்லாருமே என்னோட வயசை ப்ளாட்டினம் ஜுபிலிக்கு அருகிலா எனக் கேட்டிருந்தார்கள். ஆகவே நான் என்னோட உண்மையான வயசை இங்கே சொல்றதாக ஒரு disclaimer கொடுக்கிறதாக எழுதி இருந்தேன். சொன்னபடி செய்யணும் இல்லையா? அதான் இது.

இதன் மூலம் என்னை அறிந்தவர், அறியாதவர், தெரிந்தவர், தெரியாதவர், புரிந்தவர், புரியாதவர், பின்னூட்டம் கொடுப்பவர், கொடுக்காதவர், என்னுடைய வலைப்பதிவுக்கு வருபவர், வராதவர், வலைப்பதிவு எழுதுபவர், எழுதாதவர்(எழுதாதவங்க பார்க்க முடியுமா) தெரியலை. எல்லாருக்கும் ஒரு நற்செய்தி என்னுடைய வயசு இப்போ 16 ஆக இருந்தது, நான் கைலை யாத்திரை சென்று வந்த உடனே 15 ஆகக் குறைந்து விட்டது என மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் என்னைப்பாட்டி என்றோ கொள்ளுப் பாட்டி என்றோ சொல்லக் கூடாது என்று ஆப்பு அம்பியும், அவரின் பாசமலரான பொற்கொடியும்,(உடம்பு பரவாயில்லையா) எச்சரிக்கப் படுகிறார்கள். ஆப்பு, கவனிச்சு வச்சுக்குங்க, உங்க அருமைத் தங்கை பாசமலரிடமும் சொல்லி வைங்க. இது நல்லாவே இல்லைனு. அப்புறம் சங்க விதிமுறைகளின் படி இருவர் மீதும், அவர்களைத் தூண்டி விடுபவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். எல்லாரும் வருஷத்துக்கு ஒரு முறை வயசை மாத்தறாங்க. நான் பாருங்க, சொன்ன சொல் தவற மாட்டேன், ஒருமுறை சொன்னா சொன்னதுதான் பேச்சு மாறறதுன்னே கிடையாது. அது தான் தலைவி. ஹிஹிஹிஹிஹி இது தலைவியின் ஆணை. :D :D :D

(ஹிஹிஹி, மனசாட்சி சிரிக்கிறது.
என்ன சிரிக்கிறே? இது நான்.
ம.சா: இல்லை நீ கைலை யாத்திரையில் குதிரைப் பிரயாணம் செய்தியே அது நினைவு வந்தது.
நான்: என்ன அதிலே, வாயை மூடு. "பொட்" சத்தம் கேட்கிறது. மனசாட்சி வேதனை தாங்காமல் முனகுகிறது. "இரு, இரு, எனக்கும் ஒரு காலம் வரும், வச்சுக்கிறேன், உன்னை". நான் விழித்துப் பார்க்க அது பதுங்குகிறது. அப்பாடி, நிம்மதிப் பெருமூச்சு. என்னிடமிருந்துதான்.

Sunday, October 08, 2006

135. மனம் மாறிய வேதா(ள்).

ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி, ஹி, சிரிக்கிறது வேறே யாருமே இல்லை. நான் தான் சிரிக்கிறேன். காரணம் என்ன தெரியுமா? ஆப்பு அம்பியை வாழ வைத்த தெய்வம், ச்யாமின் பாசமலர், கார்த்திக்கின் தோழி, பொற்கொடி நம்பும் சகோதரி, தி.ரா.ச. அவர்கள் தன் சிஷ்யை என நினைத்துக் கொண்டிருக்கும் செல்வி வேதா(ள்) அவர்கள் நேற்று அதிகார பூர்வமாகத் தலைவியுடன் இணைந்தார்.

முன்னதாகத் தலைவிக்குத் தொல்லைபேசியில் வேதா(ள்) பேசித் தலைவியுடன் பேட்டிக்கு (!!!!!) நேரம் கேட்டார். தலைவி வேதா(ள்)வுடன் தனக்கு முரண்பாடுகள்(?!) இருந்தாலும் பெருந்தன்மையுடனும், தாயுள்ளத்துடனும் மன்னிக்கும் மனப்பான்மை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே! ஆகவே மாலை 4 -00 மணிக்கு அதாவது அக்டோபர் திங்கள் 7-ம் நாள், முன்பகல் வரை பெளர்ணமி, பின் பிரதமை கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 4-00 மணி அளவில் தன்னை வந்து சந்திக்கும்படிக் கட்டளை(!!) இட்டார். தலைவியின் கட்டளையைச் சிரமேற்கொண்ட வேதா(ள்), தன்னுடன் காவலுக்கு ஒரு நபருடன் தலைவியின் இல்லம் வந்து சேர்ந்தார். அவர் யார் என்பதை முன்கூட்டியேத் தலைவியிடம் தெரிவித்து விட்டதால் தலைவியும் அவரைப் புரிந்து கொண்டார். அவர் தானும் வலைப் பதிவாளர் என்றும் தான் இருப்பது கிரிக்கெட் என்னும் உலகில் என்றும் சொன்னார். நடு நடுவில் தலைவிக்கும், வேதா(ள்)வுக்கும் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் அவரும், தலைவியின் கணவரும் கலந்து கொண்டார்கள்.

பேச்சு வார்த்தையின் போது சமீபத்தில் சென்னை வந்த ஆப்பு அம்பி நடத்திய கூட்டம், அதன் நிகழ்ச்சி நிரல்கள், நடந்த பேச்சு வார்த்தைகள், சாப்பிட்ட சமோசாக்கள், அவை வாங்கிய கடைகள் முதலியன விவாதிக்கப் பட்டன. இங்கே ஒரு மாறுதலுக்காக போண்டாவோ சமோசாவோ இல்லாமல் தலைவி, மைசூர்பாகு, சோன் பப்டி, மிக்ஸ்சர் போன்றவை கொடுத்தார். பின் இஞ்சி, ஏலக்காய் போட்ட தேநீருடன் டீ பார்ட்டி முடிந்து பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது. அம்பியின் தலை உருண்டது என்று சொல்லத் தேவை இல்லை. கார்த்திக், ச்யாம், நாகை சிவா, பொற்கொடி ஆகியவர்களின் தலையும் அவ்வப்போது உருண்டன. சூடான் புலி மறுபடி பதுங்கிக் கொண்டதின் காரணம் அறியாமல் இருவரும் திகைத்தனர். பொற்கொடிக்கு வ்ந்திருக்கும் காய்ச்சல், சிக்குன்-குனியாவா? டெங்குவா என்றும் கேள்விகள் பிறந்தன. அவர் உடல் நலத்துக்காகப் பிரார்த்திக்கத் தலைவி பெருந்தன்மையுடன் சொன்னார். சங்கத்தில் சமீபத்தில் சேர்ந்த டுபுக்கு பற்றியும், கைப்புள்ள தலைவி மேல் வைத்திருக்கும் மரியாதை (!) பற்றியும், அம்பியின் பஞ்சாப் குதிரை பற்றியும் அதைப் பற்றிச் சொல்லி எல்லார் மனதையும் மாற்றுவதையும் பற்றிப் பேச்சுக்கள் தொடர்ந்தன. குண்டர் படைத் தலைவர் மறைவில் நின்று அம்பிக்கு உதவி செய்வதையும், அவர் வெளிவராத காரணமும் அலசித் தோய்த்துப் பிழிந்து உலர்த்தப் பட்டது. (வேதா, இது போதுமா? நாரதர் வேலைக்கு, இன்னும் கொஞ்சம் வேணுமா)

தலைவி வேதா போர்த்திய பொன்னாடையை ஏற்றுக் கொண்டு அவரைச் சங்கத்தின் கொ.ப.செ. ஆகவும் தன் உ.பி.ச. ஆகவும் நியமித்தார். வேதா மன மகிழ்ச்சியுடன், "இது மாதிரித் தலைவி நான் பார்த்ததே இல்லை. ஏழைப் பங்காளி., புரட்சியே செய்யாத தலைவி, தங்கத் தாய், பொன்மனச் செம்மல், தாய் வீடு, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" சீச்சீ கடைசிலே சொன்னது எல்லாம் சினிமாப் பேர் மாதிரி இல்லை இருக்கு. அது அழிச்சுடுங்க. மத்தது எடுத்துக்குங்க. அப்பாடி, என்னோட புகழை இப்படிக் கஷ்டப் பட்டு நானே எழுத வேண்டி இருக்கு. வேதா(ள்) , கொஞ்சம் உதவக்கூடாது?

Friday, October 06, 2006

134. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்தவை

இப்போ தான் ஒரு சங்கிலிப் பதிவு எழுதினேன். மறுபடி ஒண்ணு. இப்போ கார்த்திக் மாட்டி விட்டுட்டார். பதிவிலும் வந்து கேட்டுட்டார் ஏன் எழுதலைன்னு. நாம அவ்வளவு பிரபலம்னு இப்போதான் புரியுது(ஹிஹிஹிஹி).அதான் ஆளாளுக்கு எழுதச் சொல்றாங்க.இப்போ எனக்குப் பிடிச்ச விஷயங்கள் ஒண்ணொண்ணா எழுதறேன்.

1.செய்வதற்குச் சிறந்த விஷயம்:
வீட்டிலே ஒவ்வொரு விஷயத்தையும்,நானே கவனிக்கிறது ரொம்பப் பிடிக்கும். முன்னே எல்லாம் அப்படித்தான் இருந்தேன். இப்போவெல்லாம் குறைச்சுக் கிட்டேன். இருந்தாலும் இன்னும் வீடு நான் சுத்தம் செய்தால்தான் எனக்குத் திருப்தியாக இருக்கும். அதுபோல சமையல் வேலையும். நானே பொறுப்பு ஏற்றுப் பண்ணுவது பிடிக்கும்.

2.சிறந்த பரிசு:
நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு முறை பேச்சுப் போட்டியில் வாங்கிய முதல் பரிசு.அப்போவெல்லாம் கவிதை எழுதப் பிடிக்கும். இப்போ கவிதைன்னா காத தூரம் போகிறேன். என்னோட கவிதை வாரிசு இப்போ என்னோட அண்ணா பெண். நல்லாக் கவிதை எழுதுவாள். அதை நான் முத்தமிழில் போடுவேன்.

3.நான் கேட்ட மிகச் சிறந்த விஷயம்:
என்னோட ஆசிரியர் என்னை, "very diplomatic. jem of a student" என்று பாராட்டியது. இப்போவும் சொல்லிப் பெருமை(!) அடித்துக் கொள்வேன்.

4.நான் சொன்ன மிகச் சிறந்த சொல்:
எத்தனையோ இருக்கு, எதைச் சொல்றதுனு புரியலை. பொதுவா யார் என்ன உதவி கேட்டாலும் உடனே, நான் இருக்கேன், கவலைப்படாதீங்கனு சொல்லுவேன். அதைத் தான் சொல்லணும்.அம்பி சொல்றது ரொம்பச் சரி. ஏன்னா, நானே இப்போ வேறு யாராவது வீட்டு வேலைக்குக் கூட உதவுகிற மாதிரி இருக்கேன். இதிலே நான் போய் இன்னொருத்தருக்கு உதவ எப்படி முடியும்? ஆகவே நான் சொன்னதில் மிகச் சிறந்தது என்ன என்றால் இப்போ அம்பியாலே இந்த உண்மையை ஒத்துக் கொண்டது மட்டும்தான். வேறே எதுவும் சிறந்ததாத் தெரியலை.

5.நடந்தவையில் மிகச் சிறந்தது:
இதைப் பத்தி ஒரு பதிவே போட்டு விட்டேன். என் வாழ்க்கையில் அதுதான் மிகச் சிறந்த தருணம். Link: sivamgss.blogspot.com/2006/06/64.html

6.மிகச் சிறந்த மனிதர்: என் கணவர் தான். சந்தேகமே இல்லை.

7.மிகச் சிறந்த நண்பர்: இதுவும் டிட்டோ.

8.மிகச் சிறந்த தருணம்.: என் பெண் என்னை அம்மானு கூப்பிட்டதுதான். வேறே என்ன?

9.மிகச் சிறந்த புத்தகம்: தேவனின் எல்லாப் புத்தகங்களும். கல்கியின் "அமரதாரா".

10.மிகச் சிறந்த வலைபதிவு: என்னோடது தான். ஹி ஹி ஹி ஹி.சகல விதமான ரசங்களும்,(தக்காளி,மிளகு,மைசூர் ரசம் உள்பட) கொண்டதாச்சே!

11.மிகச் சிறந்த இடம்: மதுரை, பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தது ஆச்சே? அப்புறம் அரவங்காட்டில் நாங்கள் இருந்த குடியிருப்புப் பகுதி.

12.மிகச் சிறந்த உணவு: நான் சமைக்கிறதிலா? அல்லது நான் சாப்பிடறதிலா? நான் சமைக்கிறது என்றால் மசால் வடையும், உளுந்து வடையும் ஸ்பெஷல், மசால் தோசையும் அப்புறம் கை முறுக்கு. சாப்பிடுவது என்றால் ரசம் சாதம், அப்பளம்தான்.

13.மிகப் பிடித்த பாடல்: சமீப காலமாய்க் "குறையொன்றுமில்லை" தவிர, அருணா சாய்ராமின் மீரா பஜனும், மஹாராஜபுரம் சந்தானத்தின்,"ஆடாது அசங்காது வா" பாட்டும் பிடிக்கும். ஆனால் எப்பவும் தூக்கத்தில் கூட பங்கஜ் உதாஸின், "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" நினைவு வந்தால் என்னை அறியாமல் அழ ஆரம்பிப்பேன்.

14.Best Hangout: இதுக்கு எதை எழுதறதுனு தெரியலை. நசீராபாத்தில் நாங்கள் இருந்த ஆஃபீஸர்ஸ் க்வார்ட்டர்ஸ் என்று சொல்லலாம். மழை நாளில் ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு. வீட்டுக் கூரை மேல் மயில் ஏறிக் கூவ, வீட்டு லானில், முயல்குட்டிகள் பொந்துகளைப் பார்த்து ஓட, அந்தச் சிறு மழையில் என் பையனும், அவன் சிநேகிதனும் முயல் பிடிக்க ஓடுவார்கள். அப்போது அங்கே தூவி இருக்கும் தானியங்களைச் சாப்பிட வரும் பறவைகள் "விர்ர்ர்ர்ர்ரென"ச் சப்தம் இட்டுக் கொண்டுச் சற்றுத் தூரம் பறந்துவிட்டுத் திரும்பி வரும் காட்சி.

15.சாப்பிட்ட இடம்: கல்யாணம் ஆன புதிதில் ஒரு நாள் ஆஃபீஸில் இருந்து நான் நேரே செண்ட்ரல் வர, அவரும் வந்தார், இருவரும் ஏதோ வாங்க நடந்தே NSC Bose Road போனோம். இப்போவும் அங்கே போனால் நடந்துதான் போகிறது. அப்போ ராத்திரி ரொம்ப நேரம் ஆகவே சாப்பாடு சாப்பிட ஹோட்டல் தேட ஒருத்தர் ஆர்மினியன் தெருவில் உள்ள(இப்போ இந்த ஹோட்டல் இருக்கா) "ஹோட்டல் பாலிமார்"க்குப் போகச் சொல்ல அங்கே சாப்பிட்ட சாப்பாடு இன்னும் மறக்க முடியாது.

16.பிடித்த பொழுதுபோக்கு: நிறையச் செய்திருக்கிறேன். தையல், எம்ராய்டரி, பூவேலை என்று. ஆனால் மனம் ஒன்றுவது புத்தகம் படிப்பதிலே மட்டும் தான். என் நாத்தனார் எல்லாம் எப்படி அலுக்காமல் இப்படிப் படிக்கிறாய்? என்று கேட்பார்கள். அவங்க எல்லாம் பொழுது போக்குவது பேசுவதில். எனக்குப் பேச்சுக் கம்மிதான்.

17.பிடித்த சீரியல்: "நாகா" எந்தத் தலையீடும் இல்லாமல் எடுக்கும் சீரியல்கள் எல்லாம். வீட்டுக்கு வீடு லூட்டி முதல் பாகம். இப்போ,"விஸ்வரூபம்" சீரியல் ல்ராஜ் டிவியில். என் பெண்ணோடு சாட் செய்து கொண்டே பார்க்க வேண்டி உள்ளது. அப்புறம் அவளுக்கு வேலை இருக்குமே, அதனால் இந்தத் தியாகம்.

18.பிடித்த நிர்வாகி; ஹி ஹி ஹி ஹி, இதுவும் நான் தான். இல்லாட்டி எங்க குடும்பத்தை நான் நிர்வாகம் பண்ணி இருக்க முடியுமா? அதுவும் சின்ன வயசிலே இருந்து, சின்ன வயசு வரை.

19.பிடித்த இசை அமைப்பாளர்:விஸ்வநாதன், ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த போது உள்ள இசை. எம்.பி.சுப்ரமண்யத்தின் இசையில் தேசபக்திப் பாடல்கள், குறிப்பாக, "ஸாரே ஜஹான்ஸே அச்சா"

20.பிடித்த குழு: இப்போ இருக்கும் வலைப்பதிவர் குழுதான். மத்தபடி குழுவெல்லாம் இருக்கும்படி நான் எங்கேயும் எந்த ஊரிலேயும் தொடர்ந்து இருக்கலையே.

21.பிடித்த பானம்: வெந்நீர். மட்டும் தான். அப்போ அப்போ சிறிது சுக்குப் பொடி போட்டுக் கொள்வேன்.

22.பிடித்த quote: பாரதி சொன்ன எல்லாமே.

23.பிடித்த பெண்மணி: இது எல்லாருக்குமே அவங்க அம்மாவாத்தான் இருக்கும். கூடுதலாக என் அம்மாவைப் பெற்ற என் பாட்டியும் கூட.

24.பிடித்த குழந்தை: என்னோட குழந்தைகள் தான், ஹி ஹி ஹி ஹி.

25.பிடித்த பாட்டு: "கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்." பள்ளியில் முதன் முதல் பிள்ளையாரைப் பாட்டின் மூலம் வணங்கச் சொல்லிக் கொடுத்த பாட்டு.

26.பிடித்த டான்ஸர்:எங்க வீட்டுக் காரர்னு சொல்வேன்னு பார்க்கறீங்களா/ இல்லை, கமலா லட்சுமணன். பழைய படங்களில் அவரின் நாட்டியத்தைப் பார்க்கும்போது அவர் உடல் எப்படி அவருக்கு ஒத்துழைக்கிறது என்று புரியும். அந்த நளினம் மற்ற நாட்டியக் காரரிடம் நான் காணவில்லை.

27:பிடித்த படம்: ஸ்ரீதர் டைரக் ஷனில் வந்த எல்லாப் படமும். பாலசந்தரின் ஆரம்ப காலப் படங்கள். ஹிந்தியில் சஞ்சீவ் குமார், ஜெயா பாதுரி நடித்த படங்கள்.மற்றும் லகான்.

28.பிடித்த நடிகர்: முன்னாலே ஜெமினி பிடிக்கும். அப்புறம் சிவகுமார், சூர்யா, கார்த்திக். இப்போ நடிக்கிறதிலே ஒருத்தரும் மனதிலே பதியலை. ஸ்ரீகாந்த் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் 2 படம்தான் பார்த்திருக்கேன். அதை வச்சுச் சொல்ல முடியாது.

29. பிடித்த வண்டி; நடை வண்டி. எப்பவும் நடந்து போறது தான் நல்லது.

30.பிடித்த சீன்: தேடித்தான் பார்க்கணும். சினிமா அவ்வளவா என்னைக் கவர்ந்தது இல்லை.

அப்பாடி, கார்த்திக், கை வலிக்குது. இன்னிக்குக் கைலைப் பயணத்துக்கு ஓய்வு. இல்லாட்டி அதை யாராவது படிக்கிறாங்களா என்ன? அதுக்கு ரசிகர்களே இல்லை. நற நற நற நறநற.

Thursday, October 05, 2006

133. தலைவிக்கு மிரட்டல்?

வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி), வடமாநில மற்றும் நேபாளம், சீனா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று அங்கே வெற்றிக்கொடி நாட்டி வந்தது அனைவரும் அறிந்ததே! இது இப்படி இருக்கத் தலைவி வெளிநாடு சென்ற சமயம் பார்த்துப் பெனாத்தலாரும், டுபுக்குவும் சங்கத்தில் சேர்ந்ததின் மர்மம் நீடிக்கிறது. இது பற்றி அறிய நம் உளவுப்படையை அனுப்பி இருக்கிறோம். இருந்தாலும் நேற்று திடீரென்று தலைவிக்கு வந்த ஒரு மிரட்டலுக்கும், இந்தத் திடீர் சேர்க்கைக்கும் சம்மந்தம் இருக்குமோவெனத் தோன்றுகிறது.

தலைவி பங்களூர் சென்ற சமயம் அம்பி குண்டர் படைத் தலைவரை அழைத்துக் கொண்டு வந்து தலைவியை மிரட்ட முயன்றதும், தலைவி அதற்கு பயப்படாமல் எதிர்த்து நின்றதும், பின் குண்டர் படைத் தலைவர்," தலைவியின் பக்கமே நான், தலைவியின் புகழ் ஓங்குக! இனி என் வாழ்நாளெல்லாம் தலைவியின் புகழைப் பரப்புவதே என் கொள்கை!" என்றெல்லாம் சொன்னதும் அனைவரும் அறிந்ததே! இத்தனை நாளாகத் தலைவியின் பக்கம் இருந்து வந்த குண்டர் படைத் தலைவர் நேற்று த் திடீரெனத் தலைவிக்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக நம்பத் தகுந்த செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

இவ்வளவு நாளாக 'PROXY' குரல் கொடுத்து வந்த குண்டர் படைத் தலைவர் நேற்றுத் தன் சொந்தக் குரலில் தலைவியுடன் பேசி இந்த மிரட்டலை விடுத்ததாகத் தெரிகிறது. பெனாத்தலார் சங்கத்தில் சேர்ந்த சிறிது நாளிலேயே டுபுக்குவும் சேர்ந்ததின் பின்னணி இதுதான் என உறுதிபடத் தெரிகிறது. திரு டுபுக்கு அவர்கள் அம்பிக்கும், குண்டர் படைத் தலைவருக்கும் சகோதரர் என்று இந்த வலை உலகு நன்கு அறியும். சமீபத்தில் திருநெல்வேலியில் வலைப்பதிவர் மஹாநாடு கூட்டிய டுபுக்கு அது தோல்வி அடைந்தது பற்றி மிகுந்த மனவருத்தமுடன் இருந்த வேளையில் சங்கப் பிரவேசம் நடந்து உள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? கூடிய சீக்கிரம் அம்பியும் சேருவார் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தலைவியைத் தலைமைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் இது ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தனக்குப் பாதுகாப்புக்காகத் தலைவி "எலிப்படை" தரவேண்டும் எனவும், AtoZ உள்ள சிறப்புப் பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, பொங்கி எழுங்கள். வீறு கொண்டு எழுந்து உங்கள் தலைவியைக் காக்க வாருங்கள். வெற்றி வேல்! வீரவேல்! :D :D :D

Tuesday, October 03, 2006

132. மறுபடி ரயிலும், நாங்களும்

ரயிலில் நாங்கள் போவது புதிசு எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் நாட்கணக்காக எங்களை மாதிரி யாரும் போயிருக்க மாட்டார்கள். முன்னே எல்லாம் ராஜஸ்தான் போகும்போது சலிக்காமல் மூன்று நாட்கள் ரயில் சரியான நேரத்துக்குப் போனாலே போக வேண்டும். லேட் என்றால் கேட்கவே வேண்டாம். சமீப காலத்தில் மங்களூர் போனபோதும் சரி, அப்புறம் மைசூரில் இருந்து திருச்சி போனபோதும் சரி இந்த ரெயிலுக்கு என்ன ஆச்சுன்னு

புரியவே இல்லை. Before time போய் விட்டது. இதிலே என்ன கஷ்டம் என்றால் அது போய்ச்

சேரும் நேரம்தான். காலை 4-30-க்குப் போக வேண்டும் என்றால் இது பாட்டுக்கு 3-45-க்கே போய் விடுகிறது. இது சரியாகப் போகலைனு தெரியுமா, போகுதுன்னு தெரியுமா? கூட

வருகிற அட்டெண்டரிடம் கேட்டுக் கொண்டே வரவேண்டும். அவர் நல்லாத் தூங்குவார். நம்மை

மாதிரியா? ராப்பூரா முழித்துக் கொண்டே வந்து ஸ்டேஷன் வரப் போகிறதுனு தெரிஞ்சதும் தூங்கும் என் கணவரை எழுப்ப வேண்டும். தூக்கம் தெளியாமல் இருக்கும் அவர்

தூக்கம் தெளிவதற்குள் ஸ்டேஷன் வந்துடும். அப்புறம் கீழே இறங்கி சாமானை இறக்கி என்று ஒரே அமர்க்களத்தில் தூக்கமாவது? ஒண்ணாவது? எல்லாம் போய்விடும்.

இம்முறை டெல்லி போகும்போது தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸில் தான் முன்பதிவு செய்திருந்தோம்.

இப்போவெல்லாம் ஜி.டி. வேண்டாதது ஆகி விட்டதே? ராஜ்தானியில் போகலாம் என்றால்

காலம்பர 3 மணிக்கே எழுந்துக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் கால் டாக்ஸி காரன் கூடத்

தூங்குகிறதாலே ஒரு 30முறையாவது கூப்பிட்டுக் கெஞ்சி நாங்க ரெயிலுக்குப் போக

வேண்டி இருப்பதைச் சொல்லிக் கெஞ்ச வேண்டி உள்ளது. அதனால் தமிழ்நாடு ராத்திரி 10 மணிக்குத் தானே, நிம்மதியாகப் போகலாம் என்று ப்ளான். போய்ப் படுத்துக் கொண்டாச்சு. மறுநாள் காலைக் காப்பி முன்னெல்லாம் "பாட் காபி" என்று கொண்டு வருவார்கள்.

ஆர்டர் எடுப்பார்களா என்றதற்கு இப்போவெல்லாம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இவங்க கொடுக்கிற காபி என்ற திரவம், நம்ம ஏ.ஆர். காட்டரிங் சர்வீஸில் (ஏ.ராஜசேகரன், பம்பாய்.) கொடுக்கிற மாதிரி ஒரு சின்ன ஸ்பூனில் தான் இருக்கும். டிபன் என்ற பேரில் நெத்தியில் வச்சுக்கிற ஸ்டிக்கர் பொட்டு சைஸுக்கு இட்லி என்ற கல்லும், வடை என்ற செங்கல்லும் கிடைக்கும். கேசரி என்ற பெயரில் ராஜசேகரன் கொடுக்கும் ஒரு வஸ்து மஞ்சள் கலரில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் மற்றது உள்ள ஒரு பாக்கெட் ப்ரேக் ஃபாஸ்ட் என்ற பெயரில் வரும். எப்படியோ ராஜசேகரன் கொடுக்கும் சாப்பாட்டைச் சகித்துக் கொண்டு திரும்பத்

திரும்பக் கூப்பிடும் வி.வி.ஐ.பிக்களைப் போல அதையும் விடாமல் வாங்கிச் சாப்பிட்டதும் உண்டு. ஆனால் இம்முறை வீட்டிலேயே எல்லாம் செய்துகொண்டு எடுத்து
வந்துவிட்டதால் சரி, காப்பிக்குப் பார்த்துக்கலாம்னு இருந்தோம். காலையில் பார்த்தால் சீருடை

அணிந்த சிப்பந்திகளால் கொஞ்சம் தரமான நல்ல காஃபி கிடைத்தது, அதுவும் ஓரளவு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே.ன்று ராத்திரி வரை ரெயில் சரியாக நேரத்தில் சென்று கொண்டிருந்தது.

ஆனால் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸுக்கு எங்க மேலே ரொம்ப நாளா கோபம். அது எனக்குத் தெரியும். முன்னால் டெல்லியிலிருந்து வந்தபோதே நாங்க சென்னை வரை வராமல்

நடுவில் நாக்பூரில் இறங்கி விட்டோம். அதுக்கு அப்புறமும் நாக்பூரில் இருந்தே போனோம்.

பின்னால் இரண்டு முறை போனபோது நாக்பூர் மட்டுமே போய்வந்தோமா அது பயங்கரக்

கடுப்பில் இருந்தது எங்கள் கிட்டே. அதனால் மறுநாள் விடிகாலை ஆக்ராவுக்குச் சற்று

முன்னால் ரெயில் நின்றது பாருங்கள் மணிக்கணக்காக நின்று கொண்டே இருந்தது. யாருக்கும்

ஒண்ணும் புரியாமல், யார் முழிச்சுக் கொண்டிருந்தாங்க, நாங்க ஒரு 2,3 பேர்தான். மேல்

பெர்த்தில் இருந்து என் கணவர் நல்ல குறட்டை. அப்புறம் போய் அட்டெண்டரை எழுப்பிக்

கேட்டதில் ஆக்ராவுக்குச் சற்றுத் தள்ளி "ராஜா கி மண்டி" என்ற ஊரில் ரெயில் தண்டவாளத்தை

விட்டு இறங்கி விட்டதாகவும் அதை அப்புறப்படுத்தியதும்தான் இது கிளம்பும் என்றும் சொன்னார்.

ஆகவே இம்முறையும் நாங்கள் டெல்லி போய்ச் சேரும்போது காலை 11-30, அதுவும்

நிஜாமுதீனில் இறங்கினோம். ஆகிவிட்டது. அங்கே இருந்து குர்காம்ன்ல் இருக்கும் மைத்துனர்

வீட்டுக்குக் காரில் போகும்போது 12-50-க்கு மேல் ஆகிவிட்டது. அங்கே போனால் கரெண்டே

இல்லை. கேட்டால் கரெண்ட்டா அப்படின்னா என்று கேட்கிறார்கள். அங்கே ஹரியானாவில் கரெண்ட் என்பது மின்வாரியக் காரர்களுக்கு மனம் இருந்தால் மட்டும் கொடுக்கும் ஒரு

வஸ்து என்றும், பொது மக்களுக்குக் கரெண்ட் தேவை என்றால் ஜெனெரேட்டரோ

அல்லது இன்வெர்ட்டரோ வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆஹா,

தமிழ்நாடா? சொர்க்கம் அங்கேதான் என்று நினைத்துக் கொண்டோம்.

Monday, October 02, 2006

ஒரு வேண்டுகோள்

ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தான்

போட நினைத்தேன்.அந்தப்பக்கம்

தனியாகப் பிரிச்சப்புறம் அது

போணியே ஆகவில்லை. தவிர,

தமிழ்மணத்தில் முகப்புப்

பக்கத்தில் சேர்க்க URL

கொடுத்தால் அப்படி ஒருத்தர்

இல்லவே இல்லைனு ஒரே

சாதனை. முத்தமிழிலும் நான்

கைலை யாத்திரை பற்றி

எழுதுவதைப் போடுகிறேன்.

அங்கேயும் நானே படித்து நானே

விமரிசனம் பண்ணிக்

கொள்கிறேன். இந்த லட்சணத்தில்

"நம்பிக்கைகுழு" விற்கு

எழுதுங்கள்னு மஞ்சூர் ராஜாவின்

வேண்டுகோள். யார் படிக்கப்

போறாங்களோ தெரியாது. திருமதி

விசாலம், நம்பிக்கைக் குழுவில்

இந்தத் தேவியைப் பார்த்தது

பற்றியும், அந்தத் தேவியின்

கோலத்தில் தனக்கு உடன்பாடு

இல்லைனும் எழுதி இருந்தார்கள்.

உடனே சும்மா இருக்கலாமா?

உடனேயே நான் விளக்கம்

கொடுக்கிறேன்னு பதில்

போட்டாச்சு. சுத்த

அவசரக்குடுக்கை, நான் தான்

வேறு யார்? இன்னிக்கு வீட்டிலே

வேறே வேலை ஜாஸ்தி. எல்லாம்

முடிஞ்சு இப்போதான் கணினி

கிட்டே உட்கார முடிஞ்சது.

உடனேயே கைலை யாத்திரையை

நிறுத்தி விட்டு எழுதிவிட்டேன்.

"எண்ணங்கள்" பக்கத்தில்

எழுதினதுக்குக் காரணம் இதன்

தாத்பர்யம் யாராவது

ஒருத்தருக்காவது போகட்டும்

என்ற எண்ணம் தான். படிப்பதோ,

படிக்காமல் இருப்பதோ உங்கள்

இஷ்டம்.

சிறப்புக்கள் மிகுந்த சின்னமஸ்தா தேவி.

திருமதி விசாலம் அவர்கள் தான் பார்த்த சின்னமஸ்தா தேவியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறிய தத்துவம் ஓரளவு சரியாக இருந்தாலும், பூரண விளக்கம் அவருக்குக் கிடைக்கவில்லை. எனக்கு அவ்வளவாக இதெல்லாம் தெரியாது என்றாலும் படித்துப்

புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். எல்லாம் வல்ல அந்தத் தேவியின் ஒவ்வொரு

சொரூபத்திற்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் உண்டு என்று நாம் எல்லாரும் அறிவோம். அப்படி இந்த உருவத்துக்கும் ஒரு காரணம், ஒரு காரியம் இருக்கிறது. நம்மால் எளிதில்

புரிந்து கொள்ள முடியாது. எனக்கும் புரிந்து கொள்ள ஆசைதான். ஸ்ரீவித்யா உபாசகர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நான் படித்த வரைச் சின்ன மஸ்தா தேவியைப்

பற்றி எழுதுகிறேன். இதில் ஏதாவது தவறு இருந்தால் அது நான் சரியாகப் புரிந்து

கொள்ளாமையே தவிர நான் படித்தது காரணம் இல்லை. ஏதாவது தவறாக இருந்தால்

விஷயம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் இந்த தேவியின் உருவம் பற்றி. அதுவே ஒரு கேள்விக்குறிதான். காளியை விடப்

பயங்கரமான சொரூபம் இவளுக்கு. பார்த்தாலே அருவருப்பும், பயமும் கொள்ளும் தோற்றம். பக்தர்களை ரட்சிக்கும் தாய் இந்தக் கோலம் ஏன் எடுத்தாள்? ரதியும், மன்மதனும் இணைந்திருக்கும் போது அவர்கள் மீது தன் இடக்காலை நீட்டி, வலக்காலை ம டக்கி ஆடும் நிலையில் இருக்கிறாள். நிர்வாண கோலத்தில் இருக்கும் இவள் மேனியில் கருநாகம் மாலையாகத் திகழ்கிறது. வலக்கையில் கோடரியும், இடக்கையில் துண்டிக்கப்பட்ட தன் தலையையும் ஏந்திக் கொண்டு தன் கழுத்தில் இருந்து வரும் ரத்தத்தைக் கையில்

வைத்திருக்கும் தலைப்பகுதியால் பருகும் தோற்றம். இவள் தோழியரான வர்ணனி மற்றும்

டாகினி இருவரும் இவளைப் போலவே காட்சி அளிக்கிறார்கள்.இது தோற்றம். இப்போது இதன்

அர்த்தம் என்னவென்றால்:

மனத்தை ஒருவழிப்படுத்த என்ன வழி என்று மறைமுகமாகக் கண்டத்தைக் குறிப்பாக

உணர்த்துகிறாள். கண்டத்தைத் துண்டித்துப் பார்த்தால் மனதின் ஸ்வரூபம் தெரியும் என்பார்கள்.

அறுத்தால் உடலை விட்டுப் பிராணன் போய் விடும். ஆனால் கழுத்தை அறுத்தாலும் பிரானன்

கூட்டை விட்டுப் போகாமல் இருப்பதற்குச் செய்யும் யோகம் "ஹடயோகம்" என்பார்கள். ஒரு

உண்மையான யோகி என்றால் அவருக்குத் தன் தலை, உடல் ஆகியவை செயல்படுவது நன்கு

புரியவேண்டும் என்பதை பதஞ்சலி முனிவரின் யோக சாஸ்திரம் உணர்த்துகிறது. அப்படிப்பட்ட

மனத்தைக் கண்டித்து ஏகாக்கிரக சித்தத்தில் செலுத்தும்படி செய்வதே உண்மையான யோகம்.

கண்டஸ்தானத்தில் வாயுசக்கரம் இருக்கிறது. வாயுவின் அம்சமான மனம் கண்டஸ்தானத்தில்

இருக்கிறது. அகண்ட பரிபூர்ணமான பரம்பொருளைக் கண்டமாக்கிப் பின் சின்னா

பின்னமாகக் காட்டி,(சின்னமாகவும், பின்னமாகவும்) இறைவனது மாயாசக்தியால்

இவ்வுலகம் உண்டாகிக் காத்தல், அழித்து லீலை புரிதலைக் காட்டுகிறது.

புருவங்களின் மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் இந்தத் தேவி வேகமாகப் பிரவேசிக்கிறாள்,

அதாவது யோகிகளுக்கு. காலத்தின் உதவி இவளுக்குத் தேவையில்லை. அதிவேகமாக

எப்படி மின்சாரம் அதிவேகமாக நமக்கு ஷாக் அடித்தால் நம் உடலில் பாய்கிறதோ அதை விட

வேகமாகச் சின்னமஸ்தா தேவி கண்மூடித் திறக்கும் முன் சரீரத்தில் வியாபிக்கிறாள். நம்

சரீரத்தில் வலம் வரும் முக்கியமாக இதயத்தை வலம் வரும் 101 நாடிகளில் முக்கியமானவை இடை, பிங்களை, சுழுமுனை. முதுகெலும்பின் நடுவில் இருக்கும் சுழுமுனை தனக்கு இருபுறமும்

இருக்கும் இடை, பிங்களை நாடிகளுடன் பின்னல்போல் பின்னிக்கொண்டு மூன்றும் ஆக்ஞா

சக்கரத்தில் சேருகின்றன. இது ஒரு வகையில் திரிவேணி சங்கமம். இடை கங்கை, பிங்களை யமுனை. சுழுமுனைதான் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி. இந்தச் சுழுமுனைதான் சின்னமஸ்தா தேவி என்று வைத்துக் கொண்டால் இடை வர்ணனியாகவும், பிங்களை டாகினியாகவும்

செயல்படுகிறார்கள்.நம் சரீரத்தில் இருக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியக் கிரந்திகளைத் தன் ஆயுதத்தால் அறுத்து அகில உலகிலும் உள்ள பிரம்மாண்ட சக்தியை நம் உடலில் உள்ள பிரம்மாண்டத்தில் சேர்ப்பதே இதன் தத்துவம். அதாவது மனிதனின் தலை புத்தி என்றால், இந்த புத்தி சக்திக்கு அப்பாற்பட்ட பரம்பொருள் இருக்கிறது. தலையைத் துண்டித்தல் என்பது புத்தியானது சக்தியைத் தாண்டி நிற்கிறதுக்கு அடையாளம். சகல இந்திரியங்களையும்

ஜெயித்தால்தான் புத்தியானது சக்தியைத் தாண்ட முடியும். அதனால் தான் இந்த தேவி தானும்

நிர்வாண கோலத்தில் ரதியும் மன்மதனும் இணந்திருக்கும் கோலத்தில் இருக்கும்போது

அவர்கள் மீது ஏறி நின்று ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறாள். ச்கலத்தையும் ஜெயித்துத் தான், தனது என்ற உணர்வு போனால் தான் அப்படிப்பட்ட நிலைமை அடைய முடியும் என்று ஸ்ரீவித்யா உபாசகர்கள் கூறுவார்கள்.இப்பிறவியில் அப்படி எல்லாம் நாம் இருப்போமா என நினத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் இதன் தாத்பர்யம் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

டாக்டர் நடராஜன் என்னும் தேவி உபாசகர் (திரு நஜன், தற்சமயம் இல்லை) ஸ்ரீவித்யையைப்

பூரணமாகக் கற்றுக் கையாண்டவர் என்றும் அவர் பிரசுரித்துள்ள "தசமஹாவித்யா"

என்னும் நூலில் இந்தத் தேவியைப் பற்றி இன்னும் அறிய முடியும்
என்றும் கூறுகிறார்கள்.

ஆதாரம்: ஜபல்பூர் நாகராஜசர்மா.

நம்பிக்கைக் குழுவிற்காகக் கீதா சாம்பசிவம்.