எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 28, 2010

Monday, September 27, 2010

காக்கை, குருவி, எங்கள் ஜாதி! :(

பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலம்பர சீக்கிரமாவே குளிச்சுட்டு வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேனா! நம்ம ரங்க்ஸ் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவேண்டிய ஏற்பாடுகளைக் கவனிச்சுட்டு இருந்தார். காலம்பர மணி ஆறிலிருந்து ஆறரைக்குள்ளாக இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பிலே மேற்குப் பக்கமான வாசல் இருக்குமிடத்திலே கழிவு நீர் எடுக்கும் லாரி வந்து கழிவு நீரை எடுத்துட்டு இருந்தது. வெளியே போகமுடியவில்லை. அந்த லாரிகளுக்கெல்லாம் டீசல் விட்டு ஓட்டறாங்களா, கரியா, விறகானு எனக்குப் பல வருஷ சந்தேகம். அவ்வளவு புகை விட்டுட்டு இருந்தது. வாசலிலே பூச்செடிகளில் இருந்து பூப் பறிச்சுட்டு ரங்க்ஸ் அப்போத் தான் உள்ளே வந்திருந்தார். தடாஆஆஆஆஆஆஆஆர்! என்னவோ பயங்கரமான ஒரு சத்தம். அதுக்கு முன்னே சண்டை போடறாப்போல் பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அதெல்லாம் ஜகஜம்! வேலை வேறே இருந்ததே!

அதுக்குள்ளே பக்கத்துக் குடியிருப்புக் குழந்தைகள் கத்தினாங்க. வண்டி போச்சு, வண்டிபோச்சு! அப்படினு கத்திண்டு யாரையோ கூப்பிட்டு, "அங்கிள், உங்க வண்டி சுக்கு நூறா உடைஞ்சுபோச்சுனு சொல்ற குரல் கேட்டது. மனம் பதறியது. உடனே நம்ம ரங்க்ஸ் வெளியே போய்ப் பார்த்தார். ஆள் உள்ளேயே வரலை. கலக்கம் ஜாஸ்தியாக நானும் வெளியே போய்ப் பார்த்தால், பக்கத்துக் குடியிருப்பில் எங்க சமையலறையை ஒட்டி ஒரு குடியிருப்புப் பகுதிக்கான வாசல் வரும். அங்கே இருப்பவங்க வண்டியை அந்த கழிவு நீர் எடுக்கும் லாரி இடித்துத் தள்ளி இருக்கிறது. அந்த லாரி முன்னால் சாலையிலே மேற்கேதான் செல்லணும் முக்கியச் சாலைக்குப் போக. வண்டியோ எங்க வீட்டுக் காம்பவுண்டை ஒட்டி நிறுத்தப் பட்டிருந்திருக்கிறது. பின்னால் வந்து இடிச்சதா?? விசாரிச்சால் கழிவு நீரை எல்லாம் எடுத்து முடிச்சுட்டுக் கடைசியில் கசடுகளைச் சுத்தம் செய்து, அந்தக் குடியிருப்புக்கு அடுத்து இருக்கும் இன்னொரு வீட்டு வாசலில் போட்டிருக்காங்க அந்த கழிவு நீர் சுத்திகரிக்கும் லாரியின் ஆட்கள். அந்த வீட்டுக்காரர் இதை ஆக்ஷேபிக்கவே, இவங்க அவரை அடிக்க, அவர் உடனே போலீஸுக்குச் சொல்ல, லாரிக்காரர் கோபத்தோடு வண்டியைப் பின்னால் எடுக்க வேகமாய் வந்த வண்டி அந்த இரு சக்கர வாகனத்தைத் திரைப்படங்களில் இழுத்துட்டுப் போற மாதிரி இழுத்துக்கொண்டே கிட்டத்தட்ட நூறடிக்குப் போய் அப்புறமா நின்னிருக்கு.

பார்க்கவே தூக்கி வாரிப் போட்டது. நல்லவேளையா அந்த வண்டியிலே ஒரு சின்னக் குழந்தை இரண்டு வயசுக்குள் இருக்கும். அது தினமும் அந்த வண்டியிலே அவங்க வீட்டிலே இருந்து இங்கே இருக்கும் தாத்தா வீட்டுக்கு வரும். நானே அங்கே கோலம் போடும்போது இப்படி நடந்திருந்தாலோ, ரங்க்ஸ் பூப்பறிக்கும்போது நடந்திருந்தாலோ! நினைக்கவே பயம்மா இருந்தது. எல்லாம் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக் கலாசாரங்களால் வந்த வினை. எல்லா வீடுகளும் இடிக்கப் பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாகின்றன. நாலு, ஐந்து பேர் இருந்த வீடுகளில் எட்டுக் குடியிருப்புகள், பத்துக் குடியிருப்புகள் கட்டப் பட்டு நாற்பது, ஐம்பது பேருக்கு மேலே இருக்காங்க. எல்லாருக்கும் தண்ணீர் வசதி, இட வசதினு எல்லாம் செய்து கொடுக்கணும். முக்கியமாய்க் கழிவறைத் தண்ணீரும் அவங்க குளிக்கும், தோய்க்கும் நீரும்போக இடம் வேண்டும். அதுக்கெல்லாம் இடம் விடாமல் இருக்கும் செடி, கொடி, மரங்களை எல்லாம் உயிரோடு இருக்கும்போதே வெட்டிவிட்டு வெறும் மூன்றடியிலிருந்து ஐந்தடிக்குள் நடக்க மட்டுமே இடம் விட்டுக் கட்டிவிடறாங்க.

அங்கே மூச்சு விட்டால் எங்க வீட்டிலே எக்கோ அடிக்கும். அங்கே பேசினால் இங்கே நான் தான் என்னமோ கேட்கிறேன்னு ரங்க்ஸ் பதில் கொடுப்பார். சில சமயம் அவர் பேசறார்னு நினைச்சு நான் பாட்டுக்கு (வழக்கம்போல்) தனியாப் பேச வேண்டி ஆயிடுது. எட்டுக் குடியிருப்புகளிலும் சேர்ந்து 45ல் இருந்து ஐம்பது பேருக்குள் இருக்காங்க. அவங்க செப்டிக் டாங்க் நிரம்பினால் அதிகத் தண்ணீர் எல்லாம் தெருவுக்குத் தான். மாசம் இரண்டு முறை லாரி வந்து எடுத்தும் உடனடியாக நிரம்பி விடும். அவங்க சாப்பிட்டுட்டுப் போடும் இலை, டீ, காபி குடிக்கும் பேப்பர், ப்ளாஸ்டிக் கப்கள், பழங்களின் தோல்கள்,செருப்புகள், துணிகள் எல்லாம் எங்க வீட்டுக்குத் தான். சொல்லவும் முடியலை, மெல்லவும் முடியலை. சொன்னால் அவங்க முகத்தைத் தூக்கி வச்சுக்கொண்டு விரோதி மாதிரிப் பார்க்கிறாங்க. அவங்க தேங்காய் உடைக்கிறதோ, மற்ற கடினமான சாமான்களை உடைக்கவோ எங்க வீட்டுக் காம்பவுண்டு தான். அதையும் கண்டிக்க முடியாது.

மற்ற மாநிலங்களில் இம்மாதிரிக் குடியிருப்புகள் கட்டுவதென்றால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிவிட்டுத் தான் அவங்க குடியிருப்புகளின் ப்ளானைக் காட்டி அனுமதியே வாங்க முடியும். இங்கே ஒண்ணும் இல்லை. நகராட்சி அனுமதி கொடுத்துவிடும். அவங்களுக்கு ஒவ்வொரு குடியிருப்புக்கும் கணக்கிட்டு பெட்டர்மெண்ட் டாக்ஸ் கிடைச்சுடும். அதுக்கு மேலே அவங்க யோசிக்கிறதில்லை. பாதாளச் சாக்கடை போடறேன்னு எல்லா வீட்டுக்காரங்களும் 7,500 ரூபாய் கட்டி வருஷம் பத்து ஆகியும் இன்னும் ஒண்ணும் காணோம். எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள். இதிலே குடியிருப்புகளில் வரும் விசேஷங்களில் போடப் படும் குப்பைகள். ஆனால் இந்தக் குப்பை எடுக்கிறவங்களும் சரி, மற்ற வேலைக்காரங்களும் சரி குடியிருப்புகளில் இருக்கிறவங்க என்னமோ ரொம்பப் பெரிய மனுஷங்கனு நினைச்சுட்டு அவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதான் ஏன்னு புரியறதே இல்லை.

இப்போ எங்களுக்கு இன்னொரு பக்கத்து வீடும் இடிச்சு அங்கேயும் எட்டோ, பத்தோ அடுக்கு மாடிக் குடியிருப்பு வரப் போறது. எதிர் வீடு இடிச்சு அங்கேயும் நாலோ, ஐந்தோ வரப் போகிறது. எல்லாம் நகரமயமாதலின் விளைவுகள், தவிர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும், எத்தனை வீடுகளில் மரங்களை வெட்டி நிலத்தை சிமெண்ட் போட்டு பூமித் தாயின் குரல்வளையை நெரித்திருக்கின்றனர். சூரியனின் வெம்மை ஏற்கெனவே தாங்கவில்லை. இப்படி எல்லாரும் இருக்கும் தோட்டங்களை அழித்துவிட்டு வீடுகள் கட்டிக்கொண்டு வந்துவிட்டால், பூமியில் குளுமை எங்கிருந்து வரும்?? பறவைகள் குடியிருக்க எங்கே போகும்?? ஏற்கெனவே சிட்டுக்குருவி முற்றிலும் அழிந்தே போயாச்சு. ஒண்ணு கூடக் கண்ணிலே படறதில்லை. ஏதோ கொஞ்சம் மைனா, ஆனைச்சாத்தன், குயில், காக்கைகள், கிளிகள், புறாக்கள்னு இருக்கு. அதுவும் போயாச்சுன்னா, வெறுமை, வெறுமை வெறுமைதான்! காலம்பர நாலு மணியிலிருந்து எங்க வீட்டுத் தோட்டத்தில் பறவைகளின் கூச்சல் காதைப் பிளக்கும். ஒரு நாள் கேட்கலைனாலும் என்னவோ, ஏதோனு மனசு துடிக்கும். அதே மாதிரி சாயந்திரம் ஆறரை மணி வரைக்கும் கேட்டுட்டு இருக்கும். இனி???????

Sunday, September 26, 2010

World's Greatest Dad

ஹிஹிஹி, நேத்திக்குக் கணினியிலே ஒண்ணும் செய்ய முடியலையா?? என்ன பண்ணினேன்னு நினைக்கிறீங்க! படம் தான்! World's Greatest Dad படம் பார்த்தேனே! இன்னும் சில நாட்களுக்கு இணையத்திலே நேரம் செலவு செய்ய முடியாது. ஆகவே வேறே வழியே இல்லை. மத்தியானம் 2-30 to 4-00 மணிக்குள்ளாக முடியறாப்போல் படம் இருந்தால் பார்க்கலாம். புத்தகங்களை மறுபடி ஒரு முறை படிக்கலாம். இல்லாட்டி வேறே ஏதாவது செய்யணும். என்ன தொல்லைன்னா வேர்டில் எழுதிக் கூட வச்சுக்க முடியலை. :( பார்க்கலாம்!

Saturday, September 25, 2010

நேத்திக்கு நோ சினிமா! :D

என்ன கொடுமைடா சரவணா இது! ஏதோ ஒரு இரண்டு, மூணு நாள் சினிமா பார்த்தாலும் பார்த்தேன். நம்ம மக்கள் எல்லாம் தனி மெயிலில் இன்னிக்கு என்ன சினிமா பார்த்தீங்கனு நலம் விசாரிக்கறாங்கப்பா! ஹிஹிஹி, நாம சினிமா பார்க்கிறது தான் இப்போ இண்டர்நேஷனல் லெவல்லே ஹாட் டாபிக்னு புரிஞ்சு போச்சே! நேத்திக்கு ஒண்ணும் சினிமா பார்க்கலை. பொதிகையிலே தொலைக்காட்சி இந்தியாவில் வந்த ஐம்பதாம் ஆண்டுவிழா நிகழ்ச்சி மறு ஒளிபரப்புப் போட்டாங்க. லய விந்நியாசம். அதான் கேட்டேன். :))))))) அதுக்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே உட்கார்ந்தே இருக்கவேண்டாமே! தண்டபாணி தேசிகரோட ஜகத்ஜனனி, கல்யாணி பாட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.

Friday, September 24, 2010

K Pax

நேத்து மதியம் இரண்டரை மணிக்குக் கணினியை மூடறச்சே கூடப் படம் பார்க்கும் எண்ணமே இல்லை. ரங்க்ஸ் நல்லா குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பிச்சார். அந்தச் சத்தத்திலே என்னாலே படிக்கக் கூட முடியலை! அவ்வளவு எக்க்க்க்க்கோ! :P சரினு கொஞ்சம் நேரம் காமெடி பார்க்கலாம்னு பார்த்தா, செந்தில், கவுண்டமணி. எனக்குப் பிடிக்காத காமெடி நிகழ்ச்சி! தலையெழுத்தேனு நொந்து போய் ஒவ்வொரு சானலாத் திருப்பினா, சோனி பிக்ஸில் இருந்து ஸ்பேஸ்மேன், ஸ்பேஸ்மேன், அப்படினு குழந்தைங்க சத்தம் போட்டுட்டு இருந்ததுங்க. கொஞ்சம் சுவாரசியம் தட்ட என்னனு பார்க்கலாம்னு பார்த்தால்............. நம்ம ஊரு கீழ்ப்பாக்கம் மாதிரி நியூயார்க் கீழ்ப்பாக்கத்திலே அட்மிட் ஆன ஒருத்தர் தான் K Pax ல இருந்து வந்திருக்கிறதாவும், ஜூலை 27-ம் தேதிக்குள் திரும்பணும்னும் சொல்லிட்டு இருக்கார். நம்ம ஊரு தெனாலி மாதிரி எல்லாம் இல்லை. இவருக்கு வைத்தியம் செய்யற டாக்டர் அவரைத் தன் வீட்டுக்குக் கூப்பிடறார். எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த மனுஷன்/ஸ்பேஸ்மேன்?? குழந்தைங்களோட முக்கியமாய்ச் சின்னப் பெண் குழந்தையோடு நெருங்கிப் பழகி விளையாடறார்.

அட??னு நிமிர்ந்து உட்கார்ந்தால், ஒளி வழிப் பிரயாணம் செய்ததாய்ச் சொல்றார். ஆனாப் பாருங்க தண்ணிக்குழாயிலே வேகமாய்த் தண்ணீர் கொட்டவும் ஆளைக் கையிலே பிடிக்க முடியலை. அங்கே ஆரம்பிச்சது சந்தேகம், எனக்கு மட்டும் இல்லை, அந்த மனநல மருத்துவர் மார்க் பவலுக்கும். சந்தேகப் பட்டுக் கொண்டு அவரை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி அவர் வாயிலிருந்து சில நிகழ்வுகளை வரவழைக்கிறார். இங்கே ஆஸ்பத்திரியின் சக நோயாளிகளோ அவரால் சிலருக்கு அதிசயிக்கத் தக்க விதத்தில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அதோடு அவரோடு K Pax செல்லவும் தயாராகின்றனர். எல்லாரையும் அழைத்துப் போகமுடியாது என்றும் ஒருவரைத் தான் அழைத்துப் போகமுடியும்னும் அந்த ஸ்பேஸ்மேன் கதைப்படி அவர் பெயர் ப்ரோட்/ராபர்ட் போர்ட்டர் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார். நோயாளியாக ப்ரோட் என்ற பெயர்.

மனநல மருத்துவர் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கடைசியிலே கண்டு பிடிக்கிறார். அது சஸ்பென்ஸ்! அதனாலேயே அதிகம் விவரிக்கவில்லை. ஆனால் பாருங்க தமிழிலே ஏன் இப்படி எல்லாம் வர மாட்டேங்குதுனு ஒரு ஏக்கம் மட்டும் வருது. அப்புறம் தெனாலியை யோசிச்சுப் பார்த்துட்டு மனதைத் தேத்திட்டேன். இங்கே உலகநாயகர்கள் நடிக்கிறாப்போல்தானே எடுக்க முடியும். இதிலேயும் ப்ரோட் K Pax திரும்பிப் போகிற முதல்நாள் இரவு ஆஸ்பத்திரியில் பிரிவு உபசார விழா, நினைவுப் பரிசுகள் கொடுக்கிறது எல்லாம் உண்டு. ஆனால் தமிழில் எடுத்திருந்தால் எத்தனை பாட்டு, டான்ஸ், ரிப்பன்கள் பறக்கும், கோமாளி வேடம் போட்டுக் கொண்டிருப்பாங்க மனநோயாளினு காட்ட. இங்கே அப்படி எல்லாம் இல்லை. சாதாரணமாய் உடை அணிந்து கொண்டு மருத்துவரோடு பேசறச்சேயும் சாதாரணமான மனிதர்களாகவே பேசறாங்க. கொனஷ்டை,கோணங்கி எல்லாம் இல்லை. அதனால் உலகநாயகர்களுக்கு இப்படி ஒரு கதை இருக்கிறதாவே தெரியவேண்டாம்.

இன்னிக்கு என்னவா?? ஹிஹிஹி, தெரியாதே! எதுவும் என் கையில் இல்லைனு மூணுநாளாப் பார்த்தாச்சு. இன்னிக்கு மத்தியானம் தூங்கலாம்/படிக்கலாம்/சினிமா பார்க்கலாம். எதுவும் செய்யாமல் கணினியிலேயே உட்கார்ந்தும் இருக்கலாம். நிறைய எழுத வேண்டியது இருக்கு. பதினைந்து நாட்கள் எழுதாமல் இருந்தாச்சு! பார்க்கலாம். வர்ட்டா???????????????

Thursday, September 23, 2010

செல்போன் மணிபோல் சிரிப்பவள் இவளா??

செல்லுவோம், செல்லுவோம், செல்லிக்கொண்டே இருப்போம்! இதான் இன்றைய இந்தியாவின் தாரக மந்திரம்! மக்கள்லாம் அப்படிப் பேசறாங்கப்பா செல்லிலே. அதாவது கைபேசியிலே. அதன் முக்கியத்துவம் என்னமோ வேறே காரணங்களுக்காக வந்தது. ஆனால் இப்போ என்னமோ வேண்டுதல் மாதிரி எல்லாரும் பேசறதைத் தவிர வேறு எதுவும் செய்யறாப்போல் தெரியலை! உண்மையிலேயே ஆச்சரியம் என்னன்னா அப்படி என்னங்க இருக்கும் பேச?? என்னைப் பொறுத்தவரைக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான். நாங்க ரெண்டு பேரும் வெளி ஊருக்கு ஒருத்தரை ஒருத்தர் விட்டுட்டுப் போனாக்கூடத் தந்தி பாஷைதான் பேசிப்போம். முக்கியமான விஷயம் இருந்தால் ஒழியக் கூப்பிட்டதில்லை. ஆனால் இப்போ என்னடான்னா, செல்லிலே பேசாட்டி கெளரவக் குறைச்சல்ங்கற அளவுக்கு ஆகிப் போச்சு. இதன் விளைவுகளை யாரும் எண்ணிப் பார்க்க மாட்டாங்க போல!

குடும்ப அந்தரங்கங்கள் அனைத்தும் கைபேசி மூலமே பேசப்படுகின்றன. அதுவும் பொது இடத்தில் வைத்துப் பேசறாங்க. அதைக் கேட்பவர்கள் அனைவருமே நல்லவங்கனு சொல்லமுடியுமா?? நமக்குப் பாதகமான விஷயங்களை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த நாமே காரணம் ஆகின்றோம். மேலும் பள்ளிச் சிறுவர்கள் இதற்கு அடிமையாகிப் படிப்பை விடவும் இம்மாதிரியான செல்போன் விளையாட்டுக்கள், போட்டிகள் இவற்றில் மூழ்கிப் போகின்றார்கள். இதற்குச் சமீபத்தில் ஒரு உதாரணம் படிச்சேன். +2 படிக்கும் மாணவி ஒருத்தி வகுப்பில் திடீரென வயிறு வலிக்கிறது என ஆசிரியரிடம் சொல்ல, அவங்களும் ஓய்வறைக்குப் போய் ஓய்வு எடுக்குமாறு மாணவியை அனுப்பி வைக்கிறாங்க. அந்த வகுப்பு முடிந்து, அதற்கடுத்த வகுப்பு நேரமும் முடிஞ்சதும் அந்த ஆசிரியை ஓய்வறையில் அந்தப் பெண் எப்படி இருக்கானு பார்க்க அங்கே செல்ல, அந்தப் பெண் திடீரென வந்த ஆசிரியையிடம் செல்லும், கையுமாக மாட்டிக்கொள்ள, அதை வாங்கிப் பார்த்த ஆசிரியை கடந்த ஒரு மணி நேரமாய் அந்தப் பெண் வேறொரு பையனிடம் செல் மூலம் காதல்மொழிகள் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.

விஷயம் வீட்டுக்குப் போய்ப் பெற்றோரையும், பெண்ணையும் எச்சரிக்கை செய்து விட்டுட்டாங்க. ஒரு பக்கம் நாம சின்ன வயசிலே கல்யாணம் பண்ணக் கூடாதுனு சொல்லுவோம். இன்னொரு பக்கம் இம்மாதிரியான காதல்களை ஆதரிக்கணும்னும் சொல்லுவோம். படிப்பு முடிஞ்சு வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன்னே காதல் எதுக்குனு யாருமே யோசிக்கிறதில்லை! இப்போ செல் வைச்சிருக்கிறவங்களிலே நூற்றுக்கு ஒருத்தர் தான் காதலிக்காமல் இருப்பாங்கனு நினைக்கிறேன். பெற்றோர் கண்காணிக்கிறாங்களா? சந்தேகமே! அவங்க வேலைகளுக்கே அவங்களுக்கு நேரம் பத்தலையே! செல்லால் சில நன்மைகளும் இருக்குத் தான்.

ஒரு சில ஆபத்தான நேரங்களில் செல் மூலம் செய்திகளைச் சேகரிக்கலாம். அது உண்மைதான். எனினும் பெரும்பாலோர் செல்லைப் பயன்படுத்துவது வீண் பேச்சுக்கு மட்டுமே. இதற்குப் பல உதாரணங்கள் சொல்ல முடியும் என்றாலும் ஒருமுறை சென்னை நகரப் போக்குவரத்துப் பேருந்துகளிலோ, மின் ரயில் தொடர்களிலோ போய்ப் பார்த்தால் போதும். யார் கையைப் பார்த்தாலும் ஒரு கைபேசி. அதில் வரும் செய்திகள், குறுஞ்செய்திகள். பேச்சு, பேச்சு, எப்போப் பார்த்தாலும் பேச்சு. அவங்க வீட்டிலே அன்னிக்கு என்ன சமையல்னு ஆரம்பிச்சு எல்லாமும் செல் மூலமே பேசப்படுகின்றன. இதில் சிலர் காதில் கேட்கும் கருவியைத் தெரியாத மாதிரிப் பொருத்திக்கொண்டு பேசறதைப் பார்த்தால், தானே பேசிக்கிறாங்களேனு கொஞ்சம் பயமாக் கூட இருக்கு! அப்புறமாத் தான் புரியுது செல்லில் பேசறாங்கனு. இதை எல்லாம் பார்த்தால் இவ்வளவு முன்னேற்றம் தேவையானு கூடத் தோணுது. செல்லில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளங்களைக் கடக்கின்றனர். தெருவில் நடந்து செல்லும்போதும் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். எங்கே?? அவங்க போக வேண்டிய இடங்களுக்கா?? இல்லையே?? உயிரை அல்லவோ இழக்கின்றனர்?? இந்த செல்போனால் உயிரிழந்த இளைஞர்கள், இளம்பெண்கள் என எத்தனையோ பேரைச் சொல்ல முடியுமே!

எங்க கிட்டே செல் இருக்குனு பேர்தானே தவிர முக்கால்வாசி வீட்டிலேயே வச்சுட்டுப் போயிடறோம். வெளி ஊர்போனால் தான் கையில் எடுத்துப் போகிறோம். நாங்க ஊருக்குப் போகும்போது எங்களுக்கு வண்டி ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருத்தர் செல்லில் இருந்து காதை எடுக்காமலேயே வண்டியை ஓட்டினார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. அடுத்த முறை அந்த ட்ராவல்ஸ்காரங்க கிட்டேயே வண்டி எடுக்கவில்லை. செல் இல்லாமலே அந்தக்கால கட்டத்தில் இந்தியத் தபால் துறை எக்ஸ்ப்ரஸ் டெலிவரினு ஒரு சேவையை ஞாயிறன்று கூடக் கொடுத்து வந்தது. அப்போதெல்லாம் சென்னையில் போட்ட தபால்கள் ராஜஸ்தான் நசிராபாத்திற்கு நான்காம் நாள் காலை,முதல் டெலிவரியில் வந்துவிடும். சில சமயம் மூன்றாம் நாளே மாலையில் வந்துவிடும். இந்த பிரும்மாநந்த ரெட்டி வந்தார், தபால் சார்ட்டிங்கை மாற்றித் தொலைச்சார். அவ்வளவு தான்! தபால் துறையும் நாசம், கூரியர்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. இப்போ தபால்னு பேருக்கு இருக்கிறதோடு, இருக்கிற ஒண்ணு, ரெண்டுக்கும் மூடுவிழா நடத்தறாங்க. கேட்டால் அதான் இ=மெயில், எறும்பு மெயில், செல், தொலைபேசினு வந்தாச்சேனு சொல்றாங்க. ஆஹா, அந்தக் கால கட்டங்களில் உங்களுக்கு யாராவது எழுதின லெட்டர் இருக்கா?? இன்னும் வச்சிருக்கீங்களா?? அநேகமாய் அதை எல்லாம் வச்சு ஒரு கண்காட்சி நடத்தறாப்போல் ஆயிடும் கொஞ்சநாளைல.

கையெழுத்தும் மறந்திருக்கும் எல்லாருக்கும். என்னத்தைச் சொல்றது?? நல்லவேளையா இன்னும் செக்கிலே கையெழுத்தைக் கையால் தான் போடணும்னு வங்கிகளில் வச்சிருக்காங்க. இல்லாட்டி அதுவும் எலக்ட்ரானிக் கையெழுத்தாயிடும். காலம் மாறுது, நீ மாறலைனு என்னை எல்லாரும் சொல்றாங்க. மாறணுமோ?? மாறத் தெரியலை எனக்கு. அம்மி, ஆட்டுக்கல் இன்னும் வச்சிருக்கேன். அப்போப்போ அரைப்பேன், மின்சாரம் இல்லாத நேரங்களில். தினமும் துணி தோய்க்கிற கல்லில்தான் துணி தோய்க்கிறேன். அதனால் கொசுவத்தி ஜாஸ்தி சுத்தறேனோ?? இருமல் வரப் போறது! நிறுத்திக்கறேன். :)))))))) டார்டாய்ஸ் முழுநீளக் கொசுவத்தி சுத்தியாச்சு! கொஞ்சம் தான் எரிஞ்சது! :D

Wednesday, September 22, 2010

பனாரஸ்

இன்னிக்கு பனாரஸ் உர்து படம் பார்த்தேன். நஸ்ருதீன் ஷா, ராஜ்பப்பர், டிம்பிள், ஊர்மிளா, கதாநாயகன் யாரோ புதுமுகம். எல்லாத்தையும் தூக்கி அடிச்சது ஊர்மிளாவின் நடிப்பு மட்டுமே. அற்புதமான நடிப்பு. பாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். வழக்கமான ஜாதிவிட்டு ஜாதி காதலிக்கும் கதை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் பாபாவாய் நஸ்ருதீன் ஷா மூலம் அனைவருக்கும் தன்னை அறிதல் என்ற ஞாநம் கிடைக்கிறது. ஊர்மிளா ஒரு சந்நியாசியாக மாறுகிறார். முடிவு ஓரளவு எதிர்பார்த்தேன் என்றாலும் அதற்கு மூலம் ராஜ்பப்பராய் இருக்குமோ என்று நினைச்சேன். படம் பாதியிலே இருந்து பார்த்தேனே, அதான்! என்னங்க?? நாளைக்கா? அதெல்லாம் இப்போவே சொல்ல முடியாதுங்க. மூட் இருக்கணும் படம் பார்க்க. படமும் நல்லா இருக்கணுமே! அது சரி, இந்தப் படம் எப்போ வந்தது?? சமீபத்தில் தான் வந்திருக்குனு நினைக்கிறேன். எல்லாரும் ஷுத்த ஹிந்தி பேசறாங்கப்பா! :))))))))))))

Tuesday, September 21, 2010

The Mothman Prophecies

The Mothman Prophecies படம் பார்த்தேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே. இந்தப் பேரிலே ஒரு கதை வந்திருக்கு போலிருக்கு. படம் நல்ல த்ரில்லிங். கதைக்கும், படத்துக்கும் வித்தியாசம் உண்டானு தெரியலை. கதை படிச்சுட்டுப் படம் பார்த்தவங்க யாரானும் இருந்தாச் சொல்லுங்களேன்! நிஜம்மா இப்படி எல்லாம் நடக்குமானு தெரிஞ்சுக்க ஆவல்! அம்புடுதேன்!!!! கணினியிலே உட்காரமுடியலைனு எழுந்து போனால் தூங்க முடியலை, படுத்தால் சிரமமா இருக்கு, சரினு படம் பார்க்கலாம்னு உட்கார்ந்தா இப்படி த்ரில்லிங்கா ஒரு படம்! என்னத்தைச் சொல்றது??? :D

Monday, September 20, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!


சந்திர ஒளியிலே மட்டுமே மூலிகைகள் வளரும். நிலவொளி இல்லாமல் மூலிகைகள் வளரவில்லை. வைத்தியர்கள் வைத்தியம் செய்யமுடியவில்லை. உலகிலே எங்கே பார்த்தாலும் நோய், நொடி பரவி, அதைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்தனர். சூரிய ஒளி எவ்வாறு முக்கியமோ அதே போல் சந்திரனும் முக்கியம் என்பதை அறிந்த அனைவரும் வழக்கம் போல் பிரம்மாவிடம் முதலில் சென்று அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். பிரம்மாவோ மஹா கணபதியின் வாக்குக்கு மறு வாக்கு நான் சொல்ல முடியுமா? நீங்கள் அனைவரும் சாபம் நீங்க அவரையே வழிபடுங்கள். அவர் ஆவிர்ப்பவித்த திதியான சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விசேஷ வழிபாடுகள் செய்து அவருக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, அவர் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். மனம் உருகப் பிரார்த்தித்து உலக க்ஷேமத்துக்காக வேண்டி சந்திரனின் தோற்றமும், ஒளியும் தேவை என்று கேளுங்கள்.” என்று சொல்லிவிடுகின்றார். தேவர்கள் அனைவரும் சமுத்திரத்துக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து, “நீயும் சேர்ந்து விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு வழிபாடுகள் நடத்தினாலொழிய இந்தக் காரியம் பூர்த்தி அடையாது. “ என்று கூப்பிட, ஏற்கெனவே தான் செய்த தப்பை எண்ணி வருந்திய சந்திரனும் உடனே வந்தான்.

சந்திரனும், தேவர்களும் வழிபட்டு முடிக்கும் வேளையில் பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் பிரசன்னமாகி, தான் கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்றும், அதில் கொஞ்சம் மாறுதல் செய்வதாயும் கூறிவிட்டு, சுக்கில பட்ச சதுர்த்தி திதிகளில் உதிக்கும் நாலாம் பிறைச் சந்திரனைப் பார்க்கின்றவர்களுக்கே அபவாதம் ஏற்படும். ஆகவே அன்றைய நாள் மட்டும் யாரும் சந்திரனைப் பார்க்க வேண்டாம். மீறினால் அபவாதம், வீண்பழிக்கு ஆளாவார்கள். இதன் மூலம் யாருக்கும் தன் அழகிலோ, அறிவிலோ கர்வம் ஏற்படாமல் யாரையும் யாரும் புண்படுத்தும் செயல்களையும் செய்யாமல் இருப்பார்கள். ஆகவே நான் சொன்னதில் சிறு மாற்றத்தோடு சந்திரனுக்கு, சாபத்திலிருந்து விடுதலை அளிக்கின்றேன்.” என்று சொல்கின்றார். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கவேண்டும் அல்லவா? இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே என்பதையும் காட்டுகின்றது அல்லவா? அதோடு இல்லாமல் மேலும் சந்திரனுக்கு உதவி செய்யும் வண்ணமாய்ப்பிள்ளையார், பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து பிள்ளையாரைப் பூஜித்து வழிபாடுகள் செய்து அன்று தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டு அவனையும் வழிபடுகின்றவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களையும் நான் போக்குவேன்.” என்று சொல்லி சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்படவும் வழி செய்தார் பிள்ளையார். தேய்பிறையிலே அவனைப் பார்த்தலே நன்மை என்று சொல்லிவிட்டு வளர்பிறையிலே பார்க்கக் கூடாது என்று சொன்னதோடு அல்லாமல், அமாவாசைக்கு அப்புறம் சந்திரன் நன்கு தெரியும் முதல் திதியில் அவனைப் பார்ப்பவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்றும், பெண்களுக்கு விசேஷமாய் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் எனவும் சொல்கின்றார். பிறைச் சந்திரனைச் சிரசிலே தரித்துக் கொண்டிருப்பதில் ஈசன் ஆன சிவபெருமான் தவிர, அம்பாள் ஆன பார்வதி தேவியும், பிள்ளையாருமே ஆகும்.

பின்னர் அந்தப் பிறைச் சந்திரனைத் தன் சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் பிள்ளையார். இங்கே பால சந்திரன் பற்றிய ஒரு சிறு விளக்கம். பால என்ற இந்தச் சொல்லுக்கு, குழந்தை என்ற அர்த்தம் வராது. BHALA CHANDRAN என்ற உச்சரிப்புடன் கூடிய இந்தச் சொல்லில் பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன் நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப் படுகின்றது. அல்லது PHALA CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பார் இல்லையா அதைக் குறிப்பது, PHALA என்ற சொல் என்றாலும் பால சந்திரன் Bhala Chandran என்றாலே பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே.(பாலசந்திரன் என்று சந்திரனின் பால்ய லீலை விசேஷம் என எண்ணிப் பெயர் வைத்துக்கொள்வதாயும், அது தவறு என்றும் பரமாசாரியாள் அவர்கள் சொல்லி இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணனும், ஸ்கந்தனுக்கும் மட்டுமே பால்ய லீலா விசேஷங்கள் உண்டு. அதுவும் ஸ்கந்தனுக்கு ஆறே நாட்கள் தாம் பால்ய லீலைகள். இவர்கள் இருவருக்கும் தான் பாலகிருஷ்ணன், பாலஸுப்ரமணியன் என்ற பெயரும் வரும். அதுவே ராமாயணத்தில் ராமருக்குக் கூட பால்யலீலை என எதையும் வால்மீகி சொன்னதில்லை. ராமர் பிறந்ததும் நேரே அவங்க குருகுலம் முடிச்சுக் கல்யாணம் பண்ணறது பத்தித் தான் பேச்சு வரும். பாலசந்திரன் என்ற பெயர் தேய்ந்து வரும் பிறையைக்குறிப்பதால் அந்தப் பெயர் வைப்பது உசிதமில்லை என்று பரமாசாரியாள் சொல்லி இருக்கின்றார்.)

மேற்கண்ட கதையை நாரதர் கிருஷ்ணரிடம் சொல்லிவிட்டு, “கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாதத்து நாலாம்பிறைச் சந்திரனைப் பார்த்துவிட்டாய்.அதன் காரணமாகவே இப்போது இத்தகைய வீண் அபவாதங்களை நீ சுமக்க வேண்டி இருந்தது. என்னதான் அவதாரம் ஆனாலும், மனித உருவில் வந்திருப்பதால் மனிதருக்குள்ள சுகம், துக்கம் இரண்டையும் நீயும் அனுபவித்தே கழிக்கவேண்டும். ஆகையால் இப்போது விநாயகருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டாயானால் உன்னுடைய தொல்லைகள் குறையும். “ என்று ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார் நாரதர். கிருஷ்ணரும் அவ்வாறே விநாயகருக்கு சங்கட ஹர சதுர்த்தியில் ஆரம்பித்து விரதம் இருந்து வழிபாடுகள் செய்துவருகின்றார். விநாயகரும் கிருஷ்ணரின் பக்திவழிபாட்டில் மனம் மகிழ்ந்து, கிருஷ்ணர் அபவாதத்தில் இருந்து விலகுவாரென்றும், சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும் என்று இருந்ததை உங்களுக்காக மாற்றி, வேறு மாதிரியாகக் கொடுக்கின்றேன். எவரொருவர் இந்த ச்யமந்தகமணியின் கதையைப் படித்து வருகின்றார்களோ, அல்லது கேட்கின்றார்களோ அவர்களுக்கு பாத்ரபத மாதத்து சுக்லபட்ச சதுர்த்திச் சந்திரனைப் பார்த்தால் கூடப் பாவம் வராது. ஆகவே இந்த ச்யமந்தக மணியின் கதையும், அதில் நீங்கள் சம்பந்தப் பட்டிருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதே போல உங்கள் பிறந்த திதியான கோகுலாஷ்டமியிலும், வழிபாடுகள் நடத்தியபின்னர் சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்கவேண்டும், என்றும் இந்த சதுர்த்தி தின வழிபாடுகளில் கிருஷ்ணரும், சந்திரனும் இடம்பெறுவார்கள் என்றும் கூறுகின்றார் பிள்ளையார் கிருஷ்ணரிடம்.

அது மாதிரியே கிருஷ்ணரும் விரதம் இருந்து வழிபாடுகள் செய்ததில் அக்ரூரர் காசியில் இருக்கும் விபரம் தெரிந்து விடுகிறது, காசிநகரின் செழிப்பான தன்மையிலிருந்து. உடனேயே ஆள் அனுப்பி அக்ரூரரை வரவழைக்கின்றார். நடந்தது தெரிந்த அக்ரூரரும், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டு ச்யமந்தகத்தைக் கிருஷ்ணரிடம் ஒப்படைக்க, கிருஷ்ணரோ அது இருக்கவேண்டிய இடம் அக்ரூரரிடம் தான் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிடுகின்றார் அதை. த்வாரகையும் ச்யமந்தகத்தின் மறு வரவினால் செழிப்படைகின்றது.

Sunday, September 19, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!


அக்ரூரரோ பரமபாகவத சிரோன்மணி. ஏதோ சகவாசதோஷத்தால் கிருஷ்ணரிடம் கோபம் ஏற்பட்டதே தவிர, உண்மையில் அதற்காக வருந்திக் கொண்டிருந்தார். இங்கே கிருஷ்ணரோ, சததன்வா துவாரகையை விட்டு ஓடும் செய்தி அறிந்ததும், தன் அண்ணனாகிய பலராமரையும் கூப்பிட்டுக் கொண்டு, அவனைப் பிடித்து ச்யமந்தக மணி பற்றி அறிந்துவரப் போகின்றார். கிருஷ்ணரும், பலராமரும் ரதத்தில் செல்ல, சததன்வா குதிரையில் ஓடுகின்றான். குதிரை களைத்து விழுந்துவிடக் கால்நடையாக ஓடும் சததன்வாவைப் பிடிக்கக் கிருஷ்ணரும் ரதத்தில் இருந்து இறங்கி ஓடுகின்றார். பலராமர் கிருஷ்ணரோடு போகவில்லை. தப்பி ஓடும் ஒருவனைப் பிடிக்க இருவர் தேவையில்லை என்பது அவர் கருத்து. கிருஷ்ணர் சததன்வாவைப் பிடித்து, சண்டைபோட , சண்டையில் தோற்ற சததன்வா, பின்னர் கிருஷ்ணரால் கொல்லவும் படுகின்றான். அவனிடம் ச்யமந்தகமணியைத் தேடும் கிருஷ்ணருக்கு அது கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி ரதத்துக்கு வந்து பலராமரிடம் நடந்ததைச் சொல்ல, பலராமர் நம்பவில்லை.

கிருஷ்ணர் கபடமாய் மணியை அபகரித்து வைத்துக் கொண்டு சததன்வாவையும் கொன்றுவிட்டு இப்போது பொய் சொல்லுவதாய் நினைத்த பலராமர் கோபத்துடன், கிருஷ்ணருடன் துவாரகைக்குச் செல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு, விதேஹ நாட்டுக்குப் போய்விட்டார். அண்ணனும் திரும்பாமல், மணியும் கிட்டாமல், அனைவரையும் விரோதித்துக் கொண்ட கிருஷ்ணர் செய்வதறியாது விழித்தார். அப்போது தான் அவருக்குத் தான் என்ன தப்பு செய்தோம் இம்மாதிரி அபாண்டமாய்ப் பழி சுமக்க என்று தோன்றுகிறது.

ச்யமந்தகத்தை வைத்துக் கொண்டிருந்த அக்ரூரரோ கிருஷ்ணரிடம் அபாரமான பக்தியும், அன்பும் கொண்டவராதலால் ஒரு க்ஷண நேரம் தன் மனம் மாறியதை நினைத்தும், இப்போது ச்யமந்தகம் தன்னிடம் இருப்பதால் கிருஷ்ணருக்குத் தன்னிடம் உள்ள அன்பு போய் விரோதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தாலும், த்வாரகையை விட்டுக் கிளம்பி, ஒவ்வொரு ஊராக க்ஷேத்திராடனம் செய்து கொண்டு கடைசியில் காசியை அடைகின்றார். அங்கே போனதும் ஏற்கெனவே வேதனைப் பட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தவர் மனம் நிர்மலமாக, ஸ்யமந்தகம் எட்டு பாரம் பொன்னை வாரி வழங்க ஆரம்பித்தது. அந்தப் பொன்னையோ, அல்லது ச்யமந்தகத்தையோ தனக்கெனக் கருதாமல், தன் குடும்பத்திற்கும் செலவு செய்யாமல் தேவாலயத் திருப்பணிகளுக்கும், மற்ற உதவிகளுக்கும் செலவு செய்தார் அக்ரூரர். நாளடைவில் காசி க்ஷேத்திரமே செழிப்பாக மாறியது.

இங்கே த்வாரகையில் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர் தன் அண்ணன் இல்லாமலும், ச்யமந்தக மணியின் காரணத்தால் உயிரிழந்த தன் சிறிய மாமனார் ஆன பிரசேனன், மாமனார் சத்ராஜித், நண்பன் ஆன சததன்வா ஆகியோரையும் நினைத்து வேதனைப் பட்டார். அக்ரூரரும் த்வாரகையில் இல்லாமையால் அவரிடம் ச்யமந்தகம் இருக்கவேண்டும் என நினைத்தார். அப்போது ஒருநாள் நாரதர் அங்கே வர கிருஷ்ணர் அவரிடம் தன் துன்பத்தைச் சொல்லிக் காரணம் கேட்டார். நாரதர் சொல்கின்றார்:”கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாத சுக்கில பக்ஷ சதுர்த்தி நாள். அன்றைய பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது என இருக்க நீ அதைப் பார்த்துவிட்டாய். அதுவே உன் பேரில் ஏற்பட்ட வீண்பழிக்கும் அபவாதங்களுக்கும் காரணம்” என்று சொன்னார். “பாத்ரபத சுக்கில பக்ஷ சதுர்த்தியன்று சந்திரனைக் காணக் கூடாதா? இது என்ன புது விஷயம்? என்ன காரணம் சொல்லுங்கள் ஸ்வாமி!” என்று கேட்டார் கிருஷ்ணர். நாரதரும் சொல்ல ஆரம்பித்தார். இதோ இப்போ வரப்போறார் பிள்ளையார்.

ஹையா, பிள்ளையார் வந்துட்டாரே! எப்படி இருக்கார் தெரியுமா?? மூஞ்சுறு மேலே ஏறிக் கொண்டு, வேக, வேகமாய் அதிலேயே அகில உலகத்தையும் சஞ்சாரம் பண்ணிக் கொண்டு போனார். நீண்ட துதிக்கை, நம்பிக்கையைக் கொடுக்கின்றது. ஏக தந்தம், அவர் தியாகத்தைக் குறிக்கின்றது. ஆடிக் கொண்டிருக்கும் இரு காதுகளும், மாறி மாறி வரும் பருவங்களையும் குறிக்கின்றது. சாந்தமும், அன்பும், ஞானமும், விவேகமும் கொண்ட அதி அற்புதமான வடிவம். கொழு, கொழுவென்ற பெரிய தொந்தி, குட்டிக் குட்டியாய்க் கால், கைகள், பார்க்கவே அழகு, அழகு கொஞ்சும் இந்தத் தோற்றத்துடன் பிள்ளையார் சஞ்சாரம் பண்ணும்போது, அப்படியே சந்திரலோகத்தையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்தாராம். அங்கே சந்திரன், தன் அருமை மனைவியான ரோகிணியுடன் வீற்றிருந்தான். ஏற்கெனவே சந்திரனுக்குத் தன் அழகிலும், குளுமையிலும் கர்வம் அதிகம் ஆகி இருந்தது. இப்போ வேறே மனைவியோட இருக்கானா? அவளுக்கு முன்னாலே தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டிக்கிறதா நினைச்சு, சந்திரன் பிள்ளையாரையும் அவரின் உருவத்தையும் பார்த்துப் பரிகசித்துச் சிரித்தான். கேலி செய்தான், ஏகதந்தத்தையும், யானைத் தலையையும், முறக் காதுகளையும், கொழு கொழு தொப்பையையும், குட்டிக் குட்டிக் கால், கைகளையும்.

கோபமே வராத விநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. சந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும், அப்போதுதான் அவன் கர்வம் அடங்கும் என நினைத்தார் விநாயகர். சந்திரனைப் பார்த்து, “ அப்பா, சந்திரா, உன்னுடைய ஒளியானது உண்மை அல்லவே?? சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றாய்? நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே உனக்கு இத்தனை கர்வம் தேவையா அப்பா? கொஞ்சம் யோசி!” என்று சொன்னார். ஆனால் அகங்காரத்தின் உச்சியிலிருந்த சந்திரன் மீண்டும் சிரித்தான். கோபம் கொண்ட விக்னேஸ்வரன், “இனி யாருமே சந்திரனைப் பார்க்கக் கூடாது, பார்க்கவும் முடியாது. அப்படி யாரேனும் உன்னைப் பார்த்தாலோ களங்கம் உள்ள மனதுள்ள உன்னைப் பார்த்த அவர்களும் களங்கத்தால் பீடிக்கப் படுவார்கள். உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கும், அபவாதத்துக்கும், மித்திரத் துரோகத்துக்கும் ஆளாவார்கள்.” என்று சொல்லி விடுகின்றார். சந்திரனுக்குப் பயத்துடன் அபவாதம் செய்வார்களே என்ற அவமானமும் மேலோங்க, சமுத்திரத்தினுள் சென்று மறைந்தான்.

Thursday, September 16, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 8

பிள்ளையார் தும்பிக்கை மாதிரி எனக்கும் மூக்கு இருந்திருக்கலாமோ என்னமோ! இந்தச் சின்ன மூக்கின் வழியா மூச்சுக்காற்றுப் போயிட்டு வரதுக்கு ரொம்பக் கஷ்டப் படறது. சீக்கிரம் சரி பண்ணுங்கனு பிள்ளையார் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். இனி ச்யமந்தக மணி தொடரும். தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும். எழுதி வச்சதை அப்லோட் பண்ண முடியாம உடம்பு படுத்தலும் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணினால் ஆற்காட்டார் படுத்தலும் தாங்கலை! தினம் நாலு மணி நேரம் அறிவிக்கப்படாதக் கட்டாய மின் தடை! :(
****************************************************************************************கிருஷ்ணர் குகையினுள் நுழைந்தபோது ஜாம்பவதி தன் தம்பியான சுகுமாரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். அதை ஒரு ஸ்லோகமாய்க் கீழே காணலாம்.

ஸிம்ஹ: ப்ரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸுகுமார்க மா ரோதீ தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:”

இந்த ஸ்லோகம் ஸ்காந்தத்தில் காணப் படுவதாய்த் தெரிய வருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், “சிங்கமானது ப்ரஸேநனைக் கொன்றது. அந்தச் சிங்கத்தை ஜாம்பவான் கொன்றார். ஸ்யமந்தகமணி இப்போது உனக்குத் தான் ஸுகுமாரனாகிய என் அருமைக் குழந்தையே, நீ இனி அழாதே!” என்று அர்த்தம் தொனிக்கும்படிப் பாடிக் கொண்டிருந்தாள் ஜாம்பவதி. கிருஷ்ணருக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது. உள்ளே நுழைந்தார். கிருஷ்ணரைக் கண்டதுமே ஜாம்பவதிக்கு அவர் மேல் இனம் புரியாத மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. என்றாலும் யாராலும் நுழையமுடியாத இந்தக் காட்டுக் குகைக்குள்ளே இவர் வந்தது எப்படி? இவர் யாராயிருக்கும்? தந்தையான ஜாம்பவான் கண்டால் இவரை என்ன செய்வாரோ என எண்ணி அஞ்சினாள். ஜாம்பவதி கிருஷ்ணரிடம் அவர் யார் என்றும் என்ன விஷயமாய் வந்திருக்கின்றார் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஆஹா, ஸ்யமந்தகம் தான் இவரை இங்கே வரவைத்திருக்கின்றதா?? என நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த மணியைக் காட்டி, அதைக் கழற்றி எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டாள். தன் தகப்பனுக்கு விஷயம் தெரியவேண்டாம் என்றும் கூறினாள்.

தனக்கு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் அன்பை விட, அவர் தன்னைப் பிரியக் கூடாது எனத் தான் நினைப்பதைவிட, இப்போது அவர் தன் தந்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிச் செல்வதே சரி எனவும் நினைத்தாள் ஜாம்பவதி. ஆனால் கிருஷ்ணர் மறுத்தார். ஏற்கெனவே இந்த மணியை நான் தான் திருடிக் கொண்டு வந்தேன் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இப்போது உன் தந்தையையும் நான் பகைத்துக் கொண்டு இதை எடுத்துச் செல்லவேண்டுமா?? என்னால் முடியாது. அவர் எங்கே? அவருடன் நேருக்கு நேர் மோதிவிட்டே நான் இந்த மணியை வெற்றி வீரனாக எடுத்துச் செல்கின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் தன் தந்தையின் உடல்பலத்தையும், அவர் மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்றவர் என்றும் கூறிய ஜாம்பவதி, அவரால் கிருஷ்ணருக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சி மறுக்கின்றாள். கிருஷ்ணரை உடனே அந்த இடத்தை விட்டு மணியை எடுத்துச் செல்லும்படிக் கூறுகின்றாள். கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துச் சங்க நாதம் செய்கின்றார்.

சங்கின் முழக்கத்தைக் கேட்ட ஜாம்பவான் விழித்துக் கொண்டார். கிருஷ்ணர் வந்திருப்பதையும், அவர் வந்ததன் காரணத்தையும் தெரிந்து கொண்டார். “ஆஹா, இவன் என்னை என்ன கிழட்டுக் கரடி என நினைத்துக் கொண்டானோ? இருக்கட்டும், ஒரு கை இல்லை, இரு கையாலும் பார்த்துவிடுகின்றேன். “ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணருடன் போருக்குத் தயார் ஆனார். த்வந்த்வ யுத்தம் நடக்கின்றது, கிட்டத் தட்ட இருபத்தொரு நாட்கள். ஜாம்பவான் தன்னால் முடிந்தவரையில் சமாளித்தார். ஆனால் மூன்று வாரத்துக்கு மேலே அவரால் முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்துக் கொண்டு மேலும் முயன்றார். சட்டென உண்மை பளிச்சிட்டது. வந்திருப்பது சாமானியமானவர் இல்லை. ஆஹா, இவன் சாட்சாத் அந்தப் பரம்பொருளே அல்லவோ? பரம்பொருளோடா சண்டை போட்டோம்? ஜாம்பவான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸ்யமந்தக மணியையும், தன் பெண்ணான ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்குத் தானம் செய்கின்றார். ஜாம்பவதிக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. மீண்டும் த்வாரகையை அடைந்த கிருஷ்ணர் ச்யமந்தகத்தை நினைவாக சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார்.

சத்ராஜித்தும் கிருஷ்ணரை அநாவசியமாய் அவதூறு செய்துவிட்டதை நினைத்து வருந்தி தன் ஒரே பெண்ணான சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்வித்துக் கூடவே ஸ்யமந்தகத்தையும் ஸ்ரீதனமாய்க் கொடுக்கின்றான். ஆனால் கிருஷ்ணரோ அந்த மணியால் தனக்கு விளைந்த அபவாதத்தை மறக்கவே இல்லை. ஆகையால் திரும்ப ஸத்ராஜித்திடமே கொடுத்துவிட்டார். இன்னும் பிள்ளையார் வரலையேனு நினைக்கிறவங்களுக்குக் கொஞ்சம் பொறுங்க, இதோ பிள்ளையார் இந்தக் கதையில் நுழையும் நேரம் வந்தே ஆச்சு.

சத்யபாமாவைத் திருமணம் செய்துகொண்டபின்னர் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்கள் அரக்குமாளிகையில் அக்னியில் எரிந்து குடும்பத்தோடு சாம்பலாகிவிட்டனர் எனக் கேள்விப் பட்டு அதைப்பற்றி விசாரிக்க ஹஸ்தினாபுரம் சென்றார். பாமாவைத் துவாரகையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஸத்ராஜித் ஏற்கெனவே பாமாவை சததன்வா என்னும் ஒருவனுக்கும், க்ருதவர்மா என்பவனுக்கும் அல்லது அக்ரூரருக்கேயாவது சத்யபாமாவைத் திருமணம் செய்வித்துவிட முயன்று கொண்டிருந்தான். ஆனால் கடைசியில் கிருஷ்ணர் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொள்ளவே, மிக மிக நல்லவராயும், கிருஷ்ணரை ஆரம்பத்தில் இருந்தே காப்பாற்றி வந்தவரும் ஆன அக்ரூரருக்கே கிருஷ்ணர் பேரில் கொஞ்சம் பொறாமை உண்டாகிவிட்டது. அவருடன் க்ருதவர்மாவும் சேர்ந்து கொள்ள, இருவரும் சததன்மாவைப் போய்ச் சந்தித்து, எப்படியேனும் ஸ்யமந்த்கத்தையாவது ஸத்ராஜித்திடம் இருந்து அபகரிக்கவேண்டும் என நினைத்துத் திட்டம் தீட்டினார்கள். ஸததன்மாவோ, ஸ்த்ராஜித்தை அநியாயமாயும், முறையற்றும் கொன்றுவிட்டு மணியை அபகரித்து வந்துவிடுகின்றான். சத்யபாமாவோ அலறிக் கலங்கினாள். கிருஷ்ணர் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தன் மாமனாரைக் கொன்றவனைத் தானும் கொன்று பழி தீர்க்கப் போவதாய்ச் சபதம் எடுக்கின்றார்.

விஷயம் தெரிந்ததும் சததன்மாவுக்குக் கிலி ஏற்படுகின்றது. கிருஷ்ணர் எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துத் தன்னைக் கொன்றுவிடுவார் என நினைத்த அவன் அந்த ஸ்யமந்தக மணியை அக்ரூரர் வீட்டிலே போட்டுவிட்டு, துவாரகையை விட்டு ஓட்டம் பிடித்தான். ஸ்யமந்தகம் இருக்குமிடத்திலே சகல செளபாக்கியங்களும் ஏற்படவேண்டி இருக்க இம்மாதிரியான சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அகசுத்தியும், புறசுத்தியும் அதை வைத்திருந்தவர்களிடையே இல்லாத காரணமே ஆகும். சூரியபகவான் சத்ராஜித்திடம் அதைக் கொடுத்தபோதே அகமும், புறமும் சுத்தமாக இல்லாவிட்டால் மணியால் நாசமே விளையும் எனச் சொல்லி இருந்தார். ஆகவே அந்த மணியால் தனக்குத் தொந்திரவு ஏற்படுமோ எனக் கலங்கியே சததன்மா அதை இப்போது அக்ரூரரிடம் போட்டுவிட்டு ஏற்படும் நாசம் அவருக்கு ஏற்படட்டும், அல்லது கிருஷ்ணர் விஷயம் தெரிந்து அக்ரூரரைக் கொன்றுவிட்டு எடுத்துக் கொள்ளட்டும். எப்படியானாலும் தன் தலை தப்பவேண்டும் என நினைத்துக் கொண்டு அக்ரூரரிடம் போட்டான்.

Monday, September 13, 2010

வந்தாச்சு வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 7


இப்போ நாம் பார்க்கப் போகும் விஷயம் ஏன் இந்த சுக்லபக்ஷ சதுர்த்தி, அதுவும் ஆவணிமாசத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதற்கான காரணம். இது கொஞ்சம் கிருஷ்ணரோடு சம்பந்தப் பட்டது. கிருஷ்ணருக்குத் திருட்டுப் பழி, ம்ஹும் இல்லை, இல்லை வெண்ணெய் திருட்டு இல்லை, இது வேறே விலை உயர்ந்த ச்யமந்தக மணித்திருட்டுப் பழி ஏற்பட்டதும் அதனால் மனம் வருந்திய கிருஷ்ணர் எப்படி அந்தப் பழியைப் போக்கிக் கொண்டார் என்பதுமே கதை. ஆகையால் முதலில் கதையில் கிருஷ்ணரே வருவார். அதுக்கு அப்புறமாத் தான் பிள்ளையார் வருவார். பிள்ளையார் விசர்ஜனம் செய்யறதுக்குள்ளே வந்துடுவார்.

சூரியனைக் குறித்துத் தான் செய்த தவம் மூலம் தனக்குக் கிடைத்த ஒப்பற்ற மணியான ச்யமந்தகத்தைக் கிருஷ்ணர் கேட்டது சத்ராஜித்திற்குப் பிடிக்கவில்லை. என்னதான் கிருஷ்ணர் மணியைத் தனக்காகக் கேட்கவில்லை என்றாலும், சத்ராஜித் அந்த மணியைக் கிருஷ்ணர் தனக்கென ஆசைப்பட்டுக் கேட்டதாகவே நினைத்தான். அந்த மணியைத் தன் தம்பியான பிரசேனனிடம் கொடுத்து வைத்தான். பிரசேனன் ஒருநாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இந்த ச்யமந்தக மணியை வைத்திருப்பவர் அனுஷ்டிக்கவேண்டிய ஆசார நியமங்களைக் காட்டில் பிரசேனனால் கடைப்பிடிக்கமுடியவில்லை. அவனுடன் கூட வந்தவர்களில் கிருஷ்ணரும் ஒருவர் என ஸ்காந்த புராணம் சொல்லுகின்றது. நம் கதையும் அதை ஒட்டியே போகும். கூட வந்த கிருஷ்ணரையும் , மற்றவர்களையும் பிரசேனன் பிரிந்துவிடுகின்றான். தனியாய்ச் சென்ற பிரசேனன் ஒரு வலிமை வாய்ந்த சிங்கத்திடம் மாட்டிக் கொள்ள சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு மணியை ஏதோ உண்ணும் பொருளென நினைத்து வாயில் கவ்விக் கொண்டு சென்றது.

காட்டில் உள்ளே ஒரு மலைக்குகையில் நம்ம ராமாயணத்து ஜாம்பவான் தன் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருந்தார். அவர் இங்கே எங்கே வந்தார் என்பதை அப்புறம் தனியாச் சொல்றேன். இந்த ஜாம்பவானுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள் ஜாம்பவதி என்ற பெயரில். அந்தப் பெண் பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர் ஜாம்பவானுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸுகுமாரன் என்ற பெயரிட்டு அந்தக் குழந்தையை மிக மிக ஆசையுடன் வளர்த்து வந்தார் ஜாம்பவான். ஜாம்பவான் காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது வாயில் ஒளிவீசும் மணியுடன் வந்து கொண்டிருந்த சிங்கத்தைப் பார்த்தார். உடனேயே மிகுந்த பலசாலியான அவர் அந்தச் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மணியைத் தான் எடுத்துக் கொண்டார். அருமையாகப் பிறந்திருக்கும் தன்னுடைய ஆண் குழந்தைக்கு இந்த அபூர்வமான ஒளி வீசும் மணி ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கும் என நினைத்த ஜாம்பவான் ச்யமந்தக மணியைத் தன் அருமைப் பிள்ளையின் தொட்டிலில் மேலே கட்டி வைத்தார். தொட்டிலுக்குள்ளே இருக்கும் குழந்தைக் கரடி அந்தப் பொம்மையின் ஒளியைப் பார்த்துக் குதூகலித்துக் கூக்குரலிட்டுக் கொண்டு விளையாடியது. ஜாம்பவதிக்கும் தன் தம்பியின் விளையாட்டைப் பார்த்துக் குதூகலம் உண்டாக அவளும் சந்தோஷம் அடைகின்றாள். இது இவ்வாறிருக்க, இங்கே காட்டினுள் வெகு தூரம் சென்ற கிருஷ்ணரும், மற்றவர்களும் பிரசேனனை எங்கும் காணாமல் தேடினார்கள்.சூரிய அஸ்தமனமும் ஆகிவிட்டது.

காட்டில் மெல்லிய இருள் கவ்வத் தொடங்கியது. தற்செயலாக வானத்தைப் பார்த்த கிருஷ்ணர் கண்களில் பிறைச்சந்திரன் தென்பட்டான். அன்று நாலாம்பிறை நாளாக இருந்தது. நாலாம் பிறைச் சந்திரன் தான் பளிச்செனக் கண்ணில் தெரியும். அதே போல் கிருஷ்ணர் கண்ணிலும் பட்டது. ஆகா, நிலவு தோன்றிவிட்டதே, இனி இருட்டி விடும், காட்டில் இருக்க முடியாது என நினைத்த கிருஷ்ணர் த்வாரகைக்குத் திரும்பினார். கிருஷ்ணருடன் ப்ரசேனன் வராதது கண்ட சத்ராஜித்திற்குச் சந்தேகம் வருகின்றது. தம்பியைத் தேட ஆட்களை அனுப்ப, பிரசேனன் இறந்து கிடப்பது கண்டு சத்ராஜித் கோபம் அடைந்தான். ச்யமந்தக மணியை அடைய கிருஷ்ணர் செய்த வேலைதான் இது என நினைத்தான் சத்ராஜித். ஆட்களை அனுப்பியோ, அல்லது கிருஷ்ணரே தந்திரமாகவோ பிரசேனனைக் கொன்றுவிட்டு ச்யமந்தக மணியை அபகரித்துக் கொண்டதாய் த்வாரகை முழுதும் தென்படுவோரிடம் எல்லாம் சத்ராஜித் சொல்ல ஆரம்பித்தான். மெல்ல, மெல்ல நாட்கள் கடக்கக் கடக்க, சிலர் நம்பவும் ஆரம்பித்தனர். கிருஷ்ணர் மனம் சஞ்சலம் அடைந்தது.

ஆஹா, தான் ஒரு பாவமும் அறியாதிருக்கத் தன் மேல் இப்படி அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றார்களே என மனம் வருந்திய கிருஷ்ணர் சத்ராஜித்தின் ஆட்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றார். பிரசேனன் இறந்து கிடந்த இடத்திலிருந்து தொடர்ந்து செல்ல ஆட்களையும் பணித்துத் தாமும் உடன் சென்றார். சிறிது தூரம் வரையிலும் ஒரு மிருகத்தின் காலடி ரத்தத்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்டது. சிறிது தூரத்திற்குப் பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் போனதும் சிங்கத்தின் செத்த உடலும் கிடைத்தது. சிங்கத்தின் உடல் கிடந்த இடத்திலே ஒரு பெரிய சண்டை நடந்திருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. மற்றோர் மிருகத்தின் காலடியும் தென்பட்டது. சிங்கத்தைவிடக் காலடி பெரியதாய் இருந்ததால் கரடியாகவோ, அல்லது வேறே ஏதோ மிருகமாகவோ இருக்கலாம் என நினைத்தார்கள். அந்தக் காலடிச் சுவட்டைப் பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு குகையில் கொண்டுவிட்டது. குகைக்குள் எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டு. சத்ராஜித்தின் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த மாயக் கிருஷ்ணன் ஏதோ தந்திரம் செய்து இருட்டுக் குகையில் நம்மை எல்லாம் தள்ளப் பார்க்கின்றானே? நாம் இந்த ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவர்களாய் உள்ளே வர மறுத்தனர். கிருஷ்ணரும் சரி எனச் சம்மதித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே செல்கின்றார். கிருஷ்ணரின் உடலின் பிரகாசமே வெளிச்சமாய்த் தெரிய கிருஷ்ணர் குகைக்குள்ளே நுழைந்தார்.

Sunday, September 12, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 6


“மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன்நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.”

நிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும். காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான். ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும், மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும், ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம்.

“பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.”

பந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன் அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப் பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும் கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம்.

“இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்றுதினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரஞ்செயினும்
சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுகம் பெறும் எண்
தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்”

இந்த காரியசித்திமாலையின் எட்டுப் பாடல்களும் கணபதி தோத்திராட்டகம் என வழங்கப் படுகிறது. இந்தத் தோத்திரத்தை மூன்று நாட்கள் மூன்று பொழுதுகளிலும் சொல்லுபவர்களுக்கு அனைத்துக் கருமங்களில் இருந்தும் சித்தி கிடைத்து முக்தி பெறுவார்கள். எட்டு நாட்கள் தொடர்ந்து உச்சரிப்போரும் சதுர்த்தி தினங்களில் எட்டு முறைகள் உச்சரிப்போரும் அட்டமாசித்திகளையும் அடைவார்கள்.

திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ் ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.

ஒவ்வொரு நாளும் பத்துமுறைகள் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் அரசாங்க சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் கைகூடும். அவ்வாறு இருபத்தொரு முறைகள் ஓதினால் மக்கட்பேறு, கல்வி, செல்வம் முதலிய எல்லா நலங்களையும் அடைவார்கள்.” என்று விநாயகர் காசிபர் முதலானோர்க்கு அருளிச் செய்ததாக விநாயக புராணம் கூறுகின்றது.

எது எப்படி இருந்தாலும் நம்பிக்கையுடன் விநாயகர் கோலம் போட்டு, இந்தக் காரிய சித்திமாலை படிச்சுட்டு, விநாயகரை வேண்டிக் கொண்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறுகின்றன என்பதற்கு நான் காரண்டி!

Saturday, September 11, 2010

வந்தாச்சு, வந்தாச்சு! பிள்ளையார் வந்தாச்சு! 5


இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் அனைத்து விக்கினங்களையும் நீக்கி அருளும்படியும் பிரார்த்திப்போம்.


“மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

“செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும் அப்பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.”

நாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம்.

“வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேதமுடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

வேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

காசியபரின் காரியசித்தி மாலை நாளை நிறைவு பெறும்.

Friday, September 10, 2010

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா. இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி:தெய்வத்தின் குரல்!

Thursday, September 09, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 4


பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா! இன்னும் ரெண்டு நாளையிலே உனக்கு
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்துனக்கு நான் படைத்தேன்(படைப்பேன்)
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா”
அந்த ஞாபகம் இருக்கட்டும். கூடவே கொழுக்கட்டையும் கொடுப்பேன். சங்கத் தமிழ் மூன்றும் எல்லாம் வேண்டாம். இப்போ எழுதப் போற விஷயத்திற்குத் துணையா இருந்தாப் போதும்பா!

இப்போ இயன்றவரை எளிய தமிழில் விநாயகரைத் துதித்துக் காசிபர் எழுதினதாய்ச் சொல்லப் படும் காரியசித்தி மாலை பத்திச் சொல்லப் போறேன். முதல்லே ஒரு முன்னுரை. இந்தக் காரிய சித்தி மாலையை நான் பல வருஷமாப் படிக்கிறேன். முதல்லே ஆரம்பிச்சது என்னமோ காரியம் ஒண்ணு நடக்கணும்னு தான். காரியம் சித்தி ஆனாலும் நம்ம பிள்ளையாரோடதாச்சேனு தினம் முடியாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். நிச்சயமாய் மனசுக்கு ஆறுதலும் ஏற்படுது, கவலைகள், பிரச்னைகள் இருந்தால் மனம் லேசாக ஆகும். கவனிக்கவும், பிரச்னைகள் தீரும்னு சொல்லலை. நமக்கு வந்ததை நாமாக உண்டாக்கிக் கொள்வதை நாம தான் தீர்த்துக்கணும். பிரச்னைகளைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை ஏற்பட்டு விடும். அதற்கு உத்திரவாதம் உண்டு. எங்க சிநேகிதர் பையர் ஒருத்தருக்கு எஞ்சினீயரிங் படிச்சு முடிச்சு நாலு வருஷம் ஆகியும் நல்லவேலை கிடைக்காமல் கிடைச்ச வேலையைச் செய்துட்டு இருந்தார். அவரைக் கூப்பிட்டுக் காரியசித்திமாலையையும், அநுமன் சாலீசாவையும் படிச்சுட்டு வரும்படிச் சொன்னேன். நல்லவேலை கிடைச்சு வாழ்க்கையில் செட்டிலும் ஆகிவிட்டார். இப்போக் கல்யாணமாகி விட்டது. சென்ற வாரம் சந்தித்தபோது கூடக் கூறினார். "நீங்க கொடுத்த காரியசித்தி மாலையும், அநுமன் சாலீஸாவையும் விடாமல் படிக்கிறேன்." என்று.

“பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”

நாம் அனைவருமே பந்த பாசங்களால் கட்டுண்டவர்களே. இது நம்முடையது என்ற எண்ணம் இல்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அந்தப் பந்த, பாசங்களை அகற்றும் குணமுள்ளவன் வேழமுகத்தான் ஒருவனே! மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? விநாயகனே ஓங்கார வடிவானவன். அத்தகைய ஓங்கார சொரூபியான விநாயகனிடமிருந்தே அனைத்துக் கலைகளும், வேதங்களும், ஆகமங்களும் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. இத்தனை பெருமை வாய்ந்த இறைவனாகிய கணபதியை நாம் உள்ளத்தில் அன்பு மீதூற வணங்கித் துதிப்போம்.

“உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.”

இந்த உலகில் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் மூலாதாரமாகிய கணபதியே! இறைவன் படைத்த இவ்வுலகில் நிறைந்திருக்கும் காம, குரோத, மத, மாற்சரியங்கள் எவையும் அவனிடம் ஒட்டுவதில்லை. அவன் எந்தவிதமான விருப்போ, வெறுப்போ இல்லாதவனாக இருக்கின்றான். பரிபூரணப் பேரொளியாய் நிறைந்துள்ளான். இந்த உலகில் உள்ள நாம் செய்யும் செயல்களின் வினப்பயனை நமக்குத் தருபவன் அவனே. தீவினைகளைக் களைகின்ற திறன் படைத்தவனும் அவனே. அத்தகைய உலகுக்கே ஆதிகாரணம் ஆன முழு முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழச் சரணம் எனத் துதிப்போம்.

“இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”

நெருப்பில் இட்ட பஞ்சு எப்படி உடனே இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அவ்வாறே கணபதியைத் துதித்தால் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. கணபதியைத் துதித்து அவனைத் தொடர்ந்து நாம் சென்றோமானால் அந்த உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் வாழும் பதிக்கு எடுத்துச் சென்று நமக்கு நற்கதியை ஊட்டுவார். நாம் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேற்ற மற்ற எந்தக் கடவுளரையும் விட விக்னராஜன் ஆகிய கணபதியே துணை புரிவான். அவனாலேயே நம் காரியங்கள் அனைத்தும் முடித்து வைக்கப் படும். இனிதாகவும், எளிதாகவும், சிரமம் இன்றியும் நம் காரியங்களை முடித்து வைக்கும் ஏகதந்தன் ஆகிய கணபதியின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.

Wednesday, September 08, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 3


தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! -லம்போதரன்!

7. லம்போதரன்: லம்போதர லக்குமிகரன். இத்தனை பெரிய வயிறு இருக்கே?? உலகையே உள்ளடக்கி இருப்பதால் வயிறு பெரிசா இருக்கு. அண்ட பகிரண்டத்தையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் பெரிய வயிற்றைக் கொண்டவன்.

8. கஜானனன்: கஜமுஹாசுரனை அடக்கியதால் ஏற்பட்ட பெயர். ஆணவத்தின் வடிவன் அவன். ஆனை முகம் கொண்ட அவனை அடக்கியதால் யானைமுகனும் இந்தப் பெயர் பெற்றான்.

9. ஹேரம்பன்:தன் பக்தர்கள் வேண்டிப் பிரார்த்தனை செய்து அபிஷேஹ ஆராதனைகள் செய்யணும்னு எல்லாம் காத்திருக்காமல், ஒரு அருகம்புல்லைச் சாத்தினாலே உள்ளம் குளிர்ந்து போய் கஷ்டப் படுபவர்களை ரக்ஷிக்கின்றான் விநாயகன். அதனால் ஹேரம்பன் என்னும் பெயர்.

10. வக்ரதுண்டன்: பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளைத் தடுப்பவன். தீமைகளைத் தடுக்கும் தன் மகனுக்கு அருமை அன்னை வைத்த பெயர் இது.

11. ஜேஷ்டராஜன்: மூத்தவன். அனைவருக்கும் மூத்தவன் என்பது இங்கே பொருந்துமோ? ஏனெனில் ஸ்கந்தபூர்வஜன் என்ற பெயரும் விநாயகனுக்கு உண்டு. முழுமுதல் பொருளாக இருப்பதால் ஜேஷ்டராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம்.

12. நிஜஸ்திதி: ஸ்திதி நிலைத்து இருப்பது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வது மண்ணும், நீரும் கொடுக்கும் வளங்களாலேயே. அந்த மண்ணிலும் நீரிலும் நிலைத்து இருப்பவன், மூலாதாரப் பொருளாக இருப்பவன் விநாயகனே. அதனாலேயே பிள்ளையார் பிடிக்கிறதுனால் களிமண்ணை நீரில் குழைத்துப் பிடிக்கிறோம். இப்படி உண்மையாக நிலைத்து அனைத்து உயிர்களிலும் இருப்பதால் அவன் நிஜஸ்திதியாகக்கூறப்படுவான்.

13. ஆஷாபூரன்: புருகண்டி முனிவர் விநாயகரைக் குறித்துத் தவம் இயற்றி, இயற்றிக் கடைசியில் விநாயகர் போல் அவருக்கும் தும்பிக்கை ஏற்பட்டது. விநாயகரின் உதவியால் தன்னுடைய ஆசைகள் நிறைவேறியதால் இப்பெயரை அவரே விநாயகருக்குச் சூட்டினார்.

14. வரதன்: அனைவருக்கும் வேண்டியவரங்களைக் கொடுப்பவன்.

15. விகடராஜன்: இந்த மாயாலோகம் என்று சொல்லப் படும் பிரபஞ்சத்தில் உண்மையாகப் பரம்பொருளாய்த் தோன்றுபவன்.

16. தரணிதரன்: இந்த பூமியை அவனே ஆள்கின்றான். ஆகையால் அதையே ஆபரணமாகவும் அணிகின்றான். எப்போதும் காத்து ரக்ஷிப்பவன் அவனே.

17. சித்தி, புத்தி பதி: மனிதருக்குத் தேவையானது சித்தியும், புத்தியும். சித்தி என்னப்படும் கிரியாசக்தியும், புத்தி எனப்படும் இச்சாசக்தியும் நன்கு வேலை செய்தாலே ஞானசக்தியை அடைய முடியும், அத்தகையதொரு சக்திகளை தன்னுள்ளே கொண்டவன் விநாயகன் ஞானசக்தியாகவே தென்படுகின்றான். ஞானத்தை அவனே அளிக்கின்றான். சித்தி, புத்திக்கு அவனே தலைவன்.

18. பிரம்மணஸ்பதி: பிரம்மா வைத்த பெயர் இது. பிரம்மம் என்றால் சப்தம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. வேத நாதமாக, ஓங்கார சொரூபமாக, வேத நாதத்திற்கும் ஆதாரமாய்க் காட்சி கொடுக்கும் விநாயகனை பிரம்மணஸ்பதி என அழைத்தார் பிரம்மா.

19. மாங்கல்யேசர்: விநாயகர் அனைத்தையும் காத்து ரக்ஷிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

20. சர்வபூஜ்யர்: எந்தத் தெய்வ வழிபாடென்றாலும் விநாயக வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க முடியாது. முன்னதாக அவரை வணங்க வேண்டும். அனைவராலும் வழிபடப் படுபவர் விநாயகர். அதனாலே சர்வ பூஜ்யராக இருக்கின்றார்.

21. விக்னராஜன்: அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவர். திரிபுர சம்ஹாரத்திற்குச் சென்ற ஈசனின் தேர் அச்சு முறியவும், விநாயக வழிபாடு செய்யாததால் அவ்வாறு இடையூறு ஏற்பட்டதாகவும் , விநாயக வழிபாட்டுக்குப் பின்னர் தடை இல்லாமல் சம்ஹாரம் முடிந்ததாகவும், புராணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் தேவி மஹாத்மியத்தில் அசுரன் செய்த விக்ன யந்திர/ சக்கர வழிபாடு தேவியின் படைகளைத் தடுத்து அசுரனின் வதத்தைத் தடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதை விநாயகர் முறித்த பின்னரே தேவியினால் அசுர வதத்தைத் தொடர முடிந்தது என்றும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவனே விநாயகன்.

விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், புருவங்கள் காற்றையும் புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கின்றன.

Tuesday, September 07, 2010

வந்தாச்சு, வந்தாச்சு பிள்ளையார் வந்தாச்சு! 2


தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணராஜன்!
விநாயகருக்கும் 21-க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா). விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு. அவை கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ரதுண்டன், ஜேஷ்ட ராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்தி,புத்திபதி, பிரம்மணஸ்பதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் ஆகியன ஆகும்.

இவற்றின் விளக்கங்கள் வருமாறு:

1. கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன்.

2. ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா???

3. சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா? அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.

4. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன்.

5. டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர்.

6. மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இருந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார்.

Monday, September 06, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!


இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கின்றன, நம்ம அருமை நண்பர் வரவுக்கு. போனவருஷம் இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியலை. வேறே லிங்க் கொடுத்தேன் என்றாலும் பலரும் பார்க்கவில்லை. முதல்லே அந்தப் பதிவுகளை ஒரு மீள் பதிவாய்ப் போட்டுட்டு அப்புறம் விநாயகர் விஸர்ஜனம் வரைக்கும் சியமந்தக மணியால் கண்ணன் பட்ட அவதியும், அதை மீட்க எடுத்த போராட்டமும், விநாயகரின் கருணையும் எழுதி வச்சிருக்கேன். அவற்றைப் போட எண்ணம். பிள்ளையாரின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு அர்த்தங்களைச் சொல்லும். அவருடைய நிவேதனமாக அருணகிரியார் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். அதைத் தனியாய் எழுதறேன். இப்போப்பிள்ளையாரைப் பத்திப் பார்ப்போமா??

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி!

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால்
க= அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக்குறிக்கும்
ண= மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்
பதி=சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.

ஈசன்:கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றது. கணேசனே ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.

பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவைகிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு.

மூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றது. மயில்னதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார்? இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம்.

மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்கு பிள்ளையார் உதவுகின்றார்.

வேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும் கணபதி எனவும் விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர்.

மோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள பூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது.

தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே? வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர்.

ஆனந்த புவனம்: கைலையின் ஒருபகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது.

எட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவை யாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர்= தேக பிரும்மம், மகோதரர்= ஞான பிரும்மம், கஜானனர்=சாங்கிய பிரும்மம், லம்போதரர்=சக்தி பிரும்மம், விகடர்=ஆதி சக்தி, விக்னராஜர்=விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர்=சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு.

Sunday, September 05, 2010

ஒரு ஆசிரியரும் சீடரும்! ஆசிரியர் தினச் சிறப்புப் பதிவு!

துங்காநதிக்கரை, இடம் சிருங்கேரி. சங்கரர் தன் சீடர்களுடன் அங்கே தங்கி , இதுதான் சாரதையைப் பிரதிஷ்டை செய்யச் சரியான இடம் எனத் தேர்வு செய்து தங்கி இருந்த நேரம் அது! சரசவாணி, தான் கொடுத்த வாக்குக்கு ஏற்ப இந்த இடமே சிறந்த இடம், எனத் தேர்ந்தெடுத்துத் தங்கி இருந்த இடம் அது. கலைக்கோயில், கல்விக்கு அதிபதியான கலைவாணி விரும்பித் தங்கிய இடம். அங்கே சாராதாஷ்டகம் பாடிய சங்கரர், தன் சீடர்களுக்குத் தினமும் பாஷ்யமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்கிய சீடர்கள் பத்மபாதர், சுரேச்வரர், ஹஸ்தாமலகர் ஆகியோர். இவர்களில்பத்மபாதரோ நரசிம்மரின் அருள் பெற்றவர், சுரேச்வரரோ, மண்டனமிஸ்ரராக இருந்து வாதம் புரிந்து, பின்னர் சீடர் ஆனவர். அந்தக் கலைவாணிக்கே கணவனாய் இருந்தவர். ஹஸ்தாமலகரோ, கேட்கவே வேண்டாம். பிறந்தப்போவே பிரம்ம ஞானி. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஞானம் விளங்குகின்றது என ஆச்சாரியர் புரிந்துகொண்டு, தன் சீடனாக்கிக் கொண்டவர். இந்தச் சீடர்கள் அங்கே பாஷ்யம் பாடம் சொல்லிக் கொடுக்கக் காத்திருந்தனர் ஒருநாள்.அனைவருக்கும் அவரவர் வித்தையில் சற்றே கர்வம் இருந்தது. இது ஆச்சாரியரும் புரிந்து கொண்டே இருந்தார். எனினும் தக்க நேரம் வரவேண்டுமல்லவா? காத்திருந்தார். அன்று, நேரமும் வந்தது. அங்கே எடுபிடி வேலைகள் செய்து தரவேண்டி ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கிரி என்பதாகும். அவனோ ஞானசூன்யம் என்று சொல்லும்படிக்கு, ஏதும் தெரியாதவனாய் இருந்தான். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொல்லவேண்டும். "கிரி, பூப்பறித்து வா!" "இதோ குருவே" என்று ஓடுவான். "கிரி, துணிகளை என்ன செய்தாய்?" "துவைத்து உலர்த்தி எடுத்து வந்துவிட்டேன் குருவே!" என்று சொல்வான். இத்தகைய தொண்டுகள் செய்து வந்த அவன் தன் வேலையிலே மட்டுமே கவனமாக இருப்பான்.

இங்கேயே வாதமும், பிரதிவாதமும் நடக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை வைத்து ஒருவருக்கொருவர் வாதம் புரிந்துகொள்வார்கள். கிரியோ?? அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ? என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள்! யாருக்கு?? கிரிக்கு மட்டுமே! மற்றவர்களுக்கு? இதோ ஆச்சாரியாரின் திருவிளையாடல் காண்போமா??

பாடம் சொல்ல ஆச்சாரியர் உட்கார்ந்தாயிற்று. சீடர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் குருவோ பாடத்தை ஆரம்பிக்கவில்லை. நேரமோ போய்க் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சீடர்கள். ஒவ்வொருவராக மாறி மாறி குரு தன் சீடர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன் மோனநிலைக்குப் போகத் தொடங்க, ஆஹா, மெளனமா?? மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே? என்ன செய்வது? (இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, சாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே? :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், "குருவே, இன்று பாடம் இல்லையோ?" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. "கிரி எங்கே? அவனும் வரட்டும்!" மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார் சங்கரர். "என்ன கிரியா? " சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா? சிருங்ககிரியா? பத்மபாதர் யோசித்துக் கொண்டிருக்கும்போது "என்ன அது? இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே? உங்களுக்கெல்லாம் கேட்கிறதோ?" என்றார் பத்மபாதர், தம் நண்பர்களைப் பார்த்து.

அட, நம்ம ஆசிரியருக்கு கிரி என்னமோ சொக்குப் பொடி போட்டுட்டான் போலிருக்கே?? என்ன இது? கிரியின் குரலில் சங்கீதம்? அதுவும் ஏதோ குரு ஸ்துதி போல் அல்லவா இருக்கு? ஆமாம், குரு ஸ்துதியேதான். கிரிதான் பாடிக் கொண்டிருந்தான். இல்லை, இல்லை, சங்கீதம் அவனிடம் கைகட்டி வாய் பொத்தி, அவன் ஆளுகைக்கு உட்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்தது. மொழியோ அவன் நாவிலிருந்து புறப்பட தாம் செய்த பாக்கியம் என்றது. ஆம், கிரி தான் குருவை வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தோஷம் தாங்காமல் மொழி பிரவாகமாய்ப் பொங்கிற்று.

"விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிகோப நிஷத் கதி தார்த்தநிதே
ஹிருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம்"

என்று தன் ஆசாரியருக்கு தோத்திரம் சொல்லி, உண்மையில் அவர் யார் எனத் தனக்குத் தெரிந்துவிட்டதாயும், சாட்சாத் அந்த ஈசனே இவர் தான், எனவும் பேரொளியான ப்ரப்ரும்மமே ஆசாரியராய் அவதரித்திருக்கின்றது எனவும் சொல்லி வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான் கிரி. அதைக் கேட்ட மற்றச் சீடர்கள் வெட்கித் தலை குனிய, கிரி தன்னிலை மறந்து பாடிக் கொண்டே குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். சங்கரர் கண் விழித்தார். பத்மபாதரைப் பார்த்தார்.

"என்ன சிருங்க கிரியா? வெறும் கிரியா?" என வினவினார் சங்கரர் பத்மபாதரிடம். பத்மபாதர் தலை வெட்கத்தால் குனிந்தது. ஆசாரியரின் பிரியமான சீடனாக கிரி மாறினான். தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் அந்த அஷ்டகமும் "தோடகாஷ்டகம்" என்ற பெயரும் பெற்று, அன்று முதல் கிரியும் தோடகர் எனவே அழைக்கப் பட்டார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


தோடகர் பற்றி ஆசார்ய ஹ்ருதயத்தில் எழுதினதிலே இருந்து தோடகாஷ்டகம் பற்றியும் எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன். அதுக்கு இப்போத் தான் நேரம் கிடைச்சது.

ஆசார்யர் சங்கரர் கிட்டே பல சீடர்கள் இருந்தனர். அதிலே கிரி என்பவரும் ஒருத்தர். இந்த கிரிக்குக் கொஞ்சம் மெதுவாகப் புரிந்து கொள்ளும் திறன். மற்றச் சீடர்களைப் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் சங்கரருக்கு அவரிடம் தனியான ப்ரீதி உண்டு. ஒரு நாள் குருவின் துணிகளைத் தோய்த்துக் காய வைத்திருந்த கிரி, மழை வரவே அதை எடுக்கச் சென்றிருந்தார். சீடர்கள் அனைவரும் பாடம் கேட்க அமர்ந்திருந்தனர். ஆனால் சங்கரரோ வாயே திறக்கவில்லை.

மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சீடர்கள் குருவிடம் பாடம் எடுக்கத் தாமதம் ஆவதைப் பற்றி நினைவு கூர, ஆசாரியரோ கிரியும் வரட்டும் என்கிறார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த அசட்டுக்கு என்ன தெரியும்?? ஆசாரியருக்கு அவர்கள் எண்ணம் புரிந்தது. பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது காற்றினிலே வரும் கீதம் போல ஒரு பாடல் கேட்டது. அது கிட்டத் தட்ட குருவுக்கு வந்தனம் செய்யும் பாடலாகவும் இருந்தது. அனைவரும் காது கொடுத்துக் கேட்டனர். கிரி தான் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும், ஆன அந்தப்பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி(தேசிகன் என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள் சரியா வரும்னு நினைக்கிறேன்.

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்!
கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேச்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆஹா, தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் பராதீனனாக, ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அமிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேச்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணம் என அடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!


இந்த கிரி தான் ஜ்யோதிஷ் மடத்தின் பீடாதிபதியாக ஆனார். இங்கே இருந்து பாடம் கேட்டு உபதேசங்கள் வாங்கி துறவறம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவரே திருக்கோயிலூர் தபோவனத்து ஞானானந்த கிரி அவர்களும், அவர் வழி வந்த ஹரிதாஸ்கிரியும் ஆவார்கள்.ஜ்யோதிஷ் மடம் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது. பத்ரிநாதரை நவம்பருக்குப் பின்னர் மீண்டும் கோடை வரும்வரை ஜ்யோதிஷ் மடத்தில் உள்ள கோயிலிலேயே வைத்து வழிபாடுகள் செய்வார்கள். ஜ்யோதிஷ் மடத்தின் ஆசாரியர்களின் பட்டப் பெயரில் கிரி என்ற அடைமொழி இருக்கும். மேலே கண்ட மொழிபெயர்ப்பு நானாக சம்ஸ்கிருத அகராதியின் துணையுடன் செய்தது. தவறுகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு!

Saturday, September 04, 2010

யாதுமாகி நின்றாய் பராசக்தி!

நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனைகள் செய்வோம். இயற்கைத் தாயின் இந்த ஊழிக்கூத்துத் தொடராமல் மக்களைப் பாதுகாக்க வேண்டுவோம்.

யாதுமாகி நின்றாய் பராசக்தி! நீயே துணை அனைவருக்கும்.

Friday, September 03, 2010

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

எப்போ மனம் வேதனையில் இருந்தாலும், கண்ணன் வந்தான் பாடலைக் கேட்டால், (அதுவும் சொல்லி வச்சாப்போல் எங்கே இருந்தோ கேட்கும்.) மனம் லேசாகும். கிருஷ்ணன் பிறப்புக்குப் பதிவு எதுவும் போட முடியலை. வீட்டிலே சுத்தம் செய்யும் வேலையோடு கிருஷ்ணன் பிறப்புப் பண்டிகை வேலையும் சேர்ந்துக்க இணையத்துக்கு வந்து மெயில் பார்க்கிறதே சிரமமா இருந்தது.
கிருஷ்ணன் என்னமோ குழந்தை தான். அதுவும் சின்னக் குழந்தை. பல் முளைக்காத குழந்தை. ஆனால் நாம்ப செய்யற பட்சணம் எல்லாம் பல் உள்ளவங்க சாப்பிடறது. மேலே இருக்கும் படத்தில் உப்புச் சீடையும், வெல்லச் சீடையும். வெல்லச் சீடை வெட்கம் வந்து ஒளிஞ்சிருக்கு போல!
இதிலே கை முறுக்கும், தட்டையும் செஞ்சதை வச்சிருக்கேன்.. இது தவிர பாயாசம், வடையும் உண்டு. முன்னெல்லாம் திரட்டுப் பால், விதவிதமான பழங்கள் என்று வாங்குவோம். இந்த வருஷம் திரட்டுப் பாலும் கட். பழங்கள் வாழைப்பழம் மட்டுமே. அதுவே இன்னும் இருக்கு! :D கூட்டுக் குடும்பமா இருக்கும்போது கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாட்கள் முன்னாடியே பட்சணம் பண்ண ஆரம்பிப்போம். எங்க பையர் பட்சண பாக்டரினு சொல்லுவார். அப்படிக் கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாள் கழிஞ்சும் பண்ணிட்டு இருப்போம். இப்போல்லாம் அன்னிக்கு ஒருநாள் தான் பண்ணறேன். தீபாவளிக்கும் அப்படித் தான் வாரக் கணக்காப் பண்ணுவோம். இப்போல்லாம் பாக்டரி கதவடைப்புச் செய்தாச்சு! சாப்பிட யார் இருக்காங்க?

எல்லாரும் முறுக்கு, தட்டை, சீடை எடுத்துக்க வாங்கப்பா! வரிசையா வரணும்! எல்லாருக்கும் உண்டு! கேட்டயா??? :P:P:P திடீர்னு அநன்யா அக்கா நினைவு வந்துடுச்சு!