எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 29, 2020

தாத்தாவுக்கு அஞ்சலி தாமதமாக!
வாழ்நாளில் திருப்பம்: சிந்தாமணி பதிப்பு
உவேசா ”அரியலூரிலிருந்து சேலம் இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்பு முனை என்று அறிகின்றார். திருவாடுதுறை ஆதினம் தெண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உவேசா, இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உவேசா பெரிய அதிச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மை சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உவேசாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாக, சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை, கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உவேசாவிடம் கொடுத்து கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உவேசாவிற்க்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்

முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உவேசாவின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ்நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்கு புரம் பேயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உவேசா சிந்தாமணியை தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.

பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடி பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களை தெளிவாக்கிக் கொண்டததாகக் குறிப்பிடுகிறார். உவேசா சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்,, கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உவேசா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

உவேசா சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப்பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களை தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப்படித்தோரும் இந்தத்தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நாம்காணும் உரை உவேசாவால் பதிப்பிக்கப்பெற்றது. அதற்குமுன் ஐயரவர்கள் இவ்வுரையினை நன்கு புரிந்து கொண்டு விளக்குவதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டுள்ளார். “நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விசயங்களை உணர்ந்தேன், இரண்டு விசயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப்பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைந்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விசயத்திற்கோ, சொற்பிரயோகத்திற்கோ ஒருநூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை ‘என்றார் பிறரும்’ என்று எழுதிவிட்டுவிடுகிறார்” என்று உவேசா பதிவு செய்கிறார்.

சிந்தாமணி சமண காவியம் என்று சைவர்கள் குறை கூறிய போதும் “பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணியானால் நமக்கு என்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே சுவை நிரம்பிக்கிடக்கும் காவியமாக இருக்கும் பொழுது அதைப்படித்து இன்புறுவதில் என்னதடை” என்று தெளிவாக்குகின்றார். தம் தமிழ் தொண்டில் அவர் மதம் குறுக்கிடுவதை அனுமதிக்கவில்லை.

அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடி கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகளனைத்தையும் நன்று படித்து ஒப்பு நோக்கி, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழுவடிவத்தையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உவேசா எதையும் பதிப்பிப்பதில்லை. இவர் பிரதிகளைத்தேடித் தேடி தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகன போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்களை உவேசா பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாக பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். “ பழந்தமிழ் இலக்கண இலக்கியச்சுவடிகளைத்தேடி ‘ நள்ளிருளோ, கொள்ளு பகலோ, குறிக்கும் கடுமழையோ, அள்ளு பிணியோ, அவதியோ- உள்ளம் தடுக்கும் பகைகள் எது வரினும தள்ளி அடுக்கும் தமிழ்ச் சுவடி தேடிக்கொடுக்கும் தமிழ்த்தாத்தா என்று தரணி புகழ்” என்று ஒரு தமிழ் புலவர் இவரை வர்ணிக்கிறார்

இப்பணியில் ஏராளமான பொருட்செலவு, மன உளைச்சல், உடல் அசதி அன்றி கடின உழைப்பை நல்கினாலும் இப்பணியை மெத்த உற்சாகத்துடன் செய்து வந்தார். கும்பகோணத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு முன் சேலம் இராமசாமி முதலியாரவர்கள் உவேசாவைச் சந்தித்து “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்பொழுது நன்றாக உணர்ந்திருக்கின்றீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்னும் சிலபிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும் அதைப்போன்ற உபகாரம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்”.

பவர்துரை பதுப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சு நகல் ஒன்று ஐயரவர்களுக்குக் கிடைத்தது, தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த நகலை அனுப்பி வைத்தார். திரு சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலி யிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பலநகல்களையும் ஒப்பிட்டு பேதங்களைக் குறித்து வைத்து பின் ஆய்வு செய்து சரியான சொற்களைத் தொிவு செய்வார். உவேசாவிடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர்.

சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது, திருக்குடந்தைப் புராணம் உவேசா வெளியிட்ட இரண்டாவது நூல். சிந்தாமணியைப் போன்று பல பழையநூல்கள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதை ஐயரவர்கள் அறிந்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை போன்றவை அவை. எட்டுத்தொகை மூலநூல் திருவாடுதுறை ஆதினத்திலேயே இருந்தது. பொருநராற்றுப்படை, பதினென்கீழ் கணக்கு முதலியனவும் சுவடி வடிவில் கிடைத்தன. மற்ற சங்க நூல்களையும் நன்குபடித்தால் தான் சிந்தாமணியின் பொருள் விளங்கும் என்று அறிந்து அந்நூல்களை ஆழமாக உவேசா படித்து பொருள் விளங்க முயன்று வந்தார்.

சிந்தாமணிப் பிரதியை மேலும் தேடியபொழுது தஞ்சாவூரில் விருசபதாச முதலியாரிடம் உள்ளதாக அறிந்து அவாிடம் கேட்ட பொழுது அவர் “சமணர்களுக்கு மட்டும் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தர இயாலது” என்று மறுத்து விட்டார். பல நண்பர்களின் உதவியுடன் இந்நூல் நகல் அவரிடமிருந்து கிடைத்தது. இது போன்று மதத்தின் அடிப்படையிலும் பல இடையூறுகள் வந்தன. இன்னும் பல இடங்களில் அறிய பொக்கிஷங்களான இச்சுவடிகளை தீயில் இட்டும் ஆற்று வெள்ளத்தில் இட்டும் அழித்து விட்டதைக் கேட்டு உவேசா மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இவ்வாறு தேடி சிந்தாமணியின் 23 நகல்களை உவேசா சேர்த்துவிட்டார்.

இதற்கிடையில் மடத்தின் அலுவல் காரணமாக சென்னை சென்று வர வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு சென்னையில் இராமசாமி முதலியாரிடம் தங்கிக் கொண்டு பல புகழ் பெற்றவா்களிடம் அறிமுகமாகி பழகும் வாய்ப்பைப் பெற்றார். சென்னையில் சந்தித்த சி வை தாமோதரம்பிள்ளை, சிந்தாமணியைத் தாம் பதிப்பிக்க விருப்பியதாகவும் உவேசாவிடமுள்ள குறிப்புகளனைத்தையும் அவரிடம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அரைமனதுடன் இருந்த உவேசா தாம் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருப்பதாகவும், முடிவு செய்துவிட்டதாகவும் எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இம் முயற்சியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் தீர்மானமாக கூறிவிட்டார்.

சிந்தாமணியைப் பிழையில்லாமல் பதிப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் உவேசா முயற்சி தொடர்ந்தது. இதனால் காலதாமதம் ஆயிற்று ஒவ்வொறு விசயத்தையும் சந்தேகமறத் தெளிந்து பின்பு வெளியிடுவது எளிதன்று என்றும் இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் செலவாகி விடும் என்று நண்பர்கள் அறிவுறுத்த உவேசாவும் நூலைப்பதிப்பிக்கலாம் எனவும் திருத்தங்கள் தேவைப்படின் அடுத்த பதிப்பில் மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார்.

நூலைப் பதிப்பிக்கத் தேவையான நிதி வசதியின்மையால் இவர் பல பெரியவர்களை அணுகி முன்பணம் பெற்றுக்கொண்டு பணியைத் துவக்கினார். சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது புரசவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் போன்றவர்கள் நீங்கள் வயதில் இளையவர், சீவக சிந்தாமணிப்பதிப்பு மிகவும் கடினமான செயல் உங்களால் முடியாது என்றும், சேலம் ராமசாமி முதலியார் கூட ஒரு சமயம் உங்களுக்கு இது கடினம், உங்கள் குறிப்புகளை தாமேதரம்பிள்ளையவர்களிடம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு நிதி திரட்டுவது சிரமம் என்று தளர்வூட்டினர். ஆனால் உவேசா “நான் ஏன்பதிப்பிக்கக் கூடாது அந்த நூலையும், உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்துள்ளேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன் நிறைவேற்றி விடலாம் என்ற துணிவு எனக்கு இருக்கிறது”. என்று தெளிவாக இருந்தார், “யார் வந்து தடுத்தாலும் என்முயற்சியை நிறுத்திக்கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது”.

சீவக சிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ் புலமை வேண்டும் அது உவேசாவிடமிருந்ததுதான் சிறப்பு. மேலும் சிறுவயதிலிருந்து உவேசா தீராததமிழ் ஆர்வத்தால் மிகுந்த முயற்சி எடுத்து தமிழைக் கற்றுத் தேர்ந்த புலமை தான் சீவக சிந்தாமணி போன்ற பழைய நூல்களை சிறப்பாகப் பதிப்பிக்க உதவி செய்தது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாமகளிலம்பகம் 58 ஆம் செய்யுளுக்கு உரை எழுதும் பொழுது நச்சினார்க்கினியர் “ஏக்கழுத்தம் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இச்சொல்லிற்கு பொருள் விளங்காத உவேசா சிறுபஞ்சமூலத்திலும், நீதிநெறிவிளக்கத்திலும் இதே சொல் வருவதை நினைவுகூர்ந்து அவைகளை மீண்டும் படித்து இச்சொல்லின் முழுமையான, சரியான பொருளை தமது பதிப்பில் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லும் வேறு எந்த இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தொடர்புகொண்டு பார்க்கக்கூடிய அளவு புலமை பெற்றிருந்தால் தான் இது இயலும். இதனை உவேசா செய்துகாட்டியுள்ளார். இதுபோன்று ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல்லிற்கு நாம் கண்டுபிடித்த பொருளைப் பற்றி தமது பதிப்பிற்கு மிகுந்த துணையாக இருந்த சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியாரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது “புதிய தேசத்தைக் கண்டு பிடித்தாற் கூட இவ்வளவு சந்தோசமிராது” என்று கூறுகிறார்.

நூலை அச்சிடும்பொழுது ஒய்வு ஒழிவில்லாமல் உவேசா உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக்கொடுப்பது, கையெழத்துப்பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன.. இப்பணியில் சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலாச்சாரியாரும் வேலுச்சாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதிகளை படித்து உதவி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சடித்த நகல்களை தாமே தனியாக இரவில் அமர்ந்து நெடுநேரம் சரிபார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமக்கு இரவில் “தூரத்துப் பங்களாவில் ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும் இரண்டு கூர்க்கா சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள்” இவர்கள் மட்டுமே துணை இவர்களால் எனக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.


தாத்தாவுக்கு அஞ்சலி தாமதமாக! சிந்தாமணியைப் பதிப்பிக்கச் செய்த முயற்சிகள் மேலே உள்ளவை. விக்கிபீடியாவில் இருந்து நன்றியுடன். நேற்றே போட்டிருக்க வேண்டும். ஷெட்யூல் செய்து வைத்திருந்தேன். ஆனால் அது எப்படியோ அழிந்து விட்டிருக்கிறது. நானும் ஏதேதோ வேலைகளில் கவனிக்கவில்லை. அமெரிக்க நாட்காட்டிப் படி இப்போது 28 ஆம் தேதி தான் என்றாலும் நமக்கு மறுநாள் பிறந்துவிட்டது. நேரத்தில் பதிவிடாமல் முதல்முறையாகத் தவறிழைத்து விட்டேன். :(

Saturday, April 25, 2020

கொரோனா போகணும்! அது வரை விடப் போறதில்லையே! ஹாஹாஹா!

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் போன்ற நகரங்களில் கடுமையான முழு ஊரடங்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரசு அறிவிப்புச் செய்திருக்கிறது. நாளைய ஊரடங்கிற்கு நேற்றே அறிவிப்புச் செய்தாகி விட்டது. பால், காய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடை இல்லை என்றும் அறிவித்தாகி விட்டது. ஆனாலும் மக்கள் கூட்டமாய்க் கூடிக் காய்களும், மளிகைப் பொருட்களும் வாங்கினால் அரசு என்ன செய்ய முடியும்? கண்டிப்புக் காட்டவும் விதியை மீறுகிறவர்களைத் தண்டிக்கவும் செய்கிறது தான்! அதையும் மீறிக்கொண்டு வருபவர்களை என்ன செய்வது? பலரும் அரசுக்கு முன்னெச்சரிக்கை போதவில்லை என்கிறார்கள். அவர்கள் அரசுப் பொறுப்பில் இருந்தால் எப்படிச் செய்திருப்பார்கள் அல்லது செய்வார்கள் என்பதையாவது சொல்லலாம்.  எல்லாவற்றுக்கும் மத்திய, மாநில அரசைக் கண்டிப்பதே இவர்கள் வேலை.  இனி நாம் மறுபடி எச்சில் என்றால் என்ன, பத்து என்பது என்ன என்பதைக் கவனிப்போம்! :)
*******************************
1. "எச்சில்" என்றால் என்ன?

கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள்.  என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது.  கீழே விழும்.  அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.  அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது.  அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும்.  இது சுகாதார அடிப்படையில் ஆனதே.  ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.

2. "பத்து" என்றால் என்ன?

சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள்.  சப்பாத்தி பத்தில்லை என்பார்கள்.  என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள்.  உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள்.  முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள்.  உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது.  உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை.  அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து.  அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை.  என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார்.  உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள்.  சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம்.

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

சரியாப் புரியறதானு சொல்ல முடியலை.  ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை.  அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம்.  பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.

ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை.  காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது.  இனிப்பானால் சுவை மாறுபடுகிறது.  ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன்.  அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.


4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு.  எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.  மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  

எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா?


கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ?   எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்

இது மலேசியாவில் இருந்து/சிங்கப்பூர்? நினைவில் இல்லை. ஒரு சிநேகிதியின் கேள்வி. இதற்கான பதிலை அடுத்துப்பார்க்கலாம். இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது. எல்லாருமே தேடிப் பிடித்துப் பழைய ஆசாரங்களையும், பழக்கங்களையும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் நாங்கள் பள்ளிக்குச் சென்று வந்ததும் வீட்டில் நுழையும்போதே நேரடியாகக் குளியலறைக்குச் சென்று அணிந்திருந்த உடையைத் தண்ணீரில் நனைத்துப் போட்டுவிட்டுப் பின்னர் அங்கே கை, கால் கழுவி அல்லது குளித்து மாற்றுடை ஏற்கெனவே குளியலறையில் போட்டு வைத்திருப்பார்கள், அதை உடுத்திக் கொண்டு வெளியே வந்து நெற்றிக்கு இட்டுக்கொண்ட பின்னரே காஃபியோ அல்லது டிஃபனோ சாப்பிடலாம்/சாப்பிட முடியும்.  பள்ளிக்கூடத் தீட்டு என அப்பாவின் சித்தி சொல்லுவார். பள்ளியில் பலதரப்பட்டவர்களும் நோய் உள்ளவர்கள். நோய் இல்லாதவர்கள் அல்லது குளிக்காமல் என வந்திருக்கலாம். நாம் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் அவர்களிடம் இருக்கும் கிருமிகள் நம்மிடமும் வந்துவிடும் என்பதற்காக இந்தச் சுத்தத்தைக் கடைப்பிடித்தனர். ஆனால் நாளாவட்டத்தில் மறந்துவிட்டது. வெளியே போய்விட்டு வந்தால் கால் கழுவும் பழக்கம் கூட இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. 

Friday, April 17, 2020

திப்பிசமோ, திப்பிசம்! என்னோட திப்பிசம்!

அம்பேரிக்கப் பயணத்தில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து நாட்கள் ஓடோடிக் கொண்டிருக்கின்றன. நடுவில் நடந்த துக்ககரமான சம்பவம் ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. அந்தக் காரியங்கள் நடக்கும்போதே ஆரம்பித்த ஊரடங்கு, வெளியில் எங்கும் செல்ல முடியாமைனு வாழ்க்கை ஓர் இடத்தில் ஸ்தம்பித்தாற்போல் இருந்தது. புத்தாண்டுப் பிறப்பன்று கூட எதுவும் செய்யவில்லை. ஒரு மாசம் கூட ஆகவில்லையே!  மனம் மாறுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 

எப்படியும் சாப்பிட்டாகணும். உயிரோடு இருக்கும்வரை உடலைக்காப்பாற்றிக் கொள்ள உணவு முக்கியம் இல்லையா? அப்படி ஒரு நாள் முருங்கைக்கீரை கிடைச்சப்போ வெறும் அரிசி அடைக்கு அரைத்து அதில்  முருங்கைக்கீரை போட்டுப் பண்ணினேன். வெறும் அரிசி அடைக்குப் புழுங்கலரிசியும் தேங்காயும் மட்டுமே போட்டு அரைத்து உப்புச் சேர்த்து முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் பண்ணணும். நம்மவருக்குக் காரம் வேண்டும் என்பதால் நான் அதிலேயே பச்சை மிளகாயும், இஞ்சியும் சேர்த்துக் கொண்டு கொஞ்சம் போல் மிளகு ஜீரகமும் பொடித்துப் போட்டுக் கொண்டு முருங்கைக்கீரையைச் சேர்த்து வார்த்தேன். எத்தனை தான் குறைவாக அரைத்தாலும் கொஞ்சமானும் மாவு மிஞ்சத் தான் செய்தது. அதோடு மிச்சம் இருந்த இட்லி மாவையும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டு குழி அப்பம் போல் செய்து ஒரு நாள் சாப்பிட்டும் மாவு மிச்சம். என்ன செய்யலாம்?

நேற்று சாதாரணமாக எப்போதும் பண்ணும் அடைக்கு அரைத்து அடை வார்த்தேன். கொஞ்சம் தான் அரிசி பருப்பு. இரண்டும் சேர்த்தே இரண்டு கிண்ணம் தான். ஆனால் அதிலும் ஒரு கரண்டிக்குக் கொஞ்சம் கூட மாவு மிச்சம். இன்னிக்கு என்ன பண்ணனு யோசிச்சப்போத் திப்பிச வேலை பண்ணி ரொம்ப நாளாச்சேனு நினைவு வந்தது. உடனே உள்ளே இருந்த வெறும் அரிசி அடைமாவையும் இந்த அடைமாவையும் ஒன்று சேர்த்தேன்.இரண்டு மாவையும் ஒன்றாக்கி வைத்திருக்கிறேன். ஒரு அரைக்கரண்டி பாசிப்பருப்பைத் தனியாக நனைத்து வைத்தேன். இன்னொரு அரைக்கரண்டி பாசிப்பருப்புடன் இரண்டு டீஸ்பூன் க.பருப்பு, இரண்டு டீஸ்பூன் துபருப்பு சேர்த்து ஊற வைத்தேன்.

ஊற வைத்த பருப்புகள்.

இதில் பாசிப்பருப்புக் கலவையை மட்டும் ஒரு பாதி மி.வத்தலை அதிலேயே ஊறவைத்து உப்புப் பெருங்காயம் சேர்த்து மிக்சி ஜாரில் தளர அரைத்து ஏற்கெனவே கலந்த மாவோடு சேர்த்தேன். மாவில் புளிப்பு இருந்தால் போய்விடும். அதோடு கொஞ்சம் நிறம், ருசி கொடுக்கும். தனியே ஊற வைச்சிருந்த பாசிப்பருப்பைக் களைந்து வடிகட்டி இதில் அப்படியே முழுசாகக் கலந்தேன். எண்ணெயில் பொரிக்கையில் பாசிப்பருப்பும் பொரிந்து கொண்டு கரகரவென வரும்.


பாசிப்பருப்பு அரைத்த கலவை (படம் எடுக்கலை, அந்த நேரம் பார்த்துத் தொலைபேசி அழைப்பு) முழுப்பாசிப்பருப்பு ஊற வைத்ததோடு சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்திருக்கேன். கீழே இஞ்சி, பச்சை மிளகாய். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து உள்ளே உள்ள விதைகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிச் சேர்த்திருக்கேன். இஞ்சி இத்தனையும் போடவில்லை. ஒரு அங்குலம் அளவுக்குத் தோல் சீவி நறுக்கிப் போட்டேன்.


தேங்காய்ப் பல்லுப் பல்லாக நறுக்கிச் சேர்த்தேன். இஞ்சி, பச்சை மிளகாய்எல்லாம் சேர்த்துக் கலந்த மாவு. அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்தேன். எண்ணெய் காய்ந்ததும் சின்னக் கரண்டியால் மாவை எடுத்து ஊற்றினேன்.எண்ணெய் காய்கிறது.


வடைகள், ஹிஹிஹி, இதுவும் ஒருவகைத் தவலை வடையே தான்!


சூடான வடை தயார் சாப்பிட. மாவும் தீர்ந்து விட்டது. ஆளுக்கு 3 எனக் கணக்காக வந்தது. ஓர் திப்பிசமும் கற்றுக்கொண்டாயிற்று. தோசை மாவு, அடை மாவு மிஞ்சினால் தோசை மாவில் வெள்ளையப்பம் இல்லைனா குழி அப்பம் பண்ணுவேன். அடை மாவு எனில் குணுக்கு! இன்னிக்கு ஒரு மாறுதலாக இரண்டு அரைத்த மாவோடு புதுசாக அரைத்த ஒரு மாவையும் சேர்த்துக் கொண்டு பாசிப்பருப்பை அப்படியே போட்டுத்தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுப் பண்ணினேன். பாசிப்பருப்புக் கலவைக்குக் கூடியவரை பருப்புவகைகளைக் கொஞ்சமாகவே போட வேண்டும். நிறையப் போட்டால் ஊறி நிறைய வந்துடும்.  

Wednesday, April 15, 2020

எல்லாம் கொரோனாவால் வந்தது தான்! :)

இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது. பழைய ஆசாரங்கள் எனப்படுபவற்றுக்கு மீள் பதவி! ஆமாம், இப்போல்லாம் யாரும் யாருடைய எச்சில் உணவையும் தொடுவது இல்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும்போது கூடக் கவனமாக இருக்கிறார்கள். அதிலும் தொலைக்காட்சித் தொடர்களில் காதலன், காதலி என்றாலோ அல்லது கணவன், மனைவி என்றாலோ ஒருத்தர் எச்சிலை இன்னொருத்தர் சாப்பிட்டே ஆகணும் போல! ஒரே தம்பளரில் இருந்து பழச்சாறோ அல்லது, இளநீரோ அல்லது ஐஸ்க்ரீமோ அல்லது சாப்பாடோ சாப்பிடுவார்கள் அல்லது ஊட்டி விட்டுக் கொள்ளுவார்கள். எனக்கு அதைப் பார்க்கையிலேயே பற்றிக்கொண்டு கோபமாக வரும். இந்த மாதிரிக் காட்சிகளில் எல்லாம் பணத்துக்காக நடிக்கிறாங்களே என இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் வரும். இன்னும் சிலர் இந்த எச்சிலைப் பொதுவாகக் கடைப்பிடித்தாலும் தங்களுக்கு நெருங்கியவர்கள் எனில் எந்த எச்சில், பத்தும் பார்க்க மாட்டார்கள். அவர்கள் வீட்டுப் பாத்திரத்திலேயே அதாவது சமைக்கும் பாத்திரத்திலேயே கையைப் போட்டு எச்சில் பண்ணிச் சாப்பிட்டால் மிதமிஞ்சிய சந்தோஷம், பெருமையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த எச்சில் அவர்களைப் பொறுத்தமட்டில் பிரசாதம் என நினைக்கிறார்களோ என எனக்குத் தோன்றும்.

ஆனால் எனக்கு என்னமோ எப்போதுமே இந்த எச்சில் பிடிக்காது.பிறந்த வீட்டுப் பக்கம் ரொம்பவே ஆசாரம் பார்ப்பார்கள்.  எங்க வீடுகளில் எதையும் கடித்துச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட நேர்ந்தால் உடனே தனியாகக் கைகழுவவென உள்ள இடத்திற்குப் போய்க் கை கழுவ வேண்டும். கை கழுவாமல் வீட்டில் உள்ள மற்றப் பொருட்கள் எதையும் தொடக் கூடாது. முக்கியமாய்ச் சாப்பிடுகையில் அப்போதெல்லாம் உள்ள மரபுப்படிக் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும். தட்டோ, இலையோ அதில் நம் இடக்கை தவறியோ அல்லது நாமே பிடித்துக் கொண்டால் இடக்கையை நன்கு அலம்பினால் தான் சாப்பாட்டுப் பாத்திரத்தைத் தொடலாம். அல்லது பக்கத்திலேயே எடுத்து வைத்திருக்கும் மோர், ஊறுகாய், நெய் போன்றவற்றைத் தொடலாம். அநேகமாக இவை எல்லாம் பரிமாறப் பட்டாலும் சில சமயங்களில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுகையில் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் இவை. நாமாக எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடால் எல்லாவற்றையும் எதிரே வைத்துக் கொள்ளுவதோடு மோர், தயிர், ஊறுகாய், நெய் ஆகியனவும் பக்கத்தில் இருக்க வேண்டும். தட்டில் இடக்கையால் குழம்போ, ரசமோ பரிமாறிக்கொண்டால் உடனே இடக்கையைப் பக்கத்தில் இருக்கும் நீர் நிறைந்த செம்பிலிருந்து நீரைக் கீழே விட்டுக் கொண்டு (அதுவும் அந்தக் கையால் பாத்திரத்தை நேரடியாகத் தொடாமல் சாய்த்து விடவேண்டும்) அதைத் தொட்டுக் கை கழுவிய பின்னர் எடுக்கலாம்.

இப்போதெல்லாம் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு நாற்காலி, அல்லது சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, அல்லது வலக்கையில் சாப்பாடும், இடக்கையில் புத்தகமுமாகவோ சாப்பிடுகின்றனர். அப்போது சாப்பாட்டைச் சாப்பிட்ட வலக்கையாலேயே சாதம் வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்தும், சாம்பார், ரசம் அல்லது காய்கள் தேவை என்றாலும் அதே சாப்பிட்ட கையாலேயே போட்டுக் கொள்ளுகின்றனர். இது எச்சில் பரவுவதோடு மட்டுமில்லாமல் மொத்த சாப்பாடும் மிஞ்சினால் மாலைக்குள்ளாக வீணாகிவிடும். அம்பேரிக்காவில் இருக்கிறவங்க எல்லாம் உடனடியாகக் குளிர்சசதனப் பெட்டியில் வைத்தாலும் அதைத் திரும்பச் சூடு பண்ணுகையில் உணவின் தரம் சுமாராகத் தான் இருக்கும். ஆனாலும் இதைப் பலரும் ஒத்துக் கொள்ளுவது இல்லை. எச்சில் என்ன ஒட்டிக்கொள்ளவா செய்கிறது? என்று கேட்பார்கள்.

இன்னும் சிலர் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எச்சில் பண்ணிக் காபி, தேநீர் குடித்தாலோ, தண்ணீர் குடித்தாலோ அந்தத் தம்பளர்களைக் கழுவுவதற்குத் தனியாகப் போடாமல் எல்லாப் பாத்திரங்களுடனும் போட்டு விடுவார்கள். வந்திருக்கும் விருந்தினர் நமக்கு உயர்வானவர் தான். ஆனால் அவர் எச்சில் உயர்வா என்ன? அவர் வாயில் உள்ள (பாக்டீரியாக்கள்) கொரோனா போன்ற நுண்ணுயிரிகள் அவரையும் அறியாமல், நமக்கும் தெரியாமல் அந்தக் குடித்த தம்பளர்களில் இருந்து மற்றப் பாத்திரங்களுக்குப் பரவ வாய்ப்பு உண்டு. இது தான் இப்போக் கொரோனா விஷயத்திலும் நடந்து வருகிறது. இன்னும் சிலர் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை நமக்குச் சமமாக மதிப்பதாக நினைத்துக் கொண்டு அவங்க சாப்பிடும் தட்டு, குடிக்கும் தம்பளர்களையும் எல்லாப் பாத்திரங்களோடு சேர்த்தே போட்டுக் கழுவும்படி விடுவார்கள். நாம் அதைத் தற்செயலாகப் பார்த்துவிட்டுக் கேட்டால், "நான் இதெல்லாம் பார்ப்பதில்லை! அவளும் நம்மை மாதிரித் தானே!" என்பார்கள். நிச்சயமாய்! நம்மை மாதிரித் தான். அதற்காகத் தட்டு, தம்பளர் எல்லாம் கொடுத்து உணவு கொடுப்பதும் சரியே! ஆனால் அதை முதலில் தனியாகக் கழுவ வேண்டாமா? தனி இடத்தில் அதைக் கழுவின பின்னர் மற்றப் பாத்திரங்களோடு சேர்த்தால் சரி. என்னைக் கேட்டால் இந்தப் பாத்திரங்களைத் தனியாக வைப்பதே சரி.  வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவரின் தட்டுக்களையும் தனியாக வைத்தலே சரி.


எங்க வீட்டில் அந்தக் காலங்களில், அதாவது எண்பதுகளின் கடைசி வரையிலும் சாப்பாடுத் தட்டுகள் வைக்கும் இடம் தனியாக இருக்கும். (இப்போவும் ஸ்ரீரங்கத்தில் இதைக் கடைப்பிடிக்கிறோம். அது என்னமோ இந்த விஷயத்தில் இரண்டு பேருமே திருஷ்டிப்படும் அளவுக்கு மஹா ஒற்றுமை! :P)   சாப்பாடுத் தட்டுகளுக்கு என்றே ஒரு ஆப்பைக்கூடு எனப்படும் அகப்பைக் கூடோ அல்லது  சுவற்றில் ஒரு பிறையோ இருக்கும். அந்த இடத்தில் மட்டுமே சாப்பாடுத் தட்டுகள் வைப்போம், எடுப்போம். என்னதான் சாப்பிட்ட பின்னர் சுத்தம் செய்திருந்தாலும் அந்தத் தட்டுக்களைச் சமையலறையின் தொட்டி முற்றத்தில் அந்தக் காலங்களில் அலம்ப மாட்டார்கள். கொல்லைப்புறம் அல்லது கை கழுவும் இடத்தில் தான் அத்தனை தட்டுக்களையும் எடுத்துச் சென்று அலம்பிச் சாப்பிடப் போடுவார்கள். சாப்பிட்ட பின்னர் மீண்டும் கழுவிச் சுத்தம் செய்து அதற்கென்றிருக்கும் இடத்தில் வைப்பார்கள். மத்தியான சமையலில் மீந்ததை வைக்கும் இடத்தில் பழைய சாதம், குழம்பு போன்றவற்றை வைக்க மாட்டார்கள். பழைய குழம்பைச் சூடு செய்யவேண்டுமெனில் அதற்கென இருக்கும் தனி அடுப்பில் சூடு செய்வார்கள். மாதாந்திர விலக்கு நாட்களில் பெண்களுக்குத் தனிச் சமையல் தான் செய்து போடுவார்கள். அதற்கெனத் தனி அடுப்பு, பாத்திரங்கள், புளி, சாம்பார்ப் பொடி, உப்பு, ஊறுகாய் வகைகள் போன்றவை இருக்கும். மற்றப் பருப்பு வகைகள், காய்கள்,  மோர், பால், போன்றவை மட்டும் வீட்டில் உள்ளவற்றிலிருந்து கொடுப்பார்கள். அப்போதெல்லாம் வீட்டு விலக்கானவர்களுக்கு எனப் பத்துப் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளைச் சமைக்கச் சொல்லுவார்கள். அவர்களுக்குச் சமையலும் பழக்கம் ஆகும் என்பதால் இந்த ஏற்பாடு. அப்படியே வீட்டில் உள்ளவர்கள் தான் சமைக்க வேண்டும் எனில் வீட்டு விலக்கானவர்களுக்குப் பழைய சாதமும், குழம்பும் அல்லது தனியாக இருக்கும் ஊறுகாயோடு போட்டு விடுவார்கள்.

பின்னர் வீட்டு வேலை எல்லாம் ஆனதற்குப் பின்னர் வீட்டு விலக்கான பெண்களுக்குத் தனியாகச் சமைத்துப் போடுவார்கள். அதில் மிச்சம் இருந்தால் இரவுக்கும் அதையே வைத்துக் கொண்டு விடுவார்கள். ஒவ்வொரு வீடுகளில் காலையில் பழைய சாதம் போட்ட பின்னர் மத்தியானம் காபியோடு ஏதேனும் பக்ஷணம் வாங்கிக் கொடுத்துவிட்டுப் பின்னர் மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் முன்னர் சாப்பாடு போடுவார்கள். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் வீட்டு விலக்கானவர்கள் சாப்பிடக் கூடாது எனச் சொல்லுவார்கள். ஆனால் பெரும்பாலும் இதைக் கடைப்பிடித்தது கிராமங்களில் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமே.   அது எல்லோருக்கும் வீட்டில் சமைத்ததாகவோ அல்லது அவர்களுக்கு எனத் தனியாகச் சமைத்ததாகவோ இருக்கும். அதன் பின்னர் மறுநாள் காலை தான் காபி, பழைய சாதம் எல்லாம். பழைய சாதம் இல்லை எனில் ஓட்டலில் இட்லி வாங்கியும் போடுவார்கள்.  எச்சில், பத்தில் இருந்து எங்கேயோ போயிட்டேன். இருங்க மிச்சத்தையும் நாளைக்குச் சொல்றேன். 

Wednesday, April 08, 2020

எப்படியோ நாட்களை ஓட்டுகிறோம்!இந்தப் படங்கள் எங்க வீட்டுக்கு வந்திருந்த ஓரகத்தி எடுத்தது. இதை எனக்கு வாட்சப்பில் அனுப்பி இருந்தார். அதை இங்கே போட முயற்சித்து தரவிறக்கிப் போட முற்பட்டால் படங்கள் வரவே இல்லை. இவை இரண்டையும் மட்டும் காப்பி செய்து போட்டிருக்கேன். மற்றவை இரண்டு வீடியோக்கள் உட்படத் தரவிறக்கவே முடியவில்லை. அம்பேரிக்காவில் இருக்கும்போது ஏற்கெனவே எடுத்த 2 வீடியோக்கள் இன்னும் போட முடியவில்லை. மேலே இருப்பது காவிரி ஆற்றின் தற்போதைய நிலையைச் சுட்டும் படம். கீழே இருப்பது காவிரிப் பாலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்துத் திருச்சிக்கு இறங்கும்வரை இப்படித் தடுப்புகள் போட்டுக் காய்கள் விற்பனைக்கு ஏற்பாடு பண்ணினார்கள்.சென்றவாரம் செவ்வாயன்று ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். அன்று போகவில்லை. மறுநாள் நம்ம ரங்க்ஸ் போனார்.  இரு சக்கர வண்டிகள் அனுமதி கொடுத்தாலும் பாலத்தில் போகக் கூடாதாம். சுமார் 100,200 கடைகள் பாலம் முழுவதும் இருந்தன என்றார். அவரால் பாலத்தில் பாதி தூரம் கூடப் போக முடியவில்லை என்றார். நடக்கணுமே. முடிந்தவரை பார்த்துவிட்டுக் கொஞ்சம் போல் காய்களை வாங்கி வந்தார். மீண்டும் போக வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அங்கே கூட்டம் அதிகம் ஆகிவிட்டதால் முட்டு, மோதல், தள்ளு, முள்ளு வரும் என்பதால் அதை எடுத்துவிட்டுப் பாலம் இறங்கியதும் வரும் ஒரு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் போட்டு விட்டார்களாம். அது எங்களுக்கு அதிக தூரம் என்பதால் போவதில்லை. ஆனால் காய்கள் எல்லாம் மலிவு தான். கத்திரியும் வெண்டையும் மட்டும் கிலோ 50, 60 ரூபாய். மற்றவை எல்லாம் 30 அல்லது 20 ரூபாய்க்குள் தான்.

இங்கே உள்ள காந்தி மார்க்கெட்டை மூடி விட்டார்கள். அங்குள்ள வியாபாரிகளுக்குத் தான் இங்கே சந்தை போட அனுமதி! ஆகவே காந்தி மார்க்கெட் விலைக்கே விற்றதாகச் சொன்னார்கள். தக்காளி எல்லாம் தரத்துக்கு ஏற்ப 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்குள். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் எல்லாம் மலிவு. ஆனால் நாங்க சாப்பிட முடியாது! :( மற்றக் காய்கள் சில வாங்கினோம். வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தெரிந்தவர்களிடம் இருந்து  5 வாழைக்காய் 20 ரூ என்று கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தவிரவும் ஒரு அண்ணாச்சி கடை இருப்பதாலும் தெருவில் கடை போட்டிருந்த ஒரு சிலர் போடுவதாலும் அதிகம் அலைச்சல் இல்லாமல் காலையிலேயே கீழே போய் வாங்கி விடுகிறோம். கீரை வகைகளும் கிடைக்கின்றன. ஆவின் பால் பூத் எதிரேயே இருப்பதால் பாலுக்கும் பிரச்னை இல்லை. பால்காரர்களையும் எங்க குடியிருப்பில் அனுமதித்திருக்கின்றனர். எப்படியோ நாட்கள் ஓடுகின்றன.  கூடியவரை மிச்சம் வைக்காமல் சமைத்து விடுவேன். மிஞ்சினால் இரவுக்கு வைத்துக் கொண்டு விடுகிறோம். வேலை செய்யும் பெண்மணியைக் கூட வரும் நாட்களில் வேண்டாம்னு சொல்லலாம்னு முடிவு. அவங்க எனக்குனு வருவதில்லை. என்றாலும் அவங்களும் பாவம் தானே!

Monday, April 06, 2020

இன்னும் எத்தனை நாட்கள்?

எங்க குடியிருப்பு வளாகத்தில் நேற்று ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மண்ணால் ஆனது வாங்கிக் கொடுத்திருக்காங்க என்பதைச் சொன்னேன். நேற்றிரவு சரியாக ஒன்பது மணிக்கு எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் விளக்குகள் ஏற்றினோம். இவர்களில் பொறியியல் படித்தவர்களும், மருத்துவர்களும், தொழிலதிபர்களும் உண்டு. எல்லோருமே இது தேசநலனுக்காகவும் தேச ஒற்றுமையை வெளிக்காட்டவும் செய்யப்படுகின்ற ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொண்டதோடு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஊட்டவும் செய்திருந்த ஏற்பாடு என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலே கோள்களும் ஒரு காரணம் என்பதைச் சில ஆன்றோர்கள் சொல்லி இருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்நிலை மாறிநல்லபடியாக அனைவரும் முன்போல் சகஜமாக நடமாடும்படியான நிலையை அந்த மஹாலக்ஷ்மி அருளட்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.


இந்தப் படத்தி ஆங்கில எழுத்து டி மாதிரித் தெரிவது தெற்கு கோபுரத்தில் போடப்பட்டிருக்கும் விளக்குகள். ஜூம் செய்திருக்கணும். நினைவில்லை. படம் அகஸ்மாத்தாக வந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் தான் நினைத்தேன், நிதானமாக ஜூம் செய்து எடுத்திருக்கலாமோ என. 
இனி கொரோனா பற்றிய வேறொரு செய்தியைப் பார்ப்போம். இதே செய்தியை  ஒரு எட்டு வயதுக்குட்பட்ட சிறுவனும், (ஜோதிடத்தில் தேர்ந்தவராம்) சொல்லி இருக்கிறார். இது இங்கே ஸ்ரீரங்கத்தில் ஓர் பெரியவர் சொன்னதாகச் சொல்கின்றனர். பாற்கடலில் அமுதம் கடைந்த போது வாசுகி விஷம் கக்கிய பொழுதும் அதை ஈசன் விழுங்கியதன்போதும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் என்கின்றனர். அப்போது உலகம் முழுவதும் விஷம் பரவாமல் ஈசன் தடுத்தார். இப்போது அதே திருவாதிரையில் தான் ராகு தற்போது இருப்பதாகவும் அதனால் தான் அதன் கொடிய விஷம் உலகம் முழுவதும் பரவுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் ஆரம்பமாகச் சொல்லுவது 11-9-2019 ஆம் நாள் ராகு திருவாதிரையில் நுழைகிறான். அன்றைய தினம் ராகுவிற்கு ஆறிலும் எட்டிலும் கிரஹங்கள் இருப்பதால் கொடிய நேரமாகப் போய்விடுகிறது.  ராகுவுக்கு ஆறில் அன்று தேவகுரு விருச்சிகத்திலும் எட்டில் ராகுவைக் காட்டிக் கொடுத்த சந்திரன் மகரத்திலும் இருந்திருக்கின்றனர்.

ஆறும், எட்டும் மறைவு ஸ்தானமாக இருந்தபோதிலும் எதிரிகளைப் பார்த்தவுடன் ராகுவின் அசுர குணம் ஆர்ப்பரித்து நிற்கிறது. ஆறிலும், எட்டிலும் ராகுவின் எதிரிகள் குருவும் சந்திரனும். ஏற்கெனவே ராகு முன்னர் வாசுகி விஷம் கக்கிய அதே திருவாதிரை நக்ஷத்திரத்தில் இருப்பதால் அதிக பலத்துடன் விளங்குகிறான்.  குருவும், சந்திரனும் முறையே ஆறிலும், எட்டிலும் இருப்பதைக் கண்டதும் அவன் பலம்  அதிகம் ஆகிறது. இங்கே குரு நம் ஜீவசக்தியைப் பராமரிக்கும் கிரஹம் ஆவார். சந்திரனோ எனில் நம் தேகம், புத்தியைப் பராமரிப்பான். இவர்களைத் தான் நாம் மறைமுகமாக தேவர்கள் என்கிறோம். இத்தகைய தேவர்கள் ஆகிய நம் ஜீவசக்தியை அழிக்க ஆயத்தம் ஆகிறான்ராகு. நேரத்திற்குக் காத்திருக்கிறான்.

அதே சமயம் 25-12-2019 ஆம் நாள் அமாவாசை அன்று செவ்வாய் (ரோக காரகன்) ராகுவிற்கு ஆறில் விருச்சிகத்தில் அடி எடுத்துவைக்கிறார்/ எட்டில் நீர் கிரஹமான சுக்கிரன் மகரத்தில் இருக்க ராகுவோ காற்று ராசியான மிதுனத்தில் இருக்கிறான். நவகிரஹங்களின் தலைவன் ஆன சூரியனோ அன்றைய தினம் கேதுவின் பிடியில் முழு கிரஹணத்தில் இருக்கிறான். (இது இந்தியாவுக்கு மட்டும்) இப்போது சூரியன் மட்டுமில்லாமல் மற்ற கிரஹங்களான குரு, சனி, சந்திரன், புதன் அனைத்தும் தனுர் ராசியில் கேதுவின் பிடியிலே/ அன்றைய தினம் மூல நக்ஷத்திரம், தனுர் ராசியில் ஆறு கிரஹங்கள்.

அனைத்தும் ராஜ கிரஹங்கள். கேதுவின் பிடியில். இப்போது ராகு தன் வேலையை ஆரம்பிக்கிறான். அவனை எதிர்க்க யாரும் இல்லை. சுற்றிச் சுற்றி அடிக்கிறான். அவன் ஆயுதம் காற்றும், நீரும். தாக்கும் இடம் தொண்டை.(புதன்) ராகு அமர்ந்திருக்கும் இடம் மிதுனம் என்னும் புதனின் வீடு. அடுத்து அவன் தாக்குவது நுரையீரல், சனியின் இடம். அடுத்து ரத்தத்தின் எதிர்ப்பு அணுக்கள், செவ்வாய். அடுத்து சிறு நீரகம்,சந்திரனுக்கு உரியது. தொடர்ந்து ஜீவசக்தி இருக்கும் இடம் ஆகிய மூளை,குருவின் இடம். இது ராகு நம் மீது தொடுத்திருக்கும் போர். இதற்கு நாம் இன்றைய நிலவரப்படி அறுபதாயிரத்துக்கும் மேல் இழந்து விட்டோம். நம்மால் ராகுவை எதிர்த்துப் போரிட இயலாது. நம் மூளையின் ஜீவசக்தியைக் கொஞ்சமாவது பிரயோகித்துத் தடுக்க முயன்று கொண்டிருக்கிறோம். விளைவுகள் அதிகம் ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் இப்போது அனைவருக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒதுங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம்.இதை நாம் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ராகுவிற்கு நல்லவர், கெட்டவர் தெரியாது. சென்ற மாதம் 30ஆம் தேதி வரை ராகுவின் உக்கிரம் அதிகரித்திருக்கிறது.  மெல்ல மெல்ல வரும் இந்த அரவத்தின் விளைவுகளைத் தவிர்க்க நாம் தனித்திருப்பதே சிறப்பு. இன்னும் 55 நாட்களுக்கு இந்நிலை நீடிக்கும். குரு வக்கிரத்தில் செல்லும்போது 16-5-20 ஆம் தேதி அன்று வைகாசி மாதம் 3 ஆம் தேதி குரு வக்கிரம் ஆரம்பம். நவகிரஹங்களின் தலைவன் ஆன சூரியன் குருவால் வலிமையோடு பார்க்கப்படுவார்.  ஒளி கிரஹமான சூரியன் வலுப்பட்டால் குருவின் அருளால் இருள் கிரஹம் ஆன ராகு கட்டுப்பட ஆரம்பிப்பான். தொடர்ந்து 20-5-20 அன்று ராகு திருவாதிரை நக்ஷத்திரத்தை விட்டு விட்டு மிருகசீர்ஷத்திற்கு மாறும்பஓது ராகுவின் வீரியம் குறையத் துவங்கும். பொதுவாக இந்திய வானிலைகளின் படியும் இங்குள்ள கிரஹ நிலைகளின் படியும் இந்தியாவுக்கு அதிக பாதிப்புக் கிடையாது என்றாலும் நாம் கவனமாகவே இருக்க வேண்டும்.

அசுரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் தான் அசுர உணவான அசைவத்தை முற்றிலும் தவிர்க்கச் சொல்கின்றனர். எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்து அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி ஒருவருக்கும் தொந்திரவு இல்லாது தனித்திருந்து வாழ்க்கையை இன்னும் சில நாட்களுக்கு வாழ்வோம். இயற்கைக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லாதவர்கள். ஆயுள்காரகனான சனியை பலப்படுத்த தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்வோம். முடியலைனால் சுவாசத்தைக் கவனித்து வந்தாலே போதும். சந்திரன் பலம் பெறவேண்டி திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட திருநீலகண்டப் பதிகத்தைப் படிப்போம். சூரியன் பலம் பெற அருணாசல அக்ஷரமணமாலை படிக்கலாம்.

சுதர்சனர் (சக்கரத்தாழ்வார் ...

ஆறாம் இடமும், எட்டாம் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டால் வலிமையான தோஷம் ஏற்படும். இதைத் தகர்க்க திருவாதிரை நக்ஷத்திர வேதையான திருவோணத்தில் அவதரித்த, திருவேங்கடவன் வலக்கரத்து சுதர்சனரைச் சரண் அடையுங்கள்.  இந்த வீரியம் மிகுந்த விஷத்தை முறியடிக்க சுதர்சன அஷ்டகத்தைப் படிப்போம்.பலம்பெறுவோம். சுதர்சனருக்கே இப்போது இவற்றை எல்லாம் தீர்க்கும் வல்லமை உள்ளது. சக்கரத்தாழ்வானைச் சரண் அடைந்து இல்லல் தீர்ப்போம். நாட்டையும் வீட்டையும் காப்பாற்ற வல்லது சக்கரமே!

சுதர்சன அஷ்டகம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

1.ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண

2. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

3. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

5.ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


6.புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


7.மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

8.ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

9.தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

10.த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
 

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம

ஸுத்ரஸநாஷ்டகம்  ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.


நன்றி: நீலாஜோதிடம் வலைப்பக்கம்.

Sunday, April 05, 2020

மஹாலக்ஷ்மியை வழிபடுவோம்! உடல் நலம் பெறுவோம்!

இந்தக் கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது நாடெங்கும் ஒரே தடுமாற்றம், கலவரம். ஊரடங்கு. ஏப்ரல் பதினான்கு தேதி வரை அமலில் இருக்கும் நாடு அடங்குத் திட்டம் அதன் பிறகும் தொடருமா என்பதே எல்லோர் கேள்வியும். இதற்கு நடுவில் பிரதமர் இன்றிரவு அனைவரையும் விளக்கு ஏற்றச் சொல்லி இருக்கிறார். வழக்கம் போல் ஆதரவுகளும், எதிர்ப்புகளும், கேள்விக்கணைகளுமாகத் துளைக்கின்றது.  இது பௌதிகம் சம்பந்தப்பட்ட விஷயம் எனப் போன பதிவில் பார்த்தோம். இது கோள்கள் சம்பந்தப்பட்டது என்றும் சிலர் சொல்கின்றனர். இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் என்று சொல்லி இருப்பதால் நவகிரஹ சாந்திக்காக எனச் சொல்லுவோரும் உண்டு.  இதற்குச் சிலர் தங்கள் யூகங்களையும் சொல்லி இருக்கின்றனர். அதில் ஒருத்தர் சொல்வது:  இவர் கேபி வழிமுறை என்னும் கிருஷ்ணமூர்த்தி பத்ததியைக் கடைப்பிடிக்கிறார் போலும்.

நவகிரக கோவில்களும் அதன் ...

5-4-20 இரவு 21 மணி ஒன்பது நிமிடங்கள் 9-09 புது தில்லி latitude and longitude படி லக்னம் துலா, சிலர் விருச்சிகம் என்பது தவறு. நக்ஷத்திரமும் பூரம், மகம் இல்லை. சந்திரன் மாறும் காலம். தசை சுக்கிரன் புக்தி செவ்வாய்.

இதை வைத்து அவர் கணிப்பு லக்னாதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் (நெகடிவ்) இருப்பதோடு அல்லாமல் சூரியனின் நக்ஷத்திரமான கார்த்திகையில் உள்ளது. துலா லக்னத்துக்கு சூரியன் பாதகமான கோள் 11 ஆம் வீட்டில் நகரும் நிலையில் உள்ளதால் சுக்கிரனுக்கு அதன் சக்தி போய் விடும். அடுத்ததாகச் சந்திரனும் 11 ஆம் வீட்டில் மீண்டும் இருப்பதாலும் அது சூரியனின் பாதகமான இடத்தில் சுக்கிரனின் நக்ஷத்திரத்தில் இருப்பதாலும் அதுவும் எதிர்மறையான சக்தியுடனே இருக்கிறது.

சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தின் சனியும் , வியாழனும் இருப்பதால் இருவரும் தங்கள் சக்தியை இழக்கின்றனர். செவ்வாய் சந்திரனின் நக்ஷத்திரமான திருவோணத்தில் உள்ளது. செவ்வாய், சனி, வியாழன் இவை மூன்றும் 6ஆவது மற்றும் 8ஆவது இடத்தில் இருப்பதால் இதை சஷ்டாஷ்டகம் என்போம். ராகுவும் கேதுவும் முறையே அவர்கள் சொந்த நாத்திரமான ஆருத்ராவிலும், மூலத்திலும் உள்ளனர். இவர் கடைப்பிடிக்கும் கேபி வழிமுறைப்படி ஆறாம் இடம் நோய்க்கும் எட்டாம் இடம் அதை அதிகப்படுத்தும் என்றும் சொல்கின்றனர்.  கேது 6க்கும் ராகு 8க்கும் உள்ளனர்.

இன்றிரவு ஒன்பது மணிக்கு இவற்றின் தாக்கம் மிக மிக அதிகமாக கோரத்தாண்டவம் ஆடும் நேரம். கிட்டத்தட்ட இதுவும் ஓர் கிரஹணம் போலத் தான்  அந்த நேரத்தின் லக்னாதிபதியான சுக்கிரனை, விடிவெள்ளி என்போம் அல்லவா? அந்த வெள்ளி கிரஹத்தை ராகுவில் இருந்து 12 ஆம் இடத்தில் இருப்பவர் அந்த நேரம் வெள்ளியை மறைக்காமல்தன் சொந்த ராசிக்கு ரிஷப ராசிக்குச் செல்ல வேண்டும். சந்திரனில் இருந்தநது 10 ஆம் இடம் யோகம் மாலவிய யோகம் எனப்பட்ய்ம். சுக்கிரனின் அதி தேவதையான மஹாலக்ஷ்மியை அந்த நேரம் வணங்கிப் போற்ற வேண்டும். தீபங்களின் மூலமாக மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திப்போம். ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்போம்.

தேவேந்திரன் போற்றிய மஹாலக்ஷ்மி ...

குறிப்பு: எனக்கு ஜோசியம் அறவே தெரியாது. நண்பர்கள் மூலம் வந்த செய்தியைப் பகிர்ந்திருக்கிறேன். இதில் தவறு ஏதும் இருந்தால் ஜோதிடம் அறிந்த பானுமதி, அதிரடி போன்றவர்கள் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

படங்களுக்கு நன்றி கூகிளார்.