எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 31, 2014

திருப்பாவைக் கோலங்கள்


பாடல் 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்

கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.


       


கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும்,  அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும்  வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.  துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.

 கண்ணனின்  இருப்பிடமோ வைகுந்தம்.  அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.  வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன்.  நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள்.  குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான்.  ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்

பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.


பொங்கல் பானை கோலம் போடலாம்.  ஏனெனில் இங்கே தண்ணீரும், சோறும் கொடுத்து அறம் செய்யும் நந்தகோபன் என அழைப்பதிலிருந்து அன்னதானத்தின் முக்கியத்துவம் புரியவருகிறது.  அந்தக் காலத்திலேயே நந்தகோபன் அனைவரும் திருப்தி என்னும் அளவுக்கு உணவளித்து தர்மம் செய்திருக்கிறான்.  அவன் மனைவியான யசோதையைக் குல விளக்கு என அழைக்கிறாள்.  குத்துவிளக்குக் கோலமும் போடலாம்.

   

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன அவதாரத்தைப் பாடிய ஆண்டாள் மீண்டும் இங்கு வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் மாறி உலகளந்த பெருமானைக் குறித்துப் பாடி இருக்கிறாள்.  மஹாபலி தான் நல்லாட்சி புரிவதால் கர்வம் கொண்டு மூவுலகையும் அடக்கி ஆள முற்படவே அவனை கர்வபங்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.பக்தி இருந்தால் மட்டும் போதாது. கர்வம் கொள்ளக் கூடாது.  இங்கே கண்ணனின் மூத்தவன் ஆன  பலதேவனையும் அழைத்துக் கண்ணனோடு நீயும் எழுந்திரு என்கிறாள்.Tuesday, December 30, 2014

திருப்பாவைக் கோலங்கள்!

பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

தாமரைப் பூக்கோலம் போடலாம். சங்கு, சக்கரம் இரண்டும் வரும்படியான கோலமும் போடலாம்.தோழிப் பெண்ணை எழுப்பும் ஆண்டாள் அவள் முன்னர் சொன்ன வாக்கை நினைவூட்டுகிறாள்.  தானே சீக்கிரம் எழுந்து எல்லோரையும் அழைத்துச் செல்ல வருவதாய்க் கூறியவள் இப்போது அது குறித்த வெட்கமில்லாமல் தூங்குகிறாளே எனக் கூறும் ஆண்டாள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள் அனைவரையும் இங்கே மறைமுகமாய்க் கடிகிறாள்.

இறைவன் எண்ணத்தில் அவன் நாமத்தையே எந்நேரமும் பேசுவேன், கூறுவேன் என்றெல்லாம் சொல்லி விட்டு இப்போது அந்த அறிகுறியே இல்லாமல் உலக வாழ்க்கையின் மாயா இன்பங்களில் மூழ்கி இருப்பவர்களை நினைத்து ஆண்டாள் வருந்துகிறாள்.

பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

         

தோழியைக் கடுமையாக அழைத்தும் அவள் வரவில்லை.  ஆகையால் கிளியைப் போல் மழலை பேசுபவளே என அழைக்கிறாள்.  ஆனால் இப்போது தான் கண் விழித்த அந்தத் தோழி இதையே கடுமையாகப் பேசுவதாய்க் குறை கூறிவிட்டு, என்னை மட்டும் தான் எழுப்புகிறீர்கள்.  எல்லோரும் வந்துவிட்டனரா எனக் கேட்க வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளச் சொல்கின்றனர் தோழியர். இங்கே வல்லானைக் கொன்றானை என்பது குவலயாபீடம் என்னும் யானையைக் கண்ணன் கொன்றதைக் குறிக்கும்.  மாற்றாரை மாற்றழிக்க என்பது தன் எதிரிகளை எல்லாம் கண்ணன் அழித்ததைக் குறிக்கும்.

தீமையை அழித்து உலகுக்கு நன்மையைத் தந்தான் கண்ணன் என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள்.  அதோடு இரு தரப்பாரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த இந்தப் பாடலுடன் தோழியை அழைப்பது முடிந்தும் விடுகிறது.

Monday, December 29, 2014

திருப்பாவைக் கோலங்கள்

பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


உதயன் கோலங்கள் க்கான பட முடிவு

வீட்டு மாடம், அல்லது வீடு மாதிரிக் கோலமோ போடலாம். இல்லத்தைக் குறித்துச் சொல்லி இருப்பதால் மாடக் கோலமும் போடலாம்.
உதயன் கோலங்கள் க்கான பட முடிவு

செழிப்பாக வளர்ந்ததால்  பால் தானாகச் சொரிந்து இல்லத்தையே சேறாக்குகின்றனவாம் எருமைகள். ஆகையால் வீட்டுக்குள் நுழைய முடியாமல், வீட்டின் வாசல் நிலைக்கட்டையைப் பிடித்துக் கொண்டு பனியில் தொங்கும் பெண்கள் விடாமல் தோழியை எழுப்புகின்றனர்.  இங்கேயும் ராவண வதம் புரிந்த ராமனைக் குறித்தே மனதுக்கு இனியான் எனச் சொல்கிறாள் ஆண்டாள்.  அத்தகைய இனியானைப் பாடக்கூட வாய் திறக்கமுடியாமல் தூங்குகிறாயா?  என்ன ஒரு பெருந்தூக்கம், கும்பகர்ணன் தோற்கும்படியாக என வசை பாடுகிறாள் ஆண்டாள்.

பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

புள் எனப் பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளைக் கோலமாக வரையலாம். ஆனால் இங்கே சொல்லி இருக்கும் பறவை அரக்கனாக இருந்து பறவை வடிவில் வந்த பகாசுரனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மாதமே கண்ணனையும் அவன் லீலைகளையும் குறித்து நினைந்து ஆனந்திக்கும் மாதம்.  அத்தகைய தண்மையான மாதத்தில் குள்ளக் குளிரக் குடைந்து தண்ணென்ற நீரில் நீராடாமல் இருக்கும் தோழியைத் தூக்கமாகிய இருட்டிலிருந்து விழிப்பு என்னும் வெளிச்சத்திற்கு வரச் சொல்கிறாள் ஆண்டாள். இங்கே தூக்கம் அறியாமை என்னும் இருளையும், ஞானம் என்னும் வெளிச்சத்தை விடிவெள்ளியாகவும் மறைபொருளாகச் சுட்டப்படுகிறது.

ராவணனை வதம் செய்த சாக்ஷாத் அந்த மஹாவிஷ்ணு என்னும் நாராயணனை, பறவை வடிவெடுத்து வந்த அரக்கனையும் பிளந்து தள்ளிய கண்ணன் அவதாரத்தில் வந்த நாராயணனின் நாமத்தைச் சொல்லாமல் தூக்கம் என்னும் பெரும் இருட்டில் ஆழ்ந்திருக்கும் தோழியை அதோ பார், வெள்ளி முளைத்தது, வியாழம் உறங்கப் போயிற்று.  நீயும் எழுந்திரு என்கிறாள் ஆண்டாள்.