எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 30, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 31


இதன் பின்னரும் எதற்கும் கலங்காத ராவணன், சூரியன், சந்திரன் ஆகியோரையும் வெற்றி கொண்டான், பின்னர், இந்திரனை வெற்றி கொள்ள இந்திர லோகத்தை அடைந்தான். இந்திரன் கவலையுடனேயே மகாவிஷ்ணுவிடம் இவனை எப்படி வெல்வது எனக் கலந்து ஆலோசிக்கின்றான். மகாவிஷ்ணுவோ, நேரம் வரும்போது இவனைத் தானே முடிப்பதாய்க் கூறி விடுகின்றார். தேவர்கள் அனைவருமே ராவணனைப் பணிந்து ஒத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டனர். ஆனால் அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். இதில் ராவணனின் பாட்டன் சுமாலி இறந்தான். இதைக்கண்டு கொதித்த மேகநாதன், யுத்த களத்தின் மத்தியில் நின்று கொண்டு தேவர்களைத் தாக்கினான். அவன் தாக்குதலுக்கு அஞ்சிய தேவர்கள் சிதறி ஓட, இந்திரன் மகன் ஜயந்தனோ கடலுக்கு அடியில் கொண்டு செல்லப் பட்டு மறைத்து வைக்கப் பட்டான். மேகநாதனைப் பின்னே தள்ளி, ராவணன், தானே இந்திரனை எதிர்க்க ஆரம்பிக்கின்றான், கும்பகர்ணன் துணையோடு.இந்திரனின் தாக்குதல் தாங்க முடியாமல் சிதறி ஓடிய ராட்சதர்களைக் கண்டு ராவணன் கோபத்தோடு இந்திரனைத் தாக்குகின்றான். இந்திரன், குபேரன், வருணன், எமன் ஆகியோரையும் அவர்களைச் சூழ்ந்து காக்கும் தேவர்களையும் கொல்ல எண்ணிய ராவணன் தன் தேரை தேவர்களின் படைக்கு உள்ளே செலுத்துகின்றான். இதன் காரணமாய் அவன் தனிமைப் படுத்தப் பட்டுத் தன் வீரர்களிடம் இருந்து பிரிந்தான். இதைக் கண்ட மேகநாதன் தன் மாயாசக்தியால் மறைந்துகொண்டு, கண்ணுக்குப் புலன் ஆகாத தனமையை அடைந்து, இந்திரனை நோக்கிப் பாய்ந்து சென்று அவனைச் சிறை எடுத்துவிட்டான்.


பின்னர் தன் தந்தையைப் பார்த்து, தான் இந்திரனைச் சிறை எடுத்து விட்டதாயும், ராட்சதர்கள் ஆகிய தங்கள் குலம் வென்று விட்டதாயும், இனி மூவுலகுக்கும் தன் தந்தையாகிய ராவணனே அரசன் எனவும் கூறித் தந்தையைத் திரும்பச் சொல்கின்றான். உடனேயே சிறை எடுத்த இந்திரனோடு அனைவரும் இலங்கை திரும்புகின்றனர். தேவர்கள் அனைவரும் பிரம்மா தலைமையில் இலங்கை சென்று ராவணனிடம் சமாதானமாய்ப் பேசுகின்றார்கள். மேகநாதனின் வீரத்தை மெச்சுகின்றார் பிரம்மா. ராவணனையும் மிஞ்சிய வீரன் எனப் போற்றுகின்றார் அவனை. இந்திரனை வென்றதால் அவன் இன்று முதல் "இந்திரஜித்" என அழைக்கப் படுவான் எனவும் கூறுகின்றார். அவனை யாராலும் வெல்ல முடியாது எனவும் சொல்லுகின்றார். உனக்கு இனிமேல் அச்சம் எதுவும் தேவை இல்லை. ஆகையால் இந்திரனை விட்டு விடு. என்று கேட்க, இந்திரஜித் பேசுகின்றான், தந்தைக்குப் பதிலாய். இந்திரனை நாங்கள் விடுவிப்பதாய் இருந்தால் நான் இறவாத வரம் வேண்டும் எனக் கேட்கின்றான். ஆனால் பிரம்மா மறுக்கின்றார். இந்த வரம் தவிர வேறு ஏதாவது கேள் எனச் சொல்கின்றார். அப்போது மேகநாதன் ஆகிய இந்திரஜித் கேட்கின்றான்:

"ஒவ்வொரு முறையும் எதிரிகளுடன் போர் நடக்கும்போது நான் செய்யும் யாகத்தால் எனக்கு ஒரு ரதம் அந்த வேள்வித் தீயில் இருந்து வரவேண்டும். அந்த ரதத்தில் அமர்ந்தே நான் போர் செய்வேன். அப்போது நான் எவராலும் வெல்லப் படாதவனாய் இருக்கவேண்டும். யாகம் செய்யாமல் நான் போர் செய்தால் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும். மற்றவர்கள் போல் நான் யாகங்கள் செய்து இந்த வரம் கேட்கவில்லை. என் வீரத்தின் மேல் நம்பிக்கை வைத்தே கேட்கின்றேன்." என்று கேட்க, பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, இந்திரஜித் கோரிய வரத்தை அளிக்கின்றார். பின்னர் விடுவிக்கப் பட்ட இந்திரனை நோக்கிப் பிரம்மா, "அகல்யையை நீ விரும்பியதால், உனக்கு கெளதமர் அளித்த சாபத்தின் விளைவை நீ இதுவரை அனுபவித்தாய்!" என்று கூறிவிட்டுப் பாவத்திற்குப் பிராயச் சித்தம் செய்யச் சொல்ல, அவனும் மகாவிஷ்ணுவைத் துதித்து யாகங்கள் செய்கின்றான்.

பின்னர் கார்த்தவீர்யாஜுனனை எதிர்க்கப் போக அவன் ராவணனைச் சிறைப் பிடிக்கின்றான். பின்னர் புலஸ்திய மகரிஷியின் வேண்டுகோளின்படி கார்த்தவீர்யாஜுனன் ராவணனின் நட்பை ஏற்று அவனை விடுவிக்கின்றான். பின்னர் வாலியை எதிர்க்க, அவனும் ராவணனைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாய்ப் பறக்க ராவணனும், வாலியின் நட்பைக் கோரிப் பெற்று அவனுடன் நண்பனாய் இருந்தான். இத்தகைய ராவணனையும், இந்திரஜித்தையும் தான் நீ வென்றாய், ராமா!" என்று அகத்தியர் கூறி முடிக்கின்றார். இனி நாம் திரும்ப ஆரண்ய காண்டத்திற்குச் சென்று ராவணன் சூர்ப்பநகையின் தூண்டுதலால் ரதத்தில் ஏறி மாரீசனைக் காணப் போனதைப் பற்றிக் காண்போம். சூர்ப்பநகையால் தூண்டப் பட்ட ராவணன் தன் ரதத்தில் ஏறி, மாரீசன் தவம் செய்து கொண்டிருந்த இடம் நோக்கிச் சென்று அவனைப் பார்த்துத் தன் துன்பத்தை எடுத்துச் சொல்கின்றான். கர, தூஷணர்கள் ராமனால் கொல்லப் பட்டதையும், சூர்ப்பநகை அங்கபங்கம் செய்யப் பட்டு வந்ததையும் கூறுகின்றான். ஆகவே ராமனின் மனைவியைக் கடத்தப் போவதாயும் கூறி விட்டுப் பின்னர், மாரீசன் உதவியை நாடுகின்றான். ஆனால் மாரீசனோ மறுக்கின்றான் திட்டவட்டமாய். "ராவணா, ராமன் பலம் உனக்குத் தெரியாது. அவன் யாருக்கும் தீமையும் செய்யவில்லை, அகம்பாவியோ, கர்வியோ அல்ல. உன்னுடைய இந்தத் தீய எண்ணம் ராட்சத குலத்தையே அழித்து விடும். ஒரு மன்னனுக்கு இந்த மாதிரிக் கெட்ட எண்ணம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் அமைச்சர்கள் அவனைத் திருத்த வேண்டும். ராமனை எதிர்த்துக் கொண்டு, மரணத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதே, இந்த ராமன் சிறுவனாய் இருந்தபோதே, விசுவாமித்திரரால் அழைத்து வரப் பட்டான். அவன் அப்போது விட்ட ஒரு அம்பு என்னை இத்தனை தூரம் கடலில் தள்ளிக் கொண்டு சேர்த்து விட்டது. அவன் பலம் அறியாமல் பேசாதே! இந்த துர் எண்ணம் வேண்டாம்! இலங்கைக்குத் திரும்பு!" என்று சொல்கின்றான்.

திரும்பும் திசை எல்லாம் ராமன் தோன்றுவதாயும் கூறி மாரீசன் நடுங்குகின்றான். ஆனால் ராவணன் கேட்காமல் தான் சீதையை அபகரிக்கப் போவதாயும், அதற்கு வேண்டிய உதவி செய்வதே மாரீசன் வேலை என்றும் வேறு ஒன்றும் பேசத் தேவை இல்லை என்றும் கூறிவிட்டு, தான் சீதையை அபகரிக்க வசதியாக ராமனையும், லட்சுமணனையும் அப்புறப் படுத்த மாரீசன் ஒரு பொன்மானாக மாறி சீதையின் முன் தோன்றுமாறும் சீதை அதைப் பார்த்து ஆசைப் பட்டு ராமனை அந்த மானைப் பிடித்து வர அனுப்புவாள் என்றும், அப்போது மாரீசன் ராமன் குரலில், "ஓ, சீதா, ஓ, லட்சுமணா!" எனக் கதறினால் அதைக் கேட்டு பயந்துகொண்டு சீதை உடனே லட்சுமணனையும் அனுப்புவாள் எனவும், அப்போது தான் போய் அவளை அபகரித்து வந்துவிடுவதாயும் இதற்குத் தன் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவதாயும் ராவணன் கூறுகின்றான். மாரீசனோ ராவணனைப் பார்த்துத் தான் ராமன் கையால் இறப்பது உறுதி எனவும், அதற்குத் தான் அஞ்ச வில்லை என்றும், என்றாலும் ராவணன் கதியை நினைத்தே கலங்குவதாயும் சொல்லிவிட்டு ராவணன் பேச்சுக்கு வேறு வழி இல்லாமல் இணங்குகின்றான்.

Tuesday, April 29, 2008

ராவணன் கை நரம்புகளால் வீணை மீட்டினானா?

தேவாரம்
ஐந்தாம் திருமுறையில் உள்ள கீழ்க்கண்ட பாடல் ராவணன் தன் கை நரம்புகளை மீட்டிப் பாடியதற்கு ஆதாரம் என நண்பர் திரு சிவசிவா அவர்கள் கூறுகின்றார். எனினும் வால்மீகியில் இப்படி ஒரு கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை. மீண்டும் பார்க்கின்றேன், நன்றி.

வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.

வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணி வார்களின் வினைகள் கெடும் .

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30தசக்ரீவன் ராவணன் ஆனதை நேற்றுப் பார்த்தோம், அவன் கை நரம்புகளால் ஆன வீணையை இசைத்தானா என்பது பற்றி திரு திவா கேட்டிருக்கின்றார். அது பற்றிய தகவல் எதுவும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. கம்பர் எழுதி இருக்காரானு பார்க்கணும்! :D இனி மேற்கொண்டு ராவணனின் திக்விஜயம் ஆரம்பம் ஆகின்றது. ராவணனின் கர்வமும், அவன் மேற்கொண்ட திக்விஜயமும், அதில் கிடைத்த சாபங்களும், கதையில் சிலரின் பிறப்புக்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் அமைந்தது என்பது புரியவரும். பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று திக்விஜயம் செய்த ராவணன், மனிதர்களையும், குறிப்பாக க்ஷத்திரியர்களையும் துன்புறுத்தி வந்தான். பூமியின் பல பாகங்களிலும் சஞ்சாரம் செய்து வந்த அவன் ஒரு முறை இமயமலைச் சாரலில் உலாவந்த போது, ஒரு பேரழகுப் பெண்ணொருத்தி, கடுந்தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான். இத்தனை செளந்தர்யவதியான பெண், ஏன் தவக்கோலத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என யோசித்த அவன், அதை அந்தப் பெண்ணிடமே கேட்டான். நடக்கப்போவதை அறியாத அந்தப் பெண்ணும், "பெரும் தவங்கள் பல செய்து பிரம்மரிஷியான என் தகப்பனார் குசத்வஜனுக்கு நான் மகள். வேதங்களே உருவெடுத்த பெண்ணாக நான் பிறந்திருக்கின்றேன் என என் தந்தை எனக்கு "வேதவதி" என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த மகா விஷ்ணுவே தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் எனவும் விரும்பினார். ஆகவே என் அழகைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வந்த ரிஷிகள், கந்தவர்கள் ஆகியோருக்கு என் தந்தை என்னைத் திருமணம் செய்து கொடுக்கவில்லை. அதிலே ஒருவன் என் தந்தையைக் கொன்றுவிட, என் தந்தையோடு என் தாயும் உடன்கட்டை ஏறிவிட்டாள். ஆகவே நான் தனியள் ஆகிவிட்டேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இனி என் கடமை என எண்ணி, அந்த நாராயணனையே மனதில் நிறுத்தித் தவம் செய்து வருகின்றேன். என் தவத்தின் பலனால், இனி நடக்கப் போகும் மூவுலக நிகழ்ச்சிகளும் எனக்குத் தெரியவருகின்றது. விஸ்ரவஸின் மகனே! சென்றுவா! பேசியது போதும்!" எனச் சொல்கின்றாள்.

ஆனால் அதைக் கேட்காத ராவணன், "இந்த இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் நீ தவம் மேற்கொண்டது எப்படி? வா, நாம் திருமணம் செய்து கொள்வோம், இலங்கையின் அரசன் ஆன நான் உன்னைச் சகல செளகரியங்களோடும் வைத்திருப்பேன், யார், அந்த விஷ்ணு? யார் அந்த நாராயணன்? எங்கே இருந்து வந்து உன்னைக் காப்பாற்றுவான்?" என ஏளனமாய்க் கேட்கின்றான். வேதவதி, "சாட்சாத் சர்வேஸ்வரன் ஆன, மூவுலகையும் ஆளுகின்றவனைப் பற்றி நீ தான் இப்படி முட்டாள் தனமாய்ப் பேசுகின்றாய்" எனக் கோபமாய்ச் செல்ல, வேதவதியின் கூந்தலைப் பிடித்துத் தன் பக்கம் அவளை இழுக்கின்றான் ராவணன். தன் கையையே ஒரு கத்தி போல் உபயோகித்து, ராவணன் தொட்ட தன் கூந்தலை அறுத்து எடுக்கின்றாள் வேதவதி. தொடர்ந்து, " நீ என்னையும், என் புனிதத் தன்மையையும் அவமதித்த பின்னர் நான் உயிர் வாழ விரும்பவில்லை. தீ மூட்டி உன் கண்ணெதிரேயே தீயில் குதித்து இறக்கப் போகின்றேன். ஆனால் நான் மீண்டும் பிறப்பேன். கர்ப்பத்தில் இருந்து உதிக்காமலேயே பிறப்பேன், உன் அழிவுக்கு நான் தான் காரணமும் ஆவேன். நான் செய்த தவங்களின் மீதும், நற்செயல்களின் மீதும் ஆணை!" என்று சபதம் செய்து விட்டுத் தீயில் புகுந்தாள். விண்ணில் இருந்து பூமாரி பொழிந்தது.

ராவணன் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே இருந்த ஒரு தாமரை மலரில் ஒரு அழகிய பெண் தோன்றினாள். ராவணன் அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்து பலாத்காரமாய் இழுத்து இலங்கைக்குக் கொண்டு செல்கின்றான். அங்கே ஜோதிட வல்லுனர்களும், சாமுத்ரிகா லட்சணம் தெரிந்தவர்களும், "இந்தப் பெண்ணின் லட்சணங்களைப் பார்த்தால் இவள் உன் அழிவுக்குக் காரணம் ஆவாள் எனத் தெரியவருகின்றது. ஆகவே இவளை விட்டு விடு!" எனச் சொல்ல, அந்தப் பெண்ணைக் கடலில் தூக்கி எறிந்தான் ராவணன். அந்தச் சமயம் மிதிலையில் ஜனகர் யாக சாலையை உழுது செப்பனிட்டுக் கொண்டிருந்தார். கடலில் தூக்கி எறியப் பட்ட பெண், நிலத்தில் இருந்து தோன்றி ஜனக மன்னனை அடைந்தாள். அந்தப் பெண் தான் நீ திருமணம் செய்து கொண்ட சீதை!" என்று அகத்தியர் ராமரிடம் கூறுகின்றார். அகத்தியர் மேலும் சொல்லுவார்: இதன் பின்னரும் ராவணனின் திக்விஜயம் நிற்கவில்லை. தொடந்து திக்விஜயம் செய்து கொண்டிருந்தான். பல மன்னர்கள் அவன் வீரத்தையும், பலத்தையும் பற்றிக் கேள்விப் பட்டுத் தாங்களாகவே சரண் அடைந்தனர். அயோத்தியின் மன்னன் ஆகிய அனரண்யன் என்பவன் பணிய மறுத்துச் சண்டை போடுகின்றான். ராவணனால் நாசம் செய்யப் பட்ட மன்னன் படைகள் தோல்வியைத் தழுவி, மன்னனும், மரணத்தின் வாயிலை எட்டுகின்றான். அப்போது அனரண்யன், " ஒழுங்காகவும், நேர்மையாகவும், தர்மத்தில் இருந்து பிறழாமலும், குடிமக்களைப் பாதுகாத்தும் ஆட்சி புரிந்து வந்த என்னை நீ தோற்கடித்ததாய் எண்ணாதே! நான் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது உண்மையானால் என் குலத்தில் பிறக்கப் போகும் ஒருவனாலேயே உனக்கு அழிவு ஏற்படும். இது உறுதி!" எனச் சொல்லி விட்டு இறக்கின்றான்.

பின்னர் மனிதர்களை மட்டுமே யுத்தத்தில் தோற்கடிப்பதால் என்ன பயன் என யோசித்த ராவணன், சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, அதைத் தூண்டும் விதமாய் நாரதர் அங்கே வந்து, எமனோடு போரிட்டு வென்றாயானால் நீ வீரம் செறிந்தவன் என்று சொல்ல ராவணனும் தயார் ஆகின்றான் எமனோடு போரிட. எமனும் போருக்கு வந்தான். உலகையே அழிக்கக் கூடிய காலதண்டத்தை ஏந்தி வந்த எமன் அதைப் பிரயோகித்து ராவணனை அழிக்க முற்பட, பிரம்மா அவனிடம் காலதண்டத்தைப் பிரயோகித்து ராவணனை எமன் அழித்தால், அவனுக்குத் தான் அளித்த வரம் பொய்யாகிவிடும், மாறாகக் காலதண்டத்தினாலும் ராவணன் அழியவில்லை எனில் கால தண்டம் வல்லமை அற்றது என்றாகிவிடும், ஆகவே பொறுமை காப்பாய், ராவணன் அழிவு இப்போதல்ல," என்று கூற எமனும் சமாதானம் அடைந்து சென்று விடுகின்றான். ராவணனோ எமனையும் தான் வென்றதாய் நினைத்து மகிழ்ச்சியோடு கூத்தாடுகின்றான். பின்னர், நாகர்கள், மற்ற தேவர்கள், வருணன், என அனைவரையும் போருக்கு அழைத்துத் தோற்கடிக்கின்றான். எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் சண்டைக்கு இழுத்து வென்ற ராவணன் தான் வென்றவர்களுடைய பெண்களைத் தன் புஷ்பக விமானத்தில் ஏற்றி, அவர்கள் கதறக் கதற இலங்கைக்குக் கொண்டு சேர்த்தான். அந்தப் பெண்கள் அனைவரும் ராவனனின் அழிவு ஒரு பெண்ணாலேயே நிகழ வேண்டும் எனச் சபித்தனர். அப்போது அங்கே கதறிக் கொண்டு வந்த சூர்ப்பனகை, காலகேயர்களை நீ அழித்த போது என் கணவனையும் சேர்த்துக் கொன்று விட்டாயே எனக் கதறுகின்றாள். அவளைச் சமாதானப் படுத்தி ராவணன், அவளைக் கர, தூஷணர்கள் பாதுகாப்பில் தண்டக வனத்தில் இருக்கும்படி வைக்கின்றான்.

இதனிடையில் மேகநாதன் சடாமுடி தரித்து, மரவுரி அணிந்து விரதமிருந்து யாகங்கள், பூஜைகள் செய்வதைக் கண்டு விட்டு ராவணன் என்னவென வினவ, மேகநாதன் தன் தவங்களாலும், யாகங்களாலும் விஷ்ணுவையும், ஈசனையும் மகிழ்வித்துப் பல வரங்களைப் பெற்றதோடல்லாமல், ஈசன் ஒரு சக்தி வாய்ந்த ரதத்தையும், சக்தி வாய்ந்த வில், அழிவை உண்டாக்கும் அஸ்திரங்கள், அம்புகள் நிறைந்துள்ள அம்புறாத் தூணி, மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் வல்லமை போன்றவற்றைக் கொடுத்திருப்பதாயும் அறிகின்றான். கோபம் கொண்ட ராவணன், தேவர்களும், இந்திரனும் எனக்கு அடிமையாக இருக்க இங்கே என் மகன் அவர்களை வணங்குவதா? போனது போகட்டும் இதை இத்தோடு விட்டு விட்டு என்னோடு வருவாய் எனக் கூறி மகனை உடன் அழைத்துச் சென்று விடுகின்றான். பின்னர் ஒரு சமயம் ரம்பையைச் சந்தித்த ராவணன் அவள் அழகால் கவரப் பட்டு அவளை அடைய விரும்ப அவளோ, குபேரன் மகன் ஆன நலகூபரன் மனைவி நான். ஆகவே தங்கள் மருமகள் ஆகின்றேன். என்னை மன்னிக்கவும் எனக் கூறி வேண்டுகின்றாள். ஆனாலும் ராவணன் பலாத்காரமாய் அவளை அடையவே, கோபமும், வருத்தமும் கொண்ட ரம்பை, தன் கணவன் நலகூபரனிடம் முறையிட அவன், தண்ணீரைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரும் கோபத்துடன், முறைப்படியான மந்திரங்களைக் கூறி, ராவணன் இனி ஒரு முறை விரும்பாத பெண்ணை மானபங்கப் படுத்தினால் அவன் தலை சுக்குநூறாகட்டும்!" எனச் சபிக்கின்றான்.

Monday, April 28, 2008

கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 29கைலை மலை நோக்கிச் சென்ற தசக்ரீவனையும், அவனோடு வந்த ராட்சதர்களையும், எதிர்த்த யக்ஷர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகிப் போனார்கள். கோர தாண்டவம் புரிந்தான் தசக்ரீவன். அவன் எதிரே தோன்றினான் அண்ணனாகிய குபேரன் என்னும் வைஸ்ரவணன். தம்பியைப் பார்த்து குபேரன் சொல்லுகின்றான்:" மூடனே, மூர்க்கத் தனத்தால் அனைவரையும் அழிப்பதோடு அல்லாமல் உன்னையும் அழித்துக் கொள்ளாதே! விஷத்தை விஷம் என நினைக்காமல் பருகியவன் போல், பின்னர் அதன் விளைவுகளை அனுபவிப்பவன் போல், இப்போதைய உன் செயல்களின் விளைவுகளை நீயும் அனுபவிப்பாய். தாய், தந்தை, ஆச்சார்யர் ஆகியோரை நிந்திப்பவர்களுக்கு அதற்குரிய விளைவை அனுபவித்தே தீரவேண்டும். நீ விதைத்த இந்த வினையை நீயே அறுப்பாய்!" என எச்சரிக்குமாறு பேசக் குபேரனைத் தாக்கி வீழ்த்திவிட்டு அவன் புஷ்பக விமானத்தையும் அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்ட தசக்ரீவன் அடுத்துச் சென்ற இடம் கார்த்திகேயன் அவதரித்த சரவணப் பொய்கை ஆகும். அங்கே அவன் அபகரித்து வந்த புஷ்பக விமானம் மேற்கொண்டு நகராமல் தடைப்பட்டு நிற்க, தசக்ரீவனும் என்னவெனப் பார்த்தான்.

நந்தியெம்பெருமான் காட்சி அளித்தார். தசக்ரீவனைப் பார்த்து அவர், "மூடனே திரும்பிப் போ! ஈசனும், அன்னையும் வீற்றிருக்கும் இடம் இது! நில்லாதே! திரும்பிப் பார்க்காமல் போ!" என்று கூற நந்தியின் உருவத்தைப் பார்த்த தசக்ரீவன்," யார் அந்த ஈசன்? என்னைவிட மேலானவனா?" என்று கேட்டுக் கொண்டே நந்தியின் உருவத்தைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றான். கோபம் கொண்ட நந்தி தசக்ரீவனைப் பார்த்து, "உன்னைக் கொல்லும் வல்லமை படைத்தவனே நான்! எனினும் உன் தீச்செயல்களால் செயலிழந்து போன உன்னை நான் இப்போது கொல்வது முறையன்று. ஆகையால் என் போன்ற தேவர்களோ, மற்ற யட்ச, கன்னர, கந்தர்வர்களோ, பூதகணங்களோ உன்னைக் கொல்ல முடியாது என விடுகின்றேன். ஆனாலும் உனக்கு அழிவு நிச்சயம். என் உருவத்தை அழகில்லை எனக் கேலி செய்த நீ வானர இனம் ஆகிய குரங்குகளின் மூலம் குலத்தோடு நாசமடைவாய்! அந்தக் குரங்குகளும் சாதாரணக் குரங்குகளாய் இராமல், வீரமும், ஒளியும், நினைத்த உருவை அடையும் வல்லமையும் பெற்ற குரங்குகளாய் இருக்கும்." என்று சாபம் கொடுக்கின்றார்.

சாபத்துக்கும் அஞ்சாத தசக்ரீவன் ஆணவம் தலைக்கேற, " நான் வந்துவிட்ட பிறகும், அதை உணராமல், என்னை வரவேற்க வராமல், இருந்த இடத்திலேயே இருக்கும் அந்த ஈசனின் ஆணவத்தை ஒழிக்கின்றேன்." என்று நந்தியிடம் கூறிவிட்டு, கைலாய மலைக்குக் கீழ் தனது கையைக் கொடுத்து அதைத் தூக்க ஆரம்பித்தான். அண்டசராசரமும் நடுங்கியது. கைலை குலுங்கவும், ஏழுலகமும் குலுங்கிற்று. கங்கையின் வேகம் பூமியில் இறங்கினால் பூமி தாங்காது என அதைத் தலையில் தாங்கிய ஈசன் பார்த்தார். உமை அம்மை சற்றே நடுங்கினாள். தன் கால் கட்டை விரலைக் கீழே அழுத்தினார் ஈசன். கைலை மலை அடியில் தசக்ரீவன் நசுங்கினான். வலி தாங்க முடியவில்லை, அவனால், பெரும் கூச்சல் போட்டான். அந்தக் கூச்சலினால் மீண்டும் ஏழுலகும் நடுங்கியது. அத்தகைய பேய்க் கூச்சல் போட்டான் தசக்ரீவன். ஊழிக்காலத்தின் இடியோசையோ என அனைவரும் நடுங்க, தசக்ரீவன் கூச்சல் போடுகின்றான். கூட வந்த அனைவரும் செய்வதறியாது திகைக்க, சிலர் மட்டும் அறிவு வந்தவராய், தசக்ரீவனிடம் அந்த ஈசனை வேண்டிக் கொள் எனச் சொல்ல, பிறந்தது ஒரு இனிய நாதம், சாம கானம் இசைத்தான், தசக்ரீவன். சிவனை பல துதிகளிலும் துதிக்க ஆரம்பித்தான். கடைசியில் அவனின் சாமகானத்தில் மயங்கிய மகேஸ்வரர், அவனைப் பார்த்து, " உன் வீரத்தை நான் மெச்சுகின்றேன். ராவணா! இன்று முதல் நீ ராவணன் என அழைக்கப் படுவாய். மூவுலகும் அண்ட சராசரமும் நடுங்கும் அளவுக்கு நீ ஒலி எழுப்பியதால் இந்தப் பெயர் பெற்றாய்!" எனக் கூறுகின்றார். ராவண=ஓலமிடுவது, கதறுவது, பெருங்கூச்சல் போடுவது என்று அர்த்தம் வரும். ஆகவே அவனுக்கு அன்று முதல் ராவணன் என்ற பெயரும் ஏற்பட்டது, ஏற்கெனவே நீண்ட ஆயுளை வரமாய்ப் பெற்றிருந்ததால், தசக்ரீவன் ஈசனிடம், அதை உறுதி செய்யும் வண்ணம், ஒரு ஆயுதம் கொடுத்தால் போதும் எனச் சொல்லவே, "சந்திரஹாசம்" என்னும் சிறப்பான கத்தியை அவனுக்குக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார் ஈசன்.
*******************************************************************************

சிதம்பரம் திருப்புகழ் பாடல் எண் 466 (மதவெங்கரி)

நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய

நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங் கரத்ந முந்து ...... திரடோ ளுஞ்

அருணகிரிநாதர் தம் சிதம்பரம் திருப்புகழில் கைலையை ராவணன் தூக்கியது பற்றி மேற்கண்ட பாடலில் தெரிவிக்கின்றார். நதியும்=கங்கை நதியையும், திருக்கரந்தை=விபூதிப் பச்சை? வில்வம்? மதியும்= பிறைச்சந்திரனும் சடைக்கணிந்த= சடையில் தரித்த நடனம் ஆடும் இறைவன் வீற்றிருந்த கைலை மலையை, நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் = தன் வன்மை மிகுந்த தோளால் பிடுங்கி எடுத்துத் தன் உள்ளங்கையில் எடுத்தானாம் ராவணன். இவ்விதம் அகங்காரத்தின் பால் வீழ்ந்து பட்டு, அந்த ஈசன் குடி இருக்கும் இடத்தையே ராவணன் பிடுங்கியும் கூட அந்த ஈசன் அவனுக்கு அவனுடைய பாபங்களை அபகரித்துக் கொண்டு நல்லதையே செய்தாராம், அதுவும் எவ்வாறு? இதோ கீழ்க்கண்ட பாடல் தெரிவிக்கின்றதே!

காஞ்சீபுரம் திருப்புகழில் அருணையார் சொல்லுவது என்னவென்றால்: அடியோடு பற்றிப் பொற்கைலையை உள்ளங்கையில் எடுத்த ராவணனுக்கு ஈசன் சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தார் என்று, "தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் பெரியோனும்" என்று பாடுகின்றார்.

காஞ்சீபுரம் திருப்புகழ் 312-ம் பாடல் ( கனக்ரவுஞ்சத்திற்)

அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந்

தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந்

உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவு நாள்!


தமிழ்த்தாத்தாவின் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்! அன்னாரின் புகழைப் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ!

"செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவை பெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத் தோன்றும் சாமிநாட்தப்
புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின்றீரே?

அன்னியர்கள் தமிழ்ச்செவ்வியறியாதார்
இன்றெம்மை ஆள்வோராயினும்,
பன்னிய சீர் மஹாமஹோபாத்தியா
யப் பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ் செய்வாரேல்
முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்
இவள் பெருமை மொழியலாமோ?

நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க
குடந்தை நகர்க்கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே!"

Sunday, April 27, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 28


வால்மீகி ராமாயணத்தில், ராவணனின் பிறப்பு, வளர்ப்பு, போன்ற விபரங்கள் உத்தரகாண்டத்திலேயே இடம் பெறுகின்றது. என்றாலும் நம் கதைப் போக்குக்குத் தேவையாக,இப்போதே சொல்லப் படுகின்றது. ராம பட்டாபிஷேகம் முடிந்த பின்னர், அகத்தியரால் ராமருக்குச் சொல்லப்பட்டதாய் வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. இனி, ராவணனின் கதை தொடரும்:

"தன் தாயின் ஆசையையும் அவள் வார்த்தையையும் கேட்ட ராவணன், தாயிடம், அவள் ஆசையைத் தான் நிறைவேற்றுவதாய் உறுதி அளித்ததோடு அல்லாமல், தன் தம்பியரோடு கூடிக் கடும் தவங்களில் ஈடுபட்டான். கும்பகர்ணன், கடும் வெயிலில் அக்கினிக்கு நடுவேயும், குளிரில் நீருக்கு நடுவேயும் தவம் புரிய, விபீஷணனோ ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கின்றான். ராவணனோ என்றால் நீர் கூட அருந்தாமல் தவம் செய்ததோடு அல்லாமல், தன் தலைகளையும் ஒவ்வொன்றாய் அறுத்துப் போட்டுத் தவம் செய்கின்றான். ஒன்பது தலைகள் வெட்டப் பட்டு, பத்தாவது தலை வெட்டப் படும்போது பிரம்மா எதிரே தோன்றி, "தசக்ரீவா, என்ன வரம் வேண்டும்?" என வினவ, சாகா வரம் கேட்கின்றான், தசக்ரீவன். அது இயலாது என பிரம்மா கூற, தசக்ரீவன் சொல்கின்றான்:" நாகர்கள், கழுகு இனங்கள், தேவர்கள், யக்ஷர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராட்சதர்கள் ஆகியோர் மூலமாய் எனக்கு மரணம் நேரிடக் கூடாது. மனிதர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை, புல்லைவிடக் கீழாய் அவர்களை நான் மதிக்கின்றேன்." எனக் கூறுகின்றான். அவ்வாறே வரம் அளித்த பிரம்மா, "உன் மற்ற ஒன்பது தலைகளையும் நீ திரும்பவும் பெறுவாய்! அத்தோடு, நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தையும் அடைவாய்" என்றும் ஆசி அளிக்கின்றார்.

பின்னர் விபீஷணனைப் பார்த்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, அவனோ, " எந்த நெருக்கடியிலும் தன்னிலை இழக்காமல், நல்ல வழியை விட்டு விலகாமல், தர்மத்தின் வழியிலேயே நான் நடக்க வேண்டும், பிரம்மாஸ்திரம் முறையான சிட்சை இல்லாமலேயே எனக்கு வசமாக வேண்டும், த்ர்மத்தின் வழியை விட்டு நான் விலகக் கூடாது!" என்று கேட்க அவ்வாறே அவனுக்கு வரம் அளிக்கப் பட்டது. மேலும், பிரம்மா விபீஷணனை, "நீ சிரஞ்சீவியாக இருப்பாய்!" எனவும் ஆசி வழங்குகின்றார். அடுத்துக் கும்பகர்ணன் வரம் கேட்க எத்தனித்த போது, தேவர்கள் பிரம்மாவைத் தடுக்கின்றார்கள். வரம் ஏதும் கொடுக்கும் முன்னரே கும்பகர்ணன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. வரம் கொடுத்தால் தாங்காது. அவனை மாயைக்கு உட்படுத்திவிட்டுப் பின்னர் வரம் கொடுங்கள் என்று சொல்கின்றார்கள். இல்லை எனில் பூவுலகின் நன்மைகள் அனைத்தும் கடுந்தீமைகளாகி விடும் எனவும் சொல்கின்றனர். பிரம்மாவும் சரஸ்வதி தேவியை மனதில் நினைக்க அவளும், கும்பகர்ணன் நாவில் குடி இருந்து, விருப்பம் தவறிய சொல் வரும்படியாகச் செய்கின்றாள். கும்பகர்ணன் விரும்பியதோ "நித்தியத்துவம்" ஆனால் அவன் நாவில் வந்ததோ "நித்ரத்துவம்". காலம் கடந்தே இதை உணர்ந்த கும்பகர்ணன் வருந்த, வேறு வழியில்லாமல் உறங்காமல் இருக்கும்போது பெரும்பலத்துடன் இருக்கும் சக்தியையும் அடைகின்றான்.

பின்னர் தசக்ரீவனின் பாட்டன் ஆகிய சுமாலி, பேரன்கள் மூவருக்கும் பிரம்மா கொடுத்த வரங்கள்ல் பற்றித் தெரிய வர, தசக்ரீவனை அழைத்து, குபேரனைத் துரத்தி விட்டு இலங்கையை உனதாக்கிக் கொள்வாய்! உன் இனிய மொழிகளால் கிடைக்கவில்லை எனில் அன்பளிப்பாகவோ, அல்லது, பலாத்காரமாகவோ இலங்கையை உன் வசப் படுத்து! எனக் கூறுகின்றான். தசக்ரீவன் மறுக்கின்றான். வைஸ்ரவணன் என்ன இருந்தாலும் என் சகோதரன். வனை அங்கிருந்து விரட்டுவது தவறு எனக் கூறுகின்றான். ஆனால் சுமாலி மேலும் மேலும் அவனை வற்புறுத்தக் கடைசியில் மனம் மாறி தசக்ரீவன் குபேரனுக்குத் தூது அனுப்பி இலங்கையைத் தன் வசம் ஒப்படைக்கும்படிக் கேட்கின்றான். இருவருக்கும் தந்தையான விஸ்ரவஸ் குபேரனிடம் தசக்ரீவன் பெரும் வரங்களைப் பெற்றிருப்பதை எடுத்துக் கூறி, அவனை விரோதித்துக் கொள்ள வேண்டாம், எனவும், கைலை மலையில் குபேரன் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகின்றார். இந்தப் பிரச்னையின் காரணத்தால் தசக்ரீவனைத் தாம் சபிக்கவும் நேர்ந்து விட்டது எனக் கூறி வருந்துகின்றார். ஆகவே குபேரன் தகப்பன் மனம் நோகாமல் இருக்கக் கைலை சென்று அங்கே "அல்காபுரி"யை ஸ்தாபித்து அங்கே இருக்க ஆரம்பிக்க இலங்கை தசக்ரீவன் வசம் ஆகின்றது.

பின்னர் சூர்ப்பநகை வித்யுத்ஜிஹ்வாவையும், மயன் மகள் மண்டோதரியை தசக்ரீவனும் திருமணம் செய்து கொள்கின்றார்கள். தசக்ரீவனுக்கும், மண்டோதரிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அப்போது விண்ணில் இருந்து பெரும் இடி முழக்கம் கேட்க, ராஜ்ஜியமே ஸ்தம்பித்து நின்றது. அந்தக் குழந்தைக்கு மேகநாதன் என்ற பெயரிட்டு வளர்த்து வருகின்றான், தசக்ரீவன். கும்பகர்ணனோ தான் பெற்ற வரத்தால் பெருந்தூக்கத்தில் ஆழ, தசக்ரீவன் பெரும் போர்களைப் புரிகின்றான். பல ரிஷிகளையும், யக்ஷ, கந்தர்வர்களையும், இந்திர லோகத்தையும் அழிக்கின்றான். தசக்ரீவனின் அண்ணன் ஆன குபேரன் தம்பியை நல்வழிப்படுத்த வேண்டி, ஒரு தூதுவனை அனுப்புகின்றான். அந்தத் தூதுவன், தசக்ரீவனிடம் கைலை மலை பற்றியும், சிவ, பார்வதி பற்றியும் கூறி, நீ நல்வழிக்குத் திரும்பி விடு, இல்லை எனில் அழிந்து விடுவாய் எனக் கூற, தசக்ரீவன் கோபம் கொண்டு, "மகேசனுக்கு நெருங்கியவன் என்பதால் என் அண்ணன் தன் வசமிழந்து விட்டானோ? அண்ணன் எனக் கூடப் பார்க்காமல் அவனையும் மற்ற நாயகர்கள் ஆன இந்திரன், யமன், வருணன் ஆகியோரையும் அழிக்கின்றேன்!" எனக் கோபத்துடன் கூறிவிட்டு தூதுவனை வெட்டி வீழ்த்தி விட்டுக் கைலை மலை அடைந்தான்.

Saturday, April 26, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 27பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர் ஆன புலஸ்தியர் என்பவர், ஒரு ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டிருந்தார். அந்த ஆசிரமத்தில் பெண்கள் நுழையக் கூடாது எனக் கட்டுப்ப்பாடும் விதிக்கப் பட்டிருந்தது. மீறி நுழையும் பெண்கள், புலஸ்தியரின் சாபத்தின் படி அவருடன் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பம் தரிப்பார்கள் எனச் சொல்லப் பட்டிருந்தது. ஆனால் ஒருமுறை த்ருணபிந்து என்னும் ரிஷி குமாரி, தவறுதலாய் அனுமதி இல்லாமல் புலஸ்தியரின் ஆசிரமத்தில் நுழைந்துவிட, சாபத்தின் பலனாய்க் கர்ப்பம் தரிக்கின்றாள். அழுது, புலம்பிய தன் மகளுக்காக த்ருணபிந்து, புலஸ்தியரை வேண்ட, அவரும் அவளை மனைவியாக வரிக்கின்றார். இவர்களுக்குப் பிறக்கும் மகன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் வளர்ந்து, பாரத்வாஜ முனிவரின் மகள் தேவ வர்ணனியை மணக்கின்றார். இவர்கள் இருவருக்கும் பிறக்கின்றான் ஒரு குமாரன், அவனுக்கு வைஸ்ரவணன் என்ற பெயர் வைத்து வளர்ந்து வருகின்றான். பெரும் தவங்களைச் செய்கின்றான் அவன். தேவர்களுக்கு எவ்விதத்திலும் உதவ வேண்டும் என்ற உள்ளத்துடனும், உலகத்து நாயகர்களாய் இருக்க வேண்டும் என்ற ஆவலுடனும் இருக்கின்றான் அவன். பிரம்மாவை நோக்கித் தவம் இருந்த அவன் முன்னர் பிரம்மா தோன்றி, "எமன், இந்திரன், வருணன் ஆகிய மூவரோடு நான்காவது உலக நாயகனைத் தேர்ந்தெடுக்க நினைத்த என் வேலையை நீ தீர்த்துவிட்டாய். அந்தப் பொறுப்பை உனக்கு அளிக்கின்றேன். இதோ! இந்தப் புஷ்பக விமானம், நினைத்த போது நினைத்த இடத்திற்குச் செல்லும் தன்மை வாய்ந்தது. இதைப் பெற்றுக் கொண்டு நீ பெரும் செல்வத்திற்கு அதிபதியாகின்றாய்!" என்று சொல்லி வைஸ்ரவணனுக்குக் குபேர பதவியை அளிக்கின்றார்.

தன் தந்தையிடம் சென்று, தான் வசிக்கத் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கேட்க, அவரும் தென் கடலுக்கு அப்பால், திரிகூட மலையை ஒட்டி, இலங்கை என்னும் பெயருடைய ஒரு அழகான நகரம் இருக்கின்றது. தேவதச்சன் விஸ்வகர்மாவால், ராட்சதர்களின் ஆணைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப் பட்ட அந்த நகரம் தற்சமயம் அரசனும் இல்லாமல், பிரஜைகளும் இல்லாமல் காலியாக இருக்கின்றது. ராட்சதர்கள் அனைவரும் விஷ்ணுவிற்குப் பயந்து ஓடிச் சென்று விட்டார்கள். அந்த நகரை நீ எடுத்துக் கொண்டு உலகிற்கு நன்மை செய்வாயாக!" என்று சொல்லி அனுப்புகின்றார். குபேரன் அனைவரும் பாராட்ட இலங்கையை அடைந்து அரசாட்சி புரிந்து வருகின்றான். அப்போது, மிஞ்சி இருந்த ராட்சதர்களில் முக்கியமானவன் ஆன சுமாலி, பாதாளத்தில் ஒளிந்திருந்தவன், இந்தச் செய்தியைக் கேட்டு மனம் வெதும்பினான். அவனுக்கு அழகே உருவான கைகஸி என்ற பெண்ணொருத்தி இருந்தாள். அவளுடன் ஒரு இடத்தில் நில்லாமல் அங்கேயும், இங்கேயும் அலைந்து திரிந்த ஒரு சமயம் விண்ணில் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருந்த குபேரனையும், அவன் தேஜஸையும், கம்பீரத்தையும் பார்த்தான். ஏற்கெனவே அவன் புகழையும் பற்றிக் கேள்விப் பட்டிருந்த சுமாலி இப்போது இன்னும் மனம் கொதித்தான். பொறாமையில் துவண்டு போனான். தன் அழகிய மகளைப் பார்த்து, " உனக்குத் திருமணப் பருவம் வந்து விட்டது, நீ குபேரனின் தகப்பனும், புலஸ்தியரின் மகனும் ஆன விஸ்ரவஸை அணுகி உன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்வாய். உனக்குக் குபேரனுக்கு நிகரான மகன் பிறப்பான். பெரும் புகழ் அடைவான் அந்த மகன். அவன் மூலம் இழந்த ராஜ்யத்தைத் திரும்பப் பெறலாம்!" என்று சொல்கின்றார். கைகஸியும் தகப்பன் யோசனையின் பேரில் விஸ்ரவஸை அடைந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, இரு கை கூப்பி வேண்டுகின்றாள்.

விஸ்ரவசோ, தன் தவ வலிமையால் அவள் எண்ணம் புரிந்தவராய், அவளிடம்,"பெண்ணே! உன் எண்ணம் என்னவென எனக்குப் புரிகின்றது. ஆனால் நீ என்னை வந்து அணுகி இருக்கும் இந்நேரம் நல்ல நேரம் அல்லவே! ஆகையால் உனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் கொடுமைக்காரர்களாயும், உருவத்தில் பயங்கரமாயும் இருப்பார்களே?" என்று கூறுகின்றார். அதுவும் அவள் உடனேயே ஆசிரமத்திற்குள் அனுமதி இன்றிப் புகுந்ததால் கர்ப்பமும், குழந்தைப் பேறும் தவிர்க்க முடியாது எனவும் கூறுகின்றார். அதிர்ச்சி அடைகின்றாள். கைகஸி, எனக்கு அப்படிப் பட்ட பிள்ளைகள் வேண்டாம் எனக் கதறுகின்றாள். ஆனால் விஸ்ரவஸோ, இதைத் தடுக்க முடியாது, எனவும், உனக்குப் பிறக்கும் கடைசி மகன் மட்டும் தெய்வ பக்தி நிறைந்தவனாய், என்னைப்போல தவ வலிமைகள் உள்ளவனாய் இருப்பான். உன் மகன்களின் குலமும் அவன் மூலமே விருத்தி அடையும்!" என்று கூறுகின்றார். பின்னர் சிறிது காலத்தில் கைகஸிக்கு ராவணன் பிறக்கின்றான். பிறக்கும்போதே ரத்த மழை, பயங்கரமான இடி முழக்கம், சூரிய ஒளி மங்கியது, வால் நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்தன, பேய்க்காற்று, பூமி நடுக்கம், கடல் கொந்தளிப்பு இத்தனைகளுடன் பத்துத் தலைகளுடன், பிறந்தான் ராவணன்.

இவனுக்கடுத்து பெரும்பலம் வாய்ந்தவனாய்க் கும்பகர்ணனும், கோர உருவத்துடன் கூடிய சூர்ப்பநகையும் பிறந்தார்கள். கடைசியில் விபீஷணனைப்பெற்றெடுத்தாள் கைகஸி. அப்போது விண்ணில் இருந்து பூமாரி பொழிந்தது, யக்ஷர்களும், தேவர்களும் இனிய கானம் இசைத்தார்கள், அசரீரிகள் வாழ்த்துச் சொல்லின. தசக்ரீவன் எனப் பெயரிடப் பட்ட ராவணனும், கும்பகர்ணனும், பிறரைத் துன்புறுத்துவதில் இன்புற்று வாழ, விபீஷணனோ, வேதங்களைக் கற்று அமைதியான முறையில் தன் வழிபாடுகள், தவங்கள் என வாழ்ந்து வந்தான். இந்நிலையில் ஓர் நாள் விண்ணில் அதசய புஷ்பக விமானத்தில் குபேரன் பறந்து செல்ல, குபேரனின் ஒளியையும் சிறப்பையும் கண்டுப் பிரமித்து நின்ற தசக்ரீவனை கைகஸி அழைத்து, அது உன் சகோதரன் தான், வேறு யாரும் இல்லை, மாற்றாந்தாய் மகன், அவன் ஒளியையும், கம்பீரத்தையும் பார்! நீ அவனைப் போல் ஆக வேண்டாமா? எனக் கேட்க ராவணனின் மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
*************************************************************************************

இந்த ராவணனின் பத்துத் தலைகளுக்கும் தனித் தத்துவமே உண்டு. நாமே ஒருவரிடத்தில் நடந்து கொள்கிறாப் போல் இன்னொருவரிடம் நடப்பதில்லை. தாய், தந்தையிடம் ஒரு மாதிரி, மனைவி, குழந்தைகளிடம் ஒரு மாதிரி, அலுவலகத்தில் சக ஊழியர் என்றால் ஒரு மாதிரி, மேல் அதிகாரி என்றால் வேறு மாதிரி, சிநேகிதர்களிடம் ஒரு மாதிரி, என்று பல்வேறு விதமான குண அதிசயங்கள் கொண்டவர்களே. ஒரே மாதிரி நடந்து கொள்ளுவதில்லை நாம் அனைவரிடமும். நமக்குள் நாமே புரிந்து கொள்கின்றோமா என்பதே சந்தேகம் தான். நாம் ஒருவர்தான் என்பதை நாம் அறிவோம், என்றாலும், நமக்குள் இருப்பவர்கள் எத்தனை பேர்கள்? இது தான் ராவணனின் பத்துத் தலைகளின் தத்துவம், மிகச் சிறந்த சிவ பக்தனும், வீணை விற்பன்னனும், வீரனும், சகோதர, சகோதரிகளிடம் பாசம் கொண்டவனும், முறை தவறி எதிலும் நடவாதவனும் ஆன ராவணன், முதல் முதலாய் முறை தவறி நடந்து கொண்டது சீதை விஷயத்தில் தான். ஆனால் ராமனோ என்றால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரியாக நமக்குள் இருக்கும், "நான்' விழிப்புற்றவனாய், தனக்கு நேரிடும் துன்பத்தைக் கூடப் பொருட்படுத்தாதவனாய், எப்போதும் தருமத்தின் வழி நடப்பவனாய் இருக்கின்றான். இரு பெரும் வீரர்களில் ஒருவன் தோல்வி அடைவதும், மற்றவன் வெற்றி அடைவதும் அதனால் தான் அல்லவா?

Friday, April 25, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 26


ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆன ராவணனின் அறிமுகம் நமக்கு இங்கே தான் முதன்முதலாய்க் கிடைக்கின்றது. அதுவும் முதலில் அகம்பனன் மூலமும், பின்னர் சூர்ப்பனகை மூலமும். இருவருமே சீதையை அபகரித்து வருவதின் மூலம் ராமனைத் துன்புறுத்தலாம் என்றே சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் அதில் ராவணைன் அழிவும் இருக்கின்றது என்பதை உணராமல் இருந்திருப்பார்களா என்ன? இதைக் காட்டவே கம்பர்,
"நீல மாமணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்" என்று சூர்ப்பனகை, ராவணனை அடியோடு அழிக்கும் திறன் பெற்றவள் எனக் கூறுகின்றார். சூர்ப்பனகையின் கணவன் ராவணனால் கொன்றது பற்றியும், அவள் மகனை லட்சுமணன் கொன்றது பற்றியும் நேற்றுக் கண்டோம். அந்த லட்சுமணால் மூக்கறுபட்டவள் என்பதைத் தான் அருணகிரியார்,"மூக்கறை மட்டை மகாபல காரணி" எனச் சொல்கின்றார். மேலும் சூர்ப்பநகையைப் படு மூளி, உதாசனி, வஞ்சகி என்றெல்லாம் சொல்பவர் "விபீஷணன் சோதரி" என்று குறிப்பிடுவதின் நோக்கம் முற்பிறவியில் நடந்த ஒரு சம்பவம். காரண, காரியத்தோடு தான் ராமாயண கதா பாத்திரங்களின் தோற்றம் என்பதே கதையின் நோக்கம் என்பதால் இதை இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு தாய் வயிற்றில் பிறந்தும், ராட்சத குலச் சகோதரர்களில் விபீஷணன் மட்டும் ஏன் நல்லவனாய் இருந்தான் என்பதும், தெரியவரும்.

//சத்யவிரதன் என்னும் மன்னன் மகன் சங்கசூடன் என்பவன் ஆதிசேஷனின் பக்தன். நாள் தோறும் தவறாமல் ஆதிசேஷனை வழிபட்டு வந்தான் அவன். அவனுடைய குருநாதரின் மகள் சுமுகி என்பவள். அவள் சங்க சூடன் மேல் மாறாக் காதல் கொண்டாள். அவனிடம் தன்னை மணக்கும்படி வேண்ட, சங்க சூடனோ, "குரு என்பவர் தந்தைக்குச் சமானம்! அவ்வகையில் நீ என் சகோதரி! ஒரு சகோதரியைச் சகோதரன் திருமணம் செய்ய நினைப்பது எத்தகைய கொடிய பாவம்! அத்தகைய பாவத்தைச் செய்து குருத் துரோகம் நான் செய்ய மாட்டேன்!" என்று கூறுகின்றான். அவள் திரும்பத் திரும்ப அவனிடம் வேண்ட, "நீ அடுத்த பிறவியிலும் எனக்குச் சகோதரி தான், போ! உன்மேல் எனக்குக் கடுகளவும், விருப்பம் என்பதே இல்லை!" என்று சொல்ல, கோபம் கொண்ட சுமுகி அரசனிடம் முறையிடுகின்றாள். அதுவும் எப்படி? "மன்னா, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று நீ நினைக்கும் உன் மகன் குரு புத்திரியான என்னிடம் தவறாய் நடந்து கொள்கின்றான்! நீதி தவறாத உன் ஆட்சியிலும் இவ்வாறான கதியா எனக்கு?" என்று அழுது, புலம்ப நீதி தவறாத மன்னனும், தீர விசாரிக்காமல், மன்னன் மகனே ஆயினும், தண்டனைக்கு உட்பட்டவனே எனக் கூறி, இளவரசனை மாறு கால், மாறு கை வாங்குமாறு தண்டனை விதிக்கின்றான். இளவரசனுக்குத் தண்டனை நிறைவேற்றப் படுகின்றது.

ஒரு பாவமும் செய்யாத தனக்கு ஏன் இந்தக் கதி என்று ஆதிசேஷனிடம் முறையிட்ட சங்க சூடன்முன்னால் தோன்றினார் ஆதிசேஷன். "என்ன தான் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் சிலரின் குணத்தை மாற்ற முடியாது. நீ சொன்னபடியே உன் வாக்கை நிறைவேற்ற என்னால் முடியும். அடுத்த பிறவியிலும் அவள் உனக்குச் சகோதரியாகவே பிறப்பாள். அப்போது, நானே வந்து அவளுக்குத் தண்டனை கொடுக்கின்றேன். அது வரை பொறுத்திருக்கத் தான் வேண்டும்!" எனச் சொல்லி மறைகின்றார். அதன்படி இந்தப் பிறவியில் விபீஷணன் சகோதரியாக வந்து பிறந்த சுமுகி ஆன சூர்ப்பநகைக்கு, ஆதி சேஷனின் அவதாரம் எனச் சொல்லப் படும் லட்சுமணனால் தண்டனை விதிக்கப் படுவதாய்ச் சொல்கின்றார் அருணகிரியார். இனி கதைக்குச் செல்வோமா?
*************************************************************************************

பெருங்கூச்சலுடனும், கத்தலுடனும் ராவணன் சபைக்கு வந்த சூர்ப்பனகை ராவணனைப் பார்த்துக் கத்த ஆரம்பிக்கின்றாள். "பெண்களோடு கூடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்ற நீயும் ஒரு அரசனா? உன் ராஜ்யத்தில் நடப்பது என்னவென நீ அறிவாயா? உன் மனிதர்கள் ஆயிரக் கணக்கில் ஜனஸ்தானத்தில் கொல்லப் பட்டதையும், அந்த இடமே அழிக்கப் பட்டதையும் நீ அறிவாயா? ராமன் என்ற ஒரு தனி மனிதன் இதைச் செய்ததாவது உனக்குத் தெரியுமா? அவன் மேற்பார்வையில், தண்டக வனத்தை ரிஷிகளின் தவங்களுக்கு ஏற்றவகையில் பாதுக்காப்புச் செய்து கொடுப்பதை நீ அறிவாயா? இத்தனையும் அவன் செய்து முடிக்க, நீயோ அகங்காரத்துடன் எனக்கு நிகரில்லை என வீற்றிருக்கின்றாய்! நாட்டு நடப்பை அறியாத அரசன் ஆன நீ கிழிந்த துணிக்குச் சமானம், தூக்கி எறியப் பட்ட வாடிய பூவுக்குச் சமம். " என வாயில் வந்தபடி ராவணனை இழித்துப் பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சால் கோபம் அடைந்த ராவணன், "யார் அந்த ராமன்? எங்கிருந்து வந்தான்? என்ன ஆயுதங்கள் வைத்துள்ளான்? எத்தன்மையானவன்?" என வினவுகின்றான்.

சூர்ப்பனகை ராமனின் வீரத்தை விவரிக்கின்றாள்:" ஒரு பெண் என்பதால் என்னைக் கொல்லாமல் அங்கஹீனம் செய்து விரட்டி விட்டான் அவன் தம்பி லட்சுமணன் என்பவன். அண்ணனிடம் பெரும் அன்பும், அதற்கு மேல் மரியாதையும் பூண்டவன் என்பது அவனைப் பார்த்தாலே தெரிகின்றது. அவர்களுடன் இருக்கின்றாள் பேரழகியான ஒரு பெண். அவள் பெயர் சீதை. ராமனின் மனைவியாம் அவள். எப்பேர்ப்பட்ட பேரழகி தெரியுமா அவள்? அவள் இருக்க வேண்டிய இடம் உன் அந்தப் புரம். திருவான அந்த மகாலட்சுமியே அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தது போன்ற அற்புதத் தோற்றம் நிறைந்த அந்தப் பெண் உனக்கு மனைவியாக இருப்பதற்கே அருகதை படைத்தவள். அவளுக்கேற்ற கணவன் நீதான் ராவணா! நான் அவளை உனக்கு மனைவியாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே அவளை நெருங்கினேன். அப்போது தான் அந்த லட்சுமணன் என் அங்கங்களை வெட்டி விட்டுத் துரத்தி விட்டான். பார் ராவணா, உனக்காக நான் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், உன்னிடம் சொல்லி எப்படியாவது அந்த சீதையை நீ தூக்கி வந்தாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே வந்தேன்." என்று சொல்கின்றாள். அவள் வார்த்தையைக் கேட்ட ராவணன், தன் சபையில் வீற்றிருந்த மந்திரிமார்களை அனுப்பி விட்டுப் பெரும் யோசனையில் ஆழ்ந்தான்.

நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து, சிந்தித்துப் பார்த்து, பின்னர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய்த் தன் தேர் இருக்குமிடம் சென்று தேரோட்டியிடம் மாரீசன் இருக்குமிடம் போகச் சொல்கின்றான். தேரும் சென்றது. மாரீசன் இருக்குமிடமும் வந்தது.
*************************************************************************************
இனி நேயர் விருப்பம் இருந்தால் (:D) ராவணன் பிறப்பு, வளர்ப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப் படும். இதுக்கு எல்லாரும் வந்து ஓட்டுப் போடும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

Thursday, April 24, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25


ஜனஸ்தானத்தில் நடந்த சண்டையில், கர, தூஷணர்கள் கொல்லப் பட்டபின்னர், அவர்களில் தப்பித்த, அகம்பனன் என்பவன், ராவணனிடம் சென்று, அரக்கர்களை ராமன் தனி ஒருவனாய் அழித்த விவரத்தைக் கூறுகின்றான். அதைக் கேட்டுக் கோபம் அடைந்த ராவணன், சூரியனையே அழிக்கும் வல்லமை படைத்த என்னை விரோதித்துக் கொண்டு, ஜனஸ்தானத்தையே அழிக்கத் துணிந்த வல்லமை கொண்ட அவன் யார் என வினவுகின்றான். முதலில் பெரிதும் தயங்கிய அகம்பனன், பின்னர் ராவணன் அவன் உயிருக்குத் தான் பாதுகாப்புக் கொடுப்பதாய் அளித்த உத்தரவாதத்தின் பேரில், தசரத குமாரன் ராமனைப் பற்றியும், அவன் தம்பி லட்சுமணன் பற்றியும், பேரழகியான ராமன் மனைவி சீதை பற்றியும் கூறுகின்றான். அவன் தான் கர, தூஷணர்களைக் கொன்று ஜனஸ்தானைத்தையும் அழித்தான் என்ற தகவலைக் கேட்ட ராவணன், அவனுக்கு உதவியவர்கள் யார் எனக் கேட்க, ராமன் தனி ஒருவனாகவே ஜனஸ்தானத்தில் அழிவை ஏற்படுத்தியதாகவும், அவன் கோபம் கொண்டால் அதை அடக்க முடியாதது என்றும், எங்கு திரும்பினாலும் ராமன் ஒருவனே கண்ணில் தெரியும்படியான வேகத்துடனும், வீரத்துடனும் சண்டை இடுகின்றான் எனவும் தெரிவித்தான். மேலும் அகம்பனன் சொன்னதாவது: "இந்த ராமனைப் போரில் வீழ்த்த முடியாது. ஆனால் அவனுக்கு மரணத்தை ஏற்படுத்த ஒரே வழி அவன் மனைவியான பேரழகி சீதையை நீ அகற்றிவிட்டுப் பலாத்காரமாய் அவளைத் தூக்கி வருவது ஒன்றேதான் இருக்க முடியும். அவளுக்கு ஈடு, இணை யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை. எப்படியாவது ராமனுக்குத் தெரியாமல் நீ அவளைத் தூக்கி வந்துவிடு. அவள் பிரிவு தாங்காமல் ராமன் உயிரை விட்டு விடுவான்" என்று கூறுகின்றான்.

ராவணனும் ஒத்துக் கொண்டு, மாரீசனைக் கண்டு உதவி கேட்கலாம் என அவன் தற்சமயம் இருக்கும் ஆசிரமம் நோக்கிச் செல்லுகின்றான். பால காண்டத்தில் தாடகை வதத்துக்கு முன்னர் அவள் மகன் ஆன மாரீசன் முதலில் ராம, லட்சுமணரோடு போரிட்டதும், ராம பாணத்தால் மாரீசன் வெகு தூரத்துக்குத் தூக்கி எறியப் பட்டதும், நினைவிருக்கலாம். அந்த மாரீசன் தான் அதன் பின்னர் ஜடாமுடி தரித்து, மரவுரி அணிந்து திருந்தியவனாய் ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைக் காணவே இப்போது ராவணன் சென்றான். (இந்த மாரீசன் ஒரு விஷ்ணு பக்தன் எனவும், வைகுண்டத்தின் காவல்காரன் ஆன அவன் நடத்தையில் கோபம் கொண்டு, விஷ்ணு கொடுத்த சாபத்தின் காரணமாய் அரக்க குலத்தில் பிறந்ததாயும், விஷ்ணு தானே அவனைத் தன் கையாலேயே கொன்று முக்தி கொடுப்பதாய் வாக்குக்கொடுத்ததாயும் ஒரு கதை உண்டு.) எப்படி இருந்தாலும் சாபத்தின் காரணமாய் அரக்கி ஆன தாடகையின் மகன் ஆன மாரீசன் தற்சமயம் நல்வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றான். இந்தச் சமயத்தில் அவனை உதவி கேட்கச் சென்றான் ராவணன்.

மாரீசனிடம், தான் வந்த காரியத்தைச் சொல்லி, சீதையை அபகரிக்கப் போவதாயும், மாரீசனை அதற்கு உதவுமாறும் கேட்க, மாரீசனோ அவனைக் கடிந்து கொள்கின்றான். "ஏ,ராவணா, உன் ராஜ்யத்தில் ஒரு குறையும் இல்லை, யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை, அப்படி இருக்கையில் இம்மாதிரி ஒரு யோசனையை உனக்குக் கூறியவர் யார்? நிச்சயம் உன்னுடைய விரோதியாகவே இருக்கவேண்டும். ராமனைப் பற்றி நீ நன்கு அறிய மாட்டாய் என நினைக்கின்றேன். ஆழம் காண முடியாத சமுத்திரம் ஆன அவன் கையில் இருக்கும் வில், முதலைகளுக்குச் சமானம் என்றால், அந்த வில்லில் இருந்து எழும் அம்புகள், பேரழிவை ஏற்படுத்தும் பேரலைகளுக்குச் சமானம் ஆகும். அவனுடைய தோள் வலிமை தெரியாமல் அதில் போய் நீ சிக்கிக் கொண்டாயானால் முற்றிலும் அழிந்து போவாய். நீ உன் நகரத்துக்குப் போய் மனைவிமாரோடு சுகமாய் இருப்பாயாக, ராமன் அவன் மனைவியோடு சுகமாய் இருக்கட்டும், அவன் வழிக்கு நீ போகாதே!" என அறிவுரை கூற, அதை ஏற்று ராவணனும் இலங்கை திரும்புகின்றான். ஆனால் சகல விதமான செளகரியங்களும், சம்பத்துக்களும் நிறைந்த ராவணனுக்கு அழிவு காலம் எற்பட்டு விட்டதை யாரால் தடுக்க முடியும்? இதை நிரூபிப்பதே போல் இலங்கைக்குப் பெரும் கோபத்தோடு, ஆத்திரத்தோடும், அழுகையோடும் வஞ்சனை நிறைந்தவளாயும் வந்து சேர்ந்தாள் சூர்ப்பனகை!
*************************************************************************************
கம்ப ராமாயணம் அகம்பனன் பற்றிக் கூறவில்லை. ஆனால் சூர்ப்பனகையின் வஞ்சனை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் கூறி இருப்பது இது வரை யாரும் சொல்லாத ஒன்றாகும். சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா என்னும் அரக்கன். ராவணன் அளவு கடந்த போர் வெறியில் ஒரு சமயம் தங்கை கணவன் என்று கூடப் பார்க்காமல் அவனைக் கொன்றுவிடுகின்றான். சூர்ப்பனகை மனதில் துக்கமும், ராவணன் மேல் கோபமும் பெருக்கெடுத்து ஓடுகின்றதாம். ஆனாலும் காலம் வரவேண்டும் எனக் காத்திருக்கின்றாள் சூர்ப்பனகை. ஜனஸ்தானத்தில் வந்து தங்கி இருக்கின்றாள். அப்போது அவள் குமாரன் பெரும் உயரமாய் வளர்ந்து இருந்த தர்ப்பைப் புற்களுக்கிடையே தவம் செய்து கொண்டிருந்தான். தர்ப்பை புற்களை அறுக்க வந்த லட்சுமணன், அவன் தவம் செய்து கொண்டிருப்பதை அறியாமல் அவன் தலையையும் சேர்த்து அறுத்து விடுகின்றான். கொண்ட கணவனும் போய், உற்ற மகனும் போய்த் தவித்தாள் சூர்ப்பனகை. துயரக்கடலில் ஆழ்ந்த சூர்ப்பனகை, ராம, லட்சுமணர்களையும் வஞ்சம் தீர்க்கவேண்டும், தமையன் ஆன ராவணனையும் பழி தீர்க்க வேண்டும். ஆகவே இவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டி விட்டால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அழிந்துவிடுவார்கள் என எண்ணினாளாம். அதற்கு அவளுக்குக் கர, தூஷணர்களின் முடிவு உதவி செய்தது. மேலும் அருணகிரிநாதர் சொல்வது என்னவெனில்:

//மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி

மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே//

(திருத்தணி திருப்புகழ் பாடல் எண் 272) விளக்கம் நாளை பார்க்கலாம்.

Wednesday, April 23, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 24


ராமனின் அழகைக் கண்டு வியந்த சூர்ப்பனகையானவள், அவரிடம், துறவிக் கோலத்தில், ஆனால், வில்லும், அம்பும் வைத்துக் கொண்டு, கூடவே மனைவியையும் வைத்திருக்கும் நீ யார் என வினவ, தான் ராஜா தசரதனின் குமாரன் ராமன் எனவும், இவள் தன் மனைவி சீதை எனவும், லட்சுமணன் இளைய சகோதரன் எனவும் கூறிவிட்டு, தந்தையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு வனவாசம் செய்ய வந்திருப்பதாய்க் கூறுகின்றார். பின்னர் சூர்ப்பனகையை யார் என ராமன் கேட்க அவளும் தன் கதையைச் சொல்கின்றாள். விஸ்ரவஸ் என்ற முனிவருக்கும், கைகசி என்ற ராட்சதப் பெண்ணிற்கும் பிறந்த ராவணன் என்பவன் தன் மூத்த தமையன் எனவும், அவன் சகோதரனும் பெரும் தூக்கம் கொள்பவனும் ஆகிய கும்பகர்ணனும், பக்திமான் ஆனவனும், ராட்சதர்களின் நடத்தை சிறிதும் இல்லாதவனும் ஆன விபீஷணன், மற்றும் அங்கிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள ஜனஸ்தானத்தில் வசிக்கும் கர, தூஷணர்கள் போன்றவர்கள் அனைவருமே தன் சகோதரர்கள் எனவும் சொல்கின்றாள். ராமா, நாங்கள் அனைவருமே உன்னை மிஞ்சுபவர்கள். உன்னைப் பார்த்த கணத்தில் இருந்தே உன்னை என் கணவனாய் வரித்து விட்டேன். என்னை ஏற்றுக் கொண்டு, விகார உருவத்துடன் இருக்கும் இந்த உன் மனைவியை விட்டு விடுவாயாக என வேண்டுகின்றாள்.

சாதாரணமாய் எந்த மனிதருமே ஒரு பெண், அதிலும் கோர உருவம் படைத்த அரக்கி இவ்விதம் கேட்கும்போது எவ்வாறு பரிகசித்து விளையாடுவார்களோ, அவ்விதமே ராமனும் பரிகசித்து விளையாடுகின்றான் சூர்ப்பனகையுடன். அவளைப் பார்த்து அவன் சொல்கின்றான்:
"ஏ, பெண்ணே! நான் மணமாகி என் மனைவியுடனே வசிக்கின்றேன். இதோ நிற்கும் என் தம்பி, என்னை விட அழகும், தைரியமும் நிரம்பியவன். அவன் மனைவியுடன் இல்லை. தனியே இருக்கின்றான். ஆகவே அவனை உன் கணவனாய் ஏற்றுக் கொள்வாயாக!" என்று லட்சுமணன் பக்கம் கையைக் காட்ட அண்ணனின் நோக்கைப் புரிந்து கொண்ட லட்சுமணனும் சிரிப்புடனேயே, "பெண்ணே, அண்ணனே உனக்குப் பொருந்துவார், அதை விடுத்து என்னிடம் வராதே! உன்னைப் போன்ற அழகி கிடைத்தால் அண்ணன் இந்தப் பெண்ணை விட்டுவிடுவார்!" என்று பரிகாசத்தை அதிகரிக்க, இது புரியாத சூர்ப்பனகை, இந்த சீதை இருந்தால் தானே ராமன் தன்னை ஏற்க மறுக்கின்றார் என நினைத்தவளாய், சீதையை அழிக்க நினைத்து, அவளை நெருங்க, உடனேயே விஷயம் முற்றுகிறதை உணர்ந்த ராமர், லட்சுமணனிடம்," இவள் கொடியவள் என்பதை அறியாமல் நாம் பரிகாசம் செய்து விட்டோமே! இவளைத் தண்டித்து சீதையைக் காப்பாற்று!" என்று சொல்ல கோபம் கொண்ட லட்சுமணனும், அவளின், காது, மூக்கு போன்றவற்றை அறுத்துத் தள்ளுகின்றான்.

சூர்ப்பனகை கதறிக் கொண்டே ஜனஸ்தானத்தில் உள்ள தன் தம்பியர் ஆன கர, தூஷணர்களிடம் போய் விழுந்தாள். தங்கள் தமக்கையின் அலங்கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்த கர, தூஷணர்கள் அவளிடம் நடந்ததைக் கேட்க, அவளும் ராம, லட்சுமணர்களின் அழகையும், வீரத்தையும், கம்பீரத்தையும், அவர்களுடன் இருக்கும் பேரழகியான சீதையைப் பற்றியும் கூறிவிட்டு அவர்களைக் கொன்று தான் அவர்கள் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் எனச் சொல்லவே, முதலில் பல்லாயிரம் வீரர்களை அனுப்பிய கர, தூஷணர்கள் ராமன் ஒருவனே தனியாக அவர்களை அழித்தது கண்டு மிரண்டு போய் நிற்க, சூர்ப்பனகை வாயில் வந்தபடி இருவரையும் திட்டுகின்றாள். அவள் சமாதானம் அடைய வேண்டி, இருவரும் தங்களுடன் திரிசிரஸ் என்ற மூன்று தலையுடைய அசுரனுடனும் பல்லாயிரக் கணக்கான வீரர்களுடனும் சென்று ராமனுடன் போர் தொடுக்கச் செல்கின்றான். ராமன் லட்சுமணனிடம் தான் தனியாகவே இந்தப் போரைச் சமாளிப்பதாயும் லட்சுமணன், சீதையை அழைத்துக் கொண்டு குகையினுள் அவளை வைத்துவிட்டுக் காவல் காக்கும்படியும் சொல்லவே, அவ்வாறே லட்சுமணனும் சீதையுடனே குகைக்குள் செல்கின்றான். ராமர் கடும்போரிட்டுக் கர, தூஷணர்களை அழிக்கின்றார். விண்ணில் இருந்து வானவர்களும், மண்ணிலிருந்து ரிஷிகளும் பூமாரி பொழிந்து ராமனைப் பாராட்ட, குகையிலிருந்து லட்சுமணனும் சீதையுடனே வெளிப்பட அனைவரும் மகிழ்வுடனேயே திரும்பவும் ஆசிரமம் நோக்கிச் சென்றார்கள். ஜனஸ்தானத்தில் இருந்து தப்பிய அகம்பனன் என்னும் அரக்கன் ராவணனை அடைந்து ஜனஸ்தானத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க ராவணன் கோபம் அடைகின்றான்.
*************************************************************************************
சகோதர ஒற்றுமை இங்கேயும் சொல்லப் பட்டாலும் அவை நற்காரியத்துக்கும், தர்மத்தை நிலை நாட்டவும் அல்லாமல், பழி வாங்கவே பயன்படுத்தப் படுகின்றது. கர, தூஷணர்களைச் சூர்ப்பனகை நாடுவதும் சரி, பின்னர் ராவணனிடம் சென்று அவனை சீதையை அபகரிக்கும்படி சொல்வதும் சரி, ஒரு விதத்தில் ராமனைப் பழிவாங்க வென்று தோன்றினாலும் உண்மையில் சூர்ப்பனகைக்கு ராவணனிடமும் கோபம் இருந்ததாயும் தெரியவருகின்றது. அது தவிர லட்சுமணனும் அவள் கோபத்தை அதிகரிக்கும் வகையில் அவள் பிள்ளையை, தெரியாமல் கொன்று விடுகின்றான். இங்கு சகோதர ஒற்றுமை என்பது அழிக்கவே பயன்படுத்தப் படுகின்றது. கடைசியில் குலம் அழியவும் காரணம் ஆகின்றது. ராவணனுக்கு சீதையை அபகரிக்கும் எண்ணத்தை முதலில் ஏற்படுத்தியது அகம்பனன் என்றாலும், மாரீசன் உதவியை நாடிய ராவணன், அவனால் நற்போதனைகள் போதிக்கப் பட்டுத் திரும்பிவிடுகின்றான் என்றாலும், பின்னர் சூர்ப்பனகையால் தூண்டப் படுகின்றான். சூர்ப்பனகை உண்மையில் ராவணனுக்கு சீதை மனைவியாக வேண்டும் என விரும்பினாளா? அப்படி என்றால் இதன் பின்னர் அவள் ஏன் இந்தக் கதையில் வரவில்லை? வஞ்சனை நிறைந்த சூர்ப்பனகையின் நோக்கம் ஒருவேளை ராவணனையும் அடியோடு அழிப்பதாயும் இருக்குமல்லவா? நாளை காண்போம்!

Tuesday, April 22, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 23


அகத்திய முனிவரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்ற ராம, லட்சுமணர்கள் முதலில் அவரின் சகோதரரைக் கண்டு விட்டுப் பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர், சீதையுடன். அப்போது ஸ்ரீராமன் லட்சுமணனுக்கு அகத்தியர் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கின்றார். வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அரக்கர்களும், அந்தணர்களை ஏமாற்றி விருந்துக்கு அழைத்து, வாதாபியை வெட்டிக் கண்ட துண்டம் ஆக்கி அவனைச் சமைத்துப் பரிமாறியதையும் அவன் பின்னர் விருந்துண்ட அந்தணரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து விடுவதையும், இதன் மூலம் பல அந்தணர்களையும், முனிவர்களையும் கொன்று கொண்டிருந்ததையும், அகத்தியரையும் அவ்வாறே விருந்து வைத்துப் பின்னர், கொல்ல முயன்ற வேளையில் அகத்தியர் வாதாபியை ஜீரணம் செய்து எமனுலகம் அனுப்பி இல்வலனையும் வீழ்த்தியதையும் தெரிவிக்கின்றார். பின்னர் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றனர். அகத்தியரோ எனில் இவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். அவர்களை வரவேற்ற அகத்தியர் முறைப்படி முதலில் அக்னிக்கு உணவு படைத்துவிட்டுப் பின்னர் வந்த அதிதிகளுக்கும் உணவு படைக்கின்றார். அதன் பின் ராமனிடம் ஒரு வில், அம்புகள், ஒரு கத்தி ஆகியவற்றைக் கொடுத்துவிட்டுச் சொல்கின்றார்:விச்வகர்மாவினால் செய்யப் பட்ட இந்த வில் மகாவிஷ்ணுவுடையது. இந்த இரு அம்பறாத் தூணிகள் இந்திரனால் கொடுக்கப் பட்டவை. தீக்கு நிகரான பாணங்கள் நிரம்பிய இது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும் தன்மை உள்ளது. மற்றொரு அம்புறாத் தூணியின் அம்பு சூரியனுக்கு நிகரானது. இந்தக் கத்தி தெய்வத் தன்மை வாய்ந்தது. இவற்றை நீ என்னிடமிருந்து இப்போது பெற்றுக் கொள் என வருங்காலம் அறிந்தவராய்ச் சொல்லுகின்றார்.

பின்னர் அந்த இடத்தில் இருந்து இரண்டு யோசனை தூரத்தில் உள்ள பஞ்சவடி என்னும் இடத்திற்குச் சென்று அங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்குமாறும் கூறுகின்றார். ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு ராமன், சீதையுடனும், லட்சுமணனுடனும் பஞ்சவடி செல்லும் வழியில் ஜடாயு என்னும் பெரிய கழுகைக் கண்டார்கள். முதல் பார்வையில் அந்தக் கழுகரசனை ஓர் அரக்கன் என நினைத்தனர் மூவரும். பின்னர் அந்தக் கழுகரசனின் வரலாற்றைக் கேட்டறிந்து கொள்கின்றனர். தன் வரலாற்றைக் கூறிய அந்தக் கழுகு தன் வம்சாவளியைக் கூறி இறுதியில் அருணன் என்பவனுக்குத் தான் பிறந்ததாயும், தன் தமையன் பெயர் சம்பாதி எனவும், தன் பெயர் ஜடாயு எனவும் கூறுகின்றது. இந்தப் பஞ்சவடியிலேயே அவர்களைத் தங்குமாறு கூறிவிட்டுப் பின்னர் சீதைக்குத் தான் பாதுகாப்பாய் இருப்பதாயும் உறுதி அளிக்கின்றது. தசரத மன்னன் தனக்கு நண்பன் எனவும் சொல்கின்றது அந்தக் கழுகு.

பின்னர் பஞ்சவடியை அடைந்த ராம, லட்சுமணர்கள் அங்கே ஒரு பர்ணசாலையை எழுப்பி, கோதாவரி நதியில் நீராடி, சாத்திர முறைப்படி பர்ண சாலையில் வழிபாடுகள் நடத்தி அங்கே வாழ்க்கையைத் துவக்குகின்றார்கள். அப்போது பருவம் மாறிக் குளிர்காலம் வந்துவிட லட்சுமணன் அங்கே உள்ள குளிரைப் பற்றிச் சொல்லிவிட்டுப் பரதனை நினைக்கின்றான். பரதனின் நற்குணத்தையும், ராமனின் பால் அவன் கொண்டுள்ள அன்பையும் பற்றிப் பேசிய லட்சுமணன், பரதன் இந்தக் குளிரிலும் ராமன் மீதுள்ள அன்பால் பரதனும் தரையில் படுத்துக் காட்டு வாழ்க்கையை மேற்கொண்டானே என மனம் வருந்திக் கைகேயியை நிந்தித்துப் பேச, ராமர் அவனைத் தடுக்கின்றார். இப்படியே ஒரு சமயம் இல்லாமல் பல சமயங்களிலும் இவர்கள் பழங்கதைகளையும்,மேலே நடக்கவேண்டியதும் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் வந்தாள் சூர்ப்பனகை! இவளைக் கம்பர் எவ்வாறு வர்ணிக்கின்றார் என்று மட்டும் ஒரே ஒரு அருமையான பாடல்:
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்"
எவ்வளவு அழகான வர்ணனை? அன்னம் என மின்னினாளாம் அந்த வஞ்ச மகள். அவளின் மற்ற காரியங்கள் பற்றி நாளை பார்க்கலாமா? இந்த சூர்ப்பனகை ஏன் ராமனையும், சீதையையும் பழி வாங்க வேண்டும்? சீதையின் மேல் கொண்ட பொறாமை ஒரு பக்கம் என்றாலும், அவளின் முக்கிய நோக்கம், ராவணனைப் பழி வாங்குவதே என்றும் ஒரு கூற்று. இதைத் திருத்தணித் திருப்புகழில் அருணகிரிநாதர் கூறி உள்ளது, பின்னர் பார்க்கலாம்.
*************************************************************************************
மகாராஷ்டிராவின் நாசிக் நகரின் வெளியே ஒரு 20 கி.மீ தூரத்தில் உள்ளது இந்தப் பஞ்சவடி. ஆனால் இதன் உண்மையான பெயர் பத்மபுரம் என்றே அங்குள்ளோர் சொல்கின்றனர். ஐந்து பெரிய ஆலமரங்கள் சூழ்ந்த அந்த இடம் ஆலமரத்தை வடமொழியில் "வடி" எனச் சொல்வதால் ஐந்து ஆலமரங்கள் சூழ்ந்த இடம் என்ற பெயரால் "பஞ்சவடி" என அழைக்கப் பட்டதாய்க் கூறுகின்றார்கள். இந்த மாதம் ஏப்ரம் ஆறாம் தேதி அன்று பஞ்சவடிக்குச் சென்று, தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாங்கள் சென்ற போது மதியம் 11-00 மணி அளவில் இருக்கலாம். சுமார் 500 பேர் உள்ள எங்கள் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் எங்களுக்கு வந்த வழிகாட்டி, அந்த வெயிலில், (அப்படி ஒண்ணும் அதிகம் வெயில் இல்லை, சொல்லப் போனால் குளிர் போகாமல் தான் இருந்தது) நடந்தே பஞ்சவடி போகலாம், ராமன் தண்டகாரண்யத்தில் இருந்து நடந்து வந்திருக்கின்றான், நாம் என்ன இந்த மூன்று கி.மீ. நடக்கக் கூடாதா எனக் கேட்க மொத்தக் கூட்டமும் நடந்தே சென்றோம். போக்குவரத்து ஸ்தம்பிக்க நாங்கள் சென்றோம். ஐந்து ஆலமரங்கள், அங்கே ராணி அகல்யாவால் ஏற்படுத்தப் பட்ட ராமர் கோவில் அனைத்தையும் தரிசித்தோம். ராமர், லட்சுமணர் வெளியே சென்றிருக்கும் வேளையில் சீதை தங்கி இருந்த குகையும் அங்கே உள்ளது. ஆனால் குகைக்குள் செல்லும் வழி மிக மிகக் குறுகியது. கொஞ்சம் குனிந்து, கொஞ்சம் தவழ்ந்து, கொஞ்சம் ஊர்ந்து சென்று தரிசித்துவிட்டுப் பின்னர் அதே மாதிரியில் வேறு வழியாக வெளியே வர வேண்டும். ஆனால் எனக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் அனுமதி மறுக்கப் பட்டது. என் கணவரும் அதிக உயரம் காரணமாய் உள்ளே செல்ல முடியாமல் அவரும் செல்ல முடியவில்லை. என்றாலும் சென்றவர்கள் கூறியதைக் கொண்டு உள்ளே விக்ரகங்கள் இருப்பதாயும், வழி மிகக் குறுகல் எனவும் அறிந்தோம். சில வருடங்கள் முன்னர் கூடக் காடாக இருந்த அந்த இடம் தற்சமயம் கட்டிடங்களால் நிரம்பி இயற்கைச் சூழல் மாறிவிட்டது எனவும் சொல்லிக் கொண்டனர். சீதைக்காக லட்சுமணன் எழுப்பிய கோதாவரி நதியின் குளம் ஒன்றும், ராம தீர்த்தம் என்ற பெயரில் அங்கே உள்ளது. கோதாவரி அங்கே தான் ஆரம்பிக்கின்றது.

Monday, April 21, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 22


இங்கே சித்திரகூடத்தில், ரிஷி, முனிவர்கள் அனைவரும் ஏதோ மனக்கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட ராமர் அவர்களிடம் என்னவென விசாரிக்க, ராட்சசர்கள் துன்புறுத்துவதாயும், அதிலும் கரன் என்பவன் ராவணனின் சகோதரன் என்றும் அவன் ஸ்ரீராமன் மீது பெரும்பகை கொண்டு அதன் காரணமாய் ரிஷி, முனிவர்களை ராமன் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றான் என்று கோபம் கொண்டு யாகங்களைக் கொடுப்பதாயும் வேறு இடம் நாடி அவர்கள் போகப் போவதாயும் சொல்கின்றார்கள். தன் தாய்மார்கள், தம்பிமார்கள், குடிமக்கள் வந்து சென்றதில் இருந்து அதே நினைவாக இருந்து வந்த ஸ்ரீராமரும் தாங்களும் வேறு இடம் நாடிச் செல்லலாம் என யோசித்து, லட்சுமணனோடும், சீதையோடும் அங்கிருந்து கிளம்பி சித்ரகூடத்தில் இருந்து அத்ரி முனிவரின் ஆசிரமத்தை வந்தடைகின்றார். அத்ரி முனிவரும், அவர் மனைவி அனசூயாவும் தவ நெறிகளில் சிறந்து விளங்குபவர்கள்.அதிலும் அனசூயை தன் தவ வலிமையால் மும்மூர்த்திகளையுமே குழந்தைகள் ஆக்கிப் பிள்ளைகளாக மாற்றியவள். தன் தவ வலிமையால் கங்கையைப் பாலையில் ஓடச் செய்தவள். பெரும் விவேகி. அதனால் கொண்ட பெரும் உள்ளம் படைத்தவள். அவள் சீதையைத் தன் மகள் போலவே எண்ணி மிக்க பரிவுடன் அவளை வரவேற்றுப் பின்னர் சீதையின் திருமணக் கதையை அவள் வாயிலாகவே கேட்டறிகின்றாள். பின்னர் தனக்குக் கிடைத்த புனித மாலை, தன்னிடமிருக்கும் நகைகள் போன்றவற்றைச் சீதைக்கு மனம் உவந்து அளித்து மகிழ்கின்றாள். பின்னர் அந்த ஆபரணங்களைச் சீதைக்கு அணிவித்து அழகு பார்த்துவிட்டுப் பின்னர் ராமரோடு மீண்டும் காட்டு வழியில் சீதை யை லட்சுமணன் பின் தொடர அனுப்புகின்றாள். இத்தோடு அயோத்தியா காண்டம் முடிகின்றது. இனி ஆரண்ய காண்டம் ஆரம்பம்.

ஆரண்ய காண்டம்: தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்த ராமரும், லட்சுமணனும், சீதையும் அங்கிருந்த முனிபுங்கவர்களை வணங்கிப் பிரார்த்தித்துக் கொண்டு பின்னர் காட்டினுள் மீண்டும் வெகு தூரம் செல்கின்றார்கள். அப்போது அங்கே கண்ணெதிரே தோன்றினான் ஒரு அரக்கன். விராதன் என்னும் பெயர் கொண்ட அந்த அரக்கன் சீதையைத் தூக்கிக் கொண்டு, நீங்கள் இருவரும் பார்க்க ரிஷிகளைப் போல் இருக்கின்றீர்கள். உங்களுக்கு எதற்கு ஒரு பெண் கூடவே? உண்மையிலேயே துறவிகள் ஆனால் பெண்ணைக் கூட வைத்திருப்பது எவ்வாறு? உங்கள் இருவரையும் கொன்றுவிட்டு, இவளை நான் மனைவியாக்கிக் கொள்கின்றேன், எனச் சொல்லிவிட்டு சீதையைத் தூக்க, ராமர் கோபம் கொண்டு, தன் தாயான கைகேயியின் நோக்கமும் இதுவோ என ஒரு கணம் மயங்க, அவரைத் தேற்றிய லட்சுமணன் அந்த அரக்கனோடு போரிட ஆயத்தம் ஆகின்றான். போரில் அவனைக் கொல்ல முடியவில்லையே என யோசிக்கும்போது ராமருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. இவன் தவத்தின் காரணமாய் வெல்ல முடியாத தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு பெரிய குழி தோண்டி இவன் உடலைக் குழிக்குள் புதைப்பது ஒன்றே வழி எனக் கூறவும், மனம் மகிழ்ந்த அந்த அரக்கனோ, ராமனைப் பார்த்து, “இந்திரனுக்குச் சமம் ஆனவன் நீ. உன்னை நான் முதலில் புரிந்து கொள்ளவில்லை. நீ யார் என நான் இப்போது உணர்கின்றேன்.” என்று கூறிவிட்டுத் தான் தும்புரு என்ற பெயர் கொண்ட ஒரு கந்தர்வனாய் இருந்ததாகவும், குபேரனின் சாபத்தால் அரக்கத் தன்மை பெற்றதாயும் அப்போது குபேரம் தசரதனின் மகன் ஆன ஸ்ரீராம்னால் சாப விமோசனம் கிடைத்துத் திரும்ப கந்தர்வ உலகை அடைவாய் எனவும் கூறியதாகவும், இப்போது ராமர் தன்னை குழிக்குள் தள்ளி மூடிவிட்டால் தான் விடுதலை பெற முடியும் எனக் கூறிப் பணிவோடு வணங்க, ராமரும் அவ்வாறே செய்து அவனை விடுவிக்கின்றார். பின்னர் மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்று அவரை வணங்குகின்றார்கள். முனிவரை தேவ லோகம் அழைத்துச் செல்ல வந்திருந்த தேவேந்திரன், ராவண வதம் முடியும் முன்னர் ராமனைக் காணவிரும்பவில்லை என முனிவரிடம் சொல்லிவிட்டு அங்கே இருந்து ராமன் வருமுன்னரே விடை பெற்றுச் செல்ல, பின் சரபங்க முனிவர் தான் தீ வளர்த்து ஹோமம் செய்து சரீரத்தை விட்டுவிடப் போவதாயும், சுதீஷ்ண மகரிஷியைச் சென்று பார்க்கும்படியும் ராமரிடம் கூறிவிட்டு அவ்வாறே தீ வளர்த்து ஹோமத்தில் புகுந்து மறைந்து போகின்றார். சுதீஷ்ணரிடம் சென்று, பின்னர் அங்கிருந்து முன்னேறிச் செல்லும் வழியில் சீதை ராமரிடம் அரக்கர்கள் நமக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை என்பதால் அவர்களை அழிக்க வேண்டாம் . முனிவர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தண்டகாரண்யத்தில் முன்னேறி அரக்கர் இடம் தேடிப் போகவேண்டாம் என்றும், ஆயுதங்களின் நட்பு ஒரு துறவியைக் கூடக் கொடியவனாய் மாற்றும் சக்தி படைத்தது எனவும் கூறுகின்றாள். ராமர் அவளை மறுத்து, தாம், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கு வாக்குக் கொடுத்திருப்பதாயும், ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் தவ வலிமையாலேயே அரக்கர்களையும், ராட்சதர்களையும் அழிக்கும் வல்லமை உள்ளவர்களே என்றாலும் அவர்களை அழிப்பதும், ரிஷி, முனிவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் தன் கடமை என்றும், அவர்கள் கேட்கவில்லை என்றாலும் தாம் இதைச் செய்வதே தமது தர்மம் என்றும் கூறிச் சீதையை சமாதானம் செய்கின்றார். பின்னர் பல முனிவர்களின் ஆசிரமங்களுக்கும் சென்றுவிட்டு அங்கெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு, ஒவ்வொரு இடமாய்ச் செல்கின்றனர், மூவரும். பத்து வருடங்கள் சென்றபின்னர் மீண்டும், ராமரும், லட்சுமணரும், சீதஒயோடு சுதீஷ்ணரின் ஆசிரமத்தும்மு மீண்டும் வருகின்றார்கள். அவரிடம் அகஸ்திய முனிவர் இந்தக் காட்டில் வாழ்வதாயும், அவர் இருக்குமிடம் எது எனவும் வினவ சுதீஷ்ணரும் அகத்தியரின் ஆசிரமம் செல்லும் வழியைக் கூறுகின்றார். ராமர் தன் தம்பியோடும், மனைவியோடும் அகத்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்.

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 21


அனைவருக்கும், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் இரண்டின் ஒப்பீட்டையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிலர் அதிகம் கம்பனே வருவதாயும், இன்னும் சிலர் இந்த ஒப்பீடு தேவை இல்லை எனவும் சொல்கின்றனர். ஆகவே கூடியவரையில் வால்மீகியை மட்டுமே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். வால்மீகியைப் படிச்ச அளவுக்குக் கம்பனைப் படிக்கவில்லை, கம்பனின் பாடல்களின் அழகு மனதை ஈர்க்கின்றது மட்டுமில்லாமல், ஒருமித்த தெய்வீக எண்ணங்களின் கோர்வையும் மனதைக் கவருகின்றது என்பதாலோ என்னமோ சில சமயங்களில் இந்த ஒப்பீடு என்னால் தவிர்க்க முடியலை. என்றாலும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்திக்க முயலுகின்றேன். இனி, பாதுகா பட்டாபிஷேகம் தொடரும். முந்தாநாள் கதையில் விவாதம் ஆரம்பிக்கும் முன்னரே படம் போட்டாச்சா என்று திவா கேட்டிருந்தார். வேறே படம் கைவசம் உள்ளது அதற்குப் பொருந்துமாறு இல்லை என்பதால் விவாதம் முடியும் முன்னரே படம் போட்டு விட்டேன். கைவசம் உள்ள படங்களில் வேறு எதுவும் பொருந்தாத காரணத்தால் போட்டேன். பழைய புத்தகம் ஒன்றில் இருந்து இந்தப் படத்தை அனுப்பிய திவாவுக்கு என் நன்றி.

தன்னை நாட்டை ஆளுமாறு கேட்டுக் கொண்ட பரதனை ப் பார்த்து ஸ்ரீராமர், “நீ உன் தர்ம நெறியை விட்டு விலகிப் பேசக் கூடாது. நமது தந்தையின் கட்டளையின் பேரிலேயே நான் காட்டிற்கு வந்துள்ளேன். அவருடைய வார்த்தையை நான் மீற முடியாது. நீயும் மீறக் கூடாது. அவர் கூறியபடியே நீயே உன் கடமையை ஏற்றுக் கொள்.” என்று சொல்கின்றார். மறுநாள் தந்தைக்கு ஆற்ற வேண்டிய ஈமக் கடன்களைச் செய்துவிட்டு. ராமர் மீண்டும், பரதனுக்குத் தர்ம நியாயத்தை எடுத்துக் கூற ஆரம்பிக்க, பரதன் மறுக்கின்றான். தன் தாயாருக்குத் தசரத மன்னர் அளித்த இந்த ராஜ்யம் தற்சமயம் தனக்குச் சொந்தமானது என்றும், அதைத் தான் தன் இஷ்டப் படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்றும், அதைத் தான் ஸ்ரீராமருக்கு அளிப்பதாயும், அவர் உடனே வந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கேட்டுக் கொள்கின்றான். ஆனால் மறுத்த ஸ்ரீராமர், மீண்டும் தந்தையின் கட்டளையை மீற முடியாது எனக் கூறிவிட்டு, அயோத்தி உன் ராஜ்யம், இந்தக் காடும், மிருகங்களும் என் ராஜ்யம், தந்தை எனக்களித்த பொறுப்பு இது, இதை நிறைவேற்றுவது நம் இருவரின் கடமை என்கின்றார். ஆனால் பரதனோ, “என் தாயின் கோபத்தினாலோ, அல்லது அவளுடைய சாகசத்தினாலோ நம் தந்தை எனக்களித்த இந்த ராஜ்யம் என்னும் பொறுப்பு எனக்கு உகந்தது அல்ல. நான் இதை வெறுக்கின்றேன். நம் தந்தை பல புண்ணிய காரியங்களைச் செய்தும், சிறப்பான யாகங்களைச் செய்தும், குடிமக்களை பல விதங்களில் மகிழ்வித்தும் நல்லாட்சியே புரிந்து வந்தார். அவரைப் பழித்து நான் கூறுவதாய் நினைக்கவேண்டாம். இப்படிப் பட்ட ஒரு தர்ம நெறிமுறைகளை அறிந்த மனிதன், பெண்ணாசையில் மூழ்கி, ஒரு பெண்ணின் திருப்திக்காக அடாத ஒரு பாவச் செயலைச் செய்வானா? “வினாச காலே விபரீத புத்தி!” என்னும் பழமொழிக்கு இணங்க, அழியக் கூடிய காலம் வந்ததால் அன்றோ அவர் புத்தி தடுமாற்றம் ஏற்பட்டது? ஒரு மனிதனுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், சந்நியாசம் இவை நான்கிலும் இல்லறமே உகந்தது எனப் பெரியோர்கள் பலரும் கூறி இருக்கத் தாங்கள் இவ்வாறு அதை உதறித் தள்ளலாமா? மன்னன் மரவுரியை ஏற்கலாமா? குடிமக்களைக் காப்பாற்றுவதும், அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதும் ஒரு க்ஷத்திரியனின் கடமை அல்லவா?” என்றெல்லாம் கேட்கின்றான். அப்போது பரதனோடு சேர்ந்து அனைவரும் ஸ்ரீராமனை நாடு திரும்ப வற்புறுத்துகின்றனர்.

அப்போது ஸ்ரீராமர் அது வரை யாரும் கூறாத ஒரு செய்தியைக் கூறுவதாய் வால்மீகி கூறுகின்றார். அதாவது, கேகய மன்னன் ஆகிய பரதனின் பாட்டனாரிடம், தசரதன், கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்யம் ஆளும் உரிமையைத் தான் அளிப்பதாய்க் கூறியதாய்க் கூறுகின்றார். இது பற்றி வேறு தெளிவான கருத்து வேறு யார் மூலமும் இல்லை. வசிஷ்டரோ, அல்லது தசரத மன்னனிடம் வரம் கேட்கும் கைகேயியோ, அவளைத் தூண்டும் மந்தரையோ, அல்லது கேகய மன்னனே கூடவோ, யாரும் இது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதாய்க் கூறவில்லை வால்மீகி. ஆகவே ஒரு வேளை பரதன் ஸ்ரீராமன் இவ்வாறு கூறினால் மனம் மாறி நாட்டை ஏற்றுக் கொள்ளலாம் என்ற காரணத்தால், ஒரு சாதாரண மனிதனாகவே வால்மீகியால் குறிப்பிடப் படும் ஸ்ரீராமன் இவ்வாறு கூறி இருக்கலாம் என்ற கருத்துக்கே வரும்படியாய் இருக்கின்றது. அப்போது அங்கே அயோத்தியில் இருந்து வந்திருந்த பல முனிவர்களில் ஒருவரான ஜாபாலி என்பவர் ராமரைப் பார்த்துக் கூறுகின்றார். ஜாபாலி பேசுவது நாத்திக வாதம். முன் காலத்தில் நாத்திகமே இல்லை, என்றும், வேதங்களில் கூடச் சொல்லப் படவில்லை என்றும் பலரும் நினைக்கலாம். இறைவன் என்ற தத்துவம் ஏற்பட்ட நாளில் இருந்தே நாத்திகம் என்ற தத்துவமும் இருந்தே வருகின்றது. எவ்வாறு இறை ஏற்பு இருக்கின்றதோ, அவ்வாறே இறை மறுப்பும் இருந்தே வந்திருக்கின்றது. இன்று புதியதாய் எதுவும் வரவில்லை. ஜாபாலி ஸ்ரீராமனிடம் சொல்கின்றார்: “ஏ, ராமா, நீ என்ன பாமரத் தனமாய்ப் பேசுகின்றாய்? சிந்திக்கின்றாய்? யார் யாருக்கு உறவு? ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அனைவருமே தனித்தனியாய்த் தானே பிறக்கின்றார்கள். பயணம் செய்யும் மனிதன் ஒரு நாள் ஒரு ஊரைக் கடப்பது போலவும், இரவு தங்குவது போலவும் உள்ள இந்த வாழ்க்கையில் யார் தந்தை? யார் மகன்? தசரதன் உனக்குத் தந்தை என்பதற்கு அவன் ஒரு கருவி மட்டுமே! நீ கற்பனையாக உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வீணில் வருந்தாதே! நீ இப்போது உன் தந்தைக்குச் செய்த ஈமக் கடன்களினால் என்ன பயன்? உன் தந்தையோ இறந்துவிட்டான். அவனால் எதை உண்ண முடியும்? இந்த உணவை இப்போது நீ இங்கே படைத்தது வெறும் வீணே! பயணம் செய்யும் நமக்குக் கையில் தானே உணவு எடுத்துச் செல்கின்றோம்? அப்படி இருக்க இறந்தவனுக்கு இங்கே உணவு படைத்தால் அது அவனுக்குப் போய்ச் சேருமா என்ன? இவை எல்லாம் தான, தர்மங்களை எதிர்பார்ப்பவர்களால் சாமர்த்தியமாக விதிக்கப் பட்ட வழிமுறைகள். நீ இப்போது ராஜ்யத்தைத் துறப்பது என்பதும் உன் குலத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம். ராஜ்யத்தை ஏற்று அதனுடன் கூடி வரும் சுகங்களை அனுபவிப்பாயாக!” என்று கூறவே உள்ளார்ந்த கோபத்துடன் ராமர் கூறுகின்றார்.

“ராஜ்யத்தை நான் ஏற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தாங்கள் இவ்வாறு பேசுவது முறையன்று. ஒரு அரசனுக்கு உண்மை தான் முக்கியம். சத்திய பரிபாலனம் செய்வதே அவன் கடமை. உலகின் ஆதாரமும் சத்தியமே ஆகும். அந்தச் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு என் தந்தை என்னைக் காட்டுக்குப் போகச் சொல்ல, அவருக்கு நானும் சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றேன். என்னால் அதை மீற முடியாது. எனக்கு முற்றிலும் கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றை நீங்கள் சொல்கின்றீர்களே? என் தந்தை உங்களை எப்படி ஏற்றார் என்று எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. நாத்திக வாதம் பேசும் நீங்கள் இந்த முனிவர்கள் கூட்டத்தில் எப்படி இருக்க முடிகின்றது?” என்று கூறவும், வசிஷ்டர் ராமனிடம் ஜாபாலி அவ்வாறு பேசியது தர்ம, நியாயத்தை அறிந்தே தான் என்றும், அவருக்கு ஏற்கெனவேயே இதன் முடிவு தெரியும் என்றும், அவர் பேசிய வார்த்தைகளினால் அவரைப் பற்றிய தவறான முடிவுக்கு வரவேண்டாம் எனவும் கூறிவிட்டு ராமனிடம் அயோத்தி திரும்பும் யோசனையை வற்புறுத்துகின்றார். ராமர் மீண்டும் பரதனுக்கு அறிவுரைகள் பலவும் சொல்லி, அயோத்தி சென்று நாடாளச் சொல்ல, பரதன் கண்ணெதிரில், ரிஷிகளும் கந்தர்வர்களும் தோன்றி ராமரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்படி சொல்ல, திடுக்கிட்ட பரதன் ராமன் காலில் விழுந்து கதறுகின்றான். அவனைச் சமாதானப் படுத்திய ராமரிடம் பரதன் ராமரின் காலணிகளைக் கேட்டு வாங்கினான். ஆட்சியின் மாட்சிமை ராமனின் காலணிகளுக்கே உரியவை என்றும், ராமர் வரும்வரை தானும் மரவுரி தரித்து, காய், கிழங்குகளையே உண்டு, நகருக்கு வெளியே வாழப் போவதாயும் நிர்வாகத்தை மட்டும் தான் கவனிப்பதாயும், பதினான்கு ஆண்டுகள் முடிந்த மறுநாள் ராமன் அயோத்தி திரும்பவில்லை எனில் தான் தீயில் இறங்குவதாயும் சபதம் எடுத்துக் கொண்டு, ராமனின் காலணிகளைப் பெற்றுக் கொண்டு அயோத்தி திரும்புகின்றான். அங்கே ராமனின் காலணிகளைச் சிம்மாசனத்தில் வைத்துவிட்டுத் தான் நந்திகிராமம் என்னும் பக்கத்து ஊருக்குச் சென்று அங்கிருந்து அரசின் காரியங்களை ராமரின் பாதுகைகளை முன்னிறுத்த நடத்த ஆரம்பிக்கின்றான் பரதன்.

இரண்டே இரண்டு பாடல் மட்டும் போட்டுக்கறேனே? (:D)
“விம்மினன் பரதனும் வேரு செய்வது ஒன்று
இ ன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித் தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.”

Saturday, April 19, 2008

கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 20


"மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல்
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல்
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ" : ஆறு செல் படலம்: பாடல் எண் 939

என்று வசிஷ்டர் தன்னை முடிசூடச் சொன்னபோது, பரதன் வசிஷ்டனைப் பார்த்துப் பழித்துச் சொன்னதாய்க் கூறுகின்றார் கம்பர். மூத்த மகனுக்கே உரியதான அரசுரிமையைப் பறித்து எனக்குக் கொடுத்த என் தாயின் செயல் நீதியானதும், தர்மத்துக்கு உரியதும் என்றாகிவிடுமே எனக் கேட்கின்றான். பின்னர் அனைவரும் ராமனை அழைத்துவரப் புறப்பட்டுக் கங்கைக் கரையை வந்தடைய, அவர்களையும், பெரும்படையையும் முதலில் பார்த்த குகனின் மனதில் சந்தேகம் வருகின்றது. ராமனுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்துடன் பரதன் இவ்வளவு பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றானோ என்ற எண்ணத்துடனேயே அவனைச் சென்று சந்தித்து, உபசாரங்கள் பலவும் செய்து, பின்னர் அவன் வந்த காரியம் யாது என வினவுகின்றான். பாரத்வாஜ ஆசிரமம் செல்லும் வழி எது என பரதன் கேட்க, "நானே கங்கையைக் கடந்து கொண்டு விடுகின்றேன், ஆனால் தாங்கள் ராமனுக்குத் தீங்கு செய்யும் எண்ணத்தோடு வந்திருக்கின்றீர்களோ?" எனக் குகன் வினவுகின்றானாம். ராமனுக்குத் தீங்கா? ஒருகாலும் இல்லை. என் தந்தை இறந்ததுமே என் மூத்த சகோதரன் ஆன ராமன் எனக்குத் தந்தை ஆகிவிட்டான். அவனுக்குத் தீங்கு இழைக்க நான் எவ்விதம் துணிவேன்?" என்று பரதன் சொல்ல குகன் மனம் மகிழ்ந்தான். இங்கே கம்பர் சொல்வது என்னவென்றால் பரதன் வருவது தெரிந்ததுமே, கோபம் கொண்ட குகனைத் தேடி பரதன் போவதாயும், அவனைக் கண்டதுமே குகன் திகைத்ததாயும் தெரிவிக்கின்றார். ஏன் திகைக்கின்றான் குகன் என்றால் அயோத்தியில் இருந்து ராமனைத் தேடி வரும்போதே பரதனும், சத்ருக்கனனும் மரவுரி தரித்தே வந்தார்களாம். அதைக் கண்டதுமே பரதனின் நல்ல உள்ளம் குகனுக்குப் புரிந்து விட்டதாம். ஆனால் வால்மீகியில் பரதன் மரவுரி தரிப்பது இனிமேல் தான் வரும். இதைக் கம்பர் இவ்வாறு கூறுகின்றார்.

"அஞ்சன வண்ணன் என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ"
கங்கை காண் படலம்: பாடல்: 998

எனக் குகன் ராமனை நாடாளவிடாமல் செய்த பரதன் வந்துவிட்டானே எனப் பதறுகின்றானாம். குகனைக் கண்ட சுமந்திரர் பரதனிடம் அவன் ராமனின் நண்பன் என உரைக்க பரதன் தானே அவனைக் காண்போம் எனக் கிளம்புகின்றான் என்று கம்பர் இவ்வாறு கூறுகின்றார்:

"தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முத்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான்
மன் முன்னே தழீ இக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல்
என் முன்னே அவற் காண்பென் யானே சென்று என எழுந்தானே!"
கங்கை காண் படலம்: பாடல் 1011.
என்று பரதன் கிளம்பிக் குகனைக் காண அவனைக் கண்ட குகன் இவ்வாறு சொல்கின்றான்: பாடல் 1014
"நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவில்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்."

என ராமனைப் போலவே ஆடவரிற் சிறந்தவனாய் விளங்கும் இந்தப் பரதனும், அவன் அருகே நிற்கும் சத்ருக்கனனும், ராமனைப் போலவே தவ வேடம் பூண்டு, அவன் இருக்கும் தென் திசை நோக்கித் தொழுத வண்ணம் துன்புற்ற மனதோடு இருக்கின்றனரே? இவர்கள் ஸ்ரீராமனின் தம்பியர் தவறேதும் செய்வார்களோ?"என எண்ணிக் கொண்டானாம். மேலும் குகன் சொல்கின்றான் பரதனைப் பார்த்து: பாடல் 1019

"தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா."

என்று ஆயிரம் ராமர் கூட உனக்கு இணையாக மாட்டார்கள், அப்படி நீ, உன் தாயின் கொடுஞ்செயலால் உனக்குக் கிடைத்த ராஜ்யம் வேண்டாம் என உதறிவிட்டு, துயரதோடு ராமனைத் தேடி வந்துள்ளாயே என்று போற்றுகின்றான். மேலும் குகன் சொல்வதாவது: பாடல் எண் 1020

"என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்!"

எவ்வாறு சூரியன் தன் ஒளியால் சந்திரனையும் மற்றவற்றையும் மறைத்து விடுகின்றதோ, அவ்வாறே உன் குலப்புகழ் கூட நீ இப்போது செய்யும் இந்தக் காரியத்தினால் மறைந்து போய் உன் புகழே மேம்பட்டு விளங்குகின்றது என்று கூறினானாம் குகன். பின்னர் குகனின் உதவியோடு பரத, சத்ருக்கனர் கங்கையைக் கடக்கின்றனர். பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்ததும், பரதனின் விருப்பத்தை அறிந்து மகிழ்ந்த பரத்வாஜர் பரதனுக்கும், அவனுடன் வந்த சேனைகள், பரிவாரங்களுக்கு விருந்து அளித்துக் கெளரவிக்கின்றார். பரதனுடன் அவனுடைய தாய்மார்கள் மூவரும் சென்றதாய்க் கம்பரும் கூறுகின்றார். வால்மீகியும் அவ்வாறே கூறி இருக்கின்றார். தன் தாய்மார்களை பாரத்வாஜ முனிவருக்கு அறிமுகம் செய்த பின்னர் சித்திர கூடம் செல்கின்றார்கள் பரதனும் படை வீரர்களும்.

சித்திரகூடத்தில் ராமரும், சீதையும் அதன் அழகைப் பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் காட்டு மிருகங்கள் நாலாபக்கமும் பதறி ஓட, பெரும் புழுதி எழுந்து வானை மறைக்கக்கண்டார் ராமர். உடனேயே லட்சுமணன் ஒரு உயரமான மரத்தின் மேல் ஏறிக் கொண்டு பார்க்க, தூரத்தே ஒரு பெரிய சேனை வருவது தெரிகின்றது. முன்னே வரும் நாட்டுக் கொடியில் அயோத்தியின் சின்னம் ஆன அத்திக் கொடி தெரியக்கோபம் கொண்ட லட்சுமணன், பரதன் பெரும்படையோடு வந்து நம்மைக் கொல்லப் பார்க்கின்றான் என்றே எண்ணுகின்றான். அதை ராமனிடம் சொல்ல அவரோ நம்ப மறுக்கின்றார். பரதன் அப்படிப் பட்டவனே இல்லை என உறுதியாக மறுக்கின்றார். ஒருவேளை தந்தையே நேரில் வருகின்றாரோ என லட்சுமணன் நினைக்க இல்லை வெண்கொற்றக் குடை இல்லையே என ராமர் கலங்க பரதன் வந்து சேருகின்றான். அண்ணனை, நாடாள வேண்டியவனை, ஒரு மரத்தடியில் மரவுரி தரித்த கோலத்தில் அமர்ந்திருக்கக் கண்ட பரதன் நெஞ்சம் பதறுகின்றது. ஓடி வந்து அண்ணன் காலடியில் விழுகின்றான். சத்ருக்கனனும் உடன் வந்து வணங்க, தாய்மார், தந்தையை விட்டு விட்டு வந்ததன் காரணம் என்ன? தந்தையைப் பார்த்துக் கொள்வார் யார் என ராமர் பரதனைப் பார்த்து வினவுகின்றார். பரதன் அவரைத் திரும்ப நாடாள வரவேண்டும் என வேண்ட, ராமர் அதை மறுத்துத் தர்ம, நியாயங்களை எடுத்துச் சொல்கின்றார்.

அப்போது பரதன் தந்தை இறந்தார் எனச் சொல்ல திகைத்த ராமர் துக்கம் தாங்க முடியாமல் விம்மி, அழுகின்றார். ராமர் அழும் சத்தம் கேட்டுக் கூட வந்த மற்றவர்கள் பரதன் ராமனைக் கண்டு பேசிவிட்டான் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வருகின்றார்கள். தாய்மார் மூவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ராமரைப் பார்த்து அவர்களும் கதறி அழ, ராமர் பரதனை பார்த்து வந்த காரணம் என்ன என மீண்டும் வினவ, ராமன் வந்து நாடாள ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றான் பரதன். சகோதரர்களுக்குள் விவாதம் தொடங்குகின்றது.

Friday, April 18, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19.ராமன் காட்டுக்குச் சென்ற ஆறு நாட்கள் கழிந்த பின்னரே தசரதன் இறந்ததாய் வால்மீகி குறிப்பிடக் கம்பரோ சுமந்திரர் திரும்பி வந்து, தன்னுடன் ராமன் வரவில்லை எனக் கூறியதுமே உயிர் பிரிந்ததாய்க் கூறுகின்றார். சுமந்திரர் திரும்பியதுமே வசிஷ்டர் முகத்தைப் பார்த்ததுமே மன்னன் இவ்வாறு நினைத்தானாம்: "தைலமாட்டு படலம்: பாடல்: 582, 583

"இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இவ்
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகலப் போனான்."

என வசிஷ்டர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாய் இருந்ததை வைத்தே ராமன் வரவில்லை என அறிந்த தசரதனின் உயிரானது அக்கணமே பிரிந்தததாம்:

"நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும்
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்"

ராமனும், லட்சுமணனும் சீதையுடனேயே மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த காட்டுக்குள்ளே சென்று மறைந்தனர் என்று சுமந்திரன் கூறியதைக் கேட்ட உடனேயே தசரதன் உயிர் பிரிந்ததாம். உடனேயே மன்னனின் உயிரற்ற உடல் பாதுகாக்கப் பட்டது. வசிஷ்ட முனிவரின் தலைமையில் அமைச்சர்களும், மந்திரி பிரதானிகளும், மற்ற முனிவர்களும் ஒன்று கூடி அடுத்து நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி ஆலோசித்து, வசிஷ்டரின் யோசனையின் பேரில் பரதனுக்கு உடனே அயோத்தி திரும்பி வருமாறு தூதர்களை அனுப்ப முடிவு செய்தார்கள். இங்கே நடந்த விபரங்களைச் சொல்லாமலேயே உடனே திரும்புமாறு உத்தரவிட்டால் போதும் எனவும் தெரிவிக்கப் பட்டது. அவ்வாறே தூதர்கள் கேகய நாடு கிளம்பிச் சென்றார்கள். அங்கே கேகய நாட்டிலோ பரதன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான். முதல்நாள் இரவு முடியும் சமயம் அவன் கண்ட கனவு அவனை அவ்வாறு தவிக்க வைத்துக் கொண்டிருந்தது. தன் தந்தையான தசரத மாமன்னர் கழுதை பூட்டிய ரதத்தில் இரும்பு ஆசனத்தில் அமர்ந்து தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டதாகவும், மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போலவும் கனவு கண்டதாகவும் சொல்லி வருந்திக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த சிலர் அவனிடம் அயோத்தியில் இருந்து தூதுவர்கள் வந்திருப்பதாய்க் கூற அவனும் அவர்களைச் சந்திக்கின்றான். அவர்கள் அவனை உடனே நாடு திரும்புமாறு மந்திரி, பிரதானிமார் வேண்டுகோள், குல குருவான வசிஷ்டரும் அவ்வாறே சொல்லி அனுப்பி இருப்பதாய்த் தெரிவிக்க, பரதனோ தன் தாயான கைகேயியைச் சுயநலம் பிடித்தவள் எனக் கூறி அவள் நலமா என விசாரிக்கின்றானாம்.

சித்திரகூடத்தில் ராம, லட்சுமணர்கள், சீதையுடன் சுகமாய் வாழ்வதாய்த் தெரிவித்த பின்னரே, கம்பர் பரதனுக்கு வருகின்றார். கேகய நாட்டில் இருந்து அவன் அயோத்தி வந்து சேர ஒரு வாரம் ஆகின்றதாம், கம்பர், வால்மீகி இருவரின் கூற்றுப் படி! வால்மீகியும், சில நதிகள், சில, பல கிராமங்கள், பல நந்தவனங்கள் ஆகியவற்றைக் கடந்து பரதன் வந்ததாய்த் தெரிவிக்கின்றார். உள்ளே வரும்போதே பல துர்ச்சகுனங்கள் தென்படுகின்றதாம் பரதனுக்கு. சந்தேகத்தோடு தந்தையைக் காண கைகேயியின் மாளிகையை அடைகின்றான் பரதன். பரதனைக் கண்ட கைகேயி, தன் பிறந்த வீட்டையும், அங்கு உள்ள உறவினர்களையும் பற்றி விசாரிக்க, பரதனோ, தந்தை எங்கே, என்றும், அவரைத் தான் உடனே வணங்க வேண்டும் எனவும் கூற, தந்தை இறந்தார் என மிகச் சாதாரணமாகத் தெரிவிக்கின்றாள் கைகேயி. பரதன் அதிர்ச்சியோடு துக்கமும் அடைந்து, கடைசியில் தந்தை என்ன கூறினார் என வேண்ட கைகேயியும்,"ராமா, சீதா, லட்சுமணா!" எனக் கூவிக்கொண்டே உயிரை விட்டார் உன் தந்தை, என மகிழ்வுடன் கூறிக் கொண்டே, ராமனும், சீதையும், லட்சுமணனும் மரவுரி தரித்துக் காட்டுக்குச் செல்ல நேர்ந்த நிகழ்ச்சிகளை பரதனுக்கும் சந்தோஷம் தரும் என நினைத்துச் சொல்கின்றாள். ராமன் காட்டுக்கு அனுப்பப் பட்ட காரணம் கேட்ட பரதனிடம் கைகேயி தன் இரு வரங்களைத் தான் மன்னனிடம் யாசித்தது பற்றிச் சொல்லவும், கோபம் கொண்ட பரதன் கைகேயியைப் பலவாறு நிந்தித்துப் பேசலானான்.

தன் தாயைப்பார்த்து பரதன், "பாம்பினும் கொடியவளே! உன்னாலன்றோ தந்தை இறந்தார்? தமையன் காட்டிற்குச் சென்றான். அவனுக்கு நான் மனதில் எத்தகைய இடம் கொடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிந்திருந்தாயானால் இவ்விதம் செய்திருப்பாயா? முன்னோர்களின் ராஜ்யம் மூத்தவனுக்கே உரியது என்பது இக்ஷ்வாகு குலத்தில் உள்ள மாறுபடாத ஒரு வழக்கம். அதை மாற்ற நீ யார்? ராஜ மரபை மதிக்காத நீயும் ஒரு ராணியா? புண்ணியவான்களை முன்னோர்களாய்க் கொண்ட குடும்பத்தில் பிறந்த நீயா இம்மாதிரியான காரியம் செய்தாய்? ஆஹா, மகனைப் பிரிந்து மன்னர் எவ்வளவு வேதனையில் துடி துடித்து இறந்திருப்பார்? கோசலை தேவியும், அன்னை சுமித்திரையும் தத்தம் மகன்களைப் பிரிந்து எவ்வாறு துக்கத்தில் மூழ்கி இருப்பார்கள்? கன்றைப் பிரிந்த பசுப் போல் கோசலை துடிப்பாரே? அவர் எவ்விதம் இனி உயிர் வாழ்வார்? இக்கேடு கெட்ட செயலுக்கு நான் காரணம் என்றல்லவோ ஆகிவிட்டது? நான் இனி எவ்விதம் என் தாயார்கள் முகத்தையோ, சகோதரர்கள் முகத்தையோ, தேவி சீதையையோ பார்ப்பேன்? அடி, பாவி, அழியாத பழியை என் மீது சுமத்தி விட்டாயே? நீ இந்த ராஜ்யத்தை விட்டுப் போனால் தான் அனைவருக்கும் நிம்மதி!" என்றெல்லாம் கோபமாய்ப் பேசிவிட்டுத் தன் மூத்த இரு தாயார்கள் ஆன சுமித்திரையையும், கோசலையையும் காணப் புறப்படுகின்றான், சத்ருக்கனனுடன். அப்போது கோசலையே அங்கே பரதனின் கோபக் குரல் கேட்டு வருகின்றாளாம், நடக்கக் கூட முடியாமல். என்றாலும் கோசலை அவ்வளவு துக்கத்திலும் பரதனிடம் கடும் மொழிகளையே பேசுகின்றாளாம். துடி துடிக்கும் பரதன் அவள் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்கின்றான்.

தன் தாயின் விருப்பம் தன்னுடையதில்ல எனச் சொல்லும் அவன் ஒரு பாவப் பட்டியல் ஒன்றைக் கோசலையிடம் சொல்லி ராமரைக் காட்டுக்கு அனுப்பியவர்கள் அத்தகைய பாவங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் என்று சொல்லி அழுது புலம்புகின்றான். பின்னர் வசிஷ்டர் பரதனைத் தேற்றி, ஆகவேண்டிய காரியங்களை மன்னனுக்குச் செய்யச் சொல்லி நீத்தார் கடன்களை முடித்து வைக்கின்றார். அப்போது அங்கே வரும் மந்தரையைக் கண்டு சத்ருக்கனன் கோபத்துடன் அவளைத் தண்டிக்க முயலக் கைகேயியால் அவள் காப்பாற்றப் படுவதாய் வால்மீகி கூறுகின்றார். பின்னர் பரதன் தான் நேரில் காட்டுக்குச் சென்று ராமனைச் சந்தித்து நாட்டுக்குத் திரும்பி வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளவேண்டும் எனக் கேட்கப் போவதாயும், அதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றான். அனைவரும் மனம் மகிழ, பரதன் அயோத்தி மக்கள் புடை சூழப் பெரும்படையோடு கிளம்புகின்றான். கங்கைக் கரையில் குகனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்த சைன்னியத்தைப் பார்த்தும், அதன் விபரங்களைக் கேட்டும் குகன் சந்தேகத்தில் ஆழ்ந்தான்! கவலை சூழ்கின்றது அவனுக்கு!

*************************************************************************************
வால்மீகி ராமாயணத்தில் தசரதரின் இறுதிச் சடங்குகளை பரதனே செய்கின்றான் என்றே வருகின்றது. தசரதன் பரதன் நாட்டை ஏற்றுக் கொண்டானானால் அவன் என் மகன் இல்லை என்றே கூறுகின்றார். பரதனோ நாட்டை ஏற்கவே இல்லை என்பதோடு ராமனையும் திரும்ப வரவழைக்க வேண்டும் என்றே கூறுகின்றான். ஆகவே தசரதரின் சாபம் அவனைத் தாக்கவில்லை என்றே வால்மீகியின் கூற்று. துளசியும் அவ்வாறே எழுதி இருக்கின்றார் என்று தெரிய வருகின்றது. ஆனால் கம்பரோ சத்ருக்கனன் இறுதிச் சடங்குகள் செய்தான் என்று கூறுகின்றார். கோசலை பரதனைப் பார்த்து இவ்வாறு கூறுவதாயும் : பள்ளியடைப் படலம்: பாடல்: 903

"மறு இல் மைந்தனே வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ் இரண்டின
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்.

எனக் கோசலை தந்தை இறந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டதாயும் உடனே ஈமக் கடன்களை நிறைவேற்றவும் கூறுகின்றாள். ஈமக் கடன்கள் செய்ய ஏற்பாடுகளும் செய்து பரதன் சடங்குகள் செய்யப் போகும் வேளையில் வசிஷ்டர் சொல்வதாய்க் கம்பர் கூறுகின்றார்: பாடல்: 912
"என்னும் வேலையில் எழுந்த வீரனை
அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே என முனிவன் கூறினான்."

என உன் அன்னை செய்த கொடுஞ்செயலால் உன்னையும் உன் தகப்பன் துறந்துவிட்டான் என வசிஷ்டர் கூறியதாய்க் கூறுகின்றார். அதன் பின்னர் சத்ருக்கனனைக் கொண்டு ஈமச் சடங்குகள் செய்வித்ததாய்க் கூறுகின்றார் கம்பர்: பாடல் எண் 920

"என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர்கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்"
என சத்ருக்கனனைக் கொண்டு ஈமச் சடங்குகளைச் செய்வித்ததாய்க் கூறுகின்றார் கம்பர்.
*************************************************************************************பல தரப் பட்ட குணாதிசயங்களும் ராமாயணத்தில் பேசப் படுகின்றன. தசரத மன்னன் பல விதங்களில் புகழ் பெற்றிருந்தாலும் பெண்ணாசை என்ற ஒன்றால் வீழ்த்தப் பட்டான், சொந்த மனைவியாலேயே. அவன் மகன்கள் நால்வருமோ, ஒருவரை ஒருவர் விஞ்சும்படியான குணாதிசயங்களைக் கொண்டிருந்ததோடு மட்டுமில்லாமல், நால்வருக்கும் மன ஒற்றுமையும் இருந்து வந்தது. மூத்தவன் என்ற காரணத்தினால் ராமன் மற்றச் சகோதரர்களால் மிகவும் மதிக்கப் பட்டதோடு அல்லாமல், தானும் அதுக்குத் தக்க பாத்திரமாகவே வாழ்ந்தும் காட்டினான். தன் இளைய சகோதரனுக்காகத் தனக்கு உரிமையுள்ள அரசாட்சியைத் துறக்கின்றான். சகோதர பாசத்தில் ஒருவரை மிஞ்சினர் இவர்கள் நால்வரும், என்றால்,இன்னும் நாம் பார்க்கப் போகும் சகோதரர்கள், வாலி, சுக்ரீவன், தம்பியான சுக்ரீவனை நாட்டை விட்டே விரட்டினான் வாலி! ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், அவர்களிடையே ஒற்றுமை உண்டா? இல்லை எனில் ஏன் இல்லை? சகோதர உறவின் மேம்பாட்டை ராமன் - பரதனிடையே கண்டோமானால், அதன் வேறொரு நிலைப்பாட்டை இனி நாம் ராவணன் -விபீஷணனிடம் காணப் போகின்றோம். இரு வேறு துருவங்களான மனிதர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். ஒரு தாயின் வயிற்றிலேயே நல்லவனும், பிறக்கின்றான், கெட்டவனும் பிறக்கின்றான். வெவ்வேறு தாய்மார்களின் வயிற்றில் பிறந்த ராம, லட்சுமண, பரத, சத்ருக்கனர்கள் சகோதர உறவு என்றால் எவ்விதம் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே விளங்கினார்கள் என்று சொல்வது சற்றும் மிகை இல்லை!

Thursday, April 17, 2008

தமிழ் ஓவியாவுக்கு ஒரு பதில்!

திரு தமிழ் ஓவியா அவர்களே!
தங்கள் பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தன. உங்களுடைய பின்னூட்டங்களைப் படித்தேன். எனக்கு நீங்கள் எழுதிய கருத்துக்களில் ஆழ்ந்த உள்ளறிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இதை எழுதுவது நான் படித்த ஆங்கில ராமாயணத்தை அடிப்படையாக வைத்தே எழுதுகின்றேன் என்பதை முதலிலேயே தெரிவித்திருக்கின்றேன். வால்மீகியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட அதன் கருத்துக்களைத் தான் தெரிவிக்கின்றேன். தங்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் தகுதியோ, அல்லது தங்களுடன் விவாதம் செய்யும் அளவுக்கு ஆழ்ந்த உள்ளறிவோ எனக்கு இல்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ராமாயணத்தை அனைவரும் படிக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் யாரிடமும் சொல்லவில்லை. என் சொந்த வலைப்பதிவில் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எழுதும் இதை நீங்கள் படிப்பதோ, படிக்காமல் இருப்பதோ உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆகவே உங்களைப் படிக்க வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. என்னை எழுதக் கூடாது என்று நீங்களும் கூற முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன். இதற்கு மேல் உங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்தாலும், என்னிடமிருந்து பதில் ஏதும் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கங்களுடன்,

கீதா சாம்பசிவம்.

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 18


குகனைப் பொறுத்த மட்டில் அவன் ஒரு சிற்றரசன் என்றும் ராமனின் நெடுநாள் நண்பன் எனவும் வால்மீகி கூறக் கம்பரோ ஆயிரக்கணக்கான ஓடங்களை உடைய ஒரு ஓடக் கூட்டத்தின் தலைவன் என வர்ணிக்கின்றார், மேலும் வால்மீகி தராத ஒரு சிறப்பையும் அவர் குகனுக்குத் தருகின்றார்.ராமனைக்குகன அப்போதே அறிவதாய்க் கூறும் கம்பர் மேலும் குகனே ஓடத்தை ஓட்டிக் கங்கையைக் கடக்க உதவுவதாய்ச் சொல்லும் கம்பர், மேலும் ஒரு படி போய், அவனிடம் தான் ராமன் சித்திரகூடம் செல்லும் வழியைக் கேட்டதாய்க் கூறும் கம்பர், இவை அனைத்துக்கும் மேலாய் அவனை ஸ்ரீராமன் ஒரு சகோதரனாய் வரித்ததாயும் கூறுகின்றார் இவ்வாறு:
"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வெம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்"

என்று ராமன் குகனைப் பார்த்து, நாங்கள் நால்வர் சகோதரர்களாய் இருந்தோம் உன்னைப் பார்க்கும் முன்னர். ஆனால் இப்போது உன்னோடு சேர்ந்து நாம் ஐவர் என்றாராம். இதற்கு முன்னாலேயே தசரதன் உயிர் நீங்குவது பற்றிக் குறிப்பிடுகின்றார் கம்பர். ஆனால் வால்மீகி நடந்ததை நடந்தபடியே கூறுகின்றார். கம்பருக்கு ராமன் ஒரு அவதார புருஷன், வால்மீகிக்கு அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதன், அவ்வளவே!


காட்டில் தங்கிய ராமர் தன் தாயையும், தகப்பனையும் பிரிந்து இருப்பதைப் பற்றியும் தன் தாயையும், தகப்பனையும் கூடக் கைகேயி துன்புறுத்துவாளோ என்றும் அஞ்சிப் புலம்ப ஆரம்பித்தார் என்று சொல்கின்றார் வால்மீகி. பெண்மாயையால் தகப்பன்மனம் மாறியதைக் குறிப்பிட்டுக் கூறும் ராமர், லட்சுமணனை உடனே அயோத்தி திரும்பித் தாய்மாரையும், தந்தையையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகின்றார். லட்சுமணன் ராமரைப் பிரிய மறுக்க இவ்வாறு பேசிக் கொண்டே இரவு கழிகின்றது என்கின்றார் வால்மீகி. இதைப் பார்க்கும்போது, ராமாயண யுகத்திற்குப் பின்னர், மற்றொரு யுகம் கழிந்தும் பல நூற்றாண்டுகள் ஆகிய பின்னர், ஸ்ரீராமனை ஒரு தெய்வமாகவே போற்றி வாழும் நமக்குக் கொஞ்சம் ஆச்சரியம் மட்டுமின்றி, ஜீரணிக்கவும் முடியாது தான். ஆனால் ஒரு மனிதனாய் வாழ்ந்து வந்தார் ராமர் என்ற நோக்கிலே பார்க்கவேண்டும். மனிதனுக்கே உரிய குணாதிசயங்கள் அவரிடமும் நிரம்பி இருந்தது என்பதே உண்மை! ராமன் என்ற தெய்வமா இப்படிச் செய்தது என்ற குழப்பத்தைக் கொண்டு வராமல், நாமாக இருந்தாலும் இப்படித் தானே நடப்போம் என நினைத்தால் குழம்பவே மாட்டோம். கதையின் போக்கிற்கும், பின்னால் வரக்கூடிய வாலி வதம், சீதையின் அக்னிப்ரவேசம் போன்ற இடங்களில் ராமனின் போக்கைப் புரிந்து கொள்ள இது உதவும் என்பதாலேயே இந்தக் குறிப்பு இங்கே தரப் படுகின்றது. குறைகள் இல்லாத மனிதனைப் படைக்கவே இல்லை, நம் இதிகாசங்களோ, புராணங்களோ. அந்தக் குறைகளை வென்று முன்னேறுவது பற்றித் தான் அவை சொல்கின்றன. இதையும் நினைவில் கொள்ளவேண்டும். தன் பேச்சில், குணத்தில், செய்கைகளில் அங்கங்கே சாதாரண மனிதன் போல் குறைகள் கொண்டிருந்த ஸ்ரீராமன் அந்தத் தர்மத்தைச் சற்றும் வழுவாமல், சொன்ன சொல் தவறாமல், நேர்மையின் வடிவமாய்த் திகழ்ந்ததாலேயே அவனுக்குப் பெருமை! இது அவனுக்கு ஒரு சிறுமை அல்ல.

பின்னர் அங்கிருந்து கங்கை, யமுனை சேருமிடம் அது, அதன் அருகில் உள்ள பிரயாகையில் தான் பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது எனத் தெரிந்து கொண்டு ராம, லட்சுமணர்கள் அங்கே சென்று பரத்வாஜரைப் பணிந்து வணங்கி, ஆசி பெற்றுவிட்டு, அவர்கள் வசிக்கத் தகுந்த இடம் சொல்லுமாறு கூற பரத்வாஜரோ அங்கே தங்கும்படி வேண்டுகின்றார். அயோத்திக்கு இவ்வளவு அருகாமையில் தான் வசிக்க விரும்பவில்லை என ராமர் கூற பின் அவரும் அங்கிருந்து சித்ரகூடம் என்னும் இடத்துக்குச் செல்லும் வழியைக் கூறுகின்றார். இரவுப் பொழுதை பரத்வாஜரின் ஆசிரமத்தில் கழித்துவிட்டுப் பின்னர் யமுனையை ஒரு கட்டுமரத்தின் உதவியால் கடந்து மூவரும் சித்ரகூடம் செல்கின்றனர். அங்கே உள்ள வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் ஆசி பெற்றுவிட்டுப் பின்னர் தங்குமிடம் தேர்ந்தெடுத்து மால்யவதி நதிக்கரையில் இறைவனை முறைப்படி பூஜித்து ஒரு பர்ணசாலையை லட்சுமணன் நியமிக்க, அதிலும் முறைப்படியான வழிபாடுகளை நடத்திவிட்டு அதில் தங்க ஆரம்பிக்கின்றனர், மூவரும்.
*************************************************************************************

இங்கே கங்கைக் கரையில் ராமனிடம் இருந்து விடைபெற்ற குகன் தன் இருப்பிடம் திரும்புகின்றான். அவன் ஆட்கள், ராம, லட்சுமணர்கள் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அடைந்து, அங்கிருந்து சித்ரகூடம் சென்றதை அவனிடம் தெரிவிக்க அவனும் சுமந்திரருக்குச் செய்தியைக் கொடுக்க அதைப் பெற்ற சுமந்திரரும் நாடு திரும்ப ஆயத்தம் ஆகின்றார். ராமன் இன்றி அயோத்தி திரும்பிய சுமந்திரரை மக்கள் வெள்ளம் சூழ்ந்து கொள்ள, அதை சமாளித்துக் கொண்டு அரண்மனை சென்ற அவரிடம் கோசலை தன் மகனைப் பற்றி விசாரிக்கின்றாள். சுமந்திரரைப் பார்த்ததுமே தசரதன் மயக்கமுற்றுத் தரையில் விழ, கோசலையோ, கைகேயி ஏதும் நினைத்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தால் பேசாமல் இருக்கின்றீர்களோ எனக் கடுமையாகக் கேட்கின்றாள். ராமனும், சீதையும் பெரியோரை வணங்கிப் பேசிய பேச்சையும், லட்சுமணனின் அடங்காக் கோபத்தையும் எடுத்து உரைத்த சுமந்திரர், மக்களும் மிகுந்த துயரத்தை அடைந்திருப்பதாய்த் தெரிவிக்கின்றார். அதை ஏற்றுக் கொள்ளும் தசரதர் மிக்க வேதனையுடனேயே பேசுகின்றார். ராமனிடமும், சீதையிடமும் தன்னை அழைத்துச் செல்லச் சொல்கின்றார். முதலில் கடுமையாகப் பேசிய கோசலையோ இப்போது அவரைத் தேற்ற ஆரம்பிக்கின்றாள். என்றாலும் அவளுக்கு மீண்டும் மகன் பிரிவு என்னும் துயர் வாட்ட, "நீரும் ஒரு அரசனா? அரச லட்சணங்கள் உம்மிடம் உள்ளதா? ராமனை இவ்வாறு நாடு கடத்தியதன் மூலம் நீர் என்னையும் அழித்ததோடு அல்லாமல் இந்தக் கோசல நாட்டையும் அழித்துவிட்டீர் என்றெல்லாம் சொல்கின்றாள். பின்னர் தசரதரும் அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் மன்னிப்புக் கேட்க இப்படியே பொழுது அஸ்தமிக்கின்றது, கொடும் இரவும் வருகின்றது.

ராமன் காடு சென்ற ஆறாம் நாள் இரவில் தசரதனுக்குத் தாம் செய்த அந்தக் கொடுஞ்செயல், முனிகுமாரனை, யானை என நினைத்துத் தான் அம்பு எய்தியதும், அதனால் வீழ்ந்த முனிகுமாரன் இறந்ததும், அவன் பெற்றோரிடம் சென்று தான் உண்மையை உரைத்ததும், அதனால் அவர்களின் சாபம் தனக்குக் கிட்டவில்லை எனவும், இல்லை எனில் இந்த ரகுவம்சமே அழிந்து பட்டிருக்கும், என் தலை ஆயிரம் சுக்கல் ஆகி இருக்கும், ஆனால் என் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தப்பினேன் என்றும் நினைவு கூருகின்றான். மேலும் அந்த முனிகுமாரனின் பெற்றோர் தங்கள் ஒரே மகன் இறந்து உயிர் வாழ விரும்பாமல் தசரதனையே அவர்களையும் கொல்லுமாறு கூறியதையும் பின்னர் பிரிவு தாங்காமல் மகனுக்காகச் சிதை வளர்த்து அதில் இருவரும் விழுந்து உயிர் விட்டதையும் உயிர் விடுமுன்னர் தனக்கு அளித்த சாபத்தையும் நினைவு கூருகின்றார். முனிவர் சாபம் ஆனது:" மகனைப் பிரிந்து நாங்கள் படும் துன்பம் போல் உனக்கும் நேரும். நீயும் உன் மகனைப் பிரிந்து அந்தப் பிரிவின் காரணமாய் உயிர் விடுவாயாக. எவ்வாறு உன் நற்காரியங்களின் பலனை நீ அனுபவிக்கின்றாயோ, அவ்வாறே உன் தவறுகளின் விளைவுகளையும் ஏற்றுத் தான் தீரவேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்ந்தான். இவ்வாறு இரவு பூராவும் புலம்பிய மன்னன் பின்னர் இறந்தான்.

வால்மீகியில் ராமன் காட்டுக்குச் சென்ற ஆறாம் நாள் தசரதன் இறந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ஆனால் கம்பர் ராமன், சீதையுடன் தேரில் ஏறிச் சுமந்திரருடன் புறப்பட்ட அன்றே இறந்துவிட்டதாய்த் தெரிவிக்கின்றார். மேலும் முனிவர் சாபம் கொடுக்கும்போது வால்மீகியின் கூற்றுப் படி தசரதன் திருமணமே ஆகாத ஒரு இளைஞன், ஆனால் கம்பர் சொல்வதோ, மகனைப் பிரிந்து அந்தச் சோகத்தினால் இறப்பாய் என முனிவர் சாபம் இட்டதால் தனக்கு ஒரு மகன் நிச்சயம் உண்டு என்ற ஆனந்தம் வந்ததாய்த் தெரிவிக்கின்றார் இவ்வாறு: நகர் நீங்கு படலம்: பாடல் எண் 378& 379:

"தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம்
காவாய் என்றாய் அதனால் கூடிய சாபம் கருதேம்
ஏவா மகவைப் பிரிந்து இன்று எம்போல் இடர் உற்றவை நீ
போவாய் அகல் வான் என்னாபொன் நாட்டிடை போயினரால்."

மன்னனே தன் தவறை ஒத்துக் கொண்டதால் சாபம் கடுமையாகக் கொடுக்க விரும்பாத முனி தம்பதிகள், நீ ஏவல் சொல்லாமலேயே குறிப்பறிந்து பணிபுரியும் ஒரு மகனைப் பெற்று அவனைப் பிரிந்து நாங்கள் இப்போது துன்புறுவது போலவே நீயும் துன்புற்று மடிவாய்!" என்று கூறிவிட்டு இருவரும் இறந்ததாய்ச் சொல்கின்றான். பின்னர்:

"சிந்த தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்"

நானோ அச்சாபத்தால் மனம் தளராமல் அப்போது நமக்கு ஒரு அரிய நற்குணங்களுடன் கூடிய மகன் பிறப்பான் என்று எண்ணம் வந்ததால் மன மகிழ்வோடேயே அயோத்தி திரும்பினேன். இப்போது ராமன் காட்டுக்குப் போவதும் உறுதி, அவனைப் பிரிந்து நான் இறப்பதும் உறுதி என்று சொல்கின்றான். இவ்விதம் பெண்ணாசையால் மதி இழந்த மன்னன் தசரதன் தன் மைந்தர் நால்வரில் ஒருவர் கூட அருகிருந்து பணிவிடை செய்ய முடியாமல் இறந்தான். அவன் உடல் பாதுகாக்கப் பட்டு பரதனின் வரவுக்குக் காத்திருந்தது. ஏற்கெனவேயே துக்கத்தில் ஆழ்ந்த அயோத்தி மக்கள் மேலும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

Wednesday, April 16, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 17


கோசலை பெரிதும் விம்மி அழ, சுமித்திரை அனைவரையும் தேற்ற, தசரத மன்னனோ தேரைத் தொடர்ந்து, "ராமா, லட்சுமணா, சீதா!" எனக் கதறியபடி பின் தொடர சுமந்திரர் தேரை ஓட்டினார். ராமர் தேரை வேகமாய் ஓட்டுமாறு சுமந்திரரிடம் சொல்ல தேரும் வேகமாய் ஓட ஆரம்பித்தது. பின் தொடர்ந்த தசரதரைத் தடுத்த மந்திரிமார், "ராமன் வனவாசம் முடிந்து சுகமாய்த் திரும்ப வேண்டுமானால், நெடும்பயணம் மேற்கொண்டிருக்கும் அவனைத் தொடர்ந்து தாங்கள் செல்வது சாஸ்திர விரோதம்!" எனக் கூறித் தடுக்கின்றார்.
துளசி ராமாயணட்த்தில் இந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சுருக்கமாகவே சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிகின்றது, மேலும் முதன் முதலில் காசிக்குச் சென்ற குமரகுருபரர் மூலமே கம்பனின் ராமாயணம் பற்றி அறிய வந்த துளசிதாசர் தாமும் "ராம சரித மானச" என்னும் காவியத்தை எழுதியதாகவும், ஆகவே அவர் பாடல்களில் பெரும்பாலும் ராமனும், சீதையும் தெய்வங்களாகவே காட்டப்பட்டிருப்பதாயும் அறிகின்றோம்.

தேரோடு ஓடிய தசரத மன்னன் தன் மந்திரிகளால் தடுக்கப் பட்டவன், அரண்மனைக்குத் திரும்பும் வழியில் கீழே விழுந்து விட கோசலையும், கைகேயியும் சேர்ந்து அவரைத் தூக்க முயல தசரதர், கைகேயியைத் தடுக்கின்றார். "நீ என் மனைவியே அல்ல! உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! பரதன் ஒருவேளை இந்நாட்டை ஏற்றானாகில், நான் இறந்தபின்னர் அவன் எனக்கு அளிக்கும் கடன்கள் என்னை வந்து அடையாமல் போகட்டும்! ஒரு விதவையாக நீ இந்நாட்டை அனுபவித்துக் கொண்டு வாழ்வாயாக!" என்கின்றார். தேர் அயோத்தியின் எல்லையைக் கடந்து விட்டது என்ற செய்தி மன்னனுக்கு வந்து சேர, கதறி அழுத மன்னன், "கோசலை, எங்கே இருக்கின்றாய்? எனக்குத் திடீரெனக் கண் தெரியாமல் போய்விட்டதே? என்னை உன் இருப்பிடம் கொண்டு செல்!" எனக் கூறக் கோசலையின் மாளிகை வந்து சேருகின்றார்கள் அனைவரும். அப்போது அறிவிற் சிறந்த, மிக்க ஞானம் உடையவள் ஆன சுமித்திரை தன் தெளிவான பேச்சால் அனைவரையும் தேற்றுகின்றாள்: "ராமன் காட்டுக்குச் செல்வது குறித்து வருந்த வேண்டாம், இதனால் அவனுக்குப் பெருமையே, காடும் அவனுக்கு நாடாக மாறும், காற்றும் தென்றலாய் வீசும், சூரிய, சந்திரர்கள் அவனுக்கு மகிழ்வையே தருவார்கள். அவனுக்குத் துரதிர்ஷ்டம் என்பதே இல்லை. கோசலை நீ அனைவருக்கும் ஆறுதல் சொல்வதிருக்க இவ்வாறு துக்கத்தில் ஆழலாமா?" என்றெல்லாம் சொல்கின்றாள். இது இங்கே நிற்கட்டும். காட்டுக்குச் சென்று கொண்டிருந்த ராமர் தன்னைப் பின் தொடர்ந்த மக்களைப் பார்த்து நாட்டுக்குத் திரும்புமாறு கேட்க மக்கள் மறுத்து ராமரைப் பின் தொடர்கின்றனர்.

தமஸா நதிக்கரையை அடைந்த ராமரின் தேர் அன்றிரவு அங்கே ஓய்வெடுக்கத் தங்குகின்றனர். அப்போது சுமந்திரரிடம் ராமன், மக்கள் நன்கு அயர்ந்து தூங்கும்போது நதியைக் கடந்துவிடவேண்டும் எனவும், மக்களுக்குத் தெரியவேண்டாம் எனவும், தேரை அயோத்தி நோக்கிச் சற்று தூரம் ஓட்டிவிட்டுப் பின்னர் வேறுவழியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறுகின்றார். அம்மாதிரியே சுமந்திரரும் செய்ய கோசல நாட்டையும், அதன் கிராமங்கள், நகரங்கள், நதிகளையும் கடந்து கங்கைப் பிரதேசத்துக்குத் தேர் வந்து சேர்கின்றது. ராமர் அங்கே சுமந்திரரைப் பிரிய எண்ணுகின்றார். ஆனால் கம்பரோ முதன் முதல் தேர் நிற்கும் இடத்திலேயே சுமந்திரர் பிரிந்ததாய்க் கூறுகின்றார். அதன் பின்னர் ராமன், தன் இளவல் லக்குவனோடும், சீதையோடும் காட்டுவழியில் இரண்டு யோசனைகள் இரவில் வழி நடந்ததாய்க் கூறுகின்றார்.

"தையல் தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மை அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே!"

இவ்விதம் காட்டு வழியில் சென்றவர்கள் உதயத்தில் இரண்டு யோசனை தூரம் கடந்ததாய்த் தெரிவிக்கும் கம்பன் இவ்வாறு கூறுகின்றார்:

"பரிதி வானவனும் கீழ்பால் பருவரை பற்றாமுன்னம்
திருவின் நாயகனும் தென்பால் யோசனை இரண்டு போனான்
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும்
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம்."

என்று சொல்லிவிட்டுப் பின் சுமந்திரரைப் பின் தொடர்கின்றார் கம்பர். நாம் வால்மீகியின் கருத்துப் படி ராமன் என்ன செய்தான் என்று பார்ப்போம். கங்கைக் கரையை வந்தடைந்தனர் ராம, லட்சுமணர்கள் சீதையோடு, அங்கே அப்போது ஸ்ருங்கவேரபுரம் என்னும் இடத்தில் தங்க முடிவு செய்கின்றனர். அந்த இடத்தின் அரசன் ராமனின் நீண்ட நாள் நண்பன் என்றே வால்மீகி கூறுகின்றார். நிஷாதார்கள் என்னும் அந்த வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆன குகன் என்பவன் ராமன் வந்திருப்பதை அறிந்து தன் மந்திரி, பரிவாரங்களுடன் கால்நடையாகவே ராமனை நோக்கி வந்தானாம். அதைப் பார்த்த ராமன் தன் நண்பனைக் காணத் தம்பியோடு வேகமாய் எழுந்து ஓடிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டாராம். ராமரை வரவேற்ற குகன் ஏராளமான தின்பண்டங்களையும், காய், கனிகளையும் அளிக்கின்றானாம். ஆனால் ராமன் தாம் விரதம் மேற்கொண்டதைச் சொல்லி அதை மறுத்துவிட்டுத் தண்ணீர் மட்டுமே அருந்திவிட்டு ஓய்வெடுக்க, குகன் காவல் புரிகின்றானாம். கூடவே காவல் இருந்த லட்சுமணனைக் குகன் படுக்கச் சொல்லியும் படுக்காமல் குகனிடம் தங்கள் குடும்ப நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றானாம் லட்சுமணன். பொழுது விடிந்தது. கங்கையைக் கடக்க வேண்டும். குகனின் உதவியால் படகு ஒன்று கொண்டு வரப்படுகின்றது. அனைவருக்கும் அதாவது, சுமந்திரர், குகன் மற்றும் அவன் பரிவாரங்கள் அனைவருக்கும் தசரதனுக்குப் பின் நாடாளப் போகும் பரதனுக்குக் கீழ்ப்படியுமாறு சொல்லிவிட்டுத் தன்னை அங்கேயே தங்கச் சொல்லும் குகனின் வேண்டுகோளை மறுக்கின்றார். மேலும் ஆலமரத்தின் பாலைக் குகனை விட்டுக் கொண்டுவரச் சொல்லி, அதை முடியில் தடவி, லட்சுமணனும், ராமனும் சடை முடி தரித்துக் கொண்டனராம். பின்னர் குகனின் ஆட்கள் படகைச் செலுத்த கங்கையைக் கடக்கின்றனர். கடந்து அக்கரையை அடைந்து லட்சுமணனை முன் போகச் சொல்லி, சீதையை நடுவில் விட்டு ராமர் பின் தொடரப் பயணம் தொடர்கின்றது. காட்டில் ஒரு மரத்தடியில் இரவைக் கழிக்கத் தீர்மானிக்கின்றனர்.