எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 24, 2016

சோசியம் பார்க்கலியோ, சோசியம்!

ஜோசியத்தை எத்தனை பேர் நம்பறீங்க? அநேகமா வாழ்நாளில் ஒரு முறையாவது ஜோசியம் பார்க்காதவங்களே இருக்க மாட்டாங்கனு நம்பறேன். குறைந்த பட்சமாகப் பத்திரிகைகளில் வரும் ராசி பலன்களையாவது பார்த்திருப்பாங்க. ஆனால் நம்ம ரங்க்ஸ் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் உள்ள எல்லா ஜோசியர்களையும் பார்த்துட்டார். ஊட்டியிலே இருந்தப்போ ஒரு ஜோசியரைப் பார்க்கப் புஞ்சைப் புளியம்பட்டிக்கு என்னைக் கூட்டிப் போனார்னா பாருங்களேன். அந்த ஜோசியர் ரயில் சிநேகமாம். விலாசமெல்லாம் வாங்கி வைச்சுண்டு வருங்காலத்தைத் தெரிஞ்சுக்கக் கிளம்பிட்டார் என்னையும் அழைத்துக் கொண்டு! :)))) தெருவிலே வரும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்கனு ஒருத்தர் பாக்கி இல்லை! :))))

புஞ்சைப் புளியம்பட்டிக்காரர்  சொன்னது எல்லாம் பலிச்சதா, பலிக்கலையாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். சில ஜோசியர்கள் நாட்டு பலன், தலைவர்கள் பத்தி எல்லாமும் சொல்றாங்க. அப்படிச் சொன்னவர்களிலே சிலர் சென்ற வருஷம் சென்னை வெள்ளத்தைப் பற்றி ஆற்காடு  பஞ்சாங்கத்திலே குறிப்பிட்டிருந்ததாகவும், இந்த வருஷமும் அதே போல் மழை வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னாங்க. அதே போல் பிரபலமான பெண் அரசியல் தலைவர் இறப்பு பற்றியும் சொல்லி இருந்ததாச் சொல்லிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இறந்ததும் உடனே வர்தா புயல் வந்ததும் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொஞ்சமானும் நம்பணும்னு சொல்றாப்போல் ஆயிட்டது! மேலும் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து போனது குறித்தும் அதிலே சொல்லி இருப்பதாகச் சொல்கின்றனர். தேதி குறிப்பிட்டே அதிலே ரூபாய் நோட்டு மதிப்புக் குறைவு பத்தி  வந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

கறுப்புப் பண நடவடிக்கை குறித்தும் அதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதுவும் நடந்திருக்கிறது. இனி வரப் போகும் வருடத்திற்கு  என்ன சொல்லி இருக்காங்க என்று தெரியலை! எங்க வாழ்நாளில் பல ஜோசியர்களைப் பார்த்தாச்சு. பெரும்பாலானவர்கள் சொன்னது பலித்ததே இல்லை. சும்மா சாதாரணமா எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் சொன்னவங்க ஜோசியம் பலிச்சிருக்கு! என் கல்யாணமும் அப்படி ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்தது. என் கைரேகையைப் பார்த்துட்டு என் நண்பர் சிவா என்பவர் ஐம்பது வயசுக்கு மேலே நீ வெளிநாடு போவேனு சொன்னப்போச் சிரிச்சேன். ஆனால் அது உண்மையாக நடந்தது. ஆனால் பொதுவாக எனக்கு ஜோசியம் பார்ப்பதிலேயோ வார பலன்கள் படிப்பதிலேயோ அவ்வளவு ஆர்வம் இல்லை. நடக்கிறது நடக்கட்டும், வருவதை எதிர்கொள்வோம்னு இருப்பேன்.

நம்ம ரங்க்ஸ் ஶ்ரீரங்கத்திலே இருந்தவரைக்கும் காலை ஏழு மணிக்குத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுட்டு உட்கார்ந்தார் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியா ஜோசியம் சொல்றவங்க சொல்றதை எல்லாம் கேட்டு முடிச்சுட்டு ஒருவழியா அரைமனசோடு எட்டரை மணிக்கு எழுந்திருப்பார். இதிலே ஏதோ ஒரு சானலிலே ஹரிகேசநல்லூர் ஜோசியர் ஒருத்தர் சொல்லுவார். யாருக்குமே கெடுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லவே மாட்டார். எல்லோருக்குமே வாழ்க்கையில் வளம் சேரும் என்றே சொல்லுவார். இதிலே சங்கரா தொலைக்காட்சியிலே சொல்றவர் ஒருத்தருக்கும் நல்லதாவே சொல்ல மாட்டார். நம்ம ரங்க்ஸ் தான் ரொம்பவே ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டு இருப்பார். அநேகமா ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருத்தர் வீட்டிலே இருக்கிறதாலே மொத்தமும் கேட்டுப்பார்.


 நான் பாட்டுக்குச் சமைச்சுட்டோ அல்லது ஏதேனும் வேலை செய்து கொண்டோ இருப்பேன், இந்த ஜோசியக்காரங்க சொல்றதைக் கேட்டு ரங்க்ஸ் என்னிடம் , "இன்னிக்கு உனக்குச் சந்திராஷ்டமம்! ஜாக்கிரதையா இரு!" னு சொல்லிடுவார். அது வரைக்கும் நல்லாச் செய்துட்டிருந்த வேலை அப்புறமாத் தடுமாறுகிறாப்போல் இருக்கும்.  அப்போ வர கோபம் அன்னிக்குப் பூராப் போகாது. இதெல்லாம் சந்திராஷ்டமத்தோட வேலைனு ரங்க்ஸ் சொல்ல, "நான் பாட்டுக்கு இருந்தேன், நீங்க சொன்னதும் தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு,"னு நான் சொல்ல ஒரு குருக்ஷேத்திரம் தான் அங்கே நடக்கும்!

எது எப்படியோ, நமக்குனு உள்ளது, நமக்குக் கிடைக்க வேண்டியது கட்டாயமாய்க் கிடைத்தே தீரும்! கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும்?  எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் பாருங்க, மக்களுக்கு எதிர்காலம் குறித்து அறியறதுக்குத் தான் அதிக விருப்பம் இருக்கு!  இந்தியா குறித்தும் மோதி ஆட்சி குறித்தும் கூட நாஸ்ட்ரடோம்ஸ் எழுதி வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நான் தேடினவரைக்கும் புத்தகத்தில் கிடைக்கலை; அல்லது எனக்குத் தேடத் தெரியலை! எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை விட்டு விடாமல் இருக்கணும். அதான் வேண்டியது.

ஜோசியம் பாருங்க, பொழுது போக்கா வைச்சுக்கோங்க. அதையே நம்பிக் கொண்டு உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாம் முயற்சி செய்வதைப் பொறுத்தே கடவுள் அனுகிரஹமும் இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் மட்டும் என்ன செய்வார்! அவரும் பேசாமல் தான் இருப்பார். முயற்சி தான் திருவினை ஆக்கும்! 

Thursday, December 22, 2016

ஜங்கிள் புக்!

ஹிஹிஹி, மீ த ஒன்லி குழந்தை இன் இணைய உலகம். இன்னிக்கு ஜங்கிள் புக் படம் பார்த்தேன். எண்பதுகளின் கடைசியில் (?) நெடுந்தொடராக வந்து கொண்டிருந்தது. பல குழந்தைகளின் மனதைக் கவர்ந்தது! மோக்லி, மோக்லி, மோக்லி என்று இசை ஆரம்பித்ததுமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு வந்துடுவாங்க. கதை எல்லோரும் அறிந்தது தானே! தன் தகப்பனுடன் பயணத்தில் இருந்த சிறு குழந்தை ஒன்று புலி தகப்பனை அடித்துக் கொன்றது தெரியாமல் அங்கே உள்ள ஓநாய்களால் வளர்க்கப்பட்டுப் பின் அதே புலியால் தொடரப்பட்டுத் தன் சாமர்த்தியத்தாலும் தைரியத்தாலும் புலியைக் கொன்று காட்டில் தன் வாழ்க்கையைத் தொடர்கிறான்.

மோக்லி என்னும் சிறுவனாக நீல் சேத்தி நன்றாக நடித்துள்ளார். மோக்லியைக் காப்பாற்றும் பகீரா என்னும் சிறுத்தைக்கு காந்தியாக நடித்த பென் கிங்க்ஸ்லி குரல் கொடுத்துள்ளார். படத்தில் வசனங்கள் எழுத்து வடிவிலும் வருகின்றன. ஆங்காங்கே காட்டுச் சூழ்நிலை அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. யானைகளைப் பார்த்ததும் பகீராவும் பாலுவும் கீழே விழுந்து வணங்கச் சொல்வது பார்த்து வியப்பு ஏற்பட்டது. இது தொடராக வந்தப்போ பார்த்ததில்லை. புலி ஷேர்கானுக்குக் குரல் கொடுத்திருப்பவர் இட்ரிஸ் எல்பா என்பவர் நன்றாகக் குரல் கொடுத்துள்ளார். வசனங்கள் அருமை.

படம் எடுத்திருப்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்! அப்புறம் படத்தோட தரத்துக்குக் கேட்கவா வேண்டும்! ஒன்றரை மணி நேரப் படம் தான். ஒரு முறை பார்க்கலாம்.  ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பத்தியோ காமிராக் கோணங்கள் குறித்தோ ஏதும் சொல்லும் அளவுக்கு அறிவு இல்லையாதலால் அதைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் கை தேர்ந்த திரைப்பட நிபுணர்கள் எடுத்த படம் இது.

Monday, December 19, 2016

இறைவனுக்கு நன்றி!

சென்னை நகருக்கும் அதன் சுற்று வட்டாரங்களுக்கும் முதன் முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தான் பிரச்னை ஏற்பட்டது. அநேகமாகத் தமிழ்நாட்டுக்கடலோரங்கள் எல்லாமும் பாதிக்கப்பட்டாலும் சென்னைக்கு அதிகப் பிரச்னை. அப்போவும் நாங்க யு.எஸ்ஸிலே தான் இருந்தோம். அப்போ எல்லாம் நான் எழுத்தாளி ஆகலை! :) கணினியைப் பயன்படுத்தத் தெரியும் என்பதால் அவ்வப்போது கணினி மூலம் செய்திகளைப் படிப்போம். அப்படிப் படித்ததில் தான் தெரிந்தது கடலலைகள் சென்னை மெரினாக் கடற்கரையில் மிக உயரமாக வந்தது என்று சின்னச் செய்தியாக முதலில் கொடுத்திருந்தார்கள். பின்னர் தான் நேரம் ஆக, ஆக விரிவான செய்திகளும் அதன் தாக்கமும் புரிய வந்தது. அப்போதே இங்கே யு.எஸ்ஸில் சன் தொலைக்காட்சி போன்றவை வந்து விட்டாலும் பெண் வீட்டிலோ, பையர் வீட்டிலோ அது பார்க்க முடியாது. நம்ம ரங்க்ஸும் அப்போ சீரியல் ரசிகராக இல்லை. 

அதன் பின்னர் நாங்க திரும்பி வந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடே மழை, வெள்ளத்தால் மூழ்கியது. என்றாலும் எங்கள் வீட்டிற்கோ எங்களுக்கோப் பிரச்னைகள் ஏதும் இல்லை. அந்த வருடம் அடுத்தடுத்துப் புயல்கள் மாறி மாறி வந்து தாக்கினாலும் சென்னையில் பாதிப்பு அவ்வளவாக இல்லை. ஹிஹிஹி, இதுக்குக் காரணம் நாங்க சென்னையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது தான் அப்படினு சொன்னா நம்பவா போறீங்க? போகட்டும்! அந்த வருடம் டிசம்பரில் பத்தாம் தேதிக்கு ஒரு பெரிய புயலுக்குச் சென்னையைத் தயாராகச் சொல்லி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. பையருக்கு டிசம்பர் 11 ஆம் தேதி கல்யாணம். டிசம்பர் ஐந்தாம் தேதி வாக்கிலேயே பையர் ஹூஸ்டனிலிருந்து வந்துட்டார். ஒன்பதாம் தேதியிலிருந்து உறவினர்கள் திருமணம் நடக்குமானு தொலைபேசிக் கேட்க, நாங்க யார் வந்தாலும் வராட்டியும் பெண் வீட்டாரும் நாங்களும் இருந்து கல்யாணத்தை நடத்திவிடுவோம் என்று சொல்லி விட்டு எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டும்னு ஒன்பதாம் தேதி இரவுக்கே திடீரெனத் திட்டம் போட்டுக் கல்யாண மண்டபம் போயிட்டோம்.

மறுநாள் ஏதோ அரசியல் கட்சியின் திடீர் போராட்டத்தினால் ஆங்காங்கே பேருந்துகள் நிற்க நல்லவேளையாக நாங்க பிழைச்சோம்னு எண்ணிக் கொண்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கப் புயலும் கல்யாணத்தையும் மணமக்களையும் ஆசீர்வதித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. வெளி ஊர் உறவினர்கள் கூட அதன் பின்னர் கிளம்பி வந்தனர். ஆக மொத்தம் இப்படியாகச் சென்னையைக் காப்பாற்றி வந்த நாங்க 2007 ஆம் வருடம் கடுங்கோடையில் யு.எஸ். வந்ததால் அந்த வருடம் அதன் பின்னர் ஒன்றும் இல்லாமல் பாதுகாத்தோம். ஆனால் 2011 ஆம் வருடம் பாருங்க, நாங்க அக்டோபரில் கிளம்பி வந்தப்புறமா டிசம்பரில்  தானே புயல் தானாகவே வந்து கடலூரைத் தாக்கச் சென்னையும் பாதிக்கப்பட்டது. ஹிஹிஹி, நாங்க இல்லையே, அதான்!  ஆனால் பாருங்க, 2012 ஆம் ஆண்டு யு.எஸ்ஸில் இருந்து திரும்பினதும் நாங்க ஶ்ரீரங்கம் வந்துட்டோமா, அதன் பின்னர் சென்னைக்கு அடிக்கடி வந்து போயிட்டிருந்ததாலே சென்னை ஒருவழியாக் காப்பாற்றப் பட்டது. 

போன வருடம் தான் கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க இதுக்குக் காரணம் நாங்க அங்கே இல்லாததால் தான் என்று புரிந்தது. அதுக்கப்புறமாப் பாருங்க இந்த வருஷம் நாங்க இருந்தவரை வருவேன், வருவேன் என்று பயமுறுத்திட்டிருந்த நடா புயல் வராமல் மறைய, நாங்க அங்கிருந்து கிளம்பியதும், எங்கோ போக இருந்த வர்தா புயல் அதிசயமாகச்சென்னையைப் பல வருஷங்களுக்குப் பின்னர் தாக்கி விட்டது. அதுவும் கடுமையாக! இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் மின்சாரம் வரலைனு படிச்சோம். பல இடங்களிலும் அலைபேசிச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிஎஸ் என் எல் இணைய இணைப்பும், தொலைபேசியுமே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னமும் இருந்து வருகிறது. 

அம்பத்தூரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். என்றாலும் எங்கள் வீட்டில் அருமையாக வளர்த்த வேப்பமரத்துக்கு ஒண்ணும் ஆகலைனு உறுதி செய்து கொண்டோம். தென்னை மரங்களும் விழலை! இறைவன் காப்பாற்றினார். ஆனால் ஒரு சிலரின் வீடுகள் சுவர் இடிந்து விழுந்திருக்கின்றது. சில வீடுகளில் மாடிப்படிக் கைப்பிடிச் சுவர் இடிந்து இருக்கிறது. மரங்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்னை. இதிலே அரசு உடனே வந்து ஒண்ணும் செய்யலைனு புகார்கள்! எதைனு முதலில் கவனிப்பாங்க. பாதிப்பு எல்லோருக்கும் தானே! ஒவ்வொரு இடமாகத் தானே கவனிக்க முடியும். மரங்களை அந்த அந்த தெருக்காரங்களே சேர்ந்து ஆட்களை நியமித்து ஒரு வீட்டுக்கு இத்தனை ரூபாய்னு கட்டணம் நியமிச்சு அகற்றலாமே! இந்த மழையிலும் தங்கள் கஷ்டம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவலாம். அவங்களும் நம்மைப் போன்ற பொது ஜனங்கள் தான். அவங்க வீடுகளிலும் மின்சாரம், குடிநீர்ப் பிரச்னை இருக்கும். அதைக் கூடக் கவனிக்காமல் அவங்க பொதுமக்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டி வந்திருக்காங்க இல்லையா! அதைப் பார்க்கணும்.

நம்மால் இயன்றவரை அரசு செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தரணும். உயிர்ச் சேதம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை . சென்ற வருடம் அளவுக்குப் பொருட்சேதமும் இருப்பதாகச் சொல்லவில்லை. அந்த மட்டில் இறைவன் கருணை என நினைத்துக் கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்வோம். விழுந்த மரங்களை எல்லாம் ஒரே நாளில் யாராலும் அப்புறப்படுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய முடியும். ஆகவே பொறுத்திருப்போம்.  மற்ற மாவட்டங்கள் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்திருக்கின்றன என எண்ணுகிறேன். 

ஜேகே அண்ணா, இந்தியாவின் பிரச்னைகள் குறித்துப் பதிவுகள் வராதுனு சந்தோஷப் பட்டீங்களே, இது எப்பூடி இருக்கு?

இப்போ இங்கே காலை ஏழு மணி. அங்கே உங்களுக்கெல்லாம் மாலை ஆறரை இருக்கும்னு நினைக்கிறேன். :)))))

Sunday, December 18, 2016

மஹாகவிக்கு ரொம்பவே தாமதமான வாழ்த்துகள்! :(

கடந்த பத்து வருட இணைய நாட்களில் ஒரு வருடமும் மஹாகவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத் தவறியதில்லை. சென்ற வாரம் தான் முதல்முறையாகப் பதிவு போட முடியவில்லை. முதல்நாள் டிசம்பர் பத்து அன்று தான் யு.எஸ். வந்து இறங்கினோம். மறுநாள் அடுத்தடுத்து வேலைகள், மற்றும் மடிக்கணினி தயாராகவில்லை என்பதாலும் போட முடியவில்லை. சரியாக ஒரு வாரம் கழித்து இன்று சொல்கிறேன். தாமதமான வாழ்த்துகள் மஹாகவி அவர்களுக்கு.

பாரதியார் பிறந்த நாள் க்கான பட முடிவு

Friday, December 16, 2016

புதுக் கணினியிலிருந்து புதிய விஷயம்!

வணக்கம். இப்போது அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறேன். எத்தனை நாட்கள்/மாதங்கள் என்பது தெரியாது. போன வாரம் வந்தோம். கிளம்பும் வரை நிச்சயமில்லாமல் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை. கடைசி நிமிஷம் வரையிலும் பிரச்னைகள். ஒரு வழியாய் இங்கே போன வாரம் சனிக்கிழமை வந்து சேர்ந்தாச்சு. வந்த பின்னரும் பிரச்னைகள் தான். வரும்போது என்னுடைய மடிக்கணினியை எடுத்து வரவேண்டாம்னு பையர் சொல்லிட்டார். ஆகையால் எடுத்து வரலை. இங்கே புதுக்கணினி வாங்கி வைச்சிருந்தார். அதை எல்லாம் இன்ஸ்டால் பண்ணி நேற்றுத் தான் கொடுத்தார். ரொம்பவே வேலை மும்முரத்தில் இருந்தார். நேற்றுச் சும்மாத் திறந்து பார்த்துட்டு வைச்சுட்டேன். இப்போத் தான் வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

முதல்லே வேறே இடத்திலிருந்து உள் நுழைந்ததால் முகநூல் பூட்டி விட்டார்கள். அதை ஒரு வழியாப் பையர் உதவியுடன் திறந்தேன். அப்புறமாவும் அலைபேசியில் திறப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் இதிலே ஒரு வழியாக் கலப்பையைக் கொண்டு வந்தேன். முதல்லே எழுதுவது இது தான். கீ போர்டும் பழகணும். மெல்ல மெல்ல மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். அதுக்குள்ளே சென்னைப் புயல்! நாங்க கிளம்பும்போது புயலில் மாட்டிப்போம்னு நினைச்சு பயந்தோம். அதிலிருந்தெல்லாம் தப்பியாச்சு! இப்போ வேறே மாதிரிப் புயல்! பார்ப்போம். புது மடிக்கணினியிலிருந்து எழுதியவை இவை எல்லாம். இனி நாளை சந்திப்போம். இங்கே இரவு ஒன்பது முப்பத்தைந்து. அங்கே காலை ஒன்பதாக இருக்கும்.

புயல் அனுபவங்கள் எல்லாரும் பகிர்ந்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மெல்ல மெல்ல வரணும்.

Tuesday, December 06, 2016

ஒரு சகாப்தம் முடிந்தது!

ஜெயலலி க்கான பட முடிவு

ஒரு சகாப்தமே முடிந்தது. இரும்புப் பெண்மணி, அனைவரையும் தன் ஒரே கண்ணசைவாலும், கையசைவாலும் கட்டுப் ப்டுத்திய பெண்மணி, தானாக முன்னுக்கு வந்தவர், அரசியலுக்கு நுழைந்ததிலிருந்து போராட்டங்கள், அவமானங்கள், சிரமங்கள் என அனைத்தையும் தாண்டிக் கொண்டு எதைக் குறித்தும் கவலைப்படாமல் தமிழ்நாட்டு எளிய மக்களின் சேவையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைந்து விட்டார்.

அவருடைய அரசியல் எதிரிகள் கூட அவர் இல்லாத தமிழ்நாட்டு அரசியலும் இந்திய அரசியலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்கிறார்கள். சாமானிய மக்களுக்காக அவர் பற்பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ரேஷனில் அரிசியில் ஆரம்பித்தால் மாணவ, மாணவிகளுக்கு சைகிள், மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர் போன்றவைகளையும் கொடுத்ததோடு அல்லாமல் தாலிக்குத் தங்கம், குழந்தை பிறந்தால் பரிசுப் பொருட்கள், பெண் குழந்தைகளுக்குத் தனிச் சலுகைகள் என்று கொடுத்ததினால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் மிகவும் கவர்ந்தவர். வயதான பெண்மணிகள் கூட அம்மா, அம்மா என்று கதறுகின்றனர்.

மக்களின் பொறுமையும் கட்டுப்பாடும் வியக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. எங்கும் எதிலும் கலவரமோ, பிரச்னைகளோ, சண்டையோ இல்லாமல் அமைதியாக இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. அதோடு அல்லாமல் இன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இந்தியாவின் 20 மாநிலங்களின் முதலமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே நேரில் வந்திருக்கிறார். பிரதமர் வந்திருக்கிறார். இப்படி அனைவரையும் தன் பால் ஈர்த்த அந்தப் பெண்மணி இன்று இல்லை.

மிகத் திறமையானவர். தன் கட்சியையும் கட்சிக்காரர்களையும் மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அவர் இல்லாத தமிழகம் இனி என்ன ஆகும்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மாலுமி இல்லாக்கப்பலைப் போல் இருக்கும் அதிமுக கட்சியையும் தமிழகத்தையும் தக்க மாலுமியக் காட்டித் தர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.

Friday, December 02, 2016

கேள்வி கேட்பதும் நானே! பதிலும் நானே! :)

மடிக்கணினிக்கு ஆன்டி வைரஸ் போடணும். இங்கே ஒரு இளைஞர் எனக்கு வாடிக்கையாகப் போட்டுக் கொடுக்கிறார். நீயே செய்துக்கலாமேனு கேட்கலாம். செய்துக்கலாம் தான்! ஆனால் அவர் வந்தால் அப்படியே கணினி சரியாக இருக்கானு ஒரு வழக்கமான பரிசோதனையையும் செய்துடலாம். ஏனெனில் இதுக்கும் வயசாச்சே! நமக்கு ஆகலைனா அதுக்கு வயசு ஆகாதா என்ன?

நேற்று வந்தவர் என்னோட மடிக்கணினியை எப்போதும் பார்க்கும் நபரின் உதவி ஆள். அவரும் இளைஞர் தான். எப்போவும் ஆன்டி வைரஸ் போடும்போது புத்தம்புதிய உறையைப் பிரித்தே சிடியை கணினியில் போடுவார்கள்.  அதை நிறுவியதும் சோதனைகள் செய்து பார்த்த பின்னர் அதைத் திறப்பதற்கான சாவி என்னும் எண்களையும் சிடியையும் உத்தரவாத அட்டையையும் நம்மிடம் கொடுப்பார்கள். ஆனால் நேத்திக்கு அந்த இளைஞர் தன்னிடம் வைத்திருக்கும் ஏற்கெனவே போட்டுக் கொண்டிருக்கும் பல சிடிக்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து (ஆன்டி வைரஸ் என்னமோ வழக்கமாப் போடுவது தான்! ஆனால் புதியது அல்ல, பலருக்கும் போட்டதுனு நினைக்கிறேன்.) போட்டார். நான் கேட்டதுக்கு இப்போல்லாம் இப்படித் தான் வருதுனு சொன்னார். திறப்பதற்கான எண்கள் மட்டும் தனியாக வரும் என்றும் இதை எனக்கு மட்டும் தான் போடுவதாகவும் சொன்னார்.

ஆனால் சிடியைத் திரும்ப என்னிடம் கொடுக்கவில்லை. திறக்கும் எண்களைச் சேர்த்துப் போட்டுவிட்டுப் பின்னர் சிடியைத் தானே எடுத்துக் கொண்டு விட்டார். ஐநூறு ரூபாய் பணம் வாங்கிக் கொண்டார். பணமாக இல்லை என்பதால் செக்காகக் கொடுத்துவிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் சந்தேகம் போகவே இல்லை. அதே சிடியில் இன்னும் பலருக்கு இவர் போட முடியுமே என்பது தான்! அவரைத் திரும்பக் கேட்டதற்கு அவர் "நானும் பலருக்குப் போட்டுக் கொடுத்திருக்கேன். யாருமே என்னைக் கேள்வி கேட்டதில்லை இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை!" என்று பதில் சொன்னார். நான் கேள்வி கேட்பேன் என்று பதில் கொடுத்தேன். அதோடு நான் சொன்னது இப்போதைய இளைஞர்கள் ஒரு வேளை இதனால் என்ன என்று இருக்கலாம். எங்கள் தலைமுறை அப்படி இருந்ததில்லை என்றேன். ஆனாலும் இப்போதும் பல இளைஞர்களும் கவனமாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. எங்களுக்கு இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.  இப்படித் தான் மின் சாதனங்களைப் பழுது பார்க்கையிலும் ஏதேனும் உபரி சாமான்கள் வாங்க நேர்ந்தால் பழுது பார்க்க வரும் நபர்கள் அவங்களே போய் வாங்கி வருவாங்க. யாரும் கடையின் ரசீதைக் கொடுப்பது இல்லை. ஆனால் நாங்க பணம் கொடுக்கும்போதே ரசீது வேண்டும்னு சொல்லுவோம்.

அப்படியும் இரு முறைகள்  பில்லில் எண்களில் போட்ட தொகையும் மொத்தத் தொகையும் ஒன்றாகவும் இருக்கையில் அதிலேயே  எழுத்தால் அதிகத் தொகை எழுதப்பட்டிருக்கும். அதுவும் பேனாவால் எழுதி இருப்பாங்க. ரசீது கணினியால் கொடுக்கப்பட்ட ரசீது! அதில் எழுத்தால் எழுதி இருக்கும் தொகை மேல் அது தெரியாதவண்ணம் பேனால் மேலே எழுதிக் கொடுத்திருப்பாங்க. ஒரு முறை ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மின்சார சாதனத்துக்குக் கூட விலை வைத்து ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. சென்ற மாதம் ஒரு புது எலக்ட்ரீஷியன் வந்து குழல் விளக்குக்குச் சோக் வாங்குகையில் பட்டியும் சேர்த்து வாங்குவதாகச் சொல்லிவிட்டு அதில் கண்ட தொகைக்கு மேல் இருநூறு ரூபாய் சேர்த்துப் போட்டிருந்தார். பின்னர் நாங்க சுட்டிக் காட்டியதும் கடையில் தப்பாகப் போட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர் வரவே இல்லை! இன்னொருத்தர் இன்வெர்டருக்கு வயரிங் பண்ணணும்னு 600 மீட்டர் வயர் வாங்கினார் ஆனால் வீட்டில் ஏற்கெனவே இன்வெர்டருக்கு வயரிங் செய்திருந்தது, அவ்வளவு திறமையான எலக்ட்ரீஷியனுக்கு இன்வெர்டருக்கு வயரிங் செய்திருப்பதைக் கூடவா கண்டு பிடிக்க முடியாது! அந்த 600 மீட்டர் வயரையும் எங்கள் தலையில் கட்டிட்டுப் போயிட்டார்! :(

ஆக மொத்தம் இந்த நாட்டில் தப்பைக் கண்டால் கேள்வி கேட்கக் கூடாது போல! இந்தக் கணினி விற்பன்னர் இனி வருவாரானு யோசனையும் வருது! பார்ப்போம்! நேற்று வந்தவர் உதவி ஆள் தான். நிறுவனத்தை நடத்துபவர் அல்ல! ஆகையால் நம்பிக்கை இருக்கிறது! என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.