எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 29, 2018

அஷ்டபந்தனம் என்றால் என்ன?

கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்

அஷ்டபந்தனம் - சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.

சுக்கான்கல் என்பது வெள்ளை அல்லது கபில நிறத்துடன் கூடியது தேர்ந்தெடுக்கப்படும். அடுப்பில் இரும்புச் சட்டியில் இட்டு வறுத்தால் வெடிக்காத வகையே சிறப்பானது என்கின்றனர்.

கொம்பரக்கு என்பது மரப்பட்டையுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தூய்மையானது என்கின்றனர்.

சாதிலிங்கம் என்பது வைப்புப் பாஷாண வகை எனத் தெரிய வருகிறது. நவ பாஷாணத்திலும் ஒன்று என அறிகிறோம். அஷ்டபந்தனத்தில் இது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குங்கிலியம் தூசு, தும்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

செம்பஞ்சு வாதாங்கொட்டையைப் போல் இருக்கும் எனவும் பிஹாரில் இருந்து வருவதாகவும் "கோக்தி" என்னும் பெயர் எனவும் தெரியவருகிறது.

தேன்மெழுகு, இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே எனினும் இதில் மஞ்சள் நிறத்தை விட வெண் மெழுகே அஷ்டபந்தனத் தயாரிப்பில் முக்கியமானது.

எருமை வெண்ணெய் புத்தம்புதியதான மண்பாண்டத்தில் போட்டு வைத்தால் வெண்ணெயின் ஈரப்பசையை அது உறிஞ்சி எடுத்து விடும். பின்னர் பயன்படுத்துவார்கள்.

கற்காவி அல்லது நற்காவி அழுக்குச் சிவப்பாகக் கட்டியாக இருக்கும் என்கின்றனர்.  கட்டிப்பட்டிருப்பதையே சிறப்பானதாகவும் கருதுகின்றனர்.

இதில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு முறை இருக்கிறது. அந்த அளவில் சேர்த்து மர உரலில் போட்டு மர உலக்கையால் இடிக்க வேண்டும். கல்லுரலில் போடக் கூடாது.  வெண்ணெயைத் தவிர்த்து மற்றவற்றைப் போட்டு வெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும்.

முதலில் இடும்போதும் ஒவ்வொன்றாகத் தான் மர உரலில் போட வேண்டும். இடிப்பவர்கள் மனத்தூய்மை, உடல் தூய்மையுடன் இருக்க வேண்டும். சிவ நாமத்தையோ நாராயண நாமத்தையோ உச்சரித்த வண்ணம் இடிக்க வேண்டும். பண்டங்களும் தூய்மையாக இருக்கவேண்டியதோடு அல்லாமல், பண்டங்களைச் சேர்க்கும் அளவும் மாறக்கூடாது. இடிப்பதற்கும் கால அளவு உண்டு.  இதன் பின்னர் பிரதிஷ்டை செய்கையில் முக்கியப் பீடத்திற்கும் துணைப் பீடத்திற்கும் சேர்க்கைக்காகத் திரிபந்தனம் என்பதைச் சேர்ப்பார்கள்.

 திரிபந்தனம்:

சுக்கான் தூள், சர்க்கரை, தொல் பேயான் நற்கனியும்
ஒக்கக் கலந்தமைத்தல்  உற்றதிரி பந்தனம் ஆம்

இதற்குச் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவை தேவை. சுக்கான் கற்களை நன்கு பொடித்துக் கொண்டுக் கொஞ்சம் பெரிய சல்லடையால் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  வாயகன்ற மண் சட்டியில் அந்தப் பொடித்த சுக்கான் தூளைப் போட்டுச் சூடேற்ற வேண்டும்.  சிறிது சிறிதாகக் கருப்பட்டிக் கசிவையும், பேயன் பழத்தையும் போட்டுக்கொண்டு கிளறிக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும். கைச்சூடு தாங்க முடியாத அளவுக்குப் பதம் வர வேண்டும். அப்போது பெரிய மர மத்துக் கொண்டு நன்கு மசித்துக் கூழாக்குவார்கள். பின்னர் கற்களுக்கு இடையே அவற்றைப் பயன்படுத்துவார்கள்.  கலவை செம்மையாக இருந்தால் தான் பிடிமானம் உறுதியாக இருக்கும்.

இத்தனையையும் முறையாகச் செய்து பின்னரே பீடத்தில் கடவுள் சிலைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்வார்கள். இவைகளைப் போட்டுப் பிரதிஷ்டை செய்தாலே அவை உறுதியுடன் பீடத்தில் நிற்கும்.

உதவியவை: விக்கி பீடியா, தமிழ் விர்சுவல் பல்கலைக்கழக நூலகம் மேலும்
(காரைக்குடி- கம்பன் அடிப்பொடி அமரர் சா.கணேசன் அவர்களின் 'கட்டுரைக் களஞ்சியம்’ நூலில் இருந்து...)

Saturday, September 22, 2018

கோவிந்தா! கோவிந்தா! வெங்கடரமணா! கோவிந்தா!


இன்றைய சமாராதனையில் வைக்கப்பட்ட வெங்கடாசலபதி படம் பெரிய அளவில் இருப்பது யாரோ பரிசாகக் கொடுத்தது. சின்னப் படம் தான் ஒரிஜினல் படம் என்பார்கள். என் பிறந்த வீட்டில் இந்தப் படம் பெரிய அளவில் இருப்பதையே சமாராதனைக்கு வைப்பாங்க! இங்கே இரண்டையும் வைச்சிருக்கோம். எல்லோரும் உட்கார்ந்திருந்ததால் படம் எடுக்க முன்னால் போக முடியலை. அதோடு தீபாராதனை சமயம் வேறே!அதுக்கு அப்புறமா மற்ற உம்மாச்சிங்களுக்கும் நிவேதனம். சாதம், பருப்பு, சர்க்கரைப் பொங்கல், எள் சாதம், உளுந்துவடை! 
*********************************************************************

20 ஆம் தேதியன்னிக்கு ஏடிஎம் (அப்பாவி தங்கமணி என்னும் பெயரில் வலைப்பக்கம் வைச்சிருக்கார்) தன் கணவரோடு வந்தாங்க!  முன்னரே ஒரு தரம் வந்தாங்க. ஆனால் அப்போ சஹானா பிறக்கலை. சஹானா பிறந்தப்புறமா வர முயன்று வர முடியலை. இப்போத் தான் வந்தாங்க. ஏற்கெனவே சொல்லி இருந்தும் மறந்திருக்கேன். நல்லவேளையாக் கிளம்பினதுமே வாட்சப்பில் தகவல் கொடுத்திருந்தாங்க! சரி, உடனே என்ன செய்யறதுனு யோசிச்சேன். அவங்க வரப் போறது மத்தியானம் என்று வேறே சொல்லி இருந்தாங்க. அன்னிக்கு யதேச்சையா நம்ம ரங்க்ஸோட ஆங்கிலத் தேதிப் ப்றந்தநாள். அதுக்கு சிம்பிளா ஏதேனும் இனிப்புப் பண்ண நினைச்சிருந்தேன். இப்போக் குழந்தை முதல் முதலா வராளேனு நினைச்சுத் தேங்காய் நிறைய இருந்ததால் பர்ஃபி பண்ணலாம்னு நினைச்சு பர்ஃபி பண்ணினேன். அதற்கான படங்கள் கீழே. பைன்டிங்குக்காகக் கொஞ்சம் போல் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன். ஆனால் ஏடிஎம் ஏற்கெனவே டயட்டில் இருக்கும் விஷயமும் எனக்கு மறந்து போச்ச்ச்ச்ச்! அவங்க சாப்பிடவே இல்லை. அவங்க ரங்க்ஸும் சஹானாவும் சாப்பிட்டாங்க. காரத்திற்கு வீட்டில் ஏற்கெனவே முதல்நாள் தான் வாங்கி வந்திருந்த காராசேவ் கொடுத்தோம். ஏடிஎம் அதையும் சாப்பிடலை. போனால் போகுதுனு காஃபி மட்டும் குடிச்சாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  :)

எங்களுக்குப் பரிசெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காங்க ஏடிஎம். யதேச்சையா அன்று அவர் பிறந்தநாள் என்பது தெரிந்து கொண்டு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தாத்தாவுடன் நெருங்கிப் பழகினாள் சஹானா! ஐபாடில் அவளுக்கு விளையாட்டுகள் காட்டினார் தாத்தா! :) அந்தச் சில மணி நேரங்கள் மறக்க முடியாத நேரம். ஒரு குழந்தை வீட்டிற்கு வந்துட்டால் வீட்டின் சூழ்நிலையே மாறிப் போயிடுது.நெய்யில் துருவிய தேங்காய்த் துருவல்கடலைமாவையும் நெய்யில் தயிர் பதத்துக்கு பொரித்தேன். 


ஜீரா கொதிக்கிறது. கடலைமாவு, தேங்காய்க் கலவையைப் போட்டதும் எடுத்தது. கடலைமாவை முதலில் போட்டுக் கொண்டு கொஞ்சம் கிளறிய பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்க்கலாம். அப்போத் தான் கடலைமாவும் தேங்காயும் நன்கு சேரும். 


கிளறும்போதெல்லாம் படம் எடுக்கமுடியலை! தட்டில் கொட்டினதும் தான் எடுத்தேன். சின்ன உருளியில் கிளறி இருந்திருக்கலாம். இந்த அலுமினியம் சட்டியில் அடியில் கொஞ்சம் சிவந்து விட்டது! உருளியில் பொங்கி வழியுமோனு சந்தேகமா இருந்தது. பெரிய உருளி இதுக்கு அதிகம்! :)
துண்டங்கள் போட்டதும் எடுத்த படம்!

இதைத் "திங்க"ற கிழமைக்கு வைச்சுக்கலாமோனு நினைச்சேன். அப்புறமாப் போட்டுட்டேன். அதுக்கு இன்னும் நிறைய இருக்கு! அவற்றைப் போடமுடியுமானு பார்க்கணும். எல்லோரும் பர்ஃபி, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் எல்லாம் எடுத்துக்குங்க! 

Friday, September 21, 2018

ஹையா, நானும் ரொம்பவே பிசியே! :)

எல்லோரும் பிசி,பிசினு சொல்லும்போது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். ஆனால் இன்னிக்கு உண்மையாவே நான் ரொம்பவே பிசி! :))) ஹிஹிஹி, நானும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டேனா! நாளைக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமை. பெருமாள் வரார் நம்ம வீட்டுக்கு! ஆகவே இன்னிக்கு எல்லா உம்மாச்சிங்களும் குளிச்சாங்க! அதுக்கப்புறமா அவங்களுக்கு உடைகள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்துப் பூக்களைப் போட்டுவிட்டு இதுக்கு நடுவில் சமைச்சுச் சாப்பிடும்போதே ஒரு மணி ஆகி விட்டது. சாப்பிட்டுவிட்டுப் பூத்தொடுக்க உட்கார்ந்துவிட்டேன். அது முடிய 3-45 ஆகிவிட்டது. அதன் பின்னர் பதினைந்து நிமிஷம் படுத்துவிட்டு எழுந்து வந்து பாத்திரம் கழுவித் தேநீர் தயாரித்து நாளைக்கு ஊறுகாய்க்கு ஏற்பாடு செய்துட்டுக் கணினிக்கு வந்திருக்கேன். இப்போவும் சீக்கிரமாப்போயிடுவேன்.

இப்போ நான் சொல்ல வந்ததே இன்னிக்குக் காலம்பர வாட்சப்பில் பார்த்த ஒரு வாத, விவாதம் தான்! எல்லாம் நம்ம எ.பி.குழு நண்பர்கள் தான்! எந்தக் கேள்வி மூலம் என்பதைக்கவனிக்கலை! ஆனால் நடுவில் அது மஹாபாரதத்துக்குப் போய் அப்பாதுரை (அவர் ஏன் எழுதறதே இல்லை? அதோடு யாரோட வலைப்பக்கமும் வரதில்லை) நான் போன வருஷத்தோடு முடிச்ச கண்ணன் பதிவைப் பற்றி சிலாகித்துக் கூறி அதை எ.பி. ப்ரஸ்ஸில் வெளியிடக் கேட்டுக் கொண்டார்! இஃகி, இஃகி, அதை வெளியிட அணுகிய ப்ரஸ்ஸெல்லாம் ஒரு பாகமே ஆயிரம் பக்கம் வருது! இதிலே சுருக்குவதும் கடினமா இருக்குனு ஓடியே போயிட்டாங்க! இதுக்காக வித்யாபவனிடம் அனுமதி எல்லாம் வாங்கி வைச்சிருந்தேன். முடியலை. விட்டுட்டேன். முடிஞ்சால் மின்னூலாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாகமாக வெளியிடணும். அதுக்கு முன்னாடி அதை முடிக்கணும். குருக்ஷேத்திரத்தில் நடந்தவைகளைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் தகவல்களைப்  படித்து வந்து கொண்டிருக்கேன். என்றாலும் முன்ஷி அவர்களைப் போல் சுவாரசியமாகச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்.

இதைப் பற்றி அப்பாதுரையின் வாட்சப் செய்தியைப் பார்த்ததும் உடனே தோன்றி மறைந்தன. அதிலேயே பானுமதி அவர்கள் கர்ணனுக்கு வக்காலத்து வாங்கி இருந்தாங்க! கர்ணனுக்கு இயற்கை மட்டுமில்லாமல் மனிதர்களும் வஞ்சனை செய்தாங்க என்று சொல்லி இருந்தாங்க.அவங்க நினைக்கிறாப்போல் கர்ணன் நடுநிலையாளனோ எவராலும் ஒதுக்கப்பட்டவனோ இல்லை. அவனுக்கு துரோணாசாரியார் கற்றுக்கொடுக்க மறுத்தது பிரம்மாஸ்திரப் பிரயோகம் மட்டுமே! அதுவும் அவன் அதை அர்ஜுனன் மேல் தான் பிரயோகிக்கப் போகிறான் என்பது வெளிப்படையாக அனைவருமே அறிந்த ஒன்று.அவன் க்ஷத்திரியன் இல்லை, சூத புத்திரன் என்பதால் எல்லாம் துரோணர் மறுக்கவில்லை. இப்போதைய தொலைக்காட்சி செய்தி சானல்கள் ஒரு வரியை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதைப் போல் மஹாபாரதத்திலும் துரோணர் மறுத்ததை மட்டுமே பிடித்துக் கொண்டு அனைவரும் தொங்குகின்றனர். பின்புலம் தெரியவில்லை.

மேலும் சூதனும் க்ஷத்திரியன் தான். க்ஷத்திரியர்களிலேயே அரசகுலத்தவர் தனி! மற்ற க்ஷத்திரியர்கள் தனி! இவர்கள் அதிரதர்கள், மஹாரதர்கள் என்னும் பட்டியலில் வருவார்கள். அதனால் தான் கர்ணனை வளர்த்த தந்தையைத் தேரோட்டி என்கிறார்கள்! தேரோட்டுவதற்குத் தனித் திறமை வேண்டும். யுத்த களத்தில் அரசகுமாரர்களுக்குத் தேரோட்டுபவர்கள் அதற்கெனத் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். ஒரே சமயத்தில் தங்களை எதிர்கொள்ளும் ஆயுதங்களையும் தடுத்துக் கொண்டு தேரையும் சரியான திசையில் அந்த வியூகத்துக்கு ஏற்ப நகர்த்திக் கொண்டு தேரில் இருந்து போரிடும் அரசகுமாரர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்.அத்தகைய ஒரு தேரோட்டியே கர்ணனை வளர்த்தவன் ராதேயன்!  மேலும் கர்ணன் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரௌபதியால் அவமானம் செய்யப்படுகிறான். அரசகுமாரர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் அவன் கலந்து கொள்ள முடியாமைக்குக் காரணமும் அது கௌரவ அரசகுமாரர்கள் இடையே நடக்க வேண்டிய ஒன்று என்பதே காரணம். ஆனாலும் அர்ஜுனனை அவமானம் செய்யவும் அவனை ஜெயிக்கவும் வேண்டியே துரியோதனன் அப்போது கர்ணனுக்கு அங்க நாட்டு அரசபதவியைக் கொடுக்கிறான்.

மேலும் அறிய

https://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_23.html

https://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_28.html

இங்கே சஹஸ்ரகவசன்

கர்ணனின் பூர்வோத்திரம் இங்கே அறியலாம். இதன் மூலம் கர்ணன் அவ்வளவு ஒன்றும் நல்லவன் இல்லை என்பதையும் அறியலாம். மேலும் சில தகவல்களுக்கான சுட்டி இருக்கிறது. ஆனால் இப்போ நேரம் இல்லை. பின்னர் தேடித் தருகிறேன்.

நாளைக்குப் பெருமாளுக்கான வழிபாடுகள் முடிந்து மதியத்துக்கு மேல் தான் இணையத்துக்கே வர முடியும். ஆகவே கருத்துச் சொல்லிவிட்டு வெளியிடவில்லை என்றோ, வெளியிட்டு பதில் வரவில்லை என்றோ யாரும் நினைக்கவேண்டாம். இது ஓர் அவசரப் பதிவு. சுட்டிகள் மட்டும் தேடிக் கொடுத்திருக்கேன். 

Wednesday, September 19, 2018

மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை! மீள் பதிவில் சில சேர்க்கைகள்!

எங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-ல் இருந்து 500 வருடங்களுக்கு முற்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு உட்பட்ட கற்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப் பட்டன. அவற்றைக் கல்வெட்டுப் படிப்பவர் மூலம் ஆராய வேண்டி ஒருவரை அனுப்புமாறு நண்பர் மரபூர் சந்திரசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கு நேரம் இப்போது தான் வந்தது.புதுசாய்ப் படிக்கிறவங்களுக்காக அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்
 இங்கே மற்றும்
 இங்கே பார்க்கலாம். அந்தக் கோயிலைத் திருப்பணி செய்து மீண்டும் நித்தியப் படி வழிபாடுகள் நடக்கச் செய்து வந்த முயற்சிகள் ஓரளவு பலனை அளித்து வருகின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். கோயிலில் இருக்கும் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப் பட்ட கற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயR.E.A.C.H. Foundation உறுப்பினர் ஆன சந்திரசேகரன், அதன் அமைப்பாளர் ஆன சத்திய மூர்த்தியிடம் சொல்லி ஆவன செய்ததின் மூலம் சென்ற ஞாயிறு அன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள், தகுந்த வல்லுனர்களோடு கூடிய குழுவை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் ரீச் ஃபவுண்டேஷன் உறுப்பினர் ஆன திரு லட்சுமிநாராயணன் மூலம் பரவாக்கரை சென்று மேற்சொன்ன கோயிலைப் பார்வை இட்டிருக்கின்றார். கல்வெட்டுக்களின் வார்த்தைகள் தமிழே என்றாலும் அது பல்லவர் காலத்துக்கு முந்தைய எழுத்தாய் இருக்கலாமோ என ஒரு கருத்து திரு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அது பற்றி மேலும் ஆய்வு நடப்பதால் பின்னர் அது பற்றித் தெளிவான கருத்து வரும். பின்னர் அது குறித்துத் தெரியவில்லை. இதை எழுதியது 2008 ஆம் ஆண்டில். அதன் பின்னர் பெருமாள் கோயில் கட்டிக் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டில் செய்விக்கப்பட்டது.

இப்போது தெரியவேண்டிய முக்கியமான விஷயம் அந்தக் கோயில் கட்டக் கொண்டு வரப்பட்ட கற்கள் அனைத்தும், பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் முன்னொரு காலத்தில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஈசனின் மாடக்கோயிலின் கற்கள் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த மாடக் கோயில் இன்று இல்லை. எனினும் இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மறைந்த திரு செளந்தரராஜன் அவர்கள் (ஓய்வு), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ், பங்களூரு, சொல்லுவது, அந்த மாடக் கோயில், கோச்செங்கணான் காலத்திற்கும் முன்னால் திருமூல நாயனாரால் கட்டப் பட்டது என்று சொல்கின்றார். திருமூலரைப் பின்பற்றி, சைவ யோக மரபைப் பின்பற்றிய கோச்செங்கணான் பின்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டி இருக்கின்றான் என்றும் சொல்லுகின்றார். திருமூலர் தான் இந்தப் பரவாக்கரையில் மாடக் கோயில்கள் இரண்டை ஈசனுக்கு எழுப்பி இருக்கின்றார் என்றும் சொல்லுகின்றார். ஒன்று அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகத மாணிக்கேஸ்வரர் கோயில் (சிதிலமாகிப் போன இந்தக் கோயில் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பணி எடுக்கப் பட்டு, கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த பழைய விக்கிரஹங்கள் கிடைக்கவில்லை. புதியதாகவே வைக்கப் பட்டுள்ளது.) இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன், அடுத்துச் சொல்லுவது, பெருமாள் கோயிலின் கிழக்கே இருந்த இந்த மாடக் கோயிலின் கற்களைக் கொண்டே பெருமாள் கோயிலும், மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வு.


பெருமாள் கோயில் நுழைவாயில் கும்பாபிஷேஹத்தன்று. ஜூன் 2011 /17,18 தேதிகளில்!பெருமாள் கோயில் விமானம்!அஷ்டபந்தனம் இடிக்கையில். நான் முதல்லேயே இடிச்சுட்டேன். அப்புறமாப் படம் எடுக்க முடியாதே! :)இந்த ஆஞ்சிக்குத் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் வடைமாலை சார்த்தினோம்.அஷ்டபந்தனம் சார்த்திய பின்னர் பெருமாளைப்  புனர் பிரதிஷ்டை செய்ததும் பட்டாசாரியார் அனுமதியுடன் எடுத்த படம்!

அந்தக் கற்களே பெருமாள் கோயில் திரும்பப் புனருத்தாரணம் செய்யப்படும்போது பயன்பட்டனவா என்பது தெரியவில்லை. கல்வெட்டுக்கள் எல்லாம் புதிய பூச்சில் அழிந்து விட்டன. நாங்கள் அப்போ இருந்தது சென்னையில். ஆகையால் அடிக்கடி போய்ப் பார்க்க முடியவில்லை. இதை எல்லாம் சொல்லியும் ஊர் மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. போகட்டும். லிங்கத்தடி பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். இந்த லிங்கத்தடிக் கோயில் மிகப் பழமையானதாக இருக்கவேண்டும் என்கின்றார் மறைந்த திரு சௌந்தரராஜன் அவர்கள்.  இப்போ முக்கியமாச் சொல்ல வேண்டியது கட்டிக் கொண்டிருக்கும் சிவன் கோயில் பற்றிய புராதனத் தகவல்கள்! இந்தப் பதிவை அதற்காக ஆரம்பித்துவிட்டுப் படங்களைப் பார்த்ததும் நினைவுகள் மீண்டும் மலர்ந்தன!

 திரு செளந்தரராஜன் அவர்கள் மண்ணில் புதையுண்டு  மறைந்து போன இந்த  ஞானானந்தேஸ்வரர் ஆலயத்தின், மிக மிகப் பழமையான மரகத லிங்கத்தை ஆய்வு செய்து, அந்த லிங்கம் திருமூலரால் அன்றி வேறு யாராலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்க முடியாது என்றும் சொல்லுகின்றார். இந்தப் பரவாக்கரையே திருமூலரால் வண்தில்லை என அழைக்கப் பட்டதாயும், இந்த வண்தில்லையின் இரு சிவபதிகளும் திருமூலரால் கட்டப் பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார். ஞானானந்தேஸ்வரர் ஆலயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அங்கே இப்போது நெல் வயல்களே காணப் படுகின்றன. ஆனால் மிக மிகப் பழமை வாய்ந்த அந்த லிங்கம் இருக்கும் இடத்தை "லிங்கத்தடி" என உள்ளூர் மக்கள் அழைப்பதோடு, ஊரில் மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது வேறு ஏதும் வேண்டுகோளை முன் வைத்தோ, லிங்கத்தடி லிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவது உண்டு என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் இன்று வரையில் அந்த மரகதலிங்கனார் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றார்.


படம் இணையத்தில் இருந்து!

இவருடன் உடனுறை அம்மையைக் காணவில்லை. ஆனால் துர்கை கிடைத்திருக்கின்றாள். சாஸ்தா, பிரம்மா, மற்றும் சப்த கன்னியரில் ஒருவர், மேலும் அதி முக்கியமாய் ஜேஷ்டா தேவி கிடைத்திருக்கின்றாள். இந்த ஜேஷ்டா தேவியின் சிலை மிக, மிக அழகு வாய்ந்ததாய் இருக்கின்றது. இங்கே உள்ள படத்தில் காணப்படும் விசலூர் ஜேஷ்டா தேவியைப் பெருமளவு ஒத்து இருக்கும் இந்தச் சிலையும், கூட இருக்கும் மற்றச் சிலைகளுமே பல்லவர் காலத்துக்கு முந்தி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ஜேஷ்டா தேவி வழிபாடு ராஜராஜ சோழன் காலம் வரைக்கும் இருந்து வந்ததாயும், பின்னர் முற்றிலும் அழிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. பலரும் நினைக்கும் வண்ணம், ஜேஷ்டா தேவி என்பவள், மூதேவி இல்லை என்றும் இந்த மூதேவி என்ற வார்த்தையே பின்னர் வந்தது என்றும் திரு செளந்தரராஜன் சொல்லுகின்றார். இந்த ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார். இப்போது வேங்கடநாதனுக்குக் கோயில் கட்டிக் கொள்ளத் தன் கோயிலின் கற்களைக் கொடுத்து உதவிய ஈசனுக்கும் புதியதாய்க் கோயில் எழுப்பப் பெரு முயற்சிகள் செய்து வருகின்றார் திரு செளந்தரராஜன் அவர்கள். அப்போதே 84 வயதான அவர் பெரும் ஆவலுடன் இந்தக் கோயிலுக்கான அஸ்திவாரம் எழுப்பப் படும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இது பற்றிய விபரமான தகவல்கள் இன்னும் பல இருக்கின்றன். ஒரே பதிவில் போட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவரும்.

இப்போதைய படம். நேற்றைய பதிவில் இருந்து!

ஜேஷ்டா தேவி பற்றி சமீபத்தில் கூடப் படிச்சேன். இவளை மூதேவி என அனைவரும் சொல்வது தவறு என்கின்றனர். மூத்த தேவி என்பதே மூதேவி என மருவி அது ஓர் வசைச்சொல்லாக ஆகி இருக்குமோ என்பது என் அனுமானம்.


Sunday, September 16, 2018

பரவாக்கரையில் ஒரு புதிய சிவன் கோயில்!

மாரியம்மன் கோயிலிலும் எங்கள் தாயாதி செய்து வைத்த அபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டு அங்கேயும் பஞ்சாமிர்தம் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்பினோம். அப்போது எங்கள் தாயாதியான ஸ்ரீமத்யார்ஜுன ஐயர் அவர்களால் கடும் முயற்சியுடன் எழுப்பப்பட்டு வரும் சிவன் கோயிலைப் பார்க்க வருமாறு அழைத்தார். அது மாரியம்மன் கோயிலில் இருந்து கிழக்கே இருக்கும் ஐயனார் கோயிலுக்கு அருகே கட்டப்பட்டு வருகிறது. இந்தச் சிவன் கோயிலைக் கண்டு பிடித்துக் கட்டுவதற்கான முயற்சிகளைச் செய்தவர் எங்கள் உறவினர் ஆன திரு சௌந்திரராஜன் அவர்கள். 
திரு சௌந்திரராஜன் அவர்களைப் பற்றி மேற்கண்ட சுட்டியில் படிக்கலாம். ஊருக்குள் நுழையும் இடத்தில் பொல்லாப் பிள்ளையாருக்கு அடுத்து இருப்பவர் தான் மரகத மாணிக்கேஸ்வரர். இவர் மேற்கே இருக்கிறார். அதன் பின்னர் ஊருக்குள் நுழைந்ததும் அக்ரகாரத்தின் ஆரம்பத்தில் பெருமாள் இருக்கிறார். அக்ரகாரத்திலேயே நேரே சென்று  இடப்பக்கம் திரும்பும் தெருவில் மாரியம்மன் குடி கொண்டிருக்கிறாள். அங்கிருந்து கிழக்கே சென்றால் வயல்வெளிகளுக்கு நடுவில் ஐயனார் கோயில் காணப்படும். அங்கே பல ஆண்டுகளாக ஒரு லிங்கம் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறார். திரு சௌந்திரராஜன் மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலுக்கு வந்தபோது இந்த லிங்கத்தைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தற்செயலாகப் போய்ப் பார்க்க இது மிகப் பழங்காலத்து லிங்கம் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் மேலும் ஆய்வுகள் செய்து இந்த லிங்கத்தோடு தேவியும் இருந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். பண்டைக்காலங்களில் கோயில்களில் குடி கொண்டிருக்கும் ஜ்யேஷ்டா தேவியும் இந்த லிங்கத்தோடு சேர்ந்தே கிடைத்திருக்கிறாள். எல்லாரையும் ஏற்கெனவே படம் எடுத்துப் போட்டேன். ஆனால் தேடினால் கிடைக்கவில்லை.

அந்தப் பழமை வாய்ந்த கோயிலைப் பற்றியும் லிங்கத்தைப் பற்றியும் ஆய்வுகள் செய்த திரு சௌந்திரராஜன் அந்தக் கோயில் இருந்த இடத்தில் இப்போது வயல்கள் வந்திருப்பதையும் அங்கே தோண்டிப் பார்க்கவேண்டும் என்றும் சொல்லவே கோயிலின் சில சிதைவுகள் கிடைத்திருக்கின்றன. லிங்கம் இருந்த் ஐடம் லிங்கத்தடி என்று அழைக்கப்பட்டு வருகிறது. பின்னர் கோயில் இருந்த இடத்தைக் கண்டு அறிந்ததும் அந்த நிலத்தை வைத்திருப்பவாரிடம் இருந்து நிலத்தை வாங்கி அங்கே மீண்டும் அந்த லிங்கனாருக்குக் கோயில் எழுப்பத் திரு சௌந்திரராஜன் முயற்சிகள் செய்து அம்பிகையையும் காஞ்சீபுரத்து ஸ்தபதிகள் மூலம் வடித்து வைந்திருந்தார். ஆனால் அவர் காலத்தில் அந்தக் கோயிலை எழுப்ப முடியாமலே போய் விட்டது. இப்போது திரு மத்யார்ஜுன ஐயர் அவர்கள் கடும் முயற்சி எடுத்து அந்தக் கோயிலைக் கட்டி வருகிறார்.


அந்தக் கோயில் பற்றித் திரு சௌந்திரராஜன் கண்டறிந்த குறிப்புக்கள் அடங்கிய சின்னஞ்சிறு புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இந்தப் பதிவும் கொஞ்சம் தாமதம். எனினும் நினைவில் இருந்தவற்றை எழுதி உள்ளேன். இப்போது அந்தக் கோயில் விமானம் கட்டி முடித்து கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய ஸ்வாமிகளுக்கான சந்நிதியை எழுப்பிக் கொண்டு இருக்கின்றனர். அங்கே தான் நாங்கள் சென்றோம். மேலே ஏற முடியாததால் நான் மேலே ஏறிப் போகலை. லிங்கத்தின் அருகேயே இருந்துவிட்டேன். லிங்கனாருக்கு இப்போ வழிபாடுகள் செய்வதாக அவர் மேலே சார்த்தி இருக்கும் பூக்களில் இருந்து தெரிந்தது. அங்கிருந்து மறுபடி திரும்பும்போது வயலில் ஓர் வாழை மரம். தார் போட்டிருந்தது. மிக அழகாகக் காட்சி அளிக்கவே அதையும் படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் அங்கிருந்து கிளம்பி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போனோம். மாயவரம் வழியாகச் சென்றதால் வழியில் மாயவரத்தில் நிறுத்தி மயூரா லாட்ஜில் ரங்க்ஸ் மட்டும் சாப்பாடு சாப்பிட்டார். நான் எதுவும் வேண்டாம்னு இருந்துட்டேன். பின்னர் அங்கிருந்து வைத்தீஸ்வரன் கோயில் போனால் எல்லா லாட்ஜ்களும் ஒரே கூட்டம், கும்பல். கல்யாணப் பார்ட்டிகள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருந்தார்கள். கடைசியில் ஒரு லாட்ஜில் இடம் கிடைத்தது. ஏசினு பேரே தவிர ஏசி வேலை செய்யவில்லை. 


வழியில் காவிரி


சிதம்பரம் செல்லும் வழியில் கொள்ளிடம். படங்கள் நிறைய எடுத்தேன். தவறுதலாக டெலீட் ஆகிவிட்டது. :( செல்ஃபோனில் படங்கள் இருக்கானு பார்த்துட்டு மறுபடி அப்லோட் பண்ண முயற்சிக்கணும். 
சிதம்பரத்தில் கிழக்கு வாசல் கோபுரம் படமும் டெலீட் ஆகி இருக்கு. இந்தப் படம் உள்ளே பிரகாரத்தில் கோவிந்தராஜர் சந்நிதியில் இருக்கும் கோபுரம். இதற்கு இடப்பக்கம் இருக்கும் வாசல் தான் நந்தனார் வந்த வழி என்றும் அதை தீக்ஷிதர்கள் அடைத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கோவிந்தராஜருக்கு இந்த சந்நிதி கட்டப்படும்போது சாமான்கள் வருவதற்காக அந்த மதிலை இடித்ததாயும் பின்னர் கட்டி முடித்த பின்னர் அதை மூடிவிட்டதாகவும் கோயில் குறிப்புகள் சொல்கின்றன. இந்தக் கோவிந்தராஜர் கோயில் கோபுர மதில் சுவர் மீத்து நந்தியெம்பெருமான் உட்கார்ந்திருப்பதில் இருந்து இது பழைய மதில் சுவர் என்பதை அறியலாம். கோவிந்தராஜர் கோயில் பின்னால் கட்டப்பட்டது. அதைக் குறித்து என்னோட சிதம்பர ரகசியம் நூலில் படிக்கலாம்.  இங்கே நேரே கோவிந்தராஜர் நடராஜரைப் பார்க்கும் வண்ணம் கிடந்த கோலத்தில் காணப்படுவார். இருவருக்கும் எதிரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால் ஒரே சமயம் நடராஜாவையும், கோவிந்தராஜாவையும் பார்க்கலாம். 

Saturday, September 15, 2018

இனிய கொழுக்கட்டை தின (தாமதமான) வாழ்த்துகள்!


ராமரை இம்முறை நீட்டுவாக்கில் எடுத்தேன். கீழே உள்ள உம்மாசிங்களும் சேர்ந்து வருதானு பார்த்தால் வருது. பழைய செல்லில் அப்படி எடுக்க வராது! இது அதை விடப் பெரிசோ? தெரியலை. எப்போவும் விழும் வெளிச்சம் கூட இம்முறையில் ஜாஸ்தி வரலை!


பிள்ளையார் மட்டும் தனியாவும் எடுத்திருக்கேன். குட்டிப் பிள்ளையார்கள் மறைஞ்சிருக்காங்க. வெள்ளை உலோகப் பிள்ளையாரும் உட்கார்ந்திருக்கார். அருகம்புல்க் கூட்டத்துக்குள் மறைஞ்சு இருக்காங்க எல்லோரும். சாதம், பருப்பு, உப்பு, வெல்லக் கொழுக்கட்டைகள், பாயசம், வடை, அப்பம், (இட்லியை உள்ளே எடுத்து வைச்சிருக்கேன் ஞாபக மறதியாக) அதான் படத்தில் இல்லை.
*********************************************************************************

கொஞ்ச காலமாவே ஒரே ஓட்டமும், பிடியுமா இருக்கு! இதிலே குட்டிப் பட்டுக் குஞ்சுலுவுக்காகச் செய்து கொண்ட பிரார்த்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அந்த வரிசையில் இப்போப் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குப் போக வேண்டி வந்தது. இந்தக் கோயில் பற்றி திரு&திருமதி கோமதி அரசு தம்பதியினர் சொல்லித் தான் அறிந்து கொண்டோம். 2016 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் கொடைக்கானல் போனப்போக் குழந்தை வேலப்பரைப் பார்த்து வேண்டிக் கொண்டு வந்தோம். அதுக்கப்புறமாக் குஞ்சுலு பிறந்து நாங்க அம்பேரிக்கா போய்த் திரும்பி வந்து மாமியாருக்கும் வருஷம் ஆகிப் பின்னர் ஒவ்வொன்றாகச் செய்கையில் குஞ்சுலு இந்தியா வந்தப்போ இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற நினைச்சு நேரப் பற்றாக்குறையால் போகலை. அவங்க வரச்சே வரபடி வரட்டும் நாம பிரார்த்தனையைச் செய்துடுவோம்னு ஆரம்பிச்சப்போ ஜூன்/ஜூலையில் என்னோட வயிற்றுக்கோளாறுகளால் எங்கேயும் போக முடியலை.

ஆகஸ்ட் மாசம் குஞ்சுலுவின் ஜன்ம நக்ஷத்திரம் வந்த அன்று போகலாம்னா பூம்பாறைக்கோயிலை அணுகும் விதம் தெரியலை. அதோடு எங்களுக்கும் இங்கே ஸ்ரீரங்கத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதன் பின்னர் முகநூல் மூலம் டிடியைக் கேட்டுப் பூம்பாறைக் கோயிலைத் தொடர்பு கொண்டு தேதி குறித்துக் கொண்டோம். இம்முறையும் குழந்தையின் பிறந்த தேதியான செப்டெம்பர் 11 ஆம் தேதி எங்க ஆவணி அவிட்டம் என்பதால் அன்று ஏற்பாடு செய்ய முடியலை. கடைசியில் ரொம்ப யோசித்து செப்டெம்பர் 14 ஆம் தேதியான நேற்று விசாக நக்ஷத்திரமும் சஷ்டி திதியும் சேர்ந்து வந்ததால் நேற்றைய தினத்துக்கு ஏற்பாடு பண்ணியாச்சு. ஆனால் முதல் நாள் நம்ம நண்பருக்குப் பண்டிகை!  ஒரு நாள் முன்னாடியே கிளம்பிப் போனால் தான் அங்கே காலை சீக்கிரம் அபிஷேகத்துக்குப் போக முடியும். எப்படிடா எல்லாத்தையும் செய்துட்டுக் கிளம்பப் போறோம்னு கடைசி நிமிஷம் வரை ஒரே கவலை! என்றாலும் காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து சீக்கிரமா வீடு சுத்தம் செய்து கொண்டு கொழுக்கட்டை, வடை, அப்பம் போன்றவற்றுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டேன். முதல்நாள் மாலையே பச்சரிசி இட்லிக்கு அரைச்சு வைச்சாச்சு. காலை ஐந்தே முக்காலுக்கெல்லாம் குளித்து விட்டு வந்து ஆரம்பித்து ஒன்பது மணி அளவில் வடை, அதிரசம் தவிர்த்த எல்லாம் தயார் ஆனது. நம்ம ரங்ஸும் அதுக்குள்ளே பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தயாராக இருந்தார்.

அவரைப் பூஜை செய்யச் சொல்லிவிட்டு வடை, அப்பம் செய்து முடித்துப் பூஜையும் முடிஞ்சு சாப்பிடும்போது மணி சரியாகப் 10-15. எல்லாம் முடிச்சுக் கொண்டு மிச்சம் இருக்கும் சாப்பாடு, கொழுக்கட்டை, இட்லி எல்லாவற்றையும் கையில் கொண்டு போகும் வண்ணம் பாக்கிங் செய்துவிட்டுப் பாத்திரங்கள் கழுவி வைத்துவிட்டுக் காஃபியும் போட்டு எடுத்துக் கொண்டு நான் தயார் ஆனப்போப் பதினொன்றரை ஆகிவிட்டது. உடனே ட்ராவல்ஸ்காரரிடம் தொலைபேசியில் உடனே வரச் சொல்லிவிட்டோம். பின்னே! மலை ஏறும்போது இருட்டி விட்டால் என்ன செய்யறது? அதோடு மழை வரும்னு வேறே வானிலை அறிக்கை மிரட்டல்! கடற்கரைப் பிரதேசங்களில் தான் என்றாலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களில் சொல்ல முடியாது. எப்போ வேணா மழை வரலாம். ஆகவே சரியாகப் பனிரண்டு மணிக்குக் கிளம்பினோம். வழியில் காஃபி மட்டும் நாங்களும் குடித்து ஓட்டுநருக்கும் கொடுத்தோம். நாலேகாலுக்கு அங்கே போய்ச் சேர்ந்தாச்சு. மிச்சம் பரவாக்கரைப் பதிவுகள் முடிந்ததும் வரும்.

பரவாக்கரை மீதிப்படங்களும் அந்தப் பயணத்தின் மற்ற விபரங்களும் அடுத்து வரும். அதுக்கப்புறமாத் தான் பூம்பாறை பயணம் பற்றி வரும். பின்னே! வரிசையா வர வேண்டாமோ! :))))

Tuesday, September 11, 2018

மகாகவிக்கு அஞ்சலி!

நேத்திக்கு மருத்துவரிடம் போனதில் நேரம் ஆகிவிட முன் கூட்டியே பாரதியாருக்கான பதிவைத் தயார் செய்து ஷெட்யூல் பண்ண முடியலை. அவசரப் பதிவு!
பாரதியார் க்கான பட முடிவு


பாரதியார் க்கான பட முடிவு


பாரதியார் க்கான பட முடிவுஇன்னிக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு 2 ஆம் பிறந்த நாள். அதோடு பாரதியாரின் நினைவுநாளும் சேர்ந்து கொள்ள அவர் பாடலையே இங்கே குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாளுக்கும் பகிர்ந்துள்ளேன். கீழே இருக்கும்   கடைசிப் படம் குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாளுக்கானது.


பாரதியார் க்கான பட முடிவு

Monday, September 10, 2018

அடுத்துச் சென்றது பரவாக்கரை!

பரவாக்கரை!   இந்தச் சுட்டியில் க்ளிக் செய்து பரவாக்கரை பற்றிய தகவல்களைப் படித்துக் கொள்ளலாம்.

கருவிலி கோயிலில் குருக்களிடம் ஏற்கெனவே நாங்க தயிர்சாதம் பிரசாதம் வேணும்னு சொல்லி இருந்ததால் அதை நாங்க கொண்டு போன டப்பாவில் போட்டுக் கொண்டோம். வீட்டிலிருந்தே ஊறுகாய் எடுத்துச் சென்றிருந்தோம். சாதாரணமாகப் பிரசாதமாகச் சாப்பிடுகையில் ஊறுகாய் எல்லாம் போட்டுக் கொண்டு சாப்பிடக் கூடாது! அது தெரியும். ஆனால் நாங்க மதிய உணவாகவே அதை எடுத்துக்க நினைச்சதால் ஊறுகாய் கையோடு கொண்டு போயிட்டோம். :( ப்ரவாக்கரைக்குக் கருவிலி வழியாகச் சென்றால் முட்டையாறு அல்லது முட்டாறூ என்னும் ஆற்றைத் தாண்டித் தான் போகணும். முன்னே எல்லாம் மாட்டு வண்டியில் கருவிலியில் மாமனார் வீட்டிலிருந்து போவோம். அப்போ முட்டையாறு வந்தால் ஆற்றில் வண்டி இறங்கிப் பின் எதிர்க்கரையில் மேலே ஏறும். ஆகவே நாங்க வண்டியில் இருந்து இறங்கி ஆற்றுக்குள் நடந்து போய்த் தான் கரை ஏறணும். தண்ணீர் வந்துட்டாக் கேட்கவே வேண்டாம். ஒரே ஒரு சின்ன மதகு! அதன் வழியாகப் போவதற்குள் போதும் போதும்னு ஆயிடும். என்றாலும் அப்படியும் போயிருக்கோம். கருவிலியில் வீட்டிலேயே மாவிளக்குக்கு மாவு இடித்துக் கொண்டு கலந்து வைத்துக் கொள்வோம். பின்னர் அபிஷேக சாமான்கள், மாவிளக்கு, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ எனத் தூக்கிக் கொண்டு வண்டியில் வைத்துவிட்டு மாமியார், நான், கடைசி நாத்தனார், கடைசி மைத்துனர், எங்க குழந்தைங்க ஏறுவோம். காலை மடித்துக் கொண்டு வண்டியில் உட்காருவது ஒரு வித்தை! என்றாலும் வெயிலில் ஒன்றரை மைல் நடப்பதற்கு அது தேவலை எனத் தோன்றும். முட்டையாறு வரும்போது குழந்தைகளை மட்டும் வண்டியில் விட்டு விட்டு நாங்க கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தா ரெண்டும், அம்மா பாசம் அதிகம் ஆகிக் கத்த ஆரம்பிக்கும். வண்டியோடயே போவேன். :) வண்டியை ஆட்கள் வந்து கரையில் மேலே ஏத்துவாங்க. இப்போதெல்லாம் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இதெல்லாம் இல்லை. :)

நடு நடுவில் நம்ம கதை வந்துடுது. சொல்ல வேண்டாம்னாலும் இப்போதைய மக்களுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குனு தெரிவிக்கணும்னும் நினைச்சுச் சொல்லிடறேன். அடுத்துப் போனது பரவாக்கரைப் பெருமாள். இப்போதைய படத்தில் உற்சவர் அர்த்த மண்டபத்தினுள் ஓர் கூண்டுக்குள் இருக்கார். முன்னர் இருந்த கோலம் பழைய படம் கீழே போட்டிருக்கேன்.பெருமாள்  இந்தச் சுட்டிக்குப் போனால் பெருமாள் பற்றிய முழுத் தகவல்களும் அறியலாம். அங்கேயே 2,3 சுட்டி இருக்கின்றது. அவற்றைக்  க்ளிக் செய்து விரும்பியவர்கள் படிக்கலாம்.
வலக்கைச் சக்கரத்தோடு உடைந்த நிலையில் பெருமாள். இவர் திரும்பக் கிடைத்த தகவல் தெரிந்ததும் போய்ப் பார்த்தப்போ எடுத்த படம்! பெருமாளைத் தூக்கிட்டுப் போய் ஒளிச்சு வைக்கும்போது கையில் உடைந்திருக்கிறது. இதைச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கோம். சரி செய்து விட்டுப் பெருமாளுக்கு கருடசேவை நடத்திப் பார்க்க ஆசை! எப்போ நிறைவேறும் எனத் தெரியவில்லை. கருடன் தயாராக இருக்கிறார்.நாச்சியார்கள்
இதில் இருந்து புதிதாய் எடுத்த படங்கள்.பெருமாள் மட்டும் தெரிகிறார். நாச்சியார்கள் தெரியலை. உள்ளே போக முடியலை! :)

மாரியம்மன் கோயில் குளம்


இம்முறை நாங்க அபிஷேகம் எனச் சொல்லவில்லை. ஆனாலும் எங்க தாயாதி தனக்குப் பேத்தி பிறந்திருப்பதால் அபிஷேகத்துக்குக் கொடுத்திருந்தார். அது நடந்து கொண்டிருந்தது. சரியாக சந்தன அபிஷேகத்தின்போது போய் விட்டோம். பின்னர் அர்ச்சனைகள் முடிந்து தீப ஆராதனைகள் முடிந்து சர்க்கரைப் பொங்கல் சுடச் சுடக் கிடைத்தது. இரண்டாம் முறையும், (பக்கினு நினைச்சிருப்பாரோ? நினைச்சுக்கட்டும்) கேட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட்டேன். பின்னர் அங்கிருந்து எங்க குலதெய்வம் ஆன மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். மாரியம்மனுக்கும் எங்க தாயாதியே அபிஷேகம் அன்று செய்வித்ததால் அவர் குடும்பமும் எங்களுடன் வந்தனர். எல்லோரும் அபிஷேகத்தைப் பார்த்து அம்மன் அலங்காரம் முடிந்து அர்ச்சனை செய்து கொண்டு பஞ்சாமிர்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டோம். பூசாரியிடம் கேட்டு அர்த்த மண்டபத்துக்குள் போகாமல் வெளியே இருந்தே அம்மனைப் படம் எடுத்தேன். மாரியம்மன் கோயில் குளத்தில் தண்ணீர் நிறையவே வந்து விட்டது. அதையும் எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நாங்க சென்ற இடம் பரவாக்கரையிலேயே மாரியம்மன் கோயிலுக்குக் கிழக்கே! 


செல்லும் வழியில் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் வயல் காட்சி அளிக்க அதைப் படம் எடுத்துக் கொண்டேன். சில வயல்கள் முதல் போகம் முடிந்து அடுத்த போகத்துக்குக் காத்திருந்தன. அவற்றையும் நாங்க சென்ற சாலையையும் படம் எடுத்தேன். அங்கெல்லாம் சாலை சரியாக இல்லை. இரு பக்கமும் வயல்கள் . ஆகவே வயலுக்கு வேலைக்குச் செல்வோருக்காகப் போடப்பட்ட மண் சாலை தான். அதிகம் அகலம் எல்லாம் இல்லை. வண்டி செல்லக் கஷ்டமாகவே இருந்தது. ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு மேலே நடந்து சென்றோம். எங்கள் தாயாதியான ஸ்ரீமத்யார்ஜுன ஐயரும் கூட வந்தார். 


நாளை எங்க ஆவணி அவிட்டம் என்பதால் காலை வர முடியாது. நாளைக்கு எங்கள் ப்ளாகில்   அதிரடியோட கதை வெளிவருது போல. :) மத்தியானம் தான் வர முடியும். 

Sunday, September 09, 2018

கருவிலிக்குச் சென்ற விபரங்கள் 2 இது புதுசுங்க!

எப்போவும் அவசரம் அவசரமாகப் போய் தரிசனம் செய்தேன்னு பெயர் பண்ணிக்கொண்டு வருவோம். மாவிளக்குப் போடுவது ஒன்றே முக்கியமாக இருக்கும். சாவகாசமாப் பார்த்தே எத்தனையோ வருஷங்கள். இம்முறை ரொம்பவே நிதானமாப் பார்க்க முடிஞ்சது. அவசரம் இல்லாமல் ஒவ்வொரு சந்நிதியும் ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன். 

பிள்ளையாரிடம் இருந்து திரும்பினோமானால் பிரகாரத்தின் மதில் சுவரில் தூண்களுக்கு இடையே சிற்ப அற்புதங்கள் காணலாம். இவர் அர்த்தநாரீசுவரர்! இந்தக் கோயில் ராஜ ராஜ சோழன் காலத்துக்கு முந்தையது எனச் சொல்கின்றனர். அப்போதைய வழக்கப்படி கருவறைக்கு மேல் விமானமே பெரிதாக வெளியே பார்த்தால் தெரியும்படி கட்டி இருந்திருக்கின்றனர். இப்போதைய ராஜகோபுரம் கட்டிப் பதினைந்து வருடங்களுக்குள் தான் ஆகிறது. பிற்காலச் சோழர் காலத்திலும், பிற்காலப் பாண்டிய, விஜயநகர, நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்ட கோயில்களில் தான் ராஜகோபுரம் மிகப் பெரிதாக அமைக்கப்படும் முறை தோன்றி இருப்பதாகத் தெரிய வருகிறது. தென்காசி சிவன் கோயில் ராஜகோபுரம் அப்படிப் பாண்டியனால் கட்டப்பட்ட ஒரு கோயில் ஆகும். மதுரை மீனாக்ஷி கோயில் நாயக்கர் காலத்தில் சீரமைக்கப்பட்டது! கருவறை விமானத்தை விட ராஜ கோபுரம் பெரியதாகக் காணப்படும்.
நம்ம ஆள் ஒருத்தர் இங்கேயும் உட்கார்ந்திருக்கார். அவரை விடுவோமா! பிடிச்சு வைச்சாச்சு!

தக்ஷிணாமூர்த்தி! என்ன அழகான கலைவடிவுடன் கூடிய சிற்பம்! இப்போதைய சிற்பங்களில் இத்தகைய அழகு காணமுடியாத ஒன்று.


இவரை எல்லோரும் நிறையத் தரம் பார்த்திருப்பீங்க! நம்ம ரங்க்ஸோட விளையாட்டுத் தோழர். சின்ன வயசில் பள்ளிக்குப் போகும் முன்னர் இவருக்கு எண்ணை முழுக்காட்டிவிட்டுப் பக்கத்திலே இருந்த வீட்டுத் தோட்டத்திலே இருந்து பூக்கள் பறித்து வந்து இவருக்குச் சூட்டிவிட்டுக் கற்பூராதிகள் காட்டிவிட்டு விளக்கும் ஏற்றி வைத்துவிட்டுப் போவாராம். இப்போவும் யாரோ அதைத் தொடர்ந்து செய்வதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷம் அடைந்தார். 

சொல்லவே வேண்டாம், கோஷ்டத்தில் சிவன் சந்நிதிக்குப் பின்னால் விஷ்ணுவும் பிரம்மாவும் இருப்பார்கள் என்னும் நியதிக்கு ஏற்ப இருவரும் இருக்கின்றனர். 

துர்கை அம்மன், எதிரே சண்டேஸ்வரர்


சண்டேஸ்வரர்
சர்வாங்க சுந்தரி! அம்பாள் மிக உயரமானவள். இவளுக்கு ஒன்பது கஜம் புடைவை கூடச் சில சமயங்களில் பத்தாது. அபிஷேகத்துக்கு முன்னர் எடுத்த படம். உள்ளே அர்த்த மண்டபத்தில் என்னால் ஏற முடியவில்லை. அம்பாள் உயரமான இடத்தில் இருக்கிறாள். அவளை விட ஈசன் சந்நிதி கொஞ்சம் தாழ்வாகவே இருக்கும்.  முன்னெல்லாம் கோயில் பாழடைந்து கிடந்ததுக்கு இதுவும் ஒரு காரணம் என்பார்கள். இப்போவும் ஈசன் சந்நிதி கொஞ்சம் தாழ்வாகத் தான் இருக்கிறது. அதே மாதிரி! அம்பாள் சந்நிதிக்குக் கொஞ்சம் படிகள் ஏறித்தான் மேலே போகணும்! ஒரு வேளை இந்தக் கோயில் பின்னால் வந்திருக்கலாமோ என்று ஒரு சந்தேகம். 

பக்கத்தில் அம்மன்குடி என்னும் ஊர் இருக்கிறது. அங்கே இருந்து தான் அம்பாள் ஈசனைத் திருமணம் செய்து கொள்ளும் முன்னர் சர்வாங்கமும் அலங்கரித்துக் கொண்டு சர்வாங்க சுந்தரியாக இங்கே வந்தாள் எனவும் மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதால் உயரமான இடத்தில் அனைவரும் பார்க்கும்படி காணப்படுகிறாள் என்றும் சொல்கின்றனர். இது குறித்த மேலதிகத் தகவல்களைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாராதனைக்கு முன்னர் அம்பிகை! கொஞ்சம் சரியா வரலை தான். பின்னால் விளக்கு ஒளி என்பதோடு அர்த்த மண்டபத்திற்குள் என்னால் ஏறிப் போய்ப் படம் எடுக்க முடியலை! அதோடு அர்த்த மண்டபத்துக்குள் எடுப்பதைத் தடையும் செய்திருக்கின்றனர். இது எடுத்ததே பெரிய விஷயம்!குருக்கள் ஏதேனும் சொல்வாரோ என பயமாகவே இருந்தது. 
 யம தீர்த்தம். இந்தக் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் ஒரு காலத்தில் கனுவன்று வந்து கனுப்பொடி வைத்து விட்டுக் குளித்திருக்கிறோம். திரு கிருஷ்ணமூர்த்தி (விகே அவர்கள்) அவர்களின் பாட்டனார் செய்த அன்னதானத்தில் பரிமாறப்பட்ட நெய் சேர்த்த உணவைச் சாப்பிட்ட எல்லோரும் கை அலம்பி அலம்பி இந்தக் குளமே நெய்க்குளமாகக் காட்சி அளித்ததாகச் சொல்கின்றனர்.

இங்கிருந்து அடுத்து பரவாக்கரை சென்றோம். அங்கே முதலிலேயே பெருமாள் கோயிலை அடைந்தோம். நாங்க ஏற்கெனவே அபிஷேகம் பூர்த்தி செய்துவிட்டதால் அபிஷேகம் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் அங்கே அபிஷேகம்!

இம்முறை தலைப்பை மாற்றி இருக்கேன் கொஞ்சமா! ஆகவே படித்த பதிவுனு நினைக்க வேண்டாம். :)

Saturday, September 08, 2018

கருவிலிக்குச் சென்று வந்தோம்!


கருவிலி சர்வாங்கசுந்தரி சமேத சற்குணேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதற்குப் பிரார்த்தித்து இருந்தோம். அதைப் பூர்த்தி செய்ய சென்ற வாரம் 30 ஆம் தேதி தான் முடிந்தது. அன்று காலை ஏழரைக்குள்ளாக வரும்படி குருக்கள் சொல்லி இருந்ததால் முதல்நாளே தேவையான பூக்கள், மாலைகள், அம்மனுக்கும் சற்குணேஸ்வரருக்கும் ஆன வஸ்திரங்களை வாங்கித் தயார் செய்து கொண்டு வியாழன் அன்று காலை நான்கு மணிக்கெல்லாம் ஸ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பிட்டோம். வழக்கம் போல் கையில் இட்லி, காஃபி எடுத்துக் கொண்டோம். மதியத்துக்குக் கோயிலில் தயிர் சாதம் பிரசாதம் கேட்டிருந்ததால் அங்கே வாங்கிச் சாப்பிட்டுக்கலாம் என்பது எண்ணம். கூடியவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்பதே முக்கியம். இப்போது கல்லணைப் பகுதியில் செல்ல முடியும் என்பதால் அந்த வழியிலேயே சென்றோம். சரியாக ஏழரைக்கெலலம் போய்ச் சேர்ந்துட்டோம். போனவுடன் கையில் கொண்டு போயிருந்த இட்லி, காஃபியைச் சாப்பிட்டு முடித்துக் கொண்டோம். அதற்குள்ளாக குருக்கள் அபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அபிஷேகம் ஆரம்பம் ஆகி ஸ்வாமி சந்நிதியில் முடிந்தது. அடுத்து அம்பாள் சந்நிதிக்குப் போவோம்.


அரிசிலாற்றின் நடுவே முளைத்துக் கிடக்கும் மரங்கள்!  கருவிலி செல்லும் வழியில் சென்ற வாரம் எடுத்த படங்கள் 30/8/2018


புதூர் அருகே கொஞ்சம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 

கருவிலிக்கு அருகே சுத்தம் செய்யப்பட்டிருக்கும் பகுதியில் அரிசிலாறு
கூந்தலூரில் இருந்து கருவிலி செல்லும் வழியில் கடக்கும் பாலம். இதற்குக் கொஞ்சம் தள்ளி மூங்கில் பாலம் இருந்தது. முன்னால் எல்லாம் அந்தப் பாலத்தில் தான் கூந்தலூரில் இறங்கி நடந்து செல்வோம். இப்போ இந்தப் பாலம் கட்டி இருபது வருடங்களுக்குக் கொஞ்சம் மேலே இருக்கும். 


கருவிலி க்கான பட முடிவு

ராஜகோபுரம் பழைய படம். இந்த முறை கோபுரத்தை எடுக்கலை!


கருவிலி க்கான பட முடிவு
இந்தப் படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமணி.காம் நான் எடுத்திருந்த பழைய படங்கள் சரியாக் கிடைக்கலை. இது ஒன்று மட்டும் கூகிளார் கொடுத்தது. மற்றக் கீழே உள்ள படங்கள் எல்லாம் இம்முறை எடுத்தவை!


சற்குணேஸ்வரர்! மிகப் பெரிய லிங்கம், மிகப் பெரிய அம்பாள்! கோபுரம் படம் இம்முறை எடுக்கலை. பல முறை போட்டிருப்பதால் வேண்டாம்னு விட்டுட்டேன். நம்ம ஆளு! சந்நிதியின் நுழைவாயிலில் வீற்றிருப்பார். பிராகாரத்தில் கோஷ்டத்தில் இடம் பெற்றிருக்கும் தெய்வங்களையும் இம்முறை எடுத்திருக்கேன். அவை அடுத்து வரும்.