எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 30, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66

திரு திவா அவர்கள் அதிகாயன் பற்றிய கதையைச் சொல்லும்படிக் கேட்டுள்ளார். என்னிடம் உள்ள மிகச் சில குறிப்புகளில் அது இல்லை. மூலத்தைப்பார்க்கவேண்டும். கொஞ்சம் தாமதம் ஆகும். மூலத்திலும் இதுபற்றிப் படிச்சதாய் நினைவில்லை. பொதுவாய் ராவணனின் குடும்பத்தினர் அனைவருமே சிவபக்தியில் சிறந்தவர்களாயும், பல வரங்களைப் பெற்றவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர். இனி, அடுத்தது என்ன என்று பார்க்கலாம். திடீரென 2,3 நாட்கள் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த ஜாம்பவான், குரலை வைத்தே விபீஷணன் தான் பேசுவது எனப் புரிந்து கொண்டு, அனுமனைக் கூப்பிடுமாறு சொல்லவே, விபீஷணன் அனுமனைத் தேடுவதின் காரணத்தைக் கேட்கின்றான். ஜாம்பவான் சொல்கின்றான். "வானரப்படை மொத்தமும் அழிந்திருந்தால் கூட திரும்ப அவற்றை மீட்கும் வல்லமை படைத்தவன் அனுமன் ஒருவனே! அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை எனில் நம் வெற்றியும் உறுதியே!" என்று சொல்கின்றான். உடனேயே பக்கத்தில் இருந்த அனுமன், ஜாம்பவானைப் பார்த்து, நலம் விசாரிக்கவே, ஜாம்பவானும், அனுமனிடம், சொல்கின்றான்:"வானரங்களில் மிக மிகச் சிறந்தவனே! வாயுகுமாரா, உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. இப்போது இந்த வாரப்படையையும், ராம, லட்சுமணர்களையும் காக்கும் பொறுப்பு உன்னிடம் தான் உள்ளது. நீ மீண்டும் கடலைக் கடக்கவேண்டும். கடலைக் கடந்து இமயமலைச் சாரலுக்குச் சென்று, அங்கே மிக மிக உயர்ந்திருக்கும் ரிஷப மலையின் மீது ஏறினால் திருக்கைலைமலையை நீ காண்பாய்! அந்த இரு மலைச் சிகரங்களுக்கும் இடையில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் தன்மையை உடைய ஒரு மலையையும் நீ காணலாம். அந்த மலை தான் பல்வேறுவிதமான மூலிகைகள் அடங்கிய மலை ஆகும். ம்ருதசஞ்சீவினி, விசல்யகரணி, ஸுவர்ணகரணி, ஸம்தாணி, போன்ற நான்கு முக்கியமான மூலிகைகளை அங்கே இருந்து நீ கொண்டு வரவேண்டும். அவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக திரும்ப முடியுமோ அத்தனை விரைவாக வந்தாயானால் அனைவரையும் காப்பாற்றி விடலாம்." என்று சொல்கின்றான் ஜாம்பவான்.

ஜாம்பவான் கூறியதைக் கேட்ட அனுமன் புதிய பலம் வரப்பெற்றவராய், அந்த மகாவிஷ்ணுவின் சக்ராயுதம் செல்லும் வேகத்தை விட அதிக வேகத்துடன் எழும்பி, சமுத்திர ராஜனை வணங்கித் துதித்து, கடலைக் கடந்து விண்ணிலே தாவி, இமயத்தை நோக்கி வேகமாய் விரைந்தார். அந்த சூரியனையே சென்று தொட்டுவிடுவாரோ என்று அனைவரும் எண்ணி வியக்கும் வண்ணம் வேகமாயும், வெகு உயரத்திலும் பறந்து சென்று இமயமலையை அடைந்த அனுமன் அங்கே மூலிகைகளைத் தேடியும் அவரால் எதையும் சரிவரக் கண்டு பிடிக்க முடியவில்லை. கோபம் கொண்ட அனுமன் அந்த மலைச்சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்தார். தன் கையில் அதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் அதே வேகத்துடன் பறந்து வந்து இலங்கையில் போர்க்களத்தை அடைந்தார். அனுமனால் கொண்டுவரப்பட்ட மூலிகைகளின் சுகந்தம் எங்கும் பரவியது. அந்த வாசனையை நுகர்ந்ததுமே வானரங்களும், அவற்றின் தலைவர்களும் விழித்து எழுந்தனர். மூலிகைகளின் உதவியால், தங்கள் காயங்களும் ஆறப் பெற்று, புத்துயிர் கொண்டனர் அனைவரும். ராம, லட்சுமணர்களும் அவ்வாறே உயிர் மட்டுமின்றி, தங்கள் காயங்களும் ஆற்றப்பட்டு, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் போருக்குத் தயார் ஆனார்கள். ஆனால் இதே மூலிகைகள் அரக்கர்களையும் குணப்படுத்தி இருக்கும். ராவணன் செய்த ஒரு தவற்றினால் அவர்களுக்கு இதன் பலன் கிட்டாமல் போயிற்று. அரக்கர் தரப்பில் உயிர் இழப்பு அதிகம் என எதிரிகளுக்குத் தெரியக் கூடாது என்பதால், யாரேனும் காயம் அடைந்தோ, அல்லது உயிர் விட்டோ கீழே வீழ்ந்தால் அவர்களை உடனடியாகக் கடலில் தள்ளும்படியோ, வீசி எறிந்துவிடும்படியாகவோ ராவணன் உத்தரவிட்டிருந்தபடியால், இந்த மூலிகைகளின் பலன் அவர்களுக்குக் கிட்டாமல் போயிற்று. இதுவும் விதியின் ஒரு சூழ்ச்சி, அல்லது ராவணனின் அழிவுக்கு அடையாளம் எனக் கொள்ளலாம் அல்லவா?? "விநாச காலே, விபரீத புத்தி!" என்று சொல்வார்கள் அல்லவா??? பின்னர் அனுமன் அந்த மூலிகைச் சிகரத்தை மீண்டும் வானவீதிவழியாகவே இமயத்துக்கு எடுத்துச் சென்று எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்துவிட்டதாய்க் குறிப்புக் கூறுகின்றது.
இதன்பின்னர் நடந்த பெரும்போரில் பெரும்பாலும் அனுமனால் சொல்லப் பட்ட யோசனைகளே பின்பற்றப் பட்டன. ராவணன் தன் தம்பியான கும்பகர்ணனின் மகன்களையும், மற்ற வீரர்களையும் யுத்த களத்திற்கு அனுப்ப அவர்கள் அனைவரும் அங்கதனால் வீழ்த்தப் படுகின்றனர். இதே போல் மற்றொரு தம்பியான கரனின் மகனும் வீழ்த்தப் பட, கோபம் தலைக்கேறிய இலங்கேசுவரன், இந்திரஜித்தை மீண்டும் யுத்தம் செய்ய அனுப்புகின்றான். இந்திரஜித் இம்முறையும் நேருக்கு நேர் யுத்தம் செய்யாமல் மறைந்திருந்தே யுத்தம் செய்கின்றான். பலவிதமான வழிபாடுகளையும் நடத்திவிட்டுப் போருக்கு வந்திருந்த இந்திரஜித், வானத்தில் எங்கே இருக்கின்றான் என்றே தெரியவில்லை, ராம, லட்சுமணர்களுக்கு. அவர்களின் அம்புகள் அவனைத் தொடக் கூட இல்லை. அங்கும், இங்கும் நகர்ந்து, நகர்ந்து அம்பு மழை பொழிந்தாலும் எந்த இடத்தில் இருக்கின்றான் எனக் குறிப்புத் தெரியாமல் தவித்தனர் இருவரும்.

அம்புகள் வரும் திக்கைக் குறிவைத்து, ராம, லட்சுமணர்கள் போர் செய்ய ஓரளவு அவர்களால் இந்திரஜித்தைக் காயப் படுத்த முடிந்தது என்பதை அந்த அம்புகள் கீழே விழும்போது ரத்தம் தோய்ந்து விழுவதை வைத்துத் தெரிந்தது. ஆனால் மறைந்திருந்து யுத்தம் செய்யும் இவனை அழிப்பது எவ்வாறு என யோசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டார் ராமர். லட்சுமணனிடமும் அவ்வாறே கூறுகின்றார். ராமரின் எண்ணம் தன்னை அழிப்பதே எனப் புரிந்துகொண்ட இந்திரஜித், போர்க்களத்தை விட்டு வெளியேறுகின்றான். தன் மாயாசக்தியால், சீதையைப் போன்றே மற்றொரு சீதையைத் தோற்றுவிக்கின்றான். நிஜமான சீதை எவ்வாறு, அழுக்கான ஆடையுடனேயே, ஆபரணங்கள் இல்லாமல், உடலிலும் தூசியுடனும், புழுதியுடனும் காணப்பட்டாளோ அவ்வாறே இவளையும் தோற்றுவிக்கின்றான். சீதையின் துக்கமும் இவள் கண்களிலும் காணப்பட்டது. அனுமன் பார்த்தார். நிஜமான சீதைதான் இவள் என்றே நினைத்தார்.

பல வானரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு தன்னைத் தாக்க அனுமன் வருவதை இந்திரஜித் பார்த்துவிட்டு, நகைத்துக் கொண்டே தன் வாளை உருவி, தன்னருகில் இருக்கும் மாய சீதையின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்க ஆரம்பித்தான். அந்த மாய சீதையும், "ராமா, ராமா'" என்றே அலறுகின்றாள். கோபம் கொண்ட அனுமன் "உன்னுடைய அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. இந்த அபலை உனக்கு என்ன தீங்கு செய்தாள்? ஒரு பெண்ணைக் கொல்வது மகா பாபம்! சீதையை நீ கொன்றாயானால், நீ உயிர் பிழைப்பது நிச்சயம் இல்லை." என்று எச்சரிக்கின்றார். இந்திரஜித் மேல் அனுமன் முழுவேகத்தோடு பாய, இந்திரஜித்தோ, "நீ சொல்வது உண்மையே, ஒரு பெண்ணைக் கொல்லக் கூடாதுதான். ஆனால் போரில் எதிரிக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்து பாதிப்பை ஏற்படுத்துவது செய்யக் கூடிய ஒரு காரியமே! இவளைக் கொன்றால் உங்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். முதலில் இவளைக் கொன்றுவிட்டு, பின்னர் உங்கள் அனைவருக்கும் முடிவு கட்டுகின்றேன்." என்று சொல்லிவிட்டுத் தன் கைவாளால் மாய சீதையை இரண்டு துண்டாக்குகின்றான். பதறிய அனுமன், மிகுந்த கோபத்துடன்,அரக்கர் படையைத் தாக்க, பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது இருதரப்பிலும். அனுமன் சீதை மரணம் அடைந்தாள் என்னும் செய்தியை ராமரிடம் தெரிவிக்க எண்ணி, போர்க்களத்தில் இருந்து மெல்ல, விலக, அதைக் கண்ட இந்திரஜித்தும், தானும் இன்னொரு யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு போர்க்களத்தில் இருந்து விலகுகின்றான்.

ராமரைச் சென்றடைந்த அனுமன், சீதை இந்திரஜித்தால் கொல்லப் பட்டாள் எனத் தெரிவிக்க, அதைக் கேட்ட ராமர் மனம் தாங்க முடியாத சோகத்தில் ஆழ, செய்வது இன்னதென்று அறியாமல் தவிக்க, மரம் போல் கீழே சாய்ந்தார். லட்சுமணன் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

மன்னிப்பு வேண்டுகின்றேன்!

தவிர்க்க முடியாத காரணங்களால் ராமாயணம் தொடர் தாமதம் ஆகின்றது. தாமதத்துக்கு மன்னிக்கவும், இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்த இராமனை வேண்டும்,
கீதா சாம்பசிவம்

Friday, June 27, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 65


ராவணனின் புத்திரர்களில் ஒருவனும், பிரம்மாவிடம் வரம் பெற்றவனும் ஆன அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்லத் தொடங்கினான். அந்த மஹாவிஷ்ணுவே வந்து ராவணனுக்காக யுத்தம் செய்கின்றாரோ என்று எண்ணும் வண்ணம் தன் வீரத்தைக் காட்டிய அதிகாயனைப் பார்த்த ராம, லட்சுமணர்கள் அவன் வீரத்தைப் பார்த்து வியந்தனர். விபீஷணன் சொல்கின்றான்:"தந்தையான ராவணனுக்கு நிகரானவன் இவன். அவன் மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலினி என்பவளுக்குப் பிறந்த இவன் அதி புத்திசாலி, ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன், எதிரிப்படைகளைத் துண்டிப்பதில் சிறந்தவன், அதே போல் சமாதானம் பேசுவதிலும் வல்லவன், இன்று இலங்கை நகரே இவன் ஒருவனையே நம்பி உள்ளது என்றால் மிகை இல்லை. பிரம்மாவிடமிருந்து வரங்கள் பெற்ற இவனின் ஒளி பொருந்திய தேரும், கவசங்களும் கூட அவராலேயே அளிக்கப் பட்டது. மிக்க அறிவு படைத்த இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன். நாம் சற்றும் தாமதிக்காமல் இவனை அழிக்க வேண்டும். இல்லையேல் வானரப் படையை இவன் அழித்து விடுவான் என்பதில் சற்றும் ஐயமில்லை." என்று சொல்கின்றான்.

வானர வீரர்களை எல்லாம் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்த அதிகாயனைக் கண்டு அவன் முன்னே லட்சுமணன் வீரத்தோடு போய் நின்றான். அதிகாயனோ லட்சுமணனைச் சிறுவன் என்றே மதித்தான். வயதில் மிக இளையவன் ஆன நீ தப்பிப் போ. உன்னால் என்னோடு போர் புரியவேண்டிய பலம் இல்லை, என் அம்புகளைத் தாங்கும் சக்தி உன்னிடம் இல்லை, திரும்பிப் போவாய், இளைஞனே!" என்று அதிகாயன் சொல்ல லட்சுமணன் தீரத்தோடு அவனை எதிர்த்து நிற்கின்றான். அதிகாயனும், லட்சுமணனை எதிர்க்க இருவருக்கும் கடும்போர் நடக்கின்றது. லட்சுமணனின் அம்புகளை எல்லாம் எதிர்த்து ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு திகைக்கின்றனர் வானர வீரர்கள். தேவர்களும், யட்சர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர். லட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நிற்க அப்போது வாயு அவன் காதில் மெல்ல, "அதிகாயனைத் தோற்கடித்துக் கீழே வீழ்த்த வேண்டுமானால் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்து." என்று சொல்ல லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்தான்.

சந்திர, சூரியர்கள் திகைத்து நடுங்க, பூமி அதிர, லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். தன் முழு பலத்தோடு அது அதிகாயனைத் தாக்கியது. அதிகாயன் பிரம்மாஸ்திரத்தை வீழ்த்த ஏவிய அஸ்திரங்கள் பலனற்றுப் போயின. பிரம்மாஸ்திரம் தாக்கிக் கீழே வீழ்ந்தான் அதிகாயன். அவன் தலையைத் துண்டித்தது பிரமாஸ்திரம். அதிகாயன் உயிரை இழந்தான். ராவணனுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டது. மிக்க கவலையுடன் அவன் தூம்ராக்ஷனைப் பார்த்துத் தன் மனக்கவலையைப் பகிர்ந்து கொள்கின்றான்: "இந்த ராம, லட்சுமணர்களை வீழ்த்தக் கூடியவர் எவரேனும் இருக்கின்றனரா தெரியவில்லை. பலம் மிகுந்த இந்திரஜித்தின் கட்டில் இருந்தே இவர்கள் இருவரும் விடுவித்துக் கொண்டு விட்டனர். அந்த ஸ்ரீமந்நாராயணன் தான் ராமனாக வந்திருக்கின்றானோ என எண்ணுகின்றேன். சீதை இருக்கும் அசோகவனமும், அதைச் சுற்றிய இடங்களும் பாதுகாக்கப் படவேண்டும். வானரர்களைச் சாதாரணமாய் நினைத்து அலட்சியம் செய்ய வேண்டாம்." என்று சொல்லி விட்டுத் தன் உறவினர் ஒவ்வொருவராய்க் கொல்லப் படுவதை எண்ணிப் பெருந்துக்கத்தில் மூழ்கினான். அவனைக் கண்டு வருந்திய இந்திரஜித் தன் தகப்பனுக்குத் தைரியம் சொல்ல ஆரம்பித்தான்.
"தந்தையே, நான் உயிரோடு இருக்கும்வரை தாங்கள் கவலை கொள்ளல் ஆகாது. ஏற்கெனவே என் நாராசங்களால் ராமனும், லட்சுமணனும் ரத்தம் பெருக விழுந்து கிடந்ததைக் கண்டீர்கள் அல்லவா?? அவர்கள் உயிரை விடும் சந்தர்ப்பமும் என்னாலேயே நடக்கப் போகின்றது. அதைத் தாங்கள் கண்ணால் காணவும் போகின்றீர்கள். சம்ஹார மூர்த்தியான ருத்ரன், மூவுலகையும் காக்கும் விஷ்ணு, தேவேந்திரன், எமன், அக்னி, சூரிய, சந்திரர் வியக்கும்படியாக இன்றூ நான் யுத்தம் செய்து அந்த ராம, லட்சுமணர்களை வீழ்த்தி விடுகின்றேன்." என்று கூறிவிட்டுப் போருக்குத் தயார் ஆனான் இந்திரஜித். மகனைக் கண்டு பெருமிதம் கொண்டான் ராவணன். போருக்குப் புறப்படும் முன்னர் அக்னியை வளர்த்து, அக்னிக்கு வேண்டிய பூஜைகளை முறைப்படி இந்திரஜித் செய்ய, அக்னிதேவன் நேரில் வந்து தனக்கு உரிய காணிக்கையைப் பெற்றுக் கொண்டு சென்றான். இத்தகைய வழிபாட்டினாலும், ஏற்கெனவே தனக்குத் தெரிந்த மாயாஜால முறைகளினாலும் ஒளிர்ந்த இந்திரஜித், தன், தேர்,ஆயுதங்கள், வில் ஆகியவை வானர வீரர்களுக்கும், ராம, லட்சுமணர்களுக்கும் கண்ணுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

போர்க்களத்தில் நுழைந்ததும் படையை அணிவகுத்துவிட்டுத் தான் பிறர் கண்ணில் படாமல் மாயமாய் நிற்கும்படியாகத் தன் மாயாசக்தியைப் பயன்படுத்தித் தன்னை மறைத்துக் கொண்டான். வானர வீரர்களும், தளபதிகளும், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட மற்ற மாபெரும் வீரர்களும் அவன் தாக்குதலில் நிலை குலைந்தனர். இதைக் கண்டு மனம் மகிழ்ந்த இந்திரஜித், ராம, லட்சுமணர்களையும் தன் அம்பு, மழையால் முழுதும் மூடினான். பின்னர் பிரம்மாஸ்திரத்தை அவன் ஏவ, அதைக் கண்ட ராமர், லட்சுமணனிடம், பிரம்மாஸ்திரத்தை இவன் ஏவுகின்றான். நாம் இதற்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும். தாங்க வேண்டியது தான். நாம் நினைவிழந்து விழுந்துவிட்டதும், ஏற்கெனவே வானரப் படையின் நிலைகுலைந்த கதியை நினைத்து, அவன் உற்சாகம் அடையப் போகின்றான். நாம் இப்போது இந்த அஸ்திரத்துக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். அதே போல் இந்திரஜித் ஏவிய அஸ்திரம் இருவரையும் கட்ட, இருவரும் அதற்குக் கட்டுப் பட்டு கீழே விழுகின்றனர். இலங்கை திரும்பி இந்திரஜித் மிக்க மன மகிழ்வோடு தன் தந்தையிடம், தான் அனைவரையும் வீழ்த்திவிட்டதையும், வானர வீரர்கள் நிலை குலைந்துவிட்டதையும் தெரிவிக்கின்றான். வானர வீரர்கள் மிக்க கவலையுடன் தங்கள் உடலில் ரத்தம் பெருகுவதையும், தங்கள் காயங்களையும் கூட மறந்துவிட்டுக் கவலையுடனும், திகைப்புடனும், இனி என்ன என்று ஒன்றும் புரியாமல் நின்றனர்.

ராம, லட்சுமணர்கள் தவிர, அங்கே தலைமை வகித்த பெரிய வீரர்கள் ஆன, சுக்ரீவன், ஜாம்பவான், அங்கதன், நீலன், ஆகிய அனைவரும் மயக்க நிலையிலும், கிட்டத் தட்ட இறக்கும் தருவாயிலும் இருப்பதைக் கண்ட அனைவரும் செய்வதறியாது யோசிக்கையில், ஓரளவு காயத்துடனும், நினைவுடனும் இருந்த அனுமன் மற்ற அனைவரையும் எவ்வாறேனும் காக்கவேண்டியது தன் கடமை என்று உணர்ந்தான். அதைப் புரிந்து கொண்ட விபீஷணனும் அவனைத் தேற்றி, யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா எனப் பார்க்கச் சொல்ல, விழுந்து கிடந்தவர்களில் அனுமன் தேட ஜாம்பவான் மட்டுமே அரை நினைவோடு முனகிக் கொண்டு இருந்ததைக் கண்டனர் இருவரும். ஜாம்பவானைக் கூப்பிட்டு, இந்திரஜித்தின் பாணங்கள் உங்களைத் தாக்கியதா என விசாரிக்க, என்னால் கண் திறந்து பார்க்க முடியவில்லை, ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது. அதை நிறைவேற்ற அனுமனால் தான் முடியும். அவன் இங்கே இருக்கின்றானா என்று வினவ, அனைவரையும் விட்டு, விட்டு அனுமனை ஏன் தேடுகின்றான் ஜாம்பவான் என்று யோசித்த விபீஷணன், அதை ஜாம்பவானிடம் கேட்டான்.

Thursday, June 26, 2008

கதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64


இவ்வளவு பெரிய உருவமா? என மலைத்தனர்! மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ என எண்ணிக் கலங்கினர். வானர வீரர்கள் இவ்விதம் எண்ணிக் கலங்கினாலும் சகுனங்கள் கும்பகர்ணனுக்கு அபசகுனமாகவே இருந்ததை அவன் காண்கின்றான். ஆகவே அபசகுனங்களால் கும்பகர்ணனின் மனம் கொஞ்சம் தளர்ந்தது. எனினும் அதைக் காட்டிக் கொள்ளாமலேயே அவன் போர்க்களத்தில் முன்னேறினான்.

அங்கதன், முதலில் கும்பகர்ணனின் பேருருவைக் கண்டு திகைத்து நின்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு, நீலனையும், நளனனயும் பார்த்து, பயந்து ஓட இருக்கும் வானரப் படைகளைத் திறம்படச் சேர்ப்பிக்கச் சொல்லிக் கட்டளை இடுகின்றான். வானர வீரர்களுக்குத் தானும் தைரியம் சொல்கின்றான். நாம் திறமை அற்றவர்கள் அல்லவே? ஏன் பயப்படவேண்டும்? எனத் தைரியம் சொல்கின்றான். இதைக் கேட்ட வானரவீரர்கள் திரும்பி வந்து, மலைக்குன்றுகளையும், பெரும் மரங்களையும் பிடுங்கி கும்பகர்ணன் மீது வீசுகின்றனர். ஆனால் அவை பொடிப்பொடியாகப் போயிற்றே ஒழிய கும்பகர்ணனுக்கு ஒன்றும் ஆகவில்லை. வானரர்களைப் பிடிக்கக் கும்பகர்ணன் தன் பெரிய கைகளை நீட்டிப் பிடிக்க ஆரம்பித்தான். உடனேயே வானரர்கள் அவன் கையில் பிடிபட்டு நசுங்கத் தொடங்கினார்கள். பிடிக்க முடியாத வானரர்கள் ஓடி மறைந்து கொள்ள ஆரம்பித்தனர். அங்கதன் கோபம் கொள்கின்றான். இப்படியாவது நம் உயிரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா??? ராமனை எதிர்த்துக் கும்பகர்ணன் உயிரோடு இருக்க முடியுமா??? நாம் ஓடி ஒளிந்தால் நம் புகழும் ஒழிந்துவிடும், திரும்பி வாருங்கள் எனக் கூவி அழைக்கின்றான் அங்கதன் வானர வீரர்களை.


ஆனால் பயத்தின் எல்லையில் இருந்த அந்த வானர வீரர்கள் வர மறுக்கவே, மிகுந்த பிரயாசைக்கு இடையில் அங்கதன் அனுமன் தலைமையில் சில வானர வீரர்களைச் சேர்க்கின்றான். அனைவரும் கும்பகர்ணனைக் கடுமையாகத் தாக்குகின்றார்கள். அனுமன் தலைமையில் கடும் சண்டை நிகழ்ந்து கும்பகர்ணனின் ஆதரவுக்கு அனுப்பப் பட்ட படை வீரர்களுக்குப் பெரும் சேதம் விளைகின்றது. கோபத்துடன் கும்பகர்ணன் அனுமனைத் தாக்க அனுமன் நிலைகுலைந்து ரத்தம் கக்கிக் கொண்டு, சற்றே தடுமாற, அதைப் பயன்படுத்திக் கொண்ட கும்பகர்ணன், வானரர்களை அழிக்க ஆரம்பித்தான். கோபம் கொண்ட அங்கதன் கும்பகர்ணனின் கடுமையான தாக்குதலில் கீழே, விழ, அங்கே சுக்ரீவன் பெரும் கோபத்தோடு வருகின்றான். சுக்ரீவனோடு பொருத கும்பகர்ணன் விரைய, இருவருக்கும் கடும் சண்டை நடக்கின்றது. ஆனால் தன் சூலத்தால் சுக்ரீவனைக் கீழே வீழ்த்தி விடுகின்றான் கும்பகர்ணன். ஆனால் அனுமன் இடையில் புகுந்து சூலத்தைப் பொடிப் பொடியாக்க சுக்ரீவன் தப்ப முயல, கும்பகர்ணனோ ஒரு பெரும் மலைச்சிகரத்தால் சுக்ரீவனைக் கீழே மீண்டும் வீழ்த்தியே விடுகின்றான். அரக்கர் படை கோலாகலம் அடைகின்றது. சுக்ரீவனைத் தன் கையிலே இடுக்கிக் கொண்டு கும்பகர்ணன் இலங்கை நகருக்குள்ளே செல்ல விரைகின்றான். அப்போது வானரப்படை நிலைகுலைய, இதைக் கண்ட அனுமன் தான் என்ன செய்வது என்று யோசிக்கின்றார்.

இப்போது தன் பலத்தைக் காட்டினால், அது பயன் தராது. எப்படியும் சுக்ரீவன் தானாகவே தன் பலத்தால் திரும்ப வந்து சேருவான். இப்போது நம் பூரண பலத்தைக் காட்டி சுக்ரீவனை விடுவிப்பது அவனுக்கும் புகழ் தராது, நமக்கும் பயன் இல்லை என்று முடிவு செய்கின்றார். இலங்கை நகருக்குள்ளே கும்பகர்ணன் நுழையும் வேளையில் சுக்ரீவன் நினைவு திரும்பி, கும்பகர்ணனைத் தாக்குகின்றான் அவன் சற்றும் எதிர்பாராவண்ணம், சற்றே நிலைகுலைந்த கும்பகர்ணன் தடுமாறவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு திரும்ப ராமர் இருக்கும் இடம் வந்து சேருகின்றான் சுக்ரீவன். கும்பகர்ணன் கோபத்தோடு மீண்டும் போர்க்களம் வருகின்றான். இம்முறை வானரப்படைக்கு அவன் விளைவித்த நாசத்தால் அச்சம் கொண்ட வானரப்படை மீண்டும் ராமரைச் சரணடைய, முதலில் லட்சுமணன் வருகின்றான், போருக்கு. கும்பகர்ணன் அவனிடம் அவனைப் பாராட்டிப் பேசிவிட்டு எனினும் தான் ராமனையும், அவன் வீரர்களையும் அழித்துவிடுவதாய்ச் சபதம் பூண்டே வந்திருப்பதாயும் அதே போல் செய்யப் போவதாயும் சொல்லுகின்றான். ஆகவே ராமனோடு நேருக்கு நேர் போர் புரியும் அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டி அவனிடம் ராமன் இருக்குமிடம் இதுவே எனக்காட்டுகின்றான் லட்சுமணன். அவன் ஆசைப்படியே ராமனுடன் பெரும்போர் புரிகின்றான் கும்பகர்ணன். வானரர்களைத் தொடர்ந்து அவன் அழிப்பதைப் பார்த்த லட்சுமணன், வானர வீரர்களை கும்பகர்ணன் மீது ஏறச் சொல்லுகின்றான். இவ்விதம் ஏறினால் அவனால் ஏதும் செய்ய முடியாமல் தொடர்ந்து அழிக்க முடியாமல் திணறுவான் எனச் சொல்ல, கும்பகர்ணனோ ஒரே உதறலில் அத்தனை வானரர்களையும் கீழே வீழ்த்தி விடுகின்றான். அவனின் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்த ராமர், அவனைப் பார்த்து, “உன்னை அழிக்கும் பாணம் தயார், வா உடனே, என்னோடு பொருத,” என அழைக்கக் கும்பகர்ணனும்,” ஹே, இக்ஷ்வாகு குலத் திலகமே, நான் வாலியோ, கபந்தனோ, கரனோ, விராதனோ, அல்லது மாரீசனோ அல்ல என்பதை அறிவாய். என்னை வீழ்த்துவது என்பது கடினம் என்று தெரிந்து கொள்வாய். முதலில் உன் பலத்தைக் காட்டு, பின்னர் நான் உன்னை விழுங்கிவிடுகின்றேன்.” என்று சொல்கின்றான்.

ராமர் ஏவிய வாயு அஸ்திரத்தால் கும்பகர்ணனின் ஒரு கையை வெட்டக் கீழே விழுந்த அந்தக் கையில் சிக்கி, பல வானரர்கள் உயிரிழந்தனர். பின்னர் மற்றொரு கையையும் வெட்டி வீழ்த்துகின்றார் ராமர். எனினும் தன் வலிமை பொருந்திய கால்களின் துணை கொண்டு போருக்கு வருகின்றான் கும்பகர்ணன். அவன் கால்களை யும் வெட்டித் தள்ளுகின்றார் ராமர். திசைகள் நான்கும் நடுங்க, மலைகள் ஆட்டம் போட, கடல் கொந்தளிக்க, ராமர் விடுத்த அம்பு இப்போது கும்பகர்ணனின் தலையை அறுத்து எறிகின்றது. அவன் தலை கீழே விழுந்த பேரதிர்ச்சியில் இலங்கைக்கோட்டை வாயில் தகர்ந்தது. உடல் விழுந்த அதிர்ச்சியில் கடல் பொங்கியது. நீர்வாழ் உயிரினங்கள் பலவும் உயிரை விட்டன. மீன்களும், சுறாக்களும் நசுங்கிச் செத்தன. ஆனால் வானரவீரர்களோ ஆடிப் பாடி மகிழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சி, கோலாகலம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மலை போன்ற கும்பகர்ணன் வீழ்ந்து பட்டான். இனி???

வானரப்படை கோலாகலமாய்க் கொண்டாட, மிகுந்திருந்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று கும்பகர்ணன் ராமனால் மாய்க்கப் பட்டான் எனத் தெரிவிக்கின்றனர். அதைக் கேட்ட ராவணன் மயங்கி விழுகின்றான். மற்ற அவன் உறவினர்களும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஒருவாறு சமாளித்து எழுந்த ராவணன், “ஆஹா, தேவர்களையே போரில் வென்ற என் தம்பி கும்பகர்ணனா இறந்து பட்டான்??? இடி, இடித்தாலும் , மின்னல் மின்னினாலும் அவற்றையும் எதிர்க்கும் வல்லமை படைத்த என் தம்பி கும்பகர்ணனுக்கு மரணம் நிகழ்ந்தது? அதுவும் ஒரு நரன் ஆகிய ராமனின் கையாலேயே ஏற்பட்டு விட்டதே?? கும்பகர்ணா!, கும்பகர்ணா! இந்த ரிஷி,முனிவர்கள் இனிமேல் எதற்கும் அஞ்ச மாட்டார்களே? வானரர்களுக்கும் இனி இலங்கைக் கோட்டைக்குள் நுழைவது எளிது எனத் தோன்றி விடுமே?? ஐயகோ! என்ன செய்வேன் நான்?? அருமைத் தம்பி, உன்னைப் பறி கொடுத்தேனே?” என்றெல்லாம் புலம்புகின்றான் ராவணன். இனியும் இந்த ராஜ்யத்தாலோ, அல்லது சீதையை நான் அடைந்தாலோ என்ன பயன் ஏற்படும்? கும்பகர்ணா! நீ இல்லாமல் நான் உயிர் வாழ்வதெப்படி?? ஆனால் உன்னைக் கொன்ற அந்த ராமனைக் கொன்று நான் பழி தீர்க்கவேண்டுமே? அதற்காகவே என் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேன். இல்லையேல் நானும் உன் வழியே இதோ புறப்படுகிறேன், காலதேவனை நோக்கி! ஆஹா, அன்றே விபீஷணன் கூறினானே?? விபீஷணன் வார்த்தைகளை அலட்சியம் செய்தேனே? அதற்கான பலனை அல்லவோ இப்போது அனுபவிக்கின்றேன்? பிரஹஸ்தனும், மாண்டான், கும்பகர்ணனும் மாண்டான், இனி நான் என்ன செய்வது?” புலம்பினான் ராவணன்.

அவன் சோகத்தைக் கண்ட அவனுடைய மற்றப் பிள்ளைகளும், மற்ற சகோதரர்களும் அவனைத் தேற்றி, தாங்கள் போருக்குச் சென்று ராம, லட்சுமணர்களை அழித்து விடுவதாய்ச் சொல்லிப் பெரும்படையுடன் போருக்குக் கிளம்பினார்கள். சூரியன் போல் பிரகாசித்த மஹோதரனும், கார்மேகத்துக்கு நிகரான திரிசிரனும், மலை போன்ற தோற்றத்துடன் அதிகாயனும் , சிவனார் மனம் குளிர இரு செவிகளிலும் உபதேச மந்திரத்தைச் சொன்ன தேவ சேனாபதியான கார்த்திகேயன் போல் நராந்தகனும், அவன் மாமன், மாயோன், போன்ற தோற்றத்துடனேயே தேவாந்தகனும், செல்வத்துக்கு அதிபதியானவனும், ராவணனுக்கு அண்ணனும் ஆன குபேரன் போல் மஹாபார்ச்வனும் தோற்றம் அளிக்க அரக்கர் படை மீண்டும் புது உற்சாகத்துடனேயே வானரப்படையுடன் பொருத ஆரம்பித்தது. வானரப்படையில் பலரையும் வந்த உடனேயே அரக்கர் படை அழித்து நாசம் செய்தது. அங்கதன், நராந்தகனையும், அனுமன், திரிசிரன், தேவாந்தகனையும், நீலன், மஹோதரனையும், ரிஷபன், மஹாபார்ச்வனையும் முறையே கொன்றனர். ஆனால் பிரம்மனிடம் வரம் பெற்ற அதிகாயனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெரும் சாதனைகள் புரிந்த அவனைக் கட்டுப்படுத்தும் வழி, வகை புரியாமல் வானரப்படையினர் திகைத்து நின்றனர். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த விஷ்ணுவே வந்துவிட்டானோ, அவன் கையிலிருந்து சக்கரம் தான் தங்களை அழிக்க வந்துவிட்டதோ, என வானர வீரர்கள் எண்ணும் வண்ணம் சுழன்று, சுழன்று சண்டையிட்டுக் குவித்தான் வானர வீரர்களைப்பிணமாக . அதிர்ச்சி அடைந்த வானர வீரர்களில் சிலர் ராமனிடம் சென்று போர்க்களச் செய்திகளைத் தெரிவிக்க, ராமரும் அதிகாயனின் வீர சாகசங்களைக் கண்ணால் கண்டு வியப்புற்றார். விபீஷணனிடம் யார் இவன் எனக் கேட்க அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்ல ஆரம்பிக்கின்றான்.

Wednesday, June 25, 2008

கதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுதி 63

இங்கே கும்பகர்ணன் ராவணன் மாளிகையை அடைந்து தனக்கு என்ன உத்தரவு எனக் கேட்கின்றான். அவன் வரவினால் மகிழ்ச்சி அடைந்த ராவணன், மிகுந்த கோபத்துடன், ராமன் சுக்ரீவன் துணையோடு கடல் கடந்து சீதையை மீட்க வந்திருப்பதையும், அந்த வானரப் படைகளால் ராட்சதர்களுக்கு நேர்ந்த அழிவையும், துன்பத்தையும் எடுத்துக் கூறுகின்றான். இந்த வானரப் படைகள் மேலும் மேலும் கடல் பொங்குவது போல் அலைகள் அவற்றிலிருந்து வந்து, வந்து மோதுவது போல் வந்து கொண்டே இருப்பதாயும், இவற்றிற்கு முடிவு இல்லையெனத் தோன்றுவதாயும் சொல்லிவிட்டு இவற்றை அழிக்க என்ன வழி என்றே தான் அவனை எழுப்பச் சொன்னதாயும் சொல்கின்றான். அரக்கர்கள் அடைந்திருக்கும் பெரும் துன்பத்தில் இருந்து அவர்களைக் காக்கும்படியும் சொல்லுகின்றான். பெருங்குரலெடுத்துச் சிரிக்கின்றான் கும்பகர்ணன்.


ஏற்கெனவே ஆலோசனைகள் செய்த காலத்தில் சொல்லப் பட்ட வழிமுறைகளை நீ பின்பற்றி இருக்கவேண்டும். அப்போதே உனக்கு இத்தகையதொரு ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்யப் பட்டது. நீ அப்போது சொல்லப் பட்ட சமாதானத்தை நாடும் முறையிலோ,
அல்லது பொருள் கொடுத்து அவனுடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளாமலோ, நேரடியாகப் போருக்குச் சென்றுவிட்டாய். உன்னுடைய, மற்றும் என்னுடைய தம்பியாகிய விபீஷணன் கூறியவற்றையோ, உன் மனைவியாகிய மண்டோதரி கூறியவற்றையோ நீ கேட்டு நடந்திருக்கவேண்டும். உன்னுடைய மேன்மைக்கும், நன்மைக்குமே அவர்கள் இந்த வழிமுறைகளைக் கூறினார்கள். நீ அலட்சியம் செய்துவிட்டாய்.” என்று கூறி மீண்டும் பெருங்குரலில் சிரிக்க ராவணன் கோபம் பொங்கி எழுந்தது. “கும்பகர்ணா, நீ என் தம்பி என்பதை மறந்து விடாதே, ஒரு ஆச்சாரியன் போல் அறிவுரைகள் கூறுகின்றாயே?? மேலும், கும்பகர்ணா, என் தவறுகள் காரணமாகவே இப்போதைய சம்பவங்கள் நடந்திருந்தாலும், நீ அதை எல்லாம் மறந்துவிட்டு, எனக்கு எவ்வாறு உதவி செய்வது என யோசிப்பாயாக! நான் நேர் பாதையில் இருந்து விலகிச் சென்றிருந்தாலும் இப்போது எனக்கு உதவி செய்வதே என் உறவினன் ஆன உன் கடமை என்பதையும் மறவாதே, உன் பலத்தை நீ உணர மாட்டாய், அதை முதலில் உணர்ந்து கொள்வாயாக, எனக்கு உதவி புரிய ஆயத்தமாகிவிடு.” என்று சொல்கின்றான்.

கும்பகர்ணன் மனம் நெகிழ்ந்து போனான். ஆஹா, நம் அண்ணனா இவன்?? எத்தனை பலவான்? எவ்வளவு தைரியம் நிறைந்தவன்?? இப்போது இப்படிக் கலங்கி இருக்கிறானே? இப்போது இவனுக்குத் தேவை தைரியமும், ஆறுதலும் அளிக்கும் வார்த்தைகளும், செயல்களுமே எனக் கண்டு கொள்கின்றான் கும்பகர்ணன். அவ்விதமே பேசத் தொடங்குகின்றான் ராவணனிடம், “அன்பு மிகுந்த அண்ணனே, என் தந்தைக்குச் சமம் ஆனவனே! உன் கவலையை விட்டொழி, உன் சகோதரன் ஆன நான் உன்னுடைய மேன்மைக்காகவே மேற்கண்ட அறிவுரைகளைக் கூறினேன். மேலும் உன்னை நல்வழியில் திருப்பவதும் என் கடமை அன்றோ. ஆனால் உனக்கு ஏற்புடையது இல்லை எனத் தெரிந்து கொண்டேன். என்ன செய்யவேண்டும் உனக்கு? அந்த ராமனை நான் அழிப்பேன், பார் நீயே! நீ இதற்கென வேறு யாரையும் அழைக்க வேண்டாம், நானே செல்கின்றேன், சென்று அந்த வானரக் கூட்டத்தையும், அந்த நர மனிதர்கள் ஆன ராம, லட்சுமணர்களையும் அடியோடு அழிக்கின்றேன். இவர்களை அழிக்க எனக்கு ஆயுதங்கள் கூடத் தேவை இல்லை. என் கைகளாலேயே அழித்து விடுவேன். நீ போய் உன் வேலையைப் பார், என்னுடைய வெற்றி முழக்கம் கேட்கும், அப்போது வந்தால் போதும், நீ இப்போது வரத் தேவை இல்லை,” என்று சொல்கின்றான்.

ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மஹோதரனுக்கோ, இதில் கொஞ்சம் கூடச் சம்மதம் இல்லை. “ கும்பகர்ணா, தன்னந்தனியாக நீ சென்று யுத்தம் செய்கின்றேன் என்று சொல்வது முற்றிலும் தவறு. ஜனஸ்தானத்தில் என்ன நடந்தது? சற்றே எண்ணிப் பார்ப்பாய், அத்தகைய பெரும்பலம் கொண்ட ராமனையோ, அவன் தம்பி லட்சுமணனையோ, நம்மால் தனியாக எல்லாம் வெற்றி கொள்ள முடியாது. நீ இப்போது யுத்தம் செய்யப் போகவேண்டாம். ராமனை வெற்றி கொள்வது என்பது எளிது அல்ல. ஆனால் சீதையை நம் வசம் ஆக்க ஒரு வழி கூறுகின்றேன். இப்போது கும்பகர்ணனை விடுத்த மற்ற நாங்கள் சென்று யுத்தம் செய்கின்றோம். அல்லது அவனும் வர விரும்பினால் வரட்டும். யுத்தத்தில் நாங்களே ஜெயிப்போம், அவ்வாறு இல்லாமல், உடல் முழுதும் ரத்தக்காயங்களோடு திரும்பும் நாங்கள், உங்கள் காலடியில் விழுந்து, ராம, லட்சுமணர்களை நாங்கள் கொன்றுவிட்டதாயும், வானரப்படையை அழித்துவிட்டதாயும் தெரிவிக்கின்றோம். நீங்கள் எங்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்ட்டாட்டங்களை அறிவியுங்கள். அப்போது அந்தச் செய்தி சீதையைச் சென்றடையும், அந்த நேரம் பார்த்து, அவள் மனம் கவரும் வண்ணம் வண்ண, வண்ணப் பட்டாடைகளும், ஆபரணங்களும், பல்வேறுவிதமான கண் கவரும் பரிசுகளையும் அளித்து இனி ராமன் இல்லை, நான் தான் உன்னுடைய ஒரே பாதுகாவலன் என்று தெரிவித்தால் வேறு வழியில்லாமலும், செல்வத்திலே பிறந்து, செல்வத்திலே வளர்ந்து, செல்வத்தை மணந்த சீதை, அந்த செல்வத்திற்காகவும் முழுமையாக உங்களுடையவள் ஆகிவிடுவாள். இது ஒன்றே வழி” எனச் சொல்ல கும்பகர்ணன் மஹோதரனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறான்.

பின்னர் தன் அண்ணனைப் பார்த்து தான் தனியாகச் சென்று யுத்தம் செய்யப் போவதாயும், மன்னனுக்கு நெருக்கம் என்ற பெயரிலே மஹோதரன் தவறான ஆலோசனைகளைக் கூறுவதாயும், சொல்கின்றான். மஹோதரனையும் அவ்வாறே கடிந்தும் பேசுகின்றான். ராவணன் மனம் மகிழ்ந்து தன் தம்பியைப் போர்க்களத்திற்குச் செல்ல ஆயத்தப் படுத்துகின்றான். தன் அருமைத் தம்பிக்குத் தன் கையாலேயே ஆபரணங்களைப் பூட்டி, போருக்கான மாலைகளையும் சூட்டுகின்றான். கவசத்தை அணிவித்து எவரும் தன் தம்பியைத் தாக்க முடியாது என உறுதி கொள்கின்றான். கையிலே சூலத்தைக் கொடுத்து, பிரளயக் காலத்திலே அழிக்க வந்த ருத்ரனோ என்று எண்ணுமாறு தன் தம்பி இருப்பதாய் மகிழ்கின்றான். வேதியர்களை அழைத்து ஆசீர்வாத மந்திரங்களைச் சொல்ல வைக்கின்றான், இத்தனைக்கும் பின்னர் ஊழிக்காலத்துப் பரமசிவன் போலக் கையில் சூலம், ஏந்து, உடலில் கவசம் தரித்து, தன் பேருருவோடு புறப்பட்டுச் சென்று யுத்தகளத்தை அடைந்த கும்பகர்ணனைப் பார்த்த வானர வீரர்கள் திகைத்தனர்.

Friday, June 20, 2008

கும்பகர்ணன் வதை பற்றிய கம்பர் பாடல்கள்!

இந்த இடத்தில் வழக்கம்போல் கம்பர் வால்மீகியிடமிருந்து வேறுபடுகின்றார். கும்பகர்ணன் போருக்கு ஆயத்தம் ஆகி வருவதைக் கண்ட ராமர், அவனைப் பார்த்து வியந்தவராய், விபீஷணனிடம் அவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டு அறிகின்றார். விபீஷணனும், கும்பகர்ணனும் ராவணனுக்கு நல்லுபதேசங்கள் செய்ததையும், ராவணன் அதைக் கேட்காமல் இருந்ததையும், இப்போது ராவணனுக்கு ஒரு பிரச்னை என்றதும் கும்பகர்ணன், உதவிக்கு ஓடி வந்திருப்பதையும் தெரிவிக்கின்றான்.
"தருமம் அன்று இதுதான் இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான்.": கும்பகர்ணன் வதைப் படலம்:பாடல் எண்:1336

"மறுத்த தம்முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்
வெறுத்தும் மாள்வது மெய் எனா
இறுத்து நின் எதிர் எய்தினான்." பாடல் எண்: 1337


"நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான்." :பாடல் எண்: 1338

என்று விபீஷணன் கும்பகர்ணனின் தன்மையைப் பற்றி ராமனிடம் எடுத்து உரைக்கின்றான். அப்போது சுக்ரீவன், ராமனிடம், கும்பகர்ணனைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு விடலாம் என ஆலோசனை சொல்கின்றான். அந்தப் பாடல் இவ்வாறு:

"என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும் மற்று இந்நிருதர்கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைத்தேன் என்றான் நாதனும் நயன் ஈது என்றான்." பாடல் எண்: 1339

என்று கும்பகர்ணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் என சுக்ரீவன் சொன்ன யோசனையை ஏற்று ராமனும், அப்போது கும்பகர்ணனிடம் சென்று பேசுபவர்கள் யார் எனக் கேட்க, விபீஷணன் தானே சென்று பேசுவதாய்க் கூறிவிட்டுச் சென்று கும்பகர்ணனிடம் பேசுவதாயும், அவன் அதை மறுத்துப் பேசுவதாயும் கம்பர் கூறுகின்றார். விபீஷணன் ராமனைச் சரணடையுமாறு கேட்பதை இவ்வாறு கூறுகின்றார் கம்பர்:

"இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே." :கும்பகர்ணன் வதைப் படலம்: பாடல் எண்: 1351

"போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய?
வேதநூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும்." பாடல் எண் 1353

என்று விபீஷணன் கும்பகர்ணனிடம் கூறுவதாய்த் தெரிவிக்கும் கம்பர், இன்னும் ராமன் தனக்கு அளித்த இலங்கை சிம்மாசனத்தையும், தான் கும்பகர்ணனுக்கு அளிப்பதாய் விபீஷணன் கூறுவதாயும் தெரிவிக்கின்றார். மேலும் ராமனே, இவ்வாறு கும்பகர்ணனைக் கேட்டு வருமாறு அனுப்பி உள்ளதாயும் தெரிவிக்கின்றார் கம்பர் விபீஷணன் வாயிலாக. அது இவ்வாறு:

"வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான்
காதலால் என் மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே
ஆதலால் அவனைக் காண அறத்தொடும் திறம்பாது ஐய
போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்."

என ராமன் அனுப்பியதாய்க் கூறுகின்றார் கம்பர். ஆனால் வால்மீகியில் ஒரு இடத்திலும் இவ்வாறு இல்லை. கும்பகர்ணன் விபீஷணனை மறுத்துப் பேசுவதாயும், ராவணனுக்குத் தான் உயிர்த்தியாகம் செய்வதே சிறந்தது எனக் கும்பகர்ணன் கூறுவதாயும் கம்பர் கூறுகின்றார்.:

"நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்!
தார்க்கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி, ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி."
என்று விபீஷணனை, ராமனிடம் சென்று சீக்கிரம் சேரச் சொல்லி வாழ்த்தவும் செய்கின்றான். மேலும்,

"ஆகுவது ஆகும் காலத்து ஆகும், அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்."

என்று தன்னை நினைத்து வருந்த வேண்டாம் எனவும் விபீஷணனிடம் சொல்லுகின்றான் கும்பகர்ணன். எல்லாவற்றுக்கும் மேல், சுக்ரீவனை, கும்பகர்ணன் எடுத்துச் செல்லும்போது யாரும் தடுக்கவில்லை, வால்மீகியின் கூற்றுப்படி, ஆனால் கம்பரோ, ராமன் தடுத்ததாய்க் கூறுகின்றார் இவ்வாறு:
"உடைப்பெருந்துணைவனை உயிரின் கொண்டு போய்
கிடைப்ப அருங்கோடி நகர் அடையின் கேடு என
தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து இறை
அடைப்பேன் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம்."

என்று ராமன் வழியை அம்புகளை எய்து அடைப்பதாய்ச் சொல்கின்றார். மேலும் கடும்போர் புரிந்து கும்பகர்ணன், படை வீரர்களையும் ஆயுதங்களையும் இழந்து தனித்து நின்றதாயும் அப்போது ராமர் அவனிடம் இவ்வாறு கேட்பதாயும் கம்பர் கூறுகின்றார்: அது வருமாறு:

"ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை
எதிர் ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்
நின் உயிர் நினக்கு ஈவென்
போதியோ பின்றை வருதியோ அன்று எனின்
போர் புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி
சமைவுறத் தெரிந்து அம்மா." பாடல் எண் 1536

என்று கும்பகர்ணனை நன்கு ஆராய்ந்து உனக்கு எது பொருத்தம் என்று சொல்லுமாறு ராமன் கேட்பதாய்க் கூறுகின்றார் கம்பர். இதுவும் வால்மீகியில் இல்லை. மேலும் இதற்குப் பின்னர் நடக்கும் கடும்போரிலே தான் ராமன் கும்ப்கர்ணனின் அவயங்களைத் துண்டிப்பதாயும், அவயங்கள் துண்டிக்கப் பட்ட நிலையில் கும்பகர்ணன், விபீஷணனுக்காக ராமனிடம் வேண்டுவதாயும் சொல்லுகின்றார் கம்பர்.

""வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரொடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான்
ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான்
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய்."
பாடல் எண் 1568

"தம்பி என நினைந்து இரங்கித் தவிரான்
அத்தகவு இல்லான்
நம்பி இவன் தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால்
உம்பியைத் தான் உன்னைத் தான் அனுமனைத் தான் ஒரு பொழுதும்
எம்பிரியானாக அருளுதி யான் வேண்டினேன்." பாடல் எண் 1569

என விபீஷணனை ராவணன் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அவனைப் பிரியாமல் இருக்கவும் வேண்டுகின்றான் கும்பகர்ணன் ராமனிடம், போர்க்களத்தில் இறக்கும் தருவாயில். ஆனால் வால்மீகியில் இதெல்லாம் இல்லை. அதன் பின்னர் தன்னைக் கடலில் தள்ளுமாறு அவனே ராமனைக் கேட்டுக் கொள்ளுவதாயும் சொல்கின்றார் கம்பர்.

"மூக்கு இலா முகம் என்று முனிவர்களும், அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்."

எனக் கும்பகர்ணன் தனக்கு வரம் வேண்டி ராமனிடம் பெறுவதாயும் கம்பர் கூறுகின்றார்.

Thursday, June 19, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62

அவமானம் தாங்க முடியாத ராவணன், தன் வலிமையும், சக்தியும் இன்று ஒருநாள் யுத்தத்திலேயே குறைந்து விட்டதையும் உணர்ந்தவனாய், தன்னுடைய கிரீடமும், தேரும் சுக்குநூறாகப் போய்விட்டதையும் கண்டவனாய், வேறு வழியில்லாமல், ராமர் சொன்ன வார்த்தைகளினால் தலை கவிழ்ந்து, திரும்பினான். விண்ணில் இருந்து இதைக் கண்ட தேவர்களும், ரிஷி, முனிவர்களும் ராமரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

அவமானத்துடன் திரும்பிய ராவணன், செய்வது இன்னதென்று அறியாமல் மனம் கலங்கினான். தன் ஆலோசனைக்காகக் கூடி இருந்த மற்ற அரக்கர்களிடம் ஆலோசனையும் நடத்தினான். தன் கவலைகளை வெளிப்படையாகச் சொன்னான். தேவேந்திரனையும், யமனையும் வெற்றி கொண்ட தான், இன்று ஒரு சாதாரண மனிதனிடம் தோற்றுப் போனதைக் குறிப்பிடுகின்றான். அவன் திரும்பிப் போ என்று சொன்னதையும், அதனால் தன் மனம் துயரில் ஆழ்ந்ததையும் தெரிவிக்கின்றான். பல வரங்களைப் பெற்ற தான் மனிதர்களிடமிருந்து மரணம் இல்லை என்ற வரத்தை பெறாமல் போனதற்கு மிகவும் வருந்தினான். இஷ்வாகு குல அரசன் ஆன அனரண்யன் என்பவன், மனம் நொந்து தன் வம்சத்தில் பிறந்த ஒருவனால் ராவணன் தோற்கடிக்கப் படுவான் எனச் சொன்னது உண்மையாகிவிட்டதே என்றும் வருந்தினான். மேலும் வேதவதியைத் தான் பலாத்காரம் செய்ய முனைந்தபோது அவள் கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான். அவள்தான் சீதை என்பதில் தனக்கு ஐயம் இல்லை தற்போது என்றும் உறுதிபடச் சொல்கின்றான். மேலும் கைலையில் நந்திஸ்வரனை நான் கேலி செய்தபோது குரங்குகளால் தனக்கு மரணம் நேரிடும் என்று நந்தி கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான். இவ்வாறு தான் முன்னால் செய்த தீமைகள் அனைத்துமே தனக்கு இப்போது தீவினைகளாய் வந்திருக்கின்றது என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை எனச் சொல்லி வருந்துகின்றான் தசக்ரீவன்.

பின்னர் அரக்கர்களைப் பார்த்து, போனது போகட்டும், இப்போதும் ஒன்றும் ஏற்படவில்லை. எப்படியாவது அந்த எதிரிகளை வென்றால் அதுவே போதும். அதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.. நாம் எவ்வாறேனும் வெல்லவேண்டும். கோட்டை நன்கு பாதுகாக்கப் படவேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகத்தினால் , பெற்ற பிரம்மாவின் வரத்தின் காரணமாய்த் தூங்கும் கும்பகர்ணனை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கின்றான். ராமனின் வானரப் படைகளை அழிக்கும் ஆற்றல் அவனிடத்தில் உள்ளது என்றும் சொல்கின்றான். அரக்கர்களில் சிலர் சென்று கும் பகர்ணனை எழுப்ப ஆரம்பிக்கின்றனர். ஒரு பெரிய மலை போல் படுத்திருந்த கும்பகர்ணனின் திறந்த வாயானது, அந்த மலையின் குகை போல் தோன்றியதாம்.

கும்பகர்ணனின் மூச்சுக் காற்று அனைவரையும் வெளியிலும், உள்ளேயும் மாறி, மாறி இழுக்க, சமாளித்த அரக்கர்கள் அவனை எழுப்பும் ஆயத்தங்களைச் செய்தனர். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் கும்பகர்ணன் சாப்பிடப்பல்வகை மிருகங்கள், அவற்றின் மாமிசங்கள், குடம் குடமாய்க் கள், ரத்தம், பல்வேறு விதமான உணவு வகைகள் போன்றவை தயார் நிலையில் இருந்தன. பின்னர் அவன் உடலில் வாசனைத் திரவியங்கள் பூசி, கொம்புகளையும், எக்காளங்களையும், சங்குகளினாலும் பெரும் சப்தங்கள் எழுப்பிப் பல யானைகளை அவன் மீது நடக்க வைத்து ஒருவழியாக மிகுந்த சிரமத்துடனேயே அவனை எழுப்புகின்றனர். எழுந்த உடனேயே உணவு உட்கொண்ட கும்பகர்ணன் பின்னர், தன்னை எழுப்பிய காரணத்தை வினவுகின்றான். ராவணன் தான் தன்னை எழுப்பச் சொன்னான் என அறிந்ததும் அற்பக் காரணத்துக்குத் தன்னை எழுப்புபவன் இல்லையே எனக் கேட்க, அரக்கர்கள் சீதையை அபகரித்து வந்ததையும், அதன் காரணமாய் ராமன் போருக்கு வந்திருப்பதையும், அதற்கு முன்னாலேயே அக்ஷகுமாரன், அனுமனால் கொல்லப் பட்டான் என்பதையும், ராமன் நேற்றைய போரில் ராவணனை, “இன்று போய் நாளை வா” எனச் சொல்லிவிட்டதையும், அதனால் ராவணன் மனம் மிக நொந்து போயிருப்பதையும் சொல்கின்றனர் அரக்கர்கள்.



கோபம் கொண்ட கும்பகர்ணனைச் சமாதானம் செய்த மஹோதரன் ராவணனைப் பார்த்து என்ன வழிமுறைகள், என்ன கட்டளைகள் எனத் தெரிந்து கொண்டு போர்க்களம் செல்வதே நலம் எனச் சொல்ல அதன் படியே நீராடிவிட்டுத் தன் அண்ணன் ஆன ராவணனைப் பார்க்கச் செல்கின்றான் கும்பகர்ணன். அப்போது கும்பகர்ணன் தன் அரண்மனையில் இருந்து ராவணன் அரண்மனை நோக்கிச் செல்வதை ராமரும் பார்க்கின்றார். விபீஷணனிடம் இவன் யார்?? ஒரு மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ எனத் தோன்றுகின்றானே எனக் கேட்கின்றார். விபீஷணன் உடனேயே, ராவணனின் தம்பியானவனும் மஹரிஷி விஸ்ரவஸின் மகனும் ஆன கும்பகர்ணன் ஆவான் அவன், எனச் சொல்லிவிட்டுக் கும்பகர்ணனின் பெருமைகளை விவரிக்கின்றான். யமனையும், இந்திரனையும் வென்றவன் அவன். பெரும்பலம் பொருந்தியவன் ஆவான். மற்ற அரக்கர்கள் வரங்களினால் பலம் பெற்றார்கள் என்றால் இவனுக்கோ பிறவியிலேயே பலம் நிரம்பிப் பெற்றவன் ஆகிவிட்டான். இந்திரன் இவனை அழிக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனின்றிப் போய்விட்டது. இவன் கொடுமை தாங்க முடியாமல் தவித்த இந்திரன், இவனைத் தோற்கடிக்க முடியாமல் தவிக்க, பிரம்மா இவனுக்குத் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் வரம் கொடுத்துவிட்டார். வரத்தின் கடுமையைக் குறைக்கும்படி ராவணன் பிரம்மனிடம் முறையிட, ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டுமே விழித்திருப்பான் எனவும், அந்த ஒருநாள் அவனுக்குத் தோன்றியதை அவன் செய்வான் எனவும் சொல்லி விடுகின்றார். இப்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து தன்னைக் காக்க ராவணன் இவனை எழுப்பி இருக்கின்றான் என்றும் சொல்கின்றான். உடனேயே வானரப் படை வீரர்களுக்குப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன.

Wednesday, June 18, 2008

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் "நட்டு"வுக்கு!!

அன்பு நட்டுவுக்கு, நேற்றுப் பிறந்த நாளாம், எனக்குத் தேதி ஜூன் மாசம் பதினைந்தா, பதினாறா, என்று குழப்பம், அபி அப்பா வழக்கம் போல் பாயாசம் போட மறந்துட்டுப் போயிட்டார். ஆகவே தாமதமான வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன். நட்டு, அப்பா மாதிரி இல்லாமால் அம்மா மாதிரி சுறுசுறுப்பாகவும், புத்திசாலியாகவும், தப்பில்லாமல் தமிழ் எழுதவும் வாழ்த்துகிறேன். அபி பாப்பா, இதைக் குறிச்சு வச்சுக்கோ, இதே மாதிரி தம்பி வரணும். ஓகே????

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61

வானரப் படைகள் ராமரின் பாதுகாப்பைத் தேடி ஓடி வரவும், ராமர் வில்லைக் கையில் ஏந்திப் போருக்கு ஆயத்தம் ஆக, அவரைத் தடுத்த லட்சுமணன், தான் சென்று ராவணனை அழித்துவிடுவதாய்ச் சொல்கின்றான். ராமர், ராவணனின் வீரத்தை லட்சுமணனுக்கு எடுத்துச் சொல்லிக் கவனமாய்ச் சென்று போர் புரியும்படி சொல்லி அனுப்புகின்றார். ஆனால் அனுமனுக்கோ, தானே ராவணனை எதிர்க்க ஆவல். ஆகவே அனுமன் ராவணனை நெருங்கி, “ நீ பெற்றிருக்கும் வரத்தால் வானரர்களிடமிருந்து உனக்கு வரப் போகும் இந்த விபத்தைத் தடுப்பவர் எவரும் இல்லை. நான் என் கையால் கொடுக்கப் போகும் அடியில் நீ வீழ்ந்து போவது நிச்சயம்.” என்று கூவுகின்றார். ராவணனோ, சர்வ அலட்சியமாய் அனுமனை எதிர்க் கொள்ளத் தயாராய் இருப்பதாய்த் தெரிவிக்கின்றான். ராவணனுக்குத் தான் அவன் மகன் ஆன அட்சனை அழித்ததை நினைவு படுத்துகின்றார் அனுமன். ராவணனின் கோபம் பெருக்கெடுக்கின்றது. அனுமனை ஓங்கி அறைய, அனுமன் சுழன்றார். அனுமன் திரும்ப அடிக்க, அனுமனின் வீரத்தை ராவணன் பாராட்டுகின்றான். ஆனால் அனுமனோ, என்னுடைய இத்தகைய வீரம் கூட உன்னை வீழ்த்தவில்லையே என வருந்துகின்றார். அனுமனை மேலும் ஓங்கிக் குத்தி, நிலைகுலையச் செய்துவிட்டு நீலனைத் தேடிப் போகும் ராவணனை நீலனும் வீரத்தோடும், சமயோசிதத்தோடும் எதிர்த்துச் சண்டை போடுகின்றான். சற்றே தெளிந்த அனுமன் அங்கே வந்து நீலனுடன் சண்டை போடும் ராவணனை இப்போது எதிர்ப்பது முறை அல்ல என ஒதுங்கி நிற்க, ராவணனோ நீலனை வீழ்த்துகின்றான். நீலன் கீழே விழுந்தான் எனினும் உயிரிழக்கவில்லை.

ராவணன் அனுமனை நோக்கி மீண்டும் போக லட்சுமணன் அப்போது அங்கே வந்து, வானரப் படைகளை விட்டு விட்டு தன்னுடன் போர் புரிய வருமாறு கூவி அழைக்கின்றான். அவ்வாறே, லட்சுமணன் வந்திருப்பது தனக்கு அதிர்ஷ்டமே என எண்ணிய ராவணன், அதை அவனிடமும் கூறிவிட்டு அவனுடன் போருக்கு ஆயத்தம் ஆகின்றான். அம்பு மழை பொழிகின்றான் ராவணன். லட்சுமணனோ சர்வ சாதாரணமாக அவற்றை ஒதுக்கித் தள்ளுகின்றான். பிரம்மனால் அளிக்கப் பட்ட அஸ்திரத்தால் லட்சுமணனைத் தாக்க, சற்றே தடுமாறிய லட்சுமணன் சுதாரித்துக் கொண்டு ராவணனைத் தாக்க அவனும் தடுமாறுகின்றான். எனினும் வீரனாகையால் ,லட்சுமணனைப் போலவே அவனும் சீக்கிரமே தன்னை சுதாரித்துக் கொள்கின்றான். ரொம்பவும் பிரயத்தனம் செய்தும் லட்சுமணனை வீழ்த்த முடியாமல் தன் சக்தி வாய்ந்த வேலை லட்சுமணன் மீது ராவணன் எறிய லட்சுமணன் அதனால் மார்பில் அடிபட்டுக் கீழே வீழ்ந்தான். உடனே ராவணன் வந்து அவன் அருகில் கை வைத்துப் பார்த்து அவனைத் தூக்க முயற்சிக்க, ராவணனால் லட்சுமணனை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கண்ட அனுமன் மிக்க கோபத்துடன் வந்து ராவணனின் மார்பில் தன் முட்டியால் ஓங்கித் தாக்க ராவணன் ரத்தம் கக்க ஆரம்பித்துக் கீழேயும் வீழ்ந்தான். அனுமன் சர்வ அநாயாசமாக லட்சுமணனைத் தூக்கிக் கொண்டு ராமனிடம் விரைந்தார். (தான் கீழே வீழ்ந்த சமயம் லட்சுமணனுக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரம், தன்னுடைய அம்சம் விஷ்ணுவுடையது என்ற எண்ணம் தோன்றியதாகவும், அதனாலேயே, ராவணனால் லட்சுமணனை அசைக்க முடியவில்லை என்றும் வால்மீகி சொல்கின்றார். அதே நேரம் அனுமனுக்கு இருந்த அளவு கடந்த அன்பு, மற்றும் பக்தியின் காரணமாய் அவனால் லட்சுமணனைத் தூக்க முடிந்ததாயும் சொல்கின்றார்.) ராவணனின் வேல் லட்சுமணன் வீழ்ந்ததும் உடனேயே அவனைச் சென்றடைந்து விட்டது.சற்று ஓய்வுக்குப் பின்னர் லட்சுமணன் சுயநினைவை அடைந்தாலும், ராவணனால் வானரசேனைக்கு ஏற்பட்ட அழிவைக் குறித்துக் கவலை அடைந்த ராமர், தானே போருக்கு ஆயத்தம் ஆகின்றார். அதற்குள் ராவணனும் அனுமனின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் சண்டை போட ஆரம்பித்துவிட்டான். அனுமன் ராமனிடம், தன் தோள்களில் உட்கார்ந்த வண்ணம் ராவணனோடு போர் புரியும்படி வேண்டிக் கொள்ள ராமனும் அதற்கு இசைந்தார். அனுமன் தோள் மீது அமர்ந்த ராமர், ராவணனைப் பார்த்து, “ நில் அரக்கர்களில் புலியே, நில், என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது. நீ எந்தக் கடவுளின் உதவியை நாடினாலும் தப்ப மாட்டாய். உன் வேலால் தாக்கப் பட்ட என் தம்பி லட்சுமணன் மீண்டு எழுந்து புது வேகத்தோடு உன்னுடன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வருகின்றான். நான் யாரென நினைத்தாய்?? உன் அரக்கர் கூட்டம் அனைத்தையும், ஜனஸ்தானத்தில் அழித்தவன் நான் என்பதை நீ நினைவில் கொள்வாய்.” என்று கூவினார். ராவணன் மிகுந்த கோபத்துடன், ராமரைக் கீழே தள்ளும் நோக்கத்துடன் அவரைத் தாங்கி நின்ற அனுமன் மீது தன் அம்புமழைகளைப் பொழிகின்றான். ராமரும் கோபத்துடன், ராவணனின் தேரைப் பொடிப் பொடியாக ஆக்குகின்றார். பின்னர் தன் அம்பு மழைகளினால் ராவணனை ஆயுதம் அற்றவனாய்ச் செய்கின்றார். அந்நிலையில் தன் சக்தியை இழந்து நின்ற ராவணனிடம் ராமர், “ என்னால் வீழ்த்தப்பட்டு உன் சக்தியை இழந்து நிற்கும் நீ இப்போது யுத்தம் செய்யும் நிலையில் இல்லை. உன்னுடன் இப்போது நான் யுத்தம் செய்வது முறையும் அல்ல. யுத்தகளத்தை விட்டு நீ வெளியேறலாம். நீ சென்று ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வலிமையுடன் வில்லேந்தி வருவாய். அப்போது என் வலிமையைப் பூரணமாக நீ உணர்வாய்.” என்று சொல்லிவிடுகின்றார்.


பின் குறிப்பு: திரு எஸ்கே அவர்கள் இந்திரஜித்தின் நாகபாசத்தால் லட்சுமணன் மட்டுமே கட்டப்பட்டது பற்றியக் கம்பராமாயணப் பாடல் பற்றிக் கேட்டிருக்கின்றார். கம்பர் அவ்வாறு எழுதி இருந்தாலும் வால்மீகியில் இது பற்றி இல்லை. மேலும் முதற்போரில் ராமரோ, லட்சுமணரோ சண்டை இட்டதாகவே கம்பர் தெரிவிக்கவில்லை. பார்க்க: முதற்போர் புரி படலம், ராவணன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வந்ததுமே ராமர் சண்டைக்கு வருவதாக கம்பர் தெரிவிக்கிறார். ஆனால் வால்மீகியோ முதற் போரிலேயே ராம, லட்சுமணர் பங்கு பற்றித் தெரிவித்திருப்பதோடல்லாமல், ராம, லட்சுமணர் இருவருமே, "நாராசங்கள்" என்னும் பாம்பு உருக்கொண்ட அம்புகளால் துளைக்கப் பட்டதாகவே முதல் போரில் சொல்லுகின்றார். இப்போது தான் கருடன் வருகின்றான். அதற்கடுத்த இரண்டாம் போரிலே இந்திரஜித் விடுத்த பிரம்ம்மாஸ்திரமும் இருவரையும் கட்டியதாகவே சொல்லுகின்றார் வால்மீகி. சஞ்சீவி மலை கொண்டு வரும் நிகழ்ச்சியும் இது சமயமே வரும். அதுபற்றிய கம்பர் குறிப்புகளும் மற்ற விளக்கங்களும் பின்னர் வரும். நன்றி.

Monday, June 16, 2008

ஒரு சிறிய சந்தேக விளக்கம் - வால்மீகியா, கம்பரா???

டாக்டர் எஸ்கே அவர்களுக்கு, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து காப்பாற்றினான் ராம, லட்சுமணர்களை என்று கம்பன் எழுதி இருப்பது பொய்யாய்ப் போயிற்றே என்று கேட்கின்றார். நான் எழுதுவது முழுக்க வால்மீகி சொல்லி இருப்பதை மட்டுமே. நடு நடுவில் கம்பனையும், திருப்புகழையும் மேற்கோள் காட்டி வந்தேன். அதுவே அதிகம் இடம்பெறுவதாய்ச் சொன்னதின் பேரில் நிறுத்திவிட்டேன், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). இப்போ மீண்டும் சிறு மேற்கோள் காட்டினால் கொஞ்சம் புரியும். கம்பன் நிச்சயமாய் வால்மீகி போல் உள்ளதை உள்ளபடிக்கு எழுதவில்லை. கொஞ்சம் கற்பனைகளும் உண்டு. மேலும், கம்பர் காலத்தில் ராமர் தெய்வமாகவும், அவதார புருஷனாகவும் மாறிவிட்டார். ஆகவே அதற்கேற்றபடி அவர் சில இடங்களில் மாற்றியுள்ளார். அதில் இந்தப் போர் நடக்கும் காலமும் ஒன்று. இந்தப் போரைப் பற்றிக் கம்பராமாயணத்தில் எந்தக் குறிப்பும் கிடையாது. அங்கதன் தூதுக்குப் பின்னர் ஆரம்பிக்கும், "முதற்போர் புரி படலம்" ராமன் ஆணை இடுவதையும், அதன் பேரில் அகழியைத் தூர்த்து, வானரப் படை உள்புகுந்து,காவல் இருந்த அரக்கர் படைகளை வீழ்த்துவதும், பின்னர் வானரப்படையுடன் பொருத, அரக்கர் படை வெளிவருதலும், சொல்லுகின்றார்.

"ஆய காலை அனைத்துலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்தென
மேய சேனை விரிகடல் விண்குலாம்
வாயிலூடு புறப்பட்டு வந்ததே" முதற் போர் புரிப் படலம் செய்யுள் எண் 993

என்று அரக்கர் படையின் ஆரவாரப் புறப்பாட்டைத் தெரிவிக்கின்றார். பின்னர் சுக்ரீவன் போர் செய்வதையும், ராட்சதன் ஆன வச்சிரமுட்டி என்பவனை சுக்ரீவன் அழிப்பதையும் சொல்லும் கம்பர், ஒவ்வொரு வாயிலிலும் நடக்கும் போரையும் வர்ணிக்கின்றார்.

கிழக்கு வாயில் சண்டையை விவரிக்கும் கம்பர், பின்னர் நீலன் "பிரஹஸ்தனை" வீழ்த்துவதையும், வால்மீகி சொல்லுவதற்குச் சற்று முன்னால் நடந்ததாய்த் தெரிவிக்கின்றார். ஆனால் இந்தப் போரில் அங்கதன், அனுமன், சுக்ரீவன் போன்ற வானர வீரர்கள் தவிர, இந்திரஜித் வந்ததோ, அவன் ராம, லட்சுமணர்களை "நாகபாசத்தால்" கட்டியதோ கடைசிவரையில் இல்லை, பிரஹஸ்தன் இறந்ததும் கோபம் கொண்ட ராவணன் போருக்குத் தயார் ஆவதும், அது கேட்டு ராமர் போருக்கு வருவதும் என்றே குறிப்பிடுகின்றார்.

"வென்றி வேற் கை நிருதர் வெகுண்டெழ
தென் திசைப் பெருவாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச்சு பாரிசன் போயினார்
இன்று போன இடம் அறியோம் என்றார்." செய்யுள் எண் 1041

"கீழை வாயிலில் கிளர் நிருதப் படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டுற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான் உயிர் புக்கது விண் என்றார்" முதற்போர் புரிப் படலம் செய்யுள் எண் 1042


என்று சண்டையைப் பற்றி அரக்கர்கள் ராவணனிடம் தெரிவிப்பதாய்க் கூறும் கம்பர், இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ராவணன் போருக்குத் தயார் ஆவதைச் சொல்கின்றார்.

"என்ற வார்த்தை எரிபுகு நெய்யெனச்
சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீ
கன்று கண்ணின் வழிச்சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ." முதற்போர் புரி படலம் செய்யுள் எண் 1043


என்று தன் அரக்கப் படையின் தோல்வியைக் கேட்டுப் பெருமூச்சு விட்டு மனம் வருந்திய ராவணன், போருக்குத் தயார் ஆவதை, கம்பர்
"சுட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை
பட்டது இங்கோர் குரங்கு படுக்க என்று
இட்ட வெஞ்சொல் எரியினில் என் செவி
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால்" செய்யுள் எண் 1048

என்று தன் அருமை அமைச்சன் பிரகஸ்தனின் மரணச் செய்தி தன்னைத் துன்புறுத்துவதையும்,


"மண்டுகின்ற செருவின் வழக்கெலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண்திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண் திறல் நெடுந்தேர் தெரிந்து ஏறினான். முதற் போர் புரி படலம் செய்யுள் எண்:1051

"ஆயிரம் பரி பூண்டது அதிர் குரல்
மாயிருங்கடல் போன்றது வானவர்
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது" செய்யுள் எண் 1052


என ராவணன் போருக்குப் புறப்படுவதை வர்ணிக்கின்றார். இதன் பின்னரே வானரத் தூதர் வந்து ராமனிடம், ராவணன் போருக்கு வந்திருப்பதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்.

"ஓதுறு கருங்கடற்கொத்த தானையான்
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால்
போது உறு பெருங்களம் புகுந்துளான் எனத்
தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார்." முதற்போர் புரி படலம், செய்யுள் எண் 1064


என்று தூதுவர்கள் ராமனிடம் தெரிவிப்பதாயும்,

"ஆங்கு அவன் அமர்த் தொழிற்கணுகினான் என
வாங்கினென் சீதை என்னும் வன்மையால்
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீரத் தோள்களே" செய்யுள் எண்: 1065

என்று ராமன் போருக்குப் புறப்படுவதையும்,


அதுவரையில் ராமன் போர்க்களம் புகவில்லை என்னும் எண்ணம் தோன்றும்படியாகவும் எழுதி உள்ளார். அவர் தெரிவிப்பது, பின்னர் வரும் சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு வரும் காட்சியின் போது நடக்கும் சண்டை பற்றி மட்டுமே. ஆனால் அதற்கு முன்னாலேயே ராம, லட்சுமணர்களை இந்திரஜித் நாகபாசத்தால் கட்டுவது பற்றிக் கம்பர் ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அதனாலேயே முரண்பாடு இருப்பது போலும், கம்பர் சொன்னது பொய்யா எனவும் எஸ்கே அவர்களுக்குச் சந்தேகம் தோன்றுகின்றது. சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு வருவது பின்னால் வரும். அப்போதும் கம்பனை மேற்கோள் காட்டப் படும். விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

Sunday, June 15, 2008

மன்னிப்பு வேண்டுகின்றேன்!

பின்னூட்டப் பெட்டி தாற்காலிகமாய் மூடப் பட்டிருக்கின்றது. நண்பர்களுக்கு ஏமாற்றம் தருவதற்கு மன்னிக்க வேண்டும். பின்னர் திறக்கப் படும் தேதி அறிவிக்கப் படும். அனைவருக்கும் நன்றி.

Friday, June 13, 2008

கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60

கருடன் செவ்வொளி வீசப் பறந்து வருவதைக் கண்ட வானரர்கள் மனம் மகிழ்ந்தனர். ராம, லட்சுமணர்களைக் கட்டி இருந்த அம்புகளின் உருவில் இருந்த பாம்புகள் பயந்து ஓடிப் போயின. அதைக் கண்ட வானரகள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்ப, ராம, லட்சுமணர்கள் இருவரும் எழுந்தனர். புத்துயிர் பெற்று எழுந்த அவர்களைக் கண்ட வானரர்கள் ஆரவாரம் எழுப்பினார்கள். அவர்கள் முகத்தைத் தன் கையால் கருடன் துடைத்தான். அவர்களின் பலம், தேஜஸ், அனைத்தும் மீண்டும் இரு மடங்காய்ப் பெருகிவிட்டது போல் ஒரு தோற்றம் எழுந்தது.இருவரையும் கட்டி அணைத்தான் கருடன். ராமர் அவனிடம், "இத்தனை அன்புடன் என்னையும் என் சகோதரனையும் காத்த நீ யாரோ?? உன்னைக் கண்டதுமே என் மனதில் அன்பு வெள்ளமாய் ஓடுகின்றதே? எனக்கு மிக நெருங்கியவன் நீ என்ற எண்ணம் உண்டாகின்றதே? நீ யார்??" என்று கேட்க, கருடனோ, " நான் கருடன், உனக்கும், எனக்கும் உள்ள பிணைப்பு அசைக்க முடியாதது. எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத வல்லமை கொண்ட இந்திரஜித்தால் நீ தாக்கப் பட்ட போது தேவர்களே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். அந்த அம்பு உருக் கொண்ட பாம்புகள் என் ஒருவனால் மட்டுமே விரட்ட முடியும். இந்தச் செய்தியை அறிந்ததுமே, நம்மிருவரின் நட்பின் பிணைப்பையும், அன்பின் உறுதியையும் மனதில் கொண்டு உன்னைக் காக்க வேண்டி இங்கே வந்தேன். இப்போது அந்தப் பாம்புகள் ஓடி விட்டன. ஆனாலும் இந்த ராட்சதர்கள் மாயத் தன்மை கொண்டவர்கள். அதிலும் இந்திரஜித்திடம் நீ மிகக் கவனமாய் இருக்கவேண்டும். "

"நான் யார் என்பதெல்லாம் இருக்கட்டும். நம் நட்பு பற்றியும் நீ இப்போது சிந்திக்கவேண்டியதில்லை. உன் கடமை இப்போது சீதையை மீட்பதே. இலங்கையின் இளைஞர்களையும், வயோதிகர்களையும் விடுத்து மற்றவர்களையும், ராவணனையும் அழித்து, சீதையை மீட்பது ஒன்றே உன் இப்போதைய கடமை. பின்னால் நீயே தெரிந்து கொள்வாய், நம் நட்பின் பிணைப்புப் பற்றி. இப்போது நான் சென்று வருகின்றேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்." என்று வாழ்த்திவிட்டு, என்ன தான் மகாவிஷ்ணுவே மனித உருவில் இருந்தாலும், மனித உருக் கொண்டவனிடம் தான் யார் என்றும், அவன் தான் விஷ்ணு என்பதையும் தான் சொல்லுவது தகாது என்ற உணர்வோடு கருடன் திரும்புகின்றான். புதுப் பலம் எய்திய வானர வீரர்களின் ஆரவாரம் ராவணன் காதை எட்டுகின்றது. ராவணன் என்ன விஷயம் என்று பார்த்து வரச் சொல்ல, ராட்சதர்கள் அவ்வாறே பார்த்துச் சென்று ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தின் கட்டில் இருந்து விடுபட்டுவிட்டனர் என்று சொல்கின்றார்கள். உடனேயே ராவணன் தன் தளபதியான தூம்ராக்ஷனை அனுப்ப, வானரப் படைக்குப் பெரும்நாசத்தை உண்டு பண்ணிய தூம்ராக்ஷனை அனுமன் வீழ்த்துகின்றான். பின்னர் ராவணன் வஜ்ரத்ம்ஷ்ட்ரனன், அகம்பனன் ஆகியோரை அனுப்ப அவர்களை முறையே அங்கதனும், அனுமனும் வீழ்த்துகின்றனர்.

பின்னர் தலை கவிழ்ந்து யோசனையில் ஆழ்ந்த ராவணன், பிரஹஸ்தனை அழைத்து ஆலோசனை செய்கின்றான். மேலே என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்த ராவணனிடம் பிரஹஸ்தன் சொல்கின்றான்:" இந்த ஆலோசனை முன்னால் நடந்த போதே நான் சீதையைத் திருப்பி அனுப்புவதே உகந்தது எனத் தெரிவித்தேன். இத்தனை பயங்கரமான, பெரிய யுத்தத்தை எதிர்பார்த்தே அவ்விதம் சொன்னேன். எனினும், நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவன். என்னால் என்ன முடியுமோ அதை உங்களுக்காக நான் செய்யத் தயாராக இருக்கின்றேன். உயிர்த் தியாகம் கூடச் செய்யுவேன்." என்று கூறிவிட்டு யுத்தகளத்துக்குச் செல்கின்றான் பிரஹஸ்தன். பிஹஸ்தனைப் பார்த்த ராமர், அவன் பலத்தையும், வந்த நொடியில் பல வானரர்களை அவன் அழித்ததையும் கண்டு வியந்தார். அதே சமயம் நீலன் பிரஹஸ்தனைத் தோற்கடித்து அவனையும் கொன்றான். பிரஹஸ்தனே போரில் மாண்டான் என்ற செய்தி கேட்ட ராவணன் திகைத்தான். பின்னர் தானே நேரில் போரில் இறங்குவதே சரி என்ற முடிவுக்கும் வந்தான்.

தன்னுடைய அம்பு வெள்ளத்தால் வானர சேனையையும், ராம, லட்சுமணர்களையும் மூழ்கடிக்கும் எண்ணத்துடன் தேரில் ஏறிக் கொண்டு வந்த ராவணனையும், அவன் தலைமையில் வந்த படைகளின் அணிவகுப்பையும் கண்டு ராமர் வியந்த வண்ணம், விபீஷணனிடம், "கம்பீரமான ஒளி பொருந்திய, இந்த அணி வகுப்பை நடத்தி வருபவர் யார்? இந்த அணி வகுப்பில் யார், யார் இருக்கின்றனர்?" என்று கேட்கின்றார். விபீஷணன் சொல்கின்றான்:
"இந்திர வில்லைப் போன்ற வில்லைக் கையில் ஏந்தி, சிம்மக் கொடியுடன் இந்திரஜித்தும்,
மலைபோன்ற தோற்றத்துடன் அதிகாயனும்,
சிவந்த நிறமுள்ள கண்களை உடைய மஹோதரனும்,
இடி போன்ற வேகம் உடைய பிசானனும்,
கையில் வேலுடன் திரிசிரனும்,
மேகங்கள் போன்ற தோற்றத்துடம் கும்பனும்,
எல்லாருக்கும் மேல், தெய்வங்களுக்கே அஞ்சாத துணிவும், வல்லமையும் கொண்டவனும், இந்திரனையும், யமனையும் ஜெயித்தவனும், ருத்ரனுக்கு நிகர் ஆனவனும் ஆன ராவணனே இந்தப் படை அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி வருகின்றான்." என்று சொல்கின்றான்.

ராவணனின் அணிவகுப்பு போர்க்களத்தை அடைந்தது. போர் ஆரம்பம் ஆனது. தன் இடைவிடாத அம்பு மழையால் வானரப் படையைச் சிதற அடிக்கின்றான் ராவணன். வானரப் படையோ திக்குத் தெரியாமல் ஓடுகின்றது. தன் அம்பால் சுக்ரீவன் மார்பில் ராவணன் அடிக்க அதனால் சுக்ரீவன் நிலை குலைந்து கீழே விழ, கோபம் கொண்ட வானரப் படை ராவணனைத் தாக்க, அவனோ அம்புமழை பொழிய, வானர வீரர்கள் ராமனிருக்கும் இடம் தேடி ஓடுகின்றது, பாதுகாப்புக்காக.

சங்குமுகம், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், தயவு செய்து!!!

But you have forgotten to answer the secondary part of the Question about a man whose life is consumed in cares and worries of his duties as a father. He is poor, he is unlettered; and he has no time.
அற்புதமான சொல்வளம், திரு சங்குமுகம், உங்கள் ஆங்கிலப் புலமையைக் கண்டு நேற்றே வியந்தேன், பொறாமையாகக் கூட இருக்கின்றது. இப்போ இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள். இப்போ விஷயத்துக்கு வருவோமா?? இந்த விவாதத்தை நான் தொடர நினைக்கவில்லை, எனினும் நீங்கள் திரும்பத் திரும்ப, ஒரு சராசரி, சாமான்ய மனிதனுக்கு இதனால் என்ன பயன்? அதுவும் எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு, தன் வேலைகளில் ஆழ்ந்து போனவனுக்கு, இறைவனைப் பற்றி நினைக்கக் கூட முடியாதவனுக்கு என்று கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள். யாராக இருந்தாலும், யாருடனும் தொடர்பாவது வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி அவன் தொடர்பு கொள்ளும் நபர்களில் யாராவது என்னைப் போல் இருக்கலாம், இது பற்றி அவனிடம் பேசலாம். அப்போது அவன் தெரிந்து கொள்ளலாம். நம் புராணத்திலேயே இது பற்றிய ஒரு கதை உண்டு. குடும்பப் பிரச்னைகளில் மூழ்கிய ஒரு விவசாயி பற்றிய கதை அது. தெரிந்திருக்கும் என நம்புகிறேன். காலையில் எழும்போதும், இரவு படுக்கும்போதும் மட்டும், "அப்பனே, நாராயணா!" என இறைவன் பெயரைச் சொல்கின்றான். அப்படி பெயரை மட்டுமே சொல்பவர்களும் உண்டு, இப்போதும், எப்போதும். ஆகவே யாருக்கும் எதுவும் பயனே இல்லை என்பதே கிடையாது. இன்னும் சொல்லப் போனால், நான் சுயபுராணமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் எனக்கு வந்த சில தனி மடல்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. எனினும் self appraisal ம் தேவையோ என்று நினைக்க வைத்துவிட்டது உங்கள் பின்னூட்டம். கொச்சியில் இருந்து,தமிழ் தெரிந்த யாரோ படித்துச் சொல்லக் கேட்ட ஒரு நபர் ஆங்கிலத்தில் எனக்குக் கடிதம் எழுதி இருந்தார், நன்றி தெரிவித்து. அதேபோல் பாண்டிச்சேரியில் அரசின் உதவியுடன் வைக்கப் பட்ட பொது கணினியில் தமிழ் படிக்க மட்டுமே தெரிந்த ஒருவரும் வேறு ஒருவர் உதவியுடன் எனக்கு மடல் அனுப்பி இருந்தார். இதை இங்கே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை எனினும், கணினியின் தொடர்பு இல்லை எனில் இதை யாரால் படிக்க முடியும் என்ற கேள்வி உங்களால் எழுப்பப் பட்டிருப்பதால் குறிப்பிட்டுள்ளேன். பட்டி, தொட்டிக்கெல்லாம் கணினியை எடுத்துச் சென்ற ராஜீவ் காந்திக்கு உளமார நன்றி செலுத்துவோம்.

//You say, you are rendering a great service through these discourses; and you want to bring the epical truths to the young generations.//

மன்னிக்கணும், இதை ஒரு "பெரிய சேவை" என்ற எண்ணம் உங்களுக்கு எழும்படியாக நான் எழுதி இருப்பது என்னுடைய குற்றமேதான். இதை ஒரு சேவையாக நான் நினைக்கவில்லை. இளைஞர்களுக்கு, முக்கியமாக தற்கால இளைஞர்களுக்கு, ஆன்மீகம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்ட ஒரு தலைமுறைக்கு இதைச் சொல்லுவது "என் கடமை" என்றே நான் நினைத்தேன், நினைக்கின்றேன், நினைப்பேன். ஆகவே உங்களுக்கு மாறுபட்ட எண்ணம் தோன்றும்படி எழுதியதற்கு மீண்டும் மன்னிப்பைக் கோருகின்றேன். நம் நாடு தான் சுதந்திரம் அடைந்துள்ளதே தவிர, நம் மனதில் இன்றளவும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் தான் இருக்கின்றோம். ஆங்கில ஆட்சிமுறைதான் நம் நாட்டு அரசியல் வாதிகளால் கடைப்பிடிக்கப் பட்டு நாம் ஆளப் படுகின்றோம். ஆங்கில ஆட்சி முறைக் கல்வி தான் கற்பிக்கப் படுகின்றது. நமக்குச் சற்றும் பொருந்தாத ஒரு ஆட்சி முறையை, கல்வி முறையை சில நூற்றாண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களால், இது தான் நம் ஆட்சி முறை, கல்வி முறை என்ற தவறான எண்ணத்தைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட ஏற்கும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதில் இருந்தே ஆங்கிலேயர் நம்மை எந்தக் காரணத்துக்காக ஆண்டார்களோ அதில் வெற்றி அடைந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது. நம் நாட்டுக் கல்வி முறையோ, கலாசாரமோ, விவசாய முறைகளோ, குடும்பவாழ்வு முறையோ கேவலம் என்று நம் நாட்டினரே இன்று எண்ணும்படியான நிலை உருவாகி உள்ளது. எது நம் நாட்டுக்குப் பெருமையோ, எதனால் நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுகின்றதோ அத்தகைய நம் நாட்டின் "ஆன்மா" இப்போது மயக்க நிலையில், சொல்லப் போனால் கோமா நிலையில் உள்ளது. அதை எவ்வாறேனும் தட்டி எழுப்ப வேண்டியதே நம் கடமை. அது நம் நாட்டுக் கலாசாரத்தைக் காப்பதிலேயே அடங்கி உள்ளது என்பது என் கருத்து. உலகுக்கே கூட்டுக் குடும்ப வாழ்க்கையைப் போதித்த நம் நாடு, இன்று ஒன்றாக இருப்பது போல் தெரிந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதறி விடுமே என்ற பயமே காரணம். என் காலத்துக்குள் இல்லாவிட்டாலும் வருங்காலமாவது காக்கவேண்டுமே என்ற அச்சம்!!


In order to benefit from your services, I must be computer-saavy, lettered in Tamil, and some English too, have enough time on hand, and such relaxation as can help me sit before a PC - which I must own, afte spending many thousands of hard-earned rupees, which could have helped me buy some feeding bottles to my babies.

//Your niir is selectively channelled and will irrigate only the arable fields which are already awash with abundant supply of water. The barren lands, as they are condemned to be barren by cruel fate or man-made cruelty, is out of your reckoning completely. How idyllic!//

nirr???? எது அது??? கீழே சொல்லுவதா?? இல்லை எனத் தெரியும். :P

//National Network for Immigrant and Refugee Rights //

"niir" என்று எதைச் சொல்கின்றீர்கள்?? மேலே நான் குறிப்பிட்டிருப்பதையா????

முட்டாள் தனமாய், ஒரு தரப்பினருக்கே என்னுடைய சேவையை நான் செய்வதாய் நீங்கள் குறிப்பிட்டிருப்பதையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இதற்காக நான் பட்டியல் போட்டுக் காட்டும் அளவுக்குத் தரம் தாழ்ந்தும் போகவில்லை. ஏனெனில் என்னுடைய கடமைகளை நான் எனக்குத் தெரிந்த அளவில் திருப்தியாக மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து வருகின்றேன் என்று மட்டுமே குறிப்பிடுகின்றேன். No self appraisal in these matters. It is restricted.

நீங்கள் சொல்லுவது போல் எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கும் மேட்டுக்குடியினருக்கே என்னுடைய சேவை போய்ச் சேருவதாய் நீங்கள் கருதினாலும் மேட்டில் நீர் நிற்காது. பள்ளத்தை நோக்கியே பாயும், பாயவேண்டும். ஆகவே எனக்கு இது பற்றிய வருத்தம் இல்லை.
//'Measuring life in coffee spoons
Talking of Michangello'

Have you observed that?//

Yes, Sir, I do.

மேலும் இது போன்ற புராணக் கதைகளைப் படிப்பதால் இப்போது பயனில்லை என நீங்கள் கூறி இருப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இதில் இருந்து, நல்லவை, கெட்டவை எனப் பிரிக்க முடியாது ஒரு சாமானியனால் எனச் சொல்லி இருப்பதும் ஏற்க முடியாது. நீங்களே உங்களுடைய பின்னூட்டத்தில் தற்காலத்தில் மனிதர்கள் மிகக் கெட்டிக்காரர்கள் எனச் சொல்லி இருக்கின்றீர்கள்.
//People have become more clever nowadays. The effect of such books is minimal today.//

அப்படி இருக்கும்போது தராதரம் பிரிக்கமுடியாத அளவுக்கு மோசமான மனிதர்கள் என்று நான் நம்பிக்கை இழக்கவில்லை. சுயநலம் ஒன்றே மனிதனைக் கொல்கின்றது மோசமான அளவில்.

//Now, coming to your discourses, while you do agree that the book should not be accepted in toto blindly, yet, do you show such discernment and discrimination in your blog? If no, your reproduction of the epic defeats your noble intention.//

தவறான புரிதலுக்கு இடம் கொடுத்தமைக்கும் மன்னிப்பைக் கோருகின்றேன். நம்மிடம் உள்ள நல்ல தன்மையை, நல்லொழுக்கங்களை தேவ குணம் என்றும் , கெட்டவற்றை அசுர குணம் என்றும் சொல்லுவது உண்டு. நன்மை புரிந்தால் நன்மையே நடக்கும், எனவும், தீமைகள் புரிந்தால் அவன் எவ்வளவு நல்லாட்சி புரிந்தாலும் அவன் தர்மத்தில் இருந்து வழுவினால் அவனுக்கு முடிவில் தண்டனையே கிட்டும் என்பதே நான் சொல்ல வந்தது. எப்படிப்பட்ட பக்திமானும் கெடுதல் செய்தால் தண்டனனயில் இருந்து தப்ப முடியாது, எவ்வளவு பெரியவன் ஆனாலும். இதுவே நான் சொல்லுவது. இதில் ராவணன் பற்றியவற்றையும், அவனின் தீய ஒழுக்கங்களையும், அவன் செய்த பாவங்களையும் ஒதுக்கவேண்டும் என்பதே என் கருத்து. அதே சமயம் அதே ராவணன், பல தவங்களைப் புரிந்துள்ளான், பல பூஜைகள் செய்துள்ளான், பல வரங்களையும் பெற்றுள்ளான். ஆனால் அவற்றால் அவன் பிறருக்கு நன்மை செய்யவில்லை அல்லவா?? அதைத் தான் தள்ளவேண்டும். அவனின் தீய குணத்தைத் தள்ளிவிட்டு, அவன் விடாமுயற்சியுடன் கைலையைத் தூக்கி நிறுத்த முயன்றும் தோற்றுப் போனானே? அகம்பாவத்தால் அதைத் தள்ளவேண்டும், இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கவேண்டுமோ??? நாத்திக வாதமும் பேசப் படும் வால்மீகி ராமாயணத்தில். அதைத் தள்ளவேண்டும். தசரதனின் பெண் மோகத்தையும், யோசிக்காமல் கொடுத்த வாக்குறுதியையும் நினைத்துப் பார்த்து அதைத் தள்ளவேண்டும். ஐயா, இப்படி யோசித்தால் நிறையவே வரும். ஆனால் நான் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுகின்றேன். எனினும் உங்களுக்கு என் நன்றிகள்.

Thursday, June 12, 2008

Thank You Mr. Shangumuham!!!! My answer to You!

SANGKUMUHAM said...
//Geetha Sambasivam!

Nice to read the results of your labors. But I dont know why I have read them at all!//

Mr.Sangumuham,
First of all, I never asked you to read them all. And I am not going to people and asking them to read this, or that. If you are interested in the subject, read it. I am not asking people to comment in favour of it also. Always there are two sides. Some are favouring, some are not. So it is completely your desire. Not mine.

//Will it make me a good person? Suppose it does, how can a person who cant read and write, become a good person? Because, he is what he is! Or, a person whose life is consumed in eking out his mean existence on a measly wages, to fill the stomach of an innocent wife and yet more innoncent children?//

இப்போ கொஞ்சம் வசதிக்காகத் தமிழில் மாறிக்கறேனே??? உங்களை இது மாற்றவில்லை எனில் அது ராமாயணத்தின் குற்றம் அல்ல. மாற்றினாலும் அதற்கு அதனால் பெருமை என நீங்கள் நினைத்தால் அது உங்கள் எண்ணம். எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு என்ன பிரயோசனம் என்றால், படித்தவர்கள் யாரேனும் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுவதை அவன் காதால் கேட்க முடியும். அதிலும் என்ன பயன் என்றால் இது வாழ்க்கையில் வாழும் வகை பற்றிச் சொல்கின்றது. எப்படியாவது வாழ வேண்டும், என்று நினைக்காமல் எப்படி வாழ்ந்தால் நல்லது எனப் போதிக்கும் அதே சமயம், கஷ்டமான சூழ்நிலையில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும், என்பதையும், நட்பு என்பது எவ்வளவு உன்னதமான விஷயம் என்பதையும்,நட்பையும், நண்பர்களையும் எவ்வாறு போற்றவேண்டும், என்பதையும் கஷ்டமான காலத்தில் நட்பு எவ்வாறு உதவுகின்றது என்றும், மேலும் ஊழியம் செய்பவர்களின் தொண்டின் சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றது. நன்கு படித்தவர்கள் மேலும், மேலும் இதைப் படித்தால், முக்கியமாய் ஆட்சி புரிபவர்கள் படித்தால், மக்களுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் பற்றியும், ஆட்சி புரியவேண்டிய முறை பற்றியும், மனிதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நீதி பற்றியும், நேர்மை பற்றியும், நல்லொழுக்கம் பற்றியும் சொல்லுகின்றது. நேர்மையும், திறமையும் இல்லாத அரசுகளே தொடர்ந்து ஆட்சி புரியும் இந்நாட்களில், குறைந்த பட்சம் ஆட்சியாளர்களுக்கு ஒரு "MORAL FEAR" ஆவது ஏற்பட வழி செய்யும், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது உறுத்தும், அந்த உறுத்தல் தாங்காமல் ஒருவேளை மக்களுக்குக் கொஞ்சம் நல்வழி காட்டவும் முற்படலாம். ஆனால் இன்று ஒருநாளில், ஒரு இரவில் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது தான்.

படிக்கும் பிள்ளைகளுக்கு இன்றைக்கு எந்தவிதமான நீதி போதனைகளும் போதிக்கப் படுவதில்லை. இத்தகைய இதிகாசங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் எடுத்துச் சொல்லப் படும் நீதிக் கதைகளும், நீதிக்காகப் பாடுபட்ட அரசன் பற்றிய விபரங்களும், அவர்களுக்கு நம் நாடு எத்தகைய உன்னத நிலையில் இருந்தது என்பதை எடுத்துச் சொல்லும், இனி வரும் தலை முறையாவது அத்தகைய உன்னத நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முயற்சிக்கும். வருங்கால இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களுமே நம் நாட்டு இதிகாசங்களிலும், புராணங்களிலும், உபநிஷத்துகளிலும் கொட்டிக் கிடக்கின்றன. அருமை தெரியாமல் ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்கின்றார்கள் எனில், நாமாவது தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அட, பழைய காக்கை, நரி, பாட்டி, வடை கதையையே எடுத்துக்குங்களேன்?? அதிலேயே கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கின்றது?? பாட்டி வயசு ஆகியும் தன் கையால் உழைத்துப் பிழைக்கின்றாள், யாரையும் எதிர்பார்க்காது. காக்கை, உழைப்பைத் திருடித் தின்க முயற்சிக்கின்றது. உழைப்பே இல்லாமல் அது திருடியதற்காக, நரியிடம் தன் வடையை இழக்கின்றது. வல்லவனுக்கு வல்லவன் உலகிலே உண்டு அல்லவா? அதான் இங்கே நரியாக உருவகம், மேலும் முகஸ்துதிக்கு, அதிலும் பொய்யான முகஸ்துதிக்கு காக்கை மயங்கவும் செய்கின்றது. உழைக்காமல் பிறர் காசில் வயிறு வளர்த்தால், பின்னால் உன்னிலும் சிறந்த ஏமாற்றுக் காரன் உன்னை ஏமாற்றுவான் என்று அந்தக் கதை சொல்லவில்லையா? இந்தக் கதையைத் தள்ளி விட முடியுமா??? அந்தக் கதை கேட்டு வளர்ந்த எங்கள் தலைமுறையைப் போல் இன்றைய தலைமுறை இல்லையே??? அந்த வருத்தமே என்னை இதெல்லாம் எழுத வைக்கின்றது. ஓரிருவர் மாறினாலே போதும், மாற்றம் என்ற சொல்லைத் தவிர, மற்றதெல்லாம் மாறுபடும் அல்லவா? மாறும், மெல்ல, மெல்ல மாறும், காத்திருக்கவேண்டும். எப்போது எனத் தெரியாது!!!!

//Your lucubrations are vizallukku iraththa niir. Or, to put it correctly, a luxury for a people who has nothing else to do?//

நிச்சயமாய் இல்லை. விழலுக்கு இறைத்த நீர் எனச் சொல்லவே முடியாது. வேறு வேலை இல்லாமலும் இதைச் செய்யவில்லை. அதுதான் உங்கள் கருத்து என்றால், அப்படியே இருக்கட்டும். புராணங்களும், இதிகாசங்களும் பொழுதுபோக்குக்கான அம்சங்களே இல்லை, முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான சாதனைகளை வைத்து, நம் அன்றைய நாட்களின் அர்த்தமுள்ள விஷயங்களைப் புறக்கணித்துச் செல்வது முற்றிலும் சரி அல்ல. நமது இப்போதைய அனுபவத்தை அளவுகோலாக வைத்துக் கொண்டு கணிப்பது சரியும் இல்லை. இந்த வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் இவற்றின் தகவல்களை அனுபவங்களோடு சேர்த்துப் பார்த்துச் சிந்தித்து அவற்றின் உள்ளே மறைந்துள்ள உண்மைகளைக் கண்டு உணரவேண்டும் என்பதே அவற்றின் தாத்பரியம். ஐயா, நாம் உணவு உட்கொள்ளுகின்றோம், அந்த உணவில் இருந்து சத்தை மட்டும் நம் உடல் எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைக் கழிக்கின்றது அல்லவா?

மேலும் நெல் அறுவடை செய்கின்றோம். நெல்மணிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வைக்கோலைத் தள்ளுகின்றோம் அல்லவா? எத்தனை விஞ்ஞான புத்தகங்கள், எத்தனை இலக்கிய, மொழி சார்ந்த, சாராத புத்தகங்கள் படிக்கின்றோம்? அவற்றில் எது நமக்குத் தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்கின்றோம் அல்லவா? என்ன செய்தாலும், எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் நமக்குத் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளுகின்றோம். தேவை இல்லாதவற்றைத் தள்ளுகின்றோம். அன்றாட வாழ்வில் இப்படி நமக்குத் தேவையானதையே சிந்திக்கும், நாம் ஏன் புராண, இதிகாசங்களில் மட்டும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்?? அவற்றில் நமக்கு எது தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும், அது தான் சரி இல்லையா??

//God is greater than your lucubrations. Let me sincerely ask you this question:

what is the use of all these luxuriating books written by the godmen, the puraanaas, the vedas, the Bible stories, the gimmicks of mohamed etc.?

What is the outcome for an ordinary person? The question is sincere. Please go over it. In case you need a separate blog topic to answer, please try and make it as such; and put in your thoughts therein. You appear to be an intelligent person. I hope your answer will be illuminating.

I am afraid, without knowing where you are going, it is a wanton dissipation of the precious life God has gifted you!//

உங்களது இந்தக் கேள்விக்குப் பதில் எழுதினால் மிகவும் பெரியதாகிவிடும், எனினும் மகான் அரவிந்தர் அவர்களின் சில வரிகளை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தச் சுட்டி, , "Francois Gautier" என்பவரால் எழுதப் பட்ட, "REWRITING INDIAN HISTORY" என்னும் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது. ஒரு வேளை உங்கள் கேள்விக்கு இது பதிலாக அமையலாமோ என்ற எண்ணத்தில் கொடுக்கின்றேன். மூலப் புத்தகம் என்னிடம் இல்லை.

//ஸ்ரீஅரவிந்தர் சொல்வது என்னவென்றால்:
the ancient and classical literature of the Sanskrit tongue shows both in quality and in body an abundance of excellence, in their potent orginality and force and beauty, in their substance and art and structure, in grandeur and justice and charm of speech, and in the heightened width of the reach of their spirit which stands very evidently in the front rank among the world's great literatures."

"the vedas, the Upanishadas, the Ramayana, the Mahabharatha, as seen earlier, the Vedas represent "a creation of an early and intuitive and symbolic mentality." It was only because the Vedic rishis were careful to clothe their spiritual experiences in symbols, so that only the initiated would grasp them, that their meaning has escaped us, particularly after they got transtated in the last two centuries. The Veda is the WORD discovering truth and clothing in image and symbol, the mystic significance of life"

ராமாயணம் பற்றி அரவிந்தர் சொல்வது என்னவெனில்:
"For Indians, the Ramayana embodies the highest and most cherished ideals of manhood, beauty, courage, purity, gentleness. The subject is the same as in the Mahabharatha: the struggle between the forces of light and darkness. but the setting is more imaginative, supernatural and there is an intensification of the characters in both their goodness and evil. As in the Mahabharatha too, we are shown the ideal man with his virtues of courage, selflessness, virtue and spiritualised mind. ......
The puranas, and the Tantras, which contains in themselves the highest spiritual and philosophical truths, while embodying them in forms that are able to carry something of them to the popular imagination and feeling by way of legend, tale, symbols, miracles and parables."
அரவிந்தரின் பார்வையில் ராமாயணம் இப்படியும் பார்க்கப் படுகின்றது, இதுவும் ஒரு விதத்தில் சரியே!:
"Valmiki moulded the Indian mind with his depiction of Rama, and Sita, another classic of India's love couples and one that has survived through the muth of enduring worship, in the folklore of this country, along with the polular figures of Hanuman and Lakshmanan. His diction is shaped in the manner of the direct intuitive mind as earlier expressed in the Upanishads."

யாருக்குமே தங்கள் மனைவி பற்றியோ, கணவன் பற்றியோ கனவுகளோ, கற்பனைகளோ இல்லாமல் இருக்காது. இல்லையா??கற்பனை கலந்த ஒரு கதையாகவே இருக்கட்டுமே ராமாயணம். அதிலும் வால்மீகி எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்?? பூகோள அமைப்பு, வனங்களின் வளம், நாட்டு வளம், நதி வளம், குடியாட்சி முறை, சாத்திரங்களும், தர்மங்களும் கடைப்பிடிக்க வேண்டிய முறை, இன்னும் நாத்தீக வாதம் என அனைத்துமே பேசப் படுகின்றது. வேறு எங்கேயாவது, எதிலாவது இம்மாதிரியான ஒரு சுதந்திரத் தன்மையுடனும், பெரும்போக்குடனும் கூடிய கதை அமைப்பைக் காண முடியுமா??? வால்மீகியின் விபரமான வர்ணனையினால் ராமனும், சீதையும் இன்று உலகளவில் பேசப் படும் ஆதர்சத் தம்பதிகளாய் மாறி இருப்பதும் உண்மையே! எனினும் அனைத்துக்கும் மேல் ராமாயணத்தில் சொல்லப் படும் விஷயங்கள் கணவன் - மனைவி உறவு மட்டுமல்லவே! அரசன் ஆனவன் எவ்வாறு ஆட்சி, நிர்வாகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதில் இருந்து போர் முறைகள், போரில் நடக்கும் உபாயங்கள், விளைவுகள், பாதிப்புகள், சக மனிதர்களை மதிக்கும் முறை, மந்திரி, பிரதானிகளை மன்னன் நடத்த வேண்டிய முறை, மூத்தோருக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகள், குருவிற்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவருக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகள் என எத்தனையோ கற்க இருக்கும் போது, இன்னும் நான் கற்றுக் கொண்டிருக்கும்போது, என்னுடைய இந்த அற்புதமான வாழ்வை நீங்கள் "wanton dissipitation" என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் எனக்குக் கோபம் வரவில்லை. சிரிப்புத் தான் வருகின்றது. வாழ்வை அனுபவிப்பது பற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கலாம் அல்லவா?? என்னளவில் நான் மனதில் இன்னும் கற்கும் ஆவலுடனேயே இருக்கின்றேன். I am an optimistic person, so no problem . May God Bless All. That is all to say, and thank you for coming to my blog.Of course, it is God's gift, my life, I mean, and Nothing is going to be waste, including my life. Actually I do not want to reply you, but after second thought, I made up my mind.

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59

தன்னால் ராம, லட்சுமணர்கள் வீழ்த்தப் பட்டதைப் பார்த்த இந்திரஜித்திற்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் போது, எதுவும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருந்த இந்திரஜித், இப்போது தன்னை மறைத்துக் கொண்டு செயல்பட்டதின் மூலம் சகோதரர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டது குறித்து மேலும் மகிழ்ந்தான். இன்னும், இன்னும் என அம்புகளைப் பொழிந்த வண்ணம், "தேவேந்திரனால் கூட என்னை நெருங்க முடியாது. அப்படி இருக்க நீங்கள் இருவரும் என்னைக் கொல்ல எண்ணுவது நடக்கும் காரியமா?" என்று கூவினான். நாராசங்கள் என்ற பெயருடைய அந்த அம்புக் கூட்டங்களால் முதலில் ராமரின் உடல் துளைக்கப்பட அவர் மீழே வீழ்ந்தார். வில் கையில் இருந்து நழுவியது. இதக் கண்ட லட்சுமணனுக்குத் தன்னுடைய உயிரே உடலை விட்டுப் பிரிவது போல் மனம் தளர்ந்து, உடல் சோர்வுற்றது. இனி தன் உயிர் என்னவானால் என்ன என்று அவன் மனம் எண்ண அவனும் தரையில் சாய்ந்தான். இருவரையும் வானர வீரர்கள் சுற்றிக் கூடி நின்றனர். உடலில் ஒரு விரல் அளவு கூட இடைவெளி இல்லாமல் எங்கும் அம்புகள் துளைத்து, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்த இரு சகோதரர்களையும் பார்த்து வானரப் படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் கவலையுடன் யோசிக்க இந்திரஜித் மறுபடியும் கூவினான். எத்தனை நன்கு கவனித்துப் பார்த்தாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால் அவன் குரல் மட்டும் நன்கு கேட்டது அனைவருக்கும்.

"கர, தூஷணர்களை வென்றுவிட்ட பெருமையில் இருந்த இந்த இரு மனிதர்களும், தேவேந்திரனையே வென்ற என்னால் தோற்கடிக்கப் பட்டு தரையில் வீழ்த்தப் பட்டனர். இவர்கள் இருவரையும் என்னுடைய அம்புகளில் இருந்து விடுவிக்க யாராலும் முடியாது. சாத்திரங்கள் கற்றறிந்த, வேத மந்திரங்கள் அறிந்த ரிஷிகளாலோ, அல்லது தேவர்களாலோ, யாராலும் முடியாது. இவர்களை வீழ்த்தியதன் மூலம் பெரும் துன்பக் கடலில் மூழ்கி இருந்த என் தந்தை காப்பாற்றப் பட்டார். இலங்கையை அழிப்போன் என்று வந்த இவர்களை நான் வீழ்த்தியதன் மூலம் வானரக் கூட்டத்தின் பெருமைகளும், மேகங்கள் கலைவது போலக் கலைந்துவிட்டது." என்று உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு, மேன் மேலும் அம்புகளை வானரப் படை இருக்குமிடம் நோக்கி ஏவுகின்றான். அரக்கர்கள் மனம் மகிழ, வானரப் படை வீரர்களுக்குப் பெரும் காயங்கள் ஏற்படுகின்றது. ராம, லட்சுமணர்கள் இறந்துவிட்டனரோ என்ற முடிவுக்கு வந்த சுக்ரீவனை விபீஷணன் தேற்றுகின்றான். மந்திர, ஜபங்களைச் செய்து கையில் நீர் எடுத்துக் கொண்டு அந்த மந்திர நீரால் சுக்ரீவன் முகத்தைக் கழுவி விட்டு, வானரப் படையை மேன்மேலும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றான். தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம், ராமரோ, லட்சுமணனோ இறந்திருக்க மாட்டார்கள், முகத்தில் ஒளி குன்றவில்லை எனவும் ஆறுதல் சொல்கின்றான். அரக்கர்களோ தாங்கள் ஜெயித்துவிட்டதாகவே ராவணனிடம் சென்று சொல்ல, இந்திரஜித்தும் அங்கே சென்று தன் தந்தையிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான். மனம் மகிழ்ந்த ராவணன் இந்திரஜித்தைப் பாராட்டிக் கொண்டாடுகின்றான்.
உடனேயே சீதையைக் காத்து நின்ற அரக்கிகளை அழைத்து வருமாறு கட்டளை இடுகின்றான். அவர்களிடம், சீதையிடம் சென்று, ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தால் கொல்லப் பட்டனர் என்ற செய்தியைத் தெரிவிக்குமாறு கூறுகின்றான். அவளைப் புஷ்பக விமானத்தில் அமரச் செய்து அழைத்துச் சென்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த இரு இளவரசர்களையும் காட்டச் சொல்கின்றான். பின்னர் வேறு வழியில்லாத சீதை என்னை நாடி வருவாள் எனக் கோஷம் போடுகின்றான் தசகண்டன். சீதை அந்தப் படியே புஷ்பக விமானத்தில் ஏற்றப் பட்டு யுத்தகளத்துக்கு அழைத்துச் செல்லப் படுகின்றாள். வானரக் கூட்டங்கள் அழிக்கப் பட்டு, ராமரும், லட்சுமணனும் தரையில் வீழ்ந்து கிடப்பதை சீதை கண்டாள். தன்னுடைய அங்க, லட்சணங்களைக் கண்ட ஜோதிடர்களும், ஆரூடக்க் காரர்களும், தனக்குப் பட்டமகிஷியாகும், லட்சணம் இருப்பதாய்க் கூறியது பொய்த்துவிட்டதே எனவும், தான் விதவை ஆகிவிட்டோமே என ஜோதிடத்தின் மேலும், அந்த ஜோசியர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் கூறிப் புலம்புகின்றாள் சீதை. அப்போது திரிஜடை, "கலங்க வேண்டாம் சீதை, ராமரோ, லட்சுமணரோ இறக்கவில்லை, அவர்கள் முகம் ஒளி பொருந்தியே காணப் படுகின்றது. மேலும் தலைவர்கள் இறந்து விட்டதால் ஏற்படும் குழப்பம் எதுவும் வானரப் படையிடம் காணப்படவில்லை. அமைதியாக மேற்கொண்டு செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இறக்கவில்லை, நீ அமைதியாக இரு. இவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று என் மனம் சொல்கின்றது. உன் மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாய் இருப்பாயாக." என்று சொல்கின்றாள்.

அப்படியே இருப்பதாய் இரு கையும் கூப்பிக்கொண்டு சீதை அவளை வேண்ட புஷ்பகம் மீண்டும் அசோக வனத்துக்கே திரும்புகின்றது. அரை மயக்கத்தில் இருந்த ராம, லட்சுமணர்களில், சற்றே கண்விழிக்க முடிந்த ராமர், தன் அன்புக்கு உகந்த சகோதரன், தன்னோடு சேர்ந்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் காண்கின்றார். அவர் மனம் லட்சுமணனைப் பெற்றெடுத்த தாயான சுமித்திரையின் மனம் என்ன பாடுபடும் இதைக் கண்டால் என்று யோசிக்கின்றது. தனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி வந்து, தன்னைத் தேற்றிய லட்சுமணன் இப்போது விழுந்து கிடப்பதைக் கண்டதும் அவர் மனம் துடிக்கின்றது. லட்சுமணனைப் பின் தொடர்ந்து தானும் யமனுலகுக்குச் செல்லவேண்டியதே என்று மனம் நொந்து சொல்கின்றார். சுக்ரீவனுக்காவது கிஷ்கிந்தைக்கு அரசுப் பட்டம் கட்டியாயிற்று. ஆனால் விபீஷணனுக்குக்கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே?? இப்படி வீழ்ந்து கிடக்கின்றோமே என மனம் பதறுகின்றார் ராமர். அங்கே அப்போது வந்த விபீஷணனைக் கண்ட வானர வீரர்கள் இந்திரஜித்தோ எனக் கலக்கமுற, அவர்களை நிறுத்திய விபீஷணன், சுக்ரீவனிடம் படையை அணிவகுத்து நின்று எதிர்த்துப் போரிடக் கட்டளை இடுமாறு கூறுகின்றான். எனினும் தன்னாலன்றோ ராம, லட்சுமணர்கள் இவ்விதம் வீழ்ந்து கிடப்பது என எண்ணித் தவிக்கின்றான். ராவணன் ஆசை நிறைவேறிவிடுமோ எனக் கலக்கம் அடைகின்றான். இவர்களை எழுப்புவது எவ்வாறு என் அவன் சுக்ரீவனிடம் ஆலோசனை செய்கின்றான். தன் ம்ந்திர நீரினால் இருவர் கண்களையும் துடைக்கின்றான். சுக்ரீவன் தன் மாமனாராகிய சுஷேணனைப் பார்த்து, "ராம, லட்சுமணர்களை கிஷ்கிந்தை கொண்டு சேர்க்கும் படியும், தான் இருந்து ராவணனையும், அவன் குடும்பம், மகன், சகோதரர் போன்றோரையும், மற்ற அரக்கர்களையும் அழித்துவிட்டு, சீதையை மீட்டுக் கொண்டு வருவதாயும் தெரிவிக்கின்றான். சுஷேணன் சொல்கின்றான்:தேவாசுர யுத்தம் நடந்த போது அதை நானும் கண்டிருக்கின்றேன். அப்போது அசுரர்கள் தங்களை நன்கு மறைத்துக் கொண்டு போரு புரிந்த வண்ணமாக தேவர்களுக்கு மீண்டும், மீண்டும் அழிவை ஏற்படுத்தினார்கள். அப்போது தேவகுருவாகியவரும், மஹரிஷியும் ஆன பிரஹஸ்பதியானவர் சில மந்திரங்களை ஓதி, துதிகளைப் புரிந்து, சில மருந்துகளைத் தயாரித்து, அவற்றின் மூலம் தேவர்களை உயிர்ப்பித்து வந்தார். அந்த மருந்துகள் இப்போதும் பாற்கடலில் கிடைக்கின்றது. சம்பாதி, பனஸன் ஆகியோர் தலைமையில் சில வானரர்கள் சென்று அந்த மருந்துகளைக் கொண்டு வரவேண்டும். பாற்கடலில் இருந்து எழும் இரு மலைகள் ஆன, சந்திரம், துரோணம் ஆகியவற்றில், "சஞ்சீவகரணி" என்னும் அற்புத மருந்து, இறந்தவர்களைக் கூடப் பிழைக்க வைக்கும், ஆற்றல் பொருந்திய மூலிகையும், விசால்யம் என்னும் அம்புகளால் படும் காயங்களை இருந்த இடம் தெரியாமல் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகையும் கிடைக்கும். அவை கொண்டுவரப்படவேண்டும். அனுமன் நினைத்தால் அவை நம் கையில் கிடைத்துவிடும், ராம, லட்சுமணர் எழுந்து விடுவார்கள் என்று சொல்கின்றான்.

அப்போது ஆகாயத்தில் பெருத்த ஓசை ஒன்று கேட்டது. இடி, இடித்தது, மின்னல்கள் பளீரிட்டன. அண்ட, பகிரண்டமும் நடுங்கும்படியான பேரோசை கேட்டது. கடல் கொந்தளித்தது. மலைகள் ஆட்டம் கண்டன. மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதும் ஓசையில் உலகே நடுங்கியது. பூமி பிளந்துவிட்டதோ என்னும்படியான எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றது என அனைவரும் அதிசயித்துப் பார்க்கும்போது, காற்று பலமாக வீசத் தொடங்கியது. ஊழிப்பெருங்காற்றோ, புயலோ, இது என்ன இவ்வாறு காற்று? எனக் கலங்கும் வேளையில் கருடன் வானில் தோன்றினான். ஊழித் தீயே காற்றின் வேகத்தோடு பறந்து வருவது போன்ற செந்நிறத் தோற்றத்தில் வானம் மட்டுமின்றி, பூமியும் சிவந்தது.

Wednesday, June 11, 2008

கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58

ராமனுடன் சேர்ந்து சுவேல மலை மீது பல வானரர்களும் ஏறினார்கள். இலங்கை போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்து கண்ணில் பட்டது. மாலை நேரம் முடிந்து இரவில் அங்கேயே ஓய்வெடுத்த வானரப் படை மறுநாள் காலையில், திரிகூட மலையின் மீது ஆகாயத்தில் இருந்து தொங்க விடப்பட்டது போன்ற பேரழகோடு காட்சி அளித்த இலங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு உயரமான இடத்தில் ராவணன் நின்று கொண்டிருப்பதை ராமர் கவனித்தார். ராவணனின், கம்பீரத்தையும், தேஜஸையும், வீரத்தோற்றத்தையும் கண்டு ராமர் வியந்து கொண்டிருந்த நேரத்தில், சுக்ரீவனுக்கு ராவணன் பேரில் கடுங்கோபம் ஏற்படுகின்றது. உடனேயே அந்த மலைச் சிகரத்தில் இருந்து ராவணனை நோக்கித் தாவினான். "உன்னைக் கொன்று விடுவேன், விடமாட்டேன்" என்று கூவிய வண்ணம் தாவிய சுக்ரீவனின் தாக்குதலினால் ராவணனின் கிரீடம் தலையில் இருந்து கீழே விழுந்து உருண்டோடியது. ராவணன் மிகுந்த கோபத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தினான். தரை மீது சுக்ரீவனைத் தூக்கி வீசி அடித்தான். பதிலுக்கு சுக்ரீவனும் ராவணனை வீசி எறிய இருவருக்கும் பயங்கரமாக யுத்தம் நடந்தது. கடுமையான சண்டையால் கொஞ்சம் மனம் தளர்ந்த ராவணன் தன் மாயாசக்தியைப் பிரயோகிக்க முடிவு செய்தான். அதற்குள் இதை உணர்ந்த சுக்ரீவன் ஆகாயத்தில் தாவி, இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான், ராமர் சுக்ரீவனை, நீ ஒரு அரசனாக இருந்து கொண்டு இம்மாதிரியான காரியங்களைச் சொல்லாமலும், யாருடனும் கலந்து ஆலோசிக்காமலும் செய்யலாமா??? உனக்கு ஏதானும் நேர்ந்திருந்தால்???? அதன் பின்னரும் யாரைப் பற்றியாவது நான் யோசனை செய்ய முடியுமா??? ராவணன் படைகளையும், அவனையும் நாசம் செய்து விட்டு, உன் மகன் ஆன அங்கதனையும், இலங்கை மன்னனாக விபீஷணனையும், என் தம்பி பரதனையும் முறையே சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு நான் உயிரை விட்டிருப்பேன் என்று சொல்லிவிட்டு, இனியும் இம்மாதிரியான காரியங்களை யாரையும் கேட்காமல் செய்யாதே என்று கூறுகின்றார்.

பின்னர் லட்சுமணனும், விபீஷணனும், சுக்ரீவன், அனுமன், நீலன், ஜாம்பவான் ஆகியோருடன் பின் தொடர, ராமர் வானரப் படையை முன்னேறிச் செல்லக் கட்டளை பிறப்பித்துவிட்டுத் தானும் தொடர்ந்து முன்னேற ஆரம்பித்தார். ராம, லட்சுமணர்கள் ராவணனால் பாதுகாக்கப் பட்ட வடக்கு வாயிலை அடைந்தனர். மற்றவர்கள் தங்களுக்குக் குறிப்பிடப் பட்ட வாயிலை நோக்கிச் சென்று காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு இலங்கையைச் சூழ்ந்து கொண்டு, யுத்தம் தொடங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்போது மீண்டும் ஒரு முறை ஆலோசனைகள் செய்த ராமர் அங்கதனை அழைத்து, ராவணனிடம் சென்று, எச்சரிக்கை கொடுக்குமாறு சொல்லித் தூது அனுப்புகின்றார். ராவணன் செய்த பாவங்களுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு அவன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டதென்றும், சீதையை ஒப்படைத்துவிட்டு, பாதுகாப்பைக் கோரவேண்டும் என்றும், விபீஷணன் இலங்கை அரசனாய் முடிசூட்டப் படுவான் என்றும், நீ ஒத்துழைக்கவில்லை எனில் உன் உயிர் என் கையில் என்றும் சொல்லி அனுப்புகின்றார். மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவதாயும் சொல்லி அனுப்புகின்றார். அங்கதன் அவ்வாறே ராமனின் உத்தரவை ஏற்று ராவணனின் அரண்மனை அடைகின்றான்.
அங்கதன் கூறிய செய்தியைக் கேட்ட ராவணன் கோபத்துடன் அங்கதனைச் சிறைப் பிடிக்குமாறு உத்திரவிட, அங்கதனை நான்கு அரக்கர்கள் பிடிக்கின்றார்கள். தன் வலிமையை அவர்கள் உணரவேண்டி தானாகவே அவர்களிடம் சிறைப்பட்ட அங்கதன், பின்னர் நால்வரையும், குருவிகளைத் தூக்கிச் செல்வது போல் தூக்கிக் கொண்டு அரண்மனையின் உப்பரிகையை அடைந்து, அங்கிருந்து அவர்களை உதறிக் கீழேதள்ள, அவர்கள் கீழேவிழுந்தார்கள். உப்பரிகையை இடித்துத் தள்ளிவிட்டு அங்கதன் ஆகாயத்தில் தாவி, ராமர் இருக்குமிடம் போய்ச் சேர்ந்தான். ராமரின் அனைத்துப் படைகளும் முன்னேறி இலங்கையைப் பரி பூரணமாய் முற்றுகை இட்டன. நான்கு பக்கங்களிலும் கோட்டையை ஒட்டிக் கோட்டைச் சுவர்கள் போல் அடைத்துக் கொண்டு வந்து விட்ட வானரப் படையைக் கண்ட அரக்கர்கள், ராவணனிடம் ஓடிப் போய் இலங்கை முற்றுகைக்கு ஆளாகி விட்டது என்னும் தகவலைத் தெரிவிக்கின்றனர். ராவணன் வானர சேனை எவ்வாறு அழிப்பது என யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் ராமரோ எனில் தாமதம் செய்யாமல் எதிரிகளைத் தாக்குவோம் என உத்தரவு பிறப்பிக்கின்றார். கையில் கிடைத்த பாறைகள், பெரிய மரங்கள், மலைகளைப் பெயர்த்தெடுத்த கற்கள், சிறு மலைகள், குன்றுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வானரப் படை இலங்கையைத் தாக்க ஆரம்பித்தது. தாக்குதல் முழு அளவில் ஆரம்பித்தது.
வானரப் படையும், அதன் தலைவர்களும் அவரவருக்கு உரிய இடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். உள்ளே இலங்கை நகரிலும், ராவணன் படை வீரர்களை ஊக்குவித்து அனுப்பி வைக்கின்றான். சங்க முழக்கம் கேட்கின்றது. போர்ப் பேரிகை ஒலிக்கின்றது. எக்காளங்கள் ஊதப் படுகின்றன. அரக்கர்கள் ராவணனுக்கு ஜெயம் என்ற கோஷத்தோடு எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர். தேர்களிலும், யானைகள் மீதிலும், குதிரைகள் மீதிலும் அரக்கர் படைகள் வருகின்றன. இந்திரஜித் அங்கதனையும், சம்பாதி, ப்ரஜங்கனையும், அனுமான், ஜம்புமாலியையும், விபீஷணன், சத்ருக்கனன் என்பவனையும், நீலன் நிகும்பனையும், சுக்ரீவன் ப்ரக்சனையும், லட்சுமணன், விருபாஷனையும் எதிர்க்கின்றனர். எண்ணற்ற வானர வீரர்களின் உடல்கள் கீழே விழுகின்றன. அதே போல் அரக்கர்களின் உடல்களும் வெட்டித் தள்ளப் படுகின்றன. ரத்த வெள்ளத்தில் உடல்கள் மிதந்து செல்கின்றன. சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் கூட அரக்கர்கள் வலிமையுடனேயே வானரவீரர்களைத் தாக்குகின்றனர்.

தன்னைத் தாக்கிய இந்திரஜித்தின் தேரோட்டியும், தேர்க்குதிரைகளும் அங்கதனால் கொல்லப் படுகின்றனர். இந்திரஜித் களைப்புடன் போர்க்களத்தை விட்டு அகலுகின்றான். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், விபீஷணன் போன்றோர் அவனைப் போற்றினார்கள். அங்கதனால் துன்புறுத்தப் பட்ட இந்திரஜித்தோ கோபம் மிகக் கொண்டு தன்னுடைய மாயாவி யுத்தத்தில் இறங்கிவிட்டான். தன்னை மறைத்துக் கொண்டு, ராம, லட்சுமணர்களை அம்பு உருக் கொண்ட விஷப் பாம்புகளால் தாக்கினான். மனித சக்திகளை மீறிய சக்தி கொண்ட இந்திரஜித் தன்னுடைய இந்த அம்புகளால் ராமனையும், லட்சுமணனையும் கட்டிவிட்டான். சகோதரர்கள் இருவரும் மயங்கிக் கீழே விழுந்தனர். அம்பு உருக் கொண்ட பாம்புகளால் அவர்கள் உடல் துளைக்கப் பட்டது. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. வானரப் படை செய்வதறியாது கலங்கி நின்றது.
**************************************************************************************
பெரும்பாலனவர்கள் இந்த ராமாயணத்தைப் படிப்பதில்லை. சிலர் தெரிந்த கதைதானே என்றும், வேறு சிலர் பத்துப் பதினைந்துக்கு மேல் படிக்க முடியவில்லை என்றும் சொல்கின்றனர். எனினும் உத்தர ராமாயணம் வரையிலும் பூராவும் எழுதி முடிக்கவே திட்டம்!!! ஆனால் நம்மில் பெரும்பாலோர் வால்மீகியின் மூலக் கதையை முழுதும் படித்திருக்க மாட்டோம், பெரும்பாலோருக்குத் தெரிந்தது கம்பரும், மற்றச் சில சுருக்கமான ராமாயணங்களுமே/ ஆனால் இது முழுக்க, முழுக்க வால்மீகியின் மூலத்தையே எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய கம்பரை நன்கு அறிந்தவர்கள் அறிந்தது எல்லாம் ராமன் ஒரு அவதாரம் என்றே. ஏனெனில் கம்பர் ராமாயணம் பூராவுமே ராமரை ஒரு அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். அதனாலேயே வாலி வதம் பற்றிய கேள்விகளும், சீதையின் அக்னிப் ப்ரவேசம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன.வாலியைக் கண்டு ராவணன் அஞ்சினான். வாலி ராவணனை வென்றிருக்கின்றான். ராவணன் பயந்த ஒரே ஆள் வாலி மட்டுமே. அத்தகைய வீரம் பொருந்திய வாலி, சீதையை, ராவணன் தூக்கிக் கொண்டு சென்ற போது, வாலியின் நாட்டின் வழியாகவே சென்ற போதும் அதைத் தடுத்து நிறுத்தவில்லை என்பதைத் திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் தம் பதிவில் சுட்டிக் காட்டி உள்ளார். அவரின் இந்த வாதம் ஓரளவு ஏற்கக் கூடியதே! ஏனெனில், தன்னை வீழ்த்தியதும், வாலியே ராமனிடம் சொல்கின்றான்:"தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு, நன்னெறிக்கட்டுகளைத் தளர்த்திவிட்டு, நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு,மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டுவிட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே? உனக்கு என்ன வேண்டும்? உன் மனைவி சீதை தானே?என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே?" என்று ராமனைப் பார்த்துக் கேட்கின்றான். ஆகவே வாலி ராவணனைத் தடுக்காததின் காரணமாகவே ராமர் கொன்றிருக்கலாம் என்பது திருமதி ஜெயஸ்ரீயின் கூற்று. jeyasri
ஆனால் வால்மீகியோ தான் அறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையே தான் அறிந்தும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட வரையில் எழுதி இருக்கின்றார். ஆகவே, ராமர் அவ்வாறு நடந்து கொண்டதிலோ, அல்லது சீதையோ, ராமரோ கைகேயியைக் குறை கூறிப் பேசும்போதோ சற்றும் யாருடைய கோபத்தையுமோ, அல்லது, பேச்சுக்களையோ கூட்டியோ, குறைத்தோ சொல்லவில்லை.ராமரோ, அல்லது சீதையோ இப்படி எல்லாம் பேசி இருப்பார்களா என்று போன அத்தியாயத்தைப் படித்தவர்கள் நினைக்கலாம். சாதாரண மானுடப் பெண்ணாக வாழ்ந்த சீதையும் சரி, ராமரும் சரி இப்படித் தான் பேசுவார்கள், பேச முடியும், என்பதை நினவில் கொள்ள வேண்டும்.

மேலும் அரசன் ஆனவன் எவ்வாறு தர்மம், கடமை, நீதி, நேர்மை, நியாயம் பொருந்தியவனாய் இருக்க வேண்டும் என்பதிலும் கடுமை காட்டியே வருகின்றது ராமாயணம் பூராவும். ராவணன் ஒரு வீரனாக இருந்தும், தன் குடி மக்களுக்கு நன்மையே செய்து வந்தும், அவன் தர்மத்தில் இருந்து தவறியதாலேயே அவனுக்கு இந்த வகையில் மரணம் ஏற்படுகின்றது. ஆகவே ஆட்சி புரிவோருக்கு ஒழுக்கம் என்பது முக்கியத் தேவையாக இருந்து வந்திருக்கின்றது என்பது நன்கு விளங்குகின்றது. அதை ஒட்டியே தோன்றி இருக்கும், "மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள்" என்னும் கூற்று. ஒவ்வொருத்தரின் பிறப்புக்கும், இறப்புக்கும் தகுந்த காரணங்களையும் சொல்லி வருகின்றது இந்த ராமாயணக் கதை. அவரவர்கள் செய்யும் பாவத்துக்குத் தக்க தீய பலனும், செய்யும் புண்ணியங்களுக்குத் தக்க நற்பலனையும் கொடுத்தாலும் அவரவர்களுக்கு என்று விதிக்கப் பட்ட விதியை யாராக இருந்தாலும் மீற முடியாது. விதியின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் சொல்கின்றது. தமிழில் இவ்வாறு ஊழ்வினையைச் சுட்டிக் காட்டும் காப்பியம் "சிலப்பதிகாரம்".

Tuesday, June 10, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57

தன் கணவன் மறைந்துவிட்டானோ என எண்ணிய சீதையின் புலம்பலும், அழுகையும் அதிகம் ஆனது. அந்த மாயத் தலையை அத்தனை தத்ரூபமாய் வடித்திருந்தான் வித்யுத்ஜிஹ்வா. தன் சிறிய மாமியார் ஆன கைகேயியின் செயலால் அன்றோ ராமன் நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்து, தன்னையும் பறி கொடுத்துவிட்டு இப்போது இறந்தும் போக நேர்ந்தது?? ஆஹா, ஒருவழியாய் கைகேயி, உன் ஆசை நிறைவேறியதா? உன் மகனுக்குப் போட்டி இல்லாமல் போயிற்றா??? ராமர் கொல்லப் பட்டார். குலமே நாசம் அடந்துவிட்டது. இதுதான் நீ விரும்பியதா? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்??? என்று எல்லாம் புலம்பி மயங்குவதும், சில நேரம் தெளிந்து மீண்டும் புலம்புவதும், அந்தத் தலையின் அருகே அமர்ந்து அழுவதுமாய் இருந்தாள் சீதை! கணவன் முன்னால் இற்ந்து போக மனைவி உயிரோடு இருப்பது போன்ற துயர சம்பவம் என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டதே? இது எத்தகைய கொடிய துயரம்??? உங்கள் ஆயுளைப் பற்றிக் கூறிய ஜோசியர்களின் பலனெல்லாம் பொய்த்துவிட்டதோ? குலத்தைத் தவிக்கவிட்டுவிட்டு சொர்க்கம் சென்று உங்கள் தந்தையோடு சேர்ந்தீர்களோ??? என்னைப் பார்க்க மாட்டீர்களா?? என்னோடு சேர்ந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பேன் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று? லட்சுமணன் கெளசலைக்கு இந்தச் செய்தியைச் சொல்லுவானோ??? நீங்களும் இறந்து, நானும் அரக்கர் பிடியில் மாட்டிக் கொண்டிருப்பதை அறிந்த பின்னரும் கெளசலை உயிரோடு இருப்பாரா??? நிச்சயம் மாட்டார். என்னைக் காக்கும்பொருட்டு சமுத்திரத்தைக் கடந்து வந்த நீங்கள் உயிரை விட நேர்ந்தது என்னாலே அன்றி வேறு என்ன காரணம்??? என் முன் பிறவியில் நான் ஏதோ ஒரு திருமணத்தைத் தடுத்திருக்க வேண்டும், அதனாலேயே எனக்கு இம்மாதிரி ஒரு துயரம் ஏற்பட்டு விட்டது. ஏ, ராவணா, என்னையும் கொன்றுவிட்டு, என் கணவரின் உடல் மீது என் உடலைப் போட்டுவிடு, இறப்பிலாவது அவருடன் நான் ஒன்றாய் இருக்கின்றேன்." என்று சொல்லும்போது, ராவணனின் பணியாள் ஒருவன் ஓடி வந்து மந்திராலோசனை சபையை மந்திரிமார்கள் அவசரமாய்க் கூட்டி இருப்பதால், ராவணன் வரவுக்குக் காத்திருப்பதாய்ச் சொல்லுகின்றான். அவ்வளவில் ராவணன் அங்கிருந்து செல்ல, அந்த மாயத் தலையும் அவனோடு சேர்ந்து மறைந்து போகின்றது.
ராவணன் மந்திராலோசனை சபையில் நுழைந்ததுமே, யுத்த முழக்கம் செய்ய அனைவரும் ஆமோதித்தனர். அப்போது பெரும் துயரத்தில் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் சரமை என்னும் ஓர் அரக்க குலப் பெண் வந்து ஆறுதல் சொல்லுகின்றாள்.(இவள் விபீஷணன் மனைவி எனச் சில ராமாயணங்களின் கூற்று.)ராமனை யாராலும் கொல்ல முடியாது எனவும், இதுவும் ராவணனின் தந்திரங்களில் ஒன்று, எனவே பயம் வேண்டாம் எனவும் கூறிய அவள் யுத்த முழக்கம் கேட்பதைச் சுட்டிக் காட்டுகின்றாள். படைகள் யுத்தத்திற்குத் தயாராகின்றன என்றும் எடுத்துச் சொல்கின்றாள். யுத்தத்தில் ராமரே வெற்றி பெற்று அவளை மீட்டுச் செல்வார் என்றும் உறுதி அளிக்கின்றாள். யாரும் அறியாமல் ராமரிடம் சென்று சீதையைப் பற்றிக் கூறிவிட்டு, ராமரிடமிருந்து சீதைக்கும் செய்திகளை எடுத்துவரத் தயாராய் இருப்பதாயும் தெரிவிக்கின்றாள். சீதையோ, ராவணனின் திட்டம் என்ன என்று அறிந்து வந்தால் போதும் என்று சொல்லவே அவ்வாறே அவளும் ராவணன் இருக்குமிடம் சென்று அவன் ஆலோசனைகளைக் கேட்டு வந்து சொல்கின்றாள்.ராவணனின் தாயார் அவனை சீதையை ராமனிடமே ஒப்படைக்கும்படி அறிவுரை கூறியதாகவும், இன்னும் சில வயதில் மூத்தவர்களும் அவ்வாறே ஆலோசனை கூறியதாகவும் கூறுகின்றாள். ஆனால் ராவணனோ இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போருக்கு ஆயத்தம் அடைந்ததாயும் சொல்கின்றாள். ராமர் ராவணனைப் போரில் வீழ்த்துவார் எனவும், சீதையை மீட்டுச் செல்வார் எனவும் ஆறுதல் கூறுகின்றாள்.

வானரப் படைகளின் பேரொலி கேட்கின்றது. ராவணன் தரப்பில் அரக்கர்களிடம் மனவலிமை ஏனோ குன்றத் தொடங்கியது. அரசன் செய்தது குற்றம் என அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்த காரணத்தால், நம்பிக்கை அவர்களிடமிருந்து அகன்றது. ஆனால் ராவணனோ தீர்மானமாய் யுத்தம் செய்வதில் இருந்தான். அவன் பாட்டனாகிய மால்யவான் ராவணனுக்கு அவன் செய்த தவறுகளை எடுத்துக் காட்டுகின்றான். படைப்புகள் அனைத்துமே இருவகையிலேயே இயங்குவதாயும், நன்மை, தீமை என்ற அந்த இருவகையிலே அரக்கர்கள் தீமையின் வழியிலேயே சென்றுவிடுவதாயும் சொல்கின்றான். தர்மத்தின் வழியிலேயே மற்றவர்கள் செல்வதால் அவர்களுக்குத் தர்மம் ஒரு பெரும்பலமாய் இருந்து காப்பதாயும் சொல்கின்றான். தர்மத்தை வளர்த்து வந்த ரிஷி, முனிவர்களைத் துன்புறுத்திவிட்டு நாம் செய்யும் யாகமோ, தவமோ நம்மைக் காப்பாற்றாது என்பதை அறிவாயாக! ராவணா, நீ பெற்றிருக்கும் வரமோ தேவர்களிடமிருந்தும், ராட்சதர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள் போன்றோரிடமிருந்து உனக்கு மரணம் இல்லை என்பதே. ஆனால் இங்கே வந்திருக்கும் பெரும்படையோ எனில் வானரர்களையும், மனிதர்களையும் கொண்டது என்பதை மறந்து விடாதே! அபசகுனங்களும், ரத்தமழை பொழியும் மேகங்களும் இலங்கையைச் சூழ்ந்துள்ளன. அரக்கர்களில் பலருக்கும் துர் சொப்பனங்கள் வருகின்றன. தெய்வங்களுக்கு என்று படைக்கப் படும் உணவை நாய்கள் தின்கின்றன. சூரியனைப் பார்த்து மிருகங்களும், பறவைகளும் எழுப்பும் சப்தம் கர்ணகடூரமாய் உள்ளது. ராவணா, நமக்குப் பேரழிவு காத்திருக்கின்றதோ என்று அஞ்சுகின்றேன், மேலும் மனித உருவில் விஷ்ணுவே தான் ராமனாய் வந்திருக்கின்றாரோ எனத் தோன்றுகின்றது. நினைத்துப் பார்! கடலில் எத்தகைய அற்புதமான பாலம் அமைக்கப் பட்டிருக்கின்றது இந்த ராமனின் ஆணியால். ஆலோசனைகள் செய்துவிட்டு முடிவை எடுப்பாய்." என்று கூறுகின்றான்.

கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த ராவணனுக்குப் பாட்டனின் வார்த்தைகள் இன்னும் அதிகக் கோபத்தையே ஏற்படுத்தியது. பல்வேறு சாத்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த தன் பாட்டன், யாருடைய தூண்டுதலாலோ இவ்விதம் பேசி இருக்க வேண்டும் என்றும், அல்லது தன் பேரனாகிய தன் மீதுள்ள வெறுப்பினால் பேசி இருக்க வேண்டும் என்றும் நினைத்தான். அப்படியே பாட்டனிடம் சொல்லவும் சொன்னான். சீதையைத் திரும்பிக்கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதிபடச் சொல்லிவிட்டான், தசக்ரீவன். அவன் பாட்டனும் அவனுக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறிவிட்டுச் சென்றான். சபையில் போர்த் திட்டங்கள் விவாதிக்கப் பட்டன. ராவணன் பாதுகாப்புக்கான பல்வகை உபாயங்களையும் கையாண்டு அதற்கேற்ப உத்திரவுகளைப் பிறப்பித்தான். அதே போல் ராமரும் வானரப் படையும், தாங்கள் தங்கி இருந்த இடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர். விபீஷணன், தன் அமைச்சர்களைப் பறவை உரு எடுத்துக் கொண்டு இலங்கையின் காவல் பற்றித் தெரிந்து வந்து சொல்லச் சொல்ல அவர்களும் அவ்வாறே சென்று தெரிந்து வந்து சொல்கின்றார்கள். ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொருவரால் பலமாய்க் காக்கப் படுகின்றது என்றும், ராவணனின் பலத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அறிந்து கொள்கின்றனர் அனைவரும். அனைத்தையும் கேட்டுக் கொண்ட ராமர் யார், யார், எவர் எவரை, எம்முறையில் தாக்குவது என்று முடிவு செய்து கட்டளைகள் பிறப்பிக்கின்றார்.

அதன்படி நீலன், கிழக்கு வாயிலில் நிற்கும் பிரஹஸ்தனையும், தெற்கு வாயிலின் மஹாபார்ச்வனையும், மஹோதரனையும் அங்கதனும், மேற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே புகும் பொறுப்பு அனுமனிடமும், ராவணனாலேயே பாதுகாக்கப் படும் வடக்கு வாயிலை ராமரும், லட்சுமணனும் தாக்குவதாயும் முடிவு செய்யப் படுகின்றது. சுக்ரீவன், ஜாம்பவான், விபீஷணன், ஆகியோர் படையின் மத்தியிலும், ஊரின் மத்தியிலும் புகுந்து தாக்க வேண்டும். வானரர்கள் அனைவரும் தங்கள் சொந்த வானர உருவிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் நம் படை வீரர்களை நாம் தனியாக அடையாளம் காணலாம். ராமர், லட்சுமணன், விபீஷணன், அவனுடன் வந்திருக்கும் நால்வர் ஆகிய ஏழு பேர் மட்டுமே மனித உருவில் இருப்போம். என்று கட்டளை இடுகின்றார் ராமர். பின்னர் லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன் ஆகியோர் தொடர சுவேல மலை மீது ராமர் ஏறினார். இலங்கை முற்றுகைக்கு வானரப் படை ஆயத்தம் ஆனது.