எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 29, 2007

அனுபவம் புதுமை! 1இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது?
22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம் போய், கிராமத்தில் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பின் வரிசையாக ஸ்வாமிமலை, அங்கிருந்து மதுரை போகும் வழியில் அழகர் கோயில்,பழமுதிர்சோலை, அங்கே நாவல்பழம் மூலம் ஒளவைக்குப் போதித்த முருகனைப் பார்க்கணும், இந்த சிபி ஏன் இன்னும் "குமாரகாவியம்" எழுதலைன்னு கேட்கணும்! திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியைப் பார்த்து விட்டுப் பின் திருச்செந்தூர் போய் தரிசனம் முடித்துப் பின்னர் பழனி போய் தண்டாயுதபாணியைப் பார்த்துவிட்டுப் பின்னர், திரும்ப மதுரைக்கு அருகே இருக்கும் என் அப்பாவின் சொந்த ஊரான மேல்மங்கலம் போகவேண்டும் என்ற முடிவு!

சனிக்கிழமை காலையில் 11 மணி வாக்கில் கிளம்பினோம். இங்கிருந்து அம்பத்தூரைத் தாண்டி பைபாஸில் போகவே நேரம் பிடித்தது. சாலையும் மோசம், போக்குவரத்தும் மோசம். ஒரு வழியாக பைபாஸைப் பிடித்துத் திண்டிவனம் வரை கொஞ்சம் பரவாயில்லை, சாலைகள், ஏனெனில் அங்கே எல்லாம் சுங்கம் வசூலிக்கும் சாலைகள், நல்லாவே இருந்தது, பிரயாணம், கும்பகோணம் செல்லும் சாலைப் பக்கம் திரும்பும் வரை! அதுவும் தேசீய நெடுஞ்சாலையில் தான் வருகிறது 45B. ஆனால் சாலையோ மோசமோ, மோசம். ஒரே மேடு, பள்ளம், வண்டிகள் சாதாரண வேகத்தில் கூடச் செல்ல முடியவில்லை, ஒரே குலுக்கல், ஆட்டம். ஒரு 2 மணி நேரத்துக்குள் களைப்பு பிரயாணம் செய்த எங்களுக்கே வந்துவிட்டது, வண்டி ஓட்டுபவருக்கு என்ன கஷ்டமா இருந்திருக்குமோ தெரியவில்லை. ஒருவழியாக மாலையில் 6 மணி போல் கும்பகோணம் வந்து வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம், அப்படியும் இடம் இல்லைனு சொல்லிட்டுப் பின்னர் அவங்களோட கிளை லாட்ஜுக்குத் தொலைபேசி இடம் கொடுக்கச் சொல்லி விட்டார்கள். திரும்பவும் அந்த ஹைஸ்கூல் ரோடில் இருந்த லாட்ஜுக்குப் போனால் அங்கே 3-வது மாடியில் தான் அறைகள் இருந்தனவாம். ஏறுவதற்குப் படிகள் தான். கடவுளே, எப்படி ஏறி இறங்குவது? ஒண்ணுமே புரியலையே? ஒரே குழப்பம். வேறு வழியில்லாமல் அதையே எடுத்துக் கொண்டோம்.

Friday, December 28, 2007

ஒரு சின்ன விளம்பரம்!

வந்தாச்சு, வந்தாச்சு, புதிய விஷயங்களுடன், புதிய படங்களுடன் உங்கள் "எண்ணங்கள்" புதுப் பொலிவுடன், புதிய தகவல்களுடன், இன்றே பாருங்கள், உங்கள் "எண்ணங்கள்"

பெருச்சாளியின் சதி,
மழையின் சதி,
கூகிளின் சதி,
இணைய இணைப்புக் கொடுக்கும் டாட்டா இண்டிகாமின் சதி,
அனைத்தையும் முறியடித்த ஒரே நபர், உங்கள் ஒப்பற்ற "தலைவி"யின் சாகசங்களை இன்றே காணுங்கள், உங்கள் எண்ணங்களில்.

Friday, December 21, 2007

நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி!

வலை உலக மக்களே, நற்செய்தி! தமிழ்நாட்டையும், சென்னை நகரையும் கடந்த ஒரு வாரமாக மழை வாட்டி வருவது அனைவரும் அறிந்ததே! இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்தது குறித்து மேன்மை தாங்கிய தலைவி அவர்கள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். (அவங்க வீட்டு வாசலில் குளிக்கலாம், துணி துவைக்கலாம், கப்பல் விடலாம், அவ்வளவு தண்ணி! இதிலே மத்தவங்களைப் பார்த்து துக்கமாக்கும்? :P) க்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஹிஹிஹி, என்னோட மனசாட்சி, அது அடைப்புக்குறிக்குள்ளே வந்து புலம்புது, ரொம்ப நாளா அதைக் கண்டுக்கலைனு கோவம் அதுக்கு! நீங்களும் கண்டுக்காதீங்க!

ஆகவே தலைவி, தென் மாவட்டங்களுக்குப் புயல், சூறாவளி, இப்படி எது வேணாப் போட்டுக்குங்க, வேகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேர்காணல் மூலம் கண்டு அவர்கள் குறைகளைக் கேட்டு அறியப் போகின்றார். (யாருங்க அது? சொறிஞ்சுக்குங்கனு சொல்றது? வேதா(ள்)வா? ஹிஹிஹி) ரொம்பச் சிரிக்க வேண்டாம், ம.சா. வந்து வச்சுக்கறேன் உன்னை! இப்போ வர்ட்டா??????????????

எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன், ஞாபகம் வச்சுக்குங்க. அபி அப்பா, இதுக்கு தப்புத் தப்பா வந்து பின்னூட்டம் போட வேணாம், நீங்க சாட்டிலே "வ"ன"க்கம்னு சொன்னதுமே இங்கே இணையமே போயிடுச்சு! :P:P

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.

நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.

Sunday, December 16, 2007

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா!


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.

கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

பின்னூட்டம் போட்டால் கண்ணாடி உடையும்!

இரண்டு நாள் முந்தி அபி அப்பா "பொங்கள்" பத்தி எழுதி இருந்த பதிவுகளைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டுட்டு இருந்தேனா? அதிலே இருந்த தப்புக்களைப் பார்த்தால் தலை சுத்த ஆரம்பிச்சது. சரி, ஒண்ணோ, இரண்டோ இருக்கும் சுட்டிக் காட்டலாம்னு பார்த்தால், சுட்டிக் காட்டிட்டு இருப்பதைத் தவிர வேறே ஒண்ணுமே செய்ய முடியலை, எண்ண முடியலை, கடைசியில் தோல்வியை ஒத்துக்கிட்டுத் தலையில் அடிச்சுட்டு உட்கார்ந்தேன். வேறே வழியே இல்லை. எத்தனை சொன்னாலும் அவர் திருத்தி என்னமோ எழுதப் போறதில்லை. விரக்தியின் எல்லைக்கே போய் உட்கார்ந்துட்டு இருந்தபோது, திடீரெனப் பதிவுகளைப் படிக்க முடியலை, என்ன ஆச்சு எனக்கு? தலை சுத்தலில் கண் மறைக்கிறதா? அல்லது என்னோட தமிழ் ஆர்வம் அதிகமாகிக் கண்களில் இருந்து அபி அப்பாவின் தமிழைப் பார்த்துவிட்டு ஆனந்த பாஷ்பம் பொழியுதா? என்னன்னே புரியலை.

"சொத்!" எதுவோ கீழே விழுந்த சப்தம். என்னனு குனிந்து பார்த்தால், கண்ணாடி, கண்ணுக்குப் போடுவது தாங்க, கையில் வந்தது. ஃப்ரேம் லூசாகி விட்டது, டைட் பண்ணணும்னு நினைச்சுட்டே கையில் கண்ணாடியை எடுத்தால், என்ன ஆச்சரியம்? ஒரு பக்கத்து ஃப்ரேமே உடைஞ்சு போயிடுச்சு. கொஞ்ச நாள் முந்தி ஒரு புத்தகத்தில் படிச்சேன். வெளிநாட்டுக் காரர் ஒருவர் லலிதா சகஸ்ரநாமம் டேப்பை இந்தியாவில் இருந்து வாங்கிப் போயிருந்தாராம். வாங்கும்போதே இதுக்குப் "பவர்" அதிகம், தினமும் சொன்னால், அதுவும் ஒரே சிந்தையுடன் சொன்னால் அதிகமாய் சக்தி இருக்கும் என்று. அதைச் சோதனை பண்ணிப் பார்க்க வேண்டி அவர் தினமும் அந்த சஹஸ்ரநாமம் காசெட்டைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டே ஒரே சிந்தனையாக இருந்திருக்கிறார். திடீர்னு ஒரு நாள் அது வெடித்தே விட்டதாம். அது போல அபி அப்பாவின் தமிழுக்கும் கண்ணாடியை உடைக்கும் அளவுக்குச் சக்தியா என்று வியந்து போய் விட்டேன், போங்க, மூணு நாளா கண்ணாடி இல்லாமல் எதுவும் செய்ய முடியலை, நேத்துச் சாயங்காலம் தான் ஒரு மாதிரி ஃப்ரேம் சோல்டரிங் பண்ணி வந்தது. பவர் வேறே ஜாஸ்தியாகி இருக்கு. கண்ணாடியையே மாத்தணும், அதுக்குள்ளே, இது வேறே. இனி "மொக்கை இடைவேளை" முடிஞ்சு பதிவுகள் ஆரம்பம்.

Wednesday, December 12, 2007

காரணம் என்ன சொல்வேன்?

ஐயப்பனைக் காண வாருங்கள், பதிவு இன்னும் முடியலை, சில எதிர்பாராத காரணங்களினால் உடனே தொடர முடியலை, பதினெட்டாம்படிக் கருப்பைப் பற்றி எழுதப் போறேன்னு சொன்னேன், 2 நாள் தகவல் தேடினேன், அதுக்குள்ளே, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் "பொதிகை" மூலமா அற்புதமான தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையிலே தான் எழுதப் போறேன், மேலும் ஐயப்பன் கல்யாணம் பத்தியும், மதுரை செளராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவர்கள் அதை நடத்துவாங்கன்னும் நான் சொன்னதைக் கூடல் குமரன் உறுதி செய்துள்ளதோடு மேலதிகத் தகவல்களும், படங்களும் இருப்பதாய் லிங்க் கொடுத்துள்ளார். இன்னும் போய்ப் பார்க்க முடியலை, போகணும், கண்ணபிரான் கேட்ட "திருவாபரணங்கள்" பத்தியும், மதுரையம்பதியின் பதிவிலே உள்ள "சத்யகா" பத்தியும் தகவல்கள் கேட்டுட்டு இருக்கேன், கிடைச்சதும் அதையும் இணைக்கணும், ஆகவே இன்னும் அது முடியலை, வெயிட்டீஸ் ப்ளீஸ், அதுவரை, மெகா தொடருக்கு நடுவே, தொலைக்காட்சிச் சானல்களில் விளம்பர இடைவேளை மாதிரி நம்ம வலைப்பதிவில் மொக்கைப் பதிவுகள் வரும், எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்த வேண்டாமா? அதுவும் பெருவாரியான குண்டர்கள், சீச்சீ, சிஷ்யகேடிகள், சீச்சீ, என்னமோ தப்பாவே வருதே, சிஷ்யகோடிகள்னு வரணும் இல்லை? அவங்களுக்கு எல்லாம் மொக்கையே போதும்னு இருக்கும்போது, சிறிது அவங்களையும் திருப்தி செய்து மொக்கை போடவேணாமா?

நேத்துப் பூராப் பொதிகையிலே பாரதியார் பாட்டு, பாரதியார் பட்டிமன்றத் தொகுப்பு நிகழ்ச்சிகள், பாரதி பாட்டை ராஜ்குமார் பாரதி பாடிய பழைய? மறு ஒளிபரப்பு?, அப்புறம் பாரதி பாட்டுக்களில் "சக்திப்பாட்டுக்கள்" தேர்ந்தெடுத்து மெல்லிசை, பாரதி விழா என ஒரே பாரதியாகவே இருந்தது. என்றாலும் பொதிகைத் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது பாரதியை நினைவு கூர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்று பொதிகையே அதிகம் பார்க்கும் என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். ஆனால் தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று எதிலுமே வரலைனு நினைக்கிறேன். அதாவது நான் பார்க்கும்போது, மற்ற நேரங்களில் காட்டினாங்களா தெரியாது. ஆனால் நேற்று சாயந்திரம், சன்ஸ்கார் சானலில் கங்கை ஆரத்தி முடிஞ்சு, பொழுது போகாமல் சானல் மாற்றிக் கொண்டிருந்த போது, "ராஜ்" தொலைக்காட்சியில் "சுப்பிரமணிய பாரதி" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. என்ன அதிசயம் எனப் பார்க்க ஆரம்பித்தேன். நிஜமாகவே அற்புதமான ஒரு தொகுப்பு. முதல் பகுதி, அதாவது பாரதி பிறந்ததும், அவர் அம்மா இறந்து,தந்தையின் மறுதிருமணம் எல்லாம் போய்விட்டது. நான் பார்க்கும்போது 11-ம் வயதில் பாரதி எழுதிய முதல் கவிதையில் இருந்து சில வரிகள் கைஎழுத்துப் பிரதியாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தக் கவிதைக்கு அவருக்குக் கிடைத்த "பாரதி" பட்டமும், பேரும், புகழும் என்று, பின்னர் தந்தை நடத்திய ஜின்னிங் பாக்டரியை மூட வேண்டிய கட்டாயமும், அதை மூடக் காரணம் ஆங்கிலேயர் விதித்த வரிகள் எனவும், அந்த வரிகளைக் கட்ட முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மூடவேண்டிய நிர்ப்பந்தமும், அந்த பாக்டரியின் இடிந்த சின்னங்களும் எனக்காட்டினார்கள், பாரதியின் திருமணமும், பின்னர் தந்தை மரணம், திருநெல்வேலி இந்துப் பள்ளியில் படித்த பாரதி, படிப்பை நிறுத்த வேண்டி வந்ததும், மனதை நெகிழ வைத்தது. பள்ளியின் பாரதிக்கு நினைவுச் சின்னம் எழுப்பி இருப்பதையும் காட்டினார்கள்.

பின்னர் அத்தை குப்பம்மாளிடம் போனது, காசியில் படித்தது, அங்கே ஆங்கிலம், வடமொழி, என கற்றுத் தேர்ந்தது, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது எனக்காட்டினார்கள். படித்த பள்ளியையும், அத்தை குப்பம்மாளின் இல்லமும் இடம் பெற்ற இந்தக் காட்சிக்குப் பின்னர் காசிக்கு வந்த எட்டயபுரம் மன்னர் அழைப்பின் பேரில் திரும்ப எட்டயபுரம் போய் அரசவைக் கவிஞனாக இருக்க முயன்றதும், 6 மாதங்கள் கூட நீடிக்க முடியாமல் போனதும், பின்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மதுரையில் தமிழாசிரியராக வந்தது, அங்கேயும் 3 மாதங்களுக்குள், ஜி.சுப்பிரமணிய ஐயரால் "சுதேசமித்திரன்"பத்திரிகைக்கு அழைக்கப் பட்டுச் சென்னை வந்தது, தேசீய எழுச்சியின் தாக்கத்தால் எழுந்த பாடல்கள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், திலகரிடம் கொண்ட பக்தி, வ.உ.சி. நண்பரானது, அவரும் சுப்பிரமணிய சிவாவும், ஆங்கிலேயரின் தந்திரத்தால் கைது செய்யப்ப்பட்டது, அவர்களை மீட்கப் போராடினது, சாட்சி சொன்னது என்றும் காட்டினார்கள். விஞ்ச் துரையுடன் வ.உ.சி. நிகழ்த்திய பேச்சுப் பற்றிய பாடலும் இடம் பெற்றது.

இந்தச் சமயம் தான் "இந்தியா" பத்திரிக்கைக்கும் அழைப்பு வருகிறது பாரதிக்கு. அதை நடத்திய திருமலாச்சாரியார், பாரதியை ஆசிரியர் என்று போட்டால் ஏற்படக் கூடிய நிகழ்வுகளை நினைத்து, திரு ஸ்ரீநிவாசன் என்பவரை ஆசிரியராக வெளிப்படையாகப் போட்டு அதை நடத்துகிறார். இந்தப் பத்திரிகையில் பாரதி முதல்முதலாகக் கேலிச்சித்திரங்கள், என்னும் கார்ட்டூன்களை வைத்து அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வதை ஆரம்பித்து வைக்கிறார். பத்திரிகையின் சூடு தாங்கவில்லை ஆங்கில அரசுக்கு. பாரதி கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரதிநிதியாகப் போகிறார். பின்னர் 1907-ல் நடந்த சூரத் காங்கிரஸில், மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகள் எனச் சொல்லப் பட்ட திலகர் குழுவுக்கும் நடந்த வாக்குவாதம் கலவரத்தில் முடிகிறது. விபின் சந்திரபால் கைது செய்யப் படுகிறார். சற்று முன்பின்னாக இருக்கோன்னு நினைக்கிறேன். குறிச்சு வச்சுக்கலை, ஓரளவு நினைவில் இருந்து எழுதறேன். இந்தியா பத்திரிகை "யங் இந்தியா" என பாரத இளைஞர்களுக்காகவும் ஒன்று ஆரம்பிக்க அதன் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப் பட பாரதியும் கைது செய்யப் படும் சூழ்நிலை தெரிகிறது. விபின்சந்திரபால், திலகர் இவர்களின் கோஷங்களை எழுதிய பத்திரிகைகளையோ, அல்லது நோட்டிஸ்களையோ திருவல்லிக்கேணித் தெருக்களில் பாரதி விநியோகித்ததாயும், அன்று மாலை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவ்ர் பேச்சு ஆவேசம் நிரம்பியும் இருந்ததாயும் இந்தியா பத்திரிகையில் வர பாரதி தேடப் படுகின்றார். ஆகவே பத்திரிகை நடத்திவரும் திருமலாச்சாரியாரே பாரதியைப் புதுச்சேரிக்கு அனுப்பி அங்கே இருந்த தம் நண்பர் ஒருவர் உதவியுடன் பத்திரிகையை அங்கிருந்தே வெளியிட ஏற்பாடு செய்கின்றார். இந்த இடத்தில் தான் ஒரு ஆச்சரியமான விஷயம் பகிரப் பட்டது. அயர்லாந்தும், இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெறப் போராடிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது அமெரிக்காவில் இருந்து வெளிவந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை "ஜர்னல் அமெரிக்கா" என்றோ என்னமோ, நினைவில் இல்லை, ஆனால் அமெரிக்கா என முடிகிறது. இந்தப் பத்திரிகை, அயர்லாந்தின் விடுதலையை முற்றிலும் ஆதரித்ததோடு அல்லாமல், அங்கே இருந்து அமெரிக்கா சென்றவர்களையும் ஆதரித்து வந்திருக்கின்றது. அந்தப் பத்திரிகையை அன்றைய நாட்களில், அதாவது 1906, 07, 08-ம் ஆண்டுகளில் சென்னை ராஜதானியில் மொத்தம் 13 பேர் மட்டுமே சந்தா கட்டி வரவழைத்திருக்கின்றார்கள், அவர்களில் பாரதியும் ஒருவர், இதுதான் ஆங்கிலேயர் அவரிடம் வெறுப்பும், கோபமும் கொள்ள அடிப்படைக் காரணம் என்று இந்தப் பதிவில் காட்டப் படுகிறது. மிச்சம் இன்னிக்குச் சாயங்காலம்னு சொல்லிட்டாங்க, அதுக்குள்ளே பொதிகையில் "வேளுக்குடி"யும் ஆரம்பிச்சுட்டார்.

இன்று காலை நம்ம வல்லி சிம்ஹன் ஊரைக் காட்டினாங்க பொதிகையிலே. அருமையா இருக்கு ஊர், மரங்களும், செடி, கொடிகளும் ஒரே பச்சைப் பசேல் என்று. நாங்க என்னமோ திருநெல்வேலி போனப்போ எப்படி இந்த ஊரை விட்டோம்னு தெரியலை, அந்த வட்டப்பாறையும், அதைத் தொடர்ந்த ராமானுஜர் கதையும், அவர் திருவனந்தபுரம் சென்றதும், அங்கிருந்த பெருமாளைக் கொண்டு வர நினைத்ததும் பெருமானுக்கு வர இஷ்டம் இல்லாததும், ராமானுஜருக்குத் தூக்கம் வரவைத்து, அவரைத் தூக்கத்திலேயே அங்கிருந்து திருக்குறுங்குடி அனுப்பி விடுகின்றார் எம்பெருமான். ஆனால் ராமானுஜரின் அணுக்கத் தொண்டர், அவருக்குச் சகலத்திலும் உதவுவர் வந்து சேரவில்லை. ராமானுஜரோ, அது புரியாமல் தம் தொண்டரைக் கூப்பிட, அங்கே கோயிலில் குடி கொண்டிருக்கும் திருக்குறுங்குடி நம்பியான எம்பெருமானே தொண்டராக வந்து ராமானுஜருக்குத் தொண்டு செய்ததும், அதை ஒட்டிய புடைப்புச் சிற்பங்களுமாக அற்புதமாய் இருந்தது. ஒரு தனிப்பதிவே போடலாம். இதிலே எழுத ஆரம்பிச்சுட்டேன், அதான் சுருக்கமாய்ப் போச்சு, வல்லி இது பத்தி விரிவாய் ஒரு பதிவு போடுவாங்கனு எதிர்பார்க்கலாம்.

Tuesday, December 11, 2007

126 வது பிறந்த நாள்


அநேகமா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் இன்னிக்கு ஏன் வரச் சொன்னேன் என்று. இருக்கும்வரை யாருமே சீந்தாமல் இருந்த பாரதியார், இறந்த பின்னர் "தேசீயக் கவி" ஆனார். அவர் பாடல்களைப் பாடத் தடை விதித்திருந்தது ஆங்கில அரசு. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் அவர் பாடல், அல்லது கட்டுரை தான் உதாரணம் காட்டப் படுகிறது. காலத்தை வென்ற அந்த "அமரகவி"க்கு ஒரு சின்ன அஞ்சலி!


டிசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள். அவர் இருக்கும்போது யாரும் அவரையோ, அவர் கவி
உள்ளத்தையோ கொண்டாடவில்லை. வறுமையில் தான் தவிக்க விட்டார்கள். கிட்டத்
தட்ட பத்து வருஷங்களுக்கு மேல் பிரஞ்சு நாட்டுப் பகுதியான புதுச்சேரியில் வாழ்க்கை
நடத்திவிட்டுப் பின்னர், மனைவியும், குழந்தைகளும் கடையம் சென்ற பின்னர், தனியாகப் புதுச்சேரி வாசம் சலித்துப் போய் அவரும் இந்தியப்பகுதியான கடலூருக்கு வந்த போது அவரை ஆங்கில அரசு கைது செய்து ரிமாண்டில் வைக்கிறது. உடனே கடையம் போயாகவேண்டும். ஆனால் அவரை நிர்ப்பந்திக்கும் அரசு ஒரு பக்கம், மறுபக்கம் குடும்பச் சூழல் எனத் தவிக்கின்றார். முடிவில் ஆங்கில அரசு கடையத்தை விட்டு வரக் கூடாது என்று சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு வெளியே வந்து கடையம் செல்கின்றார். பாரதியின் உணர்ச்சி செறிந்த கவிதைகளுக்கு ஆங்கில அரசு அவ்வளவு கவலைப்பட்டதோடு அல்லாமல், கிரிமினல் குற்றவாளி போலவும் நடத்தியது. பாரதியின் "இந்தியா" பத்திரிகையையே தடை செய்தவர்கள் அல்லவா!

கடையம் சென்ற பாரதி, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் எட்டயபுரம், திருவனந்தபுரம், கானாடுகாத்தான், காரைக்குடி போன்ற ஊர்களில் உதவி தேடுகின்றார். எட்டயபுரம்
அரசருக்குச் சீட்டுக்கவிகள் அனுப்புகின்றார். நோபல் பரிசுக்காகத் தன் கவிதைகளை
அனுப்பவும் விருப்பப்படுகின்றார். வறுமை காரணமாக எதுவுமே நடக்கவில்லை. பாரதி இந்த
மாதிரிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த சமயம் தான் மதுரையில் டவுன்ஹாலில் நோபல்
பரிசு பெற்ற தாகூருக்குப் பாராட்டு விழாவும், வரவேற்பும் நடைபெற்றது. 1913-ல் நோபல்
பரிசு வாங்கிய தாகூருக்கு கிட்டத் தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பாராட்டு விழா எடுத்த தமிழர்களில் யாருமே பாரதி சோற்றுக்குக் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூரவில்லை. தன்னுடைய 11-ம் வயதில் பாரதிக்குக் கிடைத்த பட்டம் "பாரதி" என்பது. அதன் பின்னர் உயிர் உள்ளவரை எந்தப் பட்டமும் யாரும் பாரதிக்கு அளிக்கவில்லை.


1919 மார்ச்சுக்குப் பின்னர் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பிடிகளைத்
தளர்த்திக் கொள்கிறது ஆங்கில அரசு. அதன் பேரில் ஊரை விட்டுக் கிளம்பி சென்னை வருகின்றார். இந்தச் சமயம் தான் காந்திஜியின் தென்னாட்டு விஜயம் நடைபெற்றதால் ராஜாஜியின் வீட்டில் காந்தியுடன் சந்திப்பு நடைபெறுகிறது. என்றாலும் வாழ வழி எதுவும் கிடைக்காததால் மறுபடி கடையம் செல்கின்றார். பல முயற்சிகளுக்குப் பின்னர் 1920
டிசம்பரில் தான் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலை கிடைத்துச் சென்னை வருகிறார். என்றாலும் அவர் அதன் பின்னர் 7,8 மாதங்கள் தான் உயிர் வாழ்ந்தார். செப்டம்பரில் 12-ம் தேதி தன்னுடைய 39-ம் வயது நடக்கையிலேயே உயிர் துறக்கிறார். இந்த வயதுக்குள்ளேயே அவர் கண்ட கனவுகள், எழுத்து வடிவம் பெற்று விட்டிருந்தாலும் பாரதியை ஒரு கவி என்றே பின்னர் பல வருஷங்களுக்குப் பின்னர் தான் ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பது
துயரமான விஷயம். பாரதி யுகம் என்பது பாரதியோடு முடியவில்லை. இன்னும் தொடரும், ஏனெனில் பாரதியின் கனவுகள் எதுவும் நனவாகவில்லை. கீழே உள்ள கவிதை பாரதி வாழ்வு என்ற கவிதைத் தொகுப்பில் உள்ளதின் ஒரு பகுதி. எப்போது எழுதினார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சீனி.விஸ்வநாதனின் புத்தகங்களில் இருக்கலாம். எனக்கு அது இன்னும் எட்டாக்கனி தான். விலையும் சரி, நூலகத்திலும் சரி கிடைப்பதில்லை!

""மற்றையக் கல்லுரு மாறிடப் பின்னு
மானிடன் தான் என மனத்திடை அறி போழ்து
எத்தனை இன்பமுறு எந்நிலை நிற்பன்?
அத்தகைய நிலையினை அளியனேன் எய்தினன்
வெம்போர் விழையும் வீரனிங்கொருவன்

சிறையிடை நெடுநாட் சிறுமை பெற்றிருந்த பின்
வெளியுறப் பெற்றவ் வேளையே தனக்கோர்
அறப்போர் கிடைப்பின் அவன் எது படுவன்?
அஃதியான் பட்டனன், அணியியற்குயிலே,
நின்முக நகையும் நின் விழி யாழ்மையும்

நின்னுதல் தெளிவும் நின் சொல்லினிமையும்
நின்பர் சத்தே நிகழ்ந்திடு புளகமும்
ஈதெலாம் பின்னரு மெண்ணிடைத் தோன்றப்
பின்னுமோர் முறையான் பெருமையோய் நின்னைச்
சரணென அடைந்தேன், தமியெனைக் காத்தி!"

சாலை ஜெயராமனின் பகிர்வுகள் -2 ரசிகனுக்காக

ரசிகன் தங்கள் ஆழமான பார்வைக்கு முதலில் என் பாராட்டுக்கள். தங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க
எனக்குத் தெரிந்தவரை முயற்சி செய்கிறேன். குற்றமிருப்பின் மன்னிக்கவும்.

முதலில் பரிபாஷைகள் பற்றி.........

பரி பாஷைகள் என்பது ஒரு கருத்தை மறைமுகமாகத் தெரிவிப்பது. அதுவும் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைக கொண்டே சங்கேத முறையில் பேசிக் கொள்வது அல்லது அறிவிப்பது. இது தமிழ் மொழியில் மட்டும்தான் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தில் அதிகமாக
கையாளப்பட்டுள்ளது. 'அகத்தியர் குழம்பு' போன்ற நுால் இதற்கு சான்றாகும். மற்றைய மொழிகளில்
இவ்வாறு பரிபாஷைகள் வழக்கில் இருக்கிறதா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுவோம். ஒரு
மொழியை சிறப்பித்துக் கூற வரும்போது பிற மொழிகளை குறைத்துக கூறுவது நாகரீகமாகாது. என் நோக்கம் அதுவுமல்ல. ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கு ஏற்றவாறு தன் தன் வளமையைக் கொண்டுள்ளது.

ஆனால் மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டெனில் அது உயிரியலையும்,
வாழ்வியலையும் ஒருங்கே பெற்று உயிர் மொழியாக இருப்பதுதான்.

தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் மறை பொருளாகிய மெய்ப் பொருள் என்னும் மெய் அருத்தம் ஒன்று உண்டு. இதையே வள்ளுவர் பிரான் 'மெய்ப் பொருள் காண்பதறிவு' எனக் கூறுகிறார்.

இலக்கண நுாலான தொல்காப்பியம் சொல்லின் இலக்கணமாக 'தமிழ்ச் சொற்களில், ஒவ்வொரு சொல்லும் 'ஆறு வீதி'
'பதினெட்டு சந்து' என்று சொல்லப் பெறுகிற லட்சணத்தைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. அதாவது எந்தஒரு சொல்லையும் பொருள் கொள்ளும் போது இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ளலாம். ஆனால் அந்தச் சொல்லுக்கு மெய்யருத்தம் காணப் புறப்பட்டால் அது தன் முகத்தைக் காட்டாது. இந்த 'யுனிக் கோடு' அமைப்பு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் கையாளப்பட்டது தமிழுக்கு ஒரு சிறப்பு. எனவே நம் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் புழக்கத்தில் கொள்ளும் அர்த்தத்தை தவிர அந்த சொல்லுக்குரிய மெய்யான பொருள் மறைவாக உள்ளது என்பது செய்தியாகும்.

உதாரணமாக 'படி' என்ற ஒரு பதத்திற்கு பொருள் கூறும் போது படித்தல் என்று வினைச் சொல்லாகவும், பெயர்ச் சொல்லாக வரும்போது அளக்கும் உபகரணமான படி, வாயிற் படி, அடுக்கு என்ற பொருள் பட வரும். இவ்வாறாக பயன் பாட்டுச் சொல்லாக வரும்போது ஆறு வீதி வழியாக அனைவர் பார்வைக்கும் பட நிற்கும்.

மெய்யருத்தம் காணும் முகத்தான் படியைத் தேடினால் 18 சந்து களில் தன்னை மறைத்துக் கொண்டு சத்திய
வழி நடப்பவர்களுக்கு மட்டும் தன் முகத்தைக் காட்டும்.

இதை மேலும் விவரிக்குமிடத்து, ஒரு பெயர்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். ' முயல் ' என்ற ஒரு
சொல்லானது வெளித் தோற்ற வழியாக பொதுவாகச் சொல்லுமிடத்து,ஒரு பிராணியைக் குறித்து வரும்.
இதையே சித்தர்கள் , ஞானிகள் தங்கள் இறை அனுபவங்களைக் கூறுமிடத்து, சாமானியர்களும், துன்
மார்க்கர்களும் தங்கள் நெறி வழிகளை துஷ்பிரயோகம் செய்யாமலிருக்கும் பொருட்டு மெய்ப் பொருளை
மறைத்துக் கூறுவர். முயற்சியுடையோர் ஒரு மெய்யான ஆசான் மூலம் அறிந்து கொள்ளட்டும் என விட்டுவிடுவர்,

முயல் என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால், முயலுதல் என்ற ஒரு செயலுக்கும், அந்த முயலுதல் என்ற
காரியப்படும் போதுமறைந்து நிற்கும் முயலின் அருங் குணங்களைக் கைக் கொண்டால் முயலுதல் வெற்றியைத் தரும். முயலின் குணங்களாவது துாய்மைக்கு உதாரணமாகவும், சுத்தத்திற்கு எடுத்துக் காட்டாகவும் முயல் என்ற பிராணியின். பிறவி அமைப்பு. இதைக் கூர்ந்து நோக்குவோர் மட்டும் அறிந்து
கொள்வர்.

அதிகாலை Dawn என்று சொல்லப் பெறும் பிரம்ம முகூர்த்த காலத்தில் மட்டும் முயலானது நீர் அருந்தும்
அருங்குணம் கொண்டது. அது தரையில் உள்ள னீரை அருந்துவதில்லை. காலை வேளையில் வயல் வெளிகளில் நிறைந்து காணப்படும் புற்களின் மேல் பரவி நிற்கும் துாய்மையான பனி நீரை அருந்தும் குணமுடையது முயல். இந்த குணம் சத்வ குணமானதால் இதை முயற்சி செய்தல் நலம். இதை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துாய்மையையும் சத்தியத்தையும் கைக் கொண்டு
நடைமுறையில் முறையான பயிற்சியில் ஒரு ஆசானின் துணையோடு முயல்வோமேயானால் அதுவே
முக்திநிலை. இங்கும் முக்தி னிலை என்பது ஒரு பரிபாஷையே. அதை விவரிக்க தனி பிளாக்கில் எழுத
உள்ளேன். வெறும் சத்வ குணம், ரஜோ குணம், தமச குணம் என்று கூறுவதைக் காட்டிலும், அந்தக்
குணங்களை நாம் தமிழ்வழியில் தேடிக் கண்டடையலாம்.

அடுத்து ஒரு பரி பாஷை பார்ப்போம். குணங்களைப் பற்றிப் பேசும் போது புறங்கூறுதல் என்ற ஒரு
தீமையான குணத்திற்கு அர்த்தம் கொள்ளும் போது, சாமானியர்கள் பார்வையில், ஒருவரைப் பற்றி அவர்
இல்லாத இடத்து அவரைப் பற்றி தவறான கருத்துக்களை மிகச் சாதாரணமாக உபயோகிப்பது என்பது பொருள்.

ஆனால் இதையே ஞானிகள் பார்வையில் வேறாக உள்ளது. வடலுார் வள்ளல் பிரான் திரு ராமலிங்க அடிகள் இதைக் கூறுமிடத்து, 'அகத்தைப் பற்றிப் கூறாத எல்லாமும், எதுவும் புறங்கூறுதலே ஆகும்' என்பார்.
புறம் என்றால் வெளியே / அகம் என்றால் உள்ளே. இயன்றவரை புறத்தினைப் பற்றி சிந்திக்காமல் அகத்துள் உறைந்துள்ள ஈசனை வெளியே தேடாமல் உள்ளேயே சிந்தித்திருப்போமேயானல், தியானம் என்ற தவனிலையை அடையலாம்.

இதையே 'சிவாய நம வென சிந்தித்திருப்போருக்கு' என சைவ ஆகமங்கள் கூறுகிறது.

இதையே வள்ளுவ பிரான் எவ்வாறு கையாண்டுள்ளார்கள் எனக் காண்போம்.

மறைமொழி மாந்தர் தம் பெருமை உலகே அவர்தம் நிறை மொழி காட்டிவிடும்

தக்கார் தகவிலார் என்பார் அவர்தம்
எச்சத்தால் காணப் பெறும்

அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்,

இதில் நிறைமொழி, எச்சம், அடக்கம், ஆரிருள் போன்றவை பரிபாஷைகளாக உள்ளன,

மேலும் இந்தக் குறள்களை (கொரல்களை) நன்கு கூர்ந்து நோக்கின் மெய்யர்த்தம் வேறொன்றாக இருக்கிறது. அது சாமானியர்களுக்கு சாதாரணப் பொருளையும், பரிபாஷை கண்ட நிறை மொழி மாந்தர்க்கு மெய்ப் பொருளான ஒரு மெய்யையும் கொண்டுள்ளது என அறியலாம்.

எனவே கடவுள் என்பது புறத்தில் அதாவது வெளியில் இல்லை. சமஸ்கிருதம், யூதர்க்ளைப் போல்
அல்லாமல், நீங்கள் கூறியது போல் தமிழ் மட்டுமே சொர்க்கத்திற்கு டிக்கட் போடும் வல்லமையைக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் 'ஆங்கு+இலம்=ஆங்கிலம்' ஆங்கு (அங்கே) எந்த மொழியாலும் சொர்க்கத்திற்கு வழிகாட்ட முடியாது. ஏனென்றால் சொர்க்கம் என்பது வான வெளியினில் அல்ல. அது நம் அகத்தே உள்ள ஒரு நன்னிலமாகும். எரேபிய மொழியிலிருந்து பைபிளை தமிழாக்கம் செய்யப்பட்டபோது தமிழின் சிறப்பால் புனித பைபிளானது ஒரு மெய்ஞானப் பெட்டகமாக மிளிர்கிறது.

உதாரணமாக பிராமண குலத்து மக்களிடையே புழங்கப்படும் பூணுல் என்ற சொல்லை முப்புரி நுால் என்று
பைபிளில் கையாளப்பட்டுள்ளது மிக ஆச்சிரியத்தைத்தரும். இதை நுால் என்றும் புத்தகம் என்றும் பல
கிருத்துவ அன்பர்கள் கூறக் கேட்டேன். மெய்யான பொருள் மெய்நிலை அடைந்தோருக்கே கிட்டும். பைபிள்
பிரசங்கி (4 12) அதிகாரத்தில் முப்புரி நுால் பற்றி வருகிறது. இதுதான் தமிழின் சிறப்பு,

தமிழின் மற்றொறு சிறப்பையும், இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு செய்தியும் இங்கு தர விரும்புகிறேன்.
நம்முடைய மூச்சுக் காற்றோடு அதாவது உயிரோடு மிகக் கவனமாக இணைக்கப் பட்ட மொழி நமது தமிழ்.
எவ்வாறெனப் பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக் காற்றானது 21600 முறை என வேலை மெனக்கெட்டு கவனமாக எண்ணப்பட்டது நமது மூதாதையர்களால். அக்ஷ்ரக் கல்வி என்று சொல்லப்படும் நமது தமிழ் மொழியின் உயிர், மெய் எழுத்துக்கள் 216 உடன் 100 சுவாசங்களை ஒரு அட்சரத்திற்கு கொண்டு 21600 சுவாசத்தையும் மொழியோடு இணைத்துள்ளனர். சுவாசப் பயிற்சியெனும் உயர்நிலை யோக நெறி கைவசப்பட்டால் மூச்சோடாத பெரு நிலை தியானத்தைக் கைவசப்படுத்தலாம்.

மூச்சை இழுத்து வெளியே விடும் சுவாசம் பிறந்தவுடன் தொடர்கிறது. 8 அங்குலக் காற்றை உள்ளே இழுத்து

12 அங்குல அசுத்த காற்றை வெளியில் விடுகிறோம். இயல்பாக இது நடைபெறுகிறது. இந்த இயக்கம் நின்று
விட்டால் இறப்புதான். 12 அங்குல காற்று ஒவ்வொரு சுவாசத்திலும் வெளியேற்றப்படுவதால் நரை, திரை,
மூப்பு என்னும் நிலைகளில் சின்னாபின்னப்பட்டு பின் இந்த உடல் வீழ்ந்து விடுகிறது. சராசரியாக 100
வயதிற்குட்படுத்தப்பட்ட நம் வாழ்வு தற் காலங்களில் 50க் குள் முடிந்து விடுவதைப் பார்க்கிறோம்.

இயல்பாக விடும் மூச்சுக் காற்றே நம்மை இறப்புக்கு கொண்டு செல்கிறது. இதில் கோபப் பட்டால் 12
அங்குலம், 36 ஆகவும், காமத்தில் போகிக்கும் போது 68 ஆகவும், உறக்கத்தில் ஏறக் குறைய 108 அங்குலம் குறட்டை ரூபத்தில் வெளியேறி சாவின் எல்லை சென்று திரும்புகிறது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை 'உறங்குவது போல் சாக்காடு' எனக் கூறுகிறார்.

ஆனால் முயற்சி செய்தால் இந்த 8 அங்குல சுவாசத்தை 4 அங்குலமாக மாற்றி அதையே பின் மூக்கினுள்
மட்டும்சுவாசிக்கும் யோக நிலையை அடைய மனிதனால் மட்டுமே முடியும். இந்த சுவாசம் தான
வெற்றியைத் தரும் விசுவாசம் நம்பிக்கை என்ற பொருளாக மறைந்து உள்ளது. இன்றைய வாழ்க்கைச்
சூழலில் நாம் மிகச் சாதாரணமாக பொருளாதாயத் தேட்டலினால் சுவாசத்தை இழந்து மிகச சிறிய வயதில் பொலிவிழந்து டென்ஷன் டென்ஷன் என நம்மை நாமே இழந்து விடுகிறோம். சைவத் தமிழ் நுால்கள் இந்த ஒப்பற்ற சுவாசம் பழகும் யோக நெறியைப் போதிக்கிறது.

அதைப் போல் 'கண்+நாக்கு = கணக்கு' என்பதில் கணிதம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. கண் நாக்கு
இரண்டினாலும் கவனமான அணுகுமுறைக் கைகொண்டால் மிகச் சிறந்த யோக நெறி வசமாகும். தமிழில் மட்டும்தான் இப்படிப் காரணப் பெயர்கள் அதிகம் உள்ளது,

ஆவல் - அவா அறிவு - ஞானம்

போன்wறசொற்களுக்கு மிக நீண்ட விளக்கம் உள்ளது. போகப் போக சிறிது சிறிதாகப் பார்ப்போம். இவை அனைத்துத் தகவலும் ஆன்மீகத்தோடு சம்மந்தப்பட்டிருந்தாலும் தனியாக சாதி மதம் மொழி என்ற பேதமற்று சத்திய மாக கடைப்பிடித்தால் மட்டும் போதும் வையத்துள் வாழ்வாங்கு இனிமையாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல

விரும்பியே இத்தகவல்களைத் தந்துள்ளேன்.

// பொதுவான ஒரு
இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன.//
பக்குவமடையும் வரை இறை கன்செப்ட் மனிதனுக்கு ரொம்ப அவசியம் .அதனால
எழுதப்பட்டவை (இறக்கப்பட்டவையல்ல ) .
ஆனா அதுலயும் நெறய பேதங்கள் காலத்துக்கேற்ப்ப.. இந்து மதம் வர்ணங்கள் சாதிகள்.,ஒரே கடவுள்ன்னு

சொல்லிக்கொள்கின்ற கிருஸ்துவத்தில் கத்தோலிக்,ப்ரொடஸ்ட்ன்னு ஆயிரம் வகைகள் அவர்களுக்குள்ளேயே

சண்டைகள்.இஸ்லாமில் சுன்னி,குர்தீஷ் ந்னு பல பிரிவு அவர்களுக்குள்ளே போர்..//

எழுதுவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டுமல்லவா. தனிமனிதன் பெயர், புகழுக்காக எழுதுவதற்கும், சான்றோர்கள் பிறர் வாழ எழுதி இறக்கியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 'இறக்கப்பட்டபவை'
என்று ஏன் சொன்னேன் என்றால், இரக்கத்தினால்தான், பெரியோர்கள் வருங்கால சந்ததியினர் பயன்படும் வகையில் எங்கோ இறக்கி வைத்துள்ளனர். அதனால் தான் அச்சுகள், கணிணிகள் இல்லாத காலத்தில் எழுதப்பட்டவை இன்றளவும் நமக்கு கிடைத்து வருகிறது.

சல் முகம்மது நபி பிரானவர்கள் வஹி என்னும் சப்த தொனியால் புனித குரான் இயற்றி இறக்கினார்கள்.

அதை தமிழில் தர்ஜமா என்று தமிழ் உரையில் இஸ்லாம் மார்க்கத்தின் வேத மந்திரமான பிஸ்மில்லா ஹிர்
ரஹ்மான் ஹிர் ரஹீம் என்ற புனித மந்திரத்தின் 24 அட்சரங்களும் ஹிந்து தர்ம்த்தின் மகாமந்திரமான
காயத்ரி மந்ரத்திற்கும் 24 அட்சரங்கள் என்பது வியப்பான செய்தியில்லையா. மனிதன் தன்னை அறியாதவரையில் மதங்களால் மாறுபடுவான் . தன்னை அறிந்தால் எல்லா மதமும் எம்மதமே என்பது புரிய வரும். வேதங்களை இயக்கிய அல்லது எழுதிய செம்மல்கள் ஒரே பொருளைத்தான் பேசியுள்ளார்கள்.

புரியாததால்தான் பேதங்கள். எனவே எல்லா மார்க்கமும் ஒன்றே என்பதை அகத்துள்தான் தேட முடியும்,

பிரிவினைகளை விடுங்கள், அகத்துள் கூடுங்கள், பிறரைப் பார்க்காதீர்கள். பேதங்களும் ஒற்றுமைக்காக ஏற்பட்ட ஒன்றே என்று தர்க்க ரீதியாக சிந்தியுங்கள். இறைவனை மறுத்து பின் இறையோடு ஒன்றுங்கள்.

ஏனெனில் நீங்களே கடவுள். கடவுள் தனியாக எங்கோ ஆகாயத்தில் இல்லை,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்,
உடம்பினுள் உத்தமனைக்காண்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

போன்ற உயிருக்கான பொன் மொழிகள் தமிழைத்தவிர எந்த இலக்கியத்திலும் இல்லை. தமிழ் ஒன்றுதான் இலக்காகிய முக்தி வீடை இயம்பும் மொழி. நமது இலக்கு பொருள் தேடுவது அல்ல. அருளைத் தேடுவதே, அதற்கான உபகாரமே பரோபகாரம். காக்கை குருவி போன்ற பறவையினங்களும், யானை போன்ற பெருவயிறு படைத்த மிருகங்களும் உணவுக்காக யாருடைய உதவியையும் நாடவில்லை. தொண்டு, பணி, உதவி போன்ற
செயல்களெல்லாம் அகங்காரத்திற்கு வழிவகுக்குமே யல்லாது நிஜ உதவியாகாது. ஞானத்திற்கு செய்யும்
உதவியே பேருதவி. அதுவே பயனுக்கு வருவது. கர்வத்தை அழிப்பது. மற்ற உதவியெல்லாம் போலியே.

அனைத்துயிரையும் நம் உயிராகப் பாவிக்கும் போது, தனிப்பட்ட முறையில் உதவி செய்வேண்டியது அவசியம் இல்லை. அதற்காக இரக்கமற்ற பாவியராய் கொடுமை செய்ய வேண்டுமென்பது பொருளல்ல.

எனவே பரிபாஷைகள் அனைத்தும், முறையாக குருவழி அறிந்து கொள்ள வேண்டி முன் வந்த இறையிலார்கள் தங்கள் இறை அனுபவங்களை முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதில் தமிழ் பெரும் பங்கு
வகிக்கிறது என்ற செய்தியோடு தற்சமயம் முடித்துக் கொள்கிறேன்,

தங்களுக்கு மேலும் ஆர்வம் இருக்குமாயின் கலந்துரையாட விருப்பமாயுள்ளேன்.

11 December, 2007

ரசிகனுக்கு ஜெயராமன் கொடுத்த பின்னூட்டத்தை இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன். நான் இன்னும் படிக்கவில்லை. படித்ததும் பின்னூட்டம் வரும்!

Monday, December 10, 2007

ரொம்பவே சின்ன மொக்கை!

மொக்கைப் பதிவுன்னா தான் வந்து எல்லாரும் ஆதரவு கொடுக்கிறதுனு வச்சிருக்கீங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இருந்தாலும் நன்னி, நன்னி, நன்னி! இதிலே நாம என்ன செய்ய முடியும்?

"எல்லா மொக்கையும், மொக்கை அல்ல, சான்றோர்க்கு
எண்ணங்கள் பதிவின் மொக்கையே மொக்கை"
னு புதுக் குறளே பிறந்துடுச்சு. தவிரவும்

"பதிவிட மேட்டர் கிடைக்காத போழ்தில் சிறிது
மொக்கைக்கும் ஈயப் படும்"

அப்படின்னும் ஒரு குறள் பிறந்துடுச்சு. எல்லாம் நம்ம வேதா(ள்) கூடச் சேர்ந்த தோஷம் தான். அவங்க தான் கவிதை எழுதணுமா? நாமும் எழுதலாமேன்னு யோசிச்சேன். அந்த விளைவு தான். நல்லா இருக்கா? நல்லா இருந்தே ஆகணும்! "தலைவி" எழுதி இருக்கும்போது நல்லா இல்லாமல் எப்படி இருக்க முடியும்? பார்க்கிற படங்களில் உள்ள லாஜிக்கை நினைச்சாலே தலை சுத்துது! அப்புறமா படிக்கிற புத்தகங்கள், ஆன்மீகம்னு எழுதறதுக்கு என்னமோ மேட்டர் இருக்கு. ஆனால் கொஞ்ச நாளா அதிகமா வர முடியலை. இன்னும் கொஞ்ச நாள் இப்படித் தான் இருக்கும். நேரம் கிடைக்கும்போது வருவேன். எப்போ வருவேன், எப்படி வருவேன்னு சொல்ல முடியாது, வந்தே தீருவேன், என் வழீஈஈஈஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈஈ! நாளைக்கு ஒரு முக்கியமான பதிவு இருக்கு, எல்லாரும் வந்துடுங்க!

அப்புறமாக் காலையிலே "பொதிகை"த் தொலைக்காட்சியிலே "வயலும் வாழ்வும்" பார்க்கிறப்போ முடியற நேரத்திலே ஒருத்தர் பாடினார் பாருங்க, ஆஹா, அற்புதம்! அந்தக் கால (அதாவது அம்பி பிறந்தப்போ உள்ள காலம்) தியாகராஜ பாகவதர் ஸ்டைலில் ஒரு பாட்டு, "கிருஷ்ணா, முகுந்தா, முராரே!" பாட்டின் ராகத்திலேயே, கரும்பைப் பத்தி ஒரு பாட்டு எடுத்து விட்டார் பாருங்க, "ஒண்ணா, ரெண்டா, மூணா?"னு! அப்படி ஒரு குரல் வளம்! ரொம்பவே அருமையான குரல்! ஏன் இன்னும் யார் கண்ணிலும் படலைனு தெரியலை. வழக்கம்போல் பொதிகை அவரோட பேரைப் போடாததோடு, பாட்டுப் பாதியிலேயே அடுத்த நிகழ்ச்சிக்கும் (நேரம் 6-30 ஆயிடுச்சுன்னு) போயிடுச்சு! முழுசாக் கேட்க முடியலை. எப்போவோ இம்மாதிரியான குரல்களில் பாட்டுக் கேட்க முடியுது!

Friday, December 07, 2007

சாலை ஜெயராமனின் பகிர்வுகள்

கல்வியில் அரிச்சுவடிப் பாடம் எவ்வாறோ, அதைப் போலவே இறை பக்தி என்பது மிகவும் அவசியம். குழந்தைப் பருவத்தில், பேரறிவின் விளிம்பு கொண்ட இறைத் தத்துவத்தை, இரை உணர்வோடு, இறை உணர்வையும் எளிமையாகப் பெறுவதற்காக பெரியோர்கள் செய்து வைத்த வழியே வழிபாட்டு முறைகளாகும்.பள்ளிக்கல்வியில் தகுதி நிலையை வைத்து, அறிவினை சோதித்து, தேர்வு முறைகள் நடத்தி பள்ளிக் கல்வி என்ற நிலை மாறி, கல்லூரிப் பட்டம் முதலியவை படிப்படியாக வைத்ததுபோல், இறை நிலையிலும் மிக உயர்ந்த நிலையான முக்தி நிலை என்பதை நம் தேகம் நல்ல முறையில்
இருக்கும் போதே பல நிலைகளில் படிப்படியாக அறிந்து கொள்ள வேண்டும். வெறும் வழிபாடு மட்டும் இறைநிலையை அறிய உதவாது.

நம் இந்திய மத தர்மங்கள் இறைஉணர்வை அடைவதற்கான வழிமுறைகள் கோடானு கோடி வழிகளை வைத்திருக்கிறது. அதிலும் தமிழ் வழி வந்த செம்மல்கள்
தங்கள் பங்களிப்பை மிக அதிகமாகவே தந்திருக்கிறார்கள். குறிப்பாகத் திருக்குறள் தந்த திருவள்ளுவர் போன்ற சித்தர்கள், முக்தர்கள் பல வழிகளை
அறிவித்துச் சென்றிருக்கிறார்கள். இதைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

வெறும் வழிபாட்டு நெறிகள் சடங்கு சம்பிரதாயத்திற்கு மட்டுமே வித்தாக இருக்கும். இந்த உண்மையை அறியாததாலேயே உலகில் பல்வேறு மதங்கள் பேதப்பட்டு, அறிவின் நிலை மாறி இறைவுணர்வை கொச்சைப் படுத்தி முடிவில் நாட்டுக்கு நாடு, தெருவுக்குத் தெரு மதபேதத்தினால் மனிதனின் இயல்பு வாழ்க்கை நிலைமாறி முடிவில் மதத்தின் பெயரால், அறியாமையும், படுகொலைகளும், மனித வாழ்வைத் தடம் மாறச் செய்து விட்டன.
பொதுவாக அனைத்து மதங்களும் ஒரே செய்தியை பலவாறாகக் கூறிவருவதை தற்போது காண்போம்.குறிப்பாக இறைவனின் வாச ஸ்தலத்தை எவ்வாறு பல மதங்களும் ஒரே கருத்தாய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1) 'ஈசன் இருப்பிடம் இருதயம்' என்பது அப்பர், சுந்தரர் போன்ற சைவ சமயக்குரவர்களுடைய வேத ஆகமங்களின் கருத்து

2) 'ஹிருதயகமலவாசா' என்பது வைணவப் ஆழ்வாராதிப் பெரியோர்கள் கருத்து

3) 'கல்பு' என்ற இருதயத்தில் அல்லா ஒளியாய் உள்ளான் என இஸ்லாம் வேதமான புனித குரான் கூறுகிறது.

4) 'புனித தூய இருதயம்' என கிருத்துவ வேத ஆகமம் புனித விவிலிய வேதம் (பைபிள்) அறிவிக்கிறது.

5) இந்துமத புனித பகவத் கீதையில் உன் பிடரியின் வழி இருதயத்தில் உள்ளேன் என்னையே நினை என்னையே வந்தடைவாய். உன் ஹிருதயத்தின் நடுநாயகமாய் இருந்தேன் என் விஸ்வ ரூப தரிசனத்தின் மகிமையை உன் இருதய சிம்மாசனத்தில் வைத்து வழிபடு என
போர்க்களத்தில் உபதேசித்த மொழியில் இருந்தும், இறைவன் மனிதனின் சுத்த இருதயத்தில் அன்றி வேறு எங்கும் வெளியாவதில்லை என மிகத் தெளிவாக அறியலாம்,

மேலும் மனித வாழ்க்கையில் இறப்புக்குப் பின், சைவம், திருக்கையிலாய பதவி என்னும் கயிலாய லோகம் என்றும், வைணவம், வைகுண்ட லோகம் என்றும், இஸ்லாம், மெகராஜ் என்ற அல்லாவின் ராஜ்யத்திற்கு உன்னை ஆயத்தப்படுத்து எனவும், கிருத்துவம், பரலோக ராஜ்யம் உங்களிடையே மிக சமீபமாக இருக்கிறது எனவும் இறைவன் வாழும் மற்றொரு உலகத்திற்குப் பலவாறான பெயர்களில் சொல்லப்பட்டாலும் கருத்து பொதுவான ஒரு
இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன. உபதேசம் என்பது வெறும் வாய்மொழிமட்டும் அல்ல. உப + தேசம் அதாவது 'உப' வேறொரு `தேசம்' உலகம். என்பது போன்ற கருத்தினையும் உள்ளடக்கி வைத்துள்ளது.

தமிழறிவு எவனொருவனுக்கு இல்லையோ அவனுக்கு முக்திநிலை இல்லை. ஏனெனில் இம்மொழியில் மட்டுமே இறைநிலை என்பதை மனிதன் அடைவதற்கு பல பரிபாஷைகளை பெரியோர்கள் விட்டு வைத்து இருக்கின்றனர். ஆன்மீக நெறிவழியில் இதுவரை கோயில், குளம், வழிபாடு போன்றவை தாண்டி - மிக எளிய வழியான கடவுள் தத்துவத்தை / கட + உள் என்பதாக இக் 'கட' மாகிய 'தேகத்திற்கு' 'உள்` கடவுள் உள்ளான் என்பது போன்ற நான் அறிந்து வைத்துள்ள ஆன்ம தத்துவங்களை தங்களைப் போன்றோருடன்
பகிர்ந்து கொள்ளுதலில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பரோபகாரம் என்பது பர வாழ்வாகிய சொர்க்க வாழ்வுக்குச் செய்யும் உபகாரமே ஆகும்.

இகஉபகாரமாகிய தொண்டு, உதவி போன்றவைகளால் ஒருபோதும் மனித வாழ்வில் நிறைவைப் பெற்றுத்தர முடியாது.கல்வி, வாழ்வியல், பொருள் ஆதாரம், தமிழ் கூறும் நல்லுலகம், அறிவு, அறியாமை, ஞானம், வள்ளுவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஏற்படுத்தப் பட்ட ஆன்ம காரியம் எவ்வாறு உலகியல் ஆகிய அழிபொருள் தேடலில் மாற்றுக் கருத்துக்களாக உருவகப்படுத்தப் பட்டது போன்ற சிந்தனைகளைத் தாங்கள் விரும்பினால் மீண்டும் பகிர்ந்து கொள்வோம் என கூறி நிறைவு செய்கிறேன்.

பிளாக்கில் எழுதாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் மன நிறைவைத் தருகிறது. பெருமைக்கு எழுதுவது என்பது கூடாது. நல்ல செய்தியைத் தரவேண்டும். இணைய தளம் அதன் பயன்பாடு மிகச் சிறப்பாக வைத்துள்ளது. இது போன்று நன் முறையில் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மற்ற மதுரை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விழைகிறேன். கடிதம் எழுதப் புறப்பட்டால் பக்கம் பக்கமாக சிந்தனை விரிகிறது. பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு இல்லாததால் அனைத்தும் அடைபட்டுக்கிடக்கிறது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல் எண்ண அடிப்படையிலேயே நமது தமிழ் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மொழியாக உள்ளது

இவை திரு சாலை ஜெயராமன் எனக்கு அனுப்பிய மெயிலில் வந்த செய்தி! அவர் விருப்பத்தின் பேரில் பகிர்ந்து கொள்கிறேன். அவரால் அவரோட வலைப்பக்கத்தில் வெளியிட முடியவில்லை.

Wednesday, December 05, 2007

சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை"

கைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே "ஆன்மீகமா" இருக்குனு சொல்லறார். :P, இதிலே நாகை சிவா தான் ரொம்பவே கடமை உணர்ச்சியோட ஆன்மீகம் ஆனாலும் சரி, மொக்கை ஆனாலும் சரி, தவறாமல் வந்து ஒரு வரிப் பின்னூட்டம் போட்டுடறார். அம்பி, மொக்கைக்குத் தான் தவறாமல் பின்னூட்டம் போடுவார்னாலும், நடுநடுவில் இந்த மாதிரி ஆன்மீகப் பதிவுகளும் ஏதோ புரிஞ்ச மாதிரி எழுதிட்டு, தேவையில்லாமல் ஒரு கேள்வியும் கேட்டுட்டு, எல்லாமும் படிச்சேனாக்கும்னு சொல்லிட்டுப் போயிடுவார். அப்புறம் வரவே மாட்டார். கார்த்திக் முத்துராஜன் சுத்தம், இந்த வம்பே வேணாம்னு ஒதுங்கிட்டார். வேதா, தினமும் பதிவு போட்டால் என்னால் படிக்க முடியாதுனு சொல்லிட்டு, ஒண்ணொண்ணாப் படிச்சு, மெதுவாப் பின்னூட்டம் கொடுப்பா. திராச. சார் வரதே இல்லை. மதுரையம்பதிக்கு "உள்ளேன் அம்மா" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போதுமே. மணிப்பயல் ஊருக்குப் போற குஷி! ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன். :D கோபிநாத் அப்போஅப்போ வரார். அபி அப்பா ஆளே காணோம். போர்க்கொடிக்கு ரங்குவோட போர்க்கொடி தூக்கவே நேரம் இல்லையாம். :P வல்லி சிம்ஹனுக்கு வீட்டில் விருந்தாளி, இருந்தாலும் அவங்க ரெகுலர் விசிட்டர் இல்லையே! முடிஞ்சப்போ தான் வராங்க. மத்தவங்களும் முடிஞ்சப்போ தான் வராங்க. இலவசம் 100வது பதிவு கொண்டாடறதிலே ரொம்ப பிசி. சரி, யாருமே இல்லைனு நினைச்சப்போத் தான், வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. நேற்று வந்தது. பேசியது யார் தெரியுமா? "தம்பி" கணேசன் தான்.

நேத்து தம்பி கணேசனோட பேசிட்டு இருந்தேன். இந்தப் பதிவே அதுக்குத் தான். கணேசனுக்கு நன்றி சொல்லத் தான். கணேசனுக்குத் தனியா ப்ளாக் இல்லைங்கறதாலேயும், நான் என்னோட வலைப்பக்கத்திலே அனானியை அனுமதிக்கிறதில்லைங்கறதாலேயும், அவரால் என்னோட பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்க முடியலை. அதான் தொலைபேசிச் சொன்னார். என்னோட பதிவுகளைப் படிச்சேன்னு சொன்னார். தம்பி கணேசன் யாருன்னு யோசிக்கிறவங்களுக்கு, அவர் ஒண்ணும் புதுசு இல்லை! "அம்பி"யோட கோஸ்ட் ரைட்டர். அம்பி எழுதறது எல்லாம் இவர் எழுதிக் கொடுக்கிறது தான். அதையும் நேத்து என் கிட்டே பேச்சோட பேச்சாச் சொன்னார். இப்போ கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார். சரியாப் போய்ப் பார்த்தால் இன்னிக்கு வந்திருக்கு கணேசன் எழுதின விஷயம். யார் இந்த கணேசன்கிறவங்களுக்கு, கணேசன், அம்பியோட சொந்தத் தம்பி. கண்ணபிரான் கே.ஆர்.எஸ்., மதுரையம்பதி இவங்களோட பதிவிலே "தம்பி"ங்கற பேரிலேயே பின்னூட்டம் போடுவார். அம்பிக்குக் கவிதை, மற்றும் ஆன்மீகத் தகவல்கள் கொடுத்து எழுதித் தரது இவர் தான், இவரே தான். வேறே யாருமில்லை! என்ன அம்பி இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி இருக்கு???????????


அப்புறம் என்னோட "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" பதிவுக்காக இன்னும் பின்னூட்டங்கள் வந்துட்டு இருக்குச் சென்னைக் காதலர்கள் கிட்டே இருந்து. நான் என்னமோ சென்னையை ரொம்பவே மட்டமாச் சொல்றதாய் அவங்க எண்ணம்.இன்னிக்கு ஒரு பின்னூட்டத்திலே, 25 வருஷமா இருக்கேன், இந்த ஊரிலே, எந்தத் தெருவில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்கு, சொல்லுங்க, பார்ப்போம்னு இன்னிக்கு ஒருத்தர் கேள்வி. என்னோட புகாரே அது தானே? தெரு எங்கே இருக்கு? ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது. வண்டியை எடுத்துட்டுப் போனால் பின்னால் உட்காரக் கூட முடியாது. தண்ணீர் வாரி அடிக்கும். தண்ணீர் இருக்கும் இடங்களில் கீழே இறங்கி வண்டியைத் தள்ளிட்டே போகணும். தெருவாய் இருந்தால் பரவாயில்லை. இல்லைனா மழை பெய்து குறைந்த பட்சம் ஒரு நாளிலாவது தண்ணீர் எல்லாம் வடிஞ்சாலாவது பரவாயில்லை. எதுவும் இல்லை. ஆகஸ்ட் மாத மழைத் தண்ணீரே இன்னும் வடியலை எங்க தெருவிலே, இதிலே கொசு உற்பத்தி வேறே. அங்கங்க பிரசாரம் பண்ணினால் போதுமா, தண்ணீரைத் தேங்க விடாதீங்கனு. தண்ணீரை முனிசிபாலிட்டி இறைக்க வேணாமா? அவங்க கடமை இல்லையா இது? ரோடு போட்டதாய் 25 வருஷமாக் கணக்குக் காட்டி இருக்காங்க எங்க முனிசிபாலிட்டியிலே! சொத்துவரி மட்டும் வாங்கறாங்க. பாதாளச் சாக்கடைக்கு முன் பணம் கட்டி இருக்கோம் பத்து வருஷம் ஆகப் போகுது. இன்னும் பாதாளச் சாக்கடைக்குக் குழாய் போடவே ஆரம்பிக்கலை. மற்ற இடங்களில் வேலை செய்து விட்டுக் கமிஷன் வாங்குவாங்க! இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது? இன்னிக்கு வந்த பின்னூட்டத்தாலே இதை எழுதும்படியா ஆச்சு. ஏற்கெனவே அரசாங்கத்துக்கு நிறையவே எழுதிப் போட்டிருக்கோம்!

ஐயப்பனைக் காண வாருங்கள் -7


இப்போ சிவா கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தமும், சிலைப் பிரதிஷ்டையும்.

உலோபம் என்றால் பொதுவாக யாருக்கும் எதுவும் கொடுக்காத பேராசைக் காரன் என்ற பொருளில் தான் இங்கே வரும்.

அசூயை என்பதும் இங்கே பொறாமை என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ளணும்.

சத்வகுணம்: மிகவும் உயர்ந்த ஒரு குணம். இந்த சத்வ குணம் நிரம்ப உள்ளவர்களைத் தான் நாம் "ரொம்ப நல்லவங்க" என்ற அடை மொழியுடன் அழைக்கிறோம்.

ரஜோகுணம் என்பது தைரியத்தைக் குறிப்பிட்டாலும், கொஞ்சம் சுறுசுறுப்பையும் குறிக்குமோன்னு தோணுது.

தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தேவதைகளையும் குறிக்கும் எனவும் பார்த்தோம். இது தவிர, சபரி மலை தவிர ஐயப்பன் இன்னும் பதினெட்டு இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் சொல்கின்றனர். அவை எல்லாமே கேரளத்தில் தான் உள்ளது.

பொன்னம்பலமேடு
கெளதென் மலை
நாகமலை
சுந்தரமலை
சிற்றம்பல மலை
கல்கி மலை
மாதங்க மலை
மயிலாடும்மேடு
ஸ்ரீபாத மலை
தேவர்மலை
நீலக்கல் மலை
தாலப்பாறமலை
நீலிமலை
கரிமலை
புதுச்சேரிமலை
காளகட்டி மலை
இஞ்சிப்பாறை மலை
சபரிமலை
ஆகிய பதினெட்டு இடங்கள் ஆகும்.

சபரிமலையில் விஸ்வகர்மாவின் உதவியுடன் கோயில் கட்டிவிட்டு, விக்ரஹப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமெனத் தவித்த மன்னனுக்கு இரவு கனவில் ஐயன் தன்னுடைய யோக கோலத்தைக் காட்டி அருளினார். மெய்சிலிர்த்த மன்னன் கண்விழித்தபோது அவர் எதிரில் பரசுராமர் நின்றிருந்தார். மன்னனிடம், "மன்னா, உன் கனவில் கண்ட வடிவைப் போலவே விக்ரஹம் செய்து, இங்கே சபரிமலையில் பிரதிஷ்டை செய்து விடு. சாஸ்தா என் வேண்டுகோளின்படி இந்த மலைநாட்டில் பதினெட்டு இடங்களில் கோவில் கொள்ளுவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும் சமயம், நானும், அகத்தியரும் பங்கு கொள்வோம்!" எனத் தெரிவித்து மறைந்தார்.

அதன்படியே வடிவமைக்கப் பட்ட விக்ரஹத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும்போது பரசுராமர், அகத்தியர், மற்ற முனிவர்கள் அனைவரும் மன்னனுக்கு உதவினார்கள். தை மாதம் முதல் நாள் தேய்பிறை பஞ்சமிதிதியில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பூஜை முறைகள் ஒழுங்கு செய்யப் பட்டது. தெய்வமே தனக்கு மகனாய் வந்ததை நினைத்து, நினைத்து, அந்தத் தெய்வக் குழந்தையின் எளிமையையும். எவரும் அணுகும் வண்ணம் இருந்த தன்மையையும் நினைத்து, நினைத்து வியந்தார் மன்னர். மீண்டும் பந்தளம் திரும்பிய மன்னன், தான் பெற்ற மகன் ஆன "ராஜராஜனு"க்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.ராஜராஜனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. என்றாலும் பெறாத மகன் ஆன "மணிகண்டனின்" மகத்துவத்திலேயே மன்னன் மூழ்கி, அனைவரிடமும் சாஸ்தாவின் மகிமையை எடுத்துக் கூறினார். பட்டாபிஷேஹம் செய்து பார்க்க முடியாத மகனுக்கு, ஆண்டு தோறும் சங்கராந்தி அன்று தன்னால் அளிக்கப் பட்ட "திரு ஆபரணங்களை"ப் பூட்டி அழகு பார்க்க நினைத்து, வித விதமாய் ஆபரணங்கள் செய்து, சபரிமலை ஐயப்பனுக்குக் கொடுத்தார். பின்னர் ஐயன் நினைவிலேயே தவம் இருந்து ஐயன் திருவடியை அடைந்தார். என்றாலும் மன்னன் ஆரம்பித்து வைத்த வழக்கப் படியே இன்றும், சங்கராந்தி அன்று பந்தள அரண்மனையில் இருந்து "திரு ஆபரணங்கள்" வந்து ஐயனுக்குச் சார்த்தப் படுகிறது. தன் கோயிலில் தன் மூல விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த சங்கராந்தி அன்று ஒவ்வொரு வருஷமும் தான், எதிரே உள்ள காந்த மலையில் ஜோதி வடிவாய்த் தோன்றுவதாயும் மன்னனுக்கு ஐயன் வாக்களித்தார். அந்தப் படி ஒவ்வொரு சங்கராந்தி அன்றும் மாலையில் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சன்னதிக்கு எதிரே உள்ள காந்தமலையில் ஐயனின் ஜோதி உருவம் காட்சி அளித்து வருகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட மகிஷியை ஐயன், தான் இந்தப் பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்திருந்தாலும், ஒரு பிரம்மச்சாரியாகவே வாழப் போவதாயும், மற்றொரு பிறவியில் மகிஷியை மணந்து கொள்ளுவதாயும் கூறினார். அதுவும் எப்படி? "ஒவ்வொரு வருஷமும் ஐயனைக் காண வரும் பக்தர்களில் எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ அந்த வருஷம் திருமணம் நடக்கும்" எனக் கூறி இருக்கிறார். புதிதாய் ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களைக் "கன்னி ஐயப்பன்" என அழைப்பது உண்டு. ஒவ்வொரு வருஷமும் புதிய, புதிய பக்தர்கள் சென்று வருவதால் மஹிஷியின் தவம் இன்னும் முற்றுப் பெறவில்லை. அவள் சன்னிதியில் இருந்து வெளியே வந்து, இந்த வருஷமும் கன்னி ஐயப்பன் மாரா? எனப் பார்த்துவிட்டுப் பின்னர் கோபத்துடன் கதவைச் சாத்திக் கொள்வதாய் ஐதீகம். அந்தப் படிக்கு அவள் சன்னதி சாத்தப் படுகிறது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. அடுத்து மதுரை அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பணசாமி பற்றிப் பார்ப்போம்!

Monday, December 03, 2007

"பொதிகை"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்பு நிகழ்ச்சி!

சற்று முன்னர் "பொதிகை"த் தொலைக்காட்சி, திரு எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இசைக்கச்சேரியை ஒளிபரப்புச் செய்தது. இரு கைகளும் இல்லாத அவர் பாடியது மற்ற சங்கீத வித்வான்களுக்குச் சற்றும் குறைவானது அல்ல. அதுவும் "திருச்செந்தூரில் சிவகுமாரன்" பாட்டு மனத்தை மிகவே உருக்கியது. பக்கவாத்தியமாக எம்.ஏ. கிருஷ்ணசாமி, வயலின், உமையாள்புரம் மாலி, மிருதங்கம், டி.எஸ்.கார்த்திக், கடம். இவர்களும் பிரபலம் ஆனவர்களே. மிகவும் அனுபவித்து, வாய்ப்பாடகருடன் ஒத்துழைத்து வாசித்தனர். பாராட்டப் படவேண்டிய ஒன்று. பொதிகையின் ஒளிபரப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் இன்று "ஊனமுற்றோர் தினம்" என்பதால் மட்டுமே இன்று மட்டும் அவரைக் கூப்பிட்டுக் கெளரவித்துப் பாடச் செய்து மற்ற தினங்களில் கூப்பிடாமல் இருப்பது முறையல்ல. பெரிய சங்கீத சபாக்களும் இவரைக் கூப்பிட்டுப் பாடச் சந்தர்ப்பம் கொடுத்துக் கெளரவிக்க வேண்டும். அவரின் தன்னம்பிக்கையும், பாடும் முறையும், அனுபவித்துப் பாடியதும் வியக்க வைத்த ஒன்று. மற்றத் தொலைக்காட்சிகள் சந்தர்ப்பம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. பொதிகை தொடர்ந்து அவரை ஆதரிக்கவேண்டும் என்பதோடு சென்னையில் உள்ள பிரபல சபாக்களும் இவரை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்கவில்லை என்றால் நம் மன ஊனத்தைக் காட்டியவர்கள் ஆவோம். அனைத்து ஊனமுற்றவர்களையும், அவர்களிடம் இருக்கும் தனித்திறமையை ஊக்குவிப்பதின் மூலம் அவர்களை இந்தச் சமூகத்தில் அவர்களும் சாதாரண, சராசரி மனிதர்களைப் போல் வாழ முடியும் என்று அவர்களை நிரூபிக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை!

ஊனமுற்றோர் அனைவருக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திப்போம்!

Sunday, December 02, 2007

அனுராதாவுக்கு ஒரு பிரார்த்தனை

ஐயப்பன் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடறவங்க யாருக்கும் பதில் எழுத முடியலை. தவறாய் நினைக்க வேண்டாம். இணையம் கிடைப்பது ஒரு 2 மணி நேரம். அறிவிக்கப் படாத மின் தடை போய், இப்போ அறிவிப்போட மின் தடை இருக்கு. தவிர, அனுராதாவின் பதிவைப் படித்து மிகவும் மனதுக்குக் கஷ்டமாய் இருக்கிறது. நேற்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன். தூக்கமே வரவில்லை. திரும்பத் திரும்ப அவங்க பதிவுகளில் எழுதி இருப்பதே கண் முன்னால் வந்து கொண்டே இருந்தது. இறைவன் ஏன் அவங்களுக்கு இப்படித் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்? அப்படியும் அவங்களோட மனோதைரியம் என்னை வியக்க வைக்கிறது. விடாமல் மற்றவங்களுக்கு நல்லது செய்யணும் என்ற ஒரே நோக்கத்தோடு தன்னுடைய கஷ்டம் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அவங்களுக்காகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை. இப்போ மதுரையில் மீனாட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றார்கள். நண்பர் சீனாவும், அவர் மனைவியும் போய்ப் பார்த்து விட்டு வந்தாங்களாம்.

அவங்க எழுதி இருக்கும் ஒரு விஷயம் தான் மனதை இன்னும் குடைகிறது. புற்று நோய் என்பதை வெளியில் சொன்னால் அக்கம்பக்கத்தவர் யாரும் பேசக் கூட மாட்டார்கள் என்று சொல்கிறார். இந்தக் காலத்தில் கூடவா இப்படி என ஆச்சரியமாய் இருக்கிறது. கூடவே என் அம்மாவின் நினைவும் வருது. என் அம்மாவும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு, அதை அவங்களே கண்டறிந்து உடனேயே மருத்துவரிடம் சென்று ஒரு மார்பகம் அகற்றப் பட்டு 5 வருஷங்கள் இருந்தார்கள். எல்லா வேலையும் செய்தார்கள், நாங்கள் யாரும், எங்கள் உறவு, சுற்றத்தார் மட்டுமில்லாமல் அக்கம்பக்கம் கூட என் அம்மாவிடம் தனிப்பட்ட அன்பே காட்டினார்கள். அவங்களை யாருமே வெறுக்கவில்லை. எல்லாருமே பேசினார்கள். எங்கள் வீட்டில் நடக்கும் பெரிய விசேஷங்களுக்குக் கூட ஆபரேஷனுக்குப் பின்னரும் அம்மா தனியாகச் சமையல் செய்து போடுவார்கள். எல்லாருமே சாப்பிட்டிருக்கின்றனர். கோவில், கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கும் தனியாகவே போய் வந்திருக்கிறார்கள். கடவுள் அருளால் அவங்களுக்கு இந்தக் கொடுமை நடக்கவில்லை. அனைவரும் வரவேற்று அன்பாகவே நடத்தினார்கள்.

இப்போது பெண் விடுதலை, விழிப்புணர்ச்சி, பெண்ணைப் பெண்ணே வெறுக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் வேதனையில் துடிக்கும் பெண்ணை ஒதுக்குவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இது என்ன தொற்று வியாதியா? அப்படி ஒண்ணும் இல்லை! அதுவும் சில ஆஸ்பத்திரிகளில் நர்ஸ்களும், உதவியாளருகளுமே புற்று நோயாளிகளைக் கண்டபடி பேசுவார்கள் என வேறு சொல்கின்றார். ஏற்கெனவே உடல் வேதனையில் இருக்கிறவங்களுக்கு, மனம் வேறே வேதனைப் படணுமா? யாருக்குமே இந்தக் கஷ்டம் வர வேண்டாம். மகத்தான பெண்மணியான அனுராதாவுக்குப் பிரார்த்திப்போம். அவங்களுக்கு மூளையிலும் புற்று நோய் பரவி இருப்பதாய் அவங்க கணவர் எழுதி இருக்கார். எத்தனை துன்பம்? இத்தனையிலும் அவங்க தன்னோட நிலையின் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்காங்க. அவங்க துன்பம் தீர வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.

Saturday, December 01, 2007

பதினெட்டாம்படியின் மகத்துவமும், தத்துவமும்ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்
உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]

இரண்டாம் படியில் ஏறுகின்றேன்
ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]

மூணாம் படியில் ஏறுகின்றேன்
மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]

நாலாம் படியில் ஏறுகின்றேன்
அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]

ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்
தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]

ஆறாம் படியில் ஏறுகின்றேன்
காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]

ஏழாம் படியில் ஏறுகின்றேன்
கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]

எட்டாம் படியில் ஏறுகின்றேன்
லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]

ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்
மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]

பத்தாம் படியில் ஏறுகின்றேன்
மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]

பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்
வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]

பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்
அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]

பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்
பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]

பதினாலாம் படியில் ஏறுகின்றேன்
சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]

பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்
சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]

பதினாறாம் படியில் ஏறுகின்றேன்
தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]

பதினேழாம் படியில் ஏறுகின்றேன்
கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]

பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்
அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]

பகவானே உனைக் காண்கின்றேன்
பந்தபாசத்தை விடுகின்றேன்!

ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்
சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!

மகரஜோதியில் கரைகின்றேன்
மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!

பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

திரு விஎஸ்கே அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம். இங்கேயும் ஜி3 செய்துள்ளேன்.

டாக்டர் சார், உங்களோட பாடலை உங்களைக் கேட்காமல் ஜி3 செய்து போட்டிருப்பதற்கு மன்னிக்கவும். பாடல் என்னோட போன பதிவின் அர்த்தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது.

ஐயப்பனைக் காண வாருங்கள் - 6
மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி
தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா?
பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத்
தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற
தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம்
திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள்
பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார்.

"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை
கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார்.

காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர்
என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்:

ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும்
இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும்
சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.

இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச்
சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும்
இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம்.

இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற
இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்த
தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை
அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன்
எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி
கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே
விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?

பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.

அது வருமாறு:
முதல் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - முருகன்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகா விஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினொன்றாம் படி - சுக்கிரன்
பனிரண்டாம் படி - ரங்க நாதன்
பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமன்
பதினைந்தாம் படி -ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி -விநாயகர்

இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.