எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்.

அஞ்சனை புத்திரன் அனுமந்தன் பிறந்த நாளுக்குனு எதுவும் எழுதலை. சிலர் சித்திரா பெளர்ணமியிலே அனுமன் ஜெயந்தி கொண்டாடறாங்க. அதனாலும் எழுதலை. அனுமனின் பிரபாவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாத்துக்கும் மேலே ஜிதேந்திரியன் என்ற பெயர் பெற்றவன் அனுமன். அதுக்காகக் காட்டுக்குள்ளே போய்த் தனியா எல்லாம் போய்த் தவம் செய்ய என்று உட்காரலை. இவ்வுலக வாழ்க்கையில் அனைவருடனும் வாழ்ந்து வந்தான். ஒரு இடத்தில் இருக்காமல் சமுத்திரம் தாண்டினான். நற்செய்தியைக் கொண்டு சேர்த்தான். தூதனாய்ப் பணி புரிந்தான். சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு வந்தான். "என் கடன் பணி செய்து கிடப்பதே!" என்பதை நிரூபித்தவன் அனுமன். அனைவருக்கும் அவனால் முடிந்ததைச் செய்தான். இத்தனை செய்தும் விநயம் என்பதைக் கடைப்பிடித்தான். புலனை அடக்கியவன் அனுமன். உலகவாழ்க்கையில் உழன்று கொண்டே சேவைகள் செய்து கொண்டே, பிறரை வாழவைத்துக் கொண்டே தான் தனித்து அதிலிருந்து விலகி நின்றவன். நைஷ்டிக பிரம்மசாரி. அவன் துணை இருந்து அனைவரையும் காத்து ரக்ஷிக்க வேண்டுகின்றேன். இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் அனுமன் துணை இருந்து நாட்டையும், வீட்டையும் காக்கவேண்டும். இனிய புத்தாண்டாக மலரவும், அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கவும் வாழ்த்துகள்.

நாம் அனைவரும் இயற்கையையோடு இசைந்த வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்புரிந்து கொண்டு, நாம் மட்டுமில்லாமல், மரம், செடி, கொடிகள், காடுகள், நிலம், மண், நீர் வளம் பெறவும் முயலுவோம்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்ததுவே!"

தமிழ் மணம் நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 18! ஆய்ப்பாடியில் கொண்டாட்டம்!

ஆய்ப்பாடியில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாமா?? பல வருடங்கள் குழந்தைப் பேறு இல்லாதிருந்த யசோதைக்குக் குழந்தை பிறக்கப் போகும் செய்தி கேட்டு கோகுலமே மகிழ்ந்து போயிருந்தது. அனைத்து யாதவர்களும் பிறக்கப் போகும் குழந்தையைஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அந்த நாளும் வந்தது. சிராவண மாதக் கிருஷ்ண பட்சத்து எட்டாம் நாள் காலையில் யசோதைக்குக் குழந்தை பிறந்தது. அப்போது அவள் அருகில் வசுதேவரின் மற்றொரு மனைவியும், பலராமன் என்ற சங்கர்ஷணனன வளர்த்து வருபவளும் ஆன ரோகிணியைத் தவிர வேறு யாரும் இல்லை. வயது சென்று நடந்த பிரசவத்தால் மிகக் களைத்துப் போன யசோதையும் மயக்கத்தில் ஆழ்ந்தாள். அந்த இடைவெளியிலேயே குழந்தை மாற்றப் பட்டது. யசோதைக்கு இது ஒன்றும் தெரிவிக்கப் படவில்லை. ரோகிணியின் அன்பான பணிவிடையால் மெல்ல,மெல்ல நினைவு திரும்பியது யசோதைக்கு. கண் விழித்துக் குழந்தை எங்கே என்று கேட்டபோது நள்ளிரவு தாண்டி விட்டது. ரோகிணியும் குழந்தையைக் கொடுத்தாள் அவளிடம். ஆஹா, இது என்ன அற்புதம்? இப்படி ஒரு நிறமா? இது என்ன நிறம்? நீலமா? கருமையா? என்றாலும் இப்படி ஒளி வீசுகின்றானே குழந்தை? கையில் எடுக்கும்போதே இனம் புரியாத மகிழ்ச்சி யசோதைக்கு.

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.

பெறற்கரிய பேறு பெற்றோம் என நினைத்துக் கொண்டாள். உண்மையும் அது தானே. பெற்றவள் எங்கோ குழந்தைக்காக ஏங்கி அழுது கொண்டிருக்க, யசோதை தானே பாக்கியம் பெற்றிருக்கின்றாள்? இது எதுவும் அறியாத அப்பாவியாய் யசோதை குழந்தையைக் கையில் எடுத்து ஆசையுடன் அணைத்துக் கொண்டாள். பாலூட்டித் தாலாட்டினாள். ஆயர்பாடி முழுதும் செய்தி சொல்லப் பட்டது. ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் அனைவரும் ஆடிப்பாடிக் குதூகலித்தனர். தங்கள் இல்லங்களிலேயே குழந்தை பிறந்தாற்போல் மகிழ்வு அவர்களுக்கு. ஒருவர் மேல் ஒருவர் வண்ணப் பொடிகள் தூவிக் கொண்டனர். பாட்டுப் பாடித் தங்கள் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.

தங்கள் வீட்டில் இருந்த பால், தயிர் வைக்கும் உறியை உருட்டி விட்டும், பாலையும், தயிரையும், வெண்ணெயையும் இஷ்டத்துக்குக் குடித்தும், கொடுத்தும், கொட்டியும் மகிழ்ந்தனர் ஆய்ப்பாடி மக்கள் அனைவரும். சங்கங்கள் ஆர்ப்பரித்தன. வாத்தியங்கள் முழக்கமிட்டன. எக்காளங்கள் ஊதப்பட்டன. மக்கள் அனைவரும் ஊர்வலமாய் வந்து குழந்தைக்கு ஜெயகோஷம் இட்டதோடு, குழந்தையைப் பார்த்து ஆசிகள் வழங்கியும், பரிசுகள் வழங்கியும் சென்றார்கள். அனைவரையும் கவர்ந்தது குழந்தையின் உடல்நிறம் தான். இத்தனை அழகான ஒரு குழந்தையை இதுவரையிலும் அவர்கள் யாரும் கண்டதே இல்லை.ஆயிற்று. குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாளும் நெருங்கிற்று. யசோதை, நந்தகோபன் இருவருக்கும் பரவசம். நந்தகோபன் வீட்டு முற்றம் ஆயர்களால் நிரம்பியது. ஆயர்பாடி கோபியர்கள் அனைவரும் தங்களை மிக அழகாய் அலங்கரித்துக் கொண்டு பெயர் சூட்டு விழாவுக்கு வந்தனர்.

வண்ண மாடங்கள் சூழ்திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே!

என்னும்படிக்கு முற்றமெல்லாம் வந்தவர்கள் கொண்டு வந்த சந்தனமும், மஞ்சளும், கஸ்தூரியும், அகிலும் மணத்தது. பின்னர் வெகுசிரமப் பட்டு ஆசாரியார் ஆன கர்காசாரியார் வர வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.

தன்னுடைய முக்கியமான சீடர்களுடன் வந்திருந்த அவர், தேவகிக்கு ஏற்கெனவே கொடுத்திருந்த உறுதிமொழியை மறக்கவில்லை. குழந்தை பிறந்த நேரத்தைக் கணித்த சான்றோர்களும், மூத்தோர்களும் கூறியபடியும், அந்தக் குழந்தையின் பெயர் "கிருஷ்ணா" என்றே வைக்கப் பட்டது. சியாமள வண்ணனான அவனின் நிறத்தைக் குறிக்கும் வகையில் "கன ஷ்யாம்" என்றோர் பெயரும் வைக்கப் பட்டது. யசோதைக்கோ அவன் "கனையா" ஆனான்.

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.

யசோதை தொட்டிலில் இட்டாலோ குழந்தை உதைத்துக் கொண்டு அழுவானாம். கையில் எடுத்துக் கொண்டாலோ இடையை நெருக்கிவிடுவான். இறுக அணைத்து சமாதானம் செய்தாலோ வயிற்றில் உதைப்பானாம். இவை அனைத்தையும் செய்யும் இந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு நான் நாள் பூரா இவனோடு இருப்பதிலேயே உடல் நெகிழ்ந்து போய் மெலிந்தாளாம் யசோதை. இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் வேறே உண்டு என்று சொல்வார்கள். இது பற்றிக் குமரன் தன்னுடைய கூடல் பதிவிலே எழுதிய நினைவும் இருக்கு.

Monday, December 29, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், தேவகிக்குக் கிடைத்தது! பகுதி 17


தேவகியின் பித்துப் பிடித்த தாய் மனத்தின் ஏக்கம் அதிகம் ஆகிக்கொண்டே போனது. அவளுடைய ஏக்கம் தாங்கமுடியாமல் ஒரு நாள் அவள் களிமண்ணால் சிறியதொரு குழந்தை பொம்மையைத் தன் கைகளாலேயே செய்தாள். அதை அந்தக் காலித் தொட்டிலில் இட்டாள். தாலாட்டுப் பாடினாள். அவ்வளவு தான். அவளின் சந்தோஷம் எல்லை மீறிற்று என்று சொல்லும்படிக்கு தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து, தினமும் புதுக்களிமண்ணை எடுத்து குழந்தை பொம்மை செய்து, அதற்குப் பூக்கள் வைப்பதும், அலங்காரங்கள் செய்வதும், தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதும், பாலூட்டுவதுமாக இருந்தாள்.

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. (2) 1.


அந்தக் குழந்தை பொம்மையைத் தாலாட்டிப் பாலூட்டித் தூங்க வைப்பதாக தேவகி செய்வதை பார்த்த வசுதேவருக்கும், கர்காசாரியாருக்கும் மனம் தாளவில்லை. தேவகியின் மனநிலைமை அவர்களுக்கு மிக நன்காய்ப் புரிந்தது. அவளைப் பொறுத்தவரையில் களிமண்ணால் செய்யப் பட்ட அந்தச் சின்னஞ்சிறு குழந்தை பொம்மை அவள் தூக்கிக் கொடுத்த அந்த மறக்கமுடியாத நீலமேக வண்ணன் தான் என்பதையும், கடவுளே வந்து தன் வயிற்றில் பிறந்திருக்கின்றார் என்று தேவகி உறுதியாக நம்புவதையும் புரிந்து கொண்டார்கள்.

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

ஒருநாள் தேவகி அரண்மனை மேன்மாடத்தில் நின்றுகொண்டு இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது விண்ணில் தவழ்ந்து கொண்டிருந்த ஒரு கரிய நிற மேகத்தைக் கண்ணுற்றாள். அந்தக் கருநீல நிறம் அவளுக்கு அவள் பெற்றெடுத்த அருமைக் குமாரனை நினைவூட்டியது. ஆஹா, இந்தக் கருநீல நிறம், என் அருமைக் குழந்தையின் நிறம்போலவே இருக்கின்றதே? உற்றுப் பார்த்தாள் தேவகி. அவள் கண்ணிற்கு அந்தக் கருநீல மேகம் ஒரு குழந்தை போலவே காட்சி அளித்தது. சின்னஞ்சிறு கால்கள் முளைத்தன, கைகள் முளைத்தன. அழகுக் கண்கள், ஆஹா, அந்தக் கண்கள் தான் எத்தனை எத்தனை அழகு? கண்களாலேயே சிரிக்கின்றானே இந்தக் குழந்தை? வசீகரித்தது பார்வை. அவள் நினைவிலும், கனவிலும், விழிப்பிலும், தூக்கத்திலும்,நிற்கையிலும், நடக்கையிலும் அந்தக் கண்களின் பார்வை துரத்தித் துரத்தி வந்தது அவளை.

கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே. அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.

அவள் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த வசுதேவர் ஒரு நாள் அவளுக்கு கரிய நிறப் பளிங்கினால் ஆன குழந்தை சிலை ஒன்றை எங்கிருந்தோ வரவழைத்துக் கொடுத்தார். தேவகியின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அட, இவன் என்னுடைய கிருஷ்ணன் போலவே இருக்கின்றானே? ஆம், வசுதேவர் மிகச் சிரமப் பட்டு கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த தன்னுடைய மகனைப் போலவே சிலையைச் செய்ய வைத்திருந்தார். ஆகவே கம்சன் கண்களில் படாமலும் காக்கவேண்டும். ஆகவே மிகச் சிரமப் பட்டு இதைக் கம்சனுக்குத் தெரியாமல் மறைக்கவேண்டுமே??? ஆனால் தேவகிக்கோ, இனி தினம், தினம் களிமண்ணால் புதுப் புது குழந்தை பொம்மைகள் செய்யவேண்டியதில்லை. இந்தக் குழந்தை நிஜமாகவே என்னுடைய "கன ஷ்யாம்" என்று குதூகலம் அடைந்தாள் தேவகி. ஆம், தேவகி அவன் நிறத்தை ஒட்டி அவனுக்குச் சூட்ட நினைத்த பெயர் கன ஷ்யாம் அல்லது கிருஷ்ணா என்பதாகும். தன்னுடைய கனஷ்யாம் போலவே இருக்கின்றானே இவன்? தேவகியின் வாழ்க்கையில் அன்றிலிருந்து ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தாற்போல் ஆயிற்று.

மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா. அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே. தாலேலோ. 9.


அந்தப் பொம்மையைக் குளிப்பாட்டினாள். அலங்கரித்தாள், கண்ணுக்கு மை இட்டாள், சந்தனம் தடவினாள், பூக்களால் அலங்கரித்தாள். தாலாட்டினாள், பாலூட்டினாள், என்னுடைய கனஷ்யாம் என்று கொஞ்சினாள். கனஷ்யாம் யார் என்பது வசுதேவர், கர்காசாரியார், தேவகி மூவரைத் தவிர வேறு யாருக்கும் புரியவில்லை. அடுத்தடுத்து குழந்தைகளைப் பறி கொடுத்ததால் தேவகி இவ்வாறு நடந்து கொள்வதாய் நினைத்தனர் அனைவரும். கொஞ்சம் அசந்தாலும் குழந்தை கோகுலத்தில் வளருவது கம்சனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் மிக மிகக் கவனமாய் இருந்தனர் மூவரும். அந்தக் குழந்தையுடன் பேசுவாள் தேவகி. உயிருள்ள குழந்தையைக் கொஞ்சுவது போலவே அதையும் கொஞ்சிக் கெஞ்சிப் பாராட்டிச் சீராட்டினாள். அத்தோடு மட்டுமா? அதைத் தூங்கவைக்க தேவகி தினமும் அந்த பொம்மைக் குழந்தைக்குத் தாலாட்டுகள் பாடினாள். திடீரெனக் குழந்தை அழுவதுபோல் தோன்றும் அவளுக்கு. அடடா, அழுகின்றதே என விரைந்து ஓடி வந்து அந்த பொம்மையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடுகின்றாள் தேவகி.

"கண்ணான கண்ணுறங்கு, கண்மணியே நீ யுறங்கு,
ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது?
அடிச்சாரைச் சொல்லி அழு, ஆக்கினைகள் செய்து வைப்பேன்,
தொட்டாரைச் சொல்லி அழு, தோள் விலங்கு பூட்டி வைப்பேன்,

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது??

அம்மா அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே?
அப்பா அடிச்சாரோ அரவணைக்கும் கையாலே?

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது??

மாமன் அடிச்சானோ, மல்லிகைப் பூச்செண்டாலே??(தேவகியின் மனம் விம்முகின்றது)
அத்தை அடிச்சாளோ, அல்லிப் பூச் செண்டாலே?
பாட்டி அடிச்சாளோ, பால் போட்டும் சங்காலே?

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது??
ஆறிரண்டும் காவேரி, அதனடுவே சீரங்கம்.............


இதற்கு மேலே தேவகியால் தாங்க முடியவில்லை. கங்கை, யமுனை, காவிரி, நர்மதை என ஆறுகள் அனைத்தும் இப்போது தேவகியின் கண்களிலே,

எனக்கும் ...................

Sunday, December 28, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், தேவகிக்கு நடந்தது பகுதி -16

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)

இன்றில் இருந்து சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம். பகல் பத்து என்று சொல்லுவார்கள். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கும் ராஜாங்க சேவை எல்லாம் நடக்கும். நாளை?? சரியாத் தெரியலை. ஆனால் முன்பெல்லாம் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாதரைச் சேவித்துவிட்டுச் சென்றார் என்றும், ரங்கநாதரே நேரில் எதிர்கொண்டழைத்துப் பின் திரும்பக் கொண்டு விடுவார் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. அது பற்றி விபரமான பதிவை வைகுண்ட ஏகாதசி அன்று பார்ப்போம். இப்போ இந்தப் பல்லாண்டு, பிறந்திருக்கும் குழந்தைக்குப் பாடியது. பெரியாழ்வார் மதுரையில் கண்டுவிட்டுப் பாடினார். நாம் பிறக்கும்போதே பாடிடுவோமே! பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தக் கண்ணனின் லீலைகள் பற்றிப் பேசுவதோ, எழுதுவதோ, கேட்பதோ குறையவில்லை அல்லவா? இவன் பிறந்ததால் தேவகி அதிர்ஷ்டக் காரியா? அல்லது இவனை வளர்த்த யசோதை அதிர்ஷ்டக் காரியா என்றால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் யசோதை தான் அதிர்ஷ்டக் காரி. இப்போ சிறையில் தன்னந்தனியே விட்டுட்டு வந்த தேவகியின் நிலைமை மோசமடைவதற்குள் வசுதேவரை அங்கே கொண்டு போய்ச் சேர்த்துடலாமா?
*************************************************************************************

முதலில் கம்சனின் நிலையைப் பார்க்கலாம். நிலைகொள்ளாமல் தவித்தான் கம்சன். ஏற்கெனவே காவலாளிகளை அடிக்கடி மாற்றியும், வசுதேவரையும், தேவகியையும் யாரும் நெருங்காமலும் பார்த்துக் கொண்ட கம்சனால் கர்காசாரியார் தினசரி வழிபாடுகளுக்கு அங்கே செல்லுவது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை என்றாலும் ஆசாரியர்களைப் பகைத்துக் கொள்ளுவது தனக்கு மிகவும் அபகீர்த்தியை உண்டாக்குவதோடல்லாமல், மக்கள் வெளிப்படையாகத் தங்கள் அதிருப்தியைக் காட்டிக் கொள்ளவும் ஆரம்பிப்பனர். ஆகவே அதை அவனால் தடுக்கமுடியவில்லை என்றாலும் பூதனையை அந்தச் சமயம் அங்கேயே இருந்து கவனிக்குமாறு ரகசிய உத்திரவிட்டிருந்தான். சிராவண மாதத்தின் கிருஷ்ண பட்ச அஷ்டமியான அன்று காலையில் இருந்தே கம்சன் பீதியின் உச்சத்தில் தவித்தான். இடியும், மின்னலும், மழையும், புயல்காற்றும் வெளியில் வீசியதா? அவன் உள்ளத்தில் வீசியதா என்று சொல்லமுடியாத அளவுக்கு அவன் மனக் குழப்பத்தில் ஆழ்ந்து கிடந்தான். அடிக்கடி உடல் தூக்கிவாரிப் போட்டது. அங்குமிங்கும் நடந்து, தூங்காமல் விழித்து, சாளரக் கதவைச் சார்த்தி, இப்படி ஏதேதோ செய்து தன் அச்சத்தைப் போக்க முனைந்தான்.

இப்படி அன்றைய பொழுது கழிந்து, இரவெல்லாம் கண் விழித்த கம்சன், காலையின் கதிர்கள் சாளரம் வழியாக எட்டிப் பார்த்ததும் மன தைரியத்தை அடைந்தான். இதோ, இப்போது பூதனை வந்து தேவகிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை, நாட்கள் ஆகும் என அறிவிக்கப் போகின்றாள். பூதனையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் கம்சன். பூதனையும் வந்தாள். "அரசே! நேற்றிரவு தேவகிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது!" என்று அறிவித்தாள். கம்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்னமோ எட்டாவது குழந்தை ஒரு ஆண் குழந்தையாக இருக்கும் என நினைத்தால் பெண்ணா? "பூதனை, உறுதியாகச் சொல்கின்றாயா?" என்று கேட்டான். பூதனைக்குக் கொஞ்சம் மனதில் பயம் ஏற்பட்டாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு," ஆம் ஐயா, குழந்தை பிறக்கும்போது நான் மட்டுமே அருகிலிருந்தேன். என் முன்னிலையில் தான் பிறந்தது." என்று சொன்னாள். கம்சன் உடனே தன்னுடைய ரதத்தை கொண்டு வரச் சொல்லி முட்கள் போன்று தயாரிக்கப் பட்ட தன் கதையையும் எடுத்துக் கொண்டான். மாளிகையை அடைந்தான்."எங்கே அந்தக் குழந்தை?" இரைந்தான் கம்சன், வசுதேவரைப் பார்த்து. "இளவரசே, அது ஒரு பலஹீனமான பெண் குழந்தை, ஆண் குழந்தை இல்லை! ஆகவே அதைக் கொல்லவேண்டாமே?" என்று இறைஞ்சுகின்றார் வசுதேவர். "ஆணோ, பெண்ணோ அது உயிருடன் இருக்கக் கூடாது." என்று சொல்லிக் கொண்டே குழந்தையைக் கிடத்தி இருக்கும் தொட்டிலினருகே சென்றான் கம்சன். தேவகி, "அண்ணா, அண்ணா, இந்தக் குழந்தையை விட்டுவிடு. எனக்கு இது ஒன்றாவது மிஞ்சட்டும். இந்தப் பெண் குழந்தையால் உனக்கு என்ன கெடுதல் நேரப் போகின்றது?" என்று கெஞ்சினாள். குழந்தையைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு விம்மி, விம்மி அழுதாள். இந்தக் குழந்தையின் கதியை நினைத்தும், தான் தூக்கிக் கொடுத்த தன் அருமைச் செல்வம் பற்றியும் ஒரே சமயம் அவளுக்கு நினைவு உண்டாகி நெஞ்சே உடைந்து போய்விடும்படி அழுதாள் தேவகி.

கம்சன், அந்தக் குழந்தையை தேவகியின் கைகளில் இருந்து பிடுங்கினான். தலைகீழாய்த் தூக்கினான் குழந்தையை. திடீரென அவன் கைகளில் உணர்வில்லாதமாதிரி இருந்தது கம்சனுக்கு. தன்னைத் தானே அவன் நிதானம் செய்து கொள்ளுமுன்னர் குழந்தை அவன் கைகளில் இருந்து நழுவுவது போல் இருந்தது. "க்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈச்ச்ச்ச்" என்ற நீண்ட ஒரு அலறல் கேட்டது அவனுக்கு. அடுத்த கணம் குழந்தை சாளரத்துக்கு வெளியே பறக்கின்றாற்போல் தெரிந்தது கம்சனுக்கு. ஒரு கணம் அவனுக்கு அந்த அறை சுழன்றது. எதிரே நின்ற வசுதேவர், தேவகி சுழன்றனர். அவனே சுழல்வது போல் இருந்தது. இருட்டு. கும்மிருட்டு. காரிருள் சூழ்ந்தாற்போல் ஒரு பிரமை. அவன் காதுகளில் ஒரு ஏளனச் சிரிப்பும், அதைத் தொடர்ந்த ஒரு குரலும். இன்னாரென்று கணிக்கமுடியாத ஒரு குரல் அவன் காதுகளில்"உன்னைக் கொல்லப் போகின்றவன் ஏற்கெனவே பிறந்துவிட்டான்." என்று சொல்லிச் சிரிக்கின்றது.கால்கள் துவள, நிற்கக் கூட முடியாமல் தவித்த கம்சன் அவ்விடத்தை விட்டு மிகுந்த பிரயாசையுடன் நகர்ந்தான். பூதனை ஓடி வந்தாள். அவள் கணவன் ப்ரத்யோதாவும் உடன் இருந்தான். அரண்மனைக்குச் செல்லுகின்றீர்களா அரசே என இருவரும் கேட்டனர். பின்னர் வசுதேவரையும், தேவகியையும் என்ன செய்யலாம் என்றும் கேட்கின்றனர். புத்தியில் எதுவுமே உறைக்காத ஒரு நிலையில் இருந்த கம்சன், "எங்கே வேண்டுமானாலும் போகச் சொல்லு அவர்களை! நாரதர் கூறிய ஜோசியம் என்னைப் பார்த்துப் பரிகசித்துச் சிரிக்கின்றது." என்று கூறிக் கொண்டே சென்றான் கம்சன். மறுநாள் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய சிலரிடம் கலந்தாலாசித்தான் கம்சன். அவர்களில் அவனுடைய முதன்மை ஆலோசகர் ஆன ப்ரலம்பரும் இருந்தார். பூதனையும், அவள் கணவன் ப்ரத்யோதாவும் இருந்தனர். மற்றவர்களில் அநேகர் கம்சனின் மாமனார் ஆன ஜராசந்தனின் ஆட்கள் ஆவார்கள்.

ப்ரலம்பா தன்னுடைய யோசனையைக் கூறலாமா எனக் கேட்டுவிட்டு, மக்கள் கம்சனிடம் அதிருப்தி அடைந்திருப்பதையும் ரட்சகன் எப்போது வருவான் எனக் காத்திருந்ததையும் கூறியதோடு, நேற்று கம்சனின் காதில் விழுந்த செய்தி, வேறு யார் காதிலும் விழுந்திருக்குமா எனவும் கேட்கின்றார். பூதனை தன் காதிலும் விழுந்ததை உறுதிப் படுத்துகின்றாள். கம்சன் சற்று யோசித்துவிட்டு, தான் எந்த விஷயத்திலும் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்கப் போவதாயும், ஆகவே கடந்த பத்து நாட்களுக்குள் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கொன்றுவிடுமாறும் கூறுகின்றான். வேண்டாம், வேண்டாம், கடந்த ஒரு மாதத்தில் பிறந்த அனைத்தையுமே கொன்றுவிடலாம் இல்லையா பஹூகா? என்று தன்னுடைய மகத மெய்க்காப்பாளனைக் கேட்டுக் கொள்கின்றான். பஹூகா சொல்லுகின்றான், மக்கள் மனதில் தர்மத்தின் நினைவு தோன்றாதபடிக்கு அவர்களைக் களியாட்டங்களிலும், சூதாட்டங்களிலும், பெண்களின் மோகத்திலும் ஆழ்ந்து போகும்படிச் செய்யவேண்டும். அவர்களுக்குப் பணத்தை வாரி இறையுங்கள். பணத்தினால் கிடைக்கும் இந்த சுகத்தை அனுபவித்த பின்னர் அவர்களுக்குக் குடும்பம், குழந்தைகள், மனைவி, மக்கள், பெற்றோர் என்று தோன்றாது. பின்னர் தர்மமாவது, ஒன்றாவது? ரட்சகன் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது." என்று கூற, கம்சன், இது சரியாய் வருமா என்ற சந்தேகத்தில் ஆழ்ந்தான். பூதனையை எதற்கும் குழந்தைகள் பிறந்திருப்பது பற்றியும் விசாரித்து, அவற்றைக் கொன்றுவிடும்படியும் கட்டளை இடுகின்றான்.
*************************************************************************************

சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட தேவகியோ, தன்னுடைய உலகில் ஆழ்ந்து போய்விட்டாள். அவள் நினனவிலும், கனவிலும் அந்த நீலமேக வண்ணக் குழந்தைதான். அவள் கண்ணெதிரே அந்தக் குழந்தை எப்போதும் இருந்தான். ஒரு சமயம் அவள் அதைத் தன் கைகளில் எடுத்துப் பாலூட்டினாள். ஒரு சமயம் அந்தக் குழந்தை தன் பிஞ்சுக்கால்களால் அவள் மார்பில் உதைத்ததை உணர்ந்தாள். ஒரு சமயம் தூக்கத்திலேயே குழந்தை சிணுங்கி அழுதது. எடுத்தால் அரைக் கண் திறந்து பார்த்துவிட்டு, மோகனச் சிரிப்புச் சிரித்தது. அவள் முகத்தை உற்றுப் பார்த்துச் சிரித்தது குழந்தை. தேவகிக்கு உடலும், மனமும் பரபரத்தது. இந்த உலகில் இருந்து வெளியே வரவே அவளுக்கு மனமில்லை. ஆனால் குழந்தையைப் பற்றி யாரிடம் பேசுவது? கைகொடுத்தார் வசுதேவர் எப்போதும்போலவே. வேறு யாரிடம் பேசமுடியும்? இருவரும் மெல்லிய குரலில் தங்கள் அருமைச் செல்வனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். குறைந்தது ஒரு லட்சம் முறையாவது வசுதேவர் தான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கூடையில் வைத்து யமுனையைக் கடந்தது பற்றி தேவகியிடம் விவரித்திருப்பார். கேட்கக் கேட்க அலுக்கவில்லை தேவகிக்கு.

குழந்தையைப் பார்க்கவேண்டும், தன் கைகளில் எடுத்துக் கொஞ்சவேண்டும், பாலூட்டவேண்டும் என்ற ஆவலை நாளாக நாளாக அவளால் தவிர்க்க முடியவில்லை. வசுதேவர் எவ்வளவோ அவளை சமாதானம் செய்து, ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும், அவளால் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கொஞ்சவேண்டும் என்ற ஆவலைத் தவிர்க்க முடியவில்லை. தன்னைத் தானே வருத்திக் கொண்டாள் தேவகி.

Saturday, December 27, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கண்ணனை எங்கே ஒளித்து வைக்கிறது??? பகுதி 15

வசுதேவருக்கு ஒரு நிமிஷம் அந்தப் பரம்பொருளே எதிரே வந்து நின்று கொண்டு தான் குழந்தையாக அவதரித்திருப்பதைச் சொன்ன மாதிரி இருந்தது. தன்னைத் தானே மயக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டார் வசுதேவர். குழந்தை அழகென்றால் அவ்வளவு அழகு! கையில் எடுத்தாலே பூப் போன்ற அதன் மிருதுவான மேனியும், தாமரை மலர் போன்ற முகமும், அதில் ஜொலிக்கும் இருகண்களும், குட்டிக் குட்டிக் கால்களும், கைகளும், செப்புப்போன்ற செவ்வாயும், மருதோன்றி இட்டாற்போல் சிவந்த இரு குட்டிப் பாதங்களும் தொடும்போதே மனதில் இனம்புரியாத நிம்மதியும், ஆனந்தத்தையும் உணர வைத்தது. சொர்க்கத்திலே தான் இருப்பதுபோல் உணர்ந்தார் வசுதேவர்.

ஆனால் இப்படியே இருந்தால்?? அடாடா?? கம்சன் வந்துவிடுவானே? அவனுக்குத் தெரியும் முன்னர் செய்யவேண்டிய காரியங்களை மறந்தே போனேனே?? நல்லவேளையாகப் பூதனையும் இன்னும் வந்து சேரவில்லை. மழை தடுக்கின்றது போல் அவளையும். வசுதேவர் குழந்தையையும், தேவகியையும் சற்று நேரம் தனியே விட்டுவிட்டுக் கையில் இரு விளக்குகளை எடுத்துக் கொண்டார். மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து யமுனை நதியும், அதைத் தாண்டி அக்கரையில் கோகுலமும் தெரியும் வண்ணம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார். தன் கையில் இருந்த விளக்குகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆரத்தி எடுப்பதுபோல் பாவனை செய்தார். உற்றுக் கவனித்தார். அக்கரையில் இருந்து மெல்லிய வெளிச்சம் சுற்றிச் சுற்றி வந்தது. வசுதேவர் திரும்பி வந்து குழந்தையைக் குளிப்பாட்டினார். தேனின் இனிமையைக் குழந்தையின் நாக்கில் வைத்தார். “தேவகி, நான் இப்போது போக வேண்டும்.” என்றார் வசுதேவர்.

தேவகியின் கண்களில் கண்ணீர். என்றாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, இப்படிப் புயலும், மழையுமாய் இருக்கின்றதே? எப்படிச் செல்வீர்கள்? யமுனையில் திடீரென வெள்ளம் வந்துவிட்டால்??” என்று ஐயத்தைக் கிளப்பினாள். “இறைவன் சித்தப்படி நடக்கும்” என்று சொன்ன வசுதேவர், காவலாளிகள் என்ன செய்கின்றனர் என்பதைக் கவனித்தார். பூதனையும் இன்னும் திரும்பவில்லை, காவலாளிகளும் தூங்குகின்றனர் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். குழந்தையை ஒரு கம்பளியில் சுற்றினார் வசுதேவர். கூடையில் வைத்தார். தோளில் கூடையை வைத்துக் கொண்டு கிளம்பினார். வைக்கும் முன்னர் கூடையில் இருந்த குழந்தையை ஒருமுறை பார்த்தார். நடப்பது எதுவும் அறியாத அந்தச் சின்னஞ்சிறு சிசு, தன் கால்விரலை வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது. இரு பர்லாங்குகள் சென்ற வசுதேவர், இயற்கையாக யமுனை நதியின் ஆழம் குறைந்து கோகுலம் செல்லுவதற்கென ஏற்பட்ட ஒரு இடத்தில், நதியில் இறங்கி நடக்கலானார். கொஞ்ச தூரம் செல்வதற்குள்ளே வசுதேவர், ஏதோ நிழல் போன்ற ஒன்று தன் மேலும், கூடையில் இருந்த குழந்தையின் மேலும் குடை போல் கவிந்திருப்பதாய் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். மழை நின்று விட்டிருந்தது. கரிய மேகம் ஒன்று ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷனைப் போல அவர்மேலும், கூடையிலிருந்த குழந்தையின் மேலும் கவிந்து இருப்பதைக் கண்டார். குழந்தை பயந்துவிடுவானோ என்று பார்த்தால் தூக்கத்தில் குழந்தை மோகனமாய்ச் சிரித்தது. வாயிலிருந்து விரலை எடுக்காமலேயே சிரித்த அந்தக் குழந்தையை அள்ளி எடுக்கத் துடித்த மனதைக் கட்டுப் படுத்திக் கொண்ட வசுதேவர் சீக்கிரமாய் ஆழம் குறைந்த அந்தப் பகுதியைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்.
*************************************************************************************

கோகுலத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போமா? வசுதேவர் நதியைக் கடக்கிறதுக்குள்ளே நாம் போய் எட்டிப் பார்த்துடலாம். பல வருஷங்கள் சென்ற பின்னர் கருத்தரித்த யசோதையைக் கண்ணும், கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டான் நந்தகோபன். கோகுலத்து மக்களுக்கும் யசோதை இத்தனை வருஷம் சென்ற பின்னர் கருக்கொண்டது பற்றி சந்தோஷத்துடனேயே பேசிக் கொண்டனர். கூடவே தங்கள் குலத் தலைவனும், இப்போது கம்சனின் சிறையில் இருப்பவரும் ஆன வசுதேவரின் மனைவியான தேவகிக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை தான் யாதவ குலத்தை ரக்ஷிக்கப் போகும் குழந்தை என்பதும், அந்தக் குழந்தையால் தர்மமே நிலைநாட்டப் பட்டு உலக க்ஷேமத்திற்கென உதிக்கப் போகும் குழந்தை எனவும், அரசல் புரசலாய்ச் செய்தி வந்து காதில் விழுந்த வண்ணம் இருக்கின்றது. எப்போப் பிறக்கும் எனத் தெரியவில்லை.

சிராவண மாதம் பெளர்ணமி கழிந்த எட்டாம் நாள் காலை யசோதைக்குக் குழந்தை பிறந்துவிடுகிறது. பெண் குழந்தை. ஆனால் இந்தச் செய்தி வெளியே யாருக்கும் தெரிவிக்கப் படவில்லை. யசோதை அறையைவிட்டு வெளியே வரவில்லை. பூரண மயக்கத்திலேயே இருப்பதாய்ச் சொல்லப் பட்டது. நந்தன் கர்காசாரியாரைச் சென்று ரகசியமாய்ச் சந்திக்கின்றான். சில நிமிடப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் யமுனைக்கரையில் மதுராவிலிருந்து வரும் வழியில் நந்தனும், கர்காசாரியாரும் காத்திருக்க, எதிர்க்கரையில் வசுதேவர் இறங்குவது இங்கே நிழல் போல் தெரிகின்றது. ஏற்கெனவே விளக்குகளின் சமிக்ஞை மூலம் செய்திப் பரிமாற்றம் நடந்திருப்பதால் தயாராய்க் காத்திருக்கின்றனர் இருவரும். வசுதேவர் வந்து சேருகின்றார். நந்தன் கையிலிருந்த கூடை வசுதேவர் கைக்கும், அவர் கைக்கூடை நந்தன் கைக்கும் மாறுகின்றது. வசுதேவர் கண்களில் இருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் கொட்டுகின்றது. பேச்சு வர மறுக்கின்றது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக்கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!"

"நந்தா, நந்தா, என் நண்பா, என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன் உனக்கு நான்? இது உன் குழந்தை அல்லவோ?? யசோதை பெற்றெடுத்த பெண்ணல்லவோ?? எப்படி இந்த உதவிக்கு நான் பதில் உதவி செய்யப் போகின்றேன்? என் நன்றியை எவ்வகையில் காட்டப் போகின்றேன்?" என்றெல்லாம் புலம்பினார். நந்தன் வசுதேவரின் கால்களில் வீழ்ந்தான். "அரசே, நீங்கள் எங்கள் தலைவர், நாங்கள் உங்கள் குடிமக்கள். இது என்னுடைய கடமை. எங்களிடம் இருப்பதே உங்களிடம் நாங்கள் கொடுக்கவே. அனைத்தும் உம்முடையதே!" என்று பணிவுடன் சொன்னான். கர்காசாரியாரின் கைகளில் இருந்த கூடையை நந்தன் வாங்கும்போது கூடையை மூடி இருந்த துணி விலகுகின்றது. அதனுள் இருந்த குழந்தையின் நீலமேக வண்ணம் பளிச்சிட அதன் எதிரொலி போல், விண்ணிலும் மிகப் பிரகாசமாய் ஒரு மின்னல் தோன்றி மறைய, அந்த வெளிச்சத்தில் குழந்தையைப் பார்த்த நந்தன் மனதில் இனம் புரியாப் பரவசம்.நந்தா, நந்தா, எத்தனை அதிர்ஷ்டசாலி அப்பா நீ? அந்தப் பரம்பொருளே இப்போது உன் கையில். ஈரேழு பதினான்கு உலகத்தின் செல்வமெல்லாம் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு பொருள் உன்னிடம் இப்போது.

Thursday, December 25, 2008

சீதா கல்யாணமே வைபோகமே!

இன்று ஜெயா தொலைக்காட்சியில் விஜய் சிவா அவர்களின் "கல்யாணமே வைபோகமே" என்ற தலைப்புக்கான பாடல்கள் இடம் பெற்றன. கல்யாணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு என்ற வார்த்தை ஏன் இடம்பெறுகின்றது என்பதற்கு அவர் சொன்ன காரணம் மிக மிக ஆச்சரியமாய் இருக்கின்றது. ஏனெனில் சாஸ்திரப் படி திருமணம் நடக்கிறது என்று போட்டால் அதற்கான சாஸ்திரங்கள் பின்பற்றப் படுவதில்லை என்று சொன்னார். உதாரணமாய் பெண்ணின் வயதை விட ஆணுக்கு மும்மடங்கு அதிகம் இருக்கவேண்டும் என்பது சாஸ்திரம் என்றும், பெரும்பாலும் அது கடைப்பிடிக்கப் படுவதில்லை என்றும் கூறினார். மேலும் ஜாதகப் பொருத்தங்கள் பார்த்துத் திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டதில்லை என்றும், கோத்திரமும், குலமுமே பார்க்கப் பட்டது எனவும், அதிசயமாக எப்போதாவது நட்சத்திரப் பொருத்தம் பார்க்கப் பட்டது எனவும் சொன்னார்.

முதல் பாட்டாக அவர் எடுத்துக் கொண்டது சீதா கல்யாணம் என்ற தலைப்பில். திருமணம் ஆவதற்கு முன்னால் பெரியவர்கள் சிலர் கல்யாணத்துக்குக் காத்திருக்கும் பெண்ணிடமோ, பிள்ளையிடமோ, அவர்களுக்கு வரப் போகும் கணவன் பற்றியோ, மனைவி பற்றியோ வர்ணிப்பது போல் சீதையிடம் ஒரு குறி சொல்லும் பெண் பாடுவது போல் பாட்டு. பின்னர் திருமண மண்டபத்திற்கு சீதை வருகின்றாள்.
அவளுக்கு ராமரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் வெட்கமும், பெரியவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் தடுக்கின்றது. அதையும் மீறி ஆவல் மீதூறத் தன் இடக்கையில் உள்ள வளைகளின் மேல் வெளிச்சம் படுமாறு தூக்கிக் கொள்ள, அந்தக் கை வளையல்களில் ராமரின் முகமானது பிரதிபலிக்க, சீதை தன்னிரு கடைக்கண்களால் ராமரைப் பார்க்கின்றாளாம். அருணாசலக் கவிராயரின் பாடல்களிலிருந்து பாடினார்.

அடுத்து ருக்மிணி கல்யாணப் பாடல்.பெண் சம்மதித்தால் பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்று, எதிர்த்து வருபவர்களையும் வென்றுவிட்டுத் திருமணம் செய்து கொள்ளுவதும் அனுமதிக்கப் பட்ட ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டினார். ருக்மிணியை கிருஷ்ணர் தூக்கிக்கொண்டு போய் ருக்மியையும் வென்றுவிட்டுத் திருமணம் செய்து கொள்ளுகின்றார். அந்த வகைத் திருமணம் பற்றிய பாடல் நாராயணீயத்தில் இருந்து. பின்னர் ராதா கல்யாணம். ராதா கல்யாணம் என்பது பாகவதத்தில் இல்லை என்பதையும், பரிட்சித்து ராஜாவுக்கு சுகர் பாகவதம் சொன்னபோது ராதா என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஏன் பண்ணவில்லை என்பது பற்றியும் மிக அழகாய் விளக்கிவிட்டு ஜெயதேவரின் அஷ்டபதிப் பாடல் (22வது அஷ்டபதி) ஒன்றையும் பாடினார்.
பின்னர் நாம் போக முடியாத கல்யாணங்களை வாழ்த்தும் பாடல் ஒன்றை தியாகராஜரின் கிருதியில் இருந்து பாடி முடித்தார். பாடல்களையும், இன்னும் விபரமாகவும் வழக்கம்போல் ஜீவா எழுதுவார் என நினைக்கிறேன். இது சிறு குறிப்பு மட்டுமே. இன்னிக்கு என்னோட ஆல்டைம் ஃபேவரிட் ஆன அருணா சாயிராம். கேட்டுட்டு வரேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்!

வல்லி அவங்களே வாழ்த்துத் தயார் செய்து அசத்தி இருக்காங்க. நாம எப்போவும் போல் இரவல் தான். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

Tuesday, December 23, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 14 கண்ணன் வருவானா?

கோகுலத்தில் இருந்து படகில் வந்திருந்த அந்தண இளைஞன் மிகவும் சாமர்த்தியமும், திறமையும் வாய்ந்ததொரு மருத்துவன். குழந்தையை அவன் தூக்கிச் செல்லும்போது திடீரென அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்க, தேனில் நனைத்த பஞ்சைக் குழந்தையின் வாயில் சொட்டவிட, அதைச் சப்பிய குழந்தை உடனேயே தூங்கிப் போனது. என்றாலும் இந்தக் குழந்தைக்குப் பசி அதிகம் இருக்கும் என எண்ணிய அவன் வேகமாய்ப் போய்ப் படகில் ஏறிக் கொண்டான். அதுவே தேவகியும், வசுதேவரும், தங்கள் ஏழாவது குழந்தையின் குரலைக் கடைசியாய்க் கேட்டது. விடிவதற்குள்ளாக கோகுலம் சென்றடைந்த அவர்கள், அந்தக் குழந்தையை ரோஹிணியிடம் கொடுக்கத் தன் கணவனின் முகத்தையே அந்தக் குழந்தையின் முகத்தில் கண்டு ஆனந்தித்த ரோஹிணி குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். வார்த்தைகளால் விவரிக்க முடியாததொரு உணர்வோடு அதற்குப் பாலூட்டித் தாலாட்டினாள் ரோஹிணி. குழந்தையும் தூங்கியது, ரோஹிணியும். திடீரென தூக்கத்திலிருந்து விழித்த ரோஹிணி, குழந்தையின் தொட்டிலில் தொங்கிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த சர்ப்பராஜனைக் கண்டு திடுக்கிட்டாள்.

தான் கத்தினாலோ, அல்லது அந்தப் பாம்பை அடித்து விரட்ட எத்தனித்தாலோ, குழந்தையைக் கடித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து ரோஹிணி பொறுத்திருந்தாள். நிமிடங்கள் ஓட, பாம்பும் அசையவில்லை, ரோஹிணியும். பின்னர் இவளை நம்மால் பயமுறுத்த முடியாது என நினைத்தாற்போல பாம்பு தன்னைச் சுருட்டிக் கொண்டு தொட்டிலில் இருந்து கீழே இறங்கி சென்று மறைந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் தொட்டிலைக் கவனித்த ரோஹிணி, குழந்தை "களுக்" என்ற ஒரு சிரிப்புடன் சிரித்துக் கொண்டு தூங்கியதைக் கவனித்து அமைதி அடைந்தாள். இப்போ மதுராவில் என்ன நடந்தது பார்ப்போமா??
*************************************************************************************

தேவகிக்குக் குழந்தை பிறந்த விஷயம் கம்சனுக்குச் சொல்லப் பட்டது. தூங்கிக் கொண்டிருந்த கம்சன் திடுக்கிட்டு விழித்துச் செய்தியைக் கேட்டான். உடனேயே அவனுக்குத் தான் சில நாட்கள் முன்னர் கண்ட துர்சொப்பனம் நினைவில் மோதியது. என்ன காரணத்தாலோ, இம்முறை தேவகிக்கு இரட்டைக் குழந்தைகளாய்ப் பிறந்திருக்கும் என்றே அவன் நினைத்தான். தேவகியைக் காணச் சென்றபோது உடன் அங்கே காவலாளிகளின் தலைவனாய் இருந்த ப்ரத்யோதாவையும், அவன் மனைவியான பூதனையையும் உடன் அழைத்துக் கொண்டான். வாயிலிலேயே வசுதேவரும், கர்காசாரியாரும் நின்றிருந்தனர். "எங்கே குழந்தைகள்?" எனக் கம்சன் கேட்க, "குழந்தைகளா?? அப்படி ஒன்றுமே இல்லையே? பிறந்தது ஒரு பெண் குழந்தைதான், ஆண் இல்லை" என்று கர்காசாரியார் சொல்ல கம்சன் நம்பவில்லை. தேவகி படுத்திருக்குமிடம் நோக்கிப் போக நினைத்தவன், பின்னர் மாற்றிக் கொண்டு பூதனையை அங்கே சென்று சோதனை போடச் சொல்ல தேவகிக்கு அருகே இருந்த துணிமூட்டையை எடுத்து வந்த பூதனை, குழந்தை செத்துப் பிறந்திருக்கிறதை கம்சனுக்குத் தெரிவித்தாள்.

சந்தேகம் நீங்காத கம்சன் மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் விடாமல் தேடிப் பார்த்துவிட்டு அலுத்துப் போய் மாளிகைக்குத் திரும்பினான். அவன் மனதில் நிம்மதி இல்லை. ஏதோ ஒரு மாயவலை தன்னைச் சுற்றிப் பின்னப் பட்டிருப்பதாய் உணர்ந்தான். இந்த தேவகி, சிறு பெண், பலஹீனமானவள், எந்தவித சக்தியுமில்லாதவள், நம்மை இந்த அளவுக்குப் பயப்படுத்தி இருக்கின்றாளே? இருக்கட்டும், இவளைக் கொல்லுவது மிக எளிதான காரியமே, என்றாலும் நம் தந்தை, சித்தப்பன் போன்றோர் போராட்டம் நடத்துவார்கள். மேலும் யாதவகுலமே வெளிப்படையாக அவர்கள் பக்கம் சேர்ந்து திரண்டு நம்மை எதிர்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க முடியாது. சற்றுப்பொறுக்கலாம், எட்டாவது குழந்தைதானே, நமக்கு எமனாக வரப் போவது? வரட்டும், பார்க்கலாம்.
*************************************************************************************

தேவகி எட்டாவது முறையாகக் கர்ப்பம் அடைந்தாள். மற்ற ஏழு தடவைகள் போல அல்லாமல் இம்முறை அவள் மனம் மிக மிக உற்சாகமாய் இருந்தது. சொல்லத் தெரியாத ஒரு ஆனந்தம் அவளை ஆட்கொண்டிருந்தது. வசுதேவர் கண்களுக்கு தேவகியிடம் பொலிவோடு மட்டுமில்லாமல், உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்திருப்பது தெரிந்தது. இவ்வளவு பலஹீனமான தன் மனைவி செய்திருந்த வீரச் செயலால் ஏற்கெனவே அவள் பால் அன்பு மீதூறிக் கொண்டிருந்த மனம் இப்போது இன்னும் நெகிழ்ந்தது. சற்றேனும் அவளைப் பிரியாமல், யமுனை கண்களுக்குத் தெரியும் வண்ணம் ஆசனங்களை அமைத்துக் கொண்டு, பழைய காலத்து வீரர்கள் பற்றியும், மற்ற சந்தோஷமான விஷயங்கள் பற்றியுமே அவளிடம் பேசினார். தேவகிக்கோ, ஆனந்தம் பொங்கிக் கொண்டு வந்ததோடு அல்லாமல், சதா தன் கண் முன்னே சாட்சாத் அந்தப் பரம்பொருளே நின்று காவல் காத்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. கண்களை மூடினாலும், திறந்தாலும், நின்றாலும், நடந்தாலும், படுத்திருந்தாலும், எழுந்திருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும், தூங்கினாலும், விழித்தாலும் எந்நேரமும் பரம்பொருளின் தாக்கமும், அதன் உணர்வுமே அவளிடம் மிகுந்திருந்தது.

கம்சனோ எனில் பெரும் கலவரத்தில் ஆழ்ந்தான். குழந்தை பிறக்கப் போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். தன் நம்பிக்கைக்கு உரிய ப்ரத்யோதாவையும், அவன் மனைவியான பூதனையையும் தவிர, வேறு யாருமே வசுதேவரும், தேவகியும் வசித்த மாளிகையை அண்டாமல் பார்த்துக் கொண்டான். தேவகிக்கு உதவி வந்த மருத்துவப் பெண்மணி நிறுத்தப் பட்டாள். பதிலாக பூதனையையே அவள் உதவிக்கு எல்லாம் அனுப்பினான். தேவகிக்குப் பூதனையைக் கண்டாலே பிடிக்கவில்லை. எனினும் பிறக்கப் போகும் குழந்தையையும், அதனால் யாதவகுலத்துக்கு ஏற்படப்போகும் நன்மைகளையும் உத்தேசித்துப் பொறுத்துக் கொண்டாள்.

மதுராபுரி மக்களுக்கும் விஷயம் தெரிந்துவிட்டிருந்தது. அங்கங்கே அரசல் புரசலாய் மக்கள் பேசிக் கொண்டனர். வந்துவிட்டான், நம் ரட்சகன், நம் ஆண்டவன், நம்மைக் காக்கப்போகின்றவன் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டனர். இன்னும் ஆறு மாதங்கள், 5 மாதங்கள், 4 மாதங்கள், 3 மாதங்கள், 1 மாதம் தான், ஆஹா, இன்னும் பத்து நாட்களே உள்ளனவாமே?? கம்சனோ பயம் அதிகமாகி என்ன செய்வதெனப் புரியாமல் கலங்கிக் கொண்டிருந்தான். ஏற்கெனவேயே நிறைய யாதவத் தலைவர்கள் அவன் போக்குப் பிடிக்காமல் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். தூக்கமிழந்து தவித்தான் கம்சன். தூங்கினாலோ பயங்கரக் கனவுகள். தூங்க முடியாமலும், தூக்கம் இல்லாமலும் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்.

பூதனையை தேவகியோடு தங்குமாறு சொன்னான். கர்காசாரியாரைத் தவிர, மற்ற யாருமே வசுதேவரையோ, தேவகியையோ பார்க்க அனுமதி மறுக்கப் பட்டது. தினமும் காவல்காக்கும் காவலாளிகள் மாற்றப் பட்டனர். தேவகியின் எட்டாவது குழந்தையைத் தான் கொல்லும்போது மக்கள் எதிர்ப்பு இல்லாமல் இருக்க யாதவப் படை வீரர்களை நம்பாமல் தன் மாமனாரின் ஆட்களான மகத வீரர்களை நியமித்தான் முக்கிய இடங்களில். மெல்ல, மெல்ல அந்த நாளும் நெருங்கியது. சிராவண மாதத்து கிருஷ்ணபக்ஷம் ஆரம்பித்த எட்டாம் நாள். இருட்டு நேரம், ஏற்கெனவே மழையினால் இருட்டுக் கவிந்த பூமி அன்றைக்கென இன்னும் இருட்டாய் இருந்தது. காலையில் இருந்தே இடியோடும், மின்னலோடும் கூடிய மழை கொட்டிக் கொண்டிருந்தது. அன்று மதியவேளையில் தினசரி வழிபாட்டுக்காக வந்த கர்காசாரியார் அது முடிந்ததும், வசுதேவரைக் கட்டிக் கொண்டார். மெல்ல அவர் காதுகளுக்கு மட்டுமே கேட்கும்படியாக ஏதோ ஒரு செய்தியைச் சொன்னார்.

கொட்டும் மழையில் காலையில் தன் குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு வருவதற்காகச் சென்ற பூதனை இன்னும் மாளிகைக் காவலுக்குத் திரும்ப முடியவில்லை. மழை அத்தனை உக்கிரமாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. எந்நேரமானாலும் திரும்பிவிடுவதாய்ச் சொல்லிச் சென்றிருந்த பூதனையை எதிர்பார்த்து மாளிகையின் வாயில் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. அன்றைய காவலுக்கு வந்த ஆட்களோ எலும்பை உலுக்கும் குளிருடன், வெளியே வரமுடியாமல் தங்களுக்கென ஒதுக்கி இருந்த அறைக்குள்ளேயே , இந்த மழையில் என்ன நடக்கமுடியும் என்ற நினைப்பிலும் தூங்க ஆரம்பித்தனர். மெல்ல, மெல்ல இருட்டுக் கவிந்து விளக்குகள் தந்த வெளிச்சமும் குறைய ஆரம்பித்தது. தேவகி அமர்ந்திருந்த இடத்தில் மட்டுமே மிக மிக மெல்லிய வெளிச்சம் பரவிக் கிடந்தது. வசுதேவர் அவளருகில் அமர்ந்திருந்தார். திடீரென ஒரு பேரோசை, அண்ட பகிரண்டமும் அதிரும்படிக் கேட்டது. அதைத் தொடர்ந்த ஒரு வெளிச்சம், மாபெரும் வெளிச்சம், ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடிச் சூரியப்பிரகாசம்போல் தெரிந்த அந்த வெளிச்சத்தில் தேவகி தன் பல்லைக் கடித்துக் கொண்டு வலியை அனுபவிப்பதை வசுதேவர் கண்டார். "பிரபோ, என் ஆண்டவன் வருகின்றான். இதோ அவன் வரும் நேரம் வந்துவிட்டது." என்று மிக மிக மெல்லிய குரலில் வசுதேவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் தேவகி கூற, தன் அருமை மனைவியைத் தன் இருகைகளாலும் அணைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள்ளே சென்றார் வசுதேவர். தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். குழந்தை பிறந்தது. நீலமா?? கரு நீலமா? கருமையா? ஜோதியான பிரகாசமா?? குழந்தை பிறந்ததும் அதன் நிறமும், அதைச் சுற்றிப் படர்ந்த ஒளியும் கண்ணைக் கூசியது. வசுதேவருக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. கெட்டது குடி! இப்போ மயங்கினால் என்னாவது?

Sunday, December 21, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பலராமர் பகுதி 13


ஒரு சிலர் மனசிலே சந்தேகம் இருக்கலாம், ரோகிணி இங்கே எப்படி வந்தாள் என. கம்சனுக்குத் தான் செய்வது தீங்கே என்றாலும் வெளிப்படையாக யாதவகுலத்தினர் செய்யும் எதையும் தடுத்தால் அது தனக்கே தீமையாக முடியும் என அறிந்து வைத்திருந்ததால், வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணி தன் கணவனைச் சந்திப்பதைத் தடுக்காமல் இருந்தான். ரோகிணி கோகுலத்திற்கு அக்ரூரரால் அனுப்பப் பட்டிருந்தாலும் அவ்வப்போது வந்து தன் கணவனைச் சந்திப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்ததால் இப்போதும் அப்படியே நந்தனுடன் வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போதும் நந்தனுடன் சென்றாள். சில நாட்கள் கழிந்தன.

வசுதேவரும், தேவகியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பையும் பற்றையும் நம்பிக்கையையும் கண்ட அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளிகளின் இதயமும் இளகியது அவர்கள் பால். இத்தனை அன்பான தம்பதிகளுக்குத் தாங்கள் துரோகம் புரியவேண்டி உள்ளதை நினைத்து வருந்தினர். சீக்கிரமாய் அந்தப் பரம்பொருள் தேவகியின் வயிற்றில் தோன்றி இந்தத் துன்பத்தில் இருந்து தங்களையும் மீட்கமாட்டானா?? வியாசர் இவர்களிடம் சொன்னாராமே, அந்த வாக்கு உண்மையாக இருக்கவேண்டுமே எனத் தவித்தனர். நந்தன் கோகுலத்தில் இருந்து மதுரா வந்து வசுதேவரைக் கண்டு சென்று பத்து நாட்கள் கழிந்தபின்னர் ஒரு நாள் நடு இரவில் ஒரு படகொன்று சற்றும் சத்தம் செய்யாமல் யமுனையைக் கடந்து வசுதேவரும், தேவகியும் சிறை வைக்கப் பட்டிருந்த மாளிகைக்கு அருகே இருந்த துறையில் நிறுத்தி வைக்கப் பட்டது. அதிலிருந்து சத்தம் செய்யாமல் ஒரு மனிதன் இறங்கினான். அவன் கையில் ஒரு துணி மூட்டை இருந்தது. படகில் படகோட்டியைத் தவிர இன்னொருவரும் இருந்தார்.

படகு வருவதை மேன்மாடத்தில் இருந்து கண்டார் அக்ரூரர். அவரும் கர்காசாரியாரும் வசுதேவருக்கும், தேவகிக்கும் ஆறுதல்கள் அளிக்கவேண்டும் என்பதால் கம்சனிடம் ஏதோ வழிபாடு நடத்தப் போவதாய்ச் சொல்லிவிட்டு அங்கே வந்திருந்தனர். அக்ரூரர் மாளிகைப் படிகளில் இறங்கிச் சென்றார். வந்த இளைஞனை ஏதும் பேசாமல் ஏறிட்டு நோக்கினார் அக்ரூரர். "வ்ருஷ்ணி வம்சத்தின் கடவுளே! அக்ரூரரே! வணக்கம். நான் வந்துவிட்டேன்." என்றான் அந்த இளைஞன். அக்ரூரர் வாய் பேசாமல் அவன் கைகளில் இருந்த துணிமூட்டையைச் சுட்டிக் காட்டி என்ன எனப் பார்வையாலேயே வினவ, "ம்ம்ம்., பெண் குழந்தை,இறந்தே பிறந்தது." என்று அந்த இளைஞன் சொன்னான். அக்ரூரர் வானத்தை நோக்கிக் கொண்டு தம் இரு கைகளையும் கூப்பிவிட்டுச் சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு மெளனமாய்ப் பிரார்த்தனை செய்தார்.

அவர்களை அங்கே கண்ட காவலாளிகளில் இருவர் அக்ரூரரை நோக்கிச் சந்தேகத்துடன் வர, அக்ரூரர் அவர்களைப் பார்த்து, மெல்லிய குரலில், "கர்காசாரியாரின் உத்தரவின் பேரில் இந்த பிராமண இளைஞன் இளவரசியும் ஷூரர்களின் ராணியுமான தேவகிக்குச் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து சில மந்திரங்களின் மூலம் அவள் உடல்நிலையையும், மனநிலையையும் சரி செய்ய வந்திருக்கின்றான். நீங்கள் இருவரும் உடனே கம்ச மன்னனிடம் சென்று தேவகிக்குக் குழந்தை பிறந்துவிடும் என்பதைச் சொல்லுங்கள். இது ஆசாரியரின் ஆணை!" என்று சொல்கின்றார். ஆசாரியர்களை வெளிப்படையாக விரோதித்துக்கொள்ளக் கம்சன் கொஞ்சம் தயங்கினான். ஆகவே அந்த இருவரும் அக்ரூரரையும், அந்த இளைஞனையும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு கம்சனுக்குத் தகவல் சொல்லச் சென்றனர்.

கர்காசாரியார் இரு முதிய பெண்மணிகளுடன் அங்கே காத்திருந்தார் இளைஞனின் வரவுக்காக. அனைவரும் சில நிமிடங்கள் மெல்லிய குரலில் ஏதோ விவாதித்துக் கொண்டனர். தேவகியின் அருகே வசுதேவர் உட்கார்ந்திருந்தார். தேவகியோ படுக்கையில் படுத்துக் கொண்டு தன்னிரு கண்களையும் மூடிக் கொண்டு வசுதேவரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள். கர்காசாரியார் அந்த முதிய பெண்களுடன் போகச் சொல்லி தேவகிக்கு ஆணையிட்டார். "குழந்தாய்! மனதைத் திடம் செய்து கொள்வாய்! கடவுள் உனக்கு எதையும் தாங்கும் வல்லமை அளிப்பானாக!" என்று மெல்லிய குரலில் அவள் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து அனுப்பினார்.

"குருதேவரே! கவலை வேண்டாம். அக்னிப்ரவேசத்துக்குக் கூட நான் தயார். என்னை எதுவும், யாரும் எதுவும் செய்யமுடியாது. என் மனதில் கடந்த இரு நாட்களாய் அந்த ஆதி நாராயணனும் அவன் படுத்திருக்கும் ஆதிசேஷனும் என்னைக் காத்து வருகின்றார்கள் என்ற நம்பிக்கை உண்டாகி இருக்கின்றது. எது வந்தாலும் நான் கலங்க மாட்டேன்." என்று சொல்லி விட்டு வசுதேவருக்கும், குருதேவருக்கும், அக்ரூரருக்கும் நமஸ்கரித்துவிட்டு தேவகி உள்ளே சென்றாள். ஒரு முதியவள் தேவகியுடன் செல்ல, மற்றவள் கையில் தன் கையிலிருந்த துணி மூட்டையைக் கொடுத்தான் அந்த இளைஞன். சற்று நேரம் ஒரே மெளனம். சிறிது நேரத்தில் தேவகியின் பலஹீனமான குரல் வலியை அனுபவிக்கும் வேதனையுடன் கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்துப்பின்னர் பெரிய கதறலாக வந்தது. ஒரு பெரிய அலறலுக்குப் பின்னர் ஒரு குழந்தையின் குரல். பின்னர் குழந்தையின் அழுகையும் நின்றது.

பெண்கள் வெளியே வந்தனர். "ஆண் குழந்தை பிறந்துள்ளது. அடாடா! என்ன வலிமை! குழந்தை மிகவும் திடமாக இருக்கின்றான். இவ்வளவு பெரிய குழந்தையைப் பார்த்ததே இல்லை!" என்று சொல்லி அவர்களை உள்ளே அழைக்கின்றனர். உள்ளே எட்டிப் பார்த்த அவர்களின் கண்களில் மிக மிகப் பலஹீனம் அடைந்த தேவகியும் அவள் அருகில் கிடந்த குழந்தையும் பட்டது. அவர்களில் அக்ரூரர் தான் சுயநினைவோடு இருந்தார். "சீக்கிரம், சீக்கிரம், நமக்கு நேரமே இல்லை. கம்சன் வந்துவிடுவான்." என்று அவசரப் படுத்த, தேவகி குழந்தையைக் கைகளில் எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கின்றாள். பின்னர் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குழந்தையை அந்தப் பெண்களிடம் ஒப்படைக்கின்றாள்.

முதியவள் குழந்தையைக் குளிப்பாட்டிக் கீழே விட கர்காசாரியார் தன் கைகளில் குழந்தையை எடுத்துக் கொண்டு, மந்திரங்களை ஜபித்துக் கொண்டே குழந்தையின் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிற்றைக் கட்டுகின்றார். "தேவகி இவனுக்கு என்ன பெயர் வைப்பது?" கர்காசாரியாரும், வசுதேவரும் தேவகியைக் கேட்க, தேவகி சிரித்துக் கொண்டே சொல்கின்றாள்"அவன் எவ்வளவு பலம் பொருந்தியவனாய் இருக்கின்றான்? இவன் பெயரும் பலா என்றே இருக்கட்டும்" என்கின்றாள். வசுதேவர் குருதேவரைப் பார்த்து, "தாங்கள் என்ன சொல்கின்றீர்கள் ஆசாரியரே?" என வினவ, "நான் இவனை ஸ்ங்கர்ஷணன் என அழைக்கப் போகின்றேன். இவன் தானாய்ப் பிறக்கவில்லையே, இழுத்துக் கொண்டல்லவா வந்தோம்?" என நகைக்கின்றார்.

வசுதேவர் குழந்தையைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்கின்றார். பின்னர் படகில் வந்திருந்த இளைஞனிடம் குழந்தையைக் கொடுக்கின்றார். அவன் உடனேயே அக்ரூரருடன் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகின்றான்.

Saturday, December 20, 2008

தமிழிசைக்கு ஒரு செளம்யா!

நேற்று மாலை ஜெயா தொலைக்காட்சியில் மார்கழி மஹோத்சவத்தில் திருமதி செளம்யா அவர்களின் இன்னிசைக் கச்சேரி நடந்தது. தன்னுடைய குருவான திரு ராமநாதனுக்கு வணக்கத்துடன் ஆரம்பித்த அவர், தமிழிசைக்குத் திரு ராமநாதன் செய்திருக்கும் அளப்பரிய தொண்டைப் பற்றியும் குறிப்பிட்டார். சிலப்பதிகாரத்தில் பெருமளவு இசை ஆய்வு செய்து அவர் வாங்கிய முனைவர் பட்டத்தையும் குறிப்பிட்டுவிட்டு, இன்று தானும் அவர் வழியைப் பின்பற்றித் தமிழ்ப் பாடல்களைச் சங்க காலத்தில் இருந்து பாபநாசம் சிவம், கவியோகி சுத்தானந்த பாரதியார் வரையிலும் உள்ள பாடல்களை எடுத்துக் காட்டப் போவதாய்க் குறிப்பிட்டார்.

முதல் பாடலாக சங்கப் பாடலில் அகநானூறுப் பாடலை எடுத்துக் கொண்ட செளம்யாவின் அகத்திலிருந்து உணர்வு பூர்வமாய்ப் பாட்டு வந்து அனைவரையும் சங்க காலத்துக்கே கூட்டிச் சென்றது. அடுத்ததாய்ச் சிலப்பதிகாரத்தில் அவர் எடுத்துக் கொண்ட ஆய்ச்சியர் குரவைப் பாடலும், அதை அடுத்த சோழர் காலப் பாடல்களும், அருணகிரிநாதரின் திருப்புகழும், அருணாசலக் கவிராயரின் பாடல்களும், ஒவ்வொன்றையும் அவர் பாடிக்காட்டி, சந்தேக விளக்கம் கொடுத்த முறையும், சிறிதும் தடுமாறாமல் தெளிவான உச்சரிப்புடன் பாடிய முறையும், ஒத்துழைத்த பக்கவாத்தியக் காரர்களும், பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆத்மார்த்தமாய் சங்கீதம் வருகின்றது என்பதை உணர முடிந்தது. ஒரு தவமே செய்கின்றார்.

தன்னுடைய ஐஐடி படிப்பை இம்மாதிரியான ஒரு ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு சிறிதும் நேரத்தையும் வீணாக்காமல், ரசிகர்களையும் ஏமாற்றாமல், சற்றேனும் அலட்டிக் கொள்ளாமலும் ஒவ்வொரு ராகமும் எந்த எந்தப் பண்ணில் அமைந்திருக்கவேண்டும் என்பதையும் அவற்றுக்கு உள்ள சிறு சிறு மாறுபாடுகளோடு பாடிக் காட்டியதையும் குறிப்பிடவேண்டும். தமிழிசை எவ்வாறு வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை நன்றாகவே சுட்டிக் காட்டியதோடு அல்லாமல் சத்தம் போடாமல் ஒரு புரட்சியே பண்ணி இருக்கின்றார்.

கடைசியில் அவர் பாடிய "வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு, வாழிய வாழியவே! வந்தேமாதரம்!" ஒரு அருமையான எடுத்துக்காட்டு. இன்று காலையும் மறு ஒளிபரப்பைக் கேட்க வைத்த நிகழ்ச்சியை அளித்த ஜெயா தொலைக்காட்சிக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். செளம்யாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

வந்தேமாதரம்!

Friday, December 19, 2008

ஆண்டாள் சொன்ன கீதாசாரம்! பகுதி 1


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!//

மார்கழி மாதம் பீடு நிறைந்த மாதம் எனச் சொல்லுவதுண்டு. தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம் ஆன இந்த மாதத்தில் தான் ஆண்டாள் பாவை நோன்பு இருக்கின்றாள். இந்தப் பாவை நோன்பு என்பது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றதாய்த் தெரிய வருகின்றது. பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது தெளிவாகின்றது. ஆண்டாளும், தன் மனதுக்கிசைந்த மணாளனுக்காகப் பாவை நோன்பு இருக்கின்றாள். காத்யாயனி நோன்பு எனவும் அழைக்கப் பட்டது.

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இது மார்கழி மாதம் முழு நிலவு நாளன்று ஆதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஆரம்பித்து, அடுத்த முழுநிலவு நாள் வரும் வரையிலும் ஒரு மாதம் நோன்பு இருந்ததாய்ப் பழைய நூல்களில் இருந்து தெரிய வருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணவாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என மு.ராகவையங்கார், பண்டிதமணி போன்றோர் கூறுகின்றார்கள்.
இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. கோகுலத்துப் பெண்கள் அனைவரும் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ஆற்றங்கரை மணலில், காத்யாயனி என்னும் சக்தி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, கண்ணன் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் கை கோர்த்துக் கொண்டு ஆடிப் பாடி நீராட்டத்தோடு வழிபாடும் செய்தனர் என்று தெரிய வருகின்றது. இந்த நோன்பு அவர்கள் இருந்ததின் நோக்கமே, கண்ணனைத் தங்கள் மணாளனாய் அடையவேண்டும் என்பதே.

சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்ததும் மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. சிறு பெண்கள் என்றால் ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள பெண்கள்.காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர்.
மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் ஆன பெளர்ணமி அன்று ஆரம்பித்திருப்பதாலேயே ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று ஆரம்பித்திருக்கவேண்டும். கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் பெண்களை நீராட அழைக்கும்போதே கண்ணனின் வளர்ந்த கோகுலம் பற்றியும், நந்தன் பற்றியும், யசோதை பற்றியும் சொல்லி விடுகின்றாள். மிகவும் மென்மையான சுபாவம் படைத்த நந்தகோபன், கண்ணனுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிவிடுகின்றானாம். கண்ணனின் கார்மேகம் போன்ற மேனி அழகையும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற அவன் முகத்தின் அழகையும் சொல்லிவிட்டு ஆண்டாள் அப்படிப் பட்ட கண்ணன் "நமக்கே பறை தருவான்" என்றது இந்த இடத்தில் கண்ணனையே சரணம் என அடைந்தவர்களுக்கு, ஆத்மஞானம் கிடைக்கும். அவர்கள் கண்ணனாகிய மெய்ப்பொருளின் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்திலே இருக்கின்றது என நம்புகின்றேன். கீதையின் தத்துவ சாரம் இந்த "பறை தருவான்" என்ற வரியிலே இருக்கின்றது.

Thursday, December 18, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 12, கம்சனின் கலக்கம்

நந்தன் வசுதேவரையும், தேவகியையும் பார்க்க அவர்கள் சிறை வைக்கப் பட்டிருந்த மாளிகைக்குச் செல்லுகின்றான். அவனுடன் கூடவே அக்ரூரரும், கர்காசாரியாரும், செல்லுகின்றனர். அங்கே வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியும் இருக்கின்றாள் அவர்களுடன். ரோகிணியின் முகத்தில் ஒரு தெளிவான தீர்மானமும்,உறுதியும் பளிச்சிடுகின்றது. ஏதோ ஒரு திட்டமான முடிவில் இருக்கின்றாள் என்பது புலனாயிற்று. நிறை கர்ப்பிணியாக இருக்கும் ரோகிணியையும், தேவகியையும் பார்க்கப் பார்க்க அவர்கள் இருவரின் நிலையை நினைந்து அனைவர் மனதிலும் பெரும் துக்கம் சூழ்ந்தது. சிறிது நேரம் அனைவரும் கம்சன் பிடியில் இருந்து இந்தக் குழந்தையைத் தப்புவிக்க என்ன வழி என யோசித்து, யோசித்துக் குழம்பிப் போனார்கள். இதுவும் கம்சன் பிடியில் அகப்பட்டுச் சாவது ஒன்றுதான் அதன் விதியா என நினைந்து தேவகி மனம் தாளாமல் அழத் துவங்க, ரோகிணி பேசத் துவங்கினாள். மெல்ல, மெல்ல அவள் பேசப் பேச அனைவரும் உற்றுக் கேட்டனர். அவள் தான் தீர்மானம் செய்துவிட்டதாயும், யாரும் தன்னைத் தடுக்க வேண்டாம் எனவும் சொல்லுகின்றாள். அனைவரும் அவளை மிகுந்த மரியாதையுடனும், மனதில் அவள் பால் கொண்ட பெருமையுடனும் பார்க்கின்றனர். கண்கள் கண்ணீரை மழையென வர்ஷிக்க ரோகிணி, பேசி முடிக்கின்றாள்.

மறுநாள் கோகுலம் திரும்பும் நந்தனோடு ரோகிணியும் திரும்பச் செல்கின்றாள். ஆனால் நந்தனுடன் கூட வந்த பணியாட்களில் சிலரும், அவனுடன் கூட வந்த வண்டிகளில் சிலவும் கோகுலம் செல்லும் வழியில் குறிப்பிட்ட இடங்களில் நின்று கொள்கின்றன. நந்தன் பிரயாணம் செய்த வண்டி மட்டும், ரோகிணியையும் அழைத்துக் கொண்டு கோகுலம் சென்றடைகின்றது. இங்கே கம்சன் மாளிகையில் இரவு தூங்கும்போது பயங்கரக் கனவு கண்டு விழிக்கின்றான். கனவா? நனவா? அவனால் தெளிவாய்ச் சொல்ல முடியாமல் மனக் குழப்பம் சூழ்கின்றது அவனை. தேவகி பிரசவித்திருக்கும் அறையினுள் கம்சன் தன் வாளைத் தூக்கிக் கொண்டு செல்கின்றான். இரு ஆண் குழந்தைகளை அங்கே அவன் காண்கின்றான். அதோ! அந்த நீலமேகம் போல் பிரகாசிப்பவன் தான் எட்டாவது குழந்தையா?? அடடா? என்ன அழகு? என்ன ஜ்வலிப்பு? தக தகவென நீலத் தாமரை போல அல்லவா இருக்கின்றான்? நீலமா? கருமையா? புரியாத ஒரு பள பளப்பு! பார்க்கும்போதே குழந்தை வளர்ந்து பெரியவன் ஆகிவிடுகின்றான். இது என்ன? இவன் தலையில் ஒரு அழகான கிரீடம்? இதோ சங்கு, சக்கரம்?? கம்சன அனைத்தையும் பார்த்துப் பிரமித்த வண்ணம் நிற்க அந்தப் பையன் தன் கையில் இருந்த சக்கரத்தைக் கம்சன் மீது ஏவ, சக்கரம் பறந்து வந்து கம்சன் தலையை இரு துண்டாக்கியதை அவனே தன் கண்ணால் பார்க்கவும் நேர்ந்தது. ஆனால் அந்தப் பையனோ?? சிரித்துக் கொண்டல்லவா இருக்கின்றான்? இங்கே மாமன் தலை ரத்த வெள்ளத்தில் மிதக்க அங்கே அந்தப் பையன் சிரிப்பு??? யார் இவன்???

கம்சன் குழப்பத்தோடு ஒரு முடிவுக்கும் வந்தான் தன் அந்தரங்கத் தளபதியான ப்ரத்யோதாவின் மனைவியான பூதனையைக் கூப்பிட்டு அனுப்பினான். அவனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உகந்த பூதனையிடம் அவன் தன்னுடைய கனவைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவளை தேவகியிடம் அனுப்பி தேவகிக்கு எப்போது பிரசவம் நடக்கும் என்பதைக் கண்டறிந்து வரச் சொன்னான். பூதனையே தேவகியைக் காவலும் காத்து வருவதால் பிரச்னை ஒன்றுமில்லாமல் பூதனை தேவகியையும், மற்றவர்களையும் விசாரித்து அறிந்து தேவகிக்குப் பிரசவம் நடக்கக் குறைந்த பட்சம் முப்பது நாட்களாவது ஆகலாம் எனக் கண்டறிகின்றாள். அதைக் கம்சனிடம் சொல்ல அவனும் நிம்மதி அடைகின்றான். நாட்கள் நகர்கின்றன.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 11

இங்கே மதுராவில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. மதுராவை ஒட்டி உள்ள கோகுலத்தில் ஷூரர்களின் ஒரு பிரிவின் தலைவனாய் இருந்த நந்தகோபன் தன் முந்நூறு பசுக்களையும் இந்தப் பஞ்சத்தில் இருந்து காக்க வழி தெரியாமல் விழிக்கின்றான். பலவகையான பிரார்த்தனைகள் செய்யப் படுகின்றன. தன்னை நம்பி இருக்கும் தன் குலத்தவர் வாடாமல், அவர்களுக்குத் தேவையானவற்றைத் தன்னால் முடிந்தவரையில் செய்து கொடுக்கின்றான் நந்தகோபன். அவன் மனைவியான யசோதையும் இதற்கு ஒத்துழைக்கின்றாள். அங்கிருக்கும் அனைத்து யாதவர்களுக்கும் அவர்கள் இருவரும் தந்தை போலவும், தாய் போலவும் தெரிகின்றனர். ஒரே ஒரு குறை தான் நந்தனுக்கு. தன் குலம் விளங்க ஒரு குழந்தை இல்லையே என. தன் பசுக்களையும், தன் குடிமக்களையுமே சொந்தக் குழந்தைகள் போல் அன்புடன் நடத்தி வந்தான். எனினும் இப்போதைய இந்தப் பஞ்சத்திற்கு கம்சனின் நடவடிக்கைகளே காரணம் என்பதில் அங்கே யாருக்கும் சந்தேகமே இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகப் பச்சிளம் குழந்தைகள் ஆறு பேரை கம்சன் கொன்றுவிட்டான் கொடூரமாய். இந்தப் பஞ்சம் நிச்சயமாய் அதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என்பதில் வ்ரஜபூமியில் யாருக்கும் சந்தேகமே இல்லை.

என்றாலும் யாரும் வாயைத் திறக்கவில்லை. இதோ, தேவகி ஏழாவது முறையாகக் கர்ப்பம் தரித்துப் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றாள். ஆனால்?? இது என்ன? வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியும் கர்ப்பமாய் இருக்கின்றாள் போல் தெரிகின்றதே? நடக்கப் போவதைப் பார்த்தால் ரோகிணிக்குச் சீக்கிரமாய்க் குழந்தை பிறக்கும் போலும் தெரிகிறதே?? கம்சனுக்கும் செய்தி எட்டியுள்ளது. தன்னை அழிக்கத் தன் தங்கையான தேவகியின் கர்ப்பத்தில் பிறக்கும் எட்டாவது குழந்தையா? இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம். எப்படி இந்த தேவகி தன் குழந்தையைக் காப்பாற்றப் போகின்றாள்?? ம்ம்ம்ம்?? ஆனால் இது என்ன? இந்த ஷூரக் கூட்டத்தின் தலைவன் ஆன கோகுலத்து நந்தன் ஏன் இன்னும் கப்பமே செலுத்தவில்லை? ஆள் அனுப்பவேண்டியது தான். கம்சன் உத்தரவுகள் பிறப்பித்தான். ஷூரர்களுக்கும், யாதவக் குலத்தில் சிலருக்கும் ஆச்சாரியராய் இருந்தவர் கர்கர். கர்காசாரியார் ஒரு நாள் திடீரென கோகுலத்துக்கு விஜயம் செய்கின்றார். நந்தனுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். நந்தன் பதில் பேசாமல் மெளனமாய் ஆசாரியரின் பேச்சைச் செவி மடுக்கின்றான். அடுத்த நாளே ஆசாரியர் தெரிவித்தாற்போல் கம்சனின் ஆட்கள் வந்து நந்தனை மதுராவிற்கு வந்து கம்சனைச் சந்திக்குமாறு சொல்லுகின்றனர். நந்தனும் புறப்படுகின்றான் கம்சனைச் சந்திக்கத் தகுந்த முன்னேற்பாடுகளுடனும், பரிசுப் பொருட்களுடனும்.

நந்தன் மதுரா வந்து சேர்ந்து கம்சனையும் சந்திக்கின்றான். ஏற்கெனவே மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கின்றான் கம்சன். இப்போது பிறக்கப் போவது ஏழாவதா/ எட்டாவதா? அடிக்கடி இந்தச் சந்தேகம் வேறே வந்துவிடுகின்றது. ஒற்றர்கள் வேறே ஷூரர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேவகியின் பிரசவத்தை எதிர்ப்பார்ப்பதைப் பற்றியும், நாடு முழுதும் பிறக்கப் போகும் அந்தக் காப்பாளன் பற்றியும், தெய்வீகக் குழந்தை பிறக்கப் போகும் நன்னாள் பற்றியும் பேசுவதையும், தன்னுடைய கொடூரங்கள் சகிக்க முடியாமல் போவதாய்ப் பேசிக் கொள்வதையும் கேட்டுக் கொண்டு வந்து சொல்கின்றனர். இந்நிலையில் நந்தனைச் சந்தித்த கம்சன், அவன் ஏன் இன்னும் கப்பம் செலுத்தவில்லை எனக் கேட்க, விவசாயம் சரிவர நடைபெறாததையும், ஏழை விவசாயி படும் கஷ்டத்தையும் நந்தன் சொல்கின்றான். நிலத்தை அவனிடமிருந்து பிடுங்கும்படி கம்சன் சொல்ல நந்தன் மிகப் பணிவோடு மறுக்கின்றான். அது அதர்மம் என எடுத்துக் காட்டுகின்றான். “ஹா, ஹா, அதர்மம்? எது அதர்மம் நந்தா? பணம் கொடுக்க முடியவில்லை எனில் அவர்களுக்கு நிலம் எதுக்கு?? பணம் கிடைக்குமென்றால், அதனால் வரும் சுகத்தை அனுபவிக்க முடியுமென்றால் நான் எந்த அளவுக்கும் போகத் தயாராய் இருக்கின்றேன். அது சரி, இது என்ன நான் கேட்பது? உன்னுடைய ஷூரர்கள் ஏதோ ரட்சகன் வந்து பிறந்து என்னை அழிக்கப் போவதாய்ப் பேசிக் கொள்கின்றார்களாமே?? ஜாக்கிரதை! நான் இருக்கும் வரையில் எதுவும் நடவாது! அவர்களை அடக்கி வை!” என்று சொல்கின்றான்.

நந்தன் கம்சன் அறியாவண்ணம் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு, "அரசே, தங்களை மீறி நாங்கள் யார் என்ன செய்யமுடியும்? தாங்கள் கூறியது போலவே அவர்களை அடக்குகின்றேன். ஆனால் அதற்கு முன்னர் நான் வசுதேவரைப் பார்க்கவேண்டுமே? எங்கள் ஷூர வம்சத்தின் தலைவரும், அரசரும் அவர்தானே? அவரிடம் பேசிவிட்டு நான் சென்று மற்றவர்களிடம் வசுதேவரின் இஷ்டம் இது எனச் சொன்னால் ஒத்துக் கொள்ளலாம். அதுதான் எனக்கு எளிதும் கூட", என்று சொல்லுகின்றான். சற்றே யோசித்த கம்சன், பின்னர் ரொம்பவும் தான் மறுத்தால் பின்னால் அனைவரும் சந்தேகம் கொள்வார்கள் என்று சம்மதிக்கின்றான். நந்தன் வசுதேவரைச் சந்திக்கச் செல்கின்றான்.

Wednesday, December 17, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், குந்தியின் கலக்கம்! - பகுதி 10

வியாசர் யோசிக்கின்றார். தன் அன்னையையும், பீஷ்மரையும் தேற்றுகின்றார். குருவம்சம் அழியாது எனவும் பாண்டுவின் புத்திரர்கள் மூலம் அது வாழையடி வாழையாய்ப் பரவிப் பெரும் புகழடையும் எனத் தன் மனக்கண்ணால் கண்டு அறிந்ததாயும் சொல்லுகின்றார். தர்மத்தின் பாதுகாவலர்கள் ஆன குரு வம்சத்தினரின் அழிவுக்குத் தன் தாய் காரணம் ஆக மாட்டாள் எனவும் கூறிய வியாசர், குரு வம்சம் அழிந்தால், பூமியில் தர்மமும் அழிந்து விடும். ஆகவே குரு வம்சத்தைக் காக்கவேண்டிய கடமை தனக்கும் இருக்கின்றது என்று சொல்லுகின்றார். குந்தியைத் தான் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார். சத்தியவதி குந்தியை வியாசர் சந்திக்க ஏற்பாடு செய்கின்றாள். குந்தியின் அந்தப் புரத்தில் சந்திப்பு நடக்கின்றது. குந்தி வியாசரை நமஸ்கரித்து எழுந்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டதும், விம்மி, விம்மி அழுகின்றாள்.

“முனிவரே, நான் சாக வேண்டும், சாகவேண்டும், இருக்கக் கூடாது!” எனப் புலம்புகின்றாள். “குந்தி என்ன இது? நீ இவ்வாறு அழலாமா?” என வியாசர் கேட்கின்றார். பாண்டுவிற்கு நேரிட்ட சாபத்தைப் பற்றியும் தான் அறிந்ததாய்ச் சொல்லுகின்றார். குந்தியை அதன் பொருட்டு தைரியம் இழக்கவேண்டாம் எனவும் சொல்லுகின்றார். குந்தி கூறுகின்றாள்:” முனிவரே, எனக்குக் குழந்தைகளிடம் எவ்வளவு ஆசை என்பதைத் தாங்கள் அறிவீர்கள்! ஆஹா, அறியாப் பருவத்திலே பொக்கிஷம் போல் எனக்குக் கிடைத்த அந்தக் குழந்தை! அவன் மட்டும் இப்போது இங்கே இருக்கக் கூடாதா? நான் அவனை மீண்டும் பார்ப்பேனா? வாராது வந்த மாமணியைத் தவற விட்டேனே? என்னைப் போல கொடுமையான தாயும் இருப்பாளோ?? ஒவ்வொரு நாளும், மணியும், நிமிடங்களும் நான் அந்த என்னுடைய குழந்தைக்காகக் காத்திருக்கின்றேனே? இனி அதன் முகத்தையாவது காண்பேனா? எத்தனை அழகு? ஆசானே, நீங்கள் தானே அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றீர்கள்? இல்லை, இல்லை, நான் தவறு செய்கின்றேன், ஆசானே, என்னை மன்னியுங்கள், ஏதோ பிதற்றுகின்றேன். பிறந்த அந்தக் குழந்தையின் சிரிப்பை மட்டுமில்லாமல் இன்னும் எனக்குப் பிறக்க இருந்த குழந்தைகளின் சிரிப்பையும் காண முடியாமல் நான் தவிப்பது உங்களுக்குப் புரிகின்றதா? நான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டுமா? சாவது ஒன்றே வழி ஆசானே! எனக்கு அதற்கு வழி சொல்லுங்கள்.” வெடித்துச் சிதறுகின்றாள் குந்தி.

குந்தியின் தாபத்தையும், புலம்பல்களையும் பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டார் வியாசர். “குந்தி, பொறுமையுடனே இரு. உனக்குக் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணிற்குத் தாய்மை எய்துவது தான் பூரணத்துவம் கிட்டுவதாய் ஒவ்வொரு பெண்ணும் நினைக்கின்றனர். ஆகவே நீ நினைப்பதில் தவறில்லை. உனக்கும் குழந்தைகள் பிறக்கும். சற்றே பொறுமையுடனே நான் சொல்வதைக் கேட்பாயாக!” என வியாசர் சொல்ல, குந்தி அவரை ஆவலுடன் பார்க்கின்றாள். “குந்தி, நான் சொல்லும் விரதங்களை மேற்கொள்வாயாக, நான் சொல்லும் பிரார்த்தனை மந்திரங்களைச் சொல்லுவாயாக, நீ செய்யப் போகும் இந்தக் காரியத்தினால் உன்னுடைய பத்தினித் தன்மைக்குப் பங்கம் ஏதும் நேராது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் சம்மதிப்பார்கள். உன் கணவனுக்கும் இது சம்மதமாய் இருக்கும். நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்கின்றேன். இது கடவுளரை உனக்குக் காட்டிக் கொடுக்கும். இந்த மந்திரத்தை நீ ஜபித்து வந்தாயானால், ஒரே தியானத்தில் இருந்தாயானால் அந்தக் கடவுளரின் சக்தி உன்னிடம் வந்து சேரும். அவர்களின் ஆசிகளும் உன்னை வந்து சேரும், முறைப்படியான வழிபாடுகளை செய்துவிட்டு நீ உன்னுடைய கணவன் ஆன பாண்டுவைத் தவிர வேறு யாரையும் நீ நினையாமல் இருந்து வா. ஈசனின் அருளால் உனக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்களால் தர்மம் தழைக்கும். குரு வம்சமும் பெருமை பெறும். இது உறுதி ” எனச் சொல்லுகின்றார். குந்திக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

Tuesday, December 16, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 9 அஸ்தினாபுரத்தில் நடந்தது என்ன?


இப்போது நாம் சற்று வியாசரைத் தொடர்ந்து அஸ்தினாபுரம் வரைக்கும் போயாகவேண்டிய வேலை இருக்கின்றது. அஸ்தினாபுரத்தின் ராணிமாதாவான சத்தியவதி வியாசரை அழைத்திருக்கின்றாள். சத்தியவதி குரு வம்சத்து அரசன் ஆன ஷாந்தனுவின் மனைவியாவாள். ஷாந்தனுவிற்கு முதலில் கங்கை மனைவியாக இருந்தாள். கங்கைக்கும், ஷாந்தனுவிற்கும் பிறந்த பிள்ளையே பீஷ்மர். இவர் பெயர் உண்மையில் தேவ விரதர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து வாலிபப் பருவம் எய்திய தருணத்தில் இவரின் தந்தை ஆன ஷாந்தனு, கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தவருக்கு, திடீரென சுகந்தமான மணம் வீச, மணம் வந்த திக்கை நோக்கிய ஷாந்தனுவின் கண்களுக்கு அங்கே உலாவிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணான மச்சகந்தி என்னும் சத்தியவதி கண்ணில் பட்டாள்.
அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட ஷாந்தனுவிடம் சத்தியவதியின் தந்தை, “என் பெண்ணிற்குப் பிறக்கும் மகனே பட்டம் சூடி மன்னன் ஆகவேண்டும்.” என நிபந்தனை விதிக்க, ஷாந்தனு, மூத்த மகனும், வீரனும், பரசுராமரின் சீடனும் ஆன தேவ விரதன் இருக்கையில் சத்தியவதியின் பிள்ளைக்கு முடி சூட்ட முடியாது என மறுக்கின்றான். ஆனால் அரண்மனைக்கு வந்தும் சத்தியவதியின் அழகை எண்ணி, எண்ணி ஏங்க, தந்தையின் கவலையைப் போக்க எண்ணிய தேவ விரதர், “வாழ்நாள் முழுதும் பரிபூரண பிரம்மசரியம் காப்பதாய்” கடுமையான சபதம் பூண, விண்ணோரும், மண்ணோரும் அவரை “பீஷ்ம, பீஷ்ம” என ஆசீர்வதிக்க, அன்றில் இருந்து அவர் பெயர் பீஷ்மர் ஆயிற்று.

அதே போல் அன்றிலிருந்து இன்று வரையிலும் குரு வம்சத்தின் முன்னேற்றத்தையும், அஸ்தினாபுரத்தை ஆளும் அரசனுக்கு உதவிகள் புரிந்தும், ஆலோசனைகள் சொல்லியும் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார் பீஷ்மர். அவர் கடுமையான சபதம் பூண்ட காரணத்தாலும், அவரின் பக்தியை மெச்சியும், அவர் விரும்பும்போது மரணம் அவரைத் தழுவும் என ஆசீர்வதிக்கப் பட்டதால் வயது சென்றும் பரிபூரண பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் திகழ்ந்தார். தன் தம்பியின் மகன்கள் ஆன திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் பெருமளவில் உதவி வந்தார். அந்நாட்களில் பீஷ்மர் ஒரு நாட்டிற்குப் படை எடுத்து வருகின்றார் என்றாலே அனைவரும் நடுங்கினர். அவரின் வயதையும், தவத்தையும், ஞானத்தையும், சரியான நேரத்தின் சரியான முடிவை எடுக்கும் விவேகத்தையும் எண்ணி, அனைவரும் அவரை மதித்தும், போற்றியும் வந்தனர். பீஷ்மரின் சிறிய தாயும், ஷாந்தனுவின் மனைவியுமான சத்தியவதியும் பலமுறை விரதத்தைக் கைவிட்டு பீஷ்மரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியும் அவர் மறுத்துவிட்டார். இப்போது அஸ்தினாபுரத்துக்கும், அதன் ராணிகளுக்கும் கொஞ்சம் போதாத காலமோ என்னும் வண்ணம் திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரி கர்ப்பம் தரித்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கு ஏதோ ஒரு சாபம் இருக்கின்றது. அதனால் தாமதம் ஆகின்றது. திருதராஷ்டிரனோ பிறவிக் குருடன். ஆகையால் அவனால் அரசாள முடியாது. எனவே அவன் தம்பியான பாண்டுதான் அரசனாய் இருந்து வந்தான்.

இந்தப் பாண்டுவிற்குத் தான் வசுதேவரின் சகோதரியும், குந்திபோஜனின் வளர்ப்பு மகளும் ஆன ப்ரீத்தா என்னும் குந்தியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றது. இது தவிரவும் மாத்ரி என்னும் பெண்ணையும் பாண்டு விரும்பித் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான். எனினும் அவனுக்கும் குழந்தை பிறக்க வழியில்லை. அவனுக்கும் அத்தகையதொரு கடுமையான சாபம் உள்ளது. இந்நிலையில் குரு வம்சம் தொடர்ந்து அரசு கட்டிலில் இருக்குமா? இந்த வம்சம் இத்தோடு முடிந்து விடுமோ? சத்தியவதி தன் கணவனுக்குச் செய்து கொடுத்த சத்தியம், எப்பாடு பட்டாவது குருவம்சத்தைக் காப்பது என்பதே. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் எவ்வாறு குரு வம்சத்தைக் காப்பது? ஒன்றும் புரியவில்லையே?? இந்த அழகில் பாண்டுவின் மனைவி குந்தி அக்னிப்ரவேசம் செய்யப் போகின்றாளாமே?? குழம்பித் தவித்தாள் சத்தியவதி. வயது அறுபதுக்கு மேலாகியும் இன்னும் இளமையின் அழகுக் கிரணங்கள் அவளை விட்டு நீங்கவில்லை. பார்ப்பதற்கே ஒரு தேவ கன்னிகையைப் போல் இருந்த அவளின் நெற்றியில் இருந்த ஈசனின் பக்தை எனக் குறிக்கும் அடையாளம் ஆன சாம்பலில் இருந்தே அவள் ஓர் விதவை எனப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் அருகே பீஷ்மரும் அமர்ந்திருந்தார். இருவரும் வியாசருடன் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்.

சத்தியவதி நிலைமையைத் துல்லியமாய் அறிந்து வைத்திருந்ததால் வியாசரிடம் எடுத்து உரைத்தாள். பராசரரிடமே வளர்ந்து வந்த வியாசர் தன் தாய் யார் என அறிந்ததும், அவளை வந்து பார்த்து நமஸ்கரித்துத் தாய் விரும்பும்போது தன்னை அழைக்குமாறும், அவளின் ஆவலைப் பூர்த்தி செய்வது தன் கடமை எனவும் கூறி இருந்தபடி, அவ்வாறே அவர் இன்று வரை நடந்தும் வந்தார். தன் தம்பியின் இரு மனைவியருக்கும், அவர்களின் பணிப்பெண்ணிற்கும் குழந்தைப் பேறு அளிக்க உதவி செய்தார். ஆகவே இப்போதும் வியாசரின் உதவியை நாடினாள் சத்தியவதி. தன்னாலேயே பீஷ்மர் இம்மாதிரியான சத்தியத்தைச் செய்ய வேண்டியிருந்தது பற்றியும் குரு வம்சம் அழியத் தான் காரணமாய் இருந்துவிடுவோமே என்றும் அச்சமாய் இருந்தது அவளுக்கு. பீஷ்மரும் சத்தியவதியும் வியாசரிடம் நிலைமையை எடுத்து உரைக்கின்றனர். எல்லாவற்றிலும் முக்கியமாய்க் குந்தியின் நிலை?? குழந்தைகளிடம் மாறாத அன்பு கொண்டிருக்கும் குந்திக்கு பாண்டுவின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பது தெரிந்ததும் அவள் தன்னைத் தானே அக்னியில் இட்டுக் கொள்வதின் மூலம் மாய்த்துக் கொள்ளப் போகின்றாள் என்பது தெரிந்தால்?? குரு வம்சத்தின் கதி என்னவாகும்??

Sunday, December 14, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி -8 வேத வியாசர்.

பராசர முனிவருக்கும், சத்யவதிக்கும் பிறந்த பிள்ளையான வேத வியாசரைப் பிறந்ததில் இருந்தே பராசரர் வளர்த்து வந்து அனைத்து சாஸ்திரங்களையும் கற்பித்தார். தன் குமாரனாலேயே வேதங்கள் புதிய வடிவம் பெற்றுப் பொலியப் போவதோடு அல்லாமல், அவனே ஒரு ஆசாரியனாகவும் இருக்கப் போகின்றான் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த பராசரர், அதற்கு ஏற்றாற்போலவே தன் குமாரனும் வளர்ந்து வருவதை எண்ணி மகிழ்ந்திருந்தார். வேதங்களைக் கண்டு அறிந்ததோடு அல்லாமல் அவற்றை நான்கு பாகமாகவும் பிரித்து ஒவ்வொன்றையும் கற்பிக்கத் தன் சீடர்களையும் நியமித்திருந்தார் வேத வியாசர். அவருடைய வேத பாடசாலை அந்நாட்களில் மிகவும் பிரசித்தி அடைந்திருந்தது. மன்னாதி மன்னர்களும், ரிஷி குமாரர்களும் அதில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்களாக இருந்து வந்தனர். பல மன்னர்களுக்கும் குடும்ப ஆசாரியனாக இருந்து வந்தார் வியாசர். அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை, நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அறிந்தவர் அவர் என்றும் அனைவராலும் சொல்லப் பட்டதோடு அல்லாமல், உண்மையில் அனைத்தும் அறிந்தவராகவே இருந்தார் வியாசர். மேலும் அவர் படகுகளிலே தன் சீடர்களோடு சென்று நதிக்கரைகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கி ஒவ்வொரு நாட்டிலும், மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் வேதங்கள் பற்றியும், யாகங்கள், யக்ஞங்கள் பற்றியும் எடுத்துச் சொல்லுவதோடு அல்லாமல், கற்பித்தும் வந்தார். ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட நாட்கள் தங்கி இருந்து இந்தச் சேவையைச் செய்து தர்மத்தையும், நியாயத்தையும், சத்தியத்தையும் பரப்பி வந்தார்.


இத்தகைய பெருமை வாய்ந்த முனி சிரேஷ்டர் ஆன வியாசரின் வருகையால் மதுரா நகரே குதூகலம் கொண்டது. யமுனைக்கரைக்கு அவரை வரவேற்க அக்ரூரர் சென்றார். முனிவர் படகிலிருந்து இறங்கும்போது, அவருடன் கூடவே ஒரு விவேகியான முகத் தோற்றத்துடன் கூடிய இளைஞன் ஒருவனும் இறங்குவதைக் கண்டார் அக்ரூரர். மிக நீண்ட தாடியுடன் இருந்த வியாசர், கண்களாலேயே சிரித்தார், அக்ரூரரைக் கண்டு. அக்ரூரருக்கு இதமான மயிலிறகால் அந்தப் பார்வையே வருடுவது போல் தெரிந்தது. "அக்ரூரா, இதோ என் குமாரன் விதுரன், இவனைத் தெரியுமா உனக்கு?" எனக் கேட்டார் வியாசர் பரிவும், அன்பும் நிறைந்த குரலில். ஆஹா, இவன் அந்தப் பையனா??? அஸ்தினாபுரத்து ராணிகளின் வேலைக்காரியாக இருந்து, ராணிக்குப் பதிலாய் வியாசரிடம் பிள்ளை வரம் பெற்றவளின் பையனா?? இவன் முகத்திலேயே விவேகமும், அமைதியும் தெரிகின்றதே என அக்ரூரர் நினைத்தார்.

அனைவரும் சென்று வசுதேவரையும், தேவகியையும் கண்டனர். முனிவரை நமஸ்கரித்த வசுதேவரையும் தேவகியையும், ரிஷி ஆசீர்வதித்தார். பின்னர் இருவரையும் தன்னுடன் இந்திரப் பிரஸ்தம் வருமாறு அழைக்க, வசுதேவர் கம்சனுக்குப் பயந்து மறுக்கின்றார். வியாசர் இருவரையும் தேற்றுகின்றார். "கம்சன் அரக்க குணத்தோடு பிறந்திருக்கின்றான். அதை மாற்ற யாராலும் இயலாது. அவனுடைய பாவங்களை அவன் முற்றிலும் அனுபவித்துத் தீர்ப்பான். உங்கள் இருவருக்கும் விடுதலை கிடைக்கும். வசுதேவா, இப்போது உனக்குப் பதிலாய் அக்ரூரன் வரட்டும் என்னோடு. பீஷ்மன் புரிந்து கொள்ளுவான் உன்னுடைய நிலைமை. நீ அதை எண்ணி வருந்தாதே." என்கின்றார். தேவகி வியாசரிடம் தன் கவலையையும், பயத்தையும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளைக் கம்சன் கொன்றுவிடப் போவதையும் சொல்லி அழுகின்றாள். வியாசர் அவளைத் தேற்றி, "பொறுமையாக இரு மகளே! நாரதர் கூறியது நிச்சயம் பலிக்கப் போகின்றது." என்று சொல்கின்றார்.

வசுதேவரோ, "நாரதர், தேவலோகத்து ரிஷி ஆவார். அவர் அவ்வளவு சுலபமாய் பூவுலகு வந்து கம்சன் போன்றவர்களைப் பார்த்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி இருப்பது உண்மையா?" என்று சந்தேகம் கேட்க, வியாசர் சொல்லுகின்றார்: " வசுதேவா, சந்தேகமே வேண்டாம். இந்த விஷயம் பேசப் படும்போது நானும் அங்கே இருந்தேன். என் காதுகளாலேயே கேட்டேன். தேவாதி தேவர்களும், பிரம்மாவும் பேசும்போது பூவுலகில் அதர்மம் அதிகம் ஆகிக் கொண்டே போவதால் சாட்சாத் அந்தப் பரம்பொருள் அவதாரம் செய்யும் வேளை நெருங்கிவிட்டது, எனக் கூறினார்கள். ஆகவே ஒரு அதிசயம் நிகழப் போகின்றது. நம்மை எல்லாம் காக்க ஒரு அருளாளன் தோன்றப் போகின்றான். இது சத்தியம்!" என்று சொல்கின்றார் வியாசர். தேவகியோ, "தந்தையே, அந்த அவதார புருஷன் என் வயிற்றில் உதிப்பானா? இது உண்மையா? அப்படியே அவன் உதித்தாலும் இந்தக் கம்சனிடம் இருந்து தப்புவானா? அது நடக்குமா?" என்றெல்லாம் கூறிக் கலங்குகின்றாள்.

வியாசர் சற்று நேரம் மெளனமாய் இருந்துவிட்டுப் பின்னர் தன் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து போகின்றார். சற்று நேரத்தில் கண் விழித்த அவர் சொல்லுகின்றார்:" அம்மா, கட்டாயம் ஒரு அவதார புருஷன் தோன்றப் போகின்றான். அதுவும் உன் வயிற்றிலேயே பிறக்கப் போகின்றான். அவனை வெல்ல யாராலும் முடியாது. கம்சனால் அவனைத் தொடக் கூட முடியாது. நம்பிக்கையுடன் காத்திரு. பிறக்கப் போவது அந்தப் பரம்பொருளே!" என்று சொல்லி ஆசீர்வதிக்க, சந்தோஷத்துடனும், ஆச்சரியத்துடனும், ஏற்கெனவே மனமும், உடலும் தளர்ந்திருந்த தேவகி மயக்கம் அடைந்தாள். நாட்கள் சென்றன. ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப் பட்டன. தேவகி ஏழாவது முறையாகக் கர்ப்பம் தரித்தாள்.

Saturday, December 13, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 7 அக்ரூரர்

எல்லாரும் மாயை பற்றியும், பிரம்மம் பற்றியும், கீதை பற்றியும், தத்துவங்களாய் எழுத நான் மட்டும் கதை எழுதுவது பற்றிச் சிலர் கேட்கின்றனர். இது தான் ஆன்மீகமா என்றும் சிலருக்குச் சந்தேகம். இது ஆன்மீகம் இல்லைதான். நானும் ஆன்மீகம் எழுதறேன்னு சொல்லிக்கவும் இல்லை, சொல்லவும் முடியாது. பக்திக் கதைகளே இவை. ஆரம்ப நிலையில் இருக்கிறவங்களுக்கும், அதைத் தாண்டினவங்களுக்கும், இன்னும் சொல்லப் போனால் வேதாந்திகளுக்கும் அனைவருக்குமே எளிமையாகப் புரியக் கூடியது இது ஒன்றே. பலராலும் திரும்பத் திரும்பச் சொல்லப் படுவதும் இந்த இதிகாசப் புராணக் கதைகளே. ஏனெனில் அவற்றின் தாக்கம் நம்மிடையே ஏற்படுத்தும் விளைவுகள். அரிச்சந்திர புராணத்தால் ஒரு காந்தி மாறினாற்போல் இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலமும், கேட்பதன் மூலமும் நம்மில் பலருக்கும் இறை தத்துவத்தின் உண்மையும், எளிமையும், ஆழமும் புரியவரும். பலருக்கும் புரிய வேண்டும் என்பதாலேயே தமிழையும் எளிமைப் படுத்தியே எழுதணும்னு விருப்பம். திரும்பத் திரும்பப் படிச்சால் கண்ணன் அவதாரத்தின் தத்துவம் முழுமையாய்ப் புரியும். தர்மத்தை நிலை நாட்ட அவன் பட்ட பாடு புரியும். நாமும் அதர்மத்தின் வழி செல்லாமல் இருக்கும் மன உறுதியையும் பெறுவோம். நாம் செய்த, செய்யும், செய்யப் போகும் அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்யும் திடமும் பெறுவோம். அதன் பலாபலன்களையும் எண்ணாமல் இருப்போம். எல்லாம் அவன் செயல். இனி அடுத்த பகுதி:-
*************************************************************************************

யாதவ சமூகத்தின் ஒரு பிரிவான வ்ருஷ்ணி குலத்தைச் சேர்ந்த இளம் தலைவர் ஆன அக்ரூரர் எப்போதும், தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல், தனக்கென விதிக்கப் பட்ட கர்மாக்களை முறையாகச் செய்து வருபவர். அதனாலேயே அனைத்து யாதவ குலத் தலைவர்களால் கூடப் பெரிதும் மதிக்கப் படுபவர். அவர் ஒரு கருத்துச் சொன்னால் அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அனைவரும் அவருக்குக் கட்டுப் படுவார்கள். ஆகவே இப்போது தேவகிக்குக் குழந்தை பிறந்திருக்கும் விஷயம் தெரிந்து அனைத்து யாதவ சமூகத் தலைவர்களும் அக்ரூரரைத் தேடி வந்தனர். அவரிடம் தேவகியையும், ஒன்றுமறியா அந்தச் சின்னஞ்சிறு சிசுவையும் காப்பாற்ற வேண்டிப் பிரார்த்தித்தனர். அக்ரூரரும் ஒத்துக் கொண்டு, தன்னுடன் யாதவத் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு கம்சனைப் பார்க்க அவன் மாளிகைக்கு வந்தார். அப்போது தனக்குப் பிறந்த பச்சிளம் குழந்தையோடு வசுதேவரும் கம்சனைக் கண்டு அந்தக் குழந்தையை ஒப்படைக்க வந்தார். தான் சொன்ன சொல் தவறாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்ட பிறகாவது கம்சன் மனம் இளகுமோ என்ற எண்ணம் வசுதேவருக்கு.

அக்ரூரரும் கம்சனை வேண்டுகின்றார். மன்னன் என்பவன் சாட்சாத் அந்த மகாவிஷ்ணுவுக்கு ஒப்பானவன். குடிமக்களைக் காக்கவேண்டிய கடமை உண்டு அவனுக்கு. இங்கேயே உனக்கு நானும், தேவகியும் சொந்தமும் கூட, ஆகவே எங்களையும் இந்தச் சின்னஞ்சிறு சிசுவையும் விட்டுவிடு." என்று பலவாறாய் வேண்டுகின்றார் வசுதேவர். அக்ரூரரும் வேண்டுகின்றார். பலவிதங்களில் அவனுக்கு எடுத்து உரைக்கின்றார். ஆனால் கம்சனோ முரட்டுத் தனமாய் அந்தக் குழந்தையை வசுதேவரின் கைகளில் இருந்து பிடுங்கித் தரையில் ஓங்கி அடிக்கின்றான் தன் கைகளாலேயே. குழந்தை, குழந்தை....... :((((( பெண்கள் ஓவென்று மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலற, மனோதைரியம் மிக்க ஆண்கள் பலருமே திகைத்துச் செய்வதறியாது திகைக்க, சிலர் கம்சனின் தந்தையான உக்ரசேனரிடம் சென்று தகவலைச் சொல்ல, அவரும் கம்சனைக் கண்டு அவனுக்குப் புத்தி புகட்டவேண்டும் என்று ஓடி வருகின்றார். கம்சன் அவரைத் தன் மாளிகையில் சந்திக்கின்றான். என்ன நடந்தது என யாருக்குமே புரியவில்லை. ஆனால் அதன் பின்னர் உக்ரசேனரைக் கண்டவர் எவரும் இல்லை.

கம்சனின் மாளிகையிலேயே சிறை வைக்கப் பட்ட உக்ரசேனரை அவரின் அந்தரங்க மெய்க்காப்பாளர்கள் தவிர, அவரின் மனைவியர் மட்டுமே பார்க்க முடிந்தது. அக்ரூரர் வசுதேவர், தேவகியோடு சேர்த்து அதே மாளிகையில் சிறை வைக்கப் பட்டார். அக்ரூரரின் மாளிகையும், அவரை ஆதரித்து அவருடன் கூட வந்தவர்களின் வீடுகளும், மாளிகைகளும் கம்சனின் ஆட்களால் எரிக்கப் பட்டது. மதுரா நகரம் முழுதும் இதே பேச்சாய் இருந்தது. வீரம் செறிந்த ஆண்கள் கூட இத்தகைய கொடூரத்தை எதிர்கொள்ள வழி தெரியாமல் தங்களைத் தாங்களே வீட்டில் அடைத்துக் கொண்டனர். அக்ரூரர் அழுது கொண்டிருக்கும் தேவகியையும், அவளையும் தேற்ற முடியாமல், தானும் துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் வசுதேவரையும் தேற்றுகின்றார். "பொறுமையாய் இரு வசுதேவா, நகரத்தில் நான் இருந்தபோது இன்னும் சில நாட்களில் இங்கு ஆசாரியர் கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர் இந்திரப் பிரஸ்தம் செல்லும் வழியில் இங்கு வரப் போவதாய்த் தெரிகின்றது. அவர் வந்து உங்களைக் காண விரும்பினால் கம்சனால் அதைத் தடுக்க இயலாது. ஆசாரியரை அவன் விரோதித்துக் கொள்ள விரும்ப மாட்டான். ஆசாரியர் ஏதேனும் வழிகாட்டுவார்." என்று ஆறுதல் கூறுகின்றார்.

இங்கே கம்சனோ செய்வதறியாது விழிக்கின்றான். ஒரு பக்கம் ஆசாரியர் வியாசரின் வருகை பற்றிய செய்தி, மற்றொரு பக்கம் அஸ்தினாபுரத்தில் இருந்து பிதாமகர் என அனைவராலும் அழைக்கப் படும் பீஷ்மர் நடந்திருக்கும் விஷயம் எதையும் அறியாதவர் போல, வசுதேவரையும், தேவகியையும் அஸ்தினாபுரத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார். இதில் என்ன உள் நோக்கம் எனப் புரியவில்லை. ஆனால் வலிமையும், பலமும், செல்வமும், தவத்தினால் விளைந்த மனோபலமும், பரசுராமரின் சீடரும் ஆன பீஷ்ம பிதாமகரைப் பகைக்க முடியாது. அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் நேரடியாக அவர் உட்கார்ந்து ஆட்சி புரியவில்லை என்றாலும் அவரின் செல்வாக்கு பிரபலம் ஆனது. அக்ரூரரும் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே. ஆகவே அவரைச் சிறையில் இருந்து தாற்காலிகமாயாவது விடுதலை செய்து விடவேண்டும், என எண்ணிய கம்சன் அக்ரூரை மட்டும் விடுவித்தான்.

அக்ரூரர் சிறையில் இருந்து வந்ததும் முதல் வேலையாகத் தன் குடும்பத்தை யமுனைக்கு அக்கரையில் உள்ள கோகுலத்துக்கு அனுப்பி வைத்தார். தான் மட்டும் மதுரா நகரில் தங்கிக் கொண்டு, முடிந்தவரையில் வீடு, வீடாய்ச் சென்று கம்சனுக்கு எதிராய் ஆட்களைத் திரட்டும் வேலையை ரகசியமாய்ச் செய்யத் தொடங்கினார். கம்சனோ வசுதேவரை பீஷ்மர் அழைத்திருப்பதை எண்ணிக் கலங்கி அக்ரூரரிடம் யோசனை கேட்கின்றான். இதில் ஏதோ சூது இருப்பதாயும், வசுதேவரைத் தான் அனுப்பப் போவதில்லை எனவும் கூறுகின்றான். அதே சமயம் அஸ்தினாபுரத்துக் குருவம்சத்தாரைப் பகைத்துக் கொள்ளவும் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அக்ரூரர் ஏளனச் சிரிப்போடு உண்மையைச் சொல்லும்படி கம்சனிடம் சொல்ல கம்சனுக்கு ஆத்திரம் எல்லை கடக்கின்றது.

வசுதேவர் தானாகவே அஸ்தினாபுரம் செல்லுவதில் இருந்து மறுக்கவேண்டும் என அவன் எண்ணுகின்றான். அதை அக்ரூரரிடம் கூறவும் செய்கின்றான். தேவகியைத் தன்னந்தனியே விட்டுச் செல்ல வசுதேவர் சம்மதிக்க மாட்டார் என்பதால், தேவகியின் தந்தையும் கம்சனின் சித்தப்பாவும் ஆன தேவகனை அனுப்பலாமா அல்லது அக்ரூரரே சென்று வரட்டுமா என அவன் குழம்ப, அக்ரூரர் வேத வியாசர் வரட்டும் அவர் நீ சொல்லுவதை ஒத்துக் கொண்டால் நான் செல்கின்றேன் எனக் கூற "என்னிடம் இருந்து நீர் தப்ப நினைத்தால் அது முடியாது அக்ரூரரே!" என்று கம்சன் உரத்த குரலில் கூவிவிட்டுச் சிரிக்கின்றான். "என்னை நீ கொல்ல வேண்டும் என நினைத்தாலும் எனக்கு உன் கையால் தான் இறப்பு என்றால் ஒழிய நான் சாகமாட்டேன் இளவரசே! முனிவர் வரட்டும்!" என்கின்றார் அக்ரூரர். வியாசரை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாமல் கம்சன் வேட்டைக்குச் செல்லப் போவதாய்க் கூறிவிட்டுச் செல்கின்றான்.

மறுநாள் வியாசர் வருகின்றார். வசுதேவரையும், தேவகியையும் பார்க்க மாளிகைக்கு வருகின்றார்.