எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 30, 2019

மஹாலக்ஷ்மியின் சகோதரர் இருக்கும் இடம்!

அதற்கடுத்து அவர் அழைத்துச் சென்ற இடம் உயரத்தில் இருக்கும் கோயில் என்றார். நான் உடனே படிக்கட்டுகள் இருக்கும் என நினைத்து அப்படி என்றால் வேண்டாம், விட்டுடுங்க, என்னால் ஏற முடியாது என்றேன். அவர் இல்லை, மலை மேல் இருப்பதால் அப்படிச் சொன்னேன் எனக் கூறிவிட்டு சஹ்யாத்திரி மலைத்தொடரின் ஒரு பகுதியான ரத்னகிரி மலை மேல் ஏற ஆரம்பித்தார். இது கோலாப்பூர் நகரில் இருந்து சுமார் 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.  மலையின் மேல் சுமார் 3200 அடி உயரத்தில் உள்ளது இந்தக் கோயில். இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளும் சேர்ந்து பிரதிஷ்டை கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தத்தாத்ரேயர் கோயில் எனவும் சிலர் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலின் முக்கிய மூலவர் மும்மூர்த்திகளும் சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறார். கேதார்நாத் என இந்தக் கோயிலை அழைத்துள்ளனர். இறைவன் கேதாரேஸ்வரர் என்னும் பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளார். ஜோதிர்லிங்க ஸ்தலங்களைப் போல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்கின்றனர்.  ரத்னாசுரன் என்னும் அசுரனை மும்மூர்த்திகளும் சேர்ந்து வதம் செய்ததாக ஐதிகம். மேலும் மூவரும் அங்கே பஞ்ச கங்கை நதிக்கரைக்கு வந்து தவம் செய்த மஹாலக்ஷ்மிக்கும் அசுரர்களை வதம் செய்த போது துணையாக இருந்தனர். ஆகையால் இந்த மூர்த்தியை மஹாலக்ஷ்மியின் சகோதரர் எனச் சொல்லுகின்றனர். இவரே ரக்தபீஜனை அழிக்கவும் உதவினார் என்கின்றனர். கருவறையில் மூலவர் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயிலுக்குச் சென்ற மலைப்பாதை வளைந்து வளைந்து பல கொண்டை ஊசி வளைவுகளுடன் இருந்தது. வண்டி சென்ற வேகத்தில் படம் எடுக்க முடியவில்லை என்பதோடு காமிராவில் மூடித் திறப்பதில் பிரச்னை தீரவில்லை. மறுபடி மறுபடி தொந்திரவு. எனினும் ஒரு சில படங்கள் கோயிலில் எடுத்தேன். அங்கே நுழையும் போது காணப்பட்ட காமதேனுவின் சிலை!





கோயில் பல சிறு கோயில்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் தரிசித்தது முக்கிய மூலவரைத் தான். கோயிலின் தொன்மையும் மிகப் பழமை வாய்ந்துள்ளது.


சுற்றுப் பிரகாரத்தில் காணப்பட்ட காட்சிகள்



விரைவில் இந்தக் கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீழே இறங்கினோம். நகரில் இருக்கும் அரண்மனையும் அதனுள்ளே இருக்கும் ம்யூசியமும் பார்க்க வேண்டும் என்பதால் விரைவாகக் கீழே இறங்கினோம். இந்த அரண்மனைக்குள் நுழைய அனுமதிச் சீட்டு உண்டு. அதோடு இங்கே கட்டாயமாய்ப் படம் எடுக்கக் கூடாது. பலவிதமான நிபந்தனைகள் போட்டுவிட்டும், அதை எழுதியும் போட்டிருக்கின்றனர். உள்ளே நுழையும்போதும் காவலாளி வற்புறுத்திச் சொல்கிறார்.



இந்த அரண்மனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டி இருக்கின்றனர். இதைத் தவிர்த்தும் அரண்மனைகள், கோட்டைகள் இருப்பதால் இதைப் புதிய அரண்மனை, புதிய பாலஸ் என அழைக்கின்றனர். ஆங்கிலேய ஆட்சிக்காலத்துக் கோலாப்பூர் அரசரின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளின் படங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், சந்திப்புகள், அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களின் அந்தக் கால கட்டத்து உடைகள், அணிமணிகள், அலங்காரங்கள், ராணிகளின் சிற்பங்கள், ஓவியங்கள், சபா மண்டபம், தர்பார் ஹால் என அழைக்கப்பட்ட இடம்,  அந்தப்புரங்கள், படுக்கை அறைகள், வாகனங்கள் என அனைத்தும் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.

சில முக்கிய ஆவணங்களும் காட்சிப் பொருளாக இருக்கின்றன. ஆனால் பராமரிப்புக் குறைவு. சுத்தமும் போதாது. எல்லாம் புழுதி படிந்து, ஒட்டடைகளுடன் காட்சி அளிக்கின்றன.  எண்கோண வடிவிலான இந்தக் கட்டிடத்தில் உள்ள கடிகாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர்.  எங்கெங்கும் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைச் சித்திரம் ஓவியங்களாக வரையப்பட்டுக் காட்சி அளிக்கிறது. புனே, கோலாப்பூர் போன்ற இடங்களில் சத்ரபதி சிவாஜி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். நாங்கள் போயிருந்த சமயம் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளோ/நினவு நாளோ தெரியவில்லை.புனே நகரே கோலாகலமாகக்கொண்டாடியது. இந்த அரண்மனையில் தற்போதைய கோலாப்பூர் மஹாராஜா இன்னமும் இருப்பதால் இங்கே படங்கள் எடுக்க அனுமதி இல்லை எனச் சொல்கின்றனர். ஒரு பகுதியில் ம்யூசியம் அமைந்துள்ளது.  ஷாஹூஜி சத்ரபதி ம்யூசியம் என அழைக்கப்படும் இதில் வைஸ்ராயின் கடிதம் ஒன்றும், கவர்னர் ஜெனரலின் கடிதமும் காணப்படுகிறது.

பஞ்சு அடைக்கப்பட்ட மிருகங்கள் ஒரு பக்கம் காட்சி அளிக்கின்றன. மன்னர்கள் பயன்படுத்திய அந்தக் காலத்து வாள்கள், சின்ன பீரங்கி போன்றவை மனதைக் கவருகின்றன. நினைவு வைத்துக் கொண்டு சொல்லுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால் இந்த ம்யூசியத்திற்குப் படம் எடுக்கவும் அனுமதி கொடுத்துப் பணம் வசூலித்துக் கொஞ்சம் சுத்தமாகப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யலாம். ம்யூசியம் பார்த்து முடிக்க ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. மணி இரண்டுக்கும் மேல் ஆகி விட்டது. ஆகவே இந்த அளவில் நிறுத்திக் கொண்டு உணவு உட்கொண்டு அறைக்குத் திரும்பலாம் என முடிவெடுத்தோம். இன்னும் பார்க்க மிருகக் காட்சி சாலை எல்லாம் இருக்கு! ஆனால் போனால் இன்னும் நேரம் ஆகும். மறுநாள் காலை கோலாப்பூரில் இருந்து பண்டர்பூர் செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். ஆகவே இன்னும் சுற்ற முடியாது.

அவ்வளவில் வெளியே வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டு உணவகத்துக்கு விடச் சொன்னோம். நல்லதொரு உணவகமாகப் பார்த்து உணவு உண்ணச் சொன்னார். உணவு என்னமோ நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அந்தக் காரம் தான் ஒத்துக்கலை. நான் ரொம்பச் சமர்த்தாகக் காரம் குறைவாகப் போடுனு சொல்லி இருந்தேன். அவங்க என்னடான்னா மிளகாய்ப் பொடியைக் குறைத்துவிட்டுப் பச்சை மிளகாயைத் தாளித்து விட்டார்கள். கோலாப்பூர் மசாலாவே காரத்துக்குப் பெயர் போனது! ஒரு மாதிரி சமாளித்துச் சாப்பிட்டுவிட்டு லஸ்ஸி ஒன்றும் குடித்தோம். அந்தக் காரத்துக்கு அது தான் தேவை! பின்னர் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ஆறு மணி போல் ஆட்டோ ஓட்டுநரை வரச் சொன்னோம்.

மாலை ஐந்து மணி அளவில் ஓட்டலில் தேநீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுத் தயாரானோம். சரியாக ஆறு மணிக்கு ஆட்டோ ஓட்டுநர் வந்தார். அவரிடம் பாரம்பரியக் கோலாப்பூர்ச் சேலைகள், கைத்தறி வேண்டும் எனச் சொல்லவே அவர் சுமார் நாலைந்து கிலோ மீட்டர் பயணத்தில்  கடைத்தெருவில் ஓர் கடைக்கு எதிரே நிறுத்தினார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடைக்கு ஏறப் படிகள்! அங்கே எல்லா இடங்களிலும் படிகள் ஏறித்தான் ஆக வேண்டும். நல்ல உடற்பயிற்சி. தினம் தினம் ஏறி இறங்கினால் கால் பிரச்னை வராது! ஆனால் நாம் என்னிக்கோ இல்லை ஏற வேண்டி இருக்கு! எங்க பெண்ணின் மாமியார் 86/87 வயதில் மும்பையில் அவங்க குடியிருப்பில் நாலு மாடி ஏறி இறங்குகிறார். சுமார் 40/50 வருடம் முன்னர் கட்டிய அந்தக் குடியிருப்பு வளாகத்தில் லிஃப்ட் கிடையாது. நம்மாலோ என்னிக்கோ ஒரு தரம் அவங்களைப் போய்ப் பார்க்கையிலேயே நாக்குத்தள்ளும். :(

அது போகட்டும். படிகளில் ஏறிக் கடைக்குள் போய்க் கேட்டால் 2 ஆவது மாடி எனச் சொல்ல மயக்கமே வந்தது. திரும்பலாமானு யோசிக்கிறதுக்குள்ளாகக் கடைக்காரர் ஒருத்தரை அழைத்து இவங்களை உள்ளே உட்கார வைத்துக் கோலாப்பூர்ச் சேலைகளை மேலே இருந்து எடுத்து வந்து காட்டு எனச் சொன்னார். உள்ளே போனால் தரையில் அமர்ந்து பார்க்கும்படியான பெரிய கூடம். விதம் விதமாய்ச் சேலைகள்,சேலைகள், சேலைகள். சில பெண்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.அவங்க முன்னால் சேலைக் குவியல் அம்பாரமாய்! இத்தனை பார்த்தும் அவங்க முகத்தில் திருப்தி இல்லை.கட்டி இருந்த சேலையும் சுமார் ரகம் தான்! இதைவிடவா நல்லதாய்ப் பார்க்கப் போறாங்க என நினைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எங்கள் இருவருக்கும் உட்கார நாற்காலி கொடுத்தார்கள்.

முதலில் கோலாப்பூர்ப் பட்டு வந்தது. ஆஹா! என்ன அழகு! பட்டுன்னா இதான் பட்டு என நினைத்துக் கொண்டே ஒரு புடைவையைத் தேர்ந்தெடுத்தேன். மிக அழகான புடைவை! ரங்க்ஸும் தலையை வேகமாக ஆட்ட அதைக்கொடுத்துப் பிரித்துக் காட்டச் சொல்லிட்டு என்ன விலைன்னு பார்த்தால்! மறுபடி மயக்கம்! விலை அதிகமில்லை ஜென்டில்மேன்! 9,500 ரூபாய்க்குள் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அவ்வளவு கொடுத்தாப் புடைவை வாங்கறது? பின்னர் நான் அந்த ஊழியரிடம் கைத்தறிப் பருத்திச் சேலைகளைக் காட்டச் சொன்னதும் என்னைக் கொஞ்சம் துச்சமாய்ப் பார்த்தாரோ? நான் கண்டுக்கவே இல்லையே! நான் என்ன கோலாப்பூர் மஹாராணியா ஒன்பதாயிரம் கொடுத்துப் புடைவை வாங்க! பருத்திச் சேலைகள் வந்தன.முதலில் சாதாரண ரகம் காட்டினார்கள்.எல்லாம் கட்டம் போட்டவை. நிறமும், கட்டங்களும், விலையும் நன்றாக இருந்தாலும் நல்ல பருத்திச் சேலை இல்லை. கலப்பு ரகம்! புடைவையைப் பார்த்ததுமே தெரிந்தது. ஆனால் அறுநூறு ரூபாய்க்குள் தான். அதை ஒரு பக்கம் எதுக்கும் இருக்கட்டும்னு வைத்துவிட்டுப் பாரம்பரியச் சேலைகளைக் காட்டும்படி சொன்னேன்.

அவற்றையும் காட்டினார்கள். அவை சுமார் ஆயிரத்து ஐநூறில் இருந்து மூவாயிரம் வரை போகிறது. நான் ஆயிரத்து ஐநூறுக்குள்ளேயே இருக்கும்படியாகப் பார்த்து இரண்டு சேலைகள் எடுத்தேன். படம் முதலிலேயே போட்டு விட்டேன். இரண்டும் சேர்த்து மூவாயிரத்துக்கும் கீழே தான் வந்தது.  இங்கேயும் படம் மறுபடி போடறேன்.



பின்னர் பணம் கொடுத்துச் சேலைகளைப் பெற்றுக்கொண்டு மறுபடி ஆட்டோவுக்கு வந்தோம். அதற்குள்ளாக மணி ஏழரை ஆகிவிடவே இரவு உணவை முடித்துக் கொண்டு போகலாம் என ரங்க்ஸ் சொன்னார். அதென்னமோ தெரியலை. அவருக்கு மட்டும் வடமாநிலங்களுக்குப் போனால் தான் இட்லி, தோசை சாப்பிடும் ஆவல் அதிகமாகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்! ஆகவே தோசை வேண்டும் என்று சொல்லவே மறுபடி சில கிமீ ஓடி ஒரு கடையில் நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். மொத்தக் கோலாப்பூரும் இன்னும் சிறிது நேரத்தில் இந்தக்கடையில் கூடி விடும் என்றும் அதற்குள்ளாகச் சாப்பிட்டு வரும்படியும் சொன்னார். தாவண்கெரே தோசா சென்டர் எனப் போட்டிருந்தது. அவங்க கொடுத்த மெனுவில் பட்டர் தோசை, மற்றும் செட்தோசை, பொடி தோசை, என இருந்ததில் நான் பட்டர் தோசை போதும் வயிற்றை ஒண்ணும் பண்ணாது எனச் சொல்லவே இருவருக்குமாக பட்டர் தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்.

உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாது. வெளியே பெஞ்சுகள் இருக்கின்றன. அதில் தான் உட்கார்ந்து சாப்பிடணும். ஏற்கெனவே நாலைந்து பேர் தோசைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் எங்களுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்.கன்னடக் காரர். பல வருடங்களாக இந்த தோசைக்கடையை நடத்தி வருகிறாராம். கையில் காமிராவோ, அலைபேசியோ கொண்டு போகாததின் நஷ்டம் அப்போத் தெரிந்தது.  என்ன செய்ய முடியும்? விரைவில் திரும்பப் போகிறோம் என நினைத்தோம். ஒவ்வொரு இடமும் தூரமாக அமைந்து விட்டது. சிறிது நேரத்தில் எங்களுக்கான தோசை வந்தது. 2,3 தோசைகளை ஒன்றாக்கியது போன்ற கனத்தில் ஒரு தோசை!தொட்டுக்கச் சட்னி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா. சாம்பாரெல்லாம் கிடையாது! தோசையை வெண்ணெயிலேயே குளிப்பாட்டி இருந்தார். நல்ல சூடாகக் கடைசி வரை இருந்தது. ஒரு தோசையே வயிறு நிரம்பியும் விட்டது. பின்னர் அருகிலிருந்த ஒரு ஜூஸ் கடையில் நான் மட்டும் ஃபலூடா சாப்பிட்டேன். அதன் பிறகு அங்கிருந்து தங்குமிடம் சென்று காலை எத்தனை மணிக்குக் கோயில் திறக்கும் எனக் கேட்டுக் கொண்டோம்.

பகல் பதினோரு மணிக்குத் தான் பண்டர்பூர் ரயில்! அதுக்குள்ளே இன்னொரு முறை மஹாலக்ஷ்மியை தரிசனம் செய்யலாமே என்னும் எண்ணம்.காலை நாலரைக்கே திறக்கும் எனவும் ஏழரை வரை கூட்டம் இருக்காது எனவும் சொன்னார்கள். ஆட்டோக்காரருக்குப் பணம் அன்றைய தினத்துக்குக் கொடுத்து அனுப்பினோம். மொத்தம் 750 ரூபாய் வாங்கிக்கொண்டார். மறுநாள் ரயில் நிலையத்தில் கொண்டு விட வருவதாகச் சொன்னார். கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் நாங்களே போய்க் கொள்கிறோம் எனவும் சொல்லி விட்டோம். 

Sunday, April 28, 2019

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி!

இன்று தமிழ்த்தாத்தாவுக்கு நினைவு நாள்.  தாத்தாவின் என் சரித்திரத்திலிருந்து ஒரு பகுதி இங்கே பகிர்ந்திருக்கிறேன். இது மரபு விக்கியில் நான் வேலை செய்கையில் சேர்க்கப்பட்டது.

உ.வே.சா. க்கான பட முடிவு

என் சரித்திரம் உ.வே.சா. 3
அத்தியாயம்-2


என் முன்னோர்கள்


‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போஜனம் செய்வித்து மிகுதியான தக்ஷிணையும் கொடுத்து அனுப்பினார். அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விஷயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக ராஜாவை ஏமாற்றி விசேஷமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போஜனம் செய்வித்தேனே!” என்றார். கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது? இரண்டு பேருக்குப் போட்டு விட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே!” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா?” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விஷயம் விளங்கியது.


அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.


இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப் பிரிவுகள் வழங்கப்பெறும். நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை. அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது; அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது. அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று ஜீவித்து வந்தார்கள். அத்தியூரென்பது தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாஸ்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது. அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” என்று கேட்டான். அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார். காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.


அந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார். “இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான் அவன். இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா? அத்தியூர்ப் பிரிவினராகிய அஷ்ட ஸகஸ்ரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர் அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாஜலபதியினிடம் அளவற்ற பக்தியிருந்தது.


அவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சர்ம நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், ஸ்ரீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர். இந்தக் குடும்பத்திலுள்ள ஆண் பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிக்ஷை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமஸ்காரஞ் செய்து அதையே சமைத்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது. வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூஸ்திதியுடையதாக இருந்தது.


அவருக்குப் பின் வந்தவர்களுள் ஸ்ரீநிவாஸையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஸ்திரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணையரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார். இவ்வூரிலிருந்த எல்லோரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டுப்பக்கம் வழக்கமென்பது பலருக்கும் தெரிந்த செய்திதானே? அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார். வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாஸதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லோருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.


எங்கள் ஊர் குளத்துப் படித் துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேஷ்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாஸன மில்லாத இந்த வெறும் கல் நம் கொள் பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கை பட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.

Thursday, April 25, 2019

பவானியின் குடியிருப்பும் பஞ்ச கங்கை நதிக்கரை தரிசனமும்!

சளுக்கிய மன்னர்களால் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் நான்கு வாசல்களும் கோட்டை வாசலைப் போலவே காணப்படுகின்றன. அம்பிகை மேற்கு நோக்கிக் காட்சி கொடுப்பதால் மேற்கு வாசல் மஹாத்வாரம் என அழைக்கப்படுகிறது. இந்த மேற்கு வாசலில் தான் நாம் முன்னர் பார்த்த தீபஸ்தம்பங்கள் காணப்படுகின்றன.  அம்பிகையின் பிரகாரத்தைச் சுற்றிலும் பரிவார தேவதைகள் உள்ளனர். அம்பிகையின் இருபக்கங்களிலும் மஹாகாளியும், சரஸ்வதியும் கோயில் கொண்டுள்ளனர்.

கருந்தூண்களால் ஆன கருடமண்டபத்தில் குடி கொண்டிருக்கும் கருடரைத் தாண்டினால் மஹாகணபதி அன்னையை நோக்கிய வண்ணம் காட்சி அளிக்கிறார். அவருக்கு நேர் எதிரே யுகம் யுகமாய் அனைவரையும் ரட்சிக்கும் அன்னையின் திருத்தோற்றம் நம் மனதையும் கண்களையும் நிறைக்கிறது.
அம்பிகை ஓர் சதுரமான பீடத்தின் மேலே நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறாள். காலம் காலமாய் நின்று கொண்டே இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அன்னையின்கால்கள் தான் வலிக்காதோ? அன்னையின் வடிவம் வடிக்கப்பட்டிருப்பது கிடைப்பதற்கரிய ரத்தினக்கல் என்கின்றனர். அதிசயத்திலும் அதிசயமாக ஆதிசேஷன் இங்கே அன்னைக்குக் குடை பிடிக்கிறான்.  நான்கு கரங்களுடன் காட்சி கொடுக்கும் அன்னை ஒன்றில் கதை தாங்கி அதை பூமியில் ஊன்றி இருக்கிறாள். இன்னொரு கரத்தில் மாதுளங்கனி.  இன்னொரு கரத்தில் அமுதசுரபியுடனும் நான்காவது கரத்தில் கேடயமும் வைத்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. கோபுரம் மஹாராஷ்ட்ர சிற்பக்கலை என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அம்பிகை உற்சவ மூர்த்தியாகக் கோயிலின் உள் பிரகாரங்களில் வலம் வருகிறாள். நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடை பெறும்.
மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சூரியன் தன் திசையைத் திருப்பும் முன்னர் அம்பிகையின் பாதங்களில் தன் கதிர்களால் நமஸ்கரிக்கிறான். அன்னைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள ஓர் பலகணி வழியாக சூரியக் கதிர்கள் அன்னையின் பாதங்களில் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அன்னை சிறப்பு அலங்காரங்கள் இன்றி சூரியக்கதிர்களின் ஒளியைத் தன்னுள் தாங்கிக் காட்சி கொடுப்பாள். கூட்டம்கூட்டமாக மக்கள் அந்த சூரியக் கதிர்விழுவதையும் அன்னை பிரகாசிப்பதையும் பார்த்துச் செல்வார்களாம்.

மஹாலக்ஷ்மி கோயிலின் மேற்குப் பக்கம் சத்ரபதி மஹாராஜாக்கள் தர்பார் இருந்த மண்டபம் ஒன்றுக் கோட்டை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இங்கே சத்ரபதி ராஜாக்கள் தங்கள் தர்பார்களை நடத்தி வந்ததாய்ச் சொல்லப் படுகிறது.  இங்கே உள்ளே ஒரு பவானி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். அந்த அம்மனின் சந்நிதியில் அனைவரும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி முடிவெடுப்பது அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது.  பற்பல கொண்டாட்டங்களையும் பற்பல அரசர்களின் மந்திராலோசனைகளையும் கண்ட அந்த நடு முற்றம் ஓர் கொலையையும் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றனர்.  தற்போதைய அலங்காரங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ஒரு மஹாராஜாவின் சபாமண்டபத்தைப் போலவே காட்சி அளிக்கிறது. சத்ரபதிகளின் தொன்மை இப்போது காணப்படவில்லை. இந்தப் படங்களை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.இங்கு கோயில் கொண்டிருக்கும் பவானியைப் படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.  இந்த பவானி மண்டபத்திலிருந்து சுரங்கப்பாதை சஹ்யாத்ரி மலையில் உள்ள கோட்டைக்குச் செல்லுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சுரங்கப்பாதையைக் கண்டு பிடித்ததாக யாரும் சொல்லவில்லை. 

1950 களில் இங்கே ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்பட்ட ஷாஹூமஹராஜின் உருவச் சிலை இங்கே காணப்படுகிறது. 


நேர் எதிரே மக்கள் கூட்டம் நிறைந்து இருந்ததால் அந்தப்பக்கம் போய்ப் படம் எடுக்க முடியவில்லை! இரு மிருகங்களின் நடுவே ஷாஹூமஹராஜ்.  இப்போது கோலாப்பூர் ரயில் நிலையத்தின் பெயர் இவர் பெயரில் தான் மாற்றப்பட்டுள்ளது. இந்த பவானி கோயிலைப் பார்த்துவிட்டுப் பின்னர் மறுபடி வண்டியில் ஏரி அடுத்து எங்கே எனக் கேட்டதற்கு ஓட்டுநர் ஓர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றார்.  முக்கியமாய்க் கவனித்தது ஊரின் சுத்தம். எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம். தானாகவே பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கூட்டம் கூடினாலும் மக்கள் எங்குமே குப்பை போடவில்லை. ஊரெல்லாம் அமைதியாகவும் தெருக்களெல்லாம் சுத்தமாகவும் வாகனப் போக்குவரத்தும் நேராகவும் நடக்கிறது. தெருக்கள் மேடு, பள்ளங்கள் இல்லாமல் காட்சி அளித்தது. 

இது கோலாப்பூரின் பிரபலமான ஏரி! நாங்கள் கீழே இறங்காமல் வண்டியில் இருந்தே படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.  ஏரிக்கரையில் இருந்து ஓர் கோயிலுக்குச் செல்லுவதாகக் கூறிய ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றது ஓர் சிவன் கோயில்.




அது ஓர் அதிசயமான விசித்திரமான சிவன் கோயில். பொதுவாக சிவனுக்கு முன்னாலோ அல்லது லிங்கத்துக்கு முன்னாலோ காணப்படும் நந்தி இந்தக் கோயிலில் சிவனுக்குப் பின்னால் காட்சி கொடுக்கிறது.


இந்தக் கோயிலைப் பார்த்த பின்னரே நாங்கள் பஞ்சகங்கை நதிக்கரைக்குச் சென்றோம்.படங்கள் முன்னரே பகிர்ந்தாச்சு. இந்தப் பஞ்ச கங்கை நதிகள் எனப்படுவது கேசரி நதி, தும்பி நதி, துளசி நதி, போகவதி நதி, மற்ற ஆறுகளின் துணை நதிகள் என அனைத்தும் சேர்ந்தது ஆகும்.

நதிக்கரையில் காசியைப் போலவே பல சிறிய, பெரிய கோயில்கள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது இந்தச் சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்திக் கொண்டிருந்தனர்.  மஹாலக்ஷ்மி எங்கெல்லாம் தனிக்கோயில்களில் குடி இருக்கிறாளோ அந்த இடங்கள் எல்லாம் காசிக்கு நிகரானவை எனச் சொல்லப்படுகிறது.  நிர்ப்பந்தம் காரணமாகக் காசியை விட்டுப் பிரிந்த அகத்தியர் மீண்டும் காசிக்குச் செல்ல முடியாமல் தவிக்கையில்  அம்பிகையால் பிரளய காலத்தில் காப்பாற்றப்பட்டுக் கோலாசுரனையும் அழித்த தலமான கரவீரபுரம் என்னும் கோல்ஹாப்பூரைக் காட்டி அங்கே போய் இருக்கச் சொன்னாராம் ஈசன். பல்வேறு கல்வெட்டுச் செய்திகளும் மிகவும் தொன்மையானதாகவும் கோல்ஹாப்பூரின் தொன்மையையும் குறிப்பிடுகிறது.




Tuesday, April 23, 2019

அன்னையின் சந்நிதியில்!

  கோலாப்பூரை நோக்கி

மேலே உள்ள சுட்டியில் நாம் கடைசியாகப் பார்த்தது காலை உணவு பற்றி. காலை உணவு எடுத்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநரை அழைத்தபோது அவர் தான் வீட்டிலேயே சாப்பிட்டு வந்துவிட்டதாகச் சொல்லி மறுத்துவிட்டார். பொதுவாகவே வடமாநிலங்களின் ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் நாம் சாப்பிட அழைத்தால் உடனே வர மாட்டார்கள். ரொம்பத் தயங்குவார்கள். ஆகவே நாங்களும் வற்புறுத்தவில்லை. நாங்கள் ஆகாரம் எடுத்துக் கொண்டு வந்ததும் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு அருகே வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினார் ஓட்டுநர். அங்கிருந்து கோயிலுக்கு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். கோபுர வாயிலுக்கு அருகே சென்றிருந்தோம். விதவிதமான பூக்கள், பழங்கள், தேங்காய்கள் எனத் தட்டுக்களில் வைத்துக் கூடவே புடைவை (அநேகமாகப் பச்சை நிறம்)ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல்கள் ஆகியவை வைத்து அம்பிகைக்கு எடுத்துப் போகச் சொன்னார்கள்.பலரும் இப்படிப் பிரார்த்தனை செய்து கொள்ளுவது உண்டாம். அதைத் தவிர்த்தும் பூக்கள், பழங்கள் தனியாகவும் கொண்டு சென்றனர்.  அங்கே அநேகமாக அல்லிப்பூக்களும், குமுதமுமே கிடைத்தன. மல்லிகைப்பூக்கள் நூலில் கட்டி (தள்ளித்தள்ளி) விற்றனர். சுமார் ஒரு முழம் பூ 20 ரூபாய் என்றனர். யார் கட்டினார்கள் எனக் கேட்டால் மதராசி என்றனர். அங்கெல்லாம் நாம் வாழை நாரில் நூலில் பூக்கட்டுவதைப் போல் கட்டத்தெரியாது. ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஊசி நூல் வைத்துக் கொண்டு கூட வரிசையாகக் கோர்க்கத் தெரியாது.பூக்கட்டுவது ஓர் அரிய கலை அவர்களுக்கு.  ஆனால் நாங்க ஶ்ரீரங்கத்தில் இருந்தே தாமரைப் பூக்கள் வாங்கிச் சென்றிருந்தோம். ஆகாய விமானத்திலும் ஏசி, இரவு ரயிலும் ஏசி என்பதால் பூக்கள் வாடவில்லை. அவற்றின் இதழ்களைப் பிரித்து வைத்திருந்தேன். அவற்றை எடுத்துக் கொண்டோம். செருப்புக்களை வண்டியிலேயே விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் சொன்ன வழியில் கோயிலை நோக்கிச் சென்றோம்.


இது தெற்கு வாசல் கிட்டத்தட்டக் கோட்டை போன்ற அமைப்பு கோயிலும்

உள்ளே பிரகாரம், எதிரே வரிசையில் நிற்பதற்காகப் போடப்பட்டுள்ள கம்பித்தடுப்புகள்



இவற்றிலும் ஏறி மேலே செல்லலாம். இது தரிசனம் செய்துவிட்டு வந்த பின்னர் எடுத்த படங்கள். அதோடு முதல் நாள் தான் ஹோலி நடந்து முடிந்திருந்ததால் தரையெங்கும் வண்ணமயம்


முக்கியக் கோபுரம் இதன் கீழே தான் அம்பிகை வாசம் செய்கிறாள்.

கோயிலுக்குச் செல்லும்போதே கூட்டம் எப்படி என விசாரித்த வண்ணம் சென்றோம். அரை மணி நேரம் நிற்கும்படி இருக்கும் என்றனர். நாங்கள் சென்றபோது வரிசை நிறைந்து சுமார் நூறுபேர்களுக்கும் மேல் நின்று கொண்டிருந்தனர். அதற்குள்ளாக ஆட்டோ ஓட்டுநர் அங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு வேறொரு வழியில் சென்றார். அங்கே கூட்டம் இல்லை. அங்கே மேலே போகச் சொல்லிவிட்டு அங்கே இருக்கும் நபரிடம் ஆட்டோ ஓட்டுநர் அனுப்பியதாகச் சொல்லச் சொன்னார். அதே போல் மேலே சென்றோம். உள்ளே மஹாமண்டபம் வந்தது. அங்கே சரஸ்வதி குடி இருந்தாள். ஒரு நிமிஷம் அவள் தான் மஹாலக்ஷ்மியோ எனத் திகைத்து நிற்கையில் ஆட்டோ ஓட்டுநர் சொன்ன கோயில் ஊழியர் எங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள் என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். உள்ளே பலரையும் தாண்டிக் கொண்டு அம்மன் சந்நிதிக்கு அருகே கொண்டு நிறுத்திவிட்டார். அம்மனைப் பார்த்து மெய்ம்மறந்தோம்.நினைவாகக் கையில் கொண்டு போயிருந்த தாமரை மலர்களைக் கொடுத்தோம்.

அம்பிகை பிரசாதமாகக் கிடைத்த கல்கண்டு, திராக்ஷைப் பழங்கள் அடங்கிய பாக்கெட்டை வாங்கிக் கொண்டு மனசே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். இதுக்கே சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. அங்கே இருந்த காமதேனுவைப் படம் எடுக்க முயன்ற போது காமிரா திறந்து மூட முடியாமல் தொந்திரவு செய்தது. எவ்வளவோ முயன்றும் காமிரா மூட முடியவே இல்லை. ஓட்டுநரும் முயன்று பார்த்துவிட்டு வரவில்லை. பின்னர் அதைக் கைப்பையில் வைத்துவிட்டு அலைபேசி மூலம் படங்கள் எடுத்தேன். அந்தப் படங்கள் தான் மேலே உள்ளவை.


கோயில் சுற்றுச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள்


இன்னொரு கோணத்தில்



எல்லாக்கோபுரங்களும் சேர்ந்த வண்ணம் அளிக்கும் காட்சி



தீபஸ்தம்பம்


இந்தக் கோயில் ஜைனர்களுக்கும் முக்கியமானது என்கின்றனர். ஜைனர்கள் பலர் இந்த இடத்துக்கு வந்து குங்குமம், மஞ்சள் சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

Plants: image 1 0f 4 thumb

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலின் அதிகாரபூர்வ தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். நன்றி. 

Sunday, April 21, 2019

கோலாப்பூரின் கதையும், மஹாலக்ஷ்மி குடி கொண்ட விதமும்!

பதினெட்டு முக்கிய சக்தி பீடங்களில் கோலாப்பூரும் ஒன்று. அம்பிகை இங்கே மஹாஸ்தானத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்தப் பதினெட்டும் மஹா சக்தி பீடங்கள் என அழைக்கப்படும். அதிலும் கோலாப்பூரில் தேவியின் முக்கண்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் முழு ஆகர்ஷண சக்தியோடு தேவி இங்கே விளங்குவதாய்ச் சொல்லப்படுகிறது.  பக்தர்கள் அம்பிகையை அம்பா பாய் எனப் பிரியமுடன் அழைத்து வணங்குகின்றனர். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சாளுக்கிய மன்னன் கரண்தேவால் ஏழாம் நூற்றாண்டிலேயே இது கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர்களைப் பார்த்தால் மிகப் பழமை வாய்ந்ததாகவே தெரிய வருகிறது. இந்தக் கோயிலின் கட்டிடக் கலை பிரபலமான ஹேமந்த்பதி சிற்பகலையை ஒட்டி அமைக்கப்பட்டுப் பின்னர் வந்த யாதவ வம்சத்து அரசர்களால் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சூரியக் கதிரிகள் மூலஸ்தானத்திலுள்ள அம்பிகையின் மேல் பட்டுத் தங்கம் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோயிலைக் கரவீரபுரம் எனவும் அழைக்கின்றனர். பிரளய காலத்தில் மஹாலக்ஷ்மி தன் கரத்தை உயர்த்தி இந்தக் கோயிலைக் காத்ததால் அவ்வாறு அழைப்பதாகச் சொல்கின்றனர்.

இந்தக் கரவீரபுரத்தில் தான் கிருஷ்ணாவதாரத்தில் ஜராசந்தனிடமிருந்து தப்பி ஓடிய கிருஷ்ணனும் பலராமனும் ஒளிந்து கொண்டது. சஹ்யாத்ரி மலைத்தொடருக்குப் பின்னே இருக்கும் இந்த ஊரில் லக்ஷ்மி மஹாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு தனியே வந்தமர்ந்ததாகவும் ஓர் புராணக் கதை உண்டு. பிருகு முனிவரால் மார்பில் உதைக்கப்பட்ட மஹாவிஷ்ணு அதைக் கண்டு கோபம் கொள்ளாமல் பிருகு முனிவரின் காலைப் பிடித்துவிட மஹாலக்ஷ்மிக்குக் கோபம் வருகிறது. தான்குடி கொண்டிருக்கும் மார்பை ஓர் மனிதன் உதைத்து விட்டதால் தன்னுடைய செல்வாக்குப் போய்விட்டதாகவும் அஷ்ட ஐஸ்வரியங்களும் நிறைந்த தான் ஓர் மனிதனால் அவமானப்படுத்தப்பட்டதாகவும் நினைத்தாள். ஆனால் மஹாவிஷ்ணு அவளைச் சமாதானம் செய்து பார்த்தார். மஹாலக்ஷ்மி சமாதானமே ஆகவில்லை.  மஹாவிஷ்ணுவையே சபித்தாள். தன்னைப் பிரிந்து அவர் வாழும்படியும் தன்னைத் தேடி அலைய வேண்டும் எனவும் கூறினாள். பின்னர் கோபத்துடன் கரவீரபுரத்தை அடைந்து அங்கே சுவர்ணமுகி ஆற்றங்கரையில் தனித்து வாழலானாள்.

லக்ஷ்மி தன்னை விட்டுப் பிரிந்ததும் பூலோகம் வந்த மஹாவிஷ்ணு அவள் கரவீரபுரத்தில் இருப்பதை அறிந்தார். ஆனாலும் அவளைத் தேடிச் செல்லாமல்  ஶ்ரீநிவாசன் என்னும் பெயருடன் வேங்கட மலைக்கு வந்து புற்றில் வாசம் செய்தார். அங்கே வந்த பிரம்மாவும், சிவனும் மஹாலக்ஷ்மியிடம் போய் ஶ்ரீமந்நாராயணனை வைகுண்டம் திரும்ப உதவும்படி கேட்க லக்ஷ்மி மறுத்தாள்.  அப்போது லக்ஷ்மியிடம் ஹரிக்கு ஆகாரம் அளிக்க வேண்டித் தாங்கள் இருவரும் பசுவும், கன்றாகவும் ஆகப் போவதாகவும் அந்தப் பசுவையும், கன்றையும் வேங்கடமலைக்கு அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த சோழனுக்கு விற்றுவிடும்படியும் கூறவே லக்ஷ்மியும் அவ்வாறே செய்து விட்டு விஷ்ணுவைப் பற்றி நினைக்காமல் மீண்டும் கரவீரபுரம் வந்து விட்டாள். இதைக் கண்ட ஶ்ரீநிவாசன் அங்கே தனக்காகக் காத்திருந்த பத்மாவதியை மணம் முடிக்கிறார். லக்ஷ்மியை மறந்து விட, அவளுக்குக் கோபம் வந்து பத்மாவதியை மணந்ததாலும் தன்னை மறந்ததாலும் பாதாளத்தில் உள்ள கபிலரின் ஆசிரமத்தில் போய்த் தங்கிவிட்டாள்.

பத்மாவதி ஶ்ரீநிவாசனிடம் லக்ஷ்மியைத் தேடும்படி சொல்ல அவரும் லக்ஷ்மியைத் தேடுகிறார். ஆனால் லக்ஷ்மியின் சாபத்தால் அவரால் அவளை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் அலைந்து திரிந்த மஹாவிஷ்ணு சுவர்ணமுகி ஆற்றின் கரைக்கு அருகே இருந்த குளத்தில் பூத்திருந்த பெரிய தாமரை மலரைப் பார்த்த வண்ணம் அங்கேயே அமர்ந்து விட்டார். கபில முனிவர் லக்ஷ்மியின் மனதை மாற்றுகிறார். பிருகு ஒரு மானிடன் எனவும் அவன் பாதம் பட்டதால் தன் பதிவிரதா தர்மத்துக்குப் பங்கம் ஏற்பட்டதாகவும் லக்ஷ்மி கூற மானிடர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள். குழந்தை உதைத்தால் தாய் கோவிப்பாளா? அதனால் விஷ்ணு பிருகு முனிவர் பாதத்தைப் பிடித்து விட்டார். இது உனக்குத் தெரியாதா? நீ ஏதும் அறியாதவளா என்றெல்லாம் சொல்லத் தான் இப்போது எப்படி அவர் மார்பை அடைவது எனத் திகைப்பதாக லக்ஷ்மி கூறினாள். இப்போது புதுக் கல்யாணம் செய்து கொண்டு பத்மாவதியை அடைந்திருக்கும் ஶ்ரீநிவாசனின் மார்பில் தான் அடைக்கலம் தேடுவது முறையா எனவும் கேட்டாள்.

கபில முனிவர் அம்மா, இதுவும் உன் விளையாட்டன்றோ? பத்மாவதியாய் வந்திருப்பவளும் நீயே! இங்கே மஹாலக்ஷ்மியாய் வீற்றிருப்பவளும் நீயே! கிருஷ்ணாவதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோபிகையருடன்  கண்ணன் இருக்கையிலும் நீ அவன் மார்பில் தான் இருந்தாய்! இப்போது இது என்ன விளையாட்டு? என வினவினார். அதன் பேரில் மஹாலக்ஷ்மி தான் கரவீரபுரத்துக்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று இருந்த வேலை முடிந்து விட்டதால் தான் இனி வைகுண்டம் போய்ச் சேரலாம் என்னும் எண்ணத்துடன் ஶ்ரீநிவாசன் மார்பில் அடைக்கலம் புகுந்தாள். தாமரையில் தான் பத்மாவதியாய் எழுந்தருளியதை நினைத்து அலர்மேல் மங்கை என்னும் நாமத்துடன்  அங்கேயும் கோயில் கொண்டாள்.

இவ்வாறு தன் சக்திகள் அனைத்தையும் இங்கே கொண்டு வந்து அம்பிகை கோயில் கொண்டதால் கோலாப்பூர் எப்போவும் சுபிக்ஷமாகவே இருந்து வருகிறது.  இந்தக் கோயில் ஜைனர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச கங்கா என அழைக்கப்படும் ஐந்து நதிகளின் சங்கமக்கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்தப் பஞ்சநதிகளும் இங்கே உள்ள ப்ரயாக் சங்கமத்தில் இருந்து ஆரம்பிப்பதாகவும் கூறுகின்றனர்.  கசாரி நதி, கும்பி நதி, துள்சி நதி, போகாவதி நதி மற்றும் மறைமுகமாகக் கூடும் அந்தர்வாகினியான சரஸ்வதி நதி ஆகியன. இதைக் கிருஷ்ணா நதியின் துணை நதி எனச் சொல்லுவாரும் உண்டு.

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலுக்கு கொங்கண அரசன்காமதேவன் என்பவன், ஷிலாஹரா, தேவகிரி யாதவர்கள் ஆகியோர் திருப்பணி செய்திருப்பதாக அறிகிறோம். சளுக்கியக் கலையைச் சார்ந்து கட்டப்பட்ட இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னாலிருந்து உள்ளது என்பதோடு பற்பல புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கராசாரியாரும் இந்தக் கோயிலுக்கு வந்து சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. சத்ரபதி ஷிவாஜி, சம்பாஜி ஆகியோரின் இஷ்ட தெய்வமாகவும் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி இருந்து வந்திருக்கிறாள்.
பஞ்ச கங்கா நதிக்கரை





நதிக்கரையில் உள்ள ஆஞ்சி கோயில்


இந்தக் கோயில் காடுகளை அழித்துப் பின்னர் வெளி உலகுக்கும் மக்கள் வழிபாட்டுக்கும் கர்ணதேவன் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தக் கோயிலைப் பற்றிய ஆய்வுகள் இது ஏழாம், எட்டாம் நூற்றாண்டை விட மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள் சிலர். பூகம்பத்தின் விளைவாக இது உள்ளே புதையுண்டு இருந்ததாகவும் ஒன்பதாம் நூற்றாண்டில்  கந்தவாடி மன்னனால் கோயில் விரிவு படுத்துப்பட்டுக் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். அதன் பின்னர் 12,13 ஆம்நூற்றாண்டுகளில் ராஜா ஜயசிங்கால் தென்புறத்துக் கதவும் நுழைவாயிலும் கட்டப்பட்டு அதன் பின்னர் தேவகிரி யாதவ மன்னர்களால் மஹாத்வார் என அழைக்கப்படும் முக்கிய வாயிலும் கட்டப்பட்டு இருக்கிறது.

கோயில் மிகப் பெரியதாக இருப்பதால் எல்லாப் பக்கத்து வாயில்களுக்கும் போக முடியவில்லை. பிரகாரங்களும் பெரியவை! ஆங்காங்கே தீபஸ்தம்பங்கள் இருக்கின்றன.

Friday, April 19, 2019

அரங்கன் வந்தான்!

இன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். ஆனாலும் காலை வேளை தொலைக்காட்சி போடவில்லை. பின்னால் காட்டும்போது தான் பார்க்கணும். ஏனெனில் இங்கே அரங்கன் வருகிறன். அவனைப் பார்க்கத் தயாராகணும்.


தெருவில் எங்க வளாகத்துக்கு எதிரே உள்ள பக்கம் அரங்கன் வருகிறான்


இன்னிக்குச் சித்ரா பௌர்ணமி என்பதால் அம்மாமண்டபத்தில் கஜேந்திர மோக்ஷம் விமரிசையாக மாலை வேளை அம்மாமண்டபம் படித்துறைக்குச் சற்றுத் தள்ளி நடைபெறும். அதற்காக ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் அம்மாமண்டபம் வந்து அன்று முழுவதும் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மாலை கஜேந்திர மோக்ஷம் முடிந்து இரவு திரும்புவார். நேற்றிலிருந்தே பரபரப்புடன் அரங்கன் வரும் நேரம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்று காலை பத்தரை மணி போல் வரலாம் என்று தகவல் கிடைத்ததால் காலை அரை மணி நேரம் மட்டுமே கணினியில் உட்கார்ந்துவிட்டுப் பின்னர் வீட்டு வேலைகளைக் கவனித்துவிட்டுக் குளித்து முடித்துக் கஞ்சி குடித்து அரங்கனைக் காணத் தயார் ஆனேன்.


வெளியே சென்றிருந்த நம்ம ரங்க்ஸ் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்து அரங்கன் வீட்டுக்கருகே உள்ள மண்டகப்படிக்கு வந்துவிட்டதாகவும் சீக்கிரம் கீழே போகும்படியும் சொன்னார். அதன் மேல் அடுப்பில் போட்டிருந்த பருப்பைப் பின்னர் வந்து வேக வைக்கலாம் என அடுப்பை அணைத்துவிட்டுக் கீழே இறங்கினேன். பாதுகாவலர் இன்னும் அரை மணி ஆகும் என்றார். அதற்குள்ளாக அரங்கனை எதிர்கொண்டு பார்த்தவர்  ஒருத்தர் கிட்டே வந்துவிட்டதாகச் சொன்னார். ஒன்பதே முக்காலுக்கெல்லாம் குடை வந்தது. ஆகவே குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே சென்று நின்று கொண்டேன். பக்கத்து மண்டகப்படிக்குப் போகலை! அங்கே போனால் ஒரே தள்ளுமுள்ளாக இருக்கிறது என்பதால் போகவில்லை. மேலும் அரங்கனை உள்ளே கொண்டு போய்த் திருப்பி வைத்துப் பின்னர் வெளியே தூக்கி வருகையில் ரொம்பவே தள்ளு, முள்ளாக இருக்கும்.


 ஆனால் இம்முறை அந்த மண்டகப்படிக் காரங்களே அதிகமாய் இல்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அரங்கன் வந்து விட்டான். எங்க வளாகத்தின் பக்கமாய் வந்து மண்டகப்படிக்கு உள்ளே திரும்புவான் என நினைத்தால் கிழக்கே சாலையின் அந்தக் கோடிக்குக் கொண்டு போய்ப் பல்லக்கைப் பின்னர் மண்டகப்படிக்குத் திருப்பினார்கள்.  தெருவை வேறு இப்போது அகலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதால் அரங்கன் தள்ளியே இருந்தான். ஆகவே அருகிருந்து அரங்கனைப் பார்க்க முடியலையே என மண்டகப்படிக்குள் நுழைந்தேன். உள்ளே கூட்டம் இருந்ததாலும் அரங்கனுடன் வந்த பாரிசாரகர்கள் இருந்ததாலும் அருகில் செல்ல முடியவில்லை.  முடிந்த வரை படம் எடுத்தேன். வெயிலின் காரணமாக இரு பக்கமும் தடுப்பு வேறே போட்டிருந்ததால் உள்ளே வெளிச்சம் அதிகம் இல்லை. அரங்கன் மிக எளிமையான அலங்காரத்தில் சாதாரணமான ஒரு தங்கக்கிரீடத்தோடு எளிமையான உடைகளோடு சேவை சாதித்தான்.

அரங்கன் அங்கிருந்து கிளம்புகையில் அவன் பல்லக்கிற்கும் எனக்கும் இரண்டடி தூரமே! ஆனாலும் அப்போப் படம் எடுக்கத் தோன்றவில்லை. காமிரா ஆனிலேயே இருக்க அரங்கனையே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். "ஏன், படம் எடுக்கலையா?" என அரங்கன் கேட்பது போலவும், "உன்னைப் பார்ப்பது தானே முக்கியம். அதை விடப் படம் எடுத்துப் போட்டுப் பெயர் வாங்குவது பெரிய விஷயமா? இவ்வளவு கிட்டே உன் முகத்துச் சிரிப்பும், முகவாய்க்கட்டைச் சுருக்கமும், வாய்க்குள் நீ சிரிப்பதும் படம் எடுத்தால் என்னால் கவனித்துப் பார்த்து ரசிக்க முடியுமா? அந்த அழகு தான் கண்ணில் படுமா?  படம் எடுப்பதிலே புத்தி போகாமல் உன்னைப் பார்ப்பதிலே புத்தி போயிற்றே!  இப்போ நீ தான் முக்கியம். உன் அழகைப் பார்ப்பது தான் முக்கியம்!"என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.திரும்பி வரும்போது கண் முன்னே அழகிய மணவாளனாக இருந்து நம்பெருமாளாக ஆனவனின் அழகிய முகமே கண்ணெதிரே!


Thursday, April 18, 2019

கோலாப்பூரை நோக்கி!

மங்கள்வார்ப்பேட்டையில் சாய் ஹெரிடேஜ் என்னும் லாட்ஜில் வந்து ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். இங்கேயும் சுமார் ஏழு, எட்டுப் படிகள். எல்லாம் கறுப்பு கிரானைட் கற்களால் ஆனவை! கொஞ்சம் வழுக்கினாலும் அதோகதி தான். இரு பக்கமும் பிடித்துக் கொள்ளும் பிடிமானச் சாய்வுப் பகுதியும் ரொம்பவே ஓரத்தில் இருந்தது. என்றாலும் அந்த ஓரத்திற்கே போய்ப் படிகளில் மேலே ஏறினோம். அங்கே இருந்த வரவேற்பு அறையில் இருந்தவர் அந்த லாட்ஜின் மானேஜர் என்று சொன்னார். அவர் எங்களைப் பார்த்ததுமே எங்களால் ஏற முடியவில்லை என்றதுமே கீழேயே இருந்த ஓர் அறையைக் காட்டினார். லிஃப்ட் இல்லையா என்று கேட்டதுக்கு, இருப்பதாகவும், இது கீழே இருப்பது பல விதங்களில் உங்களுக்கு வசதி எனவும் சொன்னார். நானும் அறையைப் போய்ப் பார்த்தேன். நல்ல பெரிய அறையாக இருந்தது. ஏசியும், டிவியும் இருந்தது. கழிவறையும் நாங்கள் கேட்கிறாப்போல் மேல்நாட்டு முறை என்பதோடு சுத்தமோ சுத்தம். அதைப் பார்த்ததுமே நான் தலையை ஆட்டிவிட்டேன்.

அறை வாடகை 2500 ரூ என மானேஜர் சொல்ல, நான் அவரிடம் அறையில் காஃபி, தேநீர் வைப்பீங்களா எனக் கேட்டதற்கு அதெல்லாம் இல்லை என்றார். அப்போ காம்ப்ளிமென்ட்ரி ப்ரெக் ஃபாஸ்ட் உண்டா எனக் கேட்டதற்கு அதுவும் இல்லை என்றார்.  அதன் பேரில் நான் அப்போ இந்த அறை வேண்டாம். ரொம்பவே வாடகை ஜாஸ்தி எனத் திரும்ப ஆரம்பித்தேன். மானேஜர் விடவில்லை. அதோடு அந்த ஆட்டோ ஓட்டுநர் வேறே குறுக்கே குறுக்கே பேசிக் கொண்டே இருக்கக் கோபம் வந்த மானேஜரும்,  எரிச்சலான நானும் ஆட்டோ ஓட்டுநரைப் பேசாமல் இருக்கச் சொன்னோம்.அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் அறைக்கு 1500 ரூ வாடகைக்கு மேல் கொடுக்க முடியாது எனத்திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அவர் தானே நிதி மந்திரி! ஆனால் மானேஜர் மாட்டேன்னு சொல்லுவார் என்றே நான் எதிர்பார்த்தால் அவர் 2000 ரூபாய்க்கு இறங்கி வந்தார். நம்மவர் பிடிவாதமாக 1500 ரூபாயிலேயே நிற்கக் கடைசியில் இருவருக்கும் பொதுவாக 1600 ரூபாயில் அறை பேரம் முடிந்தது. நாங்க மானேஜரிடம் ஏற்கெனவே நாங்க பண்டர்பூரிலிருந்து சனிக்கிழமை மதியம் வந்து தங்கத் தான் அறை எனச் சொல்லி இருந்ததால் அவரும் அதற்கு ஒத்துக் கொண்டதோடு இல்லாமல் ஒரு நாள் வாடகையை முன் பணமாக வாங்கிக் கொண்டு ரசீதும் கொடுத்தார். லாட்ஜின் முகவரி அடங்கிய அடையாள அட்டையையும் கொடுத்தார்.

ஒரு பெரிய பிரச்னை தீர்ந்தது. பண்டர்பூரில் இருந்து எந்த நேரம் எப்போ, எப்படி வரோமோ, வந்தால் உடனே தங்க இடம் இருக்கு என நிம்மதி.ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் விட்டால் தானே!எந்த வண்டியில் வரப்போகிறாய் என எங்களைக் கேட்க சோலாப்பூரிலிருந்து வரும் உதான் எக்ஸ்பிரஸ் என நாங்கள் சொல்ல அது மதியம் 3-45க்குப் புனே வருவதாகவும், முதல் நடைமேடைக்கு அருகே தான் நிற்பதாகவும், நாங்க ரயிலில் இருந்து இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தொலைபேசியில் அழைப்புக் கொடுக்குமாறும் சொல்லி தன் அலைபேசி எண்ணை எங்களுக்குத் தெரிவித்துவிட்டு எங்களை மீண்டும் புனே ரயில் நிலையத்தில் கொண்டு விட்டார். இதற்குள்ளாக மணி ஏழரை ஆகி இருந்தது. இரவு எட்டு மணி வரை தான் டார்மிடரியில் தங்கலாம்.காலி செய்யணும். ஆகவே நம்ம ரங்க்ஸ் என்னைக் கீழேயே இருக்கச் சொல்லிவிட்டு ஒரு போர்ட்டரைப் பார்த்து இரவு கோலாப்பூர் வண்டியில் ஏற்றிவிடணும் என்றும் ஏ-2 ஆம் எண் பெட்டியில் 7, 9 படுக்கை எண் எனவும் சொன்னார். அந்தப் போர்ட்டர் 300 ரூபாய் முதலில் கேட்டார். ரயில் பத்து மணிக்குத் தான் வருகிறது. அதோடு அது முதல் நடைமேடைக்கும் வராது! ஏழு அல்லது எட்டில் வரலாம். எதில் என்பது வரும்போது தான் தெரியும். ஆகவே அங்கே வரை தூக்கிச் செல்லணும் என்றார். பின்னர் பேரம்பேசி 200ரூக்கு ஒத்துக் கொண்டு ரயில் எங்கே வரும் என்பது தெரியும்வரை எங்களைப் பயணிகள் தங்கும் அறையில் உட்காரும்படி சொல்லிவிட்டுப் போனார்.

வண்டிவருவதற்கு அரை மணி நேரமே இருக்கையில் அந்த வண்டி ஒன்பதாம் நடைமேடைக்கு வருவதாகப்போட்டார்கள். உடனே போர்ட்டர் எங்கிருந்தோ வந்து எங்களை அழைத்துக் கொண்டு அந்த நடைமேடைக்குச் சென்றார். அது மும்பையிலிருந்து வருகிறது. நல்லவேளையாகப் படிகள் உள்ள பக்கம் மேலே ஏற்றிக் கூட்டிச் செல்லாமல் கூடியவரை சரிவான பாதை வழியாகவே கூட்டிச் சென்றார். இருந்தாலும் என்னால் வேகமாகச் செல்ல முடியவில்லை. ஒருவழியாக வந்து சேர்ந்தோம். டிஸ்ப்ளேயில் ஏ2 எங்கேயோ காட்டப் போர்ட்டர் எங்களை எங்கேயோ நிறுத்தி இருந்தார். ஆகவே எங்களுக்குச் சந்தேகம் வந்து நாங்க அந்த டிஸ்ப்ளே பக்கம் போய் நின்றோம். போர்ட்டர் வந்து எங்க பெட்டி அவர் எங்களை நிறுத்தி இருந்த பக்கம் தான் வரும் என்றார். அதே போல் வண்டி வந்ததும் சரியாகப்போர்ட்டர் எங்களை நிறுத்தி இருந்த பக்கமே எங்கள் பெட்டியும் வந்தது. நாங்கள் ஏறிக்கொள்ள சாமான்களைக் கொண்டு வைத்த போர்ட்டர் அதைச் சரிபார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிச் சென்றார். இருவருக்குமே கீழ்ப்படுக்கைகள் தான். படுக்கை மும்பையிலிருந்து வந்தவர்கள் யாரோ படுத்திருந்தது தெரிய அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் புதிய படுக்கைகள் வாங்கிக் கொண்டோம். படுத்தோம். முதலில் தூக்கம் வரவில்லை என்றாலும் காலை வேளையில் கண்ணை அழுத்தியது. அப்போது பார்த்து ரயில்வே ஊழியர் கோலாப்பூர் வருவதாகச் சொல்லி எல்லோரையும் எழுப்பிச் சென்றார். இந்தச் சேவை இப்போது இங்கே தமிழ்நாட்டில் எல்லாம் பார்க்க முடிவதில்லை. ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் ஶ்ரீரங்கம் வரும்போதெல்லாம் இப்படித் தான் ஊழியரிடம் சொல்லுவோம். அவர் நாங்க எழுப்புவதில்லை என்று சொல்லிவிடுவார். ஆகவே சரியான தூக்கம் இருக்காது. ஒவ்வொரு ஸ்டேஷனாக எழுந்து எழுந்து பார்த்துக் கொண்டு வருவோம்.

கோலாப்பூரில் கீழே சாமான்களையும் இறக்கிக் கொண்டு நாங்களும் இறங்கியதுமே ஓர் ஆட்டோக்காரர் எங்களிடம் வந்தார். அவரிடம் நாங்க தங்குமிடம் கோயிலுக்கு அருகே வேண்டும் எனவும் அங்கிருந்து கோயில் நடந்து செல்லும் தூரம் இருந்தால் நல்லது என்றும் சொல்ல அவரும் அப்படிப்பட்டலாட்ஜுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார். அவர் கேட்ட தொகை வெறும் ஐம்பதே ரூபாய்கள் தான். முதலில் கூட்டிச் சென்ற லாட்ஜ் நன்றாக இருந்தாலும் அங்கேயும் படிகள், படிகள், படிகள்! அதோடு மேலே அறைகள்! அங்கே செல்லவும் லிஃப்ட் இல்லை! படிகள்! ஆகவே நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னொரு லாட்ஜ் இன்னமும் புதியதாகவும் நன்றாகவும் அவங்களே சாப்பாடும் கொடுப்பதாகச் சாப்பாடுக்கூடமும் இணைந்து இருந்ததுக்குச் சென்றால் அந்த ஓட்டல் வரவேற்பு ஊழியருக்கு எங்களைப்பார்த்தால் அங்கே தங்குபவர்களாகத் தெரியவில்லை போல! அறையே இல்லை என்று சொல்லிவிட்டார். மேலும் இந்த லாட்ஜும் படிகள் ஏறித் தான் ஆகணும்! நன்றாகக் கவனித்ததில் எல்லாமுமே படிகள், படிகள் தான்! என் நிலைமையைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் எங்களை வண்டியில் அமர வைத்து அந்தத் தெருவையே சுற்றிக் கொண்டு தெரு முனையில் இருந்த ஓர் சரிவுப்பாதைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அது கார்கள் நிறுத்துமிடம் போல் இருந்தது. அங்கே இருந்த ஒருவரிடம் மராட்டியில் பேசிவிட்டு எங்களை அங்கே இருந்த ஒரு லிஃப்டைக்காட்டி மேலே அறையைப் பார்க்கச் சொன்னார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.

நான் மட்டும் மேலே போய் அறையைப் பார்த்தேன். நன்றாகவே இருக்க, நான் அங்கேயே தங்கிக் கொண்டு சாமான்களையும், நம்ம ரங்க்ஸையும் மேலே வரும்படி சொல்லி அனுப்பினேன். கூடவே இரண்டு கப் தேநீர் சூடாக வேண்டும் எனவும் அரை மணி கழித்துக் கொண்டு வரும்படியும் சொல்லி அனுப்பினேன்.  நம்ம ரங்க்ஸ் அந்த ஆட்டோக்காரரையே கோலாப்பூர் சுற்றிப் பார்க்க ஏற்பாடும் செய்து விட்டார். அவரும் எட்டரை மணிக்கு வருவதாகச் சொல்லிச் சென்றுவிட்டார். ரங்க்ஸும் சாமான்களும் மேலே வந்து நாங்கள் பல்தேய்த்து முடித்துத் தேநீர் குடிக்கத் தயாராகியும் தேநீர் வரவே இல்லை. தொலைபேசியில் கேட்டதற்கு நாங்க மெதுவாக் கொண்டுவரும்படி சொல்லி இருப்பதால் தாமதம் எனவே தலையில் அடித்துக் கொண்டு தேநீரைக் கொண்டு வரும்படி சொன்னோம். பின்னர் தேநீரைக் குடித்துக் குளித்து முடித்துத் தயாராக ஆனோம். கோயிலுக்குச்செல்லத் தயார் என்பதை அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத்தொலைபேசி மூலம் தெரிவித்தார் நம்ம ரங்க்ஸ். சற்று நேரத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் கீழே வந்துவிட்டு எங்களுக்குத் தகவல் கொடுக்கவே நாங்களும் கீழே இறங்கி ஆட்டோவில் ஏறி முதலில் காலை உணவுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னோம். கோயிலுக்கு அருகே இருந்த ஒரு சின்ன ரெஸ்டாரன்டில் நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் எங்களைச் சாப்பிட்டு வரும்படி சொன்னார். அவரை அழைத்ததற்குத் தான் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச்சொல்லி விட்டார்.

நாங்களும் அங்கே போய் என்ன இருக்கிறது எனப் பார்த்ததில் போஹா, ப்ரெட் டோஸ்ட், சான்ட்விச், தோசை எனப் போட்டிருந்தது. எனக்கு அங்கெல்லாம் தோசை சாப்பிட பயமாக இருக்கவே எனக்கு மட்டும் ப்ரெட் டோஸ்ட் போதும் என்றேன். வயிற்றையும் எதுவும் செய்யாது. சற்று யோசித்த ரங்க்ஸ் தனக்கும் அதுவே கொடுக்கச் சொன்னார். அவங்க ப்ரெட் வாங்க பேக்கரிக்குப் போனாங்களா இல்லை, பேக்கரியில் ப்ரெட்டை அப்போத் தான் செய்து கொண்டிருந்தாங்களா தெரியலை! சுமார் அரைமணி நேரம் ஆனது ப்ரெட் டோஸ்ட் கொடுக்க. இத்தனைக்கும் அப்போ அந்த ஓட்டலில் இருந்ததே நாங்க இரண்டு பேர் தான். அப்புறமாத் தான் மேலும் இருவர் வந்தனர். ஒருவழியாக ப்ரெட் டோஸ்ட்வந்தது! இரண்டேஇரண்டு பீஸ்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அது 75 ரூபாய்! பின்னர் தெரியாத் தனமாகக் காஃபி சொல்லிக் கோகோ கலந்த காஃபி வர அதைக் குடிக்க முடியாமல் அப்படியே வைச்சுட்டு வந்தோம். காஃபி 60 ரூபாய்! இப்படியாகத் தானே பழைய கடனைக் கழித்துவிட்டுக் கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம்.

Tuesday, April 16, 2019

பயணம் தொடருகிறது!

ஒவ்வொரு முறை விமானப்பயணத்திலும் நான் கவனித்து வருவது மத்தியதர, அல்லது அடித்தட்டு மத்தியதர மக்களும் இப்போதெல்லாம் விமானப் பயணங்களை விரும்புவது தான். அதற்கு முக்கியக் காரணம் விமானப் பயணச் சீட்டுகள் போட்டியின் காரணமாக விலை குறைக்கப்படுவதே. தங்களுக்கேற்ற சௌகரியமான நாளில் விமானப் பயணத்துக்கான சீட்டு விலை குறைவாக இருக்கையிலேயே குழுவாகவோ, குடும்பமாகவோ சுற்றுலாவுக்கு முன் பதிவு செய்து விடுகின்றனர். அதிலும் கடந்த ஐந்தாறு வருடங்களில் இது அதிகமாகவே தென்பட்டு வருகிறது. அதே போல் இம்முறையும் சாமானிய மக்கள் விமானத்தில் அதிகம் காணப்பட்டனர். அதனால் உணவு விற்பனை குறைவு என்றே சொல்ல வேண்டும். பணம் படைத்தவர்கள், மேல் தட்டு மத்தியதர வர்க்கம் எனில் விலையைப் பார்க்காமல் வாங்குவார்கள். மற்றவர்களிடம் அது எடுபடாதே! அநேகமாக அனைவரும் உணவை வீட்டில் இருந்தே கொண்டு வந்து சாப்பிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இட்லி, சாம்பார் மணம் ஊரைத் தூக்கியது. என்றாலும் நாங்கள் வாங்கவில்லை!  போகும்போது எங்களுக்கு இரட்டை இருக்கையாக அமைந்து விட்டது. அந்த விமானமே இருபக்கமும் இரட்டை இருக்கைகளாகக் கொண்டது தான். திருச்சி விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நபர், இளைஞர்  2,3 நண்பர்களுடனும் ஒரு பெண்ணுடனும் வந்திருந்தார். அவரும் சென்னை செல்கிறார் என்பது புரிந்தது. எங்கேயோ பார்த்த முகம்! ஆனால் புரிஞ்சுக்கலை. நான் அவங்களையே பார்த்த வண்ணம் யோசனையில் இருக்க நம்ம ரங்க்ஸ் என்னைத் தன் கையால் தட்டினார்.

என்ன என்பதைப் போல் நான் பார்க்க மெல்லக் கிசுகிசுவென்று அதான் அந்த நடிகர்! அந்தப் பெண்ணும் அந்த நடிகை! என்றார். எனக்குக் கோபம் வந்தது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எந்த நடிகை, எந்த நடிகர்! சொன்னால் தானே தெரியும். அந்தப் பெண்ணும் அந்தப் பையரும் சிரித்துச் சிரித்து சுற்றுவட்டாரப் பிரக்ஞையே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இவர் என்னிடம் மறுபடி சொல்ல வரும்போது கொஞ்சம் யோசனையுடன், "ஆர்யாவோ" என்றவர் தலையை ஆட்டிக் கொண்டு, "இல்லை, இல்லை, இது ஜீவா! ஆமாம் அவரே தான்!" என்றார். நான் ஙே!!!!!!!!! "ஜீவா" என்னும் பெயரில் ஒரு நடிகர் இருக்காரா? அந்தப் பெண்? என்று கேட்டவர் , அந்தப் பெண் தான் சீரியலில் எல்லாம் வருவாளே! என்றார். எந்த சீரியல்? கேட்டால் சொல்லத் தெரியவேண்டாமோ! சீரியல் கதையையும் சொல்லத் தெரியலை. எனக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கும் நினைவு தான்! நடிகை என்பது புரிந்தது. இங்கே திருச்சியில் ஏதேனும் படப்பிடிப்புக்கு வந்துட்டு திரும்பிப் போறாங்க போல என நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் விமான நிலைய நுழைவாயிலில் விமானத்துக்காகக் காத்திருக்கையில் நடிகை குயிலி அங்குமிங்குமாகப் போய் வந்தார். அதான் இப்படினு பார்த்தால் சென்னையிலிருந்து பெண்களூரோ அல்லது வேறே ஏதோ ஊருக்கோ போகும் விமானத்தில் ஏறுவதற்காக வடிவேலுவுடன் செத்துச் செத்துப் பிழைப்பாரே அந்த நடிகர் வரிசையில் சிலருடன் நின்று கொண்டிருந்தார்.  இவர்களைத் தவிர நடிகர் பவன் கல்யாண் (எனக்கு இவரை அடையாளமெல்லாம் தெரியலை. நம்ம ரங்க்ஸ் சொன்னது தான். கல்யாண் குமார் பிள்ளை என்று காட்டினார்.) பெண்களூருக்கோ எங்கேயோ போய்க் கொண்டிருக்கையில் நாங்க இருந்த நுழைவாயிலுக்குத் தான் வந்து விமானம் ஏற வரிசையில் நின்றார். இவர்  ரம்யா கிருஷ்ணனுடன் கூட ஏதோ ஒரு சீரியலில் நடித்திருப்பது நினைவுக்கு வந்தது. இவங்க தரிசனம் எல்லாம் முடிஞ்சு தான் நாங்க புனே செல்ல விமானம் ஏறி வழியில் திருமலா-திருப்பதி தரிசனமும் கிடைத்தது! :)))))

விமானம் சரியான நேரத்துக்குப் புனே போய்ச் சேர்ந்தது. பனிரண்டு மணிக்குள்ளாகப் போய் விட்டோம். இரவு பத்து மணிக்குத் தான் கோல்ஹாப்பூருக்கு ரயில். அதுவரை இங்கே தான் பொழுதைக் கழிக்கணும். யோசனையுடன் சாமான்கள் பெற்றுக்கொள்ளும் பெல்டுக்கு வந்து எங்கள் சாமான்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு ட்ராலியில் வைத்த வண்ணம் வெளியே வந்தோம். முன் பதிவு ஆட்டோக்கான வரிசைக்கு வந்து உணவு பற்றி விசாரித்ததில் அங்கேயே பக்கத்தில் தென்னிந்திய உணவு விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். பின்னர் நாங்கள் புனே ரயில் நிலையம் போகணும் என்றதும் அங்கேயே ரயில் நிலையம் எதிரில் "சாகர்" என்னும் உணவகம் இருப்பதாகவும் உணவு மிகப் பிரமாதமாக இருக்கும் எனவும் சொன்னார்கள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு இங்கே உணவு உண்டு விட்டுப் போவதற்குப் பதிலாக சாகரிலேயே உணவு உண்டுவிட்டுப் பின்னர் யோசிக்கலாம் எனச்சென்றோம்.  135 ரூ தான் ஆட்டோவிற்கு விமானநிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல வாங்கினார்கள். முதலில் பக்கத்தில் இருக்கும் வேறோர் ஓட்டலில் இறங்கச் சொன்ன ஆட்டோக்காரர் என்னுடைய கண்டிப்பான மறுப்பால் ரயில் நிலையம் எதிரே உள்ள சாகரிலேயே நிறுத்தினார்.

வடமாநிலங்களிலேயே முக்கியமாய் மஹாராஷ்டிராவில் தெருவிலிருந்து/சாலையிலிருந்து சுமார் பத்துப் படிகளாவது மேலே ஏறித் தான் நாம் செல்ல வேண்டிய ஓட்டலுக்கோ, அல்லது தங்குமிடங்களுக்கோ, வீடுகள் சிலவற்றிற்கோ செல்லும்படி இருக்கிறது. அதே போல் இந்த சாகர் ஓட்டலும் பத்துப் படிகள் மேலே ஏறித் தான் போனோம். உள்ளே போகச் சொன்னார்கள். உள்ளே ஏசி அறை போலும். அங்கே வரும்படி அழைத்தனர். உள்ளே சென்றோம். உணவு மெனு கார்டு கொடுத்தார்கள். நல்ல பசி என்பதால் சப்பாத்தியும் பைங்கன் பர்த்தாவும் தேர்வு செய்தோம். சப்பாத்தி கிடைக்காது என்றும் நான் அல்லது ரொட்டி கிடைக்கும் எனவும் சொன்னார்கள். ரொட்டி எனில் கொஞ்சம் கனமாக கிட்டத்தட்ட நான் போல், நெருப்பில் சுட்டிருப்பார்கள். ஆனால் கோதுமை மாவில் செய்வது. நான் முழுக்க முழுக்க மைதாவில் செய்திருப்பார்கள். நாங்க ரொட்டியே சொன்னோம். பைங்கன் பர்த்தா சுவை நன்றாக இருந்தது என்றாலும் அவ்வளவு காரம் என்னால் சாப்பிட முடியவில்லை. பச்சை மிளகாயை தாராளமாக அள்ளித் தெளித்திருந்தார்கள். மும்பையில் போரிவிலியில் மைத்துனர் இருந்தபோது சமோசா வாங்கி வருவார்கள். அதோடு கூட பச்சை மிளகாயும் எலுமிச்சை ரசத்தில் , உப்பு, மிளகாய்த் தூளோடு ஊறியதை வதக்கிக் கொடுத்திருப்பார்கள். நம்மால் எல்லாம் அந்தப் பச்சை மிளகாயைச் சாப்பிட முடியாது! நான் தூக்கிப் போட்டுடுவேன். அவங்கல்லாம் ரொட்டிக்கே பச்சை மிளகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுகின்றனர்.  அதன் பின்னர் சாஸ் என அழைக்கப்படும் மோர் (கிட்டத்தட்ட நம்ம ஊர் மசாலா மோர் போன்றது. ஆனால் நல்ல கெட்டியாக க்ரீமோடு இருக்கும்.) சாப்பிட்டோம். கை கழுவ பிங்கர் பவுல்ஸும் கொடுத்தார்கள்.

அங்கிருந்து கிளம்பிய போது அங்கேயே தங்க அறை கிடைத்தால் வசதி எனத் தோன்றவே அங்கே கேட்டதற்குப் பக்கத்தில் கேட்கச் சொன்னார்கள். உடனே பக்கத்தில் போனோம். அதற்கும் படிகள் மயம் தான்! அங்கே இடித்து வேறே கட்டிக் கொண்டிருந்தனர். ஆகவே அங்கே இருந்த வரவேற்பாளர் இப்போ இந்தப் படிகள் ஏறவே உங்களுக்குச் சிரமமாக இருக்கு. அறைகள் மேலே தான் இருக்கின்றன. 2000 ரூபாய்க்கு மேல் வாடகை! நான் ஏசி தான். ஏசி எனில் 2,500 ரூபாய் வாடகை. உங்களால் ஏறி இறங்க முடியுமா? லிஃப்ட் இன்னும் பொருத்தவில்லை என்றார். லிஃப்ட் பொருத்தினாலும் பொருத்தாவிட்டாலும் ஏசி இல்லா அறைக்கு வாடகை ஜாஸ்தி எனத் தோன்றியதால் வேண்டாம்னு வந்துட்டோம். அதோடு காலை உணவு காம்ப்ளிமென்ட்ரி கிடையாது. நம்ம கொடைக்கானலிலேயே தமிழ்நாடு ஓட்டலில் தங்கினால் காலை உணவு காம்ளிமென்ட்ரி. டோக்கன் கொடுத்துடுவாங்க. அதோடு அறைக்கு ரூம் செர்வீஸும் உண்டு என்பதோடு எப்போதும் வெந்நீர் வரும். அதைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் நாங்க பூம்பாறை போனப்போ வேறே ஓட்டலில் தங்கிட்டு அவதிப்பட்டது தனிக்கதை! அதைப் பின்னொரு நாள் வைச்சுப்போம். இந்த ஓட்டலில் அறை வேண்டாம்னு வெளியே வந்ததும் ரொம்ப நேரமா எங்களையே கவனித்துக் கொண்டிருந்த ஓர் ஆட்டோக்காரர் தான் ஓர் லாட்ஜுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்.

புனே ரயில் நிலையத்தில் நாங்க முன்பதிவு செய்திருந்த டார்மிட்டரிக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிடவே நான் அங்கே போகணும் என்றேன். எதிரே தான் ரயில் நிலையம். ஆனால் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்க இயலாது! நடுவே சென்டர் மீடியன். ஒருவழிப்பாதை வேறே. சுற்றிக் கொண்டு தான் வரணும். அதனால் இந்த ஆட்டோக்காரரைக் கேட்க அவரோ தான் அழைத்துச் செல்லும் லாட்ஜுக்குத் தான் முதலில் போகணும்னு பிடிவாதம் பிடிக்க நான் கொஞ்சம் கடுமையாகவே அறை எங்களுக்கு சனிக்கிழமை தான் தேவை. இன்னிக்கு இரவு ரயிலில் நாங்க கோலாப்பூர் போவதால் ரயில் நிலையத்திலேயே டார்மிடரியில் புக் செய்திருக்கோம். முடிஞ்சால் ரயில் நிலையத்திற்குக் கொண்டு விடு! என்று சொல்லி விட்டேன். முணுமுணுத்துக் கொண்டே ரயில் நிலையத்திற்குக் கொண்டு விட்டார் அந்த ஆடோ ஓட்டுநர். தங்குமிடம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு பெட்டிகளையும், பையையும் தூக்கிக் கொண்டு மேலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏறினோம். அங்கிருந்த பொறுப்பாளரிடம் எங்களுடைய டார்மிடரி ரசீதைக் காட்டி எங்களுக்கான படுக்கைக்குச் சென்றோம். நான்கு பக்கமும் மரத்தடுப்புக்களால் தடுக்கப்பட்டு கிட்டத்தட்டப் பத்துக்குப் பத்து அறை போலவே அது இருந்தது. அங்கே போய்ப் பெட்டிகளை வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டோம்.

மாலை அங்கே தேநீரோ, காஃபியோ வரும் என நினைத்தால் எதுவும் வருவதில்லை. இதற்கு முன்னால் ரயில்வே தங்குமிடத்தில் தங்கும்போதெல்லாம் காஃபி, தேநீர், தினசரி ஆகியவை இலவசமாகக் கொடுத்து வந்திருக்கின்றனர். அதோடு நம்ம ரங்க்ஸ் இங்கேயே அறை  கிடைத்தால் தங்கிவிட்டுத் திரும்பும்போது இங்கிருந்தே விமானநிலையம் செல்லலாம் என யோசித்தார். உடனே ரயில்வே அலுவலக அதிகாரியைப் போய்ப் பார்த்தால் அவர் இப்போதெல்லாம் இந்தத் தங்குமிடம் ஒதுக்குவதை நாங்கள் செய்வதில்லை. ஐ.ஆர்.சி.டி.சி. நேரிடையாகச் செய்கிறது. மேலும் இருவருக்காக எல்லாம் இப்போது அறைகள் கொடுப்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு குடும்பம் அல்லது 3,4 பேர் இருக்க வேண்டும். இருவருக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று சொல்லிவிட்டார். சரினு அங்கே இருந்த காஃபி ஸ்டாலில் தேநீர் கேட்டு வாங்கி வந்தார். அதைக் குடித்தால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோகோ பவுடர் போட்ட காஃபி! குமட்டிக் கொண்டு வந்தது. கொஞ்சம் வெளியே போய் வரலாம்னு கிளம்பினோம். அப்படியே திரும்பி வரச்சே இரவு உணவை முடிச்சுக்கலாம்னு எண்ணம். மறுபடி அதே லாட்ஜுக்குப் போய் அறைக்கு விண்ணப்பித்தால் காலை இருந்தவர் இப்போ இல்லை. இப்போ அறை வாடகை ஏசி இல்லாததற்கே 2500 ரூபாய் எனவும் அதுவும் இரண்டு பேருக்குக் கொடுக்க முடியாது எனவும் சொல்லி விட்டார். கறாராகப் பேசினார்.

பக்கத்தில் உள்ள சாகர் ஓட்டலுக்குப் போய் ஆளுக்கு ஒரு பாதம் மில்க் ஷேக் சாப்பிட்டோம். ஆனை விலை, குதிரை விலை கூடக் கொஞ்சம் இறங்கி இருக்கும் போல! அங்கிருந்து அறைக்கு என்ன செய்வது என யோசித்த வண்ணமே நடந்தால் மறுபடி மேலே முட்டிக் கொண்டது அதே ஆட்டோக்காரர். கிட்டத்தட்ட எங்களைத் தூக்கிப் போட்டுக்கொள்ளாத குறையாய் அந்த ஆள் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்தார்.  வழியெல்லாம் இது கேஈஎம் ஆஸ்பத்திரி, இது அந்தப் பேட்டை, இது இந்தப் பேட்டை என நம்மவர் புனே குறித்த பழங்கால நினைவுகளில் ஆழ ஆட்டோ மங்கள்வார்ப்பேட்டையில் ஓர் ஓட்டல் முன் வந்து நின்றது.

Sunday, April 14, 2019

முதலில் வெங்கடாசலபதி, பின்னர் மஹாலக்ஷ்மி!


Kolhapur Mahalakshmi Temple

kolhapur mahalakshmi க்கான பட முடிவு

மஹாலக்ஷ்மி கோயில் சக்தி பீடங்களில் ஒன்று.இந்தக் கோயில் மஹாலக்ஷ்மியான அம்பிகைக்கு மஹாஸ்தானமாக விளங்குகிறது. இங்கே போய் ஒரு முறையாவது அம்பிகையை வழிபடவேண்டுமென்பது நீண்ட காலமாக இருந்து வந்ததொரு ஆவல். அதோடு கூடவே பண்டரிபுரமும் போகணும் என்னும் ஆவல். ஏற்கெனவே பண்டரிபுரம் சென்று வந்ததை எழுதினேன்.
இங்கே பார்க்கவும்

ஆனாலும் இன்னொரு முறை பாண்டுரங்கனையும் தரிசிக்கும் ஆவல். கோலாப்பூரிலிருந்து பண்டர்புர் என  அழைக்கப்படும் பண்டரிபுரம் கிட்டக்கவும் இருக்கிறது.  பண்டரிநாதனைத் தொட்டு அவன் கால்களில் நம் தலையைக் கிடத்தித் தொட்டு வணங்கலாம். பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே அவன் நின்ற வண்ணமே காத்திருக்கிறான்.  இந்த இரு  கோயில்களுக்கும் போக வேண்டிக் கடந்த மூன்று வருஷங்களாகத் திட்டம் போட்டுப் போட்டுக் கிளம்பவே முடியலை. 2016 ஆம் வருஷம் ஏக அமர்க்களமாகப் போய் விட்டது. பின்னர் 2017 மே மாதம் அம்பேரிக்காவில் இருந்து வந்ததில் இருந்து மாமியாரின் விசேஷங்கள் முடிய வேண்டிக் காத்திருந்தோம்.

அதன் பின்னர் சென்ற வருடம் ஃபெப்ரவரி மாதம் அஹமதாபாத் அருகே இருக்கும் மாத்ருகயா சென்று வந்தோம். அதைப் பற்றி எழுதவில்லை. பின்னர் குஞ்சுலு வந்தது. அடுத்தடுத்துச் சில, பல நிகழ்ச்சிகள். வீடு விற்றல், வாங்குதல், உடம்பு படுத்தல்னு காலம் ஒரு வருஷம் ஓடியே போயாச்சு. ஆகையால்  இம்முறை நம்ம ரங்க்ஸ் என்னிடம் கேட்காமலும், சொல்லாமலும் அவரே மண்டையை உடைத்துக் கொண்டு கோலாப்பூருக்கும், பண்டரிபுரத்துக்கும் எப்படிப் போவது, எப்படி வருவது என்பதைத் தீர்மானித்துக் கொண்டார். தீர்மானித்த பின்னர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒப்புக்கு நம்ம கிட்டே ஒப்புதல் கேட்கிற மாமூல்படி ஒப்புதல் கேட்டுவிட்டு எப்போன்னே தெரியாத ஓர் நாள் பயணங்களுக்கு முன்பதிவு செய்து தரும் ஓர் ஏஜென்டிடம் சென்றார். அவர் வழக்கமாக எங்கள் விமானப்பயணங்களுக்கெல்லாம் பயணச்சீட்டு வாங்கித்தருவார். ஐந்தாறு வருஷமாகப் பழக்கம் தான். அவங்க கிட்டேப் போய்த் திருச்சி--சென்னை--புனே, பின்னர் புனே--சென்னை--திருச்சி எனத் தேதிகள் குறிப்பிட்டுப் பயணச் சீட்டு வாங்கி வந்து விட்டார். புனேயிலிருந்து கோலாப்பூர் செல்லவும் சஹ்யாத்ரி எக்ஸ்பிரஸில் இரவு ஏசியில் படுக்கை இருக்கைச் சீட்டு வாங்கிட்டார். கோலாப்பூர் வரை போயிடலாம்.

பண்டரிபுரம் போவது எப்படி? மண்டையைக் குடைந்து கொண்டு ஆராய்ந்து கோலாப்பூரில் இருந்து பண்டரிபுரம் செல்லும் ரயில்களின் நேரங்களை ஆராய்ந்தால் எல்லாம் காலை வேளையிலோ அல்லது இரவு நேரங்களிலோ இருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு ரயிலைக் கண்டுபிடித்தால் அது கோலாப்பூரிலிருந்து நாக்பூருக்குப் பண்டரிபுரம் வழியாகச் செல்வது தெரிய வந்தது. உடனே அதற்குச் சீட்டு வாங்கிட்டோம். பின்னர் பண்டரிபுரத்திலிருந்து புனே வருவதற்கு 23 ஆம் தேதி மாலை ஓர் விரைவு வண்டி இருக்கவே அதில் பயணச் சீட்டு வாங்கினோம். எல்லாமே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன. அதோடு இல்லாமல் திருச்சியில் இருந்து கிளம்பும் நாளன்று புனேக்கு மதியம் பனிரண்டு மணிக்கே போய் விடுவதால் இரவு ஒன்பதரைக்கு அல்லது பத்து மணிக்குக் கோலாப்பூர் வண்டி வரும் வரை எங்கே தங்குவது? புனேயில் ரயில்வே தங்குமிடத்தில் ஆன்லைனில் புக் செய்யப் போனால் இருவருக்கான படுக்கை கொண்ட அறைகள் ஆன்லைனில் முன்பதிவு இல்லை என்றே வந்தது. ஒண்ணுமே புரியாமல் டார்மிட்டரி கேட்க, அதிலும் ஏசி புக் செய்தால் நான் ஏசி தான் கிடைத்தது. சரினு அதைப் பதிவு செய்துட்டோம். மற்றபடி கோலாப்பூர் போய் அங்கே தங்கும் விஷயத்தையும், பண்டரிபுரம் போனதும் அங்கே தங்குமிடத்தையும் பார்க்கணும்.

இது இப்படி இருக்க ஒருநாள் அதாவது நாங்க கிளம்புவதற்குச் சுமார் பதினைந்து அல்லது 20 நாட்கள் முன்னர் நாங்க பண்டரிபுரத்திலிருந்து புனே செல்ல முன்பதிவு செய்திருந்த ரயிலை ரத்து செய்துவிட்டதாகத் தகவல் வந்தது. ஙே!!!!!!!!!!!!!! ஒண்ணும் புரியலை! பண்டரிபுரத்திலிருந்து புனே வருவது எப்படி? மறுநாள் பதினோரு மணிக்குத் தான் சென்னைக்கு விமானம் என்றாலும் முதல் நாள் இரவுக்குள்ளே அங்கே போய் இருந்தால் தானே மறுநாள் காலை கிளம்ப முடியும்? ஒவ்வொரு ரயிலாக மறுபடி ஆய்வு செய்து சனியன்று காலை 11-20 மணிக்கு சோலாப்பூரிலிருந்து புனே செல்லும் ரயிலில் சாதாரணப் பெட்டியில் இடம் கிடைக்க அதை முன் பதிவு செய்து கொண்டோம். ஏசி கிடைக்கவில்லை. ஆனால் பண்டரிபுரத்திலிருந்து சோலாப்பூர் போயாகணும். எதில் செல்வது? அரசாங்கப் பேருந்துகளை நம்பக் கூடாது என்றனர். தனியார் பேருந்துகள் மிகவும் குறைவு என்றனர். ரொம்ப யோசித்து ஒரு கார் அல்லது ஆட்டோ கிடைத்தால் அதில் போகலாம் என முடிவு செய்து கொண்டோம். நடக்கப் போவதை அறியாமலேயே! ஹாஹா, காரில் போவதெனில்2,000 ரூபாயும் ஆட்டோ எனில் 1500 ரூபாயும் ஆகுமாம். ரயிலில் வாங்கி இருந்த பயணச்சீட்டின் விலை 200 ரூபாய்க்குள்ளாக. மண்டைக்குடைச்சல் ஆரம்பம் ஆனது. ஆனாலும் குறித்த நாளில் புனேக்குக் கிளம்பிட்டோமுல்ல!

இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் சாப்பாடு கொடுப்பதில்லை. விலைக்கு வாங்க வேண்டும் என்பதோடு பெரும்பாலும் நூடுல்ஸ், போஹா,ப்ரெட் சான்ட்விச் போன்றவையே தருகின்றனர். விமானத்தில் கொடுக்கும் காஃபியைக் குடிப்பதை விடக் காஃபி குடிப்பதையே நிறுத்திடலாம். ஆகவே நாங்க புதன் கிழமை காலை கிளம்பும் முன்னர் இட்லி வார்த்துச் சட்னி அரைத்து எடுத்துக் கொண்டு ஃப்ளாஸ்கில் வழக்கம் போல் காஃபியும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். திருச்சி விமானநிலையத்தின் வழியே நாங்கள் இதுவரை பயணித்ததில்லை. இதான் முதல் முறை! நாங்க போகும்போதே செக் இன் ஆரம்பம் ஆகி விட்டது. வழக்கம் போல் ரெட் டாக்சியில் தான் போனோம்.220 ரூ தான் ஆகி இருந்தாலும் ஓட்டுநர் விமான நிலையத்திற்குக் கொடுக்கணும் என 60 ரூ தனியாக வாங்கிக் கொண்டார். இது கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஏனெனில் உள்ளே நுழையும்போது எதுவும் கொடுக்காமல் தான் வந்தார்.  ஆனாலும் எதுவும் சொல்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போனோம்.

போர்டிங் பாஸ் வாங்கும்போதே சென்னையில் ஏறவேண்டிய நுழைவாயில் எண்   , இருக்கை எண் எல்லாம் இங்கேயே போட்டுக் கொடுத்துட்டாங்க. சாமான்களையும் காபினிலே வைக்க வேண்டாம் எனவும் புனேயில் பெற்றுக்கொள்ளுங்கள் எனச்சொல்லிக் கார்கோவுக்கு அனுப்பிட்டாங்க. ஆகவே கையில் எதுவும் இல்லை. சாப்பாடும், என்னோட கைப்பையும் தான்.  பின்னர் பாதுகாப்புச் சோதனை முடிந்து விமானம் ஏற  வேண்டிய நுழைவாயில் எண்ணிற்குச் சென்றோம். முன்னரே மொபைல் டாட்டா ஆன் செய்திருந்தேன். ஆனாலும் வேலை செய்யவில்லை. அங்கே இங்கே நுழைந்து குடைந்து பின்னர் ரோமிங்கிலும் வைத்தேன். கொஞ்ச நேரம் வந்தது. பின்னர் விமானத்தில் ஏறிவிட்டதால் அதிகம் அதில் கவனம்செல்லவில்லை.  திருச்சி--சென்னை 45 நிமிஷம் னு பேர் தான்! ஒன்றரை மணி ஆக்கிடறாங்க. அதே சென்னை-புனே ஒரு மணி நேரம்! கரெக்டாப் போயிடுது!விமானத்தில் ஏற ஏரோ பிரிட்ஜ் இல்லை. ஆகவே    விமானத்தில் ஏறுவதற்குப்  பேருந்தில் தான் அழைத்துச் செல்கின்றனர். எல்லாம் அசோக் லேலண்ட் பேருந்துகள். கௌதமன் சார் நினைவு வந்தது.



அரண்மனை முற்றத்து பவானி கோயிலின் வெளியே காணப்பட்டவை



ஷாஹ்ஜி மஹராஜ்! நிஜம்மா இப்படி இருந்திருப்பாரா? தெரியலை!






பலங் என அழைக்கப்படும் படுக்கை





விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பிச் சரியான நேரத்துக்குச் சென்னையை அடைந்தது.  இங்கேயும் ஏரோ பிரிட்ஜ் இல்லை. பேருந்து தான். சென்னை விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து மேலே உள்ள தளத்துக்குச் சென்று மறுபடியும் பாதுகாப்புச் சோதனையை முடித்துக் கொண்டு பார்த்தால் புனே விமானம் எங்கிருந்து கிளம்பும் என்பதே தெரியவில்லை. சற்று நேரம் பொறுத்திருந்து பனிரண்டாவது எண் நுழைவாயில்  என்பதைத் தெரிந்து கொண்டு மறுபடி கீழே வந்து காத்திருந்தோம். இப்போதும் சரியான நேரத்துக்கு விமானம் வந்து கிளம்பவும் செய்தது.  விமானம்  மேலே ஏறிய பத்துப் பதினைந்து நிமிடங்களில் பைலட்டிடமிருந்து ஓர் அறிவிப்பு. விமானத்தின் இடப்பக்கம் இரண்டு இருக்கை மட்டுமே உள்ள பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் விமான ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கவும். திருமலைக் கோயிலும், திருப்பதி நகரும் தெரியும்! என்றார். உடனேயே கீழே பார்த்தோம். எங்களுக்கு இரண்டு இருக்கைகள் உள்ள பக்கமே அமரக் கொடுத்திருந்தார்கள். என்னால் பார்க்க முடிந்த அளவுக்கு ரங்க்ஸால் பார்க்க முடியவில்லை என்றாலும் தங்க கோபுரம் வெயிலில் ஜொலிப்பதைக் காட்டினேன்.பார்த்துக் கொண்டார்.  ஆகவே மஹாலக்ஷ்மி தரிசனம் கிடைக்கும் முன்னர் முதலில் பெருமாளைப் பார்த்துக் கொண்டோம்.