எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 31, 2021

எங்க கிச்சாப்பயலைப் பார்க்க வாங்க!

கிச்சாப்பயல் தலையிலே பெரிய தாமரைப்பூவைச் சுமக்க முடியாமல் சுமக்கிறான். 
 

வாசலில் நான் போட்டிருந்த சின்னஞ்சிறிய கோலம். இதுக்கே முடியலை. கால் போட ஆரம்பிச்சேன். நான் குட்டிக் குட்டியாத்தான் பாதம் வரைவேன். கொஞ்சம் சிரமப்பட்டு வாசல் வராந்தாவில் போடும்போது பார்த்த எதிர்வீட்டு மாமி அவங்க வீட்டு வேலையை விட்டு விட்டு வந்து எனக்குக் கிருஷ்ணர் பாதம் போட்டுக் கொடுத்துவிட்டுப் போனாங்க. சின்னக் குழந்தையாக என்னோட பாதத்தில் வந்த கிருஷ்ணன் அவங்க பாதம் போடுகையில் வளர்ந்து சிறு பையனாகி விட்டான். முறுக்கு, சீடை எல்லாம் சாப்பிடணுமே! 



இங்கே குட்டிக்குட்டிக் கால்கள் தெரியும். கூர்ந்து பார்க்கணும். கீழே பார்த்தீங்க கால் பெரிதாக இருக்கும். கிச்சாப்பயல் வளர்ந்துட்டான்.


கூடத்துக்கு வந்து திரும்பி உம்மாச்சி அலமாரிப் பக்கம் போறான் கிச்சாப்பயல்.


உம்மாச்சி அலமாரிப் பக்கம் வந்துட்டான். கீழே நிவேதனங்கள் எல்லாம் வைச்சிருக்கேன். தீபாராதனை காட்டியது தெரிகிறது. நிவேதனங்களும் தெரிகின்றன. எல்லாத்தையும் கிட்டே இருந்து எடுத்த படங்கள் எல்லாம் அப்லோட் ஆகவே இல்லை. ஶ்ரீராமர் படம், உம்மாச்சி அலமாரியில் கீழே உள்ள ஶ்ரீதேவி, பூதேவி சஹிதப் பெருமாள் எல்லோரையும் எடுத்தேன். நிவேதனத்தையும் எடுத்திருக்கேன். ஆனால் அதெல்லாம் எப்படி எப்படியோ முயன்றும் நான்கைந்து படங்கள் அப்லோட் ஆகலை. மறுபடி நாளைக்கு முயற்சி பண்ணணும். பார்ப்போம்.



இந்த வருஷம் பக்ஷணம் எதுவுமே பண்ணலை. சமையல் மாமியும் ஊருக்குப் போய்விட்டதால் ஊருக்குப் போகும் அவசரத்தில் உப்பு/வெல்லச்சீடைகளும் மனோகரமும் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார். பின்னர் பழைய காடரரிடம் கெஞ்சிக் கூத்தாடி கால் கிலோ கை முறுக்கு வாங்கினேன். மற்றபடி தேங்காய் உடைத்துப் பழங்களோடு வைச்சாச்சு. வீட்டில் அவல் பாயசமும்/வடையும் பண்ணினேன். பழங்களும் நாங்க சாப்பிடும் பழமாகவே வாங்கினோம். சாத்துக்குடி, மாதுளை, கொய்யா போன்றவையே! இந்த வருஷம் கிச்சாப்பயல் "இது போதும். பரவாயில்லை!" என்று சொல்லிவிட்டான். வழக்கம்போல் அவனுக்குப் பசும்பால், பசுந்தயிர்,பசு வெண்ணெய், அவல்/வெல்லம் எல்லாமும் வைத்தேன்.  இப்படியாகத் தானே ஜன்மாஷ்டமியைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடியாச்சு. 




Friday, August 20, 2021

(நான்) நிற்பதும்/நடப்பதும் நின் செயலாலே!

 இரண்டு மாதங்களாக நரக வாழ்க்கை.. காலைக் கீழே ஊன்ற முடியவில்லை. ஏற்கெனவே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆயுர்வேத மருந்துகள் கொரோனா லாக்டவுனினால் வெளியூரில் இருந்து வரமுடியாமல் போக அவசரத்துக்கு வாங்கிய அலோபதி மாத்திரையும் பயனின்றிப் போக மருத்துவரை வீட்டுக்கு வரச் சொல்லி ஆயுர்வேத/சித்தா மருந்துகள் எடுத்துக்கொண்டும் பலனில்லாமல் போகவே ஆடிப்பெருக்கன்று இந்த ஊரிலேயே பல வருடங்களாகத் தொழில் செய்யும் ஆங்கில மருத்துவரை வரவழைத்தோம். மற்ற மருத்துவர்கள் யாரும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்கள். ஆகவே இவர் வந்து பார்த்துவிட்டு வீக்கம் வடியவும், மற்றவற்றிற்கும் மருந்துகள் கொடுத்துச் சென்றார். ஆனாலும் முதல் இரண்டு நாட்கள் காலை ஊன்றி நடக்க முடியா நிலைமை. பிடித்துக் கொண்டு தான் கழிவறைக்குக் கூடப் போக வேண்டி இருந்தது. வலி பொறுக்க முடியவில்லை. பின்னர் மெல்ல மெல்ல வீக்கம் குறைய ஆரம்பித்தாலும் அதற்காகக் கொடுத்த மாத்திரையினால் சிறுநீர் அதிகமாகப் போக ஆரம்பிக்கவே அதற்காக அடிக்கடி எழுந்து கொள்ள வேண்டி வருகிறது.  என்றாலும் வேறு வயிற்றுத் தொந்திரவுகள் முதல் வாரத்தில் இல்லை. ஆனால் பின் வரும் நாட்களில் நேர்மாறாக இருக்கின்றன. 

கொடுத்திருக்கும் மாத்திரைகளில் சில ஒத்துக்கொள்ளாமல் வயிற்றில் தொந்திரவு ஏற்பட அவற்றை நிறுத்தலாமா என மருத்துவரிடம் கேட்கப் போனால் அவர் இதற்கென வேறொரு சிரப்பை எழுதிக் கொடுத்துச் சாப்பிடச் சொல்ல அதைச் சாப்பிட்டால் இரண்டு நாட்கள் விடாமல் வயிற்றுப்போக்கு/வயிற்று வலி! தூக்கம் இல்லை. வயிற்றில் எப்போதும் நமநமவென்று வேதனை! மருத்துவரிடம் சொல்லாமலேயே அவரைக் கேட்காமலேயே அந்த சிரப்பை நிறுத்திவிட்டேன். இருந்தாலும்  அதைத் தவிர்த்து உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரைகள் எதிலோ இந்த வயிற்றைக் கிளறிவிடும் தன்மை இருக்குப் போல. இரவு/பகல் என்றில்லாமல் வயிற்றில் வேதனை/வலி/தொந்திரவு.  இதை எல்லாம் எழுதிக் கொண்டும்/புலம்பிக் கொண்டும் இருக்க வேண்டாம்னு தான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து நான் இணையத்துக்கு வரலையேனு நண்பர்கள் கவலைப்பட்டுக்கொண்டு கேட்பதால் எப்படியும் இன்னும் சில நாட்கள் ஆகும் முழுவதும் சரியாக என்று நினைக்கிறேன். கால் வீக்கம் குறைந்தாலும் தொடர்ந்து உட்கார முடியவில்லை காலைத் தொங்கப் போட முடியவில்லை. ஆகவே நடு நடுவில் போய்ப் படுப்பேன். படுத்தால் பின்னர் எழுந்திருப்பதிலும் தொடர்ந்து நடப்பதிலும் உடனடியாக முடியவில்லை. நேரம் எடுக்கிறது.

இரண்டு நாட்களாகக் கொஞ்சம் நடக்கிறேன். மருத்துவரும் நடக்கச் சொல்லி இருக்கார். ஆனாலும் வேகமெல்லாம் இல்லை. ஓர் அடி எடுத்து வைக்கவே பத்து நிமிஷங்கள் ஆகிவிடுகின்றன.  ஏதோ நான் பாட்டுக்குச் சமைத்தேன்/சாப்பிடுகிறேன் என்றெல்லாம் இருந்த வாழ்க்கை இப்போது தடம் புரண்டு விட்டது. மறுபடி எப்போது சகஜமான சூழ்நிலைக்குத் திரும்புவோம் என ஏக்கம் பிடித்து ஆட்டுகிறது! எந்த ஒரு வேலையைச் செய்யவும் தனியாகச் செய்ய முடியாத சூழ்நிலை.  எல்லாவற்றுக்கும் நேரம் எடுக்கிறது. இதில் கணினியில் உட்கார மனமும் இல்லை/நேரமும் சரியாக ஒத்து வருவதில்லை. இன்னிக்கு எப்படியும் வரணும்னு வந்திருக்கேன். சும்மாவானும் வந்துட்டு உடம்பு இன்னும் சரியாகலைனு சொல்லுவதற்கு ஏன் வரணும்னு இருந்தேன். என்றாலும் இப்போ இரண்டு நாட்களாக ஓரளவுக்கு நடை பழகத் தொடங்கி இருப்பதால் கொஞ்சம் மனம் சமாதானம் ஆகி உள்ளது. ஆனாலும் படுக்கை அறையிலிருந்து சமையலறைக்கு/கூடத்திற்கு வரப் பத்து நிமிஷங்கள் ஆகி விடுகின்றன. எப்படியானும் இந்த அளவுக்கு நடக்க முடிந்ததே இறைவன் செயல் தான்.  இனி நான் சமைக்க ஆரம்பித்தாலோ காஃபி/டிஃபன் செய்தாலோ தினசரித் தலைப்புச் செய்தியாக ஆகிவிடும் போல! :(

இப்போதைக்கு எல்லாவற்றையும் மீறிப் படுத்துவது வயிறுதான். அதுவும் சரியாகணும். ஆகாரத்தையே வயிற்றில் போட முடியவில்லை. அதிலும் இரவுகள் கழிவது ஓர் யுகமாக ஆகிவிடுகிறது. எல்லாம் சரியாக அந்த ஆண்டவன் தான் கருணை புரியணும்.  மொத்தத்தில் நல்ல நேரத்துக்குக் காத்திருக்கேன். இறை அருளால்  பின்னர் முடிஞ்சால் வரேன். 


Monday, August 02, 2021

சஹானாவுக்கு (இணைய இதழ்) வயது ஒன்று!

 சஹானா ஆண்டு விழா 

சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா? நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கிறது கடந்த ஒரு வருடமாக.  ஏடி எம் பத்து வருடங்கள் முன்னர் இணையத்தின் வலைப்பக்கங்களில் வெளுத்துக்கட்டியதும், இட்லிக்கு ஒரே உரிமையாளராக இருந்து வந்ததும்,அனைவருக்கும் தெரியும். அதிலிருந்தே நான் இட்லி என்றால் ஓடியே போயிடுவேன்.  அவங்க வேறே அப்போ கனடாவிலே இருந்தாங்களா! அவங்க அன்பான மறுபாதி அவங்க கொடுப்பது இட்லியா? இல்லைனா கனடாவின் அதீதமான பனிப்பொழிவின் பனிக்கட்டிகளானு குழம்புவாராம். அதைத் தட்டில் போட்டதும் உருகினால் சரி, இதான் பனிப்பொழிவுனு முடிவுக்கு வருவாராம். உருகலைனால் அது நம்ம ஏடிஎம்மோட இட்லி தான்! அவங்க கைவண்ணம் அப்படி. ஒண்ணு பனிக்கட்டி மாதிரி அவங்க இட்லியும் சில/பல சமயங்களில் உருகும். சில/பல சமயங்களில் இப்படியும் கல்லாக இருக்கும். இட்லியைக் குடிக்கவும் செய்யலாம், சாப்பிடவும் செய்யலாம், உடைக்கவும் செய்யலாம் என்பதை விஞ்ஞானரீதியாக நிரூபித்தவர் நம்ம ஏடிஎம். உலகளவில் இட்லி பிரசித்தமானது இப்படியே! :) இப்படியாக இட்லியினால் சிறந்த எழுத்தாளராக மாறிய நம்ம ஏடிஎம் சில/பல ஆண்டுகள் அக்ஞாத வாசம் புரிந்தார். 

அவருக்குக் குழந்தை பிறந்ததும் ஓர் முக்கியக் காரணம்.  குழந்தை பிறக்கும் முன்னர் ஓர் முறை எங்க வீட்டிற்கு விஜயம் செய்த ஏடிஎம்மிற்குத் தாயுமானவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வதைப் பற்றிச் சொல்லிப் பிரார்த்திக்கச் சொன்னேன். அதே போல் குழந்தை பிறந்ததும் பிரார்த்தனை நிறைவேற்ற ஏடிஎம் வருவதாய் இருந்தார். குடும்பத்துடன் வருவதற்காகத் தங்குமிடம் தேடிக் கொண்டிருந்தார். எங்க அபார்ட்மென்ட் வளாகத்திலேயே ஓர் செர்வீஸ் அபார்ட்மென்ட் இருப்பதை அவருக்குச் சொல்லி வரும் தேதி எல்லாம் நிச்சயமாய்த் தெரிந்தால் ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னோம். ஆனால் அவரால் அப்போது வர முடியலை. குடும்பச் சூழ்நிலைனு நினைக்கிறேன். பின்னர் எப்போ வந்தார்னு தெரியலை. சஹானாவிற்கு 3,4 வயது இருக்கும்போது திடீர்னு உங்க வீட்டிற்கு வரப்போறேன்னு அறிவிப்பு விடுத்தார். அது பற்றிப் பதிவும் போட்டிருந்தேன். கிடைக்கலை. போனால் போகுது. அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனவங்களுக்குத் திடீர்னு கொஞ்ச நாட்களில் ஏதோ தோன்றி இருக்கு. என்னோடு வாட்சப்பில் தொடர்பிலும் இருந்து வந்தார். அதிலே இந்த மாதிரிப் பத்திரிகை ஒண்ணு ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு நீங்க பக்தி/ஆன்மிகக் கட்டுரை எழுதித் தரணும்னு சொல்லி இருந்தார். கடைசியில் அவரே ஆடிப்பெருக்கன்று பத்திரிகை தொடங்கப் போவதைச் சொல்லி ஆடி மாதத்தின் சிறப்புக்கள் பற்றி எழுதித் தரச் சொன்னார். நானும் எழுதிக் கொடுத்தேன்.

சென்ற வருடம் ஆடிப்பெருக்கன்று தொடங்கியது சஹானா இணைய இதழ். ஆடிப்பெருக்கன்று பெருகி வரும் காவிரியைப் போல சஹானாவின் வளர்ச்சியும் பெருகியது. நானும் தொடர்ந்து சில மாதங்கள் பங்கு பெற்றேன். அவர் வைத்த தீபாவளி ரெசிபி பதிவில் முதல் பரிசு/அதிகமான பதிவுகள் எழுதியதில் பரிசு எனப் பல்வேறு விதமான பரிசுகளால் முழுக அடித்தார். அதோடு இல்லாமல் புதுப் புது எழுத்தாளர்களைத் தேடித்தேடி அறிமுகம் செய்தார். குறைந்த மாதங்களிலேயே சஹானாவுக்கென ஓர் உன்னதமான பெயரைத் தேடித் தந்தார்! அதோடு இல்லாமல்  சஹானாவில் எழுதுபவர்களின் எழுத்துக்களைத் தொகுத்து அமேசானில் வெளியிட்டு அவர்களுக்கும் பெருமையும் தேடித்தந்திருக்கிறார்.  ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகளை நடத்தி எழுத்தாளர்களுக்கும் ஓவியங்களை வரையும் சிறு குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார். இத்தோடு நிற்காமல் யூ ட்யூப் சானல் தொடங்கி அதன் மூலம் யூ ட்யூபில் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பங்கேற்க வைத்து அதிலும் சிறந்த பதிவுகளுக்குப் பரிசுகள் கொடுத்து வருகிறார்.  சஹானாவில் குழந்தைகளின் எழுத்துக்களுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்துக் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார். 

எல்லாவற்றையும் கவனித்து வந்தாலும் என்னால் சில மாதங்களாக சஹானாவில் எதுவும் எழுதவோ/பங்கேற்கவோ முடியாமல் போய் விட்டது. ஆகவே தன் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் என்னைத் தொடர்பு கொண்டு ஏடிஎம் என் நலனை விசாரிப்பார். போன மாதமோ என்னமோ அப்படி விசாரிக்கையில் அவரிடம் சஹானாவின் முதல் பிறந்த நாள் வருவதைக் குறிப்பிட்டேன். அவர் தன் பதிப்பகத் துவக்க விழாவில் வேலை மும்முரங்களிடையே இருந்தாலும் நான் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு சஹானாவின் ஆண்டுவிழாவையும் பதிப்பக விழாவோடு கொண்டாடிவிட முடிவு செய்து அறிவிப்புச் செய்திருக்கார்.  இன்று/இப்போது விழா இணைய வழியாகச் சிறப்பு விருந்தினர்களோடு நடந்து கொண்டிருக்கிறது. என்னையும் பங்கேற்க இரண்டு/மூன்று முறை அழைப்பு விடுத்தார் ஏடிஎம். என்னால் தான் உடல் இன்னும் பூரண குணம் இல்லை என்பதால் முடியவில்லை. ஏற்கெனவே அவரிடம் சொன்னபடி சஹானாவைப் பற்றி இங்கே எழுதி  இதன் மூலம் ஏடிஎம்முக்கு எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னர் யூ ட்யூபில் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதாகவும் ஏடிஎம்மிடம் சொல்லி இருக்கேன். இன்று கூடக் காலை கூப்பிட்டுப் பேசினார்.  இன்னிக்குக் காலம்பர இருந்து கொஞ்சம் உடல் நிலை சரியில்லாததால் நான் பங்கேற்க முடியாததைத் தெரிவித்து விட்டேன். சஹானா என்னும் குழந்தை ஏடிஎம் பெற்ற குழந்தை எனில் இந்த சஹானா இணைய இதழ் அவர் பெறாத குழந்தை. ஆனாலும் சஹானாவைப் பெற்றெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அத்தனையையும் இதை வெளியிடுவதிலும் முன்னுக்குக் கொண்டு வருவதிலும் அவர் காட்டிய முயற்சிகள் வெளிப்படுத்தும். கடினமான உழைப்பு.  வீடு, குழந்தை, கணவன் எல்லோரையும் கவனித்துக் கொண்டு ஏடிஎம் இந்தப் புத்தக வெளியீட்டிலும் அவர் உழைப்பைச் சிறப்புக் கவனத்தோடு காட்டி வருகிறார். பிரமிக்கத் தக்க உழைப்பு.

சஹானாவுக்கும், கோவிந்துக்கும், ஏடிஎம் என்னும் புவனாவுக்கும் எங்கள் மனமார்ந்த ஆசிகள்/வாழ்த்துகள்/மேன்மேலும் சிறப்பாக வளரப் பிரார்த்தனைகள்.  அவர் தொடங்கும் பதிப்பகமும் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்.