எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 31, 2019

கொடியேற்றம் கண்டிருப்பீர்கள்! கொடி இறக்குவது?

குடியரசு தினத்தன்று ஊரில் இல்லாமல் போனதில் beating retreat என்னிக்குனு மறந்து போச்சு. தற்செயலா முகநூலில் பார்த்தப்போ நண்பர் கிருஷ்ணகுமார் beating retreat பார்த்துக் கொண்டிருப்பதாக ஸ்டேடஸ் போட்டிருக்க உடனே நம்ம ரங்க்ஸைத் தொலைக்காட்சியில் பொதிகை போடச் சொன்னேன். மற்ற சானல்களில் இதெல்லாம் வருமானு சந்தேகம். போட்டால் சுத்தம்! கேபிளே சிறிது நேரம் வரலை. ஸ்க்ராம்பிள் என்று செய்தி வந்து கொண்டிருந்தது. பின்னர் சற்று நேரத்திற்குப் பின்னர் வந்தது. மற்ற சானல்களும் பார்த்ததில் எங்கேயும் வந்ததாய்த் தெரியலை. ஆகவே பொதிகையே போட்டார். கிட்டத்தட்ட முடியும் சமயம். என்றாலும் 2,3 பாடல்கள் கேட்க முடிந்தது.  


காட்சிகள் மிக அழகாய் அமைந்திருந்தன. படம் எடுக்கச் சொல்லி நம்மவர் சொல்ல முதல்லே செல்லில் முயன்றால் சரியாவே வரலை! கொஞ்ச நாட்களாகவே தகராறு செய்யுது! பின்னர் பக்கத்திலேயே இருந்த காமிராவை எடுத்துப் படம் எடுக்கும் முன்னர் "Abide with Me" பாட்டு வந்துவிட்டது. ஆஹா, முடியும் நேரம் ஆயிடுச்சேனு நினைக்கவும் சிறிது நேரத்தில் அனைவரின் வணக்கத்துடன் கொடி இறக்கப்பட்டது.


கொடி இறங்கிய சிறிது நேரத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கத் தொடங்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த வருடம் எடுத்த எடுப்பில் மூவர்ணக் கொடியின் அமைப்பில் அலங்காரம் அமைந்திருக்க அதைப் படம் எடுக்கும் முன்னர் அடுத்தடுத்து வண்ணங்கள் மாறத் தொடங்க முடிந்த வரை எடுத்தேன்.


பல கோணங்களிலும் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர் வல்லுநர்கள். கீழே இந்தியா கேட் மூவர்ணக் கொடி அலங்காரத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். வண்ணம் தெளிவாக இல்லை.

குடியரசுத் தலைவர் மாளிகை. குடியரசுத் தலைவர் கொடி இறக்கி முடித்ததும் விடைபெற்றுச் செல்லும் காட்சி. சாரே ஜஹான் ஸே அச்சா பாடல் பின்னணியில் ஒலிக்க மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள். அடுத்துக் கீழே இருக்கும் படங்களில் வண்ணங்கள் மாறி மாறிக் காட்சி அளிக்கும் அழகான காட்சியைக் காணலாம்.

அநேகமாகத் தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அரிதாகவே இருப்பார்கள். யாருக்கும் இப்படி ஓர் நிகழ்ச்சி இருப்பது தெரிந்திருக்காது. ஒவ்வொரு வருடமும்  ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ந்ததும் 29 ஆம் தேதி கொடி இறக்கம் குடியரசுத் தலைவரால் நிகழ்த்தப்படும். அதற்கும் அனைவரையும் அழைத்திருப்பார்கள். பொதுமக்களும் கலந்து கொள்வார்கள்.

Monday, January 28, 2019

கைமுறுக்கு, தட்டை, மனோகரம் வேண்டுமா?

வியாழனன்று மாலை செப்பறை போயிட்டுக் கிருஷ்ணாபுரமும் போயிட்டுத் திரும்பி வரும் வழியில் வண்டி பாளையங்கோட்டை வழியாக வந்தது. அங்கே ஓர் தெரு முழுக்க பக்ஷணக்கடைகள். பெரிய பெரிய எண்ணெய்ச் சட்டிகளில் எண்ணெயை விட்டு ஆங்காங்கே பெண்கள் முறுக்குச் சுற்றிக்கொண்டும், சுற்றியவற்றை அம்பாரமாகக் குவித்துக் கொண்டும் இருந்தனர். மக்கள் வந்து சுடச்சுட முறுக்கு வாங்கிப் போனார்கள். முறுக்கு மட்டும் இல்லை. தட்டை, சீடை, மனோகரம், மாலாடு, ரவாலாடு போன்றவையும் செய்து விற்கின்றனர். போக்குவரத்து நெரிசலில் வண்டி மெதுவாகப் போனதால் இவற்றை எல்லாம் பார்க்க நேர்ந்தது. நம்ம ரங்க்ஸும் பார்த்திருப்பார் என்னும் நினைப்பில் நான் அவரிடம் இதைக் காட்டவே இல்லை. கடைசியில் அவர் இருந்த பக்கம் இதெல்லாம் வரலை. கொஞ்ச தூரம் போனப்புறமாத் தான் சொன்னேனா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அடி விழாத குறை தான். அங்கேயே இறங்கி முறுக்கு வியாபாரம் செய்திருப்பேன். கெடுத்துட்டியேனு அடிக்காத குறை தான்!


மனோகரம்

ஆகவே வெள்ளிக்கிழமை மாலை அங்கே போவதாக இருந்தோம். ஆனால் இருவருமே மிகவும் களைப்புடனும் சோர்வுடனும் காணப்பட்டதால் அங்கே போகாமல் திருநெல்வேலியிலேயே கிடைக்குமானு ஓட்டுநரை விசாரித்ததில் ஒரு கடைக்குக் கூட்டிச் சென்றார். அங்கே அப்போது தான் வேகவிட்ட முறுக்குகள் சூடாக இருந்தன.  நம்மவருக்கு முறுக்குச் சுத்து சரியில்லையேனு குறை. நீ சுத்தறாப்போல் சுத்தலை பாருனு என்கிட்டே புகார் மனு அளிக்க, நான் நம்ம இரண்டு பேருக்கு மட்டும் செய்யறேன். இவங்க இரண்டாயிரம் பேருக்குச் செய்யறாங்க என்பதைப் புரிய வைத்தேன். பின்னர் அரை மனசாக ஒரு முறுக்கைக் கேட்டு வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துப் பார்த்து விட்டு வாங்கினார். அப்படியே தட்டைகளும் வாங்கினோம்.

                                                                          தட்டைகள்

அங்கேயே மனோகரமும் இருந்தது. ஆனால் இங்கே எங்களுடன் குடியிருக்கும் திருநெல்வேலி மாமி கல்லிடைக்குறிச்சிக் கடையில் வாங்குங்க எனச் சொல்லி இருந்ததால் அதை மட்டும் அங்கே வாங்குவது எனத் தீர்மானித்ததால் அதை வாங்கலை! அதை மட்டும் ஜானகிராமன் ஓட்டலுக்கு எதிரே உள்ள கல்லிடைக்குறிச்சி மாமா கடையில் வாங்கினோம். 

முறுக்குகள்

நேற்று மதியம் தேநீரோடு சாப்பிடலாம் என இரண்டு முறுக்கும், இரண்டு தட்டைகளும் மட்டும் எடுத்துக் கொண்டேன். சாப்பிடும்போதே முறுக்குகளும், தட்டைகளும்  திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பச் சுட வைத்த எண்ணெயில் பொரிக்கப்பட்டவை என என் பொல்லாத நாக்கு கூக்குரல் இட அதை அடக்கிவிட்டுச் சாப்பிட்டேன். சாப்பிட்ட சற்று நேரத்துக்கெல்லாம் வயிறு தன் வேலையைக் காட்டி விட்டது. மேல் வயிறெல்லாம் அடுப்பை மூட்டினாற்போல் சூடு, எரிச்சல்,வலி!  சரியாப் போச்சு போ, இனிமேல் இது வேண்டாம்னு முடிவு பண்ணி, சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு இனி அந்த முறுக்குகள், தட்டைகள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என சபதம் செய்து விட்டேன். இதனால் நேத்திக்கு ராத்திரி சாப்பாடைக் கூடத் தியாகம் செய்துவிட்டு வெறும் மோர்சாதம் சாப்பிட்டேன். நல்லவேளையாக் காலம்பர வைச்ச சாதம் மிச்சம் கொஞ்சம் இருந்தது. 

இப்போச் சும்மா நீங்க பார்ப்பதற்காகப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அம்புடுதேன். தைரியம் உள்ளவர்கள் எடுத்துச் சாப்பிடலாம். :)))))

Sunday, January 27, 2019

நெய் மணக்கும் கத்திரிக்காய்!

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திரிக்காய்

கீழே படம் பார்க்கிறீங்க இல்லையா, வெள்ளைக்கத்திரிக்காய்! 
இது தென் மாவட்டங்களில் மட்டுமே அதிகம் கிடைக்கும் வெள்ளைக் கத்திரிக்காய். மதுரையில் இருக்கும்போது சாப்பிட்டது. இதில் எண்ணெய்க்கறி, எண்ணெய்க் குழம்பு, கத்திரிக்காய் ரசவாங்கி, கத்திரிக்காய்க் கூட்டு புளி விட்டு, பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு, வத்தல்னு எல்லாமும் பண்ணலாம். எல்லாமும் பிடிக்கும். கத்திரிக்காய் பிடிக்காதவங்க அதன் ருசியை அறியாதவங்க.

இரண்டு நாட்கள் முன்னர் திருநெல்வேலிக்குச் சில கோயில்கள் பார்க்க வேண்டிக் கிளம்பிப் போய் வந்தோம். அந்த விபரங்கள் மெதுவா வரும்! அங்கே ஆலங்குளம் என்னும் கிராமத்தில் ஒரே காய்கறிக்கடைகள்! அங்கேயே வயலில் விளையும் காய்களை அங்கேயே விற்கின்றனர். அதிகம் போனால் திருநெல்வேலி டவுனுக்குக் காய்கள் வரும். அங்கேயே விற்று விடுமாம். வெளியே போவதில்லை. அதனால் சென்னைக்காரங்க வெள்ளைக்கத்திரிக்காயை ஆச்சரியமாப் பார்ப்பாங்க. நானும் கல்யாணம் ஆகி வந்தப்போ நீலக்கத்தரிக்காயை ஆச்சரியமாப் பார்த்தேன். ஏனெனில் மதுரையில் வெள்ளை, வெளிர் பச்சை, வெளிர் நீலம்(கோடு மெலிதாக இருக்கும்) ஆனால் அதிகம் இருக்காது. அதிகம் வாங்குவதும் சாப்பிடுவதும் வெள்ளைக்கத்தரிக்காய் தான்! இப்போ எல்லாம் ஒரே வயலட் கலராக வருதே ஹைப்ரிட் கத்திரிக்காய், அது இதன் அருகே கூட நிற்க முடியாது. 

விலை என்ன தெரியுமா? அதிகம் இல்லை ஜென்டில்மேன், இருபதே ரூபாய்கள் தான். திருச்சியில் கூட வெள்ளைக்கோடு போட்ட வயலட் கத்திரிக்காய் கால் கிலோ 20 ரூ, 25 ரூ என விற்கிறது. இது கிலோவே இருபது ரூபாய் தான். இங்குள்ள விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங் பண்ணத் தெரியலையோனு என்னோட எண்ணம். ஆனால் கூட வந்த வண்டி ஓட்டுநர் வீணாகப் போவதில்லை என்கிறார்.
எல்லோரும் கண்ணால் பார்த்துக்குங்க! இன்னிக்கு இதான் கறி. இதான் குழம்பு! சின்னக் கத்திரிக்காயாகப் பார்த்து முழுசாகப் போட்டுப் பண்ணிய குழம்பு! திருநெல்வேலி போயிட்டு இருட்டுக்கடை அல்வா வாங்காமல் வரலாமா? கால் கிலோ போதும்னு தான் இருந்தோம். சொல்லவும் சொன்னோம். ஆனால் இப்போல்லாம் அரைக்கிலோவுக்குக் குறைந்து கொடுப்பதில்லையாம். அதோடு இப்போ அல்வா சூடாகச் சாப்பிட நிற்கும் வரிசையையும் பார்க்க முடியலை. ஒருவேளை அல்வா தீர்ந்து விட்டதோ என்னமோ? இன்னொன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. அந்தப் பாலின் மணத்தோடு கூடிய பால்கோவா இன்னமும் கொஞ்சம் மாறாமல் அதே தரத்துடன் கிடைக்கிறது. இத்தனைக்கும் இது ரயிலில் வந்தப்போ வாங்கியது தான்.


Wednesday, January 23, 2019

நாளையிலிருந்து 3 நாட்கள் லீவு!

ஏற்கெனவே ஒரு முறை இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி பத்தி எழுதி இருக்கேன். நடுவில் கொஞ்ச நாட்களுக்கு இதைச் செய்யவே இல்லை. இப்போ திடீர்னு நம்ம வீட்டில் சாபுதானாவுக்கு வரவேற்புப் பெருகவே இந்த வருஷம் வைகுண்ட ஏகாதசி அன்று விரதத்திற்கான ஆகாராமாக இதைச் செய்தேன். அதற்கு முன்னரும் ஓர் நாள் செய்திருந்தேன். அப்போப் படம் எல்லாம் எடுக்கலை. விரதத்தன்னிக்குக் கொஞ்சம் நிதானமாச் செய்ததால் எல்லாம் ஏற்பாடுகள் செய்து கொண்டு படங்களும் எடுத்துவிட்டு கிச்சடி செய்தேன். இதற்குத் தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு மட்டும்

படத்தில் பார்க்கும் உழக்கினால் (ஆழாக்கு) முக்கால் ஆழாக்கு ஜவ்வரிசி. காலையில் செய்வதானால் முதல் நாள் இரவு ஜவ்வரிசியைக் கழுவி ஊற வைக்கணும். நான் இரவில் செய்ததால் அன்று காலை ஜவ்வரிசியைக் கழுவி ஊற வைச்சேன். முதல்நாளே  ஊற வைச்சாலும் நன்றாகவே இருக்கும்.

வறுத்த வேர்க்கடலை, சாபுதானாவின் அளவுக்கே இருந்தால் நல்லது. கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை. இது வறுத்திருந்தால் தோலை நன்கு உரித்துக் கொண்டு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளணும். பின்னர் மிக்சியில் போட்டு ஒரே சுத்துச் சுத்தினால் கொஞ்சம் மாவாகவும் இல்லாமல் ரொம்பக் கொரகொரப்பாயும் இல்லாமல் வரும்படி எடுத்துக்கொள்ளணும். ஒன்றிரண்டு உடைபடலைனாலும் பரவாயில்லை. நன்றாகவே இருக்கும். குஜராத், மஹாராஷ்ட்ராவில் இந்த வேர்க்கடலைப் பொடி தயாரித்து விற்பார்கள். பெரும்பாலும் அவங்க உணவில் அடிக்கடி இடம் பெறுவதால் நிறைய வாங்கி வைச்சுப்பாங்க. நாம எப்போவோ தானே பண்ணறோம். ஆகவே வேர்க்கடலை வறுத்தது வாங்கியோ அல்லது பச்சைக் கடலையை வறுத்தோ சுத்தம் செய்து உபயோகிக்கலாம்.


அடுத்த முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு. சாபுதானா வடை செய்தாலும் சரி, கிச்சடி செய்தாலும் சரி உ.கி. வேர்க்கடலை இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. நாங்க இரண்டு பேர் தான் என்பதால் 2 கிழங்கு நிதானமாக எடுத்துக் கொண்டேன். அதைத் தோலைச் சீவும் பழக்கம் இருந்தால் சீவலாம். நான் பெரும்பாலும் உ.கி. தோலோடு தான் பயன்படுத்துவேன். நன்கு ஊற வைத்துக் கழுவிக்கொண்டு காரட் துருவலில் சீவிக்கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கலாம். அன்று பொடியாக நறுக்கினேன்.


அடுத்துத் தேவைப்படுவது தாளிக்க எண்ணெய், கடுகு, ஜீரகம். (உபருப்பு, கபருப்புப் போடுவதெல்லாம் உங்க இஷ்டம். நான் போடுவதில்லை) பச்சைமிளகாய் சின்னதாக 2  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு பொடியாக நறுக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும். எலுமிச்சம்பழம் பழத்தில் இருக்கும் சாறுக்கு ஏற்ப ஒன்று அல்லது பாதி.

மிக்சி ஜாரில் பொடி செய்த வேர்க்கடலைப்பொடி, பாத்திரத்தில் நீரில் உ.கி. நறுக்கியது. இன்னொரு பாத்திரத்தில் ஊறிய சாபுதானா.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் (எண்ணெய் நல்ல கடலை எண்ணெயாக இருந்தால் நல்லது. இல்லை எனில் நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்) கடுகு, ஜீரகம் தாளித்துப் பிடிக்குமானால் பெருங்காயப் பொடி போடவும். பின்னர் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டு வதக்கி விட்டு உ.கியை நீரை வடித்துப் போட்டு நன்கு வதக்கவும். உ.கி. நசுங்கும் பதம் வரணும். துருவல் எனில் சீக்கிரம் வெந்து விடும். 


பின்னர் ஊற வைத்த சாபுதானாவைப் போட்டுக் கூடவே வேர்க்கடலைப் பொடியையும் போட்டு கையோடு நினைவாகத் தேவையான உப்பைச் சேர்க்கவும். சிறிது நேரம் நன்கு கிளறவும். சாபுதானா தனித்தனியாகப் பிரிந்து நசுங்கும் பதம் வேகும் வரை கிளறவும்.நன்கு வெந்ததும் மேலே பச்சைக்கொத்துமல்லி தூவிக் கீழே இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். சூடாக இருக்கும்போதே சாப்பிடவும்.இதைப் பல நாட்களாகப் போட நினைத்துப் போடவே முடியலை! இன்னிக்குத் தான் போட்டிருக்கேன். ஏனெனில் நாளையிலிருந்து 3 நாட்கள் லீவு! ஞாயிற்றுக்கிழமை பார்க்கலாம். :)))))) கருத்துச் சொல்லுபவர்கள் பதில் வரலையேனு நினைக்க வேண்டாம். வந்து தான் சொல்லுவேன். 

Monday, January 21, 2019

உம்மாச்சிங்களைப் பார்க்கலாம் வாங்க!


நேற்றுப் பௌர்ணமி என்பதாலும் தை வெள்ளிக்கிழமைகளில் பரவாக்கரை மாரியம்மன் கோயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதையும் கருத்தில் கொண்டு நேற்றே பரவாக்கரை போய் மாவிளக்குப் போட்டு விட்டு வந்தோம். பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலேயே போட்டாலும் சில சமயங்கள் பிரார்த்தனைகள் இருந்தால் புதன், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போடுவது உண்டு. மேலும் ஆவணி மாத ஞாயிறும் தை மாத ஞாயிறும் அம்மனுக்கு உகந்த நாட்களாகச் சொல்லப்படுவது உண்டு. இந்த வாரம் போகலாம் எனில் வேறே நிகழ்ச்சிகள்! அடுத்த வாரம் 3ஆவது வாரம். கூட்டம் அதிகம் இருப்பதோடு மாவிளக்குப் போட இடத்துக்கு வேறே முந்திக்கணும். என்ன தான் சீக்கிரம் போனாலும் வெள்ளிக்கிழமைகளில் பத்தரைக்குள் மாவிளக்குப் போட வேண்டி இருக்கு. ஆனால் பூசாரிக்கு அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு அபிஷேகம் பண்ணிக் கொடுத்தாலும் பின்னர் மறுபடி ஒரு அபிஷேகம் விலாவரியாகச் செய்ய வேண்டும். அது தான் முக்கிய அபிஷேகம். அது பனிரண்டு மணி ஆகி விடும். அத்தனை நேரம் காத்திருந்து விட்டு மாவிளக்குப் போடும்போது கூட்டம் காரணமாக உள்ளே இடமே கிடைப்பதில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்து நேற்றே போய்ப் போட்டுவிட்டு வந்தோம். 

முதலில் பொய்யாப்பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை வழக்கம் போல் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்கு வந்தோம். பட்டாசாரியாரிடம் முன் கூட்டிச் சொல்லி வைத்திருந்தோம். அவரும் வந்து கோயில் கதவைத் திறந்து அர்ச்சனை செய்து கொடுத்தார். கீழே பெருமாள் ரொம்ப நாளைக்கப்புறமாக  நேற்று அனுமதியுடன் எடுத்த படம்.இந்த ஆஞ்சிக்குத் தான் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே வடைமாலை சார்த்தினோம். குட்டியா இருந்தாலும் கீர்த்தி பெரிது.


இவர் வேணுகோபாலர். கும்பாபிஷேக சமயத்தில் கண்டெடுக்கப்பட்டு இவருக்கெனத் தனி சந்நிதி பெருமாளின் வலப்புறமாய்க் கட்டிப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கும்பாபிஷேகம்


கோயில் வாசலில் ஆட்டுக்குட்டிகள் குளிருக்குச் சுருண்டு உட்கார்ந்திருந்தன. திரும்பி வரச்சே படம் எடுக்கலாம்னா வரும்போது இரண்டைத் தவிர்த்து மற்றவை அதனதன் தாயுடன் சென்று விட்டன. 


மாரியம்மன் கோயிலில் மாவிளக்குப் போட்டு விட்டுக் கிளம்பும் சமயம் அனுமதியுடன் எடுத்த படம். இம்முறை கருவிலி கோயில் திறந்து வைக்கச் சொல்லி இருந்தோம். பரம்பரை குருக்கள் காத்திருந்தார். சற்குணேஸ்வரர் சந்நிதியில் படம் எடுக்க முடியலை. கையில் சாமான்கள். பிரகாரம் சுற்றும்போதும் படம் எடுக்க முடியாமல் சாமான்கள். அம்மன் சந்நிதியில் படம் எடுத்தேன் அனுமதியுடன். அம்பாள் நல்ல உயரமாக இருப்பாள். அம்பாள் கல்யாணத்திற்கு முன்னால் சர்வாலங்காரத்துடன் காட்சி கொடுத்த இடம் என்கின்றனர். அதனால் அம்பிகையின் பெயர் சர்வாங்க சுந்தரி.


எல்லாச் சோழ நாட்டுச் சிவன் கோயில்களையும் போல் கருவறைக்கு மேல் மட்டும் விமானம் உள்ள கோயிலாகத் தான் இதுவும் இருந்தது. அனைத்துச் சிவன் கோயில்களின் விமானங்களிலும் ஒற்றுமைகளும் காணப்படும். இந்தக் கோயிலும் விமானம் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறை கும்பாபிஷேஹத்தின் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ராஜகோபுரம். 


சிவன் கோயில்க்குளம். இந்தக்குளத்தின் தென்கரையை ஒட்டியே அக்ரஹாரம். அக்ரஹாரத்தில் குளத்தை ஒட்டித் திரு கிருஷ்ணமூர்த்தியின் மூதாதையர் இருந்திருக்கின்றனர். இந்தக் குளம் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு நடுவே வட நாட்டுப் பாணியில் சிவன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மராமத்து செய்யப்பட்டது. முன்னெல்லாம் சுற்றுச் சுவர் கிடையாது. இந்தக்குளக்கரையில் தான் கணுவன்று கணுப்பிடி வைத்துவிட்டுக் குளித்துவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் செல்வோம். இன்னிக்குத் திங்கற பதிவு தான் போடறதுக்கு இருந்தேன். நேற்றுக் கோயிலுக்குப் போனதில் திட்டம் மாறிவிட்டது. 2,3 திங்கற பதிவுகள் போடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. எப்போது நேரம் வரும்னு தெரியலை.

இம்முறையும் ரெட் டாக்சி தான். சேவை நன்றாக இருக்கிறது. இப்படியே தொடரணும். இப்போதைக்குக் கோவை, சேலம், மதுரை, திருச்சியில் தான் இருக்கு. மற்ற ஊர்களில் இருப்பதாய்த் தெரியலை. சென்னையில் முயன்று கொண்டிருப்பதாகக் கேள்வி. குறைந்த கட்டணம் வாங்குகின்றனர். ஆனால்  கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் இதுவே தொடர்ந்தால் நல்லது! அது தான் பெரிய கேள்விக்குறி.

Thursday, January 17, 2019

பால் பொங்கிற்றா?

எல்லாரும் பொங்கல் கொண்டாடி முடிச்சிருப்பீங்க, சிலர் கொண்டாடிட்டு இருப்பீங்கனு நம்பறேன். பொங்கல் கொண்டாடுவது எப்போவுமே சிறப்பான ஒரு பண்டிகையாக இருந்து வருகிறது. உழவுத் தொழிலைச் சிறப்பித்து மட்டுமில்லாமல் அதற்கு உதவும் இயற்கை வளங்களையும் கொண்டாடும் ஒரு பண்டிகை இது. பொங்கலுக்கு எப்போவுமே சில வீடுகளில் புதுப் பானை வாங்குவாங்க. இன்னும் சிலர் இருக்கும் பானையையே சுத்தம் செய்து அலங்கரித்து வைப்பார்கள். மண்பானையிலும் பொங்கல் வைப்பது வழக்கமாய் இன்றளவும் இருந்து வருகின்றது. பொதுவாக அடுப்பு மூட்டி சூரியனைப் பார்த்த வண்ணமே பெரும்பாலோர் பொங்கல் வைக்கின்றனர். எங்க வீட்டில் பூஜை மட்டும் வீட்டுக் கிணற்றடியிலோ அல்லது முற்றம் இருந்தால் முற்றத்திலோ தான். அம்பத்தூரில் இருந்தவரைக்கும் கொல்லைக்கிணற்றடியில் கோலம் போட்டு அங்கே வழிபாடு செய்வோம்.அநேகமாக நான் சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு உபாத்தியாயம் செய்வதற்குத் தயாராக வரணும். மாமனார் காலத்தில் இருந்தே ஆவணி அவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, பொங்கல் சூரியநாராயண பூஜை எல்லாத்துக்கும் நான் தான் புரோகிதர் வேலை பார்த்துட்டு இருக்கேன். இப்போ இங்கே திருச்சி வந்தப்புறமா 2,3 வருஷமா அந்த வேலைக்குப் போக முடியலை! என்றாலும் கடைசியில் என்னைக் கூப்பிட்டு விடுவார்.


சென்னையிலே இருக்கும்போதெல்லாம் அநேகமாய்ப் பொங்கலுக்குக் கிராமத்துக்கு மாமியார் வீட்டிற்கே செல்வது வழக்கம். அங்கே விறகு அடுப்புத் தான் என்பதாலும் அதிலே தான் பொங்கல் வைக்கவேண்டும் என்பதாலும் நகரத்துக்கு வந்தப்புறமும், எரிவாயு அடுப்பு இருந்தாலும், பொங்கலுக்கு விறகு அடுப்பு மூட்டி அதில் தான் வைக்கிறது வழக்கம்னு அப்படித் தான் செய்துட்டு இருந்தோம். அப்புறம் கொஞ்ச நாட்கள் கரி அடுப்பிலே பொங்கல் வைத்துக் கொண்டிருந்தோம். அதுக்கு அப்புறம் இன்னும் முன்னேற்றம் உண்டாகி பம்ப் ஸ்டவிலே பொங்கல் வைத்தோம். ஒரு கட்டத்தில் இந்த எதுவுமே எனக்கு ஒத்துக்காது என்ற சூழ்நிலை உருவானதும், வேறே வழியில்லாமல் எரிவாயு அடுப்பிலே பொங்கல் வைக்கின்றோம். ஆனால் இப்போவும் வெங்கலப் பானை தான். ஒரு சிலர் குக்கரிலேயே பொங்கல் வைக்கின்றார்கள். என்ன இருந்தாலும் அது அவ்வளவு ருசியாய் இருக்கிறதில்லை. (நமக்குத் தான் நாக்கு நீளம் ஆச்சே, இறங்காது!) ஆகவே வெண்கலப் பானையிலே தான் பொங்கல் இந்த வருஷமும்.

பொங்கல் வைக்க நேரமும் பார்க்கிறதுண்டு. எங்க வீடுகளிலேயும், உறவினர் வீடுகளிலேயும், தை மாதம் பிறக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு அந்த நேரமே பொங்கல் வைத்து வருகின்றோம். சில சமயம் அது இரவு 9-00 மணிக்குக் கூட வரும். அன்று பூராவும் சாப்பிடாமல் இருக்கும்படி ஆயிடும். இந்த வருஷம் நல்லவேளையாக் காலை 7--30க்கு அப்புறம் , 9-00 மணிக்குப் பின்னர் பொங்கல் வைக்க நல்லவேளை என்று சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே சமையலை முடிச்சு வைத்துவிட்டுப் பின்னர் பொங்கல் வைத்து, சூரிய பூஜை செய்து முடித்துச் சாப்பிட 12-00 மணிக்கு மேலே ஆகி விட்டது.

பொங்கல் பானையை நல்லாத் தேய்த்துச் சுத்தம் செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி, ஸ்வாமி அலமாரி இருந்தால் அதுக்கு முன்னால் கோலம் போட்டுப் பானையை வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, இஞ்சிக் கொத்து வழக்கம் உண்டானால் அதுவும் கட்டிட்டு, பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து "பொங்கலோ பொங்கல்" சொல்லச் சொல்லிவிட்டு எல்லார் கையாலேயும் பாலைப் பொங்கல் பானைக்குள் விடச் சொல்லவேண்டும். சின்ன வயசில் போட்டி போட்டுக் கொண்டு தெருவுக்கே கேட்கிறாப் போல் பொங்கலோ பொங்கல் என்று நானும், என் தம்பியும் கத்துவோம். வழக்கம்போல் தம்பிக்குப் பாராட்டும், எனக்குத் திட்டும் பரிசாய்க் கிடைக்கும். கவலையே பட்டதில்லை. அது ஒரு காலம். ம்ம்ம்ம்ம் :( பின்னர் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி, வறுத்து வைத்த பாசிப் பருப்பை அதில் போட்டுப் பருப்புக் கரைந்ததும், வறுத்த பச்சரிசியை நன்றாய்க் களைந்து அதிலேயே போடவேண்டும். எங்க அம்மா வீடுகளிலே பொங்கல் கரைய விட தண்ணீர் அதிகம் சேர்ப்பது இல்லை. பாலிலேயே கரைய விடுவோம். அவரவர் வசதிக்கேற்ற மாதிரிச் செய்து கொள்ளலாம். ஒரு ஆழாக்கு (200 கிராம் அரிசி என்றால் குறைந்தது 50கிராமிலிருந்து 100 கிராம் பருப்பு ஆகும். ருசியைப் பொறுத்து) அதற்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். பத்தலைனா தண்ணீர் சேர்த்துக்கலாம். நான் ஒரு மு.ஜா. மு. அக்காவாச்சே.  முன்னெல்லாம் ஒரு வாரம் முன்னாலே இருந்தே அரை கப் பாலாகச் சேர்த்து, சேர்த்து எடுத்துக் காய்ச்சி வைப்பேன்.  முதலில் புதுப்பாலைக் கொஞ்சம் விட்டுப் பருப்பைக் கரைய விட்ட பின்னர் காய்ச்சி வச்சிருந்த பாலையும் சேர்த்துக் கொள்வேன்.  இந்த வருடம் புதுப்பாலே சீக்கிரம் கிடைத்து விட்டது.

வெல்லம் அவங்க அவங்க ருசிக்கு ஏற்றாற்போல் சேர்த்துக் கொள்ளவும். எப்படியும் அரை கிலோ வெல்லத்துக்கு மேல் வேண்டும் மேலே சொன்ன அளவு அரிசி, பருப்புக்கு. வெல்லம் சேர்ந்து வெல்ல வாசனை போகப்பொங்கல் கொதித்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய் பல், பல்லாய்க் கீறிப் போட்டு வறுத்துப்பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய் வாசனைக்கு போடவும். வீட்டு முற்றம், கிணற்றடி, அடுக்குமாடிக் குடியிருப்பென்றால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் சுத்தம் செய்து சூரியக் கோலம் போடவும். சிலர் வீட்டில் சந்திரனும் போடுவதுண்டு. சூரியன் வடக்கே நகருவதால் சூரியக் கோலமும் கொஞ்சம் வடக்கே போடணும்னு சொல்லுவாங்க. பின்னர் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைப்பழம், கரும்பு, அரிசி, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, விளக்கு, மஞ்சள் பொடி, அட்சதை(மஞ்சள் தூளில் கலந்த அரிசி அட்சதை), தட்டு, கிண்ணங்கள், பசும்பால், தீப ஆராதனைத் தட்டுகள்,பூக்கள், மாலை கிடைத்தால் மாலை போன்றவற்றோடு உட்கார்ந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்து முடித்துவிட்டுப் பின்னர் சூரிய வழிபாடு செய்யவேண்டும். கற்பூர தீப ஆராதனைக்கு முன்னர் பொங்கலை செய்த பானையோடு கொண்டு வைத்து, கூடவே சாதம், பருப்பு, காய்வகைகள் போன்றவையும் வைத்து சூரியனுக்கு நிவேதனம் செய்யவேண்டும். பின்னர் கற்பூர தீபாராதனை செய்து விட்டுப் பின்னர் வீட்டில் ஸ்வாமி அலமாரியில் உள்ள தினமும் நிவேதனம் செய்யும் அனைவருக்கும் செய்துவிட்டுப் பின்னர் காக்கைக்குப் பொங்கல், சாதம், பருப்பு கொடுத்துவிட்டுப் பின்னர் விநியோகம் செய்ய வேண்டிய உறவினர், நண்பர்கள் இருந்தால் கொடுத்துவிட்டுச் சாப்பிடலாம்.

எல்லாத்தையும் விட முக்கியமானது இன்று பொங்கல் செய்யும் பானையையோ, அல்லது சாதம் வைக்கும் பானையையோ காலி செய்து இன்றே தேய்த்துச் சுத்தம் செய்யக் கூடாது என்பது ஐதீகம். பானை இன்று நிறைந்து இருந்தால் வருடம் பூராவும் இதே போல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை!  இப்படியாகத் தானே இந்த வருஷப் பொங்கல் நிறைவுற்றது. 

Wednesday, January 16, 2019

பொங்கலோ பொங்கல் 3 அண்ணன்மாரே, தம்பிமாரே எல்லோரும் கணுச் சீர் சீ(ற)ர வாங்க! :)

எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க.  இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா? பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா.  பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.  மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம்.  மழைக்கு தெய்வம் இந்திரன்.  ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும்,  நீர் வளம் வேண்டி வருணனையும் வழிபடுகிறோம்.  அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம்.  காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை.  மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்தில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம்.  ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது.  தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம்.  ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும்  உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும்.  முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள்.  இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது.  என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம்.  மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள்,  மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும்.  அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும்.  இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை.  கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம்.  இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.

பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.  தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும்.  என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  இந்தத் தெப்பத்தில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள்.  அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.  பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.

பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள்.  முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள்.  மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு.  இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம்  விபரமாகப் பகிர்கிறேன்.  அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள்.  அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம்.  வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள்.  ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.

தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்
பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்
சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துக்
கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்
தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக
மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்
பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!

கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் இந்த  வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,
"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.அண்ணன்மார்களே, தம்பிமார்களே,  எல்லோருக்காகவும் காக்காய்ப்பிடி, கனுப்பிடி வைச்சாச்சு.  வஸ்த்ரகலா கொடுப்பவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா கொடுக்கப் போறவங்க பரம்பராவும், சாமுத்ரிகா கொடுக்கப் போறவங்க சாமுத்ரிகாவும், இல்லை, பிரைடல் செவன் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க அதுவும், ரெயின்போ கலர்ஸ்னு சொன்னால் அதுவும் எதுவானாலும் ஓகேப்பா.  நேத்திக்கு நிறையப் பேர் வந்து பொங்கல் சாப்பிட்டிருப்பதும் தெரிஞ்சது.  இப்படி எல்லாம் மொக்கைப் பதிவு போட்டால் தான் மக்கள் வருவாங்க போல!  :P

    


    

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் எதுவானாலும் ஓகே தான்! :)))))) எடைக்கு எடைன்னா டபுள் ஓகே! :)))))))