எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 30, 2021

நம்ம "கர்மா" நம்மை விடாது!

 ஹாஹா! என்ன தலைப்புனு யோசிச்சு, உடம்பு வந்ததையும் கர்மா தொடர் பார்த்ததையும் சேர்த்து ஒரு பதிவாப் போட்டுட்டேன். இரண்டுமே கர்மா தானே!

கர்மா தொடர் பதினாறு பகுதிகள் பார்த்திருக்கேன். உட்கார வேண்டி இருப்பதால் அதிகம் பார்க்க முடியவில்லை. பார்த்தவரை அடுத்து என்ன ஆகுமோ என திக், திக், திக் தான். தஞ்சை ஜில்லாவின் அந்தக் கால கிராமம் ஆன ஶ்ரீகண்டபுரம்/பாலூரில் உள்ள ஓர் அக்ரஹாரத்தின் ஓர் குடும்பத்தின் கதை. கனபாடிகள் அந்த ஊரிலேயே பெரிய மனிதர். நாலும் தெரிந்தவர். அவர் சொன்னால் சொன்னது தான். அது தான் தீர்ப்பு! அந்த ஊரில் அதே அக்ரஹாரத்தில் வசிக்கும் சங்கர சாஸ்திரிகள் கனபாடிகளின் வீட்டுப் புரோகிதர். கனபாடிகளின் மூத்த இரு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிக் குழந்தையே பிறக்காததால் சங்கர சாஸ்திரிகளின் ஏற்பாட்டில் சந்தான கோபால விரதம் ஏற்பாடு செய்து நடக்கிறது. சங்கர சாஸ்திரிகளுக்கு ஒரே பெண்/ தாயில்லாப் பெண்/ருக்கு. கதையின் நாயகி. அவளுக்கு கனபாடிகளின் மூன்றாவது பிள்ளை வெங்கிட்டுவின் மேல் ஒரு கண். அந்த வீட்டு மருமகளாக வர வேண்டும் என்னும் கனவில் இருக்கிறாள். 

கனபாடிகளின் கடைசிப் பெண்ணான காமுவுக்கு  (கதைப்படி 12 வயசுச் சிறுமி. நடிப்பதும் சின்னஞ்சிறு பெண் தான்) அந்தக் கால வழக்கப்படி கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன.  கனபாடிகளின் வேண்டுகோளுக்கு இணங்கக் கோனேரிராஜபுரம் அக்ரஹாரத்தில் இருக்கும் சம்பந்தி வீட்டாரைப் பார்த்துப் பேசச் செல்லும் சங்கர சாஸ்திரிகள் திரும்புகையில் புயல், மழையில் அகப்பட்டுக் கொண்டு இரவு நேரத்தில் அந்தப் பக்கத்தில் உள்ள ஓர் காட்டு ஓரத்தில் மயங்கி விழுகிறார். அந்த வழியாக வண்டியில் செல்லும் அந்த ஊரைச் சேர்ந்த தங்கம் என்னும் தேவதாசிப்  பெண்மணி மயங்கி விழுந்திருக்கும் சங்கர சாஸ்திரியைப் பார்த்துவிட்டுத் தன் வண்டியில் அவரைத் தூக்கிப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு அவரை எடுத்துச் சென்று வைத்தியரை வரவழைத்து உடனடியாக மருந்துகளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறாள். அந்தக் கால வழக்கப்படி தாசிகளின் வீட்டுக்கோ வீடுகள் இருக்கும் தெருவுக்கோ பிராமணர்கள் செல்ல மாட்டார்கள். சங்கர சாஸ்திரிகளோ அங்கே போனதோடு அல்லாமல் ஒரு இரவு முழுவதும் அங்கே நினைவின்றிக் கிடக்கிறார். மறுநாள் உண்மை தெரிந்த அவருக்குக் கவலை/பயம்/ஊரில் யார் என்ன சொல்வார்களோ என்னும் அச்சம்! தைரியம் சொல்லி அவரை வீட்டின் பின் பக்கம் வழியாக அனுப்பி வைக்கிறாள் தங்கம். ஆனால் குற்ற உணர்விலும் அவமானத்திலும், அச்சத்திலும் குறுகிக் குன்றிப் போன சங்கர சாஸ்திரிகள் ஊர் திரும்புகையில் ஊர் எல்லைக் குளத்தில் தான் தாசி வீட்டில் தங்கிய தோஷத்தைக் கழிப்பதற்காகக் குளித்து முழுகி எழுந்திருக்கும்போது கனபாடிகளின் இரண்டாம் மாப்பிள்ளை (ஆராய்ச்சியாளன்) பார்த்து விடுகிறான். விஷயத்தை சாஸ்திரிகள் மூலம் தெரிந்து கொண்டு இதை ஒருத்தருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவன் சொல்லி சாஸ்திரிகளைச் சமாதானம் செய்கையில் மூத்த மாப்பிள்ளை சேஷு இதை ஒட்டுக் கேட்டுவிட்டு ஊரில் பரப்பி விடுகிறார். ஊரே பத்திக் கொண்டு எரிகிறது. 

இதை எதிர்கொள்ளும் சங்கரசாஸ்திரிகளை கனபாடிகள் ஊரிலிருந்து பிரஷ்டம் செய்து விட, அவமானம் தாங்க முடியாமல் சங்கர சாஸ்திரிகள் ஊர்க்குளத்தில் விழுந்து உயிரை விடுகிறார். ருக்குவுக்கு ஏற்கெனவே அம்மா இல்லை. இப்போது அப்பாவும் போய்விடத் தாய்மாமன் கிச்சாமி பக்கத்தில் இருந்தாலும் அவர் துணையுடன்  கனபாடிகளைப் பழி வாங்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள் ருக்கு. ஏற்கெனவே கிச்சாமிக்கும் கனபாடிகளுக்கும் கொஞ்சம் விரோதம் இருக்கிறது. ருக்குவோ எப்படியேனும் கனபாடிகளைப் பழி வாங்கித் தன் தகப்பன் இறந்த அதே குளத்தில் கனபாடிகளும் மூழ்கி இறக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள்.  இதற்காக அவள் செய்யும் சாகசங்கள்! அவை தான் மீதிக்கதை! ஒவ்வொன்றாய்ப் பார்த்து வருகிறேன். அந்தக் காலத்து அக்ரஹார வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் பாம்பே சாணக்யா. நடிக நடிகையர் தேர்வில் இருந்து அவர்களிடமிருந்து சற்றும் மிகையில்லா யதார்த்தமான நடிப்பை வாங்கி இருக்கிறார். ஒரு காட்சியில் ருக்குவின் கண் இமைகள் மூடாமல் அப்படியே இருக்கும். அதைக் காட்சிப் படுத்தியதோடு இல்லாமல் இந்தக்குறிப்பிட்ட காட்சியில் ருக்குவின் கண் இமைகள் மூடாது என்னும் அறிவிப்பும் கொடுத்து நம்மைக் கவனிக்க வைக்கிறார். தேர்ந்தெடுத்திருக்கும் ஊரும், அங்குள்ள வீடுகளும் நம்மை 1930 ஆம் ஆண்டுகளுக்கே அழைத்துச் செல்கிறது. இதெல்லாம் தான் நம் மனதைக் கவர்ந்து இழுக்கிறது. நல்லவேளையாகப் பிரபலமான நடிகர்களோ/நடிகைகளோ இதில் நடிக்கவில்லை. இருந்திருந்தால் முகத்தின் அஷ்டகோணல்களால் கெடுத்திருப்பார்கள். யதார்த்தம்/இயல்பான நடிப்பு என்றால் என்னவென்று இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

இதற்கு நடுவில் தான் ஊர்ப் பிரஷ்டம் செய்ததால் தந்தை இறந்து அநாதை ஆன ருக்குவைத் தன் பிள்ளைக்கே மணம் முடிக்க நினைக்கிறார் கனபாடிகள். கல்யாணங்களும் நடக்கின்றன. ருக்குவின் கல்யாணத்தோடு சேர்ந்து காமுவுக்கும் கல்யாணம். சின்னப்பிள்ளை/சின்னப் பெண். பார்க்கக் கண்ணுக்கு அழகான ஜோடி. அவர்களை அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பும் ருக்குவின்  வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது. வீட்டில் எல்லோரும் அவளுடன் எப்படிப் பழகினார்கள்? ருக்குவின் திட்டம் என்ன? ஒவ்வொன்றாய் விரிகிறது "கர்மா" கனபாடிகள் செய்த இந்தத் தவறு அவர் குடும்பத்தை நான்கு தலைமுறைகளுக்குப் பிடித்து ஆட்டக்குடும்பம் பிரிந்து பின்னர் ஐந்தாம் தலைமுறையில் ஒன்று சேரும் என்பது ஆரூடம். இன்னும் இந்தத் தலைமுறையில் பிரிவே ஆரம்பிக்கலை. இனி போகப் போக மற்றவை.

*********************************************************************************

பேருந்துகள் இயங்காததால் சரிவர மருந்துகள் வராமல் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதமாகக் கரூரில் வெங்கட்ரமணா மருத்துவசாலையில் இருந்து ஆயுர்வேத மருந்துகள் வரவே இல்லை. நமக்கோ இப்போப் பார்த்து மருந்துகள் தீர்ந்து போக! எல்லாம் சேர்ந்து பதினைந்து நாட்களுக்கும் மேல் படாத பாடு பட்டாச்சு. ஒரு வழியா இன்னிக்குத் தான் கரூரில் இருந்து ஆயுர்வேத மருந்துகளும் மருந்துக்கடைக்கு வந்து சேர்ந்தன. தேவையான மருந்துகளை  வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இனி கால் பிரச்னைகள் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் தாங்கிக் கொள்ளும்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும் சமையல் செய்ய ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் ஆகலாமோ எனத் தோன்றுகிறது. காலை ஊன்றி நிற்க முடிந்தால் பின்னர் ஆரம்பித்து விடுவேன். இந்த உஷா மாமி சமையல் பரவாயில்லை. ஆனால் இட்லி, தோசை,உப்புமா என பயமுறுத்துகிறார். தோசை எல்லாம் கறுப்பாகக் கையில் ஒட்டிக் கொள்கிறது. இட்லி என்பது இரண்டு இட்லிகளை ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வைச்சாப்போல் உள்ளே முடிச்சாக இருக்கு. உப்புமா என்னும் பெயரில் நேற்று சாதத்தைத் தாளித்துக் கொடுத்து விட்டார். நொய்யில் பண்ணி இருக்கார் என நம்ம ரங்க்ஸ் சொன்னாலும் நானும் மாமியார் வீட்டில் கருவிலியில் பச்சரிசி நொய்யில் பண்ணின அரிசி உப்புமா சாப்பிட்டிருக்கேன். தேங்காய்ச் சாதம் போல அவ்வளவு ருசியாக இருக்கும். நேத்திக்குச் சாப்பிடவே முடியலை. ஒரு மாதிரியா உள்ளே தள்ளினோம். இன்னிக்கு அடைனு சொல்லி இருக்காங்க! ஆஹா! என்ன அழகு! அடையைச் சாப்பிட்டுப் பழகு! என வைகோ சொன்னாப்போல்  அடை இருந்துட்டால் நல்லது. பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! உம்மாச்சி, காப்பாத்துங்கப்பா! 

Sunday, June 27, 2021

பொழுது போகாமல் செய்த வேலைகள்!

கர்மா  இந்தச் சுட்டியில் வரும் தொடர்களைப் பாருங்கள். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் இவை ராஜ் தொலைக்காட்சியில் "விஸ்வரூபம்" என்னும் பெயரில் வந்து கொண்டிருந்தன.  ஆனால் பின்னால் நின்று விட்டது. ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த பிரச்னைகளால்னு நினைக்கிறேன். இப்போ நண்பர் ஒருத்தர் இதன் சுட்டியை அனுப்பிப் பார்க்கச் சொல்லி சந்த வசந்தம் குழுமத்தில் போட்டிருந்தார்.  நான் ஏற்கெனவே தொலைக்காட்சியில் வந்த வரை பார்த்திருந்தாலும் மறுபடி பார்க்கலாம்னு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  திரு பாம்பே சாணக்யாவின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தத் தொடரின் ஒரு பகுதியை முகநூலிலும் காணக்கிடைக்கும். ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டுமெனில் இங்கே வந்து தான் பார்க்கணும். நான் இதுவரை ஐந்து பகுதிகள் பார்த்திருக்கேன். தொடர்ந்து உட்கார முடியாததால் எல்லாவற்றையும் இன்னமும் பார்க்கவில்லை. 

இது 1930களின் அக்ரஹார வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. அக்ரஹார பிராமணர்களின் பழக்க வழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், நடைமுறைகள், அவர்களிடை இருந்த கட்டுப்பாடான பழக்கங்கள் எனக் காட்டும் இது ஒரு குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி மெல்ல மெல்ல அப்போதைய நாகரிகமான வாழ்க்கைக்குப் பழகி அந்தச் சூழ்நிலைக்குள் போகிறார்கள் என்பதும் பிராமணர்களுக்கு அவர்களின் அன்றாட நியம நிஷ்டைகள் மாறிப்போய் இப்போது இருப்பதைப் போல் எப்படி மாறினார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமில்லாமல் குறிப்பிட்ட குடும்பம் எப்படிச் சூழ்ச்சியால் பிரிக்கப் பட்டது என்பதும் அவர்கள் ஒன்று சேரக் காரணமாக இருக்கும் ஶ்ரீராமரின் படம் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வை அந்தக் கால கட்டத்திலேயே கதையில் முக்கிய நபராக வருபவர் மூலம் சுட்டிக்கட்டவும் பட்டிருக்கிறது. அந்தக் குடும்பம் பிரியும் எனவும் இந்த ஶ்ரீராமர் படத்தை வைத்தே நான்காம் தலைமுறையில் ஒன்று சேரும் எனவும் சொல்லப்பட்டிருக்கும். நடுவில் வரும் நிகழ்ச்சிகள், கோப, தாபங்கள், மர்மமான முறையில் ஆராய்ச்சி செய்யும் மாப்பிள்ளை. அவரின் கண்டுபிடிப்பான மருந்துகள், அதைச் சாப்பிட்டதால் பிறக்கும் குழந்தைகள் என வரும். இன்னும் முழுசாப்பார்க்காததால் எதுவரை வந்திருக்குனு சொல்ல முடியலை. ஆனால் மறுபடியும் இதன் தொடர்ச்சியை எடுக்க ஆரம்பித்திருப்பதாய்ச் சொல்கின்றனர். 

இதைத் தவிரவும் இப்படி உட்கார்ந்திருக்க நேரம் கிடைத்ததில் எஸ்.ஏ.பியின் "எனக்கென்று ஓர் இதயம்" (ஶ்ரீராம் கொடுத்த சுட்டியில் இருந்து தரவிறக்கினேன். முதல்லே வரலை. பின்னர் வந்து விட்டது.) அநுத்தமாவின் "தவம்" இன்னும் சில நாவல்கள் படித்தேன். எஸ்விவியின் "உல்லாச வேளை" புத்தகத்தைத் தேடினால் கிடைக்கவே இல்லை. எனக்கென்று ஓர் இதயம் முன்னாடியே குமுதத்தில் வரச்சேயே படிச்சிருப்பேனோ, கதை தெரிந்த மாதிரித் தான் இருந்தது. அநுத்தமாவின் தவம் முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் எழுதப்பட்டிருக்கும். எதிலேயாவது வந்ததானு தெரியலை. என்னிடம் இருப்பது மிகப் பழைய பதிப்பு ஒன்று.  எழுபதுகளில் "அமுத நிலையம்" வெளியீடாகப் பத்து ரூபாயில் வந்திருக்கிறது. கதாநாயகியான காந்தாவின் கணவனுக்குத் திடீரென மாரடைப்பு வந்து மிக மோசமான நிலையில் இருக்கிறார். மருத்துவர்கள் அவருக்குக் கெடு வைத்து விட்டார்கள். இதை காந்தாவின் கணவரிடமும் சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் இரண்டு மாதத்துக்குள் சரி பண்ணி வைத்துவிட்டு மரணத்தை எதிர்நோக்க வேண்டும் எனத் தயார் செய்வதற்காகச் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது காந்தாவுக்குத் தெரியாது/அவளிடம் சொல்ல வேண்டாம் என அவள் கணவர் மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்கிறார்.

ஆனாலும் உடல்நிலை சரியில்லாத கணவனுக்கு ஓய்வு கொடுப்பதெனில் நகரச் சூழ்நிலையில் சரிவராது என நினைத்த காந்தா தன்னிரு குழந்தைகளையும் பள்ளியை மாற்றி (வருடக் கடைசியில்)த் தன் பெற்றோர்களுடன் அனுப்பிவிட்டு கூட வருகிறேன் என்று சொல்லும் மாமியார், மாமனாரையும் மறுத்துவிட்டு மருத்துவரான தன் தம்பி ஒருத்தன் துணையுடன் ஆறுமுகனூர் என்னும் மலைக்கிராமத்துக்கு வந்து தங்குகிறாள். அவள் பிரார்த்தனைகள் ஒரு பக்கம், கிராம மக்களின் அன்றாட வாழ்வு முறை ஒரு பக்கம், மலைக்கோயில் கிராமத்தின் மலைக்கடவுளான முருகனைத் தேடிக் கொண்டு வரும் பக்தர்கள் ஒரு பக்கம் என அந்தக் கிராமத்துச் சூழ்நிலை தன் கணவனுக்கு மன நிம்மதியையும், அமைதியையும் ஓய்வையும் தேடித்தரும் என்னும் நம்பிக்கையோடு வரும் காந்தாவுக்கு அவள் நினைத்தது நடந்ததா? கூட வந்த தம்பியும் அந்தக் கிராமம் பிடிக்காமல் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டுப் போய்விடுகிறான். அந்தக் கிராமத்தில் காந்தாவின் பொழுதுகள் எப்படிக் கழிந்தன? கணவனை அவள் கருத்தாகக் கவனித்துக் கொள்ள முடிந்ததா? ஊர் மக்களின் துணை கிடைத்ததா? தன்னுடைய பிரார்த்தனைகளை காந்தாவால் சரிவர நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததா? 

எல்லாவற்றையும் இந்தப் புத்தகத்தில் காண முடியும். நாகரிகத்தின் சுவடே இல்லாத மலைக்கிராமத்துச் சூழ்நிலையில் மனம் ஒன்றிப் படிக்க எழுத்தாளரின் எழுத்துத் துணை செய்கிறது. அநுத்தமாவின் பல பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று. இன்னமும் சாண்டில்யனின் இரு நாவல்கள் (சரித்திரம் தான்) தரவிறக்கி வைத்தது படிக்கணும். ஶ்ரீவேணுகோபாலனின் "மோகவல்லி தூது" "கள்ளழகர் திருக்கோலம்",  "மோகினி திருக்கோலம்" ஆகியவை  கூகிள் டிரைவில் சேரக் காத்திருக்கின்றன. திரு கௌதமன் சார் பிவிஆரின் "அதிர்ஷ்ட தேவதை" மின் நிலா குழுமத்தின் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதை இன்னமும் தரவிறக்கவில்லை. இப்படிப் பலப் புத்தகங்கள் படிக்கக் காத்திருக்கின்றன. 

நேற்றுத் தான் காலுக்கான வலி நிவாரணி மாத்திரைகள் வந்து சேர்ந்தன. தம்பி அதை வியாழனன்று அனுப்பி வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்கே திருச்சி தலைமைத் தபால் அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டதாக எனக்குச் செய்தி வந்தது. ஆனால் அன்று மதியம் மூன்று மணி வரை மாத்திரைகள் கிடைக்கவே இல்லை. ஶ்ரீரங்கம் தபால் அலுவலகத்தில் விசாரித்தால் திருச்சியிலிருந்து இன்னமும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். சரினு  திருச்சி தபால் அலுவலகத்துக்குக் கேட்டால் அது sorting office இல் இருந்தே சென்றிருக்காது, எங்களுக்கு வராது, நேரே ஶ்ரீரங்கம் போயிடும் என்றார்கள். கடைசியில் நேற்றுக் காலை வந்த செய்தியில் மாத்திரைகள் டெலிவரிக்காகச் சென்று விட்டது என்று ஒரு செய்தியும் எங்கள் பீட் நம்பர் 36 ஆம் எண்ணின் தபால் அலுவலர் மூலம் விலாசத்தைச் சென்றடையும் என்று ஒரு செய்தியும் வந்தது. மத்தியானமாக் கிடைத்தன மாத்திரைகள். மாத்திரைகளைக் கொடுத்தாச்சு என்னும் செய்தியும் மூன்றரை மணிக்கு வந்தது. இதை எலலாம் நினைச்சுச் சந்தோஷமாக இருந்தாலும் ஏன் அவற்றை வந்த அன்னிக்கே கொடுக்கவில்லை என்பது தான் புரியாத புதிர். எங்கும் நிற்காமல் வந்த மாத்திரைகள் திருச்சித் தபால் அலுவலகத்தில் ஒரு நாள் தங்கிவிட்டு மறுநாள் ஶ்ரீரங்கம் வந்ததன் காரணம் என்ன? இதை யாரிடம் கேட்கணும் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கேன். விடை கிடைத்தால் பகிர்கிறேன். சொல்ல மறந்துட்டேனே! நேற்று 2 மாத்திரைகள் சாப்பிட்டாச்சு. பலன் நேற்றிரவு தூங்கினேன். காலம்பர ஐந்தே முக்காலுக்குத் தான் எழுந்து கொண்டேன். 

Wednesday, June 23, 2021

காணாமல் போகும்மின்சாரம்!

 ஒரு வாரமாகக் கடுமையான கால் வலி. கால் வலி எனில் இடுப்புக் கீழ் கால் ஆரம்பத்தில் இருந்து பாதத்தின் விரல் நுனிகள் வரை வலி. உட்கார முடியலை. படுக்க முடியலை.  உட்கார்ந்தால் பாதம் வீங்கிக் கொள்கிறது. பின்னர் காலை ஊன்றவே சிரமம் ஆகி விடுகிறது. இரவு படுத்தால் நடு இரவில் கழிவறை செல்லக் கூடப் பிரச்னை!  கழிவறையில் உட்கார்ந்து எழுந்திருப்பது பிரச்னை! எப்படியோ பொழுது நகர்வது போல் நானும் இந்தக் கால்களை வைத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டு இருக்கிறேன். நடுவில் வேண்டாம்/சாப்பிட்ட வரை போதும்  என நிறுத்தி இருந்த வலி நிவாரணச் சூர்ணத்தை ரொம்ப வலி தாங்காமல் நேற்றிரவு நடு இரவு தாண்டி எழுந்து போய் எடுத்து வந்து சாப்பிட்டேன். அது எழுந்து போய் எடுத்துவந்து சாப்பிட்டுப் படுக்க அரை மணி ஆகிவிட்டது. அப்படி அங்குலம் அங்குலமாக நகர்ந்து நகர்ந்து போக வேண்டி இருந்தது. அந்தச் சூரணம் சாப்பிட்டதும் கொஞ்சம் வலி பொறுக்கும்படி ஆனது. ஆனாலும் முற்றிலும் சரியாகவில்லை. மருத்துவரோ படுத்தே இரு என்கிறார்.  குளிக்கவும் கழிவறை செல்லவும் மட்டுமே எழுந்திரு என்கிறார். நடக்கும் காரியமா? நமக்கு அப்போத் தான் வேலை செய்யும் பெண்மணியும் வராமல் எல்லா வேலைகளும் நாமே செய்யும்படி ஆகிறது. ஏற்கெனவே துர்க்குணி; அதிலும் இப்போ கர்ப்பிணி என்பார்கள். அதைப் போல் சும்மாவே கால் தகராறு தான் பல வருஷங்களாக. காலில் வலி இல்லாத இடமே இல்லை. விரல்களில் இருந்து கால்கள் முழுவதுமே வீக்கமும், வலியும் கொண்டு பாடாய்ப் படுத்தி விடுகிறது.

யாரும் ஒரு காலத்தில் நான் ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தேன் எனில் நம்ப மாட்டார்கள். ஏனெனில் இப்போதைய நிலைமை அப்படி! மாமனார் என்னை "போட் மெயில்" என்பார். அவ்வளவு வேகமாம். இப்போ கூட்ஸின் வேகம் கூட இல்லை. ஒரே புலம்பலாக ஆயிடுத்தோ! இதற்கு என உள்ள ஆங்கில மருந்து ஒன்றை எப்போவானும் போட்டுக்கச் சொல்லி மருத்துவர் சொன்னதை வாங்கி அனுப்பும்படி தம்பிக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பி இருக்கேன். அது வந்தால் ஓர் ஐந்து நாட்கள் அந்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் ஓரளவு நடமாடலாம். இப்போ இரண்டு நாட்களாகக் காடரர் மூலம் குழம்பு, ரசம், கறி, கூட்டு வாங்கிக்கறோம். சாதம் மட்டும் சுவாமிக்கு நிவேதனம் பண்ணணும் என்பதால் வீட்டில் வைச்சுடறேன்.  சும்மாவே இப்போல்லாம் அடிக்கடி எதுவும் எழுதுவது இல்லை. அதிலும் கடந்த ஒரு வருஷமாகக் கண்கள் பிரச்னை கொடுக்க ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் குறைந்தே விட்டது. இப்போ என்னடாவென்றால் என்னிக்கோ நான் அதிசயமா உட்கார்ந்தால் அன்னிக்கு மின்சாரம் இருப்பதில்லை; இல்லைனா இணையம் வர மாட்டேன் என்கிறது. செர்வர் இருக்கும் பகுதியின் மின்சாரத் தடையினால் இணையம் வேலை செய்வதில்லை! என்னத்தைச் சொல்றது! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்னும் கதை தான்.

இப்போதெல்லாம் வாரத்தில் 2,3 நாட்கள் மின் தடை ஏற்படுகிறது. என்னென்னவோ காரணம் சொல்கின்றனர். முந்தைய அரசு இருந்தப்போவும் பராமரிப்புப் பணிக்காக மாதம் ஒரு நாள் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் நிறுத்தி இருப்பாங்க. ஆனால் இப்போவோ முந்தைய அரசு பராமரிப்புக்களே செய்யாததால் மின்சாரம் வருவதில்லை என்கிறார்கள். சிலர் அணில் வந்து கடிச்சுட்டுப் போயிடுது வயரை. அதனால் மின்சாரத் தடை என்கின்றனர். என்னவோ போங்க. அணிலோ/ஆனையோ எல்லாமும் பிழைக்கத்தானே செய்யணும். இதோ இன்னிக்கு மத்தியானம் 2 மணிக்கு மின்சாரம் போயிட்டு மூன்று மணிக்கு வந்திருக்கு. நேற்றும் மின் தடை. முந்தாநாளும் மின் தடை. முந்தாநாள் ஐந்தாறு மணி நேரங்களுக்கும் மேல் எனில் நேற்றும் இன்று 2 அல்லது 3 மணி நேரங்கள். மத்தியானத்தில். அப்போத் தான் நான் கணினிக்கே வருவேன். இப்போ முடியறதில்லை. சாயங்காலம் ரொம்ப நேரமெல்லாம் உட்கார முடியாது. எப்படியோ இந்த மின்சாரப் பிரச்னை விரைவில் தீர்ந்தால் சரி. 

Thursday, June 17, 2021

கீரை வடை, கீரை வடை பார்! பார்!

ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது. ஆனாலும் ஒரு பக்கம் சோம்பல், மனது பதியாமல் போவது ஆகியவற்றால் ரொம்ப நேரமெல்லாம் இணையத்தில் செலவிடுவதே இல்லை. குறைந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முயன்று எல்லாவற்றையும் சரி செய்யணும். பார்ப்போம். முழுக்க முழுக்கத் தப்பு என்னோடது தான். 

நேற்று திடீரெனக் கீரை வடை பண்ணினேன். கீரை வாங்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். ஆனால் பண்ணியது இல்லை. என்னவோ காரணம், முடியாமல் போகும். ஆகவே நேற்றுக் கீரை நறுக்கும்போதே வடைக்கு எனத் தனியாக எடுத்து வைத்துவிட்டேன். உளுந்து+கபருப்பு+துபருப்புப் போட்டு வடைக்கு ஊறவும் வைத்து விட்டேன். அரைத்துப் பண்ணும்போது மணி மூன்றரைக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு தொலைபேசி அழைப்பை ரசித்துப் பேசிவிட்டு வந்ததில் அரைக்கும்போதோ, மாவை எடுக்கும்போதோ, கீரையைச் சேர்க்கும்போதோ படம் எடுக்க நினைவில் இல்லை. (யாருங்க அது, இதானே உங்க வழக்கம்னு சொல்றது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை. நேற்று நிஜம்மாவே மறந்து போச்சு. பின்னர் வடை தட்டி நம்ம ரங்க்ஸுக்கும் கொடுத்த பின்னரே நினைவில் வந்தது. உடனே அலைபேசியை எடுத்து வந்து மாவையும் அடுப்பில் வேகும் வடைகளையும் மட்டும் படம் எடுத்தேன். வடைகளை வெந்ததும் எடுத்துத் தட்டில் போடும்போது எடுக்கணும். யார் இல்லைங்கறாங்க?  அப்போப் பார்த்து வேறே வேலை! ஆகவே அதையும் எடுக்கலை. அதனால் தான் எ.பி.க்குத் "திங்க"ற கிழமைக்கு அனுப்பலை. இங்கேயே போட்டுட்டேன். கையை எண்ணெய்க்குள் விட்டுத் தான் எல்லோரும் வடையை எடுத்துக்கணும். இஃகி,இஃகி,இஃகி! இன்னொரு தரம் தட்டிலே போட்டுட்டு உங்களை எல்லாம் கூப்பிட்டுக் கொடுக்கிறேன். 


வடை மாவு அரைத்துக் கீரை போட்டுக் கலந்தது



 

 எண்ணெயில் வேகும் வடைகள். கண்ணாலே பார்த்துக்குங்க.


உளுத்தம்பருப்பு 200 கிராம், இரண்டு பருப்புக்களும் சேர்ந்து 50 கிராம், பச்சை மிளகாய் நான்கு. காரமாக இருந்தால் இரண்டு போதும், இஞ்சி தோல் சீவியது ஒரு துண்டு, உப்பு தேவைக்கு, பெருங்காயம் விரும்பினால்  நறுக்கிய கீரை இரண்டு கைப்பிடி.  உளுந்தும் பருப்பு வகைகளும் 3 மணி நேரத்துக்குக் குறையாமல் ஊறணும். நேற்றுக் காலம்பரப் பத்து மணி போல் ஊற வைத்தது அரைக்கையில் மூன்றரை ஆயிடுச்சு. ஆனாலும் வடை எண்ணெய் எல்லாம் குடிக்கலை. பருப்புக்களைக் களைந்தே ஊற வைப்பேன். ஊறியதை ஒரு வடிகட்டியில் போட்டு வடிகட்டிவிட்டு அதில் இருக்கும் குறைந்த அளவு நீரோடு மிக்சியிலோ கிரைண்டரிலோ போட்டு அரைக்கணும். நேற்றுக் கொஞ்சமாகப் போட்டதால் கிரைண்டரில் அரைப்பது கடினம் என்பதால் மிக்சியிலேயே அரைச்சேன். மாவு நன்கு திரண்டு வந்ததும் பச்சைமிளகாய்+இஞ்சியை உப்போடு சேர்த்துப் போட்டு அரைக்கலாம். அல்லது பச்சை மிளகாய்க் கடிக்கப் பிடிக்கும்னால் பொடியாக நறுக்கிச் சேர்த்துவிட்டு உப்போடு கீரையைப் போட்டுக் கலந்து வடைகளாகத் தட்டவும். 



ஹிஹிஹி, பழைய ஆங்கிலப் பதிவொன்றிலே இருந்ததா, இங்கே கொண்டு வந்துட்டேன். :)

Wednesday, June 09, 2021

கல்வியா? செல்வமா? வீரமா?

 பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் உச்சத்தைத் தொட்டிருப்பது தான். ஆனால் நம் தமிழக மக்கள் அதிலும் அரசியலைக் காண்கின்றனர்.  இது "நீட்" தேர்வுக்காக மத்திய அரசு செய்யும் சதி என்கின்றனர். கடந்த வருடங்களில் எல்லாம் நீட் தேர்வு நடந்து வந்திருக்கையில் இந்த வருஷம் மட்டும் மத்திய அரசு ஏன் சதி செய்யணும் என்பதே புரியலை. மேலும் நீட் தேர்வே இப்போதுள்ள தமிழக அரசின் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்திய அரசில் ஆட்சி புரிந்த காலக் கட்டத்தில் தான் 2010 ஆம் ஆண்டில் அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்டது.  தனியார் மருத்துவக் கல்லூரிகளால் எதிர்க்கப்பட்ட அரசு இதே காங்கிரஸ் மற்றும் அதன் துணைக் கட்சியின் உதவியோடு மேல் முறையீடு செய்து சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வை உறுதி செய்து தீர்ப்பளித்தது. உண்மை இப்படி இருக்க இப்போது மோதி அரசு தான் "நீட்" தேர்வைக் கொண்டு வந்தது போல் பேசுகின்றன தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்.   கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் சொல்லுகின்றனர். அப்போது கிராமப்புற மாணவர்களின் படிப்பின் தரத்தைத் தானே மேம்படுத்த வேண்டும்? ஒரு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற முடியாமல் இருக்கும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் மட்டும் பிரகாசிக்க முடியுமா? அதற்கு உழைப்புத் தேவை இல்லையா? சும்மா மனப்பாடம் பண்ணி எழுதும் படிப்பா மருத்துவப் படிப்பு? கிராமப்புற மாணவர்களும் நகரத்து மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு படிக்க வேண்டும் எனில் "நவோதயா" பள்ளிகளைக் கிராமங்களில் திறந்து மத்திய அரசால் அளிக்கப்படும் இலவசப் படிப்பை/தரமான படிப்பை கிராமப்புற மாணவர்களும் பெறும்படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த நவோதயா பள்ளிகளும் மோதியின் அரசால் கொண்டுவரப்பட்டவை அல்ல. ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையிலேயே கொண்டு வரப்பட்டவை!  படிப்புக்காகச் செலவு செய்து படிக்கும் சூழ்நிலையோ மேற்படிப்புக்குத் தேவையான அறிவைத் தரும்படியோ இப்போதைய பாடத்திட்டம் இல்லை. ஆகவே அனைவருக்கும் நன்மை தரும் பாடத்திட்டத்தை ஏற்பதே சரியானது.

மாற்றாக இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக் கொள்கையையும் சாடுபவர்கள்/தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுபவர்கள் தமிழகத்தில் உண்டு.அவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பது போல் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பாலகுருசாமி அவர்கள் மிகவும் விளக்கமாக நேற்றைய தினமலரில் எழுதி இருக்கிறார். திருச்சிப் பதிப்பில் வந்திருக்கும் இது மற்ற மாவட்டங்களுக்கான பதிப்பில் வந்திருக்கானு தெரியாது. திருச்சிப் பதிப்பிலும் எத்தனை பேர் படித்திருப்பார்கள் தெரியவில்லை.  முக்கியமான குற்றச்சாட்டான இந்தித் திணிப்பை அவர் கண்டிப்பாக மறுக்கிறார். மும்மொழிக் கொள்கையையும் தவறான புரிதல் என்கிறார். எந்த மொழியை மூன்றாவது கற்கும் மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அந்த அந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றிருக்க ஹிந்தி தான் கற்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை என்கிறார். ஆனால் படிப்பு.வேலை போன்ற காரணங்களுக்காக வடமாநிலங்கள் சென்றாலோ துபாய்/சௌதி போன்ற அரபு நாடுகள் சென்றாலோ ஹிந்தி தெரிந்திருப்பது கூடுதலாகப் பயன் தரும் ஒன்று. மற்ற நாட்டு மொழிகளைக் கற்பேன் எனச் சொல்லும் தமிழர்கள் இந்தியாவின் மொழியான ஹிந்தியின் மேல் இவ்வளவு வெறுப்பைக் காட்டுவது ஏன் என்றே புரியவில்ல.

ஐந்தாவது/எட்டாவது வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைக்கச் சொல்லிப் புதிய கல்விக் கொள்கை கட்டாயம் செய்வதாகச் சொல்லப்படுவதாயும் அது முற்றிலும் தவறு எனவும் தேர்வுகளை அந்த அந்தப் பள்ளிகளே நடத்திக்கொள்ளலாம் எனவும் தேர்வு இல்லாமல் இருக்கக் கூடாது என்றும் தான் புதிய கொள்கை சொல்வதாகவும் திரு பாலகுருசாமி சொல்கிறார். ஆனால் என்னைக் கேட்டால் தேர்வுகள் வைத்து வடிகட்டுவது நல்லது என்றே சொல்லுவேன். அந்தக்காலங்களில் (என் அம்மாவெல்லாம் படிக்கையில்) எட்டாவதுக்கான பொதுத் தேர்வு எழுதி இருக்கிறார். அதை ஈஎஸ் எல் சி என்பார்களாம். எலிமென்ட்ரி ஸ்கூல் லீவிங் செர்டிஃபிகேட்! இதை வைத்து அந்தக் காலங்களில் ஆசிரியப் பயிற்சிக்குக் கூடச் செல்ல முடியுமாம். ஆசிரியப் பயிற்சி முடித்து வந்து ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புகள் வரை ஆசிரியப் பணியும் செய்ய முடியும் என்றும் பலரும் அந்தக் காலங்களில் அப்படி ஆசிரியர்கள் ஆகிக் குடும்பச் சுமையையும் குறைத்தனர் என்றும் அம்மா/அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போதோ பத்து/பனிரண்டாம் வகுப்புக்களுக்கே பொதுத் தேர்வு இல்லை. இரண்டு வருஷங்களாகக் கொரோனா காரணமாகத் தேர்வுகளே ரத்து செய்யப்படுகின்றன. 

அடுத்தது தான் மிக முக்கியமானது. ஏதேனும் ஒரு தொழிலை மாணவனோ/மாணவியோ கற்க வேண்டும் என்பது மீண்டும் குலத்தொழிலைக் கொண்டு வரும் முயற்சி என்பது நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்து. தொழில் கல்வி மூலம் மாணவர்களைச் சுயச் சார்புடையவர்களாக மாற்ற முடியும் என்பதாலும் வேலை வாய்ப்புக்கள்/பிறரிடம் போய் வேலை செய்யும் முறை போன்றவற்றையும் முறைப்படுத்தும் எனவும் திரு பாலகுருசாமி சொல்கிறார்.படிப்பை முடித்ததுமே மாணவர்களுக்குத் தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் இந்தப் படிப்பு என்கிறார். உலகளவில் இந்திய மாணவர்கள் மட்டுமே தொழில் கல்வியில் பின் தங்கி இருப்பதாகவும் சொல்கிறார். என்னுடைய கருத்து இந்தக் குலக்கல்வியை ஒழித்ததே தப்பு என்பேன். எத்தனை எத்தனை தொழில்கள் இப்போது மறைந்து முற்றிலும் ஒழிந்தே போய்விட்டன! பரம்பரை ஆசாரிகள்/தச்சர்கள்/பொன்னாசாரிகள் இப்போது கிடைப்பது அரிதிலும் அரிது. பரம்பரையாக வந்தால் தொழில் நுணுக்கங்களைத் தன் வாரிசு என்பதால் பெரியோர்கள் சுலபமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். பரம்பரைத் தொழிலோடு கல்வியும் சேரும்போது அந்த மாணாக்கனிடம் தன்னம்பிக்கையும் படைப்புத் திறனும் பெருகும். இப்போது எங்க வீட்டில் ஒரு தச்சு வேலை/கதவுகளுக்குத் தாழ்ப்பாள் மாற்றுவது சென்ற இரு மாதங்கள் முன்னால் நடைபெற்ற போது இரு இளைஞர்கள் வந்தனர் அந்தவேலைக்கு! அவர்களில் ஒருவர் பரம்பரை ஆசாரிக் குடும்பம் என்பது அவர் வேலை செய்த விதத்திலேயே தெரிந்து விட்டது. இன்னொருத்தர் கேட்டுக் கேட்டுச் செய்தார்.  ஆசாரிப்பரம்பரையிலே வந்தவர் அப்படி இல்லை. இதை இப்படிச் செய்தால் சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொன்னதோடு செய்தும் காட்டினார். 

என் அப்பா வேலை பார்த்த மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் அந்தக் காலம் தொட்டு எழுபதுகளின் கடைசி வரை தச்சுத் தொழில், நெசவுத் தொழில் போன்றவை தக்க ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. விருப்பம் உள்ளவர்கள் தானே படிக்கப் போகிறார்கள்? இதில் தடை சொல்லுவது சரியல்ல என்பதே என் கருத்து.  இது வைத்தியம் முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் பொருந்தும். விவசாயியின் மகன் எனில் நிலங்களை விற்காமல் இருந்தால் அந்த மகன் விவசாயத்திலேயே ஆய்வுகள் மேற்கொண்டு படித்து அதைத் தன் நிலங்களில் செய்து காட்டலாம் இப்போதும் அப்படியான இளைஞர்கள் தென் மாவட்டங்களில் காணக் கிடைப்பார்கள். விவசாயத்திலேயே படிப்பு மேற்கொண்டு ஆய்வுகள் மூலம் தங்கள் நிலங்களை நல்லதொரு விளைச்சலுக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.  என் அப்பாவின் அப்பா நல்லதொரு சித்த/ஆயுர்வேத மருத்துவர். மணி, மந்திர ஔஷதங்கள் தெரியும். பாம்புக்கடி, தேள்கடிக்கு வைத்தியம் தெரியும்.  மஞ்சள் காமாலைக்கு ஊசி மூலம் நோயை மந்திரங்கள் சொல்லி இறக்குவாராம். ஆனால் என் அப்பா.பெரியப்பாக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை சுவடிகள் எல்லாம் எங்கேயோ ஒழிந்து போய்விட்டன. ஓரளவுக்குக் குழந்தை வைத்தியம் மட்டும் எல்லோரும் சொல்வார்கள். மற்றபடி முக்கியமான வைத்திய சம்பந்தமான குறிப்புகள் முற்றிலும் காணாமல் போய்விட்டன.  என் அப்பாவும் இருந்தவரை சுவடிகளையோ பஸ்பங்கள் பண்ணும் முறையையோ பார்த்துத் தெரிந்து கொள்ளாததோடு அவற்றை எல்லாம் பின்னாட்களில் தூக்கியும் போட்டுவிட்டார். ஆங்கில மருத்துவத்தை நாடிய பின்னர் இவை எல்லாம் எதற்கு என்னும் காரணமும் தான். 


இன்னும் இருக்கு! முடிந்தால் சொல்வேன்!

Saturday, June 05, 2021

ஜெயிக்கப் போவது யாரு? வாயுவா? வருணனா?

ஈசானிய மூலையில் நன்கு கறுத்து மேகங்கள் திரண்டிருக்கின்றன. வாயு பகவான் அதைக் கலைக்கப் பார்க்கிறார். அசோகா மரம் முடிந்த வரை வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்ம வீட்டு ஜன்னலில் வந்து மோதுகிறது. முன்னே இந்த வீட்டுக்கு வந்த புதுசில் அதைக் காமிராவில் வீடியோவாக எடுத்துப் போட்டிருந்தேன். அது இப்போது வேலை செய்யவில்லை. மொபைலில் எடுத்தால் சரியாக வருவதில்லை. நேற்றுக்  கொஞ்சம் தொடர்ச்சியாகச் சிறு தூற்றல் விடாமல் இருந்ததால் பூமி கொஞ்சம் குளிர்ந்து விட்டது. ஆகவே எப்போதும் போல் சூடு/வியர்வை இல்லை.  இப்போ மழை வரும் வரும் என பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் காற்றுக் கலைக்கப் பார்க்கிறது. யார் ஜெயிப்பார்கள் எனத் தெரியவில்லை.  வருண பகவான் ஜெயிப்பாரோ எனத் தோன்றுகிறது.

கூடை.காம் என்றொரு தளத்தில் கீரை வகைகள், காய்கறிகள் பசுமையுடன் கொடுப்பதாகவும் வீட்டிற்குக் கொண்டு வருவார்கள் என்றும் விளம்பரம் முகநூலில் பார்த்துவிட்டு அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு நேற்றுக் காய்கள்/கீரை வகைகள் தேவை எனச் சொன்னோம். அவங்க அலுவலகமும் இங்கேயே தான் அம்மாமண்டபம் சாலையில் இருக்காம். ஆனால் காய்கள் எல்லாமே அரைக்கிலோ வாங்கணுமாம். அரசாங்க உத்தரவு என்கிறார்கள். இப்படி எல்லாம் அரசாங்கம் கட்டாயப்படுத்த முடியுமா தெரியலை. எனக்கு அரைக்கிலோ கொத்தவரை நான்கு நாட்களுக்கு வரும். முற்றலாகக் கொடுத்திருக்கிறார்கள். முருங்கைக்கீரை இல்லையாம். முளைக்கீரை வந்தது. மேலேயே வதங்கினாற்போல் இருந்தது. உள்ளேயும் அழுகல் நிறைய. நான் கீரைக்கட்டைப் பிரித்து உதறிவிட்டு ஆய்ந்து புழு, பூச்சி, மற்றக் கீரைகள், புல் போன்றவற்றைப் பார்த்து அகற்றி விட்டே நறுக்குவேன். ஒரு கட்டுக்கீரையில் கழித்தது போகக் கொஞ்சம் தான் இருந்தது. ஆனால் மசித்ததும் சாப்பிடுகையில் ருசியாக இருந்தது.

உருளைக்கிழங்கு/வெங்காயம் ஒரு கிலோ தான் கொடுப்பார்களாம். அரைக்கிலோ சொன்னால் ஒரு கிலோ கொடுத்திருக்கிறார்கள். இனிமேல் அங்கே வாங்குவதில்லை. கடைகள் திறந்ததும் நம்ம வழக்கமான பழமுதிர்ச்சோலையிலேயே வாங்கிக்கலாம்னு முடிவு எடுத்துட்டோம். அங்கே ஐந்து ரூபாய்க்குப் பச்சை மிளகாய், ஐந்து ரூபாய்க்குக் கருகப்பிலை, கொத்துமல்லி கொடுப்பார்கள். அதைத் தவிர நிறையக் கொத்துமல்லி இருந்தால் காய்களுடன் கொசுறுவாகவும் வரும். கால் கிலோ கொத்தவரை, அவரை, பீன்ஸ் வாங்கலாம். கால் கிலோ பாகற்காய் வாங்கிக்கலாம். இங்கே எல்லாம் ஒரு பதினைந்து நாட்களுக்கு வரும்படி கொடுத்துட்டாங்க. இதை வைத்து நான் ஒரு சின்னக் கல்யாணத்துக்கே சமைச்சுடுவேன்! 

ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். முக்கியமாய் எலக்ட்ரிஷியன், மெகானிக்குகள் போன்ற சுயச் சார்புத் தொழிலாளிகள் வேலை செய்யலாம் என்று சொல்லி இருப்பது ஒரு பெரிய நிம்மதி. தெரிந்த ஒரு குடியிருப்பு வளாகத்தில் இரு லிஃப்டுகளும் வீணாகிக் கம்பெனியில் ஏஎம்சி இருப்பதால் கம்பெனி மெகானிக்கைக் கூப்பிட்டும் அவரும் கம்பெனி அடையாள அட்டையோடு வந்தும் போலீஸ் திருப்பி அனுப்பி விட்டது. மத்தியானமா மறுபடி அவர் முயன்றிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் போய் மாலை ஆறுமணி வரை உட்கார்த்தி வைத்துவிட்டார்களாம். பாவம், அதன் பிறகு வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இனி இந்தத் தொந்திரவு இருக்காது. 

குட்டிக்குஞ்சுலுவைப் பார்த்து ஒரு வாரம் ஆகிறது. பையருக்கு வேலையில் மும்முரம். மருமகளுக்குக் குழந்தையைப் பள்ளியில் கொண்டு விட்டால் வீட்டில் வேலைகள் சரியாக இருக்கும். மாலை அவர்தான் போய்க் குழந்தையை அழைத்து வரணும். அதோடு இல்லாமல் நல்ல பால் கிடைக்காமல் குழந்தை ரொம்பவே இளைத்துவிட்டாள். சாமான்கள் வாங்கவும் அவர்கள் போக முடியாது. யாரிடமாவது சொல்லித் தான் வாங்கணும். சில சமயங்கள் சரியாக வரும்/பல சமயங்கள் சரியாக வருவதில்லை. இன்னமும் கப்பலில் அனுப்பிய சாமான்கள் அங்கே போய்ச் சேரவில்லை. விமானத்தில் இவர்களோடு பயணம் செய்த சாமான்களே போன மாதம் தான் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது. இம்மாதிரி ஒரு கடினமான வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்கள். போகப் போகச் சரியாகலாம். இந்தியாவில் இருந்துட்டு வெளிநாடு அம்பேரிக்காவானால் கூடக் கஷ்டமாக இருக்கும். அம்பேரிக்காவில் சுமார் 20 வருடங்களாக இருந்துட்டு இப்போ இந்த ஊர் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. அம்பேரிக்காவில் எல்லாக் காய்களும் கிடைக்கும். முக்கியமாய்க் குழந்தைக்குப் பால்! இவங்களுக்குத் தயிருக்கும் பிரச்னையாய்த் தான் இருக்கு.  குழந்தைக்கும் தயிர் ரொம்பப் பிடிக்கும். இப்படி ஒரு ஊருக்குப் போயிருக்காங்களேனு வருத்தப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?