எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 28, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 5

முந்தைய பதிவில் சொன்ன விறல்மிண்ட நாயனாரின் சரித்திரம் கீழே காணலாம். 

விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். அவருடைய பக்தி அப்போது வீரமாக மாறிவிடும். இவருடைய இந்த வீரத்தின் காரணமாகவே விறல்மிண்டர் என்ற பெயரும் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள். விறல் என்றால் வீரம் என அர்த்தம். அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடித் தொழுது வழிபாடுகள் செய்துவருவார். ஆனால் ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிக்கும் முன்பு, முதலில் ஆலயத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டுவிட்டுப் பின்னரே ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.

அப்போது ஒருநாள் திருவாரூருக்கு வந்திருந்த இவர், அங்கே இருந்த சிவனடியார்களைக்கண்டு மகிழ்ந்து வணங்கி அவர்களைப் போற்றி நின்றார். அவர் வந்த சமயமே சுந்தரமூர்த்தி நாயனாரும், வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாதனைத் தரிசிக்க வந்தார். அடியார்களை மனதால் வணங்கும் பேறு படைத்த சுந்தரர், பக்குவம் மிகுந்திருந்த காரணத்தால் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களைக் கண்டும், அவர் வன்மீகநாதரைத் தரிசிக்கவெனச் சென்றார். அடியார்கள் எவரையும் (விறல்மிண்ட நாயனார் உட்பட) வணங்கவில்லை. ஆனால் விறல்மிண்டருக்கு இது மாபெரும் குற்றமாய்ப் பட்டது. சுந்தரருக்கு அகம்பாவம் மிகுந்துவிட்டது எனவும், அதனால் தான் அடியார்களை மதிக்கவில்லை என்றும் நினைத்துக்கொண்டுவிட்டார். ஏற்கெனவே கோபக்காரர் ஆன விறல்மிண்டருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது.

“முதலில் வணங்கத் தக்க அடியார்கள் தேவாதிதேவர்களுக்கும் மேலானவர்கள். இவர்களை வணங்காமல் இவன் நேரே உள்ளே செல்கின்றானே? இவன் ஒரு வன் தொண்டனோ? அடியார்களுக்குப் புறம்பானவனோ? ஆம், ஆம் இவன் வன் தொண்டனே, அடியார்களுக்குப் புறம்பானவனே. இவன் மட்டுமில்லை, இவனை வலிய வந்து ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனுமே அடியார்களுக்குப் புறம்பானவனாகிவிட்டான்.” என்று கோபத்துடனும், கடுமை தொனிக்கவும் சொன்னார். ஆனால் மனப்பக்குவம் பெற்றிருந்த சுந்தரருக்கோ விறல்மிண்டரின் இந்தச் செய்கையினால் கோபம் வரவில்லை. மாறாக அடியார்களிடம் பக்தி பூண்டிருக்கும் விறல்மிண்டரின் பக்தியை உயர்வாகவும், உன்னதமாகவும் எண்ணி மனம் மகிழ்ந்து பெருமையுற்றார். எம்பெருமானின் சரணங்களில் விழுந்து வணங்கினார். 

"இந்த அடியார்களுக்கு எல்லாம் நான் அடியானாக ஆகும் பேற்றை எனக்குத் தந்தருளவேண்டும்.” என்று ஈசனிடம் வேண்டினார். ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை. திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடிப் புகழும் அந்தப் பதிகங்களைக் கேட்டு விறல்மிண்டரின் மனமும் மகிழ்ந்தது. சுந்தரரின் பக்தி பக்குவமடைந்த பக்தி என்பதையும் புரிந்துகொண்டார்.

விறல்மிண்டரைப் பற்றிய வேறு மாதிரிக் கதையில் சுந்தரரின் மீது கோபம் அடங்காநிலையிலேயே விறல்மிண்டர் திருவாரூரை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருவாரூரை மிதிக்கவே மாட்டேன். அந்த எல்லைக்கு அருகிலே கூட வரமாட்டேன் என்று திட சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார். அவர் அடியார்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து வந்தார். தம் இல்லத்திற்கு வரும் அடியார்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால் அவர்கள் காலைத் துண்டித்துவிடுவாராம். இப்படி ஒரு கொடூரமான காரியத்தைச் சுந்தரர் மேல் கொண்ட கோபத்தினால் செய்து வந்ததாகச் சொல்கின்றனர். இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய ஈசன் சிவனடியாராக வந்து உணவுண்ண அமர்ந்தார். முன்னரே அவரின் ஊரைக் கேட்டு அறிந்த விறல்மிண்டரின் மனைவியார் சிவனடியாரான ஈசனிடம் திருவாரூர் என்ற பெயரைச் சொல்லவேண்டாம் எனக் கூறி இருந்தார். 

ஆனால் ஈசன் தாம் பார்த்துக்கொள்வதாகவும் விறல்மிண்டரின் கொடுவாளை வலப்பக்கமே அது வரை வைத்திருந்ததை அன்று மட்டும் இடப்பக்கம் வைக்குமாறும் மற்றதைத் தாம் பார்த்துக்கொள்வதாயும் சொல்லிவிடுகிறார். உணவுண்ண அமரும்போது தாம் திருவாரூரைச் சேர்ந்தவன் என சிவனடியாரான ஈசன் கூற, கோபம் கொண்ட விறல்மிண்டர் வலப்பக்கம் கை வாளை எடுக்கச் சென்றது. அங்கே வாள் இல்லாமல் தேட மனைவி இடப்பக்கம் வைத்திருப்பதைக் காட்ட அதை எடுப்பதற்குள் சிவனடியாரான ஈசன் எழுந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் அவரைத் துரத்தின விறல்மிண்டரைத் திருவாரூர்க்குள்ளேயே இழுத்துவிட்டார் ஈசன். பின்னர் சிரித்துக் கொண்டே ”இது திருவாரூர், நீர் உள்ளே வந்துவிட்டீரே?” என்று வினவ, அதிர்ச்சி அடைந்து சுற்றும் முற்றும் பார்த்த விறல்மிண்டர் தம் காலைத் தாமே துண்டித்துக்கொள்கிறார். அவரைத் தேற்றிய ஈசன் தம் சுய உருவைக் காட்டுகிறார். சுந்தரரின் பக்தியைப் பற்றியும் அவரை உணரச் செய்த ஈசன் அவருக்கு முக்தி கொடுத்து அருளிச் செய்கிறார்  கயிலையிலே சிவகணங்களுக்குத் தலைவனாகும் பேறும் பெறுகின்றார்.

********************************************************************************


அசலேஸ்வரர் கோயில்/திருவாரூர்/இளங்கோயில்

நடுவில் அந்தப் பதிவுகளில் நாயன்மாரின் சரித்திரமும் இடம் பெற நேர்ந்திருக்கிறது. அதைத் தான் மேலே பார்க்கிறீர்கள். அடுத்துத் திருவாரூரின் விட்ட கதை தொட்ட கதை வரும். இங்கே நான் டிஃபன் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிட்டுப் படுத்துக்கவும், அவர் சுமார் ஒன்பதரைக்குக் கோயிலுக்குக் கிளம்பிப் போயிட்டார். அரைகுறை நினைவு எனக்கு. தூக்கமா/மயக்கமானு புரியாத நிலை. திடீரென மருந்துகள் சாப்பிடாதது நினைவில் வரவே எழுந்து மாத்திரைகளைத் தேடி எடுத்துக் கொண்டு ஶ்ரீரங்கத்தில் இருந்து எனக்கெனப் பிரத்யேகமாய்க் கொண்டு போயிருந்த தண்ணீரைக் குடித்து மாத்திரைகள் போட்டுக் கொண்டது தான் தெரியும். அடுத்த அரை மணி நேரத்துக்கு நிலைகொள்ளாமல் வயிற்றுப் போக்கு! என்ன செய்யறதுனு புரியலை. அதற்கென மருந்து கை வசம் இருந்தாலும் அதைப் போட்டுக்கொள்ளலாமா வேண்டாமா என யோசனை. அப்படியே படுத்துக் கிடந்தேன். மணியோ நகரவே இல்லை.  நாலைந்து தரம் போனப்புறம் வயிற்றில் உள்ளவை எல்லாம் வெளியே வந்துடுத்து போல. கொஞ்சம் குறைந்தது. 

வயிற்றைச் சுற்றித் துண்டைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டே இருந்தேன். அலைபேசி அழைக்கவே எடுத்துப் பேசினால் குருக்கள் தான். மாமா ரூமுக்கு வந்துட்டாரானு கேட்கவே எனக்குத் திகைப்பு. இல்லையே என்றேன். உடனே அவரே சரி, சாப்பாடு வாங்கப் போயிருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார். கவலைப்படாதீங்கோ. அபிஷேஹங்கள் எல்லாம் நல்லபடி முடிந்தது என்று சொல்லிவிட்டுத் தான் இன்னும் சற்று நேரத்தில் பிரசாதங்களுடன் அங்கே ரூமுக்கு வருவதாகவும் தெரிவித்தார். சரினு எழுந்து கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டேன். வயிற்றுப் போக்கு குறைந்திருந்தாலும் வலி இருந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் நம்ம ரங்க்ஸும் வந்துவிட்டார். ஒரே ஒரு பாக்கெட் தயிர்சாதம் மட்டும் வாங்கி வந்திருந்தார். என்ன ஆச்சுனு நான் கேட்கவே  குருக்கள் பிரசாதங்களாகப் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம் எல்லாம் கொண்டு வருவதால் ஒருவேளை தயிர்சாதம் அதிகம் தேவைப்பட்டால் இருக்கட்டும்னு வாங்கினதாகச் சொன்னார்.

அபிஷேஹம் எல்லாம் நல்லபடி முடிந்ததா எனக் கேட்டதும் அபிஷேஹம் நல்லபடியாக சிரத்தையுடன் குருக்கள் செய்து கொடுத்தார். அம்பத்தூரில் நமக்கு எதிர்சாரி வீட்டில் இருப்பவர்கள்(இப்போவும் இருக்காங்க) அவங்க அப்பாவுடன் வந்திருந்தார். அவரும் அபிஷேஹங்கள் தான் செய்தார். உன்னை ரொம்ப விசாரித்தார் என்று சொல்லிவிட்டு கோயில் அலுவலகத்தில் அபிஷேஹப் பொருட்கள் எதுவும் சரிவரக் கொடுக்கவே இல்லைனு வருந்தினார். அன்று எங்களையும் சேர்த்து 3 பேர் அபிஷேஹம் செய்திருக்காங்க. ஒருத்தருக்கு அபிஷேஹப் பொருட்களுக்கு 1500 ரூபாயோ என்னமோ வாங்கி இருக்காங்க. ஆனால் கொடுத்தது ஒரு சின்னச் சொம்பில் பால் மட்டும். சின்னப் பொட்டலம் சந்தனம். ஒரே ஒரு பொட்டலம் மஞ்சள் பொடி. மற்றபடி தயிர், நெய்யெல்லாம் இல்லை. பஞ்சாமிர்தமோ பஞ்சாமிர்தம் செய்யப் பழங்களோ கொடுக்கலை. மாலை பூவெல்லாம் கூடச் சரியாக் கொடுக்கலையாம். நல்லவேளையாக அம்மனுக்குச் சார்த்தப் புடைவை, ருண விமோசனருக்கு வேஷ்டி எல்லாம் குருக்களே வாங்கி இருக்கார். 3 ஸ்வாமிக்கு அபிஷேஹங்கள் செய்ய மொத்தமாகக் கொடுத்ததே மேலே சொன்னது தானாம். குருக்கள் தனியாகப் பால், தயிர் வாங்கி வைச்சிருந்ததால் ஏதோ ஒப்பேத்தி  இருக்கார்.  அர்ச்சனைக்குதட்டு மாலையுடன்,  வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் மூன்று சந்நிதிகளுக்கும் ஒருத்தருக்கு 3 வீதம் 3பேர்களுக்கும் சேர்த்து மொத்தம்  ஒன்பது கொடுக்கணும். ஆனால் அவங்க கொடுத்ததோ ஒரு சந்நிதிக்கு ஒன்று தான். நான் மட்டும் கோயிலுக்குப் போயிருந்தால் நிச்சயம் அறமற்ற நிலையத்துறை அலுவலகத்தில் போய்ச் சண்டையே போட்டிருப்பேன். தியாகேசர் வம்பு வேண்டாம்னு என்னை ஓட்டல் அறையிலேயே இருக்கும்படி பண்ணிட்டார். :(

Sunday, June 26, 2022

என்னென்னவோ எண்ணங்கள்!

 வேலையில் அவ்வப்போது  சுணக்கம் ஏற்படுகிறது. முன்னெல்லாம் ஆரம்பித்தால் சுறுசுறுப்பாக வேலை முடியும் வரை ஓய மாட்டேன். இப்போ முடியறதில்லை. கோயில்கள் எங்கேயும் போக முடியாத காரணத்தால் பழைய பதிவுகளை மேய்ந்து கொண்டிருக்கேன். குறிப்பாகச்   சாப்பாடு பற்றி எழுதுவது என்றால் தனியாக ஒரு ப்ளாக் வேண்டும் என்றே தனியாக ஆரம்பிச்சேன். அங்கேயும்  இப்போக் கொஞ்ச மாசங்களாக எதுவும் எழுதவில்லை. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பார்கள். அதில் நாங்களோ நிஜமாகச் சாப்பாட்டில்  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ருசித்திருக்கிறோம்.

பஞ்சாபின் பைங்கன் பர்த்தா, ருமாலி ரோட்டி, பாஜ்ரா ரொட்டி, சர்சோ கா சாக், காஷ்மீரின் பாசுமதி அரிசியுடன் சேர்ந்த ராஜ்மா, உத்தராஞ்சலில் சாப்பிட்ட தவா ரோட்டி, பத்ரியில் சாப்பிட்ட இட்லி, சாம்பார், உத்தரப் பிரதேசக் காசியில் சாப்பிட்டத் தென்னிந்தியப் பாரம்பரிய உணவு, ராஜஸ்தானின் சூர்மா மற்றும் தால் பாட்டி, ராஜஸ்தான், நசிராபாத்தின் special உணவான கச்சோடா மற்றும் ஜிலேபி(இது உளுத்தம்பருப்பினால் செய்யப்படும் ஜாங்கிரி அல்ல), அங்கு கிடைக்கும் சாக்லேட் எனப்படும் மில்க் ஸ்வீட், அஜ்மேர் மதார்கேட்டில் கிடக்கும் ஆலு சாப்ஸ் மற்றும் தயிர் வடை, மஹாராஷ்டிராவின் பாசந்தி மற்றும் சாபுதானா கிச்சடி, கத்திரிக்காய் சாதம், மும்பையின் ஜூஹூ பீச்சின் பேல் புரி , பிஹாரில் சாப்பிட்டது, கல்கத்தாவின் மாவா லட்டு, மோதி சூர் லட்டு, சந்தேஷ், ரஸ்குல்லா, அஜ்மேர் புஷ்கரில் மட்டும் கிடைக்கும் மால்புவா எனப்படும் மில்க் ஸ்வீட், 

காரசாரமான சமோசா, கர்நாடக உணவு தித்திக்கும் சாம்பார், கொத்துமல்லிச் சட்டினி, எம்டிஆரின் ரவா இட்லி, "பெண்"களூரின் சுவையான காஃபி, ஆந்திராவின் ஊறுகாய் மற்றும் வடை, கோங்குரா கீரையின் துவையல், குழம்பு, கேரளாவின் குழாய்ப்புட்டு, கடலக்கறி, பாலக்காட்டுப் பாயச வகைகள், திருப்பதி/திருமலையின் லட்டு அதைத் தவிர இருக்கவே இருக்கிறது நம் தமிழ் நாட்டு உணவு.

இத்தனையும் நான் ஒருத்தி மட்டும் சாப்பிட்டேன் என்று நினைக்காதீர்கள். போதாக்குறைக்கு குஜராத்தின் டோக்ளாவை விட்டு விட்டேன். அங்கிருந்து சண்டை போடுகிறார்கள். 5,6 வருடம் எங்கள் ஊரில் இருந்து விட்டு நன்றி மறந்தாயே என்று. இன்னும் இருக்கிறது. எழுத.கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். என்ன ஒரு கஷ்டம் என்றால் இப்படி வித விதமாகச் சாப்பிட்டதால் ஒரிஜினல் டேஸ்ட்டே மறந்து விட்டது. போதாக்குறைக்கு போன வருஷம் யு.எஸ்ஸில் சாப்பிட்ட Starbucks Latte எனப்படும் காபி, Mac-Donaldன் Chocklate drink என்று எத்தனையோ இருக்கிறது. அங்கே உ.கி.யில் ப்ரெஞ்ச் ஃப்ரை, மக்டொனால்டில் நன்றாக இருக்கும். அதே போல் லேஸ் சிப்ஸ் அங்கே காற்றில்லாமல் வறுவல்கள் நிரம்பிய பாக்கெட்டாகக் கிடைக்கும். இன்னும் மெக்ஸிகோவின் கோதுமை மாவில் செய்யப்பட்ட டார்ட்டில்லா, 


அரபு நாடுகளின் ஃபலாஃபல், என்று பல வகைகள். 

படங்களுக்கு நன்றி கூகிளார்

அதிலிருந்து நான் தேடிக் கண்டு கொண்டது எல்லாம் நம்ம ஊரு ரசம் சாதம், அப்பளம் இரண்டையும் மிஞ்ச எதுவும் கிடையாது என்பது தான்.காயோ, கனியோ, பூவோ, பழமோ இந்தியாவின் சுவையை மிஞ்ச எதுவும் இல்லை. என்னதான் வெளிநாட்டுப் பழங்கள் பார்க்கக் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவாய் இருந்தாலும் சுவையில் நம்ம இந்தியப் பழங்களையோ, காய்கறிகளையோ மிஞ்ச எதுவும் இல்லை. இப்போ என்னடாவெனில் கொஞ்ச நாட்களாக எதுவுமே சரியாகச் சாப்பிட முடியலை. பசி, ருசி எல்லாம் என்னமோ இருக்கு. ஆனால் சாப்பாடு சரியா இறங்கறதில்லை.  சாப்பிடணும்னு ஆர்வமும் இல்லை. இதுவும் கொஞ்ச நாட்கள் ஓடும்/ ஓடட்டும். தானே சரியாகட்டும்.  அதுவும் இப்போல்லாம் ஓட்டல்களிலோ, கேடரிங்கிலோ கொடுக்கும் சாப்பாடு சகிக்க முடியலை.எல்லா ஓட்டல்காரங்களும் பேசி வைச்சுண்டு தேங்காய்ச் சட்னியில் பூண்டையும், சாம்பாரில் சோம்பையும்/ஜீரகத்தையும் சேர்க்கின்றனர். அது ஏதோ மசாலா உணவின் வாசனையையே கொடுக்கிறது. நம் தமிழக/தென்னகத்தின் பாரம்பரியச் சுவை என்பது உணவில் இப்போது சுத்தமாக இல்லை. உணவு தான் இப்படின்னா குடும்பம் என்பது நிலையாக இருக்க வேண்டிச் செய்யப்படும் திருமணங்களின் கதியை நினைத்தால் இன்னமும் கலக்கமாகவே இருக்கிறது.

கல்யாணங்களிலும். வைதிகம் என்பது பெயருக்குத் தான். அது தான் முக்கியம் எனத் தெரியாமல் ஏதோ சம்பிரதாயம் என்னும் அளவிலேயே பார்க்கப்படுகிறது. தமிழ்த்தாத்தா உ.வே.சா. தன்னுடைய கல்யாணம் நடந்த விதத்தை விவரித்திருப்பதைப் பார்த்தால் அந்தக் காலங்களில் வைதிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதும், திருமணத்தன்று காலை ஆகாரமாகப் பழைய சாதம் கூட வற்றல், வடாங்களோடு போட்டிருப்பதையும் அதையும் வயதில் சிறியவர்களே சாப்பிட்டார்கள் என்பதும் மற்றவர்கள் திருமணச் சடங்குகள் முக்கியமானவை முடிந்த பின்னரே பனிரண்டு மணி அளவில் உணவுக்கு உட்காருவார்கள் என்றும் சொல்லி இருப்பார். ஆனால் இப்போதோ! வகை வகையாக டிஃபன் வகைகள்.

முன்னெல்லாம் வெறும் இட்லி, சாம்பார் தான் கல்யாணங்களில் இடம் பெறும். முதல் நாள் விரதத்தன்று அநேகமாக டிஃபனே இருக்காது. இருந்தாலும் உப்புமா, பொங்கல் என்றே போடுவார்கள். மாலை மாப்பிள்ளை அழைப்பு டிஃபன் தான் கொஞ்சம் பலமாக இருக்கும். அதுவும் சிலர் பாரம்பரியத்தை விடாமல் பஜ்ஜி, சொஜ்ஜியே போடுவார்கள். கல்யாணத்தன்று காலை ஒரு கேசரியும், இட்லி சாம்பாருமே போடுவாங்க. ஆனால் இப்போவெல்லாம் முதலில் ஸ்வீட்டாக அசோகா அல்வா, கோதுமை அல்வா குல்கந்து எனப் போடுகிறார்கள். இட்லி, சாம்பார், சட்னி, பொங்கல், வடை, அல்லது போண்டா, பூரி கிழங்கு அல்லது தோசை கிழங்கு சின்ன ஊத்தப்பம் என வகை வகையாகப் போட்டுப் பசியை அடைத்து விடுகின்றனர். எல்லோராலும் இத்தனையையும் சாப்பிட முடியாது. மத்தியானச் சாப்பாடு அதை விடவும் அதிகமான உணவு வகைகளுடன் இருக்கும். பால் பாயசம், பச்சடி, ஸ்வீட் பச்சடி, இருவகைக் கோசுமலிகள், ஒரு தேங்காய் போட்ட கறி, பருப்பு உசிலி அல்லது காரக்கறி, ஒரு பொரிச்ச கூட்டு, அவியல் கட்டாயமாய், வறுவல், வடை, இரண்டு ஸ்வீட், அப்பளம், ஊறுகாய் சாம்பார், ரசம், மோர், கலந்த சாதம் ஒன்று. அநேகமாகப் புளியோதரை.  இத்தனையும் யாரால் சாப்பிட முடிகிறது?

அதைவிடக்  கல்யாணத்துக்கு முதல் நாளே வைக்கும் ரிசப்ஷனில் மெஹந்தியும், சங்கீத்தும், ஃபோட்டோ செஷனுமே முக்கியத்துவம் பெறுகின்றன. எல்லாமே ஆடம்பரமாகி விட்டது. அந்த ரிசப்ஷன் சாப்பாடு அநேகமாக பஃபே முறையில் தான் போடுகிறார்கள். இதை வயதானவர்களால் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு நின்று கொண்டே சாப்பிடுவது கஷ்டமாக உணர்கின்றனர். ஆங்காங்கே டேபிள், நாற்காலி இருந்தாலும் சிறியவர்கள் உட்கார்ந்திருந்தால் எழுந்து முதியவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. இது தான் இப்படி என்றால் மறு நாள் நடைபெறும் திருமணத்திலோ முற்றிலும் ஆடமரம் தான் இடம் பெறும்.  உணவு என்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் (அதைவிடவும்) திருமண பந்தம் என்பது ஓர் கோலாகலமான ஆடம்பர நிகழ்ச்சியாக மாறி இருக்கு. ஆழமான அர்த்தங்கள் கொண்ட மந்திரங்களைப் புரிந்து கொள்வாரும் இல்லை. அதை எடுத்துச் சொல்லுவாரும் இல்லை. ஏதோ இப்போக் கொஞ்ச வருடங்களாக மாங்கல்ய தாரணம் ஆகும்போது மட்டும் அறிவிப்புச் செய்கிறார்கள். இது அல்ல திருமணம் என்பது. சப்தபதி முடிந்தாலே திருமணம். ஆகவே பெண்/பிள்ளைக்குப் பரிசுகள் கொடுப்பதோ, கை குலுக்குவதோ வாழ்த்துச் சொல்லுவதோ சப்தபதிக்குப் பின்னர் பெண்ணையும்/பிள்ளையையும் தனியாக உட்கார்த்தி வைப்போம். அப்போ வந்து பரிசைக் கொடுத்துக் கைகுலுக்குங்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால் அதுவரை காத்திருப்போர் வயது முதிர்ந்தோர் மட்டுமே. மற்றவர்கள் அறிவிப்பை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதால் விட்டுவிட்டுக் கைகுலுக்கிப் பரிசைக் கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த சப்தபதி என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. திருமணத்தின் முக்கியமான ஊஞ்சல், மாலை மாற்றுதல், காசி யாத்திரை, தாரை வார்த்தல், அக்னிமூட்டித் திருமங்கல்ய தாரணம், சகோதரன் பொரி இடுதல், சப்தபதி, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்றவை அனைத்துத் தரப்பினரின் கல்யாணங்களிலும் தவறாது இடம் பெறுபவை. இவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு பெற்றோராவது தங்கள் பெண்/பிள்ளைகளிடம் சொல்லணும். ஆனால் பெற்றோருக்கே தெரியலைனால் என்ன செய்யமுடியும்? மொத்தத்தில் எல்லா விஷயங்களிலும் ஆடம்பரமும், பகட்டும் மட்டுமே நிறைந்து  உள்ளார்ந்த ஒருமித்த மனப்பான்மையோ, ஈடுபாடோ இல்லாமல் வெறும் சடங்காக ஆகிவிட்டது சமையல்/சாப்பாடு மட்டுமில்லாமல் திருமணங்களும். இப்போது நம் பாரம்பரியத்தைக் கைவிட்டுவிட்டுக் கலந்து கட்டிக் கான்டினென்டல் விழாவாக மாறி வருகிறது. 

Wednesday, June 22, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி நான்கு!

 //திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா

 ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி 

விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்

 இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.// 

திருவாரூர்த் தலபுராணத்தில் மேற்கண்ட பாடல் காணப்படுகிறது. இந்த நகரில் ஏழடி நடந்தாலே காசிக்கு ஒப்பாகும் என்கின்றது. ஏழு கோபுரங்கள், ஐந்து ப்ராஹாரங்கள், பனிரண்டு மண்டபங்கள், தீர்த்தங்கள், நூற்றுக்கணக்கான சந்நிதிகள் என அனைத்தும் உள்ள பெரிய கோயிலாகும் இது. நிதானமாய்ப் பார்த்தால் காலை ஆறு மணிக்குப் போனால் பனிரண்டு மணி வரையிலும் நேரம் சரியாய் இருக்கும். செங்கல் திருப்பணியில் இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றிய பெருமை செம்பியன்மாதேவிக்கு உண்டு. இந்தக் கோயில் பிராஹாரத்திலேயே தனிக் கோயிலாக ஆரூர் அறநெறி என்னும் கோயிலும் அமைந்துள்ளது. இதை இளங்கோயில் என்கின்றனர்.  திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இந்தக் கோயிலையும் செம்பியன் மாதேவி அவர்களே திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தின் வரலாறு தனியானதொரு கதையாகும்.

பார்ப்பதற்குத் தஞ்சைக் கோயிலின் சிறிய மாதிரிக் கோயில் மாதிரி இருந்தாலும், இது அதற்கும் முன்னே கட்டப்பட்ட கோயில் என்கின்றனர். திருவாரூருக்குத் தெற்கே திருநெய்ப்பேர் என்னும் ஊரில் அவதரித்த நமிநந்தி அடிகள் என்பார் சிவ வழிபாட்டில் மிகச் சிறந்து விளங்கி வந்தார். நாள் தோறும் திருஆரூரில் ஆரூர் அரநெறி அசலேசசுவரருக்கு திருவிளக்கேற்றித் திருப்பணி புரிந்து வந்தார். ஒருநாள் மழைக்காலத்தில் விளக்கேற்ற நெய் தேடி நெடுந்தூரம் செல்லவேண்டி முடியாமல் போகவே பக்கத்து வீடுகளில் கேட்க, சமணர்களான அவர்கள் நமிநந்தி அடிகளையும் ஐயனையும் கேலி செய்ததோடு அல்லாமல், “உம் ஈசன் தான் கையிலேயே நெருப்பை வைத்திருப்பானே? அவனுக்கு எதற்குத் தனியாக விளக்கு?” என்று கேட்டனர். நமிநந்திஅடிகள் நொந்து போன மனதோடு திரும்பக் கோயிலுக்கு வந்து ஈசனை வேண்டி அழுது, அரற்ற, குளத்து நீரை முகந்து வந்து விளக்கிலிட்டு தீபம் ஏற்றுமாறு திருவருள் கூற, அவ்வாறே கமலாலயத்து நீரை எடுத்து வந்து விளக்குகளில் விட்டு ஏற்றினார்.

என்ன ஆச்சரியம் விட்ட நீரெல்லாம் நெய்யாக மாறி விளக்குகள் ஆயிரம் கோடி சூரியனைப் போல் பிரகாசித்தன. அவரின் புகழையும், பக்தியையும் கூறும் கோயில் இந்த ஆரூர் அரநெறிக்கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு அசலேசுவரர் எனப் பெயர். தனி நந்தி, தனிக்கொடிமரம், தனி பலிபீடம் என அனைத்தும் தனியாக அமைந்த தனிக்கோயில் இது. இங்கே அக்னிஸ்தம்பமும், கையில் அழலேந்தி ஆடும் நடராஜர் சந்நிதியும் சிறப்பு. இங்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த செருத்துணை நாயனார் என்பவர்  சிவனுக்குச் செய்யும் அவமரியாதையைப் பொறுக்கமாட்டாதவராம். இந்தக் கோயிலுக்குப் பல்லவர்கோன் கழற்சிங்கனும், அவர் மனைவியான சங்கவையும் அசலேசுவரரைத் தரிசிக்க வந்தனர். பிராஹாரத்தில் செருத்துணை நாயனால் ஈசனுக்காக “திருப்பள்ளித் தாமம்” என்னும் மாலை கட்டிக் கொண்டிருந்தார். அங்கே வந்த அரசி, கீழே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்துமுகர்ந்து பார்க்க, மனம் பொறுக்காத செருத்துணை நாயனார் அரசியின் மூக்கை அரிந்துவிடுகிறார். அரச கோபத்துக்கு ஆளாகிவிட்டாரே என அனைவரும் கதிகலங்கி நிற்க, கழற்சிங்க அரசனோ, செருத்துணை நாயனார் செய்தது சரியே எனச் சொல்லி, பூவை முகர்ந்த மூக்கை மட்டும் அரிந்தால் போதுமா, எடுத்த கையையும் வெட்டவேண்டும் என்று சொல்லிக் கையையும் வெட்ட, அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். 

ஆனால் ஈசனோ அவர்கள் பக்தியின் திறத்துக்கு வைத்த சோதனை எனச் சொல்லி, அரசியின் மூக்கையும், கையையும் சரிசெய்து முன்போல் ஊனமற்றவளாக்கி விடுகிறார். இந்த லிங்கத்தை இங்கே ஸ்தாபித்தது நானூறு ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டது  சமத்காரன் என்னும் அரசன் என்கின்றனர். சமத்காரன் ஈசனைத் தான் தவமிருந்து ஸ்தாபித்து வழிபடும் இந்தத் தலத்து லிங்கத் திருமேனியில் ஈசனின் ஜீவசக்தியோடு எழுந்தருளவேண்டும் என வேண்ட அவ்வண்ணமே ஈசன் எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. அன்னையின் பெயர் வண்டார்குழலி அம்மை. இந்தக் கோயில் விமானத்தின் நிழல் கிழக்குத் திசையில் மட்டுமே விழும் என்றும் சொல்கின்றனர். முசுகுந்தனுக்குத் தியாகேசரைக் கொடுத்த தேவேந்திரன் ஈசனிடமே மீண்டும் தேவருலகு வருமாறு வேண்ட, அவரோ, கிழக்குக் கோபுர வாயிலில் காத்திருக்குமாறு சொல்கின்றார். அவ்வழியே ஈசன் வரும்போது அழைத்துச் செல்லலாம் என்று காத்திருக்கின்றானாம். ஆனால் ஈசனோ, “விட்டவாசல்” என அழைக்கப் படும் வேறொரு வாயில் வழியே வெளியே சென்று, இங்கே காத்திருக்கும் தேவேந்திரனைப்பல யுகங்களாய்க் காத்திருக்க வைத்திருக்கிறார். 

இந்த ராஜ கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் பிள்ளையார். வீதிவிடங்க விநாயகர் என்ற பெயரில் காட்சி கொடுக்கிறார். பிள்ளையாருக்குப் பின்னே நந்தி! இங்கே பிரம்மநந்தி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். மழை வேண்டுமென்றால் சுற்றிலும் சுவர் எழுப்பி நீரை நிரப்பி வேண்டிக்கொண்டால் மழை கொட்டித் தீர்க்கும் என்கின்றார்கள். பசுக்கள் பால் கறப்பதற்கும் இந்த பிரம்ம நந்திக்கு அருகு சார்த்தி அதையே பிரசாதமாக எடுத்துச் சென்று பசுக்களுக்குக் கொடுக்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் மொட்டைத் தூண்கள் காட்சி அளிக்கும். இருநூறிலிருந்து ஐநூறு இருக்கலாமோ?? இந்தத் தூண்களின் மேல் பெரிய பந்தல்களாகப் போட்டுக் கூரை வேய்ந்து திருவிழாக்காலங்களில் தியாகேசரை எழுந்தருளச் செய்யும் மண்டபமாக மாற்றுவார்களாம். அதனால் மொட்டைத் தூண்களாகவே பல நூற்றாண்டுகளாய் இருக்கின்றன என்று கேள்வி.  அடுத்து நாம் காண்பது தேவாஸ்ரய மண்டபம் அல்லது தேவாசிரிய மண்டபம். இந்த மண்டபத்திற்கு ஆயிரக்கால் மண்டபம் என்றும் சொல்லலாம். இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களுமே சிவனடியார்கள் என்றும், இவர்களை வணங்காமல் போனால் அடியார் கூட்டத்திலிருந்தே விலக்கப் படுவார்கள் என்றும் ஐதீகம். இதைத் தான் விறன் மிண்டர் சுந்தரருக்குச் செய்து காட்டினார். அது நாளை பார்ப்போமா?????

***********************************************************************************

2010 ஆம் ஆண்டில் சென்றபோது எழுதியவை மேலே உள்ள தகவல்கள் இம்முறை இவ்வளவெல்லாம் சுத்த முடியலை. எங்கே! தியாகேசரையும், கமலாம்பிகையையும் தரிசனம் செய்தாலே பெரிய விஷயம் என்று ஆகி விட்டதே! ஆனால் இந்த இடங்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கின்றன. மாறுதல் ஏதும் இல்லை. கோயிலின் பிரம்மாண்டத்தினாலோ என்னமோ பராமரிப்பு என்பது மிகக் குறைவு. நாங்கள் மெதுவாக நவகிரஹங்கள், ரௌத்ர துர்கை, ருண விமோசனர் ஆகியோரைப் பார்த்துக் கொண்டு விரைவாகச் செல்லும் வழியிலேயே கமலாம்பிகை சந்நிதிக்குச் சென்றோம். செல்லும் வழியிலேயே உச்சிஷ்ட கணபதி வரவேற்க அவருக்கு அர்ச்சனையை முடித்துக் கொண்டோம். உள்ளே கமலாம்பிகை சந்நிதியில் உள்ள குருக்கள் தான் அங்கே அர்ச்சனை செய்வார் என்பதால் வாகீச குருக்கள் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் அடங்கிய பையை எங்களிடம் கொடுத்துவிட்டு அங்கே போய் அர்ச்சனை செய்து கொண்டு குருக்களுக்கு மறக்காமல் தக்ஷிணை கொடுக்கும்படியும் சொன்னார். மேலும் எங்களை அங்கிருந்து வடக்கு வாசல் கிட்டக்க என்பதால் அப்படியே அறைக்குச் சென்று காலை ஆகாரம் சாப்பிட்டுச் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு திரும்ப ஒன்பதரை/பத்து மணி அளவில் வந்தால் அபிஷேஹம் செய்து கொண்டு பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு போகலாம் என்று சொன்னார்.

சரினு நாங்க கமலாம்பிகை சந்நிதிக்குச் சென்று அங்கே அர்ச்சனையை முடித்துக் கொண்டோம். ஒரே வெப்பமான சூழ்நிலை. அம்பிகையின் தவத்தாலா? என்னனு புரியலை. அதே தியாகேசர் சந்நிதி குளிர்ந்து இருந்தது. அங்கே அர்ச்சனையை முடித்துக் கொண்டோம். 


பின்னர் மெதுவாக அங்கிருந்து வடக்கு வாசலுக்கு வந்தால்! ஆஹா! மறுபடி மலை ஏறணுமே! ரொம்பக் கஷ்டப்பட்டு என்னை ஒவ்வொரு படியாக மேலே ஏற்றினார். அக்கம்பக்கம் யாருமே அந்தக் காலை வேளையின் தென்படவில்லை. அவர் படியில் என்னை ஏற்ற என் உடம்போ அப்படியே மல்லாக்கக் கீழே விழும்போல் சாய்கிறது. எப்படியோ சமாளித்துக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாலும் கடைசிப் படி உச்சியில் சுமார் இரண்டடி உயரத்தில் இருந்தது. அதில் ஏறினால் திட்டி வாசல் வழியே வெளியே போயிடலாம். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கூடவே மூச்சையும் பிடித்துக்கொண்டு அந்தப் படியில் ஏறி நடுவில் காலை வைத்தேன். ஓரத்தில் வைத்தால் அப்படியே விழுந்துட்டால் என்ன பண்ணுவது? 

மெதுவாகத் தியாகேசர்/கமலாம்பிகை அருளால் வெளியே வந்துட்டோம். என்னிடம் அபிஷேஹத்துக்கு வருவியானு அவர் கேட்டதுக்கு நான் முறைத்த முறைப்பிலேயே அவர் அரண்டு போயிருப்பார். ஹிஹிஹி, அங்கே சாலையின் முக்கில் ஒரு தேநீர்க்கடையைப் பார்க்க அங்கே ஏதாவது குடிச்சுட்டுப் போகலாம்னு நான் சொன்னேன். கண்ணெல்லாம் பூச்சி பறக்கிறது. முதல் நாள் இரவு பேருக்குத் தானே சாப்பிட்டது. நடை தள்ளாடியது. மெல்ல அந்தக் கடைக்கு வந்து குடிக்க என்ன இருக்குனு கேட்டதும் காஃபி, தேநீர், பால் என்றார். இரண்டு காஃபிக்குச் சொல்லிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு அவருக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டேன். காஃபி வரவே அதைக் குடிச்சுட்டு மெதுவாக அங்கிருந்து கூப்பிடு தூரத்திலேயே இருந்த ஓட்டலுக்குப் போய் அறையில் கதவைத் திறந்து படுக்கையில் விழுந்தேன். நம்ம ரங்க்ஸ் டிஃபன் வாங்கி வரேன்னு சொல்லிட்டுப் போனார். நீங்க சாப்பிட்டுட்டு வாங்குங்கனு சொன்னால் வேண்டாம்னு சொல்லிட்டார். அரை மணியில் டிஃப்ன் வர அதே பூண்டு போட்ட தேங்காய்ச் சட்னி! இட்லியை மட்டும் பிய்த்து விழுங்கி விட்டு மறுபடி வாங்கி வந்த காஃபியைக் குடிச்சுட்டுப் படுத்து விட்டேன். சுமார் ஒன்பதரை பத்துக்கு ரங்க்ஸ் மட்டும் கோயிலுக்குக் கிளம்பினார். அது கூடத் தெரியாமல் என்னையும் அறியாமல் கண்ணசந்திருக்கேன். 

Thursday, June 16, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 3

முதலில் இந்தக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா?? பலருக்கும் தெரிந்த கதையாகவே இருந்தாலும் நினைவு படுத்துக்கொள்ளலாமே?? திருமால் எந்நேரமும் தன் மனமாகிய தாமரையில் ஈசனை இருத்திப் பூஜித்து வந்தார். ஈசனைத் தனியாகப் பூஜிக்கவில்லை. கூடவே அன்னையையும், அவர்கள் அம்சமான சிவகுமாரனையும் சேர்த்தே வழிபட்டு வந்தார். பூசலார் நாயனார் தன் நெஞ்சிலே ஈசனுக்குக் கோயில் கட்டியதற்கு இப்போத் திருமாலே முன்னோடி எனலாம். தன் மனதுக்குள்ளாகவே நெஞ்சே கோயிலாக சோமாஸ்கந்தரை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடலானார் காக்கும் கடவுளான விஷ்ணு. இந்நிலையில் தேவேந்திரனுக்கு வழக்கம்போல் துன்பம் வந்திட சிவ வழிபாடு சிறந்தது என நினைத்து அவன் திருமாலிடம் வழிபடும் விதம் கேட்டான். தன் நெஞ்சிலே வைத்துப் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரை அவனிடம் கொடுத்து அந்தத் தியாகேசரை வழிபடச் சொன்னார் திருமால்.

 தேவேந்திரனும் முறைப்படி வழிபட்டு வந்தான். அசுரர்கள் தொல்லை தாங்கவில்லை. இந்திரலோகத்தை வலன் என்னும் அசுரன் தாக்கிக் கடும்போர் புரிந்தான். பூவுலகில் அப்போது முசுகுந்தன் என்னும் சக்கரவர்த்தியின் ஆட்சி நடந்து வந்தது. முன் பிறவியில் ஒரு குரங்காய்ப் பிறந்திருந்த அவன், சிவ பூஜை செய்து வந்ததன் பலனாக இப்பிறவியில் மன்னனாய்ப் பிறந்து ஆண்டு வந்தான். ஆயினும் முன்பிறவியில் கேட்டிருந்த வரத்தின்பலனாகத் தன் முன்பிறவியை மறவா வண்ணம் அதே குரங்கு முகத்தோடேயே பிறந்திருந்தான். இந்திரனுக்கு நெருங்கிய நண்பனாகவும் இருந்தான். இப்போது  தன் நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றதும் முசுகுந்தச் சக்கரவர்த்தி, வலனைத் தோற்கடிக்க உதவி செய்தான். தேவேந்திரனும் அவன் உதவியை வேண்டிப் பெற்றுக்கொண்டான். வலன் தோற்கடிக்கப் பட்டான். 

தேவேந்திரன் வெற்றி கிட்டியதைக் கொண்டாடும் வண்ணம் தியாகேசப் பெருமானின் எதிரே நின்று, தன் நண்பனாகிய முசுகுந்தனை மார்போடணைத்து நன்றி கூறி, “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருவேன்.” என்று சொல்ல, முசுகுந்தன் அந்தத் தியாகேசரே வேண்டுமென்றான். தியாகேசரும் ஜீவசக்தியோடு இருந்தமையால் முசுகுந்தனைப் பார்த்துத் தன் கண்ணசைவால் பூவுலகம் கொண்டு செல்லுமாறு ஜாடை காட்ட, முசுகுந்தனும் மகிழ்ந்தான். தியாகேசரே வருகிறேன் என்றுவிட்டாரே??  ஆனால் முசுகுந்தன் கேட்ட பரிசை தேவேந்திரனுக்குக் கொடுக்க மனமில்லை. அவன் திகைத்துத் திடுக்கிட்டு, “இந்த விக்கிரஹம் திருமாலே வழிபட்டது. அவர் அனுமதி வேண்டும்” என்று சமாளிக்கப் பார்த்தான். ஆனால் திருமாலோ முழுமனதோடு அநுமதி கொடுத்துவிட்டார். ஆனால் இந்திரனுக்கோ தான் ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்த மூர்த்தியைக் கொடுக்க மனமே வரவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தான். 

பின்னர் இந்தத் தியாகேசரைப் போலவே இன்னும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்தான். எல்லாம் ஒன்று போலவே இருந்தன. அவற்றோடு மஹாவிஷ்ணு கொடுத்த தியாகேசரையும் வைத்தான். இவற்றில் எது உனக்குப் பிடிக்கிறதோ எடுத்துக்கொள் என்று சொல்ல, முசுகுந்தனோ இறை அருளால், மஹாவிஷ்ணு பூஜித்த தியாகேசர் தான் வேண்டும் என அடையாளம் காட்டினான். தேவேந்திரனுக்கு இப்போது மீண்டும் திகைப்பு. எனினும் முசுகுந்தனும் சிவ பக்தன். தன் நெருங்கிய நண்பன். அவனுக்கோ நாம் வாக்களித்துவிட்டோம். ஆகவே மறுக்கக் கூடாது என எண்ணி, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஏழு மூர்த்தங்களையுமே அவனுக்குக் கொடுத்துவிட்டான். பூலோகத்தில் வைத்து பூஜித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அந்த ஏழு மூர்த்தங்களே சப்த விடங்கர்கள் எனப்படுவார்கள். திருவாரூரில் தியாகேசர் மாசி மாசம் ரிஷபக் கொடியோடு எழுந்தருளியதாக ஐதீகம். 

மற்றத் தலங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

சப்த விடங்கர்கள் என்பது உளி கொண்டு செதுக்கப் படாத மூர்த்தங்களையே விடங்கம் அல்லது விடங்கர் என்று சொல்வார்கள். டங்கர் என்றால் உளியால் செதுக்கியது. இந்த ஏழு மூர்த்தங்களும் உளியால் செதுக்கப்படாத மூர்த்தங்கள். “சீரார் திருவாரூர் சென்னாகை நள்ளாறு காரார் மறைக்காடு காராயில் பேரான ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலி சத்த விடங்கத் தலம் “  என்னும் தனிப்பாடலில் சப்தவிடங்கத் தலங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. 

திருவாரூரில் வீதி விடங்கர்= ஆடியது அஜபா நடனம். மனதுக்குள்ளேயே ஜபித்துக்கொண்டு ஆடுவது. இது நம் சுழுமுனை சுவாசம் போல என்ற தத்துவமும் குறிப்பிடப் படுகிறது.

திருக்குவளை = அவனி விடங்கர். பிருங்க நடனம். மலருக்குள்ளே வண்டு சென்று ரீங்காரமிட்டுக் குடைவதைக் குறிக்கும் நடனம். 

திருநள்ளாறு= நக விடங்கர்- உன்மத்த நடனம். பித்தன், பிறைசூடியவன் அருளாளன் ஆடிய உன்மத்த நடனம், பித்துப் பிடித்தவன் போல் ஆடியதாம்.

 திருநாகை = சுந்தரவிடங்கர்= தரங்க நடனம். கடல் அலைகள் எப்படி ஆடுகின்றன?? மேலேயும், கீழேயும், சுற்றிச் சுழன்றும், கரைக்கு வந்து மோதியும், திரும்பக் கடலுக்குள் சென்றும் ஆடிய ஆட்டமென்ன?? கடல் அலைகளைப் போன்ற நடனம். 

திருக்காராயில்= ஆதி விடங்கர்= குக்குட நடனம். கோழியின் நடை எப்படி இருக்கும்?? அதைப் போல். அனைத்தையும் படைத்தவன் ஆடும் ஆட்டமென்ன??? 

திருவாய் மூர்= நீல விடங்கர். கமல நடனம். பொய்கையில் பூத்திருக்கும் தாமரை மலர்போன்ற நடனம். தண்டு மட்டும் இருக்கும், மேலே பூ சுற்றுவது ஒற்றைக்காலில் நின்றாடுவது போல் இருக்குமல்லாவா??? அந்த நடனம்.

திருமறைக்காடு= புவனி விடங்கர் . ஹம்ச பாத நடனம். சொல்லவே வேண்டாம், அன்னப் பறவையின் நடனம் போல. 

செங்கழுநீர்ப் பூவை வைத்துச் சரியாகக் கணித்தானாம் முசுகுந்தன் வீதி விடங்கரை. ஆகையால் அவருக்குச் செங்கழுநீர்ப் பூ சாற்றுவது விசேஷமாகச் சொல்லப் படுகிறது. மேலும் தேவேந்திரன் தியாகராஜ மூர்த்தங்களை அளிக்கும்போது, கூடவே திமிரி நாகஸ்வரம், பாரி நாகஸ்வரம், முகவீணை, யாழ், தவில், மத்தளம், ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தானாம். பாரி நாயனம் திருவாரூரில் மட்டுமே வாசிக்கப் பட்டு வந்தது. தற்போதும் இந்த வாத்தியங்கள் எல்லாம் தேவலோக கந்தருது என்னும் குறிப்பிட்ட மரபினரால் வாசிக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர்.

இதைத் தவிர பஞ்சமுக வாத்தியம் என்னும் ஐந்து முகங்களைக் கொண்டதொரு அபூர்வமான வாத்தியமும் இங்கே உண்டு. ஐமுக முழவம் எனப்படும் இதை சங்கரமூர்த்தி என்னும் கலைஞர் வாசித்து வந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாத்தியம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது. சுமார் நான்கடி க்கு மேல் சுற்றளவு கொண்ட இதன் ஒரு முகம் பாம்பு சுற்றியது போலவும், மற்றொரு முகம் ஸ்வஸ்திக் சின்னத்தோடும், மூன்றாம் முகம் தாமரைப் பூ போலும், நான்காம் முகம் அடையாளமில்லாமலும் இருக்கும். ஐந்தாம் முகம் நடுவில் உள்ளது, பெரியதாக இருக்கும் என்றார்கள். மான் தோலால் கட்டப் பட்டிருக்கும் இந்த வாத்தியத்தை நந்தி தேவர் ஈசனின் நடனத்தின்போது வாசித்து வந்ததாகவும், இப்போது வாசிக்கும் பரம்பரையினரை “பாரசைவர்கள்” என்று அழைக்கப் படுவதாகவும் தெரிய வருகிறது. இந்த வாத்தியத்தின் ஒவ்வொரு முகத்தையும் தனியாகவும், அனைத்தையும் சேர்த்தும் வாசிக்கலாம் என்கின்றார்கள். தனியாக வாசிக்கும்போது ஏழு முறையும், சேர்த்து வாசிக்கும்போது ஐந்து முறையும் வாசிக்கப் படுமாம். இந்த வாத்தியம் வாசிக்கவென்றே விதிமுறைகள் இருப்பதாகவும், அதைக்குறிப்பிடும் நூல் இருப்பதாகவும் சொல்கின்றனர். இது தவிரப் பாரி நாயனத்தைத் திருவிழாக் காலங்களில் வீதிகளில் வாசிப்பதாகவும், அதற்கும் எந்த எந்த இடங்களில் எந்தப் பண் வாசிக்கவேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் சொல்கின்றனர். இங்கே உள்ள விளக்கை விருடி விளக்கு என்கின்றனர். தேர் போன்ற அமைப்பில் மர வடிவ அமைப்பில் உள்ளது இது. 

திருவாரூர்ப் பயணம் தொடரும்.


பின் குறிப்பு. இந்தப் பாரி நாயனத்தை வாசிப்பது கடினம் என்பார்கள். தில்லானா மோகனாம்பாள் என்னும் தொடரில் இந்தப் பாரி நாயனத்தில் தில்லானா வாசிப்பதாகத் தான் ஷண்முக சுந்தரம் மோகனாம்பாளிடம் சபதம் போடுவான். அவளும் அதற்கு அந்தத் தில்லானாவிற்குத் தான் ஆடிக்காட்டுவதாகவும் பதில் சபதம் போடுவாள். 

திமிரி நாதஸ்வரம் சின்னதாகவும் நீளம் குறைவாகவும் இருக்கும் எனவும் இதைச் சில மாற்றங்களோடு டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் அறிமுகம் செய்ததாகவும் அதுதான் இப்போது புழக்கத்தில் உள்ள பாரி நாயனம் என்றும் அறிய வருகிறது. நீண்ட நேரம் வாசிக்க முடியும் என்பது இதன் சிறப்பு.

**********************************************************************************

அன்றிரவு ஏசி எல்லாம் நன்றாகவே இருந்தாலும் தூக்கம் என்னமோ சரியாய் இல்லை. காலையில் வேறே சீக்கிரம் கோயிலுக்குப் போகணும் என்னும் எண்ணம் மனதின் அடியிலேயே இருந்ததாலும் தூங்க முடியாமல் இருந்தது. காலை நாலரைக்குக் காஃபி கிடைக்கும் எனத் தங்கி இருந்த லாட்ஜின் ஊழியர் சொல்லி இருந்தார். அந்த நேரம் அவ்ங்கல்லாம் எழுந்திருப்பாங்களோ இல்லையோ, நானே போய் வாங்கிட்டு வந்துடறேன் என நம்ம ரங்க்ஸ் சொல்லி இருந்தார். நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட எழுந்து உட்கார்ந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டோம். குளிப்பதற்கு முன்னர் காஃபி கிடைக்குதானு பார்க்கலாம்னு ஃப்ளாஸ்கை எடுத்துக்கொண்டு நம்மவர் சென்றார். ஹிஹிஹிஹி, பத்தே நிமிஷத்தில் திரும்பி வந்துவிட காஃபி அதுக்குள்ளே கிடைச்சதானு நான் கேட்க, கடையே திறக்கலை என்றாரே பார்க்கலாம்! 

முன்னெல்லாம் நாங்க கும்பகோணத்தில் லாட்ஜில் தங்கிக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நாட்களில் காலை நாலரைக்கே அங்கே டவுன்ஹால் பக்கம் ஒரு தேநீர்க்கடையில் நல்ல காஃபி கிடைக்கும். தங்கி இருந்த லாட்ஜில் இருந்து நடந்தே அங்கே போய்க் காஃபி குடிச்சுட்டு வருவோம். திரும்பி வரும்போது வெங்கட்ரமணாவில் ஓட்டல் திறந்து காஃபி ரெடி அறிவிப்புப் பலகையைக் காணலாம். இப்போல்லாம் தெரியலை. ஆனால் திருவாரூர் மாதிரி ஊர்களில் காலையிலேயே நடமாட்டம் இருக்கும்னு நினைச்சது தப்பாய்ப் போச்சு! என்ன செய்யலாம்னு யோசிக்கும்போது குருக்கள் தொலைபேசியில் அழைத்து விரைவில் கோயிலுக்கு வரும்படி சொல்லச் சரினு குளித்துவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பிட்டோம். நாங்க இருந்தது வடக்கு வீதி என்பதால் அங்கே இருந்து வடக்கு கோபுரம் பத்தே நிமிட நடையில் இருந்தது. நடந்தே சென்றோம். அதிகாலை என்பதால் தெருவில் கூட்டமில்லை என்றாலும் கோயிலுக்குச் செல்பவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

வடக்கு வீதியில் இருந்து வடக்கு கோபுர வாசலுக்குப் போனோம். அங்கே திட்டி வாசல் ஒன்று இருந்தது. அதன் வழியாகத் தான் கோயிலுக்குள் நுழையணும். அந்தத் திட்டி வாசலுக்குப் போக ஐந்தாறு படிகள். ஒவ்வொன்றும் ஒன்றரை அடி, இரண்டடி உயரம். அப்பாடி! எப்படி இந்த மலையைத் தாண்டுவேன் என பிரமிப்பு ஏற்பட்டது. முதலில் ரங்க்ஸ் இறங்கிட்டு எனக்குக் கை கொடுத்து இறக்க முயலக் கால் கீழேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போய்க் கொண்டே இருந்தது. உள்ளூரக் கொஞ்சம் பயத்துடனேயே காலைக் கீழே வைத்தேன். அப்படியும் அரை அடி இருந்திருக்குப் போல. கால் "தொப்"பெனக் கீழே பதிய முழங்கால் சுளுக், மளுக்! சமாளித்துக் கொண்டு அடுத்த படி இறங்கத் தயாரானேன். இப்படியாகப் பத்து நிமிஷங்கள் இதிலேயே போக குருக்கள் தேடிக் கொண்டு வந்துவிட்டார். 

மெல்ல இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஒரு அடி எடுத்து வைப்பதும் சிரமமாக இருந்தது. என்றாலும் விடாமுயற்சியுடன் நடந்தேன். பார்த்த குருக்கள் தீபாராதனை நேரம் நெருங்கிவிட்டதால் தான் முன்னால் போவதாகவும் எங்களை வரச் சொல்லிவிட்டும் போய் விட்டார். நம்மவரும் வேகமாக நடந்து தீபாராதனை பார்க்கும் ஆவலில் போய்க் கொண்டிருந்தார். அவர் பிரகாரத்தின் மூலை திரும்பும்போது நான் பாதி கூடத் தாண்டலை. முன்னால் ஆட்கள் போய்க் கொண்டிருந்தாலும் அந்தப் பரந்து விரிந்த பிரகாரத்தின் நடுவில் நான் மட்டும் தன்னந்தனியே போய்க் கொண்டிருந்தது பயமாகவே இருந்தது. இதுக்குள் என்னைக் காணாமல் ரங்க்ஸ் திரும்பி வந்து எட்டிப் பார்க்கக் கையை ஆட்டி அவரைப் போகச் சொன்னேன். அவராவது பார்க்கலாமே என. இதுக்குள்ளே கோயில் சந்நிதியிலிருந்து வாத்ய முழக்கம் கேட்க "ஆருரா! தியாகேசா!" என்னும் குரல்கள் ஒலிக்கக் காலையில் பாடும் திருப்பள்ளி எழுச்சியை ஓதுவார் பாடத் திருப்பள்ளி எழுச்சி ஆரம்பம் ஆனது என்பதைப் புரிந்து கொண்டேன். 

நான் போய்ச் சேரும் சமயம் ஆரத்தி எல்லாம் முடிஞ்சு தியாகேசர் நிர்மாலியங்களைக் களையும் முன்னர் உள்ள நிலையில் காணப்பட்டார். காலையில் முதல் முதல் அர்ச்சனையை எங்களுக்காக குருக்கள் செய்து வைத்தார். பின்னர் திரை போட்டு அபிஷேஹம் எல்லாம் முடிந்து அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைக்கு நேரம் ஆகும் என்பதால் அப்போதே செய்து வைத்தார். தியாகேசரைப் பார்க்க மேடைக்கு ஏறுவது பெரும் பிரயத்தனமாக இருந்தது. எப்படியோ ஏறிப் போய் அவரையும் வன்மீக நாதரையும் பார்த்துவிட்டு தீபாராதனையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். போகும் வழியில் நவகிரஹங்கள், ருண விமோசனர், ரௌத்ர துர்கை ஆகியோரைப் பார்த்துக் கொண்டு கமலாம்பிகையைப் பார்த்துவிட்டு நுழையும்போதே உட்கார்ந்திருக்கும் உச்சிஷ்ட கணபதிக்கும் கமலாம்பிகைக்கும் அர்ச்சனையை முடித்துக் கொள்ள எண்ணம்.

Friday, June 10, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! :( இரண்டாம் பகுதி!

 தேவாரப் பாடல்கள் கிட்டத்தட்ட 350, திருவாசகப் பாடல்கள் 7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். இது தவிர, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சேக்கிழாரின் பெரிய புராணப்பாடல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழில் 11 பாடல்கள், வள்ளலாரின் திருஅருட்பாவில் திருவாரூர்ப் பதிகம் என்ற தலைப்பிலேயும் இடம்பெற்றுள்ளது திருவாரூர். வள்ளலார், “எந்தாய் ஒருநாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்படைய வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன் செந்தாமரைத்தாள் இணை அன்றே சிக்கென்றிறுகப் பிடித்தேனேல் இந்தார் சடையாய் திரு ஆரூர் இறைவா துயரற்றிருப்பேனே!” என்று கூறுகிறார்.இதைத் தவிர பதினோராம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக்கோவை என்ற தலைப்பில் சேரமான் பெருமான் நாயனாரும் திருவாரூரைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார். திருஆரூர் புராணம், கமலாலயச் சிறப்பு, தியாகராஜலீலை, தேவாசிரிய மஹாத்மியம், திருவாரூர் நான்மணிமாலை, திருவாரூர் குறவஞ்சி, திருவாரூர் உலா, தியாகப் பள்ளு, திருவாரூர்க் கோவை, அஜபா நடேசர் பதிகம், திருவாரூர் வெண்பா அந்தாதி, கமலாம்பிகைத் தமிழ், தியாகராஜர் கழிநெடில், கந்தபுராணம், திருவாரூர் அந்தாதி, பரவைத் திருமணம், கமலாம்பிகை பதிகம் போன்ற பல தமிழ் நூல்களும், வடமொழியில் அஜபா ரகசியம், ஆடகேசுவர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், தியாகராஜலீலை, சமற்காரபுர மான்மியம், ஸ்ரீபுர மான்மியம், ஸ்கந்த புராணம், முகுந்த சஹஸ்ரநாமம், தியாகராஜாஷ்டகம், கமராம்பிகாஷ்டகம் போன்றவைகள் உள்ளன. 

தஞ்சையை ஆண்ட ஷஹஜீ என்னும் மன்னன் தியாகேச பதமுலு, பஞ்சரத்ன பிரபந்தம், சங்கரபல்லக்கீ சேவா பிரபந்தம், சங்கர காளி நடன சம்வாதம் போன்ற தெலுங்கு மொழி நூல்களும், மராட்டியில் ராமபண்டிதர் என்பவர் தியாகேச மகாத்மிய, கமலாலய மகாத்மிய, தியாகராஜ விலாச, தியாகராஜ தியான, தியாகேசுவர ஆகமோத்தியான என்ற நூல்களும் திருஆரூரின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்கின்றது. எல்லாவற்றுக்கும் மேல் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகச் சிறப்பித்துச் சொல்லப் படும், சத்குரு தியாகையர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் அவதரித்தது இங்கே தான். சங்கீதம் தன் உச்சிக்குப் போய் இவர்களால் பெருமை பெற்றாற்போல் திருஆரூரும் இவர்களால் பெருமை பெற்றுள்ளது.

முத்துசாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள் இன்றளவும் அனைத்து சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகளால் பாடப்படுவது திருவாரூரின் பெருமையைச் சுட்டுகிறது. தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பலம் என்றால் திருஆரூர் பூவம்பலம் என்பார்கள். திருவாரூர் நான்மணிமாலையில் ஒரு பாடல், 

“காவாய் எனச் சிறு தெய்வந்தனைத் தினம் கை தொழுது

 நாவாய் தழும்பப் புகழ்ந்து என் பயன் கதிநாடின், மும்மைத் 

தேவாயத் தேவுக்கும் கோவாய் மணிப்பொற்சிங்காதனம் சேர்

பூவாய் மதிக்கண்ணி ஆரூர்ப் பிரான் பதம் போற்றுமினே!” 

என்று சொல்கிறது. திருவாரூர் தியாகராஜருக்குப் பலவகைப் பூக்களினால் அலங்காரம் செய்வார்கள். செங்கழுநீர்ப் பூ மிகவும் விசேஷம். மல்லிகை, முல்லை, இருவாட்சி, செங்குவளை, செவ்வந்தி ஆகிய மலர்களும் மருவு, மருக்கொழுந்து, வெட்டிவேர் போன்றவற்றையும் வைத்துச் சிறப்பான அலங்காரம் செய்யப் படும். இவை யாவும் உதிரிப் பூக்களாலேயே செய்யப் படுவதாய்ச் சொல்கின்றனர். அப்பர் பெருமான் இந்த அலங்காரத்தைப் பார்த்துவிட்டு” ஐயைஞ்சின் அப்புறத்தான்” என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். திருவாரூர் தியாகேசரைக் குறித்த இன்னொரு பாடலில் நாவுக்கரசர்,

 மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை 

வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை

ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை 

உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்

வைப்பானைக் களைவானை வருவிப் பானை 

வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை 

அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை 

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.


ஆறாம் திருமுறை திருவாரூர்த்தேவாரம் 26 பாடல் எண் 4 என்றும் சொல்லுகிறார். ஈசனின் வடிவங்கள் 25 எனச் சொல்லப் படுகிறது. அந்த 25 வடிவங்களில் இருந்தும் மாறுபட்ட வடிவம் இது. ஆகையால் இவரை “என்ன தன்மையன்றறிவொண்ணா எம்மானை” என்று சுந்தரரும் குறிப்பிடுகிறார். மேலும் திருவாரூர் ஈசனை நினைக்கும்போது,

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்

அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை 

மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்

உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே 

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை 37 பாடல் எண் 2

கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் 

ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப் 

பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி

 ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே 

சுந்தரர் பாடல் எண் 10 


திருவாரூர் தியாகேசருக்குச் சுமார் அறுபது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலேசர், கம்பிக்காதழகர், கருணாகரத் தொண்டைமான், கருணாநிதி, சிந்தாமணி, செங்கழுநீர் அழகர், செம்பொன் தியாகர், செல்வத் தியாகர், செவ்வந்தித் தோடழகர், தியாக சிந்தாமணி, தியாகப் பெருமான், தியாக விநோதர், திருந்து இறைக்கோலர், திருவாரூர் உடையார், தேவ சிந்தாமணி, தேவர் கண்ட பெருமான், கனகமணித் தியாகர், தியாகராஜர், ரத்தின சிம்மாசனாதிபதி, செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், வேத சிந்தாமணி, அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், அணி வீதியழகர், ஆடவரக்கிண்கிணிக் கால் அழகர், உன்ன இனியார் என்ற பல பெயர்கள் இருந்தாலும் வீதி விடங்கர் என்ற பெயரே அனைத்திலும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இந்த வீதி விடங்கன் பற்றிய கதையும் அறிவோமல்லவா???

***********************************************

இங்கே முந்தைய பதிவுக்கான சுட்டிக்கு இங்கே சொல்லவும். இந்தக் கோயிலுக்குப் பலமுறை போயிருந்தாலும் நான் முதல் முதல் பார்த்தப்போ இருந்த பிரம்மாண்டமும் பிரமிப்பும் இப்போ இல்லை. அதோடு அப்போதெல்லாம் உறவினர்களில் யாரானும் இங்கே இருந்து கொண்டே இருந்தார்கள். இப்போ யாரும் இல்லை என்பதோடு நான் பார்த்த நான்கு மாடவீதிகளும் இப்போக் கடைகள் மயமாய் ஆகிவிட்டன. வீடுகளே காண முடியலை. ஒவ்வொரு கோபுர வாசலிலும் இருக்கும் சின்ன வீதிகளில் மட்டும் அவை முக்கிய வீதியைச் சேரும் இடம் வரையில் பழங்காலத்து மாடி வீடுகள். ஓட்டுக் கட்டிடங்கள். இரண்டு சாரிகளிலுமாகச் சேர்ந்து 20 வீடுகள் இருந்தால் பெரிய விஷயம். 

போய்ச் சேர்ந்த அன்று ரம்ஜான் தினம் என்பதால் ஓட்டல்கள் எல்லாமும் அடைத்துக் கிடைக்கச் சாப்பிடத் திண்டாடி ஏதோ கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டோம். சாப்பிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம் நாங்க தொடர்பு கொள்ள வேண்டிய குருக்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கோயிலுக்கு வந்து இரவு நேர தீபாராதனையைப் பார்க்க வரச் சொன்னார். இருவருக்குமே முடியலை என்பதால் காலையிலேயே வந்துக்கறோம்னு சொல்லிட்டோம். அதன் பேரில் அவர் எங்களை ஓட்டலுக்கு வந்து பார்ப்பதாகச் சொன்னார். அதே போல் இரவு ஒன்பதரைக்கு மேலே கையில் பிரசாதங்களோடு வந்து சேர்ந்தார். விபூதி, குங்குமம், சந்தனம் தவிர்த்துப் பெரிய தேன்குழல், குழாய்ப்புட்டு மாதிரி ஒன்று, அதிரசம், அப்புறமாப் பாலில் வேக வைத்த ஏதோ ஒன்று, மிளகு வடை எனப் பிரசாதங்களைக் கொடுத்தார். பின்னர் மறுநாள் காலை ஐந்தரைக்கே எங்களைக் கோயிலுக்கு வரச் சொல்லிவிட்டு மறுநாளைக்கான நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களையும் சொன்னார்.

ஐந்தரைக்குக் கோயிலுக்குப் போனதுமே தியாகராஜர்/வன்மீகநாதர் சந்நிதியில் காலை நேர வழிபாட்டையும் கற்பூர ஆரத்தியையும் முடித்துக் கொண்டு பின்னர் கமலாம்பிகை சந்நிதி செல்லும் வழியில் உள்ள நவகிரஹம், ருண விமோசன லிங்கம், ரௌத்ர துர்கை போன்றோரையும் பார்த்துக் கொண்டு கமலாம்பிகை சந்நிதியில் உச்சிஷ்ட கணபதிக்கும் உள்ளே கமலாம்பிகைக்கும் அர்ச்சனையை முடித்துக் கொண்டு பின்னர் எங்களை ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக் கொண்டு காலை ஆகாரம் முடித்துக்கொண்டு ஒன்பதரை மணி அளவில் நவகிரஹ சந்நிதிக்கு வரச் சொன்னார். அதன் பிறகு நவகிரஹங்கள், ரௌத்ர துர்கை, ருண விமோசனர் ஆகியோருக்கு அபிஷேஹ ஆராதனைகள், அலங்காரங்கள் ஆகியவற்றை முடித்துக் கொண்டு பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு அதன் பின்னர் மதிய உணவை எங்கள் விருப்பப் படி விரும்பும் இடத்தில் முடித்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என்பதே அந்தத் திட்டம். சரியாகவே இருந்தது. ஆனால் காலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை அந்தத் தியாகேசனே அறிவான் அல்லவா? 

Tuesday, June 07, 2022

நானும் கொறடா தான்! ஹிஹிஹி, சட்டசபையில் இல்லை! :)

 இன்னமும் ஒரு நிதானத்துக்கு வரலை. கொஞ்சம் கொஞ்சமாகச் சரி பண்ணிக் கொண்டு இருக்கேன். ஆரம்பிச்ச பதிவுகள் இருக்க இன்னிக்கும் சரி, இதுக்கு முன்னாடியும் சரி! வேறே விஷயம் எழுதினேன்/எழுதப் போறேன்.  தொடரணும்னு எண்ணம் எனக்கு இருக்கு. ஆனால் கடவுளின் அருள் எப்படியோ! நிற்க. (கால் வலிச்சால் உட்காரலாம்.)


விருந்து சமையலில் கொறடா!   இங்கே!

காமாட்சி அம்மா இஞ்சித் தொக்கு பற்றி எழுதி இருந்தார். பழைய பதிவு தான். அதிலும் நான் கருத்துச் சொல்லி இருந்தேன். இருந்தாலும் அவர் எழுதினதில் அன்றும்/இன்றும் பச்சை மிளகாய்/கொத்துமல்லி சேர்ப்பது தான் புதிது. இஞ்சியைப் பச்சை மிளகாயோடு சேர்த்துப் பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்துப்  புளி ஜலத்தை விட்டு உப்பையும் போட்டுக் கொதிக்க விட்டுப் புளி மிளகாய் எனப் பண்ணி இருக்கேன். புளி மிளகாய் என்பது மிளகாய் மட்டுமே சேர்த்துப் பண்ணுவது என்றாலும் நான் இதையும் புளி மிளகாய் என்றே சொல்வேன். புளி இஞ்சினும் சொல்லலாம். மி.வத்தலோடு இஞ்சியையும் நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு, புளியையும் சூட்டில் ஒரு புரட்டுப் புரட்டிக் கொண்டு உப்புச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுக் கிளறித் தேவையானால் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொண்டு எடுத்து வைத்தால் மாசங்களுக்கு வரும்.

இதுவும் அப்படித் தான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். புளிக்கு ஏற்ப இஞ்சி மட்டுமில்லாமல் கூடுதல் சுவைக்குப் பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழையும். இன்னிக்குக் காலம்பரப் பண்ணினேன். உடனே மோர் சாதத்துக்குத் தொட்டுண்டாச்சு. சாயந்திரம் தோசைக்கும் அதான். ஆனால் ஒண்ணு, நான் ஒண்ணு பண்ணறதுன்னா அதிலே கொஞ்சமானும் திப்பிசம் இருக்கணுமே! இங்கேயும் அந்தத் திப்பிசம் ஒண்ணு. ஹிஹிஹிஹி, என்னனு சொல்லவா?

ஒண்ணுமில்லை. இரண்டு நாளைக்கு முன்னர் பச்சை மிளகாய், கொத்தும்ல்லி, புளி, உப்பு, பெருங்காயம் வைச்சுப் பச்சைக்கொத்துமல்லிச் சட்னி தோசைக்குனூ அரைச்சேன். போணியே ஆகலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அது அப்படியே இருந்ததா? இன்னிக்கு அரைச்ச புளி இஞ்சித் தொக்கிலே அதை அப்படியே சேர்த்துட்டேன். ஹிஹிஹி, கண்டுக்காதீங்க. கூடவே புதுசா வேணும்னு 2,3 பச்சை மிளகாயோடு, கொஞ்சம் பச்சைக் கொத்துமல்லியும் வைச்சேன் தான். என்றாலும் இந்தத் திப்பிசத்தையும் விடலை. கீழே படங்கள் போடறேன். கிண்ணத்தில் புளியும், மி.வத்தலும் நீர் விட்டு ஊற வைச்சிருக்கேன். நறுக்கிய இஞ்சித்துண்டங்கள். கூடவே புதுசா வைக்கக் கொத்துமல்லி, ப.மி. 3


திப்பிசத்துக்கு உதவிய கொ.மல்லிச் சட்னி. கடுகு தாளித்தது கூடத் தெரியுமே! கொஞ்சமாய் நீர் விட்டுக் கரைச்சு வைச்சேன்.


மிக்சி ஜாரில் மி.வத்தல், புளி, இஞ்சித்துண்டங்கள்,  கூடவே பச்சை மிளகாய், கொத்துமல்லி. முதலில் உப்பு, பெருங்காயம் சேர்த்து  இதை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டேன்.அரைச்சுக் கொண்டதில் அந்தத் திப்பிச வேலை செய்ய வேண்டிக் கொத்துமல்லிச் சட்னியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன்.

நன்கு நைசாக, வெழுமூண அரைச்ச விழுது.


கடாயில் நல்லெண்ணெய் விட்டுக் கடுகு, உபருப்பு, வெந்தயம் தாளிச்சுட்டேன். இதான் நான் பண்ணின ஒரு பெரிய தப்பு. சாதாரணமாகக் கீரை தவிர்த்து எதுக்கும் உ.பருப்பு அதிகம் தாளிக்க மாட்டேன். வெந்தயமாவது போடுவேன். எனக்குப் பிடிக்கும் என்பதால். உப்புமாவெல்லாம் பண்ணினால், பிசைந்த சாதங்கள் பண்ணினால் உ.பருப்பு, க.பருப்புத் தேடணும். இன்னிக்கு ஏதோ நினைவில் போட்டுட்டேன். சாப்பிடும்போது அதான் வாயில் மட்டுமில்லாமல் மனதிலும் நெருடுகிறது. இஃகி,இஃகி, இஃகி//


அரைத்த விழுதைக் கடாயில் காய்ந்த எண்ணெயில் கொட்டி நன்கு கிளறிக் கொஞ்சம் போல் வெல்லம் சேர்த்துக் கிளறினேன். கடாயில் சுற்றி எண்ணெய் பிரிந்து வந்திருப்பதைப் பார்க்கலாம். அது வரை கிளறினால் போதும். கொஞ்சம் தளரவே இருக்கட்டும்னு எடுத்து வைச்சேன். ஆனால் கெட்டியாக ஆகி விட்டது. பரவாயில்லை. 

இந்தப் படங்களைக் கணினியில் ஏற்றுவதற்குள்ளாகக் கணினியும் சரி, மொபைலும் சரி பாடாய்ப் படுத்தி விட்டன. அதான் பதிவு போடவும் நேரம் ஆயிடுச்சு! :( சாப்பிட்டும் பார்த்தாச்சு. மோர் சாதத்துடன் வாய்க்கும் நன்றாக இருக்கிறது. பொதுவாக இஞ்சியும் சரி, கொத்துமல்லியும் சரி வாயில் ஏற்படும் அருசியைச் சரி பண்ணும். உடம்புக்கும்/வயிற்றுக்கும் நல்லது. அதனால் தான் பெரும்பாலும் விருந்துச் சமையலில் இவை இடம் பெறுகின்றன.