எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

பாஞ்சஜனாவின் கொடூரம்!

சாந்தீபனியின் மகன் ஆன புநர்தத்தன் வைவஸ்வதபுரி என்னும் யமப்பட்டினத்தில் இருந்து மீட்கப் பட்டான் எனப் புராணங்கள் மூலம் அறிகிறோம். விவஸ்வான் என்னும் பெயருள்ள சூரியனின் மகனான யமனை வென்று அழைத்துவருவதாகவும் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு ஒரு புத்திபூர்வமான சிந்தனையுடன் முன்ஷி சொல்லுவது என்னவென்றால் , முற்காலங்களில் அரபிக்கடல் பகுதியில் “ஒளிநகரம்” என்ற ஒன்று இருந்து வந்ததாகவும், பாபிலோனுக்கு அருகே உள்ள “லார்சா” என்னும் பெயருள்ள நகரத்தைச் “சூரியர்களின் நகரம்” என்ற பெயரில் அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும் அவர் சொல்லுவது என்னவென்றால் ஹரிவம்சத்தைக் கூர்ந்து ஆராய்ந்துபார்க்கும் நோக்கில் படித்தோமானால்(நான் படிச்சதில்லை) வைவஸ்வதபுரியின் அரசனான யமன் என்பவன் அனைவரின் உயிரையும் நேரம் வந்தால் எடுத்துச் செல்லும் யமதர்மராஜன் இல்லை என்பதும், இவன் ஒரு மனிதகுலத்தைச் சேர்ந்த அரசன் என்பதும் புரியவரும் என்று சொல்கின்றார். இந்த வைவஸ்வதபுரியின் அரசனான “யமன்” முதலில் கிருஷ்ணரை மஹாவிஷ்ணு என்றே வழிபட்டுக் கொண்டு வந்ததாகவும், கிருஷ்ணன் புநர்தத்தனை மீட்டுச் செல்ல வந்திருக்கும் செய்தியைக் கேட்டதும், இவனோடு சண்டை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. புநர்தத்தனைக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்து யுத்தம் செய்ததாகவும் தெரியவருகிறது. மரணதேவனான யமனாக இருந்திருந்தால் காக்கும் கடவுளான விஷ்ணுவோடு சண்டை போட்டிருக்க முடியாது எனவும் கூறுகின்றார். ஆகவே இந்த அரசனின் கொடூரமான தன்மையால் இவனுக்கு யமன் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும், இவனோடேயே கிருஷ்ணர் சண்டைபோட்டு ஜெயித்து புநர்தத்தனை மீட்டு வந்திருக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சுட்டுகின்றார். புநர்தத்தனைத் திருப்பி அனுப்பாமல் இருந்ததற்கும் சரியான காரணம் இருந்திருக்கவேண்டும் என்பதும் அவர் கூற்று.

செளராஷ்டிரக் கடற்கரைகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதியில் எங்கேயோ வைவஸ்வதபுரி என்னும் இந்த நகரம் இருந்திருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள சிந்துப் பிரதேசத்தின் ஹைதராபாத் நகரத்தை அலெக்ஸாண்டரின் காலத்தில் படாலா என அழைத்து வந்திருக்கிறதாய்ச் சொல்லுகிறார். அரபிக்கடலின் சில தீவுகள், நாகர் குலத்து தூம்ரவர்ணன் என்னும் அரசனால் ஆளப்பட்டு வந்திருக்கின்றன. இவனின் பெண்களே கிருஷ்ணனின் யாதவகுலத்தின் சில முன்னோர்களுக்குத் திருமணமும் செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றனர். இந்தப் பெண்களின் பிள்ளைகளில் ஒருவரே இந்தத் தீவுக்கு அரசனாகி இருக்கலாம். மேலும் அந்தக் காலகட்டங்களில் ஆசியக் கண்டம் என இப்போது அழைக்கப்படும் பகுதிகளில் சக்தி வழிபாடு பிரபலமாக இருந்தது. அம்மா என்று அழைக்கப்பட்டும் வந்தாள். ஒரு சில பெண்களைச் சக்தி ரூபமாகவே வணங்கியும் வந்திருக்கிறதாய்ச் சொல்கிறார். இது கதையை மேற்கொண்டு படிக்கும்போது உதவியாக இருக்கும்.

புநர்தத்தனைப் பற்றி மேலும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டான் கண்ணன். அவன் வைவஸ்வதபுரியின் மன்னனுக்கு விற்கப்பட்டதையும் அறிந்துகொண்டான். இப்பொழுதும் கப்பல் அங்கேயே சென்றுகொண்டிருக்கிறது எனவும் அறிந்தான். அந்த நாட்டின் வழக்கம் ராணியை தெய்வீகத் தாயாக மதிப்பதும், ராணியின் கணவனான அரசனை மரணக்கடவுளான யமன் என அழைப்பதும் என்றறிந்தான். புண்யாஜனா கப்பல் தலைவனான பாஞ்சஜனா கண்ணனை அடிக்கடி தன் தனி அறைக்கு அழைத்துப் பேசி அவனைத் தன் பக்கம் இழுக்க முயன்றான். அவனுடைய கெட்ட எண்ணம் புரிந்துகொண்ட கண்ணன் அவன் எதிரில் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு நாள் மதியமும் பாஞ்சஜனா கப்பலின் மேல் தளத்திற்கு வந்து தன் கையில் இருக்கும் ஒரு அழகிய ரோஜாவைப் போன்ற வெளிர் சிவப்பு நிறச் சங்கை வைத்து ஊதுவான். அந்தச் சங்கு ஒரு அழகான கயிற்றில் கட்டப்பட்டு அவன் தோள்களை அலங்கரித்தது. சங்கோசை கேட்டதுமே அந்தச் சமயம் கப்பல் ஓட்டும் சிலரைத் தவிர கப்பலின் மற்ற
அனைத்து ஊழியர்களும் அங்கே வந்து அவனை வணங்கி நிற்பார்கள். கப்பல் ஓட்டுபவர்களும் ஒரு நாளைக்கு இருமுறை மாறுவார்கள். ஆகவே அனைவருமே ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் இப்படி மேல் தளத்திற்கு வந்து பாஞ்சஜனாவை வணங்கியே ஆகவேண்டும். தன்னிரு பக்கங்களிலும் அவனுடைய இரு மருமகன்களும் துணைக்கு நிற்கப் பின்னால் ராக்ஷசர்களை விடப் பலம் பொருந்திய ஹுக்கு, ஹுல்லு என்னும் இருவரும் காவல் காக்க, ஒவ்வொரு ஊழியனாக வந்து பாஞ்சஜனாவின் கால்களில் விழுந்து வணங்குவார்கள். சரிவர வணங்காத ஊழியர்களோ, நேரம் கழித்து வருபவர்களோ, அல்லது தவறு செய்துவிட்டதாய்க் கருதப் படுபவர்களோ யாராயிருந்தாலும் அவர்களுக்குத் தண்டனையும் அப்போது கொடுக்கப் படும்.

கண்ணன் கப்பலுக்குள் வந்த இரண்டாம் நாள் அம்மாதிரியான தண்டனை கப்பலின் தச்சன் ஒருவனுக்குக் கொடுக்கப் பட்டது. அவன் பெயர் ராது. ஹூக்குவும், ஹுல்லுவும் அவனைப் பிடித்திழுத்து பாஞ்சஜனாவின் முன்னே நிறுத்த பாஞ்சஜனா அவனைக் கால்களால் எட்டி உதைத்தான். அவனுக்கு வந்த கோபத்தில் வாயில் நுரை தள்ளும்போல் இருந்தது. ராதுவை உதைத்த வேகத்தில் அவன் எங்கேயோ போய் விழுந்தான். ஆனாலும் முடிந்தவரையில் வேகமாய் எழுந்து வந்து பாஞ்சஜனாவிடம் தன்னை மன்னிக்க வேண்டினான். ஆனால் பாஞ்சஜனாவோ அவனைச் சாட்டையால் அடிக்கும்படிக் கட்டளையிட்டான். சாட்டையடி முடிந்து முதுகெல்லாம் புண்ணாக, ரத்தம் வழிந்தபடி மயக்கமானான் ராது. அவனைத் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள் அவர்கள்.

கண்ணன் அன்று சுக்கானுக்கெதிரே அமர்ந்திருந்த பிக்ருவிடம் ராதுவுக்கு தண்டனை அளிக்கப்பட்ட காரணம் கேட்டான். பாஞ்சஜனாவின் அறையைச் சரியாகப் பராமரிக்க வில்லை. அதனால் பாஞ்சஜனாவிற்குக் கோபம் அதிகமாகிவிட்டதாய்ச் சொன்னான் பிக்ரு. மேலும் கண்ணனிடம், “குழந்தாய், உனக்கு இது புது விஷயம். இங்கே ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படித் தான் நடக்கும். ஒருமுறை கோபத்தில் சாட்டையால் அடித்துவிட்டு ஒரு மனிதனைக் கடலில் தூக்கி வீசியும் விட்டான் பாஞ்சஜனா. நீ அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாதே!”

“ராது எங்கே தூங்குவான்?” கண்ணனுக்குக் கவலை. “அவனருகில் நான் செல்லவேண்டுமே!”

“தம்பி, விளையாடாதே. அவன் தண்டிக்கப்பட்டவன். அவனருகே யாரும் செல்வதை பாஞ்சஜனா விரும்பமாட்டான்.”

“குக்குருவை என்னுடன் அனுப்புங்கள், நான் போய்ப் பார்த்தே ஆகவேண்டும் ராதுவை. என்ன தண்டனை கிடைத்தாலும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.”

ஆனால் குக்குராவுக்கோ பயம் அதிகமாய் இருந்தது. என்றாலும் ஒருவரும் அறியாமலே உத்தவனையும், கண்ணனையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். அழைத்துச் செல்லும்போதே அந்த இரு ராக்ஷசர்களும் எங்கே இருந்தாவது பார்க்கப்போகின்றனரே என்ற பயத்தோடே கூட்டிச் சென்று அங்கே சுருண்டு கிடக்கும் ராதுவைக் காட்டிவிட்டு ஓடியே போய்விட்டான். கண்ணன் அவனருகே சென்று மென்மையாகத் தொட்டான். தாங்க முடியாத வலியால் முனகிக்கொண்டிருந்த ராது தூக்கிவாரிப்போட எழுந்தான். முதலில் ஹூக்குவோ அல்லது ஹூல்லுவோ மீண்டும் தண்டிக்க வருகின்றனரோ, அல்லது கடலில் தூக்கிப் போடப் போகின்றனரோ எனப் பயந்த ராது இந்த இரு இளைஞர்களையும் அடையாளம் கண்டுகொண்டு ஆச்சரியம் அடைந்தான். கண்ணனோ வாய் திறந்தே பேசாமல் மென்மையாகவும், அன்பாகவும், ஆறுதலாகவும் அவனைத் தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தான்.

கைகளும் பேசுமோ? அந்த இருட்டில் கண்ணன் தடவியதில் தன் வலியும், எரிச்சலும், வேதனையும் கொஞ்சம் மறைவது போலவே இருந்தது ராதுவுக்கு. ஆஹா, மயிலிறகால் அஞ்சனம் தடவுவது போலல்லவோ இந்த இளைஞன் தடவிக் கொடுக்கின்றான்? இவன் கைளில் என்ன மாயம் வைத்திருக்கிறானோ? கண்ணனின் உள்ளத்தில் பொங்கிய கருணையும், அன்பும், பாசமும், அவன் கைகளின் வழியாக வலிநிவாரணியாகச் செயல்பட்டதோ என்னும்படிக்கு ராதுவுக்கு ஆறுதல் கிடைத்தது. அவன் வாழ்நாளிலே முதல்முறையாக இத்தகையதொரு அன்பை அவன் அநுபவிக்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருகக் கண்ணன் தோள்களில் சாய்ந்து விம்மி, விம்மி அழ ஆரம்பித்தான். அவன் எழுந்து கொண்டு கண்ணன் தோள்களில் சாய்ந்ததுமே அவன் முதுகில் சாட்டை அடியினால் ஏற்பட்ட காயங்களில் ஒட்டி இருந்த மணலை எல்லாம் உத்தவன் அதி கவனத்தோடு ஒத்தி ஒத்தி எடுக்க ஆரம்பித்தான். அங்கே பேச்சுக்கே இடம் இருக்கவில்லை. இருவருமே ஒரு ஒத்திசைவோடு, ஒத்த மனத்தோடு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றினார்கள். கண்ணனோ, உத்தவனோ ராது தன் அழுகையை நிறுத்திவிட்டுத் தன்னையறியாமல் தூங்கச் செல்லும்வரையில் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளை நிறுத்தவே இல்லை. ராது அசதியிலும், ஓரளவு கிடைத்த ஆறுதலிலும் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான்.

கண்ணனும், உத்தவனும் ஒரு தாய் தன் குழந்தையைத் தூங்க வைக்கும் அதி ஜாக்கிரதை உணர்வோடு ராதுவைத் தூங்க வைத்துவிட்டுக் கீழே மென்மையாகக் கிடத்திவிட்டுத் தங்களுக்கென ஒதுக்கப் பட்ட இடத்திற்குச் சென்றனர். உத்தவன் நகைத்துக்கொண்டே, “கண்ணா, நம் இருவருக்கும் நாளை தண்டனை இருக்கிறதே!” என்றான். “ம்ம்ம்ம்ம்ம், மோசமான அந்த நிலைமையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். பார்க்கலாம்” என்றான் கண்ணன். இருவரும் தூங்க ஆரம்பித்தனர். மறு நாள் விடிந்தது.

Monday, February 22, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்!

கப்பலில் கண்ணனும், உத்தவனும்!


கடல் அலைகளின் ஓங்கார சப்தத்தையும், கடல் நீரைத் துழாவிக்கொண்டு கப்பல் செல்லும் சப்தத்தையும் தவிர எங்கும் நிச்சப்தமாக இருந்தது. சற்று நேரம் கழித்துக் கண்ணனே அந்த மெளனத்தைக் கலைத்தான். “மிக மிக அருமையான கப்பல் பெரியப்பா!” என்றான் கண்ணன். கண்ணனின் இந்த உறவு முறையான அழைப்பில் சற்றுத் திடுக்கிட்டான் பிக்ரு. “எத்தனை வருஷங்களாகக் கடல் பயணம் செய்து வருகிறீர்கள்?” மேலும் கேட்டான் கண்ணன்.

“ஓ,ஓஓ, நான் மிகச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே கடலில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் குடும்பத்தார் அனைவருமே கடல் பயணிகள் தான்.”

“அப்படியா?? கடல் பயணம் என்பது மிகவும் அற்புதம் இல்லையா?? வேடிக்கையும், விளையாட்டும் கூட நிறைந்திருக்குமல்லவா? எத்தனை நாடுகள்? எத்தனை மக்கள்?? எவ்வளவு ஊர்கள்?? அடாடா! மனிதர்களில் எத்தனைவிதமான பழக்கங்கள் நிறைந்திருப்பார்கள்? அனைத்தையும் பார்க்கலாமே?? எனக்கும் கடல் பயணம் என்றால் கொள்ளை ஆசை பெரியப்பா! எனக்குக் கப்பலைச் செலுத்துவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்க முடியுமா?”

கண்ணனின் ஆர்வத்தைப் பார்த்த பிக்ரு அவனிடம் உனக்குப் பிடித்தால் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னான். “அருமையாகப் பராமரிக்கப்பட்டுள்ள கப்பல்” என்று கண்ணன் நற்சான்று வழங்க, மனம் மகிழ்ந்த பிக்ரு, சென்ற மாதம் குஷஸ்தலையில் இருந்தபோது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தான். “ஓஓ அப்படியா! குஷஸ்தலையில் இருப்பவர்கள் ராக்ஷசர்களோ?? எப்படிப் பட்டவர்கள்?” என்று ஏதுமறியாதவன் போல் கண்ணன் கேட்க, “அவர்கள், நம் தலைவனின் குலத்தைச் சேர்ந்தவர்களே!” என்று மறுமொழி சொன்ன பிக்ரு, மேற்கொண்டு அவர்களைப் பற்றிப் பேசினால் தனக்கு ஆபத்தோ என்ற எண்ணத்தில் பேச்சை நிறுத்தினான். கண்ணன் மனதுக்குள்ளாக பிக்ரு இந்தப் புண்யாஜனா கப்பலில் பிரயாணிக்கும் பாஞ்சஜனாவை வெறுப்பதைப் புரிந்துகொண்டான். எனினும் மேலே அவனும் பேசவில்லை. கப்பல் பற்றியே கேள்விகள் கேட்க, சற்று நேரத்தில் பிக்ரு தானாகவே அவர்கள் கட்டை அவிழ்த்துச் சுதந்திரமாக விட்டான். என்றாலும் கப்பல் தலைவனான பாஞ்சஜனாவிற்குத் தெரியாமல் இருக்கக் கூடாது என நினைத்து இருவரையும் பாஞ்சஜனா இருக்குமிடம் கொண்டு சென்றான்.

பாஞ்சஜனா நல்ல வளர்த்தியாக, உயரமும், பருமனுமாக, தழும்புகள் நிறைந்த முகத்தை மறைக்கவென்று வளர்க்கப் பட்டதோ என்று எண்ணும்படியான தாடியுடன் காணப்பட்டான். முகம் தாடியில்லாமல் பார்க்கவே பயங்கரமாக இருக்குமோ என எண்ணும்படி தழும்புகள் நிறைந்திருந்தது. இடுப்பில் கட்டிய ஒரு வேஷ்டியைத் தவிர வேறு ஆடை எதுவும் அணியாமல் பெரிய பெரிய ஆபரணங்களால் உடலை மறைத்திருந்தான். ஒரு வெள்ளிச் சங்கிலி இடுப்பை அலங்கரிக்க அதன் ஒரு பக்கம் கட்டப் பட்ட நீண்ட வாள் இடுப்பில் தொங்கியது. கையிலிருந்தும் ஒரு சங்கிலி அவனுடைய பதவியைக் குறிக்கும் பதக்கத்தோடு தொங்கியது. அவனுக்கு எதிரே மற்ற ஆட்கள் பயம் கலந்த மரியாதையோடு நின்றிருந்தனர். அவனுக்குப் பின்னால் இரு ராக்ஷசர்கள் கையில் பிடித்த சாட்டையோடு நின்றிருந்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்யும் ஆட்களில் எவர் தவறு செய்ததாக நிரூபிக்கப் பட்டாலும் அந்தச் சாட்டையடிக்குத் தப்பமுடியாது எனும் வண்ணம் அவர்கள் தயாராகக் காத்திருந்தனர். பிக்ரு இளைஞர்கள் இருவரையும் அங்கே கொண்டு சென்று இருவரும் கப்பலுக்கு வந்த விதத்தையும் தெரிவித்தான். பாஞ்சஜனா ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணன் அவனுக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பித்தான்.

“மதிப்புக்கு உகந்த தலைவரே! வணக்கம். நான் வாசுதேவ கிருஷ்ணன். சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்ற புநர்தத்தன் எங்கள் நண்பன். அவனைப் பிரிந்து எங்களால் இருக்கமுடியவில்லை. தாங்கள் அவனிருக்குமிடம் எங்களைக் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் கொண்டு செல்லுங்கள்” என்று மிகவும் வேண்டுதலாகச் சொன்னான்.

கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் கண்ணனின் வசீகரமும், நளினமும் கலந்த அழகு பாஞ்சஜனாவைக் கவர்ந்தது. “ஆஹா, வலுவில் வந்திருக்கும் இவர்களை நாம் விடக் கூடாது. அதிலும் இந்தக் கருநிறப் பையனுக்கு விலை அதிகம் கிடைக்கும்” என மனதுக்குள்ளாக எண்ணிக்கொண்டே அவர்கள் ஆசைக்குச் சம்மதிப்பதாகத் தெரிவித்தான் பாஞ்சஜனா. மேலும் தன்னுடைய அறை சகல வசதிகளோடு இருப்பதால் அங்கே வந்து தங்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டான். ஆனால் கண்ணனோ பிக்ருவோடு தாங்கள் தங்குவதாகவும், பிக்ரு தங்களுக்குக் கப்பல் ஓட்டக் கற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொன்னான். “ஹா,ஹா,ஹா,” எனச் சிரித்த பாஞ்சஜனா, “இத்தனை மெல்லிய, நளினமான கரங்களைக் கொண்ட நீங்கள் கப்பல் ஓட்டப் போகிறீர்களா? என் பெண்களுக்குக் கூட இத்தனை நளினமும், மெல்லியதுமான கரங்கள் கிடையாது. கரடு, முரடான கரங்கள் அவை. வலுவானதும் கூட. உங்கள் கரங்களில் வலுவில்லை.” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.

“ஆனால், தலைவா, நாங்கள் இங்கே சாப்பிடும் சாப்பாட்டுக்கு என இங்கேயே வேலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். நீங்கள் அளிக்கும் இலவசச் சாப்பாடு வேண்டாம் எங்களுக்கு.” என்று திட்டவட்டமாகக் கண்ணன் மறுத்தான். ஆனால் பாஞ்சஜனாவோ இந்த இளைஞர்கள் இப்போது இருப்பதுபோலவே மென்மையும், அழகும், நளினமும் பொருந்திக் காணப்பட்டாலே அதிக விலைக்கு விற்கமுடியும் எனக் கருதினான். கப்பல் ஓட்டக் கற்றுக்கொள்வது என்ன அவ்வளவு சுலபமா? கடலில் செல்லும்போது அடிக்கும் சுழிக்காற்று, சூரியனின் வெம்மை, மழையின் கடுமை என இயற்கையின் அனைத்துச் சீற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போது இவர்களின் தோற்றம் மாறிவிடுமே! மனதில் கவலை மிகுந்தது பாஞ்சஜனாவிற்கு. ஆனால் கண்ணனோ தொடர்ந்து வற்புறுத்த அரை மனதோடு சம்மதித்த பாஞ்ச ஜனா பிக்ருவிற்குக் கட்டளை இட்டான். “பிக்ரு, இந்த இளைஞர்களை அதிகம் வேலை வாங்காதே. முக்கியமாய் சூரிய வெப்பத்தில் இவர்கள் தோல் நிறம் மாறிவிடாமல் பார்த்துக்கொள். சூரியனின் வெம்மை தாக்கினால் இவர்களின் இளமைத் தோற்றமும், மென்மையும் மாறிவிடும். ஜாக்கிரதை! அப்படி ஏதானும் நேரிட்டால் உனக்குக் கடுமையான தண்டனை விதிப்பேன்!” என்று கடுமையாகச் சொன்னான். மேலும் தனக்குப் பின்னால் நின்றிருக்கும் ஆட்களைப் பார்த்துக் கண் ஜாடையும் காட்டினான். அவர்கள் தலை வணங்கிப் புரிந்ததுக்கு அடையாளம் காட்டினர்.
*************************************************************************************


இப்போ மேலே தொடரும் முன்னர் ஒரு சின்ன விளக்கம். இந்தக் கதையைப் புராணரீதியாகவே படிச்சிருப்போம். இப்போக் கொஞ்சம் மாறுபட்டு இருப்பது தெரிஞ்சிருக்கும். திரு முன்ஷிஜி அவர்களின் எண்ணம் அறிவுபூர்வமாகவும் கண்ணனால் இப்படி எல்லாம் செய்திருக்கமுடியும் என்பதைச் சொல்லுவதே. அதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்கவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இந்தக் கதையில் மேற்கொண்டு கண்ணன் செல்லும் இடங்களாய்க் குறிப்பிடப் படுபவை பற்றிய ஒரு விளக்கமும் கீழே.

கம்சனைக் கொன்றபின்னர் கண்ணன் செய்யும் மிகப் பெரிய சாகசங்களில் இது அடங்கும். புநர்தத்தனை வைவஸ்வதபுரிக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கே இருந்து கண்ணன் புநர்தத்தனை மீட்டு வந்ததாகவும் புராணங்கள் சொல்லும். ஆனால் இங்கேயே பிரபாஸ க்ஷேத்திரத்தின் குஷஸ்தலையில் இருந்த சில ராக்ஷசர்கள் எனக் குறிக்கிறோம். பாணிகள் என்பவரை ரிக் வேதத்தில் கடவுளுக்கு எந்தவிதமான நிவேதனங்களோ, யாகங்களோ, யக்ஞங்களோ செய்யாதவர்கள் எனக் குறிப்பிட்டிருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவர்களின் மொழியும் வேறு என்றும் சொல்கின்றனர். கடவுளை நம்பாததால் இவர்களை ராக்ஷசர்கள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். கடுமையான தொனியில் பேசுவார்கள் எனவும் குறிப்பிடப் படுகிறது. கடற்கொள்ளைக்காரர்கள் என்றும் சொல்லலாமோ??

இவர்கள் அனைவரையுமே இந்த ராக்ஷசர்கள் என்னும் ஒரே பதத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். இவர்கள் இருந்த இடம் என முன்ஷி அவர்கள் Phoenicia என்றும், யூரிதிரயன் கடலருகில் இவர்களின் குடியிருப்புகள் இருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் கடல் பிரயாணத்தில் வல்லவர்கள் என்றும், ஒழுங்குமுறையற்ற நடவடிக்கைகள் அதிகம் என்றும் கூறுகின்றார். கி.மு. 1600-1350 க்கு உட்பட்ட காலத்தில் இவர்களின் ஆதிக்கம் கடல் வெளியில் அதிகம் இருந்ததாகவும் சொல்லுகின்றார். Rawlinson's History of Phonecia P. 406 என்று ஆதாரம் கொடுத்திருக்கிறார். புத்தகம் இருக்கிறவங்க பார்த்துட்டுச் சொல்லுங்கப்பா! ஆகவே அரபிக்கடல் பிரதேசத்தில் இவர்களின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. புநர்தத்தனைக் கொண்டு செல்லவும் வழி வகுத்திருக்கிறது. நாளை புநர்தத்தன் எங்கே போயிருப்பான் என்பது பற்றிய ஒரு விளக்கம் காணலாம்.

Saturday, February 20, 2010

சீவகசிந்தாமணியின் முதல் பதிப்புக்கான முயற்சிகள்!

கீழே உள்ள பதிவை நேற்றே போட நினைத்து முடியவில்லை. இன்று போட்டுள்ளேன். இது உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப் பட்ட முயற்சிகள் பலவற்றில் ஒரு சிறு துரும்பு. எவ்வளவு கஷ்டப் பட்டு விபரங்கள் தேடி ஊக்கத்தோடும், முனைப்போடும் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரம். மேலும் அவருக்குத் தகவல்கள் கொடுத்து உதவியதும் ஒரு பெண்மணி. இதிலிருந்து அக்கால கட்டத்தில் பெண்கள் படிப்பதிலிருந்து தடுக்கப்படவில்லை என்பதும், முடக்கப்படவில்லை என்பதும் கற்றறிந்த சான்றோராகவே இருந்தனர் என்பதும் புரியவரும். பிற ஆண்களுக்கு எதிரே வருவது என்பது எல்லாக் குடும்பங்களிலும் வழக்கத்தில் இல்லை. ஆகவே அந்த அம்மையார் வெளியே வரவில்லை என்பது குடும்ப வழக்கம் என்றே கொள்ளவேண்டும். மற்றபடி கல்வியறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்தே விளங்கியிருக்கிறார் என்பதும் புரிய வருகிறது.
*************************************************************************************


186. "பவ்ய ஜீவன்"


மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்

சீவகசிந்தாமணி தமிழில் உள்ள சிறந்த காப்பியங்களில் ஒன்று. அது ஜைனசமயத் துறவியாகிய திருத்தக்க தேவரென்னும் பெரியாரால் இயற்றப் பெற்றது. ஜைனர்கள் அந்நூலை ஒரு பாராயண நூலாகப் போற்றி வருகின்றனர்.

முதன்முதலில் அந்நூலைத் தான் ஆராய்ந்து வெளியிட்டேனென்பது தமிழுலகு அறிந்த விஷயம். சிந்தாமணியே என்னுடைய தமிழ்நூற்பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழந்தமிழ்நூல்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே. தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன்முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே.

முதன் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிறந்தன. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷைபோல இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோற்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைன சமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ்நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடுதுறையாதீனமாகிய சைவ மடத்திற் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜைனத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏது?

நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். சிந்தாமணி ஏட்டுப் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவர் சேலம் இராமசாமி முதலியார். நானும் படித்து அவருக்கும் பாடஞ்சொல்லி வந்தேன். ஜைனசமயக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் பாடுபட்டேன். என்னிடம் படித்துக்கொண்டிருந்த இராமலிங்க பண்டாரமென்பவர், என் கஷ்டத்தையறிந்து கும்பகோணத்தில் ஜைனர்கள் சிலர் இருக்கிறார்களென்று கூறியதோடு தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியாரென்ற ஒருவரை எனக்குப் பழக்கம் செய்விப்பதாகவும் சொன்னார்.

ஒருநாள் சந்திரநாத செட்டியார் வீட்டிற்கு அவரும் நானும் போனோம். அந்த வீடு ராமஸ்வாமி கோவிலுக்கு மேல்புறமுள்ள ஒரு தெருவில் இருந்தது. அவர்கள் வீட்டில் வாழைமரமும், மாவிலைத் தோரணமும் கட்டப் பட்டிருந்தன. மாக்கோலம் போட்டிருந்தார்கள். ஜைனசமய நூல்களில் மிகச் சிறந்த பயிற்சியை உடைய *வீடூர் அப்பாசாமி நயினார் என்பவரும் வேறு சிலரும் வந்திருந்தனர். முதலில் சந்திரநாத செட்டியாரையும் அப்பால் மற்றவர்களையும் பழக்கம் செய்துகொண்டேன். "இன்று உங்கள் வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்தது போலிருக்கிறது." என்றேன் நான்; "ஆமாம்! இன்று சிந்தாமணி பாராயண பூர்த்தி உத்ஸவம். சில மாதங்களாகச் சிந்தாமணி படனம் நடந்து வந்தது" என்றார். வீடூர் அப்பாசாமி நயினார் சந்தை சொல்லச் சந்திரநாத செட்டியார் முதலியோர் அதைப் படனம் செய்து வந்தார்களென்று அறிந்தேன். எனக்கு அப்பொழுது இராமாயண பட்டாபிஷேஹம், பெரியபுராண படனம் முதலிய செய்திகள் ஞாபகத்துக்கு வந்தன.

அப்பால் என்னுடைய சந்தேகங்கள் போவதற்கு அந்த ஜைனர்கள் பெரிதும் துணை செய்வார்களென்ற தைரியம் எனக்கு உண்டாயிற்று. அப்பாசாமி நயினாரிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் சிலகாலம் கும்பகோணத்தில் இருந்தார். அவர் இருந்தவரையிலும் அடிக்கடி அவரிடம் சென்று விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் பிறகு ஊர் சென்றுவிட்டார். நான் கண்டு பேசிய ஜைனர் பலர், கும்பகோணத்தில் தரணி செட்டியார் என்ற ஒருவர் இருந்தனரென்றும் அவர் ஜைன விஷயங்களில் ஒரு உரையாணியைப் போல விளங்கினாரென்றும் கூறினார்;" அவர் இருந்திருந்தால் இந்த விஷயங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிடுவாரே!" என்று இரங்கினர்.

சந்திரநாத செட்டியார் மிக்க செல்வர்; ஜைன நூற்பயிற்சி நன்றாக உடையவர். அவருக்குச் சிந்தாமணி முழுவதும் பாடமாக இருந்தது. வைணவர்கள் திவ்யப் பிரபந்தத்தை ஸேவிப்பது போல அவர் சிந்தாமணியை ஸேவித்து மனனம் பண்ணியிருந்தார். நான் சிந்தாமணியை ஆராய்ந்தபோது நச்சினார்க்கினியர் தம் உரையினிடையே பின்னே வரும் செய்யுட்பகுதியை எடுத்துக்காட்டிச் சில செய்திகளை விளக்கி வருவதை அறிந்தேன். அப்படிக் காட்டப் பெற்ற பகுதிகள் எங்கே இருக்கின்றன வென்பதைத் தேடுவது ஆரம்ப காலத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போது சந்திரநாத செட்டியாரைக் கேட்பேன். கேட்டவுடனே அவர் அப்பகுதிகள் இன்ன இன்ன இலம்பகத்தில் இன்ன இன்ன பாட்டில் வருகின்றனவென்று சொல்லிவிடுவார். இப்படியே சிந்தாமணியை ஜைனர்களிற் பலர் பாடம் பண்ணியிருந்ததை நான் அறிந்தேன். ஆனாலும் அவர்கள் அச்செய்யுட்களை ஆராய்ச்சி முறையில் படிக்கவில்லை. குற்றங்களைந்து சுத்த பாடமாக மனனம் செய்யவில்லை. பரம்பரையாக வந்த பழக்கத்தினாலும் பக்தியினாலும் சிந்தாமணியைப் பாராயணம் செய்தும் மனனம் செய்தும் வந்தார்கள். சம்பிரதாயமாக வழங்கி வந்த உரையொன்றையும் அவர்கள் நெட்டுருச் செய்திருந்தார்கள். அந்த உரை பெரும்பாலும் சம்ஸ்கிருத பதங்கள் நிரம்பியும் பரிபாஷைகள் விரவியும் அமைந்திருக்கும். மூலத்திலும் உரையிலும் பலகாலமாக ஏறிப் போன வழுக்கள் வழுக்களாகவே இருந்தன. எட்டுப் பிரதிகளும் அவர்கள் பாடமும் எவ்வளவோ இடங்களில் மாறுபட்டன. அதனால் அவர்கள் பாடத்தை வைத்துக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமாயிற்று.

ஒருமுறை சந்திரநாத செட்டியார் வெளியூருக்குச் சென்றிருந்தார். ஸமவசரணம் என்பதைப் பற்றி விரிவாக அறியவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சந்திரநாத செட்டியார் இல்லாமையின் வேறு யாரையேனும் கேட்கலாமென்றெண்ணினேன். அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் குணபால செட்டியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவரும் ஜைனசமய சாஸ்திரப் பயிற்சியுடையவரென்று கேள்வியுற்றேன். யாரேனும் ஒருவர் என் ஆராய்ச்சிக்குச் சிறிதளவு பயன்படக்கூடியவராக இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்துப் பழக்கம் செய்துகொண்டு அவரிடமிருந்து அவருக்குத் தெரிந்தவற்றை அறிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஆதலின் குணபால செட்டியாரையும் பார்த்துப் பழக்கம் பண்ணிக்கொள்ளவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டேன். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனேன்.

அவரும் ஒரு செல்வர்; பிராயம் முதிர்ந்தவர். நான் போனவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார். நான் அந்த ஊர்க் காலேஜ் உபாத்தியாயராதலின் என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தார். ஒரு 'ஸோபா'வில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்த ஆஸனத்தில் மூட்டைப் பூச்சிகள் இருந்தன. சகல உரிமையோடும் அவை மேலே உலாவிக்கொண்டிருந்தன. ஒன்றைக் கையில் எடுத்தேன். குணபால செட்டியார், "ஹா ஹா ஹா!! கொல்லவேண்டாம், கொல்லவேண்டாம்" என்று நடுங்கிக் கொண்டே கையை அசைத்தார். ஜீவகாருண்யத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கும் ஜைனர்களில் அவர் ஒருவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கையில் எடுத்த மூட்டைப் பூச்சியை அதனுடைய இடத்திலே சுகமாக இருக்கும்படி விட்டுவிட்டு நான் அந்த 'ஸோபா'வினின்று எழுந்திருந்து வேறிடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் ஸமவசரணமென்பதைப் பற்றிக் கேட்டேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறிவிட்டுத் தம் வீட்டில் இருந்த ஸமவசரணத்தைக் குறிக்கும் படமொன்றைக் காட்டினார். நான் பார்த்து மகிழ்ந்தேன். அவரிடம் மேலும் பல விஷயங்களைக் கேட்டேன். சிலவற்றைச் சொன்னார். மாலை ஐந்து மணி ஆயிற்று. அவர் உணவுகொள்ளப் போய்விட்டார். இரவில் உண்ணுவது ஜைனர்களுக்கு விரோதமானது.

அவர் ஜைன சம்பிரதாயங்களை அநுஷ்டானத்தில் ஒழுங்காக அநுசரிப்பது கண்டு நான் வியந்தேன். அவர் போஜனம் செய்த பிறகு ஜின ஸ்தோத்திரங்கள் சொல்லத் தொடங்கினார். நெடுநேரம் சொல்லிவிட்டுப் பிறகு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். சில விஷயங்களை அவர் தெளிவாகச் சொல்ல இயலவில்லை; "நாளைக்கு வாருங்கள். இவைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறி என்னை அனுப்பினார். 'புஸ்தகங்களைப் பார்த்துத் தெரிந்து சொல்வார் போலும்!' என்றெண்ணிக் கொண்டு நான் திரும்பி வீடு சென்றேன்.

மறுநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு எதிரே சிறிது தூரத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைக் கண்டவுடன், "வாருங்கள்; இருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வருவாரென்று எண்ணினேன். சிறிது நேரத்தில் மீண்டு வெறுங்கையோடு வந்தார். "சரி, இப்போது உங்கள் சந்தேகங்களை யெல்லாம் சொல்லுங்கள்" என்று சற்று ஊக்கத்தோடு சொன்னார். அவர் என்னைக் கண்டதும், உள்ளே போனதும், மீண்டு வந்து ஊக்கத்தோடு இப்படிச் சொன்னதும், அவர் ஏதோ புதிய பலத்தைப் பெற்று வந்திருப்பதைப் போலத் தோற்றச் செய்தன.

நான் ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். அவர் அதைக் கேட்டு அங்கே இருந்த ஜன்னல்வழியாக உள்ளே யாரோ ஒருவரிடம் அதை அப்படியே சொன்னார்; உள்ளிருந்து சற்று மெல்லிய குரலில் அதற்கேற்ற விடை வந்தது. செட்டியார் அடைந்த புதியபலம் அந்தக் குரலென்பதை அறிந்து கொண்டேன். அக்குரல் ஒரு முதிர்ந்த பெண்பாலாருடையதென்று தோற்றியது. என்னுடைய சந்தேகத்துக்கு அது தெளிவான விடையாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து உள்ளே இருப்பவர் இன்னாரென்று பார்க்கமுடியவில்லை.

அடுத்தபடி வேறொரு கேள்வி கேட்டேன். செட்டியார் அதை வாங்கி ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினார். உள்ளிருந்து அந்த மெல்லியகுரலிலே விடை வந்தது. இப்படி நான் கேட்பதும் செட்டியார் அதை ஜன்னல் வழியாகத் தெரிவிப்பதும் அங்கிருந்து விடை வருவதுமாக ஸம்பாஷணை நடைபெற்று வந்தது. நானும் அதற்குள் ஓரளவு ஜைன விஷயங்களை அறிந்திருந்தேனாதலின் உள்ளிருந்து வரும் விடைகளை நன்றாகத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். இப்படி நிகழும்போது இடையே உள்ளிருந்த குரல், "பவ்யஜீவன் போலிருக்கிறதே!" என்றது. நான் மிகவும் சிரத்தையோடு மிக நுண்ணிய ஜைன சமயக் கருத்துக்களைக் கேட்டு வந்தேன். அக்கேள்விகளால் என்னைப் பற்றி ஓர் அபிப்பிராயம் அந்தக் குரலுக்குடையாருக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோற்றியது. பவ்ய ஜீவனென்பது ஜைனர்களுள் கிரமமாக மோக்ஷமடைவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது. எனக்கு அவ்விஷயம் முன்பே தெரிந்திருந்தது. ஆதலின் என்னப் பவ்ய ஜீவனென்று உள்ளிருந்தவர் கூறினவுடன் என் உடலில் மயிர்க்கூச்செறிந்தது. அர்கத் பரமேஷ்டியின் பக்தி எனக்கு அதிகமென்றெண்ணியேனும், நான் ஸந்தோஷமடையவில்லை. சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு என்பதை அந்த இனிய குரல் கூறி என்னைத் தேற்றியதாகவே நான் கருதினேன்.

சிந்தாமணிக்கு உரை எழுதத் தொடங்கிய நச்சினார்க்கினியர் மிகவும் உழைத்துச் செய்திகளை அறிந்து முதலில் ஓர் உரை வகுத்தனராம். அதை ஜைனப் பெரியார்களிடம் காட்டியபொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பால் அவர் ஒரு ஜைனவித்தியார்த்தி போல் சித்தாமூரிலுள்ள ஜைனமடத்திற்குச் சென்று ஜைன சமய நூல்களைக் கற்றுப் பிறகு இரண்டாம் முறை உரை எழுதினாராம். அதை யாவரும் அறிந்து பாராட்டினராம்.

இந்த வரலாற்றை நான் கேள்விப் பட்டிருந்தேன். அத்தகைய நூலை, "நடுக்காட்டில் வழி தெரியாது திகைப்பவனைப் போல நிற்கும் நான் எப்படி ஆராயமுடியும்? எனக்குத் தகுதி ஏது?" என்று ஐயமும் அச்சமும் கொண்டிருந்தேன். "பவ்ய ஜீவன்" என்று எனக்கு யோக்யதாபத்திரம் ஒரு ஜைன அறிவாளி மூலம் கிடைத்ததென்றால் எனக்கு ஆறுதலும் ஊக்கமும் உண்டாவதில் என்ன ஆச்சரியம்?

"உள்ளே இருந்து பேசுபவர்கள்...??" என்று பணிந்த குரலில் வாக்கியத்தை முடிக்காமலே செட்டியாரைக் கேட்டேன்.

"நம்முடைய பார்யை" என்று அவர் பெருமை தொனிக்கக் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மனைவியாருக்கு அதிக அறிவு இருப்பதில் அவருக்கு எல்லையற்ற திருப்தி இருந்தது.

"அப்படியா! அவர்கள் இன்றைக்கு எனக்கு மகோபகாரம் செய்தார்கள். நான் எங்கெங்கோ தேடித் தேடிக் கஷ்டப் பட்டேன். இந்தக் காலத்தில் இவ்வளவு விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் ஆச்சரியம்" என்றேன் நான்.

"எல்லாம் எங்கள் பிதா அவர்கள் ஆசீர்வாதம். அவர்கள் இட்ட பிச்சை."உள்ளிருந்த பெண்மணியார் கூறினார். அப்படிச் சொல்லும்போதே அவர்குரல் இடையிடையே தழுதழுத்தது; துக்கத்தின் கலப்பு அதில் இருந்தது. அவர் அப்போது தம்முடைய தந்தையாரை நினைவு கூர்ந்ததே அதற்குக் காரணம் என்று நான் ஊகித்துக்கொண்டேன்.

"அவர்கள் நாமதேயம் என்னவோ?" என்று நான் கேட்டேன். "தரணி செட்டியார்" என்று குணபால செட்டியாரே பதில் சொன்னார். "தரணி செட்டியார்வாளா!" என்று ஆச்சரியப் பட்டேன் நான். பலர் அப்பெரியாரைப் பற்றி அடிக்கடி கூறியது எனக்கு ஞாபகம் வந்தது.

"அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய அருமைக் குமாரியாரிடமிருந்து தெரிந்து கொள்ளும் லாபம் கிடைத்ததே; அதோடு, அவர்கள் எனக்குப் 'பவ்யஜீவன்' என்ற பட்டம் வேறு கொடுத்தார்களே; இதை நான் என்றும் மறவேன்" என்று நன்றியறிவோடு நான் கூறி விடை பெற்றுக்கொண்டேன்.


*.இவர் கும்பகோணம் காலேஜ் பிரின்சிபால் ஸ்ரீமான்ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினார் அவர்களுடைய பிதா.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கப்பலில் கண்ணனும், உத்தவனும்!


சாந்தீபனி தொடர்ந்தார்:
“கண்ணா, உன்னைவிடச் சில வருடங்கள் பெரியவன் என் குமாரன் புநர்தத்தன். சென்ற வருடம் நாங்கள் இங்கே வந்துவிட்டுத் திரும்புவதற்கு முதல்நாள் கடலில் குளிப்பதற்காக இந்தக் கடற்கரைக்கு வந்தான். எனக்குப்பின்னர் என்னுடைய குருகுலத்தைத் திறம்பட நடத்தப் போகிறான் என எண்ணி இருந்த என் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போயின. இந்தப் புண்யாஜனா ராக்ஷஸர்களால் அவன் கடத்தப்பட்டான். இங்கிருந்து இன்னும் மேற்கே வெகு தொலைவில் யமப்பட்டினம் என்ற பெயரில் ஒரு நகரம் இருப்பதாகவும், அங்கே என் குமாரனைக் கடத்திச் சென்றிருக்கலாமோ என்றும் சொல்லுகின்றனர். அங்கே சென்றவர்கள் திரும்பியே வரமுடியாது என்றும் சொல்லுகின்றனர். அந்த யமதர்மராஜாவே எடுத்துச் சென்றுவிட்டானோ என் மகனை? குமாரா, என் அருமைக்குமாரா! எவ்வளவு மென்மையான இதயம் படைத்தவன் அவன்?? என்னிடமிருந்து பிரிக்கப்பட்டதுமே அவன் இதயம் உடைந்திருக்குமே! அவ்வளவு கொடூரமான ராக்ஷஸர்களோடு இனி அவன் வாழ்நாள் பூராவும் எவ்வாறு கழிக்கப் போகிறான்??” புலம்ப ஆரம்பித்தார் சாந்தீபனி.

“ஆஹா, அதோ அவர்கள் கப்பல். மீண்டும் இந்தக் கடற்கரைக்கு வருகிறது. அவர்கள் கப்பலை மூழ்கடிக்கச் செய்யவேண்டுமென்றே என் மனம் விரும்புகிறது. ஆனால் அதற்காக என் மகனைப்பழிவாங்கிவிடுவார்களோ என்ற எண்ணத்தினால் தயக்கமும் ஏற்படுகிறது. “ குரு தேவரின் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிந்தன. “குருதேவா, நான் என்னால் இயன்ற அளவு முயன்று பார்க்கட்டுமா?” கண்ணன் கேட்டான்.

“வேண்டாம், வாசுதேவ கிருஷ்ணா, உன்னால் இயலாது. அவர்கள் ஏழு கடல்களுக்கும் பிரயாணம் செய்கின்றனர். படாலா என்னும் நகருக்கு அடிக்கடி செல்வார்களாம். மேலும் கருநிற ராக்ஷசர்கள் பலர் ஒரு கூட்டமாய் வசிக்கும் தீவுகளுக்கும் செல்கின்றனராம். யார் கண்டது? என் மகனை அங்கே யாரிடமாவது, எந்தத் தீவிலாவது விற்றிருப்பார்கள். அல்லது அவர்களின் துர் தேவதைகளுக்குப் பலியாகக் கூடக் கொடுத்திருக்கலாம். என் மகன் இருக்கின்றானோ அல்லது கொல்லப் பட்டானோ?”

“நான் ஒரு முயற்சி செய்கின்றேனே?”

“அப்பா, கண்ணா, நீ வம்பைத் தான் விலைக்கு வாங்கிக் கொள்வாய். அல்லது உனக்கும் புநர்தத்தனுக்கு நேர்ந்ததே நேர்ந்துவிட்டால்??? நான் என்ன செய்வேன்???” குரு பதறினார்.

“ஐயா, தாங்கள் அந்தக் கப்பல் இங்கே வந்ததும், அதைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் நான் அறிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள். சென்ற வருடம் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். ஆனால் நான் என்னுடைய குருதக்ஷிணையை இந்த விதத்தில் செலுத்த விரும்புகிறேன். நாளை என்னை இந்தக் குருகுலத்திலிருந்து விடுவித்து அனுப்பி வையுங்கள்.” என்றான் கிருஷ்ணன்.

“வாசுதேவ கிருஷ்ணா, உன் எண்ணத்தை நீ மாற்றிக்கொள்வதையே நான் விரும்புகிறேன். ஆனாலும் நீ இந்த விஷயத்தில் முனைப்பாக இருந்தால், பின்னர் அது உன் விருப்பம். ஆனால் இம்முயற்சியில் உனக்கு ஏதாவது நேர்ந்ததென்றால் உன் தகப்பன் வசுதேவனுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?? இவ்வளவு நாள் கழித்து உன்னை அடைந்திருக்கும் உன்னைப் பெற்ற தாய் தேவகிக்கு என்ன சொல்லுவேன்?”

“குருதேவா, அவர்களிடம் நான் தர்மத்தை நிலைநாட்டச் சென்றிருக்கிறேன் எனத் தெரிவியுங்கள். அந்தக் கொடூர புத்தியுள்ள கடத்தல்காரர்களைத் தண்டிக்கச் சென்றிருப்பதாய்க் கூறுங்கள்.”

உத்தவன் கண்ணனின் சித்தப்பாவான தேவபாகனின் மூன்றாவது குமாரன். கண்ணனைப் பிறந்ததுமே கோகுலத்துக்கு அனுப்பியபோது அவனோடு துணையாக அங்கே வளர்ந்து வர அனுப்பி வைக்கப் பட்டான். ஆகையால் சிறு வயதிலிருந்தே கண்ணனின் அருமைத் தோழனும், சகோதரனும், கண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவனாகவும் இருந்தான். கண்ணனின் மனதில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு செயலாற்றக் கூடிய திறமையும் கொண்டிருந்தான். இப்போது புண்யாஜனா கப்பலைப் பற்றிய செய்திகளையும், அந்தக்கப்பலில் பிரயாணிப்போர் பற்றிய தகவல்களையும் கண்ணனோடு சேர்ந்து அவனும் திரட்டி வந்தான். அவனுடைய ஒரே கவலை, ஒருவேளை கண்ணன் எடுக்கும் முடிவில் தன்னை விலக்கிவிடக் கூடாது என்பதே. புண்யாஜனா கப்பல் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரைக்கு வந்த நாலாம் நாள் வர்த்தகம் நல்லபடியாக முடித்துக்கொண்டு அதன் தலைவன் ஆன பாஞ்சஜனா கரையிலிருந்து ஒரு படகில் தன் கப்பலுக்குச் சென்றான். அன்று நள்ளிரவில் கிருஷ்ணனும் , உத்தவனும் கடலில் நீந்திக் கொண்டு அந்தக் கப்பலை அடைந்து மிகவும் கஷ்டப் பட்டு அந்தக் கப்பலில் ஏறினார்கள். மேலே குதித்ததுமே ஒரு மாலுமி இரவு நேரத்தில் பணி புரிபவனால் பிடிக்கப் பட்டனர். அவனுக்கு இவர்களின் மொழி தெரிந்திருந்தது. ஆகவே என்ன வேண்டும் என விசாரிக்க, உங்களுடன் செல்ல விரும்புகிறோம் என்று கண்ணன் புன்னகையுடன் கூறினான். மேலும், “எங்கள் குருவழி சகோதரன் ஆன புநர்தத்தனை சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்றுவிட்டீர்கள் அல்லவா? அவனைப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை. அவன் இருக்குமிடம் எங்களை அழைத்துச் செல்லுங்களேன். அதற்காகவே வந்தோம்.” என்றான்.

பிக்ரு என்னும் பெயர் கொண்ட அந்த மாலுமிக்குக் கண்ணனின் இந்த பயமற்ற தன்மையும், மிகவும் எளிதாகத் தன் விருப்பத்தைச் சொன்னதும் ஆச்சரியப்பட வைத்தது. பிரபாஸ க்ஷேத்திரத்து மக்கள் அனைவருக்கும் இந்தக் கப்பலில் வருபவர்களைக் கண்டாலே பயந்து நடுங்குவார்கள். அதுவும் இந்தக் கப்பலின் தலைவன் பாஞ்சஜனாவைப் பார்க்கக் கூட அவர்களால் இயலாது. ஆனால் இந்தப் பையர்களோ எனில்?? அவனுக்குக் கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. இருவரும் ஏதேனும் திருட வந்திருப்பார்களோ? ம்ம்ம்ம்??? எதற்கும் நங்கூரத்தை எடுத்துவிட்டுக் கப்பலை ஓட்ட ஆரம்பிப்போம். கப்பல் நகர ஆரம்பித்தால் பயந்து நடுங்கிக் கொண்டு மீண்டும் கடலில் குதித்துக் கரைக்கு நீந்திச் செல்வார்கள். நங்கூரம் எடுக்கப் பட்டுக் கப்பல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது. கடலில் அலைகள் மேலே பொங்குவதும், அடங்குவதுமாக இருந்தன. மேலே பொங்கும் சமயம் கப்பலும் அலைகளின் உச்சிக்குச் சென்றது. அலைகள் கீழே இறங்கும்போது கப்பலும் வேகத்துடன் கீழே இறங்கியது. அலைகளின் ஆட்டமும், அதனால் கப்பலின் ஆட்டமும் அதிகரித்தது. கப்பலும் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் இருவரும் சற்றும் கலங்காமல் இருந்தனர். ம்ம்ம்ம்ம்ம்???? என்ன இது??? பிக்ரு யோசனையுடனேயே கயிறுகளைக் கேட்டு வாங்கிக் கண்ணனையும், உத்தவனையும் அந்தக் கயிறுகளால் பிணைத்தான். இருவரும் தினம் தினம் இந்த மாதிரிக் கட்டுப் படுவதைத் தவிர தங்களுக்கு வேறு வேலை இல்லை என்பது போல் கட்ட அநுமதித்தனர். முகத்தின் புன்னகை மாறவே இல்லை. சுக்கானுக்கருகே அவர்களைக் கொண்டு சென்று விட்டுவிட்டு பிக்ருவும் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டான். சற்று நேரம் மெளனம் ஒருவருமே பேசவில்லை. பிக்ருவின் மனதில் குழப்பம் மிகுந்தது.

Friday, February 19, 2010

தமிழ்த்தாத்தாவுக்கு தாமதமான அஞ்சலி!

இன்று தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள். கொஞ்சம் தாமதமான அஞ்சலி. வழக்கம்போல் பதிவிடுவதில் கொஞ்சம் பிரச்னை. அதான்! அன்னாரின் சேவைகளைப் பற்றி நாம் நினைவு கூர்ந்தாலே தமிழுக்குப் பெரிய தொண்டு செய்தவர்களாவோம்.

Wednesday, February 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

சாந்தீபனியின் துக்கம்!

கடலையே அதுவரை கண்டிராத கண்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் இவ்வளவு பெரிய மேலைக்கடலைக் கண்டதும், ஆச்சரியமும், உற்சாகமும் பெருக்கெடுத்தது. கண்ணன் கடலின் நுட்பங்களையும், அதன் அலைகளையும், அவற்றின் வேகத்தையும், சீற்றத்தையும், அமைதியாய் இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொந்தளிப்பதையும் கண்டு ஆச்சரியப் பட்டான். மேலும் அந்தக் கடலில் படகை அவனே விட்டுக்கொண்டு போகவும் ஆசைப்பட்டான். ஆசானின் அநுமதியோடு படகைச் செலுத்தியும் பார்த்தான். குரு சாந்தீபனி அடிக்கடி அங்கே வருபவர் ஆதலால் அந்தப் பக்கத்து மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்தார். அனைவரும் மிகவும் மரியாதையுடனும், பக்தியுடனும் அவரை வணங்கினார்கள். சொல்லப் போனால் அவர் வரவை எதிர்பார்த்துக்காத்திருந்ததாகவே தெரிந்தது. சாந்தீபனியின் குருகுலத்து மக்களுக்கு பிரபாஸ க்ஷேத்திரத்தை நெருங்கியதும், அங்கே அப்போது ஆண்டுவந்த மன்னனால் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. செளராஷ்டிரம் என அழைக்கப் பட்ட அந்தப் பகுதியிலும் ஆரியர்கள் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆகவே அனைவருக்குமே இந்த குருகுலத்தின் வரவு தேவையாகவும், மகிழ்வாகவும் இருந்தது. ஏதோ திருவிழா போல் மக்கள் மனமகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டாடினார்கள்.

அங்கே இறங்கி தாற்காலிகமாய் குருகுலத்தை ஏற்படுத்திக் கொண்ட சாந்தீபனி தனக்கென ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக்கொண்டார். தன்னுடைய முதன்மையான சீடன் ஆன ஸ்வேதகேதுவின் மூலம் குருகுலத்துக்குக் கற்க வரும் அனைவருக்கும் அவரவருக்கு என்ன தேவையோ அதற்கேற்றாற்போல் கற்பிக்க ஆரம்பித்தார். தேர்ந்தெடுத்த சில திறமை வாய்ந்த சீடர்கள் அக்கம்பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்கே இருந்த மக்களுக்கும் பாடங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்பிக்க ஆரம்பித்தனர். அரசனாகட்டும், குருவாகட்டும், வருவார்கள், போவார்கள். ஆனால் நிலைத்து நிற்பது என்றென்றும் தர்மம் மட்டுமே. ஆகவே ஆரியர்கள் என்றாலே தர்மத்தைக் காப்பவர்கள் என்றே சொல்லப் பட்டது. அதனால் அவரவர்களுக்குரிய தர்மத்தைப் பாதுகாக்கவே அனைவரும் முயன்று வந்தனர். ஆரியர்களைத் தவிரவும் வேறு ஒரு இனத்து மக்களும் அங்கே வசித்து வந்தனர். அவர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தனர். தெருக்கள் அழகாகவும், ஒழுங்காகவும், வீடுகள் வரிசையாகவும் இருந்தன. அவர்களுக்கு மஹாதேவன் ஆகிய சிவபெருமானே கடவுளாக இருந்தான். ஆனால் லிங்க வழிபாடு செய்யாமல் சிவனின் உருவத்தை யோகமுறையில் அமைத்து வழிபட்டு வந்தனர். கப்பல் கட்டும் கலையிலும் சிறந்து விளங்கினார்கள். சொந்தமாய்க் கப்பல்கள் வைத்து வாணிபம் செய்தவரும் பலர் இருந்தனர். அவர்களின் மொழி தனியாக, வேறாக இருந்தாலும் ஆரியர்கள் பேசும் பெருவாரியான மொழியையும் பலரும் அறிந்து வைத்திருந்தனர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் பற்றிய தெளிந்த அறிவும் இருந்தது. சாந்தீபனியின் குருகுலம் கடற்கரையில் சூரியனின் கோயிலுக்கு அருகே அமைந்திருந்தது. வழக்கம்போல் இங்கேயும் தினமும் காலையும், மாலையும் குளித்தல், அன்றாட அநுஷ்டானங்கள் செய்தல், யக்ஞம் செய்தல் எனப் பலவேலைகளையும் செய்து வந்தாலும் இந்தக் கடற்கரைக்கு வந்தது முதலே குரு சாந்தீபனி ஏதோ இனம் தெரியாத தவிப்பில் இருந்து வந்தார். ஒவ்வொரு முறை கடலுக்குக் குளிக்கப் போகும்போதெல்லாம் கடலையே பார்த்துக்கொண்டு பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டு, கண்களில் வரும் கண்ணீரை மறைக்கப் பிரயத்தனப் பட்டுக்கொண்டு கடலில் அவசரம் அவசரமாக முழுகுவார்.

அவருக்குச் சென்ற வருடம் இங்கே கற்பிக்க வந்ததும், தன் ஒரே மகன் புநர்தத்தனை, பாஞ்சஜனா என்பவனால் அவனுடன் கப்பலில் அந்தக் கடற்கரைக்கு வியாபாரத்திற்கு வந்த புண்யாஜன இனத்தைச் சேர்ந்த பொல்லாத ராக்ஷசர்கள் கடத்திக்கொண்டு சென்றுவிட்டதும், அதன்பிறகு எப்படி எப்படியெல்லாமோ தேடியும் தன் மகன் திரும்பக் கிடைக்காததும் நினைவில் மோதியது. மகனைப் பற்றிய நினைவுகளிலே மூழ்கிப் போய்த் துன்பம் அநுபவித்துக்கொண்டிருந்த அவரால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது கஷ்டமாய் இருந்தது. திடீர் திடீரென நடு இரவில் கடற்கரைக்குத் தன்னந்தனியே வந்து கடலைப் பார்த்துக்கொண்டே, தூரத்தில் தெரியும் அடிவானத்தில் தன் பிள்ளை இருக்கிறானா எனத் தேடுபவர் போல் பார்த்துக்கொண்டே நிற்பார். கண்களோ மழையாக வர்ஷிக்கும்.

இதை அங்கு வந்ததில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு நாள் இரவு அவர் அம்மாதிரிப் போய் நிற்கும்போது கூடவே தானும் சென்றான். மெல்ல மெல்ல குருவின் அருகே போனான். அவன் வந்ததை உனர்ந்தார் சாந்தீபனி. தன் கண்களைத் துடைத்துக்கொண்டார். ஏற்கெனவே மற்ற மாணாக்கர்கள் மூலம் குருவின்மகன் புநர்தத்தன் கடத்திச் செல்லப் பட்டதை அறிந்திருந்தாலும் கண்ணன் அவரிடம் எதுவும் பேசவில்லை. சாந்தீபனி கண்ணனைப் பார்த்து, “குழந்தாய்! மகனே! இந்த வேளையில் இங்கே எதற்கு வந்தாய்?” என வினவினார். “குருவே, வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். உங்கள் துயரம் என்னவென்று எனக்கு நன்கு புரிகிறது. என்னால் எதுவும் செய்யமுடியுமா என யோசிக்கிறேன். உங்கள் அனைத்து மாணாக்கரிலும் நான் உங்களுக்கு மிக அருமையானவன் எனச் சொல்லி இருக்கின்றீர்கள். நானும் உங்களை என் தந்தையை விட மேலாகவே கருதி வருகிறேன். நான் ஏதானும் செய்து உங்கள் துயரத்தைப் போக்கமுடியுமா? தயவு செய்து கட்டளையிடுங்கள் குருவே!” என்றான் கண்ணன்.

“என் குழந்தாய்?? உன்னால் என்ன செய்யமுடியும்?? ராக்ஷசர்களின் பிடியில் அகப்பட்டுவிட்ட என் மகனை மீட்டுக் கொண்டுவர எவரால் இயலும்? யாராலும் என்னைச் சந்தோஷப் படுத்த முடியாது. உனக்கு இது இப்போது புரியாது கிருஷ்ணா! நீயும் ஒரு மகனுக்குத் தந்தையாகி, அந்த மகனே உலகம் என வாழும்போது இம்மாதிரி ஒரு கொடூர ராக்ஷசர்கள் கையில் அவன் அகப்பட்டு மறைந்து போகும்போது புரிந்துகொள்வாய். ஒரு மகனிடம் தந்தை என்பவன் தன்னையே பார்க்கிறான். வருங்காலம் என்பது அவன் தான் எனத் தெரிகிறது அவனுக்கு. வாழ்க்கையில் ஒரு தந்தைக்கு மகன் என்பவன் பெரும் ஊன்றுகோலாக விளங்குகிறான். இறப்பிலோ “புத்” என்னும் நரகத்திற்குச் செல்வதில் இருந்து காப்பாற்றுகிறான். ஒரு தந்தைக்கு மகனை இழப்பது என்பது அவன் வாழ்க்கையையே இழப்பதற்குச் சமானம். ஒரு மகனின் இடத்தை வேறு எவராலும் பூர்த்தி செய்யவும் முடியாது.”

சாந்தீபனி சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் தான் ஆசாரியர் ஸ்வேதகேதுவிடம் பாஞ்சஜனாவுடன் கப்பலில் வந்த ராக்ஷசர்கள் எப்படிப் புநர்தத்தனைக் கடத்தினார்கள் என்பதைக் கேட்டறிந்ததாகவும், அவனை மீட்க எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லையா என்றும் கேட்டான். சோகத்துடன் இல்லை எனத் தலையாட்டிய குரு, திடீரெனத் தொடுவானத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு சிறு கரும்புள்ளி தென்பட்டது. வர வரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. அதுதான் அந்தக் கப்பல் என்றும், மீண்டும் இங்கே வருவதாகவும் கூறினார். இந்தப் பாஞ்சஜனா என்பவன் புண்யாஜனா என்னும் ஆதிவாசிகளைச் சேர்ந்தவன் என்றும், சில வருடங்கள் முன்பு அவர்கள் குஷஸ்தலையைப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினார். (குஷஸ்தலை தான் இப்போதைய துவாரகை.) குஷஸ்தலையின் அரசனான குக்குடுமின் என்பவன் நாடோடியாக ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தப் புண்யாஜனா ராக்ஷசர்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதிரி இந்த மாதங்களிலேயே இங்கே வியாபாரம் என்ற போர்வையில் வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் வணிகம் முடிந்ததும் எங்கே திரும்பிச் செல்கிறான் என்பது புரியாமல் மர்மமாக இருப்பதாகவும் கூறினார். ஒருவேளை அது படாலாவாக இருக்கலாம் என்றும் கூறினார். (பாகிஸ்தானில் இருக்கும் இப்போதைய ஹைதராபாத், சிந்து பிரதேசங்கள். )

சென்ற வருடமும் அப்படித் தான் அவர்கள் வணிகம் செய்ய இங்கே வந்ததாகவும், அப்போது ஒருநாள் புநர்தத்தன் கடலில் குளிப்பதற்காகக் கடலுக்குச் சென்றான் என்றும் சொன்ன குரு, புநர்தத்தன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன், மிகவும் புத்திசாலை, வீரன் என்றெல்லாம் பெருமை பொங்கச் சொன்னார். எனக்குப் பின்னர் என்னுடைய குருகுலத்தை நடத்துவதற்கு அவனே சிறந்தவன் என எண்ணி இருந்தேன் என்றும் கூறிப் பெருமூச்செறிந்தார்.

Monday, February 15, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!


சக்கராயுதத்தில் தேர்ந்த கண்ணன்!

அனைவரும் பிரியாவிடை கொடுத்தனர் மூன்று சகோதரர்களுக்கும். குரு சாந்தீபனியின் இந்த நடமாடும் குருகுலமானது கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதில் பல தேசத்து அரசகுமாரர்களும் மாணாக்கர்களாக இருந்து பயின்று வந்தனர். என்றாலும் எக்காரணங்களை ஒட்டியும் குரு சட்டதிட்டங்களை இம்மியளவும் தளர்த்துவதில்லை. சாந்தீபனியின் குருகுலத்து மக்கள் இரவுப் பொழுதுகளை ஏதாவது ஒரு நதியின் கரையில் அமைந்துள்ள கிராமங்களில் கழித்தனர். அதிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தின் பொழுது எழுந்து அருகிலுள்ள நதிக்குச் சென்று நீராடித் தங்கள் காலைக்கடன்களையும், அநுஷ்டானங்களையும் முடித்துக்கொண்டு வேதப் பயிற்சி நடக்கும். அதற்குள்ளாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மாணாக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும் தேவையான பால் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப் படும். அதன் பின்னர் பயணம் தொடரும். பயணத்தின்பொழுதே, ஒரு தேர்ந்த திறமையான மாணவனால் வேதமந்திரங்களின் இலக்கணங்கள் பற்றியும் அதிலுள்ள நடைமுறைகள் பற்றியும் விளக்கப் படும். மாணவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒரு திறமைசாலியான மாணவன் பயிற்றுவித்துக்கொண்டே வருவான். இதைத் தவிரவும் அஸ்திரப் பிரயோகமும் அதில் தேர்ந்தவர்களால் கற்றுக் கொடுக்கப் படும். வழியில் தென்படும் சிறு சிறு விலங்குகள், மரங்கள், செடிகள் போன்றவற்றைக் குறி வைத்தோ, மரங்களின் கனிகளைக் குறி வைத்தோ, விண்ணில் பறக்கும் பறவைகளைக் குறி வைத்தோ அஸ்திரப் பிரயோகங்கள் கற்றுக்கொடுக்கப் படும். அவற்றிற்குத் தேவையான மந்திரப் பிரயோகம், மந்திரப் பிரயோகம் செய்யும் முன்னர் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், செய்ய வேண்டிய ஜபங்கள், தவங்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், கொஞ்சம் முறைதவறினாலும் அஸ்திரப் பிரயோகம் மாறிவிடும் என்பதைச் சுட்டிக் காட்டும் சாத்தியக் கூறுகள் என அனைத்தும் கற்பிக்கப் படும். மேலும் யுத்தம் என வந்துவிட்டால் எதிர் தரப்பினருடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள். யுத்தத்தின் விதிமுறைகள், தோற்றால் நடந்து கொள்ளவேண்டியவைகள், ஜெயித்தால் ஆணவம் வராமல் எப்படி விநயமும், அடக்கமும் தோன்றும்படி இருக்கவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இவை எல்லாம் சூரியன் உச்சிக்கு வரும்வரை கற்றுக்கொடுக்கப் படும். சூரியன் உச்சிக்கு வந்ததும் ஏதாவது ஒரு அடர்ந்த நிழல் தரும் மரத்தினடியில் ஓய்வு.

அருகிலுள்ள கிராமங்களுக்கு மாணாக்கர்கள் பிக்ஷைக்குச் செல்லுவார்கள். அனைவரும் ஒரே கிராமத்திற்குச் செல்ல மாட்டார்கள். அதே போல் ஒரு வீட்டில் பிக்ஷை எடுத்துவிட்டால் மீண்டும் அங்கே செல்ல மாட்டார்கள். அவர்கள் பிக்ஷையை முடித்துவிட்டு வருவதற்குள்ளாக சாந்தீபனி தன்னுடைய யக்ஞக் கடமைகளை முடித்துவிட்டுக் காத்திருப்பார். மாணாக்கர்கள் கொண்டு வரும் அரிசி, தானியங்கள் போன்றவற்றைக் கொண்டு கூடவே வரும் அரசகுமாரர்களின் பரிவாரங்கள் உணவு சமைத்து, குருவுக்கும், சீடர்களுக்கும் உணவளிக்கத் தயார் செய்யும். ஆனாலும் மாணாக்கர்கள் அனைவரும் தங்கள் பிக்ஷா பாத்திரத்திலேயே உணவை வாங்கிச் சாப்பிடுவார்கள். அங்கே பிக்ஷை போடத் தயாராகக் காத்திருக்கும் அரசகுமாரிகளுடன் ஒரு வார்த்தை கூடப் பேச அநுமதி இல்லை. மாணாக்கர்கள் பேசவும் மாட்டார்கள். ருக்மிணியும், தன் அண்ணனோடும், தங்கள் அரசப் பரிவாரங்களுடனும் இந்தக் கூட்டத்தில் கலந்து வந்து கொண்டிருந்தாள். இம்மாதிரியான சட்ட, திட்டங்களுடன் கூடிய ஒரு குருகுலத்தோடு போகிறோம் என அவளுக்குத் தெரியாது. கண்ணனை அடிக்கடி பார்க்கப் போகிறோம் என அவள் நினைப்பு. தூரத்தில் ரதத்திலிருந்து கண்ணனை பிரமசாரிக் கோலத்தில் பார்க்கப்பார்க்க அவள் மனதில் ஆச்சரியம் ஒரு பக்கமும், கண்ணனிடம் மதிப்பும், ஆசையும் இன்னொரு பக்கமும் பொங்கிப் பிரவாகமெடுத்தது. அவனை அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற ஆவலை அவளால் தடுக்க முடியவில்லை. அவனைப் பார்க்காமல் அவளால் இருக்கவும் முடியவில்லை. சாந்தீபனியின் மாணாக்கர்கள் உணவை வாங்க அந்தப் பக்கம் வரும்போது அனைவரையும் பின்னால் தள்ளிக்கொண்டு ருக்மிணி முன்னால் வந்துவிடுவாள். கண்ணனின் பிக்ஷைப் பாத்திரத்தில் தன் கைகளாலேயே உணவிடுவாள். மற்ற அரசகுமாரிகள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டு சிரிப்பை அடக்கிக் கொள்வார்கள். சிலர் சத்தமில்லாமல் சிரிக்கவும் செய்வார்கள். தலைக்கனம் பிடித்த இந்த விதர்ப்ப நாட்டு இளவரசியைத் தடுப்பவர் யார்? என நினைத்துக்கொள்ளுவார்கள். அவள் அண்ணனுக்கும், அண்ணிக்கும் இந்தப் பெண்ணை இந்த மாதிரியான வெளிப்படையான செயலில் இருந்து தடுக்கும் வழி தெரியவில்லை, புரியவில்லை. கஷ்டப் பட்டு தங்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டனர். எந்நேரமும் அவளைத் தங்கள் பார்வையிலேயே வைத்திருக்க முயன்றனர்.

ஆனால் எப்படியோ தந்திரமாக ருக்மிணி அவர்கள் பார்வையிலிருந்து தப்பி விடுகிறாள். என்ன முயன்றாலும் அவளைத் தடுக்க முடியவில்லை. தடுத்தாலோ அனைவருக்கும் நேரேயே அவள் கத்த ஆரம்பிப்பாள். அவள் கத்தலை அடக்குவது கஷ்டமாகிவிடும். வேறு வழியே இல்லை, பொறுத்துக்கொள்ளவேண்டியது தான். எதுவுமே நடவாதது போல் மிகவும் சிரமத்துடனேயே அமைதி காத்தனர் ருக்மியும் அவன் மனைவியும். ஆனால் கண்ணனோ?? ஒவ்வொரு முறை ருக்மிணி அவன் பிக்ஷா பாத்திரத்தில் உணவிடும்போதெல்லாம் அவளை நேருக்கு நேராகக் கண்ணோடு கண் சந்திப்பான். ருக்மிணியின் சிரிப்புக்கு எந்தவிதமான பதிலோ, அல்லது உணர்வுகளையோ காட்ட மாட்டான். கல்லைப் போல் உணர்வுகளற்றுக் காணப்படும் அவன் முகத்தின் இரு கண்கள் மட்டும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். ருக்மிணியின் அன்பை உணர்ந்துகொண்டதாய்த் தெரிவிக்கும். அதே சமயம் தான் இப்போது கடுமையான பிரமசரிய விரதத்தை அநுஷ்டித்துக்கொண்டு குருகுலத்தில் இருப்பதால் குருவின் பெயருக்கும், அவருடைய குருகுலத்தின் மேன்மைக்கும் எந்தவிதமான ஹானியும் தன்னால் ஏற்படக் கூடாது என்பதில் தான் தீர்மானமாக இருப்பதையும் தெரிவிக்கும் அந்தப் பார்வை!

சூரியனின் வெம்மை குறைய ஆரம்பிக்கும்போது மீண்டும் கிளம்பும் குருகுலம், மாலை நெருங்கும்போது மீண்டும் ஏதேனும் ஒரு நதிக்கரையின் மரநிழலுக்கடியில் தங்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கும். தங்கியதும், மாணாக்கர்களுக்குள்ளே மல்யுத்தம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். அனைத்தையும் கண்ணன் ரசித்தான். புதுமையான இந்தச் சூழல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் தன்னால் இந்தக் கட்டுப்பாடான வாழ்வு நெறிக்குப் பங்கம் நேரக் கூடாது என்பதிலும் உறுதிகாட்டினான். அவனுடைய ஆசிரியரான ஸ்வேதகேது, இவ்வளவு மரியாதையும், பண்பும், கீழ்ப்படிதலும் உள்ள மாணவனை இதுவரை கண்டதில்லை என்னும்படியான பண்பைக் கண்ணன் காட்டி வந்தான். ஒரு பாடம் ஆசிரியர் சொன்னால் உடனே அதை மனனம் செய்து விடுவான். ஆசிரியர் சொல்லுவதைத் தட்டுவது இல்லை. கூடப் படிக்கும் சக மாணாக்கர்களுக்குக் கண்ணன் செய்யும் உதவிகளும், அவர்களிடம் நட்புரிமையோடு பழகும் விதமும் ஸ்வேதகேதுவின் மனதைக் கவர்ந்தது. தாங்கள் அரசகுமாரர்கள் என்பதில் கர்வம் மிகுந்த அவந்தி நகரத்து இரட்டையர்களுக்குக் கூடக் கண்ணன் சேவை செய்து அவர்கள் மனதைக் கவர்ந்துவிட்டான்.

அனைவருடனும் ஸ்வேதகேதுவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவந்தி இளவரசர்கள் மட்டும் அனைவருடனும் நெருங்கிப் பழகுவது தங்கள் அரசகுல கெளரவத்துக்கு இழுக்கு என நினைத்து அதை விட்டு விலகாமல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல, இந்த நகரும் பல்கலைக்கழகமானது இன்றைய சம்பல் பள்ளத்தாக்கை நெருங்கியது. அங்கே விடைபெற வேண்டிய மற்ற இளவரசர்களும், அரச குமாரர்களும் விடை பெற்றுச் சென்றார்கள். கடைசியில் கிளம்பி ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் அவந்தியை அடைந்த குருகுலம் அங்கே தங்கியது. ஒவ்வொரு வருஷமும் இம்மாதிரி இருமுறைகள் சாந்தீபனியின் குருகுலம் இடம் பெயர்ந்து செல்லும். குருக்ஷேத்திரத்துக்கு வேத வியாசரைத் தரிசிக்க என ஒரு முறையும், பிரபாஸ க்ஷேத்திரம் எனப்படும் மேலைக்கடலோரம் இருக்கும் க்ஷேத்திரத்துக்கு ஒரு முறையும் செல்லும். பிரபாஸ க்ஷேத்திரத்தில் அனைத்து முக்கியமான புண்ணிய நதிகளும் கடலில் சங்கமிப்பதால் அங்கே ஸ்நாநபாநங்கள், ஜப தவங்கள் செய்வது சிறப்பு, அதிலும் பெளர்ணமி தின வழிபாடு அங்கே விசேஷமாய்ச் சொல்லப் படும். இன்னும் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குப் போகவேண்டிய நாள் வரவில்லை, அதுவரையிலும் கிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்கு வேண்டிய பயிற்சிகளை இங்கே பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

மெல்ல மெல்ல குரு சாந்தீபனியே கண்ணனுக்கும் பலராமனுக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். முட்கள் நிரம்பிய கதாயுதமும், யுத்தத்தில் பயன்படுத்தும் கோடரியும் பலராமனுக்குப் பிடித்தது. அவன் அதில் ஆர்வம் கொண்டு விளங்கினான். அவனுடைய பெரிய சரீரத்தில் இருந்து வேகத்தோடு வரும் கதையும், கோடரியும் எதிராளியை நடுங்க வைத்தது. கண்ணனுக்கோ சக்கரம் தான் மிகப் பிடித்தது. சின்ன வயதிலிருந்தே கண்ணனுக்குக் குறி பார்த்துச் சுருக்கை வீசி மாடுகளின் கழுத்தில் போட்டுப் பிடிக்க ஆவலாய் இருக்கும், அதுவே அவனுக்கு மிகவும் பிடித்த வேலையாகவும் இருந்தது. விஷப் பொய்கையில் காளியனைக்கட்ட இம்மாதிரிச் சுருக்கைத் தான் கண்ணன் பயன்படுத்தினான். இன்று அந்த வேகத்தைச் சுற்றிலும் பற்கள் போல் செதுக்கப் பட்ட இந்த வட்டவடிவமான ஆயுதத்தில் பிரயோகிப்பது கண்ணனுக்கு வெகு எளிதாக இருந்தது. சாந்தீபனியின் சீடர்களில் வெகு சிலருக்கே இது வரும். அவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தால் அதிகம். கண்ணனுக்கோ இதில் பயிற்சி செய்வது கைவந்த கலையாக இருந்தது. சீக்கிரமே சக்கராயுதத்தைச் செலுத்துவதில் கண்ணன் தேர்ந்தான். ஆயிற்று, பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் செல்லும் நாளும் வந்துவிட, பிருகு தீர்த்தத்தில் நீராட சாந்தீபனியின் குருகுலம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தது. கண்ணனும், பலராமனும் கூடவே சென்றனர்

Sunday, February 14, 2010

அப்புவோட சூலுக்குப் போகப் போறேனே!

பள்ளி நாட்களைப் பத்தி எழுதறதுக்கு வல்லி அழைச்சிருக்காங்க. ஹிஹி, நான் தான் குழந்தையாச்சே, பள்ளிக்கே இனிமேல் தான் போகணும்! அதான் போல, முந்தா நாள் பேசினப்போ அப்பு என்னை அதோட ப்ளே சூலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி இருக்கு. சரினு ஒத்துண்டிருக்கேன். நான் எங்கே ப்ளே சூல் எல்லாம் போனேன்?? :D நான் அதோட அழாமல் வரதுக்கு சாக்லேட் தரேன்னும் சொல்லி இருக்கு. கூடவே வாலண்டைன் கார்டும் கொடுத்திருக்கு. யு.எஸ்ஸில் வாலண்டைன் தினம் என்பது அனைவருமே அன்பைத் தெரிவிக்கும் தினம். அதனால் குழந்தைகள் கூட தங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கூடப் பிறந்தவர்கள் எனக் கொடுக்கிறாங்க. அப்பு சூலுக்குப் போகும்போது தினமும் (birdies)பர்டீஸ் கிட்டே எல்லாம் சொல்லிட்டுப் போகுமாம், இப்போ பனிங்கறதாலே பர்டீஸ் வரதில்லை, ஆனால் அதுக்கு ஆச்சரியமா இருக்கு, பர்டீஸ் ஏன் இல்லைனு?? பர்டீஸுக்கு லீவ் விட்டிருக்குனு சொல்லி வச்சிருக்கா அவ அம்மா!

போயிட்டு வந்துட்டு எழுதறேன் ஓகே??????? :)))))))))))))))))

Wednesday, February 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்

ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே!


கண்ணனின் செய்தியை எடுத்துக்கொண்டு உத்தவன் விருந்தாவனம் சென்றபோது விருந்தாவன வாசிகள் கண்ணன் வரவுக்குக் காத்திருந்தனர். கண்ணன் மதுராவில் இருக்காமல் விருந்தாவனம் தான் திரும்புவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் காத்திருந்தனர். மதுராவில் கண்ணன் நிகழ்த்திய சாகசங்களை உத்தவன் எத்தனை முறை கூறினாலும் அலுக்காமல் கேட்டனர். திரும்பத் திரும்பச் சொல்லச் செய்து மகிழ்ந்தனர். கண்ணன் இல்லாமல் விருந்தாவனம் வெறிச்சோடி இருப்பதையும், யமுனைக்கரையில் இப்போது ராஸ் நடப்பது இல்லை என்றும், யமுனை நதி கூடக் கண்ணன் பிரிவினால் வழக்கமான ஆரவாரத்துடன் ஓடாமல், மெதுவாகத் தயங்கித் தயங்கிக் கண்ணன் தன் கரையில் இருக்கிறானா எனப் பார்த்துக்கொண்டே செல்வதாகவும் கூறினார்கள். கண்ணனின் பெயரைச் சொன்னாலே பசுக்களும், காளைகளும், கன்றுகளும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடப் புல் மேய்வதைக் கூட நிறுத்திவிட்டு வேய்ங்குழல் ஓசை கேட்கிறதா எனக் காதுகளைத் தூக்கி நிமிர்த்திக்கொண்டு உற்று, உற்றுக் கவனிக்கின்றன. குழலோசை கேட்காத ஏமாற்றத்தை “அம்மாஆஆஆஆ”எனப் பெருங்குரலெடுத்துக் கத்தித் தீர்த்துக்கொள்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் யசோதா அம்மா, அம்மா, கண்ணனின் அருமைத் தாய், பித்துப் பிடித்தவள் போல் கனவிலும், நனவிலும் கண்ணனையே அழைத்துக்கொண்டு இருப்பதையும், அவளை நனவுலகுக்குக் கொண்டு வந்து மதுராவில் நடந்தவற்றைத் தெரிவிக்கப் பட்ட பாட்டையும் உத்தவர் விவரிக்கக் கேட்ட கண்ணனும் கண்ணீர்க்கடலில் ஆழ்ந்தான். இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?? மெதுவாய் உத்தவனைக் கண்ணன் பார்க்க, உத்தவனும் தயங்கித் தயங்கிக் கண்ணன் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தச் செய்தியைக் கூறினான்.:

அவனுடைய ராதை, கண்ணனின் உயிருக்கு உயிரானவள், அவன் மூச்சுக்காற்றிலே கலந்தவள், அவனின் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் தன் மூச்சுக்காற்றைப் பதித்து இன்று கண்ணனின் ஒவ்வொரு அசைவுக்கும் தானே காரணம் என்பதைச் சொல்லாமல் நிரூபித்துக்கொண்டிருப்பவள், கண்ணன் அவளுக்கென அனுப்பிய தனிச் செய்தியைக் காதாலும் கேட்கவில்லையாமே?? அப்படி என்ன தவறான செய்தியையா அனுப்பினேன்? கண்ணன் நினைத்து, நினைத்து வருந்தினான்:’நான் என்ன சொல்லி அனுப்பினேன் உத்தவனிடம்!’ “ராதா, என் உயிரும், உடலும் உன்னுடையது. என் கண்ணின் கருமணி போன்ற நீயே என் அனைத்து மகிழ்வுக்கும் காரணமாவாய். என் இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. நீ தான் எப்போதும் இருப்பாய். இப்போது நான் சொல்லும் இந்தச் செய்தியைக் கேள், நான் குருகுலவாசத்திற்குப் போகிறேன், குருகுலவாசம் முடிந்து திரும்பி வந்ததும், உன்னை வந்து பார்ப்பேன். நீ என்னுடன் வர விரும்பினாயானால் உடனே உன்னை அழைத்துவந்துவிடுவேன். இது சத்தியம்!” இதுதான் கண்ணன் உத்தவனிடம் கொடுத்த செய்தி.

ஆனால் ராதையோ இதைக் காதிலேயே வாங்கவில்லை. அரைகுறையாகத் தான் கேட்டாள் எனலாம். மேலும் ராதை உத்தவனைத் தானும், கண்ணனும் தினமும் தனிமையில் பொழுதைக் கழிக்கும் அந்தத் தோப்பிற்கு அழைத்துச் சென்று, தாங்கள் இருவரும் வழக்கமாய் அமரும் மரத்தடியைக் காட்டி, “இதோ, உத்தவா! என் கானா இங்கே இருக்கிறானே! பார், உனக்குத் தெரியவில்லையா?? இதோ, என் கானாவின் புல்லாங்குழல் எத்தனை இனிமையான இசையை இசைக்கிறது??என்ன உத்தவா. உனக்குக் காது கேட்கவில்லை???” சொல்லிக்கொண்டே ராதை உற்சாகத்துடன் ஒரு தட்டாமாலை சுற்றினாள். மேலும் அவள் உத்தவனைப் பார்த்து, “உத்தவா, என் அருமை நண்பா, உனக்குக் காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லையா? என் கானா எங்கேயுமே போகவில்லை, தெரிந்து கொள் அதை! அவன் இதோ இங்கே என்னோடு இருக்கிறான். என்னோடு நான் எங்கே போனாலும் வருகிறானே! என் கானா என்னுடனே வாழ்கின்றானே! என்னோடு தான் என் வீட்டில் வசிக்கிறான். இதுக்கு மேலே எனக்கு வேறு என்ன வேண்டும் உத்தவா? அவன் என்னை விட்டுப் பிரிந்தால் அல்லவோ நான் துக்கப்பட முடியும்? என் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக்கொண்டு, கேட்டுக் கொண்டு அநுபவித்துக்கொண்டு இதோ என் கானா, என்னுடனேயே இருக்கிறானே! எனக்கு இன்னும் வேறு என்ன வேண்டும்? அவன் எங்கேயுமே போகவில்லை உத்தவா, எல்லாம் உன் பிரமை! உனக்கு ஒன்றுமே புரியவில்லை!” கலகலவென்று உற்சாகம் சற்றும் குறையாமலேயே சிரித்த ராதையைப் பார்த்த உத்தவன் கண்கள் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அந்தத் துக்கம் மாறாமலேயே துக்கம் தொண்டையை அடைக்க ராதையின் நிலைமையைத் தான் கண்டபடிக்கு வர்ணித்தான் உத்தவன் கண்ணனிடம். மேலும் உத்தவன் சொன்னான்: “கண்ணா, அவள் சொன்னதைக் கேட்டும், அவள் சந்தோஷத்தைப் பார்த்தும் முதலில் எனக்கு அவளிடம் கோபமே வந்தது. ஆனால் அவள் மகிழ்ச்சி என்பது சற்றும் பொய்யே இல்லாமல் உண்மையாகத் தெரிந்தது. ஆகையால் அவளைக் கடிந்து கொள்ள மனம் வரவில்லை. உன்னுடைய புல்லாங்குழலில் ராதை கீதங்கள் இசைத்துக்கொண்டு யமுனைக்கரையில் அவள் விருப்பம் போல் சுற்றித் திரிகிறாள். கூடவே நீ அருகிலிருந்தால் என்ன பேசுவாளோ, அப்படி எல்லாம் பேசிக்கொள்கிறாள். பதில் வருகிறாப் போல் பாவனையும் செய்கின்றாள். சில சமயம் அவள் நிலை எனக்குக்கொஞ்சம் பயமாகவும் இருந்தது கண்ணா!” உத்தவன் நா தழுதழுக்க ராதையின் நிலைமையைக் கூறி முடித்தான். ஆனால் கண்ணனுக்கோ ராதையின் நிலைமை நன்கு புரிந்தது. ராதை தன்னுள் கலந்து விட்டாள். நானும் அவளுள் கலந்துவிட்டேன். ஒருவருக்கொருவர் இப்படிக் கலந்த பின்னர் வெறும் உருவம் எதுக்கு? அதான் ராதை நான் அவளுள் இருப்பதை உணர்ந்து என்னுடன் பேசுகிறாள். அவள் வேறு எங்கும் போகவில்லை. என் மூச்சில் உறைந்திருக்கிறாள். நான் மற்றவர்களுக்கு வாசுதேவ கிருஷ்ணனாக இருக்கலாம். ஆனால் என் ராதைக்கு நான் என்றுமே கானா தான். நான் என்றுமே அவளுக்குரியவன், அவளுடனே உறைபவன். கண்ணனுக்கும் இனம் புரியாத சந்தோஷம் வந்தது. ராதையின் அளப்பரிய அன்பையும், காதலையும், பக்தியையும் நன்கு புரிந்து கொண்டதால் இந்த உறவே ஓர் அற்புதமான, அதிசயமான, ஜோதிமயமான ஒன்றாகத் தெரிந்தது. வாழ்க்கையே திடீரென சந்தோஷமும், ஆநந்தமும் நிரம்பித் ததும்பியது. அழகு கொஞ்சியது.
************************************************************************************


சாந்தீபனியின் குருகுலம் மதுராவை விட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. கம்சன் இறந்து இருபத்தைந்து நாட்களாகிவிட்டன. யமுனைக்கரையோடு சென்ற சாலையில் சென்றது அந்த நடமாடும் பல்கலைக்கழகம். அதிகாலையிலேயே, பிரம்ம முஹூர்த்தத்திலே யமுனை நதியில் குளிர்ந்த பிரவாகத்திலே நீராடிக் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டனர். மதுரா நகரின் வெளிப்பாகத்திற்குச் சென்று தொடர்ந்து வரும் மற்றவர்களுக்குக் காத்திருந்தனர். அரச விருந்தாளிகள் அனைவரும் வந்தனர். அவர்களை உக்ரசேன ராஜா, அக்ரூரர், ப்ரத்யோதா போன்ற மிக உயர்ந்த யாதவத் தலைவர்கள் அழைத்து வந்தனர். தநுர்யாகத்திற்கென வந்துவிட்டு இன்னும் திரும்பாமல் இருந்த பல இளவரசர்களும் அன்று அவரவர் நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யமுனைக்கரையே ரதங்களாலும், யானை, குதிரை, இளவரசர்களைத் தொடர்ந்து வந்த படை வீரர்கள் என நிரம்பி வழிந்தது. வந்திருந்த இளவரசர்களில் பெரும்பாலோர் கம்சனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அனைவரும் கம்சனின் மாமனாரான ஜராசந்தனைத் தங்கள் முன் மாதிரியாகக் கொண்டிருந்தனர். அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வசுதேவர், அக்ரூரர் போன்றவர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போயின. அனைவரும் சம்பிரதாயமாகவும், கடமைக்காகவுமே இத்தனை நாட்கள் காத்திருந்த மாதிரி இருந்தது, இப்போது அவர்கள் கிளம்பும் காட்சியிலும், சம்பிரதாயங்கள் சற்றும் குறைக்காமலே அனைத்து முறைகளும் பின்பற்றப் பட்டன. எல்லாரிலும் ருக்மி சற்று அதிகமாகவே தன் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டான். பீஷ்மகன் மிகவும் பலம் பொருந்திய அரசன், அவன் மகன் ருக்மி, அவனைப் பகைத்துக்கொள்வது தங்களுக்குக் கொஞ்சம் கவலையைக் கொடுக்கிறது என்பது யாதவத் தலைவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்???

சாந்தீபனியின் நடமாடும் பல்கலைக்கழகத்தோடு செல்லும் கண்ணன், பலராமன், உத்தவன் ஆகியோருக்கு விடைகொடுக்க தேவகி, ரோகிணி போன்றோரும் வந்தனர். திரிவக்கரை தன்னுடைய வாசனைத் திரவியங்களை எடுத்து வந்து ருக்மிணிக்குக் கொடுத்தாள். கண்ணனிடம் தன் அன்பைக் காட்டி விடை கொடுத்தாள். தேவகிக்குத் தன் மகன் தன்னிடம் திரும்பி வந்ததில் ஆநந்தம் தான். ஆனாலும் இப்போது பிரியவேண்டி வந்திருக்கிறதே! ஆனால் என்ன செய்வது? இவனுக்காக நான் வருடக் கணக்காய்க் காத்திருந்தேனே. நல்லவேளை, இப்போது நமக்குத் தெரிந்தவர்களோடு படிக்கத் தானே போகிறான். நல்லவேளையாக மதுராவின் அரசுரிமையை வேண்டாம் என மறுத்தான். சாந்தீபனி போன்றதொரு உயர்ந்த குருவின் சிக்ஷையால் அவன் வாழ்க்கை மட்டுமில்லாமல் மொத்த எதிர்காலமும் பிரகாசமாய் விளங்கும்.

Tuesday, February 09, 2010

புகையே வராத கொசுவத்தி!

ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாம்னு தோணிச்சு. வல்லி தன்னோட பதிவிலே தீப்பெட்டிப் படங்கள் சேர்ப்பது பத்தி எழுதி இருந்தாங்க இல்லை?? அன்னிலேருந்து இதே நினைப்பு. ஆனால் வேலை அதிகம். இணையத்திலே வந்தால் எழுதி வச்ச பதிவுகளை அவசரமாப் பதிவு போடறதுக்கும், முக்கியமான மடல்கள் பார்க்கவுமே சரியாயிடும். நேரம் இல்லை. எழுதி வச்சது எல்லாம் தீர்ந்து போச்சு. இனி எழுதணும், அதுவரைக்கும் கொசுவத்தி சுத்துவோம். இது லேட்டஸ்ட் கொசுவத்தி. வல்லியோடது மாதிரி அதிகம் புகை வராது. லேட்டஸ்ட் குட்நைட் கொசுவத்தி!
***********************************************************************************
வல்லி சொன்னாப்போல் தீப்பெட்டிப் படங்கள் மட்டுமில்லாமல் கோலிக்குண்டுகளும் சேர்க்கறதுண்டு. மயிலிறகு சேர்க்காதவங்களே இருக்கமுடியாது. அது குட்டி போட்டிருக்கானு தினம் தினம் திறந்துபார்க்கிறதும், திறந்தா குட்டி போடாதுனு சொல்லுவதும் எல்லாருக்கும் நடந்திருக்கும். கோலிக்குண்டுகள் இருவகையில் இருந்தன. மாவுக்குண்டு ஒண்ணு, கண்ணாடிக் குண்டு இன்னொண்ணு. கண்ணாடிக் கோலிக்குண்டுகளுக்கு மதிப்பு அதிகம். மாவுக்கோலிக்குண்டுகளை யாருமே சீந்த மாட்டாங்க. அடிச்சு ஆடும்போது உடைஞ்சும் போயிடும். மேலும் கண்ணாடிக் கோலிக்குண்டு வச்சிருந்தால் தான் பணக்காரங்களாவும் மதிக்கப் படுவோம்.

கோலிக்குண்டுகளை வைச்சு விளையாடி இருக்கீங்களா?? குறி பார்த்து அடிக்கணும். கல்லாட்டம் ஆடிப் பழக்கம் இருந்ததாலே, இதிலேயும் ஆடலாம். இந்த ஆட்டத்துக்குப் பேரு கூட உண்டு. மறந்துட்டேன்! தம்பியைக் கேட்கணும்! அவனுக்குச் சரியா ஆட வராது. தம்பிக்காக நான் ஆடிக்கொடுப்பேன். ஹிஹிஹி.ஆனால் வெளியே போயிருக்கும் அப்பா வராமல் இருக்கணும். ஏற்கெனவே தம்பியை ரொம்ப சாது, நீ தான் எல்லாம் கத்துக்கொடுக்கிறேனு சொல்லிட்டு இருப்பார். தம்பிக்கு நாலும் தெரிஞ்சுக்க வேண்டாமா?? :))))))) தம்பியைத் தைரியசாலி ஆக்குவது என் பொறுப்புனு எடுத்துக்கிட்டேன்.

அப்போ எல்லாம் பொன்னியின் செல்வன் முதல்பாகம் படிச்சுட்டு இருந்த நாட்கள். கல்கியிலே முதல்லே எப்போ வந்ததுனு தெரியலை. ஆனால் அப்பா பள்ளி நூலகத்திலிருந்து எடுத்துட்டு வருவார். கல்கியிலே இருந்து எடுத்துத் தொகுத்துப்பைண்ட் செய்யப் பட்ட புத்தகங்கள். அதிலே வர குந்தவையா என்னை நினைச்சுப்பேன். ஆனால் சோழ ராஜகுமாரிங்கறது மட்டும் கொஞ்சம் இடிக்கும். அப்போவே பாண்டிய நாடுதான் உசத்திங்கற எண்ணமெல்லாம் நிறையவே உண்டு. (யாருக்குத் தெரியும்? தஞ்சாவூர்க்காரரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு எல்லாம்? மதுரையை விட்டே போகக்கூடாதுனு நாங்க சிநேகிதிங்க எல்லாம் கூடிப்பேசிப்போம், இன்னிக்கு யார், யார் எங்கே இருக்கிறாங்கனே தெரியலை! :D)

இப்படியே ஆடி, ஆடி ஒருமாதிரியாத் தம்பி தனியே ஆடும் அளவுக்கு வளர்ந்துட்டான். அவனே ஆட ஆரம்பிச்சுட்டான். ஆனாலும் பம்பரத்திலே அப்பீட்ட் எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கேன். அப்படினா பாசம் எவ்வளவு அதிகம்னு புரிஞ்சுக்கோங்க! :D அடுத்த ஆட்டம் கல்லா மண்ணானு ஒண்ணு ஆடுவோம். கண்ணை மூடிக்கொண்டு கல்லைத் தூக்கிப் போட்டு ஆடிக்கொண்டே வரணும். கல்லுனு ஒரு பாகமும், மண்ணுனு ஒரு பாகமும் தெரு நடைமேடையில் நிர்ணயிக்கப் பட்டிருக்கும். அப்புறமா இரண்டு பெண்கள் கையைக் கோர்த்துக்கொண்டு நிற்க நாம அந்தக் கைகளுக்குள்ளே புகுந்து ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததுனு பாடிக்கொண்டே போயிட்டு வரணும், அவங்க எப்போ நம்மைப் பிடிப்பாங்கனு தெரியாது. ஜாக்கிரதையா நாம போகணும், அவங்க அதைவிட உஷாரா இருந்து பிடிப்பாங்க. பிடிச்சுட்டா நாம் தோத்துப் போயிட்டோம். ம்ம்ம்ம்ம்ம் ஏக்கப் பெருமூச்சுத் தான் ஜாஸ்தி வருது! இப்போதைய குழந்தைங்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியுமா, புரியுமா?? :((((((

Sunday, February 07, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில்!!!!

கண்ணன் இப்போது தன் குருவான சாந்தீபனிக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பகுதியின் தோட்டத்தில் தரையில் மான் தோலை விரித்துப் படுத்திருந்தான். அவனுக்குள் எண்ண ஓட்டங்கள். இனி இந்த பிரமசரிய விரதம் முடியும்வரையிலும் அவனுக்கு வேறு நினைவுகள் இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அவன் நினைவுகள் அனைத்தும் குருவின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலேயே செல்லவேண்டும். அவர் கற்றுக்கொடுப்பதை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றுச் சிறந்த மாணவனாகப் பெயர் வாங்க வேண்டும். அவனைப் பெற்றவர்களுக்கும், வளர்த்தவர்களுக்கும் அதுவே மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். பெற்றவர்கள்??? வளர்த்தவர்கள்?? கண்ணன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் சுரந்தது. மனம் விம்மித் தணிந்தது. அவன் மறக்கவேண்டியவை என்னவெல்லாம் இருக்கின்றன?? கோவர்தன மலை, விருந்தாவனம், கோகுலம், கோபர்கள், கோபிகள், அங்கே உள்ள பசுக்கள், காளைகள், யமுனை நதி, யமுனைக்கரை, அங்கே நிலவொளியில் “ராஸ்” ஆடிப்பாடிக் கழித்த நாட்கள், எல்லாவற்றுக்கும் மேல் அவனின் மூச்சுக்காற்றோடு தன்மூச்சையும் கொடுத்து அவனுடனேயே ஐக்கியமான ராதை, அவன் வாழ்வின் வசந்தம், ஆநந்தம் (அவளை இனி நான் காணவே முடியாதன்றோ??) தந்தை நந்தகோபர், தாய் யசோதை, (ஆஹா, யசோதா அம்மா என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாள்?) யாரையுமே இனி அவனால் நினைத்துப் பார்க்க முடியாது. அவன் கடமைகள் வேறாகிவிட்டன. அவனுக்கு முன்னால் பரந்து விரிந்த ஒரு உலகமும், அதன் மக்களும், அவன் சேவையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவன் வந்து தங்களை உய்விப்பான் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை நான் பொய்யாக்க முடியாது. என் வாழ்நாளில் அவர்களுக்கான சேவைக்கே இனி முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். கண்ணனின் சிந்தனைகள் தொடர்ந்தன.

குரு சாந்தீபனி தன் புதிய சீடர்களான கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரையும் தன் நம்பிக்கைக்கு உகந்த தன் மருமகன் ஆன ஸ்வேதகேதுவிடம் ஒப்படைத்திருந்தார். ஸ்வேதகேது மிகவும் திறமைசாலி என்று பேசிக்கொண்டார்கள். பார்ப்பதற்கு சாந்தீபனியின் சாயலில் இருந்தாலும் இளைஞன். மிகவும் அறிவாளியாகவும், அனைத்து வேதங்களிலும் நிபுணன் எனவும் பேசிக்கொண்டனர். ஸ்வேதகேதுவின் மாணாக்கர்களில் இவர்கள் மூவரைத் தவிர அவந்தி தேசத்து இரட்டையர்களான விந்தன், அநுவிந்தன் இருவரும் இருந்தனர். ஆனால் யார் விந்தன், யார் அநுவிந்தன் என்பது சற்றுக்குழப்பமாய்த் தான் இருந்தது கண்ணனுக்கு. அவர்களோ தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். இரட்டையர்கள் தாங்கள் இருவரும் அரசகுமாரர்கள் என்பதும் கண்ணனோ, பலராமனோ அரசகுமாரர்கள் இல்லை என்பதையும் வெளிப்படையாய்க் காட்டினார்கள் . அவர்களோடு நட்புரிமையோடு கண்ணன் பழக முயன்றால் தங்களைப் போன்ற ராஜகுலத்து மாணாக்கர்கள் இம்மாதிரி இடைச்சிறுவர்களோடு பழகுவது அகெளரவம் என்ற தொனி தொனிக்கப் பேசினார்கள். மேலும் தங்கள் மான் தோலை அணிவதிலும் அலட்சியம் காட்டியதோடு, பிக்ஷைக்குச் செல்லுவதும் மதுராவின் அனைத்து வீடுகளிலும் சென்று பிக்ஷை எடுக்காமல் அரசகுமாரிகளும், பெருந்தனக்காரர்களும் இருக்கும் மாளிகைகளில் மட்டுமே பிக்ஷை எடுத்தார்கள். கண்ணன் அவர்களின் அறியாமையை நினைத்துச் சிரித்துக்கொண்டான்.

கண்ணனோ திரிவக்கரையின் அழைப்பையும் ஏற்று அவள் வீட்டிற்குச் சென்று ஒருநாள் பிக்ஷையை வைத்துக்கொண்டான். அன்போடு அவள் சமைத்து அளித்த எளிய உணவு அவனுக்கு அமுதமாக இனித்தது. அந்த உணவில் அவள் மனதின் அன்பு பரிபூரணமாக வெளிப்பட்டது. என்ன ஒரு கஷ்டம் என்றால் அவன் செல்லும் இடங்களிலெல்லாம் இந்த ருக்மியின் செல்லத் தங்கை ருக்மிணி கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். இவள் என்ன நினைக்கிறாள் மனதில்??? யாரிடம் பிக்ஷைக்குப் போனாலும் அந்த வீட்டுப் பெண்மணி பிக்ஷை அளிக்கும்போது இவளும் தன் கைகளால் கண்ணனின் பிக்ஷா பாத்திரத்தில் பிக்ஷை போட்டுவிட்டுக் கண்ணனைப் பார்த்துச் சிரிக்கவேறு செய்கிறாளே. அவள் என்னதான் அழகாய் இருந்தாலும், ஒரு நாட்டின் அரசகுமாரி, இப்படிச் செய்யலாமா?? முற்போக்குத் தேவைதான் ஆனாலும் இது கொஞ்சம் அதிகமோ?? கண்ணனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் அவள் அண்ணன் ருக்மியை எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தப் பெண்ணோ??? அடடா??? எவ்வளவு பெரிய கண்கள்?? கடல் போன்ற கண்களில் மிதக்கும் அந்தக் கருமணிகள்!! ஆஹா அந்தக் கருமணிகள் என்னை எங்கோ இழுத்துச் செல்கின்றனவே?? அவள் கண்களின் கருமணிகள் இங்கேயும், அங்கேயும் அலைந்து திரிந்து என்னைப் பார்த்ததும் நிலைகொண்டுவிடுகின்றன. ஆனால் அந்தக் கண்ணின் கருமணிகள் என்னைக் காந்தம் போல் இழுத்துச் செல்கின்றன. அந்தக் கண்களின் ஆழத்துக்குள் என்னை இழுத்துச் செல்கின்றன. நிலவைப் போல் பிரகாசிக்கும் அவள் முகமண்டலத்தில் என்னை உலாத்துகின்றன. இவள் ராதையைப் போல் இல்லை. ராதை ஒரு காட்டாறு. இவள் மலையிலிருந்து உற்பத்தி ஆகி, ஒரு ஒழுங்கோடும், அழகோடும், நெளிந்து, வளைந்து, செல்லும் இடமெல்லாம் செழிக்கச் செய்துகொண்டு செல்லும் கங்கையைப் போன்றவள், யமுனையைப் போன்றவள். ராதையிடம் ஆநந்தம் பரிபூர்ணமாய்ப் பிரவாஹித்துப் பூச்சிதறல்கள் போல் கொட்டிக்கொண்டே இருக்கும். இவளோ, சூரியனைக் கண்டதும் மலரும் தாமரையைப் போல் என்னைக் கண்டால் மட்டும்……. அடடா?? இது என்ன?? நான் என்ன நினைக்கிறேன்?? நான் இருப்பது சாந்தீபனியின் ஆசிரமத்தில் அல்லவோ?? இந்த மாதிரி எண்ணங்கள் தகாதவை அன்றோ?? ஆஹா, இந்தப் பாவத்தை எப்படித் தொலைக்கப் போகிறேனோ??? இவர்களை நான் தற்சமயத்துக்கு மறந்தே ஆகவேண்டும். அதோ சுதாமா! சுதாமா வருகிறானே!

சுதாமா நல்லதொரு நண்பன். அவனைக் குசேலன் என்றும் அழைக்கின்றார்கள். பிரபாஸ க்ஷேத்திரத்தின் சமுத்திரக்கரையின் ஏதோ ஓர் ஊரிலிருந்து இங்கே வந்துள்ளான். இவன் தந்தை குரு சாந்தீபனியின் கூடப் படித்தவரும், அவரோடு வேதங்கள் கற்றும் கொடுத்துவந்தார். சாமவேதத்தில் நிபுணர் எனப் பேசிக்கொள்கின்றனர். ஸ்வரம் பிசகாமல் பாடுபவர் என்றும் சொல்கின்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டாராமே?? சுதாமாவிற்கு இன்னும் குருகுலவாசம் முடியவில்லை. எவ்வளவு ஒல்லியாய் இருக்கின்றான்?? மிகவும் பலஹீனமானவனும் கூட. ஆனால் அவன் அறிவோ சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றதே. வந்த இந்த ஒரு வாரத்தில் எத்தனை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டான்! இவனுக்கும் சாமவேதத்தை ஸ்வரம் பிசகாமல் பாடத் தெரிகிறது. அர்த்தங்களையும் நன்கு சொல்கின்றான். ம்ம்ம்ம் எனக்கும் இப்படிப் பாடச் சொல்லித் தருகிறேன் என்று வாக்களித்திருக்கிறான். எவ்வளவு இனிமையாக இருக்கிறது கேட்க. நமக்கு எப்படியோ ஒரு மாதிரியாகச் சமாளிக்க முடிகிறது. ஆனால் அண்ணன் பலராமனுக்குத் தான் ரொம்பக் கஷ்டமாய் இருக்கிறது. அதிலும் காடுகளிலும், மேடுகளிலும் இஷ்டத்துக்குச் சுற்றி வந்துவிட்டு இப்போக் கட்டிப் போட்டாற்போல் இருக்கிறது தமையனுக்கு. எல்லாரிடமும் பெரிய குரலில் அதிகாரமாயும், கத்தியும் பேசிப்பழக்கப் பட்ட அண்ணனுக்கு இப்போது பணிவாகவும், விநயமாகவும் பேசச் சிரமமாக உள்ளது. சேச்சே, பலராமன் கண்ணனிடம் அலுத்துக்கொண்டான். யாரிடம் கோபித்துக்கொள்வது?? இங்கே கோபித்துக்கொள்ளக் கூட முடியாது போலிருக்கிறதே! கண்ணனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அண்ணனுக்கு எவ்வகையிலும் தான் உதவுவது எனத் தீர்மானித்துக்கொண்டான் கண்ணன். அண்ணனை விட்டுக் கொடுக்கக் கூடாது.

கண்ணன் தனக்குப் பாடங்கள் நன்கு புரிந்தால் கூட அண்ணனுக்குப் புரியவில்லை எனில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளுவதில்லை. தானும் மந்திரங்களையும், சாஸ்திரப் பிரயோகங்களையும் மறந்துவிட்டாற்போல் காட்டிக்கொண்டான். பின்னர் அண்ணனைக் கேட்டுத் திருத்திக்கொள்வது போல் பாவனையும் செய்தான். அண்ணனைக் கேட்கும் சமயம் அவனும் நினைவில் இருத்திக்கொள்வானே! தான் அண்ணனுக்கு உதவியாகச் செய்யும் இதைக் கூட அண்ணன் அறியாதவண்ணமே செய்தான் கண்ணன். ஒவ்வொன்றையும் பலராமனைக் கேட்டே செய்துவந்தான். ஆனால் பலராமன் கண்ணனை உள்ளும், புறமும் அறிந்தே வைத்திருந்தான். தன்னை சந்தோஷப் படுத்தவே கண்ணன் இப்படிச் செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் பலராமன்.என் அருமைத் தம்பி, என்ன இருந்தாலும் என்னைவிட புத்திசாலிதான், கெட்டிக்காரன் தான் அவனைப்பார்த்து நான் பொறாமை கொள்வேனா என்ன?? இவனை நான் எவ்வளவு நேசிக்கிறேன், போகட்டும், இதுதான் கண்ணனுக்கு மகிழ்வைக் கொடுத்தது என்றால் அப்படியே இருக்கட்டும். நான் கண்ணனுக்கு வழிகாட்டி மாதிரியே எல்லாமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

கண்ணன் சார்பில் விருந்தாவனத்துக்குச் செய்திகள் எடுத்துச் சென்ற உத்தவன் திரும்பிவிட்டான்.

Thursday, February 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

கண்ணன் ஏற்ற பிரமசரிய விரதம்!

தானே ஒரு அவதாரம் என்ற நினைப்பின்றித் தன் வாழ்க்கையின் அடுத்த திருப்பத்தை அந்த ஆண்டவனே நிர்ணயிப்பான் என்ற எண்ணத்துடன் கிருஷ்ணன் அர்ஜுனனைத் தொடர்ந்து சென்றான். இருவரும் அருகருகே ஒருவரை விட்டு இன்னொருவர் பிரியாமல் அமர்ந்து கொண்டனர். இரவு படுக்கும்போதும் இருவருமே சேர்ந்து படுத்தனர். தங்கள் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அர்ஜுனன் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டான். ஹஸ்தினாபுரத்தில் நடந்தவை அனைத்தையும் கூறினான். தாங்கள் காட்டில் வாழ்ந்த விதம், பின்னர் ஹஸ்தினாபுரம் வந்தது. அங்கே தங்கள் பெரிய தந்தையாரால் மறைமுகமாகவும், பெரிய தந்தையின் குழந்தைகளால் நேரடியாகவும் பட்ட, படும், இனியும் படப்போகும் அவமானங்கள், துன்பங்கள் என அனைத்தும் கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். என்றாலும் இன்று வரையிலும் அனைவராலும் பிதாமகர் என அழைக்கப் படும் அவர்களின் தாத்தாவான பீஷ்மர் பாண்டவர்கள் பக்கமே பேசுவதையும், பாண்டவர்களான தங்களிடம் அவர் வைத்திருக்கும் தனிப் பாசத்தையும் பெருமையோடு கூறினான். இந்த உபநயனம் தங்கள் ஐவருக்கும் எத்தனை விமரிசையாக நடந்தது என்பதையும் நினைவு கூர்ந்தான். உபநயனத்தின் பின்னர் தாங்கள் வாழ்ந்த பிரமசரிய வாழ்க்கையைப் பற்றியும், அதிலும் தங்கள் ஆசிரியர்களால் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற முடிந்ததையும் கூறினான்.

“ஆனால் கண்ணா,” கொஞ்சம் யோசனையுடனே சொன்னான் அர்ஜுனன். “அப்போது நாங்கள் அனைவருமே சிறுவர்கள். நீயோ இப்போதே பதினாறு பிராயம் நிரம்பி உள்ளாய். நிச்சயமாய் உனக்குக்கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கப் போகிறது.” என்றான். இதழ்களில் மயக்கும் புன்னகையோடு கிருஷ்ணன், “இல்லை அர்ஜுனா, இல்லை, நானும் இதில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பிரமசரிய விரதத்தில் நான் தேறவில்லை எனில் நான் எப்படி தர்மத்தின் பக்கம் நின்றுகொண்டு, தர்மத்தைக் கடைப்பிடிக்க முடியும்?? மக்களை தர்மத்தின் பாதையில் நான் எப்படி இட்டுச் செல்ல முடியும்?? நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டுமானால் இந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த பிரமசரிய விரதம் அவசியமான ஒன்றல்லவா?? தர்மத்தின் பாதையை விட்டுச் சற்றும் அகலாமல் நான் செல்லவேண்டும் என நினைக்கிறேன். அதற்கு இது உறுதுணையாக இருக்கும்.” என்றான். “எப்படியோ, கண்ணா, எனக்குப் புரியவில்லை அப்பா. நீயோ விருந்தாவனத்திலும், கோகுலத்திலும் உன் இஷ்டத்திற்கு வாழ்ந்து பழகியவன். உனக்கு இந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை ஒத்துவருமா என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே.”

“அர்ஜுனா, இப்போது புரிகிறதல்லவா? என் வாழ்க்கையின் முக்கியப் பகுதியான பிரமசரிய விரதம் இருப்பதில் நான் எவ்வளவு தாமதித்துவிட்டேன் என?? இழந்ததை நான் ஈடு செய்யவேண்டுமே? நான் முடிவு கட்டிவிட்டேன். இந்த வாழ்க்கையை ஏற்பது என. அது எவ்வளவு கஷ்டமானாலும் செய்து முடிக்கப் போகிறேன். இதைச் செய்து முடிக்காமல் என் வாழ்நாளை நான் எவ்வாறு கழிப்பேன்?? என்னால் சந்தோஷமாக அப்புறம் வாழ முடியுமா? முதலில் இதை நான் புரிந்து கொள்வேன். பின்னர் என் வாழ்க்கையை எங்கே ஆரம்பித்து சந்தோஷமாய் வாழவேண்டும் என்பதை அறிந்து கொண்டு பின்னர் அதை எங்கே எவ்வாறு நிறுத்தவேண்டும் என்பதையும் அறிந்து கொள்வேன். அப்போது தான் வாழ்க்கை முழுமை பெறும். அரண்மனை வாழ்க்கை கிட்டிவிட்டது என வெறும் சாப்பாட்டுப் பிரியனாக வாழ்க்கை நடத்தமாட்டேன்.”

“ம்ம்ம்ம்ம்ம்..,, என்னமோ கிருஷ்ணா, எங்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்பதைத் தேடவேண்டும் போல் இருக்கிறதே! எங்க பெரியப்பா பையனும், என்னுடைய அண்ணன் முறையுமான துரியோதனன் இருக்கிறானே, அவன் எங்களை எப்படியேனும் ஹஸ்தினாபுரத்தை விட்டு விரட்ட நினைக்கிறான். ஒருவேளை….. ஒருவேளை…… அவன் எண்ணம் வெற்றியடைந்தால்?? வெற்றியடைந்தால் நாங்கள் எங்கே போவோம்?? யாருடைய பாதுகாவலில் இருப்போம்? எப்படி வாழ்வோம்?? ஒன்றுமே புரியவில்லையே! துரியோதனன் எங்கள் தந்தை வழி எங்களுக்கென உள்ள அரச உரிமைகளில் எங்களுக்கு உரிமையானதைக் கொடுப்பானா? மாட்டானா? அதுவும் புரியவில்லையே!” அர்ஜுனன் முகம் வருத்தத்தில் தோய்ந்தது.

“என்ன இது அர்ஜுனா?? கோழை போல் பேசுகிறாயே? நீங்கள் ஐந்து பேர் இருக்கிறீர்கள் சகோதரர்கள். ஒற்றுமையாகப் போராட மாட்டீர்களா என்ன?? உங்கள் உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்?” கிருஷ்ணன் முகத்தில் குழப்பம். இவ்வளவு கெட்டிக்காரனாய் இருக்கிறான். நம்மை விட நன்கு படித்தும் இருக்கிறான். ஆனாலும் இவ்வளவு அவநம்பிக்கையோடும் ஒரு இளைஞனால் இருக்க முடியுமா?? ம்ஹும், நானே இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லையே. என்னை ஜராசந்தன் ஒரு பக்கம் துரத்துகிறான். இன்னொரு பக்கம் கம்சனின் அந்தரங்க விசுவாசிகள் திட்டம் போடுகின்றனர். இதற்கு நடுவில் நெருங்கிய உறவினர்கள் நம்மை இடைச்சிறுவன் என்று கேலி செய்கின்றனர். இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறோமே. அர்ஜுனனுக்கும் இது தெரியவேண்டாமா??

“போகட்டும், உன்னைப் பார்த்தப்புறம் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு கண்ணா, நீ என் அருகே இருந்தால் யானை பலம் பெற்றதாயும் உணர்கிறேன். “ அர்ஜுனன் சொன்னான்.

“ஓஓஓஓ, இது என்ன பிரமாதம்?? நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். தர்மத்தைக் காக்க, மக்களை அதர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து தர்மத்தின் பாதையில் செலுத்துவோம். இருவரும் இணைந்து நிறைய சாதிப்போம் என எனக்கும் தோன்றுகிறது.” கண்ணன் முகம் கனவில் ஆழ்ந்து வருங்காலத்தின் ஜோதிமயமான பிரகாசத்தில் கூசினாப் போல் கண்கள் மூடுகின்றன.

“ஆஹா, கண்ணா, இது என்ன?? நீ எப்போவும் தர்மத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாயே?? என்னப்பா விஷயம்?? தர்மத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ என்ன தர்மத்தின் காவலனா??”அர்ஜுனன் கொஞ்சம் கிண்டலாகவே கேட்டானென்றாலும் அவன் மனதிலும் இதிலுள்ள உண்மையை அறியவேண்டும் என்ற அவா இருந்தது. அனைவரும் கண்ணனின் பிறப்பைப் பற்றிச் சொன்னதை, சொல்லி வந்ததை அவனும் அறிவான். கிருஷ்ணன் பெரிதாகச் சிரித்தான், “ ஆஹா, அது ரொம்பவே சுலபமான ஒன்று அர்ஜுனா. ஒண்ணும் பெரிய விஷயமில்லை. என்னால் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் என்னால் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னால் அதைக் காணவும் முடியும்.”

“சரிதான், என்னவோப்பா, எனக்கு இன்னமும் புரியத்தான் இல்லை” கொஞ்சம் அடக்கமாகவே சொன்னான் அர்ஜுனன். அவன் தன்னை முழுதும் நம்புவதைக் கண்ணனால் உணர முடிந்தது. இது என்ன உறவு?? அவன் நம்மை நம்புகிறான் என்பதை உணர்ந்த கணமே என் மனம் மகிழ்வில் ஆழ்கிறதே? அவன் பொய்யும் எதுவும் சொல்லுவதில்லை. எப்போதுமே உண்மையே பேசுகிறான். இவனை எனக்கு மிகவும் பிடிக்கிறது. என் இனிய நண்பனாக இருப்பான் எப்போதுமே. கண்ணன் மனம் திருப்தியில் ஆழ்கிறது.

இரண்டு நாட்களில் உபநயனச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. மதுராவில் கொண்டாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன. கம்சனின் மரணத்திற்கான துக்கம் அநுஷ்டித்தல் இன்னும் முடிவு பெறவில்லை. ஆகவே எல்லாவிதமான கொண்டாட்டங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த உபநயனச் சடங்குகளில் கண்ணனுக்கும், பலராமனுக்கும், உத்தவனுக்கும் உபநயனம் செய்விக்கும் கடைசி கட்டச் சடங்குகள் நடக்க ஆரம்பித்தன. மூவருக்கும் தலை முழுமையாக முண்டனம் செய்யப் பட்டு, உச்சியில் மாத்திரம் சிறிய குடுமி வைக்கப் பட்டது. ஹோமம் வளர்க்கப் பட்டது. கிருஷ்ணனும், பலராமனும் அவர்களின் பெற்றோர்களான வசுதேவரிடமும், தேவகியிடமும் தாங்கள் உபநயனம் செய்து கொண்டு பிரமசரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அநுமதியை சாஸ்திரபூர்வமாக வாங்கிக் கொண்டனர். பின்னர் முதல் குருவான கர்கரிடமும், அதன் பின்னர் சாந்தீபனி, பின்னர் மற்ற உறவினர்கள் என அனைவரிடமும் ஆசிகளை வாங்கிக் கொண்டு வேத கோஷங்கள் முழங்க பூணூல் தரித்துக் கொண்டனர். உபதேசம் செய்யப் பட்டது. அவர்கள் மூவருக்கும் மான் தோல் அணியக் கொடுக்கப் பட்டது. இரவு படுக்கவும் வேறொரு மான் தோலே அளிக்கப் பட்டது. கையில் ஒரு தண்டமும், கமண்டலமும், பிக்ஷா பாத்திரமும் கொடுக்கப் பட்டது. கால்களுக்கு மரச் செருப்புகள். கண்ணனிடமும், மற்றவர்களிடமும் இது உனக்கு மறு பிறவி எனச் சொல்லப் பட்டது. சாஸ்திரங்களின் படி உபநயனம் நடக்கும்போது ஏற்கெனவே பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் மீண்டும் பிறவி எடுக்கிறான் என எடுத்துக் கூறப்பட்டது. அவன் இனி தினமும் மேன்மை வாய்ந்த ஒரு ஆரியனுக்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். மான் தோலை விரித்துத் தரையில் தான் படுக்கவேண்டும். குருநாதரின் அநுமதி இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது, சாப்பாடு சாப்பிடுவது உள்பட அனைத்துக்கும் குருநாதரின் அநுமதி பெற்றே செய்யவேண்டும். தினமும் பிக்ஷை எடுத்தே சாப்பிடவேண்டும். (முதல் பிக்ஷையைத் தன் தாயான தேவகியிடமே பெற்றுக்கொள்ளவேண்டும்) அதுவும் தேவைக்கு அதிகமாய் பிக்ஷை எடுக்கவும் கூடாது. பிரமசாரிக்குரிய அநுஷ்டானங்களையும் வழிபாடுகளையும் பின்பற்றவேண்டும். சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். ஓர் அரசகுமாரனுக்குரிய சாஸ்திர, அஸ்திர, வாள், வில் வித்தைகளைக் கற்கவேண்டும். குதிரை ஏற்றம், யானை ஏற்றம், ரத ஓட்டம் அனைத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். மருத்துவ முறைகளை, உடனடி சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளவேண்டும். அரசனாகக் குடிமக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பாரபட்சம் இல்லாமல் நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்டப் புரிந்து கொள்ளவேண்டும். ஆம் தர்மத்தை நிலை நாட்டவேண்டும். கண்ணன் பிறந்ததின் காரணமே அது தானே! கண்ணன் பிரமசரிய விரதத்தை ஆரம்பித்துவிட்டான். இனி………

Monday, February 01, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் இரண்டாம் பாகம்


பஞ்ச பாண்டவர்கள் யார்???


அஸ்தினாபுரத்து இளவரசர்களில் மூத்தவனான திருதராஷ்டிரன் பிறவிக்குருடாக இருந்ததால், தனக்கு உரிமையுள்ள சாம்ராஜ்யத்திற்கு முடிசூட்டிக்கொண்டு சக்கரவர்த்தியாக இருக்க மறுத்துத் தன் தம்பியான பாண்டுவே அதற்குத் தகுந்தவன் என அவனை முடிசூட்டிக்கொண்டு சக்கரவர்த்தியாக அநுமதித்திருந்தான். பீஷ்மரோ ராஜ்யம் இருவருக்கும் பொதுவானது என்றே கூறிவந்தார். இது இவ்வாறிருக்க பாண்டுவோ குந்திபோஜனின் வளர்ப்பு மகளும், வசுதேவரின் சகோதரியுமான குந்தி என்றழைக்கப் பட்ட ப்ரீத்தாவை அரசியல் காரணங்களுக்காக மணந்துகொண்டு பட்டத்து மஹிஷியாக்கினான். என்றாலும் அவன் ஆசைப்பட்டு மணந்து கொண்டது மாத்ரி என்னும் மாத்ர நாட்டின் இளவரசியை. மாத்ரியிடமோ அல்லது குந்தியிடமோ இல்லற சுகத்தை அநுபவிக்க முடியாமல் பாண்டுவுக்கு ஒரு ரிஷியின் சாபம் இருந்தது. அவன் தன் மனைவியோடு இல்லற சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தால் அந்தக் கணமே அவன் உயிரிழக்க நேரிடும் என்று சாபம் கொடுத்திருந்தார் அந்த ரிஷி.

மனைவியோடு மான் உருவில் இன்பம் அநுபவித்துக்கொண்டிருந்த அந்த ரிஷியைத் தவறாக மான் என நினைத்து பாண்டு வேட்டையாட, இருவரும் வாழ்வை அநுபவிக்க ஆரம்பித்த நிலையில் இறக்க நேரிடுகிறது. ஈடேறாத தன் எண்ணத்தை நினைந்து அந்த ரிஷி, இறக்கும் தருவாயில் பாண்டுவிற்கு இவ்வாறு சாபம் கொடுக்கிறார். ஆகையால் இரு மனைவியர் இருந்தும் பாண்டுவால் தன் மனைவியரோடு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் குடும்பம் விஸ்தரிக்கப் படவேண்டும். அந்நாட்களில் அரசருக்கு இரண்டு அல்லது மூன்று மனைவியர் இருப்பது இவ்வாறான வாரிசுகள் ஏற்படுத்த வேண்டியதன் காரணமாகவே அன்றி இன்பம் மட்டுமே அனுபவிப்பதற்காக இல்லை. ஆனால் பாண்டுவால் கடமையாற்ற வேண்டிக் கூட மனைவியரை அனுபவிக்க முடியாமல் போகவே என்ன செய்வது எனத் தவித்துக்கொண்டு நாட்டைத் தன் அண்ணனிடமே ஒப்படைத்துவிட்டுத் தன் மனைவியரோடு காட்டிற்குச் சென்று தவ வாழ்க்கை வாழ முடிவு செய்தான்.

ஒரு நாள் மனம் மிகவும் நைந்த நிலையில் தன் பிரச்னையைக் குந்தியிடம் பகிர்ந்து கொண்டு பாண்டுவிடம், குந்தியும் துர்வாசரால் தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றியும், அதைப்பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கினாள். பாண்டு அந்த வரத்தைப் பயன்படுத்திக் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு குந்திக்கு அறிவுறுத்த, முதலில் தயங்கிய குந்தி பின்னர், முழு மனதோடு பாண்டுவை நினைத்த வண்ணமே தர்ம ராஜாவை முதலிலும், வாயுவை இரண்டாம் முறையும், இந்திரனை மூன்றாம் முறையும் அழைத்துக் குழந்தைப் பேறை வேண்ட, அவ்வண்ணமே அவர்கள் அம்சத்தோடு பாண்டுவின் சாத்வீக குணங்களும், போர் நெறியும், அரச நெறியும் கலந்து மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு முறையே யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். குந்திக்குக் குழந்தைப் பேறு கிடைத்ததைப் பார்த்து மாத்ரிக்கும் குழந்தை ஆசை வந்தது. பாண்டுவோ மந்திரத்தின் பலன் குந்திக்கு மட்டுமே என எண்ணி குந்தியையே மீண்டும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் சொல்ல திட்டவட்டமாய் மறுத்த குந்தி அதை மாத்ரிக்குச் சொல்லிக் கொடுத்தாள். மாத்ரியும் அந்த மந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். அவர்களுக்கு நகுலன் என்றும் சகாதேவன் என்றும் பெயர் வைக்கின்றனர். மாத்ரி பெற்றெடுத்தாலும் இயல்பாகவே குழந்தைகளிடம் பாசம் மிகுந்த குந்தி அந்தக் குழந்தைகளையும் அவளே பத்திரமாய்ப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

இதனால் தனிமையும், கணவனிடம் இயல்பாகக் கொண்ட காதலும் அதிகமான மாத்ரி, பாண்டுவோடு தன் நேரத்தைச் செலவிட, தன் ஆசை மனைவியை அநுபவிக்க ஆசை கொண்டு பாண்டு அவளைக் கட்டித் தழுவ முற்பட அவனால் இயலவில்லை. உடனே இறக்கிறான். குற்ற உணர்ச்சி மீதூற மாத்ரி தன் குழந்தைகளைக் குந்தியையே பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுத் தானும் பாண்டுவோடு உடன்கட்டை ஏறுகிறாள். அந்தக்குழந்தைகளை அழைத்துக்கொண்டே குந்தி ஹஸ்தினாபுரம் வந்தடைகின்றாள். அவர்களே இப்போது மதுராவுக்கு வந்து கண்ணனுடனும், பலராமனுடனும் சிநேகிதமாய்ப் பழகும் பஞ்ச பாண்டவர்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


அர்ஜுனனின் மனம்!!

அர்ஜுனன் கண்ணனிடம் துரோணாசாரியார் என்னும் தங்கள் ஆசாரியாருக்குத் தான் இருட்டில் வில் வித்தை பயின்று அதில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பதில் அவ்வளவு சந்தோஷம் அடையவில்லை என்பதைக் கேட்டுக் கண்ணன் ஆச்சரியமடைந்தான். ஏன்?? ஏன்??? என்ன ஆயிற்று? என அர்ஜுனனைக் கேட்டான் மீண்டும். அர்ஜுனன் சற்று நேரம் தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் கூறினான். “அன்று இரவின் பிடியில் மாலை நழுவிக்கொண்டிருந்த நேரம். இரவு உணவிற்காக நான் அமர்ந்திருந்தேன். கரிய இருட்டு தழுவிக்கொண்டது. நல்ல மழைக்காலம். புயல்காற்றும், மழையும் சேர்ந்து வரவே காற்றின் வேகம் தாங்கமுடியாமல் தீபங்கள் அணைந்துவிட்டன. தீபம் மீண்டும் ஏற்றுவதற்குள்ளாக நான் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. என் கை அநிச்சையாக உணவைத் தட்டிலிருந்து எடுத்து என் வாயில் போட்டுக்கொண்டிருந்தது. சட்டென எனக்குள் ஓர் எண்ணம்! இவ்வளவு இருட்டிலும் தட்டைக் கண்டறிந்து உணவை என் வாயில் போட என் கை முயலுமானால், ஏன் நான் இருட்டிலேயே வில்லில் இருந்து அம்பு போடப் பழகக்கூடாது??? அன்றிலிருந்து இரவு நேரங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறியை வைத்துக்கொண்டு நான் வில் வித்தை பழக ஆரம்பித்தேன். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன்.”

“என்றால் நிச்சயமாய் உன் ஆசான் உன்னைப் பாராட்டி மகிழ்ந்திருப்பாரே??” மீண்டும் கண்ணன் குரல் ஆதுரத்துடனும், கனிவோடும் வந்தது. “””ம்ம்ம்ம்ம்??? அப்படித் தான் இருக்கணும்! ஆனால் ஹஸ்தினாபுரம் அரண்மனையின் நிலையை நினைத்தால் , அதிலும் என் பெரியப்பாவின் குமாரர்களும், எங்களுக்கு அண்ணன் முறையானவர்களும் ஆன தந்தைவழிச் சகோதரர்களுக்கு இது தெரிந்தால் ஆசான் வேண்டுமென்றே அவர்களுக்கு இதைக் கற்றுத் தரவில்லை என்று பழி அவர் மீது விழுந்துவிடும். அதனால் கூட அவர் வாய் மூடி மெளனியாய் இருந்திருக்கலாம். குருநாதரின் மீது தவறில்லை. அவரால் சந்தோஷத்தை வெளிக்காட்ட முடியவில்லை.” இதைக் கூடப் பணிவோடும், குருநாதரிடம் தனக்கு இருக்கும் குருபக்தியோடும் வெளிப்படுத்தினான் அர்ஜுனன். “”ம்ம்ம்ம்,,, ஆனால் நீங்கள் ஐவரும் அவர்களை விட மிகவும் உயர்ந்து ஒப்பாரில்லாதபடி இருக்கிறீர்கள்.” என்றான் கண்ணன்.

“அப்படித் தான் இருக்குனு நம்பறேன்.” அர்ஜுனனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஏனெனில் எங்கள் பெரியப்பாவுக்கும், சரி, அவருடைய குமாரர்களுக்கும் சரி, நாங்கள் ஐவரும் அடி முட்டாள்களாகவே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே இருப்பதாய் ஊகிக்கிறேன். அப்போது அவர்களுக்கு இது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.”” அர்ஜுனன் மீண்டும் சிரிக்க, கண்ணன் அவனை அழைத்துக்கொண்டு யமுனைக்குச் சென்று இருவருமாய் நீராடினார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களுடன் மற்ற நால்வரும் சேர்ந்துகொள்ள யமுனைக்கரையே அல்லோலகல்லோலப் பட்டது. பின் நால்வரும் அரண்மனை நோக்கி நடக்க, அர்ஜுனனின் தோள் மேல் கை போட்ட வண்ணம் கண்ணன் நடந்தான். கரையில் இருவரும் நின்றனர். அர்ஜுனனைப் பார்த்துக்கண்ணன், “அர்ஜுனா, நீ இந்திரனின் அம்சத்தோடு பிறந்தவனா?” என்று கேட்டான்.

“அப்படித்தான் வேத வியாசர் சொல்கிறார். அம்மாவும் அதையே சொல்கிறாள்.” என்றான் அர்ஜுனன்.

“என்றால் நான் நினைத்த வண்ணம் தான்” என்றான் கண்ணன். “அது என்ன” என்று அர்ஜுனன் கேட்க, கண்ணன் கூற ஆரம்பிக்கிறான். விருந்தாவனத்து இந்திரவிழா பற்றியும் தான் அதை கோவர்தன விழாவாக மாற்றியதையும், கோபம் கொண்ட இந்திரன் மழையாக வர்ஷித்ததையும், கோவர்தனத்தைக் குடையாக்கித் தான் தூக்கியதையும் கூறினான். பின்னர் ஓர்நாள் தான் பசுக்களை மேய்த்த வண்ணம் படுத்திருக்கையில் தன் பகல்கனவு போன்ற ஒரு தோற்றத்தில் இந்திரன் நேரில் வந்ததையும், கண்ணன் செய்வதே சரி என்றும், இறைவனை வணங்குபவர் யாராயினும் அன்பாலே மன மகிழ்வோடு வழிபடுவதே நல்லது என்றும் பயத்தோடு வணங்கக் கூடாது என்பது சரியானது என்றும் கூறியதாகத் தெரிவித்தான். மேலும் கண்ணனைப் பார்த்து இந்திரன், தான் மக்கள் அனைவரையும் நேசிப்பதாகவும், தனக்குக் கோழைகளைத் தான் பிடிக்காது என்று கூறினான். கண்ணனிடம் உதவி கேட்டு யாசித்த இந்திரன், தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், கண்ணன் எப்போதுமே அவன் பக்கம் இருக்கவேண்டும் என்றும், அவனுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான். கண்ணனும் ஒத்துக்கொள்ள அவ்வளவில் இந்திரன் மறைகிறான்.

ஆனால் இந்திரனின் மகன் யார் என்றோ அவன் இருக்குமிடம் பற்றியோ எந்தத் தகவலும் கிட்டவில்லையே என்று கண்ணன் யோசிக்கிறான். எப்படிக் கண்டுபிடிப்பது அவனை?? யோசித்த கண்ணனிடம் மதுரா வந்த பின்னர் தேவகி அர்ஜுனன் பற்றியும் அவன் இந்திரன் மகன் என்றும் கூறவே தான் தேடிய நண்பன் இவனே எனக் கண்ணனுக்குப் புரிகின்றது. அர்ஜுனன் இனி நாம் பிரியாமல் இருக்கவேண்டும் என்று சொல்லக் கண்ணனும் அதை ஒத்துக்கொள்கின்றான். அவன் கண் முன்னர் அவர்கள் ஏழு பேரும் சேர்ந்து கொண்டால் பலவிதமான சாகசங்களைப்புரிய முடியும் என்றும் இவ்வுலகையே தர்மத்தின் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் நம்பிக்கை பிறந்தது. ஆஹா, ஏழு பேரும் சேர்ந்து செயல்படப் போகும் அக்காலம் இப்போவே வந்துவிடாதா? ஆனால் அதற்கு முன்னால் வேறொரு முக்கியமான வேலை உள்ளதே? தான் உபநயனம் முடித்து ஒரு பிரம்மசாரிக்குரிய கடமைகளைச் செய்து முடிக்கவேண்டும். ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. இனியும் பிரமசரியத்திற்குத் தாமதம் ஆகக்கூடாது. அதன் பின்னரே மற்றவை