எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 31, 2012

சில புதிர்கள்!

சிங்கம் திரும்ப அழைத்தது ஏன்?

அகிலாண்டம் (ஹிஹிஹி) சொன்னது என்ன?   அங்கே ஏன் படம் எடுக்கலை?

உத்தமனா? பிக்ஷாண்டியா?

சமயபுரத்தில்  மொகலாயர் வந்தது எப்போது? விக்ரமாதித்தனுக்கு அங்கே என்ன வேலை?

பிரம்மா ஏன் வரச் சொன்னார்?

வியாக்ரபாதர் சொன்னது என்ன?

ஐயனார் கோயில் கதவு ஏன் மூடி இருக்கிறது?

மலைக்கோயிலா?  தரைக்கோயிலா?  சந்தேகம்!  புண்டரீகன்  கோபுரத்தை  ஏன் முடிக்கவில்லை?


என்னனு எல்லாரும் மண்டையைப் பிச்சுக்குங்க.  மெதுவா வரேன் ஒண்ணொண்ணுக்கா! :)))))))

Sunday, July 29, 2012

ஓர் முக்கிய அறிவிப்பு

வீட்டிலே விருந்தாளிகள்.  அவங்களைக் கவனிக்க வேண்டி இருப்பதால் இணையத்துக்கு மெயில் பார்க்கக் கூட வரமுடியலை.  செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் வருவேன்.

ஆகவே இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்  இரண்டு நாளா என்னைக் காணாமல் வலை உலகத்  தொண்டர்களும், குண்டர்களும் தீக்குளிக்கப் போயிடவேண்டாம்னு வேண்டிக்கிறேன்.  வந்துடுவேன் சீக்கிரமா! (யாருப்பா அது, மெதுவா வந்தால் போதும்னு சொல்றது? பிச்சுடுவேன் பிச்சு!)

உபநயனம் என்றால் என்ன 4

முதல்நாளன்றே நடக்கும் இன்னொரு சடங்கு அங்குரார்ப்பணம் என்னும் பாலிகை தெளித்தல்.  முதலில் புண்யாஹம் செய்வார்கள்.  பின்னர் நெல், கடுகு, எள், உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை நீரில் நனைத்து வைத்திருப்பார்கள்.  மந்திரபூர்வமாக இவற்றிற்கு பூஜை செய்து ஓஷதி சூக்தம் சொல்லி, 5, 7 என எண்ணிக்கையில் சுமங்கலிகளை விட்டு மண்ணாலான கிண்ணங்களில் ஜலத்தோடு தெளிக்கச் சொல்வார்கள்.  பாலிகைக் கிண்ணங்கள் தனியாக உண்டு.  பின்னர் தினமும் அவற்றிற்கு நீர் தெளித்து வந்து ஐந்தாம் நாள் அவற்றை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.  இப்போதெல்லாம் நீர்நிலை இல்லாததால் ஒரு பெரிய வாளியில் நீரை நிரப்பிக் கொண்டு அவற்றில் கரைக்க வேண்டி இருக்கிறது.  :(


மறுநாள் காலையில் பையருக்கு மங்கள நீராட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹம் போன்றவைகள் முடிந்து  பூணூல் போடப்பட்ட சில பிரம்மசாரி பிள்ளைகளோடு அமர்த்தி வைத்துப் பூணூல் போடப் போகும் சிறுவனுக்கு நெய்யும், பாலும் சேர்த்த உணவு படைப்பார்கள். அநேகமாய் இது பொங்கலாய் இருக்கும்.  அதிகக் காரமான உணவு கொடுக்க மாட்டார்கள். இதற்குக்குமார போஜனம் என்று பெயர்.  கூட உணவருந்தும் பிரமசாரிப் பிள்ளைகளுக்கு தக்ஷிணை கொடுப்பது உண்டு.  பின்னர் சிறுவனின் உடல் சுத்திக்காக சிகையை மழிப்பார்கள்.  சாதாரணமாகக் குடுமி வைக்கும் போது வெட்டுவது போல் அரை வட்டமாக முன் நெற்றியிலும் பின் இன்னொரு அரைவட்டமாகப் பின்னங்கழுத்து அருகேயும் வெட்டி விடுவார்கள்.  இதை அப்பளக்குடுமி எனச் சொல்வதுண்டு.   இது ரிக், யஜுர் வேதக் காரர்களுக்கானது.  சாம வேதக்காரர்களுக்கு முழு மொட்டையாகப் போட்டு விடுவார்கள்.  பின்னர் பையனுக்கு மாமாவின் சீராகக் கொடுக்கப்படும் வெண்பட்டு உடுத்தி முஞ்சம்புல் என்கிற புல்லை முப்புரி நூலாகச் சிறுவனின் இடுப்பில் கட்டி நாபிக்கருகே முடி போடுவார்கள்.   இது சிறுநீர்க்கோளாறுகளைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று அதர்வ வேதத்தில் வருவதாய்ச் சொல்கிறார்கள். 

பின்னர் சிறுவனுக்கு மாலை போட்டு மான் தோலையும் தோளில் அணிவிப்பார்கள்.  இப்போதெல்லாம் மான் தோல் தடை செய்யப் பட்டிருப்பதால் அணிவித்தல் கஷ்டம்.   பின்னர் ஆசாரியனிடம் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.இப்போது தான் பையனின் மாமா அவனைத் தன் தோளில் தூக்கிக் கொள்வார்.  கழுத்தில் மாலையையும் மாமா தான் போடுவார்.  பின்னர் தாய் வீட்டு சீதனங்களை வரிசையாக எடுத்து வருவார்கள்.  அதில் முறுக்கு, அதிரசம், லட்டு, திரட்டுப்பால், பருப்புத் தேங்காய் ஆகிய ஐந்து பக்ஷணங்கள் முக்கியமாக இருக்கும்.  பின்னர் பையனின் தாய்க்குப் புடைவை, தந்தைக்கு வேஷ்டி, துண்டு, பையனுக்கு வெண்பட்டு, மோதிரம் போடும் வசதி உள்ளவர்கள் மோதிரம் போடுவார்கள்.  பூ, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என வரிசை கொன்டு வந்து மணையில் வைப்பார்கள்.  பின்னர் உபநயனம் நடக்கப் போகும் பையனை மணையில் உட்கார்த்தி வைத்து ஆசாரியர் வேத மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்து லெளகீக அக்னியை வளர்த்துக் குழந்தைக்குப் பலாச தண்டம் அளித்துப் பின்னர் குழந்தையை அம்மியின் மேல் நிற்க வைத்து ஆசீர்வாதங்கள் செய்வார்.  பலாச தண்டம் ஞாபக சக்தியை வளர்க்கும் எனச் சொல்லப்படுகிறது.  மேலும் தேவர்கள் காயத்ரியை ஜபிக்கையில் பலாச மரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு காயத்ரியின் மூன்று பாதங்களைப் போல மூன்று மூன்று இலைகளாத் துளிர் விட்டதாம்.   ஆகவே பலாச தண்டம் அளிப்பது முக்கியமாய்ச் சொல்லப்படுகிறது.  அம்மியில் நிற்க வைத்து ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர் உரையாடுவார்.  இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.  அதன் பின்னர் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஹோமம் செய்வித்துப் பின்னர் ஆசாரியரே ஹோமத்தை முழுதும் செய்து முடிப்பார். அதன் பின்னர் பிரஹ்மோபதேசம்.

இதுதான் முக்கியமானது.  முப்புரி நூல் முன்னாலேயே அணிவிக்கப்பட்டிருக்கும். இதில் பையனின் மாமா சீராகத் தங்கப் பூணூல், வெள்ளிப் பூணூலும் சேர்த்து அணிவித்திருப்பார்கள்.  இத்தோடு பூணூலும் அணிவித்திருப்பார்கள்.  பூணூல், தக்ளியில் நூல் நூற்று மூன்று இழைகள் கொண்டதாய்ச் செய்து அதைக் கட்டை விரலை விடுத்து மற்ற நான்கு விரல்களால் 96 முறை சுற்றித் துணித்துப்பின்னர் நனைத்து மீண்டும் முறுக்கி மூன்றாக முடி போடுவார்கள்.  இது ஒன்பது  இழை கொண்டதாக இருக்கும்.  பூணூலில் போடப்படும் முடிச்சை பிரம்ம முடிச்சு என்பார்கள்.  மும்மூர்த்திகளையும் குறிக்கும் இந்த பிரம்ம முடிச்சு.  பூணூல் தொப்புள் வரை நீளமாக இருக்கும்.  இந்தப் பூணூல் என்பது பிராமணர் என்பதைக் குறிக்கும் அடையாளமோ, அணிகலனோ இல்லை.  இதன் தொண்ணூற்று ஆறு சுற்றுக்களையும் வாழ்க்கைத் தத்துவமாகவே கூறுவார்கள்.  நம் உடலின் 25 தத்துவங்கள், ஸத்வம், ரஜோ, தமஸ் போன்ற 3 குணங்கள், திதிகள் 15, கிழமைகள் 7, நக்ஷத்திரங்கள் 27, வேதங்கள் 4, காலங்கள் 3, மாதங்கள் 12 ஆகியன சேர்ந்து 96 என்று கணக்கு. இதற்கான ஸ்லோகம் ஒன்றும் உள்ளது.  “திதி வாரம் சநக்ஷத்ரம் தத்வவேதகுணான்விதம். காலத்ரயம் ச மாஸா: ச ப்ரம்ம ஸூத்ரம் ஹி ஷண்ணவம்” என்ற ஸ்லோகம் இதற்கான பொருளைச் சுட்டுகிறது.
டிஸ்கி: பெரிய சீர் முறுக்குக்கு ஏற்ற படம் கிடைக்கலை.  அதனாலே நாம முறுக்குச் சுத்தின படலத்தில் உள்ள படத்தையே ஒப்பேத்திட்டேன். :))))


தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு தி.வா. திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

Friday, July 27, 2012

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா!

வரலக்ஷ்மி விரதம் பண்டிகை ரொம்பவே அழகான பண்டிகை.  அதைக் கொண்டாடுவதில் எனக்கு எப்போவுமே ஆர்வம் உண்டு.  அதுக்காகப்பள்ளிக்கு தாமதமாய் எல்லாம் போயிருக்கேன்.  ஆசிரியர், சிநேகிதிகளின் கேலிக்கும் ஆளாகி இருக்கேன்.  கொழுக்கட்டை சாப்பிட்டு வந்தாச்சானு கேட்பாங்க. :)))) ஆனால் பண்டிகை முதல் நாளில் இருந்தே களை கட்டும்;  ஒரு ட்ரங்க் பெட்டியில் வெள்ளிச் சாமான்கள் மட்டுமே வைத்திருக்கும் பெட்டியில் வரலக்ஷ்மி அம்மன் முகத்தை வைத்திருப்பார்கள்.  இதெல்லாம் அப்பாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.  அம்மா முதல்நாள் காலம்பரலே இருந்து தவிச்சுட்டு இருப்பாள்.  அன்றே விரதம் ஆரம்பிக்கும்.  அதற்காக அம்மனைத் தயார் செய்து வைக்கணுமே!  ஆனால் அப்பாவோ கண்டிப்பாகத் தான் வந்து அம்மனை எடுத்துத் தருவதாகச் சொல்லிடுவார்.  அவரை மீறி எதுவும் செய்ய முடியாது.  சாயந்திரம் வந்ததும் எல்லாம் எடுத்துட மாட்டார்.

அதுக்கு முன்னாடி அப்பாவின் நண்பரான ட்ராயிங் மாஸ்டர் சுப்பராமனை வரவழைத்து விடுவார் அப்பா.  அதற்குள்ளாக அம்மாவோ, அண்ணாவோ அம்மன் வைக்க வேண்டிய இடத்தின் சுவரைச் சுண்ணாம்பு அடித்து வெள்ளையாக்கி வைத்திருப்பார்கள்.  அந்த இடத்திலே சுப்பராம வாத்தியார் வந்து அம்மன் படத்தை வரைவார்.  கலர் பென்சில்கள் தான்.  வாட்டர் கலரெல்லாம் அப்போ அவ்வளவாத் தெரியாது.  பெயின்டும் இல்லை.  முதலில் பென்சிலால் நாலைந்து கோடுகள் தான் போட்டிருப்பார்.  கலர் பென்சிலால் கலர் தீட்டத் தீட்ட சிவப்புப் புடவையும், மஞ்சள் ரவிக்கையும் அணிந்த வண்ணம் கழுத்தில் பச்சைக்கலர் நெக்லஸோடும், கருகமணியோடும், காதில் சிவப்புத் தோடோடும், நெற்றியில் நீண்ட திலகத்தோடும் வரலக்ஷ்மி பிரசன்னம் ஆகி விடுவாள்.  ஆச்சு;  இது முடிந்தது.

இனிமேல் மண்டபம் அமைக்கும் வேலை.  இப்போல்லாம் மண்டபம் விலைக்கு வாங்கி ஸ்வாமி அலமாரியில் வைச்சுக்கறாங்க.  எங்க வீட்டிலேயும் எங்க நாத்தனார் இரண்டு வருஷம் முன்னாடி வாங்கி வந்து கொடுத்தது இருந்தது.  சென்னையை விட்டு வரச்சே தானம் செய்த பொருட்களில் அந்த மண்டபமும் ஒண்ணு.  அந்தக் காலத்தில் மண்டபம் எல்லாம் கிடையாது.  நாலு கால்கள் உள்ள ஓர் ஸ்டூல் தேர்ந்தெடுக்கப் பட்டு மேலே அப்பாவோட வெண்பட்டுத் துணியால் போர்த்தப்படும்.  ஸ்டூலில் கால்களில் வாழைமரம் விலைக்கு வாங்கியது கட்டப்படும்.  சுற்றிலும் மாவிலைக் கொத்துக் கட்டுவோம் நானும், தம்பியும்.  எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேலை அது தான்.  இதைத் தவிர நான் அரிசியை அம்மியில் அரைத்து மாக்கோலம் பெரிதாகப் போடுவேன்.  கோலம் போடுவதிலும் செம்மண் பூசுவதிலும் ரொம்பவே ஆசையாக இருக்கும்.  மண்டபம் வைக்கும் இடத்தில் கோலம் போட்டு முடிச்சதும் செம்மண் பூசிக் காய்ந்ததும் ஸ்டூல் அங்கே வைக்கப் படும்.

அதுக்குள்ளாக அப்பா அம்மனை வெளியே எடுப்பார்.  அம்மனைக் கலசத்திலே தான் வைக்கணும்.  அதுக்காக வெள்ளிச் செம்பு இல்லாததால் அம்மாவின் வெள்ளி கூஜாவிலேயே உள்ளே அரிசி, காசுகள்போட்டு, மாவிலை வைத்துத் தேங்காயும் வைத்து அம்மனை அதில் வைப்பார்கள்.  அம்மனின் பின்னால் மாட்டுவதற்கென வெள்ளிக்கம்பியில் கொக்கி போல இருக்கும்.  தேங்காய்க் குடுமியில் அதை மாட்டி விட்டுப் பின்னர் ஏற்கெனவே தைத்திருக்கும் பட்டுப் பாவாடையைக் கட்டுவார்கள்.  பின்னர் கைகளால் கோர்க்கப்பட்ட கருகமணி, பிச்சோலை கட்டுவார்கள்.  காதுகளில் ஜிமிக்கியும் தோடும் அம்மன் வாங்குகையிலேயே போட்டிருக்கிறாப் போல் இருந்தது.  எல்லாம் வைக்கும் முன்னர் ஒரு பலகையில் கோலத்தைப் போட்டு அம்மனை அதில் வைத்திருப்பார்கள்.

பின்னர் இரு மாமிகள் அம்மனை அழைக்க வேண்டும் என அழைப்பார்கள்.  ஒரு சிலர் வீடுகளில் மறு நாள் காலை அழைப்பதும் உண்டு.  அன்று பொங்கல் நிவேதனம் செய்து அதை மட்டும் உண்பார்கள்.  மறுநாள் காலை அம்மனை அழைத்து மண்டபத்தினுள்ளே வைத்து இருப்பார்கள்.  பின்னர் ஒரு சிலர் காலை நேரமே பூஜை செய்வார்கள்.  ஒரு சிலர் மாலை நேரம், பசுமாடுகள் மேய்ச்சலுக்குப் பின்னர் திரும்பும் நேரம் ஆரம்பித்துச் செய்வார்கள்.  இதுதான் சரியானது என அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன்.  இந்த பூஜை செய்ய வேண்டும் என ரொம்பவே ஆசை.  ஆனால் கல்யாணம் ஆகி வந்ததும் மாமியார் வீட்டில் வழக்கம் இல்லாததால் செய்ய முடியவில்லை.  அம்மா வீட்டு நோன்பு எடுத்துக்கலாம்னு ஒரு சிலர் சொல்லியும் எங்க மாமியார் அனுமதி கொடுக்காததால் எடுக்க முடியலை.  நோன்பன்னிக்கு எல்லா வீடுகளிலும் கொழுக்கட்டை செய்யறாப் போல நானும் செய்வேன்.  அதோட சரி.  இப்போதெல்லாம் சாப்பிட ஆளில்லாததால் அதுவும் இல்லை.  முதல் வாரமே பிள்ளையாருக்குக் கண்ணிலே காட்டறதோடு சரியாப் போச்சு.  இதுதான் எங்க வரலக்ஷ்மி நோன்பு கதை.

ஸ்ரீராம், வ.வி. பத்தி எழுதிட்டேன்.  பாருங்க.


படம் உதவி:  திரு நடராஜன் கல்பட்டு அவர்கள் வீட்டில் இன்று நடந்த வரலக்ஷ்மி விரத பூஜைப் படம்.  நன்றி திரு நடராஜன் கல்பட்டு அவர்கள். 

Thursday, July 26, 2012

சினிமா பேரு என்னனு சொல்லுங்க!

இப்போ ஒரு படம் பார்த்தேன்.  நல்ல விறுவிறு.  ஒரிஜினல் மலையாளம்;  டப்பிங் செய்திருக்காங்க.  நடிகர்கள் யார்னே எனக்குத் தெரியலை.  டைரக்‌ஷன் மட்டும் பி. உன்னிகிருஷ்ணன்.  கதை தெரிந்த வரையிலும் கீழே கொடுக்கிறேன். ஹிஹிஹி, எப்போவுமே முழுசாப் படம் பார்க்கிற வழக்கமே இல்லையா, இன்னிக்கும் பாதிப்படத்திலே தான் பார்க்க ஆரம்பிச்சோம்.  அப்புறமா அவர் வெளியே போயிட்டார்; நான் மட்டுமே பார்த்தேன்.

சைமன் என்றொரு இளைஞன் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டோடு சம்பந்தப் பட்டிருக்கிறவன்,  கொலை செய்யப்படுகிறான்.  இந்த சைமனின் அப்பா கிட்டே விசாரணை நடப்பதில் இருந்து தான் பார்க்க ஆரம்பிச்சேன்.  அந்த சைமன் இறக்கையில் போலீஸ் ஆஃபீஸர் நிரஞ்சனிடம் தன்னைக் கொலை செய்தது யார்னு சொல்லிட்டுச் செத்துப் போகிறான்.  அவன் சொன்னது Meeraspa.  இதை வைத்துக்கொண்டு கொலையாளிகளைப் பிடிக்கப் பார்க்கும் நிரஞ்சனின் அப்பா, அம்மா, விவாகரத்துக்கு(?)க் காத்திருக்கும் மனைவி போன்றவர்களைக் கொலையாளிகள் குழு தொந்திரவு செய்கிறது.  ம்ஹூம், தமிழ் சினிமா மாதிரிக் கடத்தி வைச்சுட்டு எல்லாம் இல்லை.  நிரஞ்சனை மிரட்டுகின்றான் மார்ட்டின் தினகர் என்னும் ஒரு ஆள்.

அன்டர் வேர்ல்ட் தாதா அதோடு சைமனைக் கொன்றது தான் தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறான்.  அவனுக்குத் துணையாக இருந்தவங்களைப் பிடிச்சு உதைச்சு விசாரிச்சதிலே ஓரளவுக்கு உண்மை வெளியே வந்தாலும் மார்ட்டினைப் பிடிப்பது கஷ்டம் என அவர்கள் நண்பரான இன்னொரு போலீஸ் ஆஃபீஸர் தற்போது பதவியில் இல்லாதவர் சொல்வதோடு, இந்தக் கேஸ் கோர்ட்டில் நிற்காது என்றும் சொல்கிறார்.  ஏன் எனக் கேட்கும் நிரஞ்சனிடம் மார்ட்டினைப் பிடிக்க முடியாது என ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். அப்போது நிரஞ்சனுக்கு ஒரு ஃபோன் கால் வருது.  அதைக் கேட்ட நிரஞ்சன் மார்ட்டின் தினகரைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிட்டுக் கிளம்புகிறான்.

நிரஞ்சன் மார்ட்டின் தினகரைப் பார்த்தானா?

சைமனைக் கொன்றது மார்ட்டின் தானா?

போலீஸ் ஆஃபீஸர் என்னதான் இப்போ வேலையில் இல்லைனாலும் ஏன் இப்படி அலக்ஷியமாய் நடந்து கொண்டார்?

நிரஞ்சனும், அவன் மனைவியும் சேர்ந்தாங்களா?

மீதியை உங்கள் வீட்டுத் தொலைக்காட்சித் திரையில் எப்போதாவது போடுகையில் காண்க.

இப்போ என்னோட மண்டைக்குடைச்சல் படத்தோட பெயர் என்ன?


நண்பர் குழாத்தைக் கண்டு பிடித்தேன்! :)

ஸ்ரீரங்கம் வந்த புதுசில்  ஒரு வாரம் போல் பறவைகளின் குரலே கேட்கவில்லை.  காக்காய் கூடக் கத்தலை.  ஆனால் சுற்றிலும் மரங்கள் என்னமோ இருக்கு.  மொட்டை மாடிக்குப் போனாலும் காவிரியில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்குகளையும், பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரைகளையும் தவிர வேறு ஒண்ணுமே கண்களில் படலை.  கொஞ்சம் இல்லை;  நிறையவே வருத்தம்.  அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பச்சை நிறப் பச்சோந்தி/ ஓணான்?(பச்சோந்தினு தான் நான் சொன்னேன்.) தவிர   வேறு உயிரினம் இருக்கானே தெரியலை.  சமையலறைப் பக்கத்து பால்கனியில் காக்கைக்குச் சாதம் வைத்தால் மறு நாள் இல்லை ஒருவாரம் கூட அப்படியே இருந்தது.  என்ன ஏமாற்றம்?

சாதம் வைக்கும் இடத்தை வடபுறத்து பால்கனிக்கு மாற்றினேன்.  அங்கே தென்னை மரம் அருகேயே தொட்டுக்கொண்டு இருப்பதால் குறைந்த பக்ஷம் அணிலாவது வருமே! ஆஹா, அதே போல் அங்கே அணில் மட்டுமில்லாமல் மைனாக்களும் வர ஆரம்பித்தன.  மெல்ல மெல்ல ஒற்றைக்குயில் கூவ, பதில் குரல் கொடுக்கும் இன்னொரு குயிலும் அடையாளம் தெரிய, மைனாக்கள் மாலை வேளைகளில் மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரில் வந்து உட்கார்ந்து கொண்டு "சளசள" என சம்பாஷிக்க, அதிலும் கைப்பிடிச் சுவரில் இருப்பது, சொல்வது, "எல்லாரும் வந்தாச்சா கூட்டுக்கு?" என்று கேட்பது போலும், மரத்தில் இருப்பது, "வந்தாச்சு, வரலை" னு பதில் சொல்றாப்போலயும் இருக்கும்.  அதுக்கு ஏற்றாற்போல் சில நாட்கள் பதில் குரல் கேட்டும் உட்கார்ந்திருக்கும் மைனாக்களும், பதில் வந்ததும் பறந்து செல்லும் மைனாக்களும், அவைகளின் மொழி நமக்கும் புரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என யோசிக்க வைக்கிறது.  காக்கைகளும் தண்ணீர்த் தொட்டியின் நீரை அருந்த வர ஆரம்பித்தன.  போதாக்குறைக்கு கருடத் தம்பதிகள் வேறு இருக்கின்றனர். 

கிளிக்கூட்டங்கள் நாங்களும் இருக்கோம்னு "கீ கீ" எனக் கூவிக் கொண்டே செல்ல ஆரம்பித்திருக்கின்றன.  இப்போதெல்லாம் மைனாக்கள் நடைப்பயிற்சி செய்கையில் பயப்படாமல் உட்கார்ந்திருக்கப் பழகிவிட்டன.  தவிட்டுக்குருவியும், கரிக்குருவியும் கூடக் கண்களில் அவ்வப்போது படுகின்றன.  சிட்டுக்குருவிகளைத் தான் பார்க்க முடியலை.  சிட்டுக்குருவி போல ஒன்று இருக்கிறது.  ஆனால் அது சிட்டுக்குருவி இல்லை என கல்பட்டார்(பறவைக்காதலர்) சொல்லிட்டார்.  அது வானம்பாடினு சொல்லுகிறார்.  ஆனால் அதுங்க கத்திக் கேட்கலை. சுப்புக்குட்டிகள் தான் இங்கே இல்லை.  மத்தபடி ஒரு வாரம் முன்னே காலங்கார்த்தாலே வாஷிங் மெஷினில் துணிகள் போட்டப்போ ஒரு பெரிய எலி கூட நாலு மாடி ஏறி வந்தாச்சு.  அம்பத்தூரில் இருந்தே வந்ததோனு சந்தேகம்.  ஆனால் எதிரே இருக்கிறவங்க தண்ணீர்க் குழாயில் இருந்து வந்திருக்கும்னு சொல்லிட்டு அதை மூடி வைக்கச் சொன்னாங்க.  அந்த எலியைப் பார்த்து நான் கத்திய கத்தலில் அது மிரண்டு போய் ஜன்னலில் ஏறி உட்கார, ரங்க்ஸ் வந்து விரட்ட முனைய, கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டது தான் கொஞ்சம் வருத்தம்.  மற்றபடி ஒவ்வொருத்தரா வந்து அடையாளம் காட்டிட்டு இருக்காங்க தான்.

Wednesday, July 25, 2012

உபநயனம் என்றால் என்ன! 3


உபநயன ஸம்ஸ்காரம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல, என்பதைக் குறிக்கும் ஸ்லோகம் கீழே கொடுத்திருக்கிறேன்.

கர்ப்பாஷ்டமேஷு ப்ராமண உபநயீத
கர்ப்பைகாதெசேஷு ராஜன்யம்
கர்ப்பத்வாத்யசேஷு வைஸ்யம்

என்ற இந்த ஸ்லோகம் இது ராஜாக்களான க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் கூட இருந்ததைக் காட்டுகிறது.  ஆகவே உபநயனம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே என்றானது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஆகும். இந்த உபநயனத்தின் மூலம் குழந்தையை குருவிடம் சேர்ப்பித்துக் கல்வி கற்க ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கியமான சம்ஸ்காரமே உபநயனம் ஆகும்.  கல்விக்காக மாணவனைத் தயார் செய்யும் ஒரு சம்ஸ்காரம் என்றும் சொல்லலாம்.  இதற்கு அப்தோபதேசம் என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.

கல்வியே மாணவனுக்கு உள்ளத் தூய்மையை ஏற்படுத்தி உயர்ந்த சிந்தனைகள் தோன்றும்.  நல்லது, கெட்டதை ஆராயும் போக்கு உருவாகும். உண்மை எது, பொய் எது எனப் பிரித்துப் பார்க்கத் தெரியும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியாயும் அதே சமயம் ஆன்மிகத்திலும் ஈடுபடும்படியாகவும் செய்யக் கூடியது குருகுலக் கல்வி முறையே. இந்த குருகுலக் கல்வி முறையில் மாணவன் குருவிடம் தங்கி இருந்து அவரோடு ஒவ்வொரு நாட்களையும் கழித்து அவர் வாய் மூலமாகப் பாடங்களைக் கேட்டு மூளையில் பதிய வைத்துக்கொள்கிறான். வேதக்கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அவரவருக்கு எந்தக் கல்வியில் இஷ்டமோ அந்தக் கல்வியில் ஞானத்தையும், அறிவையும் மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முடிந்தது.  இதற்கு குருவின் அருகாமையிலேயே இருக்க வேண்டும்.

ஒவ்வொருத்தரும் அவரவருக்குத் தேவையானதைக் கற்க முடிந்த காலம் அது, அரசர்கள் ராஜ்ய பரிபாலனம் பற்றியும் வியாபாரிகள் வியாபாரம் குறித்தும், வீரர்கள் ஆயுதப் பயிற்சிகளும், பிராமணர்கள் வேதக்கல்வியோடு சேர்ந்து ஆயுதங்களைக் கையாளவும் தெரிந்து வைத்திருந்தார்கள்.  வழிவழியாக இவை எல்லாம் காப்பாற்றப்பட்டு ஒவ்வொருத்தரிடம் முறையாக ஒப்புவிக்கப் படுகிறது.  வாய்மொழியாகவே வேதம் எப்படிப் பரவி இருக்கிறது என்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகையதோர் கல்விக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவதே உபநயன சம்ஸ்காரம்.  இப்போது உபநயனம் செய்யப்படும் வடுவிற்கு என்ன என்ன முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

முதலில் "வடு" என அழைக்கப்படும் சிறுவனை மங்கள நீராட்டுவார்கள்.  சின்னஞ்சிறு பாலகனை வடு என அழைப்பார்கள்.  மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி எனப் பெயர்.  குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும் மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேஹம் செய்வது போல் தலையில் விடுவார்கள்.  இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும் மாசற்றதாக ஆகும் என ஐதீகம்.  இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல் நாளே நடக்கும்.  உபநயனத்திற்குச் சிறுவனின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றவாறு நாள் கணிப்பார்கள்.  அதற்கு முதல்நாள் இந்த உதகசாந்தி நடைபெறும்.  மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித நீர் தடுக்கும்.  மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும்.  பின்னர் மாணவனின் வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள்.  இதற்கு ரக்ஷாபந்தனம் எனப் பெயர்.  இன்னல்களிலிருந்து காக்கும் ரக்ஷை அது.

அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைப்பது.  இதற்கு "நாந்தீ என்று பெயர்.  இதில் ஒன்பது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு.  முன்னோர்களிடம் பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை வேண்டும் விதமாகச் செய்யப்படுவது.  பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ணலாம்.  பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில் அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே முன்காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள்.  மற்றவர்களுக்குத் தனியாக உணவு சமைக்கப் பட்டிருக்கும்.  ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே விரும்புகின்றனர்.  ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது.  ஆகவே இன்றைய சூழ்நிலையில் இதுவே நடைபெற்று வருகிறது.  இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள் முடிவடைகின்றன.தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Monday, July 23, 2012

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும். ஆனால் இந்த வருடம் ஆவணி மாதம் இரண்டு அமாவாசை வருவதால் மல மாதம் என்றும், அப்போது சுப காரியங்களைச் செய்யக் கூடாது என்றும், புரட்டாசி மாதமும் ஸங்க்ரமண தோஷ மாசமாகி விட்டதால், இந்துக்களின் காலண்டர்படி(பஞ்சாங்கப்படி) இப்போது சிரவண மாதம் என்பதால் (தமிழ் ஆடியாக இருந்தாலும்)  நர்மதைக்குத் தெற்கே உள்ள சாம வேதிகளுக்கு இந்த மாதம் உபாகர்மா  ஆடி மாதம் அமாவாசை கழிந்த ஹஸ்த நக்ஷத்திரம், பஞ்சமி திதியில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  நாளை செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி  ஸாமவேதிகளின் உபாகர்மா.

நன்றி:தெய்வத்தின் குரல்! 

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  மூன்றாம் முறையாக இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  யஜுர் வேதிகளுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியும், ரிக் வேதிகளுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் அன்றே காயத்ரி ஜபமும் வருகிறது.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

நேற்று மாலை அந்தக் கண்ணாடி அறை ஆண்டாளைப் பார்க்க வசதியான வாயில் எதுனு இங்கே குடியிருப்பில் இருக்கும் ஒரு மாமி சொன்னபடி வடக்கு வாசலுக்குப் போய் அங்கிருந்து நேரே தாயார் சந்நிதிக்குப் போனோம்.  ஏற்கெனவே ஒரு தரம் பெருமாளைப் பார்த்தா தாயாரைப் பார்க்க முடியறதில்லை.  தாயாரைப் பார்த்தால் பெருமாளைப் பார்க்க முடியறதில்லையேனு நினைச்சு முதல்லே தாயாரைப் பார்த்து எல்லாத்துக்கும் சேர்த்து உத்தரவு வாங்கலாம்னு தாயார் சந்நிதிக்கே போனோம்.  ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கலாமா, வேண்டாமானு மனம் ஊசலாட, இன்னொரு பக்தர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார்.  இருபது, முப்பது பேர் கூட இல்லை.  எல்லாம் பெருமாள் சந்நிதியில் இருக்காங்க.  இப்போப் போங்க , சீட்டெல்லாம் எதுக்கு அநாவசியமானு சொல்லி எங்களை இலவச தரிசனத்துக்குத் தள்ளி விட்டார்.

ஆஹா, எத்தனை வருடங்கள் கழிச்சு இலவச தரிசனம் என மனம் ஆனந்தத்தோடு குதூகலிக்க நேரே அர்த்த மண்டபம் எனச் சொல்லப்படும் கருவறைக்கு முந்திய மண்டபத்துக்கே போயிட்டோம்.  எங்களுக்கு முன்னால் பத்துப் பதினைந்து பேரே நிற்க, வெகு விரைவில் கருவறைக்குப் போயிட்டோம்.  அதிகமாய் விரட்டவில்லை.  போங்க, போங்கனு சொன்னாங்களே தவிர, நின்னு தரிசனம் செய்த போது தொந்திரவு செய்யலை. பூ, மஞ்சள் பிரசாதம் பெற்றுக் கொண்டு மீண்டும் ஒரு முறை ரங்கநாயகியைப் பார்த்தால், முன்னால் உள்ள உற்சவருக்குப் பின்னால் இரண்டு நாச்சியார்கள். இது என்னடானு அதிசயமாப் பார்க்க, நம்ம ரங்க்ஸுக்கும் அதே சமயம் அதே சிந்தனை ஓட, (ஆஹா, என்ன ஒரு ஒருமித்த சிந்தனை!  நாங்க தான் மேட் ஃபார் ஈச் அதர்னு மனசிலே நினைச்சிட்டேன்) அவர் என்னைக் கேட்க, நானும் அதானேனு இழுக்க, அங்கு வந்திருந்த ஒரு பக்தை ஸ்ரீதேவி, பூதேவினு சொல்ல, அப்போ நீளா தேவினு நான் கேட்க, அவங்க முழிக்க, ரங்க்ஸ் போதும் உன் ஆராய்ச்சி, வானு என்னை இழுக்க, மனசில்லாமல் நான் திரும்ப, அந்த அம்மா விட்டால் போதும்னு ஓடிட்டார்.

கடைசியில் பார்த்தாக்க, (முதல்லே இருந்தே அதான், ஆனால் நாங்க தான் நினைவில் வைச்சுக்கலை)  முஸ்லீம்கள் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ரங்கநாதரான நம்பெருமாளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகப் போக, இங்கேயே இருந்த  மூலவருக்கு முன்னால் சுவரெழுப்பி மறைச்சிருக்காங்க.  அப்போ மூலவரான ரங்கநாயகியை அங்கிருந்த நந்தவனத்தில் புதைச்சு வைச்சிருந்திருக்காங்க.  மீண்டும் கோயில் நாற்பது வருடங்களுக்குப்பின்னர் திறந்தப்போ நாச்சியாரைத் தேடினால் கிடைக்கலை;  ஆகவே புதுசா ஒரு நாச்சியாரைப் பிரதிஷ்டை பண்ணிட்டாங்க.  ஆனால் நாச்சியாரா, கொக்கா!  திருமலையில் ஒளிச்சு வைச்சிருந்த நம்பெருமாள் வரவரைக்கும் காத்துட்டு இருந்துட்டு, சரியா நம்பெருமாள் திருமலையிலே ஒளிஞ்சுட்டு இருந்தவர் வந்ததும், அவங்களும் வெளியே வந்துட்டாங்க.  முழுசா அப்படியே அன்னிக்கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருந்த ஒரிஜினல் மூல நாச்சியாரைத் தூக்கிப் போட மனசு வருமா?  அவங்களையும் பிரதிஷ்டை பண்ணவே. ரங்கநாயகி மூலவரா இரு விக்ரஹங்களும், உற்சவர் ஒன்றுமாக மூன்று நாச்சியார்கள் இருக்காங்க. {அப்பாடா, மண்டைக் குடைச்சல் தீர்ந்தது. இதெல்லாம் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோமில் இன்னும் விபரமாக வரும்.  அங்கேயும் வந்து படிங்க. இங்கே வலப்பக்கம் தெரியும் சுட்டிகளில் ஆன்மீகப் பயணம் க்ளிக்கினால் அங்கே வந்து சேரலாம்.  ஹிஹி, இடைவேளை விளம்பரம் இது! }

அதுக்கு அப்புறமா கோதண்டராமர் சந்நிதியைத் தேடினோம். அதுக்கருகே தானே ஆண்டாள் இருக்கா!  பட்டாபிராமரோனு பிரகாரத்திலே இருக்கும் அவரைத் தேடி நான் போக அங்கே ஆண்டாள் இல்லைனு புரிய மீண்டும் பரமபத வாயிலுக்கே வந்து ஒருத்தரிடம் கேட்க எதிரே பாருங்கனு சொல்ல, அசடு வழிஞ்சோம்.  கொட்டை எழுத்திலே கண்ணாடி அறை சேவை, கோதண்டராமர் சந்நிதிக்குச் செல்லும் வழி னு சந்திர புஷ்கரிணி பக்கத்திலே எழுதி இருக்க, நேரே சென்றோம்.  கோதண்டராமர் நிஜம்மா எதிரே கோதண்டத்தை வைத்துக்கொண்டு, உனக்கு எதிரி யார்னு சொல்லு அவங்களை என் வில்லால் ஒரு வழி பண்ணிடறேன்னு சொல்லி தைரியம் ஊட்டறார்.  வலப்பக்கம் சீதை சின்னஞ்சிறு பெண்போலே சித்தாடை இடை உடுத்தி நிற்க, இடப்பக்கம் தம்பியாழ்வார் லக்ஷ்மணன்பவ்யம் காட்டி நிற்கிறார் .  காலடியில் ராமபக்த ஹநுமன்.  வெளியேயே குலசேகராழ்வார் தினமும் ராமரைப் பார்த்துக்கொண்டு பாசுரங்கள் பாடிக் கொண்டு இருக்கிறார்.  அவரையும் பார்த்துக்கொண்டு, ராமன் வில்லை எடுக்கிறான்னு நீங்களும் துணைக்குக் கிளம்பிடாதீங்கனு குலசேகர ஆழ்வார் கிட்டே  சொல்லிட்டுக் கண்ணாடி அறை ஆண்டாளைப் பார்க்க அங்கேயே அருகே இருந்த நடைபாதையில் சென்றோம்.

நேரே பார்த்தால் பரமபத நாதர் நித்யசூரிகளோடு பரமபதத்தில் வீற்றிருக்கும் தெய்வீகக் காட்சி. அதைப் பார்த்துக்கொண்டு இடப்பக்கம் திரும்பும் முன்னே வலப்பக்கம் இருக்கும் கண்ணாடியில் பார்த்தால் அன்றைய அலங்காரம் நன்றாகத் தெரிகிறது.  மூலவர் வேங்கடநாதனாக நிற்க, உற்சவரோ, வராஹமூர்த்தியாக, ஆண்டாளாகிய பூமா தேவியை பூமிக்கடியிலிருந்து தூக்கித் தன் தொடையில் அமர்த்திய வண்ணம் காட்சி அளித்தார்.  வராஹமூர்த்தியைப் பார்த்தால் நிஜ வராஹம் போலவே இருந்தது.  ஆண்டாள் கண்ணைப் பறிக்கும் அழகோடும் முத்துக்கொண்டையோடும் கையில் கிளி இல்லாமல் காணப்பட்டாள்.  கிளி இல்லையேனு தான் கொஞ்சம் வருத்தம்.  நின்று, நிதானமாப் பார்த்துக்கொண்டோம்.  நவராத்திரியில் செய்யும் அலங்காரங்கள் போலவே தான் இதிலேயும்.  ஆனாலும் அற்புதமான அலங்காரம்.  நல்ல கற்பனா சக்தி, உழைப்பு. மன ஒருமைப்பாடு.  இறைவனோடு மனம் ஒன்றினால் தவிர இத்தகையதொரு அலங்காரங்களைச் செய்ய இயலாது.  அதை நேற்றே அன்ன காமாட்சி சந்நிதியில் உணர்ந்தேன்.  இன்று மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்.  இன்று என்ன அலங்காரம்னு தெரியலை.  இன்னிக்கு வலை உலக நண்பர் ஒருத்தரை அவங்க வீட்டில் போய்ப் பார்த்தோம்.  கோயில் பற்றியும் அந்தக் காலத்தில் கோயில் எப்படி இருந்ததுனும் ஒரு மாதிரியான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. 

Sunday, July 22, 2012

திரு ஆடிப்பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே!

நாளைக்கு ஆடிப் பூரம்.  ஆண்டாள் திருநக்ஷத்திரம்.  பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடிக்கு ஸ்ரீரங்கத்தில் பத்து நாட்களாக உற்சவம் நடக்கிறது.  அதென்னமோ தெரியலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் அங்கே அருகே இருக்கும் பெருமாளை எல்லாம் விட்டுட்டு இங்கே அரங்கன் மேல் மாளாக் காதல் கொண்டாள்.  அரங்கன் திருவடியிலேயே ஜோதிவடிவில் மறைந்தாள்.  ஆகவே ஒவ்வொரு வருஷமும் ஆடிப்பூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இங்கே ஸ்ரீரங்கத்தில் இருந்து சீர் வரிசைகள், மாலைகள், பட்டாடைகள் செல்கின்றன.  நேற்று அவற்றை எடுத்துக்கொண்டு அறநிலையத் துறை அதிகாரிகளோடு கோயிலின் பட்டாசாரியார் ஒருத்தரும் போயிருக்கிறார்.  பத்து நாட்களாக இங்கே உற்சவம் நடைபெறுகிறது.

சென்றவாரம் சனிக்கிழமை இது பற்றிய தகவல் ஏதும் இல்லாமலேயே ஆண்டாளை வேண்டிக்கோ நினைச்சது நடக்கும்னு  நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் ரங்கநாதர் கோயிலின் ஆண்டாள் சந்நிதிக்குப் போனோம். இங்கே மூன்று ஆண்டாள் சந்நிதிகள் இருக்கின்றன என்பதே அப்போது தான் தெரிந்து கொண்டோம். தெற்கு கோபுரத்துக்குள்ளாக நுழைந்து கோயிலுக்குள் செல்லும் முன்னர் உள்ள தெற்கு உத்திரவீதியின் மேல் கோடியில் ஒரு ஆண்டாள் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது.  இதை வெளி ஆண்டாள் எனச் சொல்கின்றனர்.  இந்த கோபுரம் தாண்டி உள்ளே கடைகளையும் தாண்டி முன் மண்டபத்தினுள் சென்றால் அங்கே இடப்பக்கம் ஒரு ஆண்டாள் சந்நிதி சில படிகள் ஏறிச் செல்லும்படியாக இருக்கிறது.  அங்கே திருநாளுக்கான அலங்காரங்கள், முஸ்தீபுகள் தென்பட்டன.  இதை உள் ஆண்டாள் சந்நிதி எனச் சொல்கின்றனர்.  அங்கே சென்று தரிசனம் செய்தோம். நல்ல கூட்டம். இருந்தாலும் தரிசிக்க முடிந்தது.  நாங்கள் செய்ய வேண்டிய பிரார்த்தனைக்காக  பூமித்தாயான ஆண்டாளம்மாவின் கைகளில் 50 ரூ கொடுத்துவிட்டுப் பிரார்த்திக்கச் சொல்லி இருந்தார்.  அவ்வாறே பிரார்த்தித்து தீப ஆராதனைகள் பார்த்துவிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டோம்.  பின்னர் உறவினர் வீட்டிற்குப் போனபோது தான் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே பரமபத வாசல் அருகே, ரங்க நாச்சியார் சந்நிதிக்கும் அருகே, கண்ணாடி அறையில் ஒரு ஆண்டாள் இருப்பதாகவும், கூடவே கோதண்டராமரும் இருப்பதாகவும் தெரிய வந்தது. ஆஹா, அதை விட்டுட்டோமே! கண்ணாடி அறையா பார்த்ததே இல்லையே!  அதையும் பார்த்துடணும்னு முடிவு செய்தோம்.  இன்னும் வெளி ஆண்டாள் கோயிலுக்குப் போகலை.  அது இன்னொரு நாள் போகணும்.

படிக்க வசதிக்காகக் கொஞ்சம் பிரித்து இரு பதிவுகளாகப் போடுகிறேன்.  அடுத்த பதிவு நாளை வெளி வரும்.

Saturday, July 21, 2012

அழகிய சிங்கமும், அன்ன காமாட்சியும்!


ரெண்டு நாளா உம்மாச்சி தரிசனத்துக்குப் போயிடறேன்.  நேத்திக்குக் காலம்பர பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை போட்டுட்டு பூஜை எல்லாம் முடிச்சுச் சாப்பிட்டு ஓய்வு எடுக்கறச்சேயே 1 மணி ஆயிட்டது.  அதுக்கப்புறமாக் கோவிலுக்குப் போக முடியாதுனு சாயந்திரமாப் போனோம்.  ஸ்ரீரங்கநாதர் கோயில் மதியம் இரண்டு மணியிலிருந்தே பார்க்கலாம். ஆனாலும் வெயிலில் போக முடியலை.  சாயந்திரமாப் போகலாம்னு நினைச்சோம். சாயந்திரம் திடீர்னு சிங்கத்தைப் பார்க்கணும்னு ஆசை வந்தது.  ரங்கனார் தூங்கட்டும், தொந்திரவு செய்ய வேண்டாம், சிங்கத்தைப் பார்த்துட்டு வந்துடலாம்னு போனோம்.  முன்னாலே காடாகவே இருந்த இடம்.  இப்போக் காட்டை அழிச்சு ஒருவழி பண்ணியாச்சு.  யானைங்க நிறையவே வருமாம்.  அது எப்போவோனு சொன்னாங்க.  காட்டு யானைங்க அட்டகாசம் சமாளிக்க முடியாமல் அவங்களை அடிச்சும் விரட்ட மனசில்லாமல் என்ன செய்யறதுனு யோசிச்ச மக்கள் காட்டு ராஜாவான சிங்கத்தை உதவி கேட்டிருக்காங்க.


நம்ம சிங்கனாருக்கும் கேட்கணுமா!  அழகிய சிங்கராச்சே.  இடத்தொடையில் மஹாலக்ஷ்மியையும் உட்கார்த்தி வைத்துக்கொண்டு இந்தக் காட்டைப் பார்த்து வந்து உட்கார்ந்துட்டார். அதுக்கப்புறமா யானைகளின் தொந்திரவும் குறைந்ததாம்.  காட்டு ராஜாவுக்கு முன்னாடி பிரஜைகள் பணிந்து தானே ஆகணும்!  என்ன! திருதிருனு முழிக்கிறீங்களா? காட்டழகிய சிங்கரைப் பார்த்துட்டு வந்தோம்.  நேத்து ஆடி வெள்ளிக்கிழமை, முதல் வெள்ளிக்கிழமை வேறே.  அகிலாண்டத்தைப் பார்க்கலாம்னா கூட்டம் தாங்காது.  நமக்கா நிக்க முடியாது.  சாதாரண நாளிலே வரேன்னு சொல்லிட்டு ரங்கனாரைப் பார்க்கலாம்னு நினைச்சுக் கடைசியிலே சிங்கனாரைப் பார்த்தோம்.  கோயிலுக்குப் போற வழி திருவானைக்கா எல்லையிலே வருது.  போற வழி இப்போக் கொஞ்சம் பரவாயில்லை.  நிறைய வீடுகள் வந்திருக்கு.  ஆனால் கோயில் அதே பழமையோடு கொஞ்சம் கூடப் பழமை மாறாமல் காணப்பட்டது.  நுழைவாயிலில் அரை வட்ட வளைவு வைத்துக் காட்டழகிய சிங்கர்னு எழுதி இருக்காங்க.  நுழைகையில் வலப்பக்கம் உள்ள வன்னி மரத்தடியில் தான் நவராத்திரி விஜயதசமிக்கு  ஶ்ரீரங்கம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வந்து மண்டகப்படி கண்டருளிவிட்டு அம்பும் போடுவாராம்.

கொஞ்சம் தள்ளி அர்ச்சனை சாமான்கள் கடை. இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம். நீண்ட நடைபாதை, முன் மண்டபம் தாண்டிச் சென்றால் உள்ளே இடப்பக்கமாய்ப் போக வேண்டும்.  பத்துப்படிகள் மேலே ஏறிச் சென்றால் உள்ளே பிரம்மாண்டமாக சுமார் எட்டுஅடிக்குக்குறையாமல் அழகியசிங்கர் தொடையில் மஹாலக்ஷ்மியைத் தொடையில் அமர்த்திய வண்ணம் அமர்ந்திருக்கிறார்.  அவரே உற்சவரும் கூட. அதிசயமாக மேற்குப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறார்.  இடக்கையால் லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டும், வலக்கையால் அபயம் காட்டிக் கொண்டும் காட்சீ அளிக்கிறார்.  நரசிம்மரின் நக்ஷத்திரமான சுவாதி நக்ஷத்திரம் இங்கே விசேஷம்.  கேட்டவரம் கொடுப்பவர் என்றும் தீராத நோய்களைத் தீர்ப்பவர் என்றும் சொல்கின்றனர்.  நரசிம்மர் பிரதோஷ காலத்தில் ஹிரண்ய வதம் செய்ததால் அந்த நேரம் வழிபாடு செய்தல் விசேஷம் என்று கூறப்படுகிறது.  ஶ்ரீராமானுஜாசாரியாரின் சீடரான பிள்ளை லோகாசாரியார் இக்கோயிலில் இருந்து ஶ்ரீவசந பூஷணம் முதலான பதினெட்டு கிரந்தங்களை இயற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.  இங்கே தரிசனம் முடிச்சுட்டுத் திரும்பி வரும் வழியில் அன்ன காமாட்சி என்ற அம்மன் கோயில் இருப்பதாகவும், அம்மனை தரிசனம் செய்துட்டுப் போகும்படியும் உறவினர் சொன்னார்கள்.

சரினு அந்தக் கோயிலுக்கும் போனோம்.  திருவானைக்கா செல்லும் பாலத்தடியில் உள்ள தெருவில் உள்ளது.  இங்கேயும் கோயிலின் சூழ்நிலை அடர்ந்த மரம், செடிகொடிகளோடு காணப்பட்டது.  அன்ன காமாட்சியைத் தவிர காசி விச்வநாதரும் இருப்பதாகச் சொன்னார்கள்.  பாலாலயம் எழுப்பி இருக்காங்க. அன்ன காமாட்சியைத் தரிசிக்க முடிந்தது.  நல்ல வேளையாக் கூட்டம் அதிகம் இல்லை.  ஒரு இருபது பேர் இருந்தாங்க.  நாங்க தரிசனம் செய்ய முடிந்தது.  நின்ற வண்ணம் ஹொரநாடு அன்னபூரணி மாதிரிக் காட்சி அளிக்கிறாள் அம்மன்.  ஶ்ரீசக்ர அன்னகாமாட்சி என்று சொல்கிறார்கள்.  கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை.  நுழைவாயில் வளைவில் இருந்து நேரே சென்றால் ஒரு வீடு மாதிரியான இடத்தின் ஒரு அறையில் அம்மன் குடி கொண்டிருக்கிறாள்.  கோயிலின் வரலாறு யாருக்கும் சொல்லத் தெரியலை.  இனிமேல் தான் யாரையானும் விசாரிக்கணும்.  இங்கே வந்து எதிர்த்த குடியிருப்புக்காரங்க கிட்டே கேட்டப்போ அவங்களுக்கு இந்தக் கோயில் பத்தியே தெரியலை.

அம்மனுக்குப் பூப்பாவாடையும், பூவினால் அலங்கரித்த மேற்சட்டையுமாக அலங்கரித்திருந்தார்கள்.  நேரே நின்று பேசுவது போல் இருந்தாள் அம்மன்.  நல்ல தரிசனம் கிடைத்து அங்கு பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே நவகிரஹங்களையும் சுத்திவிட்டுப் பின்னர் வீடு வந்து சேர்ந்தோம்.

Friday, July 20, 2012

உபநயனம் என்றால் என்ன! 2


முதலில் ஆண் குழந்தைகளுக்குச் செய்யப்படும் செளளம் என்னும் குடுமிக் கல்யாணம் பற்றி.  இது பொதுவாக  பிறந்த முதல் வருஷமே அன்னப்பிராசனத்திற்குப் பின்னர் செய்யப்படும்.  இதற்கும் நல்ல நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்துக் குழந்தையைத் தாய் மாமன் மடியில் அமர்த்திக் கொள்வார்.  குழந்தையை உட்கார்த்திக் கொண்டு மாமன் அமரும் இடம் கோலம் போட்டுச் செம்மண் பூசி இருக்கும்.  ஒரு சுளகில் அல்லது முறத்தில் காளைமாட்டின் சாணத்தோடு நெல்லையும் சேர்த்துத் தயாராக வைத்திருப்பார்கள்.  அதைக் குழந்தையின் தாய் அல்லது திருமணம் ஆகாத பிரமசாரிப் பிள்ளையோ கையில் வைத்திருக்க வேண்டும்.  குழந்தையைக் கிழக்குப் பார்த்து வைத்த வண்ணம் மாமா அமர, தலைமுடியை நீக்குவார்கள்.  இதற்கும் ஹோமம் எல்லாம் உண்டு .  அந்த ஹோமாக்னிக்கு எதிரேயே கிழக்குப் பார்த்து உட்கார வைத்துத் தலையை வெந்நீரால் நனைத்துக் கொண்டு மந்திரங்கள் சொன்ன வண்ணம் மூன்று மூன்று தர்பைகளை இடையில் வைத்து நான்கு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு திசையில் முடியை வெட்டுவார்கள்.  இதைத் தான் கீழே விழாமல் தாயோ அல்லது பிரமசாரிப்பிள்ளையோ வாங்கிக் கொள்வார்கள்.  காளைமாட்டின் சாணத்தோடு நெல் கலந்து தயாராக இருக்கும் மடக்கு, அல்லது சுளகு, அல்லது முறத்தில் வாங்கிக் கொண்டு அத்திமரம் கிடைத்தால் அதனடியிலோ அல்லது நதிக்கரை, குளக்கரைகளில் நாணல் புதர்களிலோ  வைப்பார்கள்.  இதன் பின்னர் குழந்தைக்குக் குடுமி தான் இருக்கும்.  இப்போதெல்லாம் முடியை நீளமாக ஃபாஷனுக்காக வளர்த்துக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவிதமான மந்திரோபதேசமும் கிடையாது.

முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது கூடாது என்பார்கள்.  ஆத்மசக்தி விரயம் ஆகாமல் மனோபலத்தை அதிகரித்துக் கட்டிப் போடுவதால் குடுமியைக் கட்டாயமாக அந்த நாட்களில் அனைவரும் வைத்துக்கொண்டார்கள்.  மஹாபாரதப் போரில் பாண்டவர்களின் வாரிசுகளை அடியோடு அழித்த அஸ்வத்தாமாவைப் பழிவாங்க நினைத்த அர்ஜுனன் குரு புத்திரனைக் கொல்வது எப்படி எனத் திகைத்துப் பின்னர் சிகையை அடியோடு வெட்டியதாகப் படித்திருக்கிறோம் அல்லவா!  அது அவன் ஆத்மபலத்தை அடியோடு அழித்துவிடவில்லையா?  அது போல் தான்.  பெண்களுக்கு இந்தக் குடுமிக் கல்யாணம் இல்லை என்றாலும் தலைமுடியை அவர்களும் வாரிப் பின்னித் தூக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும், நுனி வெளியே தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.  தூக்கிக் கட்டினால் நுனி மேல் நோக்கி இருக்கலாம் என்றும் கூறுவார்கள்.  ஆனால் இந்தக் காலத்தில் அது நடப்பதில்லை.  எல்லாருமே தலையை விரித்துத் தான் போட்டுக் கொள்கின்றனர்.  வட மாநிலங்களில் மத்ரா அருகே கோகுலத்தில் பிரிஜ்பாசி பிராமணர்களில் இப்போதும் இந்தக் குடுமிக் கல்யாணம் கட்டாயமாக நடைபெற்று வருவதைக் காண முடியும்.

இதற்குப் பின்னர் வருவதே உபநயனம் ஆகும்.  உபநயனம் என்றால் குருவிடம் அழைத்துச் செல்வது என்று பார்த்தோம்.  குரு வந்து கையைப் பிடித்துக்கொண்டு கூட்டிச் செல்வது என்ற பொருளில் அல்ல.  உபநயனத்தின் போது தந்தையானவர் மகனுக்கு குருவைக் காட்டி, “இனி இவர் தான் சில காலங்களுக்கு உனக்குத் தந்தை.” என்று காட்டுவார்.  குரு மூலமே காயத்ரி மந்திர உபதேசமும் நடக்கும்.  அதன் பின்னர் குறைந்தது பனிரண்டு வருஷங்கள் குருவிடம் மாணவனாக குருகுலத்தில் இருக்க வேண்டும்.  பொதுவாக இதற்கு வயசும் உண்டு.  எட்டு வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பார்கள்.  நாமெல்லாம் பிறந்த தேதியை வைத்து வருடத்தைக் கணக்கிட்டாலும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் கர்ப்ப காலத்தையும் சேர்த்துக்கொள்ளும்.  ஆகவே கர்ப்ப காலத்தையும் சேர்த்தெ எட்டு வயசு ஆக வேண்டும்.  பிறந்து ஏழு வயதும் இரண்டு அல்லது மூன்று மாதமும் ஆகி இருந்தால் சரியாக இருக்கும்.  ஏனெனில் இந்த வயதில் குழந்தை குழந்தையாகவே இருப்பான்.  மனதில் விகார எண்ணங்கள் இராது.  தவிர்க்க முடியாமல் போனால் தான் பதினாறு வயதுக்குள்ளாக உபநயனம் செய்விக்கலாம்.  இது பிராமணருக்கானது.

க்ஷத்திரியர்களுக்கான காலகட்டம் பதினொரு வயதில் இருந்து 22 வயது வரைக்கும்.  வைசியர்களுக்கான கால கட்டம் 12 வயதில் இருந்து 24 வயதுக்குள்ளாக.  அதற்குள்ளாக உபநயனம் செய்துவிட வேண்டும்.  இந்த உபநயனம் செய்விப்பதன் மூல காரணமே அந்தக் குழந்தை ஜபிக்கும் காயத்ரி மந்திரத்தின் ஆன்மீக அதிர்வலைகள் அவனுக்கு மட்டுமின்றிச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படுத்தும் நன்மையைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது.  குழந்தையின் மனதில் காமம் புகுந்து கொள்ளுமுன்னர் உபநயனம் செய்விக்க வேண்டும்.  மனதை ஒருநிலைப்படுத்த காயத்ரி மந்திரம் துணை நிற்கும்.  ப்ரம்ஹ தேஜஸை உபநயனம் செய்வித்த பிள்ளை சம்பாதித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் அதன் மூலம் நன்மையை ஏற்படுத்த முடியும்.


பதிவுக்கான தகவல்கள் உதவி: தி.வா.ஜி. மற்றும் தெய்வத்தின் குரல்

Thursday, July 19, 2012

உபநயனம் என்றால் என்ன? 1

உபநயனம் குறித்தும் அதன் பழக்கங்கள், சம்பிரதாயங்கள் குறித்தும் எழுதச் சொல்லி மின் தமிழில் சுபாஷிணி கேட்டிருந்தார்.  ஆகவே அதைக் குறித்து ஓர் 2 அல்லது 3 பதிவுகள் போட உத்தேசம்.


உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்றபொருளில் வரும்.  உப என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும்.  இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது.   அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு.  ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர்.  எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது.  வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.  இதில் 96 இழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.  சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.  இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை.  இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர்.  அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.  அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.  இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.


ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.  கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.  ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.  அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.  என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.  அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.  சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.  அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.  என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?  ஆம்;  பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.  அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.  ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த  பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.  என்ன செய்யலாம்?  காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?  அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.  அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது.  இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.  பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.  அவ்வளவு தானே!  நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.  மன்னன் நகைத்தான்.  ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.  பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.  மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை.  பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.  மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.


சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.  நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.  கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.  இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.  மன்னன் பொருள் தருவானா மாட்டானா?  ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?  அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?  நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?  அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?  குறைத்துவிடுவானோ?  பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?  அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.  அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.  காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.  பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.  வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை.  தடுமாறினார்.  ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.  அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.  அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.  என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?  சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று.  பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று.  அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.   


பிராமணர் அங்கிருந்து  சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே.  சாதுவும் கூட.  இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.  தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.  வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.  அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;  அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.  ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.  ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.  அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.”  என்றான் மந்திரி.


இந்த காயத்ரி மந்திரத்தையும், அதன் சக்தியைக் குறித்தும், அதை உபதேசமாய்ப் பெற்று அன்றாடம்  ஜபிக்க வேண்டிச் செய்யப்படும் உபநயனம் குறித்தும் மேலும் விபரமாகப் பார்ப்போமா.

Wednesday, July 18, 2012

ஹிஹிஹிஹி! சினிமா விமரிசனம் படிங்க!

மத்தியானம் கணினியைக் கொஞ்ச நேரம் மூடும் நேரம்.  நம்ம ரங்க்ஸ் அவரோட வழக்கப்படி ஒவ்வொரு சானலா மாத்திட்டிருந்தார்.  விஜய் சானலிலே  ஏதோ சிவாஜி படம்.  சரிதான் வழக்கமான மசாலானு நினைச்சுட்டு இருக்கிறச்சேயே நம்பியார் கிட்டே வாதாடித் தோத்துப் போன சிவாஜி வீட்டுக்குப் போனார்.  அவர் மனைவியா யார் நடிச்சதுனு பார்த்தா.....................மயக்கமே வந்துடுச்சு எனக்கு!  அம்பிகா.  அம்பிகாவுக்கு வயசாய் குண்டாய்ப் போனதுக்கப்புறம் நடிக்கலைனு பார்த்ததுமே புரிஞ்சது.  நல்லாத் தான் இருந்தாங்க.  ஆகவே அவங்க நக்ஷத்திரம் கலை உலகிலே பெரிய அளவில் பேசப்பட்டப்போ வந்திருக்கணும். ராதாவோட சிவாஜி நடிச்சது  முதல் மரியாதை படத்தில் சிவாஜி தான் வயசானவரா இருப்பார். ராதா அவங்க வயசுக்கேத்த மாதிரி சின்னப் பொண்ணாவே நடிப்பாங்க.  இதிலே அம்பிகாவுக்குப் போட்டிருந்த மேக்கப் கோரம்.  அதையும் மீறி அவங்க உண்மையான வயசும், இளமையும் தெரியுது. :))))))

என்ன படம்?  தெரியாது!  அம்பிகா மனைவி.  சிவாஜி கார் மெகானிக்னு கொஞ்ச நேரம் படத்தைப் பார்த்ததும் புரிஞ்சது.  நம்பியார் பொண்ணு சில்க்.  அவங்களை சிவாஜி பையர் சின்னப் பையர் கல்யாணம் செய்துக்கறார்.  பெரிய பையர் நிழல்கள் ரவி. மருமகள் தீபா.  ஹிஹிஹி, படம் பார்க்கையிலேயே சிவாஜி உணர்ச்சி வசமா நடிக்கையிலே சிரிப்பு வந்தது.  கதை என்னமோ வழக்கமான கதை தான்.  இரண்டு மகன்களும் சிவாஜியையும், அம்பிகாவையும் ஓரம் கட்ட, கடைசியில் சிவாஜி ஜெயிச்சு முன்னுக்கு வரார். சிவாஜியாச்சே. வந்து தான் ஆகணும்.  :)))) இந்தக் கதையில் முதல்முறையா முதியோர் இல்லம் திறக்கறதைப் பத்திச் சொல்றாங்க.  அது படம் வந்த காலத்தில் புதுமையா இருந்திருக்கணும். போய்ட்டுப் போய்ட்டு வந்து படம் பார்த்ததாலே புரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.  நல்லவேளையா கிளைமாக்சிலே நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியிலே இருக்கிற சிவாஜி முழ நீள வசனம் பேசலை.  கடிதமா எழுதிக் கொடுத்துடறார்.  அதுவும் நெஞ்சு வலியோடு எப்படியோ எழுதிடறார்.

அப்பாடா, கடைசியிலேயானும் கொஞ்சமானும் லாஜிக்கா இருந்ததேனு நினைச்சேன்.

இரண்டு நாட்கள் முன்னாடி பார்த்த இன்னொரு படம் நிஜம்மாவே நல்லாவே இருந்தது.  நடிச்சவங்க எல்லாரும் சீரியல் நடிகர்களா!  முதல்லே ஏதோ சீரியல்னே நினைச்சேன்.  அப்புறம் பார்த்தா விஜய் மாட்டினிங்கறாங்க. அதைச் சொல்றாங்களே படம் பேரைச் சொல்லக் கூடாதோ!  இன்னிக்குப் போட்ட சிவாஜி படமும் பேர் தெரியலை.  அந்தப் படமும் பெயர் தெரியலை.  அந்தப் படத்தில் ஒரு குழந்தையை எப்படியோ மெளலியின் விளம்பரக் கம்பெனி விளம்பரப் படத்தில் நடிக்க வைக்கிறது.  அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணும், பையரும் சேர்ந்து அதைச் செய்யறாங்க.  அந்தக் குழந்தையோ யாராலோ பணத்துக்காகக் கடத்தப்பட்டிருக்கு.  கடத்தல் குழந்தை இவங்க கைக்கு வருது.  குழந்தையோட பெற்றோரை மெளலியின் ஊழியர்கள் இருவருமாத் தேட மெளலிக்கோ விளம்பரப் படத்தை ஒப்புக்கொள்ளப் போகும் கம்பெனி நிர்வாகி குழந்தையின் பெற்றோர் அக்ரிமென்டில் கையெழுத்துப் போட்டால் தான் விளம்பரத்தை வெளியிட முடியும்னு சொல்லவே அதுக்குத் தவிக்கிறார்.

கடைசியில் எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறாங்க.  கொஞ்சம் விறு விறு, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் த்ரில்னு படம் பார்க்கிறாப்போல் இருந்தது. படம் பார்த்தவங்க பெயர் தெரிஞ்சால் சொல்லுங்கப்பா. 

இந்தக்கதையை எப்படி முடிக்கிறது? சொல்லுங்கப்பா! :))))

தினம் தினம் ஹிட் லிஸ்ட் என்னமோ எகிறுது;  ஆனால் கமென்டைத் தான் காணோம். :))))) போகட்டும்.  இந்தக் கதைங்கற பேரிலே நான் எழுதற அறுவையைச் சகிச்சுட்டுப் பின்னூட்டம் போடறவங்களைப் பார்த்து சில பேருக்கு அதிசயமா இருக்கு.  இன்னும் சிலர் கதையை எப்படிக் கொண்டு போகணும்னு ஐடியா கொடுத்திருக்காங்க.  சிலருக்கு அகிலாண்டத்தை நான் கொடுமைக்காரியாக் காட்டறது பிடிக்கலை!  வருத்தப்படறாங்க. இப்போ இதை இரண்டு பதிவுகளில் முடிக்கணும்னு நினைக்கிறேன்.  ஆனால் எங்கே கொண்டு விடுமோ தெரியாது.  என்றாலும் நான் ஒரு முடிவை யோசித்து வைத்திருக்கிறேன்.  அதை நோக்கிக் கதையை நகர்த்தணும்.  நகர்த்தறதா நினைச்சுட்டும் இருக்கேன். அதுக்குள்ளே ஏகப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள். :))))

படிக்கும் வாசகர்கள் என்ன நினைக்கறீங்க?  எப்படி முடிக்கணும்? அவங்க அவங்க ஐடியாவைப் பகிர்ந்துக்குங்க எல்லாரும்.

ம.சா:  உன்னோட பதிவுக்கு வந்து படிக்கிறதே போனாப் போகுதுனு ஸ்ரீராம் ஒருத்தரும், லக்ஷ்மியும் தான்.  இதிலே படிக்கும் வாசகர்கள்னு பில்ட் அப் வேறேயா?

ஹிஹிஹி, இந்த ம.சா. நேரம் காலம் தெரியாமல் வந்து தொந்திரவு செய்யும். வேறே வேலையே இல்லை அதுக்கு.  அதை உதறித்தள்ளிட்டுத் தான் எழுத வேண்டி இருக்கு.

Saturday, July 14, 2012


ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 


aanmiga-payanam.blogspot.in 

Friday, July 13, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 10

யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துக்கொண்டாள் அகிலாண்டம்.  ஏற்கெனவே ராதாவின் அம்மா, அப்பா கோபத்தில் இருப்பதால் அவளைப் பிறந்தகம் அனுப்பப் போவதில்லை என்றும், தானே பிரசவம் பார்க்கப் போவதாகவும் அக்கம்பக்கத்தை நம்ப வைத்தாள். எல்லாருமே அகிலாண்டத்தின் பரந்த மனதைப் பாராட்டினார்கள்.  அகிலாண்டமும் தான் முன்னாலே சென்று ராதாவைப் பார்த்துக்கொள்ளப் போவதாய்ச் சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.  ராதாவுக்கு வேலை அதிகமாயிற்று.  நாள் ஆக, ஆக, உள்ளூர ஒரு பயமும் வந்தது.  அகிலாண்டத்துக்கு ஏதாவது ஆயிற்றென்றால் உண்மையைச் சொன்னால் யார் நம்புவார்கள்? ராதாவின் பாடு தான் இன்னமும் ஆபத்து.  வித்யா மாசமாக இருப்பதாகவும், மசக்கைக்குப் பிறந்தகம் வர ஆசைப்படுவதாகவும், அம்மாவை உடனே அனுப்பி வைக்கும்படியும் கடிதம் வேறு வந்திருந்தது.  அகிலாண்டத்துக்கோ இன்னமும் பிரசவம் ஆகவில்லை.  ராதா எப்படியோ சமாளித்து பதில் போட்டாள்.  போதாக்குறைக்கு மாமனார் வேறே வந்து உட்கார்ந்துவிட்டார்.  அவருக்கு வேளா வேளைக்கு மனம் கோணாமல் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டி இருந்தது.  வித்யா கன்னாபின்னாவென்று ராதாவைத் திட்டி எழுதி இருந்தாள்.  ராதா அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டவில்லை.

அந்த நாளும் வந்தது.  அகிலாண்டத்துக்குப் பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவளுடைய, அவள் கணவருடைய முழுச் சம்மதத்துடன் குழந்தையை தன் சொந்தப் பிள்ளை , மருமகளிடம் பிறந்த உடனேயே ஒப்படைப்பதாக எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தனர் இருவரும்.  இந்த விஷயம் வெளியே தெரியாமல் ரகசியமாக இருக்கட்டும் எனவும், வெளி உலகுக்கு ராதாவும், சந்துருவுமே பெற்றோராக இருக்கட்டும் என்றும் மருத்துவரிடம் வேண்டிக் கொண்டார்கள்.  அந்த மருத்துவரோ,"அதெல்லாம் சரி, அம்மா, இதுக்காக ராதாவைக் குழந்தை பெற்றுக்கக் கூடாதுனு எல்லாம் சொல்லிடாதீங்க.  அவளுக்கென அவள்குழந்தை ஒன்று வேண்டாமா?" என்றாள்.  அகிலாண்டமும் தான் அப்படியெல்லாம் செய்யப் போவதில்லை என உறுதியளிக்க எல்லாமும் சுமுகமாக நடந்தது.  நல்லவேளையாக அகிலாண்டம் பிரசவத்தைத் தாங்கிக் கொண்டாள்.  இயல்பான மன உறுதி மட்டுமில்லாமல், நன்றாக வஞ்சனையில்லாமல் உண்டு, உறங்கி வேலை செய்து வளர்ந்த உடம்பாகையால் வலி எடுத்த ஒரே மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது.  ஆண் குழந்தையாய் இருக்குமோ என ஒரு நப்பாசை அகிலாண்டத்துக்கு.  ஒருவேளை ஆண் குழந்தையாக இருந்திருந்தால் கொடுத்திருக்கவும் மறுத்திருப்பாளோ என்னவோ!  பிறந்தது பெண்ணாக இருந்தது.  அகிலாண்டம் அப்படியே தூக்கி ராதாவின் கைகளில் கொடுத்து, "இனி இவள் உன் பெண்.  உன் வாழ்க்கையை நீ இவளுக்காக வாழவேண்டும்." என்றாள்.

என்ன இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையை யாரால் வெறுக்க முடியும்.  ராதா குழந்தையை அள்ளிக் கொண்டாள்.  ஆனால் அது பிறந்ததுமே தன் தாய் இவள் இல்லை என்பதைப் புரிந்தது போல் ராதா தூக்கினால் கத்த ஆரம்பித்தது.  சந்துருவோ, அகிலாண்டமோ தூக்கினால் பேசாமல் இருந்தது.  அகிலாண்டத்தின் கணவர் மெல்ல அகிலாண்டத்திடம், குழந்தையை நாமே வளர்ப்போமே எனச் சொல்லிப் பார்த்தார்.  ஆனால் அவர் சொல் ஏறவில்லை.  அகிலாண்டம் பிடிவாதமாகக் குழந்தையை எடுத்துச் சமாதனம் செய்யவோ, பால் கொடுக்கவோ மறுத்தாள். எப்போதாவது ராதா வேலை மும்முரத்தில் இருந்தால் தூக்கிச் சமாதானம் செய்வதோடு சரி. சந்துருவோ சுத்தமாய்த் தாயிடம் முகம் பார்த்துப் பேசுவதை நிறுத்திவிட்டான்.  ஆனால் அகிலாண்டத்துக்கு இது இன்னமும் உறைக்கவில்லை. வேலைத் தொந்திரவினாலும், அடுத்தடுத்த பிரச்னைகளாலும் சந்துருவுக்குப் பேச நேரமில்லை என நினைத்தாள்.

ஆயிற்று; குழந்தைக்குப் பெயரும் வைத்தாகிவிட்டது.  அகிலாண்டமும் அதுவரை இருந்தது போதும் என ஊருக்குக் கிளம்பிவிட்டாள். ராதாவைத் தனியாக அழைத்து, "நீ பெற்ற உன் குழந்தை போலவே பார்த்துக்கொள்ள வேண்டும்.  தற்போதைக்கு இன்னொரு குழந்தை பற்றி நினைக்கக்கூடாது." என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்.  இன்னமும் லதா கல்யாணம் இருக்கிறது;  அதோடு மேலும் இரண்டு பேரும் படித்து முன்னுக்கு வரணும்;  அதையே லட்சியமாய்க் கொண்டு இருக்க வேண்டும் எனப் படித்துப் படித்துச் சொன்னாள்.  லதாவைக் கொஞ்ச நாட்கள் துணைக்கு அனுப்பும்படி ராதா கேட்டதற்கு ஊருக்குப் போய்ப் பேசிப் பார்ப்பதாகச் சொன்னாள்.  ஊரில் போய் லதாவிடம் கேட்டதற்கு, "அவள் பெற்றதுக்கு நானா பிணை!  அவளை யாரு பெத்துக்கச் சொன்னா?  நானெல்லாம் போய் உதவி செய்ய மாட்டேன்." என்று திட்டமாக மறுத்தாள் லதா. அகிலாண்டமும் வற்புறுத்தவில்லை.  பேச்சு வாக்கில் பெண்ணுக்கு உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்யறது என்ற பயம் தான்.  எப்படியோ நாட்கள் ஓடின.  ஒரு பிடிவாதக்காரியாகவே ரம்யா வளர்ந்தாள்.   ராதா எவ்வளவு முயன்றும் அவள் பக்கம் ரம்யா திரும்ப மறுத்தாள்.  அதோடு அவ்வப்போது வந்து போகும் அகிலாண்டம் பேச்சு வாக்கில் ரம்யாவை ராதா ரொம்பவே கொடுமைப்படுத்துவதாக ஜாடை மாடையாகச் சொல்லிச் சொல்லி ரம்யாவின்மனதில் அது ஆழப் பதிந்தது.

அம்மாவிற்குத் தன்னைக் கண்டால் பிடிக்கவில்லை என்பதே ரம்யாவின் மனதில் இருந்தது.  அதோடு பார்க்கிறபேர் எல்லாருமே ராதாவின் ஜாடையோ, குணமோ கொஞ்சம் கூட இல்லையே என்றும் ஆச்சரியப் பட்டனர்.  ரம்யாவுக்கும் இயல்பாகவே பாட்டி என நினைத்த அகிலாண்டத்திடமும், அவள் பெற்ற தன் சகோதர, சகோதரிகளிடமுமே பாசம் இருந்தது.  ராதாவை எவ்வளவு அலக்ஷியம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தாள். இது உள்ளூர அகிலாண்டத்துக்கு சந்தோஷத்தையே அளித்தது.  சந்துரு மட்டும் அவளைப்புரிந்து கொள்ள வில்லை என்றால் ராதாவுக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்.  சந்துரு வாய் திறந்து ரம்யாவைக் கண்டிக்கவில்லை.  அதே சமயம் ராதா அவளைக் கண்டித்து வளர்ப்பது சரி என்றே எண்ணினான்.  தன் மற்றத் தங்கைகள் போலில்லாமல் இவளாவது கொஞ்சம் ஒழுங்காய் வளரட்டுமே என்ற எண்ணமும் இருந்தது.  இதற்கு நடுவில் லதாவின் கல்யாணமும் நிச்சயம் ஆனது.

பி.கு: திடீர்னு வந்த ஒரு அதிர்ச்சிச் செய்தியில் கொஞ்சம் தடுமாற்றம்;  மனவருத்தம்.  :(((( இதை எழுதி மூன்று நாட்களாகியும் போடலாமா வேண்டாமா, மேலே தொடரலாமா  என்ற குழப்பம்.  அப்புறமாச் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டிருக்கிறேன்.  விரைவில் முடிக்கப் பார்க்கிறேன்.


இது தனிக் குறிப்பு:

ஶ்ரீரங்கம் குறித்த தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.  எழுத ஆரம்பிச்சாச்சு.  பத்துப் பக்கங்கள் தயார் நிலையில்.  நேற்று இங்கே குடியிருப்பில் இருப்பவர்கள் மூலம் சில தகவல்கள் கிட்டின.  இப்படிப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறேன்.  சிதம்பர ரகசியம் அளவுக்கு எழுத முடியாவிட்டாலும், ஓரளவுக்கு ஶ்ரீரங்கம் குறித்தும் எழுத ஆசை.  அதை "எண்ணங்கள்" பதிவில் போடுவதா, "ஆன்மீகப் பயணம்" பக்கம் போடுவதா என்ற யோசனை.  இன்னமும் முடிவு செய்யவில்லை.  அநேகமாய் "ஆன்மீகப் பயணம்" பக்கத்தில் தான் போடலாம்.


Friday, July 06, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --9


வித்யாவின் கல்யாணம் நெருங்குவதால் ராதாவை உதவிக்கு அழைத்துப் போவதாக அகிலாண்டம் சந்துருவிடம் கூற அவளைத் தனியாக அனுப்ப மனமில்லாத சந்துரு தான் அழைத்து வருவதாய்க் கூறினான்.  ஆனால் அகிலாண்டம் திட்டமாக மறுத்துவிட்டாள். "அவ அம்மா, அப்பா தான் சண்டை போட்டுட்டுப் போயிட்டாங்க.  அதுக்காக பிள்ளைத் தாய்ச்சியை நாம விட்டுட முடியுமா?  நான் அழைச்சிட்டுப் போய் அவளுக்கு வாய்க்கும், வயித்துக்கும் வேண்டியதைக் கொடுக்கிறேன்." என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.  சந்துருவால் எதுவும் பேச முடியவில்லை.  ராதாவைக் கூடியவரையிலும் தனிமையில் அவன் சந்திக்க விடாமல் இந்த கர்ப்பத்தைக் காரணம் காட்டிக் காவல் காத்தாள் அகிலாண்டம். ஆனால் குழந்தை பிறக்கையில் என்ன செய்வது என்பதை இப்போதே யோசிக்க வேண்டுமே.  ராதாவே சொல்லுவது தான் சரி. நாம சொல்ல முடியாது என முடிவெடுத்தாள்.  ராதாவிடம் தனிமையில், "அவன் கோபப் படாமல் இந்தக் குழந்தையை ஏத்துக்கப் பண்ண வேண்டியது உன் பொறுப்பு." என்றும் கூறி இருந்தாள்.  வித்யாவின் கல்யாணம் நன்றாகவே நடந்தது.  அகிலாண்டம் எல்லாம் தன் பிள்ளை சந்துரு விருப்பப் பட்டுச் செய்வதாகவும், மாட்டுப் பெண்ணான ராதாவுக்கு அத்தனை இஷ்டமில்லை என்பது போலவும் எல்லார் முன்னாலும் பேசினாள்.

ராதாவின் அப்பா, அம்மா கல்யாணத்துக்கு வரவில்லை.  "அவங்க கோபம் இருக்கட்டும் ஒருபக்கம்; நாம சீமந்தம் செய்ய வேண்டாமா? எல்லாரும் வந்திருக்காங்க.  இதை ஒட்டிச் சீமந்தம் சிறப்பாச் செய்துடுவோம்; நாளெல்லாம் ஏற்கெனவே பார்த்துட்டேன்.  சீமந்த நாள் கிடைக்கிறது கஷ்டம்.  வளர்பிறையிலே தான் பண்ணணும்."  என்று அகிலாண்டம் நீட்டி முழக்கினாள்.  தாயையே கோபத்துடனும், வெறுப்புடனும் பார்த்தான் சந்துரு.  என்றாலும் பேச வழியில்லாமல் அவள் இஷ்டத்துக்கு ஆட வேண்டியதாகிவிட்டது. அவசரம் அவசரமாக ராதாவின் பெற்றோருக்குத் தொலைபேசியில் தகவல் சொல்லப் பட்டுவிட்டுச் சீமந்த ஏற்பாடுகள் நடந்தன.  அவர்களும் ஒரு காரை ஏற்பாடு பண்ணிக் கொண்டு இயன்றவரை சீர் வரிசைகளோடு வந்தார்கள்.  வந்தவர்களை அகிலாண்டம் மனமகிழ்ச்சியோடோ, சந்தோஷமாகவோ வரவேற்கவில்லை. வேண்டாவெறுப்பாகவே வரவேற்றாள்.  சீரைக் குற்றம் சொன்னாள்.  திடீர் ஏற்பாடினால் இவ்வளவு தான் முடிந்தது எனச் சொன்ன ராதாவின் பெற்றோரிடம் முகம் கொடுத்தே பேசவில்லை.  உண்மை நிலை தெரிந்திருந்ததால் ராதாவின் அம்மாவுக்குக் கோபம் வந்து பேச வாயெடுத்தபோது, ராதாவின் மெல்லிய கரம் அவளைத் தொட்டது.  திரும்பிப் பார்த்தவள் பெண்ணின் கண்களில் தெரிந்த வேண்டுகோளைக் கண்டதும் வாய் மூடி மெளனியானாள்.  சீமந்தம் முடிந்ததும் அன்றிரவு சாஸ்திர, சம்பிரதாயப் படி(எல்லாருக்கும் உண்டானு தெரியாது)  ராதாவையும், சந்துருவையும் அலங்கரிக்கப்பட்ட அறையில் தனியாகச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தது.  சந்துரு தனிமையில் வரப்போகும் ராதாவுக்குக் காத்திருந்தான். ராதாவும் வந்தாள்.

வந்தவளைக் கட்டி அணைத்தவண்ணம், "என்னை மன்னிச்சுடு ராதா;  மன்னிச்சுடு' நான் பாவி." எனத் தலையில் அடித்துக் கொண்டான்.  ராதா திகைத்தாள். "என்ன ஆச்சு இப்போ?  நமக்குத் தான் குழந்தை பிறக்கப் போறதே, இப்போப் பார்த்து இப்படி எல்லாம் சொல்லலாமா?" என்று கேட்க, உடனேயே  "எப்படி மறைக்கப் போறீங்க ரெண்டு பேரும் பிரசவத்தின் போது?" என்று கேட்டான் சந்துரு.  ராதா ஆடிப் போனாள்.  திகைப்பும், பயமும் கண்களில் தெரிய, "நீங்க... உங்களுக்கு,,,,,,,, நீங்க....." என்று தடுமாறினாள்.

"எனக்கு எப்படித் தெரியும் தானே?  நீயும் உன் அம்மாவும்,, உன் அம்மா ஊருக்குப் போறதுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்ததைப் பூராவும் கேட்டேன்." என்றவன்,"எல்லாம் என் தலை எழுத்து.  பொறுப்பில்லாத அம்மாவும், அப்பாவும். ஒண்ணு அம்மாவையாவது நம்மோடு கூட்டிக் கொண்டு போயிருக்கணும்.  இல்லைனா அப்பாவையாவது கூட்டிப் போயிருக்கணும்.  ஆனால் அவங்க கொஞ்சமாவது யோசிப்பாங்கனு நினைச்சேன்.  இவ்வளவு பேசற அம்மாவுக்கே புத்தி இல்லை.  என்னத்தைச் சொல்றது!' என்றான்.

பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராதா, "உங்க அம்மா உயரமாவும், மேல்வயிறாகவும் இருக்கிறதாலே வயிறு அதிகமாத் தெரியாதாம்.  அதோடு எப்போவுமே கொஞ்சம் மேடிட்ட வயிறு வேறே.  அதனால் சமாளிச்சுடுவாங்க.  பிரசவம் தான் நீங்க டூர் போவீங்களே அந்தச் சமயம் மருத்துவர் கிட்டேச் சொல்லிக் குழந்தையை எடுக்கச் சொல்லலாம்னு சொல்லிட்டு இருக்காங்க.  அப்போ சரியான நாளா இருக்கணும்;  அதோட அவங்க உடம்பு தாங்கணும்; வயசாச்சு இல்லையா? அதான் எனக்குக் கவலை.' படபடவெனப் பேசிய ராதாவையே பார்த்த சந்துரு, "உனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லையா?" என்றான்.

"என்னங்க செய்யமுடியும்?  அவங்க நிலையை மருத்துவர் என் கிட்டே எடுத்துச் சொல்லிட்டார்.  இப்போ அவங்களுக்கு ஆதரவு தான் தேவை.  அதை நாம தான் கொடுக்கணும்.  நீங்க தெரிஞ்சதாக் காட்டிக் கொண்டால், நான் தான் சொல்லிட்டேன்னு நினைப்பாங்க. " என்றாள் யோசனையுடன்.  "இல்லை, மருத்துவரே என்னை அழைத்து அறிவுரை சொன்னாள்." எனச் சொல்லி விடுகிறேன். ஒருத்தரும் இல்லாமல் தன்னந்தனியாக உன்னால் எப்படிப் பிரசவத்துக்கெல்லாம் துணை இருக்க முடியும்.  சரி நடக்கட்டும்; பார்த்துக்கொள்ளலாம்.  நாம இப்போது தூங்கலாம். பாவம், வேலை செய்து களைத்துப் போயிருக்கே.  நிம்மதியாத் தூங்கு." என்றான்.

Wednesday, July 04, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 8


அம்மா வந்திருக்கும் காரணம் தெரியாமல் சந்துருவுக்குக் குழப்பமாக இருந்தது.  தானும் வேலை இருப்பதால் சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டு, வீட்டுக்குப்போகையில் நேரம் கழித்துப் போவோம். ராதா, பாவம் தனிமையில் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு என்ன திண்டாடுவாளோ எனக் கவலைப்பட்டான் சந்துரு.  ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அவன் எதிரில் அகிலாண்டம் இப்படியும் உண்டோ என்னும்படி  ராதாவைத் தாங்கிக் கொண்டிருந்தாள்.  அவள் பேச்சில் இருந்தே சந்துருவுக்கு ராதாவின் கர்ப்பம் பற்றித் தெரிய வந்தது.  வெட்கம் காரணமாய் நம்மிடம் சொல்லலை போலிருக்கு என நினைத்துக் கொண்டான். விரைவில் இந்த ஆடிட் வேலையை முடித்துக் கொண்டு ராதாவுடன் பிறக்கப் போகும் குழந்தையைக் குறித்து மனம் விட்டுப் பேச எண்ணினான்.  அவன் தாயோ அதற்கு இடம் கொடுப்பவளாய்த் தெரியவில்லை.  ஏற்கெனவே இருவரும் சேர்ந்திருப்பதை அவ்வளவு விரும்பாதவளுக்கு இப்போது ராதாவின் கர்ப்பம் என்ற காரணமும் சேர்ந்து கொள்ளவே, மகனைக் கொஞ்சம் தள்ளியே இருக்கும்படி ஜாடையாகச் சொல்லிவிட்டாள். அகிலாண்டம் இந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டதும் அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். வித்யாவின் கல்யாணத்திற்கான பணத்திற்கு விரைவில் ஏற்பாடு செய்து அம்மாவை ஊருக்கு அனுப்புவதில் முனைந்தான்.

ஆனால் ராதாவின் அம்மாவுக்கு ஏற்கெனவே ராதா போட்டிருக்கும் கடிதம் கிடைக்கவே, அவர்கள் மனமகிழ்ச்சியோடு ராதாவுக்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்து கொண்டு பெண்ணைப் பார்த்து அழைத்துச் செல்ல வந்தனர்.வந்தவர்களை அகிலாண்டத்தின் நிஷ்டூரமான பேச்சே வரவேற்றது.  மாப்பிள்ளையும் வீட்டில் இல்லை.  ராதாவின் அம்மாவுக்கு முதல் பார்வையிலேயே ராதாவின் வாடிய முகமும், சோகம் கப்பிய கண்களும் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்த்தின.   ராதாவோ தாயையும், தந்தையையும் தனிமையில் சந்தித்துப் பேச மறுத்தாள்.  இதுவே விசித்திரமாய்ப் பட்டது.  தூண்டித் தூண்டிக் கேட்டும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி அவர்களைத் தவிர்க்கவே முயன்றாள்.  ராதா அப்பா சும்மாவே கோபக்காரர்.  ராதாவின் அலக்ஷியம் அவரைத் துன்புறுத்த, தாய், தகப்பன் உறவே வேண்டாம்னு ஆயிடுத்தானு கோபத்தில்  ராதாவிடம் கேட்க, ராதா வாயே திறக்காமல் மெளனம் சாதித்தாள்.

அகிலாண்டமோ இந்தச் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்திக்கொள்ள நினைத்தவளாய், எப்படியேனும் ராதாவின் அப்பாவோட கோபத்தைத் தூண்டி விடும் வகையில் பேசலானாள்.  அவள் பேச்சின் வீரியத்தை அவரால் தாங்க முடியவில்லை.  ராதாவை அப்போது அழைத்துப் போகமுடியவில்லை எனில் தான் கிளம்புவதாய்ச் சொல்லவே, ராதா அவரைக் கிளம்பச் சொன்னாள்.  ராதாவின் அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் அப்போது பார்த்துச் சந்துரு அலுவலில் இருந்து வந்துவிடவே எதுவும் பேச முடியவில்லை.  மறுநாள் காலையிலேயே அகிலாண்டம் தன் பெண்ணிற்குக் கல்யாணத்திற்கான சில நகைகளை வாங்க வேண்டிச் சந்துருவோடு போயிருந்தாள். ராதா சமைத்து முடித்துவிட்டுத் தன் அறைக்குப் போய்க் கதவைச்சார்த்திக் கொண்டிருந்தாள். இது தான் சமயம் என ராதாவின் அம்மா மெல்ல வந்து அறைக்கதவைத் தட்டினாள்.  கதவைத் திறந்த ராதா, தாயைக் கண்டதும், எதுவுமே பேச முடியாமல் அப்படியே அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"எதுக்குடி இந்த நாடகம்?" அம்மா கேட்டாள்.

"நாடகமா?  எந்த நாடகம்?" ராதா விழிக்க,

"அதான், கர்ப்பம்னு போடறியே, அந்த நாடகம் தான்." என்றாள் அம்மா.

ராதா அம்மாவையே ஆச்சரியத்துடன் பார்க்க, "ஏண்டிம்மா, தாயறியாத சூலா?  உன்னை வந்தன்னிக்குப் பார்த்தப்போவோ ஒண்ணும் இல்லைனு புரிஞ்சு போச்சு.  ஆனால் உன் மாமியார்......." என்று குரலைத் தழைத்துக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"அவங்கல்லாம் கடைக்குப் போயிருக்காங்களே, மாமியார் கடைக்குப் போனால் எப்படியும் ஒரு நாள் ஆயிடும்;  இப்போதைக்கு வரமாட்டாங்க." என உத்தரவாதம் தந்தாள் ராதா.  ஆனால் வெளியே..............

அகிலாண்டத்தைக் கடையிலேயே விட்டு விட்டு, பணம்போதவில்லை என வீட்டில் பணம் எடுத்துச் செல்ல வந்த சந்துருவுக்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. அங்கேயே எவரும் அறியாமல் இருந்து எல்லாவற்றையும் கேட்க நினைத்தான்.

ராதா சொல்லச் சொல்லக் கேட்ட ராதாவின் அம்மாவுக்குக் கோபம் வந்தது.  ஆற்றாமை பொங்கியது.  "ஏண்டி, தான் ஜாக்கிரதையா இருக்காம உன்னைக் கேள்வி கேட்கிறாளே உன் மாமியார்? இது அடுக்குமா?  அந்தத் தெய்வத்துக்கே அடுக்காது!" என்றாள் வருத்தமும், கோபமுமாக.

"அது சரி, உங்காத்துக்காரருக்குத் தெரியுமா?" என்று கேட்க, "தெரியாது, சொல்லக் கூடாதுனு சத்தியம் வாங்கிண்டுட்டா." என்று ராதா சொல்ல, "பொல்லாத சத்தியம், அவள் என்ன யோக்கியமா!  நான் இருக்கேன் உனக்கு ஆதரவா.  இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்." என்று அம்மா பரபரத்தாள்.

"வேண்டாம் அம்மா, டாக்டர் இப்போக் குழந்தையை எடுத்தா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடும்னு சொல்றாங்க.  அப்புறமா என் பாடு இன்னும் அதோகதிதான்.  ஏதோ இந்த மட்டும் அம்மானு சொல்லிண்டு இருக்காங்க இல்லையா?  அதையே பெரிசா நினைச்சுக்கலாம். எனக்கு இன்னொண்ணு பிறக்காமயா போகப் போறது? அப்போப் பார்த்துக்கலாம். இவங்க இதைப் பெத்துக்கட்டும்."என்றாள் நடக்கப் போவது குறித்து அறியாமலேயே. பின்னர் அம்மாவிடம், "இதெல்லாம் உனக்குத் தெரியக் கூடாதுனு சொல்லி இருக்காங்க.  அதனால் நீ தெரியாதது மாதிரியே நடந்துக்கோ." என்று எச்சரிக்கையும் செய்து வைத்தாள்.  அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சந்துரு, சத்தம் போடாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டு, அப்போது தான் வருகிறவன் போல வந்து அழைப்பு மணியை அழுத்தினான்.  தூரத்தில் நூலகம் சென்றிருந்த ராதாவின் தந்தை வருவதும் தெரிந்ததும்  சந்துருவின் மனம் ஏனோ கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

Monday, July 02, 2012

வாங்கப்பா, சீக்கிரமா, யானையார் தங்கக் குடத்தைத் தூக்கிட்டு ஓடிட போறார்!

யானையார் தங்கக்குடத்திலே ரங்கனுக்கு காவிரி நீர் எடுத்துட்டுப் போகத் தயாரா நிக்கிறார். இது நாங்க எடுத்தது இல்லை.  மழலைகள் குழும நண்பர் திரு புஷ்பா ராகவன் அவர்கள் எடுத்தது.  நேற்று நான் எழுதிய பதிவைப் படித்ததும் இருவரும் அம்மாமண்டபம் வந்து காலை எடுத்து இதைக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். நாங்க போறதுக்குள்ளே யானையார் அம்மாமண்டபத்திலிருந்து தெருவுக்கு வந்துட்டார். வேகமாப் போறச்சே தான் பார்க்கமுடிந்தது.  காலை நேரம் கொஞ்சம் கஷ்டம் தான். வீட்டு வேலைகளை மறந்துட்டுப் போகணும். :)))))) இதை அப்லோட் செய்ய உதவிய திரு வா.தி. அவர்களுக்கு என் நன்றி.  தெரியாதவங்க அவரோட இந்தப் பதிவிலே விளக்கம் சொல்லி இருப்பதைப் பார்க்கலாம்.  கணினி பத்தின எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் இங்கே விளக்கம் கொடுத்திருப்பார்.

https://techforelders.blogspot.in/2012/07/blog-post.html நன்றி.  லிங்கை அப்படியே கொடுத்திருப்பதற்கு மன்னிக்கவும்.  காப்பி, பேஸ்ட் பண்ணிக்குங்க. :))))))))) வீ.வே. அவசரம்Sunday, July 01, 2012

காவிரித்தாயே, காவிரித்தாயே
காவிரி அன்னை கோயில்.  அம்மா மண்டபம் படித்துறையில் இருக்கிறது. இன்னிக்குப் பிரதோஷம்னு இந்த சந்நிதிக்கு எதிரில் உள்ள காசி விஸ்வநாதரைப் ப்ரதோஷ தீபாராதனை பார்க்கப் போனப்போ, காவிரி அம்மன் சந்நிதியில் இருந்த குருக்கள் அழைத்தார்.  அங்கே போய் தரிசனம் செய்த பின்னர் தீர்த்தப் பிரசாதமும், சடாரியும் சாதித்தார்.  தீர்த்தம் ஓகே. காவிரி அன்னை நதியாக மாறி விடுவதால் சரியாகத் தோன்றிற்று.  ஏன் சடாரினு கேட்டால் ரங்கனின் தங்கை என்பதால் சடாரி உண்டாம்.  இவளுக்கு ரங்கன் ஆடி மாதம் வந்து சீரெல்லாம் கொடுத்துப் பார்த்துச் செல்வானாம்.  அப்போது ரங்கனுக்குச் செய்யும் அனைத்து மரியாதைகளும் இவளுக்கும் செய்யப்படுமாம்.  ஆகவே அடிப்படையில் சிவனையே சார்ந்திருந்தாலும் விஷ்ணு கோயிலின் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப் படுவதாய்ச் சொன்னார்.  பாதி சொல்றதுக்குள்ளே யாரோ வந்துட்டாங்க.  இன்னொரு தரம் போய் மிச்சம் கதையையும் கேட்கணும். நாளைக்கு இங்கே காவிரியிலிருந்து ரங்கன் திருமஞ்சனத்துக்குத் தங்கக் குடத்தில் யானையார் வந்து எடுத்துச் செல்லப் போகிறார்.  காலம்பர ஏழு மணிக்குள்ளாம்.  கொஞ்சம் கஷ்டம் தான்.  பார்க்கலாம். அப்போத் தான் பால், மோர், தயிர் எல்லாமும் வரும். :P:P:P வீட்டில் இருந்தாகணும். முடிஞ்சால் நாளைக்குப் படம் எடுத்துப் போடறேன்.  இந்தப் படம் முன்னாடி எடுத்தது.  இன்னிக்கு எடுக்கலை. :)))

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --7

அகிலாண்டம் ஊரிலிருந்து கிளம்பும்போதே ஒரு தீர்மானத்தோடேயே வந்திருந்தாள். அதை எப்படியானும் நிறைவேற்ற வேண்டும்.  ஆனால் சந்துரு அறியக் கூடாது.  ராதாவோடு ஆரம்பத்திலேயே பழகியதில் அவள் ராதாவைக்கடிந்து கொண்டதெல்லாம் சந்துருவின் காது வரை கொண்டு போனதில்லை என்பதை நிச்சயமாய் அறிந்திருந்தாள்.  ஆனால் அதற்காக ராதாவைப் பாராட்ட முடியுமா என்ன?  வாயைத் திறக்காமல் ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துண்டு அவனைப் பிரிக்க முயல்கிறாளோ என்னமோ! அதனால் அவ கிட்டே இளகினாப்போலெல்லாம் இருந்தால் சரிப்படாது.  என்ன பெரிசாக் கிழிச்சுட்டா?  வித்யா கல்யாணத்துக்கு அவளா செய்யப் போறா?  சந்துரு தானே செய்யப் போறான்!  இந்த பாழாப் போன மனுஷனுக்கு புத்தியே இல்லை.

சொத்து இருக்கு; சொத்து இருக்குனு உட்கார்ந்து சாப்பிட்டு அழிச்சாச்சு.  இந்த அழகிலே வருஷத்துக்கு ஒரு பிள்ளை வேறே.  துணுக்கென்றது அகிலாண்டத்துக்கு.  மாதாந்திர நாள் தள்ளிப் போனப்போ 48 வயசாச்சு, நிற்கப் போகும் நேரம்னு அலக்ஷியமா இருந்துவிட்டாள்.  பின்னால் சந்தேகம் வந்து டாக்டர் கிட்டேப் போனதிலே எடுக்கிறது கஷ்டம், உசிருக்கே ஆபத்து; அடுத்தடுத்துப் பிள்ளை பெற்றதோட அல்லாமல் வயசும் ஆச்சு.  இதைப் பெத்துக்கோங்கனு சொல்லிட்டா.  அகிலாண்டமும் தனக்குத் தெரிந்த வைத்தியமெல்லாம் பண்ணியும் அசையவில்லை.  இப்போ வேறே வழியில்லாமல் தான் ராதாவிடம் வந்திருக்கிறாள்.  ஆனால் ராதாவைப் பார்த்தால் சந்தேகமா இருக்கே!  எதுக்கும் இப்போ ஒண்ணும் கேட்டுக்க வேண்டாம்.  நாளைக்கு சந்துருவை ஆபீஸுக்கு அனுப்பிட்டு ராதாவை லீவு போடச் சொல்லிவிட்டு எல்லாத்தையும் அவளிடம் பேசிவிட வேண்டும்.

மறுநாள் சந்துரு வேலைக்குக் கிளம்புகையிலேயே அன்றைய தினத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு நகரை விட்டுத் தள்ளி இருக்கும் அலுவலகத்தில் ஆடிட்டிங்குக்குச் செல்வதாகவும், இரவு நேரம் ஆகிவிடும்; கவலைப்பட வேண்டாம் என்றும் பொதுவாகச் சொல்லிவிட்டுப்போனான்.  அவன் கிளம்பியதும், ராதாவும் அவள் அலுவலுக்குக் கிளம்ப, அகிலாண்டம், "எங்கே போறே! இரு. இன்னிக்கு நீ வேறொரு இடத்துக்கு என்னோடு வரவேண்டும்." என்று சொல்ல, ராதா, "எங்கே அம்மா?" என்று கேட்டாள்.  "போறச்சே எல்லாம் விபரமாய்ச் சொல்றேன். ஆனால் நான் சொல்வது எதுவும் சந்துருவுக்குத் தெரியக் கூடாது.  அப்படி உன் மூலமாத் தெரிஞ்சால் அடுத்த நிமிஷமே நான் எதையாவது தின்று உயிரை விட்டுடுவேன்; தெரிஞ்சுக்கோ!" என்று கடுமையாய்ச் சொன்னாள்.  எதற்கு இத்தனை பீடிகை எனப் புரியாமலேயே ராதா அலுவலகத்திற்கு அன்று விடுமுறை வேண்டும் எனப் பக்கத்துக் கடைக்குப் போய்த் தொலைபேசிச் சொன்னாள்.  பின்னர் ஒரு ஆட்டோ பிடித்துக்  கொண்டு இருவரும் கிளம்பினர்.

"எங்கே?" என்றாள் ராதா.  "நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளும் லேடி டாக்டர் கிட்டேத் தான். " என்று அகிலாண்டம் சொல்ல, ராதாவின் முகத்தில் வெட்கம் போர்த்துக் கொண்டது.  "அதுக்குள்ளே கண்டு பிடிச்சுட்டீங்களா? நாள் தள்ளிப் போய்ப் பத்து நாள் தான் ஆறது.  இன்னிக்குத் தான் எங்க அம்மாவுக்கே எழுதிப் போட்டேன்.  இன்னும் உங்க பிள்ளைக்குக் கூடச் சொல்லலை. இனிமேல் தான் சொல்லணும்." என்றாள்.  "ராதா, இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதானே நான் உங்களைத் தனிக்குடித்தனத்துக்கே அனுமதிக்காமல் இருந்தேன்.  இப்போ என்னை ஏமாத்திட்டியே?" என்றாள் அகிலாண்டம்.  ராதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  "நானும் ஜாடைமாடையா உங்க பிள்ளை கிட்டேச் சொல்லிப் பார்த்தேன்.  அவர் கேட்கலை." என்றாள்.

"அவன் ஆண்பிள்ளை.  அப்படித்தான் இருக்கும்.  நீ தான் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்.  அதுவும் இப்போக் குடும்பம் இருக்கும் நிலைமையிலே," என்று ஆரம்பிக்க, "வித்யா கல்யாணம் பத்திக் கவலைப்படாதீங்க அம்மா.  அதுக்கெல்லாம் இவர் அட்வான்ஸ் போட்டு வைச்சிருக்கார்.  பணம் கைக்கு வந்துடும். கல்யாணம் ஜாம் ஜாம்னு நடத்திடலாம்.  ஆச்சு, ஒரு ரெண்டு வருஷம் போனால், என் சம்பாத்தியமும் இருக்கே, லதாவின் கல்யாணத்தை இன்னும் நல்லாச் செய்யலாம்." என்றாள் மனப்பூர்வமாக.

"செய்வே, உனக்குனு ஒண்ணு பிறந்தா, அதுக்குச் செய்வியா? என் பெண், பிள்ளைகளுக்குச் செய்வியா? அதுக்கெல்லாம் உனக்கு மனசு வருமா?  ஏதோ வித்யா கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை நீ வரதுக்கு முந்தியே இருந்து அவன் செய்துட்டிருக்கானோ, பிழைச்சேனோ. லதா கல்யாணத்துக்கு நீ ஒரு துரும்பை அசைச்சுடு; என் பேரை மாத்திக்கிறேன்." என்றாள்.  கண்களில் கண்ணீர் ததும்ப வாயே திறக்காமல் இருந்தாள் ராதா.  "நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே! என்பாங்க. அது சரியா இருக்கு!" என்றாள் கடுமையாக.

அதற்குள்ளாக மருத்துவ சாலை வந்து சேர, இருவரும் இறங்கி மருத்துவரிடம் போனார்கள்.  ராதா உடலைக் காட்டும் முன்னர் அகிலாண்டம் தன் உடலைக் காட்டினாள். அகிலாண்டம் கர்ப்பமாக இருக்கும் செய்தி அப்போது தான் ராதாவுக்குப் புரிந்தது.  மேலும் மருத்துவர் அகிலாண்டத்தின் கர்ப்பத்தைக் கலைக்க மறுத்ததையும் பார்த்தாள்.  கலைத்தால் பிரச்னை வரும் எனவும், ஏற்கெனவே நான்கு மாசம் முடிந்து விட்டதாகவும் கூறினாள்.  வயது ஆகிவிட்டதால் கருச்சிதைவு செய்வது என்பது இயலாத ஒன்று என்றும் கூறினாள்.  அதன் பின்னர் ராதாவுக்குத் தன் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ள விருப்பமில்லை.  மருத்துவரிடம் சிறிது நேரம் தனியாகப் பேசினாள்.  அவர் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டாள்.  வீட்டுக்கு வந்ததும் விஷத்தை விழுங்குகிறாப் போல் அந்த மாத்திரைகளை விழுங்கினாள்.  குளியலறையில் போய் வயிற்றைத் தடவிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

அகிலாண்டம் பரிபூர்ண திருப்தியுடன் இருந்தாள்.  அவள் வாய் திறந்து சொல்லாமலேயே காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டோம் என மகிழ்ச்சியும் இருந்தது.  ராதாவை அழைத்து, "இப்போதைக்கு நீ கர்ப்பம் என்றே எல்லாரிடமும் சொல்.  சீமந்தம், வளைகாப்பு எல்லாம் முறைப்படி பண்ணிடுவோம்.  குழந்தை பிறக்கும் முன்னர் உங்க அம்மா வரவேண்டாம்னு சொல்லிடு.  என்ன செய்வியோ தெரியாது.  உங்க அம்மா வரக்கூடாது.  நான் வருகிறேன்.  வந்து குழந்தையைப் பெத்து உன் கிட்டே தான் கொடுப்பேன்.  யாருக்கும் அது என் குழந்தைனு தெரியக்கூடாது.  இது உனக்கும், எனக்கும் மட்டும் தான் தெரிஞ்சிருக்கணும்." என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

*********************************************************************************
படித்துக்கொண்டிருந்த ரம்யாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  இதிலே யாருக்கும் தெரியக்கூடாதுனு சொல்லி இருக்காளே, பாட்டி, இல்லை,இல்லை, அம்மா, அம்மாவா, பாட்டியா?  கடவுளே, ஏன் என்னைப் பிறக்க வைச்சே? ஏதோ ஒரு முகம் தெரியாத குடும்பத்து அநாதையாகவே இருந்திருக்கலாம் போலிருக்கே! அது சரி, அப்பாவுக்கு......அதான் அண்ணாவுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது?  அம்மா..... அதான் ராதா மன்னி.... அவள் சொல்லி இருப்பாளோ?