எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 31, 2012

என்றென்றும் ஆனந்தமேயின் பாதிப்பு! :))))

.இன்னம்பூராருக்குப்பெண்கள் இப்போவும், எப்போவும் கஷ்டப் படறதாகவே சொல்கிறார்.  ஒரு சில பெண்கள் விஷயத்தில் உண்மையே; ஆனாலும் அதற்கான தீர்வை தைரியமாய் எடுக்கணும் என்பதே என் கருத்து.  ஆனால் அவருக்கோ கோபமான கோபம்.  நேற்றுக் கோபத்தோடயே படுக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். இன்னமும் கோபம் தணியவில்லை.  அவரின் கேள்விகளும், என் பதிலும்! :)))))))))



.நம்முடைய கஷ்டங்களை, பிரச்னைகளைத் தீர்க்க வழி காணாமல் அழுது கொண்டிருக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்திற்காகத் தியாகம் செய்வதாய்ச் சொல்லும் பெண்கள் ஆகியோர் பரிதாபத்தையும், தங்கள் சார்புத் தன்மையையும் மீண்டும் மீண்டும் பாதுகாப்பா இருக்கணும்னு தான் எதிர்பார்க்கிறாங்களே தவிர, அதிலிருந்து வெளியே வந்து சிந்திக்க மறுக்கின்றனர்....'
~ இது சிக்கலான பிரச்னையை மழுப்பல் அணுகுமுறையில் தீர்வு காணும் உத்தி.
1. தங்கள் பிரச்னைகளை தீர்க்க சில பெண்களுக்கு வழி கிடைக்காது, ஆணாதிக்கத்தினால். ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால், வாழாவெட்டி.
2.குடும்பத்திற்குத் தியாகம்: எதிர்ஜாமீன் கொடுக்க வசதி இல்லை. இரண்டாம்தாரம். உடனே விதவை. அவள் தான் பெரியகுடும்பத்துக்கு பிள்ளை பேறு பார்க்கும் மருத்துவச்சி. அவள் தியாகி தான். என்ன பாதுகாப்பு, இந்த மண்ணங்கட்டி உலகில். அவள் சொத்தைத் திருடினார்கள்.
3. 'தடுத்தாட்கொள்ளப்பட்ட பெண்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது சிசுஹத்தி செய்து விட்டு. புத்ரகாமேஷ்டி யாகம் செய்வதை போல.
இன்னம்பூரான்
29 05 2012


ஐயா,

மழுப்பல் முறை எதுவும் இல்லை. பிரச்னையைப் பிரச்னையாய்ப் பார்க்கவேண்டும்;  அதிலிருந்து வெளிவர வேண்டும். என்பதே என் கருத்து.  அழுது கொண்டிருந்து, தானும் அழுது, சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்துத் தன்னைப் பார்த்துப்பரிதாபப் பட வைத்து.... தான் தியாகம் செய்கிறோம் என அனைவரிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு,

தன் குடும்பத்துக்குச் செய்வதைத் தியாகம்னு சொல்லக் கூடாது. (வற்புறுத்தல் இருந்தால் தவிர) வழி கிடைக்காது என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. வெளியே வந்தால் பாதுகாப்புப்போய்விடும் என்பதால் வருவதில்லை.  எங்கள் குடும்பத்திலேயே இதற்கு நல்ல உதாரணங்கள் இருந்தாலும் சொல்ல முடியவில்லை. ஆகவே விட்டு விட்டேன்.

ஆண் வாரிசை ஒரு காலத்தில் எதிர்பார்த்தார்கள் தான்.  ஆனால் இப்போது அப்படி இல்லை. பெண்ணோ, ஆணோ ஒரு குழந்தை போதும் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.  இதுவும் சமூகத்துக்குச் செய்யப்படும் தீமையே.  நன்மை அல்ல.  இது பற்றித் தனியாகச் சொல்வேன்.



குடும்பத்திற்குத் தியாகம்: எதிர்ஜாமீன் கொடுக்க வசதி இல்லை. இரண்டாம்தாரம். உடனே விதவை. அவள் தான் பெரியகுடும்பத்துக்கு பிள்ளை பேறு பார்க்கும் மருத்துவச்சி. அவள் தியாகி தான். என்ன பாதுகாப்பு, இந்த மண்ணங்கட்டி உலகில். அவள் சொத்தைத் திருடினார்கள். //

இப்படியானவர்களை அறிவேன். ஆனால் இப்போதெல்லாம் அந்தக் காலம் இல்லை.  இங்கே நாங்கள் இருக்கும் குடியிருப்பில் 90 வயது மூதாட்டி ஒருவர் இருக்கிறார்.  குழந்தைகள் பிறந்தும் உயிரோடு இல்லாமல், பக்கத்து வீட்டுப் பையரை வளர்த்துப் படிக்க வைத்து ஆதரவு காட்டி, தங்கை குழந்தைகளுக்கு ஆதரவாய் இருந்து, இப்போ தங்கை பிள்ளையிடம் தான் இருக்கிறார்.  கண்ணில் வைத்துப் போற்றுகிறார்கள்.  சொத்தெல்லாம் அதிகம் இல்லை.  உழைப்பு, உழைப்பு, உழைப்புத் தான் அவர்களிடம்.  பேட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.//









//தனித்திறமை கொண்ட கதாநாயகி வளர்வது தங்களது ஹீரோ பிம்பத்துக்கு ஆபத்தானது என்பதால், எந்த நடிகரும் அதை விரும்புவது இல்லை. எனவேதான் ஒரே மாதிரி​யான படங்கள் உருவாக்கப்படும் துரதிர்ஷ்டத்துக்குள் தமிழ் சினிமா சிக்கிக்கொண்டது’ என்கிறார் அசோகமித்திரன் என்று அவருடைய 'இருட்டுலிருந்து வளிச்சம்' என்ற நூலை மதீப்பீடு செய்த ஜூனியர் விகடன் கூறுகிறது.
~ ஆனந்தத்தை பிடுங்கிக்கொண்டது யாரு?//
இன்னம்பூரான்


சந்தேகமே இல்லாமல் ஆண்களே பிடுங்கிக்கறாங்க.  நான் சொல்வதும் அதுவே.  ஆணாதிக்கம் நிறைந்த உலகில் ஒரு பெண்ணாகப் பெண் என்பதை மறவாமல் ஆணோடு எந்தவிதத்திலும் போட்டியிடாமல் தங்கள் தனித் தன்மையால் வாழக் கற்க வேண்டும். பெண் பெண்ணாகவே இருக்க வேண்டும்.

ஜூனியர் விகடன் படிக்கிறதில்லை.  அதோட அசோக மித்திரன் என்னோட சித்தப்பா என்பதால் அவரோட கருத்தோட ஒத்தும் போக மாட்டேன். முதல்லே அவருக்கே பிடிக்காது.  தனித் திறமை கொண்ட கதாநாயகி வளர்வது பெரிய ஹீரோக்களுக்கு வேண்டுமானால் ஆபத்தாய் இருந்திருக்கும், இருக்கிறது. நாளையும் இருக்கும். ஆனால் அதையும் மீறி வந்தவர்களை ஒரு பட்டியலே சொல்லலாம். மீறி வருவதை தங்கள் லக்ஷியமாய்க் கொள்ள வேண்டும்.

ஸ்மிதா படீல், இவர் இறந்தப்போ மஹாராஷ்ட்ரா மொத்தமும் அழுத அழுகை; மறக்க முடியாது

ஷாபனா ஆஸ்மி-- ஸ்மிதா படீலும் இவரும் சேர்ந்து நடித்த படம் எவராலும் மறக்க முடியாது.

தீப்தி நாவல்-- அருமையான நடிகை

டிம்பிள் கபாடியா---ருதாலியில் இவரின் நடிப்பைப் பார்த்தால் எப்படிப்பட்டதொரு நடிகையைக் கவர்ச்சி நடிகையா ஆக்கிட்டோம்னு புரியும். எல்லாம் பணம் செய்யும் வேலை.

கரிஷ்மா கபூர்---ஷக்தி, ஜுபைதா இரண்டிலும் இவரின் நடிப்பைப் பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும்.

ஜெயா பாதுரி---பிறவி நடிகை; இவரைப் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம்.

ரேகா--- பன்முகத் திறமை கொண்ட நடிகையான இவரின் உம்ராவ் ஜான் படம் எவராலும் மறக்க முடியாத ஒன்று.

சுசித்ரா சென்  -- சஞ்சீவ் குமாரும் இவரும் சேர்ந்து நடித்த படம் "ஆந்தி?" மறக்க முடியாத ஒன்று.

ஊர்மிளா மண்டோத்கர்-- பனாரஸில் இவர் நடிப்பையும் இன்னொரு படம் இந்தப் படம் பேர் நினைவிலேயே நிற்கவில்லை, பஞ்சாபிப் பெண்ணாக நடிப்பார். இந்தியா--பாகிஸ்தான் பிரிவினையில் பழைய சண்டையில் முஸ்லீம் குடும்பத்தினர் திருமணம் நிச்சயமான இவரைக் கடத்திக் கொண்டு போவார்கள். இந்தப் படத்திலும் ஊர்மிளாவின் நடிப்பு அருமையாக இருக்கும்.

தமிழிலே இல்லையானு கேட்காதீங்க. ரொம்பக் கொஞ்சமே கொஞ்சம் தான். தேடிப் பிடிச்சுப் பார்த்தால்..........

ரேவதி, அர்ச்சனா, அஸ்வினி போன்ற சில நடிகைகள், காஞ்சிபுரம் படத்தில் சமீரா ரெட்டி? போன்றவர்கள், பாரதி படத்தில் தேவயானி  இவர்கள் எல்லாருமே ஆண்களை மீறிக்கொண்டு தன்னை நிரூபித்தவர்களே. இப்படியான நிரூபணமே தேவை. பல நடிகைகளும் பணத்துக்காக ஆடிப் பாடினால் போதும்னு இருக்காங்க.  அவங்க தான் சிந்திக்கணும்னு சொல்றேன். நடிப்புன்னா என்னனு புரிஞ்சுக்கணும். இயல்பா இருக்கணும்.  காஞ்சிபுரம் படத்தின் சமீரா ரெட்டியைப்பார்த்தால் தெரியும். வீடு படத்தின் அர்ச்சனா.  ரேவதி நடித்த சில படங்கள். ஆண்களின் திறமையை மிஞ்சிக் கொண்டு தான் இந்த நடிகைகள் எல்லாம் வர முடிந்திருக்கிறது.  ஆணோடு போட்டியே இல்லை என்பது என் கருத்து.  ஆனால் நீங்கள் போட்டி உண்டு என்கிறீர்கள்.  அங்கே தான் நாம் மாறுபடுகிறோம்.

Tuesday, May 29, 2012

என்றென்றும் ஆனந்தமே!


ஈகோவிற்கு இவர் அளிக்கும் விளக்கம் புதுமையானது.அதே சமயம் ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. ஈகோவிற்கு இந்த குருஜி மூலம் ஆசிரியர் சொல்லும் விளக்கம் Edging God Out.  இது இக்காலப் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு சாட்டையடி. ஆம், நம்மை வழிநடத்துகிற கடவுளை ஒதுக்கிவிட்டு எல்லாமே நம்மால்தான் என நாம் எண்ணுகிறோம் அல்லவா?அதைத் தான் இங்கே ஈகோ என்கிறார்.பாராட்டுக்களையே எதிர்பார்க்கிற மனத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்கிறார். பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்க்கிறவங்க இருக்காங்க தானே. அவங்களைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்.இது ஒருவகையான சார்புத் தன்மை என்று சொல்கிறார். நம்முள்ளே இருக்கும் சந்தோஷத்தை வெளிக்கொண்டு வரத் தான் முயலவேண்டுமே தவிர அடுத்தவர்களின் பாராட்டுக்களின் மூலம் அவங்க அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் இருக்கப் பழக வேண்டும். வன்முறையாளர்கள் ஆயுதத்தைக் கீழே போட்டால் ஒழிய அவங்களுக்கு அஹிம்சைன்னா என்னனு புரியாது இல்லையா? அது போல என்கிறார்.அதோடு மட்டுமின்றி நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தைப் புரிஞ்சுக்காமல் நம்முடைய கஷ்டங்களை, பிரச்னைகளைத் தீர்க்க வழி காணாமல் அழுது கொண்டிருக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்திற்காகத் தியாகம் செய்வதாய்ச் சொல்லும் பெண்கள் ஆகியோர் பரிதாபத்தையும், தங்கள் சார்புத் தன்மையையும் மீண்டும் மீண்டும் பாதுகாப்பா இருக்கணும்னு தான் எதிர்பார்க்கிறாங்களே தவிர, அதிலிருந்து வெளியே வந்து சிந்திக்க மறுக்கின்றனர்.

பெருவாரியான சீரியலில் நடிக்கும் பெண்களும், அதைப் பார்க்கும் பெண்களும் இப்படிச் சார்பு நிலையிலேயே இருப்பதைப் பாதுகாப்பாக உணர்கின்றனர்.மனிதர்களிடையே பழகுவது கூட நமக்கு நம்பிக்கை கொடுப்பவர்களா என்பதைத் தெரிந்து கொண்டு பேசுவதை ஆதரிக்கிறார்.  யாரையுமே நம்பக் கூடாது சொல்வது எப்படி எதிர்மறையான எண்ண வெளிப்பாடோ, அவ்வாறே அனைவரையும் நம்பு எனச் சொல்வதும் ஒருவகையில் எதிர்மறையான எண்ண வெளிப்பாடே ஆகும்.இதற்கு உதாரணமாகச் சொல்வது சீதையின் அக்னிப் ப்ரவேசத்தைத் தான். ராமர் சீதையை அக்னிப் ப்ரவேசம் செய்யச் சொன்னதை ராமர் சீதையின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  ஶ்ரீராமரும் அதுக்காக வாங்கிக்காத திட்டு இல்லை. ஆனால் இங்கே கதாசிரியர் குரு மூலமாக அதுக்குக் கொடுக்கும் புதிய விளக்கம், “சீதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்” என்பதை நிரூபிக்க என்கிறார். அப்பாடா, கடைசியில் இந்த விஷயத்தில் என் கருத்துக்கு ஒரு ஆதரவு கிடைச்சிருக்கு டோய்!!! J)

எந்த விஷயத்தையும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து முடிவெடுக்கணும்.  ஆனால் நம்மை விமரிசிக்கையில் இப்படி தர்க்கரீதியாக நிதானமாய்ச் சிந்திப்போமா?  நிச்சயமா மாட்டோம். சமீபத்திலேயே எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டன. பாராட்டுக்களையே சந்திக்கும் ஒருவரை விமரிசிக்கப் போய்க் கடைசியில் அவங்க தன்னோட குறையைப் புரிஞ்சுக்கலை; இங்கே தனிப்பட்ட குணத்தை/ தவறுகளைப் பொதுவில் விமரிசிக்கிறதைத் தவிர்க்க வேண்டும்.  அதே சமயம் நெருக்கமானவங்களிடம் தனியாக அவர்கள் செய்வது எவ்வகையில் தவறுனு சுட்டிக் காட்டலாம்.  ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.என்னோட மனஸ்தாபம் ஏற்பட்டது தான் மிச்சம். என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சுக்கறதில் தப்பில்லையே! நமக்கு நெருக்கமானவங்களா இருந்தாலும், அவங்க குறை,நிறைகளை விமரிசிக்கணும். ஆனால் அப்படிச் செய்தால் குறிப்பிட்ட நபரை நமக்குப் பிடிக்கலைனே புரிஞ்சு கொள்ளப் படுகிறோம். இதை என் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். சம்பந்தப்பட்டவங்க கொஞ்சமானும் மாத்திக்கணும்னு தான் சொல்றதே. அந்தப் புரிதல் இருக்காது. அதுக்குத் தான் விழிப்புணர்வு இருக்கணும். கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் விழிப்புணர்ச்சி இருந்தால் வாழ்க்கையின் ஓட்டத்தை ஒரு மாதிரியாப் புரிஞ்சு வைச்சுட்டு, நாம் போகவேண்டிய பாதை எதுனு தெரிஞ்சு வைச்சுட்டுச் சரியான பாதையில் சரியான முறையில் கட்டுப்பாடான வழியில் செல்கிறோமானு தெரிஞ்சுக்கலாம். இந்த விழிப்புணர்வை அது இல்லாமல் இருப்பதை மரணத்தோடு ஒப்பிடுகிறார்.

இங்கே மீண்டும் ராமாயணம் வேறே கோணத்தில் பார்க்கப் படுகிறது.  பொன்மானைப் பார்த்து ஆசைப்பட்ட சீதையும், கால் பட்டதும் கல்லும் பெண்ணாக மாறும் அளவுக்கு தெய்வீகமான ராமனும், ராமனின் பலம் தெரிஞ்சும் அவன் தன்னை உதவிக்குக் கூப்பிடுவானா என ராமனின் குரல் கேட்டு ஏமாந்த லக்ஷ்மணனும், அவங்க யாருமே இல்லைனதும், ஏமாற்றிச் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனும் என இவர்கள் அனைவரையும் ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். என்றாலும் இங்கே நம்பி ஏமாந்தது சீதை என்பதை மாற்றமுடியவில்லை.முதலில் பொன்மானைப் பார்த்து ஆசைப்பட்ட சீதை அந்த ஆசையினாலேயே கணவனையும், மைத்துனனையும் அனுப்பிவிட்டுத் தனித்து இருந்து ராவணனால் கவர்ந்து செல்லப் படுகிறாள். இங்கே சீதைக்கு இல்லாத விழிப்புணர்ச்சி சுட்டிக் காட்டப் படுகிறது.




ஹிஹி ஒரு சின்ன டிஸ்கி போட்டுக்கலாம்னு: போக்குவரத்து நிலைமையைப் பார்த்தால் தினசரி 300க்கும் மேலே போகுதே? ஆனால் 3 பின்னூட்டம் முக்கி முக்கி வந்தால் பெரிசு! போக்குவரத்தைப் பத்தி கூகிள் நிஜத்தைச் சொல்லுதா? பொய் சொல்லுதா? :P  தினம் இத்தனை பேர் நம்ம பதிவைப் பார்க்கிறாங்க/படிக்கிறாங்கனு இன்னும் பூரிச்சுப் போக ஆரம்பிக்கலை. :))))))

Sunday, May 27, 2012

ஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா--2

இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்
                        இசையும்படி தானணிந்து
    கைதனிலே பாசிபந்து கரியாமால் வண்ணன்
                                 கணையாழி தானணிந்து
     இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு
                                  இருபுறமும் பொன்சதங்கை
    காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு
காலில் பாடகமிட்டார்

இவை தசாவதார வர்ணிப்பு என்னும் பாடல் தொகுப்பில் காணப்படுபவை.  பலராலும் பாடப்படும்.

கள்ளழகர் வேடமிட்டோரும் கருப்புசாமி வேடமிட்டோரும் ஆடும் ஆட்டம் மெய் சிலிர்க்க வைக்கும்.  முன்பெல்லாம் அழகருக்குத் தண்ணீர் பீய்ச்சுவது நிறையவே நடக்கும்.  தற்சமயம் அதைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அறிகிறோம்.  ஆனாலும் சில குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் பீய்ச்சுவது உண்டு. முதல் நாள்  மலையில் இருந்து இறங்கி வரும் அழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கிக் கொண்டு மறுநாள் அதிகாலையில் மூணு மாவடி என்னும் இடத்தில்  தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார்.  மூணு மாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் சேவையையே எதிர்சேவை என்று சொல்லப் படுகிறது. அதன் பின்னர் அழகர் தல்லாகுளம் நோக்கிக் கிளம்புகிறார்.  அங்கும் ஒவ்வொரு மண்டகப் படியாகத் தங்கும் அழகர் அன்று மாலை அம்பலகார மண்டகப் படியில் தங்கிவிட்டுப் பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோயிலை அடைகிறார்.

தல்லாகுளம் வருதல்

145 குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற்
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரான் எழுந்தருளி-ஆடலுடன்
கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன்

தல்லா குளம்வந்து சார்ந்தருளி-மெல்ல  

அங்கு அழகருக்குத் திருமஞ்சனம் நடக்கும்.  அதன் பின்னரே தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கத் தயாராய்க் கிளம்புகிறார். இப்போது தான் அழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் சூடிக் கொடுத்த மாலை சூட்டப்படும்.  அழகருக்கு அணிவிக்கப் படும் உடை தேர்ந்தெடுக்கப் படுவது அன்றைய தினம் வரை எவருக்குமே தெரியாது என்கின்றனர்.  இது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.  பட்டாசாரியார் கண்களை மூடிக் கொண்டு எடுப்பார் என ஒரு கருத்து உண்டு. பொதுவாகச் சிவப்பு, மஞ்சள் தவிரப் பச்சை நிறப் பட்டு என்றால் அந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்றும் வெள்ளை நிறம் எனில் பரவாயில்லை எனவும் சொல்லப் படும்.  சிவப்போ, மஞ்சளோ இருந்தால் அது நாட்டுக்கு ஆகாது என்கிறார்கள்.   அதே போல அழகர் ஆற்றில் இறங்கவும் நேரம் குறிக்கப் பட்டுச் சரியாக அந்த நேரத்திலேயே அழகர் ஆற்றில் இறங்குவார். 

    வையைக்கரைத் திருக்கண்களில் வைகுதல்

150
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்-சுரலோகத்
திந்திரவி மானமிது என்றும் இதுசோமச்
சந்திரவி மானமே தானென்றும்-முந்தியவட்
டாங்க விமானம் அவையிரண்டும் என்னவே
தாங்கு விமானந் தனிற்புகுமுன்-தீங்கிலார்
உன்னி விமானம் உரத்தெடுக்கும் போதனந்தன்
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த - தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்
கோடி கதிரோனும் கோடி பனிமதியும்
ஓடி நிரையா உதித்தவென-நீடிய

160

பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச்-சொற்கத்
தியலுங் கரியுமதி லெற்று முரசும்
புயலும் உருமேறும் போலக் கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்துநர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலால் நீர்தூம்
துருத்தி மழைபோற் சொரியக்-கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கும் அன்பருக்குக்
கேட்டவரம் ஊறுங் கிணறுபோல்-நாட்டமுடன்
காணிக்கை வாங்க அன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண் வையைநதி யெய்தி-உரந்தரித்த
    

                          
அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருளும் காட்சியே கண் கொள்ளா காட்சியாகும்.  மதுரையிலே மீனாக்ஷிக்குத் திருமணம் எனக் கேள்விப் பட்டு ஆயிரம் பொன் சப்பரம் தயார் செய்து கொண்டு தானும் சகல அலங்காரங்களோடும், ஆபரண அணிகளோடும், பரிவாரங்களோடும் கல்யாணத்தைக் காணப் புறப்படும் அழகர் ஆற்றின் அக்கரையில் இருக்கும் மதுரைக்குச் செல்வதற்காக ஆற்றில் இறங்குவதாயும், அங்கே வீரராகவப் பெருமாளால் மீனாக்ஷியின் திருமணம் நடைபெற்ற செய்தி கேட்டுக் கோபம் கொண்டு ஆற்றில் இறங்கியவர் எதிர்க்கரைக்குப் போகாமல் ஆற்றின் அந்தக் கரையோடேயே வண்டியூருக்குச் செல்வதாயும் ஐதீகம்.  இது செவிவழிக்கதை.  ஆதாரங்கள் ஏதும் இல்லை.  ஆனால் அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியிருக்கும் காட்சி அற்புதமான காட்சி.  ஆற்றில் எழுந்தருளியருளும் அழகரை மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் .இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும். மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா. வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும் இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல் நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன் கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள். பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக வண்டியூர் போகிறார்.  மதுரையும் அதன் சுற்றுப் புறங்களிலும் திருவிழாக்கோலம் காணப்படுவதோடு ஒரு சொம்பில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து, அல்லது தாம்பாளத்தில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து அதன் மேலே சூடம் ஏற்றி அழகரை வழிபடுவார்கள்.

பிறந்து மூன்று மாதமே ஆன சின்னஞ்சிறு குழந்தையானாலும் அழகர் ஆற்றில் இறங்குகையில் அந்தக் குழந்தைக்கு மொட்டை போடுவார்கள்.  அவங்க குலதெய்வம் யாராக இருந்தாலும் அழகர் ஆற்றில் இறங்கும் சமயம் வீட்டில் பிறந்திருக்கும் புதிய குழந்தைக்கு மொட்டை போட்டே ஆகவேண்டும் என்பதை ஒரு ஐதீகமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.  வண்டியூருக்குச் செல்லும் அழகர் அங்கே துலுக்க நாச்சியார் இடத்தில் தங்குவதாய்ச் சொல்கின்றனர்.  இந்தத் துலுக்க நாச்சியாரையும் பெருமாளையும் பிரபலமான மூன்று கோயில்களில் இணைத்துப் பேசப் படுகிறது.  ஒன்று ஸ்ரீரங்கம் கோயில். அந்நியப் படையெடுப்பின் போது ரங்கநாதரைக் கோயிலில் இருந்து ஊர் ஊராக எடுத்துச் செல்கையில் அவர் டில்லி சுல்தான் மகளின் பாதுகாப்பில் சில காலம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ரங்கநாதரின் அழகில் சுல்தான் மகள் மயங்கிப் போய் ரங்கனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியதாகவும், அவளைஅரங்கனார் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்கின்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியார் சந்நிதி இன்றைக்கும் உள்ளது. லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி நிவேதனத்தைப் பெருமாள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கின்றனர்.

இன்னொரு விதத்தில் மேல்கோட்டைச் செல்லப்பிள்ளையிடம் சுல்தான் மகள் மயங்கி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாய்ச் சொல்கின்றனர்.  இங்கே அழகர் மலைக்கருகே வண்டியூரில் தயிர் விற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியப் பெண்ணுக்கு அழகர் மேல் காதல் எனவும் அழகர் அவளை மணந்து கொண்டதாகவும், ஆற்றில் இறங்காமல் கோவித்துக் கொண்டு போய் துலுக்கநாச்சியாரிடம் தங்குவதாயும் சொல்கின்றனர்.  ஆனால் அங்கே துலுக்க நாச்சியாரே இல்லை எனவும் சொல்கின்றனர்.

மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி தேனூர் போய் மண்டூக மஹரிஷிக்கு மோக்ஷமளிக்கிறார் அழகர்.   நீரில் மூழ்கித் தவம் இருந்த மண்டூக மஹரிஷி துர்வாசர் வந்ததைக் கவனிக்காமல் இருந்த காரணத்தால் அவரால் தவளைப் பிறப்படையும்படி சபிக்கப் படுகிறார்.  பின்னர் பெருமாள் வந்து சித்ராபெளர்ணமிக்குப்பின்னர் சாப விமோசனம் கொடுப்பார் எனவும் துர்வாசர் கூறுகிறர்.  அதுதான் தேனூரில் வருடா வருடம் நடக்கும். பிறகு அன்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர் மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க சேவையுடன் புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு சேவை நடக்கும். மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர் அப்பன் திருப்பதிக்குச் சென்று திருமலையை அடைவார். மறுநாள் அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்       இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும் முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள் தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள் மதுரைக்குப் புறப்படும் அழகர் ஒன்பதாம் நாள் மீண்டும் தம் மலைக்குத் திரும்பி விடுவார்.


ஆடி மாதம் வரை அழகர் மலைக்குள் போகாமல் வெளியே இருப்பார்.  அது குறித்துப் பின்னர் எழுதுகிறேன்.

பாடல்கள் உதவி: தமிழ் விர்ச்சுவல் பல்கலைக் கழகம். தசாவதார வர்ணிப்புப் பாடல் கூகிள் தேடலில் கிடைத்தது.  யார் எழுதியது எனத் தெரியவில்லை.  பல செய்திகளும் நினைவில் இருந்தே எழுதியவை என்பதால் தற்சமயம் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம்.





Saturday, May 26, 2012

ஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா!

இப்போதைக்கு அழகர் பத்தி மட்டும் சொல்கிறேன்.  சித்திரைத் திருவிழா முழுசையும் பத்தி எழுத நிறையவே இருக்கு. ஆனால் அழகர் திருவிழா ஒரு காலத்தில் தனியாகவே நடந்து வந்தது.  மதுரையில் மீனாக்ஷி கல்யாணம் மாசி, பங்குனி மாதங்களில் நடந்து வந்தது.  அந்தச் சமயம் அறுவடை மும்முரமாக இருக்கும் நேரம் ஆதலாலும், கோடையில் மக்கள் ஓய்வாக இருப்பார்கள் என்பதாலும் மாசி, பங்குனியில் நடந்த மீனாக்ஷி கல்யாணத் திருவிழாவைத் திருமலை நாயக்கர் மன்னராக இருந்த போது சித்திரை மாதத்தில் மாற்றினார்.

அழகர் திருவிழா தேனூரில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.  அங்கே தான் மண்டூக முனிவருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு சித்ரா பெளர்ணமிக்கு மறுநாள் நடைபெறும்.  இரண்டையும் ஒன்றாக இணைத்தது திருமலை நாயக்கர். அழகர் கோயில் திருமாலிருஞ்சோலையாகவே 19-ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்தது.   பெருமாள் கள்ளழகர் என்ற பெயருடனும் அழைக்கப்படவில்லை.  ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும் இவை அறிய முடிந்தாலும் இக்கோயிலின் கல்வெட்டுக்களில் இருந்தும் இது தெரிய வருவதாய் அறிகிறோம்.  இதற்குக் காரணம் என்னவெனில் அழகர்மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் கள்ளர்களே அதிகமாய் வாழ்ந்து வந்தனர்.  அவர்களின் வாழ்வாதாரம் வழிப்பறிக் கொள்ளை தான். அவ்வப்போது கிடைத்த நபர்களிடம் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தனர்.  சொத்துக்கள் நிறைய உள்ள கோயிலின் அழகர் ஒவ்வொரு வருடமும் மலையை விட்டுக் கீழே இறங்கும்போது கள்ளர்களால் வழிமறிக்கப் படும் அபாயம் இருந்தது.  ஆகவே கோயிலின் நிர்வாகிகள் கள்ளர்கள் தலைவனோடு சேர்ந்து ஆலோசித்துக் கள்ளர்களுக்குக் கோயிலில் முதல்மரியாதை கொடுக்க ஒப்புக் கொள்கின்றனர்.  அதோடு இறைவனுக்கும் கள்ளர்களின் தலைவன் என்ற கள்ள அழகர் கோலம் போட ஒப்புக் கொள்கின்றனர்.  இந்த ஒப்பந்தத்தின் படியே மலையில் இருந்து இறங்கி வரும் அழகர், (சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு.) கள்ளர் வேடத்தில் வருகிறார்.

சங்கு, சக்கரத்தை விட முடியுமா? இல்லை கிரீடத்தைத் தான் விடமுடியுமா?  அவற்றோடு காட்சி தரும் கள்ளழகர், கள்ளர்களின் ஆயுதமான வளரித்தடி, கன்னம் இடும்  ஆயுதம், சாட்டைக் கம்பு, காதுகளில் கள்ளர்கள் அணியும் கடுக்கன், கறுப்பு ஆடை, தலையில் கள்ளக் கொண்டை போட்டுக் கொண்டு தல்லாகுளம் கள்ளர்களின் தலைவராக கள்ளராகவே மாறி வருகிறார்.  கோயில் வாசலில் இருந்து வெளியே வரும் அழகர் அங்குள்ள பதினெட்டாம்படிக் கருப்பு சந்நிதியில் தங்குவார்.  அங்கு வைத்துக் கருப்பண்ண சாமியிடம் அழகரின் நகைகளின் கணக்குக் கூறப்படும்.  இவை முடிந்த பிறகே மலையை விட்டுக் கீழே இறங்குவார்.  கூடவே கள்ள இனத்தவரும், மற்ற இனத்து இளைஞர்களும் அழகர் வேடமிட்டுக் கைகளில் தண்ணீர் பீய்ச்சும் துருத்தியை எடுத்துக் கொண்டு அனைவர் மேலும் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டே ஆடிப் பாடிக் கொண்டு வருவார்கள்.  தப்பும், தவிலும் முழங்க துருத்தியால் தண்ணீர் பீய்ச்சுபவர்கள் அழகரையும் விட மாட்டார்கள். அவர்களில் ஒருவரே.  அழகரைச் சுமக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒயிலாட்டம் ஆடிக்கொண்டு அழகரைச் சுமந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர்கள் ஆடுகிற ஆட்டத்தில் தங்கக் குதிரை உண்மையாகவே ஓடி வருகிறாப் போல் இருக்கும். இவ்வாறு தல்லாகுளம் நோக்கி வருவார்கள்.  அடுத்து எதிர்சேவை

Thursday, May 24, 2012

ஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்!

ஆண்டாள் நல்ல சுறுசுறுப்பானவள்.  ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களின் ஆரம்பத்தில்  வரும் பாடல் காட்சிகளில் இவள் இல்லாமல் ஆரம்பிக்காது.  அது அவங்களுக்கு ஒரு ராசி. தினம் தினம் தலையில் தங்கக் குடத்தில் நீர் சுமந்து கொண்டு வருவாள்.  வருடத்தில் பதினொரு மாதங்கள் வடக்கே இருந்தும், ஐப்பசி மாதம் மட்டும் தெற்கே இருந்தும் நீர் சுமப்பாள். (வருடத்தில் பதினொரு மாதங்கள் கொள்ளிடத்திலும், துலா மாசம் எனப்படும் ஐப்பசியில் காவிரியிலிருந்தும்)  நவராத்திரியில் கேட்கவே வேண்டாம்.  ரங்கநாயகியோடு நல்ல விளையாட்டுத் தான்.  ரங்கநாயகியும் இவளுக்குச் சரிசமமாக விளையாடுவாள். ரங்கநாயகியின் கால்கொலுசோடு ஆண்டாளின் கால் கொலுசை ஒப்பிட்டுப்பார்த்தால் ஆண்டாளுடையது பிரம்மாண்டமாய் இருக்கும்.  என்றாலும் ரங்கத்துக்குக் கோபமே வராது.

அந்தக் காலில் கொலுசைப் போட்டுக் கொண்டு ஆண்டாள் நொண்டியடித்து விளையாடுவதைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடுமாம்.  நொண்டியடித்து விளையாடுவதோடு மட்டுமின்றி ரங்கநாயகிக்காக ஆண்டாள் பாட்டெல்லாம் பாடிக் காட்டுவாளாம்.  அதுவும் மெளத் ஆர்கனில். ஆண்டாள் வாசிக்கும் மெளத் ஆர்கன் இசையைக் கேட்கவே கூட்டம் கூடுமாம்.  எல்லாம் கேட்டுப் பார்த்து, விளையாடிக் களைத்துப் போகும் ரங்கநாயகிக்கு ஆண்டாள் வெண் சாமரம் வீசி ஆசுவாசப் படுத்துவாளாம்.

ஊர்க்காரர்கள் அனைவருக்கும் ஆண்டாளின் மேல் பிரியம் அதிகம்.  தினம் காலை ஒரு பெரிய வாளி நிறைய ஆண்டாளுக்குக் காஃபி தயாராக இருக்குமாம்.  ஆண்டாளுக்குக் காஃபி என்றால் உயிராம்.  அதோடு நாமெல்லாம் சாப்பிடும் எல்லாவற்றையும் ஆண்டாளும் சாப்பிடுகிறாள். இட்லி,காஃபி தான் காலை டிபனாக இருந்திருக்கிறது.  இப்போக் கொஞ்ச நாட்களாக ஆண்டாள் தேநீருக்கும் பழகிக் கொண்டிருக்கிறாள்.  ஆனால் காஃபியோ, தேநீரோ எதானாலும் ஆண்டாளுக்கு வாளியில் தான்.  குறைந்தது ஐந்து லிட்டராவது வேண்டும்.  அதுக்குக் குறைச்சு நோ தான்.

இதனால் தானோ என்னமோ ஆண்டாளுக்கு திருஷ்டிப் பட்டு விட்டது.  இப்போ ரத்த அழுத்தமும் கூடிப் போய் சர்க்கரையும் வந்து விட்டது.  ஆனாலும் காஃபிக்கோ, தேநீருக்கோ சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆண்டாளுக்குப் பிடிக்க வில்லை.  எப்படியோ ஒப்பேற்றுகிறாள் என்றால் அதுக்குக் காரணம் ஆண்டாளைக் கவனித்துக் கொள்ளும், ஸ்ரீதர் என்னும் பாலக்காட்டுப் பாகனும், அவருடைய தம்பியும் தான்.  இருவரும் தங்கள் சொந்தப் பெண்ணைப்போல் ஆண்டாளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.


 ஆண்டாளுக்கு உடம்பு சரியாகப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.












தகவல்கள் உதவி: வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி (ஆதிலக்ஷ்மி)

Tuesday, May 22, 2012

காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!

காவேரிக் கரையிலே /  இல்லை; இல்லை, காவேரிக்குள்ளேயே :)))கொஞ்சம் சுத்தம் செய்து விளக்குகள் போட்டு மக்கள் மாலை வேளையில் கூடும் பீச் போல ஏற்படுத்தி உள்ளது திருச்சி நகராட்சி.  கருட மண்டபம் அருகே இருந்தும் போகலாம்.  மாம்பழச் சாலையில் இருந்தும் போகலாம். திருச்சி மக்களே அதிகம் வருகின்றனர்.  கூட்டம் வரும் முன்னர் போய்ப் படம் எடுக்கணும்னு இன்னிக்கு ஆறரைக்கே போனோம். ஒரு சில படங்கள் பார்வைக்கு.

இது ஒரு பக்கத்துப் பார்வை. காவேரி அகண்ட காவேரியாய் இருப்பதால் முழுசையும் கவர் பண்ண முடியவில்லை.  வெட்டி ஒட்ட வேண்டும். அது இன்னமும் சரியா வரலை. :(



விளக்குகள் போட்டதும் எடுத்த படம். வெயில் இருந்ததால் விளக்குகள் தெரியவில்லை.  தூரத் தெரியும் விளக்குகள் திருச்சி நகரின் வெளிச்சம். கரூர் பைபாஸ் ரோடு.


திருச்சிக் கரையில் உச்சிப் பிள்ளையாரும், மலைக்கோட்டையும்.


உச்சிப் பிள்ளையாரைப் பார்த்தபடி ரங்க்ஸ்! :))))))))

புத்தக, திரைப்பட விமரிசனங்கள்! எங்கேப்பா எல்லாரும்?

வழக்கமா வந்து பின்னூட்டம் போடறவங்களைக் கூட நாலைந்து நாளாக் காணோம். எல்லாரும் ஒரே சமயம் பிசி போல! பொதுவாப் பின்னூட்டங்களை எதிர்பார்க்காமலேயே எழுதப் பழகினாலும் பார்த்த மனிதர்களைக் காணோம்னா கொஞ்சம் கவலை வருது உண்மை தான்..அதோட நானும் நாலைந்து நாட்களாக் கொஞ்சம் பிசி, நண்பர் வருகைனு இருந்துட்டேன்.  வேறே யாரும் இல்லை. எல்கே தான்.  சென்னையிலே பயமுறுத்திட்டிருந்தார்; இங்கே நிஜம்மாவே வந்து பயமுறுத்திட்டுப் போயிட்டார். :)))

ஶ்ரீராம் அனுப்பிய "தூறல்கள்" புத்தகம் படித்து முடித்து விட்டேன்.  அருமையான நினைவஞ்சலி என்பதோடு மனைவிக்காக உருகும் கணவர்களும் உண்டு என்பதையும் சொல்கிறது.  மனைவியின் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு பாஹே, ஹேபா என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் அவரைப் போல் எல்லாரும் இருந்தால் கணவன், மனைவி சண்டையே வராது.  "நான்" என்பது குறித்த விளக்கம் அருமை. மெளனம் பற்றிய விளக்கமும் பிடித்த ஒன்றாக அமைந்தது. உண்மையில் மெளனத்தை விடச் சிறந்த மொழி இல்லை என்பதே என் கருத்தும்.

நல்ல தரமான அட்டை, தரமான பேப்பர். முன்னட்டையில் பாஹே அவர்களின் பேரச் செல்வங்கள் ஆனந்தமயமான தூறல்களை வானவில் பின்னணியில் ரசிக்கின்றனர். முதல் மழை முகத்தில் விழுவதை ரசித்திருக்கிறீர்களா? அந்த முதல் மழை உடலுக்கும் குளுமை தரும் என்பார்கள்.  கோடையில் திடீர் மழை பெய்கையில் வெளியே நின்ற வண்ணம் முகத்தில் மழைத் தூறல்கள் விழும்போது ஆஹா! அட்டையைப் பார்த்ததுமே அந்த உணர்வு வந்தது. பின்னட்டையில் வாழ்க்கைப் பயணத்தில் முதுமை அடைந்து தற்போது தனிமையும் வந்து தன்னந்தனியாகப் பயணிக்கும் முதியவர். அவருடைய தனிமை அவரை எவ்வளவு வாட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

"போய்விட்ட வாழ்க்கை திரும்பக் கிடைத்தால்
எல்லோருமே வேறுவிதமாகத் தான் செயல்படுவார்கள்." இது எவ்வளவு சத்தியமான ஒன்று. நானும் பலமுறை நினைத்திருக்கிறேன், கடந்த காலம் திரும்பக் கிடைத்தால் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ளலாமே என.  அருமையானதொரு புத்தகத்தைப் பரிசாக அளித்த ஶ்ரீராமுக்கும், அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

இன்று லார்ட் மவுன்ட்பேட்டன் திரைப்படம் பார்த்தேன்.படேல் ஆகஸ்ட் 15 நாள் நன்றாக இல்லை எனவும், அன்றைய தினம் சுதந்திரம் கிடைத்தால் இந்தியாவுக்கு மோசமான எதிர்காலம் எனவும் ஜோசியர்களால் கணிக்கப் பட்டிருப்பதைக் கூறவும், நேரு அதை ஆகஸ்ட் பதினான்கு நள்ளிரவு 12 மணி என மாற்றுகிறார். படேல் ஏன் மறுக்கவில்லை? இந்தியா கையை விட்டுப் போனால் போதும்னு பிரிட்டிஷ் காரங்க அவசரம் அவசரமாக் கொடுத்துட்டாங்க போல! பாகப்பிரிவினைக் காட்சியைக் காட்டுவாங்கனு நம்ம ரங்க்ஸ் சொன்னதால் உட்கார்ந்தேன்.அதைக் காட்டவில்லை; அது வேறே படம் போல! இதிலே இரவு பனிரண்டு மணி வரை தலைவர்கள் அனைவரும் காத்திருந்து பனிரண்டு அடித்ததும், (சரியாக) நிர்வாக மாற்றம் செய்து கொள்வதோடும், யூனியன் ஜாக் கொடி கீழிறங்கி தேசியக் கொடி ஏறுவதும் காட்டியதோடு படம் முடிகிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் படத்தில் எதுவும் இல்லை. கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

Saturday, May 19, 2012

ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!


இந்த குருவைச் சந்திக்கும் மாயாவுக்கு அவருடைய ஜீன்ஸும், கதர் ஜிப்பாவும் மட்டுமின்றி அவர் கிராப்தலையுடனும், ஸ்போர்ட்ஸ் ஷூவுடனும் காணப்பட்டதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.  இந்த குரு “ஆன்மிகம்” பேசவும் இல்லை.  “பெண்மிகம்” தான் பேசுகிறார்.  ஆரம்பமே அதிர்ச்சியாக உள்ளது.  பெண்களின் பிரச்னைகள் அனைத்துமே “மென்” என்னும் பெயரில் ஆரம்பிப்பதைச் சுட்டிக் காட்டி அதிர வைத்தார்.  மென்ஸ்ட்ருவேஷன், மெனோபாஸ், மெண்டல் ஸ்ட்ரெஸ் என அனைத்துமே ஆண்களில் தான் ஆரம்பிக்கிறது என்பதாலேயே பெண்கள் ஆண்களோடு போட்டி போட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை எடுத்துச் சொன்னார்.  பெண்கள் தங்களைச் சுதந்திரமானவர்களாகக் காட்டிக் கொள்ள ஆண்களோடு போட்டி போடுவது தேவையில்லை என்பதையும் கூறினார்.  ஏன் ஆண்களோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களாகவே மாற வேண்டும்? பெண்ணோ, ஆணோ இறைவன் படைப்பு. வெவ்வேறு காரணங்களுக்காக வித்தியாசமாகப் படைக்கப்பட்டதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சோதனைக்கு உள்ளாகும் பெண்கள் அதிலிருந்து சொந்தத் திறமையாலேயே மீண்டு வரவேண்டும்.  அது சில சமயங்களில், பல சமயங்களிலும் அவர்கள் திறமையை மீறியதாய் இருக்கும்தான்.  வாழ்க்கை என்பது ஒத்து வாழ்வதில் மட்டுமில்லாமல் ஒருவர் இன்னொருவரிடம் இருக்கும் குறை,நிறைகளை அலசிப் பார்த்துக் கேள்வி கேட்டுத் தெரிந்து கொண்டால் தான் நல்லது. ஒருவரை ஒருவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருவர் சேர்ந்து வாழ்வதில் சுதந்திரம் இல்லை.  கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் குற்றங்குறைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.  அப்போது தான் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நல்லது.  ஆண்களின் உலகில் பெண்ணாக இருப்பது கடினம் என்பதோடு அந்தப் பெண்மையைக் காப்பது அதை விடக் கடினம்.  பெண் என்னும் தன்மையைப் புரிந்து கொண்டு பெண்ணாகவே ஆணை எதிர்கொள்ள வேண்டும்.

இங்கே குருஜி மாயாவுக்கு மீராவை உதாரணம் காட்டிப் புரிய வைக்கிறார்.  கிருஷ்ணனையே நினைக்கும் மீராவுக்குக் கல்யாணம் செய்து வைத்தும் குடும்பத் தலைவியாக இருந்து கொண்டே கண்ணன் மேல் காட்டிய பக்தியையும் விடாமல் எல்லாச் சோதனைகளையும் வென்று வந்து கண்ணனோடு ஐக்கியமானதை எடுத்துச் சொல்கிறார்.  ஒரு மீராவால் முடிந்தது உன்னால் முடியாதா?  நீ யாருக்கும் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்யவில்லை.  ஆகவே எதைக் குறித்தும் கவலை வேண்டாம்.  நீ நீயாக இரு.  நீ சமூகத்தின் அங்கம் என்னும் நினைப்பை விட்டுவிட்டு உன் போன்றவர்களின் தொகுப்பே சமூகம் எனப் புரிந்து கொள்.  இவரை குரு என அவர் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அனைவரும் அப்படியே அழைக்கின்றனர்.  ஆனால் இவருக்கும் ஈகோவோ என்னும்படியாக சினிமா நடிகையைக் காக்க வைக்கிறார்.  ஆனால் குருவோ ஒழுங்கு முறை என்பது தனிப்பட்ட ஒரு நபர் தன்னுடைய சொந்த ஆர்வங்களை ஒரு குழுவிற்காக விட்டுக் கொடுக்கிறது தான் என்கிறார்.   அதோடு நடிகைக்குத் தன்னை எல்லாரும் கவனிப்பது உள்ளூரப் பிடித்தே இருந்தது என்றும் அவளுடைய ஆனந்தமானது அவள் சம்பாதிக்கும் பணம், காசிலோ, சொத்துக்களிலோ, விலை உயர்ந்த கார்களை வாங்கிச் சேர்ப்பதிலோ இல்லை என்பதை அவள் இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

மாயாவுடன் வேலை செய்யும் பேராசிரியை மூலமாக நம்மிடையே உள்ள நான்கு கதவுகள் கொண்ட ஜன்னலைக் காட்டி அதை விளக்கும் விதம் அருமை. ஒரு ஜன்னல் நமக்கும் தெரியாது, மத்தவங்களுக்கும் தெரியாது.  இருண்டிருக்கும்.  அடுத்ததோ மத்தவங்களுக்குத் தெரியாது; நமக்கு மட்டும் தெரியும்.  இது நாம் மறைத்தது.  அடுத்தது மத்தவங்களுக்குத் தெரிஞ்சது; ஆனால் நமக்குத் தெரியாதது.  இது நமக்கு மறைக்கப் பட்ட ஒன்று.  ஒரே ஒரு கதவு தான் நமக்கும், மத்தவங்களுக்கும் தெரிஞ்சதா இருக்கும்.  அது தான் நாமும், அவங்களும் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டது.  எல்லாக் கதவையும் திறக்கச் சொல்கிறார் குருஜி!  கதவைத் திற! காற்று வரும்னு புரிஞ்சுண்டா நான் பொறுப்பில்லை! :P  ஆணோ, பெண்ணோ, முக்கியமாய்ப் பெண்கள், குடும்பத் தலைவிகள் தனக்கு என ஒரு நாளில் ஒரு மணி நேரத்தையாவது செலவழிக்கப் பழக வேண்டும்.  அதே போல் வாரம் ஒரு நாள் சமையல் வேலையிலிருந்தும் ஓய்வு எடுக்கலாம்.  இது என் போன்றவர்களுக்குச் சிரமமான ஒன்று.  அவரவர் விருப்பம்.  ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது தனக்காகச் செலவழித்துக்கொண்டு தனக்காச் சிந்திக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  குழந்தைகளைப் போல அந்த அந்தக் கணத்திலேயே வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு ரசித்துக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

Thursday, May 17, 2012

பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் -(nostalgia-2)

 திரு சந்தானம் கொடுத்தவை:

ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும்

2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும்

3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ----------

4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.

பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:
ákku pákku vetthalai pákku dámmu dúmmu tasam
tassai thúkki mélé póttál chettiyár víttu nandu
nandai thúkki mélé póttál nága ratna pámbu
pámbai thúkki mélé póttál pañcha varna kili
kiliyai thúkki mélé póttál kirushnanudaya kondai!

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்
தஸ்ஸை தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு
நண்டைத் தூக்கி மேலே போட்டால் நாக ரத்ன பாம்பு
பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக் கிளி
கிளியைத் தூக்கி மேலே போட்டால் கிருஷ்ணனோட கொண்டை.

மீண்டும் சந்தானம் கொடுத்தது:

மாது மாது மன்னவன் தம்பி,
கோது கோது கொழுந்து வெத்தலை,
ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்தான்
டம்மக்கொ டையக்கோ-------

தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை.

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டி யானைக்கு கொம்புமுளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்"

இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:

 யானை யானை
அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டி கரும்பை முறிக்கும் யானை
வைகை தண்ணியை கலக்கி கலக்கி
குடிக்கும் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சிதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சுதாம்

மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது:

A nonsense rhyme On Bahama Mama

                                                           (Mama in Tamil means uncle)

                                                                  By    Raja Mama

                                                  To my little one who is not in India,

                                                 Osama  was definitely  not a mama,

                                                And  Obama was not  a mama to Osama,

                                                Nor was Obama a mama to Bahama,

                                               But in Bahama there was a hotel called  Mama,

                                                  Where the food was eaten by this mama.

கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை.

முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை
டாம் டூம் டை
அச்சு நக்கர கோக்க நக்கர கை
அச்சுக்குட்டி தாலுக்குட்டி
அரண்மனையாம் பெண்ணரசி
ஸ்ரீரங்க்கத்துக்கு ஒடிப்போ

டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி
டா டா ட்ப்பி கோதுமை ரொட்டி
தின்னுப்புட்டு போனாண்டி


அம்மா பொண்ணூக்கு கல்யாணம்
அவா அவா வீட்டுல சாப்பாடு
கொட்டுமேள்ம்கோயில்ல
வெத்தலபாக்கு கடையில
சுண்ணாம்பு சுவத்தில


கண்ணாமூச்சி ரே ரே ரே
காட்டிமூச்சி ரே ரே ரே
உனக்கு ஒரு பழம் எனக்கு ஒரு பழம்
கொண்டு ஒடோடி வா

கொக்கரக்கோழி
கோழி முட்டை
வெள்ளைக்காரா
விடுஞ்சு போச்சு

ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா
எங்கம்மா எனக்கு தந்தாளே
ஒங்கம்மா உனக்கு த்ந்தாளோ

திரு இன்னம்பூராரின் பங்களிப்பு.

ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி.
கிழநரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்.

இன்னம்பூரான்


"பகலெல்லாம் மழை பெய்து,
சுவரெல்லாம் ஓதம்.
தாயாரை தடி கொண்டு மாட்டு.
அப்பனையையும் பாட்டனையும்
வீட்டை விட்டு துரத்து.
கொண்ட பொண்டாட்டியை குப்பையிலே தள்ளு.
பகலெல்லாம் மழை பெய்து,
சுவரெல்லாம் ஓதம்!
தானெனென்ன! தானென்னா!
இன்னம்பூரான்
~உசாத்துணை: இன்னம்பூர் சிங்கம் அலையஸ் ராஜம் தாத்தா



Wednesday, May 16, 2012

வசந்த கால நினைவுகளே! (nostalgia?) :D

மின் தமிழில் நண்பர் சந்தானம் என்பவர் அந்தக் காலத்து(பாட்டிகாலத்து)க் குழந்தைப் பாடல்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நகருக்கும் மாறுபடும் என்றும் தான் தஞ்சை/மதுரைப் பக்கம் என்பதால் அந்தப் பக்கத்துப் பாடல்கள் சிலவற்றைச் சொல்ல முடியும் என்றும் சொல்லி இருந்தார்.  அவர் மனைவி திருநெல்வேலியாம்.  அவங்க அந்தப் பக்கத்துப் பாடல்களைக் கொடுப்பார் என்றார்.  உடனே எனக்கு நினைவில் வந்த பாடல்.
 ஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள்.  அவங்க பெயர் மறந்து போச்சாம்.  அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.

கொழு கொழு கன்னே
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்திலிருக்கும் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பெயரென்ன??

ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.

இது சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லப் பட்டது.  ஒரு சில குழுமங்களில் இது விவாதிக்கப் பட்டது.

இன்னொண்ணு எலியைப் பற்றிய வர்ணனை.  ஒரு கதையாகச் சொல்லப் படும்.

அதிலே எலிக்குக் கால்கள், கண்கள், வால் உள்ளன என்பதை ஒரு பாட்டாகச் சொல்வாங்க.

அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள்.  குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது.  ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது.  வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?
 இப்படிப் போகும்.

 பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது
கோனார் வீட்டிலே
கொய்யாப்பழம் காய்க்குது!

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
இரண்டு குடம் தண்ணி ஊத்தி 2 பூ பூத்தது எனப் பத்து வரைக்கும் வரும்.

அப்புறமாப்
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்

என ஆரம்பித்து பூக்களின் பெயர்கள் வரிசையாக வரும்.
சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்

இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்

கை கோர்த்திருக்கும் இருவரும்

என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூவைப் பறிக்கிறோம், சாமந்திப் பூவைப் பறிக்கிறோம்.
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??

திரு சந்தானம் கொடுத்த பாடல்களும் மற்றும் இருவர் கொடுத்த பாடல்களும் அடுத்த பதிவில் காணலாம். :D  அவங்க அவங்க நினைவில் இருக்கும் பாடல்களை அளிக்கலாம்.  இவை அவரவர் பெயர், ஊரோடுமரபு விக்கியில் சேர்க்கப் பட்டுச் சுட்டியை அளிப்போம். நிரந்தரமாய் அங்கே பதிவாகி இருக்கும்.

Tuesday, May 15, 2012

ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! பகுதி 3


சரி, இப்போ நாம் கதையை என்னனு பார்க்கலாமா?  மாயா என்ற பெண்ணே இந்தக் கதையின் நாயகி என்று சொல்லப் பட்டாலும் தற்காலத்தின் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை அவள் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.  முன்னெல்லாம் அநேகமாய்ப் பெற்றோர் நிச்சயிக்கும் பிள்ளையை ஒரு கண நேரம் பார்த்துச் சம்மதம் சொல்லி, இருதரப்பிலும் லெளகீகங்கள் பேசி முடித்து என இருக்கும்.  இப்போதெல்லாம் யாருக்கும் நேரமில்லை.  அப்பா, அம்மாக்களும் பிசி;  பெண்கள், பிள்ளைகளும் பிசி. அவரவர் வேலை அவருக்கு. ஆகவே அவரவரே அவரவர் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.  ஆனாலும் இன்னமும் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களும் இருக்கின்றன.  


 மாயாவினுடையதும், சிறியோரால் நிச்சயிக்கப்பட்டுப் பெரியோர்களின் முழுச் சம்மதத்தோடு மிகச் சிறப்பாக அனைவராலும் பேசப்பட்ட ஒன்றாக நடந்தது.  ஆனாலும் முதல் இடறல் திருமண மயக்கத்திற்குப் பின்னர் மாயா ஆசைப்பட்ட மாயாவின் மேல்படிப்பில் ஆரம்பித்துப் பின்னர் அவள் கணவன் தன்னுடைய ஈகோவினால் வேலையை இழந்ததில் வந்து முடிந்தது.  மாயாவின் கணவன் மனைவி மேல்படிப்புப் படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ தனக்கு இழுக்கு என நினைக்கும் ஆணாதிக்க உலகின் கதாநாயகன். அந்த ஈகோ எப்படிப் பட்டதெனில் ஒரு ஆத்திர, அவசரத்துக்கு என மனைவி உதவிய நகைகளும், அவள் வேலைக்குச் செல்வதாய்க் கூறியதும், தன்னை அவமானம் செய்வதற்காக என்று அவன் எண்ணும்படி ஆயிற்று.  யதார்த்தத்தையும், தன் நிலையையும் புரிந்து கொள்ளாத மாயாவின் கணவன் ப்ருத்வி மனைவியைப் பிரிய நேரிட்டது.  அது விவாகரத்தில் வந்து முடிந்தது.  ஆக அதீத அழகு, புத்திசாலித் தனம், பணம், வசதி எல்லாம் இருந்தும் மாயாவால் அவள் கணவனோடு சந்தோஷமாய் வாழ முடியவில்லை.  எந்தத் தவறும் செய்யாமலேயே அவனால் குற்றம் சாட்டப்பட்டு இன்று விவாகரத்தும் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து கொண்டிருக்கிறாள். 

 வீணான வாழ்க்கையை நினைந்து வருந்திக் கொண்டிருந்த மாயாவுக்குக் கனவில்  தோன்றித் தன்னை அழைத்து உபதேசித்த  உருவம் தான் தன் குரு என அவர் சொற்பொழிவைக் கேட்டதும் புரிகிறது.  அவர் கூறும் உண்மைகள் பசுமரத்தாணியாக மனதிலும் பதிகிறது.  எந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை என்பதற்குக் காரணமான சுயச் சார்பையும் எடுத்துக் காட்டி விளக்குகிறார்.  தன்னைத் தானே உணரும் பெண்ணாக, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்கிறார்.  எப்படி எனில், அந்தக் காலத்தில் நம் பெரியவங்க சொல்லி இருக்காங்களே, "ங" போல் வளை என, அப்படி வளையச் சொல்கிறார்.  ஆம், விட்டுக் கொடுத்து அநுசரித்துப் போனால் மட்டும் போதாது.  சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்தும் கொடுக்க வேண்டும்.  வருவதை அப்படியே எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், மன உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு உதாரணமாய்க் காட்டுவது காந்தா என்னும் சாமானிய, வெகு சாமானியக் கூலி வேலை செய்யும் பெண்ணை.  கணவன் குடித்து விட்டுத் தன்னை அடித்துத் துன்புறுத்துகையில் ஒரு எல்லை வரை பொறுத்தவள் பின்னர் கணவனை உதறி எறிகிறாள்.  இதை எதிர்பார்க்காத கணவன் முதலில் எதிர்த்தாலும் பின்னர் அவள் உறுதியைப் புரிந்து கொண்டுவிடுகிறான். கணவனைத் திரும்ப அடித்து அவமானப் படுத்துவதாலோ அல்லது அவனை ஒரேயடியாய்க் கொன்றுவிடுவதாலோ தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்பதைப் பூரணமாய் உணர்ந்து கொண்டு அவனை அறவே ஒதுக்குகிறாள்.  இந்த மன உறுதியே பெண்களுக்குத் தேவை.  எல்லாராலும் சாத்தியமா எனக் கேட்கலாம்.  முடியவேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கியக் கருத்து.  "நானிருக்கேன் உனக்கு" என்று பெண்களுக்கு மறைமுகமாய்க் கிடைக்கும் பாதுகாப்புக் கவசமும், அதை எதிர்பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்காகவே வாழும் பெண்களும் நிறைந்த இவ்வுலகிலே பெண்கள் தங்களுக்குத் தாங்களே துணை; காவல்; தலைமை; அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டே  தனியாக நின்று கொண்டே மற்றவர்களை ஆதரிக்க வேண்டும்.


டிஸ்கி:  அநேகமாய் அடுத்த பதிவில் முடிச்சுடுவேனா? 

Monday, May 14, 2012

அப்பாவி! எங்கிருந்தாலும் ஓடி வருக!


Posted by Picasa 


ஸ்ரீராமர் புண்ணியத்திலே நேத்திக்கு ராத்திரி சாப்பிட்ட ரசம் சாதம், அரிசி அப்பளம் நெய்யில்லாமல், எண்ணெயில்லாமல் மைக்ரோவேவ் புண்ணியத்தோடு  சாப்பிட்டது நான்கு நாட்களுக்குப் பின்னர் தேவாமிருதமாக இருந்தது என்றால் இன்னிக்குக் காலையிலே செய்த இட்லியும் அப்படியே.  திரும்பச் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமானு பயந்துட்டு இருந்தேன். :D இன்னிக்கு இட்லி பற்றிக் குறிப்பிட அப்பாவி தான் காரணம்.  சாப்பிடறச்சேயே இட்லியைக் கஷ்டப்பட்டுக் குடிக்கும் அப்பாவி கோவிந்த் தான் நினைவில் வந்தார்.   இட்லியை ஃபோட்டோ கூட எடுத்திருக்கணும்.  அப்போத் தோணவே இல்லை.  இது ஒரு திடீர் போஸ்ட்! :D

இட்லி செய்முறை ஃபார் அப்பாவி: பச்சரிசி, (உங்க கனடாவில் கிடைக்கும் லாங் க்ரெயின் ரைஸ், இட்லி புழுங்கலரிசி, இரண்டும் ஒரு ஒரு கப் சமமாக எடுத்துக்கொண்டு கால் கப் உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தே நனைத்துக் கொண்டு நன்கு கழுவிக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  எல்லாவற்றையும் சேர்த்தே மிக்சியில் அல்லது கிரைண்டரில் நன்றாக அரைக்கவும்.  புளிக்க வைக்கவும்.  பின்னர் இட்லியோ, தோசையோ ஜமாய்க்கவும்.

இது ஆப்பம் செய்வதற்கான ரெசிபி.  இம்மாதிரி நைஸாக அரைத்துக் கொண்டு மாவைப் புளிக்க வைத்துக் கொஞ்சம் மாவில், தேங்காய்ப் பால் ஊற்றிக் கரைத்துக்கொண்டு மதுரை ஸ்பெஷல் ஆப்பம் செய்வேன்.  இப்போவெல்லாம் இரும்புச் சட்டியைத் தூக்கிச் சுழற்றும் அளவுக்கு முடியறதில்லை.  சுழற்ற ஆட்களும் கிடைக்கிறதில்லை! :P அதனால் தோசைக்கல்லிலேயே ஊற்றித் தோசையாக வார்த்துவிடுவேன்.  நன்றாகவே இருக்கிறது.  ஒரு நாள் அந்த மாவு கொஞ்சம் மிஞ்சிப் போனதைச் சத்தமில்லாமல் இட்லியாக வார்த்துப் பார்க்க, அதன் சுவையைப் பார்த்துவிட்டு இப்போ சத்தம் போட்டுக்கொண்டே இப்படித் தான் செய்யறேன்.  இரண்டு பேருக்குனுக் கொஞ்சமா அரைக்கவும் வசதி! சாப்பிடறவங்களைக் கடவுள் காப்பாத்துவார்னு சிம்பாலிக்காக் காட்டத்தான் ராமர் படம்! :)))))))))

Saturday, May 12, 2012

ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! இன்னம்புராரின் கருத்தும், என் பதிலும்!


  1. பெண்கள் எப்படி அவர்களே தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும்? அவர்களுக்கு கல்வி மறுத்து வந்த காலகட்டத்தில்?///
கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது அந்நிய ஆதிக்கத்தின் விளைவு.  இதனால் பல பெண்கள் மதம் மாற முற்பட்டதோடு வேறு பல விளைவுகளும் உண்டாயின.  இதை அனைவருமே அறிந்திருக்கிறோம். பல பெண்களும் மானபங்கப்படுத்தப்பட்டதோடு அல்லாமல், அந்நியமதத்தினரைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலப் படிப்பைப் படித்த பெண்களும் அவ்வாறே மதம் மாறத் தலைப்பட்டார்கள்.  ஆகவே பெண்களை அடக்கி ஒடுக்கும் முறை கட்டாயமாய் ஏற்பட்டது. இது ஒரு சாபக்கேடுதான் என்றாலும் பெண்களே கலாசாரத்தின் ஆணிவேர் என்பதால் வேரைக் கெல்லி எறிய முடியாது என்பதால் வேருக்கு நீர் வார்ப்பதாக நினைத்துக்கொண்டு பூச்சி மருந்தை அள்ளித் தெளித்தனர்.  இது பல விபரீத விளைவுகளுக்குக் காரணமாகவும் ஆயிற்று.

2.     2.   பெண்ணின் தனித்தன்மை என்றால் என்ன? பூஜா-பாட் கர்னா?

பெண் பெண்ணாக இருத்தலை உணர்வதே அவள் தனித்தன்மை என்பது என் தனிப்பட்ட கருத்து. பூஜா-பாட் கர்னா எல்லாம் அவரவர் சொந்த விருப்பம்.  ஆனால் தான் பெண் என்பதை உணர்ந்து கொண்டு, ஆணோடு போட்டியிடுவது என்பதைத் தவிர்த்து ஒரு பெண்ணாகவே வாழ்க்கையில் ஜெயித்துத் தான் எப்படிப்பட்டவள் என்பதை உலகுக்கு உணர வைக்க வேண்டும். அதோடு புலி வேஷம் போட்டுக்கொண்ட பூனையாக இருக்காமல் பெண் என்பதை முழு மனதோடு அங்கீகரித்துக்கொண்டு அதில் மகிழ்ச்சியும், திருப்தியும் காண வேண்டும்.  இந்த நாவலில் வரும் காக்கை போல் தன் வேஷத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது. நம் இயல்புப்படி இருப்பதே தன்னிறைவு அளிக்கும். அதோடு தன் குடும்பம், தன் உறவுகள் என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போக்கும் தேவை;  ஆனால் இன்றைய அவசர உலகில் இதுக்கெல்லாம் யாருக்கும் நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை.  உறவைத் துச்சமாகவே கருதும் மனப்போக்கு இன்றைய சூழ்நிலையில்.


  1. பெண்ணாய் பிறந்தது பெருமை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஆண்கள் மட்டும் தான் உணர்வு பூர்வமான முடிவு எடுக்கலாமா?

ஆண்கள் யாரும் உணர்வு பூர்வமாக முடிவு எடுப்பதில்லை.  அவர்கள் உலகே வேறு. ஆணுக்குக் குடும்பம் மட்டும் உலகம் இல்லை. ஆண் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் நண்பர்களைப் பெற்றால் அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்வான். (இது பொதுவான கருத்தே,  இதில் மாறுபட்டிருக்கும் ஆண்களும் உண்டு. அதனால் அடிக்க வராதீங்க யாரும்) ஆனால் பெண்ணோ ஒரு சிநேகிதனோ, சிநேகிதியோ ஆத்மார்த்தமாய்ப் பழகினால் கடைசி வரை மாறவே மாட்டாள்.  பெண்ணுக்கோ முதலில் குடும்பமே அவள் உலகம், இன்றளவும்.  அதன் பின்னரே மற்றவர்களைப் பார்க்கிறாள்.  ஆண்களின் சிந்தனைகளே அறிவுபூர்வமானவை.  உணர்வு பூர்வமான பெண்களின் சிந்தனைகளை அவர்கள் கேலி செய்வதையும் இன்றும் காணமுடியும். இதைப் பெண்களுக்கு இறைவன் அளித்ததொரு பரிசு அல்லது உணர்வைப் பூரணமாய்ப் புரிந்துகொள்ளும் முன்னெச்சரிக்கை எனச் சொல்லலாமோ?  ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு காலில் இதை உணர்வறிவு எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.  இந்த உணர்வறிவு பெண்ணுக்கு மட்டுமே உண்டு. இந்த உணர்வறிவால் பெண்கள் புரிந்து கொள்ளும், பல விஷயங்கள்! ஆனால் கடைசியில் அவை உண்மையாக இருப்பதில் ஆண்கள் திகைத்துப் போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.  இது மட்டுமில்லை; உணர்வு பூர்வமான எந்த வெளிப்பாட்டையும் ஆண்கள் காட்டிக்கொள்வதில்லை;  ஒரு சிலரைத் தவிர. :D

  1. அந்த ஹூஸ்டன் விவகாரம், உங்களில் யாருக்கு, முழு உண்மை தெரியும்? எனக்கு அந்த மாதிரி ஒரு லாஸ் ஏஞ்செலஸ் விவகாரம் தெரியும். தன் குழந்தைகளை நதியில் முழுகடைத்த இந்திய அப்பாவி பெண்ணின் புருஷன் படுபாவி. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னால், கணவனை தலைகாணியால் அமுக்கி கொலை செய்தாள், ஒரு அந்தணக்கிழவி, திருமங்கலத்தில். அவளும் தான் அவனுடைய கொடுமையில் 50 வருடம் வெந்தவள்.
ஹூஸ்டன் விபரங்கள் நீங்க இங்கே குறிப்பிட்டதுக்குப் பின்னரே நான் படித்தேன்.  இந்த முறை ஏற்கக் கூடியதே அல்ல.  அந்த ஒரு கண நேர உணர்வை அடக்கி ஆளவேண்டும் என்பதே என் கருத்து.  அந்தப் பெண்ணுக்கு விடுதலை பெற வேறு வழியே இல்லாமல் இருந்திருக்குமா?? அதோடு எண்ணெய் தேய்த்துவிடுவதாய்க் கூறிவிட்டுப் பெட்ரோலை ஊற்றி இருக்கிறார். பெட்ரோலின் வாசம் தெரியாமல் போயிருக்குமா கணவனுக்கு?  கொஞ்சம் குழப்பமாய்த் தான் இருக்கிறது.  இதில் உண்மை என்னவென்று தெரியாமல் முன் கூட்டிய கருத்துக்களைப் பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :( தலைகாணியால் கணவனை அமுக்கிக் கொல்ல ஐம்பது வருடம் காத்திருந்தவளுக்குக் கடைசியில் என்ன கிடைத்தது? :( எப்போதோ விலகி இருக்கலாமே!  விலகி என்றால் தனியாக வந்து என்று அர்த்தம் இல்லை; வீட்டிலேயே, ஒரே வீட்டிலேயே ஒதுக்கி வைத்தல்.  இம்முறையில் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். மன திடமும் தேவை.எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி கணவனின் கொடுமை தாங்க முடியாமல் ஒரே வீட்டிலேயே தனியாக வாழ ஆரம்பித்தாள்.  இது ஏன்? வெளியே வந்திருக்கலாமே எனத் தோன்றினாலும், கணவனுக்கு மறைமுகமாய் அவள் கொடுத்த தண்டனை இது.


  1. இன்று விருந்தாவன் விதவைகளின் பிரச்னைகளை அலச ஒரு ஏழு மெம்பர் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அந்தக் கொடுமையை நீங்கள் யாராவது பார்த்தது உண்டா? எனக்கு தெரியும், ஓரளவு. விதவைகளின் சொத்தை பிடுங்கி, வீட்டை விட்டு துரத்தி, பிச்சை எடுக்க வைத்து, அத்தையும் பிடுங்கும் பார்ப்பன அட்டூழியம் நூறு வருடங்களுக்கு மேல் நடக்கிறது. கணிசமான அளவு பார்ப்பனக்கழுதைகள். மற்ற கழுதைகளும் உண்டு.
விருந்தாவன் விதவைகளை நேரில் பார்த்து மனம் நொந்து அவர்களுக்குப் பணம் கொடுக்கக் கேட்டபோது முடியாது;  அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புங்க என்று வாதாடி!  அவர்களோடு சண்டை போட்டு! என்னத்தைச் சொல்வது?  பெரும்பாலும் வங்காள விதவைகளே அதிகம்.  இதற்கு ஒரு முடிவு இப்போதாவது உச்சநீதி மன்றத்தின் மூலம் வந்தால் நன்மையே.  ஆனால் இனி இப்படி அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்த முடியாது.  சமூகம் இதன் தீமையை நன்கு உணர்ந்திருக்கிறது.

Thursday, May 10, 2012

severely affected by gastro enteritis, so no post for two days.(at least)

Wednesday, May 09, 2012

ஆனந்தத்தைத் தவறவிட வேண்டாம்!

கடந்த இரு மாதங்களாகவே இணையத்துக்குச் சரியாக வரமுடியலை.  அதுக்காகச் சும்மாவா இருக்க முடியும். தேவன் புத்தகங்கள் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஶ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு எல்லாத்தையும் பத்து லக்ஷமாவது முறையாகப் படிச்சுக் கிழிச்சேன்.  ஹிஹிஹி, நிஜம்மாவே புத்தகங்கள் எல்லாமும் நாளாகிட்டதாலே பேப்பர், பேப்பரா வந்துட்டு இருக்கு. மங்கள நூலகம் இருக்கிறச்சே வாங்கின புத்தகங்கள். ஒரு மாதிரிப் பக்கங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு படிக்கும் டெக்னிக் நமக்குக் கைவந்த கலை. அப்போத் தான் ரேவதி அனுப்பி வைச்ச (ஹிஹிஹி, எங்கள் ப்ளாக், நேரே வந்து தரலை இல்லை; அதனாலே நீங்க கொடுத்ததாய்ச் சொல்ல மாட்டேனே) ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் புத்தகம் கிடைச்சது.

புத்தகம் பெண்ணுரிமை குறித்தது. நாமோ பெண்ணுரிமைக்கு எதிரி.  நமக்கு இந்தப் புத்தகமானு கொஞ்சம் ஆச்சரியத்தோடேயே படிக்க ஆரம்பிச்சேன்.  என்ன ஆச்சரியம்! நான் நினைக்கிறதை, சொல்லிக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்லி இருக்காங்க. பெண்கள் அவங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அந்தத் தீர்வு அறிவு சார்ந்ததாக, சமூகம் ஏற்கக் கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். அதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.  அதையே தான் இவங்களும் சொல்லி இருக்காங்க ஒரு கதை மூலம்.


பெண்ணைக் குறித்து முதலில் செய்திருக்கும் வர்ணனை அபாரம்.  கடைசியில் குறிப்பிட்டிருக்கும் சிறப்பான முத்திரை வசனமும் பிரமாதம்.  அது தான் தன் உன்னதம், தன் மதிப்பு இவற்றை மறக்கும் தன்மை, பெண்ணின் படைப்பில் சேர்க்கப் பட்டிருப்பது. இதைக் கொடுத்து இறைவி தன் படைப்புகளுக்குள்ளேயான ஏற்றத் தாழ்வைச் சரிக்கட்டுவதாகச் சொல்லப் பட்டிருந்தாலும், பெண் உண்மையிலேயே உன்னதமானவள். தன் மதிப்புள்ளவள்.தன்னைக் குறித்த மதிப்பை அதே சமயம் அறியாதவள் தான்.  உணர்வுகளுக்கு ஆட்படுபவள். சமீபத்தில் கூட ஒரு சிநேகிதி எழுதிய ஒரு சிறுகதையின் முடிவில் கணவனால் கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட வீட்டு வேலை செய்யும் பெண், கடைசியில் அவனைக் கொன்றுவிடுவதாகச் சொல்லப் பட்டிருந்தது. எனக்கு அந்த முடிவு பிடிக்கவில்லை.

அப்படி உணர்வு பூர்வமான முடிவை எந்தப் பெண்ணும் எடுக்கக் கூடாது.  சிந்திக்க வேண்டும். சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஆரம்பத்தில் கடினமே போல் தோன்றினாலும், பின்னர் தானாகக் கை வந்துவிடும். பெண் விடுதலை என்பது ஆண்களோடு சரிசமமாகப் போட்டிபோடுவதில் இல்லை. நிச்சயமாய் இல்லை. பெண்ணின் தனித்தன்மையை இழக்காமல் பெண்ணாக இருந்து கொண்டே நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதே. என்னைப் பொறுத்தவரையில் பெண்ணாய்ப் பிறந்திருப்பதில் பெருமையே!


தொடரலாம்! .

சித்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ


Posted by Picasa

Tuesday, May 08, 2012

கோபுர தரிசனம் பாபவிமோசனம்!
















வீட்டு மாடியில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயில்


















 தெற்கு ராஜகோபுரம். இந்த கோபுரத்திலிருந்து நேரே வந்தால் நம்ம வீடு. :D




 இது திருவானைக்கா கோபுரத்தை எடுத்தது.  ஆனால் கோபுரம் ரொம்பவே தூரக்க இருப்பதால் உற்றுப் பார்க்க வேண்டும்.

ஹிஹிஹிஹிஹி

கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கும் மேலே ஆச்சு யோகாசனப் பயிற்சி செய்து.  போன வாரம் ஆரம்பிச்சேன்.  கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. :( ஹிஹிஹி, இன்னிக்குக் காலம்பர சவாசனத்திலே இருந்தப்போ அவ்வளவா ஆழமாப் பண்ணமுடியலை. நம்ம வழக்கம் போல் ஏதேதோ சிந்தனைகள். தலையை அப்படியும், இப்படியுமாப் புரட்டி இருக்கேன் போல என்னையும் அறியாம.  சரி, தண்டத்துக்கு சவாசனம்னு இருப்பானேன்னு எழுந்தால், ஹிஹிஹிஹிஹி, கூடவே யோகாசனப் பாயும் வருது. என்னடா, இது இவ்வளவு வெயிட் முதுகு மேலேனு பார்த்தால் அந்தக் காலத்திலே ராஜா வேஷம் போடறச்சே முதுகிலே இரண்டு தோள்பட்டையையும் இணைச்சுக் கட்டித் தொங்க விட்டிருப்பாங்களே, அப்படிப் பாய் கூடவே வருது.

இந்த மாதிரி வரச்சே நானே எடுத்துடுவேன்.  ஆனா இன்னிக்கு எக்கச்சக்கமா மாட்டிட்டு எடுக்கவே முடியலை.  வேறே வழியே இல்லைனு ரங்க்ஸைத் துணைக்குக் கூப்பிட்டால் கத்திரிக்கோலும் கையுமா வந்தார். அப்புறம் என்ன ஆச்சு? நாளை காண்க!

Tuesday, May 01, 2012

அரங்கமாநகருளானே!



பண்டை நான்மறையும் கேள்வியும் கேள்விப் பதங்களும்
பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும்
ஏழுமாமலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான்
அரங்கமாநகர் அமர்ந்தானே!


பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரர் ஏறே  ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி
காரொளிர் வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே!

நேற்றுத்தான் அரங்கன் தரிசனம் கிடைத்தது.