எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 22, 2014

தீபாவளி கொண்டாடினீங்களா? அனைவருக்கும் வாழ்த்துகள்.


எண்ணெய், சீயக்காய், மஞ்சள் பொடியோடு புடைவை, ரவிக்கை, வேஷ்டி, துண்டு ஆகியன பக்ஷணங்களோடு இடம் பெற்றிருக்கின்றன.  மதுரைப் பக்கத்தில் தீபாவளிக்கு  ஒரு புடைவையாக  அல்லது எந்த உடுப்பாக இருந்தாலும் ஒன்றே ஒன்று வாங்குவதில்லை.  இப்போல்லாம் எப்படியோ தெரியலை.  ஆனால் நான் இன்னமும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறேன்.  ஒரு புடைவை கொஞ்சம் விலை ஜாஸ்தி. இன்னொன்று சாதாரணமானது. 

ஶ்ரீராமர், இடப்பக்கம் வெண்ணெய்க் கிருஷ்ணன், வலப்பக்கம் பிள்ளையார்

ஶ்ரீதேவி, பூதேவி சகிதப் பெருமாளுடன் மற்ற கடவுளர் திருவுருவங்கள்
மேலே உள்ள பச்சைக்கலர் ஜிங்குச்சா சாதாரணப்  புடைவை தான்.  அடியிலுள்ள ப்ரவுன் கலர் புடைவை தான் விலை அதிகம். இரண்டுமே பருத்திப் புடைவைகள் தான்.  :)))

பக்ஷண வகையறாக்க்ள் ரொம்பவே எளிமையாகத் தான் செய்திருக்கேன். :) அலுமினியம் டப்பாவில் தேன்குழல், ப்ளாஸ்டிக் பச்சை டப்பாவில் கொஞ்சம் போல் மிக்சர், பக்கத்தில்  தூக்கில் கடலைமாவு, தேங்காய் சேர்த்த பர்ஃபி.  ப்ளாஸ்டிக் டப்பாவில்  மாலாடு, மாலாடுக்குப் பக்கத்தில் தீபாவளி மருந்து, வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவை.  அவ்வளவே!  தீபாவளி கொண்டாடியாச்சு. பொண்ணு நேத்தே தொலைபேசிப் பேசிட்டா.  மகனும், மருமகளும் கொஞ்ச நேரம் முன்னால் பேசினாங்க. தொலைபேசியில் தீபாவளி!


Saturday, October 18, 2014

நான் சிரித்தால் தலை தீபாவளி - பகுதி 2

அடுத்த ரயில் எப்போன்னு பார்த்தால் எட்டேகாலுக்குப் பாண்டியன் கிளம்பும்னு சொன்னாங்க.  அதுக்குள்ளே ரங்க்ஸ் டிக்கெட் கான்சலுக்குப் போக, அவங்க இந்த டிக்கெட் மவுன்ட்ரோடில் வாங்கினதால் அங்கே தான் கான்சல் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க.  கொஞ்ச நேரத்தில் பாண்டியன் நடைமேடைக்கு வந்தும் விட்டது.  அப்போது தான் அறிமுகம் செய்திருக்காங்க.  சில மாதங்கள் அல்லது வருடம் தான் ஆயிருக்கும்.  ஆனால் மதுரைக்குக் காலை ஏழரைக்குத் தான் போகுமாம். பரவாயில்லை, மறுநாள் இரவு, அதுக்கடுத்த நாள் காலை தான் நரக சதுர்த்தசி ஸ்நானம் என்பதால் ஏழரைக்காவது போயிடுமேனு சந்தோஷம்.  இந்த டிக்கெட்டில் போக முடியாது என்பதால் டிக்கெட் வாங்கக் கவுன்டருக்குப் போனோம்.  கூட்டமோ கூட்டம்.

சின்ன வயசு என்பதாலும், உடலில் தெம்பு இருந்ததாலும் வரிசையில் நிற்க முடிஞ்சது.  அவர் ஒரு பக்கமும், நான் இன்னொரு பக்கமுமாக நின்றோம்.  கடைசியில் நான் நின்ற வரிசையில் டிக்கெட் கிடைச்சது.   நல்ல வேளையா இப்போ உள்ள கூட்டம் அப்போது இல்லையோ, பிழைச்சோம்.  வண்டி கிளம்பப் பத்து நிமிடங்களுக்குள் தான் இருக்கும்.  மறுபடி அவசரம் அவசரமாக முதலாம் நடைமேடைக்கு வந்தோம்.  அப்போல்லாம் ஸ்லீப்பர் கிடையாது. ரயிலில் ஒரு பெர்த்தில் நான்கு பேர் உட்கார முன் பதிவு செய்வாங்க.  இதில் நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் உட்காருபவர் ராத்திரி ஒன்பது மணி ஆனால் மேலே அவர் முன் பதிவு செய்திருக்கும் படுக்கைக்குப் போயிடுவார்.  வேறு யாரும் காத்திருப்பவங்களுக்கு அந்த சீட்டை டிடிஆர் கொடுப்பார்.  அதுக்கு முன்பதிவு இல்லை.  உடனடிப் பதிவு என்பதால் அப்போ ஒரு ரூபாய் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.  முன் கூட்டியே முன்பதிவு செய்தால் அமரும் இருக்கைக்கு ஒரு பயணச் சீட்டுக்கு எட்டணாத் தான் வாங்கினார்கள்.  பின்னர் ஒரு ரூபாய் ஆகி, அதற்கும் பின்னர் அந்த முறையே எடுக்கப்பட்டு எல்லாமே படுக்கும் வசதி கொண்டதாக மாறியது எல்லாம் எண்பதுகளின் பின்னரே.

அதற்கு முன்னால் படுக்கும் வசதி தொலைதூர ரயில் வண்டிகளில் மட்டும் குறிப்பிட்ட அளவு  படுக்கும் வசதி கொண்ட இருக்கைகளோடு இருக்கும்.  இதில் ஜனதா என்றொரு வண்டி உண்டு.  அதில் முதல், இரண்டாம் வகுப்புகளே இல்லாமல் எல்லாமே மூன்றாம் வகுப்புப் பயணிகளுக்காக என்றிருக்கும்.  மதுரைக்கும் கும்பகோணம், மாயவரம் வழியாகச் சென்னைக்கு ஜனதா இருந்தது.  சென்னையிலிருந்தும் மதுரைக்கு ஜனதா இருந்தது.  ஆனால் அது தாமதமாக மதுரைக்குப் போகும்.  பாண்டியன் அப்போதே விரைவு வண்டி என அறிமுகம் ஆகி இருந்தது.  இந்த முன்பதிவுப் பெட்டி ஒன்றில் ஏறிக் கொண்டு யார் மேலே போகப் போறாங்கனு (ஹிஹிஹி, படுக்கத் தான்) என்று பார்த்துக் கொண்டு இருந்தோம்.  கடைசியில் இரண்டு உட்காரும் இருக்கை எதிரும் புதிருமாகக் கிடைத்தது.

நான்கு பேர் அமரும் இருக்கையில் படுப்பது ரொம்பக் கஷ்டம்.  கீழே தான் படுக்க வேண்டும்.  என்னைக் கீழே படுக்கச் சொல்லி ரங்க்ஸ் சொல்ல நான் மறுத்துவிட்டேன்.  இருவரும் உட்கார்ந்து கொண்டே தூங்கி வழிந்தோம். காலையில் திருவனந்தபுரம் மெயிலில் எங்களை அழைத்துச் செல்ல வந்த என் தம்பி அந்த ரயிலில் நாங்கள் வரவில்லை என்றதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்.  கூட வந்த அவர் நண்பரை வீட்டுக்கு அனுப்பித் தகவல் சொல்லச் சொல்லிவிட்டு அடுத்துப் பாண்டியனிலோ ஒன்பது மணிக்கு வரும் ஜனதாவிலோ வரேனானு பார்க்க வேண்டி ஸ்டேஷனிலேயே காத்திருந்தார்.

ஏழரைக்கு (அப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுமில்ல!) வண்டி வந்ததும் தம்பியை நாங்கள் ஸ்டேஷனில் எதிர்பார்க்காததால் நேரே வீட்டுக்குச் செல்லவேண்டி வெளியே செல்லும் வாயிலுக்குச் செல்கையில் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது. "அக்கா, அக்கா" என்று தம்பியின் குரல். வண்டி முழுதும் தேடிக் கொண்டு வந்த தம்பி எங்களைப் பார்த்துவிட, அவர் முகத்தில் கண்ட மகிழ்ச்சி இப்போதும் என் கண்களில் தெரிகிறது.  அப்புறமா வெளியே சென்று வீட்டுக்குச் செல்ல சைகிள் ரிக்‌ஷாவில் ஏறினோம். அப்போதெல்லாம் சைகிள் ரிக்‌ஷா தான்.  ஆட்டோவெல்லாம் பார்த்ததே இல்லை.   வீட்டில் கவலையாக உட்கார்ந்திருந்த அம்மாவும், அப்பாவும் எங்களைக் கண்டதும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

உடனடியாகக் குளித்துக் காலை ஆகாரம் சாப்பிட்டதும் அப்பா புடைவை எடுக்கக் கூட்டிச் சென்றார்.  பட்டுப்புடைவை நிறைய இருந்ததால் நான் உல்லி உல்லி என்னும் புடைவை 644 என்றும் சொல்வார்கள்.  அதைத் தான் வேண்டும்னு எடுத்துக் கொண்டேன். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்னு மூன்று நிறங்களிலும் பூக்கள் நிறைந்த புடைவை.  அப்போல்லாம் இந்த உல்லி உல்லி தான் பிரபலம்.  இதிலே ப்ளெயினும் உண்டு.  நீண்ட டோரியாக் கோடுகளோடு இருந்தால் நல்ல தரமானது என்று சொல்வார்கள்.  ப்ளெயின் வேண்டாம்னு நான் டிசைன் போட்டது எடுத்துக் கொண்டேன்.

அப்புறமா தீபாவளி முடிஞ்சு  பக்ஷணங்களோடு சென்னை வந்து சேர்ந்தோம்.
படம் வழக்கம் போல் கூகிளார் கொடுத்தது. 

Friday, October 17, 2014

நான் சிரித்தால் தலை தீபாவளி!

எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சுத் தான் தீபாவளி வந்தது.  தலை தீபாவளி என்பதால் மதுரைக்குப் போகணும்.  நான் அப்போ வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.  தீபாவளிக்கு அலுவலகத்தில் ஒரு நாள் தான் லீவு.  காஷுவல் லீவில் கையை வைச்சு முன்னே ஒரு நாள், பின்னே ஒரு நாள் போட்டுக் கொண்டு மதுரை போகணும்.  ரங்க்ஸுக்கு லீவுப் பிரச்னை இல்லை.  அவர் ஜாலியா லீவ் போட்டுட்டார்.  எனக்கும் ரங்க்ஸுக்கும் என்னோட பெரியப்பா தீபாவளிக்குப் போக மாலை ஏழு இருபதுக்குக் கிளம்பும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தார்.  பெரியப்பா அப்போது ஸ்டேட் வங்கி மவுன்ட்ரோடு கிளையில் இருந்தார்.  ஆகவே மவுன்ட் ரோடிலேயே உள்ள ரிசர்வேஷன் கவுன்டரில் டிக்கெட்டை வாங்கி எங்களுக்குக் கொண்டு கொடுத்துவிட்டு அவரும் தீபாவளிச் செலவுக்குப் பணத்தை அப்பாவிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டார்.


ஊருக்குக் கிளம்பற அன்னிக்குக் காலம்பரவே பெட்டியைத் தயார் செய்ய வேண்டி இருந்தது.  அன்னிக்கு எனக்கு லீவ் போட முடியாது.  மாலை ஒரு மணி நேரம் முன் கூட்டிக் கிளம்பவேண்டும்.  அதுக்கு அக்கவுன்டன்ட் கிட்டே முதல்நாளே மனுப்போட்டு வைச்சிருந்தேன்.  ரங்க்ஸுக்கு அன்னிக்கு லீவு தான்.  அவர் வீட்டில் இருந்தார்.  சமைச்சு அவருக்கும் போட்டுட்டு,நானும் சாப்பிட்டுட்டு அலுவலகம் போயிட்டு மாலை நாலு மணிக்குக் கிளம்பி நாலரைக்கு பேசின் பிரிட்ஜ் வரும் வொர்க்மென் சிறப்பு ரயிலில் அம்பத்தூர் வந்தேன்.  அன்னிக்குனு ரயில் கொஞ்சம் நின்னு, நின்னுத் தான் போனது.  அம்பத்தூர் போய் வீட்டை அடையும்போதே ஐந்தரை ஆயிடுச்சு.  ரங்க்ஸ் தயாராக இருந்தார்.  நானும் முகம், கை,கால் கழுவி உடை மாத்திக் கொண்டு அவசரத்தில் எதுவும் சாப்பிட முடியாததால் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டுப் பூட்டிக் கொண்டு கிளம்பினோம்.  மாலை விளக்கேற்றும் நேரம் என்பதால் சாப்பாடு சாப்பிடவும் முடியாது.  நல்ல பசி.

பெட்டியைத் தூக்கிக் கொண்டு நாங்க இருந்த 1, தெற்குப் பூங்கா வீதியிலிருந்து அம்பத்தூர் பேருந்து நிலையம் வரைக்கும் நடந்தே தான் போனோம்.  அப்போல்லாம் ஆட்டோ கிடையாது என்பதோடு பேருந்து நிலையத்தில்  ஒன்றிரண்டு குதிரை வண்டிகளும், நாலைந்து சைகிள் ரிக்‌ஷாக்களும் தான் இருக்கும்.  அவையும் பேருந்து நிலையத்திலிருந்து உள்ளே தான் வரும்.  அதுவும் டபுள் சார்ஜ் கேட்பாங்க.  ஏனெனில் திரும்பிப்போகும்போது வண்டி காலியாய்த் தான் போகணும். அதெல்லாம் ஆடம்பரம் என நினைத்த காலம் அது.  ஆகவே நடந்தே போனோம்.

70 -A எண்ணுள்ள பேருந்து தினத்தந்தி அலுவலகம் வழியாகப் போகும்.  அதில் தான் எழும்பூர் போகணும்.  நேரடியாக அப்போது அம்பத்தூரிலிருந்து எழும்பூருக்கு வண்டி இல்லை.  ரயிலில் போயிருக்கலாம்.  ஆனால் ரயிலும் அப்போது கரி வண்டி தான் போய்க் கொண்டிருந்ததால் முக்கால் மணிக்கு ஒரு தரம் தான் வரும். நாங்கள் கிளம்பிய நேரம் ரயில் வண்டி இல்லைனு நினைக்கிறேன்.  எல்லாவற்றையும் யோசித்தே பேருந்தைப் பிடித்தோம்.  அயனாவரம் வரைக்கும் வேகமாய்ப் போன பேருந்து அதன் பின்னர் வேகம் தடைப்பட்டு மெல்ல மெல்ல ஊர்ந்து போக ஆரம்பித்தது.  இப்போது மாதிரி அப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல்னு சொல்லமுடியாது என்றாலும்  ஏதோ மாநாடோ, அல்லது அரசியல் கூட்டமோ நடைபெற்றதால் பேருந்துகள் வழக்கமான வழியில் செல்ல முடியவில்லை.மணியோ ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.  விஷயம் தெரிந்த பேருந்துப் பயணிகள் சிலர் எங்களை அடுத்த நிறுத்தத்தில் இறங்கி டாக்சி வைத்துக் கொண்டு போகச் சொன்னார்கள்.  ஆனால் என்னமோ தெரியலை, ரங்க்ஸ் அதுக்குச் சம்மதிக்கலை.  பார்ப்போம்னு இருந்துட்டார்.  ஒருவழியா ஏழேகாலுக்கு தினத்தந்தி ஆஃபீஸ் வந்து சேர்ந்தது.  இறங்கி அந்தக் குறுக்குப் பாதையில் ஓட்டமாக ஓடினோம்.  படி ஏறி, இறங்கி முதல் ப்ளாட்ஃபார்முக்குள் போனோம்.  திருவனந்தபுரம் மெயிலும் அப்போது தான் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.  ரயிலோடு கொஞ்ச தூரம் ஓட்டமாக ஓடி ஏற முயற்சித்தால் வண்டி வேகம் பிடித்துவிட்டது.  கார்ட் எங்களைத் தடுத்துவிட்டார்.  செயலற்று நின்றோம்.


கூகிளார் கொடுத்த ரயில்.

Thursday, October 16, 2014

தீபாவளி மலரும் நினைவுகள்! அந்த நாளும் வந்திடாதோ!

சின்ன வயசில் தீபாவளி சமயம் அநேகமாய் ஜுரம் வந்து படுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.  ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறை தெரிஞ்ச ஜவுளிக் கடைகளை எல்லாம் சுத்தி வருவார்.  அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார். வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலே ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான். இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும். அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார். அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்க ஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

அடுத்துப் பட்டாசு.  அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.

கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப்  பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.  அது பற்றிப் பின்னர் எழுதறேன்.  தீபாவளிக்கு எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் சமயங்களில் எல்லாம் எல்லா பக்ஷணங்களும் கார்த்திகைக்குத் திரும்பப் பண்ண ஆரம்பிச்சது கடைசியில் அது ஒரு வழக்கமாவே மாறிப் போச்சு! :))))

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க  போலனு  நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா  அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையாலே துணி எடுத்து தருவார்.  அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைச்சிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார்.  இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புதுத் துணி உடுத்தி சந்தோஷமாப் பட்டாசு வெடிக்கப் போவோம்.

அதுக்கு அப்புறமா உள்ளூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வீடுகள், தாத்தா வீடு ஆகிய வீடுகளுக்குப் போயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம். பணமோ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்‌ஷன் தனி.

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.  இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.  என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப் புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

கல்யாணம் ஆனப்புறமா தீபாவளி என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிப்பதோடு ஆரம்பிக்கும். நம்ம ரங்க்ஸுக்குக் குடும்பம் மொத்தத்துக்கும் துணி எடுக்க வேண்டி இருப்பதால் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாலிருந்தே சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். பக்ஷணத் தொழிற்சாலைக்கு வேண்டிய சாமான்களை சேகரம் செய்வது என் பொறுப்பு.  அக்கம்பக்கம் அனைவரின் ரேஷன் கார்டுகளையும் வாங்கி தீபாவளிக்குப் போடும் சர்க்கரை (அப்போல்லாம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்க) வாங்கிச் சேகரம் செய்வேன். காலை எழுந்து வீட்டில் சமையல், டிபன் வேலை முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ரேஷனுக்கும் போய் சாமான் வாங்கி வந்து, பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார், மாமனாருக்குச் சாப்பாடுபோட்டு நானும் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னோட கலெக்‌ஷன் வேலைக்குக் கிளம்புவேன். அதை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வருவேன்.  கொஞ்ச நேரம் ஓய்வு. படிப்பு. ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டும் இருந்தோமுல்ல! :))))

அது முடிஞ்சதும் மாலை டிஃபன், காஃபி, இரவு உணவுக்கான ஏற்பாடுகள்.  என்னிடம் படிக்கும் குழந்தைங்க, என் குழந்தைங்க எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தல்னு இருக்கும்.  இதுக்கு நடுவிலே பக்ஷணமும் பண்ணி இருக்கேன்.  இப்போ??? நினைச்சாலே எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு.  விஜயதசமி அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் போய் எல்லாருக்கும் துணி எடுப்போம்.  அநேகமாய் கோ ஆப்டெக்ஸ்;  ஒரு மாறுதலுக்கு உள்ளூர் துணிக்கடையில் கடனுக்கு.  அடுத்த தீபாவளி வரை வரும். :)))) என்றாலும் தீபாவளி உற்சாகமாகவே இருந்தது.  தொலைக்காட்சி வந்தப்புறம் தீபாவளி சிறப்புப் படமும், சிறப்பு நாடகமும் பார்க்க வீட்டில் கூட்டம் தாங்காது. அவரவர் வீட்டு பக்ஷணப் பரிமாற்றங்களோடு பார்த்த நாட்கள் அவை.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழப் பழகியாச்சு.   எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.


எத்தனை தரம் எழுதினாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பது புரிந்து விட்டது.  இது இப்படித் தான் எனத் தெரிந்து விட்டது. ஆகவே போன வருஷத்துப் பதிவே இந்த வருஷத்துக்கும் சரியா இருக்கும்னு மீள் பதிவாப் போட்டுட்டேன்.  மீள் பதிவு போடறதே  ஒரு வழக்கமாயிடுமோ!!!!!!!!!!!!! நேத்து முகநூலில் ஒருத்தரோட மலரும் நினைவுகளைப் படிச்சதும் எனக்குள் ஏற்பட்ட  மலரும் நினைவுகள். புதுசாவும் எழுதினேன்.  போடலாமா வேண்டாமானு யோசனை!


Monday, October 13, 2014

துர்கா மஹாலக்ஷ்மி!
சமீபத்தில் ஒரு நண்பர் ஶ்ரீ என்னும் லக்ஷ்மி அதாவது மஹாலக்ஷ்மி பற்றிய பேச்சு வந்தபோது அவளை விஷ்ணு பத்னி தான் என்று அடித்துச் சொன்னார். வேறொரு சிநேகிதி துர்கா மஹாலக்ஷ்மி பற்றிக் குறிப்பிட்டபோது அப்படி எல்லாம் இல்லைனு சொல்லிட்டார்.  ஆனால் இது குறித்து ஓரளவு அறிந்திருந்த எனக்கு அன்றிலிருந்து இது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.  என்றாலும் தக்க சான்றுகள் வேண்டுமே. கிடைத்தது தேவி மஹாத்மியத்திலேயே!

இப்போ இதைப் போய் அவரிடம் சொல்லிக் கொண்டு இருக்கப் போவதில்லை. ஆதாரமான ஸ்லோகம் கிடைச்சது.  அதுவே போதுமானது.  நவராத்திரியில் நாம் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாகக் கொண்டாடுவது அம்பிகையில் ஆதிலக்ஷ்மியின் அவதார சொரூபங்களே.  தேவியின் பத்து அவதாரங்களில் இந்த ஶ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமும் ஒன்று.  பத்து அவதாரங்களைக் குறித்தும் முதலில் படிக்கணும்.  அப்போத் தான் இந்த அவதாரம் குறித்துப் புரியும்.  அதுக்கெல்லாம் நேரமும், வாய்ப்பும், படிக்கத் தக்க புத்தகங்களும் தேடிப் பிடிச்சுப் படிக்கணும்.  முடியுமானு பார்க்கலாம். தேவியின் பத்து அவதாரங்கள் குறித்து லலிதாம்பாள் சோபனத்திலும் எழுதி இருக்கிறேன்.


இதை ரொம்ப ஆழமாக குருமுகம் இன்றிப் படிக்கவோ, எழுதவோ முடியாது. தெரிந்ததைப் புரிந்ததை மட்டும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
பி.கு:  சில நாட்களுக்கு வேலை அதிகமா இருக்கும்.  அவ்வப்போது இணையம் வந்து செல்வேன்.  பதிவுகள் எப்போதாவது வரும்.. ஆகவே எல்லோரும் தீபாவளிக்கு முன்னாடியே


ஸ்வீட் எடு, கொண்டாடு!

Friday, October 10, 2014

"மால்குடி டேஸ்!"

சின்ன வயசிலே அதிகம் காமிக்ஸ் படிச்சது இல்லை.  அப்போக்குழந்தைகள் பத்திரிகையாகக் கலைமகள் பதிப்பகம் வெளியிட்டு வந்த "கண்ணன்" பத்திரிகையும், "அம்புலி மாமா" பத்திரிகையும், "கல்கண்டு" துக்கடாக்கள் நிறைந்தது ஆகியவையே.  இதிலே கல்கண்டு எப்படியும் படிச்சுடுவேன்.  கூட இருந்த குடித்தனக்காரங்க வீட்டிலே குமுதம் வாங்கறச்சே கல்கண்டும் வாங்குவாங்க.  அவங்க கலைமகளும் வாங்கினாங்க தான். அப்போ பிரபலமான "வெற்றிலைச் சுருள்" என்னும் தொடர் வந்து கொண்டிருந்தது.  அம்மா விடாமல் படிப்பாங்க! ஆனால் கண்ணன் வாங்கவில்லை.  மஞ்சரி வாங்குவாங்க.  அதையும் விடாமல் படிப்பேன். ஹிஹிஹி, மளிகை சாமான் கட்டி வரும் பேப்பரைக் கூட விடாமல் படிச்சிருக்கேன்.  அம்புலி மாமா பெரியப்பா வீட்டில் வாங்குவாங்க.  அங்கே போகையில் அதுவும் படிக்க முடியும்.  மற்றபடி குழந்தைகள் புத்தகம் என எதுவும் தெரியாது.


ஸ்கூலில் படிக்கிறச்சே தான் "ஸ்வாமியும் நண்பர்களும்" என்னும் புத்தகம் "Swamy and his friends"  என்னும் ஆங்கிலப் புத்தகம் ஆங்கிலம் இரண்டாம் தாளின் பாடநூலாக ஏழாவது படிக்கையிலேயோ என்னமோ வைச்சிருந்தாங்க.  அதை எழுதிய ஆர்.கே.நாராயண் குறித்து அதிகம் அப்போத் தெரியாது.  பின்னர் "கைட்" படம் வந்தப்போ அதைப் பத்திப் பேசினாங்க.  அவரோட கதை தான் என.  அப்பா மட்டும் தான் அந்தப் படம் போய்ப் பார்த்துட்டு வந்தார்.  "கைட்" என் தம்பிக்குக் கல்லூரியில் பி.யு.சி. படிக்கையில் பாடமாக வந்திருந்தது.  எனக்குப் படிக்கத் தடை.  ஆனாலும் தெரியாமல் இன்னொரு புத்தகத்துக்குள்ளே வைத்துப் படித்திருக்கேன்.  பின்னால் தெரிஞ்சு போய் அடி வாங்கினதெல்லாம் இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.  இப்போ ஆர்.கே.நாராயண் குறித்து.

இவரைக் குறித்து நான் அறிந்ததெல்லாம் கல்யாணம் ஆகி முதல் முதலாய் ராஜஸ்தான் வந்தப்போ தான்.  அப்போத் தான் இவரோட மற்றப் புத்தகங்களும் அறிமுகம் ஆயிற்று.  அப்போத் தான் ஜான் மாஸ்டர்ஸ் புத்தகங்களும் அறிமுகம்.  மால்குடி டேஸ் படிச்சதும் அப்போத் தான். மால்குடினு நிஜம்மாவே ஒரு ஊர் இருக்குனு நினைச்சுப்பேன்.  இல்லைனா லால்குடியைத் தான் பெயரை மாத்தி இருக்காரோனு தோணும்.  அதுக்கப்புறம் குழந்தைகள் எல்லாம் பெரியவங்களா ஆகிறச்சே அவங்க ஆர்.கே.நாராயண் புத்தகங்களை வெகு எளிதாகப் படித்ததோடு அதை அலசி ஆராயவும் செய்தார்கள்.   நாங்க எந்தத் தடையும் போட்டதில்லை.  ஆர்.கே.நாராயண் படிச்ச மாதிரியே இர்விங் வாலஸும், அகதா கிறிஸ்டியும், ஆர்தர் ஹெய்லியும் படிச்சாங்க. எல்லாவற்றையும் என்னோடு விவாதிப்பார்கள்.  ஆனாலும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சது தேவனின் புத்தகங்களே.  அதிலும் தேவனின் "கல்யாணி"யை எத்தனை முறை படிச்சுச் சொன்னாலும் அலுக்காது.  ஹிஹி, எங்கேருந்தோ எங்கேயோ போயிட்டேன்.  மீண்டும் ஆர்.கே.நாராயண்.

மால்குடி டேஸ் பின்னாடி தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.  அதிகம் சினிமாத்தனம் இல்லாமல் ஆர்.கே.நாராயண் அவர்களின் மால்குடியைக் கண்ணெதிரே கொண்டு வந்தார்கள். ஸ்வாமியாக அந்தச் சிறுவனும் அற்புதமாக நடித்திருந்தான்.  ஆர்.கே.நாராயணின் தம்பியான ஆர்.கே.லக்ஷ்மணின் கார்ட்டூன்களோடு அருமையான தொடக்கப்பாடலுடன் வந்திருக்கும்.  அது ஒரு பொற்காலம்.  பலவிதமான சானல்கள் வந்து மக்கள் மனதைக் கெடுக்காமல் தூர்தர்ஷன் மட்டுமே இப்படியான ஆக்கபூர்வமான படைப்புக்களைக் கொடுத்து வந்தது.  என்ன வேலை செய்தாலும் அதைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு இதைப் பார்த்துவிட்டுப் போவேன்.   கைட் படத்தைத் தான் கெடுத்துவிட்டார்கள். :(  மிஸ்டர் சம்பத் கூட ஆர்.கே.நாராயண் படைப்புத் தான் என எண்ணுகிறேன்.

அதோடு இல்லாமல் சிறு குழந்தைகளைப் பாடப்புத்தகம் சுமக்க வைப்பதையும்  ஒரு தாயின், தந்தையின், தாத்தாவின் பரிவுடன் அரசுக்கு எடுத்து உரைத்து ஆவன செய்யுமாறு தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமாக எடுத்து உரைத்திருக்கிறார் ஆர்.கே.நாராயண்.  அது சரி, எதுக்கு இதெல்லாம் என்று கேட்பவர்களுக்கு!  இன்று ஆர்.கே.நாராயண் அவர்களின் பிறந்த தினமாம்.  கூகிளார் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.  அப்படி இருக்கையில் நம் நாட்டில் பிறந்த பெரியவரின் பிறந்த நாளை நாம் கொண்டாட வேண்டாமா?  தன் எழுத்துகளின் மூலம் இன்னமும் உயிர் வாழ்கிறார் ஆர்.கே.நாராயண் அவர்கள்.
படங்கள் மூன்றுமே கூகிளார் கடன் கொடுத்தவை என்றாலும் கடைசிப் படத்துக்குச் சொந்தக்காரர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் என்று தெரிய வருகிறது.  அனைவருக்கும் நன்றி.

Sunday, October 05, 2014

எலிமயமான எதிர்காலத்துக்குக் கிடைத்தது ஒரு பரிசு!

பரிசு விபரம்

கதைக்கான சுட்டி"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்திலும் ஒரு காலத்தில் தெரிந்திருக்கிறது.  ஆனால் நம்   கதாநாயகர் ராமசுப்புவுக்குத் தான் தெரியவில்லை. எலிகளோடு குடித்தனமே நடத்திக் குப்பை  கொட்டி இருக்கோம். ராஜஸ்தானுக்குப் போனபோது தான் எலிகளில் இத்தனை சாமர்த்தியசாலிகள் இருப்பதே தெரிய வந்தது.  முதல் வருடம் கொலு ஆரம்பித்ததும் கொலுப்படி கட்டிப் புதிதாய் வாங்கிய பொம்மைகளை வைத்துவிட்டு அன்றிரவு படுத்தோம்.  மறுநாள் பார்த்தால் படிகள் காலி! பொம்மைகளை எல்லாம் இரவில் விஜயம் செய்த எலிக்குடும்பம் அகற்றிவிட்டிருக்கிறது. நல்ல வேளையா எல்லாம் உடையாத பொம்மைகள். :))) அதுக்கப்புறமா கொலு வைக்கும்போது கடைப்பிடிக்கும் நியமங்கள், கட்டுப்பாடுகளை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டுப் பகலில் பொம்மைகளை வைத்துவிட்டு இரவு படுக்கப் போகும்போது  நினைவாக எடுத்து பீரோவில் வைப்போம். ஒன்றா, இரண்டா, ஒரு பெரிய குடும்பமே இருந்தது. நான் சமைக்கிறச்சே கூட உப்புப் போடறது சரியா இருக்கா, காரம் சரியாப் போடறேனானு எலிகளே கவனிச்சுக்கும். குறுக்கும், நெடுக்குமாகப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் எனக்குச் சரிசமமாக அதுங்களும் வேலை பார்க்கும்.

அம்பத்தூரிலும் கேட்கவே வேண்டாம். இப்படிப்போகும் இடமெல்லாம் எலிகளோடேயே வாழ்ந்த எனக்கு இங்கே ஶ்ரீரங்கம் வந்து ஒரு நாள் அது கண்ணில் பட்டதோடு சரி. அதுவே நாலாம் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.  அப்புறமாப் பார்க்கலை.  எங்கேயோ போயிடுச்சுங்கனு நினைச்சா, எங்கேயும் போகலைங்க.  திருச்சியிலேயே உள்ள "எலி"சபெத் டவர்ஸுக்குத் தான் போயிருக்கு. ஒன்றா, இரண்டா, எடுத்துச் சொல்லனு பாட்டுப் பாடறாப்போல் திருமதி ராமசுப்புவுக்கு எத்தனை எலினு தெரியலை.  சுண்டெலியா, பெரிய எலியா, பெருச்சாளியானு எதுவும் தெரியலை.  கண்ணில் காணாத எலிக்கே அரண்டுட்டாங்க.  அலுவலகம் சென்ற கணவனைத் துணைக்கு அழைச்சுட்டாங்க.  நாங்கல்லாம் சின்னக் குழந்தைங்களை வைத்துக் கொண்டே எலிகளையும் சமாளிச்சிருக்கோமாக்கும்.  அந்தக் காலத்தில் தொ"ல்"லைக்காட்சியே இல்லை.  டாம், ஜெரி பத்தி யாருக்குத் தெரியும்!  ஆனாலும் நாங்க இந்த எலிங்களை எல்லாம் ஜெரியாகவே நினைச்சுக் குழந்தைகளுக்கு உயிருள்ள பொம்மையாக இதை வைச்சு விளையாட்டுக் காட்டி இருக்கோம்.  குழந்தைங்களுக்கும் பழகிப் போச்சா! பிரச்னை இல்லை.  ஆனால் இங்கே பாருங்க "எலி"சபெத் டவர்ஸின் குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் ஆன ராமசுப்பு அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு எலியை வேட்டையாடப் போகிறார்.  வெற்றி வீரராக வேலையை முடித்தாரா?  ம்ஹூம் இல்லைங்க!

வாசலில் காவலுக்கு நின்றிருந்த வாட்ச்மேனையும் ஏமாற்றிவிட்டுப் புதுக்குடித்தனக்காரங்க மூலமா வந்திருக்குமோ என்று ஐயப்படும் எலியார்  அந்தக் குடியிருப்பு நலச்சங்கச் செயலாளர் ராமசுப்பு என்பதையும் லக்ஷியமே செய்யாமல் அவர் வீட்டுக்கே குடி வந்துவிட்டது. எலியை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தன்னைப் பழிவாங்க யாரேனும் சதி செய்திருப்பார்களோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவர், உள்ளே நுழையும்போதே அந்த அவசரத்திலும் யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டே படுக்கை அறைக்குச் சென்று பாதுகாப்பாகக் கட்டிலின் மேல் ஏறிக்கொள்கிறார். நண்பரை ஆலோசனை கேட்டும் பலனில்லை. எலியால் வீட்டில் சமையல் நடக்காததால் வெளியே போய்ச் சாப்பிட்டு வருகையில் தான் இதற்கு அயனான தீர்வு கிடைக்கிறது ராமசுப்புவுக்கு. வேறொரு நண்பர் மூலமாய் எலிப்பொறி கிடைக்கச் சுவையான மசால்வடையும் வாங்கி நண்பரின் ராசியான கைகளினாலேயே (பின்னே, எலி பிடிபட வேண்டாமா) அதை வைக்கச் சொல்லி எடுத்து வருகிறார்.

ஆனால் பால்காரர் பேச்சைக் கேட்டுக் கொண்டு எலிப்பொறியைச் சுத்தம் செய்ய நினைத்து வடையை வெளியே எடுத்ததில் வடை தூள்தூளாக ஆக, ராமசுப்புவும் அவர் மனைவியும் மசால்வடையைப் போலவே நெஞ்சம் தூள்தூளாக ஆகித் தவிக்கின்றார்கள். வீட்டுக்கு வந்தால் விருந்தாளி வேறு மைத்துனன் உருவத்தில் பயமுறுத்த என்றுமில்லா அதிசயமாக ராமசுப்பு துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் மைத்துனனுக்கு நல்வரவு கொடுக்க, ஶ்ரீமத் எலிமஹாப்புராணம் கேட்ட மைத்துனன் கோவிந்து, எலியை விரட்டக் கமிஷனாக பஜ்ஜி, கெட்டிச் சட்னியோடு, டிகிரி காஃபியும் தன் அக்காவிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு சமையலறையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று எல்லாச் சாமான்களையும் எடுத்துப் பரத்த, உதவி செய்யப் போன ராமசுப்பு எதிர்பாராமல் எலி தாக்குமோ என்ற அச்சத்தில் இருமல் மருந்து பாட்டிலை உடைத்து விட்டுத் தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்.

ராமசுப்பு  எலிப்பொறியைச் சுத்தம் செய்ய நினைத்து அதைத் தூள்தூளாக்கி, மீண்டும் உடைந்த மனதை ஒட்ட முடியாமல் தவிக்க, வீட்டை விட்டு "எலி"யேறினால் போதும். ச்சே ச்சே, வெளியேறினால் போதும்னு ராமசுப்பு எலிப்பொறி வாங்கவும், அவர் மகன் ட்யூஷன் சாக்கிலும் வெளியேறுகின்றனர்.  எலிப் பொறி வாங்கச் சென்ற ராமசுப்பு எலியின் வகையறாக்கள் தெரியாமல் அல்லல்படுகிறார். எலியின் அளவு தெரியாமல் எந்தக் கூட்டை வாங்குவது என முழிப்பவருக்கு  கூட்டிலும் சைவம், அசைவம் என இருப்பது புரியவர மயக்கமே வருகிறது. சாதாரணமாக சைவக்கூட்டில் பிடிக்கும் எலியை எங்காவது விட்டுட்டு வருவோம்னு போய் விட்டுட்டு வந்தால், அந்த எலி நமக்கு முன்னால் வீட்டுக்குத் திரும்பி இருக்கும்.  நாம பேருந்து பிடிச்சு, பேருந்து நிறுத்தத்திலே இருந்து வீட்டுக்கு வருவதற்குள்ளாக அது வந்துடும். ஆகவே நாங்க அதை முயல்வதே இல்லை.  எங்க மாமியார் வீட்டிலே அசைவக் கூடு தான்.

எலியார் தானே தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கறாப்போல் அமைப்பு.  அதிலேயும் நாங்க எலிகளைப் பிடிச்சிருக்கோம். மருந்தும் வைச்சிருக்கோம். கோதுமை மாவை நெய்விட்டுப் பிசைந்து அதிலே எலி மருந்தையும் சேர்த்து எலியார் வரக்கூடிய இடங்களிலே வைச்சுடுவோம்.  எலியார் வந்து அந்த மாவு உருண்டையைத் தின்னுட்டு உயிரை விட்டுடுவார். அப்படி ஒரு முறை உயிரை விட்ட எலியாரின் உடல் மறைந்த விதம் தான் இன்னி வரை மர்மம்.  ஆனால் நம் இளகிய மனம் படைத்த ராமசுப்பு இதெல்லாம் வேண்டாம்னு சைவக்கூடாகவே இரண்டு வாங்கிடறார்.   ஒரு கூடு ராமசுப்புவுக்கும், இன்னொண்ணு நண்பரோட கூட்டை உடைச்சதுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கும். ஆனால் திருப்பிக் கொடுக்கிறச்சே தான் அந்த அம்மா போட்டாங்களே ஒரு போடு! அவங்களோட பழைய கூடு முன்னோர்கள் பயன்படுத்தியதால், "ஆவி" வந்ததாம். எத்தனை எலிகளோட ஆவியோ!

2 டஜன் மசால்வடைகளோடு வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டில் எலி எங்கே இருக்குனு கண்டுபிடிக்கவே முடியலை. எலிக்குப் பதிலாக மைத்துனனே எலியாக மாறி மசால்வடைகளைக் காலி செய்ய, இரவு நிம்மதியற்ற மனதோடு படுத்தவருக்கு எலி வந்து தன்னைத் தொந்திரவு செய்வது போலவே இருந்தது. மைத்துனனின் குறட்டை கூட எலி கடிக்கும் சப்தமாகத் தெரிந்தது. தோள் கண்டார் தோளே கண்டார்னு கம்பராமாயணத்தில் வந்தது போல ராமசுப்புவின் எலியாயணத்தில் எலி கண்டார், எலியே கண்டார்னு ஆகிப்போய் மறுநாள் அலுவலகத்திலும் வேலை ஓடாமல் தவிக்கிறார்.  அதோடு அவரை எலியோடு தன்னந்தனியாக மல்லுக்கட்ட விட்டுவிட்டு அவர் மனைவியும், பையரும், கோவிந்துவோடு மண்ணச்சநல்லூருக்குத் தப்பிச் சென்றுவிடுகின்றனர். அன்றைய ராசிபலனும் வக்ரமாயும், உக்கிரமாயும் இருப்பதாய்ச் சொல்லத் தவிக்கும் ராமசுப்புவுக்கு  மாம்பழச் சாலையில் ஒருவன் செத்த எலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வீரனாக நடந்து செல்வதையும் Pied Piper of Hamelinஐத் தொடர்ந்து சென்ற சிறுவர்களைப் போல் இவனையும் சிறுவர்கள் தொடர்வதையும் பார்த்துப் பாதியிலேயே பேருந்தை விட்டு இறங்கி அவனோடு ஓர் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு முன்பணமும் கொடுக்கிறார்.

இப்போத் தான் சற்றும் பொருத்தமில்லா விஷயம் நடக்கிறது.  ராமசுப்பு வீட்டில் யாருமில்லாத சந்தோஷத்தைக் கொண்டாட க்வார்ட்டர் அடிக்கிறாராம்.  இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியலை!  எல்லா ஆண்களுமே இப்படித்தானா?  ஆனால் இந்தக் கதையிலேயே ராமசுப்புவோட வக்ரமான ராசியைக் குறித்துச் சொல்லி இருக்கிறாப்போல் இது கொஞ்சம் வக்ரம்னு நினைச்சுட்டு வேறு வழியில்லாமலேயே மனசைச் சமாதானம் செய்துக்க வேண்டி இருக்கு. :(  மறு நாள் அந்த Pied Piper  ரங்கன் ராமசுப்புவோட "எலி'சபெத் குடியிருப்புக்கு வருகிறான். கையில் ஏற்கெனவே செத்த எலி ஒன்றையும் அவர்கள் முன்னேற்பாட்டின்படி மறைத்துக் கொண்டு வர, குடியிருப்பில் அனைவரையும் அவரவர் வீட்டு வாசலுக்கு அழைத்து அவர்களுக்கெதிரே ரங்கனை அந்தச் செத்த எலியைத் தூக்கிச்செல்லும்படி செய்கிறார் ராமசுப்பு.  முன்னேற்பாட்டின்படி எல்லாம் நடைபெறுகிறது.

எல்லோருடனும் (எங்கே செத்ததோ அந்த எலியார்) எலியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ரங்கனுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டுக் குடித்தனக்காரர்களின் பாராட்டு மழையைச் சுமக்கமுடியாமல் சுமந்து அதில் நனைந்தபடி  வீட்டுக்கு வந்த ராமசுப்புவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு ஜெரிகள்  சாப்பாட்டு மேஜையில் விளையாட்டு. ஹாஹா, இரண்டும் சுண்டெலிகள். டாம் அன்ட் ஜெரியில் எப்போதும் ஜெயிப்பது ஜெரிதானே. தலை சுற்ற நின்ற ராமசுப்பு வீட்டையே காலி பண்ணி வேறே வீட்டுக்குப் போக முடிவெடுத்ததோடு மைத்துனனையும் நிரந்தரமாகத் தன்னோடு தங்க வைக்க முடிவெடுக்கிறார். "எலி"ய விஷயம் தான்.  ஆனால் ராமசுப்புவைப் பாடாய்ப் படுத்தி விடுகிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்றிலே பயம். நம் ராமசுப்புவுக்கு எலியாரிடத்தில் பயம். எலியாரோ யாரைக் கண்டும் பயப்படவே இல்லை.  ராமசுப்பு வீட்டில் எங்கேயோ ஒளிந்து கொண்டு தன் வாழ்க்கையைச் சுகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. எலித் தொந்திரவு சனிதசையில் அதிகமாய் இருக்கும் என்பார்கள்.  பொதுவாக எலித் தொந்திரவுக்கு  அசைவ எலிப்பொறியில் வடை வைத்து அதுவே சுருக்கு மாட்டிக்கும்படி செய்யலாம். அல்லது எலி மருந்து வைக்கலாம். இன்னொண்ணு எலியை அங்கேயே ஒட்டிக்கும்படி செய்யும் ஒரு மருந்தும் இருக்கிறது.  அது சரியாய் வரதில்லை.  ஏனெனில் எலிக்குப் பதிலா நாம தான் அதிலே மாட்டிக்கும்படி இருக்கும். என்னைப் பொறுத்தவரை எலி ஒரு தொந்திரவு தான் என்றாலும் ராமசுப்பு மாதிரி மனம் தளராமல் அதை எதிர்கொள்ள வேண்டும். ராமசுப்பு வெற்றியடைந்தாரோ இல்லையோ கதாசிரியர் கதை சொல்லும் சாமர்த்தியத்தில் வெற்றி அடைந்து விட்டார்.  இந்த "எலி"யேனின் வாழ்த்துகள்.

 இங்கே

இங்கே

இங்கே

இங்கே

மேற்கண்ட சுட்டிகளில் எங்கள் எலிமஹாப் புராணங்களைப் படிக்கலாம். 

Thursday, October 02, 2014

கொண்டைக்கடலைச் சுண்டல் எடுத்துக்குங்க!

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.  ஆனாலும் சிலருக்கு ராத்திரி நிதானமாச் சுண்டல் சாப்பிடப் பிடிக்கும்.  மதுரையிலே ராத்திரி எட்டரை மணிக்குச் சூடான வேர்க்கடலை வறுத்தது, வேக வைச்சது, அப்புறம் சூடான பட்டாணிச் சுண்டல்னு மணி அடித்த வண்ணம் தள்ளு வண்டியில் வித்துட்டுப் போவாங்க.  இப்போல்லாம் எப்படியோ தெரியாது.

என்னோட பெரியப்பா அவங்க கிட்டேச் சுண்டல் வாங்கிக் கொண்டு மொட்டை மாடியில் போய் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பருப்பாக ரசித்துச் சாப்பிடுவார். அது மாதிரி இப்போவும் சிலருக்குப் படுத்துக்கப் போறதுக்கு முன்னாடி பக்ஷண வகைகள், சுண்டல்னு சாப்பிடப் பிடிக்கும்.  இன்னிக்கு ஒரு நாளைக்கு அப்படி நினைச்சுட்டு எல்லோரும் எடுத்துக்குங்க!


இன்னிக்குக் கொண்டைக்கடலைச் சுண்டல் தான்.
மி.வத்தல், தனியா, பெருங்காயம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சுண்டலில் சேர்த்திருக்கேன்.  அதனால் நன்றாகவே இருக்கும். :)))))ரெண்டு படத்திலேயும் வித்தியாசங்கள் எனக்குத் தெரியுது.  உங்களுக்குத் தெரியுதா?  யாருப்பா அங்கே? நிபுணர்கள்?? வந்து சொல்லுங்க பார்ப்போம்!

சரஸ்வதி பூஜை ஆயிடுச்சா? வாழ்த்துகள்!

சுண்டல் சாப்பிடக் கூட்டம் வரும் அளவுக்குக் கருத்துச் சொல்லக் கூட்டம் வரதில்லை. :)))) எல்லோரும் சுண்டலைச் சாப்பிட்டுட்டு சத்தம் போடாமப் போயிடறாங்க போல!  இன்னைக்கு சரஸ்வதி பூஜை படங்கள் கீழே!
நிவேதனம், கரண்டிகளுடனேயே! :))))) நாமளே சொல்லிட்டால் அப்புறமா யாரும் சுட்டிக் காட்டமாட்டாங்க இல்லையா? :)  ரொம்ப சிம்பிள் தான். சாப்பிட யாரும் இல்லாமல் நிறையப் பண்ணி என்ன செய்ய முடியும்? :))))

அர்ச்சனை முடிந்து நெய் தீபம் சரஸ்வதிக்கு.
புத்தகங்கள், புடைவை, ரவிக்கைத் துணி போன்றவற்றோடு மலர் அலங்காரமும் செய்யப்பட்ட சரஸ்வதி படம். என் பிறந்த வீட்டில் சரஸ்வதி சிலை தான் வைப்போம். இங்கே வைக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. :)
கன்னத்திலே போட்டுக்குங்க.  தீபாராதனை நடக்குது.

எல்லாரும் எடுத்துக்க வசதியா தீபாராதனை கீழே வைச்சிருக்கு.  எடுத்துக்குங்க.  என்ன சாப்பாடா?  தேங்காய், அரிசி அரைச்சு விட்டுப் பாயசம், காய் ஒண்ணும் பண்ணலை, ஜவ்வரிசி வடாம் பொரிச்சேன்.  குடமிளகாய், வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம், மோர், வடை, அப்பம் இதான் சமையலே. ஐந்து வடை, ஐந்து அதிரசம்.  அஷ்டே! :))))) சீக்கிரமா வந்து தீர்ந்து போகிறதுக்குள்ளே எடுத்துக்குங்க.

தேங்காய், வாழைப்பழம், மாதுளை, வெற்றிலை பாக்கு எல்லாமும் நிவேதனம். சுண்டலா?  சாயந்திரம் தான் வேக வைச்சுட்டேன்.  நாலு மணிக்குத் தாளிச்சுக் கலந்து நிவேதனம் பண்ணுவேன். :)))))

Wednesday, October 01, 2014

சிவப்புக்காராமணிச் சுண்டல்! எடுத்துக்கத் தயார்!


மின்சாரம் இல்லாமல் இருந்ததால் சாப்பாடு ஆன கையோடு சுண்டல் தயாரிப்பை முடிச்சு நிவேதனமும் பண்ணி விட்டேன்.  யாராவது வந்தால் பேச்சுக் கச்சேரி வைச்சுக்கலாமே.  தொண்டை தான் ஒத்துழைப்பதில்லை. :(இன்னைக்குச் சிவப்புக் காராமணிச் சுண்டல்.  காராமணி நல்லாவே குழைந்து போச்சு. வெல்லம் போட்டுப் பண்ணறேன்னு ரங்க்ஸ் கிட்டேச் சொல்லிட்டு மறந்து போய் உப்பைப் போட்டுட்டேன்.  கொஞ்சம் போல் உப்புனா சமாளிக்கலாம்.  தேவையான உப்பைச் சேர்த்துட்டேன்.  அதனால் நோ வெல்லச் சுண்டல்.  காரச் சுண்டல் தான்.