எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 29, 2009

பட்டுப் பூச்சி, பட்டுப் பூச்சி, பார் பார்!

இந்த விருது கொடுக்கிற விஷயம் தெரியும்னாலும் என் வரைக்கும் வரும்னு எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் விருது வாங்கி இருக்கும் மத்தவங்க அளவுக்கு எதுவும் எழுதவில்லை. இப்போவும் திவா தேர்ந்தெடுத்திருக்கும் மற்ற இருவரும் எப்போவோ வாங்கி இருக்கணும். கோமா மனோரமா தான் தெரியும், பனோரமா தெரியாதுனாலும் அதையும் கத்துக் கொண்டு, பின்னி எடுக்கிறார். ஹாஸ்யத்திலும் அப்படியே! பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை! எனக்கு மனோரமாவையும் தெரியாது, பனோரமாவும் தெரியாது. மலையாள மனோரமாவானு கேட்பேன்! பனோரமா யாருங்க அதுனு கேட்பேன்! இவ்வளவு ஞானவான் ஆன என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்னு புரியலை!

குமாரோ கேட்கவே வேண்டாம். கட்டுமானத் துறையிலிருந்து ஆரம்பிச்சு, லினக்ஸ் வரை அனைத்தும் இணையவழிப்பாடம் எடுத்துட்டு இருக்கார். இதிலே நான் எங்கே இருந்து வரேனு புரியலை! தப்பு நடந்து போச்சு! போகட்டும். இனி நான் யாருக்குக் கொடுக்கிறதுனு மண்டை காய யோசிக்கவேண்டி இருக்கு. அனைவருமே நண்பர்கள், நண்பிகள். யாரை விடறது, யாரைச் சேர்க்கிறது? எத்தனை பேருக்குக் கொடுக்கிறது? ஒண்ணும் புரியலை! தர்ம சங்கடம்!

முதலில் வருபவர்கபீரன்பன். இவரோட பதிவுகளை முதலில் எல்லாம் பின்னூட்டம் கொடுக்காமலே படித்து வந்தேன். யாரோ ரொம்பப் பெரியவர் நல்லா எழுதறார், நாம குறுக்கிட்டு எதுவும் எழுதக் கூடாது என்று நினைச்சால்???? கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்து தான்) இளைஞர்! அதுக்கப்புறம் நம்ம புத்தி சும்மாவா இருக்கும்? இது எ.பி. இது த.பி. இது க.பி. என்று ஒவ்வொன்றாய்க் கண்டு பிடித்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. என்றாலும் மென்மையாகவும், அதே சமயம் உறுதியுடனும், அழுத்தம் அதிகம் காட்டாமல் வார்த்தைகளை வெளிக்கொண்டுவர முடிந்த இவருக்கு இந்த விருது எல்லாம் ஜுஜுபி!

அடுத்து யார்னு யோசிச்சால் ஜீவாநினைவுக்கு வந்தார். தெளிந்த ஞானம் இவரிடம் நிறையவே உண்டு. இவரோட பதிவுகளும், நிதானமான போக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். "அசலம்"னு பேர் வச்சிருக்கணுமோனு தோணும். இவரோடும் இதைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்.

இன்னொருத்தர் இருக்கார். ஆனால் அவர் ரொம்ப பிசினு நினைக்கிறேன். காணோம் அவரைக் கொஞ்ச நாட்களாய். இது தவிரவும் பகிரவும், மகிழவும் வலை உலகு பூராவும் மக்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் உரித்தான இந்த விருதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன். இப்போ சொல்லி இருக்கும் மூன்று பேரும் செய்யவேண்டியதைக் கீழே குறிப்பிட்டிருக்கின்றேன். அவங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ இவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். திவாவுக்கு என் நன்றி.

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Monday, January 26, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டிற்குச் சென்றோம்!


சிங்கத்தைப் பார்க்கணும்னு ரொம்ப நாட்களாய் முயன்று கொண்டிருந்தோம். என்னமோ, தள்ளிப் போயிட்டே இருந்தது. அக்டோபரில் தேதி முடிவு செய்து போக நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி கீழே விழுந்ததில், எங்கேயும் போக முடியாமல் கான்ஸல் பண்ணணுமோனு நினைச்சப்போ, ஜனவரியிலே வாங்கனு சொன்னாங்க. நல்லதாப் போச்சுனு இப்போ வெள்ளியன்று கிளம்பிப் போய் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தேடித் தேடி அலைந்து, திரிந்து சிங்கங்களைப் பார்த்துட்டு இன்று காலை வந்தோம். ஒரு சிங்கம் இல்லை, இரண்டு இல்லை. ஒன்பது சிங்கங்கள். கூடுதலாய் ஒரு சிங்கம். ஆக மொத்தம் பத்து சிங்கம். அவை பற்றிய ஒரு தொகுப்பு விரைவில் வரும். எதிலே வரும், எப்போ வரும்னு தெரியாது. அலுப்பு இன்னும் தீரலை. மேலும் இந்தப் பக்கத்தில் குழந்தைக் கண்ணன் விளையாடிட்டு இருக்கிறதாலே குழந்தை பயந்துக்கும். ஆகவே அறிவிப்புக் கொடுக்கிறேன். அதுவரையில் எந்த சிங்கம்னு யோசிச்சுட்டு இருங்க. புரிஞ்சவங்க பொறுமையா (கொஞ்சம் ஓவரா இருக்கோ) இருக்கவும்.

Friday, January 23, 2009

நான் ஒரு வியர்டு????

தெரியலைங்க, கொஞ்ச நாட்களாகவே,2 மாசமா???? கமெண்ட்ஸுக்கு பதில் கொடுத்தாலோ, அல்லது நான் யாரோட பதிவிலேயாவது போய் கமெண்ட்ஸ் போட்டாலோ, அது பப்ளிஷ் கொடுத்ததும், பப்ளிஷ் ஆகிறதுக்கு பதிலாய், Are you sure you want to navigate from this page? அப்படினு கேட்குது மெசேஜ். நான் என்னமோ இல்லைப்பா, நான் போகலை, இந்தப் பதிவிலே எனக்கு வேலை இருக்குனு சொல்லி, No தான் கொடுப்பேன். ஆனாலும், உடனேயே பக்கமே காணாமல் போயிடுது! about:blank அப்படினு வரதோட, address bar, task bar, tabs எல்லாமே நடுங்க ஆரம்பிச்சுடுது. (குளிர்காலம்கிறதாலேயோ??, எனக்கு ஒண்ணும் குளிரலை!:P)

அப்புறமா கணினியை ஷட் டவுன் பண்ண ஜன்னலைத் திறந்தா அது கைக்கே மாட்டிக்கிறதில்லை. ஒரு பத்து நிமிஷமாவது ஆகவேண்டி இருக்கு, நடுக்கம் நின்னு, ஜன்னல் திறக்க. அதுக்கு அப்புறமா திரும்ப re-start கொடுத்து மறுபடி வரவேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்?? சிலபேர் கிட்டே கேட்டேன், அவங்களுக்கும் ப்ளாகர் பிரச்னை இருக்குனு சொல்றாங்க. ஆகவே இது பற்றி என்ன செய்யணும்னு தொழில் நுட்ப நிபுணர்கள் எல்லாம் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க. 2,3 நாளைக்கு இருக்க மாட்டேன், அதனால் நீங்க போடற கமெண்ட்ஸை எல்லாம் அப்புறம் தான் பார்ப்பேன். (என்னமோ கமெண்ட்ஸ் மழை பொழியறாப்போல, அப்படினு மன சாட்சி அதட்டுது! அது கிடக்கடும்.)

யாரும் நான் வரலை, கமெண்டலைனு கோவிச்சுக்காதீங்க, கமெண்டறதுக்காகவே ஒவ்வொருத்தர் பதிவுக்கும் 3 முறையாவது போகவேண்டி இருக்கு! :))))))) அப்புறம் நாம எங்கே பதிவு எழுதறதும், கமெண்ட்ஸுக்கு பதில் சொல்றதும்??? சொல்ல மறந்துட்டேனே, கமெண்ட்ஸ் போடறப்போ மட்டும் தான் இந்தப் பிரச்னை! ஒருவேளை அ.பி.னு சொல்லுதோ ப்ளாகர்?? :P:P:P:P

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 24

பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே. 17.


யசோதை மடியில் குழந்தையைக் கிடத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பூதனை வந்துவிட்டு இறந்து போனதின் பின்னர் அவள் எப்போது அதிக எச்சரிக்கையாகவே இருந்தாள். கண்ணுக்குத் தெரியாத வலையொன்று தன் நீலமேகக் கண்ணனைச் சுற்றிப் பின்னப் பட்டிருப்பதாயும், கூடிய சீக்கிரம் அந்த வலையானது தன் கண்ணனைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ எனவும் எண்ணிக் கலங்கினாள். இத்தனை வருஷம் கழித்துக் கர்ப்பம் தரித்துப் பிறந்த பிள்ளை! என் பிள்ளை! ஊரெல்லாம் கொண்டாடும் வண்ணம் அனைத்துக் குணநலன்களும், விளையாட்டுகளும் நிறைந்து அனைவரையும் கவரும் கண்ணன்! இவனைப் போய்க் கொல்லவேண்டுமென யாருக்குத் தோன்றி இருக்கும்? கம்சனுக்கா? எனில் கம்சனுக்கு என் குழந்தையிடம் என்ன பகைமை? தேவகியின் குழந்தை யாரெனத் தெரியாமல் என் குழந்தையைக் கொல்லச் செய்தானா? அல்லது எல்லாக் குழந்தைகளையும் கொன்று வந்த பூதனை இங்கேயும் வந்து இவனைக் கொல்ல நினைத்தாளா?? மடியில் கிடந்த குழந்தை நன்கு உறங்கி கொண்டிருந்தது.

40:
மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.

ஆஹா, இவன் தவழ்ந்து மண்ணைத் தின்றபோது வாயிலிருந்து மண்ணை எடுக்கும்போது எனக்கு ஒரு கண நேரம் ஒரு மயக்கம் வந்ததே! உலகு எல்லாம் இவன் வாயில் இருப்பதாய்க் கண்டேனே! அது பொய்யாகவே இருக்க முடியாது! என் கண்ணன் அற்புத சக்தி பெற்றவன் தான். இவன் தான் அனைவரையும் காக்கப் போகின்றான், இப்போது குழந்தையாக இருந்தாலும் காத்தும் வருகின்றான். என்றாலும் எத்தனை அழகான குழந்தை இவன்? முகம் எப்படி ஜொலி ஜொலிக்கின்றது? இந்தக் கண்களின் அழகைச் சொல்ல முடியுமா? சிவந்த அதரங்களால் இவன் என்னை முத்தமிடும்போது, அம்மா, எவ்வளவு ஆனந்தமாய் இருக்கின்றது? இவன் காதில் இந்தக் குழை எத்தனை அழகாய்ப் பொருந்தி உள்ளது? என் பிள்ளை எத்தனை அழகு? இவன் என் கிருஷ்ணன், என் மகன்! யாருக்காகவும், எக்காரணத்துக்கும் இவனை விட்டுப் பிரியவே மாட்டேன்! மடியில் கிடந்த குழந்தையை இறுக்கி அணைக்கின்றாள் யசோதை! அவள் உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஆனால் மதுராவிலோ???உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய். அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே. தாலேலோ. 2.

இங்கே மதுராவிலோ தேவகி, தன் குழந்தையை எண்ணியும், அவனுக்கு வந்த ஆபத்து நீங்கியதையும் நினைத்து ஆறுதல் அடைந்தாலும், குழந்தையைத் தாலாட்டிப் பாலூட்டிச் சீராட்டவில்லையே என்ற தாபம் மேலோங்கி நிற்கத் தன் கையில் இருந்த அந்தக் கருநிற பளிங்குச் சிலையைத் தன் குழந்தையாக எண்ணித் தாலாட்டுகின்றாள். அந்தச் சிலையின் முகத்திலேயே தன் குழந்தையின் முகத்தைப் பார்க்கின்றாள். ஒவ்வொரு ஆபரணமாய்ப் பூட்டி அழகு பார்த்து ரசிக்கின்றாள் மனதிற்குள்ளே! தன் குழந்தை சாட்சாத் அந்த வாசுதேவனே! ஸ்ரீமந்நாராயணனே என்று மனதிற்குள்ளே நிச்சயம் கொண்டிருந்தாள் தேவகி! தன்னையும், தன் கணவரையும் மட்டுமின்றி இந்த உலகையே அவன் தான் காக்கப் போவதாயும், தர்மத்தை நிலைநாட்டவே பரம்பொருள் தன் வயிற்றில் உதித்திருப்பதாகவும் உறுதியாக நம்பினாள் தேவகி. ஆகவே அவளுக்குத் தன் கிருஷ்ணனுக்கு தேவாதிதேவர்கள் அனைவரும் வந்து பரிசுகள் கொடுப்பதாயும், அவனுக்குக் குற்றேவல் புரிவதாயும் தோன்றியது.

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

தன் குழந்தைக்குத் தேவாதிதேவர்களும், அந்த விடைஏறும் ஈசனும் என்ன என்ன கொடுத்து அலங்கரித்தனர் என்று தாலாட்டாய்ப் பாட ஆரம்பித்தாள் தேவகி! வலம்புரிச் சங்கும், சேவடிகளில் ஜல் ஜல் என்று ஒலிக்கும் கிண்கிணியும், கைகளில் வளையலும், இடுப்பில் அரைஞாணும், தேவர்கள் கொடுத்தனர் உனக்கென, ஆகவே என் கண்ணே நீ அழாதே என்று தாலாட்டினாள் தேவகி! குழந்தை எங்கே அழுதது? அதுவும் சிலையாகிய குழந்தை, என்றாலும் அதை உயிருள்ள குழந்தையாகவே நினைத்தாள் தேவகி. அவள் மனமெல்லாம் கோகுலத்தில் இருந்தது.

கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய். தாலேலோ
நாராயணா. அழேல்தாலேலோ. 8.

இங்கே யசோதையோ எனில் தன் பிள்ளையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவனுக்கு பொற்சுரிகை, காப்பு, வளையல், உச்சியில் சுட்டி, பொற்பூ போன்றவற்றைப் பூட்டி அழகு பார்க்கின்றாள். அவன் பூதனையின் நச்சுப் பாலை அருந்தி அவள் உயிரைப் போக்கியதைப் பாடலாய்ப் பாடி மகிழ்கின்றாள். என்ன இருந்தாலும் கிருஷ்ணனுக்கு வந்த ஆபத்து நீங்கிவிட்டதாய் யசோதை நினைக்கவில்லை. ரோஹிணியிடமும், நந்தனிடமும் எப்போது கண்ணனை கவனித்துக் கொள்ள வேண்டுகின்றாள். ஆனால் கண்ணனையோ கட்டுப்படுத்துவது ரொம்பக் கஷ்டமாய் இருந்தது. எப்போவாவது யசோதையோ, ரோஹிணியோ, நந்தனோ அவனைக் கவனிக்கவில்லை என்றால் நழுவி விடுகின்றான் பலராமனுடன் ஜோடி போட்டுக் கொண்டு. யசோதை அலறித் துடித்துக் கண்ணா, கண்ணா, எங்கேயப்பா போனாய்? என் செல்வமே, என் அரசே, எனக் கூவிக் கொண்டு அங்குமிங்கும் அலையவேண்டி இருக்கிறது. வீட்டில் வேலை எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. இப்போ அதுவா முக்கியம்? என் கண்ணனல்லவோ முக்கியம்!

ஏ, கோபி சாரு, நீ என் கண்ணனைக் கண்டாயோ, ஏ, மாலினி, நீ பார்த்தியா? ரோஹிணி, அக்கா, நீங்கள் கண்டீர்களோ? என்று கூவிக் கொண்டு அலைகின்றாள் யசோதை. அப்ப்பாடா, கடைசியில் கண்டு பிடித்தாயிற்றே, கண்ணனை, சற்றே கோபத்துடன் யசோதை அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, கீழே இறங்க முடியாமல் இறுக்கிக் கொள்ள, கண்ணனோ, அவள் முகத்தைப் பார்த்து வெகு மோகனமாய்ச் சிரித்துக் கொண்டு, தன் சின்னஞ்சிறு கைகளால் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, தோளில் தலையைச் சாய்த்துக் கொள்கின்றான். கண்களில் விஷமம் மீதூற, அவன் சிரிக்கும் சிரிப்பைப் பார்த்தால், கோபமாவது, ஒன்றாவது?

சொல்லு மழலையிலே- கண்ணா
துன்பங்கள் தீர்த்திடுவாய்:
முல்லைச் சிரிப்பாலே- எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்!

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப் போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே-உனை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

Thursday, January 22, 2009

நேதாஜிக்கு அஞ்சலி!

,நாளை நேதாஜி பிறந்த நாள், இன்றே எழுத நினைச்சேன், முடியலை, நாளைக்கு முடியுமா தெரியலை, அதனால் நேரமிருக்கும்போது போடணும் என்று போட்டிருக்கேன், நாளை நேதாஜியின் பிறந்த நாள். தினசரிகளோ தேசத் தலைவர்களோ நினைக்கிறாங்களா தெரியலை. என்றாலும் இந்த நாட்டிற்காக நேதாஜி பாடுபட்டதை வெகு சீக்கிரம் மறக்க முடியாது. அவர் கனவுகள் நனவாகட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்!

Tuesday, January 20, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி -23

பூதனை இறந்த செய்தி கேட்டதும், கம்சன் மிகுந்த ஆத்திரத்தில் ஆழ்ந்தான். அவன் ஆத்திரம் அவனை மதியிழக்கச் செய்தது. தன்னுடைய ஆலோசகரும், மந்திரியும் ஆன பிரலம்பரைக் கூப்பிட்டு அனுப்பினான். நடந்ததாய்ச் சொல்லப் படும் அனைத்து விஷயங்களையும் மீண்டும் கேட்டு அறிந்தான். "ப்ரலம்பரே! ப்ரத்யோதா கோகுலத்தில் இருந்து வரட்டும். அவன் திரும்பியதும், நான் கோகுலத்தை அடியோடு அழித்து விடுகின்றேன். பூதனையின் மரணத்திற்கு நான் பழிவாங்க வேண்டும். என்னைப் பொறுத்த அளவில் பூதனையின் இழப்பு அளவிட முடியாத ஒன்று. அவள் மரணத்தின் துக்கமோ, அதன் தாக்கமோ என்னால் சகிக்கமுடியாத ஒன்றாகும். " என்று ஆத்திரத்துடன் சொல்லுகின்றான். ப்ரலம்பரோ, "அரசே! தங்கள் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும். எனினும் நான் என்னுடைய ஒரு சிறு ஆலோசனையை, ஆலோசனை கூட அல்ல, என்னுடைய கருத்தைக் கூற விரும்புகின்றேன்." என்று மிகப் பணிவுடன் சொன்னார்.

"ம்ம்ம்ம்ம்., சீக்கிரம் சொல்லுங்கள். உங்கள் கருத்து அறியத் தானே நான் கூப்பிட்டு அனுப்பினேன்? " என்றான் கம்பன். ப்ரலம்பர் சொல்கின்றார்:" அரசே! கோகுலத்தை இப்போது பூதனையின் மரணத்திற்குப் பழிவாங்கவென நீங்கள் அடியோடு அழித்தால், இந்த உலகம் முழுதுக்கும், தெரிந்து போகும், உங்கள் கட்டளைகளினாலேயே பூதனை அனைத்துக் குழந்தைகளையும் கொன்று வந்தாள் என்பது! கொஞ்சம் யோசியுங்கள்!" என்றார். "ஹாஹாஹாஹா! எனக்கு அது பற்றிய கவலை ஏதும் இல்லை!" என்று கம்சன் எக்காளமிட்டுச் சிரித்தான். "அப்படியா அரசே! தேவகியின் ஏழு குழந்தைகளைத் தாங்கள் அழித்தீர்கள். யாதவர்கள் யாருக்கும் அது பிடிக்கவில்லை என்றாலும், அவ்விஷயத்தில் உங்களுடைய பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக இருந்தது என்ற காரணம் இருந்தது. ஆனால் இங்கே பூதனையோ பல சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொன்று அழித்தாள். மக்கள் அனைவரும் அவளை வெறுத்து வந்தனர். அனைவராலும் வெறுத்து, ஒதுக்கப் பட்ட ஒரு கொலைகாரிக்காகப் பழிவாங்குவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமே! யாதவக் குலமே இதைக் கண்டு வெறுக்கும்." என்றார் ப்ரலம்பர்.

"போகட்டுமே, நான் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டேன்." என்று கம்சன் சொல்ல, "மன்னா, நீங்கள் யாதவர்களுக்கு அஞ்சவில்லை என்றாலும், பாஞ்சால நாட்டு அரசன் ஆன துருபதனுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவனுக்கு ஏற்கெனவே மதுரா நகரின் மேல் ஒரு கண் இருக்கின்றது. தவிர, உங்களிடம் பிணக்குக் கொண்டு இங்கிருந்து சென்ற யாதவர்களில் பெரும்பாலோர் அவன் அரண்மனையில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர்." என்றார் ப்ரலம்பர். "இருக்கட்டுமே, துருபதன் போருக்கு வந்தால் நான் தயாராக இருக்கின்றேன். பல வருடங்களாக அவன் என்னுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றான். இப்போது வந்தால் வரட்டும், ஒரு கை என்ன இரு கைகளாலும் பார்த்துவிடலாம்." என்று கம்சன் ஆக்ரோஷமாய்ச் சொன்னான்.

"இல்லை மன்னா! கோகுலத்தை இப்போது தாங்கள் அழிப்பது நல்லதில்லை. விருஷ்ணி குலத்து அக்ரூரரின் ஆட்களின் பலம் ஏற்கெனவே அதிகம். இப்போது இன்னும் அதிகமாகும். ஷூரர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வசுதேவர் மேல் கண்மூடித் தனமான அன்பும், பாசமும் கொண்டவர்கள். மேலும் வசுதேவரின் மூத்த சகோதரி, குந்தி என்பவள், குந்தி போஜனின் வளர்ப்புப் பெண்ணாய் வளர்ந்தாளே, அவள் குரு வம்சத்தில் திருமணம் செய்து கொண்டிருப்பதை மறக்கவேண்டாம். இப்போது ஷூரர்களின் கோகுலத்தை நீங்கள் அழித்தால், குந்தியின் வேண்டுதலின் பேரில் அந்தக் கிழவர், பீஷ்ம பிதாமகன் என அனைவரும் அழைப்பவர், அனைத்து யாதவர்களுக்கும் உதவி செய்கின்றேன் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு ஓடி வந்துவிடுவார். யாரைப் பகைத்துக் கொண்டாலும் குரு வம்சத்தினரின் பகைமை நமக்குத் தேவையா? யோசியுங்கள் மன்னா!" என்று ப்ரலம்பர் கெஞ்சினார்.

இப்போது கம்சனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. உண்மையில் ஆழ்ந்த கவனத்துடன் யோசிக்கவேண்டிய ஒன்று. "ம்ம்ம்ம்ம்ம், சரி, கிழவா, உன் வார்த்தைகள் அநேகமாய்ச் சரியாகவே இருக்கின்றன சில சமயம். இப்போது நான் கோகுலத்தை அழிக்கவில்லை. நீ நிம்மதியாய்ச் செல்வாய்!" என்று கூறிவிட்டுக் கபடமாய்ச் சிரித்தான். அவன் மனதில் உள்ள எண்ணம் என்னவென்று புரியாமல் கலங்கிய உள்ளத்துடனேயே ப்ரலம்பர் அங்கிருந்து சென்றார். கம்சன் யோசனையில் ஆழ்ந்தான். நந்தனின் பிள்ளை ஒரு பயங்கரமானவனாய் இருப்பான் போல் உள்ளதே! எவ்வாறேனும் அவனை அழிக்கவேண்டும். ஆனால் அதனால் நம் பெயர் கெட்டுப் போகக் கூடாது. வெளிப்படையாகக் கோகுலத்தை அழித்தால் அதனால் அவப்பெயர் மிஞ்சுவதோடு, மக்கள் ஒரு பெரும் கலகமும் செய்வார்கள். என்ன செய்யலாம்?? ம்ம்ம்ம்ம்ம்??? யோசனையுடன் சாளரத்தின் அருகே வந்து நின்ற கம்சனின் கண்களில் யமுனைக் கரையில் பறவைகளைப் பிடித்து வியாபாரம் செய்யும், ஒரு வேடுவன் தென்பட்டான்.


அவனையே எந்தவித நோக்குமின்றிப் பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்த கம்சனுக்குத் திடீரென உபாயம் தோன்றியது. அவன் முகம் மலர்ந்தது. ஆஹா, நல்லதொரு வழி கிடைத்துவிட்டதே! தன் அந்தரங்க சேவகர்களை அழைத்து அந்தப் பறவை பிடிப்பவனைக் கூட்டிவரும்படி ஆணை இட்டான்.

Saturday, January 17, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 22 -உந்தை யாவன்!


//தாய்முலைப் பாலி லமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே 6.4 //

(பெருமாள் திருமொழி-குலசேகராழ்வார்)

தங்கள் குமாரனுக்கு நடந்தவை எல்லாம் தேவகிக்குத் தெரிய வருகின்றது. நடந்தவைகளை அறிந்த தேவகி இறைவனுக்கு ஒரு பக்கம் நன்றி கூறினாலும் இன்னொரு பக்கம் செய்வதறியாது திகைத்தாள். இப்போது குழந்தை என்ன, என்ன செய்து கொண்டிருப்பான்? என்று அவள் ஒவ்வொரு நாளும் யோசிப்பாள். ஆயிற்று, ஒரு மாதமாகி விட்டதே! தாய் முகம் பார்க்கத் தொடங்கி இருப்பானே? ஆஹா, யசோதையைக் கண்டு சிரிப்பான் அல்லவா என் கனையா? என்று யோசிப்பாள். என்ன அதிர்ஷ்டக்காரி அந்த யசோதை? பெற்றவள் ஒருத்தி இருக்க, பிள்ளை அவளிடம் வளர்கின்றதே? அதுவும் எப்படிப் பட்ட பிள்ளை?

கொண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே 6.2

யசோதை தயிர் கடைவாள்: அப்போது என் கனையாவும் தவழ்ந்து வந்து தன் விழி ஓரத்தால் அவளைப் பார்த்துக் கொண்டே நானும் கடைவேன் எனச் சொல்லுவானோ? என்று யோசித்தாள் தேவகி! ஆகா! அப்போது என் கனையாவின் முகலாவண்யம் எப்படி இருக்கும்? அவன் செவ்வாய் துடிக்குமோ? தன் சின்னஞ்சிறு கைகளை நீட்டிக் கேட்பானோ? கடைக்கண்களால் பார்த்துச் சிரிப்பானோ? கள்ளச் சிரிப்புச் சிரிப்பானோ? ஆஹா, அந்தக் கண்கள்! அவற்றின் ஒளி? கண்களே சிரிக்குமே என் கனையாவுக்கு!

வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ கேச வாகெடு வேன்கெடு வேனே 7.2

விஷமம் ததும்பும் தன் கண்களை மூடிக் கொண்டு, கருநீல நிறக் கார்மேகம் ஒன்றே குழந்தையாக மடியில் கிடப்பது போல் யசோதை மடியில் தன் சின்னஞ்சிறு விரல்களை உள்ளங்கையில் மூடியவண்ணம் கிடந்து தூங்குவானோ? எனக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கவில்லையே? என்று ஏங்கினாள் தேவகி! இப்போது எழுந்து உட்கார ஆரம்பித்திருப்பானோ? இப்போது தவழ்ந்து செல்ல ஆரம்பித்திருப்பானோ? என்றெல்லாம் யோசித்தாள் தேவகி!

710:
முந்தை நன்முறை யுன்புடை மகளிர் முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே 7.3

ஆஹா, அந்த ஆய்ப்பாடியின் அனைத்து கோபியர்களுமே பாக்கியம் செய்திருக்கின்றனரே! பிறந்து சில மாதங்களே ஆகி இருக்கும் என் கனையாவைக் கொஞ்சும் நற்பேறு பெற்றிருக்கின்றனரே! இதோ ஒரு கோபி ஒருத்தி! என் கண்ணனைத் தூக்கி முத்தமிடுகின்றாள். இதோ மற்றொருத்தி என் கண்ணனுக்கு "அப்பூச்சி" காட்டுகின்றாள். வேறொருத்தி என் கண்ணனுக்கு மயில் பீலியால் அலங்காரம் செய்கின்றாள். தேவகியின் கைகள் தன்னை அறியாமல் ஒரு மயிலிறகை எடுத்து அவள் அன்றாடம் தன் குழந்தையாக எண்ணிக் கொஞ்சிக் கொண்டிருந்த கறுப்புப் பளிங்குச் சிலையில் வைத்தது. வசுதேவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். கண்களில் பெருகும் கண்ணீரை மறைத்த வண்ணம் வந்து தேவகியை ஆறுதல் செய்ய முனைகின்றார். தேவகி இப்போது வாய்விட்டே புலம்ப ஆரம்பிக்கின்றாள். "அரசே! என் குழந்தை, என் கனையா, அவனை இதோ இப்போது எல்லாரும் தூக்கி வைத்துக் கொண்டு, என் குல விளக்கே, என் கண்மணியே, என் செல்வமே! என் ராஜாவே! என் முத்தே! என் மணியே! என் மாணிக்கமே!" என்றெல்லாம் கொஞ்சுகின்றார்கள், பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டாள் தேவகி, வசுதேவரிடம்.

வசுதேவர் "தெரிகின்றது தேவகி! நீ சற்று அமைதி காப்பாய்!" என்று அவளைத் தன் கைகளால் அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விழைகின்றார். அப்போது திடீரென தேவகிக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. "அரசே, இப்போது அந்தக் கோபியர் அனைவரும் என் கனையாவைப் பார்த்து, கண்ணே, உன் தந்தை யார்? என்று கேட்டால் என்ன சொல்லுவான்? அவனுக்குச் சொல்லத் தெரியாதே!" என்று கேட்கின்றாள். "ஆம், தேவகி, அவன் இன்னும் சிறு குழந்தைதானே, இப்போது என்ன தெரியும்?" என்று சொல்கின்றார் வசுதேவர். "இல்லை ஐயா, என் கண்ணனுக்குப் பேசத் தானே தெரியாது! அவன் தந்தை யார் என்றால் காட்டத் தெரியுமே? அவன் யாரைக் காட்டுவான்? அந்த கோபியர் அனைவரும், எங்கள் செல்வமே? உந்தை யாவன்?" என்று கேட்டால் யாரைக் காட்டுவான்?""அந்தத் தெய்வீகக் குழந்தையின் கடைக்கண்கள் அப்போது நந்தனை அன்றோ பார்க்கும்? மனம் கவரும் சிரிப்பாலும், கடைக்கண்களின் பார்வையாலும், போதாதென்று அவனுடைய செக்கச்சிவந்த பிஞ்சு விரல்கள் நந்தனை அன்றோ சுட்டும்? ஆஹா, நந்தன் பெற்ற அந்த பாக்கியத்தை நீங்கள் பெறவில்லையே ஐயா? என்று தேவகி கதற ஆரம்பிக்கின்றாள். வசுதேவர் கண்களிலும் கண்ணீர்.

Thursday, January 15, 2009

மாட்டுப் பொங்கலோ பொங்கல்! 5

மாட்டுப் பொங்கலெல்லாம் எழுதலைனு சொல்லிட்டு நேத்தோட இதை முடிக்கலாம்னு இருந்தால், காலம்பர மஞ்சள் தீற்றிக் கொள்ள வெளியே போகும்போது தெருவிலே இருந்த மாடெல்லாம் ஏகத்துக்கு முறைக்குதுங்க! ஒரு மாடு கொம்பை ஆட்டிட்டு, வாலைத் தூக்கிச் சுழற்றி அடிச்சுட்டு என்னையே பார்த்து ஒரு செறுமல் செறுமிச்சு பாருங்க, "அம்மா"னு. சரி, சரி, மத்தியானத்துக்கு மேலே எழுதிடறேன்னு ஒத்துக்கிட்டு வந்துட்டேன், அதுங்க கிட்டே. இங்கே நம்ம பழைய பூனையார் மறுபடியும் குட்டி போட்டிருக்கார் போல, அதுவேறே குறுக்கும் நெடுக்குமா ஏதோ வேலை இருக்கிறாப்போல் போயிட்டும், வந்துட்டும், பூனையை வைச்சுட்டு சகுனமாவது, ஒண்ணாவது! அதெல்லாம் விட்டாச்சு. பூனைப் பொங்கல் இல்லைங்க, அது திவா தான் கேட்டார், அவங்க வீட்டிலே பூனைக்குப் பொங்கல் எல்லாம் வைப்பாங்க போல!

இப்போ மாட்டுப் பொங்கல் பத்திப் பார்ப்போமா?? ஹிஹி, தற்செயலாய்ச் சிலப்பதிகாரத்தின் இந்தப் பாடலைப் படிச்சேனா? மாட்டுப் பொங்கல் பத்தி எழுதியே ஆகணும்னு ஒரு வெறியே வந்துடுச்சு! எங்க தெருவிலே சில பசங்க மாடுங்க பாட்டுக்குப் போயிட்டிருக்கும், மேய்ஞ்சுட்டு, அதை அடிக்கிறதும், சீண்டறதுமா இருப்பாங்க. நான் பார்த்தால் "கத்தி" சண்டை போடுவேன், நிச்சயமா! எங்க வீட்டு வேப்பமரத்திலே காக்காய் அடிக்கிறதோ, குயிலை அடிக்கிறதோ, அணிலை அடிக்கிறதோ செய்தால் அவ்வளவுதான்! உண்டு, இல்லைனு இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்! இந்த மாதிரி மாடுகளையோ, மற்ற ஜீவராசிகளையோ துன்புறுத்துவது கூடாது என்பது சிறு வயது முதலே சிறுவர்களுக்குப் பழக்கப் படுத்த வேண்டும். அதிலும் மாடுகளைத் துன்புறுத்தவே கூடாது. அவை செய்வது எத்தனை உதவிகள். காளை மாடுகள் உழவுத்தொழிலுக்கு மட்டுமில்லாமல், வண்டிகள் இழுக்கவும் பயன்படுகின்றன. சமீபத்திய லாரி ஸ்டிரைக்கின் போது அத்தியாவசியப் பண்டங்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க மாட்டு வண்டிகளே பெருமளவில் உதவின. அனைவரும் அறிந்திருக்கலாம்.

பசுமாடுகளும், எருமை மாடுகளும் பால் கொடுக்கின்றன. எருமைக் கிடாக்களும் பல்வேறு சுமை தூக்குதல், மற்ற பாரம்தூக்கும் வண்டிகளுக்கு எனப் பலவேறு வகைகளிலும் பயன்படுகின்றன. சிலர் வயலில் உழவும் எருமைக் கிடாக்களைப் பயன்படுத்துவர். இத்தகைய உதவி புரியும் மாட்டின் சாணம் சிறந்த எருவாகவும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது. இனி சிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது என்று பார்ப்போமா?

"நோவன செய்யன்மின் கொடிவன கேண்மின்
விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கில் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டு சிறந்த தன் தீம்பால்
அறந்தறா நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்"

பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால் அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்த பின்னும் தரும் பால் குறைந்த பட்சமாய் ஒரு நாளைக்கு 16,000 நபர்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்வதாய் ஓர் ஆய்வு கூறுகின்றது. ஆகையால் மாடு என்ற சொல்லுக்குப் பொருளே செல்வம் என்பது ஆகும் என்பதை நினைவு கூர்ந்து மாட்டுப் பொங்கலைக் கொண்டாடவேண்டும்.

மாட்டுப் பொங்கல் வரப் போகின்றது என்பதற்கு அத்தாட்சியாக முன்பெல்லாம் மாட்டின் கொம்புகளுக்கு பொங்கலுக்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே வர்ணம் அடிப்பார்கள். வசதி உள்ளவர்கள் கொம்பைச் சீவி, தங்கக் கொப்பி, பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி போடுவதும் உண்டு. கழுத்தில் சலங்கை மணியும் கட்டுவதுண்டு. இங்கே வர மாடெல்லாம் மாட்டுப் பொங்கலன்னிக்குக் கூட அழுக்காவே தான் இருக்கு என்பது சோகமான விஷயம். மதுரையிலே அதிகம் பசுமாடுகள் தான் பார்த்திருக்கேன். எங்கோ ஒண்ணு, இரண்டு எருமை மாடு அப்போ பார்த்தால் அதிகம். மாட்டுப் பொங்கலன்னிக்குச் சாயங்காலமா ஊரிலே இருக்கும் அனைத்து மாடுகளும், சந்தைப் பேட்டையிலேயா, சந்தையிலேயா நினைவில்லை, அங்கிருந்து கிளம்பி நாலு மாசிவீதிகளும் வரும். பார்க்கப் போவோம். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்குச் சில மாடுகள் போகும். ரேக்ளா வண்டிகள் போட்டி நடக்கும். மாசி வீதியில் போட்டி எல்லாம் போடாட்டியும், சில ரேக்ளா வண்டிகள் ஒண்ணை இன்னொண்ணு துரத்திட்டுப் போகும். இதை அங்கே மாடு விரட்டல்" என்ற பெயரில் சொல்லுவாங்க. ஜல்லிக் கட்டிற்கு அப்பா, அண்ணா, தம்பி போவாங்க. என்னை எல்லாம் அழைச்சிட்டுப் போனதில்லை. அப்புறமா சினிமாவிலே பார்த்தது தான் ஜல்லிக் கட்டு எல்லாம்.

மாமனார் வீட்டிலே முதல் பொங்கல் போது பார்த்தேன், மதுரையிலே கொண்டாடறதுக்கும் அங்கேயும் வித்தியாசம் ஒண்ணும் இல்லை. அங்கே மாடுகள் கொட்டில் நிறைய இருந்ததால் ஒரே அமர்க்களமா இருந்தது. மதுரையிலே வீட்டிலே மாடு எல்லாம் வச்சுக்க முடியாது. உழவு மாடுகள், வண்டி மாடுகள், எருமை, பசு கறவை மாடுகள்னு இருந்தன. மாமனாரோடு கூடவே ஆட்களும் சேர்ந்து வந்து சுத்தம் செய்து, மாடுங்களையும் குளத்திற்கு அழைத்துப் போய் சுத்தம் செய்து அலங்கரித்துக் கொல்லையிலே அல்லது மாட்டுக் கொட்டாயிலே பூஜை பெரிசாய் நடக்கும். சாம்பிராணி, தீபாராதனை போது வெளிச்சம் பார்த்து மாடுங்க மிரளும். பிறகு மாடுங்களை அவிழ்த்து ஒண்ணொண்ணா விரட்டி விடுவாங்க. ஊரை ஒரு சுத்து சுத்திட்டுத் தானே கொட்டிலுக்கு வந்துடும். எப்போ வரும்னு தெரியாது. அங்கே இதை "மாடு மிரட்டல்"னு சொல்லுவாங்க. நிஜமாவே மாடுங்க மிரண்டும் போகும். இம்மாதிரி ஒரு நாலைந்து பொங்கல் மாமனார் இருந்த கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி உள்ளோம். அப்புறம் எல்லாத்தையும் அங்கே இருந்து மாத்திட்டுச் சென்னை வந்ததும் தனி வீடுகளிலேயே இருந்தாலும் மாடு வச்சுக்கலை. இதைத் தவிர ஊர்கூடிப் பொங்கல் வைத்து, மாடுகளுக்குப் படைத்து, பெரிய அளவில் வழிபாடுகள் செய்வதும் உண்டு. தென் மாவட்டங்களின் கிராமங்களில் இப்போதும் அம்மாதிரியே கொண்டாடப் படுகின்றது. அப்போது மாட்டுச் சொந்தக்காரர்களும், மாட்டைப் பாதுகாப்பவர்களும் தவிர, பெண்கள் அங்கே திடலுக்குச் செல்வதில்லை என்றும் இந்த வழிபாடு முடிய இரவு மூன்று மணியாகும் என்றும், மறுநாளே ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் சொல்கின்றனர்.

பொங்கலோ பொங்கல் 4

அடுத்த நாள் தை மாதம் இரண்டாம் தேதி மாட்டுப் பொங்கல், மற்றும் கணுப்பண்டிகை. இந்தக் கணுப்பண்டிகை காலையிலேயே முடிஞ்சுடும் என்பதால் அதை முதல்லே பார்ப்போமா?? கணுப்பிடி வைப்பது என்பது பெண்கள் மட்டுமே செய்யும் ஒன்று. தங்கள் உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காகச் செய்யப் படும் ஒன்று.தங்களோடு கூடப் பிறந்தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்விலே சுகம் அடையவேண்டும் என வேண்டிக் கொண்டு செய்வது. சகோதரர்களே இல்லை என்றாலும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும், சகோதரர்கள் இருந்தாலும், இன்னும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும் செய்யலாம். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பிறந்த வீட்டுச் சீராகப் பணமோ, துணியோ கொடுப்பதுண்டு. தாய் வீடு பக்கத்திலேயோ அல்லது உள்ளூரிலேயோ இருந்தால் மதியம் சாப்பாட்டுக்கு சகோதரியை அங்கே அழைப்பதும் உண்டு.

மாட்டுப் பொங்கல் என்னும் கணுவன்று காலையில் முதல்நாள் சர்க்கரைப்பொங்கல் வைத்த பானையில் கட்டி இருக்கும் மஞ்சள் கிழங்கை எடுத்துக் கழுவி, ஸ்வாமி அலமாரியில் வைத்துவிட்டு, கை, கால் சுத்தம் செய்துகொண்டு, தானே அந்த மஞ்சள் கிழங்கை நுனியைக் கீறி விட்டுத் தன் நெற்றியிலும், கன்னத்திலும், கழுத்திலும் மூன்று முறை கீறிக் கொள்ளவேண்டும். பிறகு வீட்டில் உள்ள தங்களை விட வயதில் மூத்த பெண்மணிகளிடமும், அக்கம்பக்கத்தில் யாரானும் பெண்கள் அப்படி இருந்தால் அவர்களிடமும் கீறிக் கொள்ளலாம். முதல் நாள் செய்து மீந்திருக்கும் சர்க்கரைப் பொங்கல், மற்றும் அதற்கெனத் தயார் செய்த குழம்பு, எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் நாள் சாதத்தில்,தயிர் விட்டு, உப்பும் போட்டுப் பிசைந்து கொள்ள வேண்டும். இதை மஞ்சள் சாதம், குங்கும சாதம், தயிர்சாதம் என மூன்று வகையில் ஆக்கிக் கொள்ளவேண்டும். மஞ்சள் சாதம் மஞ்சளுக்கு வீட்டில் இருக்கும் பச்சை மஞ்சள் கிழங்கையே அரைத்துக் கொள்வது முன்பெல்லாம் வழக்கம். இப்போ யார் அம்மியிலெல்லாம் அரைக்கிறாங்க! அதனால் மஞ்சள் பொடியே கலந்து கொள்ளலாம். குங்குமம் கலந்து கொள்ளலாம். ரொம்பக் கலந்தால் அப்புறமாக் காக்காயெல்லாம் பயந்துக்கும்.

முன்பெல்லாம் நதிக்கரையில் வைப்பாங்களாம். அப்புறமா வீட்டு மொட்டை மாடியிலே வைப்பாங்க. இப்போ நதிகளே இல்லை, கரைக்கு எங்கே போறது? நம்ம வீட்டிலே மொட்டை மாடி இருக்கு. அதனால் அங்கே கணுப்பிடி வைக்கும் இடத்தைப்பெருக்கிச் சுத்தம் செய்து கோலம் போட்டு, செம்மண் இட்டுத் தயாராய் வைக்கணும். மஞ்சள் இலைகள் தான் போடணும் கணுப்பிடிக்கு. வெங்கலப் பானையில் கட்டிய மஞ்சள் கொத்தில் இலை எடுக்கிறாப் போல் இருந்தால் நல்லது. இல்லைனா வேறே இலை வைச்சுக்கணும். விலைக்கு வாங்கறவங்க இதை எல்லாம் எண்ணிப் பார்த்துட்டு மஞ்சள் கொத்து வாங்கணும். நாம விலைக்கு வாங்கற வழக்கமே இல்லை. இந்த சாதங்கள் தவிர, வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய், மஞ்சள், கரும்புத் துண்டுகள், சிலர் வீட்டில் தீப ஆராதனை காட்டும் வழக்கம் இருந்தால் அது, ஆரத்தி காட்டும் வழக்கம் இருந்தால் அதுவும் எடுத்துக் கொண்டு, ராகு காலம், எமகண்டம் இல்லாமல் பார்த்து கணுப்பிடி வைக்கணும். கணுப்பிடி வைச்சுட்டு உடனேயே குளிக்கணும்னு சொல்லுவாங்க. அன்று சமையலில் வித, விதமான சித்திரான்னங்கள் செய்வாங்க. சில வீடுகளில் துவையல், அப்பளம், பொடி இடம் பெறும். எங்க வீட்டிலே அது தான்! :(


இரவு சிலர் சாப்பிட மாட்டாங்க. அவங்க அவங்க வீட்டு வழக்கம் அது. "கார்த்திகை எண்ணெயும், கணுப்பழையதும் கூடப் பிறந்தவங்களுக்கு" என்று பெரியவங்க சொல்லுவாங்க. கார்த்திகைப் பண்டிகை விளக்கு ஏற்றுவதும் தென் மாவட்டங்களில் குறிப்பாய் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கூடப் பிறந்தவங்களுக்காக என்று சொல்லுவதுண்டு. கார்த்திகை அன்று பிறந்த வீட்டிலே இருந்து எண்ணெய், விளக்கு, திரிநூல், பொரி என்று எல்லாமும் சீர் வருவதுண்டு. அது போல கணுவும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காகக் கொண்டாடப் படும் பண்டிகை. அப்பாடா! ஒரு வழியாப் பொங்கல் முடிஞ்சது! என்ன மாட்டுப் பொங்கலா?? வீட்டிலே மாடு இருந்தப்போ கொண்டாடினோம்.(ஹிஹிஹி, அது கூட நான் 2,3 முறை தான் மாட்டோட பொங்கலுக்கு இருந்தேன்) இப்போ நோ மாடு! அதனாலே எங்க வீட்டிலே நோ மாட்டுப்பொங்கல்!

Wednesday, January 14, 2009

பொங்கலோ பொங்கல் ! 3

எல்லாரும் பொங்கல் கொண்டாடி முடிச்சிருப்பீங்க, சிலர் கொண்டாடிட்டு இருப்பீங்கனு நம்பறேன். பொங்கல் கொண்டாடுவது எப்போவுமே சிறப்பான ஒரு பண்டிகையாக இருந்து வருகிறது. உழவுத் தொழிலைச் சிறப்பித்து மட்டுமில்லாமல் அதற்கு உதவும் இயற்கை வளங்களையும் கொண்டாடும் ஒரு பண்டிகை இது. பொங்கலுக்கு எப்போவுமே சில வீடுகளில் புதுப் பானை வாங்குவாங்க. இன்னும் சிலர் இருக்கும் பானையையே சுத்தம் செய்து அலங்கரித்து வைப்பார்கள். மண்பானையிலும் பொங்கல் வைப்பது வழக்கமாய் இன்றளவும் இருந்து வருகின்றது. பொதுவாக அடுப்பு மூட்டி சூரியனைப் பார்த்த வண்ணமே பெரும்பாலோர் பொங்கல் வைக்கின்றனர். எங்க வீட்டில் பூஜை மட்டும் வீட்டுக் கிணற்றடியிலோ அல்லது முற்றம் இருந்தால் முற்றத்திலோ தான்.
சென்னையிலே இருக்கும்போதெல்லாம் அநேகமாய்ப் பொங்கலுக்குக் கிராமத்துக்கு மாமியார் வீட்டிற்கே செல்வது வழக்கம். அங்கே விறகு அடுப்புத் தான் என்பதாலும் அதிலே தான் பொங்கல் வைக்கவேண்டும் என்பதாலும் நகரத்துக்கு வந்தப்புறமும், எரிவாயு அடுப்பு இருந்தாலும், பொங்கலுக்கு விறகு அடுப்பு மூட்டி அதில் தான் வைக்கிறது வழக்கம்னு அப்படித் தான் செய்துட்டு இருந்தோம். அப்புறம் கொஞ்ச நாட்கள் கரி அடுப்பிலே பொங்கல் வைத்துக் கொண்டிருந்தோம். அதுக்கு அப்புறம் இன்னும் முன்னேற்றம் உண்டாகி பம்ப் ஸ்டவிலே பொங்கல் வைத்தோம். ஒரு கட்டத்தில் இந்த எதுவுமே எனக்கு ஒத்துக்காது என்ற சூழ்நிலை உருவானதும், வேறே வழியில்லாமல் எரிவாயு அடுப்பிலே பொங்கல் வைக்கின்றோம். ஆனால் இப்போவும் வெங்கலப் பானை தான். ஒரு சிலர் குக்கரிலேயே பொங்கல் வைக்கின்றார்கள். என்ன இருந்தாலும் அது அவ்வளவு ருசியாய் இருக்கிறதில்லை. (நமக்குத் தான் நாக்கு நீளம் ஆச்சே, இறங்காது!) ஆகவே வெண்கலப் பானையிலே தான் பொங்கல் இந்த வருஷமும்.

பொங்கல் வைக்க நேரமும் பார்க்கிறதுண்டு. எங்க வீடுகளிலேயும், உறவினர் வீடுகளிலேயும், தை மாதம் பிறக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு அந்த நேரமே பொங்கல் வைத்து வருகின்றோம். சில சமயம் அது இரவு 9-00 மணிக்குக் கூட வரும். அன்று பூராவும் சாப்பிடாமல் இருக்கும்படி ஆயிடும். இந்த வருஷம் நல்லவேளையாக் காலை 8--30க்கு அப்புறம் தை மாதம் பிறந்துவிடுவதால், 9-00 மணிக்குப் பின்னர் பொங்கல் வைக்க நல்லவேளை என்று சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே சமையலை முடிச்சு வைத்துவிட்டுப் பின்னர் பொங்கல் வைத்து, சூரிய பூஜை செய்து முடித்துச் சாப்பிட 12-00 மணிக்கு மேலே ஆகி விட்டது.

பொங்கல் பானையை நல்லாத் தேய்த்துச் சுத்தம் செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி, ஸ்வாமி அலமாரி இருந்தால் அதுக்கு முன்னால் கோலம் போட்டுப் பானையை வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, இஞ்சிக் கொத்து வழக்கம் உண்டானால் அதுவும் கட்டிட்டு, பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து "பொங்கலோ பொங்கல்" சொல்லச் சொல்லிவிட்டு எல்லார் கையாலேயும் பாலைப் பொங்கல் பானைக்குள் விடச் சொல்லவேண்டும். சின்ன வயசில் போட்டி போட்டுக் கொண்டு தெருவுக்கே கேட்கிறாப் போல் பொங்கலோ பொங்கல் என்று நானும், என் தம்பியும் கத்துவோம். வழக்கம்போல் தம்பிக்குப் பாராட்டும், எனக்குத் திட்டும் பரிசாய்க் கிடைக்கும். கவலையே பட்டதில்லை. அது ஒரு காலம். ம்ம்ம்ம்ம் :( பின்னர் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி, வறுத்து வைத்த பாசிப் பருப்பை அதில் போட்டுப் பருப்புக் கரைந்ததும், வறுத்த பச்சரிசியை நன்றாய்க் களைந்து அதிலேயே போடவேண்டும். எங்க அம்மா வீடுகளிலே பொங்கல் கரைய விட தண்ணீர் அதிகம் சேர்ப்பது இல்லை. பாலிலேயே கரைய விடுவோம். அவரவர் வசதிக்கேற்ற மாதிரிச் செய்து கொள்ளலாம். ஒரு ஆழாக்கு (200 கிராம் அரிசி என்றால் குறைந்தது 50கிராமிலிருந்து 100 கிராம் பருப்பு ஆகும். ருசியைப் பொறுத்து) அதற்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். பத்தலைனா தண்ணீர் சேர்த்துக்கலாம். நான் ஒரு மு.ஜா. மு. அக்காவாச்சே. ஒரு வாரம் முன்னாலே இருந்தே அரை கப் பாலாகச் சேர்த்து, சேர்த்து எடுத்துக் காய்ச்சி வச்சிருந்தேன். முதலில் புதுப்பாலைக் கொஞ்சம் விட்டுப் பருப்பைக் கரைய விட்ட பின்னர் காய்ச்சி வச்சிருந்த பாலையும் சேர்த்துக் கொண்டேன்.

வெல்லம் அவங்க அவங்க ருசிக்கு ஏற்றாற்போல் சேர்த்துக் கொள்ளவும். எப்படியும் அரை கிலோ வெல்லத்துக்கு மேல் வேண்டும் மேலே சொன்ன அளவு அரிசி, பருப்புக்கு. வெல்லம் சேர்ந்து வெல்ல வாசனை போகப்பொங்கல் கொதித்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய் பல், பல்லாய்க் கீறிப் போட்டு வறுத்துப்பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய் வாசனைக்கு போடவும். வீட்டு முற்றம், கிணற்றடி, அடுக்குமாடிக் குடியிருப்பென்றால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் சுத்தம் செய்து சூரியக் கோலம் போடவும். சிலர் வீட்டில் சந்திரனும் போடுவதுண்டு. சூரியன் வடக்கே நகருவதால் சூரியக் கோலமும் கொஞ்சம் வடக்கே போடணும்னு சொல்லுவாங்க. பின்னர் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைப்பழம், கரும்பு, அரிசி, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, விளக்கு, மஞ்சள் பொடி, அட்சதை(மஞ்சள் தூளில் கலந்த அரிசி அட்சதை), தட்டு, கிண்ணங்கள், பசும்பால், தீப ஆராதனைத் தட்டுகள்,பூக்கள், மாலை கிடைத்தால் மாலை போன்றவற்றோடு உட்கார்ந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்து முடித்துவிட்டுப் பின்னர் சூரிய வழிபாடு செய்யவேண்டும். கற்பூர தீப ஆராதனைக்கு முன்னர் பொங்கலை செய்த பானையோடு கொண்டு வைத்து, கூடவே சாதம், பருப்பு, காய்வகைகள் போன்றவையும் வைத்து சூரியனுக்கு நிவேதனம் செய்யவேண்டும். பின்னர் கற்பூர தீபாராதனை செய்து விட்டுப் பின்னர் வீட்டில் ஸ்வாமி அலமாரியில் உள்ள தினமும் நிவேதனம் செய்யும் அனைவருக்கும் செய்துவிட்டுப் பின்னர் காக்கைக்குப் பொங்கல், சாதம், பருப்பு கொடுத்துவிட்டுப் பின்னர் விநியோகம் செய்ய வேண்டிய உறவினர், நண்பர்கள் இருந்தால் கொடுத்துவிட்டுச் சாப்பிடலாம்.

எல்லாத்தையும் விட முக்கியமானது இன்று பொங்கல் செய்யும் பானையையோ, அல்லது சாதம் வைக்கும் பானையையோ காலி செய்து இன்றே தேய்த்துச் சுத்தம் செய்யக் கூடாது என்பது ஐதீகம். பானை இன்று நிறைந்து இருந்தால் வருடம் பூராவும் இதே போல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை! நாளை மாட்டுப் பொங்கல், கனுப் பண்டிகை இரண்டும் சேர்ந்து வருகின்றது. அது பற்றி நாளை பார்ப்போம்.

Tuesday, January 13, 2009

பொங்கலோ பொங்கல் ! 2

கிருஷ்ணாவதாரத்தில் சூரிய வழிபாடு நதிக்கரையில் செய்யப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதற்கும் முன்னரே ராமாயண காலத்தில் ஸ்ரீராமர், ராவணனை வெல்வதற்காக அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாய் வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும். தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும் நாளே தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா? அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் கூறலாம்.

போகி அன்று பழையன கழித்து, புதியன வாங்குவதையும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடுகின்றோம். இந்தப் பொருட்களை எரிக்கும்போது சிறு குழந்தைகள் "போகி மேளம்" என்றதொரு சிறு கருவியால் கொட்டி ஆடிப் பாடிக் குதிப்பார்கள். எங்க தெருவிலே இன்னிக்குக் காலை 3 மணியிலிருந்தே போகி கொட்ட ஆரம்பிச்சு, ஒருவழியா ஆறு மணியோட முடிஞ்சது. இதற்கான காரணம் என்ன என்று சொல்லுவதென்றால் அதற்கும் கண்ணனே வந்துடறான் முந்திக் கொண்டு. இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு. மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது இம்மாதிரி தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்தபோது கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை நியாயமாய் கோவர்த்தனகிரிக்கும், அவற்றை எல்லாம் படைத்துக் காத்து ரட்சிக்கும் வாசுதேவன் ஆகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், ஆகையால் அவனின் அம்சம் ஆன சூரியநாராயணனுக்கு இந்த வழிபாட்டைச் செய்யும்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

ஆத்திரம் அடைந்த இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் இதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நேராமல் பாதுகாத்தார். (இது பற்றி பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்). இந்திரன் வெட்கம் கொண்டு ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனை சமாதானம் செய்தாராம். காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாயும் தெரிய வருகின்றது.

இனி பொங்கல் பற்றிய விபரங்களை நாளை பார்ப்போம்!

Monday, January 12, 2009

இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!

நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண் விழித்து எழுந்திருக்க வேண்டுமென்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது!
எழுங்கள்! எழுங்கள்! நீளிரவு கழிந்தது! பொழுது புலர்ந்தது! கடல் புரண்டு வருகின்றது! அதன் உத்வேகத்தைத் தடுக்க எதனாலும் ஆகாது!

இளைஞர்களே விழித்து எழுங்கள்!

(இன்று விவேகானந்தர் பிறந்த நாள்!)

Sunday, January 11, 2009

பொங்கலோ பொங்கல் 1

தைப்பொங்கலுக்கும் கிருஷ்ணருக்கும் சம்பந்தம் உண்டா என்றால் உண்டு. கிருஷ்ணரின் மகன் ஆன சாம்பன் என்பவன் துர்வாச மஹரிஷி வந்தபோது அவரைக் கேலி பேசியதால் அவன் உடல் நலம் கெட்டுப் போய் தோல் நோயால் பீடிக்கப் பட சாபம் கிடைத்தது. அந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் கிருஷ்ணரும், துர்வாசரும், அவனை சூரியனைப் பூஜிக்கச் சொல்கின்றனர். சந்திரபாகா நதிக்கரையில் சூரியனைப் பூஜிக்கின்றான் சாம்பன் அந்த நாள் தான் மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது. முனிவர்களின் பத்தினிகள் அங்கே நதிக்கரையில் ஒன்று கூடி சூரிய பகவானை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தார்கள். சாபம் நீங்க நதிக்கரைக்குச் சென்ற சாம்பன் தானும் அதுபோல் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்கின்றான். அதுவே மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது.

இந்தப் பண்டிகை இந்தியா பூராவும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகின்றது. அஸ்ஸாம்,மணிப்பூர் போன்ற இடங்களில் "போகாலி பிகு" என்ற பெயரில் இந்த விழா அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் "லோகிரி" என்று அழைக்கப் படுகின்றது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் "மகர சங்கராந்தி" என்ற பெயரில் அழைக்கப் படுவதுடன் அன்று எள்ளுடன் சேர்த்த இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பஞ்சாப், ஹரியானாவில் சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடுவார்கள். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் மார்கழிமாதம் முழுதும் வீட்டில் கோலம் போடும்போது சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவை மொத்தத்தையும் சேர்த்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையாரை வழிபட்டுப் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடுவார்கள் எனத் தெரிய வருகின்றது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சங்கராந்தி அன்று புண்ணிய கால ஸ்நானம் என்னும் வழிபாடு முக்கியமாய்க் கருதப் படுகின்றது. அன்று கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவதைச் சிறப்பாய்க் கருதுகின்றனர். நம் மாட்டுப் பொங்கல் போன்று அங்கேயும் கோபூஜை செய்வதுண்டு. அவ்வளவு ஏன்?? அமெரிக்கா என்ற பொதுவான பெயரில் அழைக்கப் படும் யு.எஸ்.ஸிலும் நவம்பர் மாதம் அறுவடை முடியும் நேரம், அந்த வருஷத்து விளையும் காய், கனிகளை வைத்து "Thanks Giving Day" என்று கொண்டாடுகின்றனர்.

Saturday, January 10, 2009

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி!

திருக்கைலை மலையே லிங்க வடிவாக வழிபடப் படுகின்றது. மேலும் திருவண்ணாமலையும் அக்கினி ஸ்வரூபமாய் லிங்க வடிவிலே இருப்பதாயும் கேள்விப் படுகின்றோம். மேலும்
"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே"

என்று சொல்லுகின்றார் மாணிக்கவாசகர். இங்கே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒரு பெரும் சோதி ரூபமாய் நின்றார் அவர். அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது. மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் வடிவமே லிங்கம் ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே இரண்டிரண்டாய் இருப்பதை அறிவோம் அல்லவா?? பகல்-இரவு, ஒளி-இருட்டு, இன்பம்-துன்பம் என்பது போன்ற இருவகை நிலைகள் இருக்கின்றன அல்லவா?? இதைத் தான் மாயை என்று சொல்கின்றனர். இந்த இருமை வகையான மாயையில் இருந்து நாம் விடுபட்டு இவற்றை எல்லாம் கடந்த நிலையையே லிங்க ஸ்வரூபம் நமக்கு உணர்த்துகின்றது.

ஆன்மீகப் பெரியோர் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்று இது. ஒரு சமயம் விவேகானந்தர் கலந்து கொண்ட ஒரு சமய வரலாற்று மகாநாட்டில் ஒரு ஜெர்மானியத் தத்துவப் பேராசிரியரால் லிங்க வழிபாடு, பாலுணர்வோடு தொடர்பு படுத்திப் பேசப் பட்டது. அப்போது அந்தப் பேரவையில் இருந்த ஸ்வாமி விவேகானந்தர் அதே மேடையில் அதை ஆணித்தரமாய் மறுத்ததோடு அவற்றுக்கு எடுத்துக்காட்டாய் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி எடுத்துரைத்து மறுத்தார். ஆகமவிதிகளின் படி ஆவுடையாரின் வடிவமானது, பத்மபீடம் அல்லது சமவடிவிலான நாற்கோணமாகிய பத்திரபீடம் ஆகும் எனவும் எடுத்துக் காட்டினார். மேலும் பழைய காலங்களிலேயே லிங்க வழிபாடு இருந்திருப்பதோடு அப்போதெல்லாம் பீடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் விவேகானந்தர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்திலும், சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் பீடமற்ற லிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகின்றது.

லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத் தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும். திருமூலர் சொன்னபடி இவற்றின் உட்பொருளை அறிதல் மிகக் கடினம்.

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே. 1712

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 1752

நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப் பட்ட இந்த லிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புத தத்துவமாகும். தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில் சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பேராற்றல் படைத்த இந்த லிங்கத்தின் சக்தி அளப்பரியது என அறிவியல் வல்லுநர்களும் கூறுவதாயும் தெரியவருகின்றது. அமெரிக்கக் கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத் துறை திறனாய்வாளர் John Stephen என்பவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAM என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருப்பதாயும் தெரியவருகின்றது.

நம்நாட்டில் மட்டுமில்லாமல் அநேக உலக நாடுகளிலும் அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. எல்லையற்று விரிந்து, பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின் ஆதிவடிவம் என்று சொன்னாலும் மிகையில்லை. குறிப்பிட்டதொரு சமயத்துக்கும் சொந்தம் எனக் கூறமுடியாது. தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் வைணவத்திருத்தலங்களிலே கூட சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள் எனவும் தெரிய வருகின்றது. அரியலூர், காரமடை, மொண்டிப்பாளையும், திருமருகல் போன்ற தலங்களில் கூம்பு வடிவிலும், செவ்வக வடிவிலும் லிங்கங்கள் உள்ளன எனத் தமிழ்த்தாத்தா குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயிலில் செவ்வக வடிவில் லிங்கம் உள்ளதாயும் தெரியவருகின்றது.

மாசிமாதத்தில் அந்தக் கோயிலில் நடக்கும் பந்தசேவையின் போது ஏற்றப்படும் தீப்பந்தம் வட்ட வடிவமாய் இருப்பதாயும், அது குண்டலினி சக்தியின் குறியீடு எனவும் சொல்கின்றனர். நம் ஆழ் மனதில் உள்ள குண்டலினி சக்தியையே லிங்கமாய் உருவப் படுத்தி வழிபட்டிருக்கலாம் சித்தர்களால் என்பதும் ஒரு தகவல். மேலும் லிங்க வடிவு நெருப்போடும் தொடர்பு கொண்டதாய்ச் சொல்கின்றனர். ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் உச்சத்தில் இறைத் தன்மையை லிங்க வடிவில் உணர்ந்து வழிபட்டிருக்கலாம் என்பதும் ஓர் ஆய்வின் மூலம் தெரிய வருகின்றது. நெருப்பு ஆற்றலைக் கொடுக்கும். அது போல் மனிதனின் உள் உணர்வுக்கும் நெருப்பின் தொடர்பு என்பது குண்டலினியை எழுப்புவதன் மூலம் ஏற்படும் அல்லவா? ஆற்றலைக் குறிக்கக் கூடிய ஒரு சக்தியே லிங்கம் என்பது சமயச் சான்றோர்களின் கருத்து.இறைவனை அறியாமையை இருள் என்றும் அவனை அறிதலுக்கு ஒளி பெற்றான் என்றும் சொல்லுவதுண்டுஅல்லவா? அத்தகைய பேராற்றல் படைத்த ஒளிவடிவே லிங்கம் ஆகும். இதைத் தம் சுய அனுபவத்தில் கண்டே வள்ளலார் அருட்பெருஞ்சோதி, தனிப்பெரும் கருணை என்று விளக்கியதோடு அல்லாமல் சமரச சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தினார். இன்றைக்கும் வடலூரில் ஜோதி வழிபாடு என்பது நடந்து வருகின்றது என்பதையும் அறிவோம். லிங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பிரகாசம், ஒளி வீசுவது என்ற பொருளும், வடமொழிச் சொல்லுக்கு சூக்ஷ்மமான தேகம் என்றும் பொருள் உண்டு. ஆகவே தன்னுள்ளிருந்து ஒளி வீசி சூக்ஷுமமாய் இருக்கும் ஒன்றே லிங்கம் என்று கொள்ளவேண்டும்.

Friday, January 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பூதனை மடிந்தாள் பகுதி 21

பூதனை யசோதையைப் பார்த்து அவளுடைய தெள்ளத் தெளிவான முகத்தையும், அன்பான இனிய மொழிகளையும், உபசரிப்பையும் பார்த்து வியந்தாள். அவள் சேலையின் முந்தானையில் ஒளிந்து கொண்டு அவளை எட்டிப் பார்த்துச் சிரிப்பது யார்?? ஆஹா, இந்தக் குழந்தையா கம்சன் சொன்னது? ஆம், இவனாய்த் தானிருக்கும். இவனுடைய இந்த வான் நீல நிறமே சொல்லுகின்றதே இவன் தான் அந்தக் குழந்தை என. ம்ம்ம்ம்., அந்தக் குழந்தையின் அருகே ரோகிணியின் தலை மயிரைப்பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருப்பது, ம்ம்ம்ம்?? ரோகிணியின் மகனோ?? ஆம், அப்படித் தான் இருக்கவேண்டும். பூதனை ரோகிணியை நன்கு அறிவாள். இந்தப் பெரிய பையன் ரோகிணியின் குமாரனாய் இருக்கவேண்டும்.

பூதனை பார்த்துக் கொண்டே இருக்கையில் அந்த நீலமேக வண்ணன், தன் தாயிடம் பால் குடித்து முடித்துவிட்டு, அவள் சேலைத்தலைப்பில் ஒளிந்திருந்த தன் முகத்தை வெளியே கொண்டு வந்தான். திடீரென எழுந்துப் பக்கத்தில் இருந்த ஒரு சிறுவனிடமிருந்த பால் கிண்ணத்தைப் பிடுங்கி, அந்தப் பாலையும் குடித்தான், நீலவண்ணக் கண்ணன். பின்னர் சிரித்துக் கொண்டே விளையாட்டாய் அந்தக் கிண்ணத்தையும் தூக்கி எறிந்தான். பூதனை அந்தக் கிருஷ்ணன் முகத்தையே பார்த்தாள். நீல நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, சுருண்ட கூந்தல் நெற்றியில் இருந்து தொங்கிக் குழல்கற்றைகள் முகத்தையே மறைக்க, கண்கள் இரண்டும் விஷமத்தனத்தை எடுத்துக் காட்ட, முகம் முழுதும் விஷமத்தனமான சிரிப்போடு விளையாடும் அந்தக் குழந்தையைப் பார்த்தாலே எடுத்துக் கொஞ்சிக் கட்டி அணைக்கவேண்டும் போல் தாபம் மேலிட்டது பூதனைக்கு.

ஆனால் இந்தக் குழந்தையைத் தான் அவள் கொல்லவேண்டும். அதுதான் அவளுக்கு இடப்பட்டிருக்கும் வேலை. பேசாமல் வேலையையே விட்டுடலாமா என்று கூட எண்ணினாள். இந்தக் குழந்தையைக் கொல்லுவதை விடக் கம்சன் கையால் அவள் இறந்துவிடலாமோ என்று எண்ணினாள். அவள் மட்டும் இறந்தால் பரவாயில்லை, அவள் கணவன் ப்ரத்யோதாவும் இறக்க நேரிடும். பின்னர் அவளுடைய எட்டுக் குழந்தைகளின் கதி என்னாவது? கம்சனின் கடுங்கோபம் அவளுடைய மொத்தக் குடும்பத்தையும், குலத்தையும் பாதிக்குமே. ம்ம்ம்ம்., இந்தக் குழந்தையைக் கொல்லுவதுதான் தன்னுடைய கடைசிக் கடமையாக வைத்துக் கொள்ளவேண்டும். பூதனை அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். குழந்தை அவள் பார்வையால் ஈர்க்கப் பட்டு அவளைப் பார்க்க பூதனை குழந்தையைக் கவரத் தன் கைகளால் தட்டி, வாயால் சத்தம் கொடுத்துக் குழந்தையைக் கூப்பிட்டாள் தன் பக்கம். குழந்தையும் அவளைப் பார்த்து மிக மிக மோகனமாய்ச் சிரித்தது. ஒரு கணம், ஒரே கணம் தன்னை மறந்த பூதனை பின்னர் நிதானத்துக்கு வந்தாள், தன்னிரு கைகளையும் நீட்டிக் குழந்தையைக் கூப்பிட, அவனும் வந்து அவள் கைகளில் அடைக்கலமானான்.

குழந்தையைக் கைகளில் ஏந்திய பூதனைக்குத் தன்னை அறியாமல் அந்தக் குழந்தைக்கு அமுதூட்டத் தோன்றியது. அப்போது அவள் நினைவில் வந்தது, யமுனையில் குளித்ததும், ஒருவருக்கும் தெரியாமல் தன் மார்பில் விஷம், கொடிய விஷத்தைத் தடவிக் கொண்டது. இம்மாதிரிக் கொடிய விஷத்தை மார்பில் தடவிக் கொண்டு சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவது போல் பல குழந்தைகளைத் தான் இத்தனை நாட்களாய்க் கொன்று வந்திருப்பதும், இப்போது கம்சனின் ஆணை இந்தக் குழந்தையையும் இம்மாதிரிக் கொல்லுவது என்பதே என்பது நினைவில் வர அவள் மனதில் போராட்டம். என்றாலும் அதையும் மீறித் தாய்மை உணர்வும், குழந்தையின் அழகும், இத்தனன அழகான குழந்தைக்குத் தன்னிடம் உள்ள எதைத் தான் தரக் கூடாது என்ற உணர்வும் மேலோங்கியது. குழந்தை அவள் கைகளில் மீண்டும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன் வயமிழந்த பூதனை தன்னை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.

திடீரென ஏதோ குழப்பம், கூச்சல், யாரோ சத்தம் போடுகின்றார்கள். பூதனை, பூதனை, பூதனை வந்துவிட்டாளாமே! திடுதிடுவென யாரோ ஓடிவரும் சத்தம் கேட்கின்றது. ஆண்கள் யாவரும் என்னவெனப் பார்க்க, மதுரா சென்றிருந்த நந்தனும், அவனுடன் சென்ற ஆட்களும் ஓடி வந்ததைக் கண்டனர். கூச்சல் போட்டுக் கொண்டு வந்தார்கள் அனைவரும். இங்கே பூதனைக்கோ இவை எதுவுமே தெரியவில்லை. ஆழ்ந்த, மிக ஆழ்ந்த, மிக மிக ஆழ்ந்ததொரு நிலையில் இருந்தாள் அவள். நந்தன் யசோதையைப் பார்த்து, "பூதனை வந்தாளாமே இங்கே? எங்கே அவள்?" என்று கேட்க, யசோதைக்கு அப்போது தான் புரிந்தது, மதுராவிலிருந்து பிரார்த்தனை நிறைவேற்றப் போவதாய்ச் சொல்லிக் கொண்டு வந்தவள் பூதனை என. ஆஹா, என் கனையா, எனக் கதறிக் கொண்டே பக்கத்தில் பார்த்தாள். பூதனை கையிலிருந்து குழந்தையைப் பிடுங்க யத்தனித்தாள். அதற்குள்ளாகப் பூதனை மெதுவாய்க் கீழே விழுந்தாள். கண்கள் அகலமாய்த் திறந்து கிருஷ்ணனையே பார்த்திருக்க, அவள் கைகள் கண்ணனை மீண்டும் மார்போடு சேர்த்து அணைக்க முயலக் கீழே விழுந்த பூதனையின் முகத்தில் விவரிக்க ஒண்ணா நிம்மதியும், தாய்மை உணர்வும், அதனால் ஏற்பட்டதொரு விகசிப்பும் படர்ந்திருந்தது.பதற்றத்துடன் யசோதை கிருஷ்ணனை அவளிடமிருந்து பிடுங்கித் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். பூதனை வந்திருக்கும் செய்தியை அறிந்த அனைவரும் அவளைக் கொல்ல வேண்டும், என்ற எண்ணத்தோடு ஓடிவர, யசோதை அவர்கள் அனைவரையும் தடுத்தாள். அவளே இறந்துவிட்டாள். என்று சொன்னாள் யசோதை, அதைச் செய்ததும் என்னுடைய கனையா தான். இவனாலேயே அவள் இறந்தாள் என்று சொல்லிவிட்டுத் தன் குழந்தையை மீண்டும் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் யசோதை. யசோதை நினைத்தாள்:காணக் கிடைக்காத பொக்கிஷம் இவன், என் குழந்தை, இவன் தான் எனக்கு எல்லாமே!

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

Wednesday, January 07, 2009

வைகுந்தத்துக்கு வரத் தயாராகுங்கள்!


மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியைத் தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லி வருகின்றோம். உண்மையில் ஏகாதசி ஏற்பட்ட கதையைப் பார்த்தோமானால் முரன் என்ற அசுரனை வதம் செய்யத் திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். திருமால் முரனோடு செய்த போர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க, களைப்படைந்து பதரிகாசிரமத்தில் ஓய்வெடுத்துக் கொள்ள ஒரு குகையில் போய் தங்கினார். ஆனால் முரன் விடாமல் திருமாலை வம்புக்கு இழுக்க, அவரின் சக்தியை ஒரு பெண் உருவாக்கி அனுப்பி வைத்தார் திருமால். அந்தச் சக்தியானவள் தோன்றும்போதே பெரும் ஓலம் இட்டுக் கொண்டு வந்தாள். அந்த ஓலத்திலேயே முரன் அழிந்து சாம்பலாகிவிட, பின்னர் துயில் நீங்கி எழுந்த திருமால் சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு இந்த சக்தியை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவியை அளிப்பேன் என வரமும் அளிக்கின்றார். இந்த முதல் ஏகாதசி பிறந்தது மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் ஆகும். இந்த ஆதி ஏகாதசியையே அனைவரும் வைகுண்ட ஏகாதசியாய்க் கொண்டு உபவாசம் இருந்து வந்தனர்.

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் நாள் எனப் பொருள் வரும். இங்கே இந்தப் பதினொன்றும் எதைக் குறிக்கின்றது என்றால் நம் உடலில் உள்ள ஞான இந்திரியங்கள் ஐந்து, கர்ம இந்திரியங்கள் ஐந்து இவற்றை இயக்கும் மனம் ஆகிய அனைத்தும் சேர்ந்து பதினொன்று ஆகின்றது. இவை பதினொன்றும் ஆண்டவனுடன் ஐக்கியப் படுத்தித் தியானம் இருப்பதையே உபவாசம்= அருகே இருப்பது, இறைவனுடன் உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றி இருப்பது என்பது ஆகும். ஆனால் தற்காலங்களில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இதற்குக் காரணம் இந்த நாளில் நம்மாழ்வார் வைகுண்டப் பதவியை அடைந்தார் என்பதே ஆகும். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் வைகுந்தப் பயணத்தைக் குறித்தே அன்று அனைவரும் வைகுந்த வாசல் என்னும் குறிப்பிட்ட வாயிலின் வழியே இறைவனுடன் நுழைய முட்டி, மோதுகின்றனர். வேதப் பயிற்சி எடுக்கும் காலத்தை “அத்யயன காலம்” என்றும் ஓய்வு எடுக்கும் “அநத்யயன காலம்” என்றும் சொல்லப் படுகின்றது. இதை ஒட்டியே ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னால் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி வைகுண்ட ஏகாதசி அன்று வடமொழியில் வேதங்களைச் செவி மடுத்துப் பரமபத வாயில் திறப்பு விழா நடத்தி வந்ததாய் ஒரு கூற்று இருந்து வருகின்றது.
நாளடைவில் அந்த வழக்கம் நலிந்து போக திருமங்கை மன்னன் காலத்தில் நம்மாழ்வாரையும் சிறப்பிக்கும் வண்ணம் நம்மாழ்வார் வைகுண்ட பதம் எய்திய வளர்பிறை மார்கழி ஏகாதசியிலே திருமுறைகளோடு சேர்த்து ஆழ்வார்களின் திருமொழியான திவ்யப் பிரபந்தமும் படிக்கப் பட்டு, “அரையர் சேவை” நடந்து வந்ததாயும், அந்தச் சமயம் நம்மாழ்வார் அவதரித்த நெல்லை மாவட்டத்து ஆழ்வார் திருநகரியில் இருந்து நம்மாழ்வாரின் விக்கிரஹம் கொண்டுவரப்பட்டு அரையர் சேவை நடந்து வந்ததாயும் ஒவ்வொரு வருடமும் நம்மாழ்வாரை ஸ்ரீரங்கத்து இறைவனே நேரில் சென்று வரவேற்று, ஆழ்வார் திருநகரிக்குத் திருப்பி அனுப்பி வந்ததாயும் சொல்கின்றனர். பின்னர் அதுவும் வழக்கொழிந்து போக, அவருக்குப் பின்னர் வந்த நாதமுனிகளின் பேரன் ஆன ஆளவந்தார் காலத்தில் அவரின் ஐந்து சிஷ்யர்களில் ஒப்பற்ற சிஷ்யரும் வைணவத்திற்குப் புத்துயிர் ஊட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீராமானுஜரோடு இணைந்து ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த “அத்யயன” உற்சவத்தை மீண்டும் முதன்மைப் படுத்தினர். திருமங்கை ஆழ்வாரை நினைவுகூரும் வண்ணம் அவருடைய திருநெடுந்தாண்டகம் முதன்மைப் படுத்தப் பட்டது. தற்சமயம் ஆழ்வார் திருநகரியில் இருந்து நம்மாழ்வார் வருவதில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்திலேயே விக்கிரஹங்கள் செய்து நம்மாழ்வாருக்கு வைகுண்டப் பதவி கொடுத்துக் கெளரவிக்கும் விழாவும், அதை ஒட்டிய அரையர் சேவையும், விமரிசையாக நடை பெறுகின்றது. அப்போது முதலில் பாடப் படும் திருநெடுந்தாண்டகம் தொடங்கிப் பத்து நாட்கள் “பகல் பத்து” என்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாட்கள் “இராப்பத்து” எனவும் சொல்லப் படுகின்றது. இந்தப் பகல் பத்து, இராப்பத்து இரண்டுக்கும் இடைப்பட்ட நாளே வைகுண்ட ஏகாதசியாக வருகின்றது. வைகுண்ட ஏகாதசி தொடங்கிப் பத்து நாட்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓதிப் பின்னர் இறுதி நாளில் நம்மாழ்வாருக்குப் பரமபதம் கொடுக்கும் காட்சியை நிகழ்த்திக் காட்டுகின்றனர். இதுவே வைணவக் கோயில்களின் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகும்.

பொதுவாய் வைணவக் கோயில்களிலேயே ஏகாதசிச் சிறப்பு எனச் சொல்லப் பட்டாலும், பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றிய ஹாலாஹால விஷத்தை ஈசன் உண்டதும் இந்த ஏகாதசி தினத்தில் தான் என்பதால் சிவன் கோயில்களிலும் ஏகாதசி விசேஷம் தான். வைகுந்தத்தில் ஏழு பிரகாரங்கள் என்று சொல்லப் படுகின்றது. அது போலவே ஸ்ரீரங்கத்திலும் ஏழு பிரகாரங்கள் என்று சொல்கின்றனர். பல முறைகள் சென்றும் இதை எண்ணத் தோணலை எனக்கு! வைகுந்தத்தில் ஸ்வாமி அரவணையில் யோக நித்திரை கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி மாலை போல் வ்ரஜா நதி ஓடுவதாய் ஐதீகம். இங்கேயோ காவிரி மாலைபோல் அரங்கனைச் சுற்றி ஓடுகின்றாள். அதனாலேயே பூலோக வைகுந்தம் என்ற பெயர் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கம் கோயில் பற்றியும் எழுதணும்னு ஆசை! நிறைவேறுமா தெரியலை!


இந்த ப்ளாகருக்கும், நமக்கும் மீண்டும் உறவு சீர்கெட்டுப் போய்விட்டதால் நாளைக்கு எழுதி வெளியிடமுடியுமா, முடியாதானு சந்தேகம். அதனால் இந்தப் பதிவை ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும் நேரத்துக்கு வெளியிடுமாறு அட்டவணைப் படுத்தி உள்ளேன். சொர்க்கவாசல் திறக்கிறதைப் பார்க்க முழிச்சுட்டு இருக்கிறவங்க எல்லாரும் பாருங்க. sheduled=அட்டவணை என்ற அர்த்தம் வருமா? அது சரியா தப்பா?? யாருங்க அங்கே மொழிபெயர்ப்பு ஆலோசகர், உதவி தேவை! (உதை தேவைனு அடிச்சுட்டேன், நல்லவேளை உடனே பார்த்தேன்) என்ன ஆகுமோ தெரியாது. வந்தால் என்னோட அதிர்ஷ்டம், வரலைனா உங்களுக்கு அதிர்ஷ்டம் வழக்கம்போல! பிள்ளையாரப்பா, காப்பாத்து!

Sunday, January 04, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 20.

கம்சன் சமீபத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொன்றுவிடவே எண்ணினான். ஆனால் அவன் நெருங்கிய சிநேகிதர்களில் சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன. இன்னும் சொல்லப் போனால் அவன் மனைவியர் இருவருக்குமே ஆண்குழந்தைகள் பிறந்திருந்தன. அவன் மற்றக் குழந்தைகளைக் கொல்லுவதை மீண்டும் ஆரம்பித்தால் அதன் மூலம் மிகப் பெரிய இடையூறு நேரிடும். தன் குழந்தைகளையும் தானே கொல்லும் அபவாதம் நேரிடுமோ என அஞ்சினான் கம்சன். ஆகவே மீண்டும் பூதனையை அழைத்தான். நந்தன் கப்பம் கட்ட வந்திருந்ததையும், அவனுக்கு பல வருடங்கள் கழித்து மகன் பிறந்திருக்கின்றான் என்ற செய்தி உறுதிப் படுத்தப் பட்டிருப்பதையும் அவளிடம் சொன்னான் கம்சன்.

நந்தனின் குழந்தையைக் கொல்லுவது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. நந்தன் மிக மிகப் பணிவைக் காட்டியதோடு அல்லாமல், கப்பத்தையும் ஒழுங்காய்ச் செலுத்தி வந்தான். ஷூரர்களால் மிகவும் விரும்பப் பட்டவன். வசுதேவருக்கும், தேவகிக்கும் மிகவும் நெருங்கியவன். கோகுலத்தில் இருந்த ஷூர இனத்தவர்கள் அனைவருமே பலம் பொருந்தியவர்கள் மட்டுமில்லாமல், பணமும் படைத்தவர்கள். அவர்களின் தலைவன் ஆன வசுதேவனின் ஒரு சகோதரியோ, அஸ்தினாபுரத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கின்றாள். அஸ்தினாபுரத்து இளவரசனாய் இருந்து தற்சமயம் பட்டத்தில் இருக்கும் பாண்டுவின் மனைவி. அஸ்தினாபுரத்துக் காரர்களைப் பகைத்துக் கொள்ளுவது என்பது நடக்காத காரியம். என்னதான் மகத நாட்டு அரசன் நமக்கு மாமனார் ஆனாலும் குரு வம்சத்தினரைப் பகைத்துக் கொள்ளுவது அவ்வளவு புத்திசாலித் தனம் இல்லை. இத்தனையும் யோசித்தான் கம்சன். பூதனையை கோகுலம் சென்று அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அதற்கு விஷப் பால் ஊட்டும்படிக் கேட்டுக் கொண்டான்.

பூதனையோ மறுக்கின்றாள். என்னால் முடியாது என்று சொல்கின்றாள். ஏற்கெனவே அனைவரும் அவளைக் கண்டாலே ஓடி ஒளிவதையும், அவளின் உடன்பிறந்தவர்களே அவளைக் கண்டால் வராதே என்று சொல்லுவதையும் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதே பாவம் என அவர்கள் நினைப்பதையும், அவ்வாறே நடந்து கொள்ளுவதையும் சொல்கின்றாள் பூதனை. கம்சன் அவளுக்குப் பலவிதமாய் ஆசை காட்டுகின்றான். பரிசுகள் பல தருவதாய்ச் சொல்கின்றான். தன்னுடைய சொந்தக் குழந்தையே தன்னைக் கண்டு பயப்படுவதாய்ப் பூதனை சொல்லிக் கண்களில் இருந்து கண்ணீர் வர அழுகின்றாள். அவள் வாழ்விலே முதல் கண்ணீர் அது. ஆனால் கம்சனுக்குக் கோபம் வருகின்றது. "பூதனை, நீ, உன் கணவன் ப்ரத்யோதா, பகா, அகா, அனைவரும் எனக்குக் கட்டுப் பட்டுள்ளீர்கள் என்பதை மறவாதே. உன்னுடைய இன்றைய இந்த நிலைக்குக் காரணம் யாரென நினைத்தாய்? நான் கொடுத்தது உனக்குச் செல்வம், உன்னுடைய தற்போதைய அதிகாரம், ஏன், உன்னுடைய உயிர் கூட என் கையில் தான், நினைவு வைத்துக் கொள்!" என்று கோபம் கொப்பளிக்கச் சொல்கின்றான் கம்சன்.

பூதனை மெளனமாய் இருந்தாள். "பூதனை, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மகத வீரர்கள் உன்னையும், ப்ரத்யோதாவையும், வெறும் கைகளால் கொன்று விடுவார்கள். வாழ்வோ, சாவோ, என்னை மீறி நீயோ, ப்ரத்யோதாவோ ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. என் கட்டளையை மீறி உங்கள் வாழ்வில் எதுவும் இல்லை." என்றான் கம்சன். பூதனை வாயே திறக்கவில்லை. "இங்கே நிற்காதே, போ உடனே, பதினைந்து நாட்கள் உனக்குக் கெடு வைத்திருக்கின்றேன். அதற்குள் நீ நான் சொன்னதைச் செய்வாயாக." என்று ஆணை இட்டான் கம்சன். பூதனை எதுவுமே பேசாமல் வெளியே வந்தாள். அரண்மனைப் பணிப்பெண்கள் கூடத் தன்னைக் கண்டதும் வெகு வேகமாய் ஓடி மறைவதைக் கண்டாள் பூதனை. மனம் வேதனையில் ஆழ நடந்தாள் பூதனை.

கோகுலத்தில் அந்த மாதம் பெளர்ணமி தினத்தன்று அவர்களின் குலதெய்வம் ஆன கோபநாத் மஹாதேவருக்குத் திருவிழா வந்தது. கோகுலமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அனைவரும் தினம் காலையில் யமுனைக்கரைக்குச் சென்று யமுனையில் குளிப்பதும், வில்வங்களால் கோபநாதரை அர்ச்சிப்பதுமாய் விழாவுக்கெனத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். பெளர்ணமி இரவு முழுநிலவில் யமுனைக்கரைக்குச் சென்று பாலில் வறுத்த அரிசியைக் கலந்து செய்யப் பட்ட பிரசாதங்களும், வழிபாடுகளும் செய்து அனைவரும் கலந்து ஆடிப் பாடிக் களித்து வழிபடுவது வழக்கம். அன்று மதுராவில் ஏதோ அவசர வேலை இருப்பதால் நந்தன், தன்னுடைய உறவினர்களுடன் மதுரா சென்று விட்டு நடு இரவுக்குள் வந்து விழாவில் கலந்து கொள்ளுவதாய்த் திட்டம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். யசோதைக்குச்செய்தி வந்தது, மதுராவிலே யாரோ பெரிய அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கோகுலத்தின் கோபநாத் மஹாதேவருக்கு முக்கியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றாள் என.

செய்தி வந்த போது யமுனைக்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த யசோதை, உடனேயே இரு இளைஞர்களை அனுப்பி வரும் விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துப் போய், உபசரித்துவிட்டுப் பின்னர் யமுனைக்கரைக்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தாள் அவர்களும் சென்றார்கள். பூதனை மனம் பதறினாள். யமுனையில் குளித்துவிட்டு கோபநாதரைத் தரிசனம் செய்யும்போதெல்லாம் தான் செய்யப் போகும் வேலையை நினைத்து, நினைத்து ஆயாசம் அடைந்தாள். "கடவுளே, கடவுளே, எல்லாரும் மன நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இந்தக் கிலேசம்? யமனுக்குத் துணை போகும்படி என்னை ஏன் படைத்தாய்? மகிழ்ச்சி என்பது எனக்கு ஏன் மறுக்கப் பட்டது? யமன் கூடச் செய்ய அஞ்சும் ஒரு காரியத்தை, ஏதுமறியாக் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் காரியத்தை நான் செய்யும்படி ஆனது ஏன்?" என்று மனதுக்குள்ளேயே கதறினாள். யசோதை இருக்கும் இடம் போய்ச் சேர்ந்தாள் கூட வந்தவர்களுடனேயே.

யசோதையும்,ரோகிணியும் அருகருகே அமர்ந்திருக்க மற்ற அனைத்து கோபஸ்த்ரீகளும் அவரவர் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் அமர்ந்திருந்தனர். பூதனையை வரவேற்று அமர வைத்தாள் யசோதை! பூதனையின் கண்கள் தேட ஆரம்பித்தன.

Friday, January 02, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 19


சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. (2)

குழந்தையைத் தான் யசோதைக்குக் கொடுக்கும்போது தன் பாதக் கட்டை விரலைச் சப்பிக் கொண்டிருந்ததையே நினைத்துக் கொண்டிருந்தாள் தேவகி. கர்காசாரியார் வந்து அவளிடம் குழந்தையின் பெயர் சூட்டுவிழா நன்கு விமரிசையாக நடந்ததையும், குழந்தையை நந்தனும், யசோதையும், (யசோதை என்னமோ தான் பெற்ற குழந்தை எனவே நினைத்தாள், அவளுக்கு விஷயம் தெரியாதே!) மிக மிக அன்புடனும், பாசத்துடனும் வளர்ப்பார்கள் என்றும் அவளிடம் சொல்லுகின்றார். தன்னிரு கைகளையும் கூப்பிக் கொண்டு அந்தப் பரம்பொருளை வேண்டிக் கொண்டு தன் மகனுக்கு எவ்வித ஆபத்தும் நேரக் கூடாது எனப் பிரார்த்தித்துக் கொண்டாள் தேவகி. கையில் அந்த கரும்பளிங்குச் சிலையை எடுத்துக் கொண்டு, தன் மகனின் முகத்தையே அதில் காணவும் முயற்சித்தாள்.

குழந்தை யசோதையிடம் நன்கு வளர்ந்து வந்தது. அதன் ஒவ்வொரு விளையாட்டும் யசோதைக்குப் பூரிப்பைக் கொடுத்து வந்தது. அதற்குப் பாலூட்டும்போதும், தாலாட்டும்போதும் குழந்தையின் அழகையும், நிறத்தையும் பார்த்துப் பார்த்து வியந்தாள் யசோதை. அவளோடு கோபியர்களுக்கும் இந்தக் குழந்தையின் விளையாட்டும், சிரிப்பும், அழகும் அலுக்கவில்லை.
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே
வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7
குழந்தைக்குக் குளிப்பாட்டிச் சீராட்டி, நாக்கு வழித்தால் குழந்தையின் வாயினுள்ளே அகில உலகத்தையும் காண்கின்றாள் யசோதை. கோபியர்களோ இவன் சாதாரணக் குழந்தை அல்லவென்று சொல்கின்றார்கள். அந்த பரம்பொருள் ஆன வாசுதேவனே நந்தன் குழந்தையாக வந்து பிறந்திருக்கின்றான் என்றும் எண்ணுகின்றனர். குழந்தையின் ஒவ்வொரு விளையாட்டும் அவர்களுக்குப் புதுமையாகவும், அழகாயும் இருக்கின்றது. தங்களை உய்விக்க வந்த கடவுள் இவன் தான் என்றும் பேசிக் கொள்ளுகின்றனர்.

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.

குழந்தையின் அழுகை அவர்களுக்கு இனிய சங்கீதமாய் ஒலிக்கின்றது. அது முகம் பார்த்து அழுது, சிரித்து, குப்புற விழுந்து, பின் நீந்தித் தவழ்ந்த போதோ, ஆஹா, இதோ கண்ணன் கைவிரல்களின் அடையாளம் இங்கே, இதோ, கால் விரல்கள் அடையாளம் இதோ, முழங்கால் இப்படி அழுந்துகின்றதே, என் கனையாவுக்கு வலிக்குமோ என்றெல்லாம் பேசிக் கொள்கின்றனர்.
************************************************************************************

மதுராவில் கம்சனுக்கோ மனதில் நிம்மதி என்பதே இல்லை. பூதனையிடம் அவன் சந்தேகம் வலுக்கின்றது. அந்த சிராவண மாதத்தில் வ்ரஜபூமியிலும், சுற்றியுள்ள ஊர்களிலும் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்லுமாறு ஆணையிட்டிருந்தாலும், அவள் அதைப் பூரணமாய் நிறைவேற்றவில்லை. திரும்பத் திரும்ப ஒன்பது குழந்தைகள் மட்டுமே பிறந்ததாயும், அவை விஷம் வைத்துக் கொல்லப் பட்டதாயும் சொல்லுகின்றாள். எங்கோ, ஏதோ, தவறு நேர்ந்திருக்கின்றது. பூதனை அன்று பூராவும் தேவகியின் அருகில் தான் இருந்தாளா?? அவள் என்னமோ அப்படித் தான் சொல்லுகின்றாள். ஆனால்??? தேவகிக்குப் பிறந்ததாய்ச் சொல்லப் படும் அந்தப் பெண் குழந்தை?? அது தன் கையிலிருந்து நழுவிய விதம் இன்னும் கம்சனைத் திகிலடைய வைத்தது. அந்தக் "க்றீச்" என்னும் ஓலம். இதோ இப்போது கூடக் காதில் ஒலிக்கின்றதே? அதே போல் அந்த மாயக் குரல்?? இதோ காதில் விழுகின்றதே! "உன்னைக் கொல்லப் போகின்றவன் பிறந்துவிட்டான்." கம்சன் தன்னை அறியாமல் காதைப் பொத்திக் கொண்டான்.

பூதனையோ கம்சனிடமிருந்து மறைத்தாள் தான் அன்று தேவகியிடம் இல்லாத விஷயத்தை. திரும்பத் திரும்ப பெண் குழந்தையே பிறந்தது என்றும் சொன்னாள். மேலும் சிராவண மாதத்தில் பிறந்த குழந்தைகளைத் தேடிப் பிடித்து கொன்றதில் ஈடுபட்ட பூதனைக்கு, இப்போது சாமானிய மக்கள் மட்டுமன்றி, தன் உறவினர் கூட தன்னைக் கண்டு அஞ்சுவதைக் கண்டாள். அவள் தெருவில் சென்றாலே கதவுகள் மூடப் பட்டன. "குழந்தைக் கொலைகாரி வருகின்றாள்" என்று அவள் காதுபடவே அனைவரும் பேசிக் கொள்கின்றனர். குழந்தைகள் உள்ள மற்றச் சில தாய்மார்கள் இந்த விஷயம் தெரிந்ததுமே மதுராவை விட்டு வெகு தூரம் அனுப்பப் பட்டனர். இந்நிலையில் ஒரு நாள் கம்சனைக் கண்டு தன் கப்பத்தைச் செலுத்த வந்தான் நந்தன்.

நந்தன் வருவதற்கு முன்பே கம்சனின் உளவாளிகள், பல வருடங்கள் சென்ற பின்னர் நடுவயதை எட்டி இருந்த யசோதைக்குப் பிறந்த குழந்தையைப் பற்றிக் கம்சனிடம் சொல்லி இருந்தனர். நந்தன் எப்படிச் சாதாரணமாய் இருக்கின்றான் என்பதையும், யசோதையையும் சாதாரணப் பெண்மணி என்பதையும் சுட்டிய அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையின் சாமுத்திரிகா லட்சணங்கள் அரசகுமாரனையும் விஞ்சி இருப்பதையும், குழந்தையின் நிறம், அதன் விளையாட்டுகள், தெய்வீகம் அனைத்துமே ஷூரர்களாலும், வ்ரஜபூமியின் மக்களாலும், கொண்டாடப் படுவதையும், அந்தக் குழந்தை தனித் தன்மையோடு இருப்பதாகவும் சொல்லி இருந்தனர்.

இந்நிலையில் நந்தன் வருகின்றான் கம்சனைக் காண.