எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 23, 2017

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?

பையர் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வீணாகி விட்டது. நம்ம ஊரில் என்றால் எல்லாத்தையும் எடுத்து வெளியே வைச்சுட்டு வேறே வேலையைப் பார்த்துண்டு போயிடுவோம். ஆனால் இங்கே குளிர்சாதனப் பெட்டி இல்லையேல் வாழ்க்கையே நடத்த முடியாது. அவ்வளவு அத்தியாவசியத் தேவை குளிர்சாதனப் பெட்டி.  குறைந்த பட்சமாக ஒரு வாரத்துக்கான பால், தயிர் போன்றவைகள், காய்கள், பழங்கள், ஒரு சில உறைய வைக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவைகள் அதிலே வைப்பாங்க. பால் எல்லாம் குறைந்தது ஐந்து லிட்டர் வாங்கி வைச்சுக்கணும்! இல்லைனா இரண்டு அல்லது மூன்று லிட்டராவது வாங்கிக்கணும். நாம தேவைப்பட்டா அரை ஆழாக்குப் பால் கூட வாங்கிப்போம். ஆவின் பால் பாக்கெட் கூடக் கால் லிட்டரில் கிடைக்குமே! இங்கே அப்படி இல்லை. கடுகு வேணும்னாக் கூடக் குறைந்தது ஒன்றரைக் கிலோவாவது இருக்கும் பாக்கெட் தான்!  சாதாரணமாக ஒரு வீட்டிற்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டி நம்ம ஊர் ஆறரை அடி காட்ரெஜ் பீரோ அளவுக்கு இருக்கும்.  அநேகமாக முருங்கைக்காயில் இருந்து கொத்தவரை, அவரை, பட்டாணி, பாலக் கீரை போன்ற காய்கள், வித விதமான பச்சைக்காய்கள் எல்லாமும் உறைய வைக்கப்பட்ட நிலையில் கிடைப்பதால் அவற்றையும் வாங்குவார்கள். எப்போவானும் காய்களைப் புதிதாக வாங்க முடியாத பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்திப்பாங்க.


இதோடு  இல்லாமல் சப்பாத்தி வகைகளும், சமோசா, வடை, பாட்டீஸ் போன்றவைகளும் உறைய வைக்கப்பட்ட நிலையில் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி வைச்சுக்கறவங்க உண்டு.  மைக்ரோவேவில் வைத்து வடை, சமோசா, பாட்டீஸ் போன்றவற்றைச் சூடு செய்துக்கறாங்க. சப்பாத்தி வகைகளை தோசைக்கல்லில் போட்டு வெண்ணெய், அல்லது நெய் ஊற்றிப் போட்டு எடுத்துச் சாப்பிடறாங்க.  இன்னும் இட்லி, தோசை, அடை, உப்புமா வகைகள் உறைய வைக்கப்பட்டவற்றில்  இல்லைனு நினைக்கிறேன். :)


இதான் வீணாகிப் போன பழைய குளிர்சாதனப் பெட்டி.    முழு அளவையும் எடுக்க முடியலை. கொஞ்சம் தள்ளி நின்னு எடுக்கணும். அல்லது காமிராவில் எடுத்திருக்கணும்.  முழுசா வந்திருக்கும். :) ஏதோ ஒரு சாக்குனு யாருங்க அங்கே முணுமுணுக்கிறது? ஹிஹிஹி, செல்லில் எடுத்தால் இப்படித் தான்! ஆனால் சொல்ல வந்த விஷயம் படத்தில் இல்லை. சொல்ல வந்ததே வேறே!  நம்ம ஊரில் குளிர்சாதனப் பெட்டி வீணாச்சுன்னா மெகானிக்கைக் கூப்பிடுவோம். அவரும் வந்து பார்த்துட்டு வாரன்டி இருந்தா இலவச சேவையும், வாரன்டி இல்லைனா எஸ்டிமேட்டும் கொடுப்பார்.  அநேகமா வீணாகி இரண்டு, மூன்று நாளில் எல்லாம் பழைய நிலைமைக்கு வந்துடும்.  இங்கே குளிர்சாதனப் பெட்டி வீணானது தெரிஞ்சதும் அதைச் சரி செய்ய மெகானிக்கைக் கூப்பிட்டால் வரதுக்கு ஒரு வாரம் ஆகுமாம்.  பையர் அவசரம்னு சொல்லி உடனே வரச் சொல்லிக் கடைசியில் நேத்திக்கு வந்தார். 

வந்துட்டு எஸ்டிமேட் கொடுத்ததில் அவருக்கு சர்வீஸ் சார்ஜ் மட்டும் 350 டாலர்! நேத்திக்கு வந்து பார்த்துட்டு என்ன பிரச்னைனு சொன்னதுக்குத் தனியாக் காசு. அது சுமார் இருபது டாலருக்குள் இருக்கும் போல! குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரெசர் வீணாகிவிட்டதாகச் சொல்லி அதை மாத்தணும்னு சொன்னார். ஆகவே ஏற்கெனவே சொன்ன தொகையைத்   தவிர கம்ப்ரெஸர் மாத்தறதுக்கு 900 டாலர். எல்லாம் சேர்த்து 1,300 டாலர்கள் ஆகும். இந்தக் குளிர்சாதனப்   பெட்டி வாங்கி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகின்றன என்றார்கள் பையரும் மாட்டுப்பெண்ணும். பொதுவாக இங்கெல்லாம் ஐந்து வருடங்கள் தான் வாரன்டி என்றும் ஐந்து வருடத்துக்கு மேல் ஒரு மின்னணு சாதனம் பயன்பாட்டில் இருந்தால் அது ஆச்சரியம் என்றும் சொல்கிறார்கள். நல்ல வேளையா நம்ம நாட்டில் பத்து வருஷம் வாரன்டி கொடுக்கிறாங்களோ, பிழைச்சோமோ! வாடகைக்கு வீடு எடுத்தால்  இங்கே குளிர்சாதனப் பெட்டி குடியிருப்புக்களில் வாடகைக்கு வீடு எடுக்கும்போது அதோடு சேர்ந்தே வந்துடும். குளிர்சாதனப் பெட்டி, எரிவாயு அல்லது மின் அடுப்பு நான்கு பர்னர்களுடன், மைக்ரோவேவ் அவன், பேக்கிங் அவன், டிஷ் வாஷர், வாஷிங் மெஷின் எல்லாம் சேர்ந்தே தான் வாடகைக்கு வீடு எடுக்கையில் கிடைக்கும். வீணானால் நம் செலவில் புதுப்பிக்கணும். இதில் தரையில் விரித்திருக்கும் கார்ப்பெட்டில் இருந்து சுவற்றில் நாம் போடும் ஓட்டைகளிலிருந்து எல்லாமும் சரி செய்யணும். 

குளியலறை, கழிப்பறை, சமையலறைனு எல்லா இடமும் சுத்தமாகப் பராமரிக்கணும் என்பதோடு காலி செய்து கொண்டு போனால் வீடு வாடகைக்கு எடுக்கையில் எப்படி இருந்ததோ அப்படியே கொடுக்கணும். சொந்தமா வீடு என்றால் வாஷிங் மெஷினில் இருந்து எல்லாமும் புதுசா வாங்கிக்கணுமே! வாஷிங் மெஷின் துவைக்க ஒரு மிஷினும், துணி காய வைக்க ஒன்றுமாக இரண்டு இருக்கும். அது வேறு ஒரு பத்துக்குப் பனிரண்டு அறையில் வைக்குமாறு பெரிசா இருக்கும்.  அநேகமான வீடுகளில் கார் ஷெட்டுக்குப் பக்கத்தில் உள்ள அறையில் வாஷிங் மெஷின் இருக்கும்.  அது வழியாவே உள்ளே நுழைவாங்க. வீட்டின் முக்கிய நுழைவாயிலை யாரும் பயன்படுத்தறதே இல்லை. வெளி ஆட்கள் வந்தால் தான்! சொந்த வீட்டையும் சரியாப் பராமரிக்கலைனா உடனே  நோட்டீஸ் வரும்.  அப்படியும் தாமதம் ஆனால் அபராதம் போடுவாங்க. வாசல், தோட்டம் ஆகிய இடங்களில் வளரும் செடிகள், புற்கள் ஆகியவை சரியான அளவில் வளரணும். இல்லைனா உடனே நோட்டீஸ் வந்துடும். அடிக்கடி அதுக்கும் கவனிப்புக் கொடுக்கணும். லானில் வளரும் புற்களுக்கும் ட்ரீட்மென்ட் உண்டு. அதுக்குனு தனி ஆள் இருப்பாங்க. வருஷத்துக்கு இவ்வளவு டாலர்னு சம்பளம் பேசிட்டு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வந்து லானுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க!

ஹிஹி! குளிர்சாதனப் பெட்டியை விட்டுட்டேனே! குளிர்சாதனப் பெட்டி பையருக்குத் தேவையான அளவான ஆறரை அடிக்கு உள்ளது 1,500 டாலரில் இருந்து 2,000/-க்குள் ஆகுமாம். இங்கே பழைய குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரெசர் செலவு 900 டாலர் என்றதும் பையர் புதுசாக்குளிர்சாதனப் பெட்டியே வாங்கிடலாம்ம்னு முடிவு பண்ணிட்டார். ஆனால் அதற்கான தேர்வுகளை எல்லாம் செய்துட்டு ஆர்டர் கொடுத்தால் வந்து சேரப் பத்து நாட்களாவது ஆகுமாம். அதுவரை என்ன செய்யறதுனு யோசிச்சுட்டுப் பையர் ஒரு சின்னக் குளிர்சாதனப் பெட்டியை நேற்றிரவு போய் வாங்கி வந்தார். நூறு டாலருக்குள் இருக்கும் போல! ப்ரான்ட் பெயர் எல்லாம் பழக்கமானவை அல்ல. ஏதோ புதுசு! குட்டின்னா ரொம்பக் குட்டி! முக்கியமாய்ப் பால், தயிர், வெண்ணெய் போன்றவை மட்டும் வைக்கத் தான்! 

இதிலே வேடிக்கை என்னன்னா, புதுசு வழக்கமான பெரிய அளவில் வந்ததும் இதைத் திருப்பிக் கொடுத்துடலாமாம். இங்கே எல்லாம் அப்படி ஒரு வசதி இருக்கு! பயன்படுத்திப் பார்த்தோம். திருப்தி இல்லைனு சொல்லிட்டுத் திருப்பலாம் என்று சொல்கிறார்கள். ஆக்ஷேபம் தெரிவிப்பதில்லை. இது துணியிலிருந்து எல்லாத்துக்கும் பொருந்துகிறது. காய்கள், பழங்கள், பால், தயிர், வெண்ணெய் போன்றவை தவிர்த்து! அதனாலேயே எனக்கு இங்கெல்லாம் துணி வாங்கினால் போட்டுக்கொள்ள யோசனையா இருக்கும். நம்ம ஊரிலேயே பிரபலமான ரெடிமேட் கடைகளில் உடை வாங்கவோ போட்டுப் பார்க்கவோ பிடிக்காது. யாரானும் போட்டிருப்பாங்களேனு யோசனையா இருக்கும்.  இருந்தாலும் சில நம்பிக்கையான கடைகளில் நாம் கேட்டால் உள்ளே இருந்தோ அல்லது அடியிலிருந்தோ எடுத்துத் தருவாங்க. இங்கே எல்லாம் அப்படிக் கிடையாது. என்ன இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா! 

இங்கே வேலைக்குப் பேட்டி கொடுக்கப் போறவங்க நல்ல உடை இல்லைனா கவலைப்படாமல் வால்மார்ட் போன்ற கடைகளில் உடையைத் தேர்வு செய்து போட்டுக் கொண்டு போயிட்டு பேட்டி முடிஞ்சதும் அந்த உடையைத் திரும்பக் கொடுத்துப் பணத்தை வாங்கிக்கறதும் உண்டு என்கிறார்கள். நம்ம ஊரில் வாடகைக்குக் கொடுப்பாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது. ஆனால் நினைத்த மாத்திரத்தில் நம்ம ஊரில் எதையும் வாங்கறாப்போலயோ அல்லது ரிப்பேருக்குக் கொடுத்து வாங்கறாப்போலயோ இங்கே முடியாது!  எல்லாத்துக்கும் நேரம், காலம், நாள் ஆகும். மருத்துவரைப் பார்க்கறதும் சேர்த்துத் தான்!  ரொம்ப முடியலைனா எமர்ஜென்சிக்குப் போகலாம். நம்ம ஊரிலே மருத்துவரைப் பார்க்கிறாப்போல் எல்லாம் இங்கே பார்த்துட முடியாது. அதுக்கே எனக்கு டென்ஷன் எகிறும். ஆனால் இங்கே என்னமோ டென்ஷன் ஃப்ரீயாத் தான் இருக்காங்க. ஆனாலும்  இதை எல்லாம் பார்த்தால்

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?


Tuesday, February 21, 2017

இங்கேயும் ஒரு பேனா மஹாத்மியம்!

ம்ம்ம்ம், நான் படிக்கும்போதும் சிலேட்டும் குச்சியும் தான். பல்பம், அல்லது பலப்பம் சென்னைத் தமிழ்னு நினைக்கிறேன். நாங்கல்லாம் குச்சினு சொல்வோம். கலர் கலராகக் குச்சிகள் கிடைக்கும் அதில் செங்கல் குச்சி ஒண்ணு உண்டு. நல்லா எழுதும். பரிட்சைனால் கூட கேள்வியைச் சொல்வாங்க, விடையை ஸ்லேட்டில் எழுதணும். வாத்தியார் வந்து ஸ்லேட்டின் ஒரு ஓரத்தில் மதிப்பெண்கள் கொடுப்பார். ஆறாவதில் இருந்து தான் எனக்கும் பேனா. நான் படிச்சதும் ஃப்ர்ஸ்ட் ஃபார்ம் தான். நாங்க தான் ஃபார்முக்குக் கடைசி செட்டும் கூட! எனக்கப்புறமாப் படிச்சவங்க ஸ்டான்டர்ட் ஆயிட்டாங்க! அதே போல் சென்னைப் பல்கலைக் கழகம் மூலமா எஸ் எஸ் எல்சி தேர்வு எழுதினதும் நான் படிச்சப்போத் தான். அதுக்கப்புறமா மதுரைப்பல்கலைக் கழகம் வந்து விட்டது.

முதல் முதல் அப்பா எனக்கு வேறே வழியில்லாமல் தான் பேனா வாங்கிக் கொடுத்தார். அண்ணாவுக்கு எட்டாம் வகுப்பு வரை பேனா கிடையாது. பென்சில் தான். அண்ணா படிச்ச பள்ளியிலேயே அப்பாவும் வேலை பார்த்ததால் வகுப்பு ஆசிரியரிடம் அப்பா சொல்லிடுவார். ஆனால் எனக்கோ ஆறாம் வகுப்பிலேயே பேனா, நோட் புத்தகங்கள் போன்றவை. அதிலும் எனக்கு ஒரு பாடத்துக்கு மட்டும் நான்கு நோட்டுகள். வகுப்பில் செய்யும் கிளாஸ் வொர்க், தேர்வுக்காகத் தனி, கணக்கைப் போட்டுப் பார்க்கத் தனியாக ஒன்று, வீட்டுப் பாடம் செய்து வரத் தனி நோட்டு! ஆகக் கணக்குக்கு 4, ஆங்கிலத்திற்கு 4, தமிழுக்கு 4, சயின்ஸ் எனப்படும் அறிவியலுக்கு 4, சமூகப் பாடம் எனப்படும் சோஷியல் சயின்ஸுக்கு 4.

இதைத் தவிரவும் ட்ராயிங் நோட்! அது தனியாப் பெரிசா இருக்கும். குடிமைப் பயிற்சிக்குத் தனி நோட்டு! நீதி போதனை வகுப்புக்கு இரண்டு நோட்டுக்கள் மட்டுமே!(போனால் போறதுனு!)  ஆனால் ஒரு வசதி என்னன்னா வகுப்பிலேயே தனித் தனி டெஸ்க் இருந்ததால் வேண்டாத நோட்டுக்களை அதிலே வைச்சு வீட்டிலிருந்து பூட்டுக் கொண்டு போய்ப் பூட்டிக்கலாம். ஆனால் சமயத்தில் கிளாஸ் வொர்க் நோட்டில் சில முக்கியமானவை எழுதி இருப்போம். வீட்டில் வந்து வீட்டுப்பாடம் செய்யும்போது அது தேவைப்படும். சரினு டெஸ்ட் நோட்டை வகுப்பறையில் வைக்கலாம்னா டெஸ்ட் எழுதி முடிச்சதும் அதே டெஸ்டை மறுபடி தப்பில்லாமல் எழுதணும். இதே போல் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, மாதிரித் தேர்வு போன்ற தேர்வுகளின் கேள்வித் தாள்களையும் அந்த டெஸ்ட் நோட்டில் எழுதிட்டுப் போகணும். ஆக அதையும் வகுப்பில் வைக்க முடியாது.

புத்தகங்களை மட்டும் வைக்க முடியுமா? அதுவும் முடியாது. ஆகவே மூட்டை தூக்கி முத்தக்காவாக எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிட்டுத் திரும்பத் தூக்கிட்டு வந்துனு! சரி, சரி, பேனாவில் ஆரம்பிச்சது எங்கேயோ போயிடுச்சே!  முதல் முதல் அப்பா வாங்கின பேனாவுக்குப் பெயர் ரைட்டர் பேனா! எனக்கு ஒரு மாதிரி பிஸ்கட் கலர், அண்ணாவுக்குக் கறுப்புக் கலர்.  எப்போவுமே மத்தவங்க வைச்சிருக்கிறது தானே நமக்குப் பிடிக்கும்! அதே மாதிரி அண்ணாவுக்கு என் பேனாவும் எனக்கு அண்ணாவின் பேனாவும் பிடிச்சது தான். ஆனால் ஒரு துரதிருஷ்டம் என் பேனா ஒருநாள் எழுதும்போது கீழே விழுந்து நிப் வளைந்து பட்டை அடிக்க ஆரம்பிச்சு விட்டது. துக்கம் தாங்கலைனாலும் அப்பா வேறே பேனா கிடையாது! இதை வைச்சே ஒப்பேத்துனு சொல்லிட்டார்.

பேனாக்கள் க்கான பட முடிவு

இங்குக்கு மாத்திரை எல்லாம் பார்த்தது இல்லை. இங்க் தான் அப்பா வாங்கி வருவார். ஃபில்லர் எல்லாம் கிடையாது. அப்படியே மெல்ல மெல்ல ஊத்திக்கணும். அப்போ ஒரு நாள் நான் சிறப்பு வகுப்பு முடிஞ்சு பள்ளியிலிருந்து தாமதமாக வந்து கொண்டிருக்கையில் கீழே ஒரு பேனா! நல்ல அரக்கு வண்ணப் பேனா! சுற்றும் முற்றும் பார்த்தால் அந்தச் சந்தில் யாரையுமே காணோம். அப்படியும் அந்தப் பேனாவை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கம் வீடுகளில் விசாரிச்சால் யாரும் எங்களோடது இல்லைனு சொல்லவே வீட்டுக்குக் கொண்டு வந்தேன். பேனா நன்றாக எழுதியது. அச்சுப் பொரிந்தாற்போல் என அப்போது சொல்லுவோம். அந்தப் பேனாவால் நான் எழுதிக் கொண்டிருக்கையில் எப்படியோ அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சு. பேனாவை வாங்கிக் கொண்டு விட்டார். அதுக்கு எப்படி இங்க் போடுவதுனு புரியலை.

அப்புறமா அப்பாவே பேனாவைத் திறந்து பார்த்தார். உள்ளே இங்க் ஃபில்லருடன் கூடிய தங்க நிப்! அப்போது அதன் பெயர் பைலட் பேனா! விலை ஜாஸ்தியாக இருக்கும் என்றார் அப்பா. இதை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகக் கூடாதுனு சொல்லிட்டு அதை உள்ளே தன்னோட பெட்டியிலே வைத்து விட்டார். எனக்குப் புதுப் பேனாவும் கிடைக்கலை.  கண்டெடுத்த பேனாவும் கிடைக்கலை. இந்த ரைட்டர் பேனா கடைசியில் ஒழுக ஆரம்பித்து அப்படியும் புதுப் பேனா கிடைக்காமல் ஏங்கிக் கடைசியில் நான் எஸ் எஸ் எல்சி படிக்கும்போது நான் கீழே கண்டெடுத்த அரக்கு வண்ணப் பைலட் பேனாவை அப்பா எனக்குப் பரிட்சை எழுதக் கொடுத்தார்.

அந்தப் பேனா எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போய் அப்புறமாப் பல பரிட்சைகள் அந்தப் பேனாவால். முதல் முதல் வேலைக்குச் சேர்ந்ததும் வேலையில் சேரும் படிவத்தில் கையெழுத்துப் போட்டது அந்தப் பேனாவால் தான். அதுக்கப்புறமாச் சில வருடங்கள் என்னுடன் இருந்த அந்தப் பேனா கடைசியில் ஒரு நாள் என் பர்ஸை நான் பிக்பாக்கெட்டில் பறி கொடுத்தபோது அதோடு சேர்ந்து அதுவும் போய்விட்டது.  பல நாட்கள் துக்கமாக இருந்தது.  அதுக்கப்புறமா பால் பாயின்ட் பேனா வரவே கொஞ்சம் மனம் சமாதானம் ஆனது. ஆனால் முன்னெல்லாம் தேர்வுகள் எழுதவோ, வங்கிச் செக்கில் கையெழுத்துப் போடவோ பால் பாயின்ட் பேனாவைப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் வேலையில் சேரும்போதும் பால்பாயின்ட் பேனாவால் கையெழுத்துப் போடக் கூடாது!

வருடங்கள் செல்லச் செல்ல பால்பாயின்ட் பேனா இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றான பின்னர் அது அங்கீகாரம் பெற்றது. இப்போ எல்லாமே இணையம் மூலம்! பேனாவுக்கான அவசியமோ அவசரமோ இல்லை. ஒன்பது வயதாகும் எங்கள் அப்பு வீட்டுப்பாடத்தை ஐபாட் மூலம் செய்கிறாள். அவங்க பள்ளி ஆசிரியர் வீட்டுப்பாடம் பற்றிய குறிப்புக்களை மின் மடல் மூலம் அவங்க அம்மாவுக்கு அனுப்புகிறார். கையால் எழுத வேண்டிய பாடங்கள் மிகக் குறைவே! அதுவும் கையெழுத்துப் பழகணும் என்பதற்காகக் கொடுக்கிறார்கள்.  இன்னும் சில வருடங்கள் போனால் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் கல்வி கற்றுத் தேர்வும் எழுதும் முறை வந்துவிடும்.

பி.கு. கடுகு  அவர்களின் "தாளிப்பில்" பேனா பற்றிய பதிவைப் படித்ததும் என் மனதிலும் பேனா குறித்த நினைவுகள்! அதன் பாதிப்பு! 

Sunday, February 19, 2017

தாத்தாவின் பிறந்த நாள்!

 உ.வே.சா பிறந்த தினம் க்கான பட முடிவு

சற்றேறக் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவி புரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரஹாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்க்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்மகர்த்தாவும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையைப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக்கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டாரென்று ஊகித்தேன். அக்காலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும்போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடையணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார்:"வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.

யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்துகொண்டு நின்றனர். பிரசாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு சித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை, அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப் பட்டவரென்றோதான் தீர்மானித்திருக்கவேண்டும்.

தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார். ஆனாலும் அவர் அதைக்காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர்பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரசாதங்களும் கிடைத்தன.

தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப் போல் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக்கண்டதில்லை. ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதாயிருக்கிறதே;என்ன?" என்று கேட்டேன். "அதுதான் செண்டு" என்றுஅவர் கூறினார்."செண்டா" என்று சொல்லி அப்படியே நின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.

கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரெளபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற ஒரு கருவியில் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத்தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைகளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக்காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.

அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிர குமாரர், கரிகாலன், ஐயனரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னதுதானென்று அறியும்படியும் செய்தது.

"ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள், பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது.; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டை நான் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்," என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.

"இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.

"சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்." என்று கூறி விடை பெற்றுக் கொண்டேன்.

அன்று முதல் என் சந்தேகம் பறந்து போய்விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யச் செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்கும் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். "செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்" என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண்டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.


காலம்பரயே போட்டிருக்கணும். என்னமோ நேரமே வாய்க்கலை. மேலே இருப்பவை தாத்தாவின் நினைவு மஞ்சரியில் செண்டலங்காரர் என்னும் கட்டுரையின் ஒரு பகுதி! இங்கே இன்னும் பதினெட்டாம் தேதி தான் என்றாலும் கணினி ஞாயிற்றுக்கிழமையைத் தான் காட்டுகிறது. தாமதமான இடுகைக்குப் பொறுத்துக் கொள்ளவும்! :(

Saturday, February 11, 2017

எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், ஏற்பட்டிருக்கும் (ஏ) மாற்றங்கள்!

மாற்றங்கள் வந்தே தீரும். வேறு வழியில்லை. என்றாலும் எல்லா நாடுகளும் பழமையையும் பாதுகாக்கின்றன. நாமோ நம்மிடம் இருக்கும் பழமையான கலாசாரத்தைக் கூடப் பாதுகாப்பதில்லை. நம் முன்னோர்களின் திறமையால் கட்டப்பட்ட கோயில்களைப் பாதுகாப்பதில்லை. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு பொக்கிஷம்! அவற்றின் கலைச் செல்வங்களுக்கு ஈடு இணை இல்லை. பழைய காலக் கட்டிடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிப்பதில்லை. கோயில்களில் திருப்பணி செய்தால் அங்குள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை மாற்றாமல் புதுப்பிப்பதே இல்லை. அதோடு இப்போதெல்லாம் கோயில்களில் கல்லால் ஆன தளங்களை நீக்கி விட்டுப் புதுசாக க்ரானைட் அல்லது டைல்ஸ் போடுகிறார்கள்.

கோயில்களில் கல்லால் தளம் போடுவதின் முக்கிய நோக்கமே நடப்பவர்கள் கால் மற்றும் பாதத்துக்கு அவை வலுச் சேர்க்கும் என்பதால் தான். பாதங்கள் கல் தளத்தில் பதிய நடந்தால் அவை கிட்டத்தட்ட அக்கு பங்க்சர் மருத்துவ சிகிச்சை போல் செயல்படும். கோயில் தூண்களைச் சுத்தம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு sand blasting முறையில் மணலைத் தண்ணீர் போல் தூண்கள், சுவர்கள், சிலைகள் மேல் பீய்ச்சி அடிப்பதால் சிலைகள் அழிவதோடு, சுவரில் உள்ள பல பழமையான கல்வெட்டு ஆதாரங்களும் அழிந்து போகின்றன. சுவரும் இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாமல் மேலிருந்து பெயர்ந்து உடைந்து விழக்கூடிய நிலையில் ஆகிவிடுகின்றன. சில கோயில்களில் உட்பிரகாரத்தை ஒட்டி வரும் சுற்று மண்டபத்தில் சில முக்கியமான ஸ்வாமிகளைப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அப்படிச் செய்பனவற்றில் நவகிரஹங்களும் இருக்கும்.

நாலைந்து கல்லால் ஆன படிகள் மேல் ஏறிப் போக வேண்டி இருக்கும் அந்த சந்நிதிகளுக்கு. இப்போது அந்தக் கல்படிகளைப் பெயர்த்து எடுத்து விட்டு க்ரானைட் அல்லது டைல்ஸில் படிகளைப் பதிக்கின்றனர். ஏற்கெனவே இருந்த கருங்கல்படிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்று சொல்கின்றனர். சில ஊர்க்கோயில்களின் மண்டபங்களையே இப்படிப் பெயர்த்து எடுத்து அனுப்பவதாகவும் சொல்கின்றனர். இதை எல்லாம் நாம் கவனிப்பதில்லை. இந்த க்ரானைட் அல்லது டைல்ஸ் படிகளில் மேலே ஏறும்போதும், இறங்கும்போதும் வழுக்கும். எட்டுக்குடியில் ரங்க்ஸ் விழுந்த கதை
இதுவே கல்லால் ஆன படிகள் எனில் இவ்வளவெல்லாம் வழுக்காது. பிடிப்பு இருக்கும். இப்படியாக மாற்றங்கள் தேவையானவை தேவையானவற்றுக்கு மட்டும் வரவேண்டியது நம் நாட்டில் முற்றிலும் மாறிப் போய்ப் பழமையான கோயில்களிலும் கை வைக்க ஆரம்பிச்சாச்சு! ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் திருப்பணியின் போது எவ்வளவு புகார்கள் வந்தன என்பது படிப்போருக்குத் தெரிந்திருக்கும். அடுத்துக் கோயில் செல்கையில் அணியும் உடை விஷயம். இதுக்காக இன்று பலரும் கொடி பிடிக்கிறார்கள். ஆனாலும் கோயிலுக்குச் செல்லும்போது அணியும் உடை கொஞ்சமானும் நாகரிகமாக இருக்க வேண்டாமா?  ஒரு கம்பெனியில் நாம் பணிபுரியும்போது அந்தக் கம்பெனிக்கு எனத் தனிச் சீருடை இருந்தால் அதைத் தான் அணிந்து செல்லவேண்டி இருக்கும். நம் இஷ்டத்துக்கு அணிய முடியுமா?  அதே போல் நம் நாட்டு ஜனாதிபதியைச் சந்திக்கப் போனால் அதற்கேற்றாற்போல் உடை உடுத்துவோம். இப்படி ஒவ்வொரு சந்திப்புக்கும் நாம் உடை அணிகையில் கோயிலுக்குச் செல்லும்போது மட்டும் பாரம்பரிய உடையை அணிய மறுப்பது ஏன்? இத்தனைக்கும் பாவாடை, தாவணி, புடைவையோடு சேர்த்து சல்வார் குர்த்தாவையும் அணியலாம் என்றே சொல்கின்றனர். என்ன ஒன்று மேலே அணியும் துப்பட்டா அவசியம். இதில் என்ன தப்பு இருக்கு?

 தமிழ்நாட்டு இளம்பெண்களின் பாரம்பரிய உடை பாவாடை, தாவணி தான். அதை அணிபவர்களே இன்று இல்லை என்னும்படியாக அந்த உடை வழக்கொழிந்து போய்விட்டது. வடநாட்டவர்கள் நம்மை ஆள்கின்றனர்;  வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. வடமொழியில் பேசவோ, படிக்கவோ கூடாது என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நாம் (ஹிஹிஹி, நான் எப்போவுமே புடைவை தான், யோகா நேரம் தவிர) அணிவதோ வடநாட்டு உடையான சல்வார், குர்த்தா, சுடிதார்,குர்த்தா, லஹங்கா எனப்படும் வேலைப்பாடுகள் செய்த பாவாடை, திருமண ரிசப்ஷனில் குஜராத்தியர்களின் சேலைக்கட்டு, வடநாட்டு மெஹந்தி எனப்படும் மருதாணி வேலைப்பாடு, இவை பெண்களுக்கு என்றால் ஆண்கள்?

ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல. அவங்களும் திருமணம் என்றால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வேலைப்பாடுகள் நிறைந்த பைஜாமா, குர்த்தா போட்டுக் கொள்கின்றனர். அதிலும் இப்போது எல்லோருமே பான்ட், சட்டைக்கு மேல் வட இந்தியர் அணிவது போன்ற மேல் கோட் எனப்படும் கையில்லாத குர்த்தா அணிகின்றனர். இது அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளில் வரும் செய்தி வாசிப்பவர்களிலிருந்து கலந்துரையாடல் நடத்தும் நபர்கள் வரை, அனைவரும் இப்படித் தான் உடை அணிந்து வருகின்றனர்.  இதெல்லாம் நம் தமிழ்க் கலாசாரத்தில் இருந்ததா என்ன? தேவை ஏற்படுகையில் நம் வசதிக்கேற்ப மாறித் தானே வருகிறோம்! அப்படி இருக்கையில் வடமொழியையோ மற்ற வட மாநிலத்து மொழியையோ விரும்பிக் கற்பவர்கள் கற்கட்டுமே! மற்றவற்றில் எல்லாம் மாறும் நாம், நம் விருப்பத்துக்கேற்ப செயல்படும் நாம் இந்த மொழி விஷயம் வந்தாலே உணர்ச்சி வசப்படுகிறோம்.

நாம் குடிப்பது கோக், பெப்சி. சாப்பிடுவது கேஎஃப்சி, பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை. பயன்படுத்தும் இரு சக்கர, நாலு சக்கர வாகனங்கள் வெளிநாட்டுத் தயாரிப்பு. அலைபேசி வெளிநாட்டுத் தயாரிப்பு. பலரும் போக ஆசைப்படும் நாடு அமெரிக்கக் கண்டத்தின் யுஎஸ் அல்லது இப்போதைய ரசனைப்படி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள்.  ஐடியில் வேலை பார்க்கும் பலரும் வேலை செய்வது வெளிநாட்டுக் கம்பெனிகளில் தான். எந்த விவசாயியும் தன் பிள்ளையும் ஒரு விவசாயி ஆக விரும்புவதில்லை. தன்னைப் போல் பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்றே நினைக்கிறார்கள்.  ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையோ, பெண்ணோ படித்துவிட்டு விவசாயத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அடுத்த தலைமுறைகள் அதைத் தொடர வாய்ப்பே இல்லை! ஆக மொத்தம் மனம் விரும்பியே விவசாயத்தைத் தொழிலாகப் பலரும் தேர்ந்தெடுப்பதில்லை. லாபம் இல்லை என்பது மட்டும் காரணம் அல்ல! கஷ்ட, நஷ்டங்களும் சிரமங்களும் அதிகம். எங்கள் வீடே சிறந்த உதாரணம். எண்பதுகளில் என் மாமனார் நிலங்களை விற்று விட்டார். ஆகவே அதன் பின்னர் நாங்கள் கிராமத்துப்பக்கம் போவது என்பதே குலதெய்வத்துக்குச் செய்வதற்குத் தான்! இம்மாதிரிப் பல குடும்பங்கள் இன்று விவசாயத்தை விட்டு விட்டு நகர்ப்பக்கம் வந்து விட்டன.  ஆனால் விவசாயத்தை அழித்தது ஜெர்சி பசுவின் வருகையால், ஜல்லிக்கட்டுத் தடையால் என்போம். பல பெண்களும் விரும்பி மணப்பதும் வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தான்!  உள்நாட்டு மாப்பிள்ளைகள் விலை போவது கடினமாக இருக்கிறது என்பது அந்தப் பிள்ளையைப் பெற்ற பெற்றோருக்குத் தான் தெரியும்! ஆக மொத்தம் நம் விவசாயம் அழிந்ததுக்கோ, தண்ணீர்ப் பற்றாக்குறைக்கோ, அரசாங்க நிர்வாகம் சரிவர இல்லை என்பதற்கோ முழுமுதல் காரணம் நாம் தான். இந்தப் பதிவை எழுதும் என்னையும் சேர்த்து!

எங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் கோக், பெப்சி, மிரின்டா, பொவொன்டோ போன்ற பானங்களை வாங்கி அடுக்குவதில்லை. இன்னும்சொல்லப் போனால் குடிநீர் கூட வைப்பதில்லை. மண்பானையில் தான் நீர் நிரப்பிக் குடிப்போம். வீட்டுக்கு வரவங்களுக்குக் குளிர்பானம்னு கொடுப்பதில்லை. காஃபி, டீ, பால் தான். அந்தப் பாலும் நாங்க வாங்குவது பாக்கெட் பால் இல்லை. கறந்த பால் தான்.  விதி வசத்தால் பெண், பிள்ளை இருவருமே வெளிநாட்டில் வேலை நிமித்தம் வர வேண்டிய சூழ்நிலை! எங்க குடும்பத்தில் மற்ற எல்லோருமே உள்நாட்டில், இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அதுவே எங்களுக்கு வருத்தம் தான். வேறே வழி இல்லை என்று தான் பொறுத்திருக்க வேண்டி வருகிறது. 

Thursday, February 09, 2017

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இப்போதெல்லாம் மாடுகளை வைத்து உழுவதை எங்கேயானும் பார்க்க முடிகிறதா? இன்றைய குழந்தைகள் தான் அதை நம்புவார்களா? எங்கள் பேத்தி அப்புவிடம் என் கணவர் பேசிக் கொண்டிருந்தப்போ அவங்க வீட்டில் மாடு, கன்றுகள் எல்லாம் இருந்ததைப் பற்றிக் கூறியதை அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். மாடெல்லாம் வீட்டில் வைச்சுக்க முடியுமா என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே போல் சென்ற வருஷம் நவராத்திரிக்கு எங்க வீட்டுக்கு வெற்றிலை, பாக்குக்கு வந்திருந்த ஓர் இளம்பெண், நாங்க சென்னை வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த அம்மி, குழவி, கல்லுரல், குழவியைப் பார்த்து ஆச்சரியத்துடன் இது என்னத்துக்கு என்றாள். சுமார் 25 வயதுக்குள் இருக்கும் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டது. திருச்சி தான் ஊர் என்றாலும் கல்லுரல், அம்மி போன்றவற்றைப் பார்த்ததே இல்லையாம். அதே போல் தான் இப்போது உழவு மாடுகள், வண்டி மாடுகள் ஆகியனவும் காட்சிப் பொருளாக மாறி வருகின்றன.

வண்டி மாடுகள், உழவு மாடுகள் போன்றவை அடியோடு காணாமல் போக டிராக்டர்கள் மட்டும் காரணம்னு சொல்ல முடியாது. முன்பெல்லாம் அதாவது கிட்டத்தட்டப் பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்னர் வரையும் கூட அறுவடைகளை மனிதர்களே செய்து வந்தார்கள். இப்போது அதற்கும் இயந்திரம் வந்தாச்சு. அது மனிதர்களைப் போலவா அறுத்து எடுக்கும்? முன்னர் முழுமையாகக் கிடைத்து வந்த வைக்கோல் இப்போது துண்டு துண்டாக எதற்கும் லாயக்கில்லாமல் போகிறது. முழுமையாகக் கிடைக்கும் வைக்கோலைச் சரியான முறையில் பதப்படுத்தி வைக்கோல் போர்களாக வைத்திருப்பார்கள். வருஷம் முழுவதும் கால்நடைக்கு உணவாக ஆகும். இடையிடையே பருப்பு போன்றவற்றின் காய்ந்த கொடிகள் போன்றவை, அவ்வப்போது மேய்ச்சலுக்கு அனுப்புவது என்பதும் நடக்கும். கதிர் அறுத்து அதை  போரடித்த பின்னர் நெல்லை அரிசியாக்கிப் பிரித்த பின் கிடைக்கும் தவிட்டையும் மாட்டுக்குப் போடலாம். ஆனால் நவீன முறையில் தவிடு பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் கிடைப்பதாகத் தெரியவில்லை! :( இப்போதெல்லாம் தவிட்டையோ உமியையோ பார்க்கவே முடியலை. முன்பெல்லாம் பல் தேய்க்கவே உமிக்கரிதான் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தவிரப் பருப்புக்கள் விளைந்த பின்னர் கிடைக்கும் பொட்டு என்னும் தவிட்டு உமி(?)யையும் மாடுகளுக்குப் போடுவார்கள். அதிலும் எருமை மாடுகள் பொட்டு வைத்தால் தான் பால் கறக்கும்.  எனக்குத் தெரிந்து எண்பதுகளின் கடைசி வரையிலும் மாடு வைத்திருப்பவர்கள் அக்கம்பக்கம் வீடுகளில் உள்ளவர்களிடம் இருந்து கழுநீர், காய்கறிக்கழிவுகள், மிச்சம் இருக்கும் சாதம் போன்றவற்றை வாங்கி வந்து மாடுகளுக்குப் போடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கழுநீர்ப்பானை ஒன்று கட்டாயம் இருக்கும். இப்போது மாடுகள் கழுநீர் குடிக்கின்றனவா என்பதே சந்தேகம்!

பருத்திக்கொட்டையை ஊற வைத்து அரைத்து மாட்டுக்குப் போடுவார்கள். எண்ணெய் எடுத்த பின்னர் கிடைக்கும் கடலை, எள்ப் பிண்ணாக்கும் போடுவது உண்டு. எள்ளுப் பிண்ணாக்குச் சாப்பிட்டால் எருமைப்பால் தனியான வாசத்துடன் கிடைக்கும் என என் மாமனார் வீட்டில் சொல்வார்கள். அந்தப் பாலின் ருசியே தனி என்பார்கள்.  ஆனால் இப்போது எண்ணெய் ஆட்டுவதும் இயந்திரங்கள் மூலம்! ஆகவே முன்போல் பிண்ணாக்கு போன்றவை இப்போது மாடுகளுக்கு உணவாகக் கிடைப்பதில்லை. நகரங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் பலவும் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், ப்ளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை உணவாக உண்ணும் அவலம்! அதோடு இல்லாமல் பல்லாண்டுகளுக்கு முன்னரே மாடுகளைச் சினைக்கு விடும்போது இயற்கை முறையில் கருத்தரிக்க விடாமல் ஊசி மூலம் கருத்தரிக்க வைக்க ஆரம்பித்தாகி விட்டது. இதில் நாட்டு மாடுகளின் கன்றுகள் எப்படி வரும்?  அப்படியே காளைக்கன்றுகள் பிறந்தாலும் அவை மாட்டிடம் பால் குடிக்க அனுமதிப்பது மிகக் குறைவு! எத்தனை இடங்களில் வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டிகளை வைத்துக் காட்டி மாடுகளை ஏமாற்றிப் பால் கறப்பது நடக்கிறது! பசு மாட்டிற்குக் கன்று இல்லை எனில் அந்த மாட்டுப் பாலை முன்னெல்லாம் குடிக்க மாட்டார்கள். கோயில் அபிஷேஹம் போன்றவற்றிற்கும் கொடுப்பதில்லை. இப்போதெல்லாம் அவ்வளவு பார்ப்பதில்லை என்றாலும் கவர் பால் கொடுக்கவும் ஆரம்பித்து விட்டதாலும் மாடுனு ஒண்ணு இருக்கு, நமக்குப் பால் அதன் மூலம் தான் வருதுனு எண்ணமே நமக்குத் தோன்றுவதில்லை.

அப்படியே காளைக்கன்று உயிர் பிழைத்தால் கூட அதற்குச் சரியாகத் தீனி போட்டு வளர்த்துப் பொலிகாளையாக வைக்க இப்போதைய நிலையில் சாதாரணக் குடும்பத்தால் இயலாத காரியமாகவும் ஆகி விட்டது. பெரிய பெரிய மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களால் தான் முடியும் என்றாகி விட்டது. முன்னெல்லாம் மாட்டைக் கிடைக்கு விடுவது என்றொரு பழக்கம் உண்டு. ஊரில் உள்ள மாடுகளை எல்லாம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிரண்டு குடும்பங்களின் மேற்பார்வையில் பொது நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவார்கள். அவரவர் சொந்த வயலிலும் மேயும். இதன் மூலம் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைப்பதோடு அல்லாமல் மாடுகளும் இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு.  இப்போதெல்லாம் மாடுகளை மேய்க்க அனுப்பினாலும் அவை எதைச் சாப்பிடுகின்றன என்பதைக் கண்காணிப்பது சிரமம் என்னும்படிக்குக் கழிவுகள் எங்கே பார்த்தாலும் கிடக்கின்றன.

அதோடு இல்லாமல் நாட்டு மாடுகள் மூலம் அதிகபட்சமாக ஐந்து லிட்டர் வரை பால் கறக்கலாம். ஒரு சில அதிகம் கொடுக்கலாம். அதே கலப்பினப் பசுக்கள் குறிப்பாக ஜெர்சி வகைப் பசுக்கள் பால் அதிகம் கொடுக்கும். நீண்ட நாட்களும் கொடுக்கும்.  ஆகவே பெரும்பாலான மாட்டு ஆர்வலர்கள் அதிக லாபத்தை நோக்கிப் படை எடுக்க நேர்ந்தது. மாட்டைப் பராமரிக்கப் பணமும் தேவை அல்லவா? அதோடு மாட்டை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்கள் அதன் மூலம் லாபம் தானே எதிர்பார்ப்பார்கள்? அவர்களின் வாரிசுகள் அதே மாதிரி மாட்டைப் பராமரித்துக் கொண்டு இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா? வீட்டில் ஒரு செல்ல நாய் வளர்த்தாலே வீட்டுக்குடையவர்கள் வெளியே செல்வது அரிது. அப்படி இருக்கையில் மாடுகளைப் பராமரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது மாட்டை வளர்த்துப் பார்த்தால் தான் புரியும்.

காலை, மாலை இருவேளை மாட்டைப் பால் கறப்பதோடு வேலை முடியவில்லை. தொழுவத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். தினம் தொழுவத்தில் மாடுகள் போடும் சாணியை அகற்றி அவற்றை முறைப்படிப் பதப்படுத்தி, மாடுகளுக்குத் தீனியை அளவாகப் போட்டு, கழுநீர் போன்ற குடிக்கும் திரவங்கள் வைக்கும் தொட்டியை நிரப்பி, தண்ணீர்த் தொட்டியை நிரப்பி அவற்றுக்குச் சரியான நேரத்தில் தண்ணீர் காட்டி, உடலில் தோன்றும் காயங்களுக்கு மருந்திட்டு, மாட்டு உண்ணியை எடுத்து மாடுகளைச் சுத்தம் செய்து குளிப்பாட்டி, ஊரில் கால்நடைகளுக்குத் தொற்று நோய் வரும்போது அவற்றைப் பாதுகாத்து, அடிக்கடி கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டி, சரியானபடி மருந்துகளைக் கொடுத்து என ஒரு மாட்டுக்கே இவ்வளவு பாடு! மாட்டுச் சொந்தக்காரர் எங்கேயானும் பக்கத்து ஊருக்குப் போவதானால் கூட மாட்டைப் பார்த்துக்க ஓர் ஆளை நியமிக்காமல் போக முடியாது. ஆனால்   ஒரு விஷயம் ஒத்துக்கத்தான் வேணும். இந்தத் தொற்று நோய்க்குக் கலப்பின மாடுகள் எளிதில் பலியாகும். நாட்டு மாடுகள் தாக்குப் பிடிக்கும்!  அதோடு ஜெர்சி மாடுகளை இயற்கை முறையிலோ, செயற்கை முறையிலோ சினைப் பிடிக்க வைப்பதும் கடினம். நாட்டு மாடுகள் அந்த விஷயத்தில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்.

அதையும் மீறி மாடுகளை வளர்த்துப் பராமரிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனாலும் நவீன தொழில் நுட்பம், மாடு வளர்ப்பவர்களின் பிள்ளைகள், பெண்கள் படித்து வெளியூர்களில் வேலை பார்க்கச் சென்று விடுதல், அப்படியே ஊரோடு இருந்தாலும் அவர்கள் தாங்களும் மாடுகளோடு போராட விரும்புவதில்லை என்பதும் உண்மை. கௌரவம் பார்க்கும் மனிதர்களும் உண்டு.  ஆக மொத்தம் நாட்டுமாடுகள் அழிந்ததற்கோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் அழிவதற்கோ நாமே தான் காரணமே அன்றி ஜல்லிக்கட்டோ,ஏறு தழுவதலோ, ரேக்ளா ரேஸ் தடையோ காரணமே அல்ல! இன்னிக்குத் தான் என் கணவர் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அதில் நீலகண்ட தீக்ஷிதர் கலிகாலத்தில் எப்படி எல்லாம் மாற்றங்கள் வரும் என்பதைப் பட்டியல் இட்டிருக்கிறாராம். ஆகவே கலிகாலம் இது என்பதை நம் மனதில் கொண்டு நடக்கும் எல்லாவற்றுக்கும் நாமே காரணம் என்பதைப்புரிந்து கொண்டால் பிரச்னையே இல்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Monday, February 06, 2017

எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், கருத்துகள், நினைவுகள்!

எங்கள் ப்ளாக் ஶ்ரீராம், பலரிடமும் கலை, இலக்கியம், அரசியல் போன்றவற்றில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதுக்காக எழுதினது இது. இவற்றில் பலவற்றை எடிட் செய்து விட்டேன். இங்கே என் பதிவில் மீண்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கலை பற்றி அதிகம் சொல்லத் தெரியலை என்றாலும் மறைந்து கொண்டிருக்கும் பல கலைகளும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாய் நாதஸ்வரம். தமிழ்நாட்டிலேயே இன்று நாதஸ்வரம் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்குப் பதிலாகச் செண்டை மேளம் போன்றவை இடம் பெறுகின்றன. இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தான். ஆனால் தமிழ்நாட்டுக் கலைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் இருக்கணுமே! அதோடு அழிந்து கொண்டிருக்கும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்க் குதிரை ஆட்டம், தெருக்கூத்து போன்றவைகளும் அழியாமல் பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும்.

அடுத்து இளைஞர்களிடம் சினிமா மோகம் குறையணும்.சினிமா நடிகர்களின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் செய்து வீணடிக்கும் பாலை ஏழைக்குழந்தைகள் குடிப்பதற்காக வாங்கித் தரலாம். சமீபத்தில் கல்லல் இளைஞர்கள் வடிகால்களைச் சுத்தப்படுத்துவதாக முகநூலில் பார்த்தேன். அது போல் சென்னையிலும் இளைஞர்கள் நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி நீர் செல்லும் வடிகால்கள், வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.  அதன் மூலமாவது தமிழ்நாட்டு அரசியலில் ஓர் மாற்றம் ஏற்படணும். மற்றபடி அரசு கொடுக்கும் இலவசங்களை எதிர்பார்க்காமல் மக்கள் சுயமாகச் சம்பாதித்து எதையும் வாங்கிக்கணும்னு முடிவு கட்டணும். டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடணும்.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் போரடணும். சென்னை முழுவதும் குப்பைக்கூடையாக இருக்கிறது. அந்தக்குப்பைகளை ஒழிக்கணும். எல்லோரும் அவரவர் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டு மற்றவர் வீட்டு வாசலில் குப்பையைக் கொட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் எனக்குச் சொந்த அனுபவமே உண்டு. அதே போல் திறந்த சாக்கடைகள்!  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்னமும் பாதாளச் சாக்கடைகள் போட்டு ஒவ்வொரு குடியிருப்பு, வீடுகள் ஆகியவற்றின் கழிவறையையும் கழிவு நீரையும் இணைக்க ஏற்பாடு செய்யப்பட வில்லை. கிட்டத்தட்ட 1986--87 ஆம் ஆண்டு வாக்கில் நாங்க வீடு கட்டி இருக்கும் அம்பத்தூரில் பாதாளச் சாக்கடை கட்டுவதற்காக வீட்டுச் சொந்தக்காரர்களை 6,000 ரூபாய் பணம் கனரா வங்கி மூலம் செலுத்தச் சொல்லி அனைவரும் செலுத்தி இருக்கிறோம்.

இப்போது 2017 ஆம் ஆண்டு. ஆனால் இன்னமும் அம்பத்தூரில் பாதாளச் சாக்கடை இணைப்பு இல்லை. குடிநீர் இணைப்பு இல்லை. இத்தனைக்கும் சென்னைக்குக் குடி நீர் கொடுக்கும் புழல் ஏரியிலிருந்து நீர் அம்பத்தூர் வழியாகத் தான் செல்கிறது. இம்மாதிரி அடிப்படைத் தேவைகளை அந்த அந்த மாநகராட்சி உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். ஒரு மாதிரியாகச் சாலைகளை மிகவும் நன்றாகப் போட்டிருக்கிறார்கள். குப்பைகளைக் கொட்டினால் அபராதம், சாக்கடை நீரை வெளியே விட்டால் அபராதம் என்று போடுகிறார்கள். இப்படிச் செய்தால் தான் நம் மக்கள் கொஞ்சமானும் மாறுவார்கள்.  இதற்கான மாற்றங்கள் அனைவர் மனதிலும் ஏற்பட வேண்டும். மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றப் பாதையில் நாடு செல்ல மக்கள் ஒத்துழைக்கணும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

நாடு முழுவதும் பொதுவான கல்வித் திட்டமும், பள்ளிகள் திறக்கும் நாளும் நாடு முழுவதும் ஒன்று போல் இருக்க வேண்டும். மொழிப் பிரச்னை, சீதோஷ்ணப் பிரச்னை என்று இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடைமுறைக்குக் கொண்டு வரணும். ஆரம்பகால இடையூறுகள் நேரும்; நேரலாம். அதை எதிர்கொள்ள மனப்பக்குவம் மக்களுக்கு வரவேண்டும். நவோதயா பள்ளிகளைக் கிராமங்களில் வர விடுவதன் மூலம் பட்டி, தொட்டிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கல்வி நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அதிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் எல்லா மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்  பட வேண்டும். கைத்தொழில், நலிந்த கலைகள், நெசவு, தச்சு வேலை, கொல்லு வேலை போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பள்ளியிலேயே அவற்றைக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவை எல்லாம் எண்பதுகள் வரை மதுரை சேதுபதி பள்ளியில் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. நெசவுத் தொழில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் பிராமணர்கள் என்பது இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆகவே இதில் குலத் தொழில் என்ற ஒன்றைக் கொண்டு வர வேண்டியதே இல்லை!

 இதன் மூலம் இந்தத் தொழில் கற்றோருக்கு வேலை வாய்ப்புகள் பள்ளியிலேயே உருவாகும் என்பதோடு நசிந்து போன கைத் தொழில்களைப் போல் இவையும் நசியாமல் காப்பாற்றலாம். இது பார்க்கக் குலக்கல்வி போலத் தெரிந்தாலும் இது தான் நாடும், மக்களும் முன்னேற வழி. படிப்புக்குப்படிப்பும் ஆயிற்று. தொழிலும் கற்றுக் கொண்டால், அதில் காலத்துக்கேற்ற நுண்ணிய மாற்றங்களைச் செய்யவும் படிப்பு உதவும். தொழில் சார்ந்த படிப்பாக இருத்தல் நலம். யோகா, விளையாட்டு, நீதி போதனை அவரவருக்கு விருப்பமான மொழியைக் கற்றல் போன்றவையும் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு மொழி பேதத்தைக் கற்பிக்கக் கூடாது! ஶ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பள்ளிகளிலேயே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் ஆகியன பாடமாகக் கற்பிக்கப்படுவது போல் நம் தமிழ்நாட்டிலும் வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கற்கலாமே! நாம் தமிழ், தமிழ்னு முழங்குகிறோம். தமிழில் எழுதப் படிக்க மட்டும் தானே நமக்குத் தெரியும். அதே இலங்கைத் தமிழர்கள் இம்மாதிரி சைவ, வைணவ இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டும் அளவுக்குத் திறமையானவர்கள்.

தமிழ்நாட்டின்  தலையாய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னை தீர வேண்டும். முக்கியமாய்க் காவிரிப் பிரச்னை! முல்லைப் பெரியாறுப் பிரச்னை! வடமாநிலங்களின் ஜீவ நதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மஹாநதியின் தண்ணீர், பிரம்மபுத்ராவின் தண்ணீர் போன்றவை ஒவ்வொரு வருடமும் கடலில் வீணாகக்கலக்கிறது. பார்க்கப் போனால் நதி நீர் கடலில் கலப்பது விஞ்ஞான ரீதியாக நல்லதே என்றாலும் அதிக அளவு நீர் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. நம் நாட்டில் இல்லாத நீர் வளமோ, நில வளமோ இல்லை. அவற்றுக்கு என்றும் குறைவு இல்லை. முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு ஏற்று நடத்தும் தொழில்கள் சிறந்தனவா, தனியாரால் நடத்தப்படுவது சிறந்ததா என்று கேட்டால் சிலவற்றில் தனியாரின் பங்கு தேவை. ஆனால் அரசு சார்ந்த படிப்பு, தொழில், இணையச் சேவை, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலா போன்றவற்றில் அரசின் பங்கே அதிகமாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணங்களை இப்போது பட்டியலிட்டால் பெரிதாகி விடும். எல்லாத் தொழிலதிபர்களின் தொழிலிலும் அரசின் பங்கு குறிப்பிட்ட அளவு இருந்தால் நல்லது. அரசின் நேரடிக் கண்காணிப்பு அப்போது கிடைக்கும். லாப, நஷ்டக் கணக்குகளைச் சரியாகக் காட்டலாம். ஆனால் இதிலும் ஊழல் புகுந்து கொள்ள வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

அடுத்துத் தண்ணீர்ப் பிரச்னை. சுகாதாரம், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், சாலை மேம்பாடு, கால்நடைப்பராமரிப்பு. இவற்றை அந்த அந்தக் கிராம மக்களே ஊர்ப் பஞ்சாயத்தின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பொதுக்குளத்தில் குடிக்கும் நீர் மட்டுமே கொண்டு செல்லலாம். மீறித் துணி துவைத்தாலோ அல்லது குளித்தாலோ ஊர்க்கட்டுப்பாட்டின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. குளக்கரையில் காவலுக்கு ஆள் போட்டிருப்பார்கள். துணி துவைக்க, குளிக்க, மாடு, கன்றுகளைக் குளிப்பாட்ட ஊருக்கு வெளியே ஓர் குளமோ, பொதுக்கிணறோ இருக்கும். அங்கே தான் அவற்றைச் செய்ய வேண்டும். சாலைகளும் அந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்தின் மூலம் கட்டும் வரியின் வருமானத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவரவர் ஊர்ச்சாலையைப் போட்டுக் கொள்வதோடு இணைப்புச் சாலைகளையும் பக்கத்து ஊர்க்காரர்களோடு கலந்து பேசிப்போட்டுக்கொள்ள வேண்டும்.


ஊருக்கு வெளியே செல்லும் பொதுச்சாலையை மட்டும் அரசு போட்டுக் கொடுக்கலாம். தண்ணீர்க் கால்வாய்கள், வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் போன்றவற்றை ஊர் மக்களே முறை போட்டுக் கொண்டு தூர் வாரிச் சுத்தப்படுத்தினால் போதும். ஆற்றில் நீர் இல்லை என்றாலும் மணல் எடுக்கக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கல்விக்கும் இதேபோல் ஊர்க்காரர்கள் சேர்ந்து பள்ளியை நிர்வகித்தால் போதும். தங்கள் குழந்தைகள் எந்த மொழி படித்தால் நல்லது என்பதைப் பெற்றோரும், பிள்ளைகளும் மட்டும் முடிவு செய்யணும். அரசு அளிக்கும் மருத்துவ உதவியை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு சுகாதார நிலையத்தைத் துப்புரவாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். இது எல்லாம் அரசை எதிர்பார்க்காமல் நாமே செய்து கொண்டால், கிராமங்களைத் தொடர்ந்து நகரங்களும் சுத்தமாகும்.

கால்நடைகளைப் பராமரிப்பது என்பது இப்போது பெரிய விஷயமாக ஆகி விட்டது. எங்கள் மாமனாரிடமே வண்டி மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், பசுமாடுகள் என்று தொழுவம் நிறைய மாடுகள் இருந்தன. பசு மாடுகள், எருமை மாடுகள் கூட ஏர் உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அதிலும் கடலை போன்ற புஞ்சைப் பயிர் செய்பவர்கள் பசுமாட்டை உழுவதற்கு விடுவார்கள். ஏனெனில் உழவு மாடுகளைப்போல் பசு மாடுகள் விரைவாகச் செல்லாது என்பதால் கடலை விதைப்பவர்களுக்கு இது வசதி! ஆனால் இதிலும் நவீனம் புகுந்தது இல்லையா? டிராக்டர் என்னும் இயந்திரம் வந்த பின்னர் உழவு மாடுகளுக்குத் தேவை குறைந்து விட்டது.  ஆகவே காளை மாடுகளைச் சும்மாவானும் பராமரிக்க யாரும் தயாராக இல்லை. எங்கள் மாமனாரே இந்த மாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்பதுகளிலேயே விற்று விட்டார். ஏனெனில் அவருக்குப் பின் மாட்டைப் பராமரிக்க கிராமத்தில் யாரும் இல்லை.

என் கணவரும் அவருக்கு அடுத்த தம்பியும் முறையே ராஜஸ்தான், மும்பை என்று வாசம். கடைசி மைத்துனர் அப்போது ரொம்பச் சின்னப் பையர். அவரும் படித்துவிட்டுக் கிராமத்தை விட்டு வெளியே வரத் தான் துடித்துக் கொண்டிருந்தார். இப்படி அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற வெளியேற வயதான பெரியோர்கள் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இது இன்னும் தொடரும்!