எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 26, 2011

தேநீர் இடைவேளை!


பிஸ்கட், பிஸ்கட்
என்ன பிஸ்கட்,
ஜம் பிஸ்கட்
என்ன ஜம்
ராஆஆஜம்
என்ன ரா
கோ ரா
என்ன கோ
டீ கோ
என்ன டீ???

எத்தனை பேருக்கு இது தெரியும்? சின்ன வயசு விளையாட்டு. கடைசியிலே சில பெரியவங்க பசங்க கிட்டே விளையாட்டுக்கு, "பெண்டாட்டி" னு முடிப்பாங்க. ஆனால் உண்மையில் அப்போது போட்டியில் இருந்த லிப்டன் டீயோ, ப்ரூக்பாண்ட் டீயோ தான் விடையாக வரும். தேநீர் குடிப்பது அப்போதெல்லாம் தென்னிந்தியாவில் அதிலும் மதுரையில் பரவலாக்கப் படவில்லை. அதிலும் என்னை மாதிரி குழந்தைங்களுக்கு, (ஹிஹிஹி, சந்தோஷமா இருக்கு) காப்பியே கண்ணிலே காட்ட மாட்டாங்க. பெரியவங்க குடிச்சதும் அந்தக் கடைசிச் சொட்டுக் கிடைக்கும் சில சமயம். நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு அதுக்காகக் காத்திருப்போம். டீ எங்கேருந்து கொடுப்பாங்க? ஆனாலும் அரசல், புரசலா அதைப் பத்திப் பேச்சு இருந்தது. ம்ம்ம்ம்?? நான் ஒண்ணாவது படிக்கும்போது அப்போதிலிருந்து தான் நல்ல நினைவுகள் இருக்கு எனக்கு. அப்படி ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறச்சே, முதல் முதல் தேநீர் சுவைத்த நினைவு பசுமை. தம்பி கைக்குழந்தை. அண்ணாவும் நானும் தான் பள்ளிக்குப் போவோம். அப்போ ஒரு நாள் அன்னிக்கு விடுமுறையா என்னனு நினைவில் இல்லை. தெருவில் தேயிலைப் பாக்கெட்டுகள் விற்றுக்கொண்டு வருவாங்க. கூடவே ஒரு பெண்ணும் வருவாங்க. ஒரு சைகிள் ரிக்ஷா அல்லது கைவண்டியில் பொருட்கள் இருக்கும். வண்டி இழுக்கிறவர் தவிர ஒருத்தர் பொருட்களுக்குப் பாதுகாப்பாய்க் கூடவே வருவார்.

இந்தப் பெண்மணி வீடு வீடாய்ப் போய்த் தேயிலை பற்றிப் பிரசாரம் செய்து, அவங்க சம்மதித்தால் வீட்டுக்குள் போய் சமையலறையிலேயோ அல்லது, அவங்க காட்டும் அடுப்பிலேயோ, தேநீர் தயாரித்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்லுவாங்க. எப்படி இருக்குனும் கேட்பாங்க. தேயிலைப் பாக்கெட் வாங்கினால் இலவசம் எல்லாம் கொடுத்த நினைப்பு இல்லை. ஒரு பாக்கெட் வாங்கினாலே ஆறு மாசத்துக்கு வரும்னு நினைக்கிறேன். அப்போதெல்லாம் ப்ரூக் பாண்ட் இரட்டைக்குருவி போட்ட தேயிலைத் தூள் தான் ரொம்பவே பிரபலம். எங்க வீட்டுக்கும் அப்படி ஒரு பெண்மணி வந்து அப்பாவும், அம்மாவும் அநுமதித்ததும் உள்ளே வந்து அடுப்பு மூட்டி, (விறகு அடுப்பு அப்போது) தேநீர் தயாரித்துக் கொடுத்தாங்க. போட்டி போட்டுகொண்டு பாயாசம் குடிக்கிறாப் போல் குடிச்சோம். தம்பிக்குக் கிடைக்கலை. ரொம்பச் சின்னக் குழந்தை! :)

இந்தத் தேயிலை இந்தியாவுக்கு எப்போ வந்ததுனு ஒரு ஆராய்ச்சி பண்ணினால் ராமாயண காலத்திலேயே அநுமன் இமயமலைப் பகுதியிலே தூக்கிட்டு வந்த சஞ்சீவனியே இதுதான்னு சொல்றாங்க. ஆனால் விஞ்ஞான நிரூபணங்கள் இரண்டும் வேறுனு சொல்லுதாம். என்னோட ஆராய்ச்சிக் (:P) குறிப்புகள் கீழே!
ராமாயணத்திலேயே தேநீர் குடிப்பது பற்றிச் சொல்லி இருக்கிறதாய் விக்கி பீடியா கூறுகிறது. புராதன இந்தியாவின் அருணாசலப் பிரதேச மக்களும், பர்மிய மக்களும் பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தேநீர் அருந்தியதாய்ச் சொல்கின்றனர். ராமாயணத்தில் சஞ்சீவனி என்று கூறி இருப்பது தேயிலைச் செடியைத் தான் என்றும் ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் சஞ்சீவனி வேறு, தேயிலைச் செடி வேறு என விஞ்ஞான உண்மைகள் கூறுகின்றன. ஆங்கிலேயரால் தேயிலை வளர்ப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பரவலாக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த இந்தியத் தேயிலை இன்று உலகத்தரத்தில் முதன்மையான இடத்திலும் உள்ளது என்பதையும் பெருமையுடன் சொல்லலாம். ரயில்வே துறைக்குப் பின்னர் இந்தியத் தேயிலைத் தொழிலில் தான் அதிக அளவு தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்தியத் தேயிலையில் அஸ்ஸாம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப் படும் தேயிலை மிகவும் பிரபலம் என்பதோடு அதன் சுவையும் பிரமாதம். இந்தியாவின் உற்பத்தியில் 75 சதவீதம் இந்திய மக்களாலேயே ஸ்வீகரிக்கப் படுகிறது.

கடைசியா ஒரு வார்த்தை:தேநீர் குடிக்காமல் இருந்தால் மத்தியானம் தலைவலி வரும்னு விடாமல் குடிச்சுட்டு இருந்த நான் தேநீரை நிறுத்திச் சில வருஷங்கள் ஆகின்றன. எங்கேயானும் போனால் அங்கே கொடுத்தால் மறுப்புச் சொல்லாமல் குடிச்சுப்பேன். டீ போட்டுத் தரவானு கேட்டால் சரினுடுவேன். ஆனால் இப்போல்லாம் மத்தியானங்களில் சில சமயம்/ ஏன் பலசமயங்களும் ஒண்ணுமே குடிக்கிறதில்லை. அலைச்சல் இருந்தால் அப்போது வெறும் பால் சர்க்கரை தவிர்த்து. காலைக் காஃபியையும் நிறுத்தணும்.


டிஸ்கி: தலைப்பு இப்படி இருக்கணும்னு தான் கொடுத்தேன். :D

விவேகாநந்தா கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்!

அடுத்தடுத்து நீதிமன்றத்தின் எச்சரிக்கைகள் தொடர்ந்ததும், ஒரு வழியாக சென்னை மாநர(கர)கக் (எ.பி.இல்லை) காவல்துறை, கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடுவதைத் தடை செய்துள்ளது. எல்லாக் கல்லூரி மாணவர்களும் அவங்க இஷ்டத்துக்கு நினைச்ச நாள், நினைச்ச நேரம்னு கொண்டாடிட்டு இருந்தாங்க. கடந்த பதினைந்து நாட்களாய் இது தொடர் துன்பமாய் இருந்தது. இப்போ விவேகாநந்தா கல்லூரி மாணவர்களும் இதிலே சேர்ந்ததை நினைக்கையில் வருத்தமாய் இருந்தது. விவேகாநந்தரின் பெயரையே கெடுக்கிற மாதிரிச் செய்யறாங்களேனு வருந்தினோம். விவேகாநந்தா கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களையும், அவங்க பெற்றோரையும் கூப்பிட்டுப் பேசி இருக்காங்க. எல்லாக் கல்லூரிகளும் இப்படிச் செய்தால் நல்லா இருக்கும். இளம் வயது, இப்போத் தான் அன்பான பேச்சும், கனிவான நடவடிக்கையும் காட்டி நம் இஷ்டத்துக்கு அவங்களை வளைக்கலாம். கொஞ்சம் விட்டால் கடினமான எஃகு போல் ஆகிடுவாங்க. வளரும் தலைமுறை நம் கையில்.

விவேகாநந்தா கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்.

Thursday, February 24, 2011

நியாயமே இல்லாத பஸ் தினம்! :(

எப்போ ஆரம்பம்னு தெரியவில்லை. ஆனால் ஒரு அவசரமான நேரம் இந்த பஸ் டே சமயம் பயணம் செய்தபோது மிகவும் கஷ்டப் பட்டேன் என்பது உண்மை. ஒரு முக்கியமான வேலையை முடிக்க அவசரமாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது மாணவர்கள் பஸ்தினம் கொண்டாடுவதாய்ப் பேருந்துகள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து வர, மாநிலக் கல்லூரி மாணவர்கள் அவங்க கல்லூரியிலிருந்து கிளம்பி வர நடுவில் மாட்டிக்கொண்டது பொதுமக்கள். அவங்க பயணம் செய்யும் பேருந்தை அவங்க இஷ்டப்படி அன்றைக்கு என்ன வேண்டுமானாலும் செய்துக்கலாம் என்பதை யார் எப்போ, எங்கே, எப்படிச் சொல்லிக் கொடுத்தாங்கனு தெரியவில்லை. கேட்டதுக்கு இதெல்லாம் ஒரு ஜாலிதானே மேடம்னு பதில் வந்தது. ஜாலி வேண்டியதே. இல்லைனு சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களின் துன்பங்களையும் பார்க்கவேண்டுமே. எத்தனை பேருக்கு எத்தனை அவசரமோ! யார் யாருக்கு எங்கே எல்லாம் அவசரமாய்ப் போகவேண்டி இருந்ததோ! இவங்க பாட்டுக்குப் பேருந்தை நிறுத்துவதும், ஓட்டுநரையும் , நடத்துநரையும் தாங்கள் சொல்லும் இடத்துக்கு ஓட்டச் சொல்லுவதும், நிச்சயமாய்ச் சட்டத்துக்குப் புறம்பான செயல்.
கிட்டத் தட்டக் கடத்தல் தானே இது! பயணம் செய்யும் பேருந்துக்கு நன்றி செலுத்த விரும்பினால் குறிப்பிட்ட ஒருநாள் சாக்லேட் வாங்கி அந்தப் பேருந்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் வழங்கலாம். அல்லது ரோஜாப் பூ வாங்கி வழங்கலாம். இன்னும் கொஞ்சம் அதிகமாய்ச் செலவு செய்ய நினைத்தால் ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். இந்த அழகான சாலைகளிலே ஒருமுறையே நம்மால் பயணிக்க முடியவில்லை. அவங்க ஒரு நாளைக்கு எத்தனை முறை போயிட்டுப் போயிட்டு வர வேண்டி இருக்கு? அவங்களும் நம்மை மாதிரியான மனிதர்கள் தானே! அன்றைய தினம் பயணம் செய்யும் பேருந்தில் இருக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லலாமே!

அதை விட்டு விட்டு, நான் பெரியவன், எங்க கல்லூரி மாணவர்கள் வீரத்தை விட உன் கல்லூரி மாணவர்கள் வீரம் சிறந்ததா என்று போட்டி போடும் முறையில் பேருந்தைக் கடத்துவதும், அதைச் சீர் குலைப்பதும், கல், கட்டை, உருட்டுக் கட்டை போன்றவற்றால் உடைப்பதும், தடுக்க வருபவர்களையும் சேர்த்து அடிப்பதும், காவல் துறையையும் சேர்த்து அடிக்கிற வழக்கம் இப்போது வந்துவிட்டது. நீதிமன்றம் தடுக்கச் சொல்லி உத்தரவு போட்டதைத் தானே காவல் துறை நிறைவேற்றுகிறது. தடையை மீறி பஸ் டே கொண்டாடினால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற உணர்வையும், எண்ணத்தையும் மாணவர்களுக்குக் கொடுத்தது யார்? அவர்கள் மேல் கையை வைக்கவேண்டாம், கண்டிக்கவேண்டாம் என்ற கட்டளையைக் கொடுத்தது யார்? போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய்ப் பல மணி நேரம் அனைவரும் காத்திருக்கவேண்டி இருக்கிறது. இத்தகைய மாணவர்களா நம் எதிர்காலத் தூண்கள்? நம் நாட்டை இவர்கள் கையிலா ஒப்படைக்கப் போகிறோம்? கவலையாய் இருக்கிறது. அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்துவிட்டோமோ? இத்தகைய சுதந்திரத்தைத் தவறாய்ப் பயன்படுத்துகிறோம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமையை யார் மேற்கொள்ளப் போகின்றனர்? சொன்னாலும் கேட்கும் நிலையில் மாண்வர்கள் இருப்பதில்லை. கடுமையான தண்டனை என்றிருந்தால் ஒருவேளை இது நிற்கலாம்.

திருச்செங்கோட்டில் 20,000 மாணவிகள் ஒன்று சேர்ந்து பஸ் தினத்தில் அவர்கள் பயணிக்கும் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குப் பரிசுகள் கொடுத்து, பேருந்துகளை மலர்மாலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும் அலங்கரித்து அமைதியான முறையில் கொண்டாடி இருக்கும் செய்தியும் வந்தது. அப்படிச் செய்திருக்கலாமே! நமக்குப் பிடிச்சவங்க பிறந்த நாள் அன்று அவங்களை நாம் அடிக்கிறோமா? சண்டை போடறோமா? இல்லையே? பரிசுப் பொருட்கள் தானே வாங்கித் தரோம்? அப்படி இருக்கும்போது நம்முடைய அப்பாவும், அம்மாவும் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தில் நம்மையும் படிக்க வைப்பதோடு, நாட்டுக்கு வரியையும் ஒழுங்காய்ச் செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தில், நம் ரத்தத்தில் வாங்கிய பேருந்தை எரிப்பது என்ன நியாயம்? பொன்னான நேரமும் அல்லவோ வீணாகின்றது?? அந்த ஒருநாளில் எத்தனை பேருக்கு எத்தனை வேலைகள் ஆகாமல் நஷ்டமும், கஷ்டமும் பட்டனரோ! எனக்குத் தெரிந்து சென்னையில் மட்டுமே இத்தகைய அக்கிரமங்கள் நடக்கிறது. மற்ற எங்கும் இருப்பதாய்த் தெரியவில்லை.

Tuesday, February 22, 2011

நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம்,

அடுக்கு மாடி வேற வயத்த கல்க்கினது . என்ன செய்ய ? வேலைல மனசை செலுத்திண்டு இருந்தேன்
patients ஐ விட்டுட்டு வெளீயவும் நாங்க யாரும் வரமுடியாது. shallowquake .அப்பா ஆட்டிடுத்து.Patients எல்லாம் post operative. ஓவ்வொருத்தரும் ஹெல்ப் லெஸ்ஸா நடுங்கினதை பார்க்க கஷ்ட்டமா இருந்தது. இயற்க்கைக்கு இப்படி ஒரு கோவமா. என்ன உக்கிரம் vicious:(( life - how fragile it is . How much we strive for it
. May God Bless
Sai Ram
Jayashree//

இது ஜெயஸ்ரீ அவர்கள் எனக்குக் கொடுத்த தனி மடலின் ஒரு பகுதி. அங்கே எல்லாரும் ரொம்பவே கஷ்டப் படறதா ஏற்கெனவே பின்னூட்டம் வேறே கொடுத்திருக்காங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. திரும்பத் திரும்ப நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரம் பாதிக்கப் படுகிறது. எங்கே வந்தாலும் கஷ்டம் தான். இயற்கையின் சீற்றம் எங்கேயும் வரவேண்டாம். ஆனால் மனதுக்கு அண்மையானவர்களுக்கு ஒரு துன்பம் என்னும்போது தாங்கிக்கொள்ளக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை. ஜெயஸ்ரீ குடும்பம் மட்டுமல்லாமல் நம்மோட துளசியின் மகளும் அங்கே இருந்தார். அவங்களுக்கும் பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். அனைவரின் நலத்துக்கும் இயற்கை அன்னையின் கோபம் குறைந்து சாந்தம் அடையவும் பிரார்த்தனைகள்.

சற்று நேரம் முன் தொலைக்காட்சியில் பார்க்கும்போதே குலை நடுங்கியது. துளசியின் மகள் நலம் என்று மடல் கொடுத்திருக்கார். அனைவரின் சுகத்திற்கும் பிரார்த்திப்போம்.

காத்தாடி சுத்தலாமா?

திவா விட்ட காத்தாடி இங்கே

ஒரு நாலைந்து நாள் இணையத்திலே இல்லைன்னது என்னல்லாம் நடக்குது பாருங்க! திவா காத்தாடி விட்டுட்டு இருந்திருக்கார். திடீர்னு காத்தாடி விட ஆரம்பிச்சுட்டாரே, என்னடா இதுனு போய்ப் பார்த்தேனா! உடனேயே எனக்கும் மலரும் நினைவுகள். பனை ஓலையிலேயும் காத்தாடி பண்ணியதுண்டு. அந்தக் காத்தாடியிலே ஒரு குண்டூசியைக் குத்திப் பூந்துடைப்பக் குச்சியின் உள்ளே வெண்மையாகச் சதைப்பற்றுத் தெரியும் இடத்திலே லேசாய்க் குத்திட்டு ஓடினோமானால் காத்தாடி உங்க ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்றாற்போல் சுத்தும். நானெல்லாம் ஓட முடிஞ்சதில்லை. அப்பா விடமாட்டார். (க்ர்ர்ர்ர்ர்ர்) ஸ்கூல்லே ஓடினதோட சரி. திவா விட்ட இந்தக் காத்தாடியைப் போலக் கலர்பேப்பரிலே, ஜிகினா பேப்பரிலேனு பண்ணினதும் உண்டு. பள்ளியிலே படிக்கும்போது இந்தக் காத்தாடியைக் கையாலேயே அவங்க அவங்க தானே பண்ணி எடுத்துட்டுப் போகணும். அதோட டீச்சர் வேறே பேப்பர் எல்லாம் கொடுத்துக் கத்திரிக்கோலையும் கொடுத்துச் செய்து காட்டவும் சொல்வாங்க. அப்படி ஒரு சமயம் பண்ணின காத்தாடியைத் தம்பி விளையாடக் கேட்டான். நமக்குத் தான் எப்போவுமே தம்பினா ஒரு தனிப் பாசம் ஆச்சா! சரினு கொடுத்தேன்.

மேலாவணி மூலவீதியிலே ஏழாம் நம்பர் வீட்டிலே குடி இருந்தோம். அப்போத் தான் சிவாஜியோட படமான "பார்மகளே பார்!" அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிட்டு இருந்தது. அப்பா சிவாஜி ரசிகர். படம் பார்த்துட்டு எங்களுக்கெல்லாம் கதை சொல்லி இருந்தார். நாங்கல்லாம் பார்க்கலை. அப்படி எல்லாம் உடனே அனுப்பிட மாட்டார். படத்தைத் தியேட்டரிலிருந்து தூக்கப் போறாங்கனு தெரிஞ்சதும் கடைசி நாள் போவோம். அதனால் நாங்க பார்க்க இன்னும் நிறைய நாட்கள் இருந்தன. ஆனால் பாட்டுக்கள் மதுரை முழுதும் ஒலித்துக்கொண்டிருந்தன. அதிலே அவள் பறந்து போனாளே! பாட்டு ரொம்பவே பிரபலம். அவள் எனக்கா மகளானாள், நான் அவளின் மகனானேன். அப்படினு டிஎம் எஸ். குரலிலே காட்டி இருக்கும் உருக்கம் கேட்கும்போதே உருக வைக்கும். பார்க்காத படம் வேறே, என்னதான் கதை தெரிஞ்சாலும் நிறையக் கற்பனைகள்.

அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு தம்பி நான் கொடுத்த காத்தாடியை வலக்கையில் வைத்துக்கொண்டு கையை நீட்டிய வண்ணம் முதல் நம்பர் வீட்டிலே இருந்து தெருவின் ஒரு பகுதிக் கடைசியில் இருக்கும் பிள்ளையார் கோயில் வரையிலும் போயிட்டுத் திரும்பி வடக்கே எங்க வீடு இருக்கும் பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான். மறுநாள் அவனுக்குத் தேர்வு ஏதோ இருந்தது. நான் வீட்டு வாசலில் நின்று கொண்டு தம்பி காத்தாடி விடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்பா மீனாக்ஷி கோயிலில் வழக்கமான தரிசனத்தின் பின் வந்து கொண்டிருந்தார. நடுவில் எதிர்சாரியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போயிருந்ததால் எங்களுக்குத் தெரியவில்லை. இல்லைனா இந்தப் பூனையும் பாலைக்குடிக்குமானு வீட்டுக்குள்ளே இருந்திருப்போம். பெரியப்பா வீட்டு வாசலில் நின்னுட்டுத் தம்பி அங்கே உள்ளே இருக்கும் எங்க பெரியப்பா பொண்ணு கிட்டேக் காத்தாடியைக் காட்டி வம்பு பண்ண, அவளோ, (இப்போ அவ இல்லை) ஜாடை காட்டறா, எங்க அப்பா உள்ளே இருக்கார்னு, நாம தான் மு.மு. ஆச்சே புரியலை.

இன்னும் பாட்டு ஓங்கி வரத் தம்பியும் கிளம்ப, காத்தாடியும் கிளம்ப தம்பி குரலைக்கேட்டு அப்பாவும் கிளம்ப, பளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர் தம்பி முதுகு பழுக்க. ஆஹா, அவள் என்ன பறந்தா வந்து முதுகிலே அடிச்சுட்டா? திகைத்த தம்பி திரும்பிப் பார்க்க மாட்டிக்கப் போறோம்னு தெரிஞ்சு நான் உள்ளே போக முயல, அதைக் கவனிச்ச அப்பாவின் கழுகுக் கண்கள், தம்பியைப் படிக்க வைக்காமல் விளையாட விட்ட என்னைத் திட்டனு ஒரே அல்லோல கல்லோலம். ஹிஹி, எனக்குப் பரிக்ஷை எல்லாம் மார்ச் மாசமே முடிஞ்சுடும். சேதுபதி பள்ளியில் தான் ஏப்ரல் கடைசி வரை இழுத்தடிப்பாங்க. அதுக்கு நான் என்ன செய்யறது? :D ஆனால் அது ஒரு மறக்கமுடியா அநுபவம். இப்போவும் அவள் பறந்து போனாளே என்று பாட்டு கேட்கும்போது நினைவு வரதோடு இல்லாமல், நாங்க மூணு பேரும் சேர்ந்திருக்கும்ப்போதும் சொல்லிச் சொல்லிச் சிரிச்சுப்போம்.

டிஸ்கி: மறந்துட்டேனே, அப்புறம் எனக்குக் குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்குக் காத்தாடியை என்னோட மாமனாரோ, மாமியாரோ செய்து கொடுப்பாங்க. அழகாயும் இருக்கும். நல்லாவும் சுத்தும்.

Sunday, February 13, 2011

உள்ளம் என்னும் கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா!

அன்பு என்னும் பண்பு மட்டும் என்றும் ஒரே தன்மையாகவே இருந்து வருவதாகும். எப்போதும் மனதுக்கு இன்பம் அளிக்கும். மற்றக் கஷ்டங்களை எல்லாம் துச்சமாய் நினைக்கவைக்கும். சகித்துக்கொள்ளும் வல்லமையைத் தரும். அன்பு மனிதவாழ்க்கையின் ஒரு பொக்கிஷமாகும். அந்த பொக்கிஷத்தை அடைந்தவர்களுக்கு மற்றக் கஷ்டங்கள் துச்சமாயும், தூசியாகவும் தெரியும். ஆகவே இந்த அன்பு என்னும் வற்றாத ஜீவநதியைப் பொங்கிப் பெருகி ஓட வைக்கும் ஓர் நாளே நாளைய தினம் பெப்ரவரி பதினான்காம் தேதி. இது காதலர்க்கு மட்டும் உரியதினமன்று. காதல் என்றாலே அன்பு என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். காதல் யாரிடம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்ன?? ஆச்சரியமாய் இருக்கிறதா? உண்மை அதுதான். காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் இன்றைய தினங்களில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் தனிப்பட்ட அன்பை, சிநேகிதத்தைக் குறித்தாலும், இதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னர் திருஞானசம்பந்தர், ஈசனிடம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இருப்பதை அறிவோமல்லவா?

""காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. ""

ஆண்டாளும் ரங்கநாதர் மேல் காதல்தான் கொண்டாள். அவள் பெண் என்பதால் அவளுடைய காதலில் சற்று வேறுபாடுகள் கூறப்பட்டாலும் இவ்வுலக வாழ்க்கையை அவள் விரும்பவில்லை என்பது தெளிவு. இறைவனிடம் கொண்ட மாறா பக்தியைத் தான் காதல் என்றும் கூறி வந்திருக்கின்றனர். அதே சமயம் கணவன், மனைவி மேல் கொண்ட அன்பு, உடன்பிறந்தோர் சக உடன்பிறந்தோரிடம் கொள்ளும் அன்பு, மாணவன் ஆசிரியருக்குக் காட்டும் மரியாதை கலந்த அன்பு, நண்பர்களின் அன்பு, சிநேகிதிகளின் அன்பு, வீட்டுப் பெரிய்வர்களிடம் காட்டும் அன்பு, சக மனிதர்களிடம் காட்டும் மனித நேயம் கலந்த அன்பு, என அன்பை வெளிப்படுத்தும் ஓர் தினமே நாளைய தினம்.

வெளிநாட்டில் இருந்து எல்லாக் கலாசாரங்களையும் அப்படியே பின்பற்றும் நாம் அவர்களின் இந்த உயரிய பண்பைப் பின்பற்றாமல் வெறும் காதலர்களுக்கு மட்டுமே என ஊடகங்களால் கற்பிக்கப் பட்டு, வணிகர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு நாளைய தினம் ரோஜாப்பூக்களின் விலை எக்கச்சக்கமாய் இருக்கும், பரிசுப் பொருட்கள், மழையெனப் பொழியும், எங்கே சென்றாலும் இளம் காதலர்கள் ஜோடியாகச் செல்வார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களில் நிரம்பிவழியும் வண்ணம் போதையுடன் கூடிய டிஸ்கோ பாடல்களும், ஆடல்களுமாக அமர்க்களப்படும். ஒரு வாரமாக எஸ்.எம்.எஸ்ஸில் நாளைய தினம் சலுகைகள் எதுவும் கிடையாது என்ற அறிவிப்பு வந்த வண்ணமாக இருக்கிறது. அப்படி என்றால் எத்தனை எஸ்.எம்.எஸ்.கள் போகும் என நினைக்கவே அச்சமாய் இருக்கிறது.

இது நம்முடைய கலாசாரமே அல்ல. என்றாலும் பின்பற்றத் தொடங்கியவர்களை நிறுத்தச் சொல்வதும் என்னுடைய வேலை அன்று. நாளை உங்கள் காதலியிடமோ, காதலரிடமோ காட்டப் போகும் அன்பை அதை வெளிப்படுத்தும் முன்னர் முதலில் உங்கள் குடும்ப அங்கத்தினரிடம் காட்டுங்கள். உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என அவருக்கு வெளிப்படுத்துங்கள். தாய்க்கு நாளைய தினம் உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். சகோதரனோ, சகோதரியோ இருந்தால் அல்லது அக்கம்பக்கத்தினருக்கு நாளைய தினம் சிறு உதவி ஏதாவது செய்வது என முடிவு செய்து கொள்ளுங்கள். அவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவது இப்படித்தான். பேருந்திலோ, ஆட்டோவிலோ பயணிக்க நேர்ந்தால் அதன் நடத்துநரிடமோ, ஓட்டுநரிடமோ நன்றி கூறி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

வெகு தூரப் பயணத்தின் முடிவில் நாங்கள் ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ நன்றி கூறி விடைபெறுவதை வழக்கமாய் வைத்திருக்கிறோம். ஏனெனில் நம்முடைய சாலைகளின் தரத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் ஓட்டிக்கொண்டும் பேருந்தை நடத்திக்கொண்டும் நாம் செல்லவேண்டிய இடத்துக்குக் கூட்டிச் செல்லுவதில் அவர்கள் உயிரையும் சேர்த்துப் பணயம் வைக்கின்றனர். இங்கே மாநரகப் பேருந்தில் மட்டும் என்ன வாழ்ந்தது? அது இன்னும் கொடுமை! அவர்களும் மனிதர்கள் தாமே? ஆகவே நம் கண்ணில் பட்ட தெரிந்த நபர்களுக்கு எல்லாம் நன்றியைத் தெரிவிக்கலாம். நம் அன்பை இப்படி வெளிப்படுத்தலாம். அவர்கள் மனம் மகிழ்வது உங்கள் மனம் மட்டுமல்ல வயிறும் நிறைந்திருக்கும், முயன்று பாருங்கள். பெரிய விருந்தே சாப்பிட்டாற் போன்ற உணர்வு வரும். வங்கிக்குப் போனால் வங்கி ஊழியர், காய்கறி வாங்கும் கீரைக்காரி, பால் ஊற்றும் பால்காரர் என நாம் நேசிக்கவும் அன்பு காட்டவும் இந்த உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. மறவாதீர்கள்.

சொல்ல மறந்துட்டேனே, வெளிநாடுகளில் இது அன்பைக் காட்டும் ஒரு தினமே. எங்கே சென்றாலும் தெரிந்தவரோ, தெரியாதவரோ நாளைய தினம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். குழந்தைகள் அவர்கள் ஆசிரியர், சக மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். வாழ்த்து அட்டையைக்கைகளால் தயாரித்துக் கொடுப்பது அங்கே மிகவும் பெருமையான ஒன்றாகும். எங்கள் அப்பு கூட இதற்கென ஒரு பேப்பர் தயார் செய்து அதிலே அதற்குத் தெரிந்தவரையிலும் வண்ணம் அடித்து அவங்க வகுப்பு ஆசிரியருக்குக் கொடுக்கப்போகிறது. அப்புவின் வயது மூன்று. ஆக இது காதலருக்கு மட்டுமான தினம் அல்ல என்பது புரிந்ததா? என்னையும் கூப்பிட்டு நாளைக்கு அப்பு வாழ்த்துச் சொல்லும்! என்னிடம் உள்ள அன்பை அது வாழ்த்துச் சொல்லுவதன் மூலம் வெளிப்படுத்தும். ஆகவே நாளைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் தம் தம் சகோதர அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம்.

கொசுவத்திதான் சுத்தி இருக்கேன்!

No New Years Day //stevie wonder's music/

I just call to sayyyyy how much I care for you//

நேத்திலேருந்து இதுவே சுத்திட்டு இருக்கு! எப்படி நிறுத்தலாம்?? எங்கேயோ யாரோ போட்டுக் கேட்டுட்டு இருந்திருக்காங்க. பல வருஷங்கள் கழிச்சு மீள்பதிவு மாதிரி, மீள் நினைவுகள். எங்க பொண்ணோடயும், பையரோடயும் போட்டி போட்டுட்டுக் கேட்டது, பிரனாய் ராயின் The World This Week ல் அறிமுகம் ஆன Khaled arabic song didi didi னு எல்லாம் நினைவில் வந்தது. உடனேயே தேடிப் பிடிச்சு நெட் வொர்க் சார்ட்டில் இருந்த பழைய பாடல்களை எல்லாம் மறுபடி கேட்கணும்போல இருந்தது. எங்கே வச்சிருக்கோம்னு நினைவிலே இல்லை. நோ நியூ இயர்ஸ் டே பாட்டை எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும். மனதை உருக்கும் குரல். இது மாதிரி சில தமிழ்ப்பாடல்களும் உண்டு. அதிலே சிட்டுக்குருவி பாடுது, தன் பெட்டைத்துணையைத் தேடுது பாடலை நேத்திக்கு யாரோ சத்தமா ஒலிபரப்பிட்டு இருந்தாங்க. அதிலே வரும் ஹம்மிங், ம்ஹும் என்ன ஒரு இனிமையான அர்த்தம் பொதிந்த குரல்!

இந்த அவசரத்திலே போன மாசம் கடலைமிட்டாய் கடன்வாங்கின என்னோட ரங்க்ஸ் அதைச் சிதம்பரத்திலேயே திருப்பிக் கொடுத்ததைக் கூட மறந்துட்டேன்னா பாருங்களேன்! ஹிஹிஹி, கடலை மிட்டாய் கடன் கொடுத்திருக்கீங்க?? நாங்க கொடுத்துப்போம்! ம்ம்ம்ம்ம்ம் காக்காய்க் கடின்னா என்னனு தெரியுமோ? சின்ன வயசிலே ஆரம்பப் பள்ளிக்கூடம் படிக்கும்போது வாசல்லே விற்கும் சுக்கு மிட்டாய்த் தாத்தா கிட்டே வாங்கின காலணாவுக்கு மூணு சுக்கு மிட்டாயை பத்துப் பேர் பங்கு போட்டுக்கும்போது பாவாடையால் மிட்டாயை மூடிக்கொண்டோ அல்லது கைக்குட்டையில் வைச்சு மூடிக்கொண்டே பற்கள் நேரடியாய்ப் படாமல் மிட்டாயைக் கடித்துப் பங்கு போட்டுப்போம். நேரடியாய்ப் பற்கள் பட்டால் எச்சல், ஒருத்தரோடது இன்னொருத்தருக்கு ஒத்துக்காதுனு இப்படிப் பண்ணி இருக்கோம். ம்ம்ம்ம்ம் அதெல்லாம் அந்தக் காலம். என்னவோ எழுத வந்துட்டு என்னவோ எழுதிட்டேனோ?? எல்லாம் கொசுவத்தி வச்சாரா? அந்த நினைவு! நானும் கன்னாபின்னானு சுத்திட்டேன். வரேன் அப்புறமா. நேத்திக்குப் பதிவே போகலை. இப்போ இந்த மொக்கை போகும் பாருங்க!

Tuesday, February 08, 2011

நீ தானா அந்தக் குயில்? கூகிளின் கேள்வி!

நேத்திக்கு மத்தியானமா மின் தமிழ்க் குழுமத்தின் பழைய மடல் ஒன்றைத் தேட வேண்டி இருந்தது. அக்டோபர் மாதத்து இழை அது. இழையோட தலைப்பைக் கொடுத்துத் தேடினால் அதன் முதல் பகுதி மட்டுமே வருது. இரண்டுனு எண்ணைக் கொடுத்தும் தேடினாக் கிடைக்கவே இல்லை. சரினு குழுமத்துக்குள்ளே போய் எல்லா விவாத இழைகளையும் திறந்து கொண்டு, அக்டோபர் மாத இழையின் தலைப்பைக் கொடுத்துத் தேடினேன். அப்படியும் அந்தக் குறிப்பிட்ட இழை மட்டும் வரவில்லை. இனி வேறு வழி இல்லை. பின்னாலே போய்த் தான் தேடணும் போலிருக்குனு பழைய இழைக்குக் கொடுத்திருக்கும் oldest க்ளிக் பண்ணினால் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பழைய இழையாய் வந்துடுச்சு! க்ர்ர்ர்ர்ர்னு திட்டிட்டு பின்னாலே போகவேண்டாம், முன்னாலே இருந்து பின்னாலே போகலாம்னு முடிவு செய்து பெப்ரவரியில் இருந்து ஒவ்வொரு மாசமாப் பின்னாலே போனேன். டிசம்பர் வந்துடுச்சு. டண்டடண்டடய்ங்க்க்க்க்க்க்க்க்! டிசம்பர் முடிஞ்சு, நவம்பருக்குப் போகணும். அதுக்குப் பதிலா என்ன வந்ததுனு நினைக்கறீங்க?

நீ தானா அந்தக் குயில்? அப்படினு கூகிள் பாட்டுப் பாடுது! ஹிஹிஹி! கூகிள் திட்ட ஆரம்பிச்சுடுச்சு. மனசே சரியில்லை! என்ன சொன்னதுன்னா, "ரொம்ப நேரமா இந்தக் குழுமத்தோட விவாத இழைகளிலே இந்தக் குறிப்பிட்ட ஐ.பி.யிலே இருந்து யாரோ விளையாடறாங்க போலிருக்கே! அது நீ இல்லைனு நம்பறோம். வேறு யாரோவா இருக்கும்னு சந்தேகமா இருக்கே, கொஞ்சம் நடந்து காட்டு! சீச்சீ, கொஞ்சம் இந்த word verification எழுதிக் காட்டு"னு சொல்லிடுச்சு. சிக்கலான வேர்ட் வெரிபிகேஷன்! எல்லாம் நேரம்! ஆடிப்போயிட்டேன் இல்ல! தேடறது நான் தான்னு சொல்றதுக்காக என்னோட விதியை நொந்து கொண்டே வேர்ட் வெரிபிகேஷனை முடிச்சேன். அப்ப்ப்ப்ப்பாடா! முதல் அட்டெம்ப்டிலேயே பாஸ்ஸ்ஸ் டிஸ்டிங்ஷனோட. அப்புறமா சரி, நீ தான் அந்தக் குயில்னு சொல்லிட்டு கூகிள் பின் வாங்கிடுச்சு. அப்பா, எவ்வளவு சந்தேகப் பிராணி? :P

இப்போ என்னோட சந்தேகம் இம்மாதிரி யாருக்கானும் ஏற்பட்டிருக்கா? (இந்த விசித்திரம் எல்லாம் உங்களுக்குத் தான் ஏற்படும்னு சொல்லுறது புரியுது) இருந்தாலும் இது ஏன் ஏற்படுகிறது. இப்போ எனக்கு ஒரு குழுமத்தின் ஆறு மாசத்துக்கு முந்திய இழை அவசரமாத் தேவைன்னா எப்படித் தேடறது? இழையின் தலைப்புக் கொடுத்துத் தேடினாலும் பல சமயங்களிலும் கிடைக்கறதில்லை. சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டு வாங்கறேன். அவங்களுக்கு சேமிப்பில் வைச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். உடனே அனுப்பிடறாங்க. ஆனால் அவங்களை உடனடியாத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தால் என்ன செய்யறது? அல்லது அவங்க கிட்டேயும் அந்த இழை இல்லைனா என்ன செய்யறது? எப்படித் தேடணும்?

யாருங்க அங்கே தொழில் நுட்பக் குழுவோட ஆட்களை உடனடியாகக் கூட்டி இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விபரமாய் அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லுங்க. ஏன்னா அடிக்கடி இப்படித் தேடறேன், தேடறேன், தேடிக்கொண்டே இருக்கேன்! தேடாமல் கிடைக்க என்ன வழி?

Monday, February 07, 2011

என்ன சொன்னாலும் காதிலே போட்டுக்காதீங்க! :)


நம் வாழ்க்கையில் நமக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு அனுபவ
பாடமாகவே அமைகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்வு

என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக
திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக
பழகுவார்கள் ,

ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும்
ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு
சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி
போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் )
மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத்
தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு
சேர்த்தது.

இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என்
வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம்
ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண்
என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம்
முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம்
காண்பித்தீர்களா என்றேன்
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை
அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை
உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக்
கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும்
இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு
சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து
உட்கார்ந்தேன்.

திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன்.
அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள்
என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள்.
நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு
நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள்.
பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.

ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை
அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற
பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள்
காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின்
உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க
திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை
கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள்
என்பதும் புரிந்தது.ஆனால் அந்தப் பெண் நினைத்தாற்போல திருகாணி
தொலையவில்லை,அவள்காதின் உட்புறமாக சென்று
மாட்டிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும்
வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள்
எனபது புரிந்து போயிற்று. ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த
திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி
பொறுத்துக்கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற
விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி
அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க
திருகாணியைக் கழற்றவேண்டும்.

நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம்
சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை
விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும்
ஒப்புக்கொண்டார்.

பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை
என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப்
பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி
வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக
அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு
போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து,
முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான்
திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால்
எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.

அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும்
மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும்
அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும்
மகிழ்ந்தோம்.

காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று
முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி
அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை
அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே
இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள்
பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?

முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத்
தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது
இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே
பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து
கொடுத்திருக்கிறேன்

ஆகவே எப்போதுமே
” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப

”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ” என்று உணர்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

டிஸ்கி: நண்பர் தமிழ்த்தேனீயின் நண்பர் மனைவிக்கு நடந்ததை மேலே விவரித்திருக்கிறார். இன்று பல பெண்களும் காதின் மெல்லிய மடலைக் குத்திக்கொண்டு விதவிதமாய் மாட்டிக்கொள்ளும்போது கவனம் தேவை. தேவை இல்லாமல் வம்பை நாமே விலைக்கு வாங்கிக்கொள்ளவேண்டாமே?