எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 28, 2023

தாத்தாவை நினைவு கூர்வோம்!

 உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்பு

உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.


சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.


இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.


சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.


நன்றி விக்கிபீடியா

சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.


இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.


தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்

Friday, April 21, 2023

மாறி வருவது உலகமா? மனிதர்களா?

 விலைவாசி எல்லாமே அதிக பக்ஷமாக 100% ஏறி இருக்கும் போல! ஜனவரியில் 75 ரூபாய்க்கு விற்ற எள்ளுருண்டைகள் இப்போ 120 ரூபாய்க்கு விற்கிறது. இனிப்புப் பண்டங்கள் எல்லாமும் கிலோ  500 ரூக்கு விற்கின்றன. உணவுப் பண்டங்கள், தேநீர் எல்லாமும் விலை அதிகரித்துள்ளது. இதற்கான அடிப்படைப் பண்டங்கள் விலையும் கூடி இருக்கணும். அதைப் பார்க்கணும். ஆனால் பெரிய அளவில் இதற்காக யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது எனக்கு அதிசயமாகவே இருக்கு. எரிவாயு விலை கூடிக் கொண்டே போவதற்கும் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கொஞ்சம் கத்துவதோடு சரி. பொதுமக்களிடமிருந்து ஏன் எதிர்ப்பே காணோம்? 

இக்காலத்துப் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதே புரியலை. சமீபத்தில் கேள்விப் பட்ட செய்திகளில் இருந்து பெண்கள் திருமணத்துக்கு முன்னரே எக்கச்சக்கமாக நிபந்தனைகள் விதிக்கின்றனர். கணவனாக வரப் போகிறவன் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தான் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தால் உடனே எடுத்துப் பேசணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். அதோடு இல்லாமல் தனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார் மாமியார் கூடவே இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்களின் பெற்றோர் பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் கணவனுடன் பேசுவதில் இருந்து எல்லாமும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும். அவங்க ஆலோசனைகளைக் கேட்டுத்தான் தன் குடும்பத்தில் எல்லாமும் செய்வார்கள். இதில் மாமியார், மாமனார் வெளி ஆட்கள். அவங்க தலையிடக் கூடாது.

இவங்களுக்கு எல்லாம் கூடப் பிறந்த ஆண் சகோதரர் இருந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் இதே போல் நிபந்தனைகள் விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பெண்களாகவே இருக்காங்க. அவங்களுக்குக் கூடப் பிறந்தவங்க இல்லை என்பதால் எதிலும் தான், தனது என்னும் நினைப்பே முன்னால் நிற்கிறது. கணவனும் ஓர் மனிதன் அவனுக்கும் பெற்றோர் உண்டு; பாசம் இருக்கும் என்பதோடு பெற்றோரைப் பார்த்துக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைப்பே வரதில்லை.

இந்தப் பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததோ அல்லது யாரேனும் கூடப் பிறந்தவங்க நிறையப் பேர் இருந்து அவங்களுக்குச் செய்ததோ அவங்க வாழ்க்கை மூலம் இதெல்லாம் தெரிந்து கொண்டார்கள் என்பதோ இல்லை. அப்படி இருக்கையில் அவங்களுக்கெல்லாம் எப்படித் திருமணம் நிச்சயம் ஆகும்போதே மாமனார்/மாமியார் வேண்டாதவங்க என்னும் எண்ணம் உண்டாகிறது? அவங்களைப் பார்த்துப் பழகி அவங்க குணம் பிடிக்கலைன்னா ஒத்துக்கலாம். பார்ப்பதே இவங்க நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தான். அப்போவே இவங்களால் எப்படி இம்மாதிரி எல்லாம் முடிவுக்கு வர முடியுது? பெண்கள் தங்களுடைய விட்டுக்கொடுத்தல், அனுசரித்துப் போதல் இதை எல்லாம் கடைப்பிடிப்பதே இப்போதெல்லாம் அவமானம் என நினைக்கின்றனர். 

இன்னொருவர் சொல்லி இருந்தார். குழந்தை பிறந்தாலும் கூட இவங்க எல்லாம் அந்தக் குழந்தையை முழு மனதோடு பராமரிப்பதும் இல்லை என்பதே! பெரும்பாலான பெண்கள் மொபைல் மோகத்திலும் டிக்டாக்கிலும், ஸ்ம்யூல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று அதைச் சமூகத் தளங்களில் வெளியிடுவதிலும் உள்ள ஆர்வத்தை வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் காட்டுவதே இல்லை. முக்கியமாக அவங்க இன்னொரு மொபைல் வாங்கிக் குழந்தைக்கும் அதைப் பார்க்கப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். குழந்தை அழுதால் போதும் மொபைலை ஆன் பண்ணிக் குழந்தை கையில் கொடுத்துவிட்டு இவங்க தங்கள் வேலைகளில் மூழ்கி விடுகின்றனர். இது நெருங்கிய நண்பர் ஒருத்தர் வீட்டில் அவர் மருமகள் செய்வது என மனம் நொந்து போய்ச் சொல்லி இருந்தார்.

அதோடு மொபைல் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்குச் சூடு அதிகம் ஆகிக் கண்களை அவை பாதிக்கும் அவலமும் ஏற்படுகிறது. முகநூலில் ஒரு நண்பரின் பேத்திக் காலை எழுந்ததும் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்பட்டுக் குழந்தையால் பத்து மணி வரை கண்களைத் திறக்க முடியலை எனவும் பின்னர் மருத்துவரிடம்போனதில் அவர் சோதனை செய்துவிட்டு மொபைல் அதிகம் பார்ப்பதால் ஏற்பட்ட விளைவு எனவும் மொபைல் பார்ப்பதைக் குறைக்குமாறும் அறிவுரை சொல்லி இருக்கார்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியில் பெண்கள் பெரும்பாலும் சமைப்பதே இல்லை எனவும் ஸ்விகி, ஜொமோட்டோ மூலமே உணவுப் பண்டங்களை வாங்கிக்கறாங்க என்பதும் தெரிய வருகிறது. இவை எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிடும் குழந்தைகளுக்கு விரைவில் உடல் பருமன் ஆகிவிடுகிறது என்பதோடு பத்து வயதுக்குள் பூப்பும் அடைந்து விடுகின்றனர். எவ்வளவு தொல்லை இது என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  நாங்க இந்த ஸ்விகி, ஜொமோட்டோவுக்கே போவதில்லை. வெளியில் வாங்குவது என்றாலும் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் உணவு தான் எங்களுக்கு ஒத்துக்கும். எனக்கு முடியலைனா அங்கே போய் வாங்கி வருவோம். அதிலும் பெரும்பாலும் இட்லிதான்.

இதை எல்லாம் பார்த்தும் கேட்டும், படித்தும் அனுப்வரீதியாக அனுபவங்கள் அடைந்தும் வருவதால் இனி வரப்போகும் சமுதாயம் எத்தகையதொரு நிலைமையில் இருக்கும் என்பதை எண்ணினால் மனம் சஞ்சலம் அடைகிறது. என்ன ஒண்ணு! இதை எல்லாம் பார்க்க  நாங்கல்லாம் இருக்க மாட்டோம். 

Sunday, April 16, 2023

ஏமாறச் சொல்வது நானோ?

 நேற்று என்னோட மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. 8453234693 என்னும் எண்ணில் இருந்து நாங்க மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்பதால் நேற்று இரவு 9.30 மணிக்கு எங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும். போன மாச மின் கட்டணமும் நாங்கள் கட்டியதற்கான சான்று இல்லை எனவும் அதையும் அப்டேட் செய்யும்படியும்  உடனே 9353544193 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளும்படியும் சொல்லி இருந்தது அந்தச் செய்தியில். அதில் மின் விநியோகம் பெறும் வாடிக்கையாளரின் பெயரோ, அவருடைய பதிவு எண்ணோ எதுவும் இல்லை. எந்த டிவிஷன் என்பதும் சொல்லவில்லை. எந்த ஊர் என்றும் சொல்லி இருக்கலை. சரி இது ஏதோ ஏமாற்றுச் செய்தி என்பது புரிந்து பேசாமல் இருந்துவிட்டோம்.

இன்று சற்று முன்னர் அந்த 9353544193 எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. நான் தான் எடுத்தேன். எடுத்துப் பேசியதுமே வட இந்தியக் குரல் என்பது புரிந்தது. எலக்ட்ரிசிடி என்பதும் புரியவே செல்லை நம்மவரிடம் கொடுத்துட்டேன். அவரிடம் பேசிய அந்தப் பேர்வழி மின் கட்டணத்தை உடனே கட்டும்படி சொல்லி இருக்கார். இன்னிக்கோ ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை தினம். அலுவலக நாட்களிலேயே அவ்வளவு சுறுசுறுப்பாகப் பணம் வசூலிக்காத மின் வாரிய ஊழியர்கள் இன்னிக்கு ஏன் கூப்பிடறாங்க? நம்மவரோ அவரிடம் எந்த ஊர், எந்த டிவிஷன் என்றேல்லாம் கேட்க சென்னை, கோடம்பாக்கம் எனச் சொல்லி இருக்கார். எங்களுக்கு அங்கே வீடே கிடையாது நாங்க ஏன் பணம் கட்டணும் என நம்மவர் கேட்க அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்த உடனே நம்ம ரங்க்ஸ் சரி, கட்டறேன். நீங்க வாடிக்கையாளர் பெயர், வீட்டு விலாசம். பணம் கட்ட வேண்டிய வாடிக்கையாளரின் பதிவு எண் எல்லாம் சொல்லுங்க. இல்லைனா எஸ்.எம்.எஸ். பண்ணுங்க என்றதும் அதெல்லாம் கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கார். பின்னர் எந்த நோக்கத்தில் பணம் கட்டச் சொல்றீங்க? உங்களோட சுய விபரத்தோடு மேற்கண்டவற்றையும் அனுப்பினால் அதன் பிறகு பேசலாம் என்று சொல்லி விட்டார்.வேறே வழியே இல்லாமல் அந்த நபர் செல்லைத் துண்டித்தார். பின்னர் நானும் கூகிள் பண்ணி எல்லாம் பார்த்ததில் மேற்படியான எண்களே இல்லை எனச் செய்தி வருது. ஏமாந்தவர் கிடைச்சால் எப்படி வேணா ஏமாத்துவாங்க போல!

இதே போல் அடிக்கடி ஸ்டேட் பாங்க் எனச் சொல்லிக் கொண்டு உங்க கணக்கை ப்ளாக் செய்திருக்கோம். உடனே தொடர்பு கொள்ளுங்க மேல் அதிக விபரத்துக்கு என்றெல்லாம் செய்திகள் வரும். நாம் கண்டுக்கலைன்னா உடனே ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் இருந்து மானேஜர்  பேசறேன் என யாரானும் கூப்பிடுவாங்க. எந்த வங்கி எனக் கேட்டால் சில சமயம் சொல்லுவாங்க. பெரும்பாலும் உடனே ஃபோனை வைச்சுடுவாங்க. ஒரு தரம் ஸ்டேட் வங்கி என்றதும், எந்த ஊர், எந்த ப்ரான்ச் எனக் கேட்டதும் பதிலே இல்லை. பல சமயங்களில் நானும் அந்த வங்கியில் இருந்து தான் பேசறேன். அங்கே தான் இருக்கேன் எனச் சொல்லிடுவேன். உடனே தொலைபேசி வைக்கப்படும். 

மொத்தத்தில் திருடர்கள்/ புதுப் புது வழி கண்டு பிடிக்கிறாங்க. கவனமாக இருக்க வேண்டியது நாம் தான்.

Wednesday, April 12, 2023

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பட விமரிசனம்! இல்லை! படக்கதை!

 பிஎஸ் என் எல் ஃபைபர் நெட் போட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. அதிலே பிஎஸ் என் எல் சினிமா+ இலவசமாகக் கொடுத்திருக்காங்க. இதுக்கு முன்னாடி டிஸ்னி ஹாட் ஸ்டார் கொடுத்தும் அதைப் போய்ப் பார்க்கவில்லை. ஜியோவில் ஜியோ சினிமா கொடுத்திருந்தாங்க. ஆனால் அதிலே படங்களே சரியாப் பார்க்க முடியலை.ஹே! சினாமிகா! பார்த்தேன். பிடிக்கலை. அப்புறமாக் காஷ்மீரி ஃபைல்ஸ் வந்திருந்தது. அதைப் பார்த்தேன். மறுபடி ராம் சேதுவோ, ராகெட்ரியோ பார்க்கலாம்னா பைசா கேட்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்துட்டேன். இதுக்குள்ளே தான் கண் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்து கணினியைத் தொடாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை. அப்புறமா ஒரு நாள் பிஎஸ் என் எல் சினிமா+ ஐத் தூண்டித்துருவுகையில் ஆர்.ஆர்.ஆர். படம் இருந்தது. ஆஸ்கார் படமாச்சேனு அதைப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். முதல் மூன்று நிகழ்வுகளையும் பார்த்துட்டேன். பின்னர் சில நாட்கள் பார்க்க முடியலை. அப்புறமா மறுபடி மறுபடி முயன்றால் படமே வரலை. என்னனு புரியலை.


ஆனால் மற்றப்படங்கள் வந்தன. அதில் அயோத்தி,அகிலன் இதெல்லாமும் இருந்தது. அயோத்தி புதுசு என்பதோடு அதுக்குப் பைசா கொடுக்கணுமோனு சந்தேகம். அதோடு படம் விமரிசனம் படிச்சதில் எனக்குப் பிடிக்கவும் இல்லை. பிராமணர்களை மட்டும் அழுத்தம் திருத்தமாகக் கெட்டவங்களாக் காட்டிட்டு மற்றவர்களை ரொம்ப நல்லவர்களாகக் காட்டி இருக்காங்க என்று 2,3 விமரிசனங்கள் பார்த்ததும் படம் பார்க்கும் ஆசையே போயிடுச்சு. அகிலன் பார்க்க ஆரம்பித்தால் ரொம்ப போராக இருந்தது. அதான் ஆர்.ஆர்.ஆரும் வரலையேனு நினைச்சப்போ இந்த ஹிந்திப் படம் கண்களில் பட்டது. 

கஞூஸ் மகின்சோச் என்னும் படம். நடிகர்கள் எல்லாருமே புதியவர்கள். ஆனால் கதைச் சுருக்கம் நன்றாக இருக்கவே நாலைந்து நாட்களாகப் பார்த்தேன். ஒரேயடியாக உட்கார முடியறதில்லை. இன்னிக்குப் பார்த்து முடிச்சுட்டேன். ஜம்னா ப்ரசாத் பான்டே என்னும் இளைஞன் சரியான கருமி. முடிஞ்சு போன டூத் பேஸ்டைக் கூடக் குழவியால் நசுக்கி மிச்சம் மீதி இருக்கானு பார்ப்பான். அவனுக்கு அப்பா, அம்மா, மனைவி, ஒரு பிள்ளை இருந்தார்கள். இவன் ரகசியமாகப் பணம் சேர்த்து வந்தது ஒரு நாள் இரவில் வீட்டில் உள்ளவங்களுக்குத் தெரிந்து போக, அப்போத் தான் அவன் சொல்கிறான் தன் பெற்றோரின் சார்தாம் யாத்திரைக்காகப் பணம் சேர்த்து வருவதாக. எதிர்பாரா மகிழ்ச்சி அடைந்த பெற்றோரும் யாத்திரைக்குத் தயார் ஆக ஜம்னா ப்ரசாதும் அவர்களை அனுப்பி வைக்கிறான்.

அவங்க யாத்திரைக்குச் செல்லும்போது சந்தோஷமாகவே செல்கின்றனர். ஆனால் அவங்க போன அந்தச் சமயம் தான் கேதார்நாத்தில் மேகம் வெடித்து வெள்ளம் வந்திருந்தது. முதலில் பிள்ளையோடு தொடர்பில் இருக்கும் பெற்றோர் பின்னர் தொடர்பு அறுந்து விடுகிறது. மனம் உடைந்த ஜம்னா ப்ரசாத் ரிஷிகேஷ், ஹரித்வார் இங்கெல்லாம் போய் ஒவ்வொரு முகாமாகத் தன் பெற்றோரைத் தேடுகிறான்.  கிடைக்கவே இல்லை. பின்னர் சொந்த ஊரான லக்னோவிற்குத் திரும்பும் அவனுக்கு அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அளிப்பதைக் கேட்டு அதற்கு விண்ணப்பிக்கிறான். அவனுக்குப் பதினான்கு லஷம் கிடைக்கும் எனவும் அதில் மேலதிகாரிகளுக்கும் தனக்குமாக நான்கு லக்ஷத்தைப் பிடித்துக் கொண்டு மீதி பத்து லக்ஷம் தருவதாக அந்த அரசு அதிகார் சதுர்வேதி சொல்ல அரை மனதாக ஜம்னா ப்ரசாத் சம்மதிக்கிறான். 

பத்து லக்ஷத்தை வாங்கி வீட்டிற்குத் தாய்க்குப் பிடித்த நீல நிறத்தில் பெயின்டிங், செய்து பறவைகளுக்கான ஓர் இல்லம் தந்தை விருப்பத்தின்படி அமைத்து பெற்றோரின் பெயரில் பூங்காவில் அமர இரண்டு கல்லால் ஆன பெஞ்சுகள் போட்டுப் பிள்ளையைத் தன் பெற்றோர் விருப்பப்படி ஆங்கில முறைக் கல்வியில் சேர்த்து மனைவி ஆசைப்பட்ட ஆப்பிஎ ஐஃபோன் அவளுக்கு வாங்கிக் கொடுத்து என எல்லாவற்றையும் செலவு செய்து விடுகிறான்.

ஒரு நாள் இரவு அவர்கள் அனைவரும் வெளியே போய்த் திரும்புகையில் கழிவறையை யாரோ பயன்படுத்தும் சப்தம் கேட்டுக் கோபமடைந்த ஜம்னா ப்ரசாத் இந்த ஆங்கில முறையிலான கழிவறை கட்டியதில் இருந்து இந்த வளாகத்தில் இருப்பவங்க இங்கே தான் வந்து தொந்திரவு செய்யறாங்க எனக் கூறிக்கொண்டே கழிவறையை நோக்கிப் போகிறான். அதற்குள் கழிவறை/குளியலறையில் திறந்து வெளியே வருவது அவன் தாயும், தந்தையும். முதலில் பேயோ/பிசாசோ எனப் பயப்படும் ஜம்னா பின்னர் தெளிவடைகிறான். அவனுக்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் அவன் பெற்றோர் உயிருடன் இருப்பதால் வாங்கிய நிவாரணத் தொகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறான்? இதான் கதையே! மீதியை வெள்ளி இல்லாக் கணினித் திரையில் காணுங்கள்.


ட்ட்ட்டங்க்!

Tuesday, April 04, 2023

பெயரில் என்ன வந்தது?

பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.

இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.

நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.

கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???

இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D

ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!

கொஞ்சம் மொக்கையும் கூடப் போட்டுக்கலாம்னு நினைச்சேன். ஆனால் இதுவும் 12 வருஷப் பழசு தான். இதிலே வரவங்க யாருமே இப்போத் தொடர்பில் இல்லை. :( அவ்வப்போது தி.வா. மட்டும் கூப்பிடுவார்.

Sunday, April 02, 2023

மெரினாவுக்கு ஈடு ஆகுமா இதெல்லாம்?

 என்ன இருந்தாலும் நம் மெரினா கடற்கரை போல் வராது தான். ஆனால் நம்மால் அதைப் பராமரிக்க முடியவில்லை. ஆங்காங்கே குப்பைகள், தின்பண்டங்களின் கழிவுகள், ப்ளாஸ்டிக் கவர்கள் எனப் போட்டு மெரினாவின் அழகையே கெடுத்துவிடுகிறோம். ஆனால் அம்பேரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு சின்னக் குட்டிக் கடற்கரையையே எத்தனை அழகுடனும் ஆர்வத்துடனும் பராமரிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போனப்போத் தான் பையர் இங்கே கூட்டிச் சென்றார். மக்களுக்குத் தேவையான பொழுது போக்கு அம்சங்களோடு ஓர் அருமையான கடற்கரை. ஏற்கெனவே இந்தப் பதிவை என் இன்னொரு வலைப்பக்கம் போட்டிருக்கேன். அங்கே யாரும் வரலை. மாதேவியையும் அப்போதைய சிநேகிதி ப்ரியாவையும் தவிர்த்து. இங்கே மீள் பதிவு செய்கிறேன். 


கடற்கரையில் லைட் ஹவுஸ்

 பசுமையோடு காட்சி அளிக்கும் கடற்கரையின் ஒரு தோற்றம். 

ஹூஸ்டன் நகரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கடற்கரைப் பிரதேசம் ஒரு சுற்றுலாத்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல கடற்கரை விளையாட்டுகள், காட்சிகள், பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள், கடல் நீரைப் பார்த்த வண்ணம் அமர்ந்து உணவு உண்ணும்படியான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என உள்ளன. குழந்தைகள் விளையாடப் பலவிதமான விளையாட்டுகளும் காணப்படுகின்றன. குட்டி ரயிலில் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றி வரலாம். ரோலர் கோஸ்டரில் ஏறிச் செல்லலாம். இன்வெர்டர் என அழைக்கப்படும் லிஃப்ட் போன்ற தூக்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் அமர்ந்து பெல்டினால் நம்மை இறுகக் கட்டிக்கொண்டால் அது நம்மை மேலும் கீழும் தூக்கி விளையாட்டுக் காட்டிவிட்டுப் பின்னர் தலைகீழாகவும் நம்மைத் தூக்கும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் காணப்படும் கம்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று நேரம் வைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிவேகமாய்க் கீழே இறங்கும்.

சிலருக்கு இதைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஆகவே மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடலாம். இதை போர்ட் வாக் டவர் ட்ராப் ஜோன் எனக் கூறுகின்றனர்.

 இதைத் தவிரவும் குழந்தைகள் ஆடுகுதிரையில் விளையாடலாம். இந்தக் குதிரை விளையாட்டு இரு தளங்களாக அமைக்கப்படுகிறது. மேல் தளத்தின் குதிரைகள் அருகிலும், கீழ்த்தளத்தின் குதிரைகள் அருகேயும் ஒவ்வொரு காப்பாளர் அருகே நின்று கொண்டே குதிரைகள் இயக்கப்படுகின்றன. இந்த விளையாட்டு வைப் அவுட் என அழைக்கப்படுகிறது. இதைத் தவிரக் குடைராட்டினமும் உள்ளது. உயரம் மிக அதிகமாகவும் உள்ளது. 65 அடி உயரத்தில் சுற்றுவதாய்க்கூறுகின்றனர். இதை விடவும் உயரத்தில் ஏவியேட்டர் என்னும் சக்கரச் சுற்றும், பலூன் வீல் எனப்படும் கூண்டு அமைக்கப்பட்ட குடைராட்டினமும் குழந்தைகள் கண்ணையும், கருத்தையும் கவரும்.

இன்னமும் பாட்டில்களைக்குறி தவறாமல் அடித்துப் பரிசாக பொம்மைகள் மற்றும் பல பொருட்களைத் தரும் கடைகள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், காஃபிக் கடைகள், துணிக்கடைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், செயற்கை மணிமாலைகள், முத்துமாலைகள் விற்கும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளும் காணப்படுகின்றன. என்றாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாய்ப் பராமரிக்கப்படுகிறது. கடைகளின் பக்கவாட்டுத் தோற்றம்.
வேகமாய்ச் செல்லும் படகுகளிலும் அரைமணிநேரப் பிரயாணம் செய்யலாம். நாற்பது மைல் வேகத்தில் செல்லும் படகுகளின் பயணம் உற்சாகம் கொடுக்கும்.gஎல்லாவற்றுக்கும் மேல் கடற்கரை சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. அத்தனை மக்கள், குழந்தைகளோடு வந்து விளையாட்டுகள் விளையாடி, உணவு உண்டு, என அத்தனையும் செய்த போதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி பழக்கி இருக்கின்றனர். உணவுப் பொருட்களின் மிச்சமோ, துணிகளோ, ப்ளாஸ்டிக் கவர்களோ, பேப்பர் குப்பைகளோ காண முடியாது. அதோடு எங்கே சென்றாலும் வசதியான கழிப்பறைகளும், அவைகளின் சுத்தமான பராமரிப்பும், மக்கள் அவற்றைச் சுத்தமும், சுகாதாரமும் நீடித்து இருக்குமாறு பயன்படுத்துவதும், சிறு குழந்தைகளுக்குப் பொதுக்குழாயில் கைகளைக் கழுவ வேண்டி சின்னதாய் வடிவமைத்து ஆங்காங்கே காணப்படும் ஸ்டூல்களும், சின்னஞ்சிறு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துக்குழந்தைகளுக்கும், டயப்பர் மாற்றத் தனி இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை.