எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 26, 2020

முத்துக்குழம்பும், சவரன் துவையலும்!

பொதுவாவே நம்மவருக்கு ஒரு (standard) திட்டமிட்ட சமையல்னா பிடிக்கிறதில்லை. மாத்திட்டே இருப்பார். நானுமே தினம் ஒன்று எனப் பண்ணும் ரகம் தான். இப்போப் புதுசா ஒரு "பழக்கம்" வந்திருக்கு நம்ம ரங்க்ஸுக்கு. அதான் சமையல் யூ ட்யூப் எல்லாம் பார்க்கிறது. அதைப் பார்த்துத் தவலை அடை செய்யச் சொன்னார் ஒரு முறை. அது செய்து படம் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன். இன்னும் போடலை. அப்புறமா ஒரு நாள் சட்னி வகைகள் பார்த்துட்டு இருந்தப்போ, "மதுரைத் தண்ணிச் சட்னி" பண்ணச் சொன்னார். அன்னிக்கு ராத்திரிக்கு இட்லி பண்ணறதா இருந்தேன். மதுரைத் தண்ணிச் சட்னி ஒண்ணும் இல்லை. கிட்டத்தட்டக் கடப்பா மாதிரி. ஆனால் இதில் கடலைமாவு கரைச்சு விடாமல் உ.கி வேகவைத்துச் சேர்க்காமல் பண்ணணும். அதை அப்புறமாப் பார்ப்போம். இப்போ இரண்டு நாட்களாக ஒரு மாமியின் யூ ட்யூபைப் பார்த்துட்டு அதிலே பண்ணி இருக்கும் குழம்பைப் பண்ணச் சொன்னார். குழம்பின் பெயர் "முத்துக்குழம்பு!" அதற்குத்தொட்டுக்கச் "சவரன் துவையல்!" இஃகி,இஃகி,இஃகி.

சின்ன வயசில் மதுரை மேலாவணி மூலவீதியில் இருக்கும்போது அங்கே கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு மாமி சீதாமாமினு இருந்தாங்க. அவங்க சொந்தக்காரங்க ஒரு மாமி சேமா மாமினு அடிக்கடி இங்கே வருவாங்க. ஒரு முறை அவங்க சமைச்சப்போ எங்க அப்பாவோ, அம்மாவோ என்ன சமையல்னு கேட்கவும் அவங்க "முத்துக்குழம்பு, சவரன் துவையல்" என்றார்கள். கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. ஆனால் பார்த்ததும் தான் புரிந்தது. மணத்தக்காளிக் குழம்பும், பருப்புத் துவையலும் என. அன்னிக்கப்புறமா அதை மறந்தே விட்டேன். சுத்தமா அந்த நினைப்பெல்லாம் இல்லவே இல்லை. இப்போ இந்த மாமியின் சமையல் குறிப்பைப் பார்த்ததும் அது நினைவில் வந்தது. இரண்டு நாட்களாக எங்கேயோ கேட்டிருக்கோமே என்றே தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் சவரன் துவையல்னு நம்மவர் சொன்னதுமே துவரம்பருப்புத் துவையல்னு உடனே டக்குனு சொல்லிட்டேன். இன்னிக்குத் தான் பண்ணும்போது நினைவு வந்தது இது சேமா மாமி பல வருடங்கள் முன்னர் பண்ணியது என்பது. இனி செய்முறையைப் பார்ப்போமா? ரொம்பவே எளிது. கிட்டத்தட்ட மிளகு குழம்பு மாதிரித்தான். ஆனால் அது இல்லை.

முத்துக்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள். ஒரு நெல்லிக்காய் அளவுக்குப் புளி ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உப்பு தேவையான அளவுக்கு. மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, மணத்தக்காளி வற்றல் ஒரு குழிக்கரண்டி. வறுக்க நல்லெண்ணெய் அல்லது நெய் தாராளமாக.

வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல் 4 அல்லது 5 காரத்துக்கு ஏற்றபடி, ஒரு தேக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஒரு துண்டு, கருகப்பிலை ஒரு கைப்பிடி. இவை எல்லாவற்றையும் நல்லெண்ணெயில் வறுத்து ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கல்சட்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு/நெய் ஊற்றிக் கொண்டு மணத்தக்காளி வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும். அது நன்கு வறுபட்டதும் அதிலேயே அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். அரைத்த விழுது நன்கு வறுபட்டதும் புளி ஜலத்தை ஊற்றி விட்டு நன்கு கிளறவும் கட்டிகள் இருக்கக் கூடாது. புளிஜலம் அரைத்த விழுது, மணத்தக்காளி வற்றல் எல்லாம் சேர்ந்து கொதிக்கையில் மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்துச் சேர்ந்து வரும்போது பக்கத்தில் ஒரு இரும்புக்கரண்டி அல்லது வாணலியைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டுப் பெருங்காய்த் தூள் சேர்த்து ஒரே ஒரு மிளகாய் வற்றல் போட்டுக் கருகப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் தாளிதத்தைக் குழம்பில் கொட்டவும். அடுப்பை அணைத்து விடலாம். மணத்தக்காளி வற்றல் கறுப்பு முத்தைப் போல் தெரியும் என்பதால் முத்துக்குழம்பு.

சவரன் துவையல். ஒரு குழிக்கரண்டி துவரம்பருப்பை வெறும் வாணலி அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு சிவக்க வறுக்கவும். சிவப்பாக வறுத்தால் தான் துவையல் ருசியே நன்றாக இருக்கும். இதைக் குழம்புக்கு வறுக்கும்போதே வறுத்து வைக்கலாம். ஏனெனில் துவரம்பருப்பு ஊற வேண்டும். வறுத்த துவரம்பருப்பில் வெந்நீர் விட்டு ஊற வைக்கவும். அதோடு ஒரு சின்னச் சுண்டைக்காய் அளவுக்குப் புளியையும் ஊற வைக்கவும். சமையல் முடியும் தருவாயில் 2 மிளகாய் வற்றல்,பெருங்காயம் வறுத்துக் கொண்டு ஊற வைத்த துவரம்பருப்போடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு அரைக்கவும். ரொம்பவும் நைசாகவும் இல்லாமல் ரொம்பவும் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மாற்றி நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். சாப்பிடும்போது தாளிதத்தைக் கலந்தால் தான் நன்றாக இருக்கும். இந்தக் குழம்பு சாதத்துக்குச் சவரன் துவையல் நன்றாக இருந்தது. மோர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். வறுத்த துவரம்பருப்பு அந்தக் காலச் சவரன்கள் போல (காசுமாலையில் சின்னச் சின்னதாகச் சேர்ப்பார்கள்) இருப்பதால் சவரன் துவையல்.

ஹிஹிஹி, என்ன படமா? காலை வேளையில் இன்னிக்கு வேலை செய்யும் பெண்ணும் வராமல் இருந்ததில் அடுத்தடுத்து வேலை செய்ததில் படம் எல்லாம் எடுக்கவே இல்லை.படம் எடுக்கும் மனோநிலை இல்லை. :)))))) இன்னொரு நாள் படம் எடுத்துப் போடறேன். 

Saturday, July 18, 2020

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி!

இன்று காலை எழுந்ததே தாமதம். அப்புறமா வீடு சுத்தம் செய்யும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுக் காஃபிக்குப் பால் காய்ச்சினால் பால் திரிந்துவிட்டது. சரி, பாத்திரம் சரியில்லைனு நினைச்சு வேறே பாத்திரமும் வேறே பாலும் வைத்துக் காய்ச்சினால் அதுவும் பெப்பே தான்! சரிதான்! வேறே பாக்கெட் எடுத்துக் கொண்டு பாலைக் காய்ச்சலாம்னு வேறே இன்னொரு பாக்கெட்டை எடுத்துப் பாலைக் காய்ச்சினால் பாத்திரமே துள்ளிக் குதிக்கிறது.  அந்தப் பாலும் ஓஹோ தான். அதில் மிச்சப் பாலையும் காய்ச்சிப் பாத்திரத்தைத் தேய்ப்பதில் சேர்க்கவேண்டாம்னு எல்லாப் பாலையும் ஒரே பாத்திரமாய்க் கொட்டி வைத்தேன். வேறே புதுப் பால் பாக்கெட் வாங்கறேன்னு ரங்க்ஸ் கிளம்பினார். ஏற்கெனவே பூத்திற்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் பால் திரிந்து விடுவதாகப் புகார் சொல்லிக் கொண்டே இருந்திருக்கின்றனர். நமக்கு இன்று வரை எந்தப் பிரச்னையும் இல்லை. தேதியை வேறே பார்த்துவிட்டே வாங்குவோம். எல்லாம் சரியாய் இருக்க ஏன் இப்படினு புரியலை. மொத்தமாகப் பால் கொள்முதல் செய்யும் தொட்டியில் சுத்தம் இல்லாமல் இருந்திருக்கும், அல்லது சரியாகச் சுத்தம் செய்திருக்க மாட்டார்கள் என ஒரு தரப்பார் சொல்கின்றனர். எப்படியோ தெரியலை. அப்புறமா வேறே பால் வாங்கி வந்தார். அதில் ஓர் சிவப்புப் பாக்கெட் பாலை எடுத்துக் காய்ச்சிக் காஃபி கலந்து குடிக்கையில் ஆறே முக்கால் மணி ஆகி விட்டது. அதன் பின்னர் கணினியில் உட்கார்ந்தால் வீட்டு வேலைகள் தாறுமாறாகச் செய்யும்படி ஆகிடும் என்பதால் கணினியில் உட்காராமல் நேரே வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். எல்லாம் முடிந்து கணினியில் உட்காரும்போது மணி பனிரண்டரை ஆகி விட்டது.

ஏற்கெனவே இரண்டு கணினியிலும் வேர்ட் சரியாகத் திறக்க முடியாமல், அதில் காப்பி, பேஸ்ட் பண்ண  முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். இரண்டு கணினியிலும் வேர்ட் டாகுமென்ட் திறப்பதிலும் உள்ளே வேலை செய்வதிலும் பிரச்னை. தினம் அரை மணி நேரம் இரண்டிலும் மாற்றி மாற்றிப் பார்த்தும் ஒண்ணும் புரியலை. இன்னிக்கு மனசில் ஏதோ க்ளிக் ஆகப் புது "டெல்" கணினியில் வேர்ட் 2007 ஐப் புதுசாக இன்ஸ்டால் செய்தேன்.அது வேலை செய்ய ஆரம்பித்ததோடு அல்லாமல் பழைய வேர்ட் டாகுமென்டையும் சரி செய்து விட்டது. அதில் ஏற்கெனவே சேமித்தவற்றை எடிட் செய்ய முடியாமலும், அதில் புதுசாகச் சேர்க்க முடியாமலும் அவதியாக இருந்தது. அது இப்போச் சரியாகி இருக்கிறது. இனி அதில் தொடர்ந்து சில வேலைகள் செய்யணும். அதோடு மின்னூல் வெளியிடவும் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கேன். கிண்டிலில் செய்வது பெரிய சிரமமாகத் தெரியலைன்னாலும் இன்னமும் பழகிக்கொள்ளவில்லை. இனிமேல் தான் புத்தகம் தயார் செய்ய முயற்சிக்கணும். வெங்கட்டையோ, கில்லர்ஜியையோ, கௌதமனையோ கூப்பிட்டுக் கேட்கலாம் என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நாமே முயன்று பார்த்துட்டுச் சரியாய் வரலைனால் கேட்கலாம் என்னும் எண்ணம். எத்தனை நாளைக்குத் தான் க.கை.நா.வாகவே இருப்பது? நாமும் தொ.நு.நி. ஆகவேண்டாமா? பதினைந்து வருஷமாகக் கணினியில் உலவி வருவதற்கு அப்புறமா என்ன அர்த்தம்? எல்லாரையும் விட நான் சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈனியர் வேறே! ஹிஹிஹி, அதுக்காக வயசில் சீனியர்னு நினைச்சுடாதீங்க! நான் இன்னமும் குட்டிக் குழந்தை தான்! :)

விரைவில் என்னுடைய எழுத்துக்களைப் புத்தக வடிவில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். பெரிசாய் ஒண்ணும் எழுதலைனாலும் எழுதினவற்றில் முக்கியமானவை வரும். ஏற்கெனவே மின்னூல்களாக இருப்பனவற்றைத் திரும்பப் போடலாமானு தெரியலை. போடலாம்னா என்னோட கல்யாண நிகழ்வுகளை மின்னூலாகப் போட்டதைத் திரும்பப் போட எண்ணம், அதில் நிறையவே எழுத்துப் பிழைகள் இருப்பதாய் வெங்கட் சொன்னார். அவற்றைத் திருத்திப் புத்தகமாக மீண்டும் வெளியிட ஆசை.முடியுமா, பார்க்கணும்

நிகழ்கால உலகுக்கு வந்தால் ரஷ்யா கொரோனாத் தடுப்பு மருந்துக்கு வெளியீடு தேதி அறிவித்து விட்டது. யு..கேயும் ஓரளவுக்குத் தயார் என்றே கேள்விப் படுகிறோம். போகப் போகத் தான் தெரியும். அம்பேரிக்காவுக்கு அங்கிருந்து இந்தியா வரும் யுனைடெட் ஏர்லைன்ஸ் மூலமாக விமான சேவைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் என்றாலும் அது "பெண்"களூர், தில்லி, மும்பை வழியாகத் தான். சென்னை இல்லை. அதோடு அங்கு போகும் ஊர்களும் வடகிழக்கு நகரங்களான நேவார்க், நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன் போன்றவை. அவற்றில் சிகாகோ கூட இல்லை. எப்படி இருந்தாலும் நம்ம ஆட்கள் நல்லபடியாப் போய்ச் சேர்ந்தாச்சு! "வந்தே பாரத்" புண்ணியம் கட்டிக் கொண்டது. ஆனாலும் பணம் மிக மிக அதிகம். நேத்திக்குக்  குட்டிக் குஞ்சுலு என்னைப் பார்த்துட்டு "நீ ஏன் பாட்டி மாஸ்க் போட்டுக்கலை?" என்று கேட்டது. ஆங்கிலத்தில் தான்! தாத்தா பால் வாங்கப் போனார். அதனால் மாஸ்க் போட்டுக் கொண்டார். நான் வீட்டிலே தான் இருக்கேன் என்று சொன்னேன். என்ன புரிந்து கொண்டதுனு தெரியலை.

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் தினமும் ஒரு குழந்தை ஐந்திலிருந்து பத்து வயதுக்குள்! பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை. இவங்க என்ன மனிதர்களா? மிருகங்களானு தெரியவில்லை. அதோடு வரதக்ஷிணைக் கொடுமையால் ஓர் இளம்பெண் கொலை/தற்கொலை! என்னனு தெரியலை. யாரோ ஒருத்தர் போலீஸிடமிருந்து தப்பிக்கக் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி! ஒண்ணும் சொல்லும்படி இல்லை. இதெல்லாத்தையும் விடப் பெரிய விஷயம் சென்னை கொரோனா தாக்கியவர்கள் பட்டியலைக் குறைச்சுச் சொல்றாங்க என்பது தான். எதையுமே நம்ப முடியவில்லை. திருச்சியில் 100ஐக் கடந்து விட்டது. உத்திர வீதியில், இங்கே பக்கத்தில் கீதாபுரம் காலனி னு கொரோனா கிட்டேக்கிட்டே வருது. வெளியில் தலை காட்டவே பயம்மா இருக்கு. யாராவது தும்மின சப்தம் கேட்டால் மரக்கதவையே சார்த்திடறோம். எங்கானும் காற்றில் வந்ததுன்னால் என்ன செய்ய முடியும்! விரைவில் கடவுள் தான் கண்ணைத் திறந்து பார்த்து எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். ஸ்ரீராம் பார்த்துட்டுத் தலைப்பு சரியா வைக்கலைனு சொல்லப் போறார்! ஒண்ணும் புதுசா யோசிக்க வரலை!

Wednesday, July 15, 2020

கொஞ்சம் தீவிரம்! கொஞ்சம் ஜாலி! கொஞ்சம் திப்பிசம்!

குஞ்சுலு ஊருக்குப் போய்ப் பழைய ஆளாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு ஜெட்லாக்! மத்தியானம் 2 மணிக்குத் தூங்கிட்டு ராத்திரி பனிரண்டு மணிக்கு முழிச்சுக்கறது. மறுபடி காலம்பர நாலு மணிக்குத் தூங்கிட்டுக் காலை எட்டு மணிக்கு எழுந்துக்கறது. இன்னமும் கொஞ்ச நாட்கள் ஆகும். ஆனால் எங்களைப் பார்க்கையில் இப்போதெல்லாம் கோபம் இல்லை. சிரிப்பு வருகிறது என்பதோடு "பை" சொல்லிக் கையாட்டிவிட்டு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டுச் சிரிக்கிறது. சாப்பாடு தான் இன்னமும் சரியாகவில்லை. பாலில் தான் உயிர் வாழ்கிறது! :( எப்போ சாப்பிட ஆரம்பிப்பாளோ  என்பதும் புரியலை.  பிரார்த்திப்போம்/
*********************************************************************************
தொலைக்காட்சியில் கொரோனா செய்திகளை விடாமல் அதிகம் பார்த்த ஒரு பெண் பயத்தினால் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்! என்னத்தைச் சொல்வது? ஏற்கெனவே சின்னத்திரை ஆட்களும், திரைப்படத்துறை ஆட்களும் ஆணும், பெண்ணுமாக இளவயதிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து போகின்றனர். இவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் காரணம் எனப்படுகிறது. இம்மாதிரி விஷயங்களைக் கூட எதிர்கொள்ள முடியாமல் கோழைகளாக வளர்க்கப் பட்டிருக்கின்றனர். தேர்வுகளில் தோற்றால் தற்கொலை, காதல் தோல்வியால் தற்கொலை, கணவன் துன்புறுத்தலால் தற்கொலை, மனைவி படுத்தல் தாங்காமல் தற்கொலை என எதுக்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வது சமீப காலங்களில் அதிகம் ஆகி இருக்கின்றது. இது நல்லதற்கல்ல. பெற்றோர் குழந்தைகளைச் சரியாக வளர்க்காதது தான் முக்கியக் காரணம். மேலும் சின்ன வயதில் இருந்தே ஆன்மிக பலமும் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் இப்போதெல்லாம் இல்லை. எந்தவிதமான நீதி போதனைகளும் இல்லாமல் தொலைக்காட்சி, ஊடகங்கள், திரைப்படங்கள் எல்லாவற்றிலும் வெட்டு, குத்து, சண்டை என்றே பார்த்தால் மனசு பாதிக்கத் தான் செய்யும். அதோடு இப்போதெல்லாம் ஒரே குழந்தை வேறே! இன்னொன்று பெற்றுக்கொள்வதில்லை. இதை விடப் பெரிய தப்பு வேறே எதுவும் இல்லை. இன்னொரு குழந்தை இருந்தால் தான் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை, பங்கிட்டு உண்பது என்றெல்லாம் தெரியவரும். அக்கம்பக்கக் குழந்தைகளோடப் பழகவாவது விட வேண்டும். அதுவும் அதிகம் இல்லை. அடுக்கு மாடிக்குடியிருப்புக்களில் குழந்தைகள் விளையாடினால் பெரும்பாலும் பெரியவர்கள் கண்டித்து இழுத்து வருகிறார்கள். பின்னர் அந்தக் குழந்தை என்னதான் செய்யும்?
*********************************************************************************

கந்த சஷ்டி கவசம் பற்றி இப்போது சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இதைக் கேலி செய்து திரைப்படப் பாடல்கள் எல்லாம் வந்து விட்டன. இனி இன்னும் என்ன மிச்சம் இருக்கப் போகிறது? ஆனால் கேலி செய்தவர்களுக்குக் கந்த சஷ்டி கவசம் இருப்பது தமிழ் மொழியில் என்பதே தெரியவில்லையாம்! அவ்வளவு அழகாய்த் தமிழ் படித்திருக்கிறார்கள் போலும். ஒரு பிள்ளையாரை உடைத்து ஊரெங்கும் பிள்ளையாராக ஆனதைப் போல, ராமரைக் கேலி செய்து உலகெங்கும் ராமர் கொண்டாடப்பட்டதைப் போல் இப்போது சஷ்டி கவசமும் அனைவராலும் பாடப் பெறும். மொத்தம் ஆறு கவசங்கள். ஆறுபடை வீட்டிற்கும். அதில் திருச்செந்தூருக்கான கவசமான "சஷ்டியை நோக்கச் சரஹண பவனார்" தான் அனைவராலும் பெரும்பாலும் பாடப்படுகிறது. பாராயணமாகவும் செய்யப் படுகிறது. நான் நினைவு தெரிந்ததில் இருந்தே தமிழ் படிக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் சொல்லி வருகிறேன். கல்யாணம் ஆகிக் கொஞ்ச காலம் வரை மாமியார் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கந்த சஷ்டி கவசமும் சொல்ல முடியாது; துளசி பூஜையும் பண்ண முடியாது! பின்னர் மாமியாரே இரண்டும் செய்ய/சொல்ல ஆரம்பித்தார். நான் அப்போதெல்லாம் மனசுக்குள்ளே "காக்க, காக்க, கனகவேல் காக்க!" என்று சொல்லிக் கொள்வேன்.

முதல் முதல் மும்பை சென்று வீடு தெரியாமல், வழி தெரியாமல் தவித்திருந்தபோது பால்கரில் இருந்து போரிவிலிக்குக் கூட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர் எங்கள் கண்களுக்கு முருகனாகவே தெரிந்தான். வழியெல்லாம் சஷ்டி கவசத்தை உரக்கச் சொல்லிக் கொண்டே வந்தேன். காட்டு வழி! மழை நாள்! அந்தக் கவசம் தான் காப்பாற்றியது. இன்னமும் காத்து வருகிறது. சத்ரு சங்கார வேலவன் நம் அனைவரையும் இதே போல் காத்து ரக்ஷிப்பான். நாளைக் கார்த்திகை விரதம்/ஆடிப்பண்டிகை எல்லாம் சேர்ந்து வருகிறது. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா சொல்லிக் கந்த சஷ்டி கவசம் படிப்போம்.
********************************************************************************

இப்போ கொஞ்சம் ஜாலிக்கு: ஒரு திப்பிச வேலை. டோக்ளா என்னும் குஜராத்தி சிற்றுண்டி பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம். கடலை மாவில் அதைப் பண்ணுவார்கள். மிருதுவாக ஸ்பாஞ்ச் போல் வரும். 

டோக்ளா செய்முறை இங்கே  இஃகி,இஃகி, இப்படி எல்லாம் நாம செய்துடுவோமா என்ன? நம்ம வழி தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழியாச்சே. ரவாதோசை மாவு கொஞ்சம் மிச்சம். இரண்டு தோசை வார்க்கலாமோ என்னமோ! அதையே கொஞ்சம் ஈனோவோ பேகிங்க் பவுடரோ சேர்த்து ரவா டோக்ளாவாகப் பண்ணலாமானு யோசிச்சேன். ஆனால் நம்ம கை, வாய் ரெண்டும் சும்மா இருந்தாலும் மனசு/மூளை சும்மா இருக்காதே! அது யோசித்தது. கொஞ்சம் கடலை மாவில் உப்புக்காரம் சேர்த்து பஜ்ஜி மாவு மாதிரிக் கரைத்துக் கொண்டு இந்த ரவா தோசை மாவையும் சேர்த்துக் கலந்து வைத்தேன். பெருங்காய்ப் பொடி, சர்க்கரை ஒரு டீஸ்பூன், கொஞ்சம் எண்ணெய் விட்டுக் கலந்த மாவில் எலுமிச்சம்பழம் அரை மூடியை இரண்டாக நறுக்கிப் பிழிந்து வைத்துக் கொண்டேன்.  டோக்ளா செய்வதற்கு அரை மணி முன்னதாக அரை டீஸ்பூன் பேகிங் பவுடரைப் போட்டுக் கலந்து வைத்தேன். பின்னர் ஓர் அலுமினியம் சட்டியில் அடியில் தண்ணீர் விட்டு மேலே ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஒரு தட்டில் எண்ணெய்/நெய் தடவிவிட்டுக் கலந்து வைத்த மாவை விட்டேன். அரை மணி நேரம் வெந்தது. கத்தியால் கீறிப் பார்த்ததில் ஒட்டவில்லை. பக்கத்தில் இன்னொரு அலுமினியம் சட்டியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, ஜீரகம், பெருங்காயப்பொடி போட்டுத் தாளித்துக் கொண்டு ஒரு குழுக்கரண்டி ஜலத்தையும் விட்டு அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துச் சர்க்கரை கரைந்ததும் எலுமிச்சம்பழம் இன்னொரு மூடி இருந்ததைப் பிழிந்து கொண்டேன். இந்தக் கலவையை அடுப்பில் இருந்து எடுத்த டோக்ளா மேல் ஊற்றிக் கொண்டு பச்சைக் கொத்துமல்லி தூவினேன். தேங்காய்த் துருவலும் சேர்க்கலாம். தேங்காய் துருவவில்லை. இதற்குத் தொட்டுக்கப் பச்சைச் சட்னியும், புளிச்சட்னியும் தான். அதுக்காகப்பேரிச்சம்பழங்களைத் தயாராக வைத்திருந்தேன். ஆனால் பண்ணும்படியான மனநிலை வரலை. சரினு அப்படியே அவருக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டேன்.

சாப்பிட ஆரம்பிக்கையில் தான் படம் எடுத்துப் போடலாமே, திப்பிசம் பண்ணி ரொம்ப நாளாச்சே எனத் தோன்றியது. டோக்ளா தட்டில் இருந்தவற்றைப் படம் எடுத்துக் கொண்டேன். வேறே என்ன செய்யறது? பாத்திரங்களை எல்லாம் ஒழித்துப் போட்டுவிட்டேன். அவர் சாப்பிட்டு விட்டார்! ஆகவே நான் சாப்பிட வைத்திருந்த்தைப் படம் எடுத்திருக்கேன். கிடைக்காதவங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க. இன்னொரு நாள் முறையாப் பண்ணி எல்லோருக்கும் கொடுக்கிறாப்போல் செய்து காட்டிட்டாப் போச்சு! பஜ்ஜி மாவு மிஞ்சினால் கூடப் பண்ணலாம். என்ன ஒண்ணு, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்துக்கணும். இந்த மாதிரித் தான் டோக்ளாவே பண்ணிட்டு இருக்கேன். முறையாப் பண்ணும்போது பார்த்துக்கலாம். இதுவே நல்லாத் தானே இருக்கு!தட்டில் இருப்பது தான் டோக்ளா. இது குஜராத்தில், மஹாராஷ்ட்ராவில் ரொம்பவே பிரபலம். இம்மாதிரித் திடீர்த் தயாரிப்பு டோக்ளா "கமன் டோக்ளா" என்பார்கள். பொதுவாக கடலைப்பருப்பு+அரிசி அரைத்துப் புளிக்க வைத்துத் தான் பண்ணுவார்கள். அந்த ருசியே வேறே! இது திடீர்த் தயாரிப்பு. 


இது என்னனு தெரியுதா? இதை இளங்கொட்டை என்போம். பிஞ்சுப் பறங்கிக்காய். பறங்கிக் கொட்டை என்றும் சொல்வார்கள். முன்னெல்லாம் மதுரையில் நிறையக் கிடைக்கும். இன்னமும் சின்னதாகவும் இருக்கும்.  இங்கே நாங்க வந்த புதுசில் நிறையக் கிடைத்தது. நடுவில் சில ஆண்டுகள் கிடைக்கலை. இப்போ மறுபடி ரொம்ப நாட்கள் கழிச்சு வாங்கிட்டு வந்தார். இதில் வெல்லம் போட்டுப் பால்க்கூட்டுப் பண்ணுவார்கள். சர்க்கரை போட்டும் பண்ணுவார்கள். ஆனால் வெல்லம் போட்டப் பால் கூட்டுத் தான் ருசி. எங்க மாமனார் வீட்டில் வயலில் வரப்போரம் போட்டிருப்பார்கள். அல்லது எதிர்க் கொல்லையில் போட்டிருக்கும். சில சமயங்களில் "தப்பு முதல்" ஆகவும் வரும். அப்போது தினம் தினம் வீட்டில் இதான் சமையல்! இதை அப்படியே பெரிய துண்டங்களாக நறுக்கிப் போட்டு சாம்பார் வைப்பார்கள். அறுவடை சமயம் ஆட்களுக்காக வீட்டில் தயார் ஆகும் சாப்பாட்டில் இந்தப்பறங்கிக்கொட்டையே முக்கிய ஆதிக்கம் வகிக்கும். கறியாகவும் பண்ணுவார்கள். துவையலும் அரைக்கலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். தோசைக்குத் தொட்டுக்கலாம்.  இதில் உள்ள குடல் பகுதியை வெட்டி எறியக் கூடாது. அதோடு தான் சாப்பிடணும். இதைத் தவிரவும் எங்க மாமியார் வீட்டில் அடைக்கு இதைப்  பொடிப் பொடியாக நறுக்கி அடை மாவில் சேர்த்து அடையாக வார்ப்பார்கள். தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறிப் போட்டது போல் ருசிக்கும். 

 இரண்டாக நறுக்கி உள்ளே  எப்படி இருக்கும் என்பதைக் காட்டி இருக்கேன்.


முன்னர் ஒரு தரம் பறங்கிக் கொட்டை அடை போட்டிருக்கேன். ஆனால் அது காய். பச்சை நிறம் வந்துவிட்ட காய். இது அப்படி இல்லை. குழந்தை! ஆனால் பார்த்துக்கொண்டே இருக்கையில் பெரிசாகிடும். நாங்க பரவாக்கரை மாரியம்மன் கோயிலுக்கு ஒரு முறை போயிருக்கையில் அங்கே பறங்கிக் கொட்டைக் கொடியில் இருந்ததைப் பார்த்துத் தேர்வு செய்து விட்டுக் கோயிலில் எல்லாவேலைகளும் முடிந்ததும் பறிக்கப் போனால் அந்த 2 மணி நேரத்தில் நாங்கள் பார்த்த கொட்டை வளர்ந்து விட்டது. இதே போல் பீர்க்கையும் நிமிஷமாக வளரும்.  பெண் குழந்தைகள் வளர்வதைப் பற்றிச் சொல்கையில், "பெண் வளர்த்தியோ, பீர்க்கை வளர்த்தியோ!" என்பார்கள். அம்மாதிரி இந்தப் பறங்கி, பீர்க்கை எல்லாம் கண்ணெதிரே வளர்ந்து முற்றி விடும்.

Saturday, July 11, 2020

குட்டிக்குஞ்சுலு ஊருக்குக் கிளம்பி விட்டது!

அஞ்சலி என்னும் நடிகையின் படத்தைத் தற்செயலாக எங்கள் ப்ளாகில் திரு கௌதமன் போட்டிருந்தார். அதைப் பார்த்த துரை "அங்காடித் தெரு" என்னும் படத்தையும் அதில் கதாநாயகியாக நடித்த அஞ்சலியையும், அவள் பாத்திரத்துக்குக் கடைசியில் கிடைத்த தண்டனையையும் பற்றி வருந்தி எழுதி இருந்தார். அது என்ன படம் என அதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அடுத்த 2,3 நாட்கள் வீட்டின் வேலைகளால் பார்க்க முடியாமல் கடைசியில் நேற்றுப் பார்த்து முடித்துவிட்டேன். தமிழில் இப்படி இயல்பாக ஒரு படம் வந்திருப்பதே தெரியாது எனில் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் பாத்திரப் பொருத்தம் அம்சமாக அமைந்திருப்பதோடு எல்லோருமே இயல்பாக வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்கள். அதிலும் அண்ணாச்சியாக நடிக்கும் பழ.கருப்பையா, கருங்காலியாக நடிக்கும் நடிகர்(அவர் யாரோ இயக்குநர் என்று கேள்வி) கதாநாயகன் ஜோதிலிங்கமாக நடித்திருக்கும் மகேஷ் என்னும் இளைஞர், (திண்டுக்கல்லைச் சேர்ந்த விளையாட்டு வீரராம்) அருமையான நடிப்பைக் காட்டி இருக்கிறார். அஞ்சலி கேட்கவே வேண்டாம். எல்லாப் படங்களிலுமே அவர் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து நடிப்பார். இதில் இன்னும் அதிகமாக உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துள்ளார். இல்லை/ கனியாகவே வாழ்ந்திருக்கிறார்.

Angadi Theru- Dinamani

ஆனால் துரை சொன்னாற்போல் முடிவு கடைசியில் இப்படி இருந்திருக்க வேண்டாம். கஷ்டப்படுகிறவர்கள் எப்போதும் கஷ்டமே படுவார்கள் என்பதை நிலை நிறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்ட முடிவா? என்றாலும் அதிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் இருவருமே திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிப்பதும், சந்தோஷமாக இருப்பதும் தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர்கள் இருவரும் படுக்க இடம் தேடி அலைந்து ஓர் இடம் கிடைத்துப் படுப்பதோடு படம் முடிந்திருக்கலாமோ என்னும் எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ரங்கநாதன் தெருவிலேயே எடுத்திருப்பதால் படம் பார்க்கிறோம் என்னும் எண்ணமே ஏற்படாமல் கண் முன் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வு! பல வருடங்கள் கழித்து ரங்கநாதன் தெருவில் அலைந்த உணர்வு. மொத்தத்தில் வசந்த பாலன் படம் எனில் பார்க்கும்படியாக இருக்கும் என்னும் நம்பிக்கையைக் கெடுக்காமல் படத்தை எடுத்திருக்கார். சரியாகப் பத்தாண்டுகள் ஆகி இருக்கின்றன படம் வெளி வந்து. என்றாலும் அன்றும், இன்றும், என்றும் நடக்கும்/நடந்து கொண்டிருக்கும் ஓர் விஷயமே இது. இப்போதும் ஒன்றும் மாறிவிட்டதாகத் தெரியவில்லை.

*********************************************************************************

ஒரு வழியாக ரொம்ப ஆலோசித்துப் பல்வேறு நிலைகளையும் யோசித்துக் கொண்டு இன்று அதிகாலை கிளம்பிய தில்லி -- சிகாகோ விமானப் போக்குவரத்தில் (வந்தே பாரத்) மருமகளும், குட்டிக்குஞ்சுலுவும் சிகாகோவுக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கமான போக்குவரத்து ஆரம்பிக்கும், ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்ததில் நாட்கள் தாம் ஓடின. மாதங்கள் ஓடின. ஆகவே இப்போது இந்த அறிவிப்பு வந்ததும் உடனேயே நன்கு ஆலோசித்துக்கொண்டு பயணச்சீட்டு வாங்கி விட்டார் பையர். என்ன ஒரு பிரச்னைன்னா உள்ளூரில் இருக்கும் உறவினர்களோ, அல்லது நாங்களோ குட்டிக்குஞ்சுலுவைப் பார்க்கப் போக முடியவில்லை. உள்ளூரிலேயே இருக்கும் என் மைத்துனர் பார்க்க நினைத்துப் போகப் பல முயற்சிகள் எடுத்தும் போக முடியவில்லை. இப்போது பயணம் ஏற்பாடு ஆனதும் போகலாம் எனில் அது இன்னும் பயமாக இருந்தது. விமான சேவையிலும் பல்வேறு நிபந்தனைகள், ஆலோசனைகள். மருத்துவப் பரிசோதனை பயணிகளுக்கு உண்டு என்பதால் வீட்டுக்கு யாரையும் வரவேற்க யோசனை. கிளம்பும் நேரம் ஏதாவது ஆகிவிட்டால் இத்தனை பணம் செலவு செய்தது மட்டுமின்றி மன வருத்தம் இன்னமும் தாங்க முடியாது. ஆகவே யாரையும் வரவேற்கவில்லை. சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது. எங்களுக்கும் குழந்தையைத் தொட்டுக் கொஞ்ச முடியவில்லை, போக முடியவில்லை என வருத்தம் தான். இனி எப்போ நேரில் பார்ப்போமோ என்றும் யோசனைதான். ஆனாலும் வேறே வழி இல்லை. நல்லபடியாக அவங்க இடத்துக்குப் போனால் போதும் என்று ஆகி விட்டது.

நேற்று மத்தியானம் குஞ்சுலுவைப் பார்த்தோம். ஒளிந்து விளையாடியது. முகத்தை மூடிக்கொண்டு கை விரல்களின் இடுக்கு வழியாகவும், திரையில் முகத்தை மூடிக்கொண்டும் விளையாட்டுக் காட்டியது. பின்னர் "பை" சொன்னது. ஆனாலும் நேரிடையாகப் பார்க்கவே மாட்டேன் என்று பிடிவாதம். கோபம். இப்போ நாங்களும் வரப்போகிறோம்னு நினைச்சதோ என்னமோ! கொஞ்சம் யோசனையுடனேயே பை சொன்னது.மேலும் இந்த வந்தே பாரத் விமானங்களில் குடிமக்கள் தான் பயணிக்க முடியும். அதாவது அம்பேரிக்கா போக அம்பேரிக்கக் குடிமக்களாய் இருக்கணும். அதே போல் அங்கிருந்து வருபவர்கள் இந்தியக் குடிமக்களாய் இருக்கணும். மற்றவர்களின் போக்குவரத்துக்கு வழக்கமான விமான சேவை தொடங்கினால் தான் போக முடியும். இதில் பணமும் அதிகம். போகவரப் பயணச் சீட்டுக்குச் செலவு செய்யும் தொகையை இதில் மொத்தமாகக் கொடுக்கும்படி ஆகிறது. ஆனாலும் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் பின்னர் எப்போவோ! இதுவே பதினாறு, பதினேழு தேதிகள் வரைதான். மொத்தம் ஆறு விமானங்களோ என்னமோ அம்பேரிக்காவின் வெவ்வேறு ஊர்களுக்குப்போகின்றன. அதன் பின்னர் வழக்கமான விமான சேவை மாதக் கடைசியில் தொடங்கலாம் என ஊகங்கள் வருகின்றன. வந்தாலும் அவற்றில் பயணச்சீட்டுக் கிடைக்கணும். தமிழக அரசு அந்த விமானங்களை அனுமதிக்கணும். எத்தனையோ பிரச்னைகள். இப்படி எல்லாம் நடக்கும்னு யார் நினைச்சுப் பார்த்தது? விரைவில் இந்தச் சங்கடமான சூழ்நிலை சரியாகப் பிரார்த்திப்பதை விட வேறு வழியே இல்லை.

Friday, July 03, 2020

வளவன் தன் வளனே வாழி காவேரி!

உழவர் ஓதை, மதகு ஓதை
உடைநீர் ஓதை, தண்பதம் கொள்,
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய் வாழி காவேரி!

காவிரியில் தண்ணீர் வரத்துவங்கியதும் எடுத்த படங்களை முன்னர் பார்த்தீர்கள். இது ஓரளவுக்குத் தண்ணீர் ஓடுவதால் இன்று காலை எடுத்த படங்கள். அதுவும் நேற்று மேலும் பனிரண்டாயிரம் கன அடி தண்ணீர் திறந்திருப்பதாகச் செய்தியில் பார்த்ததும் இன்று போய் எடுத்து வந்தேன். ஒரு வாரமாகக் காமிராவை எடுத்து வைச்சுட்டு பாட்டரியை சார்ஜ் பண்ணவே இல்லை. ஒரு வழியா நேற்று சார்ஜ் பண்ணிட்டு இன்று காலை போய்ப் படங்கள் எடுத்தேன். அதிகாலையில் எடுக்க நினைச்சேன். ஆனால் வெளிச்சம் வேண்டும் என்பதால் கொஞ்சம் விடிந்தும் விடியாமலும் இருக்கும் ஐந்தே முக்கால் மணிக்கு எடுத்தேன். அரங்கன் கோபுரம். தெற்கு கோபுரம்/ராஜ கோபுரம். விளக்கு அலங்காரத்துடன் இன்று காலைக் காட்சி. தினமும் விளக்கு அலங்காரம் உண்டு. எங்க வீட்டுப் பகுதியில் வடக்கே உள்ள ஓர் அறைச் சாளரத்தின் மூலமும் கண்டு களிக்கலாம். எங்க படுக்கை அறையைத் திறந்து கொண்டு வரும்போதே கோபுர தரிசனம் செய்து கொண்டே வரலாம். அரங்கன் தெற்கே பார்த்துக் கொண்டு இருப்பதால் அவன் கண் பார்வையில் இருக்கிறோம் என்னும் ஆறுதல்/திருப்தி!


இது மேற்கே இருந்து காவிரி திரும்பும் இடம். வீடுகள் மறைக்கின்றன. முன்னெல்லாம் இங்கே தோப்புக்களாக இருந்தனவாம். சமீப காலங்களில் வீடுகள் பெருகி விட்டன. எங்க குடியிருப்புக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பை அழித்துவிட்டுக் கல்யாண மண்டபம் வந்து விட்டது. இப்போத் தான் இரண்டு வருடங்களாகச் செயல்படுகிறது. இன்னொரு வீட்டை இடித்துவிட்டுக் குடியிருப்புக் கட்டப் போறாங்களாம். கபிஸ்தலக்காரர்கள். ஒருவேளை மூப்பனாருக்குச் சொந்தமாக இருக்கலாமோ என நினைப்போம்.


காவிரி மேற்கிலிருந்து தென் கிழக்காய்த் திரும்புகிறாள். பின்னாடி தெருவின் வீடுகள் எல்லாம் காவிரிக்கரையிலேயே அமைந்துள்ளன. அங்கே அவங்க அவங்க வீட்டு மொட்டை மாடியில் காவிரியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து காற்று வாங்கலாம். நாங்க அப்படி ஒரு வீட்டைத் தான் தேடினோம். ஒரு குடியிருப்புக் கிடைச்சது. ஆனால் வாங்க முடியலை. தட்டிப் போய்விட்டது.


கொஞ்சம் கிழக்கே வந்துவிட்டாள். அங்கே நீளமாகப் பாலம் போல் தெரிவது குடி தண்ணீருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் செக் டாம். இங்கே பல படங்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அஞ்சலி என்னும் நடிகை கூட யாரோ ஒருத்தருடன் இந்த இடத்தில் பேசுவது போல் எடுத்திருக்கின்றனர். படத்தில் பேருந்து விபத்து நேரும் என நினைக்கிறேன். அந்தப் படமா இல்லைனா வேறே ஏதோ படமா நினைவில் இல்லை.


இதுவும் அதே தான். கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தேன். இஃகி, இஃகி,இஃகி, தொ.நு.நி. ஆயிட்டேனோ?


கிழக்கே திரும்பிய தண்ணீர். நேற்றிலிருந்து பனிரண்டாயிரம் கன அடி கூடத் தண்ணீர் வருது. அதனால் 2 நாட்களில் இன்னும் கூடவே தண்ணீர் போகும். தண்ணீர் வரலைனால் அடிச்சுப்பாங்க. எல்லாத்துக்கும் மோதி தான் காரணம், அவர் தான் கையை வைச்சுத் தடுத்து நிறுத்திட்டதாச் சொல்வாங்க. இப்போத் தண்ணீர் வந்திருப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை யாரும். இதிலே விவசாயிங்க போராட்டம் வேறே நடத்தப் போறாங்களாம். முன்னர் தில்லியிலே போய்ப் போராடினாங்களே அவங்களே தான். இப்போவும் தொடரப் போறோம்னு சொல்லி இருக்காங்க. 


கீழிருக்கும் இரு படங்களும் கிட்டக்க செக்டாமைக் காட்டுது. எதிர்க்கரையில் இன்னமும் மிச்சம், மீதித் தோப்புக்கள் இருக்கின்றன. இங்கே விடத் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பரவாயில்லை. காவிரிக்கரையில் இன்னமும் பசுமை மீதம் இருக்கு அங்கெல்லாம்.இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இன்னொரு கோணத்தில் எடுத்தது. அம்புடுதேன். தொ.நு.நி.ன்னா கோணம் எல்லாம் பார்த்துக் கோணலாக எடுக்க வேண்டாமோ! என்ன நான் சொல்றது?


திரும்பிடுச்சுப்பா, திரும்பிடுச்சு! கிழக்கே போயிட்டிருக்கு!இன்னும் கொஞ்சம் தள்ள்ள்ள்ளிநல்லாக் கரை ஓர வீடுகள் மட்டுமே தெரியும் வண்ணம் வந்திருக்கு பாருங்க!


அங்கே நம்ம பக்கத்துக் கரை இல்லை அது! வீடுகள் சில தெரிகின்றன. தென்னை மரங்கள் மறைக்குது. தூரத்தில் தெரியும் சர்ச் உ.பி.கோயில் பக்கம் இருப்பது தான். பழைய சர்ச் அது! ஜூம் பண்ணி எடுக்கலை.இங்கே நம்ம உ.பி.யை ஜூம் பண்ணி எடுத்திருக்கேன் ஓரளவுக்கு. என்றாலும் இன்னமும் பண்ணி இருக்கலாமோ?  அவர் எதிர்க்கரையில் திருச்சியில் இருக்கார்.முடிஞ்சவரை ஜூம் பண்ணி எடுத்ததில் இவ்வளவு தான் உ.பி. வந்தார்.  இடுக்கில் கொஞ்சம் போலக் காவிரி தெரியுது.இது நம்ம வீட்டுப் பிரபலமான ஜன்னல். லிஃப்ட் பக்கத்தில் இருக்கும். நம்ம எ.பி. ஸ்ரீராம் எடுத்துப் போட்டிருக்கார். நானும் எடுத்துப் போட்டிருந்தேன். ராமலக்ஷ்மிக்கு நினைவிருக்கும். ஆனால் அப்போ மாதிரி இப்போக் காவிரி அவ்வளவு தெரியலை. படத்தைக் கொஞ்சம் பெரிது பண்ணித் தான் காவிரியைப் பார்க்கணும். முன்னைக்கு இப்போ வீடுகள் வந்துவிட்டன. ஆகவே முன் போல் தெரியறதில்லை.

Thursday, July 02, 2020

சின்ன வெங்காயத்தைச் சாப்பிடலாமா?

நேற்றுக் கொஞ்சம் மளிகை சாமான்கள் வாங்க வேண்டி இருந்ததால் காலையிலேயே அதற்கான பட்டியலைத் தயாரித்து சாமான்கள் வாங்கி அதை உரிய இடங்களில் வைத்துனு சரியா இருந்தது. மத்தியானமா இந்தக் கிண்டிலில் இணைந்ததில் சில விபரங்கள் கொடுக்கலைனு அவங்க நினைவூட்டல் கடிதம் அனுப்பி இருந்தாங்க. அதை எல்லாம் சரி செய்ததில் நேரம் போய்விட்டது. பின்னர் வெளியிட வேண்டிய தொகுப்பில் இன்னும் இணைக்க வேண்டியதை எடுத்துக் காப்பி, செய்தால் அது பேஸ்ட் ஆகவே இல்லை. வேர்டில் ஏதோ பிரச்னை. இந்த ஆப்ஷன் உபயோகத்தில் இல்லைனு வருது. சரினு புதுசா வேர்ட் திறந்து அதில் போடலாம்னு முயற்சித்தால் வேர்டே திறக்கலை என்பதோடு மைக்ரோ சாஃப்ட் உன்னோட கணக்கு முடிந்து விட்டது என்கிறது. எப்படி எல்லாமோ முயற்சித்து முயற்சித்துக் கடைசியில் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே கேடிபியிலும் பப்ளிஷ் செய்ய எப்படி அப்லோட் செய்வது என்பதையும் சரியாகப் புரிஞ்சுக்க முடியலை. ஏற்கெனவே ம.ம. இதில் இது சரியா வரலை, அது சரியா வரலைனு இருக்கையில் மனது எங்கே பதியும். இதுக்கே மணி நாலு ஆகிவிட்டது. ஆகவே அத்தோடு கணினியை மூடிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். இன்னிக்கு மத்தியானம் மறுபடி உட்கார்ந்து எல்லாத்தையும் என்னனு பார்க்கணும்.
*********************************************************************************
இந்தச் சீன "ஆப்கள்" பலவற்றை அரசு தடை செய்திருக்கிறது. நல்லவேளையா நான் எதையுமே மொபைலில் டவுன்லோடு செய்து கொள்வதில்லை. வாங்கும்போது என்னென்ன கொடுத்தாங்களோ அதான். அதுவே பாதிக்கும் மேல் என்னனு பார்த்ததில்லை. எல்லாவற்றிற்கு அவ்வப்போது அப்டேட் மற்றும் நடக்கும். மற்றபடி ஜியோ சாவன், காலக்ஸி, ஷேர் சாட், ப்ரைம் வீடியோ, மை காம்ஸ், அமேசான் ஷாப்பிங் என எதுவும் திறந்து கூடப் பார்த்ததில்லை. எல்லா நோட்டிஃபிகேஷன் அறிவிப்பையும் மூடி வைத்திருக்கேன். அப்படியும் சில நாட்களில் இரவில் டிட்டடங் என சப்தம் போட்டுக்கொண்டே இருக்கும். எங்கே எதை அணைத்தால் இந்த சப்தம் நிற்கும் எனப் புரியாது. செட்டிங்க்ஸில் திறந்து பார்த்தால் எல்லாம் நோட்டிஃபிகேஷன் வந்து சுமார் ஒரு மணி நேரமாவது ஆகி இருக்கும். புதுசாக எதிலும் வந்திருக்காது. ஆனாலும் இரவு முழுவதும் சப்தம் தாங்காது. மொபைல் டாட்டாவை வீட்டில் இருக்கையில் போடுவதே இல்லை. ஒரு நாள் பூரா மின்சாரம் வராதுனா அன்னிக்குப் போட்டுப்பேன். மின்சாரம் வந்ததும் நினைவா மொபைல் டாட்டாவை அணைச்சுடுவேன். எல்லோருமே இரண்டும் பயன்பாட்டில் வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நமக்கு இந்தத் தொழில் நுட்பம் எல்லாம் புரியாது; வராது என்பதால் அந்தப் பக்கம் போவதே இல்லை.

இந்த டிக்டாக் என்றால் என்னனு தெரியலை. ஆனால் அதன் மூலம் நல்ல விஷயங்கள் நடப்பதாகவோ/நடந்ததாகவோ தெரியவில்லை. பூனை, நாய், குரங்கு போன்ற வாயில்லா ஜீவன்களைத் தூக்கில் தொங்க விட்டுப் படம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் பார்க்க நேர்ந்தது. செய்திகளே பார்க்க இப்போதெல்லாம் மனசு வருவதில்லை. இன்னும் சில ஆபாசமான காட்சிகளாகவும் இருக்கின்றன/இருந்தன.இவை எல்லாம் நல்லதுக்கா/நன்மைக்கா? தொழில் நுட்பம் முன்னேறியதில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறது? இம்மாதிரிச் சட்டவிரோதமான ஆபாசங்கள் தான்.

நேத்திக்கு நான் பதிவுகளுக்கு வரலைனதும் வல்லி பயந்திருக்கார் போலே! எனக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பிக் கேட்டிருந்தார். எங்க பெண்ணிற்கும் செய்தி அனுப்பிக் கேட்டிருந்திருக்கார். பெண்ணிற்குக் கவலை. உடனே கூப்பிடும்படி அவளுக்கு முடியலை. அவங்க காலை நேரம் என்பதால் அவளும் செய்தி அனுப்பிக் கேட்டிருந்தாள். எங்கள் ப்ளாக் புதன் பதிவில் கமலா ஹரிஹரனும் என்னைக் காணோமே என்று தேடி இருந்தார். வர நேரம் இல்லை என்பது தான். மற்றபடி மத்தவங்க யாரும் நல்லவேளையா தேடலை. ஏனெனில் நான் இப்படி ஏதேனும் அசட்டுத் தனம் செய்து கொண்டிருப்பேன் என்பது அவங்களுக்குத் தெரியும்.

சின்ன வெங்காயம் பித்தத்திற்கு நல்லது. கொழுப்புக் குறையும்.மூலக்கோளாறுகளுக்கு நல்லது. தலைவலியைக் குறைக்கும். ஆசனக்கடுப்பு நீங்கும். இருமல் குறையும். வெங்காயச் சாறு பல்வலி, ஈறு கொழுத்திருத்தல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து. உடல் சூடு உள்ளவர்கள் பழைய சாதத்தோடு சின்ன வெங்காயம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். நரம்புக்கு பலம். தூக்கம் வரும். இன்னும் எத்தனையோ பலன்கள் இருக்கின்றன. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்குச் சின்ன வெங்காயம் சிறந்த மருந்து. ஆகவே விரத நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சாப்பிடலாம். இதில் எந்த விதமான வசியமோ அல்லது அஜீரணமோ ஏற்படாது. புலனடக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், யோகிகள் மற்றும் சில ஆசாரமானவர்கள் வெங்காயத்தை உணவில் சேர்க்க மாட்டார்கள். நோயாளிகளுக்குப் பலன் தரும் என்பதால் சேர்க்கலாம்.