எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 27, 2018

பெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு!

ஶ்ரீரங்கம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!

நேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்க்கப்போனோம். முந்தாநாளே போயிருக்கணும். மருத்துவமனையிலேயே நேரம் ஆயிடுச்சு! அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு! இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க! ஹெஹெஹெ, ஒரு விளம்பரந்தேன்!

தலைப்பைப் பார்த்துட்டு யோசிக்க வேண்டாம். உள்ளே எழுதி இருப்பது ஜேஷ்டாபிஷேஹம் பத்தித் தான். தலைப்பை மாத்தி இருக்கணும்னு ஏற்கெனவே நெ.த. போட்டு வாங்கிட்டார். என்றாலும் அந்த லிங்கில் ஜேஷ்டாபிஷேஹம் பத்தின குறிப்புகள் இருக்கும். இன்னிக்குக் கோயிலில் தரிசன சேவை இருக்காது. நாளையிலிருந்து பெரிய ரங்குவின் பாத தரிசனம் 48 நாட்களுக்குக் கிடைக்காது. ஆகவே நேத்திக்கே பார்க்கப் போயிட்டோம். எப்போவும் போல் முதல்லே தாயாரைப் பார்த்துட்டுப் பின்னர் தான் ரங்குவைப் பார்க்கப் போனோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டம் இருந்தது. ஆனால் நாங்க கட்டண சேவைக்குப் போகலை.  கட்டண சேவைக்குப் போயிருந்தாலும் நேரம் ஆகி இருக்கும். தாயாரைப் பார்த்துக் கொண்டு பின்னர் பிரசாதமாகக் கொடுத்த மஞ்சள், மல்லிகைப் பூப் பெற்றுக் கொண்டு சடாரியும் சாதித்த பின்னர் வெளியே வந்தோம்.

அங்கேயே சற்று நேரம் புஷ்கரிணி வாயிலில் காத்திருந்ததும் ஐந்து நிமிடத்தில் பாட்டரி கார் வந்தது. அதில் ஆர்யபடாள் வாயிலுக்குப் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க! கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும்.  ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை! அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை! அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும்! :( 

உள்ளே போனதும் இலவச சேவையில் நிறைய நேரம் நிற்கணும்ங்கறதாலே 50 ரூ சேவைக்குச் சீட்டு வாங்கப் போனால் அதுக்கும் உள்ளே கம்பி கட்டிச் சுத்தோ சுத்துனு சுத்திட்டுப் போய்ச் சீட்டு வாங்கிட்டு உள்ளே போனோம்.அங்கே பிரகாரத்தில் யாருமே இல்லைனு வேகமாப் போனால் சந்தனு மண்டபத்தில் மக்கள் கூட்டம்! நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு! கூட்டம் மெதுவா, மெதுவா நகர்ந்தது. சுமார் முக்கால் மணி நேரத்தில் ரங்குவைப் பார்க்க உள்ளே போனோம். நம்பெருமாள் சிவப்புக் கலர் விருட்சிப் பூக்கிரீடமும் மல்லிகைப் பூக்கிரீடமும் வைச்சுக் கொண்டு அழகாய்க் காட்சி அளித்தார். 

ஶ்ரீரங்கம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!

பெரிய பெருமாள் இன்றைய தைலைக்காப்புக்குத் தயாராகப் படுத்திருந்தார். முக தரிசனம் ஆகும் இடத்தில் கருவறையிலேயே சடாரி சாதித்தார்கள். ஆஹா! முதல்முறையாக! பாத தரிசனம் ஆகும் இடத்தில் துளசிப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. இம்மாதிரிக் கருவறையிலேயே கொடுத்தது எனக்குத் தெரிந்து முதல் முறை. ஒருவேளை ஒவ்வொரு வருஷமும் ஜேஷ்டாபிஷேஹத்துக்கு முதல் நாள் அப்படிக் கொடுத்திருக்கலாம். இந்த வருஷம் தான் முதல் நாள் போனதால் புதுசா இருந்தது. நம்பெருமாளைக் குசலம் விசாரிச்சுட்டுப் பெருமாளிடம் திரும்பிப் போகற வழியைக் கொஞ்சம் நல்லபடியாத் திறந்து வைக்கச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு வெளியே வந்தோம். 

எதிரே அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் போகும் படிக்கட்டுகள் திறந்திருக்க அந்த வழியாப் போகலாமோனு பார்த்தால் கிளிமண்டபத்திலிருந்து அந்தப் பக்கம் இறங்கும் இடத்தில் வெளியே போகும் வழி அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லவே விஷ்வக்சேனர் சந்நிதி வழியாகவே போனோம். நல்ல வேளையாத் தொண்டைமான் மேடு திறந்திருக்கவே படிகளில் ஏறி வெளியே வந்து மீண்டும் பாட்டரி காரில் தாயார் சந்நிதி வந்து வடக்கு வாசல் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

Sunday, June 24, 2018

ஊரைச் சுத்தின கதை!

புதன்கிழமை அன்னிக்குக்  குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பெருமாளுக்கு அபிஷேஹம் ஏற்பாடு செய்திருந்தோம். நான் வீட்டிலிருந்து வடைமாலைக்கு வடை தயார் செய்துகொண்டு போனேன். வழக்கம் போல் நம்ம ஆளுக்குக் கொழுக்கட்டையும் உண்டு.  காலம்பர ஐந்து மணிக்கே கிளம்பிட்டோம். ஏனெனில் முதலில் பரவாக்கரை போய்ப் பெருமாள் அபிஷேகம் முடிச்சுட்டு, பின்னர் மாரியம்மனைத் தரிசனம் செய்து கொண்டு பின்னர் கருவிலிக்கு மண்டலாபிஷேகம் வரணும். இம்முறை எங்களுடன் என் கணவரின் உறவினர் (அத்தை பையர்) வந்திருந்தார். அவருக்கு இம்மாதிரிப்பயணம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது என்று சொன்னார்.   கும்பகோணம் தாண்டியதுமே காரைக்கால் வழியாகப் பரவாக்கரை செல்கையில் ஓர் நிழலான இடத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டு போயிருந்த இட்லியைச் சாப்பிட்டுக் காஃபியையும் குடித்தோம். என்ன தான் சீக்கிரமாகக் கிளம்பினாலும் நாங்கள் போய்ச் சேர எட்டரைக்கு மேல் ஆகிவிட்டது. போகும்போதே பொய்யாப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு ஹெலோ சொல்லிக் கொழுக்கட்டையைக் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்குப் போனோம். அங்கே ஏற்கெனவே பட்டாசாரியார் வந்து தயாராக இருந்தார். நாங்க போய் அபிஷேஹ சாமான்கள் மற்றும் பூ, வஸ்திரங்கள் கொடுத்ததும் அபிஷேஹம் ஆரம்பித்தார். ஏற்பாடுகள் செய்து கொண்டு அபிஷேஹம் ஆரம்பிக்க ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது.  அபிஷேஹம் செய்த பட்டாசாரியாருக்கு வேலை புதுசோனு நினைக்கும்படி ரொம்பவே மெதுவாக எல்லாம் செய்தார். அது முடிச்சு வடைமாலை சாத்திப் பிரசாதம் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டிவிட்டுப் பின்னர் அர்ச்சனை செய்துப் பிரசாதம் கொடுக்கையில் பத்தரைக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள்ளாகக் கருவிலியில் இருந்து தொலைபேசி அழைப்பு! அவசரம் அவசரமாக மாரியம்மன் கோயிலுக்குப் போனோம்.

பூசாரியிடம் முன்னரே சொல்லி வைத்திருந்ததால் அவர் தயாராகக் காத்திருந்தார். போனதும் ஒரே ஆச்சரியம். அங்கே ஏற்கெனவே நாங்க வந்தால் குளிக்க, கழிவறை பயன்பாட்டுக்கு என ஓர் அறை கட்டிக் குழாய் இணைப்புக் கொடுத்து வைக்கச் சொல்லி இருந்தோம். போன வருஷமே அறை கட்டி இருந்தார்கள். ஆனால் மேலே ஏறப் படிகள் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரம் மேலே ஏறிப் போகணும். இப்போ அதெல்லாம் சுத்தமாகப் படிகள் வைத்துக் கட்டி உள்ளே பிரகாரம் முழுதும் கீழே தளம் போட்டு கோயில் சமையலறையை ஒட்டிப் பெரிய ஷெட் போட்டு மிக அழகாகக் கட்டி இருந்தார்கள். ஷெட் போட்டது மிகவும் அருமையாக இருந்தது. படங்கள் எடுக்கணும்னு நினைச்சு எடுக்க முடியலை. சரியா வரலை! :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும்! செல்லில் சரியா வரது இல்லை! கோயிலில் அர்ச்சனை முடித்துக் கொண்டு கருவிலிக்குக் கிளம்பினோம்.


கருவிலிக் கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்குள் நுழைந்ததுமே நம்ம ரங்க்ஸின் பழைய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்கத் திரு கண்ணனையும் பார்த்துப் பேசினோம். முகம் தெரியாத நண்பர் ஒருவர் எனக்கு மின் மடல் அனுப்பித் திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய "சிகரம் பேசுகிறது" புத்தகம் அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். திரு கண்ணனுக்கு அவர் விலாசத்தை அனுப்பி இருந்தேன். அவருக்குப் புத்தகம் போய்ச் சேர்ந்து விட்டது. இப்படிச் சில உறவினர்கள், நண்பர்கள் கலந்துரையாடலுக்குப் பின்னர் சுவாமி தரிசனத்துக்குக் கிளம்பினோம்.  மண்டலாபிஷேகம் முடிந்து நடராஜருக்கு அன்றைய தினம் ஆனித் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலில் இருந்த நடராஜரை யாரோ தூக்கிச் சென்று அவர் எங்கேயோ இருக்கார் இப்போ! கண்டுபிடிக்க முடியலை. இப்போ இருப்பவர் முதல் கும்பாபிஷேகம் ஆனதும் திரு கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளால் புதிதாக வடிக்கப்பட்டது. முன்னே இருந்தவர் கொடுகொட்டித் தாளத்துக்கு ஏற்ற அபிநயத்தில் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக்கொடுகொட்டி திரிபுரத்தை  ஈசன் எரித்தபோது வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே கைகொட்டி நின்று அட்டகாசம் என்னும் சிரிப்புடன் ஆடிய ஆட்டம் எனப் படித்திருக்கேன். (சிதம்பர ரகசியம் எழுதும்போது) கொடுகொட்டி, கொடுங்கொட்டி என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த ஆடல் எம்பெருமானின் 108 தாண்டவ வகைகளில் ஒன்று. பழந்தமிழர் இசைக்கருவி ஒன்றுக்கும் கொடுகொட்டி என்னும் பெயர் உண்டு. எட்டுக்கைகளுடன் ஈசன் ஒரு கையில் துடியையும் இரண்டு கைகளில் தோளில் முழவையும் மாட்டிக் கொண்டு பல்வேறு உருவங்களில் நடனம் ஆடியதாகச் சொல்லுவார்கள். இந்தக் கொடுகொட்டி பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிகிறது. மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் கொடுகொட்டியும் ஒன்று எனக் குறிப்பிடப் படுகிறது.

கலித்தொகையில் நச்சினார்க்கினியர் இந்த ஆடலைப் பற்றிக் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கிறார்.  இந்த ஆடலில் அச்சம், வியப்பு, விருப்பம், அழகு ஆகிய நுண்ணுணர்வுகள் காணப்படும் எனவும் நச்சினார்க்கினியர் தெரிவிக்கிறார்.

கொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய
உமையவள் ஒருபா லாக ஒருபால்
இமையா நாட்டத்து இறைவன் ஆகி
அமையா உட்கும் வியப்பும் விழைவும்
பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க
அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்
பொலிய ஆடினன் என்ப"

இத்தகைய அபூர்வமான தோற்றத்தைக் காட்டும் நடராஜர் இப்போ எங்கே இருக்காரோ! நடராஜர் அபிஷேகம் முடிந்ததும் ஈசனுக்கும், நடராஜருக்கும் தீப ஆராதனைகள் நடந்தன. நாங்க அதற்குள்ளாக அம்மன் சந்நிதிக்குப் போனோம். அங்கே சர்வாங்க சுந்தரிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தபடியால் சற்று தாமதித்தே தரிசனம் கிடைத்தது. அங்கே பெண்கள் பலரும் அம்பிகையின் லட்சார்ச்சனையில் பங்கு பெற்று அடுத்து லலிதா சகஸ்ரநாமபாராயணத்துக்குக் காத்திருந்தார்கள். அவர்கலோடு என்னையும் பங்கெடுக்கச் சொன்னாலும் என்னால் கீழே உட்கார முடியாது என்பதால் நான் உட்காரவில்லை. அம்மனைத் தரிசனம் செய்து கொண்டு மீண்டும் சுவாமி சந்நிதி திரும்பி வந்து தரிசனம் முடித்துக் கொண்டு நடராஜரையும் பார்த்தோம். கோயிலில் சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதால்  அங்கே இருந்த கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் கோயிலில் சாப்பாடு போட ஒன்றரை மணியில் இருந்து இரண்டு மணி வரை ஆகும் என்றார். திரு கண்ணன் அம்மன் சந்நிதியில் இருந்ததால் நாங்கள் கோயிலுக்குப் போனதும் பேசியது தான். அப்புறம் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரிடம் விடை பெற முடியவில்லை!

திரு கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் சாப்பாட்டுக்கு நேரம் ஆகும் என்பதோடு கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும் என்பதும் தெரிந்தது. ஆகவே நாங்கள் அங்கே சாப்பாட்டுக்கு உட்காரவில்லை. அதோடு நம்ம ரங்க்ஸுக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. மாத்திரை வேறே போட்டுக்கணும். கூட வந்த அத்தை பையரும் எங்களை விட வயசானவர். அவரும் எத்தனை நேரம் பசி தாங்குவார்! நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது.  அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை! நான் தான் சமைக்கப் போறேன். :)))))))))

Tuesday, June 19, 2018

அதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு!

நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் போவோம். முக்கியமாய்க் கருவிலி கோயிலில் சென்ற வருடம் மூன்றாம் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. அதுக்கு எங்களால் போக முடியலை. ஆகவே இந்த வருஷம் மண்டலாபிஷேகத்துக்குக் கலந்து கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் நாளைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படியும் சாயந்திரம் ஆகும் வர. ஆகவே பதிவில் கருத்துக்களுக்குப் பதில் சொல்லலைனு யாரும் நினைக்க வேண்டாம். சாயந்திரம் வந்து கணினியில் உட்கார நேரம் கிடைக்குமா என்று தெரியலை. ஆகவே முக்கியமா அதிரடி, அதிரடியா வந்து கமென்ட்ஸை வெளியிடவில்லை எனப் பொயிங்க வேண்டாம்! செரியா?  

Sunday, June 17, 2018

குழந்தைப் பாடல்கள்
நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் "ஆனை, ஆனை" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள பெற்றோருக்குத் தெரியாது எனவும் சொல்லி இருந்தார்.அப்போது என்னிடம் சில பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஓர் சிநேகிதி அவற்றைப் பகிரச் சொல்லி இருந்தார்.ஃபேஸ் புக் மட்டுமில்லாமல் பதிவின் மூலம் பலரும் தெரிஞ்சுக்கலாம்னு இங்கே பதிவாப் போட்டிருக்கேன். குழந்தை பிறந்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பாட்டு உண்டு. குழந்தை குப்புறத்திக் கொண்ட பின்னர் சுத்திச் சுத்தி வரும். அதன் பின்னர் ஆறு மாதத்தில் இடுப்பில் வைத்தால் குதிக்கும். அப்போது தான் "சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம்!" பாடுவார்கள். குழந்தையும் அதற்கேற்பக் குதிக்கும்.

பின்னர் தவழ முயற்சி செய்யும் முன்னர் யானையைப் போல் முன்னும், பின்னும் ஆடும். அப்போது

"ஆனை, ஆனை, அழகர் ஆனை" பாடுவார்கள்.


சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!

தவழ முயலும்போது ஒரு பாடல்!

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஆடும் ஆனை
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி நீரைக் கலக்கும் ஆனை
எட்டிக் கதவை உடைக்கும் ஆனை
ஆனையைக் கண்டியா கோலத்தம்பி
கண்டேன் பண்டாரத்தோப்பிலே
சின்ன யானை வருது
சின்னக் கதவைச் சாத்துங்கோ
பெரிய யானை வருது
பெரிய கதவைச் சாத்துங்கோ
கொம்பன் யானை வருது
கொல்லைக் கதவைச் சாத்துங்கோ
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்.
பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்.


இன்னும், குழந்தை உட்காரும்போது பெண் குழந்தைக்கு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!

ஆண் குழந்தை எனில்

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
அது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்
குட்டிப் பெருச்சாளி ஆடுமாம்
கொழுக்கட்டை கொண்டான்னு கேட்குமாம்


பொதுவான பாடல்கள்

யானை வந்தது யானை
எங்கே வந்தது யானை
சண்டைக்கு வந்தது யானை
சறுக்கி விழுந்தது யானை

பொதுவான பாடல்

காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு பம்பாயி
குந்தோ குந்தோ தலகாணி
குதிரை மேலே சவாரி
ஏன்டி அக்கா அழறே
காஞ்சிபுரம் போகலாம்
லட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டு பிட்டு தின்னலாம்
கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு


தாலாட்டுப் பாடல்கள்

கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ

முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?

ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ

யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ

சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே
அம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே
மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே


இதுவும் ஒரு வகைத் தாலாட்டுப் பாடல் தான்

செட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே
வைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை
கண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே
பார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே

அம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு
அம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ
ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய
தானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது
இது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது

ஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி
குளமாப் பெருகி குதிரை குளிச்சேறி
வாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி
என் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.

குழந்தை சாப்பிட ஆரம்பிக்கையில்

பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா


நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா


ஒரு வயசுக் குழந்தைக்கு

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கை வீசு
கம்மல் வாங்கலாம் கை வீசு
காதில் போடலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய்ப் போடலாம் கை வீசு
பள்ளிக்குச் செல்லலாம் கை வீசு
பாடம் படிக்கலாம் கை வீசு
கோயிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
தில்லிக்குப் போகலாம் கை வீசு
திரும்பி வரலாம் கை வீசு

குழந்தையைத் தூங்க அழைக்கையில் பாடும் பாடல்

சுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்
பிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்
வா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்
சண்டை போடறதும், மண்டை உடையறதும்!

வரகரைக்கிறதும்...
வந்து நிக்கிறதும்...

வாவா என்கிறதும்...
வரமாட்டேன் போ என்கிறதும்..

சுக்கான் குத்தறதும்..
சோறு கொதிக்கிறதும்...

பிள்ளை அழுவதுவும்
பேசாதே என்கிறதும்...

பலர் அழறதும் தாச்சுக்க அழைக்கறதும்

மாட்டேன் என்னறதும் மல்லுக்கு நிக்கறதும்.

இன்னும் குழந்தை வளர்ந்த பின்னர் பாடும் பாடல்கள்

ஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.


கொழு கொழு கன்னே
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்திலிருக்கும் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பெயரென்ன??


ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.

அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.


அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?

இதைப் பாடினால் எங்க பட்டுக் குஞ்சுலு கண், கை ஆகியவற்றைக் காட்டும்.

பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது
கோனார் வீட்டிலே
கொய்யாப்பழம் காய்க்குது!அம்மா பொண்ணுக்கு கல்யாணம்
அவா அவா வீட்டுல சாப்பாடு
கொட்டுமேளம்கோயில்ல
வெத்தலபாக்கு கடையில
சுண்ணாம்பு சுவத்தில

இதுவும் குஞ்சுலுவுக்குப் புரியும். இன்னும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் பல குழந்தைகளும் கை தட்டும். கையை மேலே தூக்கிக் கோவிந்தா போடும். இவை எல்லாம் எட்டு மாசக் குழந்தைக்கான பாடல்கள். எங்க குஞ்சுலுவுக்கு இப்போ விபரம் புரிய ஆரம்பிச்சுடுத்தா! சமயத்தில் மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுச் சிரிக்கும்.

தாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன. 

Friday, June 15, 2018

சினிமாவும் நானும்!நேத்திக்குக் காலம்பரலேருந்து மின்சாரமே இல்லை. மத்தியானம்   மூன்றரைக்கு வந்தது. இல்லாட்டி மட்டும் எழுதிக் கிழிக்கப் போறதில்லை. தொடுக்க உதிரிப்பூ நிறைய இருந்ததால் நேரம் அதிலே போயிடுச்சு. பூத் தொடுத்தாக் கொஞ்ச நேரத்துக்குக் கணினியைப் பார்க்கவோ, புத்தகங்கள் பார்க்கவோ முடியறதில்லை. அதனால் போய்ப் படுத்துட்டேன். அரை மணி கழிச்சு எழுந்து வந்தால் மின்சாரம் வரலை. சரினு நான் பார்த்த ஜிவாஜி படங்களைப் பத்தி மனசுக்குள்ளே ஒரு ரீல் ஓட்ட ஆரம்பிச்சேன். முதலில் நினைவு தெரிஞ்சு பார்த்ததுன்னா "வீர பாண்டியக் கட்ட பொம்மன்!" ஆனால் நாங்க பார்க்கப் போனது என்னமோ "கல்யாணப் பரிசு" படம் தான். அது அப்போ மதுரை கல்பனா தியேட்டரில் ஓடிட்டு இருந்தது.

அப்பாவுக்கு ஏதோ திடீர்னு எங்களை சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல ஆசை வந்து அங்கே போனோம். படம் மத்தியானம் இரண்டரைக்குத் தான் ஆரம்பம். ஆனால் ஒன்றரை மணிக்கே House Full Board   போட்டுட்டாங்க. அடுத்த ஆட்டத்துக்கும் அப்போவே டிக்கெட் கொடுத்து எல்லோரும் உட்கார்ந்திருந்தாங்க. சரினு அங்கே இருந்து மெல்ல நடந்து தெற்கு கோபுர வாசல் போனோம். இது ஒரு கோடி. அது இன்னொரு கோடி. அங்கே தான் நியூ சினிமா இருந்தது. அதிலே தான் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படம்! அப்போக் காத்தாடிட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். படம் வேறே ஒண்ணு அப்போ ஓடினதாலே அதுவும் கல்யாணப் பரிசுக்கும் டிக்கெட் கிடைக்காதவங்க இதுக்கு வருவாங்கனு இன்னும் அங்கே மாடினி  ஷோ ஆரம்பிக்கலை. அப்போல்லாம் மத்தியானம் 2 மணி ஆட்டம் தான் மாட்னி ஷோ என்பார்கள். ஆகவே நாங்க போன உடனே டிக்கெட் கிடைச்சது. எங்களுக்கு ஏதோ சினிமா பார்க்கணும்னு தான் இருந்ததே தவிர இந்தப் படம் அந்தப் படம் எல்லாம் தோணலை. இதான் எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஜிவாஜி  சினிமா பார்த்த கதை!

அதுக்கப்புறமாத் தான் பாசமலர், பாலும் பழமும் எல்லாம் வந்ததோ? நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் "ப" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை.  அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு! அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம்,  சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ? அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா  மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி? ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது! அல்லது தெய்வ மகன்? ஹெஹெஹெ ஏதோ ஒண்ணு! இப்படிப் பல பார்த்தாலும் இந்த வியட்நாம் வீடு படத்தையோ பாலும் பழமும் படத்தையோ, பாசமலர் படத்தையோ இன்னிக்கு வரை பார்த்ததில்லை என்ற பெருமைக்கு ஒரே சொந்தக்காரி நான். அந்த நாள், சபாஷ் மீனா போன்ற இன்னும் சில படங்கள் தொலைக்காட்சி உபயம். முதல் மரியாதை கூட அப்படித் தான் தூர்தர்ஷனில் போட்டப்போப் பார்த்தது. தூர்தர்ஷன் மூலம் சில ஜிவாஜி படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் வரலை.

கப்பலோட்டிய தமிழன் படமெல்லாமும் தூர்தர்ஷன் தயவு தான். தூர்தர்ஷனில் படங்கள் என ஆனப்புறம் தியேட்டரில் போய்ப் பார்ப்பதே குறைஞ்சும் போச்சு. இப்போக் கொஞ்ச நாட்களாத் தொ(ல்)லைக் காட்சியிலும் படங்கள் பார்ப்பதில்லை.  அதிலும் இப்போதெல்லாம் டிக்கெட் விற்கும் விலைக்கு ஒரு மாசக் காய்/கனிச் செலவுக்குச் சரியா இருக்கும் போல! உடம்பாவது சரியாகும்.  எப்போவுமே முன் பதிவு செய்து திரைப்படம் போனதில்லை. அப்படிப் போன ஒரே படம் , "மை டியர் குட்டிச் சாத்தான்" மட்டுமே!

Wednesday, June 13, 2018

ஒன்றா, இரண்டா! எடுத்துச் சொல்ல! திரு கிருஷ்ணமூர்த்தி 3

தில்லியில் இருந்த வண்ணமே திட்டக்கமிஷன் வேலையின் அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல காரியங்களையும் முடித்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் திரு அப்பாதுரைக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டு வேலைக்குத் திரும்ப இஷ்டமில்லாமல் கிருஷ்ணமூர்த்தி யுபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிஈஎஸ் அதிகாரியாகத் திட்டக்கமிஷனுக்கே மீண்டும் வந்து அதே மின்சார வளர்ச்சித் திட்டங்கள் பிரிவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். இப்போதைய ஆட்சியில் திட்டக்கமிஷன் என்னும் பெயர் நீக்கப்பட்டு நிதி ஆயோக் என்னும் பெயரில் இயங்கி வரும் இது நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேருவின் ஆலோசனைகளின் பேரில்  ஐந்தாண்டுகள் ஒரு வளர்ச்சித் திட்டம் என்னும் வகையில் உருவாக்கப்பட்டது.

வளர்ச்சியை நிர்ணயிப்பதோடு அல்லாமல் எந்த எந்த மாநிலம் முன்னுரிமை பெற வேண்டும் என்பதையும் திட்டக்கமிஷனே நிர்ணயித்து வந்தது. நேரு அதன் தலைவர் எனில் அதில் இடம் பெற்ற மற்றவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. வி.டி.கிருஷ்ணமாசாரி(டிடிகே இல்லை), பி.சி.மகலேனாபிஸ், ஜே.ஜே. அஞ்சாரியா, தர்லோக் சிங், பென்டரல் மூன், பீதாம்பர் பந்த் ஆகியோரைத் தவிர்த்து சிந்தாமணி தேஷ்முக், டிடிகே, வி.கே.கிருஷ்ணமேனன், ரஃபி அஹமட் கிட்வாய் போன்றோருடன் மாநில முதலமைச்சர்களில் திறமை வாய்ந்த சிலராக இருந்த திரு காமராஜர், கர்நாடக முதல்வரான நிஜலிங்கப்பா, உ.பி.யின் கோவிந்த வல்லப பந்த் ஆகியோரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இவர்களோடு  அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்த திரு கிருஷ்ணமூர்த்தி முக்கியமாய் அப்போது அணுசக்தித் துறைத் தலைவரான ஹோமி ஜே.பாபாவுக்கும் அப்போதைய பிரதமர் நேருவுக்குமான உரையாடல்களில் தான் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறார். தொடர்ந்து திட்டக்கமிஷனிலேயே நீடிக்க விரும்பினாலும் அவருக்கு BHEL  இல் தலைவராகும் வாய்ப்புத் தேடி வந்தது.

அப்போதைய திட்டக்கமிஷனின் முக்கியமான முடிவுகளாக மின் சக்தியைத் தயாரிப்பது அமைந்தது. அதற்காக அப்போது இருந்த இரண்டே வழிகளான நீர் ஆதாரங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல் இன்னொன்று நிலக்கரியை வைத்து அனல் மின்சாரம் தயாரித்தல் ஆகியவை! ஆனால் நீர் ஆதாரங்கள் குறைவாக இருந்ததால் 40% மட்டுமே மின்சக்தி கிடைத்தது. மீதமுள்ள 60% அனல் மின்சாரமாக நிலக்கரி மூலம் எடுத்தாக வேண்டிய கட்டாயம். இதில் எந்த மாநிலத்தில் நீர் மின்திட்டம் அமைப்பது, எந்த மாநிலத்தில் அனல் மின் திட்டம் அமைப்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கொண்ட திட்டக் கமிஷன் அறிக்கையை நம் கிருஷ்ணமூர்த்தியே தயாரித்தார். அப்போதே தில்லி வட்டாரங்கள் அவரை "விகே" என அன்புடன் அழைக்கத் துவங்கி இருந்தது. அரசு அதிகாரிகள் மத்தியில் அவர் செல்வாக்குப் பரவி இருந்தது. அவர் தயாரித்த அறிக்கை ஜவகர்லால் நேருவால் முழு மனதுடன் அங்கீகரிக்கப்பட்டு விவாதங்களுக்கும் உள்ளானது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட நேரு அறிக்கையில் கண்டபடி மின்சாரம் தயாரிக்கத் தேவையான கருவிகளுக்கு எங்கே போவது என்னும் கவலையைத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி நாட்டின் மின் உற்பத்தி அமைய வேண்டுமானால் கருவிகள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் எனக் கிருஷ்ணமூர்த்தியும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே எஸ்.ஏ. காட்கரி தலைமையில் மின்சார உற்பத்தி செய்யப் போதுமானக் கருவிகள் தயாரிப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆலோசனைகள் செய்தனர். இதிலும் கட்கரியின் உதவியாளராகப் பணியாற்றினார் திரு கிருஷ்ணமூர்த்தி. அப்போது தான் நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகி இருந்த காரணத்தால் தனியார் மூலம் இவற்றைப் பெற முடியாது என்பதால் பொதுத்துறை மூலம் உற்பத்தி செய்யலாம் எனக் காட்கரி குழு தீர்மானம் செய்து அதை முறையே பிரதமருக்கும் தெரிவித்தனர்.  1956 ஆம் ஆண்டில் HEILஎன்னும் பெயரில் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் கம்பெனி பதிவு செய்யப்பட்டு பிரிட்டனின் அசோசியேடட் எலக்ட்ரிகல் இன்டஸ்ட்ரீஸின் ஒத்துழைப்போடு போபாலில் உற்பத்தி நிலையம் முதன் முதல் அமைக்கப்பட்டது.

திட்டக்கமிஷனில் பெரும்பங்காற்றிய திரு கிருஷ்ணமூர்த்தி இளமைத் துடிப்புடன் இருந்தார். இம்மாதிரியான ஓர் நிறுவனத்தில் தானும் இறங்கி தொழிலை வளர்த்து லாபம் அடையச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு அவருள் இருந்ததால் இந்த HEIL இல் சேர விண்ணப்பித்தார்.  இவரது திறமைகளை நன்கு அறிந்திருந்த திட்டக்கமிஷணிலும் சரி, பின்னர் ஏற்பட்ட கட்கரி குழுவிலும் சரி இவரின் விண்ணப்பத்தை ஆதரிக்கவே செய்தனர். ஆகவே போபாலில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி! ஆனால் திட்டக் கமிஷன் பணி பாதியிலே இருக்கிறதே. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவுப் பணிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க முடியாது எனத் திட்டக் கமிஷன் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டது. அதை எதிர்த்து ஏதும் செய்ய முடியா நிலையில் அங்கேயே தன் பணியைத் தொடரவேண்டிய கட்டாயம் திரு கிருஷ்ணமூர்த்திக்கு!

ஆனால் மின் உற்பத்திக்குத் தேவையான சாதனங்கள் HEIL மூலம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் போதுமான அளவுக்கு சாதனங்கள் தயார் செய்ய முடியவில்லை. காட்கரி குழுவின் அறிக்கையை மீண்டும் மறு பரிசீலனை செய்ததில் பஞ்சாப் மின் வாரியத்தைச் சேர்ந்த எச்.ஆர்.பாட்டியா என்னும் மற்றொரு குழு HEIL மட்டும் போதாது எனவும் இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் உடனடியாகத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் சுட்டிக் காட்டியது. இங்கே திட்டக்கமிஷனில் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் திரு கிருஷ்ணமூர்த்திக்கு அங்கே இருக்க மனம் இல்லை. அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் HEIL க்குப் போய் விட்டார். புதிதாக வந்தவருக்குக் கிருஷ்ணமூர்த்தியுடன் இணக்கம் ஏற்படாமல் போகவே அப்போது பிரதமரின் அலுவலகத்தில் இருந்த திரு எல்.கே.ஜாவின் உதவியைக் கோரினார் கிருஷ்ணமூர்த்தி.

அப்போதெல்லாம் இம்மாதிரி மின் திட்டங்களின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகளையே நியமனம் செய்து வந்தார்கள். அதன்படி அப்போது HEIL இன் தலைவராக இருந்தவர் திரு மாதுர் என்பவர். மின்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அவருக்கு அனுபவம் இல்லை. ஆகவே அவருக்கு உதவி செய்தாற்போலவும் இருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மாறுதல் கிடைக்கும் என நினைத்த திரு எல்.கே.ஜா ஓராண்டுக்கு மட்டும் அவரை அங்கே அனுப்பலாம் என நினைத்தார். யு.பி.எஸ்.சி. மூலம் நேரடித் தேர்வு எழுதி சி.ஈ.எஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்திருந்த திரு கிருஷ்ணமூர்த்தியை ஓராண்டுக்காகப் பாதுகாப்பான வேலையை விட்டு விட்டுச் செல்லும்படி சொல்வதா என்னும் சந்தேகமும் திரு ஜாவுக்கு ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ பிடிவாதமாகத் தான் HEIL க்கே போவதாகச் சொன்னார்.  நண்பர்கள் வேறு எச்சரித்தனர். அதிலும் தலைவர் ஆன மாத்துர் பற்றி யாருமே நல்லபடியாகச் சொல்லவில்லை. யார் சொல்வதையும் அவர் கேட்க மாட்டார் என்றே சொன்னார்கள். ஆனாலும் 1960 ஆம் ஆண்டில் திட்டக்கமிஷனை விட்டு விலகி HEIL இல் மாதுருக்கு உதவியாகச் சேர்ந்தே விட்டார் திரு கிருஷ்ணமூர்த்தி.

Sunday, June 10, 2018

ஒன்றா இரண்டா! எடுத்துச் சொல்ல! திரு கிருஷ்ணமூர்த்தி! 2

உண்மையில் இந்தப் புத்தக விமரிசனம் எழுத ஆரம்பிக்கையில் வரவேற்பு இருக்குமானு யோசனையோடேயே இருந்தேன். ஆனாலும் பலரும் படித்திருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவகர்லால் நேருவிடம் ஆரம்பித்துக் கடைசியாய் இப்போது திரு மோதி வரை உள்ள பிரதமர்களைப் பார்த்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி. இதில் அவர் திரு ஜவகர்லால் நேருவின் நம்பிக்கையை மிக இளம் வயதிலேயே பெற்றதில் ஆரம்பித்துப் படிப்படியாகத் திருமதி இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கையையும் பெற்றுப் பல உயர் பதவிகளைத் தொழில் துறையில் அலங்கரித்ததோடு அல்லாமல் தன் பதவிகள் மூலம் அந்தத் தொழில்கள் எல்லாமே   பல வழிகளிலும் முன்னேற்றவும் அரும்பாடு பட்டிருக்கிறார். ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தான் அவருக்குச் சற்றே பின்னடைவு! ஆனால் அப்போது சந்தித்த ஒரு ஜோதிடரின் சூசகமான வார்த்தைகளால் தான் அவரால் கருவிலி கோயிலை நினைவு கூர்ந்து அதன் திருப்பணிகளைச் செய்ய முடிந்தது.

கருவிலியைப் பூர்விகமாய்க் கொண்ட திரு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தின் வளம் க்ஷீணித்துப் போனதால் 1930 ஆம் வருடம் கருவிலியை விட்டுக் கிளம்பிச் சென்னைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஐந்து வயது தான். சென்னையில் தொழில் தொடங்க இருந்த தந்தையாருக்குக் குடும்பத்தைப் பேணுவது கஷ்டம் என்பதால் கும்பகோணத்துக்கு அருகில் இருந்த குத்தாலம் என்னும் ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறார். திரு கிருஷ்ணமூர்த்தியின் பதினோராம் வயதில் தாயார் திடீரென இறந்துவிடக் கடைக்குட்டியான அவர் தாயாரின் பிரிவினால் மிகவும் மனம் வருந்தினாலும் படிப்பில் மூழ்கிப் பள்ளி இறுதித் தேர்வைக் குத்தாலம் பள்ளியிலேயே முடித்திருக்கிறார். பின்னர் தன்னை விட இரண்டே வயது மூத்த சகோதரர் வைத்தியநாதனுடன் சென்னையில் இருந்த அனைவருக்கும் பெரிய சகோதரர் ஆன திரு சுப்பிரமணியத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தார். திரு சுப்பிரமணியம் திருமணம் ஆகி ரயில்வேயில் பணி ஆற்றி வந்தார். இளம் வயதாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையால் திரு வைத்தியநாதனும் வேலைக்குச் செல்ல வேண்டியவராக இருந்தார்.

அப்போது தான் ஆரம்பித்த "கல்கி" பத்திரிகையில் சர்க்குலாஷன் மானேஜராகச் சேர்ந்த திரு வைத்தியநாதன் பின்னாட்களில் அதன் சேர்மன் ஆகவே ஆனார். இந்தச் சமயத்தில் தான் திரு கிருஷ்ண மூர்த்தி தொழில் படிப்புப் படிக்க ஆசை கொண்டு பொறியியல் துறையில் டிப்ளமா பட்டம் பெற்றார். அப்போது சென்னை மாநிலத்தின் மின்சாரத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த திரு வி.பி. அப்பாதுரை என்பவரின் கண்களில் திரு கிருஷ்ணமூர்த்தி பட அதன் பின்னர் அவருக்கு எங்கும் எதிலும் ஏறுமுகமே! அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது! இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார்.  ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே! ஐந்தாண்டுகள் முடிந்தால் திரும்ப மாநிலப் பணிக்கே வரவேண்டி இருக்கும். என்ன செய்யலாம்!

திரு அப்பாதுரைக்கும் இவரை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் இவர் தைரியமாக விண்ணப்பித்துப் பரிந்துரைக்கும்படி வேண்டப் பரிந்துரையின் பேரில் இவர் அப்போது சென்ட்ரல் இஞ்சினிரிங் செர்விஸ் என்னும் பெயரில் இருந்த அலுவலகத்திற்குப் பணியை ஏற்கச் செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு இவரை விடுவிக்கவில்லை. அங்கே வேலை முடிந்ததும் மீண்டும் தமிழக அரசுப்பணிக்கே வர வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இவரை அனுப்பி வைத்தது. முதல் முறையாக தில்லி சென்ற கிருஷ்ண மூர்த்தி அங்கே திட்டக் கமிஷனில் இயற்கை வளங்கள் குறித்த ஆய்வுப் பிரிவில் ஆய்வுகள் செய்யும் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார். 

Saturday, June 09, 2018

"காலா"வதியான விமரிசனம்! :)

நல்லவேளையா இந்த சினிமா பார்க்கும் ஆவல் என்னிடம் குறைவாக இருக்கு! எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் "கபாலி" "காலா" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா! ஹூம்! என்னத்தைச் சொல்றது! ராவண காவியமாம்! விமரிசனங்களைப் படிக்கும்போதே புரிந்து விடுகிறது. ரஜினி இதைப் புரிந்து கொண்டு தான் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. எப்படியோ போகட்டும். நாங்க பார்க்கப் போவதில்லை. கடைசியாப் பார்த்த ரஜினி படம் (தியேட்டரில் எல்லாம் ரஜினி படம் பார்த்ததே இல்லை!) தொலைக்காட்சியில் முத்து? சரியா நினைவில் இல்லை. இரு மனைவிகள்! ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா? அதுவும் நினைவில் இல்லை! ஆனால் முடிவு என்னனு தெரியறதுக்குள்ளாக  என்ன காரணத்தினாலோ தொடர்ந்து பார்க்கலை! இந்தப் "படையப்பா"னு ஒரு படம் வந்ததே! அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை! ஹெஹெஹெஹெ! கடைசியாப் பார்த்த ரஜினி படம் 2011 ஆம் வருஷம் அவர் நடிச்ச "ஜிவாஜி" மறந்தே போயிட்டேன். அப்போ அம்பேரிக்காவில் இருந்தோமா!  பொண்ணு வற்புறுத்தி அனுப்பி வைச்சா!


இன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போனோமா! அங்கே ரொம்ப நேரம் ஆச்சு! அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், "அன்புள்ள அப்பா!" என்றொரு படம்! இந்த மாதிரிப் பார்க்கிறது தான் நான் சினிமா பார்ப்பது! இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம்! :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான்! அவர் பெண்ணாக நதியா! நான் படம் பார்க்கிறச்சே நதியாவுக்குக் கல்யாணம் நடக்குது! யார் அந்த மாப்பிள்ளை? ரகுமானா? ஒரே புள்ளி புள்ளியாக சரியாகப் படம் வரலை! ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி! முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே! எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை! :)

இந்த மாதிரி முதல் இரவு அறைக்குள் விட்ட பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதி இரவில் திரும்பக் கூடாது எனச் சொல்லுவாங்க ஒரு காலத்திலே! அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல! அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா! திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு! அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க! நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது! யாரானும் சொல்லுங்களேன். எப்போ வந்த படம்னும் தெரியலை! 

Friday, June 08, 2018

ஒன்றா இரண்டா! எடுத்துச் சொல்ல! திரு கிருஷ்ணமூர்த்தி! 1-


கருவிலி  சுட்டி வேலை செய்யுது!

மேலே சொல்லப்பட்டிருக்கும் என்னுடைய புக்ககமான கருவிலியைப் பற்றிப் பல முறை எழுதி இருக்கேன். படிக்காதவங்க அந்தச் சுட்டிக்குப் போனால் படிக்கலாம். அதில் ஒரு பத்தியில் திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதி இருப்பேன். அந்தக் கோயிலைப் புனர் உத்தாரணம் செய்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் மாமனாருக்கு ஒரு வகையில் சகோதரர். என் மாமனாரின் பாட்டியும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். ஒரு பெண்ணைக் கருவிலியிலும் இன்னொரு பெண்ணான என் மாமனாரின் பாட்டியைப் பக்கத்தில் இருந்த ஒரு மைல்  தூரத்தில் உள்ள பரவாக்கரையிலும் அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இதிலே என் மாமனாரின் குடும்பம் பரவாக்கரைப் பெருமாள் கோயிலுக்கும், அவரின் பெரிய பாட்டியான திரு கிருஷ்ண மூர்த்தியின் பாட்டி குடும்பம் கருவிலி சிவன் கோயிலுக்கும் அறங்காவலர்களாக இருந்திருக்கின்றனர்.  நாளாவட்டத்தில் திரு கிருஷ்ண மூர்த்தியின் குடும்பம் க்ஷீணித்துப் போய் ஊரை விட்டே சுமார் 1931 ஆம் ஆண்டு வாக்கிலே கிளம்பி விட்டார்கள். அதன் பின்னர் தன் மாமா , அண்ணா போன்றோர் உதவியால் படித்து முடித்த திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களும் இந்த நாட்டுக்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதைத் தான் நம் இனிய நண்பர் திரு ராய.செல்லப்பா அவர்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.

"சிகரம் பேசுகிறது" என்னும் அந்தப் புத்தகம் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. கூடவே இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால நிகழ்வுகளையும் தொட்டுச் செல்கிறது. திருச்சி "BHEL" தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் யாரும் திரு கிருஷ்ணமூர்த்தியை மறந்திருக்க முடியாது. அதன் தலைவராக இருந்து அவர் அதை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும்.

அதைத் தவிர்த்தும் திட்டக்கமிஷன், மாருதி உத்யோக், செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றிலும் அவர் பங்கு உள்ளது. அவ்வளவு ஏன்! இப்போது நடந்து வரும் ஜவகர் யோஜனா எனப்படும் நூறு நாள் வேலைத் திட்டமும் அவர் யோசனையின் பெயரில் செயலாக்கம் பெற்றது தான். இம்மாதிரிப் பலவற்றை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். கிட்டத்தட்ட அவர் வாழ்க்கை வரலாற்றையே திரு ராய.செல்லப்பா தொகுத்து அளித்திருக்கிறார். திரு ராய.செல்லப்பாவின் மனைவி திரு கிருஷ்ணமூர்த்திக்குச் சகோதரி மகள் எனக் கேள்விப் பட்டேன். இந்தப் புத்தகத்தைத் தொகுப்பதற்காக திரு கிருஷ்ணமூர்த்தியைப் பல விதங்களில் பேட்டி கண்டிருக்கிறார் திரு செல்லப்பா. நல்லதொரு தொகுப்பு.

சுமார் 420 பக்கங்கள் (சில பக்கங்கள் வண்ணப்படங்கள்) கொண்ட இந்தப் புத்தகத்தைத் "திரு கிருஷ்ண மூர்த்தி அறக்கட்டளை" வெளியிட்டுள்ளது. திரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் என அனைவரையும் பற்றி அறிய முடிவதோடு இத்தனை உயர்ந்த சிகரத்துக்கு வருவதற்கு அவர் பட்ட பாடுகளையும் விவரித்துச் செல்கிறது புத்தகம். அவற்றில் இருந்து முக்கியமான சிலவற்றை மட்டும் வரும் நாட்களில் ஓரிரண்டு பதிவுகளாகக் காண்போம்.  புத்தகத்தின் விலை சொல்லப்படவில்லை!


கீழே உள்ள பத்தி முன்னர் கருவிலியைப் பற்றி எழுதியபோது திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். சுட்டி மேலே!
சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.

திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.

Wednesday, June 06, 2018

சில, பல திப்பிசங்கள்!


கடுகோரை


சில, பல திப்பிசங்கள்! ஹிஹிஹிஹிஹி, இன்னிக்கும் மாங்காய் சாதம் தான் கலந்தேன். முன்னாடி படம் போட்டுக் காட்டின அதே மாங்காய் விழுது தான். ஆனால் இன்னிக்குக் கொஞ்சம் மாறுதலாச் செய்யணும்னு நினைச்சேன். இதோடு வெங்காயமோ, மசாலாவோ ஒத்துப் போகாது! மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு? ஆகவே இன்னொரு வேலை செய்தேன்.

வீட்டில் ஏற்கெனவே வறுத்த வெந்தயப் பொடி இருந்தது. அதோடு புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியும் வைச்சிருந்தேன்.  இன்னிக்கு மாங்காய்ச் சாதம் கலக்கையில் நல்லெண்ணெயில் தாளிதம் புதிதாகச் செய்து சேர்த்தேன். கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி எல்லாமும் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டு சமைச்ச சாதமும் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டு கால் டீஸ்பூனில் இருந்து அரை டீஸ்பூன் வரை உப்புச் சேர்த்தேன். பின்னர் வெந்தயப் பொடியும், புளிக்காய்ச்சலுக்கு வறுத்த பொடியும் போட்டேன். இத்தோடு சேர்த்து மாங்காய் விழுதையும் போட்டுக் கலந்து விட்டேன். நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே!

சில நாட்கள் முன்னர்  கடுகோரை செய்தேன். கடுகோரை லிங்க் மேலே இருக்கு!  அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது! மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா? ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து ஊற வைச்சுச் சாறு எடுத்தேன். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கிறாப்போலவே ஒரே ஒரு மிளகாய் வற்றலைத் தாளித்துக் கொண்டேன்.

ஏற்கெனவே காரம் இருக்கு இல்லையோ! ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே! அதனால் இப்போக் கொதிக்கிறதைக் கொஞ்சம் போல் எடுத்து ருசியும் பார்த்தேன். உப்பு, காரம் சரியாகி விட்டது. ஆனாலும் ஏதோ ஒண்ணு குறைந்தாற்போல் இருக்கவே ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெல்லம் சேர்த்தேன். புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துக் கல்சட்டியோடு வைச்சேன். அதில் அணைச்ச பின்னரும் நீண்ட நேரம் கொதிக்கும். ஆகவே இப்போ அணைச்சாச் சரியா இருக்கும்னு அணைச்சேன்.

புளியோதரைப் பொடி என்ன ஆச்சுனு கேட்பவர்களுக்காக! அதைத் தயாரித்தேனே ஒழிய இதுக்குத் தேவையா இருக்கலை. எல்லாம் சரியாக இருந்ததால் பொடியை எடுத்து வைச்சிருக்கேன். பின்னர் பயன்படுத்திக்கலாம். இப்போப் பொடி தயாரிக்கும் முறை:

மி.வத்தல் 4 அல்லது 6, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை எண்ணெயில் வறுக்கணும். அதுக்கு முன்னாடி வெறும் சட்டியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து வைக்கவும். புளிக்காய்ச்சல் செய்து இறக்கும்போது இதைக் கொஞ்சம் போல மேலாகத் தூவி இறக்கவும். காரம் அதிகம் இல்லை எனில் சாதம் கலக்கும்போதும் கொஞ்சம் தூவிக்கலாம். புளிக்காய்ச்சலுக்குத் தேவையான மி.வத்தல் பாதியைத் தாளிக்கையிலும் மீதிப் பாதியை இம்மாதிரி வறுத்துக் கொத்துமல்லி விதையோடு பொடி செய்தும் சேர்ப்பார்கள். அவரவர் காரத்துக்கு ஏற்பச் செய்யலாம்.

அடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில்! மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :)))))))

Friday, June 01, 2018

மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு!

ஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே!

புத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே நிக்குது! அவ்வளவு சுறுசுறுப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாம் இந்தக் கணினி நடுவில் படுத்துடுச்சா! அந்தக் கவலை! மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள் அதில் போய்விட்டன! புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு! அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை! அது கிடக்கட்டும்.

இப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார், அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன். புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ! அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி! மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி! எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை! நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது! அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது! ஐய! தித்திப்பு, எப்படித் தான் சாப்பிடறயோ என்பார்.

இப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி வந்தார்.  என்னமோ அதிசயம் பாருங்க! போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது! அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும்! :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க "கத்தி" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் "கத்தி!" எடுக்காத குறையாச் சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும் இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ!

சரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம் இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை! அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா! எனக்கு மயக்கமே வந்துடுத்து! ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம்! என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு! சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, "இங்கே பார்!" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே  மாங்காய் சாதம் ரெசிபி ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடைசியில் இதைப் பார்த்தா! சரி பரவாயில்லைனு அதைப் படித்துக் கொண்டேன். மாங்காய் சாதத்துக்கு சாதம் தனியா எப்போவும் தயாரிக்கிற மாதிரித் தயாரித்தால் போதுமே. மாங்காய் கிளறியது தான் தனியா வேணும். ஆகவே அதற்காக சாமான்கள் சேகரித்தேன்

மாங்காய்த் துருவல்

மாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவுக்கு.

இஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்

நல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம்  தாளிக்க. தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து. 

தேங்காய்த் துருவல்


தாளிதம்
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து   இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.   

ஒரு தட்டில் சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்பு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதில் இந்த விழுதைக் கொஞ்சம் போல் எடுத்து நன்கு கலக்கவும். சாதமும் விழுதும் நன்கு கலந்தவுடன் வாயில் போட்டுப் பார்த்து சரியாக இருக்கானு பார்த்துக் கொள்ளவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் விழுது சேர்க்கலாம். 
தேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு! இதைச் சூடு செய்ய வேண்டாம்.அரைத்த விழுது!


மாங்காய் விழுதுடன் கலந்து வதக்குதல்


சாதம் கலந்தாச்சு!


பக்கத்தில் பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்!

நல்ல கெட்டியான மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும். 
மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு  அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம்.