எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 28, 2017

வலை உலகில் நானும் இருக்கேனே! :)

அங்கே இருக்கையில் இந்தியா நினைவு. இங்கே வந்ததும் குழந்தை நினைவு! வாட்டி எடுக்கிறது. என்றாலும் குழந்தைக்கு ஏதோ கொஞ்சம் புரிந்திருக்கு போல! அதிகம் ஏங்கவில்லை என்று பையர் சொன்னார். தேடி இருக்கிறாள். ஆனால் நாங்கள் பெட்டி, படுக்கையுடன் காரில் ஏறுவதைப் பார்த்ததாலேயோ என்னமோ ரொம்பவே அழவில்லை. அதே போன மாசம் நாங்க ஒரு பத்து நாட்கள் பொண்ணு வீட்டுக்குப் போனப்போ ரொம்ப அழுதிருக்கா! ஏங்கி இருக்கா! முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது! ரொம்பக் கஷ்டமா இருந்தது. இம்முறை கொஞ்சம் பரவாயில்லை என்பதோடு இவங்க நம்மோட நிரந்தரமா இருக்கிறவங்க இல்லைனு புரிஞ்சு வைச்சுண்டா போல! :) நேத்து ஸ்கைபில் பார்க்கையில் ஒரே குதியாட்டம் தான்!அழகாக் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா எல்லாம் சொன்னா!  தூக்கச் சொல்லிக் கேட்டா! அவங்க அப்பா ஃபோனில் பேசுகையில் ஃபோனைப் பிடுங்கித் தன்னிடம் கொடுக்கச் சொல்றா! நான் செல்லமாகக் கூப்பிடும் பெயரால் கூப்பிட்டதும் நன்றாகப் புரிந்து கொள்கிறாள்.


எப்போவுமே ஜெட்லாக் எனக்குத் தான். இம்முறை யு.எஸ்.ஸில் இருக்கிறச்சே ஜெட்லாக் அதிகம் படுத்தலை. ஆனால் இங்கே வந்ததும் ரொம்பவே படுத்தல். ஜெட்லாக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிக் கொண்டு வருகிறது. இம்முறை நாங்கள் திரும்பி வருகையில் ஹூஸ்டனில் இருந்து விமானம் கிளம்பவே தாமதம். போக்குவரத்து அதிகம் என்பதால் விமானம் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஆனது. ஆனாலும் சரியான நேரத்துக்கு ஃப்ராங்ஃபர்ட் வந்து விட்டோம். அங்கேயும் சரி, ஹூஸ்டனிலும் சரி கடுமையான சோதனை இம்முறை. ஹூஸ்டனில் எப்போதுமே சோதனை இருக்கும். இம்முறை புடைவை மடிப்புக்களை எல்லாம் பிரித்துப் பார்த்தார்கள். அதே போல் ஃப்ராங்ஃபர்ட்டிலே கால் செருப்பைக் கூட ஸ்கான் செய்து பார்த்தார்கள். எப்போவும் ஃப்ராங்ஃபர்டிலே சோதனை இருக்காது; அல்லது கடுமையாக இருக்காது. இம்முறை கடுமையான சோதனை!

உணவும் ஒழுங்காக வந்தது. என்றாலும் எங்களால் சாப்பிட முடியவில்லை. என்பதால் ஜூஸ் மட்டும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்து விட்டோம். இங்கே வருவதற்கு முன்னரே வீடு சுத்தம் செய்ய ஆட்களை வரச் சொல்லி ஏற்பாடு செய்திருந்ததால் வசதியாக இருந்தது.  இன்னிக்கு மத்தியானம் தூங்கக்கூடாது என்று பிடிவாதமாக இணையத்தில் உட்கார்ந்திருக்கேன். கடுகு சார் "கமலாவும் நானும்" புத்தகம் அனுப்பி இருக்கார். புத்தகம் எப்போவோ வந்துடுச்சு! இங்கே எடுத்து பத்திரமாக வைத்திருந்தார்கள். அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டுப் பால் சாப்பிடுவது போல் படித்து வருகிறேன்.  அங்கே இருக்கையில் இன்னும் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒண்ணு ஷாருக்கான், ஜூஹி சாவ்லா நடிச்ச 1,2 கா ஃபோர் படம். ரொம்ப ரொம்ப சுமார் ரகம். இன்னொண்ணு "கால்" படம். கால் அல்லது காலா? தெரியலை.

ஆனால் காடுகள் அழிவதைக் குறித்த ஓர் படம்னு சொல்லலாம். அதிலே கொஞ்சம் ஆவியும் வருது!  இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கில் உள்ள ஒரு புலி இரண்டு இங்கிலாந்து நாட்டுப் பயணிகளைக் கொன்று தின்றுவிடுவதாகச் செய்தி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்துக் கொலைகளைப் புலி செய்வதாகச் சொல்லி அந்த ஆட்கொல்லிப் புலியைப் பற்றித் தகவல் அறியச் செல்கிறார் ஒரு வன ஆர்வலர். ஜான் ஆபிரஹாம் இந்த வேடத்தில் வருகிறார். அவர் மனைவியாக ஹேமமாலினியின் பெண் இஷா டியோல் நடிக்கிறார்.  தேவ் மல்ஹோத்ரா என்னும் வனவிலங்குகளை வேட்டை ஆடும் இளைஞனாக விவேக் ஓபராய்! அவருக்கு ஜோடி முன்னாள் உலக அழகி லாரா தத்தா! இந்த இரண்டு குழுக்களும் சந்திக்கையில் நடக்கும் நிகழ்வுகளே படத்தில் காண முடியும்!  அஜய் தேவ்கன் முக்கியமான வேடத்தில் வருகிறார். அவருடைய மாறா முகபாவம் இந்த வேடத்துக்குப் பொருந்தத் தான் செய்கிறது.

நெஞ்சைக் கலக்கும் பீதியான உறைய வைக்கும் சம்பவங்கள்! கடைசியில் உண்மை தெரிந்து உயிருக்குப் பயந்து ஓடும் விவேக் ஓபராய், லாரா தத்தா, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் தப்பினார்களா? படத்தில் தெரிந்து கொள்ளுங்கள்!  ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான மனித ரத்தம் கிட்டத்தட்ட மூன்று லிட்டர் அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். புலிகளும் நிஜமான புலிகளாம். க்ளேடியேட்டர் படத்தில் நடித்த புலிகள் என்கின்றனர். அவற்றை இங்கே வைத்து உலாவ விட்டுப் படம் எடுக்க முடியாது என்பதால் பாங்காக்கில் அதன் இஷ்டத்துக்கு உலவ விட்டுப் படம் எடுத்தார்களாம். ஒரு முறை பார்க்கலாம். ஷாருக்கான் இந்தப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார். அறிமுகப் பாடலில் வந்து நடனம் ஆடுகிறார். அதைப்பார்த்தால் படம் பார்க்கவே தோன்றவில்லை! ஆனால் படம் பார்த்ததும் எழுந்திருக்கத் தோன்றவில்லை. :)

ஒரு வாரமா அதிகமா இணையத்துக்கு வரலையா பார்வையாளர் எண்ணிக்கை குறைந்து போய் நூறு, நூற்றைம்பதுனு ஆயிருக்கு! அதிலும் நேற்று 88 நபர்களே தானாம்! போனால் போகட்டும்னு சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரம் ஆகும் நிதானத்துக்கு வர! :)

Tuesday, May 23, 2017

சொர்க்கத்துக்குத் திரும்பியாச்சு!

கடந்த பதினைந்து நாட்களாகவே தொடர்ந்து வேலை மும்முரம். நடுவில் குழந்தையுடன் பொழுதுபோக்கு என்று நாட்கள் கழிந்து விட்டன. ஞாயிறு அன்று 21 மே மாதம் அங்கிருந்து கிளம்பியாச்சு! இதோ இன்று காலை ஏழு மணி அளவில் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தாச்சு! வீட்டைச் சுத்தம் செய்ய ஆட்கள் வந்திருக்கின்றனர். இதுக்கு நடுவில் அலைபேசி இணைப்பு வேலை செய்யாமல் அங்கே அம்பேரிக்காவில் பையர், பெண்ணுக்கு நாங்க வந்து சேர்ந்துட்டோமானு கவலை. ட்ராவல்ஸ்காரரைத் தொடர்பு கொண்டு எங்களுடன் பேசினார்கள். குழந்தையை விட்டுட்டு வந்தது தான் கொஞ்சம் இல்லை, நிறையவே வருத்தம்! ஆனால் அங்கேயே உட்காரவும் முடியாது. இங்கே முக்கியமானதொரு கடமையை முடிக்கணும்.

இன்னிக்கு என்னுடைய பிறந்த தேதி! ஹிஹிஹி, வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் என்னுடைய சான்றிதழ்களில் இருக்கும் பிறந்த தேதி வந்துட்டுப் போயாச்சு. ஆனால் ஒரிஜினல் அக்மார்க் பிறந்த தினம் இன்று தான். கிழமையும் தேதியும் இந்த வருடம் சேர்ந்தே வந்திருக்கு! நக்ஷத்திரம் தனியாக வரும்! அப்போவும் கொண்டாடிடுவோம். முகநூல் மூலமும் வாட்ஸப் மூலமும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! யாருடைய பதிவையும் படிக்கவில்லை. மெதுவாக வருவேன். :) தப்பாய் எடுத்துக்காதீங்க! 

Saturday, May 13, 2017

பவர் பாண்டி, "தனுஷ்"!

மீண்டும் ஓர் அருமையான தமிழ்ப்படம், அதிலும் மிகவும் மன முதிர்ச்சியோடு கூடியதொரு கதைக்கரு! முதியவர்கள் தங்கள் மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் இருக்கையில் நடக்கும் யதார்த்தங்கள். அதனால் வரும் மனஸ்தாபங்கள். முதியவரின் குற்ற உணர்ச்சி! அதனால் தன் பழைய வாழ்க்கையை, காதலைத் தேடிப் போகும் முதியவர்! முழுக்கதையையும் சொல்லிடலாம். ஆனால் படம் பார்க்கையில் அதன் ருசி குன்றி விடும்.

பவர் பாண்டி க்கான பட முடிவு

முதிய பவர் பாண்டியாக ராஜ்கிரணும், இளவயது பவர் பாண்டியாக தனுஷும் நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் ராஜ் கிரணே வந்தாலும் அது சலிப்புத் தட்டாதபடிக்கு அசத்தி இருக்கிறார் ராஜ்கிரண். அதிலும் அவருடைய பக்கத்து வீட்டு இளைய நண்பனாக நடித்திருக்கும் இளைஞன் கலக்கல்! யார்னு தெரியலை. ராஜ்கிரணின் பிள்ளையாக பிரசன்னா! அவர் மனைவியாக நடித்திருக்கும் நடிகையும் (ஹிஹிஹி, பெயர் தெரியாதுங்க) அருமையாக நடிப்பை வெளிப்படுத்துகிறார். ராஜ்கிரணின் பேத்தி சும்மா வந்து போகிறாள். ஆனால் பேரன் கலக்கி விட்டான்.

ராஜ்கிரணின் முதல்காதலியாக முதிர்ந்த வயது பூந்தென்றலாக வரும் ரேவதியின் பார்வையே ஆயிரம் கவிதைகளைச் சொல்கிறது. அதிலும் அந்த ஹைதராபாத் போக்குவரத்தில் சகஜமாக ராஜ்கிரணின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்ததும் பின்னர் கையை விட்டதும் அவரின் ஸ்பரிசம் தந்த உணர்வால் திக்பிரமித்து நிற்கும் ராஜ்கிரணை ஒருபார்வையால் அழைப்பார் பாருங்க!

பவர் பாண்டி க்கான பட முடிவு
ஒரே காட்சியில் வந்தாலும் டிடி கலக்கல்! தொலைக்காட்சி மட்டுமில்லாமல் திரைப்படத்திலும் கலக்குவேன் என நிரூபித்திருக்கிறார். ராஜ்கிரண் தன் மனதில் உள்ள அழியாக் காதலைச் சொன்னதும் ரேவதியின் முகமும், ராஜ்கிரணின் முகபாவமும் காட்டும் உணர்ச்சிக்கலவை இருவரும் அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பதைச் சொல்கிறது. ராஜ்கிரணை மறுநாள் தன் வீட்டுக்கு மதிய உணவுக்கு ரேவதி அழைக்கையில் கிளைமேக்ஸ் அதுதான் எனப் புரிந்தாலும் ரேவதியின் மகளுக்கு ஏதோ பிரச்னையோ என நினைக்கத் தோன்றியது ஒரு கணம். ஆனால் அதன் பின்னர் தான் தன் மகளுடன் தன்முதல் காதலைப் பற்றி ரேவதி கலந்து பேசுகிறார். அப்போ டிடியைப் பார்த்ததும் முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்தது.

இளவயது பவர் பாண்டியாக வரும் தனுஷ் அடக்கி வாசித்திருக்கிறார். அவர் காதலியாக வரும் நடிகையும் கண்பார்வையிலும் புன்சிரிப்பிலுமே தன் காதலைக் காட்டி இருக்கிறார். வெகு இயல்பாக தனுஷ் ஊரில் தன்னை வம்பிழுக்கும் இளைஞர்களை தனுஷ் அடிப்பதை ஏதோ தினம் தினம் நடக்கும் ஒன்று போல ரசிக்கும் காட்சி அருமை!  அந்த அந்த ஊர்களுக்கான நிஜமான மனிதர்களைப்பதிவு செய்திருப்பதில் தனுஷின் திறமை வெளிப்படுகிறது. கிராமத்துக்காட்சிகளெல்லாம் அதிகமாக செயற்கைத் தனம் இல்லாமல் இயற்கையான சூழ்நிலையிலேயே படமாக்கப்பட்டிருப்பதும் ஒளிப்பதிவாளரின் திறமையே!

பவர் பாண்டி க்கான பட முடிவு


ராஜ்கிரணின் மகனாக வரும் பிரசன்னாவும் வழக்கம் போல் தூள் கிளப்பி இருக்கிறார். அப்பாவைக் கோபிக்கையிலும் அப்பா வீட்டை விட்டுச் சென்றதும் தேடி அலைவதும் உருகுவதும் அப்பா, மகனின் பாசத்தை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் தன் மகன், "நீ என் அப்பா! உன்னை நான் கோபித்துக் கொண்டால் நீ என்ன செய்வே? நீ மட்டும் உன் அப்பாவிடம் இப்படிக் கடுமையாக நடந்துக்கலாமா?" என்னும் பொருள்படும்படி கேட்கும்போது குற்ற உணர்ச்சியை முகத்தில் நன்றாகக் காட்டுகிறார். குழந்தைகள் நடிப்பில் அதிகப்பிரசங்கித் தனம் இல்லாமல் இருப்பதும் ஓர் சிறப்பு!

முதியவர்கள் மனநிலைக்கு இந்தக்காலத்து மகன்கள், மகள்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதே இந்தப் படத்தின் முக்கியக் கரு! இன்றைய காலகட்டத்தில் தேவையானதும் கூட. வெகு நுணுக்கமானதொரு கருவை மிக அநாயாசமாகக் கையாண்டிருக்கும் தனுஷுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒரு காதல் காட்சியோ, கன்னா, பின்னா உடைகளோ இல்லாமல் வெகு இயல்பான உடையிலேயே அனைவரும் நம் கண்ணெதிரே உலவுகின்றனர். மனதுக்கு நிறைவான படம்.  குடும்பத்தோடு தைரியமாகப் படத்தைப் பார்க்கலாம் என்பதோடு படம் ஒவ்வொருவர் மனதிலும் கேள்விகளைப் பிறக்க வைக்கும்! சிலருக்குக் குற்ற உணர்வு பிறக்கலாம். சிலர் நாம் ஒழுங்கா இருக்கோம்னு நினைக்கலாம்.

இன்னும் ஒரு படமும் பார்த்தேன்! ஹிஹிஹி, இப்போச் சொல்லலை! :)))) எங்கே, எல்லோரும் வந்து கண்ணு வைங்கப்பா! 

Friday, May 12, 2017

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்! :)

இந்தியா திரும்பப் போகும் நாளுக்காகக் காத்திருக்கோம். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கோம். என்ன ஒரு வருத்தம்னா புதுப் பேத்தி துர்கா நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டாள்.  அவளை விட்டுப் பிரிவதில் தான் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இப்போத் தான் விளையாட்டெல்லாம் ஒவ்வொன்றாக வருகிறது. அம்மம்மா கொழுக்கட்டைக்குக் கையைக் கொழுக்கட்டை போல வைச்சுக்கறா! கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் சின்னக் கையைத் தூக்கித் தட்டிட்டு மேலே கையைத் தூக்கி கோவிந்தா சொல்றா! சங்குச்சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம் சொன்னால் ஜிங்கு ஜிங்குனு நம்ம கையிலேயே குதிக்கிறா! இப்போச் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு பாட்டும், ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம் பாட்டும் பழகிக்கறா! :)

உட்கார, தவழ முயற்சி செய்கிறாள். நாங்க கிளம்பறதுக்குள்ளே தவழ ஆரம்பிச்சா, "ஆனை, ஆனை , அழகர் ஆனை"யும் சொல்லிக் கொடுத்துடலாம்! எங்கே! :( அதுக்குள்ளே கிளம்பிடுவோம் போல! மனசு இங்கேயும், அங்கேயுமா அலை பாய்கிறது! என்றாலும் முக்கியக் கடமைகள் இருப்பதால் இந்தியா திரும்பித் தான் ஆகவேண்டும். விசாவும் அடுத்த பதினைந்து நாட்களில் முடிகிறதே! பதினைந்து நாட்கள் முன்னர் பையர் வீட்டிலேருந்து  கொஞ்ச நாட்கள் பெண் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போ அவளை அங்கே விட்டு விட்டுப் பெண் வீட்டுக்கு வந்ததிலே என் கிட்டேக் கோபம் போலிருக்கு.  நாங்க விட்டுட்டு வந்த முதல் இரண்டு நாட்கள் ரொம்பவே அழுதிருக்கா! :( தேடி இருக்கா! அந்தக் கோபமோ என்னமோ! :( குழந்தை ரொம்ப ஏங்கிப்போய் விட்டதாச் சொன்னாங்க! இன்னும் பிரியப் போகிறோமே என நினைத்தால் மனம் வருந்துகிறது. ஆனால் வேறே வழியே இல்லையே!  ஆனால் அப்பு ஶ்ரீரங்கம் வந்து எங்களைப் பார்த்துக்கறதாச் சொல்றா! ஆனால் ஸ்கூல் மட்டும் இந்தியாவில் வேணாமாம்! :) ஏன் என்றால் படியுங்க மேலே!

அப்புவுக்கு ஸ்கூலில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இங்கெல்லாம் நம்ம ஊர் மாதிரித் தேர்வு முறை இல்லை. அதோடு இங்கே எந்த வட்டாரத்துக்குள்ளே வீடு இருக்கோ அந்த வட்டாரத்தில் உள்ள பள்ளியிலே தான் குழந்தையைச் சேர்க்கணும். வீட்டிலிருந்து பள்ளி ஐந்து மைலுக்குள்ளே தான் இருக்கணும்.
ஒவ்வொரு நகரத்தையும் பல வட்டங்களாகப் பிரித்திருக்கின்றனர். அந்த அந்த வட்டத்துக்குள் உள்ள பள்ளியிலேயே குழந்தைகள் படிக்கணும். மாறாக வேறு வட்டத்துப் பள்ளி நல்ல பெயர் பெற்றது என்று அதில் சேர்க்க நினைத்தால் சிறப்பு அனுமதி வாங்கிக்கணும். அதை ஏற்கெனவே படிக்கும் பள்ளியிலும் இனிமேல் சேரப் போகும் பிரபல பள்ளியிலும் ஒத்துக்கணும். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அதை அங்கீகரித்து ஒப்புதல் தரணும். அதன் பின்னரே அந்தப் பள்ளியில் சேரலாம். அப்போதும் பெற்றோர் வீட்டை அந்தக் குறிப்பிட்ட பள்ளி இருக்கும் வட்டத்துக்கு மாற்றிக்கொள்ளச் சொல்லிச் சொல்லி விடுகிறார்கள்.  எங்க பொண்ணும், பையரும் சென்னை கேந்திரிய வித்யாலயாவில் படிக்கையில் கிட்டத்தட்டப் பதினான்கு மைல் தினமும் ரயிலில் பயணம் செய்தார்கள்! தினம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் வரை திக், திக், திக் தான்! இங்கே அப்படி எல்லாம் முடியாது!


தேர்வு முறைகளும் இங்கே மாதிரி எல்லாம் இல்லை. ஒரு கல்வியாண்டை ஒன்பது வாரங்களாகப் பிரித்து நான்கு முறை தேர்வு நடத்துகின்றனர். இதில் கடைசி வாரம் வருடம் முழுவதும் படித்தவற்றில் இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு வாரமும் வீட்டுப் பாடம் கொடுக்கையில் பெற்றோருக்கும் அதைக் குறித்துக் கடிதம் அனுப்பப்படுகிறது. இப்போக் கணினி இருப்பதால் எல்லாப் பெற்றோருக்கும் கணினி வழியே மின் மடல் அனுப்பி விடுகின்றனர். ஒரு சில வீட்டுப்பாடங்களை நான்காவது படிக்கும் எங்கள் பேத்தி ஐபாட் மூலமே செய்து அனுப்புகிறாள்.  கல்வியாண்டின் முடிவில் ஆசிரியர்களின் கற்பிக்கும் தகுதி எப்படி இருக்கிறது என்பதற்காகக் குழந்தைகளுக்குச் சில பாடங்களில் தேர்வு வைக்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியரின் கற்பிக்கும் தகுதியைக் கணித்து அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள முடிகிறது என்று சொல்கின்றனர். மேலும் இது ஐக்கிய அமெரிக்கக் குடியரசு முழுவதற்குமான பொதுத்தேர்வாகச் சொல்கின்றனர். இதை எல்லாக் குழந்தைகளும் அவரவர் பள்ளியில் எழுதியே ஆகணும்! இங்கே என்னடான்னா மருத்துவத்திற்கான "நீட்" தேர்வுக்கு எவ்வளவு எதிர்ப்பு! :( பொதுத் தேர்வுகளுக்கே இங்கே எதிர்ப்புக்கள் தெரிவிக்கிறோமே!   ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் படிப்பது எளிமை போல் தோன்றினாலும் கணக்குப் பாடத்தில் ஜியோமிதியும், பின்னங்களும் மூன்றாம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது.  ஆனால் ஒரு வகுப்பில் குறைந்த பட்சமாக 20 மாணவ, மாணவிகள் தான் இருக்கின்றனர். அதற்கு மேல் இல்லை. ஆகவே கற்பிக்கவும் வசதியாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும்  பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்புகையில் பள்ளிக்கு அருகே இருக்கும் வீடுகளுக்கு நடந்தே செல்லும் குழந்தைகளைப் பள்ளி ஊழியர் ஒருவர் கிட்ட இருந்து அழைத்துச் சென்று தெருமுனை வரை கொண்டு விடுகிறார். பேருந்தில் செல்லும் குழந்தைகளை வகுப்பு ஆசிரியை வந்து பேருந்தில் ஏற்றி விடுகிறார். பேருந்தில் எல்லாக் குழந்தைகளும் சரியாக வந்து ஏறிவிட்டார்களா என்று ஓட்டுநர்/நடத்துநர் சோதித்துக் கொண்டே பின்னர் பேருந்தை எடுக்கிறார்கள். காரில் அழைத்துச் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் பெயர்/குடும்பப்பெயர் கொண்ட ஓர் அட்டையைக் காரில் முன்னால் கொடி மாதிரி வைத்திருக்க வேண்டும். கார் வரிசையாக வரும். பெயரைப் பார்த்து விட்டு ஒரு ஆசிரியர் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைப்பார். இதைத் தவிரவும் பள்ளி இருக்கும் தெருவில் அந்த நேரம் மாமூல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு விடும். பள்ளியிலிருந்தே இதற்கென ஓர் ஆசிரியை சென்று போக்குவரத்தை ஒழுங்கு செய்வார். என்ன அவசரமாக வந்தாலும் அப்போது அந்த வழியே செல்ல முடியாது.

குழந்தைகளின் திறமையைப் பொறுத்து ஒவ்வொரு திறமைக்கும் ஓர் அவார்டு எனப் பரிசு கொடுக்கிறாங்க. அப்போப் பள்ளியிலேயே பள்ளியின் பெயர் போட்டுச் சிறப்புத் தகுதி வாய்ந்த மாணவன்/மாணவி என்னும் ஃப்ளெக்ஸ் போர்ட் மாதிரிக் கொடுத்துடறாங்க. பெற்றோர் அவங்க வீட்டு நுழைவு வாயிலுக்கும், தெருவுக்கும் நடுவே இருக்கும் தோட்டப்பகுதியில் அதைத் தொங்க விட்டு வைக்கிறாங்க. இதன் மூலம் குழந்தைகளுக்கு மனோரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதோடு ஒரு குழந்தையின் பிறந்த நாள் என்றால் அன்று அந்தக் குழந்தையின் தந்தை பள்ளிக்கு அன்று தம் குழந்தையுடன் சென்று அன்று பள்ளி முடிவு வரை பள்ளியிலேயே சிறு சிறு தன்னார்வ வேலைகள் செய்து கொடுக்கும் வேலையை எடுத்துக் கொள்கிறார். இந்த விஷயத்தில் தந்தை வேலை பார்க்கும் கம்பெனியும் ஒத்துழைப்புக் கொடுத்து விடுமுறை அளிக்கிறது. அப்புவின் பிறந்த நாளைக்கு அவள் அப்பா போனார்.  Daddy of Great Student என்று எழுதப்பட்ட டீ ஷர்ட் பள்ளியிலேயே கொடுத்துடறாங்க. அதைப் போட்டுக் கொண்டு போகணும். வாரம் ஒரு நாள் உடையை மாற்றிப் போட்டுக்கச் சொல்லி சொல்றாங்க! அது மாதிரியும் போட்டுக் கொண்டு ஷூ முதற்கொண்டு மாற்றிப் போட்டுக் கொண்டு போகணும்.  இங்கே பப்ளிக் ஸ்கூல் எனப்படும் அரசுப் பள்ளிகளில் சீருடை இல்லை. எது வேணாப் போட்டுக்கலாம். தனியார் பள்ளிகளில் தான் சீருடை!

அமெரிக்காவைப்பார் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கிறாங்க என்று சுலபமாகச் சொல்கிறோம். அதற்கேற்றாற்போல் வரிகளும் போடுகின்றனர். இங்கே யாரும் அதற்குக் கூக்குரல் கொடுப்பதில்லை. கூடியவரை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றனர். இங்கே இருப்பவர்கள் வீடு வைத்திருந்தால் சொத்து வரியாகக் குறைந்த பட்சமாக ஆறாயிரம் டாலர் வரை சொத்து வரி கட்டியாக வேண்டும். வீட்டை நம் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. ஒரு பகுதியில் குடியிருப்பு வளாகங்கள் அல்லது தனித் தனி வீடுகள் கட்டுவதென்றால் முதலில் சாலை போடுகின்றனர். பின்னர் தண்ணீர்க் குழாய்கள், கழிவு நீர்க்குழாய்கள் அமைக்கின்றனர். மின்சார வசதிகளைச் செய்கின்றனர். கடைகள், வணிக வளாகங்கள், போன்றவற்றுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.  இவை எல்லாம் செய்து முடித்த பின்னரே வீடுகளை விற்கும் வேலை ஆரம்பிக்கும். அது வரை யாரும் விற்பனையை ஆரம்பிக்க முடியாது.

தெருவிலிருந்து வீட்டை உயரமாகக் கட்டுவதற்காக முதலிலேயே வீடு கட்டும் பகுதியில் மண்ணை அணைத்து மிக உயரமாக புல் தரை அமையும்படி ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் என்ன மழை பெய்தாலும் வீட்டுக்குள் தண்ணீர் வராது!  தெருக்கள் கீழேயும், வீடுகள் மேலேயும் காணப்படும். ஆகையால் வீட்டுக்குள் நீர் வந்துவிடுமோ என்று பயமே இல்லாமல் இருக்கலாம்.  வெளியே தான் செங்கற்கள் தெரியும். உள்ளே ஏதோ அட்டை போன்ற ஒன்றை வைத்துப் பூசுகின்றனர். படங்கள், அலங்காரப் பொருட்கள், காலண்டர் மாட்ட சுவரில் ஓட்டை போட வேண்டாம். அதற்கென உள்ள க்ளிப்பில் செருகி மாட்டி விடலாம்.  அதோடு ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் கட்டாயமாய் ஓர் செயற்கை ஏரி அமைக்கின்றனர். அதில் மீன்களை விட்டு நீரைச் சுத்திகரிக்கின்றனர். ஏரிக்கரையோரமாகப் பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை நட்டு அழகு செய்து விடுகின்றனர். குடியிருப்பு வளாகங்களில் குடியிருப்போர் மட்டுமே அந்த அந்தப் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் உலாவலாம். பக்கத்து வட்டாரத்தில் உள்ளவர்கள் நம் வட்டாரத்துக்குள்ளாக வந்துவிட முடியாது! மின் இணைப்பு, எரிவாயு இணைப்பு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெரிய பிரம்மாண்டமான கெய்சர், ஏசி எல்லாவற்றுக்கும் இணைப்புக் கொடுக்கின்றனர். ஏசி வீடு முழுவதுக்கும் வரும். குளிர்காலத்தில் அதிலேயே சூடு வரும்படியான அமைப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர். அதைப் போட்டுக்கொள்ளலாம்.

இதை எல்லாம் பார்க்கிறச்சே இந்தியாவிலும் இம்மாதிரிக் கடுமையான சட்டங்கள் வரணும்னு தான் தோணுது!  வீட்டு அமைப்பும் நம் இஷ்டத்துக்கு எல்லாம் கிடைக்காது.  பெரிய ஹால்/கூடம் ஒன்று கட்டாயமாக இருக்கும். அதிலேயே ஒரு பக்கமாகச் சமையல் செய்ய அடுப்புக்களை நிறுவுவார்கள். சாமான்கள் வைக்கும் பான்ட்ரி ஏற்படுத்துவார்கள். மர வேலைப்பாடுடன் கூடிய அலமாரிகள் கட்டித் தந்துவிடுவார்கள். சமையல் மேடையிலேயே எரிவாயு அல்லது மின்சார அடுப்புக்கு மேலே மைக்ரோவேவ் அவனும், அடுப்புக் கீழே உள்ள பகுதியில் வழக்கமான அவனும் இருக்கும். இந்த மேடை தான் எந்தத் திசையைப் பார்த்து வர வேண்டும் என்பதில் எங்க பையரும், பொண்ணும் கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க. பின்னர் பையர் கிழக்கைப் பார்த்துச் சமைக்கிறாப்போலயும், பொண்ணு வடக்கே பார்த்துச் சமைக்கிறாப்போலயும் அமைந்தது. அதையும் அவங்க வீடு கட்டுபவரிடம் கேட்டுக் கொண்டார்கள். எங்களுக்கு இப்படி வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விட வேண்டும். அதே போல் குளியலறையிலும் இப்போல்லாம் நம்ம ஊர் மாதிரி வாளி வைத்துக் குளிக்கும் வசதியும், கழிவறையில் ஹோஸ் பைப் போட்டுக் கொள்ளும் வசதியும் செய்து தருகின்றனர்.  வீடு கட்டி வரும்போதே வாஷிங் மெஷின் (இதுக்குத் தனியா ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. அநேக வீடுகளில் காரேஜ் பக்கம் இருக்கும். இதன் வழியாக வீட்டினுள் நுழைபவர்களும் உண்டு. பையர் வீட்டில் வாஷிங் அறை தனியாக உள்ளது) துணி தோய்க்க ஒன்றும், தோய்த்தவற்றை உலர்த்த ஒன்றும் பிரம்மாண்டமாக நிறுவி விடுகின்றனர். குளிர்சாதனப் பெட்டி நம்முடைய விருப்பம் போல் வாங்கி வீடு கட்டும்போதே அதற்கும் இடம் பார்த்து வைத்து விட வேண்டும்.

நாங்க முதல் முதல் வந்தப்போ பொண்ணும் சரி, பையரும் சரி குடியிருப்பு வளாகங்களில் அபார்ட்மென்டில் குடியிருந்தப்போக் கொஞ்சம் பழக்கம் ஆவதற்குச் சிரமமாகத் தான் இருந்தது. இப்போப் பழகி விட்டது என்பதோடு குளிக்கத் தனியாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.  நாம இந்தியாவில் வீடு கட்டினால் சாமி அறை அல்லது சாமி அலமாரினு தனியாக் கட்டுவோம். இங்கே அப்படி முடியாது.  எந்த அறையில் அலமாரிகள் கிழக்கு, மேற்காக அமைந்துள்ளதோ அந்த அறையில் சுவாமியை வைக்க வேண்டியது தான். பையர் வீட்டில் சமையலறை மேடைக்கு மேலேயே ஓர் அலமாரியில் வைச்சிருக்கோம். பொண்ணு வீட்டில் கீழே உள்ள ஓர் அறையை சாமி அலமாரியாக மாத்தி இருக்காங்க!

மொத்தத்தில் அமெரிக்க வாழ்க்கை இளைஞர்களுக்குப் பிடிக்கும். அவங்க எதிர்பார்க்கும் சௌகரியங்கள், வசதிகள் எல்லாமும் கிடைக்கின்றன அல்லவா! இந்தியத் தயாரிப்புக்கள் அனைத்துமே இங்கே கிடைக்கின்றன. என்றாலும் இந்திய ஓட்டல்களில் தோசை, இட்லி, ஊத்தப்பம் சாப்பிடுவதைப் போன்ற தண்டனை வேறே எதுவும் கிடையாது! சாம்பார் என்னும் பெயரில் தக்காளிச் சாறில் கொஞ்சம் போல் புளியைக் கரைத்து ஊற்றி, சோம்பு, தேங்காய் அரைத்து விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி சேர்த்து வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துக் கொத்துமல்லி தூவிக் கொடுத்து விடுகிறார்கள். ஜாஸ்தி கொதிச்சிருக்காதுனு நினைக்கிறேன். பொடி வாசனை மேலிட்டுத் தெரியும் அதையும் நல்லா இருக்குனு சாப்பிடறாங்க. மிளகாய்த் தூள் காரம் நாக்கில் பட முடியலை! பருப்புப் போட்ட சாம்பார் என்ற பெயரே இங்கே இல்லை. சிவப்பு நிறத்தில் வெங்காயம், தக்காளி போட்டுக் கொத்துமல்லி சேர்த்துச் சுட வைத்தால் சாம்பார்!  இங்கே வீட்டில் வாங்கி வைச்சிருக்கும் மிளகாய்த் தூளைச் சமையலில் கால் ஸ்பூன் சேர்த்தாலே காரம் உச்சந்தலைக்கு ஏறும். அதிலே சாம்பார் எப்படி இருக்கோ தெரியலை. அதை  விடக் கொடுமை தோசை தான்! ரப்பர் மாதிரி இழுக்கலாம்! அதையும் நல்லா இருக்குனு சாப்பிடறாங்க! ஆனால் இதுக்கும் ரசிகர்கள் இருக்காங்களே!


சப்பாத்தி, ஃபுல்கா, பரோட்டா, பூரி கொஞ்சம் பரவாயில்லை ரகம்! ஆனால் இந்த "நான்" இருக்கே அதை மட்டும் வாங்கினா உங்களுக்கு 32 பல் பத்தாது! எப்போவோ சாப்பிடும் நமக்கே இப்படின்னா தினம் சாப்பிடறவங்க பாடு என்ன ஆறது! ஆனாலும் இதையும் நல்லா இருக்குனு சாப்பிடறவங்க இருக்காங்க தான்!  மொத்தத்தில் அமெரிக்க வாழ்க்கையை ரசிக்க எங்களுக்குத் தெரியவில்லை. நாங்க அநேகமா வீட்டுலே செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தி தான்! வீட்டுச்சமையலை  ரசிக்கத் தெரிந்தவங்களுக்குப் பிடிக்கும்! நாமெல்லாம் ஓட்டல் ரசிகர்கள் இல்லை.  நல்லவேளையா பொண்ணு வீட்டிலும் சரி, பையர் வீட்டிலும் சரி, தினசரி சமையல் உண்டு. ஏதேனும் மிஞ்சினால் கூட அவங்க வரை வைச்சுப்பாங்க. நமக்கு வராது! :)))) இந்திய ஐஸ்க்ரீமிலிருந்து கிடைக்குது. க்வாலிடி, அமுல் இரண்டும் அதிகம் வருது! இன்னும் சொல்லப் போனால் சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் "பதஞ்சலி" பொருட்கள், மருந்துகள் கூட இங்கே கிடைக்க ஆரம்பிச்சாச்சு! ஜோஸ் அலுக்காஸ்/ஜாய் அலூக்காஸ் யாரோ ஒருத்தரோட நகைக்கடை கூட இங்கே இருக்குனா பாருங்க! சரவணபவன் இங்கே பையர் இருக்கும்பகுதியிலும் இன்னொரு இடத்திலும் இருக்கு. விலை ரொம்ப அதிகம் என்பதாலும் வயிறு நிறையாது என்பதாலும் போவதில்லை என்று பையர் சொன்னார்.

ஆக மொத்தம் அமெரிக்க வாழ்க்கை என்பது எங்களைப் பொறுத்தவரை இங்கே அமெரிக்காவில் ஞாயிறு காலை எனில் இந்தியாவில் ஞாயிறு மாலை/இரவு! இந்தியாவில் திங்கள் காலை எனில் அமெரிக்காவில் ஞாயிறு மாலை/இரவு! அவ்வளவே!  

Wednesday, May 10, 2017

மறுபடி மறுபடி படம் தானா? :)

drishyam க்கான பட முடிவு

இன்னும் மூன்று படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று ஹிந்தி "த்ருஷ்யம்!" ஹிஹி, தமிழில் "பாபநாசம்" பார்த்தாச்சு! என்றாலும் மலையாளத்தில் லாலேட்டன் நடிச்சது பார்க்கலையேனு நினைச்சேன்! ஆனால் பொண்ணு ஹிந்தியில் பாருனு போட்டுக் கொடுத்தா! அஜய் தேவ்கன் நன்றாகவே நடித்திருந்தார். ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா மூத்த பொண்ணை ஹிந்தியில் சட்டரீதியாக தத்து எடுத்துக் கொண்ட பெண்ணாகக் காட்டுகின்றனர். ஆனால் தமிழிலும், மலையாளத்திலும் அப்படி இல்லை! மற்றபடி படம் தமிழை விட ஹிந்தியில் நன்றாகவே இருந்ததாகத் தோன்றியது. இன்னும் மலையாளம் பார்க்கணும்! படம் முழுக்க கோவாவில் எடுக்கப் பட்டுள்ளது! காட்சிகள் நன்றாகவே இருந்தன. மலையாளத்தையும் பார்த்துட்டுச் சொல்றேன்.
bhoothnath க்கான பட முடிவு
அடுத்து பூத்நாத்! ஓர் ஆங்கிலப் படம்/நாவலின் தழுவல் என்கின்றனர்.  நம்ம அமிதாப் தான் பூத்நாத்தாக நடிச்சிருக்கார். பேய், பிசாசுப் படமாச்சேனு பார்த்தால் பேயாக வரும் அமிதாப் நன்றாகக் காமெடி பண்ணுகிறார். அவரும் அவர் வீட்டில் குடி இருக்க வரும் தம்பதிகளின் மகனும் செய்யும் கூத்துக்களே படத்தில் முக்கியமானவை! அமிதாப் ஏன் பேயாக அலைகிறார் என்பதைக் கடைசியில் சொல்லும்போதும், அவருக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்யும்போதும் என் மனசும் குற்ற உணர்வில் தவிக்கிறது. நேரம் வரணும்! :( மொத்தத்தில் படம் நன்றாகவே இருந்தது. கோவாவில்  "நாத்வில்லா" என்னும் பங்களாவில் குடியிருக்க வரும் ஷாருக்கான், ஜூஹி சாவ்லா தம்பதிகளுக்கு ஒரு மகன்.   

bhoothnath க்கான பட முடிவு

இந்த வீட்டைப் பற்றி ஏற்கெனவே வதந்திகள் நிலவினாலும் தைரியமாகக் குடி வருகின்றனர் ஷாருக் கான் ஜோடி! அவர்களுக்குக் கம்பெனி ஒதுக்கிய வீடு அது! அந்த வீட்டில் அவர்கள் மட்டும் இல்லாமல் வீட்டின் சொந்தக்காரர் ஆன கைலாஷ்நாத் என்னும் பேயாரும் குடி இருக்கார்! அந்தப் பாத்திரத்தில் தான் அமிதாப் நடித்திருக்கிறார். அவர் ஏன் பேயாக அலைகிறார் என்பதும், அதை ஒட்டிய சம்பவங்களும் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்! ஹை, நான் ஏன் சொல்லறேன்! அப்புறமாக் கதையைச் சொல்லிட்டேன்னு சொல்றதுக்கா? வேணாம் சாமி! ஆளை விடுங்க!  இந்தப் படத்தின் அடுத்த பகுதி, "பூத்நாத் ரிடர்ன்ஸ்" என்னும் பெயரில் வந்திருக்கிறதாச் சொல்றாங்க. இது கொஞ்சம் வணிக ரீதியாக எடுக்கப்பட்டிருக்குனு நினைக்கிறேன். இதைப் பற்றி அதிகம் யாரும் சொல்லலை! 

அடுத்து இன்னிக்குப் பார்த்த படம் கஹானி! வித்யா பாலன் நடிச்சது! இதுவும் ஓர் த்ரில்லர் படம்! லண்டனில் இருந்து தன் கணவனைத் தேடி வருகிறார் கர்ப்பிணியான வித்யா வெங்கடேசன் பாக்சி! வித்யா பாலன், "வித்யா வெங்கடேசன் பாக்சி" என்னும் பெயரிலே நடிச்சிருக்கார். படம் முழுவதும் அவர் தன் கணவனைத் தேடுவதைச் சொல்லுவதிலேயே போகிறது. அவருக்கு உள்ளூர் போலீஸ்காரர் ஆன "ரானா" சத்யோகி என்பவர் உதவி செய்கிறார். படத்தில் காதல் காட்சிகளோ, அதிகமான  பாடல்களோ எதுவும் இல்லை. கல்கத்தாவில் துர்கா பூஜா நடைபெறும் நாட்களில் இந்தச் சம்பவங்கள் நிகழ்வதால் உண்மையான துர்கா பூஜை ஊர்வலத்தையே உள்ளூர் மக்கள் பங்கு கொள்வதையே காட்டி இருக்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட படப்பிடிப்புக் குழுவினர் சுஜய் கோஷ் என்னும் இயக்குநர் தலைமையில் கிட்டத்தட்ட கொரில்லாக்களைப் போல் மறைந்திருந்தே இயல்பான நிகழ்வுகளைப் படம் பிடிப்பதில் வல்லவர்களாம். இந்தப் படத்திலும் அவ்வாறே செய்திருக்கின்றனர்.
kahaani க்கான பட முடிவு

வித்யாபாலன் தன் கணவனைத் தேடிக் கண்டு கொண்டாரா? அவர் திரும்ப லண்டன் சென்றாரா என்பதை எல்லாம் வெள்ளித் திரையில்/யூ ட்யூபில் கண்டு மகிழவும்! ஹிஹி, சொல்ல மாட்டோமுல்ல! :)

kahaani க்கான பட முடிவு