எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 30, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்!

 

ஐயப்பன்  சபரிமலையில் காட்சி தரும் தோற்றமே மேலே காண்பது. வலக்கரத்தில் சின்முத்திரையைக் காட்டி. இடக்கையை இடது முழங்கால் மீது வைத்துக் கொண்டு இரு கால்களையும் குத்திட்டு அமர்ந்த கோலம். முழங்கால்களுக்குக் கொஞ்சம் கீழே இரு கால்களிலும் பட்டையான துணியால் கட்டி இருப்பது போல் தோற்றம் கொடுக்கும். இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது சபரிமலையில் குடி கொண்ட பின்னர் ஐயனைத் தரிசிக்கப் பந்தள ராஜா வருகை தந்ததாகவும், தன் தகப்பனார்/ வளர்த்தவர் என்னும் முறையில் அவரைக் கண்டதும் ஐயன் எழுந்திருக்க முனைந்ததாகவும் ஒரு காலத்தில் தான் வளர்த்த மகன் ஆனாலும் இப்போது இறைவனாக இறை உருவில் இருக்கும் ஐயன் தனக்கு மரியாதை செய்யலாகாது என்பதால் பந்தள ராஜா தன் மேல் துண்டைத் தூக்கிப் போட்டதாகவும் அது ஐயப்பனின் கால்களைச் சுற்றிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. குதிகால்கள் தூக்கிய நிலையில் எழுந்திருக்கும் கோலத்திலேயே ஐயப்பன் காட்சி தருவதாகவும் சொல்லுவார்கள்.

இனி சபரிமலைக்கு விரதம் இருந்து மாலை அணிதல் போன்றவை பற்றிச் சுருக்கமாகக் காண்போம். அனைவருக்குமே தெரிந்தது தான் என்றாலும் மறுபடி ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம். ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருந்து செல்வோர் முதலில் செய்ய வேண்டியது ஐயப்பனிடம் பரிபூரண சரணாகதி அடைவது தான். ஒருமுகமாக ஐயப்பன் ஒருவனையே தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும். மாலை அணிவதற்கென்று முறைகள் இருக்கின்றன. அதற்கு முன்னர் ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஐப்பசி கடைசி நாள் அல்லது கார்த்திகை முதல் தேதி அன்று விரதம்+மாலை அணிதலை ஆரம்பிப்பார்கள். பெண்களுக்கு சபரிமலை செல்ல அனுமதி இல்லை என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்டச் சின்னப் பெண்கள்/60 வயதுக்கு மேற்பட்ட பேரிளம்பெண்களுக்கும்/சிலர் ஐம்பது வயது ஆகி இருந்தால் போதும் என்கிறார்கள். மாலை அணிந்து சபரிமலை செல்ல அனுமதி உண்டு.

ஐயப்பன் யோகநிலையில் நிஷ்டையில் பிரமசரிய விரதம் பூண்டு தவக்கோலத்தில் இருப்பதால் இளம்பெண்களுக்கும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் அனுமதி இல்லை. ஆண்கள் மாலை அணியும்போது கடைப்பிடிக்க வேண்டியவைகள் முக்கியமாக. ருத்திராக்ஷ மாலைகள் 54 மணிகள் உள்ளதாகவோ அல்லது துளசிமாலை108 மணிகள் கொண்டதோ அணிய வேண்டும். வீட்டிலும் மாலை அணியலாம். கோயில்களிலும் மாலை அணியலாம். தாய்/தந்தை இருப்பவர்கள் மாலையை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டு பல முறைகள் சபரிமலை சென்று பதீனெட்டுப்படிகள்  ஏறி ஐயனைத் தரிசித்தவராக இருப்பவரை குருவாக வரித்துக் கொண்டு அவர் கரங்களால் மாலை அணியலாம். குருசாமி கிடைக்கவில்லை எனில் அருகிலுள்ள கோயில் எதற்கானும் போய் அங்கே மூலவரின் பாதங்களில்  மாலையை வைத்து வணங்கீ இறைவனின் ஆசி பெற்று அர்ச்சகர் அல்லது குருக்களின் கைகளினால் வாங்கி அணியலாம். அல்லது தமக்குத் தாமே அணியலாம். அல்லது அவரவர் தாயின் கரங்களால் மாலையைக் கொடுத்து வாங்கி அணியலாம்.

ஆண்களில் சிறுவர்கள் இருவேளை குளித்துச் சரணம் சொல்லி ஆகாரம் எடுத்துக்கொண்டு விரதத்திற்கென இருக்கும் பாயில் இரவு படுக்க வேண்டும். பெரியவர்கள் இருவேளை குளித்துச் சரணம் சொல்லுவதோடு அல்லாமல் முக க்ஷவரம் போன்றவை செய்யாமல் சுத்தமாய் இருக்க வேண்டும். இருவருமே தீட்டுகளைத் தவிர்க்க வேண்டும். மாதாந்திரச் சுற்றில் இருக்கும் பெண்களைப்பார்க்கக் கூடாது. பேசக்கூடாது. அவர்கள் கரங்களால் உணவு உண்ணக் கூடாது.விரத காலத்து விதி முறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.  மாலையை அணிந்த பின்னர் அதை விரத காலங்களில் ஒருபோதும் கழட்டக்கூடாது. துக்க சம்பவங்கள் மூலம் தீட்டு ஏற்பட்டால் குருசாமியிடம் சொல்லிக் கலந்து ஆலோசித்து அவர் வழிகாட்டுதலின்படி மாலையைக் கழட்ட வேண்டும். அதன் பின்னரே துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். முதல் முறையாக இருமுடி கட்டிக்கொண்டு செல்லுபவர்கள் கன்னி ஐயப்பன் என அழைக்கப்படுகின்றனர்.இனி அடுத்து விரத கால நியதிகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

Tuesday, November 29, 2022

ஆதார் இணைப்பும் ஐயப்பன் பதிவும்!

 இரண்டு மூன்று நாட்களாகத் தொடரணும்னு நினைச்சும் தொடர முடியலை. சனிக்கிழமை வேறே ஏதோ வேலைகள்! ஞாயிறன்று வீடு சுத்தம் செய்யும் ஆட்கள் வந்திருந்தார்கள். சாமான்களை எடுப்பதும் வைப்பதுமாகச் சாயந்திரம் வரை போய் விட்டது. இதற்கு நடுவில் நம்மவருக்கு ஆதாரை உடனடியாக மின் வாரிய இணைப்பில் இணைக்கணும்னு! ப்ரவுசிங் சென்டரெல்லாம் போயிட்டு வந்துட்டார். அங்கே செர்வெர் வேலை செய்யலையாம். குட்டி போட்ட பூனை மாதிரித் தவித்துக் கொண்டிருந்தார். ஞாயிறன்று மாலை ஆட்கள் எல்லாம் போனதும் உட்கார்ந்து முயற்சி செய்தேன். வெகு எளிதாக ஓடிபி எல்லாம் வந்து விட்டது. ஓடிபி கொடுத்து மற்றத் தகவல்களை நிறைவு செய்துவிட்டு ஆதார் கார்டை இணைத்தால்  ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! படம் ரொம்பப் பெரிசுனு தகவல் வருது. என்னவெல்லாமோ பண்ணிப் படத்தைச் சிறிது பண்ணப் பார்த்தால் அது ஒத்துக்கவே இல்லை. இவருக்கு ரொம்பவே அப்செட் ஆகி விட்டது. என்னோட ராசி வெளியிலே தான் பண்ணிக்கணும்னு இருக்கு! நாளைக்கு நான் ப்ரவுசிங் சென்டரிலேயே கொடுத்துப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைச்சுட்டார். இதுக்கு நடுவில் தான் முகநூல் மூலம் நண்பர்களுக்குப் படத்தை எப்படிச் சின்னது பண்ணுவதுனு கேட்டிருந்தேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்லி இருந்தனர். அதில் திரு சந்திரசேகரன் நாராயணசாமி அவர்கள் சொன்னது மட்டும் எளிதாக இருந்தது.

அப்படியும் நம்மவர் ப்ரவுசிங் சென்டரிலேயே பண்ணிக்கிறேன்னு போயிட்டார். திரும்பி வர ரொம்ப நேரம் ஆச்சா? என்னனு விசாரிச்சால் செர்வெர் சரியாகவே இல்லையாம். ஒரே கூட்டமாம். திரும்பி வந்துட்டார். அன்னிக்கு மத்தியானம் உட்கார்ந்து ஆதார் படத்துடன் உள்ள லாமினேஷன் பண்ணின பகுதியைச் சேமித்து வைத்திருந்ததைத் தேர்ந்தெடுத்து ரைட் க்ளிக் செய்து அதிலே ரீ சைஸ் தேர்வு செய்து கொண்டேன். அதில் வந்த 3 ஆப்ஷனில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துப் படத்தைச் சேமித்து வைத்துக் கொண்டேன். அதைக் கொடுத்ததும் உடனே வாங்கிக் கொண்டு விட்டது. முடிந்தது வேலை பத்தே நிமிஷங்களிலே. ஆகவே ஐயப்பனைத் தொடரக் கொஞ்சம் நாட்கள் எடுத்து விட்டது. இனி தொடர முயற்சி செய்யறேன். இன்னமும் தட்டச்சுச் செய்ய 2,3 பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதோடு ஆதாரை வோட்டர் ஐடியோடு வேறே இணைக்கணுமாம். எல்லாரும் இணைச்சுட்டாங்களோ இல்லையோ, தெரியாது. நம்மவருக்குச் சொன்னா உடனே அதைச் செய்துடணும். அதுக்கு ஒருநாள் உட்காரும்படி இருக்கும்.

Friday, November 25, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள் மீள் பதிவு 5

 


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.



கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.

நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.

Tuesday, November 22, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்! மீள் பதிவு 4

 பதினெட்டாம்படியின் மகத்துவமும், தத்துவமும்



ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்

உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]

இரண்டாம் படியில் ஏறுகின்றேன்

ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]

மூணாம் படியில் ஏறுகின்றேன்

மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]

நாலாம் படியில் ஏறுகின்றேன்

அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]

ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்

தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]

ஆறாம் படியில் ஏறுகின்றேன்

காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]

ஏழாம் படியில் ஏறுகின்றேன்

கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]

எட்டாம் படியில் ஏறுகின்றேன்

லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]

ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்

மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]

பத்தாம் படியில் ஏறுகின்றேன்

மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]

பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்

வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]

பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்

அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]

பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்

பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]

பதினாலாம் படியில் ஏறுகின்றேன்

சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]

பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்

சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]

பதினாறாம் படியில் ஏறுகின்றேன்

தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]

பதினேழாம் படியில் ஏறுகின்றேன்

கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]

பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்

அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]

பகவானே உனைக் காண்கின்றேன்

பந்தபாசத்தை விடுகின்றேன்!

ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்

சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!

மகரஜோதியில் கரைகின்றேன்

மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!

பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

திரு விஎஸ்கேஎன்னும்( டாக்டர் சங்கர்குமார் அவர்கள் நீண்ட வருடங்களாக நண்பர்).  அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம்.  

டாக்டர் சார், உங்களோட பாடலை உங்களைக் கேட்காமல்   போட்டிருப்பதற்கு மன்னிக்கவும். பாடல் என்னோட போன பதிவின் அர்த்தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது.

இப்போ சிசிலர்  கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தமும், சிலைப் பிரதிஷ்டையும்.

உலோபம் என்றால் பொதுவாக யாருக்கும் எதுவும் கொடுக்காத பேராசைக் காரன் என்ற பொருளில் தான் இங்கே வரும்.

அசூயை என்பதும் இங்கே பொறாமை என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ளணும்.

சத்வகுணம்: மிகவும் உயர்ந்த ஒரு குணம். இந்த சத்வ குணம் நிரம்ப உள்ளவர்களைத் தான் நாம் "ரொம்ப நல்லவங்க" என்ற அடை மொழியுடன் அழைக்கிறோம்.

ரஜோகுணம் என்பது தைரியத்தைக் குறிப்பிட்டாலும், கொஞ்சம் சுறுசுறுப்பையும் குறிக்குமோன்னு தோணுது.

தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தேவதைகளையும் குறிக்கும் எனவும் பார்த்தோம். இது தவிர, சபரி மலை தவிர ஐயப்பன் இன்னும் பதினெட்டு இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் சொல்கின்றனர். அவை எல்லாமே கேரளத்தில் தான் உள்ளது.

பொன்னம்பலமேடு

கெளதென் மலை

நாகமலை

சுந்தரமலை

சிற்றம்பல மலை

கல்கி மலை

மாதங்க மலை

மயிலாடும்மேடு

ஸ்ரீபாத மலை

தேவர்மலை

நீலக்கல் மலை

தாலப்பாறமலை

நீலிமலை

கரிமலை

புதுச்சேரிமலை

காளகட்டி மலை

இஞ்சிப்பாறை மலை

சபரிமலை

ஆகிய பதினெட்டு இடங்கள் ஆகும்.

சபரிமலையில் விஸ்வகர்மாவின் உதவியுடன் கோயில் கட்டிவிட்டு, விக்ரஹப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமெனத் தவித்த மன்னனுக்கு இரவு கனவில் ஐயன் தன்னுடைய யோக கோலத்தைக் காட்டி அருளினார். மெய்சிலிர்த்த மன்னன் கண்விழித்தபோது அவர் எதிரில் பரசுராமர் நின்றிருந்தார். மன்னனிடம், "மன்னா, உன் கனவில் கண்ட வடிவைப் போலவே விக்ரஹம் செய்து, இங்கே சபரிமலையில் பிரதிஷ்டை செய்து விடு. சாஸ்தா என் வேண்டுகோளின்படி இந்த மலைநாட்டில் பதினெட்டு இடங்களில் கோவில் கொள்ளுவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும் சமயம், நானும், அகத்தியரும் பங்கு கொள்வோம்!" எனத் தெரிவித்து மறைந்தார்.

அதன்படியே வடிவமைக்கப் பட்ட விக்ரஹத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும்போது பரசுராமர், அகத்தியர், மற்ற முனிவர்கள் அனைவரும் மன்னனுக்கு உதவினார்கள். தை மாதம் முதல் நாள் தேய்பிறை பஞ்சமிதிதியில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பூஜை முறைகள் ஒழுங்கு செய்யப் பட்டது. தெய்வமே தனக்கு மகனாய் வந்ததை நினைத்து, நினைத்து, அந்தத் தெய்வக் குழந்தையின் எளிமையையும். எவரும் அணுகும் வண்ணம் இருந்த தன்மையையும் நினைத்து, நினைத்து வியந்தார் மன்னர். மீண்டும் பந்தளம் திரும்பிய மன்னன், தான் பெற்ற மகன் ஆன "ராஜராஜனு"க்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.ராஜராஜனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. என்றாலும் பெறாத மகன் ஆன "மணிகண்டனின்" மகத்துவத்திலேயே மன்னன் மூழ்கி, அனைவரிடமும் சாஸ்தாவின் மகிமையை எடுத்துக் கூறினார். பட்டாபிஷேஹம் செய்து பார்க்க முடியாத மகனுக்கு, ஆண்டு தோறும் சங்கராந்தி அன்று தன்னால் அளிக்கப் பட்ட "திரு ஆபரணங்களை"ப் பூட்டி அழகு பார்க்க நினைத்து, வித விதமாய் ஆபரணங்கள் செய்து, சபரிமலை ஐயப்பனுக்குக் கொடுத்தார். பின்னர் ஐயன் நினைவிலேயே தவம் இருந்து ஐயன் திருவடியை அடைந்தார். என்றாலும் மன்னன் ஆரம்பித்து வைத்த வழக்கப் படியே இன்றும், சங்கராந்தி அன்று பந்தள அரண்மனையில் இருந்து "திரு ஆபரணங்கள்" வந்து ஐயனுக்குச் சார்த்தப் படுகிறது. தன் கோயிலில் தன் மூல விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த சங்கராந்தி அன்று ஒவ்வொரு வருஷமும் தான், எதிரே உள்ள காந்த மலையில் ஜோதி வடிவாய்த் தோன்றுவதாயும் மன்னனுக்கு ஐயன் வாக்களித்தார். அந்தப் படி ஒவ்வொரு சங்கராந்தி அன்றும் மாலையில் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சன்னதிக்கு எதிரே உள்ள காந்தமலையில் ஐயனின் ஜோதி உருவம் காட்சி அளித்து வருகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட மகிஷியை ஐயன், தான் இந்தப் பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்திருந்தாலும், ஒரு பிரம்மச்சாரியாகவே வாழப் போவதாயும், மற்றொரு பிறவியில் மகிஷியை மணந்து கொள்ளுவதாயும் கூறினார். அதுவும் எப்படி? "ஒவ்வொரு வருஷமும் ஐயனைக் காண வரும் பக்தர்களில் எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ அந்த வருஷம் திருமணம் நடக்கும்" எனக் கூறி இருக்கிறார். புதிதாய் ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களைக் "கன்னி ஐயப்பன்" என அழைப்பது உண்டு. ஒவ்வொரு வருஷமும் புதிய, புதிய பக்தர்கள் சென்று வருவதால் மஹிஷியின் தவம் இன்னும் முற்றுப் பெறவில்லை. அவள் சன்னிதியில் இருந்து வெளியே வந்து, இந்த வருஷமும் கன்னி ஐயப்பன் மாரா? எனப் பார்த்துவிட்டுப் பின்னர் கோபத்துடன் கதவைச் சாத்திக் கொள்வதாய் ஐதீகம். அந்தப் படிக்கு அவள் சன்னதி சாத்தப் படுகிறது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. அடுத்து மதுரை அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பணசாமி பற்றிப் பார்ப்போம்!

Monday, November 21, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்! மீள் பதிவு 3

 தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி! இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோபெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலை வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான். அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது. ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா,  மாளிகைப்புறத்து  அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? 

மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா? பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத் தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம் திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள் பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார். 

"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார். காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர் என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்: ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும் சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.

இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும் இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம். இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்ததும் தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன் எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?

பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.

அது வருமாறு:

முதல் படி - சூரியன்

இரண்டாம் படி - சிவன்

மூன்றாம் படி - சந்திரன்

நான்காம் படி - பராசக்தி

ஐந்தாம் படி - செவ்வாய்

ஆறாம் படி - முருகன்

ஏழாம் படி - புதன்

எட்டாம் படி - மகா விஷ்ணு

ஒன்பதாம் படி - குரு பகவான்

பத்தாம் படி - பிரம்மா

பதினொன்றாம் படி - சுக்கிரன்

பனிரண்டாம் படி - ரங்க நாதன்

பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்

பதினான்காம் படி - எமன்

பதினைந்தாம் படி -ராகு

பதினாறாம் படி - காளி

பதினேழாம் படி - கேது

பதினெட்டாம் படி -விநாயகர்

இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.



Sunday, November 20, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்! மீள் பதிவு 2

 சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம்,

அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார். மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது.

புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார். "ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய்! நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய்! உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது!" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார்.


இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று. மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.

ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, " நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார். 

டிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, "பாண்டியன் முடிப்பு" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர். 

பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.

"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது:

பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.

இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? நாளை காணலாம்.

Saturday, November 19, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்! மீள் பதிவு

வெகு காலமாகப் பதிவுகளே சரிவரப் போடுவதில்லை. உட்கார்ந்து எழுதினாலும் மனம் பதிவதில்லை. இப்போ இரண்டு வருஷங்களாக இப்படி ஒரு நிலை. அதோடு இல்லாமல் சுற்றிவர நடப்பதே எதுவும் சரியில்லை. இளம்பெண்ணை ரயிலில் தள்ளி விட்டது/காதலித்த பெண்ணைத்துண்டு துண்டாக வெட்டிக் கொன்றது/பெற்றோர் தற்கொலை என எங்கு பார்த்தாலும் மோசமான விஷயங்களாகவே இருக்கின்றன. மற்ற சமூகம் சார்ந்த விஷயங்களும் எழுதும்படி இல்லை. ஆகவே இவற்றை எல்லாம் பார்த்து நொந்து போவது தான் மிச்சம். சிநேகிதி வல்லி தன் பழைய பதிவுகளைப் புதுப்பிக்கிறார். ஆகவே நானும் அப்படியே செய்துடலாம்னு எண்ணி 2007 ஆம் ஆண்டில் எழுதிய ஐயப்பன் குறித்த பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன்.

ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா? ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:

சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 

ஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி? எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா???

******************************************************************************

பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச் செய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து போகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான மஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன். அவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச் செய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும் சாதாரணமாய் எழக் கூடியது!!

தவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா?எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே "பிட்" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்? குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா? படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா? அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி பொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு! அதற்குத் தான் சம்ஹாரம் என்ற தண்டனை!!  


மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள்? "ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்." இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும்? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும்? வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்?" என்பதே!ஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான்? என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா?

"உன் எண்ணப்படியே ஆகட்டும்!" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே? பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் "பூத நாதன்" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா? "கந்த புராணம், நம் சொந்த புராணம்" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:

"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால்? எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன "மஹாகாளன்" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.

"பூரணைக்கு இறைவா ஓலம்!

புஷ்கலை கணவா ஓலம்!

வாரணத்து இறை மேல் கொண்டு

வரும் பிரான் ஓலம்!"

எனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை! ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது "கைவிடாஞ்சேரி" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் "கைவிளாஞ்சேரி'" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.

சாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், "நமசிவாய" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.

தன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது? மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம்? எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா? ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை!!!!!!!


சாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். "மன்னா! மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா? அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா?" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை? ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள்? சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் ஐயப்பன் யார்? எல்லாம் வரும் நாட்களில்!!!!!!!!!

Thursday, November 03, 2022

என்னென்னமோ நினைப்புகள்!

 ஏன் பதிவுகள் போடலைனு கில்லர்ஜி கேட்டிருக்கார். போட்டிருக்கணும் தான். ஆனால் முடியலை. உட்கார்ந்து எழுத முடியலை என்பது ஒரு காரணம் என்றாலும் மனம் இருந்தால் உட்கார்ந்து எழுதிடுவேன் என்பதும் உண்மை. ஆனாலும் மனம் எழுதுவதில் பதியவில்லை. ஏதோ நாட்கள் ஓடுகின்றன என்ற அளவில் ஓடுகின்றன. எதையும் முன்போல் கவனித்துச் செய்வதில்லை. மனச்சோர்வு ஒரு காரணம் என்றாலும் எழுத நினைத்த/நினைக்கும் விஷயங்களை எழுதினால் பலருக்கும் கோபமும் வரும். இந்தக் கால கட்டத்தில் உருப்படியாய்ச் செய்தது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் படிச்சு முடிச்சேன் என்பது தான்.படிப்பதில் இருக்கும் சுவையும் ஆர்வமும் திரைப்படம் பார்க்கையில் இருக்குமானு தெரியலை.

இங்கே ஒரு திரை அரங்கில் சனி, ஞாயிறு மாலைக்காட்சியாகப் பொன்னியின் செல்வன் போடுவதாகச் சுற்றறிக்கை வந்தது. ஆனால் எங்களுக்கு அதில் ஆர்வம் எல்லாம் இல்லை என்பதால் போகவில்லை. இங்கே எனக்கு ஜியோ கொடுக்கும் திரைப்படங்களில் அது வந்தால் அப்போப் பார்க்கலாம். நான் அமேசான்/நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம் பணம் கட்டிப் பார்க்கும் ரகமும் இல்லை. இந்த ஓசிப்படங்களிலேயே கோமதி அரசு, ஸ்ரீராம் எல்லோரும் சொன்னாங்களே என்று ஹே சினாமிகா மட்டும் பார்த்தேன். அதுவும் சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஆச்சு. நான் படம் பார்க்க உட்கார்ந்தால் மின்சாரம் போயிடும் அல்லது இணைய இணைப்புப் போயிடும். இப்படியே இருந்து ஒரு நாள் சிரமப்பட்டு உட்கார்ந்து பார்த்து முடிச்சேன். காஜல் அகர்வால் வந்தப்புறமாப் படம் பரவாயில்லை ரகம்/பார்க்கவும் முடிந்தது. முடிவு எதிர்பார்த்தது தான். இம்மாதிரிப் பல படங்கள் தமிழ்/தெலுங்கு/கன்னடம்/மலையாளம்/ஹிந்தியில் வந்திருக்கு. 

நான் விமரிசனங்கள் படிச்சவையோ ராகெட்ரி/காஷ்மீரி ஃபைல்ஸ் போன்ற படங்களோ இந்த ஜியோவில் இல்லை. அதனாலும் படம் பார்க்கும் ஆவல் தோன்றவே இல்லை. இந்த சினாமிகா படத்தின் வெளிப்புறக் காட்சிகள் நன்றாக இருந்தன. இதுவரை அதிகம் பார்க்காத இடங்கள். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் படம் இல்லை என்பதே உண்மை. ஆனால் சொன்னால் நண்பர்கள் உனக்கு வயசாயிடுச்சு, ரசிக்கத் தெரியலை என்றெல்லாம் சொல்லலாம். சொல்லிட்டுப் போகட்டும். அழுத்தமான கதை, பொருள் செறிந்த பாடல்கள், காதுக்கு இனிமையான இசை எல்லாம் உள்ள படத்தைத் தேடித்தான் பிடிக்கணும்.

அதோடு இல்லாமல் இரண்டு மடிக்கணினியுமே என்னைப் பார்த்துட்டு அதுங்களும் அடிக்கடி உடம்பு முடியாமல் படுத்துக்குதுங்க! தோஷிபா கணினியில் உட்கார்ந்தால் எனக்கு வசதி. ஆனால் அதிலே எப்போவானும் இணைய இணைப்பு வரும். அதுக்கு வயசு ரொம்ப ஆகிவிட்டதால் பலவீனமான நிலையில் இருப்பதால் இணைப்புச் சரியாக வருவதில்லை. இந்த "டெல்" கணினியிலோ கீபோர்ட் ஓட்டமாய் ஓடிக்கொண்டே இருக்கும். நாலைந்து முறையாவது  ரீ ஸ்டார்ட் பண்ணினால் போனால் போகுது என்று ஏதோ ஒரு அரை மணி நேரம் ஒத்துழைக்கும். அதுவும் இதில் ஈ கலப்பை சரியா வரலை என்பதால் சுரதாவில் அடிச்சு ஃபான்ட் மாத்தி காப்பி, பேஸ்ட் பண்ணித் தான் போட வேண்டி இருக்கு. முக்கியமாய் மனச்சோர்வுக்கு இதெல்லாமும் ஒரு காரணம்.

இப்போக் கூடக் காலை ஐந்தே முக்காலில் இருந்து முயற்சி பண்ணினதில் இப்போத் தான் இந்தக் கணினி வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. கூகிள்க்ரோமைக் க்ளிக் செய்தால் பைத்தியம் மாதிரி வின்டோஸ் வேர்ட் திறக்கிறது. அதைக் கான்சல் செய்வதற்குள் போதும் போதும்னு ஆகிறது. இதெல்லாமும் சேர்ந்து இன்னமும் உடல்/மனம் சோர்வு அதிகம் ஆகிறது. ஏற்கெனவே எங்க பெண்ணிற்கு 2 வருடங்களாகத் தொடர்ந்து இருந்து வரும் வயிற்றுப் பிரச்னை வேறே இன்னமும் சரியாகலை என்பதாலும் மனம் அதிகம் சோர்வடைகிறது. மனசு பதிஞ்சு எதிலும் ஈடுபாட்டுடன் வேலை செய்யவே முடியறதில்லை. புத்தகங்கள் வெளியிடுவதற்கு எடிட் செய்யணும்னு நினைச்சால் கூட முடியறதில்லை. எப்போ முடியுமோ சரி அப்போப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.


காலங்கார்த்தாலே எல்லோருக்கும் மன வருத்தத்தைக் கொடுக்க வேண்டாம்னு இதை மத்தியானமா வெளியாகறாப்போல் வெளியிடுகிறேன். சரிதானே!