முகநூலில் சிநேகிதி ஒருவர் நம் கல்யாணங்கள் இப்போது சம்பிரதாயமாகவும் இல்லாமல் தமிழ் முறைப்படியும் இல்லாமல் முழுக்க முழுக்க வட இந்திய முறைப்படி மாறி வருகிறதைக் குறிப்பிட்டிருந்தார். கல்யாணங்கள் மட்டுமா? கல்யாணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகளும் தான்! அதோடு மட்டுமா? உடுத்தும் உடைகளும் தான். மணப்பெண் ரிசப்ஷனுக்கு குஜராத்தி முறைப்படியோ அல்லது ராஜஸ்தானி காக்ரா, சோலியோ அணிந்தால் தான் மதிப்பு! மணமகன் பைஜாமா குர்த்தா விலை உயர்ந்த துணியில் தைத்ததை அணிந்து இருக்க வேண்டும். ரிசப்ஷன் மேடையிலேயே ஆடுவார்கள், பாடுவார்கள். ஆனால் தமிழ் உணர்வு பொங்கும்போது சும்மா இருக்க மாட்டோம். ஒரே பொங்கல் தான்!
கல்யாணத்துக்கு முன்னும், பின்னும் கூட வட இந்திய முறைப்படி மெஹந்தி விழா, சங்கீத், பராத், பாங்க்ரா நாட்டியம், கர்பா எல்லாமும் உண்டு. ஆனால் தமிழ், தமிழ் உணர்வு என்னும்போது அப்படியே கொதித்துக் கொந்தளித்துப் போவோம். பார்ப்பனர்கள் சம்ஸ்கிருதம் படிக்க விடாமல் மற்ற ஜாதியினரைத் தடுத்து விட்டார்கள் என்று சொல்வோம். ஆனால் அதே சம்ஸ்கிருதம் படிக்க இப்போது வாய்ப்புக் கொடுத்தால் மொழித்திணிப்பு என்போம். ஹிந்தி மொழியை இங்கே யாரும் படிக்கக் கூடாது! மொழித்திணிப்பு என்போம். ஆனால் வட இந்திய முறைப்படி தான் நம் திருமணங்களை நடத்துவோம்! அதிலும் பல பிராமணர்கள் வீட்டுத் திருமணங்கள் இப்படித் தான் நடக்கின்றன. இதில் அவர்களே மற்றவர்களுக்கு வழிகாட்டி எனலாம்.( நல்ல வேளையா எங்க பொண்ணு, பிள்ளை கல்யாணங்களில் இப்படி எல்லாம் நடக்கலை.) நம்ம பாரம்பரிய முறைப்படி திருமணம் நடப்பதைக் கேலி செய்வோம். ஆனால் வட இந்திய முறைப்படி எல்லாவற்றையும் ஆவலுடன் செய்வோம். அதில் பெருமையும் கொள்வோம்.
எங்களுக்கு ஹிந்தி என்னும் மொழி தான் வரக் கூடாது! மொழித்திணிப்பை எதிர்ப்போம். வடவர் ஆதிக்கம் என்போம். ஆனால் எங்க வீட்டுக் கல்யாணங்களில் வட இந்திய முறைப்படி மெஹந்தி விழா மற்றும்
அவங்க முறைப்படி உடை உடுத்துதல், பராத், பாங்ரா நாட்டியம், கர்பா எல்லாமும் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்,
உணவுகளில் கூட வட இந்திய உணவு முறைப்படி தான் சாப்பிடுவோம். சாட் பண்டார் தனி ஸ்டால், சமோசா தனி ஸ்டால், பானி பூரி, பேல் பூரி, தஹி பூரி தனி ஸ்டால், உணவு வகைகளில் சப்பாத்தி, குருமா, நான், ஃபுல்கா ரொட்டி, சப்ஜி என்றே சாப்பிடுவோம். ஆனால் ஹிந்தி மட்டும் படிக்கச் சொன்னீங்களோ! எங்கள் தமிழார்வம் உங்களைச் சும்மா விடாது!
ஆமாம் தெரிஞ்சுக்குங்க! :)))) ஹூம், நாங்க தமிழார்வம் நிறைஞ்சவங்களாக்கும்! :)))) மைல் கல்லில் ஹிந்தி எழுத்து தென்பட்டால் கூட எதிர்ப்புத் தெரிவிப்போம். இத்தனைக்கும் அது தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும்! அங்கே இத்தனை மைல்களுக்கு ஒரு மைல்கல்லில் மூன்று மொழிகளிலும் விபரம் கொடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை ஆணை இருக்கும்! இருந்தாலும் நாங்க தமிழர்கள் இல்லையா? எங்க தமிழ்நாட்டில் அதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதை அழிக்கும்வரை போராட்டம் தான்!
தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம். ஆனால் எங்கள் திருமணங்களில் எல்லாம் வட இந்தியர் போடும் உடைகள், உணவு வகைகள், பழக்க, வழக்கங்களையே பின்பற்றுவோம். எந்த வட இந்தியராவது தமிழ்நாட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகச் செய்தி வந்திருக்கா? இல்லை! ஆனால் தமிழ் உணர்வு மிகுதியாக உள்ள நாம் மட்டுமே தனித்துவம் கொண்டவர்கள் ஆதலால் இப்படிச் செய்வோம். தமிழ்ப் பற்றில் எங்களை மிஞ்ச ஆளில்லை! எங்காவது ஹிந்தி எழுத்தைப் பார்த்தால் தார் பூசி அழிப்போம். ஆனால் எங்கள் திருமணங்களில் கட்டாயமாக சமோசா, பாவ் பாஜி, தஹி சாட், பேல் பூரி, தஹி பூரி, பானி பூரி போன்றவை இடம் பெறுமாறு பார்த்துப்போம். அதான் எங்கள் முக்கிய உணவே! விடுமுறை நாட்களில் ஓட்டலுக்குச் சென்றால் கூட நாங்க இவற்றைத் தான் வரவழைத்துச் சாப்பிடுவோம். இட்லி, சாம்பாரெல்லாம் எவன் சாப்பிடுவான்! சாதம் என்றால் அதில் பிரியாணியோ, புலவோ என்றால் சாப்பிடலாம். சாம்பார் சாதமா? ரசமா? சேச்சே! ரசனையே இல்லாத திருந்தாத ஜன்மங்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள். நாமெல்லாம் புலவும், பிரியாணியும், ஃப்ரைட் ரைஸும் தானே சாப்பிடுவோம்!
நம்ம பாரம்பரிய உணவே மறந்துவிடுவோம் போல இருக்கு! ஏதோ எங்களைப் போன்றவர்கள் அதை நினைவூட்டினால் தான் உண்டு! பழக்க வழக்கங்களுமே மாறிக் கொண்டு வருவதையும் பார்க்க முடியுது! ஒரு பக்கம் தமிழ், தமிழ் மொழிப் பற்று, தமிழ்க் கலாசாரம் பேணுதல்! இன்னொரு பக்கம் மறைமுகமாக வட நாட்டு முறைகள், பழக்க, வழக்கங்கள், உணவுகள் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துதல்! என்னவோ போங்க!
வாழிய செந்தமிழ், வாழிய பாரத மணித்திருநாடு