எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 30, 2013

பூப்பூவாய்ப் பூத்திருக்கு, பூவிலே சிறந்த பூ என்ன பூ?

ஒரு நாலு நாளைக்கு வரலைனா மக்கள்லாம் மறந்தே போயிடறாங்கப்பா. அநியாயமா இல்லையோ!  வீட்டிலே கொஞ்சம் அதிக வேலை.  விருந்தாளிகள் வரவு.  மஹாளயம், வெளியே போக வேண்டி வந்தது, அலைச்சல்னு கணினி கிட்டே மெயில் பார்க்க மட்டுமே உட்கார முடிஞ்சது.  சரி, நம்மளைக் காணோமேனு எல்லாரும் தேடப் போறாங்கனு பார்த்தால் இங்கே ஹிட் லிஸ்டே கீகீகீகீகீகீகீகீகீகீகீழே போயிருக்கு.  மொத்தம் நூறு பேருக்குள்ளே தான் இரண்டு, மூணு நாளா விசிடிங்க்.  இப்படி இருந்தால் அப்புறமா நம்மளை மறந்தே போயிடுவாங்கனு தோணிச்சு.  அதான் ஒரு மொக்கை கொடுத்து ரீ என்ட்ரி போட்டுக்கறேன்.  இனி தொடர்ந்து அறுவை போடுவேன்.  தயாரா இருங்க. (இல்லாட்டி மட்டும் எல்லாரும் வராங்களா என்ன?) அடைப்புக்குறிக்குள் என்னோட ம.சா. சொல்லுது.  அதுக்கு வேறே வேலையே இல்லை.  தேவையில்லாமல் முன்னுக்கு வரும். இப்போ வெங்கட் போட்ட பதிவைப் பார்த்ததும், ஏற்கெனவே நான் போட்டிருந்த பாரிஜாதம் படமும், பிரம்மகமலம் படம், அடுக்கு நந்தியாவட்டைப் படம், பவளமல்லிப் படம் ஆகியன பகிர்ந்துக்கறேன்.  முன்னாடி பார்க்காதவங்க பார்க்கலாமே!

இதான் எங்க வீட்டிலே பூத்த பாரிஜாதம் வகைப் பூக்களும், அதன் மொட்டுக்களும்.

இதுவும் அதான்,  இன்னொரு செடியில் பூத்திருந்தது.

இது கூகிளாண்டவர் கொடுத்தது.  இதான் பிரம்மகமலம்னு சொல்லுது.  ஹரிகி கொடுத்தது வேறே மாதிரி இருந்தது.  குழுமத்திலே அந்த இழையைத் தேடணும். இல்லைனா ஹரிகி கிட்டே கேட்டு வாங்கிப் போடறேன். :)))

இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது.  பவளமல்லி.  சாயந்திரம் ஏழு மணி ஆச்சுன்னா எங்க வீட்டிலே கணினி வைச்சிருந்த ஜன்னல் அருகே இருந்த இந்த மரத்திலிருந்து பூக்கள் கொட்ட ஆரம்பிக்கும்.  காற்றிலே மணம் கணினி முன்னாடி உட்கார்ந்திருக்கும் என் மூக்கை வந்து நிறைக்கும்.  மனமே அந்த மணத்தில் ஆழ்ந்து போகும்.   ஆனால் இந்தப் பூக்கள் கூகிளாண்டவர் கொடுத்தது தான்.  இதைக் காலையிலே நிறையப் பொறுக்கி மாலை கோர்த்து எங்க வீட்டு ராமருக்குப் போடுவேன்.  இங்கே இல்லை. :(  இப்போ அம்பத்தூர் வீட்டிலேயும் பவளமல்லி மரம் இல்லை. :(  இந்தப் பாரிஜாதச் செடியையும் வெட்டிட்டாங்க.   அதுவும் இப்போ இல்லை. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இந்தப் பாரிஜாதம் வகைப் பூக்கள் பூக்கும். 

Wednesday, September 25, 2013

யசோதைக்குக் கிடைத்தது நமக்கும் கிடைக்கும்!

பிரம்மாண்ட புராணத்தின் 12 ஆவது அத்தியாயத்தில் இந்தக் கோயில் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.  இந்தக் கோயிலை ஒட்டிப் பாயும் கண்வா நதிக்கரையில் தான் நதி நரசிம்மர் கோயிலும் உள்ளது.  சகுந்தலையை வளர்த்த கண்வமுனிவரின் ஆசிரமம் இந்தப் பகுதியில் இருந்ததால் நதிக்கு கண்வ நதி என்ற பெயர் எனக் கேள்விப் பட்டோம்.  நாங்கள் செல்கையில் இருட்டி விட்டதால் நரசிம்மர் கோயிலை ஆறு மணிக்கே மூடிவிடுவார்கள் என்றும், பார்க்க முடியாது என்றும் தெரிவித்தனர்.  கொஞ்சம் ஏமாற்றம் தான்.  இந்த ஊரில் எங்கே தோண்டினாலும் மணலாக வருவதாகவும் அதனால்  இவ்வூர் மணலூர் என அழைக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.  பின்னர் மறளூர் என்றாகி மளூர் என அழைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.  நான்காம் நூற்றாண்டில் இந்த மளூரில் அப்ரமேயர் கோயில் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம்.  இந்தக் கோயிலுக்கு ஶ்ரீராமாநுஜர், வியாசராஜர், புரந்தர தாசர், ராக்வேந்திர ஸ்வாமிகள் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.


கோயிலுக்கு அஸ்திவாரமே இல்லை எனவும் சொல்கின்றனர்.  இங்குள்ள கல்வெட்டுக்கள் பலவும் கிரந்தத்தில் உள்ளன.  இதைத் தவிர, தமிழ், சம்ஸ்கிருத மொழிகளிலும் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள ஊரான முகுந்தா முன் காலத்தில் முகுந்தராயப்பட்டினம் என அழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அந்த ஊரின் அரசனுக்கு சாரங்கதரா என்னும் பெயருள்ள ஒரு மகன் இருந்ததாகவும், அவன் அழகால் அனைவரையும் கவர்ந்ததாகவும், அரசனின் மனைவியும் அவன் மேல் மோகம் கொண்டதாகவும் சொல்கின்றனர்.  ஆனால் சாரங்கதராவுக்கோத் தாய் என்னும் பாசம் மட்டுமே இருந்தது.  காமவயப்பட்ட அரசி மன்னனிடம் சாரங்கன் மீது தேவையில்லாத புகார்களைச் சொல்ல, மன்னன் சினத்துடன் மகனின் கை, கால்களை வெட்டிக் கண்வா நதியில் தள்ளிவிட்டான்.  ஆனால் அப்ரமேயரின் அருளால் கை, கால்கள் வளர்ந்தன.  ஆகவே இந்த ஊர் மொளதூரு என அழைக்கப் பட்டுப் பின்னர் மளூரு என மருவியதாகவும் சொல்கின்றனர்.  இந்தக் கோயில் கிருஷ்ணனைப் பார்க்கப் புரந்தரதாசர் வந்தபோது கோயில் கதவுகளை மூடிவிட்டனராம்.  ஆகவே புரந்தரதாசர், "ஜகதோத்தாரண" என்னும் பாடலைப் பாட, கோயில்கதவுகள் திறந்தனவாம்.  கண்ணன் தவழ்ந்த கோலத்திலேயே வந்து உள்ளிருந்து எட்டிப் பார்த்தானாம். கண்ணனைப் பெற்ற தாயான தேவகிக்குக் கூடக் கிடைக்காத கோலம் தவழ்ந்த கிருஷ்ணன் ரூபம்.  அத்தகையை கிடைத்தற்கரிய பாக்கியத்தை நமக்கெல்லாம் அருளவே கிருஷ்ணன் இங்கே தவழ்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறான்.

இதைத் தவிர இந்தக் கோயிலில் கூரத்தாழ்வார், ராமாநுஜர், பிள்ளைலோகாசாரியார், வைகுண்ட நாராயணன், பரமபத நாதர் ஆகியோருக்கெல்லாம் தனிச் சந்நிதிகள் உள்ளன.  சிறியதொரு யாகசாலையும் இங்கே உண்டு.  மைசூர் மன்னன் இந்தக் கிருஷ்ணன் போல் இன்னொரு திருமேனியை அமைக்க வேண்டி தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்றானாம். ஆனால் கிருஷ்ணன் மன்னன் கனவிலே தோன்றி மீண்டும் தன்னை எடுத்த இடத்திலே வைக்கச் சொல்ல, மன்னன் மீண்டும் கோயிலுக்கே கொடுத்துவிட்டு அரக்கினால் அச்சு செய்து எடுத்துச் சென்றதாகச் சொல்கின்றனர்.  கோயில் மிகப் பழமையானதாக இருப்பதால் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடப்பதாகவும் ஹம்பியில் வேலை செய்யும் சிற்பிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அருகிலுள்ள ரயில் நிலையம், சென்னப்பட்டினம்,  அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.  மூன்றிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள்ளாக இருக்கும்.

சாலை வழி எனில் மாநில நெடுஞ்சாலையில் பங்களூரு-மைசூரு செல்லும் வழியில் சன்னப்பட்டினத்திலிருந்து இரண்டாவது கிலோ மீட்டரில் உள்ளது.  மைசூரு செல்கையில் இடப்பக்கம் உள்ள வளைவில் திரும்ப வேண்டும்.  மைசூரிலிருந்து பங்களூரு வந்தால் வலப்பக்கம் உள்ள வளைவில் திரும்ப வேண்டும்.  இதற்கு எதிரிலேயே நதி நரசிம்மர், சிவன் கோயில் செல்லும் பாதை உள்ளது.  இங்கே தரிசனம் முடிந்ததுமே மணி கிட்டத்தட்ட எட்டு ஆகிக் கொண்டிருந்தது. ஆகவே உடனடியாக "பெண்"களூருக்குத் திரும்பினோம்.  வழியில் என் அண்ணாவுக்குத் தொலைபேசி நாங்க வர ஒன்பதுக்கு மேல் ஆகும் என்பதால் கொஞ்சம் சாப்பாடு வைக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டோம்.  ஒன்பதரைக்கு மேல் வந்து சாப்பிட்டுப் படுத்தோம். 

Sunday, September 22, 2013

ஆடாது, அசங்காது வா, கிருஷ்ணா!

குழந்தைப் பேறு இல்லாத குறை அது ஆத்திகரோ, நாத்திகரோ, அவர்களுக்கு மனதை மிகவும் பாதிக்கும்.  எல்லாத் தம்பதிகளுக்கு அப்படி இருப்பதில்லை எனினும் சிலருக்கு விரைவில் குழந்தை பிறக்காது.  அப்படிப் பட்ட குறை தீர இந்தத் தவழ்ந்த கிருஷ்ணனைப் பார்த்து தரிசித்து அவன் சந்நிதியில் தொட்டில் கட்டுவதாகப் பிரார்த்தித்துக் கொண்டால் மணிப்பயலோ, முத்துப் பெண்ணோ பிறக்கும் என்பது ஐதீகம்.

இங்கே இவன் மூலஸ்தானத்தில் இல்லை.  ஆனாலும் பெரும்பாலான மக்களுக்கு அம்பேகாலு கிருஷ்ணன் கோயில் என்றால் தான் புரிகிறது.  மூலவர் அப்ரமேயர்.  அப்ரமேய, ருஷிகேச, பத்மநாபோ, அமரப் ப்ரபு என்னும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் வரும் அப்ரமேய என்னும் பெயரில் எல்லையில்லாமல் பரந்து விருந்திருக்கும் பெருமாள் ராம அப்ரமேயர் என்னும் காரணப் பெயரோடு இங்கே காட்சி அளிக்கிறார். ஶ்ரீராமர் இங்கே வந்து மஹாவிஷ்ணுவைப் பூஜித்த காரணத்தால் ராம அப்ரமேயர் என்னும் பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர். கோயில் மிகப் பழமையானது என்று சொல்கின்றனர்.  அதற்கேற்றாற்போல் கோயில் பராமரிப்பும் இன்றிப் பழமையானதாகவே காண்கின்றது.  3000 ஆண்டுகள் பழமையானதாக ஐதீகம் எனினும், கட்டிட அமைப்பு எல்லாம் சோழர் காலத்தை ஒட்டி இருப்பதால் குறைந்தது 1,500 ஆண்டுகள் ஆகி இருக்கலாம். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் இருப்பதாக பட்டாசாரியார் கூறினார்.  இந்தக் கோயிலில் மூ.லவர் அப்ரமேயர் தவிர்த்து, ஶ்ரீராமர் மற்றும் அம்பேகாலு கிருஷ்ணா என்னும் தவழ்ந்த கிருஷ்ணரும் இருக்கிறார்.  இதில் யார், யாரைப் பிரதிஷ்டை செய்தார்கள் என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் அப்ரமேயரை இங்கே ராமர் வழிபட்டார் என்றும், அதன் பின்னரே ராம அப்ரமேயர் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்கின்றனர்.  அதன் பின்னர் ராமர் சிலையைக் கிருஷ்ணர் பிரதிஷ்டை பண்ணி இருக்கலாம் என ஒரு யூகம் உள்ளது.

பல கல்வெட்டுச் செய்திகளும் அந்த இருளில் தெரிந்தன.  தாயார் சந்நிதி செல்லும் வழியிலும் மூலவர் சந்நிதி செல்லும் வழியிலும் கல்பாறைகளில் செதுக்கி இருக்கின்றனர்.  இந்தக் கோயிலின் தலபுராணம் வாய்மொழியாகவே சொல்லப்படுகிறது. அப்ரமேய என்றால் எல்லையற்ற என்ற பொருள் என்பதைப் பார்த்தோம். பகவானின் கருணை எல்லையற்றது என்ற பொருளிலும் கொள்ளலாம்;  அவன் சக்தி எல்லையற்றது, ரூபம் எல்லையற்றது என்றும் பொருள் கொள்ளலாம் இதை அவரவர் கருத்துக்கு ஏற்றாற்போல் புரிந்து கொள்ள விடுகிறேன்.  சாளக்கிராமக் கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மூலவர் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.  கைகளில் சங்கு, சக்கரத்தோடு, அபய கரம் காட்டி நிற்கிறார்.  உற்சவர் ஶ்ரீதேவி, பூதேவி சஹிதமாகக் காட்சி அளிக்கிறார்.  மூலவர் சந்நிதியை விட்டு வெளியே வந்து இடப்பக்கம் உள்ள பிரகாரத்தில் சில படிகள் ஏறி மேலே சென்றால் தாயாரை தரிசிக்கலாம்.  அரவிந்தவல்லித் தாயார் என்பது திருநாமம்.  தாயார் இந்த ஆலயத்தின் வடமேற்குப் பக்கம் உள்ள விஷ்ணு தீர்த்தம் என்னும் குளத்திலே தானாகத் தோன்றியவராம்.  அவர் சக்தியும் அளவிட முடியாதது என்கின்றனர்.

அதே பிராகாரத்தில் சற்று தூரத்திலேயே நாம் முதலில் தரிசித்த நவநீத கிருஷ்ணன்காணப்படுகின்றான்.  தவழ்ந்து வந்து கொண்டு, "என்னைத் தூக்கிக்கோ, தூக்காமல் என்ன பண்ணறே!" என்று கேட்காமல் கேட்கிறான்.  கையிலே தூக்கிக் கொஞ்சத் தான் ஆசை.  நன்கு சீவி, வாரி முடித்த தலையோடு கழுத்தில் புலிநகமாலையோடு, முத்துமாலை, மாங்காய்த் தோடு, வங்கி, வளை, மோதிரம், அரைஞாண் கயிறு ஆகியவற்றோடும் தவழ்கையில் சப்தம் கேட்கும் வண்ணம் கால்களில் கொலுசோடும் பாதங்களில் சங்கு, சக்கரரேகைகள் இருப்பதாகவும்(பட்டாசாரியார் சொன்னது) கையில் பெரிய உருண்டை வெண்ணெயோடும் காட்சி கொடுக்கிறான்.  இந்தக் கோலத்தில் கிருஷ்ணனை இந்தியாவிலே எங்குமே பார்க்கமுடியாது எனச் சொல்கின்றனர்.  ஆனால் மத்ரா, பிருந்தாவன், கோகுலம் ஆகிய இடங்களில் பார்க்கலாம்.  அங்கே எல்லாம் கிருஷ்ணனை நாமும் தவழ்ந்து சென்றே பார்த்தாகவேண்டும்.  தொட்டிலை ஆட்டிக் கிருஷ்ணனைத் தூங்கவும் வைக்கலாம்.  கருட பீடத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  இதைத் தவிரவும் இந்தக் கோயிலில்  ஶ்ரீராமர் குடும்ப சமேதராகக் காட்சி அளிக்கிறார்.  மற்றும் சுதர்சன நரசிம்மர், வேணுகோபாலர் ஆகியோருக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன.   இந்த ஊரின் கதையையும், மற்ற விபரங்களையும் நாளை பார்ப்போம்.

Friday, September 20, 2013

அம்பேகாலு கிருஷ்ணா நீ பேகனே பாரோ!

சரி, கீழே போய்க்காஃபி குடிச்சுட்டு, டிஃபன் கிடைச்சா வாங்கிட்டு நேரே ட்ராவல் ஆபீஸுக்கே போகலாம்னு ரங்க்ஸ் ஒத்துக்க, இரண்டு பேரும் கிளம்பினோம்.  அங்கே போனால் காடரிங்காரங்க எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாங்க. காஃபி கேட்டால் நாலு மணி ஆகும்னு சொல்லிட்டாங்க.  லேட் முஹூர்த்தம் என்பதால் சாப்பாடு முடியவே மூணு மணி ஆயிடுச்சாம். டிஃபன் ஐந்து மணி ஆகுமாம்.  இது சரியா வராதுனு ட்ராவல்ஸ் ஆஃபீஸுக்குக் கிளம்பிட்டோம். போற வழியிலே கண்ணிலே பட்ட ட்ராவல்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி ரங்க்ஸ் கேட்க ஒவ்வொருத்தரும் அந்தக் காரோட விலையைச் சொல்லக் கட்டுப்படி ஆகாதுனு நான் தரதரனு அவரையும் இழுத்துண்டு ட்ராவல்ஸ் ஆஃபீஸுக்கே போனோம்.  எங்க கிட்டே பேசி ஒப்பந்தம் போட்டவங்க இல்லை.  இன்னொருத்தர் இருந்தார்.  அவரிடம் விஷயத்தைச் சொல்லவும் எங்க கிட்டே பேசினவரை வரவழைத்தார்.  அவர் வரப் பத்து நிமிஷம் போல் ஆச்சு.  நேரம் ஆக ஆக எனக்கோ பதைப்பு.  ஏனெனில் இங்கே உள்ள போக்குவரத்தில் பெண்களூரைக் கடக்கவே ஒன்றரை மணி நேரம் ஆயிடுமே.  அங்கே கோயில் திறந்திருக்குமா, மூடிடுவாங்களா? நரசிம்மரைப் பார்க்க முடியுமா என்றெல்லாம் கவலை.  ஒரே கோபம் வேறே வந்தது.  பத்து நிமிஷம் கழிச்சு வந்த மனிதர் எங்க கிட்டே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் யாரோ மாதிரிப் பார்த்துக் கொண்டு நேரே உள்ளே போய்க் கணினியிலே ஏதோ செய்துட்டு, தொலைபேசியிலே மலையாளத்தில் பறஞ்சுட்டு அங்கே இருந்த ஒரே ஒரு க்வாலிஸையும் எடுத்துக் கொண்டு போயே போயிட்டார்.

நுழையற இடத்தில் இருக்கும் மண்டபமும் பந்தலும் கோபுரத்தைச் சரியாகப் படம் பிடிக்க விடலை.  கொஞ்சம் தள்ளிப் போகணும்.  இருட்டு, போக யோசனை! இது போதும்னு விட்டுட்டேன். முதல்லே சின்ன வண்டி இல்லை; பெரிய வண்டி எடுத்துக்கோனு சொல்லிட்டு, இப்போ இதையும் எடுத்துட்டுப் போயிட்டாரேனு கவலை வந்தது.  இன்னொரு வான் இருந்தது.  அதையும் இரண்டு பேர் ஓட்டிட்டுப் போயாச்சு.

திரு திரு திரு திருனு முழிச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். கோபம் மீதூற நான் அங்கே இருந்த அந்த இன்னொருத்தரிடம் கோபமாய்ப் பேசினேன்.  வண்டி வருமா வராதானு சொல்லிடுங்க னு சொல்ல, அவரோ தான் டிரைவரோட பேசி இருப்பதாகவும், வண்டி வந்து கொண்டிருப்பதாகவும் அரை மணியில் வரும்னும் சொன்னார்.  மணி அதுக்குள்ளே நாலும் ஆயாச்சு. வண்டி வரலை.  இனிமேலே அங்கே போய் என்னத்தைப் பார்க்கிறது?  போய்ச் சேரவே ஏழு மணியாகும்.  கோயில் திறந்திருக்கணுமே/  நான் ரங்க்ஸிடம் காலையிலே நாள் பூரா இருக்கே. அதிகாலை கிளம்பிப் போய் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்னு சொன்னேன்.  அவரோ அன்னிக்குத் தான் போகணும், மறுநாள் அஷ்டமி, நவமி னு சொல்லிட்டு எழுந்திருக்க மாட்டேன்னு அடம் பிடிச்சார்.  அதுக்கு மேலே என்ன செய்யறதுனு புரியாம நான் கிளம்பிட்டேன்.  நீங்க இருந்து வண்டி வந்தாப் போங்க. நான் சத்திரத்துக்குப் போறேன்.  அல்லது வண்டிக்காரர் கிட்டே நாளைக்குப் போக ஏற்பாடு செய்யுங்கனு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.  மத்தியானம் சாப்பிடாதது அப்போத் தான் தெரிஞ்சது.  நான் கிளம்பி வெளியே வந்து செருப்பைக் காலில் போடறேன்.  வண்டி வந்துவிட்டது.  என்ன செய்யலாம்னு ஆலோசிச்சோம்.  டிரைவரோ உடனே கிளம்பத் தயார்னு சொல்லிட்டார்.  ஆனால் ஒரு சின்ன உதவி, டீ மட்டும் குடிச்சுட்டு வரேன்னு சொன்னார்.  நான் சத்திரத்துக்குப்போற வழியிலே தானே போயாகணும்.  அங்கேயே போய் நாமும் டீ குடிச்சுட்டு, டிரைவருக்கும் வாங்கிக் கொடுத்துடலாம்னு ஐடியா கொடுக்க அது அப்படியே நிறைவேற்றப்பட்டது.  டிஃபன் ரெடியாகலை.  சரி, இந்த மட்டும் வண்டி கிடைச்சதேனு ஏறி உட்கார்ந்தால், பெண்களூரைக் கடக்கவே ஆறு மணி ஆயிடுச்சு.

ராமநகரம் தாண்டி சென்னப்பட்டினம் வரைக்கும் வந்த டிரைவர் அதுக்கு அப்புறம்  கோயில் எங்கே இருக்குனு கேட்டுக் கொண்டார்.  எல்லா ஊர்களீலும் அன்னிக்குப் பிள்ளையார் விஸர்ஜனம் வேறே.  ஒரே கூட்டம், வாத்திய முழக்கம், பட்டாசு வெடிகள்னு அமர்க்களமா இருந்தது.  ஆனால் களேபரம் எல்லாம் இல்லை. சென்னப்பட்டினத்தில் இருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் இடப்பக்கமாகக் கோயிலின் வளைவு வாசல் தெரியும்னு சொன்னாங்க.  எங்களுக்கும் அது நினைவு இருந்தது.  மைசூரில் இருந்து வந்தால் வலப்பக்கம்.  அதுக்கு நேரே தான் பேருந்துகள் முன்னால் நின்றன.  இப்போ காரில் போனதால் பேருந்து நிலையம் இருக்கானு கவனிக்கலை.  அந்த வளைவைத் தாண்டியதுமே கோயில் வந்துடும்.  இருட்டி விட்டது.  ஆகையால் கோபுரம் எல்லாம் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் சுமாராத் தான் தெரிஞ்சது.  ஏற்கெனவே பழைய கோயில் அது.  இப்போது இன்னமும் பராமரிப்பு மோசமாகிவிட்டதால் ரொம்பவே பழசாகக் காட்சி அளித்தது.  அங்கே அர்ச்சனை டிக்கெட் கொடுக்க யாரும் இருக்காங்களானு பார்த்தால் யாரும் இல்லை.  அதுக்குள்ளே மூலஸ்தானத்திலே இருந்து வந்த பட்டாசாரியார், தான் அம்பேகாலு கிருஷ்ணன் சந்நிதிக்குப் போவதாயும், முதலில் அங்கே வந்துவிடும்படியும், அதுக்கப்புறமா மூலவரைச் சேவிக்கலாம்னும் சொல்லிட்டு அங்கே போயிட்டார். இப்படியாகத் தானே கிருஷ்ணன் முதல்லே என்னை வந்து பாரு, நான்குழந்தை, ரொம்ப நாழியெல்லாம் முழிச்சுண்டு இருக்க முடியுமானு கூப்பிட்டுட்டான்.  அந்தக் கோயில்லே அப்போ இருந்தவங்களே அம்பேகாலு கிருஷ்ணன் சந்நிதியில் இருந்த தம்பதியர், நாங்க அப்புறம் உள்ளூர்க்காரர் ஒருத்தர், இரண்டு பட்டாசாரியார்கள் தான்.  கொஞ்சம் பயம்ம்மாக் கூட இருந்தது.  படம் பிடிச்சுக்கவானு கேட்டதுக்கு பட்டாசாரியார் கூடாதுனு சொல்லிட்டார். ஏமாற்றமாப் போச்சு.  அங்கே முன் மண்டபத்தில் இடப்பக்கம் மாட்டி இருந்த ஃபோட்டோவில் இருந்த கிருஷ்ணனையும், தாயாரையும் படம் பிடித்துக் கொண்டேன். 

Thursday, September 19, 2013

படிக்கிறீங்களா?

test post
என்னோட ப்ளாக் படிக்க முடியலைனு சிலர் சொல்வதால் இந்த சோதனைப் பதிவு. :)))) இரண்டு பேர் படிக்க முடியுது சொல்லிட்டாங்க. இனி????

Wednesday, September 18, 2013

இதுக்கெல்லாமா அசந்துடுவோம்!

மொக்கைக்குத் தான் ஹிட்லிஸ்ட் எகிறுது! அநியாயமா இல்லையோ?


பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவுப் பேருந்தில் "பெண்"களூர் போனோம். 11--ஆம் தேதி கல்யாணம். முஹூர்த்த நேரம் கிட்டத்தட்ட மதிய நேரம்.  அபிஜித் முஹூர்த்தம்.  ஆகவே அன்னிக்கு தொட்டமளூர் போக முடியாது. 10 ஆம் தேதி விரதம் முடிந்ததும், உடனே காலையிலேயே நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டிருந்தனர்.  பனிரண்டு மணிக்கு மேல் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கோயிலுக்குப் போக முடியாது.  மாலை போகலாம்னா ரிசப்ஷன் அன்னிக்கு வைச்சிருந்தாங்க.  நம்ம கொள்கைக்கு விரோதம் தான் என்றாலும் இது சொந்த அண்ணா பையர் கல்யாணம் இல்லை என்பதோடு ரிசப்ஷன் பெண் வீட்டு ஏற்பாடு என்பதும் கூட.  ஆகவே எதுவும் சொல்லலை.  ரிசப்ஷனுக்கு ப்யூட்டி பார்லரிலே இருந்து வந்து பெண், பிள்ளை அலங்காரம் செய்துக்க வசதியாகத் தான் நிச்சயத்தைக் காலையிலேயே முடிச்சுக்கறாங்க என்பதும் புரிந்தது.  பேருந்துப் பயணம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.  கரூர் தாண்டி சேலம் வரையில் சாலை மோசம்.  அதுக்கப்புறமா வண்டி சாலையில் மிதந்ததுனே சொல்லலாம்.  சொகுசுப் பேருந்தின் சுகமே அப்போத் தான் தெரிஞ்சது.  நாங்க பயணித்த பேருந்தில் எல்லாம் பெண்"களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகள்.  நாங்க ரெண்டு பேரும் தான் அந்தப் பேருந்திலேயே வயசான தம்பதிகள்.  எல்லாரும் மூன்று நாள் சேர்ந்தாப்போல் விடுமுறைக்குச் சொந்த ஊர் வந்துட்டுத் திரும்பறாங்க. அவங்களுக்கு இது வாடிக்கை.  பேருந்தில் ஏறினதுமே இழுத்துப் போர்த்துட்டுத் தூங்கிட்டாங்க.  நான் கம்பளியை(பேருந்தில் கொடுத்தது தான்) எடுத்து மடிச்சு வைச்சுட்டேன். அரைத் தூக்கமும், விழிப்புமாகக் காவேரிக்கரையைக் கடக்கும் வரை இருந்துட்டு அப்புறமாக் கொஞ்சம் தூங்கினேன்.


சேலம் தாண்டி வந்த சுங்கச் சாவடியில் பணம் கட்டப் பேருந்து நின்றது.  வெளிமாநிலப் பேருந்துகளுக்குப் பணம் வசூலிக்கிறாங்க போல.  நாங்க போனது கர்நாடக அரசுப் பேருந்து தான். ஆனாலும் தமிழ்நாட்டுக்குள்ளே பேருந்து ஓடப் பணம் கட்டணும். காலை ஐந்தே முக்காலுக்கே "பெண்"களூர் போயாச்சு.  சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டாங்க. முன்னெல்லாம் மெஜஸ்டிக்கா மெஜஸ்டிக் சர்க்கிளில் இறங்குவோம்.  இப்போ சர்க்கிளே இல்லைபோல பெண்களூரில். மெலிதான தூறல்கள், மேலே இருந்து பன்னீர்ச் சிதறல்கள் போல விழுந்துட்டு இருந்தது.  சூரியன் இன்னைக்கு நான் லீவுனு சொல்லிட்டு, மேகப் போர்வையை எடுத்துப் போர்த்திட்டு ஹாயாப் படுத்துட்டார். அங்கே இருந்த ஆட்டோக்காரங்களைக் கூப்பிட வேண்டாம்னு ப்ரீ-பெய்ட் ஆட்டோவைப் பார்க்கலாம்னு போனால் உள்ளூர்க் காரங்க, எதுக்கு அநாவசியமா ஆட்டோவுக்குப் பணம் கொடுக்கறீங்க!  பேசாம, (பேசிட்டே) பேருந்திலே போங்கனு புத்திமதி சொன்னாங்க.  எல்லாத்தையும் ஒரே தள்ளாத் தள்ளிட்டோம். கையிலே சூட்கேஸ் பயமுறுத்தியது. அதைத் தூக்கிட்டு ஏறிடலாம்; இறங்கிடலாம்.  இறங்கற இடத்திலே இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் இதைத் தூக்கிண்டு யாரு நடக்கிறது?

ஒரு ஆட்டோக்காரர் ஆட்டோவின் விலையைச் சொல்ல, வாங்கப் பணம் கொண்டு வரலைனு வேறே ஒருத்தரைத் தேடிப் போனோம். அப்போ ஒரு ஆட்டோக்காரர் வந்து எங்கே போகணும்னு கேட்டுத் தான் கொண்டு விடுவதாயும் ரூ 150 கொடுக்கவும் சொல்ல, எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகம்.  அவருக்கு எங்க சந்தேகம் புரிஞ்சு தமிழில் பேச ஆரம்பித்தார்.  "பெண்"களூர், மங்களூர், உடுப்பி, கொல்லூர் போன்ற ஊர்களில் ஆட்டோக்காரர்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், கொங்கணி போன்ற மொழிகளில் பேசறாங்க. அதுவும் சர்வ சரளமாக. இதை நம்ம ஊர் ஆட்டோக்காரங்களும் கத்துக்கணும். எங்கே! :( அப்புறமா தைரியமா சாமானை எடுத்து வைச்சுட்டு ஆட்டோவில் உட்கார்ந்தோம். அரை மணி நேரத்தில் நாங்க போக வேண்டிய சத்திரம் சந்திரோதயம் வந்து சேர்ந்தது.  அங்கே போட்டிருந்த ஃப்ளெக்ஸ் பானரில் பையர், பெண் பேரையும், அப்பா, அம்மா, பேரையும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டு கீழே இறங்கினேன்.  படிகள், படிகள், படிகள்.  சத்திரத்துக்குத் தரைத்தளம் போகவே இருபது படிகள். கடவுளே!

யாரோ ஒரு மஹானுபாவர் வந்து பெட்டியைத் தூக்கி மேலே கொண்டு போய்த் தளத்தில் வைத்தார்.  அதுக்கப்புறமாப் பெட்டியை உருட்டிக் கொண்டு போயாச்சு.  மணமேடை(ஆடிட்டோரியம்)க்கு ஏறவும் ஐந்தாறு படிகள். அங்கேயும் நாங்க பிள்ளை வீடுனு தெரிஞ்சுண்ட பெண்ணின் அப்பா யாரையோ அழைத்துப் பெட்டியைத் தூக்கித் தரச் சொல்ல, நாங்க படியேறினோம்.  உள்ளே போய்த் தான் காஃபி கப்பைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்ததெல்லாம். அதுக்கப்புறமா அடுத்த மயக்கம் மத்தியானம் சாப்பிடறச்சே அப்பளம் போட்டப்போ! நம்ம ஊருக் கல்யாணங்களிலே இப்படி எல்லாம் போடறதே இல்லை.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :( ரசம் சாதத்துக்கு அப்பளாம் இல்லாமல் எப்படிச் சாப்பிடறதாம்? அதுவும் கல்யாணத்திலே.)   அன்றே மதியம் நிச்சயம் முடிந்து சாப்பிட ஒன்றரை மணி ஆகிவிட்டது.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலைக் காஃபி சாப்பிட்டதும், அந்தத் தெருவில் ஏதேனும் ட்ராவல்ஸ் காரங்க இருக்காங்களானு பார்க்கப் போனோம்.  கொஞ்ச தூரம் போனதும் ஒரு ட்ராவல்ஸ் காரர் கிடைச்சார்.  அவர் மலையாளத்தில் சம்சாரிக்க, நாங்க தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி டாக்கினோம்.  ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டு வண்டியும் தரேன்னு சொன்னார்.  ஆனால் நாங்க சொன்ன ஊர் அவருக்குப் புரியலை.  தொட்டமளூர்னு சொன்னால் அங்கே யாருக்கும் புரியறதே இல்லை.  நல்லவேளையா ஆபத்பாந்தவனாக ஒரு தமிழ்க்காரர் அங்கே டிரைவராக இருந்தவர் உதவிக்கு வந்தார்.  சென்னப்பட்டினத்துக்குப் பக்கம்னு சொன்னதும் அவன் கன்னடத்தில் மாட்லாடி, மலையாளத்தில் பறஞ்சு புரிய வைச்சார்.  வண்டியும் கிடைச்சது.  கல்யாணத்தன்னிக்கு மதியம் மூணரைக்குப் போக வண்டியை ஏற்பாடு பண்ணிக் கொண்டோம். எங்களோட தொலைபேசி எண், சத்திரத்தின் அறை எண், பெயர் எல்லாம் கொடுத்துட்டு வந்தோம்.  மறுநாள் கல்யாணம் முடிஞ்சது.


ரங்க்ஸ் மட்டும் சாப்பிட்டு வந்தார்.  நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சாப்பிடவில்லை.  வெளியே சென்றால் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கும்படி வந்தால் மதியம் சாப்பிட மாட்டேன்.  ஏதேனும் ஜூஸ்(ஃப்ரெஷ்) குடிச்சுட்டு இருந்துடுவேன்.  இரவிலும் இட்லி, தோசை, சப்பாத்தி ஏதேனும் ஒன்று மட்டும் சாப்பிட்டுப் பால் கிடைச்சால் குடிப்பேன்.  காலை ஆஹாரம்னா தமிழ்நாட்டில் பொங்கல் மட்டும்.  வயித்தை எதுவும் செய்யாத ஆகாரம். வேறே எதுவும் நோ நோ தான்.  சர்வ ஜாக்கிரதையாக இருப்பேன். அப்படியும் தொந்திரவுகள் வரது தான்.  அவர் சாப்பிட்டு வந்ததுமே ட்ராவல்ஸுக்குத் தொலைபேசிப் பயணத்தை உறுதி செய்யச் சொன்னேன்.  நம்ம சொல்லி ரங்க்ஸ் உடனே கேட்டதாகச் சரித்திரமே இல்லை.  எல்லாம் நேரம் இருக்கு! நான் கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டார்.  ஒருவழியா மூணு மணியும் ஆச்சு. ரங்க்ஸை எழுப்பினேன்.  வண்டிக்குத் தொலைபேசச் சொன்னால் இன்னும் மூணரை ஆகலையேனு கடுப்படிச்சுட்டு ஒருவழியா ஒரு மஹாயுத்தம் நடந்து முடிஞ்சதும் மூணேகாலுக்குத் தொலைபேசினார்.  வந்தது அதிர்ச்சித் தகவல்.  வண்டி இல்லையாம்.  பெரிய வண்டி தான் இருக்காம். சின்ன வண்டி நாங்க கேட்டது இன்டிகா. அது வெளியே போயிருக்காம்.  ஐந்துக்கோ, ஐந்தரைக்கோ தான் வருமாம். கடவுளே! இப்போ என்ன செய்யறதாம்?

Sunday, September 15, 2013

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!! இன்னமும் ஆறு வருடங்களாகியும்! :)

Friday, November 02, 2007

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!!இந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை! பின்னே என்னதான் நடந்தது? கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா? அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு! அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது! முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ? இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.

அதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு! அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம்! இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, "கிக்" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்.

எல்லாம் நம்ம "ஹெட்லெட்டர்" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, "நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்! அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது? இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது! சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன்! "படக்!" டிக்கி திறந்து கொள்ளும்! ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி "மூட் அவுட்" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய்! மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் "படக்"! டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக்!!!!! இப்போ அவர் கிட்டே இருந்து வரும்!

"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை!"

"இன்னும் எங்கே உட்காருகிறது? ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன்! இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்!"

'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

"நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"

"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்!"

"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க், பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு!"

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!


ஹிஹிஹி, திரு ஜிஎம்பி சாருக்காக எட்டெட்டு பதிவைத் தேடறச்சே இது கிடைச்சது.  இது சிரஞ்சீவியாக இன்னிக்கும் தொடர்வதால் ஒரு மீள்பதிவு போடலாமேனு நினைச்சேன்.  நினைக்கிறதும், அதைச் செய்யறதும் நமக்கு ஒண்ணுதானே.  செய்துட்டேன். :))))))

Saturday, September 14, 2013

கல்யாணக் காஃபி அங்கே! அதைக் குடித்த கப்போ இங்கே! :))))

மொக்கை போட்டால் தான் வாசகர் வட்டம் அலை மோதுது. :P அநியாயமாய் இல்லையோ?  பெண்களூர்க் கல்யாணத்தில் எனக்குப் பிடிச்சதாக இரண்டு விஷயங்கள் இருந்தது.  ஒண்ணு கல்யாணத்தில் முதல்நாள்  மத்தியானம் விரதம் முடிச்சுச் சாப்பிடறச்சேயே சாம்பார் சாதத்தின் போது அப்பளம் போட்டார்கள்.  சின்னதா வேறே இருந்ததா!  மனசே வெடிச்சு துக்கம் தாங்காமல் போச்சு! இது ஒரு வாய்க்குக் கூட வராதேனு அழுவாச்சியா வந்தது.  ஒரு துண்டை மிச்சம் வைச்சுண்டு ஒரு மாதிரியாச் சாப்பிட்டு முடிச்சேனா!  அடுத்து ரசம் போட்டதும் என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன ஆச்சரியம் பாருங்க. இரண்டாம் தரம் அப்பளம் வந்ததே! ஆஹா, இதுவன்றோ கல்யாணம்!  என் இலைக்கு இரண்டாம் தரம் அப்பளம் போட்டவர் என்ன நினைச்சாரோ தெரியலை, ஒண்ணுக்கு இரண்டாப் போட்டுட்டார்.  

சரி இது என்னமோ தப்பாப் பரிமாறிட்டாங்களோனு நினைச்சா, ம்ஹூம், அப்படி எல்லாம் இல்லை.  எல்லா நேரம் அப்பளம் கேட்கிறவங்களுக்குக் கேட்கிறபோது போட்டாங்கன்னா பாருங்களேன்.  கேட்டவர்க்குக் கேட்டபடி அப்பளம் தந்தான்! அப்படினு பாடலாமோனு கூட நினைச்சுட்டேன்.  அடுத்த முக்கியமான விஷயம், சத்திரத்தில் போய் இறங்கினதுமே காஃபி கொடுத்தாங்களா! மயக்கமே வந்துச்சு.


சாதாரணமாகக் கல்யாணங்களிலே காஃபியை ஒரே ஒரு டீஸ்பூன் வழிய வழிய ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன டிஸ்போஸபில் கிண்ணத்தில் தானே ஊத்தித் தருவாங்க.  ஒரு வாய் கூட இருக்காது.  இந்தக் கல்யாணத்தில் பிடிச்சுக்க வாகாக அழகான ஒரு கப்பில் கொடுத்தாங்க!  அதை விட ஆச்சரியம் என்னன்னா, காஃபி ஒரு டீஸ்பூன் இல்லை; இல்லை; இல்லவே இல்லை.  கிட்டத்தட்ட 150 மி.லி. இருக்கும் போல!   அதோடு விடலை.  இன்னும் வேணுமானு வேறே கேட்டாங்க.  எல்லா நேரமும் அந்தக் கப்பில் தான் காஃபி கொடுத்தாங்க.  நான், நம்ம ரங்க்ஸ், என் தம்பி, தம்பி மனைவி , கல்யாணப் பையரின் தந்தையான என் அண்ணா, மன்னி எல்லாருமாச் சேர்ந்து அந்தக் கப்பை எங்கே கிடைக்கும், எங்கே வாங்கலாம்னு ஆராய்ச்சி செய்து கேட்டுப் பார்த்தோம்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது பெண்களூரில் கிடைக்காதாம். கோவையில் தான் கிடைக்குமாம்.  அதுவும் மொத்தமாக 1,000 வாங்கணுமாம். மன்னி விலாசம் கேட்டு வாங்கறேன்னு சொல்லி இருக்காங்க.  பார்க்கலாம். :))))


தங்கி இருந்த அறையில் வைச்சு இதைப் படம் பிடிச்சு வைச்சுண்டேன்.  கோவை போனால் ஏடிஎம் கிட்டே சொல்லிக் கேட்டு வைச்சுக்கணும்.  வேறே யாருக்கானும் தெரிஞ்சால் கூடச் சொல்லுங்கப்பா/சொல்லுங்கம்மா! 


Friday, September 13, 2013

ரகசியமாக ஒரு "சில்"லென்ற ஊருக்குப் பயணம்!

சில்லுனு ஒருஊருக்குப் போயிருந்தேன்.  தலையிலே தண்ணீர் ஊத்தி அலசிக் குளிச்சுட்டு வந்து முகம் துடைக்கையில் பளீர்னு ஒரு சிரிப்புச் சிரிச்சால் எப்படி இருக்கும்!  அது போல் மழையில் நனைந்த ஊரே பளீர்னு சிரிச்சுட்டு இருந்தது.  இன்னமும் தலையிலிருந்து சொட்டுகிற நீரைப் போல மரக்கிளைகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த மழைநீர் அவ்வப்போது பன்னீர்த் துளிகளைப் போல மேலே தெளித்துக் கொண்டிருந்தது.  இந்த மழைக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்னு ஊரே பரபர! நாங்க போனது ஒரு கல்யாணத்துக்கு. அங்கே போகப் போகிறேன்னு முன் கூட்டியே சொல்லிட்டா, கிட்டத்தட்ட ஒரு பத்துப்பேரைப் பார்க்க வேண்டி இருக்கும்.  ஆனால் என்னோட சூழ்நிலை எப்படினு தெரியலை.  ஆகவே மிகச் சிலருக்கு மட்டுமே போகும் இடத்தைத் தெரிவிச்சேன்.  திங்களன்று இரவு கிளம்பினோம்.  போறதுக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்கலை.  பேருந்துப் பயணம் தான்.  வோல்வோ, ஏ.சி. பேருந்து.  ஏறி உட்காருகையில் சிரமமாக இருக்கும் போலத் தான் இருந்தது.  அதோடு பாஷையும் புரிஞ்சுக்காத ஓட்டுநர், நடத்துநர்.  இரவுப் பொழுது எப்படிப் போகப் போகுதோனு கவலை.

கரூரில் இருந்து சேலம் வரைக்கும் பாதை மிக மோசம். வோல்வோ பயணமாகவே தெரியலை.  ஆனாலும் ஓட்டுநர் நல்லாவே ஓட்டினார். நடுவில் ஒரு சுங்கச் சாவடியில் சுங்கம் கட்ட நிறுத்தினப்போக் கூட வந்த ஒரு இளம்பயணி, இயற்கையின் உந்துதலுக்கு இறங்க, நாங்களும் கேட்டுக் கொண்டு இறங்கினோம்.  கழிவறை தூரத்தில் இருப்பதால் போகமுடியுமானு ஒரு ஓட்டுநர்/நடத்துநர் கேட்க, இன்னொருத்தரோ, போயிட்டு மெதுவா வாங்க, அவசரம் இல்லைனு சொன்னார்.  ஹிஹிஹி.. அவங்க மொழியில் தான்.  ஆனாலும் புரிஞ்சுண்டேன்.  காலை ஆறரை மணிக்குப் போகும்னு சொல்லி இருந்த பேருந்து காலை ஐந்தரைக்கே செல்லவேண்டிய பேருந்து நிலையம் போக அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடிச்சுச் செல்ல வேண்டிய கல்யாண மண்டபம் சென்றோம்.  சென்னையாக இருந்திருந்தால் அந்த தூரத்துக்குக் கட்டாயமாக 250 ரூபாயிலிருந்து, 300 ரூபாய் வரை ஆகி இருக்கும்.  கல்யாணம் முடிச்சதும், அன்று மாலையே ஏற்கெனவே முடிவு செய்தபடி அருகிலிருந்த ராமஅப்ரமேயர் கோயிலுக்குப் போனோம்.  அங்கே யாரைப் பார்த்தேன்னு நினைக்கிறீங்க? இதோ இவரைத் தான். :))))


கோயிலிலும் படம் எடுக்க அனுமதிக்கவில்லை; :( இவரையும் தனியாப் படம் எடுத்துக்கறேன்னு கேட்டதுக்கும் அனுமதி கொடுக்கலை. :( ஆகவே முன் மண்டபத்தில் மாட்டி இருந்த படத்தை மட்டும் படம் எடுத்துக் கொண்டேன்.  அதுவும் யாருக்கும் தெரியாமல் தான்! அவசரம் அவசரமாக.

எங்கே போயிருந்தேன்னு நினைக்கறீங்க? அந்த ஊர்க்காரங்க கண்டு பிடிச்சுடுவாங்களே!  "பெண்"களூர் தான்.   சென்ற மூன்று நாட்களும் நேரம் சரியாக இருந்தது. முஹூர்த்தம் முடியும் வரை அந்தண்டை, இந்தண்டை நகர முடியலை.  அதன் பின்னர் நேத்து, பிள்ளை, பெண்ணை அவங்க குடித்தனம் வைக்கப் போகும் வீட்டிற்குச் செல்லும்படியாக இருந்தது.  பின்னர் பெண்ணோடு எல்லாரும் மதுரைக்குக் குலதெய்வம் கோயில் செல்வதால் பெண் வீட்டிற்குச் சென்று அவங்களை அழைப்பதுனு நேற்று மாலை நான்கு மணி வரை சரியாக இருந்தது.  நான்கு மணிக்குக் கிளம்பி பெண்களூர் சிடி ஸ்டேஷன் வந்தோம்.  மாலை 6-55-க்கு வர வேண்டிய வண்டி அரை மணி தாமதமாக வந்தது. சென்னையெல்லாம் போக்குவரத்து நெரிசலில் பிச்சை வாங்கணும்.  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நெரிசல்.  ஐயா, சாமி, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் பெண்களூருக்கு வரலைப்பா. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போகக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிடிக்குது, காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை. :(


எங்கானும் உளவுப்படை கண்டு பிடிச்சுடுவாங்களோனு நினைச்சுட்டு இருந்தேன்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. :))))

கோ
கஊ

Thursday, September 12, 2013

கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்லும் பொருள் என்ன? ஒரு பார்வை!

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள்.


 சில வருடங்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில், "Vedhik Science" "Vedhik Maths" என்று இரண்டையும் பற்றி ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை வேளையில் வந்து கொண்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகமே. மிகப் பயனுள்ள ஒர் நிகழ்ச்சி. அதைப் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பார்கள் தற்காலத்திலும் அவை ஏற்கத் தக்கவை என்று. சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:
என்று ஒரு மந்திரம். வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம். வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. 


பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.  


இதை இன்னமும் விரிவாக எழுத நினைச்சேன்.  நேரம் இல்லை. :( அதோடு அவசரம் வேறே. படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டு வைங்க.  மெதுவாப் பார்க்கிறேன். 

Wednesday, September 11, 2013

முண்டாசுக்கவிஞனுக்கு அஞ்சலி!

பாரதியார் நினைவு நாள்


பாரதியாரின் சிட்டுக் குருவி கட்டுரையில் இருந்து சிலவரிகள்:

"இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? "விடு", "விடு", "விடு", என்று கத்துகிறது. இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது.

"விடு விடு விடு: தொழிலை விடாதே, உண்மையை விடாதே, கூட்டை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே,
உள்ளக் கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பங்களை விடு.

சொல்லுவதற்கு இந்த வழி எளியதாய் இருக்கின்றது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னர் இதை வழக்கப் படுத்துதல் அருமையிலும் அருமை!"


"தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்ச்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகு உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ??"

இந்தப் பாட்டுத் தான் என்னை எப்போது உயிர்ப்போடு வைத்திருக்கின்றது என்றால் அதில் சந்தேகம் இல்லை. பலருக்கும் பிடித்த பாட்டும் கூட. ஆனாலும் மனம் பரிதவிப்பில் தவிக்கும்போது இந்தப் பாட்டே நினைவில் வரும். பாரதி இதை எழுதிய சூழ்நிலையும் அப்படித் தானோ என்று தோன்றும். காலத்தை வென்ற கவிஞன் என்பது மிகையில்லை. இன்னும் வரப் போகும் பல தலைமுறைகளும் பயனடையும் வகையில் குறுகிய வாழ்நாட்களுக்குள் இவற்றைப் படைத்த கவிஞனைப் போற்றி வணங்குகின்றேன்.

ஏற்கெனவே இரண்டு,மூன்று வருடங்கள் முன்னர் போட்ட பதிவை மீள் பதிவாக்கி இருக்கேன்.  நேரப் பற்றாக்குறை மட்டுமல்ல.  ஊரிலும் இருப்பேனானு தெரியாது. ஆகவே ஷெட்யூல் பண்ண வசதியாக இதைத் தேர்ந்தெடுத்தேன்.

Monday, September 09, 2013

உங்க வீட்டுக்குப் பிள்ளையார் வந்தாரா?

எங்க வீட்டிற்கும் பிள்ளையார் வந்துட்டார். எப்போவும் பிள்ளையார் சதுர்த்திக்குச் சில நாட்கள் முன்னர் ஆரம்பிச்சுக் குறைஞ்சது ஒரு வாரம் பதிவுகள் போட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படிப் போட நேரம் இல்லை. அதோட எல்லாரும் எழுதறாங்களேனு பேசாம விட்டுட்டேன்.  ஆனாலும் பிள்ளையார் பத்திச் சொல்லாம இருக்க முடியுமா?  இந்த வருஷம் பண்டிகை இல்லைனாலும், பிள்ளையாரை வரவேற்காமல் முடியுமா?  எளிமையான வரவேற்புக்கொடுத்தாச்சு.  பிள்ளையாரும் போதும்னு சொல்லிட்டார்.  எல்லா வீட்டிலேயும் நிறையச் சாப்பிட்டு வயிறு கடபுடவென இருக்காம்.  அதனால் இது போதும்னு சொல்லிட்டார். :))) எளிமையாகப் பாயசம், ரவா கொழுக்கட்டை, (பொரித்தது) வெற்றிலை, பாக்கு, பழம், மாதுளை, தேங்காய் மட்டுமே.  மாதுளை சாப்பிட்டால் ஜீரணம் ஆகும் என்பதால் அது.  வயிற்றுக் கோளாறுக்கு நல்லது. பிள்ளையாருக்கு அஜீரணம் ஆகாமல் இருக்க மாதுளம்பழம். :)  ரவா கொழுக்கட்டை ஒரு வாரம் ஆனாலும் வீணாகாது. நெய்க்கொழுக்கட்டைனும் சொல்வாங்க. எப்படிப் பண்ணறதுனு சாப்பிடலாம் வாங்கலே சொல்லி இருக்கேன்.  பார்த்துக்குங்க.

பிள்ளையாரை மட்டும் தனியா எடுத்தேன்.  லார்ஜ் க்ளிக்கினால் கொஞ்சம் மங்கலாத் தான் வருது.  இன்னமும் காரணம் புரியலை. :(

சாதம், பருப்பு, ரவா கொழுக்கட்டை, பாயசம், பழம், மாதுளை, வெற்றிலை, பாக்கு, தேங்காய் நிவேதனம் பண்ணி கற்பூர ஆரத்தி காட்டியாச்சு பிள்ளையாருக்கு. 


மேல் தட்டு ராமர், கிருஷ்ணர், பிள்ளையாரும் கீழே உள்ள மஹாவிஷ்ணு, ஶ்ரீதேவி, பூதேவியும் சேர்த்து எடுக்க முடியலைனு சொல்லிட்டு இருந்தேன்.  நண்பர் ஒருத்தர் எடுத்தார்.  இதுவும் கொஞ்சம்மங்கலாத் தான் இருக்கு.  க்லாரிடி இல்லை.  ஏன்னு புரியலை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???? நான் எடுக்கிறது தான் சரியில்லையோனு நினைச்சேன்.  நண்பர் சிறந்த ஃபோட்டோ கிராபர். அவர் எடுத்ததும் இப்படித் தான் வந்திருக்கு. என்னனு திரும்பி வந்து தான் பார்க்கணும். :( லென்ஸும் க்ளீன் பண்ணியாச்சு. படம் எப்படித் தெரியுதுனு உங்க கருத்தைப் பதிவு பண்ணுங்கப்பா. காமிராவிலே ஒண்ணும் பிரச்னை இல்லை.  ஏன்னா எடுத்ததும் திரும்பப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  பிகாசாலே ஏத்தி இங்கே போட்டால் தான் மங்கித் தெரியுது. :(


எல்லாருக்கும் பதில் கொடுக்க தாமதம் ஆகும்.  அது வரைக்கும் பிள்ளையார் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா இங்கே போங்க எல்லாரும்.  எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0704gs_pillaiyar.php கிட்டத்தட்ட 38 கட்டுரைகள் இருக்கின்றன.  நான் வர வரைக்கும் படிங்க.  எல்லாருக்கும் தேர்வு, மார்க் எல்லாம் உண்டு. :))))) டாட்டா!  லிங்கை என்ன அப்படியே கொடுத்திருக்கேன்னு நினைக்காதீங்க.  லிங்க் போறதில்லை. மார்க்கி போகுது. :( கணினியிலே முயன்று பார்க்கணும். மடிக்கணினியிலே லிங்கே போறதில்லை. 

Sunday, September 08, 2013

கெட்டி மேளம் கொட்டக் கொட்ட! ஒரு சில மந்திரங்களின் அர்த்தங்கள்.

ஆச்சா, பெண் புடைவை கட்டிக் கொண்டு வந்தாச்சு.  இப்போச் சில சடங்குகளைப் பிள்ளை செய்யணும். திருமாங்கல்யதாரணம் நடக்கப் போகிறது.  கூறைப்புடைவை கட்டிக் கொண்டு வந்த பெண் தன் தகப்பன் மடியில் அமர்ந்து கொள்கிறாள்.  இதுவும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கணும்.  அந்தக்காலங்களில் சின்னக் குழந்தைகளைப் பிடித்துத் திருமணம் செய்வித்திருக்கின்றனர்.  குழந்தைகள் ஓடிவிடாமல் இருக்க (ஹிஹிஹி) குழந்தையைத் தந்தை மடியில் வைத்து அமுக்கிக் கொண்டு இருந்திருக்கணுமோ?  அது ஒரு கட்டாயமாகவே ஆகிவிட்டது.  இப்போ மணமேடையில் பெண் வீட்டுப் பிள்ளை வீட்டு முக்கியஸ்தர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு திருமாங்கல்யதாரணத்தைப் பார்க்க விடமாட்டார்கள்.  பெண் புடைவை கட்டிக் கொண்டு வரதுக்கு முன்னாலேயே எல்லார் கிட்டேயும் புடைவை, திருமாங்கல்யத்தைக் காட்டி ஆசிகள் வாங்கி இருப்பாங்க.  அதே போல் பெண்ணின் மேல், பிள்ளையின் மேல் பொழியவும் மலர்கள், உதிரிப்பூக்கள், அக்ஷதை ஆகியன வழங்கப்படும்.  இப்போல்லாம் மேலே பலூன்கள் கட்டிக் குறிப்பிட்ட நேரத்தில் அதை வெடிக்கச் செய்து பூக்கள், கலர்ப்பேப்பர்கள் எனக் கொட்ட வைக்கின்றனர்.  அதே சமயம் சத்திரத்துக்கு வெளியே பெண்ணின்/பிள்ளையின் நண்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலாக்கள் எல்லாம் வெடிக்கிறதும் உண்டு.  இவ்வளவு அமர்க்களத்துக்கும் இந்தத் தாலி கட்டுதல் வெறும் சம்பிரதாயமான ஒன்றே.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.  ஒருவேளை தமிழ் சினிமா, தமிழ் சீரியலின் தாலி சென்டிமென்டினால் முக்கியத்துவம் அடைந்ததோ என்னமோ நாம் அறியோம் பராபரமே.  அப்போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துநானே என்பது மந்திரமும் அல்ல.  ஒரு ஸ்லோகமே.  ஹிஹிஹி, ஆனால் இந்தத் தாலி கட்டி முடிஞ்சதுமே உற்றார், சுற்றார் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதோடு, பெண்ணின் கையைப் பிள்ளையின் கையையும் குலுக்கிக் கொண்டு பரிசுகளைக் கொடுத்து அவர்களைத் திருமண சாஸ்திரபூர்வமான சடங்குகளைச் செய்ய விடுவதில்லை.  ஆகவே இப்போதெல்லாம் தாலி கட்டும் முன்னர் மேள சப்தம், கூடி இருப்போர் பேசும் சப்தம் அனைத்தையும் நிறுத்திவிட்டு அறிவிப்புச் செய்கிறார்கள்.  பாணி கிரஹணம் முடிந்து சப்தபதி முடிந்து, பெண்ணும், பிள்ளையும் தனியாக ஒரு நாற்காலியில் அமர வைக்கப்படுவார்கள்.  அப்போ உங்கள் சந்தோஷத்தைத் தெரிவிக்கலாம்னு சொல்லிடறாங்க.  எனெனில் பாணிகிரஹணம் என்னும் முக்கிய நிகழ்ச்சி சுப லக்னைத்தில் நடைபெற வேண்டும்.  சாஸ்திரப்படியும், தர்மப்படியும் இப்போத் தான் பெண்ணின் கையைப் பிள்ளை பிடிக்க வேண்டும்.  அதே போல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே கன்யாதானத்தின் பின்னரே.  தாலியில் பிள்ளை ஒரு முடிச்சுப் போட்டதும் பாக்கி இரு முடிச்சுக்களைப் பிள்ளையின் சகோதரி போடுவது ஒரு சம்பிரதாயமே. ஆச்சு, திருமாங்கல்யதாரணம் ஆச்சு.  இப்போ மந்திரம் சொல்லி பெண்ணின் இடுப்பிலே தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடுவாங்க.  இப்போத் தான் பெண்ணின் கையைக் குவித்து வைக்கச் சொல்லிக் கட்டை விரலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அக்னி கிட்டே அழைத்துச் செல்வார் கட்டைவிரலை ஏன் சேர்த்துப் பிடிக்கணும் என்றால் கட்டை விரலை மட்டும் ஆண்பாலில் "அங்குஷ்ட" என்பார்கள்.  மற்ற நான்கு விரல்கள் பெண்பாலில், "அங்குளீ" எனப்படும்.  ஆகவே ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் இரண்டும் வேண்டும் எனில் எல்லா விரல்களையும் சேர்த்துப் பிடிக்க வேண்டும் எனவும், பெண் மட்டும் வேண்டும் எனில் நான்கு விரல்களையும், பிள்ளை மட்டும் எனில் கட்டை விரலை மட்டும் எனச் சொல்வார்கள்.   ஆனால் பொதுவாக எல்லா விரல்களையுமே சேர்த்தே பிடிக்கச் சொல்வார்கள்.  நாம் தியானம் செய்கையில் சின்முத்திரை காட்டி அமர்வது, சக்தியும் சிவமும் சேர்ந்த ஐக்கியத்தைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 


 புதுப்பாயிலே பிள்ளையின் வலப்பக்கம் பெண் அமர்ந்து அக்னிகாரியம் ஆரம்பிச்சதும் ஹோமம் செய்வார்கள்.  எப்போவுமே இம்மாதிரியான வைதீக காரியங்கள் செய்கையில் பெண் பிள்ளையின் வலப்பக்கமாகவே இருக்க வேண்டும்.  மற்ற நேரம் இடப்பக்கம்.  அக்னியின் எதிரே நிற்கும் இந்தப் பெண் புனிதமானவள், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும், கணவனோடும் குழந்தைகளோடும் இவள் வாழ்க்கை வளம்பெற வேண்டும் எனப் பிரார்த்திப்பார்கள்.  இப்போத் தான் அக்னி பகவானிடம் வேண்டிப்பாங்க.  பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழ்கனு கேள்விப் படறோமில்லையா?  அப்படித் தான்.  ஆனால் இங்கே பதினாறு குழந்தைகள்னு அர்த்தமில்லை.  அதோடு இந்த மந்திரங்கள் வேறே பலராலும் விமரிசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.  அதன் உண்மையான அர்த்தம் முன்னேயே என்னோட இந்த வலைப்பக்கத்தில் எழுதி இருக்கேன்.  அதை மீள் பதிவு செய்து விடுகிறேன்.  நாளை பார்க்கலாம். 

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து கல்யாணம் வரை உள்ள காலத்தை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு தேவன் அவளுக்குப் பாதுகாவலனாக இருப்பதாய்ச் சொல்வார்கள்.  இது எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.  முதல் பிரிவின் பாதுகாவலன் சோமன், இரண்டாவது பிரிவின் பாதுகாவலன் கந்தர்வன், மூன்றாவது பிரிவின் பாதுகாவலன் அக்னியே ஆவான்.  இதன் பின்னரே பெண்ணானவள் கணவனை அடைகிறாள்.  இந்த ஒவ்வொருவருக்கும் அக்னி மூலமாகவே கணவனும், மனைவியுமாகச் சேர்ந்தே தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இப்போது 16 விதமான கோரிக்கைகளைக் கல்யாண மணமகன் வைக்கிறான்.  அவையாவன:

1.சோமனுக்கு நன்றி தெரிவித்து ஹவிர் அளிப்பது

2. கந்தர்வனுக்கு நன்றி தெரிவித்து ஹவிர் அளிப்பது

3. அதே போல் அக்னிக்கும் நன்றி, ஹவிர் அளிப்பது

4. பிறந்த வீட்டிலிருந்து, புதிய வீடான புக்ககம் வந்திருக்கும் இந்தப் பெண்ணை சந்தோஷமாக வைக்கும் தகுதியை வேண்டுவது.  பிறந்த வீட்டு சந்தோஷம் குறையாமல் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பிரார்த்திப்பது.

5. இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க உதவிய இந்திரனுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவனால் சகல செளகரியங்களும் உண்டாகப் பிரார்த்திப்பது.

6. இல்லறத்த நல்லறமாக நடத்தவும், ஆரோக்கியமான குழந்தைகளைச் சுலபமாகப் பெற்றெடுக்கவும் பிரார்த்திப்பது. ஒரே குழந்தையோடு நிற்காமல் பல குழந்தைகள் பிறக்கவும், எல்லாவற்றிற்கும் மேல் மனைவியின் கடைசிக் குழந்தையாகக் கணவனை அவள் நினைக்கவும் பிரார்த்திப்பது.

7. ஏற்கெனவே வியாதிகள் இருந்தாலோ, இனி வியாதிகள் தோன்றாவண்ணமோ பாதுகாக்க வேண்டுவது.  குழந்தைகள் மூலமும் மணப்பெண்ணுக்குத் துன்பம் வராமல் பாதுகாக்க வேண்டுவது.

8. இருவரும் இனி ஒருவர் என்பதால் இருவரின் பிரார்த்தனையும் இனி ஒன்றே.  இந்த அக்னி சாக்ஷியாக கிருஹஸ்தன் ஆன மணமகன் தன்னிடம் உள்ள குறைகளை நீக்கி நிறைவானவனாக ஆக்கும்படியும் பெண்ணின் தேஜஸ் வளரவும், பெண்ணைச் சந்தோஷமாக வைக்கும்படியான ஆரோக்கியத்தைத் தனக்குத் தரும்படியும் பிரார்த்திப்பான். நீண்ட ஆயுளும், அறிவும், ஆரோக்கியமும் உள்ள குழந்தைகளையும் வேண்டுவான்.

9. எத்தனை சொத்து, செல்வம், நிலம், நீச்சு இருந்தாலும் குழந்தைச் செல்வத்துக்கு ஈடாகாது.  அத்தகைய குழந்தை பாக்கியம் இருவருக்கும் ஏற்பட வேண்டிப் பிரார்த்திப்பது. அதோடு தன் குழந்தைகளுக்கும் குழந்தை பிறந்து அதையும் நாங்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும் அனுகிரஹத்தையும் வேண்டுவது.

10. மணமகள் இரவில் கணவனோடு வாக்குவாதமோ, சண்டையோ செய்யாமல், தலையை விரித்துப் போட்டுக்கொண்டு அழுது கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்படியாகவும் வேண்டிக்கொள்வதோடு அவளை அந்த நிலைக்குத் தள்ளும்படியான ஈன நிலைக்குத் தன்னைத் தள்ளாதிருக்கவும், என்றென்றும் மனைவியை மகிழ்வோடு வைத்திருக்கும் சக்தியையும் கொடுக்கும்படி வேண்டுவது.

11. இன்று திருமண நாள்.  இன்றிருக்கும் அதே சந்தோஷம் அவள் என்னோடு வாழும் எல்லா நாட்களிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்.  அவள் கிழவியானாலும் அவள் மனம் மகிழ்ச்சியோடேயே இருக்க வேண்டும்.  அவள் மனம் திருப்தியோடு கிளை, கிளையாக வளரும் வாரிசுகளைப் பார்த்து மகிழ வேண்டுவது.

12.  இந்தப் பெண்ணின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு தேவர்கள் காக்கின்றனர். நான் கொடுத்த கூறைப்புடைவையை இவள் உடுத்தியதிலிருந்து இவளை பிரஹஸ்பதி எனும் குரு காத்து வருகிறான்.  இவளை நாலாபக்கங்களில் இருந்தும் விஸ்வே தேவர் குழு காத்து வரட்டும்.

13. குழந்தையே பிறக்காத மலடியாக இவளை ஆக்காதே.  அல்லது அகால மரணம் அடையும் குழந்தைகளைப் பிறக்க வைக்காதே. குழந்தைகளை நினைந்து இவள் கவலைப்படும்படியும் செய்யாதே.  வாடிய பூவைத் தூக்கி எறிவது போல் இவள் துயர்களும் தூக்கி எறியப் பட வேண்டும்.

14. வருணனிடம்  தான் செய்த பிரார்த்தனைகள் மூலம் பல்வேறு தேவர்கள், தேவதைகள் மூலம் கிடைத்த பொருட்களை எல்லாம் நிரந்தரமாக்கி இழப்பில்லாமல் இருக்கப் பிரார்த்திப்பது.

15. அக்னியிடம் மட்டுமில்லாமல் மற்ற தேவர்களிடமும் கேட்டதற்காக அக்னியைக் கோபம் கொள்ளாதிருக்கப் பிரார்த்திப்பது.  மேலும் மற்ற தேவர்களையும் கேட்டதற்காக அக்னியும் சும்மா இருக்காமல் மற்ற தேவர்களோடு சேர்ந்தே அருள் புரியப் பிரார்த்திப்பது.  வருணனும், அக்னியும் மிக முக்கியம், நெருப்பும், நீரும் இன்றி இவ்வுலகு இல்லை.  உற்பத்தியால் ஏற்படும் வளர்ச்சி அக்னியும் வருணனும் சேர்ந்தால் தான் கிடைக்கும்.  ஆகவே  இருவருடைய அருளையும் வேண்டிப் பிரார்த்திப்பது.

16. சநாதன தர்மத்தின் ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னி.  இடையேயும் அக்னி.  ஆகவே பிறக்கையில், வாழ்கையில், போகையில் என அக்னி இல்லாமல் வாழ்நாள் கழிவதில்லை.  எனவே மணமகனும், மணமகளும் ஜீவிக்கும் வரையிலும் கூட இருந்து அனுகிரஹம் செய்யும்படி அக்னியை வேண்டுவார்கள்.

இப்போது அடுத்த பதிவில் விமரிசனத்துக்கு உட்பட்ட மந்திரத்தையும் அதன் அர்த்தத்தையும் காணலாம். 


பதிவுக்கு உதவிய பதிவுகள்:  தெய்வத்தின் குரல், காமகோடி தளம்.

விவாஹம்: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

http://anmikam4dumbme.blogspot.in/2008/08/blog-post_07.html

http://anmikam4dumbme.blogspot.in/2008/08/2.html

மேலே உள்ள  இரண்டும் திரு திருமூர்த்தி வாசுதேவனால் எழுதப்பட்ட பதிவுகள். 

Friday, September 06, 2013

குணமிருக்கும் குலமகளே வா, வா!


வல்லி நினைவூட்டினாங்க.  கல்யாணப் பிள்ளை காசியாத்திரைனு செல்கையில் பிள்ளையின் அம்மா, அப்பா, மாமாக்கள், அத்தைகள் போன்ற உறவினரும் கூடச் செல்வார்கள்.  பிள்ளையின் மாமாவோ அத்தை கணவரோ குடை பிடித்துச் செல்வார்கள்.  பிள்ளையின் அம்மா கையில் கூரைப்புடைவை மற்றும், திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறு,  முஹூர்த்தப் பருப்புத் தேங்காய் உள்ள  தட்டு இருக்கும்.  கனம் அதிகமாக இருந்தால் பிரிச்சு பருப்புத் தேங்காயை ஒரு தட்டிலும், புடைவை, திருமாங்கல்யம், பெண்ணுக்கு பிள்ளை வீட்டினர் நகை போட்டால் அவை இன்னொரு தட்டிலும் வைத்து முக்கிய உறவினர் எடுத்துச் செல்வார்கள்.  பிள்ளையின் அம்மா கையில் கட்டாயமாய் கூறைப்புடைவை இருக்கும். பிள்ளையின் சகோதரியோ மாலை தன் சகோதரனும், சகோதரன் மனைவியும் நலுங்கில் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருட்களோடு, சகோதரன் மனைவிக்காகப் புதுச் சேலையும் எடுத்து வைத்து அவற்றை ஒரு தட்டில் வரிசைப்படுத்தி அலங்கரித்து எடுத்து வருவாள்.   இவற்றோடு எல்லாரும் இப்போ மணமேடைக்குப் போயாகிவிட்டது.  இப்போ கன்யாதானம் நடைபெறப் போகிறது.  அனைவரும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

கல்யாணத்திற்கு வந்திருக்கும் நிறைந்த சபையில், பெரியோர்களின் முன்னிலையில் வேத மந்திரங்களின் கோஷத்தோடு நடைபெறும் கன்யாதானம். பெண் இருந்தாலே வீடு முழுமை பெறும் என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை.  இதைத் தான் மநுவும் சொல்லி இருக்கிறார்.  க்ருஹத்தில் முக்கியமானவள் க்ருஹணீ என்னும் பெண்ணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கார்.  இருங்க, இருங்க, மநு அப்படி எல்லாம் சொல்லலைனு சொல்றவங்களுக்கு!  அதைத் தனியா வைச்சுப்போமா? மநு சொன்னதை யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை என்பதே உண்மை என்பதோடு இப்போ நிறுத்திப்போம். பெண்ணின் அப்பா பிள்ளையாரை வேண்டிக்கொண்டு மஹாவிஷ்ணுவைப் பூஜிப்பார்.  இங்கே இப்போது மாப்பிள்ளை தான் மஹாவிஷ்ணு சொரூபம்.  ஆகவே மாப்பிள்ளைக்குத் தான் ஆசனம் கொடுத்து வரவேற்று, பெண்ணின் அம்மா துணை செய்ய அவர் பாதங்களை அலம்பித் துடைத்து, பாலிட்டு, சந்தனம் குங்குமம் வைப்பார்கள்.  இதுக்கு எனப் பாலிடும் கிண்ணம்னு வெள்ளியிலே வாங்கி மாப்பிள்ளைக்குக் கொடுத்திருப்பாங்க. பின்னர் கிழக்கே பார்த்துப் பெண்ணின் அப்பா நிற்கப் பிள்ளை எதிரே மாமனாரைப் பார்த்துக் கொண்டு நிற்பார். பெண் தந்தை மடியில் அமர்ந்திருப்பாள். பெண்ணின் அம்மாவும் அருகே இருப்பார்.

இப்போக் கன்யாதானம் நடைபெறுகையில் பெண்ணின் பெயரையும், பிள்ளையின் பெயரையும் மூன்று முறை சொல்லுவார்கள்.  மூன்று முறை சொல்வதன் மூலம் அது முழுமை பெறுகிறதாக ஐதீகம்.  அனைத்துப் பெரியோர்களுக்கும் தெரியும்படியாகப் பெண்ணின் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயரை வரிசைக்கிரமமாகச் சொல்வார்கள்.  உதாரணமாக எங்க பெண்ணின் கல்யாணத்தில், என் மாமனாரின் அப்பா பெயர் ஶ்ரீநிவாசன்.  ஆகவே ஶ்ரீவத்ஸ கோத்திர, ஶ்ரீநிவாச சர்மாவின் கொள்ளுப் பேத்தியும், குஞ்சிதபாதம் ஐயரின் பேத்தியும், சாம்பசிவ ஐயரின் பெண்ணும் ஆன என்று சொல்வார்கள்.    அதே போல் பிள்ளை தரப்பிலும் பிள்ளையின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயர்கள் சொல்லி இன்னாரின் கொள்ளுப்பேரன், இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என அறிவிக்கப்படும்.  இவருக்கு எங்கள் மகளை முழு மனதோடு தாரை வார்த்துக் கொடுக்கிறேன்னு அப்பா சொல்வார்.  மாப்பிள்ளைப் பெண்ணை தானம் வாங்கிக் கொள்வார். பின்னர் புதுப்பாயில் அமர்ந்து கொண்டு அக்னி வளர்க்கச் செல்வார்கள்.  பெண்ணின் அப்பா மாப்பிள்ளைக்கு மதுபர்க்கம் என்னும் தயிரில் தேன் கலந்த திரவத்தைக் கொடுப்பார்.  பசுமாடு தானம் கொடுக்கணும்னும் ஐதீகம்.  ஆனால் கொடுக்கிறதில்லை.  இந்த மதுபர்க்கம் தான் மாப்பிள்ளைக்கு ஆகாரம்.  என்றாலும் சிலரோட சம்பிரதாயப்படி இதன் பின்னர் மாப்பிள்ளைக்குச் சாப்பிடவும் கொடுப்பாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய  நாமம் தான்! :)))) அடுத்து மாப்பிள்ளைப் பெண்ணுக்குச் சில சுத்தி சமஸ்காரங்கள் செய்யணும்.அப்போது பெண்ணைத் தகப்பன் மடியில் அமர்த்தி இருப்பார்கள்.  மாப்பிள்ளை மந்திரங்கள் சொல்லிக் கொண்டே தர்ப்பைப்புல்லால் பெண்ணின் புருவ மத்தியைத் தடவி அதை மேற்குத் திசையில் போடுவார். தர்ப்பையால் செய்யப்பட்டதொரு பிரிமணையை/ வளையத்தைப் பெண்ணின் தலையில் வைத்து அதன் மேல் நுகத்தடியை வைப்பார்கள். அதன் மேல் பெண்ணின்கழுத்தில் கட்டப்படவிருக்கும் தாலிக்கயிற்றில் திருமங்கல்யம் கோர்க்கப்பட்டிருக்கிறதை தங்கத் தாலியை அதிலுள்ள இடைவெளியில் வைத்து ஐந்து முறை மந்திரங்கள் ஜபிக்கப்பட்ட நீரை ஊற்றுவார்கள்.  இதை புரோகிதர்கள் சொன்னாலும் அந்த மந்திரங்களைத் திரும்பச் சொல்லிச் செய்வது எல்லாம் கல்யாண மாப்பிள்ளையே.  மந்திரங்களின் பொருள் என்னவென்றால், இந்தத் தங்கம் ஒன்று, பத்தாக நூறாக உன் குடும்பத்தில் பெருகட்டும்.  மந்திரங்களால் ஜபிக்கப்பட்ட இந்தப் புனித நீரால் உன் திருமண வாழ்க்கை/இல்லற வாழ்க்கை மேம்படட்டும். உன் குடும்பம் செழுமை பெற்று வளரட்டும்.  உன் கணவனுக்கு உன்னை நீ அர்ப்பணிப்பாயாக!

ஒரு சிலர் தங்கம் மட்டும் வைத்தால் போதும்.  தாலியை வைக்கணும்னு இல்லைனு சொல்றாங்க.  ஆனால் அந்த நேரத்தில் சுலபமாகக் கிடைப்பது தங்கத் தாலி தான் என்பதால் தங்கத்தாலியையே வைக்கிறாங்கனு நினைக்கிறேன். பின்னர் மணமகன் மந்திரங்கள் ஓதப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட கூறைப்புடைவையைப் பெண்ணிற்குக் கொடுப்பார்.  அதாங்க கூறைப்புடைவை.  அந்தப் புடைவையைக் கட்டிக் கொண்டு பெண் வந்த பின்னரே மற்ற சம்ஸ்காரங்கள் ஆரம்பம்.  இந்தக் கூறைப்புடைவையைக் கட்டிக்கொள்ள/அதாவது கட்டிவிடப் பெண்ணின் நாத்தனாரைத் தான் அனுப்புவாங்க.  இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் இம்மாதிரி நெருங்குவதன் மூலம், உறவின் அந்நியோந்நியம் இன்னும் இறுகும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.  இப்போல்லாம் இது கட்டிவிடனு தனியாகப் பணம் கொடுத்து ஆளை வரவழைக்கிறாங்க.  இன்னும் ப்யூட்டி பார்லர் காரங்களுக்குக் கூறைப் புடைவை கட்டிவிடத் தெரியலை.

ஆச்சு, பெண் புடைவை கட்டிக்கப்போயாச்சு.  இங்கே எல்லாரும் வெட்டி அரட்டை அடிக்காம ஏதோ வேதகோஷம் சொல்லிட்டு இருக்காங்க.  அதுவரை நல்லது.  பெண் புடைவை கட்டிண்டு வரட்டும்.  இப்போத் தான் அனைவராலும் பல முறை விமரிசிக்கப்பட்டு ஏற்கெனவே இதுக்கு விளக்கம் கொடுத்த முக்கியமான மந்திரங்கள் வருகின்றன. அதை கொஞ்சம் விரிவாகவே அடுத்த பதிவில் பார்ப்போம்.

மற்ற சமூகங்களில், முக்கியமாக வைணவர்களில் பெண்ணின் தலை அலங்காரம் ஆண்டாள் கொண்டையாக மாற்றப்படும்.  ஆண்டாளைப் போல் வலப்பக்கம் கொண்டை போட்டுப் பின்னால் பின்னித் தொங்கவிட்டு அலங்கரித்து ஒன்பது கஜம் புடைவை கட்டிப் பெண்ணை அழைத்து வருவார்கள்.  தெலுங்கு பிராமணர்களிலும், மற்ற சில சமூகங்களிலும் வெள்ளையில் மஞ்சள் நீரால் நனைத்த நூல் புடைவையை உள் கச்சம் போட்டு இடப்பக்கத் தலைப்போடு கட்டிக் கூட்டி வருகிறார்கள்.  நம் தமிழ்நாட்டிலேயே பிராமணரல்லாத மற்ற சமூகங்களில் கொஞ்சம் அரக்கு, கொஞ்சம் பிங்க் என்று சொல்லும்படியான ஒரு வர்ணத்தில் நூலால் ஆன கைத்தறிப் புடைவையைத் தான் கட்டிக் கொள்கிறாள் மணப்பெண்.  தமிழ்நாட்டுப் பிராமண சமூகத்தில் மட்டுமே ஆடம்பரமாகப் பட்டுப்புடைவை கட்டிக் கொள்கின்றனர்.  :))))))


Monday, September 02, 2013

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே!

இந்த மாலை மாற்றுதல், ஊஞ்சல், பெண்ணின் கையை மாப்பிள்ளை பிடிப்பது போன்றவை அனைத்துமே பாணிகிரஹணத்துக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்பது கலாசாரப் பற்றுடைய வைதீக/ஆன்மிகவாதிகளின் கருத்து.  ஆனால் பிராமண சமூகத்தைத் தவிர மற்ற சமூகங்களில் இவை எல்லாம் பின்னாலேயே நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. பிராமணர்களில் மட்டுமே இவற்றை முன்னால் நடத்திவிடுகின்றனர். இனி நாம் நடத்தும் கல்யாணத்தைப் பார்ப்போம்.  பெண்ணும், பிள்ளையும் மாலை மாற்றிக் கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு ஊஞ்சலுக்குச் செல்கின்றனர்.  ஊஞ்சல் சிறிது நேரம் ஆட்டப்பட்டு கன்னூஞ்சல் பாட்டுக்கள் குழுமியிருக்கும் உறவினராலும், நாதஸ்வரக் காரர்களின் நையாண்டி மேளத்தாலும் பாடப்படும். பின்னர் மீண்டும் புரோகிதர் நேரப் பற்றாக்குறையை நினைவூட்டுவார்.  சில கல்யாணங்களில் முஹூர்த்தம் நடக்க நிறையவே நேரம் இருக்கும். அப்போது கொஞ்சம் சாவகாசமாகவே அனுபவித்துச் செய்வார்கள்.  பலருக்கும் அவரவர் திருமண நினைவுகள் வரும்.  திருமணம் ஆகாதவர்களுக்கோ அவரவர் திருமணத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்துக் கொள்வார்கள்.

இப்போது பெண் வீட்டு, பிள்ளை வீட்டின் மூத்த சுமங்கலிகளால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருஷ்டி கழிக்கப் படும்.  இதைப் பச்சைப்பிடி சுற்றுதல் என்பார்ர்கள். இது ஒரு விதத்தில் இரு வீட்டுப் பெண்டிரும் கலந்து கொள்ளும் நிகழ்வாகவும், அதே சமயம் சாஸ்திர சம்மதம் பெற்றும் விளங்குகிறது.  ஆபஸ்தம்ப ரிஷி திருமணங்களில் ஆண்கள் செய்யும் காரியங்கள் மட்டுமில்லாமல் பெண்கள் பங்கு பெறும் விதமாகவும் இருந்தாக வேண்டும் எனக் கூறி இருப்பதாகச் சொல்வார்கள். இன்னொரு விதத்தில் பஞ்சபூதங்களின் பிரதிநிதியாக மாலை, ஜலம், தீபம், பாடல்கள், அன்ன உருண்டைகள் ஆகியவற்றின் மூலம் பெண்ணையும், மாப்பிள்ளையையும் இயற்கையோடு இயைந்ததொரு இல்வாழ்வுக்குத் தயார் செய்து, இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளில் இருந்து காக்கும்படி வேண்டிக் கொண்டு பஞ்சபூதங்களையும் பிரார்த்திப்பதாய்க் கொள்ளலாம்.  இதில் நீர் ஆகிய அப்பு செல்வத்தையும், தீபம் ஆகிய அக்னி அறியாமையை அகற்றி ஜோதியாகிய அறிவையும்/ஞானத்தையும், மலர்கள் விண்ணையும், பாடல் வாயுவையும் குறிப்பதோடு நீண்ட ஆயுளையும், திறமையையும் ஏற்படுத்தும்.  அன்ன உருண்டைகளோ பூமியில் விளையும் உணவுப் பொருட்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு மணமக்களின் வாழ்க்கையில் செழிப்பும், உறுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டும்.

இதிலே சொல்லி உள்ளபடி முதலில் பெண்ணின் அம்மா, பிள்ளையின் அம்மா இருவரும் மணப் பெண், மணமகன் கால்களில் பால் தெளித்து, அவர்கள் இருவருக்கும் பால், பழம், சர்க்கரை சேர்த்து உண்ணவும் கொடுப்பார்கள்.  அதன் பின்னர் மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவற்றால் பிடித்த அன்ன உருண்டைகளை வைத்துப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சுற்றிப் போடுவார்கள்.  பிரக்ஷிணமாக மூன்று முறையும், அப்பிரதக்ஷிணமாக மூன்று முறையும் சுற்றுவார்கள். எல்லாத் திசைகளிலும் போடுவார்கள்.  ஒரு சிலர் விளையாட்டாக அங்கே நிற்பவர் மேல் விட்டு எறிவதும் உண்டு. ஒரே கலகலப்பும், விளையாட்டுமாக இருக்கும். பெண் வீட்டுக்காரர்கள் பிள்ளை வீட்டுக் காரங்களையும், பிள்ளை வீட்டுக்காரங்க பெண் வீட்டினர் மேலும் எறிந்து விளையாடுவதுண்டு.  பெண் வீட்டினரில் ஐந்து பேர் எனில், பிள்ளை வீட்டினரிலும் ஐந்து பேர் சுற்றுவார்கள்.  சுற்றி முடிந்ததும், பெண்ணின் அம்மா இதற்கென வாங்கி இருக்கும் அரிக்கும் சட்டி, அல்லது திருப்பத்தூர் வாணாயில் விளக்கின் முகத்தை வைத்துப் புடைவைத் தலைப்பால் மூடிக் கொண்டு செல்ல, பிள்ளையின் அம்மா கல்யாணத்துக்கு வாங்கி இருக்கும் செம்பில் நிறைய நீர் எடுத்துக் கையால் சுற்றிக்கொண்டே பின்னே வர, பெண்ணின் அத்தை, பாட்டி அல்லது பிள்ளையின் அத்தை, பாட்டி எவரேனும் ஒருவர் அல்லது இவர்களில் எவர் மூத்தவரோ அவர் பின்னே செல்வார்.


அப்போது பெண்ணின் கையிலும், பிள்ளையின் கையிலும் மட்டைத்தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், 11௹, 21௹, 51௹ என அவரவர் சக்திக்கு ஏற்பப் பணம் கொடுத்திருப்பார்கள்.  சுற்றி முடிந்ததும், மிச்சம் இருக்கும் சாத உருண்டைகளை அந்தச் செம்பு நீரில் கரைத்துப் பெண்ணின் அம்மாவும், பிள்ளையின் அம்மாவும் ஆரத்தி போல் சுற்றிக் கீழே கொட்டுவார்கள்.  பெண், பிள்ளை இருவர் கையிலும் கொடுக்கப்பட்ட தேங்காய் வெற்றிலை, பாக்கை மேளகாரர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அதன் பின்னர் பொதுவாகப் பெண்ணின் கையைப் பிள்ளை பிடித்துக் கொண்டு தான் உள்ளே மணமேடைக்குச் செல்வது வழக்கம்.  என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட ஊர்களில் முக்கியமாய் வட ஆற்காடு மாவட்டம்/சேலத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் கையைப் பெண்ணின் மாமியாரும், பிள்ளையின் கையைப் பிள்ளையின் மாமியாரும் பிடித்துக் கொண்டு மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.  இது பிராமண சமூகத்தில் நடப்பது.  மற்ற சமூகங்களில் பிள்ளையின் சகோதரியும், அவள் கணவரும் முறையே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள். இனி வைதீகர்களின் வேலைகள் ஆரம்பிக்கும்.  அதைக் கொஞ்சம் விரிவாகவே பார்க்கப் போகிறோம்.  இது தான் மிக முக்கியமானது. :)

Sunday, September 01, 2013

கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிந்ததும் விருந்து மெனு!

அரிசி, தேங்காய் சேர்த்து அரைத்த வெல்லப்பாயசம்

தயிர்ப் பச்சடி

ஸ்வீட் பச்சடி

வாழைக்காய் கறி(பாரம்பரிய முறையில்)

பீன்ஸ் பருப்பு உசிலி

அவியல்

வாழைக்காய்  வறுவல்/சேனை வறுவல்

அப்பளம்

பதிர்பேணி சுண்டக் காய்ச்சிய குங்குமப் பூப் போட்ட பாலோடு

முட்டைக்கோஸ் வடை

லட்டு

வாழைப்பழம்

மாங்காய் ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

கத்திரிக்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், குடைமிளகாய் சாம்பார்

மோர்க்குழம்பு, வெண்டைக்காய் போட்டு

பைன் ஆப்பிள்  ரசம்

மோர், தயிர் மண் குடுவைகளில்

படத்துக்கு நன்றி: கூகிளார்!

எல்லாரும் இருந்து நல்லா வயிறாரச் சாப்பிட்டுட்டுப் போங்கப்பா


கன்னூஞ்சல்  ஆடி  இருந்தார்(2)
காஞ்/ச/ன   மாலை  மன மகிழ்ந்தார் (2)
பொன்னூஞ்சலில்  பூரித்து  பூஷணங்கள் தரித்து(2)
மன்னாதி  வேங்கடேஷன்  அலமேலு  மங்கையுடன்  (கன்னூ)
(ஈஸ்வரனார்  இடத்தில்   ஆ/சை/கள்  ரொம்ப  வைத்து

அசைந்து  சங்/கி/லி   ஆட  உசந்து  ஊர்வசி  பாட
இசைந்து  தாளங்கள்  போட/ஈஸ்வ/ர/னார்  கொண்டாட (கன்னு)

உத்தமி  பெற்ற  குமாரி/நித்ய ஸர்வா/லங்காரி
பக்தர்கள்  பாப  ஸம்ஹாரி  பத்ம  /முக/ஒய்/யாரி     (கன்னூ

லாலி   சாரங்கேச   லாலி   சாரங்கேச

லாலி  ஜகதீசா  லாலி   ஜகதீசா
லாலி  கோ/மள   வல்/லீசா

சாம முதல்   வேதங்களை (2)  சங்கிலியால்  கட்டி(2)
தாளமுத்து  மாலைகளை   (2) சரம் சரமாய் பூட்டி     (லாலி)

ஓங்கார  ப்ரணவம்தனை   (2)  ஊஞ்சலாய்  அமைத்து
உத்தமர்க்கு  உத்தமராம்(2)  ஆடீர்   ஊஞ்சல்

பிள்ளை  --இந்த  பிள்ளை தனை(2)  பெற்றோம்  என்று  களிக்க
பெருமையில்  யசோதை   இன்னும்   (2)  ஒரு  சுற்று  பெருக்க   (லாலி)

 அரவன்  முடி  மேல்  நின்று  அபிநயங்கள்  பிடிக்க(2)
அரங்க மா நகரி ல் , வந்து  (2)  காலை  நீட்டி  படுத்தான்  ( லாலி)

தண்ணார்தன்  வளைநிழலில்(2)
தலைவன்  முகம்   காண
தந்திரங்கள் கோ தை  செய்ய (2)  ஆடீர்  ஊஞ்சல்  (லாலி)

பாலாலே  காலலம்பி(2)  பட்டாலே  துடைத்து(
மணி தேங்காய்  கை கொடுத்து(2) மஞ்சள் நீர் சுழற்றி-----(லாலி)

கொத்தோடு வாழை மரம்(2) கொண்டு வந்து நிறுத்தி(2)
கோப்புடைய  பந்தலின் கீழ்(2) ஆடுவதைக் காணீர் (லாலி)

தங்கமய பந்தலிலே (2) வெள்ளி மணி ஊஞ்சல்(2)
ரங்கனுடன்  ஆண்டாளும்
(சொக்கனுடன் மீனாட்சி)   ஆடுவதைக் காணீர்  (லாலி)

முத்துமணி  பந்தலிலே /ரத்ன மய ஊஞ்சல்(2)
ஸ்ரீ ராமருடன் சீதையுமே (2) ஆடுவதைக் காணீர்  (லாலி)

ஜோதிர்மய பந்தலிலே(2) புஷ்ப மய ஊஞ்சல்
கோதையுடன் ஸ்ரீ ரங்கன் ஆடுவதைக் காணீர் லாலி