எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 31, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம்பாகம்!

மிருகவேட்டையா? மனித வேட்டையா?


ஆம், ஜராசந்தன் வந்தே விட்டான். அவன் மட்டுமா? அவனோடு கூட விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன் ருக்மி, சேதி நாட்டு அரசன் தாமகோஷன், அவந்தியின் இளவரசர்கள் விந்தனும், அனுவிந்தனும், தந்தவக்ரன், தாரதன் போன்ற மன்னர்களும், மாமன்னர்களும் கூடவே வந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று கூடிவிடாமலும், தனக்கெதிராக எதுவும் செய்யாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவே தந்திரமாய் அவர்களைத் தன்னோடே அழைத்து வந்தான் ஜராசந்தன். இதனால் அவனுக்கு இரட்டிப்பு லாபம். அந்த மாமன்னர்களுக்குத் தங்களுக்கு ஜராசந்தன் போதுமான மரியாதை கொடுத்து வருகிறான் என்ற திருப்தியும் இருக்கும், அதே சமயம் அவர்கள் நடவடிக்கை அவன் கண்ணெதிரேயே இருக்கும். இவர்கள் அனைவரும் உல்லாசமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்த்தைப் பார்த்தால் மன்னர்கள் அனைவரும் ஏதோ வேட்டைக்கு, காட்டு மிருகங்களை வேட்டையாடி விளையாடிக் களிக்க வந்திருப்பது போல் பட்டது. உண்மையில் மனித வேட்டைக்கு வந்திருக்கிறார்கள் என்பது ஜராசந்தன் கூடியவரையில் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

அதனால் ஜராசந்தன் சென்ற இடமெல்லாம் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது அவனுக்கும், உடன் வருபவர்களுக்கும். மிக உயர்தர விருந்து, கேளிக்கைகள், நடனம், நாடகம், பாடல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டு இரவுப் பொழுதை இனிமையாக்கின. உசினாரா, சேதி, விதர்ப்பா போன்ற நாடுகளின் அரசர்கள் மட்டுமின்றி குடிமக்களும் பெரும் ஆவலோடும், மகிழ்வோடு இந்தப் பெரிய அரச ஊர்வலத்தை ரசித்து வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். மக்களிடையே ஜராசந்தன் பெற்ற வெற்றிகள் மெல்லிய குரலில் கிசுகிசுவெனப் பேசப் பட்டது. இவற்றையெல்லாம் கண்டும் காணாதவன் போல் ஜராசந்தன் தன் குறி கண்ணனை வேட்டையாடுவது ஒன்றே என்பதை மனதில் கொண்டு மேலே மேலே பிரயாணப் பட்டிருந்தான். கரவீரபுரத்தின் அரசனான ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கு அவன் அனுப்பி வைத்த ஒற்றர்கள் கொண்டு வந்த செய்திகளின் மூலமாய்க் கண்ணன் அந்த மலைப்பகுதிகளின் அடர்ந்த காடுகளிலேயே எங்கேயோ ஒளிந்திருப்பதும், அவனைப் பிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை என்பதும், அது குழந்தைகளோடு விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஒத்த்தே என்பதும் ஆகும். இந்த நம்பிக்கையைப் பெற்றிருந்த தைரியத்தினால் கண்ணனை அடியோடு அழித்துவிடலாம் என்றே ஜராசந்தன் ஆவலோடு காத்திருந்தான்.

ஆனால் விதர்ப்பாவுக்குள் நுழைந்ததிலிருந்தே அந்த அடர்ந்த மலைக்காடுகளின் ஊடே பிரயாணம் மேற்கொள்ளுவது சிரமமாக மட்டுமின்றி களைப்பைத் தருவதாயும் இருந்தது. மேலும் உணவு விஷயத்தில் அதிகமாய் சேமிப்பில் வைத்துக்கொள்ளவும் கஷ்டமாய் இருந்ததோடு மலைப் பிரதேசத்தில் பிரயாணம் மேற்கொள்ளுவதுபலவிதமான தடைகளையும் ஏற்படுத்தியது. படை வீரர்களுக்கு மட்டுமின்றி கூடவே பிரயாணம் மேற்கொண்ட அரசர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும் இதன் முடிவு என்ன என்பதில் சந்தேகம் மிகுந்தது. வீரர்களோ உற்சாகம் இழந்து காணப்பட்டனர். ஜராசந்தன் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆகையால் அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டாலும் அவனோடு உடன் பிரயாணம் மேற்கொண்டனர். கடைசியில் ஒருவழியாய் அவர்கள் அனைவரும் கோமந்தக மலையின் அடிவாரத்துக்கு வந்தே விட்டனர். ஆனால் மலையின் செங்குத்தான உயரத்தையும் அதில் ஏறவே முடியாதபடிக்கு அடர்ந்து கிடந்த மரங்களையும் பார்க்கையில் அவர்கள் நம்பிக்கை காணாமல் போயிற்று. மேலும் மலையின் மேல் பழவகைகளும், தண்ணீரும் அபரிமிதமாய்க் கிடைக்கும்போல் , ஆங்காங்கே பழமரங்களும், வெள்ளியை உருக்கினாற்போன்ற அருவிகளும் காட்சி அளித்தன. உணவு வகைகளும் அதிகமாய் இருந்தால் இந்த முற்றுகையை மலைமேல் இருப்பவர்கள் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் தாங்குவார்கள் போல் தெரிகிறதே? சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பலசாலிகளாயும், தைரியசாலிகளாயும் மலை ஏறுவதில் பயிற்சி பெற்றவர்களுமான இருவரைத் தேர்ந்தெடுத்தான் ஜராசந்தன். மலைமேல் செல்ல வழி ஏற்படுத்துமாறு ஆணையிட்டான். ஆங்காங்கே கூரிய பாறைகளின் நுனிகள் தெரிந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறலாம் என்றால் அவை வழுக்கின. கரடு, முரடான பாறைகள் கைகளிலும், கால்களிலும், உடலிலும் பட்டுக் காயத்தை உண்டாக்கின.

ஆனால் எதற்கும் அஞ்சாமல் அந்த இருவரும் மலைமேல் ஏற முற்பட்டனர். ஜராசந்தன் முகத்தில் மகிழ்ச்சி உதயமாயிற்று. ஆனால், அந்தோ! ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்குத் தாவிய அவ்விருவரின் மேலேயும், மேலே மலை உச்சியிலிருந்து தள்ளப்பட்ட பாறைகள் விழ, அவர்கள் இருவரும் மலைக்கணவாய்களில் விழுந்தனர். அனைவரும் மேலே பார்க்க, மலையின் மேல் தெரிந்த அந்தப் பீடபூமியின் ஒரு கோணத்திலிருந்து சில மனிதர்கள் நின்று கொண்டு கீழிருந்து மேலே ஏறுபவர்களைப் பாறைகளைத் தள்ளுவதன் மூலம் தடுத்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. கண்ணுக்கு இருவரே தெரிந்தாலும், அங்கே இன்னும் நூற்றுக்கணக்கான நபர்களும் இருக்கவேண்டும் என்பதும் புரிந்தது. ஜராசந்தன் வேறு வழியில்லாமல் மந்திராலோசனையைக்கூட்டினான்.

அவன் நண்பர்களான மற்ற அரசர்கள் எந்தவிதமான பரிசுகளும் இல்லாத, பலனே இல்லாத இந்த வேட்டையைத் தொடருவதில் ஊக்கமின்றிக் காட்சி அளித்தனர். மேலும் கரவீரபுரம் மிகவும் தூரத்தில் இருந்ததால் அங்கிருந்து உணவுப் பொருட்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. வீரர்களுக்குச் சரியான உணவு அளிக்க முடியவில்லை. இந்த முற்றுகையோ எத்தனை நாட்கள்/மாதங்கள் தொடர்ந்தாலும் மலைமேல் இருப்பவர்களைப் பிடிக்கமுடியுமா என்பதில் சந்தேகம் தான். ஜராசந்தன் தன் நண்பர்களின் மனதைப் புரிந்து கொண்டான். ஆனால் அவனுக்குப் பின்வாங்க இஷ்டமே இல்லை. மகதச் சக்கரவர்த்தியான அவன் இரு இடைச்சிறுவர்களுக்குப் பயந்து பின்வாங்கினான் என்பது ஆர்யவர்த்தம் முழுதும் பரவினால் அவன் கெளரவம் என்னாவது? மக்கள் அவனை மதிப்பார்களா? அதோடு அவனைக் கோழை என இழிவாய்ப் பேசுவார்களே? இந்தக் கிருஷ்ணன் தான் யுத்தத்துக்குப் பயந்து யுத்த பூமியில் இருந்து தான் மட்டும் தப்பிக்கவேண்டுமென ஒருவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஓடிவந்துவிட்டான். ஆகவே தன் நண்பர்களுக்குப்பல பரிசில்கள் தருவதாய் ஆசை காட்டினான். மேலும் பல பதவிகளையும் பெற்றுத் தருவதாயும், தனக்குச் சமமாய் நடத்துவதாயும் உறுதி அளித்தான். ஆனால் அவன் எவ்வளவு ஆசை காட்டியும் அவன் நண்பர்களான அரசர்களும், அரசகுமாரர்களும் அசைந்து கொடுக்கவில்லை. மலை மேல் உள்ளவர்களின் மீது தாக்குதல் நடத்துவதில் உள்ள அபாயத்தை ஜராசந்தனுக்குச் சுட்டிக் காட்டினார்கள்.

Wednesday, July 28, 2010

எல்கே பிணைத்த சங்கிலித் தொடர்!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அட?? சொந்தப் பெயர், அசல் பெயர் தான் அது. வேணும்னா ஜாதகப் பெயர் சீதாலக்ஷ்மினு வச்சிண்டிருக்கலாமோ??

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம், இது தான் பதிவு செய்யப் பட்ட பெயர். நான் வலை உலகுக்குப் புரட்சி செய்ய வந்தப்போ இன்னொரு கீத்ஸ் மட்டும் இருந்தாங்க. நம்ம அதியமானோட சிநேகிதி அவங்க. அதனால் வித்தியாசம் தெரியறதுக்காக கீதா சாம்பசிவம்னு வச்சிண்டேன். நான் வந்ததுமே அவங்க பயந்து ஓடியே போயிட்டாங்க. இப்போப்பாருங்க இரண்டு கீதா வந்து மிரட்டறாங்க. ஒருத்தர் கீதா அச்சலாம், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) இன்னொருத்தர் கீதா சந்தானமாம். யாரானும் புதுசாப் பார்க்கிறவங்க நான்னு நினைச்சு அவங்க பதிவிலே போய்ப் பின்னூட்டப் போறாங்க, நமக்கு என்ன வம்பு? :))))))))

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

ஹிஹிஹி, அன்னிக்குத் தான் தமிழ் எழுத்தாளர் உலகில் புதியதொரு உதய சூரியன் உதயம் ஆயிற்று. எங்கு பார்த்தாலும் தா(யா)னைத் தலைவி வாழ்க, தாயுள்ளத்தோடு எங்களை உய்விக்க வந்திருக்கும் பெருமாட்டி(இது சரியா???யாரானும் சொல்லுங்கப்பா) வாழ்க! னு போஸ்டர் ஒட்டித் தோரணம் கட்டி, எடைக்கு எடை பொன்னும், வெள்ளியும் கொடுத்து, மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்திண்டு, தீ மிதிச்சு, காவடி எடுத்துனு எல்லாம் செய்தாங்க வலை உலக சிஷ்யகோ(கே)டிகள்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

இது என்ன ரகசியமா?? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்ச நாளைக்கு மொக்கை போஸ்டா போடணும். அதே!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ம்ம்ம்ம்ம்??? கொஞ்சம், கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதிகம் பிரயாணங்களும் , அதன் சாதக, பாதகங்கள் பற்றியும். ஒரே ஒரு முறை கொஞ்சம் போல் பகிர்ந்துகொண்டேன், இதே போல் ஒரு சங்கிலித் தொடருக்காக. அதிலே சிலது எனக்கே பிடிக்கலை. அப்புறமா எடுத்துட்டேன். என்னது லிங்கா? ஹிஹிஹி, அது இதிலே இல்லை. வேறே இடத்தில் ரகசியமா வச்சிருக்கேனே!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதும் போகுது, சம்பாதிக்கவும் முடியுது. நண்பர்களோடு பழகுவதில், சாட்டுவதில், ப்ரவுசிங் செய்து பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியறதில் பொழுது நல்லாவே போகுது. சம்பாதிச்சிருக்கிறது உலக அளவில் நண்பர்களை. இப்படி ஒரு நட்புக் கூட்டம் நான் அழுதால் அழவும், சிரித்தால் சிரிக்கவும், அன்பு செலுத்தவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏற்பட்டதை விடப் பெரிய சம்பாதனை வேறே என்ன வேண்டும்?


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஹிஹிஹி, எல்லாமே தமிழ் வலைப்பதிவுகள் தான். பீட்டர் எல்லாம் விடறதில்லைனு வச்சுட்டேன். எத்தனைனு சொன்னால் திருஷ்டி பட்டுடுமே! ரகசியமாவே இருக்கட்டுமே! :)))))))))))))

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எல்லார் கிட்டேயும் கோபம் வருமே! நாம மொக்கை போட்டும், மெயில்கொடுத்து அழைச்சும், வந்து பின்னூட்டம் போடலைனா கோபம் வராமல் என்ன செய்யும்? கோபம் வரும் தான். அந்தப் பதிவர்களில் முக்கியமானவங்கனு பார்த்தா திராச சார், திவா அவர்கள். ஹிஹிஹி, ரெண்டு பேரும் அசைஞ்சே கொடுக்க மாட்டாங்க! (நறநறநறநறநறநற)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


சூப்பர் சுப்ரா. மறக்கவே முடியாது. கடைசியிலே(முதல்லே இருந்துதான், ஆனால் எனக்குத் தான் அப்புறமாத் தெரிஞ்சது) அவரும் மதுரை, மேல ஆவணி மூல வீதி. நாங்க இருந்த வீட்டிற்கு நாலைந்து வீடு தள்ளி இருந்திருக்கார். நேரிலே பார்த்தால் புரியுமோ என்னமோ! பாராட்டுன்னா, ஊக்கம் கொடுத்தார்னு சொல்லலாம். கிட்டத் தட்டப் பதிவுகளின் போக்கையே மாற்றினார்னும் சொல்லலாம். நன்றியும், பாராட்டும் அவரையே அடையணும்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

என்னத்தைச் சொல்றது? எல்லாருக்கும் எல்லாமே தெரியுமே? இருந்தாலும் எல்லாரும் மண்டையைப் பிச்சுக்கற ஒரு விஷயம் என்னன்னா, எனக்கு என்ன வயசுங்கறது தான். :)))))))))))))))))ஆளாளுக்குக் கற்பனை பண்ணிட்டு இருக்காங்க. அதைச் சொல்றதுக்குனு ஒரு திட்டம் வச்சிருக்கேன். அப்போ இறை அருளும், நேரமும், காலமும் கூடி வந்தால் சொல்லிடுவேன்.


நான் யாரையுமே கூப்பிடலைப்பா. எல்லாருமே பிசியா இருப்பாங்க. அதான் தொந்திரவு பண்ணவேண்டாமேனு விட்டுட்டேன். யாருக்குப் பிரியமோ அவங்க எழுதுங்க. வாழ்த்துகள். எல்கேவுக்கு நன்றி.

சர்க்கரை நோய்க்கான நீண்டநாள் கை மருந்து உங்கள் கைவசமே!

சுல்தான் அமீரகத்திலே என்ன செய்யறது மாவிலைக்கும், வேப்பிலைக்கும், கறிவேப்பிலைக்கும், துளசிக்கும் எங்கே போகனு கேட்டிருந்தார். அதை ஒரு மாதிரியா சமாளிச்சுட்டாலும், தகுந்த பதில் கொடுக்கலையேனு மன வருத்தமாய் இருந்தது. அப்போது நண்பர் மதுரபாரதி அவர்கள் ஒரு வீட்டுக்குறிப்புக் கொடுத்தார். இது அனைவராலும் இயலும். இயலக் கூடிய ஒன்றே. அநேகமாய் எல்லார் வீட்டிலும் ஜீரகம், வெந்தயம் இருக்கும். அமீரகத்திலேயும் கிடைக்கும் இல்லையா சுல்தான் அவர்களே? இந்தியாவுக்கு வருகை தரும்போது அல்லது யாரானும் உடனடியா வந்தா அவங்க கிட்டேச் சொல்லி சுண்டைக்காய் வற்றல் உப்புப் போடாதது வாங்கி வச்சுக்குங்க. எல்லாம் சம அளவு இருக்கணும். நூறு கிராம் வெந்தயம்னா, ஜீரகம் நூறு, சுண்டை வத்தல் நூறு. மூன்றையும் வெறும் வாணலியில் பொன்னிறமாக வரும்வரை வறுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிட்டு வரவும். சர்க்கரை கிட்டேயே வராது. நூறு மடங்கு உத்திரவாதம் தருகிறார். சர்க்கரை அளவு குறையாமப் பார்த்துக்கணும். சர்க்கரை அளவு குறைந்ததுனு தெரிஞ்சதுமே அவ்வப்போது காபி, டீயில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும் அல்லது எலுமிச்சைச்சாறில் வெல்லம் சேர்த்துச் சாப்பிடவும். அல்லது ஆடை நீக்கிய பாலில் பனங்கல்கண்டு போட்டுச் சாப்பிடவும்.

கஷாயம் போட்டுத் தினம் சாப்பிட முடியாதுனு சொல்றவங்க எல்லாம் ஒரு நாள் ஒரு அரை மணி செலவு செய்து (அவ்வளவு நேரம் கூட ஆகாது) இதைத் தயார் செய்து வைத்துக்கொண்டால் பின்னர் ஒரு மாதத்துக்குக் கவலையில்லாமல் இருக்கலாமே! முயலுங்கள்! சர்க்கரையை வெல்லுங்கள்! அனைவருக்கும் சர்க்கரை இல்லாமல் இருக்க வாழ்த்துகள்!

Tuesday, July 27, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கண்ணனின் கொடியில் கருடன்!


“அப்படியா? எனில் நாம் அனைவரும் தாக்குதலுக்குத் தயாராகவேண்டும்.” என்றான் கண்ணன். பலராமனுக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப் பட்டது. அவன் தன் நண்பர்களைப் புறம் தள்ளிவிட்டுக் குடிசைக்குள் நுழைந்து கண்ணனிடம், “கண்ணா, எங்கே ஆயுதங்கள்? எடு அனைத்தையும்! ஜராசந்தன் இங்கேயும் வருகிறானாமே?” என்று ஆவேசத்தோடு கேட்டான். கண்ணன் அவனைப் பக்கத்துக்குடிசைக்குள் அழைத்துச் சென்று தான் தயாரித்து வைத்திருக்கும் தன் ஆயுதங்களைக் காட்டினான். “அண்ணா, உங்களுக்கு என்ன ஆயுதங்கள் பயன்படும்? உங்கள் ஆயுதங்களை எப்படித் தயாரிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்க, பலராமன் அதைத் தான் பார்த்துக்கொள்வதாய் உறுதியளித்தான். பின்னர் குடிசையை விட்டு வெளியே சென்று ஒரு பெரிய உறுதியான அடிப்பாகம் உள்ள பழைய மரத்தை அவன் கோடரியால் வெட்டிச் சாய்த்தான். அதன் அடிப்பாகத்தினால் தனக்காக ஒரு கதையை நிறைய முட்களோடு கூடியதாய்த் தயார் செய்தான். இரண்டு நாட்கள் தூங்காமல் கண் விழித்து இதை முடித்தான் பலராமன்.

பின்னர் அனைத்து ஆயுதங்களையும் வைத்து ஒரு வழிபாடு செய்யவேண்டும் எனக் கண்ணன் அவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்தான். கருட இனத்து மக்கள் அனைவரும் அந்த வழிபாட்டுக்கு அழைக்கப் பட்டனர். கண்ணன் தன் ஆயுதங்களை அங்கே வைத்திருந்தான். பலராமனிடம் அவன் ஆயுதங்களைக் கேட்கவும், “நீ வழிபாட்டை ஆரம்பி, இதோ கொண்டு வருவேன்.” என்ற பலராமன் கண்ணன் தன் வழிபாட்டைத் தொடங்கியதும், வெளியே சென்றான். திரும்பி வரும்போது அவன் தோளில் ஒரு பெரிய ஏர்க்கலப்பை சார்த்தப் பட்டுக்கிடந்தது. சாதாரணமாக நான்கு ஆட்களால் தூக்கவேண்டிய அளவுக்கு அது உறுதியாகவும், வலிமையாகவும் இருந்ததோடு மற்றொரு தோளில் ஐந்தடிக்கு ஒரு பெரிய உலக்கையும் காணப்பட்டது. கண்ணனைப் பார்த்து, “கண்ணா, இதோ என் ஆயுதங்கள். உன்னைப் போல் நாட்கணக்காக உழைத்துக் கொண்டு இருக்கவில்லை. என் ஆயுதங்களை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன், பார்! “ என்று சொல்லிவிட்டு அவற்றைக் கண்ணனிடம் கொடுக்கக் கண்ணன் ஒரு சிறு சிரிப்போடு அவற்றை வாங்கிக் கொண்டான்.

பின்னர் கண்ணன் பலராமனைப் பார்த்து, “உண்மையிலேயே மிகவும் வலிமையான ஆயுதங்கள் தான் இவை. இருங்கள் அண்ணா, மிகவும் முக்கியமானதும், ஒளிபொருந்தியதுமான இன்னொரு ஆயுதம் எனக்காகத் தயார் செய்துள்ளேன். அதையும் பாருங்கள்.” கண்ணன் அங்கே குவிந்திருந்த இலைக்குவியலை அகற்றினான். அதனடியில் ஒளிவிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்த்து சக்கராயுதம் ஒன்று. நூற்றுக்கணக்கான கூரிய கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தது. கம்பிகளின் முனைகள் சக்கரத்தின் வட்டத்தின் வெளி வரையிலும் நீண்டு இருந்தது. முனைகள் வேல் போன்று கூர்மையாக ஒளிவிட்டன. மேலும் அங்கே மறைத்து வைக்கப் பட்டிருந்த கவசங்கள், தலைக்கவசங்கள் போன்றவற்றையும் காட்டி எல்லாம் அவன் மேற்பார்வையில் கருடர்களால் தயாரிக்கப்பட்டன என்றும் கூறினான். அங்கே ஒரு அழகான கிரீடம் ஒன்றும், மணிகளால் அலங்கரிக்கப் பட்டு ஒளிவிட்டுக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. இளம் கருடன் விநதேயன் கண்ணனுக்கெனத் தான் தனியாக அதைச் செய்ததாகப் பெருமையுடன் கூறினான்.

அவற்றை எல்லாம் பார்த்து வியந்த பலராமன், “சரி, கண்ணா, ஆயுதங்களுக்கு இப்போது பெயர் வைக்கவேண்டுமே? என்ன பெயர் வைக்கலாம்? “என்று வினவினான். அனைவரும் கலந்து ஆலோசித்து பலராமனின் கலப்பைக்கு, “சம்வர்த்தகா” என்ற பெயரும், அவன் உலக்கைக்கு, “செளநந்தா” என்ற பெயரும் வைத்தனர். கண்ணனின் வில்லுக்கு, “சார்ங்கம்” என்ற பெயரும், அவனின் அதி அற்புதமான சக்ராயுதத்துக்கு, “சுதர்சனா” என்ற பெயரும் வைக்கப் பட்டது. மேலும் கண்ணன் அப்போது ஒரு அபூர்வமான அறிவிப்பையும் செய்தான். “இதோ கருடன் ,விநதேயன், இனி எனக்குச் சமமானவன் இவன். என் ஆயுதங்களை மட்டுமின்றி எனக்கும் பாதுகாவலன் இவனே! இந்த ஆயுதங்களைத் தயாரிக்க இவன் எப்படிப் பாடுபட்டுக் கடுமையாக உழைத்தான் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவன் என் அருகே இல்லை எனில் என் கொடியானது அவன் உருவத்தைத் தாங்கி நிற்கும். அவனும் நானும் ஒன்றே.” என்றான். கருடன் விநதேயன் கண்களில் ஆநந்தக் கண்ணீர் பிரவாகம் எடுத்து ஓட அனைவரும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் ஜராசந்தனை எதிர்பார்த்தும் ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் புஷ்பங்களால் வீசி அடித்துக்கொண்டனர். சந்தனக்குழம்பும், நறுமணத் தைலங்களும் பூசப் பட்டன. ஒருவர் இன்னொருவரின் பலத்தைப் பரிசோதித்தனர். இதற்கு நடுவில் யுத்த பேரிகையும் முழங்கியது.

தம் தம்தம்தம்தம்தம் த்தம்த்தம் த்தம் த்தம், யுத்தம் யுத்தம் யுத்தம் என்றே அது முழங்குவதாக அனைவருக்கும் தோன்றியது.

ஜராசந்தன் வந்தேவிட்டான்.

Monday, July 26, 2010

பெருமாளின் வீடு தயாராகிக்கொண்டிருக்கிறது!

இம்முறை ஊருக்குப் போனப்போ பல வருடங்களுக்கு அப்புறமா முதல்முறையா ரயிலில் போனோம். பேருந்திலோ அல்லது காரிலோ போனால் பகல்வேளையிலே போகவேண்டி இருக்கு. அதோட ரயிலில் போறதுதான் எனக்கு வசதியாகவும் இருக்கு. ராத்திரி நிம்மதியாப்படுத்துத் தூங்கிட்டுப்போனால் காலையிலே ஊர் வந்துடும். அது மாதிரியே இம்முறை போனோம். ஏழே முக்காலுக்குக்கும்பகோணம் போகவேண்டிய வண்டி ஏழு மணிக்கே போயிடும் போல இருந்தது. அப்படி இப்படினு மெதுவாப் போய் ஒருவழியா ஏழேகாலுக்கு இனிமே என்னால முடியாதுனு டிரைவர் கொண்டு சேர்த்துட்டார். ஹோட்டல் அறைக்குப் போய்க் குளிச்சு அபிஷேஹ சாமான்கள் வாங்கித் தயாராகிட்டு வழக்கமான ஆட்டோவிலே கிளம்பினோம். வழியிலே அரசலாற்றைப் பார்த்தால் கண்ணிலே தண்ணி முன்னாடி வரும் ஆடிப்பெருக்கு வெள்ளம் போல் வருது. எவ்வளவு அகலமாய் ஒரு காலத்தில் இருந்த நதி! இன்று வாய்க்கால் போலச் சுருங்கி, ஒரே ஆகாயத் தாமரையும், பார்த்தீனியமுமாக இருக்கும் அகலத்தையும் சுருக்கிக் காட்டிக் கொண்டு பத்தடிக்கு நீர் உள்ளங்கால் நனையும் வண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. படம் இறங்கி எடுத்திருக்கணும். ஆனால் பத்தரைக்குள்ளாக போய்ச் சேரவேண்டும் என்பதால் வழியிலே நிறுத்த முடியலை. ஓடும் போது எடுத்தது முதல் இரு படங்கள்.



அங்கே குலதெய்வத்துக்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு பின்னர் இப்போத் திருப்பணி நடக்கும் பெருமாள் கோயிலுக்குப் போனோம். கர்ப்பகிருஹத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. இன்னும் கீழே தரை போடவேண்டும். விமானத்தில் சுதை வேலைப்பாடுகள் முடிந்திருக்கின்றன. அடுத்தடுத்து மழை வருவதால் வண்ணம் பூசுவது நிறுத்தி வச்சிருக்காங்க. முன் மண்டபம் செப்பனிடவேண்டும். கருடனுக்குப் புதிய மண்டபம் எழுப்பி இருக்காங்க. சந்நிதியின் உள்ளே இருந்த ஸ்ரீவேணுகோபாலருக்கு வெளியே தனி சந்நிதி. அநுமனும் எப்போவும்போல் தன்னிடத்தில் இருக்கிறார். அர்த்த மண்டபம் வேலை முடிந்துவிட்டது. அடுத்துப் பெரிய வேலை சுற்றுச் சுவர் தான். கிட்டத்தட்ட ஐநூறு வருடங்கள் முந்தைய கோயில் என்பதால் சுற்றுச்சுவரை அகலமும், நீளமுமாக எடுத்திருக்காங்க. இப்போ அதை முடிக்கணுமேனு நினைச்சா மலைப்பா இருக்கு. ஓரளவுக்குக் கொத்திட்டாவது பூசணும். எப்படினு புரியலை. அங்கே ஓரிடத்தில் பெரிய பள்ளம். என்னனு பார்த்தால் அங்கே ஒரு பெரிய கரையான் புற்று இருந்ததாகவும், அதை அழிச்சதில் இவ்வளவு ஆழமும், அகலமுமான பள்ளம் ஏற்பட்டிருப்பதாய்ச் சொன்னாங்க. கரையானை எப்படி ஒழிச்சீங்கனு கேட்டதுக்கு வேடுவனை வரவழைத்துத் தாய்ப்பூச்சியைப் பிடித்துப் போகச் சொன்னோம்னு பஞ்சாயத்துத் தலைவர் ரங்கசாமி கூறினார். எனக்கு இந்தச் செய்தி மிகப் புதியது. கரையானின் தாய்ப்பூச்சியைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால் மற்றப் பூச்சிகள் போய்விடுமாம். ஆகவே கரையானை ஒழிக்க வேடுவனை அழைக்கவேண்டும் என்பதும் அப்போத் தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

திருப்பணிக்கான பண உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் திருப்பணிக்காக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். பல இடங்களிலும் கேட்டிருக்கோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. பெருமாள் தான் தன் இருப்பிடத்திற்கான வேலையை நடத்திக்கொள்ளவேண்டும். இருந்தாலும் இழுத்துப் பிடித்துக்கொண்டு செய்து கொண்டிருக்கிறோம். இங்கே திருப்பணிப்படங்களைக் காணலாம். திருப்பணிப்படங்கள்

சர்க்கரை என்னும் எதிரியை விரட்டுவோம் வாங்க

சர்க்கரை நோயாளிகளுக்கான வீட்டு மருந்து:

இது வரைக்கும் வியாதீஸ்வரி நானேனு பாடிட்டு ஜாலியா இருந்தேன். பாவம் ரங்க்ஸ், என்னை ஆச்சுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போறதே ஒரு நல்ல பொழுதுபோக்குனு நினைக்கிற அளவுக்கு மாறிட்டார். இப்படி இருக்கிறச்சே என்ன ஆச்சுன்னா, நான்தான் நோய்க்கு ஏகபோக உரிமைன்னு சந்தோஷத்திலே இருந்த எனக்கு சில நாட்கள் முன்னால் திடீர் அதிர்ச்சி. உயர் ரத்த அழுத்தமா? என்னை விட்டால் போட்டிக்கு ஆளே இல்லைன்னு இருந்தேனா திடீர்னு ஒரு நாள் நம்ம ரங்க்சுக்கு தொண்டையிலே வலி. என்னோட போட்டிக்கு வந்துட்டார். இப்போப் பாருங்க என்னைக்காவது நீங்க என்னோட சாட்டிலே இருக்கும்போது தும்மினீங்கனு வச்சுக்குங்க, உடனே எனக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும், தொலைபேசியிலே பேசும்போது ஒரு தரம் இருமினீங்கன்னா உடனே ஒரு மாசம் எனக்கு இருமல் வரும். இப்படிச் சந்தோஷமா நோயைக் கொண்டாடிட்டு இருந்தப்போ ரங்க்ஸுக்குத் தொண்டை வலின்னா எனக்கு உடனே ஜலதோஷம் பிடிச்சுக்கப் போறதேன்னு அவரை மருத்துவர் கிட்டே விரட்டினேன். எல்லாம் சுயநலம்தான்னு வச்சுக்குங்களேன்! :P

நான் விரட்டினதாலே பயந்துட்டாரோ என்னமோ தெரியலை, அன்னிக்குனு பார்த்துப் படபடப்பு ஜாஸ்தியா இருக்கவே மருத்துவர் ரத்த அழுத்தம் என்னனு பார்த்தால் ஹிஹிஹி, மே மாசம் அடிக்கிற அக்னி நக்ஷத்திர வெயிலை விட அதிகமாக் காட்டி இருக்கு. அந்த மருத்துவர் பயந்துபோக, என்னவர் தைரியமா வீட்டுக்கு வந்துட்டார். என்னிடம் விஷயத்தைச் சொல்ல ஏற்கெனவே மருத்துவப் பரிசோதனைக்காகப் போகணும்னு இருந்த நான் என்னோடு கட்டி இழுத்துப் போகத் தேவையில்லாமல் அவரும் எப்போவும் போல் உடன் வர, மருத்துவர் கிட்டே காட்டினால் அன்னிக்கும் படபபடபடபபப்படனு இருக்க, மருத்துவர் உடனே எல்லாப் பரிசோதனைக்கும் எழுதிக் கொடுக்க, பள்ளியிலே கூடப் பரிக்ஷைக்குப் பயப்படாத நான் இந்தப் பரிக்ஷைக்குப் பயந்துட்டே இருந்தேன். கடைசியிலே எனக்கும் சேர்த்து மருத்துவர் வைச்ச பரிக்ஷையிலே நான் முழு மதிப்பெண் எடுக்கலை. அவருக்கு வச்ச பரிக்ஷையில் அவர் எடுத்துட்டார். சந்தோஷமா இருந்த என்னை மறுநாள் ரத்தத்தில் சர்க்கரை இருக்கானு பார்க்க எடுத்த பரிசோதனை உன்னை ஒரு கை இல்லை எல்லாக் கையாலேயும் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு கிடுகிடுனு இப்போதைய இந்திய விலைவாசி மாதிரி ஏறி உச்சாணியிலே நிற்கக் கொழுப்பு உனக்குனு சொன்ன சர்க்கரையைப் பார்த்துக் கொழுப்பும் போட்டிக்கு வந்து நிற்கத் தலையைச் சுத்தினது. அவருக்கில்லை எனக்கு! :(

பரிக்ஷை மதிப்பெண்களை எடுத்துட்டு மருத்துவர் கிட்டேப் போனோம். எதுவுமே சாப்பிடக் கூடாதுனு சொல்லிட்டார். தூக்கிவாரிப் போடப் பின்னே என்ன சாப்பிடறது? எப்படி உயிர் வாழறதுனு கேட்டோம். காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுங்கனு சொல்லிட்டார். பாவக்காயைப் பச்சையாகவா? கடவுளே! அதைப் பொன் முறுவலா வறுத்து வைனு சொல்லுவாரே! வெண்டைக்காய்? அதுவும் பச்சையா? சிவப்பிலே கூட வெண்டைக்காய் உண்டே! நேரம் தெரியாமல் ஜோக் அடிச்ச ரங்க்ஸைப் பார்த்து ஒரு முறை முறைச்சேன். பின்னே சமைக்கும் எனக்கில்லை தெரியும் அதோட கஷ்டம்! சரி, காபியைச் சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பார்க்கலாம்னு கொடுத்தால், நம்ம ரங்க்ஸ் சர்க்கரை இல்லாமல் காபியும் ஒரு காபியா நோ காபினு சொல்லிட்டார். இட்லிக்குத் தேங்காய்ச் சட்னி நோ. நல்லவேளையா இட்லிக்கு சாம்பார் எஸ்ஸு. அதனாலே பிழைச்சது இட்லி. சமையலில் எண்ணெய் நோ. ஹிஹி, நான் ஏற்கெனவே கஞ்சமுட்டிக் கருப்பட்டி எண்ணெய் விஷயத்திலே. இப்போ என்ன இன்னும் ஜாலிதான். சோ நோ பிரச்னை! சாதம் நோ. ஒரு இரண்டு கைப்பிடி காக்காய்க்கு வைக்கிறாப்போல கொடுங்கனுட்டாரா? வந்தது பாருங்க கோபம். நான் காக்காயோட எல்லாம் போட்டி போட முடியாதுனு ரங்க்ஸ் சொல்ல, வேண்டாம் வேண்டாம்னு சமாதானம் செய்துட்டு, நிறையக் காய்கள், கீரை, சாலட், பருப்புச் சுண்டல்னு குழந்தைகளுக்குக் கொடுக்கிறாப்போல் கொடுத்துப் பார்க்க அப்பாடா, ஒரு வழியா அந்தப் பிரச்னை முடிஞ்சது. சாயந்திரம் நோ டீ, நோ காபி. பின்னே என்ன?? இருங்க அதைச் சொல்லத் தானே இவ்வளவு நீட்டி முழக்கறேன். ராத்திரி இரண்டே இரண்டு சப்பாத்தி, கூட்டு, தேவைப்பட்டால் ஏதானும் ஒரு தால். படுக்கும்போது ஆடை நீக்கிய பால். இப்போ விஷயத்துக்கு வருவோமா?

நேத்திக்கு மறுபடியும் பரிசோதனைக்கு மருத்துவர் வரச் சொல்லி இருக்க, திக், திக், திக், திக்னு அடிச்சுக்கப் பரிசோதனைக்குப் போனார். வெள்ளி, சனி இரண்டு நாள் வெளியே சாப்பிடும்படி சூழ்நிலை. குலதெய்வம் கோயிலுக்குப் போயிருந்தோம். சனிக்கிழமை ரயில் பயணம். என்னடா இது மதுரைக்கும், கும்பகோணத்துக்கும் வந்த சோதனைனு பயந்துட்டே போனார். என்ன ஆச்சரியம்? சர்க்கரை கணிசமான அளவில் குறைஞ்சிருக்கு. மருத்துவருக்கே ஆச்சரியம். இன்சுலின் போடணுமோனு நினைச்சேன். இதே மெயிண்டெயின் பண்ணுங்கனு சொல்லி இருக்கார். அப்படி என்ன செய்தோம்னு கேட்கறீங்களா? ரொம்ப சிம்பிள், எல்லாம் நம்ம வீட்டிலேயே இருக்குங்க மருந்துகள். நீங்க அலோபதியோ, ஹோமியோபதியோ, ஆயுர்வேதமோ, சித்த மருத்துவமோ எதுவேணா எடுத்துக்குங்க சர்க்கரை நோய்க்கு. கூடவே கீழ்க்கண்டவற்றையும் முயன்று பாருங்கள்.
************************************************************************************

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தும் வழக்கம் உள்ளவர்கள் அருந்தலாம். இல்லைனாலும் பரவாயில்லை.
க்ரீன் டீ டிஸ்போசபில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது வாங்கிக்குங்க.புதினா, எலுமிச்சை கலந்த க்ரீன் டீன்னா ரொம்பவே நல்லது. உங்க வீட்டிலேயோ, அக்கம்பக்கமோ இருக்கும் மாமரங்களில் இருந்து நல்ல இளம் மாவிலையாக நாலைந்து எடுத்துக்குங்க. துளசி கொஞ்சம் பூக்காரி கிட்டேச் சொல்லி வாங்கி வச்சுக்குங்க. வீட்டிலே நிறையத் துளசிச் செடி இருந்தால் அதிலே பறிக்கலாம். இல்லைனா வாங்கிக்கறதே நல்லது. மாவிலைகளைத் துண்டாக நறுக்கிக்கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன், அதே அளவு துளசி இலைகள், க்ரீன் டீ ஒரு பாக்கெட் போட்டு இருநூறு தண்ணீர் விடவும். கொஞ்சம் போல் மிளகு பொடி தூவவும். நல்லாக் கொதிக்க விடவும். பாதியாக வற்றும் வரைக்கும் கொதிக்கட்டும். பின்னர் வடிகட்டிச் சாப்பிடவும். கசக்கிறதுனு மூஞ்சியைச் சுளிக்கிறவங்க கொஞ்சம் போல் பனங்கற்கண்டு சேர்த்துக்கலாம். ஆனால் சேர்க்காமல் குடிக்கிறதே நல்லது.

இளம் கருகப்பிலை இலைகள் பத்து அல்லது பதினைந்து நன்றாக மென்று சாப்பிடவும்.

வில்வம், வேப்பிலை, துளசி மூன்றும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் இந்தக் கலவை உருண்டையை ஒரு கரண்டிமோரில் கரைத்துச் சாப்பிடவும். வெறும் தண்ணீரில் சாப்பிடுவது நல்லது. கசப்பு இருக்கும்கிறவங்க மோரில் சாப்பிடலாம். இது மூன்றையும் அடுத்தடுத்துச் செய்யலாம். பின்னர் ஒரு மணி நேரம் நல்ல நடைப்பயிற்சி. வீட்டுக்கு வந்ததும் சர்க்கரை இல்லாக் காபி பிடிச்சா அது, இல்லாட்டி, ஒரு தம்பளர் பால். பின்னர் அரை மணி, ஒரு மணிக்குள்ளாக நீங்க சர்க்கரை நோய்க்கு எடுத்துக்கும் மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்னர் காலை உணவு. இட்லி, கேழ்வரகு தோசை, சோள தோசை, கம்பு அடை, முருங்கைக்கீரை அடை, சப்பாத்தி போன்றவை. சட்னி என்றால் தக்காளி, கொத்துமல்லி, புதினா இவைகளில் சட்னி அல்லது வெங்காயம் சேர்த்தால் வெங்காயச் சட்னி. சட்னி பிடிக்கலைனா சாம்பார். கண்டிப்பாக இரண்டு இட்லி, அதிக பக்ஷம் மூன்று இட்லி தான் சாப்பிடணும். தோசையும் மெலிசாக இருந்தால் மூன்று, கனமாக இருந்தால் இரண்டே இரண்டு தான். சப்பாத்தி காலை வேளைக்கு இரண்டு போதும், ஏதாவது காய்கள் போட்ட கூட்டோடு. இதோடு ஆடை நீக்கிய தயிர் கடைந்த மோர் ஒரு டம்பளர்.

பதினோரு மணிக்குக் கேப்பைக் கூழ் மோர் விட்டு ஒரு தம்பளர் அல்லது ஓட்ஸ் கஞ்சியில் மோர் விட்டு ஒரு டம்பளர். காய்கறிச் சாறு பிடிக்கும்னால் காய்கறிச்சாறு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு ஒரு டம்பளர். சாறு எடுக்கவேண்டிய காய்கறிகள்:

வாழைத்தண்டு, வெள்ளரிக்காய்,முள்ளங்கி, தக்காளி, புதினா, கொத்துமல்லி இலை,கீரைகளில் ஏதாவது ஒன்று ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது, இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்தச் சாறு சாப்பிடலாம். அவங்க காரட், பீட்ரூட்டும் சேர்த்துக்கலாம். இது எல்லாமும் போட்டு அரைச்சுத் துணியில் வடிகட்டி எலுமிச்சம்பழம் பிழிஞ்சுச் சாப்பிடலாம். இதிலேயே உப்பு இருக்கும் என்பதால் உப்புப் போடத் தேவையில்லை. வேணும்னா கொஞ்சம் போல் தூவிக்கலாம்.

பனிரண்டரை மணிக்குச் சாப்பாடு. கீரை மசியல் ஏதாவது ஒன்று அல்லது பருப்புப் போட்டுச் சுண்ட வைத்த கீரை, வேக வைத்த காய்கள், சாலட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி எதாவது ஒன்றில். மிளகு பொடி உப்புப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி தூவிச் சாப்பிடணும். தட்டில் இவற்றை நிறைய வச்சுக்கணும். சாம்பார், ரசம், மோருக்கு ஒரு கைப்பிடி சாதம். சாதம் கட்டாயமாய்க் கஞ்சி வடிச்சிருக்கணும். புழுங்கலரிசி பழக்கமானவர்கள் அது சாப்பிடலாம். பச்சரிசினா நிறையத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கஞ்சியை வடிச்சுட்டுத் தான் சாப்பிடணும்.

சாயந்திரம் நாலு மணிக்கு மறுபடியும் மாவிலை, துளசி,க்ரீன் டீ போட்டுக் கஷாயம். அரை மணி கழிச்சு அல்லது பசி எடுத்தால் ஏதானும் ஒரு பயறுச் சுண்டல் அல்லது ஓட்ஸ் உணவு வகைகள். சர்க்கரை இல்லாத தேநீர் நல்லது. பிடிக்கலைனா பால் மட்டும் சர்க்கரை சேர்க்காமல். மறுபடியும் நடைப்பயிற்சிக்குப் போகணும். வேலைக்குப் போறவங்க ராத்திரி சாப்பாடு ஆனதும் நடக்கலாம். ராத்திரி ஏழரை மணிக்குள்ளாக சாப்பிட்டு முடிச்சுடணும். இரண்டு சப்பாத்தி, கூட்டு, தேவை என்றால் ஏதானும் ஒரு தால். ராத்திரி படுக்கும்போது இளம்சூடாக ஒரு தம்பளர் பால். நிச்சயமாய்ச் சர்க்கரை அளவு குறையும். குறைஞ்சுடுச்சேனு மறுபடி எல்லாம் சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. குறைந்ததை அப்படியே வச்சுக்கணும் இல்லையா? அதனால் இனிமேல் ஜென்மம் முழுக்க இதைக் கடைப்பிடிக்கணும். நடுவில் சர்க்கரை ரொம்பக் குறைஞ்சால் படபடப்பு, மயக்கம் வந்தால் எலுமிச்சைச் சாறு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, (வெல்லம் நல்லது) அல்லது ஒரு சாக்லேட், கடலை மிட்டாய் போன்றவை வாயில் போட்டுக்கணும்னு அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும்.

இந்தக் கஷாய முறையும் தெரிஞ்சிருக்கிறவங்க இதை இங்கே நான் இடுவதற்கு மன்னிக்கவும். இப்போதெல்லாம் குடும்பத்தில் இருவருக்காவது சர்க்கரை நோய் இருப்பதால் அனைவருக்கும் தெரிஞ்சே தான் இருக்கும். ஆகையால் தெரிஞ்சவங்க மன்னிக்கவும்னு மறுபடி கேட்டுக்கிறேன். சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு சர்க்கரை நோயாளிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலாம். அனைவருக்கும் நோய், நொடியில்லாமல் இருக்கவும் வாழ்த்துகள். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கஷாய முறைகள் அவங்க என்ன மாதிரியான உணவு முறையைப் பின்பற்றினாலும் எடுத்துக்கொண்டு பலனடையும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோரும் நலமாக வாழவும் வேண்டுகிறேன்.

Wednesday, July 21, 2010

கண்ணன் வருவான் கதை சொல்லுவான், 2 -ம பாகம்

கண்ணன் தன்னை தயார் செய்து கொள்கிறான்


மலையில் கிடைத்த ஒருவித செந்நிறக்கற்களை அந்த யாகக் குண்டத்தில் கண்ணன் இட்டான். அவை அந்த நெருப்பில் சிவந்த ரத்தினங்களைப் போல் ஒளிர்ந்தன. அவை தீயின் வெம்மையில் உருக ஆரம்பித்தன. கற்கள் உருகுகின்றனவா?? ஆச்சரியமாய்ப் பார்த்தான் கண்ணன். ஆம் அவை உருகுகின்றன. உருக்கிய அந்தக் குழம்பு நன்றாக ஆறியதும் கண்ணன் அதை எடுத்தான். தூக்கமுடியாமல் கனமாக இருந்த அந்தக் குழம்பு வட்ட வடிவில் இருந்த்து. அதைக் கொண்டு போய்த் தன் வாளினால் அதை வெட்ட நினைத்தான். வாள் இரண்டு துண்டாயிற்று. அம்பின் நுனிகளால் குத்தி ஓட்டை போட நினைத்தான் அம்பின் நுனிகள் துண்டு துண்டாய் ஆகிவிட்டன. ஆஹா, எத்தனை வலிமையானதொரு ஆயுதம்?? இந்திரனின் வஜ்ராயுதமோ? அவ்வளவு பலத்துடன் இருக்கிறதே? என் வேண்டுகோளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் இந்திரன் செவி சாய்த்துத் தன் வஜ்ராயுதத்தையே கொடுத்துவிட்டான் போலும். இது நிச்சயமாய்க் கடவுளர் தனக்கு அளித்த பரிசு தான். மேலும்மேலும் செந்நிறக் கற்களைக் கொண்டு வந்த அந்த யாகத் தீயில் போட்டு இதே மாதிரியான ஆயுதங்களை உருவாக்கினார்கள் கண்ணனும், கருடன் விநதேயனும். ஆனால் அங்கே பலராமனோ?

மதியத்துக்கு மேலே எழுந்திருக்கும் பலராமன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தைக் கண்டு பிடித்துச் சுற்றி அலைந்து விட்டு வருவான். அன்றும் அப்படியே செல்லும்போது ஒரு மலைச்சரிவில் மயக்க வைக்கும் நறுமணம் அவனைக் கவர்ந்தது. மணம் எங்கிருந்து வருகிறது என்று தேடிப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தபோது எங்கும் காணமுடியவில்லை. அந்த மாதிரியானதொரு மணத்தை அவன் வாழ்நாளில் அவன் நுகர்ந்ததில்லை. மேலும் சற்றுத் தூரம் சென்றான். அங்கே ஒரு பெரிய மரம், அதன் வேருக்குச் சற்றே மேலே இருந்து பால் போன்றதொரு திரவம் வடிந்து கொண்டிருந்தது. நறுமணம் அங்கிருந்துதான். பலராமன் அந்த மரத்தை நோக்கிச் சென்றான். இரு உள்ளங்கைகளையும் குவித்துக்கொண்டு அந்தப் பாலைக் கையில் ஏந்தினான். வாயில் வைத்துச் சுவைத்தான். ஆஹா, என்ன சுவை, என்ன சுவை! இப்படி ஒரு சுவையை இதுவரையிலும் அறிந்தானில்லை. அது முழுதும் குடித்துவிட்டு மேலும் பாலை ஏந்திக் குடித்தான். ஆஹா, என்ன இது? அவன் உடலே லேசாகி மிதக்கிறதே! அண்ணாந்து பார்த்தான். நீல நிற வானம் அவன் கண்களுக்கு ஒளிமயமாய்த் தெரிந்த்து. சுற்றிலும் உள்ள மரம், செடி, கொடிகளெல்லாம் ஆநந்தம் தாங்காமல் தலையை ஆட்டித் தன்னைக் கண்டு நகைப்பது போல் இருந்தது. அவனுக்கு சந்தோஷமாய்ப் பாடவேண்டும், ஆடவேண்டும் என்றெல்லாம் தோன்றியது.

மேலும் மேலும் அந்தப்பாலை ஏந்திக் குடிக்கக் குடிக்க இப்போது பூமியே அவன் காலின் கீழ் நர்த்தனமாடுவது போலவும், அனைத்து மக்களையும் அணைத்துக்கொண்டு ஆநந்தமாய் ஆடிப் பாடவேண்டும் போலவும் தோன்றியது பலராமனுக்கு. இவ்வுலகில் உள்ள எவரும் தனக்கு விரோதிகள் இல்லை எனவும், அனைவரும் நண்பர்களே என்றும் தோன்றியது. தங்கள் குடிசையை நோக்கிச் சென்றான். அங்கே கண்ணன் தனக்கென ஒரு கதாயுதம் செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. பாவம், வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியாமல் இப்படி எப்போது ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கிறானே? இந்த இளவயதில் வாழ்க்கையை அநுபவிக்க வேண்டாமோ? ம்ம்ம்ம்?? அந்த அமிர்தம் போன்ற சுவையான பாலை நாளைக்குக்கண்ணனுக்கும் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். தட்டுத் தடுமாறிக்கொண்டு வந்த பலராமன், “கண்ணா, என்னடா எப்போப் பார்த்தாலும் வேலை செய்து கொண்டிருக்கிறாயே? வாழ்க்கையையும் கொஞ்சம் அநுபவி அப்பா! “ என்றான். கண்ணன் நிமிர்ந்து பார்த்தான். பலராமனின் நிலையைக் கண்டதும் ஆச்சரியத்துடன், “அண்ணா! உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படித் தள்ளாடுகிறாய்? “ என்று கேட்டான்.
“அமிர்தம் தம்பி அமிர்தம்! அமிர்தம் குடித்து வந்தேன். இந்த கோமந்தக மலையின் மரங்கள் அமிர்தத்தை வர்ஷிக்கின்றன. இன்று தான் அதைக் கண்டறிந்தேன். வா, வா நீயும் வா! அமிர்தத்தை அருந்தலாம், வா.” என தம்பியையும் அழைத்தான். பலராமனின் நிலையைப் புரிந்து கொண்டான் கண்ணன். அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “என் கதாயுதத்தைச் சரி செய்துவிட்டேன். பயன்படுத்தும் நிலையில் உள்ளது. உன்னுடையதை எப்போது சரி செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

“கதை! கதை! எனக்கு எதுக்குக் கண்ணா கதாயுதம் எல்லாம்? அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?”

“பின்னர் எப்படிச் சண்டை போடுவது ஜராசந்தனோடு?”

“ஹூ???” கண்ணன் ஏதோ சொல்லக் கூடாத விஷயத்தை வெளிப்படையாய்ச் சொல்லிவிட்ட மாதிரி பலராமன் பார்த்தான். “எனக்குக் கதாயுதம் தேவையில்லை!” என்றான். சுற்றும்முற்றும் பார்த்தான். அங்கே சில கருடர்கள் தங்கள் நிலத்தை உழுதுகொண்டிருந்தது அவன் கண்களில் பட்டது. அவர்களை நோக்கிச் சென்றான். அவன் நடை தள்ளாடியது எனினும் அவர்களில் ஏரை வைத்து உழுதுகொண்டிருந்த கருடன் ஒருவனிடம் சென்று அவன் உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்த கலப்பையைப்பிடுங்கினான். சாதாரணமாக நாலுபேர் சேர்ந்து தூக்கவேண்டிய அந்தக் கலப்பையை அவன் ஒருவனே அசாதாரணமாய்த் தூக்கிக்கொண்டு தோளில் சார்த்திக் கொண்டான். “கண்ணா! எனக்குக் கதாயுதம் எல்லாம் வேண்டாம். ஜராசந்தனோடு போரிட என் ஆயுதத்தை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். வரச் சொல் அவனை! ஒரு கை பார்த்துவிடலாம்!” என்றான். கலப்பையைத் தூக்கி எறிந்துவிட்டுக் கீழே படுத்து உறங்கத் தொடங்கினான்.

ஒரு நாள் கண்ணன் இளவரசன் விநதேயனுடன் கோமந்தக மலையைக் கடல் சுற்றி இருக்கும் பகுதிக்குச் சென்றபோது அது ஒரு தனித் தீவு போல் தென்பட்டதைக் கண்டான். எப்போதோ அந்தப் பகுதியைக்கடல் அரித்து அந்த மலைப் பகுதி மட்டும் தனியாக இருந்ததையும் முக்கிய நிலத்திற்கு அது ஒரு பாலம் போல் செயல்பட்டதையும் கண்டான். அந்த இடம் சற்று மறைவாக இருந்ததையும் கண்ட கண்ணன் ஒரு சமயம் ஆபத்து என ஏற்பட்டால் இந்த இடம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு பக்கம் மலைக்காடுகளும், மற்றப் பக்கம் கடல் நீரும் இருப்பதால் அதைத் தாண்டி எவரும் வர முடியாது என்றும் கண்டறிந்து கொண்டான். திரும்பிக்குடிசைக்கு வந்த கண்ணனுக்கு பலராமன் அங்கே கருடர்களோடு சந்தோஷமாகச் சல்லாபம் செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. பலராமன் கண்ணனையும் அழைத்தான். “கண்ணா, இதோ பார், இந்த இளைஞர்களோடும், இளம்பெண்களோடும் விளையாடிக் களிக்கலாம். நேரத்தை எப்போது வேலைகளிலேயே செலவிடுகிறாயே?” என்று அழைத்தான். மேலும் “எப்போது ஜராசந்தனையே நினைத்துக்கொண்டிராதே.” என்றும் சொன்னான். கண்ணன் சிரித்தான். “ஜராசந்தன் சீக்கிரம் இங்கே வந்துவிடுவான் என நினைக்கிறேன். நீ இப்படியே உன் வாழ்க்கையைத் தொடர்ந்தாயானால் ஜராசந்தனோடு சண்டை போட உன்னிடம் பலம் இல்லாமல் போய்விடும். உன் வீரம் குறைந்துவிடும்.” என்றான்.

“வரச் சொல் ஜராசந்தனை! காத்திருக்கிறேன் நான்!” என்று உரத்த குரலில் கர்ஜனை செய்தான் பலராமன். கருடன் விநதேயனுக்கு இப்போது கண்ணனும், பலராமனும் பேசும் மொழியும், கண்ணனுக்கும் இப்போது கருடர்களின் மொழியும் பழகி விட்டிருந்தது. அடிக்கடி கரவீரபுரத்திற்குச் சென்று வரும் விநதேயன், ஒருநாள் அப்படிச் சென்றுவிட்டுச் சற்றுப் பரபரப்போடு வந்தான். கண்ணனைப்பார்த்து, “என் தெய்வமே! கரவீரபுரத்துக்கு யாரோ முக்கிய விருந்தாளி,மிகப்பெரிய மனிதராமே ? பெரிய சக்கரவர்த்தியாமே? வரப் போகிறாராம், ஸ்ரீகாலவன் அவரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டிருக்கிறான்.” என்று கூறினான்.

“யார் அது? பெயர் என்ன? “ என்று கேட்டான் கண்ணன்.

“ம்ம்ம்ம்???? மறந்துவிட்டேனே!”கருடனுக்கு வருத்தம்.

“ஜராசந்தன் என்று சொன்னார்களா?”

“ஆஹா, ஆம் பிரபு, அது தான், அதுவே தான். ஜராசந்தன் என்னும் சக்கரவர்த்தியே தான்! அவனோடு அவன் நண்பர்களான மற்ற அரசர்களும் வருகின்றனராம். அனைவரையும் ஸ்ரீகாலவன் தான் அழைத்திருக்கிறானாம்.”

Monday, July 19, 2010

பிள்ளையாருக்கு நன்றி.

இரண்டு மாதமாகவே கூகிளார் உள்ளே நுழையும்போதெல்லாம் மிரட்டிட்டு இருந்தார். உள்ளே நுழைந்து பாஸ்வேர்ட் போட்டால் போதாது. உடனேயே வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்பார். அதை லக்ஷியம் செய்யாமல் மீண்டும் மீண்டும் பாஸ்வேர்ட் மட்டும் போட்டாலோ, முதல்லே வேர்ட் வெரிஃபிகேஷனை கிளியர் பண்ணு, சரியான பாஸ்வேர்ட் போட்டாலும் வேர்ட் வெரிஃபிகேஷனிலும் பாஸாகணும்னு சொல்லிடுவார். சரினு அப்படியே போயிண்டு இருந்தேன். இரண்டொருவர் கிட்டே கேட்டும் பார்த்தேன். அவங்க எல்லாம் பாஸ்வேர்ட் தப்பாய்ப் போட்டிருப்பேனு தான் சொன்னாங்க. ஆனாலும் எனக்கு நிச்சயமா பாஸ்வேர்ட் தப்பில்லைனு தெரியும். சரி, அதான் மெயில் திறக்குதேனு பேசாமல் இருந்தேன். இன்னிக்குக் காலம்பர மெயில் பார்க்கும்போது ஒண்ணும் பிரச்னை இல்லை.

மத்தியானமா ஒரு முக்கியமான மெயில் பார்த்துட்டு பதில் கொடுத்துவிட்டு அதை அனுப்பும்போது நீ லாக் அவுட் பண்ணியாச்சு திரும்ப லாகின் பண்ணுனு மெசேஜ் வருது. சில சமயம் கூகிளில் இப்படி வரும். ஒருவேளை நெட் கனெக்ஷன் சரியில்லையோனு பார்த்தால் எப்போதையும் விட வேகம். சரினு மறுபடியும் லாகின் பண்ணினால் அக்கவுண்ட் டிசேபிள்னு செய்தி வருது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு திரும்பத் திரும்ப முயன்றால் அரைமணிக்கப்புறமா temporarily disabled அப்படினு வருது. சரினு கொஞ்சம் சமாதானம் ஆச்சு. அதிலே கூகிளார் சொன்னபடி எல்லாம் பண்ணி அவங்க கொடுத்த கோட் நம்பரைப்போட்டால் எரர்னு சொல்லுது. மறுபடி மறுபடி அதே கோட் நம்பர், போடப்போட அதே எரர்னு பதில். மெளலியும் அந்த நம்பரைப் போட்டால் சரியாகும்னு தான் சொன்னார்.

மறுபடி உதவிக்குப் போய் அவங்க கேட்டதை எல்லாம் சொன்னேன். அப்படியும் ஒண்ணும் பிரயோஜனமில்லை. அதுக்குள்ளே எல்கே தொலைபேசி உதவிக்கு வந்தார். அவரும் அவர் இடத்தில் இருந்து முயன்று பார்த்தார். இப்போ என்னடான்னா ப்ரொஃபைலே இல்லைனு வருது. பதிவுகள் எல்லாம் எடுத்தாச்சுனு மெசேஜ் வருது. அது போகட்டும், மெயில் திறந்தால் போதும், சில முக்கியமான வேலைகள் இருக்கே! வெறுத்துப் போய்க் கணினியை மூடிட்டேன். வீட்டில் வேலையை எல்லாம் முடிச்சுட்டு மறுபடி பார்த்தால் இப்போ எல்கே பதிவுகள் தெரியுது, சாயந்திரமா மறுபடி முயற்சி பண்ணுங்கனு மெசேஜ் கொடுத்தார். உடனே ஒரு நப்பாசை. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு. மறுபடிமுயன்றேன். மறுபடி எல்லா விபரமும் கேட்க எல்லாத்தையும் கொடுக்க இப்போ வேறே கோட் நம்பர். சரினு அதையும் விடாமல் போட்டுப் பார்த்தால் என்ன ஆச்சரியம்? கூகிள் மெயிலுக்குப் போச்சு. அங்கே பழைய பாஸ்வேர்டைக் கொடுத்தால் உடனேயே பாஸ்வேர்ட் மாத்தச் சொல்லி அந்தப் பக்கத்துக்குப் போச்சு. கூடவே கூகிளாரின் மெசேஜும். We detected some unauthorised phishing in your mail id. அப்படினு. அதனால் மூடினாங்களாம். என்னவோ தெரியலை. அப்படி எல்லாம் நடக்காதுனு சொல்றாங்க. ஆனால் எனக்குத் தான் எல்லாமே அதிசயமா நடக்குமே. நடந்துடுச்சு! பாஸ்வேர்ட் மாத்தினதுமே என்ன ஆச்சரியம்? அந்த மெயில் இன்பாக்ஸும் திறந்தது. ஆனால் பார்த்தவரைக்கும் அதிலே சில ப்ரைவேட் மெயில்களைக் காணோம். அது ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லைனு விட்டுட்டேன். மத்தது இன்னும் நல்லாப் பார்க்கணும். பஸ்ஸில் ஒரு மெசேஜ் கொடுத்திருந்தேன். அதையும் காணோம். போனால் போகட்டும். இந்த மட்டும் திரும்பக் கிடைச்சதே அதுவே அதிர்ஷ்டம் தான். உதவிக்கு வந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

ஜி மெயில் பிரச்னை !

Account temporarily disabled
To immediately restore access to your account, enter your mobile phone number below, and we'll send you a text message with a verification code.
Verification Options
Text Message
Google will send a text message containing a verification code to your mobile phone.
Voice Call
Google will make an automated voice call to your phone with a verification code.
Country
Mobile phone company
Mobile phone number
Phone number
If you're having trouble verifying your account, please report your issue.

If you are unable to restore your account using a mobile phone, you can also contact support for further assistance.

We apologize for the inconvenience. Accounts may be disabled because of a perceived violation of either the Google Terms of Service or product-specific Terms of Service. Learn more

என்னால் என்னுடைய geethasmbsvm6@gmail.com ஐடிக்கு செல்ல முடியவில்லை. மேற்கண்ட செய்தி வருது. இது ஜி மெயில் அனுப்புவது தானா என்று நிபுணர்கள் சொல்லுமாறு கேட்கிறேன். நன்றி.

Saturday, July 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம பாகம்

பலராமனின் சிந்தனையும் கண்ணனின் கவலையும்


கோமந்தக மலைப்பகுதிக்கு வந்ததில் இருந்தே பலராமனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது. சொந்த வீட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தான். சுபாவமாகவே பலராமன் அனைவராலும் எளிதில் அணுக முடிபவனாகவும், எல்லோருடனும் ஒத்துப் போகிறவனாகவும் வெளிப்படையானவனாகவும் இருந்தான். இருப்பான், இன்னும் அப்படியே இருக்கிறான். எதையும், எவரையும் கெடுதலாக நினைக்காமலோ, பார்க்காமலோ இருப்பது அவன் பிறக்கும்போதே கொண்டு வந்த வரமாகவும் அமைந்திருந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து அதன் சுக, துக்கங்களை அப்படியே அநுபவிக்கவும் விரும்பினான். அப்படியே நடந்தும் வந்தான். கவலைகளோ, கஷ்டங்களோ தன்னைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டான். துச்சமெனக் கருதினான் அவற்றை. ஆனால் சிறு வயதில் இருந்தே, குழந்தைப் பருவத்திலிருந்தே தன்னையும், தன் தம்பியான வாசுதேவ கிருஷ்ணனையும் சுற்றிப் பின்னப் பட்டிருந்த தெய்வீக வலையை அவன் புரிந்து வைத்திருந்தான். தன் அருமைத் தம்பியாலேயே தனக்கும் இத்தகையதொரு தெய்வீகத்தன்மை உள்ளவன் என்ற பெயர் கிடைத்தது என்பதில் அவனுக்குச் சந்தேகமும் இல்லை. அவன் வரையில் கண்ணன் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதிலும் சந்தேகம் இல்லை. கண்ணனை விடப் பெரியவனான தன் மீது கண்ணன் வைத்திருக்கும் பக்தியாலேயும், அன்பாலேயேயுமே அவன் தன்னையும் சேர்த்து இந்த வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறான் என்றே எண்ணினான். தான் ஒரு சாமானியன் என்பதே அவன் கருத்து. கண்ணனாலேயே தனக்குப் புகழ் என்பதை அவன் உறுதியாக நம்பினான். இருவரையும் எவராலும் பிரிக்கமுடியாமல் அனைத்து சாகசங்களிலும் கண்ணன் பலராமனையும் சேர்த்துக் கொண்டிருந்தான். ஆனால் பலராமனுக்கோ தன் அருமைத் தம்பியான கண்ணனின் புத்தி சாதுர்யத்திலும், வீரத்திலும், தைரியத்திலும், சாகசங்களிலும், அவன் அன்பிலும், கருணையிலும், பாசத்திலும், நேசத்திலும் அபாரமான நம்பிக்கை. பலராமன் வரையில் கண்ணன் ஒரு தெய்வீகமான பிறவி என்றே நம்பினான். தன்னையும் அத்தகையதொரு தெய்வீகத்தில் சேர்ப்பது அவனுக்கு உள்ளூரப் பிடிக்கவில்லை.

ஆனால் மதுரா வந்ததுமே முற்றிலும் நிலைமை வேறாகி விட்டிருந்தது. அங்கே அவன் தாய், தந்தையில் இருந்து, பெருமதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய அக்ரூரர் வரை, மற்றும் யாதவத் தலைவர்கள் அனைவருமே, அவ்வளவு ஏன் மதுராவின் சாமானிய மக்கள் வரையிலும் இருவரையும் அவதார புருஷர்களாகவே கருதினார்கள். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவர்கள் செய்த வீர, தீரச் செயல்கள் இங்கே பயபக்தியோடு மெல்ல ரகசியமாகப் பேசப் பட்டன. அவர்கள் இருவரையும் கண்டால் அனைவரும் பக்தியும், மரியாதையும் செலுத்தினார்கள். நட்போடு பழகுவதற்கு எவரும் இல்லை. அவ்வளவு ஏன்? அவர்கள் குரு சாந்தீபனி கூட இருவரையும் அவதார புருஷர்களாகவே மதித்தார். இப்படிப் பட்ட நிலைமையில் தான் மதுராவை விட்டு ஓடும்படி ஆனது. இங்கே இந்த கோமந்தக மலைப்பகுதிக்கு வந்தாயிற்று. இங்கே எதுவும் தடை இல்லை. கருடர்கள் இயல்பாகவே எதையும் எளிதாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் வாழ்வில் இயல்பாகவே உற்சாகமும், சந்தோஷமும் கலந்திருந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தலைப்பட்டனர். அவர்கள் நன்கு சாப்பிட்டார்கள், நன்கு குடித்தார்கள், நாட்டியம் ஆடிப் பாட்டுக்கள் பாடிப் பொழுதைக் கழித்தனர். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி சிரித்துக் குதூகலமாய் இருந்தனர். பலராமனுடைய சுபாவத்திற்கு இது தான் ஒத்து வந்த்து. ஆகவே அவனுக்கு இந்த கோமந்தக மலையில் வாழும் வாழ்க்கை பிடித்திருந்தது.

மலையில் அங்கும், இங்கும் தாவிக் குதிப்பதும், ஒரு சரிவில் இருந்து இன்னொரு சரிவிற்குத் தாண்டிக் குதிப்பதும், ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் பறப்பது போல் குதிப்பதும் அவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. கருட இனத்துப் பெண்களோ எனில் நடப்பதாய்த் தெரியவில்லை. நடையே நாட்டியமாய் இருந்தது. இவர்கள் வேலையும் அதிகமாய்ச் செய்து தங்களை வருத்திக்கொள்வது இல்லை. மலைக்கு அந்தப் புறம் இருந்த தென்னை மரங்களின் தேங்காய்கள் அவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தது. உணவு, உடை, இருப்பிடத்திற்குத் தேவையான பொருட்கள், தூங்குவதற்கான பாய், அடுப்பு எரிக்கத் தேவையான எரிபொருட்கள் என அனைத்தையும் கொடுத்தது. பலராமனுக்கு இந்த வாழ்க்கை மிகப் பிடித்திருந்தது. அவன் உணர்வுகளால் கருடர்களோடு கலந்து விட்டான் என்றே சொல்லலாம். அவர்களோடு சேர்ந்து ஆடிப் பாடிப்பொழுதைக் கழித்தான்.காலையில் சூரியோதயம் ஆகி வெகு நேரம் கழித்தே எழுந்திருப்பான். கண்ணன் அவனை இந்த மலையில் நன்கு தேடிப் பார்த்து ஜராசந்தன் வரமுடியாதபடிக்குக் கோட்டை அரண்போன்ற இடத்தைத் தேடலாம் என அழைப்பான். பலராமோ நகைப்பான். கண்ணனுக்கு வாழ்க்கையை அநுபவிக்கத் தெரியவில்லையே என்று அவனிடம் கேலி செய்வான். ஜராசந்தன் இவ்வளவு தொலைவெல்லாம் வரமாட்டான், பயப்படாதே என்பான்.

கண்ணனோ எதற்கும் நாம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்று கூறுவான். பலராமனோ அதை அலட்சியம் செய்தான். கண்ணன் அவனை அவன் போக்கில் விட்டுவிட்டான். ஆனால் அவன் விநதேயன் துணையோடு தனக்குத் தேவையானவற்றைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டான். விநதேயன் கண்ணனின் நிழல் போல் செயல்பட்டான். கண்ணன் செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் சென்றான். அவன் தந்தையோ கண்ணனிடம் மிகவும் பயபக்தியோடும், நன்றியோடும் இருந்தான். கண்ணன் விநதேயனின் துணையோடு அந்த மலைப் பிராந்தியம் பூராவையும் ஒவ்வொரு மூலை, முடுக்கையும் நுணுக்கமாக அறிந்து கொண்டான். ஓய்ந்த பொழுதுகளில் தர்மத்தை எப்படி நிலைநாட்டுவது என்று யோசித்தான். தன் குலத்து முன்னோர்களில் தர்மத்தில் சிறந்தவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தான். மனிதனாகப்பிறந்ததும், க்ஷத்திரியனாக இருப்பதும் அதற்குரிய தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவன்றி வேறு எதற்கும் இல்லை எனத் தெளிந்தான். சில சமயங்களில் விருந்தாவனத்தில் தன்னந்தனியாக இருக்கும் நந்தகோபனையும், யசோதா அம்மாவையும் நினைத்துக்கொள்வான். அவனையும் அறியாமல் ராதையின் நினைவும் வரும். உடனேயே பெற்றெடுத்த தாய் தேவகியின் நினைவும், வசுதேவரின் நினைவும், கம்சனைத் தான் கொன்று அவர்களைக் காப்பாற்றியதும், அதற்காக ஜராசந்தன் தன்னைப் பழிவாங்க நினைப்பதும் நினைவில் வரும். தன் கடமைகள் முன்னே விரியும். தான் செய்யவேண்டிய செயல்களை நினைத்துக்கொள்வான். யாதவ குலமே தன்னை நம்பி இருப்பதை உணர்வான். நாககன்னி ஆஷிகாவின் பிடிகளில் இருந்து தப்பி வந்ததை நினப்பான்.

இத்தனைக்கும் நடுவில் அந்தப் பொல்லாத மனம் சில சமயம் விதர்ப்பநாட்டுக்குப் போகும். அங்கே இருக்கும் விதர்ப்ப இளவரசி ருக்மிணியின் தைரியமான பேச்சுக்களில் நினைவு போகும். அவள் தனக்காகச் செய்த உதவிகளில் மனம் மகிழும். அவள் கண்கள்! அவள் தனக்கு உதவி எதற்காகச் செய்தாள்? ம்ம்ம்ம்?? அவள் கண்கள்! ஆஹா, இந்தப் பொல்லாத மனம் வேண்டாதவற்றை நினைக்கிறதே! நான் இன்னும் அவர்கள் கண்களுக்கு முன்னர் ஒரு இடைச்சிறுவன் தானே! அவளோ ஒரு சக்கரவர்த்தியின் ஒரே குமாரி. காற்றடித்தால் கூடப்பறந்துவிடுமோ என்னும்படியாக மெல்லிய தேகம்! சீச்சீ, இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது. அவள் அண்ணன் ருக்மி ஜராசந்தனோடு சேர்ந்துவிட்டானாமே! அவள், அந்த ருக்மிணிக்கு அது பிடிக்கவில்லை. என்னோட நட்புப் பாராட்டவேண்டும் என்றே சொல்கிறாள். அதற்காக அவள் அண்ணனோடு சண்டை போட்டிருக்கிறாளே! ம்ம்ம்ம்ம்! ஜராசந்தன் என்று இங்கே தேடிப் பிடித்துக்கொண்டு வருவானோ தெரியாது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல் நான் இப்படி எல்லாம் யோசிக்கிறேனே! அட! உத்தவன்!

அவனை எப்படி மறந்தேன்! வாய்விட்டு எதுவும் பேசுவதில்லை அவன். அவசியம் இருந்தால் தான் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறான். நான் சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்கிறானே. அவனாகவே என் விருப்பத்தைப் புரிந்து கொண்டும் நிறைவேற்றுகிறானே. ஜராசந்தன் என்னைப் பிடிக்க விரித்து வைத்திருக்கும் வலையைக் கூட இப்போது உத்தவனின் சாமர்த்தியத்தைத் துணைக்கொண்டே அறுக்கவேண்டும். மனதில் இத்தனை எண்ணங்கள் இருந்தாலும் கருடர்களோடு கலந்து பழகுவதிலேயோ, அவர்களின் கொண்டாட்டங்களை ரசிப்பதிலேயே கண்ணன் பின்வாங்கவும் இல்லை. மேலும் அவர்களுக்குத் தனக்குத் தெரிந்த இசையைக் கற்றுக் கொடுத்தான். அவர்களுக்குள் சின்னச் சின்னதாய்ச் சண்டைகள் வரும்போது சமாதானம் செய்வித்தான். இப்படி அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் கலந்து கொண்டு தானும் அவர்களில் ஒருவனே என்னும்படியாக நடந்து கொண்டான். அனைத்துக்கும் மேலாகத் தன்னையும், பலராமனையும் ஆயுதபாணியாக்கவேண்டும் என்பதிலும் கண்ணன் உறுதியாக இருந்தான். தக்க ஆயுதங்கள் இல்லாமல் ஜராசந்தனை வெல்வது கடினம் என்பதையும் உணர்ந்திருந்தான். அந்த நாட்களில் சண்டை என்பது படைகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட இருவரின் வெற்றி, தோல்வியிலும் ஒரு ராஜ்யத்தின் நிலைமை நிர்ணயிக்கப் பட்டது. ஆகவே அதை எதிர் கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் ஆயுதங்கள் செய்யும் முறைகளும் கட்டாயமாய்த் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அவரவர் சொந்த ஆயுதங்களையே பெரும்பாலும் நம்பினர். கண்ணனும், பலராமனும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் ஆயுதங்கள் தயாரிக்கவும் பயிற்சி பெற்றிருந்தனர். ஆகவே கண்ணன் தனக்கென சொந்தமாய் ஒரு வில், அம்புகளோடு கூடியதாகவும், முட்களோடு கூடிய கதாயுதமும் செய்ய ஆரம்பித்தான். எல்லாவற்றையும் விட அவனுக்குச் சக்கராயுதம் தான் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அது சுற்றிக்கொண்டே போய் எதிராளியை வீழ்த்திவிட்டுத் திரும்ப அவனிடமே வந்தும் விடும்.


கருடர்களின் தலைவன் உதவியோடும், அநுமதியோடும் கண்ணன் அங்கே இருந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து விநதேயன் தலைமையில் ஒரு சிறு படையை உருவாக்கினான். அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களுக்கு அங்கே கிடைத்த தாமிரத்தை நெருப்பில் இட்டுத் தயாரிக்கச் சொல்லிக் கொடுத்தான். ஒவ்வொன்றும் தயாரிக்கும் முன்னர் அக்னிக்கடவுளை வேண்டிக்கொண்டு அதற்குரிய யாகங்களைச் செய்து, வழிபாடுகளையும் முறைப்படி செய்தான். இளவரசன் விநதேயன் துணையோடு அம்புகளில்பொருத்தும் கூர்நுனிகள், தனக்கென ஒரு சக்கரம், கதாயுதத்திற்கென கூர்மையான மேல்நுனி, கைப்பிடிப் பக்கம் பொருத்தும் நீண்ட பிடி போன்றவற்றையும் தயார் செய்தான். என்றாலும் சாந்தீபனியின் ஆசிரமத்தில் கற்கும்போது கொடுத்த ஆயுதங்களோடு ஒப்பிடுகையில் இவை மிகவும் சுமார் தான். கண்ணனுக்கு அவ்வளவு திருப்தியில்லைதான். என்றாலும் வேறு வழியில்லை. என்றாலும் கண்ணன் தினமும் யாகக்குண்டத்தின் எதிரே அமர்ந்து இந்திரனையும், அக்னியையும் மற்றக் கடவுளரையும் மனதாரப் பிரார்த்தித்தும் வந்தான். தன் கடமை தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழிப்பது என்றால் அதற்குரிய சக்தியையும், பலத்தையும் தரும்படி அவர்களைப் பிரார்த்தித்தான்.

Friday, July 16, 2010

எபிக் உலாவி மூலம் சோதனைப் பதிவு

நான் இந்தப்பதிவைச் சோதனையாக எபிக் உலாவி மூலம் பதிக்கிறேன். ஆஹா வந்துடுச்சு, மொழிக்கான ஆப்ஷன் இங்கேயும் இருக்கே, கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், யுரேகா! சோதனைப் பதிவு எபிக் உலாவி மூலம்.

இனி என்னுடைய உலாவல் இந்திய உலாவியிலேயே!

http://www.epicbrowser.com/
நேற்றோ முந்தாநாளோ அறிமுகம் செய்திருக்காங்க, முதல் இந்திய உலாவியை. எபிக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி இருக்கிறது. நேற்று மின் தமிழில் அதற்கான சுட்டி வந்திருக்கு. பார்க்கலை. இன்னிக்குப் பார்த்தேன், உடனேயே டவுன்லோட் செய்துட்டு, சாப்பாடு ஆனதும் மெதுவா அதில் மெயில் அனுப்பிப் பார்த்தேன். வேகம் நல்லாவே இருக்கு. டவுன்லோட் ஆனதும் இன்ஸ்டால் பண்ணியதும், உடனேயே நெருப்பு நரியிலே இருக்கும் குக்கீஸைச் சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிட்டு அப்படியே செய்திருக்கு. அதோட எந்த எந்தப் பதிவுகள் நான் இன்னிக்கு எழுதினதோ, சமீபத்தில் எழுதினதோ அதற்கான சுட்டி, அடிக்கடி செல்லும் பதிவுகளின் சுட்டி முதலியனவற்றை அதுவே சேமித்துவிட்டது. ஜிமெயிலில் தமிழில் அடிக்க வசதி இருக்கிறதால் மெயில் கொடுக்கும்போது சிரமம் தெரியவில்லை. பதிவுகளில் இனிமேல் தான் பார்க்கணும், எப்படிச் செய்யணும்னு. எப்படி இருந்தாலும் இது ஒரு அருமையான முயற்சி. முயன்று வெற்றிகரமாய்க் கொண்டு வந்த தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ரொம்பவே சந்தோஷமாய் இருக்கு. 
Posted by Picasa
ஜிமெயிலின் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டிருக்கேன். திறக்கும்போது தோகை மயில் வரும்படியான அமைப்பு. 
Posted by Picasa
மயிலைப் பார்த்ததுமே மனதுக்கு மகிழ்வாய் இருக்கு.

இந்தப் படங்களும் அதன் மூலமாய் சேமித்தவையே. உடனேயே டவுன்லோடில் இருப்பதெல்லாம் இடப்பக்கம் வருகிறது. நல்ல வேகம் தெரிகிறது. இது தொடர வாழ்த்துகளுடனும், மனம் கொள்ளாப் பெருமையுடனும்.


ராம்ஜி யாஹுவின் ஆலோசனையின் பேரில் தலைப்பில் சின்ன மாற்றம். நன்றி ராம்ஜி யாஹூ!

Wednesday, July 14, 2010

அப்புவும் இன்னும் மழலை பேசறதே!

இன்னிக்குக் காலம்பர அப்பு தொலைபேசியில் பேசினதா? பேசும்போது தான் அவ அம்மா கிட்டே அப்புவுக்கு "ர" வராதே, இப்போவும் அப்படியே சொல்றதானு கேட்டேன். என்ன மிஞ்சிப் போனால் ஒரு வயசு தான் கூடி இருக்கு. போன வருஷம் வரச்சே 2 வயசு, இப்போ 3 வயசுதான்னாலும் கொஞ்சம் சந்தேகம். அதுக்குள்ளே மழலை போயிருக்குமா என்ன? இருந்தாலும் சந்தேகம். அவ அம்மா கிட்டே கேட்டதுக்கு "ர" இன்னும் வரலைனு சொன்னா.அப்பாடினு இருந்தது. ஹிஹிஹி, அது "டோரா"வை "டோலா"னு சொல்லும் அழகு எங்கே போயிருக்குமோனு பயம். அதே மாதிரி அப்புவுக்கு "ட"வும் வராது. தாராளமா "த" போட்டுக்கும். உம்மாச்சி கிட்டே கோலத்தை அழிச்சுட்டுப் பாவ மன்னிப்புக் கேட்கறச்சே, "ஐ சோ சாலி, உம்மாச்சி, ஐ டிட் மீன் து" அப்படினு தானே சொல்லும். I did not mean to னு சொல்லணும்னு தெரியாது அப்புவுக்கு. சாரி கேட்கணும், மீன் து சொல்லணும். அவ்வளவே. எவ்வளவு சுலபமா முடிச்சுக்கும்??


இன்னிக்கு என்ன டின்னர்னு ராத்திரி கேட்காது. காலம்பர எழுந்ததும் கேட்கும். இன்னும் அதுக்கு காலம்பர எப்போ, மத்தியானம் எப்போ, ராத்திரி எப்போனு புரியலை. ஹிஹிஹி, நாம காலம்பர காலை உணவு என்னனு சொன்னா குட்டிக் குரலில் "வாவ்"னு சொல்லிக்கும். சப்பாத்தினு சொல்லிட்டாப் போதும், "சொதாப்பி?"னு அதோட மொழியிலே கேட்டு நிச்சயம் பண்ணிக்கும். அதுக்கு ரசமும் சாம்பார் தான், சாம்பார், மோர்க்குழம்பு எல்லாமும் சாம்பார் தான். மற்ற எது சாப்பிட்டாலும் சாம்பார் தான். என்ன சாப்பிட்டேனு யாராவது கேட்டால், "மம்மம், சாம்பார்"னுதான் சொல்லும். சாப்பிட்டது இட்லியா இருந்தாலும், தோசையா இருந்தாலும் அதுக்கு அது மம்மம் தான். அது இங்கே இருந்த வரைக்கும், அதுக்கு அப்புறமும் கொஞ்ச நாட்கள் நாங்களும் மம்மம் தான் சாப்பிட்டுட்டு இருந்தோம். அதையே காலம்பர நினைச்சுண்டு இருந்தேனா?? வருண், அருண்அநன்யாவோட பதிவு கண்ணிலே பட்டது. உடனேயே அப்பு நினைவு வந்தது.

அவ அக்காவை அங்கே குழந்தையா வச்சுத் தாலாட்டறதாம், பாட்டில்லே பால் எல்லாம் கொடுக்கிறதாம், இங்கே இருந்தவரைக்கும் எனக்குச் செய்துண்டு இருக்கும். அழணும்னு சொல்லும். அதுவே அழுது காட்டும், இப்படி அழணும்னு. நாம் அழுதால்(விளையாட்டுக்குனு புரியுமோ என்னமோ) சிரிக்கும். வேணும்னு பிடிவாதம் பிடிச்சுண்டு நாம மேலே அழுதால் அதுக்கு என்ன செய்யறதுனு புரியாது. திகைச்சுப் போயிடும். அப்புறமா அதுவே அழ ஆரம்பிச்சுடும். பாவமா இருக்கும். நாம தூக்கிண்டு சமாதானம் பண்ணணும். உதடு பிதுங்கிப் பிதுங்கி வரும். துக்கம் தொண்டையை அடைக்கும். அதைப் பார்த்தும் நாம சும்மா இருப்போமா? இன்னிக்குக் காலம்பர அது சாப்பிடற பழங்களை எல்லாம் சொன்னது. எங்கே எங்கே வெகேஷனுக்குப் போயிட்டு வந்தோம்னு எல்லாம் சொல்லத் தெரிஞ்சு போச்சு. எஃபண்ட், (ஆனை), டைனோசர் எல்லாம் பார்த்ததாம். Baby Giraffee பார்த்ததாம். மனசுக்குள்ளே தான் என்னமோ பெரிய மனுஷினு நினைப்பு. பேச்சு நிறைய வந்திருக்கு இப்போ. முன்னே எல்லாம் இந்தியா வரியானு கேட்டால், வரேன்னு சொல்லும், இல்லாட்டி அம்மாவோட வரேன்னு சொல்லும், இப்போ நீ வானு எங்களைக் கூப்பிடத் தெரிஞ்சிருக்கு. இன்னும் கொஞ்ச நாட்கள்/மாதங்கள் போனால் "ர"வும் வந்துடும், "ட"வும் வந்துடுமே! டோலாவை, டோரானும், மீன் து வை மீன் டுனும் சொல்ல ஆரம்பிச்சுடும் இல்லையா??? :(

Tuesday, July 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

எழுந்திரு விநதேயா, உன் கால்களில் நில்!

எவ்வளவு நேரம் என்று புரியாத நேரம் கண் மூடி அரை நினைவில் மயங்கிக் கிடந்த விநதேயன் கண் விழித்தபோது அவன் தந்தை, சிறிய தந்தை, மாமா, அவன் தாயார் ஆகியோர் அங்கிருந்தனர். ஸ்ரீகிருஷ்ணன் பேசும் மொழி ஓரளவு தெரிந்த அவன் சிறிய தந்தை அவன் தந்தை கூறுவதை மிகவும் சிரமப் பட்டுக் கண்ணனுக்கு மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். நடு நடுவில் அவன் தாய் கண்ணீர் ததும்பும் விழிகளோடு, பேசமுடியாமல் தொண்டை அடைக்க ஏதேதோ கூறிக்கொண்டிருந்தாள். விநதேயன் முடமானது அவன் தவறு, அவனுக்கு நேரிட்ட சாபம் என்று அவன் தந்தை கூறுவதையும், முடவன் என்று தன்னை இகழ்ந்து பேசுவதையும் அவன் முடமாய் இருப்பது குலத்துக்கும்,குலத்தின் மற்ற இளைஞர்களுக்கும் ஓர் அவமானம் என்று நினைப்பதையும் விநதேயன் புரிந்து கொண்டிருந்தான். ஆகவே தந்தை தன்னைத் திட்டப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். விநதேயனின் தந்தை அவனைப் பார்த்து, “முட்டாளே, குடிசையில் உன்னைக் காணவில்லை என்று எவ்வளவு பதறினோம் தெரியுமா? எப்படி இங்கே இவ்வளவு தூரம் வந்து சேர்ந்தாய்?” என்று வினவினான். அதே கேள்வியை அவன் சிறிய தந்தையும் கேட்டார். அவன் தாயோ அவன் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களைக் கண்டு மனம் வருந்தி, “குழந்தாய், உன் உடம்பை இப்படிப் புண்ணாக்கிக் கொண்டுவிட்டாயே?” என்றாள்.

அவ்வளவு நேரமும் கண்ணனைக் கண்டதால் ஏற்பட்டிருந்த களிப்பும், உவகையும் விநதேயன் மனதை விட்டு அகன்றது. ஆஹா, இவர்கள் மீண்டும் நம்மை அந்தக் குடிசையின் மூலைக்குக் கொண்டு சென்று கிடத்தி விடுவார்கள். இதை விட நான் செத்திருக்கலாமே? அங்கே போய் என்று சாவு வரும் என்பதை எதிர்பார்த்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டு…………அவனை எழுப்பி உட்கார்த்தி வைக்க முயன்ற தகப்பனின் கைகளைத் தள்ளிவிட்டுத் திரும்பிக் கொண்டான் விநதேயன். ஆஹா, இவர் நம்மை மீண்டும் அந்தக் குடிசைச் சிறையில் அல்லவோ தள்ளப் பார்க்கிறார்?? திரும்பியவன் கண்களில் அவன் சிறிய தந்தை மிகவும் மரியாதையோடும், வணக்கத்தோடும், வாசுதேவ கிருஷ்ணனோடு பேசிக் கொண்டிருந்ததும், அவன் சிரித்த வண்ணம் கேட்டுக்கொண்டிருந்ததும் கண்ணில் பட்டது. கண்ணன் சிரிப்பு மாறாமலேயே விநதேயன் பக்கம் திரும்பினான். அவனையும் பார்த்துச் சிரித்தான். ஆஹா, இது, இதற்காகவன்றோ இத்தனை கஷ்டங்களையும், அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் உயிரோடு இருந்திருக்கிறான்? இத்தனை வருஷங்கள் முடவனாக வாழ்ந்த வாழ்க்கையில் ஒருநாள் கூட அவனைக் கண்டு யாரும் இப்படிக் கனிவோடும், அன்போடும், ஆதரவு தெரியும்படியும் சிரித்ததில்லை. ஒரு சிரிப்பில் இத்தனை அமைதியா? மாட்டேன், மாட்டேன், அந்தச் சிறைச்சாலைக்கு நான் மீண்டும் செல்லமாட்டேன். இங்கேயே இருந்துகொண்டு கண்ணனின் சிரிப்பைப் பார்த்துக்கொண்டே உயிர் வாழ்வேன் அல்லது உயிரை விடுவேன். அந்தக் குடிசை மூலையில் அனைவரும் என்னை வெறுத்துப் பேசும் வண்ணம் போய் அமர மாட்டேன். இது மட்டும் நிச்சயம். சற்றே நகர்ந்து தன் ஒரு கரத்தால் கண்ணனின் கால்களைக் கட்டிக்கொண்டு மேல் நோக்கி எழும்பிய நிலையில் மற்றொரு கரத்தை ஊன்றிய வண்ணம் முறையிடுவது போல் கண்ணனைப் பார்த்தான். கண்ணன் குனிந்து அவனை எழுப்பி அமர வைத்தான். அவனைப் பார்த்து, “கருடா, விநதேயா, உன் தந்தையோடு செல்ல நீ விரும்பவில்லையா?” என்றும் கேட்டான். மொழி புரியாமல் விழித்த கருடனுக்கு அவன் சிறிய தந்தை மொழிபெயர்த்துச் சொல்ல, வேகமாய் மறுத்தான் விநதேயன். தகப்பனோடு செல்ல விரும்பவில்லை என்றும் அங்கேயே கண்ணனோடு இருக்க ஆசைப் படுவதாயும் சொன்னான். அனைவரும் நகைத்தனர். அதைப் பார்த்த விநதேயனுக்கு மீண்டும் துக்கம் தொண்டையை அடைக்கக் கண்ணன் கால்களை இறுகக் கட்டிக்கொண்டான்.

விநதேயனின் சிறிய தந்தை அவன் கூறியதைக் கண்ணனுக்கு மொழி பெயர்த்தார். “வாசுதேவா, அவன் உன்னுடன் இருக்க விரும்புகிறானாம். முட்டாள், ஒரு முடவனை வைத்துச் சமாளிக்க முடியுமா என்று புரியவில்லை, மன்னித்துக்கொள்!” என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான். கண்ணன் குனிந்து, அன்போடு, விநதேயனைத் தன் கரங்களால் அணைத்தவண்ணம், “அப்படியா? என்னுடன் இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்டான். சிறிய தந்தை மொழிபெயர்க்க, கருடனோ, “எப்படி, வாசுதேவா? எப்படி? நான் உன்னுடன் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் நானோ முடவன். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? ஆனால், ஆனால் இவ்வுலகத்தில் உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் கதி இல்லை. நீ ஒருவனே எனக்குக் கதி. “ சொல்லும்போதே மனம் உடைந்து அழ ஆரம்பித்தான் விநதேயன். அவன் பேச்சைக் கேட்ட அவன் பெற்றோரும் மற்ற உறவினர்களும் சிரித்தனர். கிருஷ்ணன் அன்போடும், மிருதுவான தொனியிலும், அவனைப் பார்த்து, “நான் உன்னுடையவனே கருடா, இதோ பார் விநதேயா! நீ ஒன்றும் முடமில்லை. எவர் சொன்னது நீ முடவன் என்று?” என்று கேட்டான். மொழிபெயர்த்துச் சொல்லப் பட்ட கண்ணனின் வார்த்தைகளைக் கேட்ட விநதேயன், வாய் பேச முடியாமல் பக்கவாதம் வந்து ஒரு பக்கமாய்த் தொங்கிக் கொண்டிருந்த உணர்வற்ற தன் கால்களைக் காட்டினான். அவன் தலை அவமானம் தாங்க முடியாமல் தொங்கியது. கண்களிலே கார்காலத்து மழை பொழிந்தது.

பலராமன், கண்ணனைப் பார்த்து, “இந்த முடவனை நம்முடனா வைத்துக்கொள்ளப் போகிறோம், கண்ணா?” என்று பெருங்குரலில் கேட்டான். “நிச்சயமாக அண்ணா!” கண்ணனின் இந்த பதிலைக் கேட்ட பலராமன் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு கைகளை விரித்துக் கொண்டான். அதை லக்ஷியம் செய்யாத கண்ணன், கருடனைப் பார்த்து, “நீ முடவன் அல்ல!” என்று சொன்னான். அவன் குரலின் நிச்சயத் தன்மையும் உறுதியும் கண்டு கருடனுக்கே ஆச்சரியம் மிகுந்தது. இவ்வளவு நேரம் குழைவாக இருந்த குரலிலும் இப்போது ஒரு அதிகாரத் தன்மை வந்திருந்தது. தன் மயக்கும் மந்திரக் கண்களினால் கருடனையே பார்த்தான் கண்ணன். கண்ணனுக்கு அந்தக் குரலின் அதிகாரத்திலும், உறுதியிலும் ஆச்சரியம் மிகுந்ததோடு, அவன் நாடி, நரம்புகளில் எல்லாமும் அந்தக் குரலின் ஓசை ஓடுவது போலும் இருந்தது. கண்ணன் குரலின் தொனியால் அவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியும் இல்லை என்றே தோன்றியது. கண்ணன் குரலின் தொனியை மாற்றாமலே, “எழுந்திரு, கருடா, விநதேயா, நீ முடவன் இல்லை, எழுந்து உன் கால்களால் நில்!” என்று ஆணையிடும் குரலில் கூறினான்.

விநதேயன் திகைத்தான். சுற்றி இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். விநதேயனுக்கு கண்ணனின் வார்த்தைகள் என்னவென்று புரியாவிட்டாலும், அவற்றின் முக்கியத்துவம் தன் கால்களைக் குறித்தே எனப் புரிந்தது. மெல்ல அசைந்தான். என்ன அதிசயம்? அவன் கால்களும் சற்றே அசைந்து கொடுத்தன. வியப்புத் தாங்காமல் கண்ணனைப் பார்த்தான். மந்திரம் கூறுவது போல் கண்ணன், “எழுந்திரு, உன் கால்களால் நில்! நீ முடவன் இல்லை” என்று திரும்பவும் கூறினான். தன் கைகளை அவன் பால் நீட்டினான். அந்தக் கைகளைப் பற்றிக்கொண்டு மாறாத பக்தியும், பரவசமும் முகத்தில் தெரிய கருடன் மெல்ல எழுந்தான். கண்ணனின் குரலில் தெரிந்த அதிகாரத் தொனி அவனுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுக்கக் கண்ணனின் தோள்களைப் பற்றிய வண்ணம் எழுந்து நின்றான். கண்ணனோ அவன் கைகளைத் தோள்களில் இருந்து அகற்றிய வண்ணம், “என்னைப் பின் தொடர்ந்து வா!”என்று கூறி விட்டுச் செல்ல ஆரம்பித்தான். பக்திபூர்வமான பயத்தோடும், மாறாத ஆச்சரியத்தோடும் அவன் சுற்றத்தாரும் கூட்டத்தாரும் பார்த்துக்கொண்டிருக்க விநதேயன் தன்னையும் அறியாமல் ஒரு அடி எடுத்து வைத்தான். கண்ணன் கைலாகு கொடுக்க மேலும் சில அடிகள் நடந்தான் கருடன். கருடனின் தோள்களைச் சுற்றிக் கண்ணன் தன் கையைப் போட்டு அணைத்திருக்க மெல்ல மெல்ல நடந்தான் கருடன். பல வருடங்கள் கழித்து அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்த விநதை ஓடோடியும் வந்து கண்ணனின் கால்களைத் தன் கண்ணீரால் கழுவினாள்.

Monday, July 12, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்!

கண்ணன் விநதேயனைக் கண்டு கொண்டான்!


யோசித்து யோசித்துக் களைப்படைந்த விநதேயன், எவ்வாறேனும் கண்ணனைக் காண விரும்பினான். நிலவு தன் பூரண ஒளியை அந்த மலைப் பள்ளத்தாக்கில் வாரி இறைத்திருந்த்து. மரத்தின் இலைகளில் நிலவொளி பட்டு மின்னுவது வெள்ளிக் காசுகளைப் போல் தோன்றின. நதிகளில் நிலவொளி பட்டு நதி நீரும் வெள்ளியை உருக்கினாற்போல் தோற்றியது. சற்றே திறந்திருந்த கதவின் வழியாக இவை அனைத்தையும் பார்த்த விநதேயன், நிலவொளியும், காடும், கண்ணனைக் காண உடனே வா, ஏன் தாமதம் என்று கேட்பது போல் உணர்ந்தான். மெல்ல எழுந்து தன் முழங்கால்களால் வஜ்ராசனத்தில் அமர்ந்த நிலையில் உட்கார்ந்தான். தன் பக்கவாதம் வந்த கால் ஒரு பக்கமாய் நழுவ, தன்னிரு கைகளையும் தரையில் ஊன்றி மெல்லக் கீழே இறங்கினான். முன்னிரு கைகளையும் தரையில் ஊன்றிய வண்ணமே மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தான். மெல்ல, மெல்லக் கதவருகில் வந்த விநதேயன், தன்னுடைய நகரும் சப்தங்களால் அம்மா விழித்துக்கொண்டு விடுவாளோ எனப் பயந்தான். சற்று நேரம் பொறுத்துப் பார்த்து எவ்வித சலனமும் இல்லாமையால் அமைதி அடைந்தான்.

வெளியே தெரிந்த நிலவொளி, பொங்குமாங்கடல் போல் பொங்கிய அவன் உள்ளத்தை ஆசுவாசப் படுத்தியது. கொடுமையிலும், கொடுமையாக இளவயதில் இப்படிப் படுக்கையோடு படுக்கையாக ஆக்கிவிட்ட விதியை நினைத்து வருந்தினான். நிலவொளியால் ஊக்கமடைந்தாலும், எப்படி இவ்வளவு தூரத்தைக் கடப்பது என்று யோசனை ஏற்பட்டது. பாதி வழியில் ஏதேனும் ஆகிவிட்டால்?? ஆனால் தான் என்ன?? அந்த அழகான நீல நிற இளைஞனைப் பார்க்காமல் செத்தாலும் நல்லது தானே? அப்புறமாய் என்னுடைய ஆவி எந்தவிதத் தடையும் இல்லாமல் இந்த மலைச் சாரல்களில் ஆநந்தமாய்க் குதித்து ஓடி ஆடி விளையாடுமே. இறந்த பின்னும் என் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப் படுமா என்ன? ஒருக்காலும் இராது. செத்தாலும் சரிதான். எப்படியேனும் அந்த நீலநிற இளைஞனைப் பார்த்தே ஆகவேண்டும். விநதேயன் தவழ ஆரம்பித்தான்.

காட்டுப் பாதையில் இது வரையிலும் இவ்வாறு தவழ்ந்து சென்று பழக்கமில்லாத அவன் மிருதுவான உள்ளங்கைகள், கீழே இருந்த கற்களும், பாறைகளும், முட்களும், புதர்களும் பட்டுப் புண்ணாகி ரத்தம் கசிய ஆரம்பித்தன. ஒரு புதரில் காட்டு மிருகம் ஒன்று, புலியோ, சிங்கமோ, அவனையே பார்த்துக்கொண்டிருந்த மாதிரித் தோன்றியது அவனுக்கு. அதோ, சற்றுத் தூரத்தில் ஊர்ந்து செல்வது?? பாம்பு, ஆம், பாம்பே தான்! அப்பாடி, எவ்வளவு நீளம்??? நல்லவேளை, நான் சற்றுத் தள்ளியே சென்று கொண்டிருக்கிறேனோ, பிழைத்தேன்! நிமிர்ந்த விநதேயன் கண்களில் மீண்டும் சந்திரன்! ஆஹா, இந்த நிலவுத் தேவதை! தேவனா, தேவதையா? எதுவாய் இருந்தாலும், எனக்காக அந்த வாசுதேவ கிருஷ்ணனிடம் சென்று சொல்லாதா? அல்லது வாசுதேவ கிருஷ்ணனே இந்த நிலவிடம் சொல்லி இருப்பானோ, என்னைக் கவனிக்கச் சொல்லி?? மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க சற்றே ஓய்வெடுத்த விநதேயன் சற்று நேரம் கண்களை மூடி இறைவனைப் பிரார்த்தித்தான். கொடிய காட்டு மிருகத்திடமிருந்தும், விஷ நாகத்திடமிருந்தும் தான் காப்பாற்றப் பட்டதை எண்ணிய அவனுக்கு ஆச்சரியம் மட்டுமின்றி நம்பிக்கையும் வந்தது.

தான் பட்ட சிரமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைத்தான். அந்த இளம் கடவுளான ஸ்ரீகிருஷ்ண வாசுதேவனால் தான் இவ்வளவும் நடக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. அவன் தான் மானசீகமாக என்னை அழைக்கிறான். உடலில் புதுத் தெம்பு ஊற மேலும் தவழ்ந்தான் விநதேயன். பாறைகளின் சிறு கற்கள் கைகளில் குத்துவதையும், ரத்தம் வழிவதையும் சற்றும் லட்சியம் செய்தான் இல்லை. ஆஹா, இது என்ன?? சந்திரன் மறைகின்றதோ? ஆம், ஆம், அதோ கிழக்கே அருணோதயம் தென்படுகிறதே? எத்தனை சிவப்பு?? செக்கச் சிவந்து காணப்பட்ட அருணோதயத்தைப் பார்த்ததும் விநதேயனின் மனதில் குதூஹலம் தாண்டவம் ஆடியது. அவன் குலத்து உதித்தவனும், அவர்கள் குலதெய்வமும், அவர்களால் பிதாமகனாக மதிக்கப் படுபவனும் ஆன பொன் சிறகுகள் கொண்ட கருடன் என்ற சுபர்ணனுக்கு அண்ணன் அல்லவோ அருணன்?? அருணன் நமக்கும் நன்மையே செய்வான். செங்குத்தான சரிவு ஒன்றில் இறங்கிக் கொண்டிருந்தான் விநதேயன். மேலக் கடலில் இருந்து வந்த இதமான குளிர்காற்று முகத்தில் மோத அந்த மூன்று குடிசைகளையும் அடைந்தே விட்டான் விநதேயன். பரசுராமருக்கெனக் கட்டப் பட்டிருந்த குடிசை காலியாக இருக்கும் என்பது அவன் அறிவான். அந்தச் சரிவில் இருந்த சமவெளிப் பிரதேசத்தை அடைய கருடன் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். சரிவில் இருந்து மேலே ஏறி அதை அடைய வேண்டும். பெரு முயற்சி செய்து பார்த்தான், செங்குத்தான பாறைக்கல் ஒன்றில் கை ஊன்றி மேலே ஏற முயன்றான். ஆனால் என்ன துரதிருஷ்டம்! கீழே இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டான். துக்கம் மனதைக் கவ்வ, பிரயாசையினால் ஏற்பட்ட உடல் சிரமம் உடலையும் மனதையும் தாக்க, அழ ஆரம்பித்தான் விநதேயன். மெல்ல மெல்லக் கருக்கிருட்டு மறைந்து விடிய ஆரம்பித்துக் கொண்டிருந்தது. ஆஹா, அந்த இளைஞனை என்னால் காணவே முடியாதா? திடீரென ஒரு பெரிய வலிமையான குரல் அந்தப் பள்ளத்துக்குள் கேட்டது. நிமிர்ந்து பார்த்த விநதேயன், ஒரு பெரிய ராக்ஷசன் போன்றவன் அவனுக்குச் சற்றும் புரியாத ஒரு மொழியில் கையில் ஏதோ ஒரு குச்சியை வைத்துக் கத்திக் கொண்டிருந்தது புலப்பட்டது. ஆஹா, அவன் இந்தப் பள்ளத்துக்குள் எப்போ வேண்டுமானாலும் குதித்து என்னைக் கொல்லப் போகிறான். நான் ஏதோ துஷ்ட மிருகம் என்று நினைத்து என்னைக் கொன்று விடுவான். இப்போ என்ன செய்வது?

காலை ஒளி மெல்லப் பரவ ஆரம்பிக்க, அந்த உருவம் ராக்ஷசன் இல்லை என்றும் அவனும் ஒரு இளைஞனே என்றும் ஆனால் உடல் வலுவும், மனவலுவும் நிரம்பப் பெற்றவன் என்றும் புரிந்தது விநதேயனுக்கு. அவன் தன் கையில் இருந்த நீண்ட கழியால் கீழே அவன் விழுந்திருந்த இட்த்தின் புற்களில் துழாவியதையும், அந்தக் கழி தன் உடலில் பட்டதும் தான் வலியில் கத்தியதையும் நினைவு கூர்ந்தான். மீண்டும் அந்த இளைஞன் அதே மாதிரி செய்வதையும் இப்போதும் அந்தக் கழி தன் உடலில் படுவதையும் உணர்ந்த விநதேயன் தன்னை அறியாமல், ஓலமிட்டான். அப்போது மேலே இருந்த இளைஞனின் கரத்தை எவரோ தடுத்து நிறுத்தியதை உணர்ந்தான். அவன் உள் மனம் அது அந்த இளவரசன் தான். வாசுதேவ கிருஷ்ணன் தான் என்று சொன்னது. ஆஹா, கிருஷ்ணா, கிருஷ்ணா, நான் மட்டும் உன்னைப் பார்க்க முடிந்தால்?? விநதேயனுக்கு இவ்வளவு நேரம் பட்ட சிரமங்களினாலும், கீழே விழுந்த அதிர்ச்சியினாலும் ஏற்கெனவே அரை நினைவாக இருந்தவன், இப்போது உணர்ச்சிப் பெருக்கில் முழுதும் நினைவிழந்தான். நினைவு வந்து விழித்த விநதேயனுக்குத் தன் காயங்கள் மருந்து கலந்த நீரால் கழுவப் படுவதும், மெல்லிய, உறுதியான, அதே சமயம் மிருதுவான இரு கரங்கள் மயிலிறகை விட மென்மையாக அவன் உடலின் காயங்களில் மருந்திடுவதையும் உணர்ந்தான். அவன் உடலில் வலிக்காத பாகங்களோ, காயங்கள் இல்லாத இடங்களோ இல்லை என்னும் அளவுக்கு உடலில் வலியும், காயமும். மெல்ல மெல்ல மிகுந்த சிரமத்தோடு தன் கண்களைத் திறந்து பார்த்தான் விநதேயன். ஆஹா, இது யார்?? இப்படி ஒரு நீலநிறமா? மனிதரில் இப்படியும் நிறம் உண்டா? ஆம், ஆம், இவன் அந்தக் கடவுளே தான். வேறு யாரும் இல்லை. இவன் தான் அந்த வாசுதேவ கிருஷ்ணனாக இருக்கவேண்டும், சந்தேகமில்லை.

கண்ணனை விழுங்குவது போல் பார்த்தான் விநதேயன். அந்தச் சிரிப்பு. உணர்ச்சிகள் ததும்பும் அந்தச் சிரிப்பு, மாயச் சிரிப்பு, உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ஒளி வீசும் அந்தக் கண்கள்! அவற்றில் தெரியும் கருணைப் பெருவெள்ளம்! கண்ணனின் கண்களின் கருணை எல்லாம் அந்தச் சிரிப்பின் மூலமும், அவனிரு கைகளின் மூலமும் விநதேயனின் உடலில் ஓட ஆரம்பித்தன. அந்தக் கருணைப்பிரவாகத்தைத் தாங்க முடியாதவன் போல் விநதேயன் கண்களில் கண்ணீர் வெள்ளம். இது போதும், இது போதும், கண்ணனின் கருணை எனக்குக் கிடைத்துவிட்டதே! இனி நான் செத்தாலும் கவலை இல்லை. எதற்குக் காத்திருந்தேனோ அது எனக்கு இன்று கிடைத்துவிட்ட்து. கண்ணன் என்னை உணர்ந்து கொண்டான். என் பக்தியைப் புரிந்து கொண்டான். அவன் கருணை எனக்குக் கிடைத்துவிட்டது. ஆஹா, என்னை எவ்வளவு அன்பும், ஆதுரமும் தெரியப் பார்த்தான் கண்ணன்? எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் நான்? நொண்டியும், துரதிர்ஷ்டசாலியும் ஆன எனக்கு இன்று கடவுளின் பெருங்கருணைப்பேராற்றில் முழுகிக் குளிக்க முடிந்தது. அதில் இருந்து இனி எழுவேனா? அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். ஆம், இனி எனக்கு வேறு எதுவும் வேண்டாம். இனி நான் இறந்தாலும் கவலை இல்லை. தன் கண்களை மூடிக் கொண்டான் விநதேயன். அவனுடைய ரத்தம் தோய்ந்த இரு கைகளும் கண்ணனை நோக்கிக் கூப்பிய வண்ணம் இருந்தன. அவற்றால் இப்போது கண்ணனின் இரு பாதங்களையும் இறுகப் பற்றிக் கொண்டான். அவன் கைகளில் இருந்து பெருகிய ரத்தத்தால் கண்ணனுக்குப் பாத பூஜை செய்தானோ? “ஐயனே, இனி நீ தான் எனக்கு அடைக்கலம்! உன்னைத் தஞ்சமடைந்தேன்!” என்றான். அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன.

Sunday, July 11, 2010

மனசே சரியில்லை! :(

சமீபத்தின் மனதைப் பதற வைக்கும் சம்பவங்கள் சில: வெள்ளைப் பூனைக்குட்டியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறிப் போட்டுவிட்டன. அதுக்கு முன்னாடியே கால் முளைச்சுப் பூனைக்குட்டி வெளியே போயிட்டு இருந்ததைத் தடுத்துப் பார்த்தோம். முடியலை, எப்படியோ தப்பிச்சுண்டு வந்துட்டு இருந்தது, சரி, அதுக்கும் உலகம் தெரியணுமேனு இருந்துட்டோம். ஒரு நாள் பாத்ரூமின் மேற்கூரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரே அலறல். என்னனு பார்த்தால் அடுத்த வீட்டுக் காம்பவுண்டின் உள்ளே நாய் நின்று கொண்டு உறுமிட்டு இருந்தது. பூனைக்குட்டியை முறம் வைத்து, பெரிய தாம்பாளம் வைத்துக் கீழே இறக்கிப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பச் செய்த முயற்சிகள் பலிக்கலை. அதுக்கு ஒரே பயம். கீழேயே இறங்க மறுத்துவிட்டது.

அப்புறமா ஒருநாள் எப்படியோ தெருவுக்கு ஓடித் தெரு நாய் கிட்டே மாட்டிண்டு பயந்து ஓடி வந்து கத்திண்டு இருந்தது. அம்மாக்காரியும் எங்கே இருந்தோ வந்துட்டா. குட்டியைத் தூக்கிண்டு போய் வேப்பமரத்துக் கிளையில் வச்சுட்டுக் கீழே இறங்கி மற்றக் குட்டிகளையும் காப்பாற்ற வரதுக்குள்ளே ஒரு குட்டி எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டு இருந்திருக்கு. மற்றொன்றைக் காணவேஇல்லை. அதான் வெள்ளைக் குட்டி. இருந்த ஒரு குட்டிக்குக் காவலாய் அம்மா வேப்பமரத்தை விட்டுக் கீழே இறங்கவே இல்லை. இரவு ஏழு மணி இருக்கும். மரத்தில் இருந்த பறவைகள் வேறே கன்னாபின்னாவென்று கூச்சல் போடுதுங்க. நாய் வர முடியாதபடிக்கு வாசல் காம்பவுண்டு கேட்டைப் பூட்டினோம். ஆனால் என்ன துரதிர்ஷ்டம். ரோடு போடறதுக்குனு கொட்டி வச்சிருக்கிற கிராவல் மேலே ஏறிக் கேட்டின் மேலேயும் ஏறி நாய் உள்ளே வந்தாச்சு. அதை எப்படியாவது வெளியே அனுப்பணும்னு சுத்திச் சுத்திப் போய் நம்ம ரங்க்ஸ் அதை ஒரு வழியா வெளியே அனுப்பினார். வெளியேத்தற முயற்சியிலே நம்மையே பைரவர் கடிச்சிட்டா என்ன பண்ணறது? அது வேறே பிரச்னை!

பூனை தன் குட்டிகளோட மரத்தின் மேலே பாதுகாப்பா இருக்குனு இருந்தோம். மறுநாள் பார்த்தாப் பக்கத்துவீட்டு மாமி வெள்ளைக் குட்டியைக் கடிச்சுக் குதறிடுச்சுங்கனு சொன்னாங்க. முதல்லேயே அதைக் குதறிப் போட்டுட்டுத் தான் மத்த குட்டிங்களுக்கும் வந்ததுங்கறாங்க. மனசே சரியா யில்லை. ரொம்ப அழகா விளையாடும் வெள்ளைக் குட்டி. அதுதான் கொழுக், கொழுக் னும் இருந்தது. பழகிட்டதாலே என்னைக் கண்டால் பயமும் போயிருந்தது. பேசினால் மியாவ் பாஷையில் பேசும். மறு நாள் எந்தப்பூனைகளுமே இல்லை. இன்னைக்கு ஒரே ஒரு குட்டி மட்டும் வந்திருக்கு. ரொம்ப அழுகை. அம்மாவும் இல்லாமல் கூடப் பிறந்தவங்களும் இல்லாமல் தனிமை பிடிக்கலை போலிருக்கு அதுக்கு. பார்க்கப் போனால் வெளியே வராமல் ஒளிஞ்சுக்கறது. என்ன ஆகுமோ தெரியலை. பூனை எலியைப் பிடிச்சுட்டு வந்தப்போ எலிமேல் உண்டாகாத கருணை, இப்போ நாய்,குட்டியைக் குதறினப்போ மட்டும் ஏன் வரணும்?? மூணுநாளாய் இந்தக் கேள்வி தான் துளைக்குது!

அடுத்துக் காக்கை,குயில் சண்டை. குயில்குஞ்சு வளர்ந்துடுத்து போல. குரலும் வந்திருக்கு. அன்னிக்குப் பார்த்தால் எலுமிச்சை மரத்தில் அடர்ந்த பாகத்தின் உள்ளே உட்கார்ந்து கத்திட்டிருந்தது. சரி, நைசாப் படம் பிடிச்சுடலாம்னு உள்ளே இருந்து காமிரா எடுத்துட்டுப் போறதுக்குள்ளே, எங்கே இருந்தோ வந்த ஒரு காக்காய், (அதோட கூட்டிலே வளர்ந்திருக்கும் போல இந்தக் குயில் குஞ்சு) அதைக் கொத்த ஆரம்பிச்சது. குயில் குஞ்சு கத்திண்டே ஓடிப் போனது. இன்னும் சரியாப் பறக்கத் தெரியலை. எல்லாத்துக்கும் அம்மா இருந்து எல்லாம் கத்துக் கொடுக்கிறது. இந்தக் குயிலுக்கு மட்டும் ஏன் இப்படினு புரியலை. பறக்க முடியாமல் காம்பவுண்ட் சுவரின் வேலியிலே உட்கார்ந்தது. நாலைந்து காக்காய்களாக வந்து கொத்த ஆரம்பிச்சுடுத்து. எல்லாம் ஒரு குடும்பம் போல. காக்காயை மட்டும் விரட்டலாம்னு பார்த்தால் முடியலை. எல்லாம் ஓடிப் போயிடுச்சுங்க. மற்றப் பறவைகள் எல்லாம் பார்த்துட்டு இருக்கும் போல. எதுவுமே குயில் குஞ்சின் உதவிக்கு வரலை. அது தனியாவே போராடுது. ஜெயிக்கும் தான் இல்லைங்கலை. ஆனால் பிறக்கும்போதே இன்னொரு பறவையின் கூட்டில் பிறந்து, வளர்ந்து, அப்புறம் தன் குஞ்சு இல்லைனு தெரிஞ்சு அது விரட்டிக் கொத்திப் போராடி, ஜெயிச்சு, அப்புறமாய் வளர்ந்து பெரிசாகிக் குயில் ஆணானால் "கூ,கூ" னு கத்திப் பெண் குயிலை அழைச்சு, மறுபடியும் தொடர்ச்சியாக முன் சொன்ன நிகழ்வுகளே நடக்கும் :( குயிலுக்கு மட்டும் ஏன் தனியாய்க் கூடு கட்டிக்கும் வசதி இல்லை? இன்னொரு பறவைக்கூட்டை ஏன் அதுக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கிறது?, ஏன் இப்படி??

Friday, July 09, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கருடன் விநதேயனின் வருத்தம்!

அட??? அம்மா இன்று சந்தோஷமாய் இருக்கிறாளே? ஆம், விநதேயன் இப்படி ஆனதில் இருந்து அம்மாதான் அவன் தேவைகளை நிறைவேற்ற உதவி வருகிறாள். அதற்காகவே இந்தக் குடிசையின் உள்ளே அவளுக்கென ஒரு அறையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாள். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கவேண்டுமே, என்பது அவள் எண்ணம். எனினும் சில சமயங்களில் அவளாலும் முடியவில்லை. அப்போது அவளும் தன் எரிச்சலையும், கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ளுகிறாள் என்பதும் புரிகிறது. அம்மாவிற்கு அவளே இறந்துவிடலாமோ என்றும் சில சமயங்களில் தோன்றுகிறது என்றாளே? அவனால் குடும்பமே எவ்வளவு வேதனைப் படுகிறது? இதற்கு ஒரு முடிவே இல்லையா?? அம்மா, என் அம்மா! அம்மா நெருங்கிவிட்டாள். அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்று புரிகிறது. பரபரப்பில் இருந்தாள்.



கருடனைப்பார்த்து, உணவளித்துவிட்டு, “குழந்தாய், இன்று இரு இளைஞர்கள் பரசுராமரால் நம் விருந்தினராக வந்துள்ளனர். ஆஹா, என்ன அற்புதமான இளைஞர்கள்? அவர்களில் பெரியவன் பலராமன் என்ற பெயராம். எப்படி இருக்கிறான் தெரியுமா? பார்க்கவே மிக மிகப் பெரியவனாக ஒரு ராக்ஷஸன் போல் காணப்படுகிறான். ஆனால் குழந்தாய், மிகவும் இனிமையானவனே. அவன் சிரித்தால் இடி இடிக்கிறாற்போன்றதொரு சத்தம் வருகிறது. இன்னொருவனை வாசுதேவன் என்று கூப்பிடுகிறார்கள். அவன் நிறத்தைப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது விநதேயா! கடல் நீலமா? விண்ணின் நீலமா? அல்லது இரண்டு கலந்த்தொரு புது நீலமா? அப்படி ஒரு நிறத்தில் எந்த மனிதனையும் இதுவரை நான் கண்டதே யில்லை. அவன் கண்களின் ஒளி! அனைவரையும் வசீகரிக்கிறது. ஆனால் நிலவைப் போன்ற குளுமையான ஒளி தான். மனதுக்கு அமைதியைத்தருகிறது அந்த ஒளி. அவன் சிரிப்பு, சிரித்தாலே நமக்கு ஆநந்தம் பொங்குகிறது. அவன் சிரிப்பினாலேயே அனைவர் உடல், மனது எல்லாவற்றையும் சீராக்கிவிடுவான் போல் தெரிகிறது. அவ்வளவு கருணையுடன் சிரிக்கிறான். எல்லாக் குழந்தைகளையும் தட்டிக் கொடுத்து அன்பு செய்கிறான்.

“விநதேயா, அவன் என்னைப் பார்த்துக் கூடச் சிரித்தான். எனக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது தெரியுமா? மனதில் சொல்லத்தெரியாத உற்சாகம். உன் தந்தை அவனைக் கடவுள் என்றே சொல்கிறார். மனித உருவில் பூமிக்கு இறங்கிவந்திருக்கிறாராம். இல்லை எனில் இப்படி ஒரு அசாதாரணமான நிறமோ, அசாதாரணமான காரியங்களோ அவனால் செய்ய முடியாது என்கிறார். அவர்கள் தங்கவென மூன்று அழகான குடிசைகள் கட்டி இருக்கிறோம். அதுவும் மேற்குக் கடலைப் பார்த்த வண்ணம் இருக்குமாறு அமைத்துள்ளோம். இங்கேதானே தங்கப் போகிறார்கள், ஒரு நாள் உன்னிடமும் அழைத்துவருகிறேன், விநதேயா! அவர்களைப் பார், உன் துன்பம் எல்லாம் தீர்ந்துவிடும். “ படபடவென்று இயல்புக்கு மாறான உற்சாகம் பொங்கப் பேசினாள், விநதை.

விநதேயனின் கண்களில் கண்ணீர் பொங்கியது. இவ்வளவுச் சிறப்புப் பொருந்திய அந்த இளைஞன் என்னைப் பார்க்க வருவானா? அப்படியே வந்தாலும் என்ன செய்ய முடியும் அவனால்? என் நிலையைப் பார்த்துப் பரிதாபப்படுவான். ஓரிரண்டு வார்த்தைகள் பரிதாபமாகச் சொல்லுவான். அதனால் என்ன நன்மை விளையும்? ஒன்றுமில்லை. நான் அவர்களோடு சேர்ந்து மலையில் ஆடிப் பாடிக் குதிக்கவோ, மரத்துக்கு மரம் தாவிக்குதிக்கவோ லாயக்கில்லாதவன் என்பதைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகள் அவை. என்னை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி, என்னை ஒரு கையாலாகதவனாய்க் காட்டப் போகிறது. “எனக்கு யாரையும் பார்க்கவேண்டாம், எவரும் இங்கே வரவேண்டாம்.” கோபமாய்ப் பேச ஆரம்பித்த விநதேயனின் வார்த்தைகள் தொண்டையிலேயே துக்கம் தாங்க முடியாமல் முணுமுணுப்பாக வெளிவந்தன. தன் முகத்தைச் சுவர்ப்பக்கம் திருப்பிக் கொண்டு பொங்கி வந்த கண்ணீரை மறைத்துக்கொண்டான் விநதேயன்.
அம்மா சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள். அம்மா செல்லும்போதே சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் இருட்ட ஆரம்பித்துவிடும். அனைவரும் குடிசைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். தூங்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். கருடன் விநதேயனும் தூங்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை.மனம் தத்தளித்தது. அவன் உள் மனம் அந்த இரு இளைஞர்களையும் பார்க்க மிகவும் விரும்பியது. அவன் குடும்பத்தாரும் அவன் குலத்தாரும் அனைவரும் பார்த்துவிட்டார்கள், கடவுளரைப் போல் தோற்றமளிக்கும் அவ்விரு இளைஞர்களையும் விநதேயன் மட்டுமே பார்க்கவில்லை. ஒன்றும் வேண்டாம். அவனுக்கும் யாரையும் பார்க்கவேண்டாம். அந்த இளைஞர்களைப் பாராட்டுவது போல் அவனைப் பாராட்டியா பேசப் போகிறார்கள்? எதுவும் இல்லை. அவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் யாரோ? அவர்கள் யாரோ, எவரோ? எப்படியோ போகட்டும், தூங்கலாம். ம்ஹும் முடியலை, முடியலை, எப்படியாவது பார்க்க முடியுமா? ஜன்னலைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தால் வெளியே இருந்தால் தெரியுமா? முடியாதே? அவனால் பிடித்துக்கொண்டு நிற்க முடியுமா?

முயன்ற விநதேயன் களைத்துப் போய், அந்தக் களைப்பிலே அவனையும் அறியாமல் தூங்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் கண் விழித்தான். அவனுக்கு அந்த வான் நீல இளைஞனிடம் கெஞ்சிக் கேட்கவேண்டும் போல் இருந்தது. எல்லாக் குழந்தைகளையும் தொட்டுத் தடவித் தட்டிக் கொடுத்தானாமே? என்னையும் அப்படிச் செய்வானா? என்னிடமும் நட்புப் பாராட்டுவானா? ம்ஹும் வரமாட்டான்; இங்கே எல்லாம் அவனுக்கு என்ன வேலை? அப்படியே வந்தாலும் என்னையும் தட்டிக் கொடுத்து அன்பு பாராட்டி சமாதானம் செய்தாலும், அதெல்லாம் என்னிடம் உள்ள இரக்கத்தினால் தான் இருக்கும். வேறு காரணம் இருக்காதே? என்னிடம் எவர் நட்புப் பாராட்டுவார்கள்? நான் தான் கடவுளரால் சபிக்கப் பட்டு இப்படி ஆகிவிட்டேன் என்றல்லவோ எல்லாரும் சொல்கின்றனர்? எல்லாரும் நம்புகின்றனர்? கடவுளரால் சாபம் கொடுக்கப் பட்ட ஒருவனுக்கு எப்படி இன்னொரு கடவுளைப் போன்ற இளைஞன் நண்பன் ஆவான்? இயலாத காரியம். ஒரு காலத்தில் அனைவரையும் விடத் திறமைசாலியான கருடனாக இருந்தவன் நான். இன்று? எவர் நம்புவார்கள்?
என்னைப் போன்றதொரு முடச் சிறுவனால் அந்த அழகான ராஜகுமாரனைப் பார்க்க முடியுமா? ம்ம்ம்ம்ம்??? ஆம், அவன் இங்கே வரமாட்டான் தான். அவனை அழைத்து வருவது கஷ்டமே. முடச் சிறுவனைப் பார்க்கவென்று யார் அழைத்துவருவார்கள்? ஆகையால் நானே போய் அவனைப் பார்த்துவிட்டால்? ஆம் அது தான் சரி, அவன் இங்கே வருவது சரியில்லை; வரவும் மாட்டான்; ஆனால் நான் சென்று அவனைப் பார்க்கலாமே? ஆம், அப்படித் தான் செய்யவேண்டும். என்ன ஆனாலும் சரி, அந்த வான் நீல நிற இளைஞனை நான் பார்த்தே ஆகவேண்டும். கருடன் விநதேயன் தூங்க முயன்றான். அவனால் முடியவில்லை. கண்ணனைப் பற்றி அவன் தாய் வர்ணித்த்தில் இருந்து ஒரு மாதிரியாக அவனைத் தன் கற்பனையில் காண முயன்றான். அவனால் முடியவில்லை. எப்படிக் கற்பனை செய்தாலும் அந்த உருவத்தைக் கொண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. பார்க்கவே கடவுளைப் போல் இருப்பானாமே? ம்ம்ம்ம்ம்ம்????? அதிலும் அந்த இனிமையான ஒளி சிந்தும் சிரிப்பு. சிரிப்பில் ஒளியா? ஆம், அவன் அம்மா அப்படித் தானே சொல்கிறாள்???

எப்படி இருக்கும் அந்தச் சிரிப்பு? எப்படியாவது அவனைப் பார்த்தாகவேண்டுமே? இங்கே தானே இருக்கிறான்? கடலைப் பார்த்தவண்ணம் இருக்கும் குடிசையில்?? எப்படியாவது அங்கே போக முடிந்தால்?? யோசித்து, யோசித்துக் களைப்பும், சோர்வும், குழப்பமும் ஆட்கொண்டது விநதேயனுக்கு. ஊர்ந்தோ, தவழ்ந்தோ சென்றால்??? ஆஹா, பல நாட்களாக அவன் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. முதலில் சில நாட்கள் சென்று கொண்டிருந்தான். ஆனால் அந்த அடர்ந்த மலைக்காடுகளில் கூடவே ஊர்ந்து செல்லும் பாம்புகளும், மற்ற விஷ ஜந்துக்களும், கடும் காட்டு மிருகங்களும் இரவில் அதிகம் நடமாடுவதால் அவன் தந்தை தடுத்துவிட்டார். அவனால் அவற்றை எதிர்கொள்ள முடியாதே? ஆனால் எப்படியாவது வாசுதேவ கிருஷ்ணனைச் சந்தித்தே ஆகவேண்டும். அவனைப் போன்றதொரு முடவனால் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அவன் இதயத்தில் இருந்து ஒரு குரல் உரக்கக் கூவிக் கொண்டே இருந்தது. “எப்படியேனும் நீ சென்று அந்த வாசுதேவ கிருஷ்ணனைச் சந்தி, அதனால் உனக்கு நன்மையே பயக்கும். நீ தயங்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு வீணாகிப் போனதாகும். ஒரு வேளை நாளைக்கே அந்த இளைஞர்கள் இங்கிருந்து சென்று விட்டால்??”” அப்புறம் அவர்களைச் சந்திக்கவே முடியாதே?

Wednesday, July 07, 2010

கண்ணாமூச்சி ரே ரே ரே!

நேத்திக்குப் பூராக் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்த ப்ளாகர் இன்னிக்குச் சமத்தா ஆகி எல்லாப் பின்னூட்டங்களையும் திருப்பிக் கொடுத்துடுத்து. ராம்ஜி யாஹூவோடது மட்டும் தேடிக் கண்டு பிடிச்சேன். அப்பு ஊருக்குப் போனதும் அது கூட இப்போல்லாம் Peek a Boo விளையாடறதில்லையா? அதான் போலிருக்கு. நேத்திக்கு ஜாலியா ப்ளாகர் Peek a Boo விளையாடிக் காட்டிட்டு இருந்தது. முதல்லே எனக்கு மட்டும்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா எல்லாருக்கும். :)))))))))))

Tuesday, July 06, 2010

வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது!

ஹிஹிஹிஹி, ப்ளாகர் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிடுச்சு போல. அபி அப்பாவின் கமெண்ட்டுகளை நான் மெயிலில் இருந்து பப்ளிஷ் பண்ணினால் மாடரேட் ஆயிடுச்சுனு நேத்தி பதில் வந்தது. ஆனால் அவரோட கமெண்ட்ஸ் ஃபுல் பேஜ் ஆப்ஷனில் தான் வருது. சரினு பார்த்தால் இன்னிக்கு ஒரு கமெண்ட் கொடுத்தார் ஏன் போடலைனு. அது பப்ளிஷே ஆகலை. கமெண்ட்ஸ் பக்கத்துக்கு வந்தால் இட்ஸ் கான், போயிந்தி,போயே போச்ச்ச்ச்ச்!!! எங்கே னு யாருக்குத் தெரியும்?? ஹிஹிஹி, மறுபடி மெயிலில் போய் காப்பி, பேஸ்ட் பண்ணிப் போட்டால் என்ன ஆச்சரியம், சமர்த்தாய் பப்ளிஷ் ஆயிடுச்சு. என்னோட ஆன்மீகப் பயணம் பக்கத்துக்கு இன்னிக்குப் போட்ட போஸ்டுக்கு(?) தெரியலை, யாரோ இரண்டு பேரு கமெண்டி இருந்தாங்க. அதுக்கு நான் மெயில் லிங்க் கொடுக்கலையா? கமெண்ட்ஸ் பக்கத்திலிருந்தே காயப், காணோம், போயே போச்ச்ச்ச்ச். இனிமேல் காணாமல் போனவர்கள் பத்தின அறிவிப்புத் தான் கொடுக்கணும்.

இதிலே இருந்து என்ன தெரியுதுன்னா ப்ளாக் சொந்தக்காரங்களைத் தவிர மத்தவங்களை உள்ளே விடக் கூடாதுனு கண்டிப்பா இருக்கு ப்ளாகர்னு புரிஞ்சு போச்சு. ஆனால் அந்த சந்தோஷம் போகறதுக்குள்ளே அபி அப்பா அநானியா கமெண்டிட்டு, அநானியை ஏத்துக்குதேனு குதிக்கிறார். என்னத்தைச் சொல்ல? ப்ளாகரின் துரோகத்தையா? அபி அப்பாவின் சந்தோஷத்தையா?? இதுக்கு நடுவிலே நடராஜ தீக்ஷிதர் கமெண்ட்ஸே போடமுடியலையேனு மெயில் கொடுத்தார். இருந்திருந்து இன்னிக்கு நாள் பார்த்து அவரோட பதிவிலே கமெண்டினேன். அப்புறமா அவரும் காப்பி, பேஸ்ட் பண்ணினார். அதிலேயும் பாருங்க மொத்தம் மூணு கொடுத்ததில் ஒண்ணு தான் போயிருக்கு போல. மாயவரத்திலே அபி அப்பாவுக்கும் வரலை. நெய்வேலியிலே தீக்ஷிதருக்கும் வரலை, மைலாப்பூரில் ரேவதிக்கும் கமெண்ட்ஸ் போகலையேனு அப்செட் ஆயிட்டாங்க. அவங்களுக்கும் வரலை. இங்கே அம்பத்தூரில் எனக்கும் வரலை. ஆஹா, ஆஹா, ஜாலிதான் போங்க, இன்னும் வேறே யாருப்பா இருக்கீங்க?

இதிலே வயித்தெரிச்சல் என்னன்னா, அம்பியோட ப்ளாகிலே யாருமே கவனிக்காமல் இருந்த அவரோட நமீதாவின் பாட்டு பத்தின பதிவுக்கு ஒண்ணரை மணிக்கே முதல் ஆளாப் போய் புளியோதரை வாங்கிட்டு, ச்சீச்சீ,கமெண்ட்ஸ் கொடுத்துட்டு வந்தால், ஜி3 சாவகாசமா 2 மணிக்கு அப்புறமா வந்து நான் தான் பர்ஷ்டுங்கறாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன அநியாயம் இது??? ப்ளாகர் கூடவா ப்ரூட்டஸ்?????

Monday, July 05, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கருடர்களின் மத்தியில் கண்ணன்!


கண்ணனை கருடர்களின் மத்தியில் விட்டுவிட்டு வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. புது இடம், கண்ணன் எப்படி இருக்கானோ? போய்ப் பார்ப்போமா?? அட?? இது கருடர்கள் வசிக்கும் குடியிருப்பு போல் இருக்கே?? நிறையக் குடிசைகள், ஒரு சில கட்டிடங்கள், பெரும்பாலானவை புல்லால் வேயப்பட்டவையே. என்ன குளுமை! என்ன குளுமை! அதோ, தனித்துத் தெரிகிறதே, ஒரு பர்ணசாலை போல்! அது யாரோட குடிசையோ? தெரியலை. சுற்றிலும் உள்ள குடிசைகளில் இருந்து கருடச் சிறுவர்கள், சிறுமிகள் வெளியே வந்து விளையாடிக்கொண்டும், ஆடிப்பாடிக்கொண்டும் இருக்கின்றனர். அதுவும் கண்ணனும், பலராமனும் வந்திருப்பதை வேறு விசேஷமாய்க் கொண்டாடுகிறார்கள் போல் தெரிகிறதே அந்த ஆட்ட, பாட்டத்தின் வேகத்தில். ஆனால், ஆனால், அதோ அந்த வீட்டில் இருந்து யாருமே வரவில்லை போல் இருக்கே? ம்ம்ம்?? கிட்டே போய்ப் பார்ப்போமா? உள்ளே யாரோ இருக்காங்க போல் இருக்கே? ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோமானால் குடிசைக்குள்ளே ஒரு மூலையில் சுருட்டிக் கொண்டு படுத்திருக்கும் ஒரு உருவம் தெரிகிறது.

வெளியே உள்ள கலகலப்பு அதைக் கவரவில்லையோ? உள்ளே போய்ப் பார்ப்போமா? உள்ளே, வைநதேயன் என்றழைக்கப் படும் அந்தக் கருடச் சிறுவன் கருடத் தலைவனின் மகன். அட? தலைவனின் மகனை ஏன் மற்றவர்கள் தங்களோடு சேர்த்துக்கொள்ளவில்லை?? ம்ஹும், அவனால் எழுந்து வரமுடியாது. எதற்கும் பிறர் உதவி வேண்டும் அவனுக்கு. இத்தனைக்கும் அவன் தகப்பனுக்கு இவன் மூத்த மகன் ஆவான். அவன் தாய் விநதையின் பெயரில் இருந்து அவனுக்கு விநதேயன், வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது. அதோ தெரிகிறதே குடிசையின் ஒரு பக்கமாய்ச் சின்னச் சாளரம் அதன் வழியாக வெளியே எட்டிப் பார்க்கிறான் விநதேயன். கொண்டாட்டம் நடக்கிறதே! பெருமூச்சு விட்டான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்த்து. ஐந்து வருடம் முன் வரையிலும்……….

ஒரு அழகான, வேகமான கருடச் சிறுவனாக இருந்தான் விநதேயன். அவனின் ஓட்டத்தையும், ஆட்டத்தையும், பாட்டத்தையும் பார்த்து வியக்காதவர் இல்லை. தலைவனின் மகன் என்ற கர்வம் இல்லாமல் விநதேயன் அனைவரிடமும் அன்பாயும் பழகினான். அவனைக் கண்டாலே அனைவருக்கும் நெஞ்சம் கொள்ளாப் பெருமிதம். அனைவரின் முகங்களும் மலரும். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு அநாயாசமாய்த் தாண்டுவான். அவன் பொழுதுபோக்குவதே மலைக்கு மலை தாண்டுவதில் தான். அதில் அவனுக்கு நிகரில்லை என்ற பெயர் பெற்றான். ஒரு நாள்…. ஆஹா, அந்த நாள் தான் அவன் வாழ்க்கையின் கொடிய நாளாகவும் அமைந்துவிட்டது. ஒரு முறை அப்படி ஒரு சிகரத்திலிருந்து பக்கத்துச் சிகரத்திற்குத் தாண்டும்போது மிகவும் மோசமாய்ப் பாதிக்கப் பட்டான் விநதேயன். அதில் படுத்தவன் தான். இன்னும் அவனால் எழுந்து நடமாட முடியவில்லை.

கருட இனத்து மக்கள் மொத்தமும் அவன் பேரில் மிகுந்த நம்பிக்கையும், பெருமையும் கொண்டிருந்தனர். அனைத்தும் வீணாகப்போயிற்று. இப்போது உதவி இல்லாமல் அவனால் எங்கேயும் செல்லமுடியாது. எதிலும் கலந்து கொள்ளவும் முடியாது. அவனைக் கூப்பிடுபவர்களும் இல்லை இப்போது. தனியனாகி விட்டான். ஆம் அவன் யாருக்கும் தேவை இல்லை இனிமேல். கண்களில் இருந்து பெருக்கெடுத்தோடியது கண்ணீர். அப்போது பாதிக்கப்பட்ட அவன் கால்களுக்கு வைத்தியம் செய்தும் முன்னேற்றமும் இல்லை. நாளாக நாளாகப் படுக்கையிலேயே கிடந்தான் விநதேயன். தேவைப்படும்போது மட்டுமே பிறர் உதவியோடு தன் காரியங்களை முடித்துக்கொண்டான்.

அந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை,முடுக்கும், ஒவ்வொரு மலைச்சிகரமும், அதற்குச் செல்லும் வழியும் செல்லும் வழியின் மேடு, பள்ளங்கள் மட்டுமின்றி அங்கே வாழும் மிருகங்களையும், பறவைகளையும் சிறு பக்ஷிகளையும் அவன் அறிவான். இது தான் அவன் வாழ்க்கை. ஆனால் ஒரு காலத்தில் இப்படி இருந்த அவன் வாழ்க்கை இன்று பலரும் பார்த்துப் பரிதாபப் படும்படி ஆயிற்றே? அவன் தந்தை கூட அவனைக் கேவலமாய்ப் பார்ப்பதாய்த் தோன்றியது அவனுக்கு. இந்தக் காட்டில் அலைந்து திரியாத எந்தக் கருடனும், அவன் தந்தை அளவில் இறைவனால் சபிக்கப் பட்டவர்களே. அப்படி எனில் அவன் தந்தையின் மூத்தமகனான தான் இறைவனால் சபிக்கப் பட்டவனா? தாங்க முடியவில்லை கருடன் விநதேயனுக்கு. அவனை ஒரு மாபெரும் தலைவனாக எண்ணி இருந்த அவன் உடன் பிறந்த சகோதரர்கள் கூட இப்போது அவனை வெறுக்கவும், எள்ளி நகையாடவும் தலைப்பட்டனர். ஒரு காலத்தில் மரத்துக்கு மரமும், சிகரத்துக்கு சிகரமும் தாண்டி அவன் தன் நண்பர்களோடும், சகோதரர்களோடும் விளையாடியதெல்லாம் கனவா? ஆம், அப்படித் தான் தோன்றியது அவனுக்கு. அவன் தன் கனவிலேயே இந்த கோமந்தகமலையை விட்டு அருகே இருக்கும் கரவீரபுரத்திற்கு ஒரே தாவலிலேயே சென்றுவிட்டுத் திரும்புவது போல் கனவும் கண்டான். அவர்களுடைய குலதெய்வமான பொன்னிறக் கழுகரசன் சுபர்ணாவைப் பிரார்த்தித்துக் கொண்டான் விநதேயன்.

இம்மாதிரியான ஒரு நிலையில் உயிர்வாழ்வதை விடச் சாவதே மேல் என்றும் எண்ணினான். பரசுராம ரிஷி அந்த மலைக்கு இரு இளைஞர்களை அழைத்து வந்திருக்கும் செய்தியும், இளைஞர்களின் திறமையும், சாகசங்களும் அவனுக்கெதிரில் பேசப்பட்டன. அவன் வெறும் பார்வையாளனாகக் கூட அதில் பங்கு பெறவில்லை. அவன் குடும்பத்தினர் அனைவருமே உற்சாகத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்து போயிருக்கின்றனர். ஏன், அவனும் பரசுராமரைத் தவிர வேற்று மனிதர்கள் வேறு எவரையும் பார்த்தது கூடக் கிடையாதுதான். அதிலும் இவர்கள் அரசகுலத்தினராம். யாதவகுலத் தலைவர்களில் ஒருவன் ஆன வசுதேவனின் குமாரர்களாம். குரு கர்காசாரியாரிடமும், குரு சாந்தீபனியிடமும் பயிற்சி பெற்றவர்களாம். பரசுராமரால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள். அவர்களில் இளையவன் கருநிறம் என்று சொன்னாலும், அப்படிப் பட்டதொரு அழகான கருநிறத்தை எவரும் கண்டதில்லையாம். ஆஹா, அவன் செய்த அதிசயங்களைப் பற்றி அப்படிப் பேசுகிறார்களே? அவனால் தனக்கும் உதவ முடியுமா? அவன் அதிசயமானவன் என்கின்றனரே? அவனால் விளையும் அதிசயம் என்னுள்ளும் ஏற்படுமா? ஆனால், ஆனால், அதற்கு நான் முதலில் அவனைப் பார்க்கவேண்டும். அவனும் என்னைப் பார்க்கவேண்டுமே? அது எப்படி நடக்கும்??

எல்லாரையும் போல் வெளியே சென்று அவர்களை வரவேற்கவோ, அல்லது அவர்கள் கொண்டாட்டங்களில் பங்கு பெறவோ அவனால் முடியாது. எத்தகையதொரு பரிதாபமான சூழ்நிலையில் அவன் இருக்கிறான்?? ஆஹா! அவன் தந்தையிடம் சொல்லி அந்தக் கண்ணனை இங்கே வரச் சொல்லலாம் என்றாலோ, அவன் தந்தையே அவனைப் பரிதாபத்தோடு பார்ப்பார். இந்தப் பரிதாபம் அவனை மிகவும் வருத்துகிறது. அவனைக் கண்டு வேறு எவரும் பரிதாபப் படுவதை கருடன் விநதேயன் சற்றும் விரும்பவே இல்லை. வெளியே இருந்து உற்சாக்க் கூச்சல்கள் கேட்கின்றன. அங்கே என்ன நடக்கிறது?? புரியவில்லையே? அதோ, உள்ளே யார் வருவது?? அம்மா, ஆம்… அம்மாதான் வருகிறாள். அவனைப் பெற்ற பாவத்துக்காக அவனுக்கு உணவு அளித்துக் காப்பாற்றுவது அவள் கடமையே! அதை நிறைவேற்ற வருகிறாள்.

எதிர்க் கட்சியினர் சதி! அபி அப்பா கூட்டு?????

ஏன்னா நான் ரொம்ப ஸ்ரிக்டு ஸ்ரிக்டு ஸ்ரிக்டு...//


அபி அப்பா, என்னத்தை இன்கம்டாக்ஸ் ஆபீச்ச்ச்ச்சர் நீங்க?? ஸ்டிரிக்ட் ஸ்பெல்லிங்கே தப்பு. ஆரம்பமே இப்படியா???

கீதாம்மா என குமரனால் குட்டிகரணம் மன்னிக்கவும் //

அப்புறமாக் குமரன் வச்ச பேரு இன்னிக்கு ஊர், உலகத்திலே எல்லாம் பிரபலமாய் இருப்பதைப் பொறுக்க முடியாத உங்கள் இந்த அதிரடி ரெய்டுக்குக் காரணம் எதிர்க்கட்சியினரின் சதி, சதி, திட்டமிட்ட சதி என்பதை நான் அறிவேன்!

உங்கள் பெயரில் இருப்பது மொத்தம் மூன்று கம்பனிகள்.//

ஹிஹிஹி, சொந்தக் கம்பனி மூணுதானா?? ஹையா, ஜாலி, ஜாலி, ஜாலி, இன்னும் இரண்டு கூடத் திறந்திருக்கலாம் போலிருக்கே! ஜாலிலோ ஜிம்கானா!

//தவிர நீங்கள் பங்குதாரராக இருக்கும் கம்பனிகள் மொத்தம் மூன்று. அவை

1. ஆசார்ய ஹ்ருதயம்
2.மதுரை மாநகரம்
தவிர ஒரு வெள்ளைகார கம்பனி அதன் பெயர் Blog Union//

பங்குதாரரா இருக்கிறது அம்புடுதேன். அதிலே ஆசார்ய ஹ்ருதயத்தை இழுத்து மூடியாச்சே? தெரியாது?? அங்கேருந்து வந்துட்டு இருந்த வரவு அம்பேல், அம்பேல், அம்பேல்!

ஹிஹிஹி ப்ளாக் யூனியன் வெள்ளைக்காரக் கம்பனியா?? அடிச்சது அதிர்ஷ்டம்!

நீங்கள் பினாமி பெயரில் எத்தனை கம்பனி நடத்தி வருகின்றீர்கள் என்பதை தோண்டி கொண்டு இருக்கின்றோம்.//



ஹிஹிஹிஹிஹிஹி, நல்லாத் தோண்டுங்க, தோண்டுங்க, என்ன கிடைக்குது பார்த்துடலாம்.

ஆக மொத்தம் 979 கோடிகள்//

படிக்கிறச்சேயே ஜாலியாத் தான் இருக்கு, நிஜமாவே 979 கோடிகள் மட்டும் இருந்துடுச்சுன்னா?? ஆஹா, எங்கேயோ போயிடுவேனே! :P

உங்கள் மூன்றாவது கம்பனியின் பெயர் "பக்தி"//

அது சரி, ம்ம்ம்ம்ம் இந்தக் கடைசிப் பக்கத்தை மட்டும் எப்படிக் கண்டு பிடிச்சீங்க? அதான் புரியலை, இப்படியாத் தோண்டிப் பார்க்கிறது? அதுவும் எனக்குத் தெரியாமல்?? நான் தி.வா. எவ்வளவு கேட்டும் சொல்லாமல் ரகசியமா வச்சிருந்தேனே, போச்சு, போச்சு, எல்லாம் போச்சு! அபி அப்பா, இதுக்காகவே உங்களைக் கட்சியை விட்டு ஏன் தூக்கக் கூடாது??


ஆனால் தாங்கள் 276 கோடிகளை கணக்கில் காட்டாமல்//

சேர்த்துட்டோமுல்ல?? அதானே ஆயிரத்துக்கு மேல்னு சொன்னதே! நல்லவேளையா மத்தது உங்க கண்ணிலே படலையோ பிழைச்சேனோ!

தண்டனையை வாசகர்கள் அறிவிக்கவும்........... (ஜோடா ப்ளீஸ்)//

இருந்தாலும் இதுக்காகவே உங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஏன் நீக்கக் கூடாது? அதற்குத் தகுந்த முகாந்திரம் சொல்லுங்க! அபி அப்பாவைக் கட்சியை விட்டு உடனடியா ஏன் நீக்கக் கூடாது????