எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 30, 2018

இந்தியத் தபால் துறையின் சேவை!

இந்தியத் தபால் துறை க்கான பட முடிவு


மூணு நாட்கள் கழிச்சு நேத்திக்குத் தான் சமைச்சேன். :)))) நேத்திக்குக்கீரைத் தண்டு சாம்பார், பீன்ஸ்,காரட் கறி, ரசம் வைத்தேன். இன்னிக்குப் பத்திய சமையல் கிட்டத்தட்ட. மணத்தக்காளி, சுண்டைக்காய் போட்டு வற்றல் குழம்பு, வேப்பம்பூ ரசம், பறங்கிக்காய் ஓலன்! வயிறு இப்போத் தான் கொஞ்சம் சமாதானம் எனச் சொல்லி இருக்கு! :) இன்னிக்கு மத்தியானம் பூரா மின்சாரம் இல்லை! இப்போத் தான் வந்திருக்கு. ஆனாலும் மத்தியானமா ஒரு பொருளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகத் தலைமைத் தபால் நிலையம் வரை போக வேண்டி இருந்தது.  அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு ஶ்ரீரங்கம் தபால் அலுவலகம் போனால் அவங்க திருச்சிக்கே போங்கனு சொல்லிட்டாங்க. கூரியரில் அனுப்ப இஷ்டமில்லை. பணம் அதிகம் என்பதோடு நம்பகமான சேவை இல்லை. எங்கே போயிருக்கு என்பதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. நம்ம தபால் துறையில் நாம ஸ்பீட் போஸ்ட் அனுப்பினாலோ அல்லது நமக்கு ஸ்பீட் போஸ்ட் வந்தாலோ அது எங்கே இருக்கு என்பதைக் கண்டு பிடிக்க முடியும். நாம் அனுப்பிய தபாலின் வரிசை எண் நமக்கு மொபைல் மூலம் வரும். அதிலே கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைக் க்ளிக் செய்து இணையத்தில் பார்த்தால் அந்தத் தபால் அப்போது எங்கே உள்ளது என்பதைக் காட்டும். அல்லது குறிப்பிட்ட இடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்னும் உரிமையாளருக்குக் கொண்டு சேர்ப்பிக்கவில்லை என்றும் காட்டும். இந்த வசதி கூரியரில் இருப்பதாய்த் தெரியலை. இருந்தாலும் ஒரு சின்ன கவர் அனுப்புவதற்கே ஆயிரம் ரூபாய் வரை கேட்பாங்க.

ஆகவே மத்தியானம் சாப்பிட்டதும் இரண்டு பேருமே தபால் நிலையம் கிளம்பினோம். அவர் மட்டும் போவதாகத் தான் இருந்தது. ஆனால் சூழ்நிலை சரியில்லை என்பதால் இருவராக இருந்தால் ஒருவருக்கொருவர் ஆலோசனை கேட்டுக்கலாம்.  தபால் நிலையம் போய் அங்கே எங்கே பார்சல் வாங்குவாங்கனு தெரியாதேனு முழிச்சுட்டு இருக்கிறச்சே நாங்க போன ஆட்டோ ஓட்டுநரே என்ன வேலைனு கேட்டுட்டுக் கரெக்டாப் பார்சல் அனுப்பும் பகுதிக்கு நேரே ஆட்டோவை நிறுத்திட்டார். அங்கே வெளிநாட்டுப் பார்சல் வாங்கும் பகுதிக்குப் போய்க் கேட்டதற்கு உங்க பொருளைப் பக்கத்தில் உள்ள பாக்கிங் பகுதியில் பாக் செய்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார். என்ன ஆச்சரியம்! அங்கே மூட்டை மூட்டையாக வெளிநாட்டுக்குப் பார்சல் அனுப்பப்  பைகளை வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னே நாங்க கொண்டு போன சின்னப் பெட்டி ஒரு ஜுஜுபி! ஹிஹிஹி!

இரண்டு நபர்கள். ஒருவர் நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி நல்ல தரமான அட்டைப்பெட்டியில் பொருட்களுக்குத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து உள்ளே போட்டுச் சுற்றிலும் தெர்மோகோல் வைத்துப் பாதுகாப்புக் கொடுத்து அட்டைப்பெட்டிகளை நன்கு மூடி இந்தியத் தபால் துறையின் சீலோடு உள்ள டேப்பினால் ஒட்டி நன்கு கயிறு போட்டு நான்கு பக்கமும் கட்டித் தருகிறார். பக்கத்திலேயே கணினியில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு அதிகாரி, பார்சல் அனுப்புகிறவர்களிடம் அனுப்ப வேண்டிய விலாசம், அனுப்பும் நபர்களின் விலாசம் வாங்கிக் கணினியில் போட்டு அழகாகப் பிரின்ட் அவுட் எடுத்து அட்டைப்பெட்டியின் மேலே ஒட்டித் தருகிறார். மிகக் கச்சிதமான பாக்கிங்! நாம் அனுப்பும் அளவைப் பொறுத்தும் பாக்கிங் மெடரியலின் அளவைப் பொறுத்தும் பாக்கிங் சார்ஜ் வாங்குகின்றனர். நாங்க பார்த்தப்போ ஒருத்தர் பித்தளை அண்டாவையும் அதற்குள் துணிமணிகளையும் வைத்து, மொத்தம் 20 கிலோ வாஷிங்டனுக்கு அனுப்பக் கொண்டு வந்தார். அவருக்குப் பாக்கிங் சார்ஜ் மட்டும் 400 ரூ ஆயிற்று. 

20 கிலோ எடைக்குக் குறைந்தது ஐந்தாயிரம் ஆகும் என்று அந்த அலுவலர் சொன்னார். இது தேவையா என்றும் கேட்டார். ஆனால் அவர் அனுப்பித் தான் ஆகணும் என்று சொல்லிட்டார். அங்கேயே விதம் விதமாக் கிடைக்குதே என நான் கூடச் சொன்னேன். அவர் கேட்கலை! இதுக்குள்ளே அந்த அதிகாரி பேசிக் கொண்டே  எங்களோட சின்னப் பெட்டியை அழகாய்ப் பாக் செய்து அதன் மேல் விலாசங்களையும் ப்ரின்ட் அவுட் எடுத்து ஒட்டிக் கொடுத்தார். டிக்ளரேஷன் வேறே ஒட்டணுமாம். அது பணம் கட்டும் இடத்தில் கொடுப்பாங்க என்று சொல்லி விட்டு எங்களிடம் பாக்கிங் சார்ஜாக 25 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டார். அவங்க இருவரும் மத்தியானச் சாப்பாடுக்குக் கூடப் போகவில்லை. ஏற்கெனவே இருந்தவர்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். அனைவருக்கும் அந்த அதிகாரி தன் செலவில் சூப் வரவழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்களையும் கேட்டார். நாங்க அப்போத் தான் சாப்பிட்டுவிட்டுப் போயிருந்ததால் வேண்டாம்னு சொல்லிட்டோம். 

பின்னர் பணம் கட்டும் இடம் வந்து பாக்கிங்கை எடை போட்டு பதிவுத் தபாலில் அனுப்பச் செலுத்த வேண்டிய கட்டணமான 371 ரூபாயைக் கொடுத்து டிக்ளரேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு அவங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தோம். தபால் துறை நவீனமயமாக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் இத்தகைய அரிய சேவையைக் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் செய்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியது. சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்னும் நினைப்பில்லாமல் வரும் நபர்களிடம் அவங்க நஷ்டப்படாமல் இருக்கும்படியான ஆலோசனைகளையும் கூறி சேவையும் செய்வது மிக உயர்ந்த விஷயம். நாங்க எப்போவுமே கூரியரை விடத் தபால் சேவையையே நாடுவோம். குறித்த நேரத்தில் போயும் சேர்கிறது.  இப்படியான நபர்களை நேரடியாகப் பாராட்டை உடனே தெரிவித்து அவர்களை மனம் மகிழச் செய்யலாம். தபால் துறை உண்மையிலேயே சேவை நோக்கோடு தான் செயல்படுகிறது என்பதைக் கிராமத் தபால் நிலையங்களில் அதிகம் காணலாம். குடும்ப விஷயங்களைக் கூடத் தபால் அதிகாரியிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனைகள் கேட்கும் கிராமமக்கள் உண்டு. 

இந்தியத் தபால் துறை க்கான பட முடிவு

அதோடு இல்லாமல் இத்தகையை அரிய சேவை திருச்சி போன்ற நகரங்களிலும் இருப்பது தெரியாமல் பலரும் சென்னை மாதிரி வசதி உண்டா என்கின்றனர். நாங்க இங்கே ஶ்ரீரங்கம் குடித்தனம் வந்தப்போ ஶ்ரீரங்கம் ஒரு கிராமம் அங்கெல்லாம் என்ன வசதி இருக்கும்னு எல்லோரும் கேலி பேசினாங்க. முக்கியமாய் மருத்துவ வசதி இல்லைனு சொல்வாங்க! ஆனால் இங்கேயும் ஃப்ரன்ட்லைன் மருத்துவமனையிலிருந்து அப்போலோ மருத்துவமனை வரை வந்திருக்கு! ஃப்ரன்ட்லைன் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. ஏற்கெனவே காவேரி மருத்துவமனை பல சிறந்த முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்குப் பெயர் போனது. சென்னையில் இருக்கும் வாசன் கண் மருத்துவமனையும், அகர்வால் கண் மருத்துவமனையும் இங்கேயும் உள்ளது. என்றாலும் நாங்க போவது எங்க தெருவிலேயே இருக்கும் கண் மருத்துவரிடம் தான்! எல்லா முக்கிய நகரங்களும் மும்பை, கொல்கத்தா, தில்லி, ஹைதராபாத், பெண்களூரு, புவனேஸ்வர் போன்ற எல்லா நகரங்களும் இங்கிருந்து செல்லும்படி இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னை போய்க் கஷ்டப்பட வேண்டாம். 

ஆக முன்னேற்றம் என்பது இருக்கத் தான் செய்கிறது. நாம் தான் உணரவில்லை. சென்னையிலே மட்டும் எல்லா வசதிகளும் இருக்கிறாப்போல் நினைத்துக் கொண்டு அங்கேயே போய் மக்கள் கூட்டம் குவிந்து கொண்டு இருக்கிறது. நெரிசலில் அவதியும் படுகிறது. நெல்லைத் தமிழர் சென்னையில் ஆறில் ஒருத்தர் வெளியூர் என்று சொல்கிறார். அந்த அளவுக்குச்சென்னை நெரிசல் மிகுந்த நகராக மாறி விட்டது!

இந்தியத் தபால் துறை க்கான பட முடிவு

Saturday, July 28, 2018

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை!

காலம்பர நாலேமுக்காலுக்கெல்லாம் கிளம்பிட்டோம்.நடுவில் எங்கும் நிறுத்தலை. கல்லணை வழியாகவே இப்போல்லாம் போறோம். அருமையான சாலை போட்டிருக்காங்க என்பதால் பயணம் சிரமம் இல்லை. திருவையாறு வரும் வரைக்கும் நல்லாவே இருக்கு! அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கஷ்டம். மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் பராமரிப்பின் கீழ் வரும் சாலைகள்! கல்லணையில் நீர் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. அதிகப்படி நீர் கொள்ளிடம் போய்க் கொண்டிருக்க, இங்கே உள்ள நீர் பிரித்து அனைத்து உபநதிகளுக்கும் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கும்பகோணம் காவிரியிலும், அரிசிலாற்றிலும் இன்னும் தண்ணீர் வரவில்லை. அநேகமாய் நேத்துக்கு வரலாம் என்று சொன்னார்கள். நேற்று சாயங்காலமாய் வந்திருக்கலாம்.

ஆனாலும் பல வயல்களிலும் முதல் போகம் முடிந்து இருந்தது தெரிந்தது. வழி நெடுக அதே செழுமை! காவிரி வருடா வருடம் இங்கே வராளோ இல்லையோ, தன் நெஞ்சின் ஈரத்தை இங்கேயே விட்டிருக்கிறாள். ஆகையால் கரையோரம்முழுவதும் அடர்த்தியாக தென்னஞ்சோலைகள், மூங்கில் கொத்துகள், மற்ற மரங்கள்! வாழை பயிரெல்லாம் இங்கே திருச்சிப் பக்கம் வந்தால் தான் அதிகம் பார்க்க முடியும். அங்கெல்லாம் அதிகம் நெல், அரிதாகக் கரும்பு! ஊருக்கு எட்டு மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்துட்டோம். பூசாரி அபிஷேஹத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அங்கே அபிஷேஹம் முடிந்து மாவிளக்குப் போட்டு விட்டுக் கிளம்புகையில் மணி பத்து ஆகி விட்டது. அதுக்குள்ளாகக் கும்பகோணத்தில் இருந்து சாப்பாடு போடுபவர்களிடம் இருந்து அழைப்பு மேல் அழைப்பு! என்னதான் காரில் போனாலும் 40 நிமிஷம் ஆகும். 22 கிலோ மீட்டர் போக வேண்டாமா? சாலைகள் குறுகியவை! அங்கே சாலை விரிவாக்கம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. அப்படியும் சில முக்கியமான சந்திப்புக்களில் சாலை விரிவாக்கம் செய்யத் தான் செய்திருக்கிறார்கள்.

எதிர் எதிரே இரண்டு வண்டி வந்தால் ஒன்று நின்று கொண்டு மற்றொன்றை வழி அனுப்பி விட்டுத் தான் மேலே முன்னேறலாம். சாலை ஓரமாக ஒதுங்கவும் முடியாது. ஒரு பக்கம் அரிசிலாற்றங்கரை. இன்னொரு பக்கம் வயல்களின் கரை! கீழே பள்ளமாக இருக்கும். அந்தச் சாலையில் வண்டி ஓட்டுபவர்களைக் கை எடுத்துத் தான் கும்பிட வேண்டும். அதுவும் கருவிலி வழியாகக் கும்பகோணம் வரும் வழியில் கூந்தலூரில் இருந்து கடமங்குடி வரைக்கும் சாலையைக் கொத்திப் போட்டிருக்காங்க. போன முறையே போட்டிருந்தது. இன்னமும் சாலை போடவில்லை! இன்னும் அதிக தூரம்  கொத்திப் போட்டிருக்காங்க! நாங்க மாரியம்மன் கோயிலில் இருந்து பெருமாளை தரிசனம் செய்ய வந்தால் பட்டாசாரியார் பூட்டிக் கொண்டு போய்விட்டார். காத்திருக்கப் பொறுமை இல்லை. அல்லது வேறு வேலை வந்திருக்கணும். பின்னர் அவர் பையருக்குத் தொலைபேசி அவரை வரவழைத்து தரிசனம் செய்து கொண்டு கிளம்பிக் கருவிலிக் கோயிலில் ஓர் அவசரமான தரிசனம் செய்து சற்குணேஸ்வரருக்கும், சர்வாங்க சுந்தரிக்கும் ஹலோ சொல்லிட்டுக் கிளம்பினோம். மீண்டும் அழைப்பு!

வண்டியை வேகமாய் விடச் சொன்னால் சாலை முழுக்கப் பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வெட்டிப் போட்டிருக்காங்க! என்னத்தைச் சொல்றது! ஒரு வழியாப் பதினொன்றே காலுக்குக் கும்பகோணம் போய் அவங்க வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தோம். ரங்க்ஸுக்கு பழக்கமான ஊர் தான் என்றாலும் வீடு கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஒருத்தரிடம் வழி கேட்டதுக்கு அவர் அங்கே சாப்பிடவா வந்திருக்கீங்க? அவங்களுக்குத் தெரியுமா? சாப்பாடு போடறேன்னு சொல்லி இருக்காங்களா? என்று ஆயிரம் கேள்வி கேட்டார். சரிதான், இவங்க ரொம்பவே பிரபலம் போலனு நினைச்சேன். அங்கே போனதுமே தட்டெல்லாம் போட்டு (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ஓட்டலுக்குப் போனால் கூட வாழை இலை கேட்கும் டைப்) தயாராக இருந்தது. போனதுமே நான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டுக் கொஞ்சம் போல ரசம், கொஞ்சம் போல மோர் ஒரு கரண்டி சாதத்திலேயே முடித்துக் கொண்டேன். அதுக்குள்ளே வயிறு கடபுடா! மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு அதை அதட்டி சமாதானம் செய்துட்டு ரங்க்ஸ் சாப்பிட்டு வந்ததும் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

வரச்சே தான் திருச்சியிலிருந்து கல்லணைக்கு வந்து கொண்டிருக்கும் காவிரியைப் படம் எடுக்க முடிந்தது. போகும்போது நல்ல இருட்டு என்பதோடு எனக்கும் களைப்பாக இருந்தது. ஓரளவுக்குப் படங்கள் எடுத்தேன். ஓட்டுநருக்கு வீடு திரும்பும் குஷியோ என்னமோ ரொம்பவே வேகமாக வந்தார். கல்லணைப் பாலத்தில் இப்போக் காவல் போட்டிருப்பதால் காவல்துறை ஊழியர் தான் வண்டிகளைப் பார்த்து அனுப்புகிறார். அதனால் கொஞ்சம் தாமதம் ஆயிற்று. இல்லை எனில் நாம் பாதிப் பாலம் போனதுமே எதிர்ப்பக்கம் இருந்து அலறி அடித்துக் கொண்டு வண்டியை ஓட்டி வந்து இடிக்கிறாப்போல் நிற்பாங்க! நாம் தான் பின்னால் போகணும்.

நல்ல வேளையாகப் போலீஸ் வந்து வருவோர் போவோரை முறைப்படுத்தியதால் அதிக நேரம் காக்காமல் அங்கிருந்து பாலத்தில் ஏறித் தாண்டி வந்தோம். 2மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு! போயிட்டு வந்த களைப்புத் தான் அதிகம்! இம்முறை 2,3 நாட்கள் சாப்பாடே இல்லாமல் ஹார்லிக்ஸ் மட்டும் குடித்துக் கொண்டு போனதில் ரொம்பவே சிரமமாக இருந்தது. இந்தப் பெயின்டிங் வேலை முடியும்வரை இந்த அவஸ்தை இருக்கும். :( வியாழன் அன்னிக்கு நான் பேசும்போதே பானுமதி உடம்பு சரியில்லை எனக் கண்டு பிடித்ததோடு வீசிங் சப்தமும் வருவதாய்ச் சொன்னாங்க! கொஞ்சம் ஆச்சரியமாவே இருந்தது எனக்கு! !!!!!!!!!!!தூரத்தில் தெரியும் காவிரி


வழி நெடுகச் சோலைகள்


மரங்கள் இடையே தெரிந்த காவிரியைப் படம் எடுக்கும் முன்னே வண்டி அந்த இடத்தைக் கடந்து விட்டது! :(


திருவையாற்றைத் தாண்டிக் கல்லணை செல்லும் வழி! திருச்சி நோக்கி! 

காவிரியில் வெள்ளம் என்பதைக் கேள்விப் பட்டுப் பார்க்க வந்திருக்கும் சுற்றுலாப் பயணி! கல்லணையில்!


மக்கள் கூட்டமெல்லாம் தென் பகுதிக்குப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தைத் தாண்டித் திருச்சி செல்ல வேண்டி இருந்ததால் அந்தப் பக்கம் போகலை. அதோடு அந்தப் பக்கம் இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். 


பாலத்தைக் கடக்கையில் வரும் மதில்! கீழே காவிரிபாலத்தில் போகும்போது!
Friday, July 27, 2018

காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!


 இன்னிக்கு ஆடி வெள்ளிக்காக மாவிளக்குப் போடக் குலதெய்வம் கோயில் இருக்கும் பரவாக்கரைக்குப் போனோம். அங்கே மாவிளக்கைப்படம் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. பூசாரியிடம் கேட்டு அம்மனை மட்டும் கிளம்பும்போது படம் எடுத்தேன். மற்றப் படங்கள் கோயிலின் உட்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை. கல்லணையிலிருந்து கிளம்பிக்கிழக்கு நோக்கிப் பாயும் காவிரியையும் ஓரளவுக்குப்படம் எடுத்திருக்கேன். காமிரா திடீர்னு திறக்கலை. ஆகவே அலைபேசி வழி தான்.குற்றம் குறை சொல்லும் தொ.நு.நி.க்களுக்கு எல்லாம் ஒரு பெரிய "ஓ" போட்டுடறேன்.
இது நம்ம நண்பரோட கோயில்.ஊருக்குள் நுழையும்போதே காணப்படுவார்.  முன்னெல்லாம் தினசரி குருக்கள் ஒருத்தர் வந்து சுத்தம் செய்து அபிஷேகம், அலங்காரம் செய்து நிவேதனமும் செய்வார். அவர் இப்போ இல்லை. ஆகவே என்னிக்கோ குருக்கள் வந்தால் தான் பிள்ளையாருக்குச் சாப்பாடு. நான் தவறாமல் என்னால் முடிந்த கொழுக்கட்டை கொண்டு போயிடுவேன். 

உள்ளே இருக்கார் நண்பர்


மாரியம்மன் கோயில் குளம்
 

அம்மன் அலங்காரத்தில்


கோயில் குளத்தில் காணப்படும் கொஞ்சம் நீர்


சென்ற முறை போயிட்டு வந்தப்போச் சொன்னேன். மாரியம்மன் கோயிலில் பிரகாரங்களுக்கு சிமென்ட் போட்டு ஷெட் ஒன்றும் போட்டிருக்காங்கனு! அந்த ஷெட் தான் இது. 

அறுவடை முடிந்த வயல்

இம்முறை கிளம்பும்போதே போக முடியுமா, முடியாத என்றெல்லாம் சந்தேகமாவே இருந்தது. காரணத்தைச் சொன்னால் உங்கள் எல்லோருக்குமே அலுப்பு வந்துடும்! இது என்ன எப்போப் பார்த்தாலும் புலம்பல்னு நினைப்பீங்க. எப்படியோ நேத்திக்கு எல்லாம் தயார் செய்துட்டு இன்னிக்குக் கிளம்பியே ஆகணும் என முடிவு எடுத்துட்டோம். இந்த வருஷம் ஆடி மாசத்தில் நல்ல நாட்களாக எந்த வெள்ளியும் அமையலை. இன்னிக்கும், அடுத்த வார வெள்ளியும் தவிர்த்து. இன்னிக்கு கிரகணம் என்பதால் கோயில் நடை எப்போச் சாத்துவாங்களோனு அதுவேறே கவலை. தொலைபேசிக் கேட்டுக் கொண்டோம்.

இங்கே என்னடான்னால் காலம்பர எழுந்திருக்கும்போதே தண்ணீர் வரலை! அந்த இரண்டு ப்ளாகிலும் நாங்க ரெண்டு பேர்தான் முழிச்சுட்டு இருந்தோம் போல! பாதுகாவலரிடம் இன்டெர்காம் மூலம் தொடர்பு கொண்டு சொன்னோம். பம்ப் சரியா வேலை செய்யலைனு சொல்லிட்டு இணைப்பை மாத்திக் கொடுத்தார். கொட்டியதோ பாருங்க தண்ணீர்! ஒரு மாதிரி நவாப்பழக் கலரில். சுமார் அரைமணி நேரம் எல்லாக் குழாய்களிலும் வண்ணத் தண்ணீர். எப்படியோ சமாளிச்சுக் காஃபி மட்டும் போட்டுக் குடிச்சுக் கையிலும் காஃபி, ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டோம். இம்முறை சமைத்து எடுத்துப் போகவில்லை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா ஓட்டலின் முன்னாள் அதிகார பூர்வ உரிமையாளர் வீட்டில் சாப்பாட்டுக்குச் சொல்லி இருந்தோம். இவங்க வெகு காலமாக மங்களாம்பிகா ஓட்டல் கும்பேஸ்வரர் கோயிலின் தென்பக்கம் ஓர் பழைய கட்டிடத்தில் நடத்தி வந்தனர். பெரியவர் இருந்தவரைக்கும் நல்லாவே ஓடியது. முக்கியமாய்ப் பசும்பால் காஃபி நல்லா இருக்கும். பெரியவர் காலம் ஆன பின்னர் அவர் மகனார் அதைத் தொடராமல் வேறு ஒருத்தருக்கு விற்று விட்டார். அவர் இதே பெயருடன் சில நாட்கள் அதே இடத்தில் நடத்திவிட்டுப் பின்னர் பத்தாண்டுகளுக்கு முன்னர் கும்பேஸ்வரர் சந்நிதி கோபுர வாயிலுக்கு அருகே உள்ள கடைத்தெருவில் மாற்றி விட்டார்கள். பெயர் என்னமோ மங்களாம்பிகா தான்! ஆனால் இப்போ நடத்தறவங்க வேறே! முன்னர் நடத்தியது வேறே.

மற்றவை தொடரும்!

Wednesday, July 25, 2018

மொட்டை மாடி, மொட்டை மாடி!

கண்ணால் கண்டவள் காவேரி, கருத்தில் நின்றவள் சிங்காரி! காவிரியில் வெள்ளம்! அம்மாமண்டபப் படித்துறையிலும் மற்றப் படித்துறைகளிலும் காவல்துறைப் பாதுகாப்புப் போட்டாச்சு! அந்த அளவுக்கு வெள்ளம் வந்திருக்கு! திருவையாறில் காவிரி கரை புரண்டு உற்சாகத்துடன் ஓடுவதை ஃபேஸ்புக்கில் சிலர் போட்டிருந்தார்கள். இங்கேயும் கீழே இறங்கிப் படித்துறைப்பக்கம் போய்ப் படம் எடுக்கத் தான் ஆசை. ஆனால் அனுமதிப்பதில்லை. அதிலும் இங்கேயும் கல்லணைப் பகுதிகளிலும் பெரும்பாலான மணல் 30 அடி ஆழத்துக்கும் மேல் எடுக்கப்பட்டிருப்பதால் தண்ணீரின் அளவு தெரியாமல் யாரேனும் மாட்டிக் கொள்ளலாம். காவிரி மேலே அமைதியாக் காட்சி அளித்தாலும் உள்ளூரப் பொங்குவாள். ஆகவே காலை வைத்தால் சுழல் இழுக்கும்.


மேற்கே இருந்து ஓடோடி வரும் காவிரி!

எதிர்க்கரையில் திருச்சி சிந்தாமணிப் படித்துறை


இந்தப் படங்கள் எல்லாம் எங்க வீட்டுப் பிரபலமான மொட்டைமாடியிலிருந்து காவிரியைப் பல கோணங்களில் எடுத்த படங்கள். காமிராவில் தான் எடுத்தேன். பல நாட்கள் ஆகிவிட்ட படியால் பாட்டரியில் சார்ஜ் இல்லை. ஆகவே சில படங்கள் வரலை. என்றாலும் பாட்டரியைச் சார்ஜ் செய்துட்டேன். ஆகவே மறுபடி எடுக்க உள்ளேன். உ.பி.கோயிலையும், தெற்கு கோபுரத்தையும் எடுக்கும்போது தான் படம் வரலை. அதையும் எடுக்கணும். அடுத்து அவற்றை எடுக்கிறேன். என்னதான் மொபைலில் எடுக்கலாம் என்றாலும் எனக்கு என்னமோ சரியா வரதில்லை. ஆகவே காமிரா! 

Tuesday, July 24, 2018

சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு!

வட மாநிலச் சுற்றுலா போகிறவர்கள் முக்கியமாய் கேதார்நாத், பத்ரிநாத், முக்திநாத், கயிலை யாத்திரை, கங்கோத்ரி, யமுனோத்ரி செல்பவர்கள் மற்றும் ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாவட்டச் சுற்றுப் பயணம் செல்பவர்கள் ஆகஸ்ட் 20 தேதிக்குப் பின்னர் கிளம்புங்கள்! அப்போத் தான் மழை நின்று இதமான சீதோஷ்ணமாக இருக்கும். அக்டோபர் 20 தேதிக்குள் சுற்றுப் பயணத்தை முடிச்சுக்கணும். அதன் பின்னர் குளிரும் ஆரம்பிக்கும். இமயமலைத் தொடர்களின் முக்கியக் கோயில்களான பத்ரி, கேதார் நாத் கோயில்கள் தீபாவளிக்குப் பின்னர் மூடப்படும்! இப்போது தென் மேற்குப் பருவ மழை என்பதாலும் அது இந்த வருஷம் முழு வீச்சுடன் பெய்து வருவதாலும் இப்போது வட மாநிலச் சுற்றுப் பயணங்களைத் தவிருங்கள். ராஜஸ்தான், குஜராத்தில் கூட இந்த வருஷம் பிகானீர், உதய்பூர், மற்றும் குஜராத்தின் ஜாம்நகர் போன்ற ஊர்களில் வெள்ளம்! மும்பை கேட்கவே வேண்டாம். வருடம் தோறும் அவதி!

ஒரிஸ்ஸாவில் ரயில்பாதையில் தண்ணீர் புகுந்து ரயில் நிறுத்தப்பட்டுப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பருவத்தில் நம் தமிழ்நாட்டில் தான் பூகோள ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பதால் மழை அதிகம் பெய்யாது! வடகிழக்குப் பருவத்தில் தான் நமக்கு மழை! மற்றபடி தென்மேற்குப் பருவம் இந்தியா முழுவதும் இருக்கும். கவனமாகப் பயணம் செய்யவும்.  ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் அதிகமாக இம்மாதங்கள்  சுற்றுலா மேற்கொண்டு ஆங்காங்கே மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகின்றனர். சுற்றுலா அமைப்பாளர்களும் இது குறித்துச் சிந்திப்பதில்லை. கங்கை, யமுனை போன்ற நதிகள், மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகள் அனைத்தும் பூரணப் பிரவாகத்தில் ஓடும். எச்சரிக்கை தேவை. கர்நாடகாவிலும் இப்போது சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்நாடகாவில் வடகிழக்குப் பருவத்திலும் சில சமயங்கள் மழை இருக்கும். அதே போல் வடகிழக்கு மாநிலங்களான கல்கத்தா வரை வடகிழக்குப் பருவக்காற்றின் தாக்கம் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களுக்குச்  செல்ல டிசம்பர் முதல் மார்ச் வரையே சரியான பருவம். 

Sunday, July 22, 2018

மற்றுமொரு மீள் மீள் பதிவு!

இங்கே

விருந்தாளிகளின் தொல்லை தாங்கலை!!!!
நம்ம வீட்டு விருந்தாளிகள் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சே?? ஒரு 4 நாள் முந்தி இரவில் கணினி முன்னால் உட்கார்ந்திருந்தேன் பெண்ணோடு சாட்டுவதற்குத் தயாராக. அவங்க வரதுக்கு நேரம் ஆச்சு. நான் உட்கார்ந்திருந்தது இரவு நேரம் ஆனாலும் விளக்குப் போட்டுக்கலை. விளக்குப் போட்டுட்டு உட்கார முடியாது. ம.பா.வோ சீரியல் சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தார். பொண்ணும் வரலை, சரினு மெயிலாவது பார்க்கலாம்னு ஜிமெயிலில் உட்கார்ந்திருந்தேன். ஒரு விவாத இழையில் ஆழ்ந்து போயிருந்த சமயம். காலில் ஏதோ குறு, குறு. வலக்கால் கட்டை விரலில். நமக்கு அது அடிக்கடி தொல்லை கொடுக்கும். அதுமாதிரிதான் ஏதோனு நினைச்சேன் முதல்லே. திரும்பவும் குறு, குறு, கொஞ்சம் அழுத்தமாய், வலியும் வந்தது. சாதாரணமாய் ஒரு பென்சில் விழுந்தாலே வலிக்கும் நமக்கு, அதனால் அப்படி ஏதோனு நினைச்சால், மீண்டும் அழுத்தமாய் ஒரு குறு, குறு. அவ்வளவு தான்.நாம அலறிய அலறலில் அக்கம்பக்கம் தூங்கப் போனவங்க எல்லாம் எழுந்து உட்கார, என்னோட ம.பா.வோ எனக்கு கணினி வழி ஷாக் அடிச்சுடுத்துப் போலிருக்குனு மெயினை ஆப் செய்யப் போக, நான் எழுந்து கத்திய கத்தலில், காலடியில் இருந்த ஒரு மூஞ்சுறு ரொம்பப் பயத்தோட ஓடிப் போச்சு.

அவ்வளவு தான். மொத்தமாய் நிலைமை அப்படியே மாறிப் போச்சு. அதுவரைக்கும் பயத்தோட இருந்த ம.பா.வுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? தேடணுமேனு ஒரே கவலை. தேடறது எதுக்குனு கேட்காதீங்க. எங்க வீட்டிலே துணி வைக்கும் அலமாரியிலே இருந்து, எல்லா இடத்திலும் தாராளமாய் வந்து போகும் ஜீவன் அது. துணி எல்லாம் அதன் கழிவுகளால் ஒரே நாசம். எப்படி என் புடவைகளைக் காப்பாத்தறதுனு ஒரே மண்டைக் குடைச்சல். அதை உள்ளே வர விடாதேனு இவர் ஆர்டர். என்னமோ நான் அதை வெத்திலை, பாக்கு வாங்கிக்க வானு கூப்பிட்ட மாதிரி. என்னத்தைச் சொல்றது?? உள்ளே வந்த அதை வெளியே விடாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, அதை வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுக்க விட்டுட்டேனு இவருக்குக் கோபம். அது என்ன கையில் பிடிக்கவா முடியும்?? எப்படியோ ஓடி, ஒளிஞ்சுக்கறது.

நேத்திக்கும் அப்படித் தான் ராத்திரி உட்கார்ந்திருந்தேன் கணினிக்கு முன்னால். அப்போ பாருங்க, பக்கத்திலேயே இருக்கும் வார்ட்ரோபில் இருந்து ஏதோ தட்டற சப்தம். விட்டு, விட்டுக் கேட்டது. இவ்வளவு உள்ளே வந்து ஒளிஞ்சுக்கக் கூடிய ஒரே நபர் மூஞ்சுறைத் தவிர வேறே எதுவாய் இருக்கும்?? உடனேயே ம.பா.வைக் கூப்பிட, அவரும் ஓடோடி வந்தார், நேத்திக்கு சீரியல் எதுவும் இல்லை! அதனால் தான்! :P வந்து கதவைத் திறந்து பார்த்தால் ஒரு குஞ்சு தெரிஞ்சது. சரிதான், பிரசவத்தை இங்கே வச்சிருக்குனு நினைச்சு, இன்னிக்குக் காலம்பர வரை வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு, பின்னே?/ அதில் இருக்கும் சாமான்களை எடுத்துட்டுத் திரும்ப வைக்க ஒரு அரை நாள் பிடிக்கும். அத்தனை வேண்டாத சாமான்கள் இருக்கு அதிலே. காலம்பர அவர் வார்ட்ரோபைத் திறந்து கொண்டு, வாளி, முறம், ப்ரஷ் (குட்டியாச்சே, துடைப்பத்தால் எடுத்தால் வலிக்கும் இல்லையா??) சகிதம் உட்கார, நான் கையில் கம்புடன், ஹாலில் நட்ட நடுவாக, ஒரு நாற்காலியில் அமர்ந்தேன், அம்மா வந்தால் வெளியே விரட்ட.

மெதுவாய்த் திறந்து பார்த்தால், ஒரு மூஞ்சுறு அசையாமல் கிடக்கு. என்னனு புரியலை, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு. அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் மேலும் 2 குஞ்சுகள். அதுங்க இரண்டும் துள்ளலோ துள்ளல். மெதுவா அதை எடுத்து வாளிக்குள் போட்டுவிட்டு, அதுக்குள்ளே அம்மா வராமல் இருக்கணுமேனு பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்லி, அசையாமல் இருக்கிறதை முதலில் வெளியே கொண்டுவிட்டு, காக்காய் வேறே கொத்தாமல் இருக்கணும், அது கண்ணுக்குப் படாமல் மறைவாய் விட்டு, மத்தது இரண்டையும் அப்படியே விட்டுட்டு வந்து, திரும்ப வார்ட்ரோபை சுத்தம் செய்து, அறையையும் சுத்தம் செய்துவிட்டுக் குளித்துச் சாப்பிடும்போது மணி 1-00 க்கு மேல் ஆயிடுச்சு.

கொல்லையில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் கொஞ்ச நாளாக் காணாமல் போயிருந்த அம்மாப் பூனை வருது, மெதுவாய் ஏதோ விஷயம் சொல்லிக் கொண்டே. என்னனு பார்த்தால் அதோட வயிறு பெரிசா இருக்கு. மீண்டும் குட்டி போடப் போகுதோ?? அதுக்குத் தான் தாஜா பண்ணுதோ??


மேலே உள்ள இரண்டு படங்களும்  இங்கிருந்து  எடுக்கப்பட்டவை! சொந்தப் படங்கள். :))) அது ஒரு காலம்!  மேலுள்ள பூனை தான் நாய்களிடம் மாட்டிச் செத்துப் போனதுனு நினைக்கிறேன். கீழே உள்ளது அதன் பின்னர் வந்தது. இது வந்த சில நாட்களில் நாங்கள் அந்த வீட்டை விட்டே கிளம்பிட்டோம்!  இது அம்பத்தூர் வீட்டுக்கிணற்றடி! கிணற்றடியிலே கிடைக்கும் கொஞ்ச நிழலில் ஓய்வு எடுக்குது!

Friday, July 20, 2018

நேயர் விருப்பத்தின் பேரில்!

பிரசவத்துக்கு இலவசம்!!!!!!!!!! :P
என்னனு பார்க்கிறீங்களா? இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி மாஆஆஆஆஆதிரி எல்லாம் இல்லை, பிரசவ ஆஸ்பத்திரியே தான். ஊரிலே இருக்கும் நாய், பூனை எல்லாம் மற்ற நாட்களில் எங்கேயோ போயிட்டு இருக்கும், சாதம் வைச்சால் கூடச் சாப்பிட வராது. என்னை ஒரு அல்பமாகப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கும். பத்தாதுக்குக் கூப்பிட்டால் ஏதோ விரோதி மாதிரி உர்ர்ர்ர்ருனு முறைச்சுட்டு வேறே போகும். அதனாலோ என்னமோ என்னோட ம.பா. நாங்க கல்யாணம் ஆனதிலே இருந்து வளர்ப்புப் பிராணியாக முதலில் ஒரு பைரவரைக் கொண்டு வந்தார். அவர் சில நாட்கள் தான் இருந்தார். தூங்கும்போது கூட என் பொண்ணோட தொட்டிலிலோ, தூளியிலோ தான் படுத்துப்பேன்னு அடம் பிடிக்கும் டைப். ஆனால் அவளைத் தூளியை விட்டு என்னைத் தவிர என் ம.பா. மட்டுமே எடுக்கணும், வேறே யாராவது எடுத்தால் அவ்வளவு தான், வீட்டுக்குள்ளேயே ஒரு ஓடிப் பிடிச்சு விளையாடுதல் நடக்கும். எடுக்க வந்தவங்க வெறுப்பாயிடுவாங்க. ஆனால் அது பாவம், நான் ஒரு நாள் அதுக்குத் தெரியாமல் பால் வாங்கப் போனபோது (வேலி தாண்டிக் குதித்துப் போவேன், இல்லைனா சுத்த்த்த்த்திட்ட்ட்ட்ட்டுப் போகணும், அதுவும் தாண்டிக் குதிக்கும்போது ஒரு வண்டியில் அடிபட்டு உயிரை விட்டு விட்டது. அப்போ அதன் தாக்கம் அவ்வளவாத் தெரியலை. ராஜஸ்தானுக்கு மாத்திப் போயிட்டோம்.

அங்கே வந்தது ஒரு சிட்டுக் குருவி ஜோடி. இது பத்தி முன்னேயே எழுதிட்டேன். ஒருநாள் அதுங்க வந்துடுச்சுனு நினைச்சுக் கதவைச் சாத்திட்டுப் படுக்க, ஒண்ணு வரவே இல்லை. அன்னிக்கு அதோட ஆஃபீஸிலே ஓவர்டைம் பார்த்திருக்கு போல. கதவெல்லாம் சாத்தினதும் வந்திருக்கு. வெளியே இருந்து அது கூப்பிட, உள்ளே கதவுக்கு நேர்மேலே இருந்த வெண்டிலேஷன் கட்டையில் உட்கார்ந்து இருந்த அதன் ஜோடி, இங்கே இருந்து கத்த, கூட்டில் குஞ்சுகள் கத்த, ஒரே களேபரம். சோககீதம் இசைப்பதை நல்லவேளையாய்ப் புரிஞ்சுட்டு, என்னனு பார்த்து, வெளியே இருந்த குருவியை உள்ளே விட்டோம். அந்தக் குருவிங்க தான் சொன்னதோ, இல்லை மத்த ஜந்துக்கள் எல்லாம் என்ன நினைச்சதோ தெரியலை, தேன் கூட்டில் இருந்து, குளவிக்கூடு, (விதவிதமாய் இருக்கும், அறை அமைப்புக்கள் எல்லாம் ஆர்க்கிடெக்ட் தோத்தாங்க), கிளிகள், புறாக்கள், மைனாக்கள் என்று எல்லாம் வாசம் செய்ய ஆரம்பிச்சது. பத்தாதுக்கு எலிகளும் கூட. இந்த எலிகள் எல்லாம் ரொம்பவே தைரியம் ஜாஸ்தி. சமைக்கும்போது கூடவே வந்து உட்கார்ந்து (மாமியார்கள் மாதிரி?) நல்லாச் சமைக்கிறேனா என்று வேவு பார்க்கும். ஜெர்ரி கிட்டே தோத்துப் போற டாமா என்ன நாம? இருந்தாலும் அதுங்க அடிச்ச லூட்டி தாங்கலை தான்.

எல்லாம் குஞ்சும், குளுவானுமாய் நம்ம வீட்டில் தான் வாசம். எங்கே போனாலும் ராணுவக் குடியிருப்பா? மரம், செடி, கொடிகளுக்குப் பஞ்சம் இல்லை. கிட்டத் தட்டக் காட்டு வாசிதான். அதனாலே முதல்லே ரொம்ப வருஷம் கழிச்சுச் சென்னைக்கு வந்து சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பிச்சப்போ கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது. கவலைப்படாதேனு கொஞ்ச நாட்களிலேயே ஊரில் உள்ள நாய், பூனை எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததோடு இல்லாமல், அதுங்க பிரசவத்தையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்க ஆரம்பிச்சது. அதிலே ஒரு சமயம் ஒரு நாய்க்குப் பிரசவம் ரொம்பக் கஷ்டமாப் போய் "ப்ளூ க்ராஸ்" காரங்களுக்குத் தொலைபேசி, (தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து தான்) அவங்களை வரவழைச்சு, அதுக்கு சிசேரியனும், குடும்பக் கட்டுப்பாடும் சேர்த்துச் செய்யச் சொல்லி,குட்டிகளைக் காப்பாற்றினோம். அதுவும் நன்றி மறக்காமல் தன்னோட பெண், பேத்தி, கொ.பே. என்று அனைத்து நாயினங்களின் பிரசவத்தையும் எங்க வீட்டிலேயே வச்சுக்கிறது. என்ன, வாசலில் தென்னை மரத்தடி ரொம்ப கூலா இருக்குமா? அங்கேயே சாக்குப் போட்டு வைப்போம், டெலிவரி ஆனதும் குட்டிகள் கண் திறக்கும் வரை காத்திருந்து, பின்னர் கொஞ்சம் பெரிசா ஆனது, அம்மா நாய் இல்லாத சமயம் பார்த்து, வெளியே ஒரு பந்தல் போட்டு, (வெளியே விடலைனால் மாடிப்படி, தென்னை மரத்தடிக்குப் பக்கம் இருக்கும் குழாய் கிட்டே எல்லாம் போகவே முடியாது, அம்மா அப்படி ஒரு காவல் காக்கும்) அதுங்களுக்குப் படுக்கை மற்ற சாப்பாடு ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்து, (ம்ஹும் வாடகை எல்லாம் கொடுக்காதுங்க) ஒண்ணொண்ணாய் வெளியே விடுவோம். அதுங்களும் கொஞ்சம் பெரிசா ஆயிருக்குமா எப்படியோ போய்ப் பிழைச்சுக்கும்.

ஆனால் இந்த்ப் பூனைங்க இருக்கே, அதுங்க வீட்டுக்குள்ளே வராந்தாவிலேயோ, அல்லது வெளியே இருக்கும் பாத்ரூமிலேயோ தான் குட்டி போடும். வராந்தாவில் இருக்கும் ரூமுக்குள் போகவே முடியாது. கோலமாவு, மற்றும் செருப்பு எல்லாம் வைக்கும் அந்த அறை பூனைங்க குட்டி போடும்போது மட்டும் வெளியே வைக்க ஆரம்பிச்சு, இப்போ நிரந்தரமாய் செருப்பையும்,. கோலமாவையும் வெளியேயே வைக்கும்படியா ஆக்கிடுச்சு. கோலமாவை வெளியே வச்சால் காக்கை, எலி, மற்றப் பறவைகள் வந்துடும். எலி தான் வீட்டுக்குள்ளேயே குஞ்சு போட்டு எல்லாம் எழுதினேனே, அமெரிக்காவிலே இருந்து வந்ததும். தோட்டத்தில் இதெல்லாம் பத்தாதுன்னு இப்போப் பெருச்சாளி குஞ்சு போட தொட்டி முற்றத்தில் இருந்து தண்ணீர் போகும் குழாயை அடைச்சுவிட்டு, அந்தத் தண்ணீர் நிரம்பும் தொட்டியைச் சுத்தமாய்க் காயவச்சு, அதிலே பாலிதீன் பைகள், மற்றும் பேப்பர்கள் எல்லாவற்றையும் ரொம்ப அழகாய் மெத்தை மாதிரிப் போட்டுக் குஞ்சு போட்டு வைச்சிருக்கு. அதை வெளியே எடுத்துப் போடவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பெரிசானதும் விரட்டிட்டு இப்போத் தான் அடைச்சோம். இப்போப் பாருங்க வெளியே இருக்கும் குளியல் அறையில் பூனை 3 குட்டிகள் போட்டிருக்கு. அதுங்களுக்கு நான் திரும்பத் திரும்பப் பிரசவம் பார்க்கிறதும், பத்தியமாய்ச் சாப்பாடு போடறதும், மருந்து கிளறித் தரதுமாய் ரொம்பவே ஜனரஞ்சகமாய்ப் போயிட்டிருக்கு! இப்போ அம்மாப் பூனை எங்கேயோ வெளியே போயிருக்கு போலிருக்கு. குட்டிகள் எல்லாம் கத்திட்டு இருக்கு, ரொம்ப அழகான குட்டிகள்.அதுங்களைப் போய்ப் பார்க்கணும், வர்ட்டாஆஆஆஆஆ????????????

இந்த திவா வேறே சும்மா இருக்காம முன்னாலேயே வொர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சுக்கிறது தானேன்னு கேட்டுட்டு இருக்கார். நான் என்ன அவர் மாதிரியா எழுதறேன்? இல்லை, அப்படி எல்லாம் முன்னேற்பாடு செய்துட்டு உட்கார்ந்தால் இந்த மாதிரி மொக்கை எல்லாம் போடவா முடியும்? அது புரியலை அவருக்கு! :P :P

2008 ஆம் ஆண்டு எழுதிய பதிவு!  ஏஞ்சல் அங்கே போய்ப் படிச்சுட்டு மீள் பதிவு போடக் கேட்டிருந்தார். ஆகவே ரசிகர்கள் மனம் மகிழ! :)))))))

இங்கே

Wednesday, July 18, 2018

மனிதர்களா? மிருகங்களா?

ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது? ஒருத்தனுக்கு 66 வயசாம்! இவங்களை அனுப்பி வைச்ச பாதுகாப்பு நிறுவனம் அவங்க பின்னணியை எல்லாம் விசாரிக்காமல் இருந்திருக்கு போல!  நினைக்க நினைக்க உடம்பெல்லாம் பத்தி எரியுது! ஏன் இப்படி? அதுவும் நம் நாட்டில்! தமிழ்நாட்டில்! இங்கே தான் காதலுக்காகக் கொலை, காதலியைக் கொலை, ஆசிட் வீச்சு எல்லாமும் நடக்கிறது. பெண்கள் என்ன அவ்வளவு மலிந்து விட்டனரா? இந்த ஆண்களுக்குத் தெரிவது பெண்களின் உடம்பு மட்டும் தானா? அதுவும் பனிரண்டே வயசு நிரம்பிய காது கேளாத, தனக்கு நேரிடும் கொடுமையை எடுத்துச் சொல்லத் தெரியாத ஒரு குழந்தையைப் போய்! சே!

எல்லாத்துக்கும் மேலே அந்தக் குழந்தைக்கு போதை மருந்து வேறே கொடுத்திருக்காங்க. தனக்கு என்ன நடந்ததுனே அந்தக் குழந்தைக்குப் புரிஞ்சிருக்காது. அப்பா, அம்மா என்ன செய்துட்டு இருந்தாங்க? இத்தகைய நிலையில் இருக்கும் குழந்தையைத் தனியாக இத்தகைய கொடியோர்களிடம் எப்படி விட்டாங்க? எத்தனை நாட்களாகவோ நடந்திருக்கு! திடீர்னு இப்போ வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? 17 பேரைக் கைது செய்திருப்பதாகச் சொல்றாங்க. அந்தக் குழந்தை என்னத்துக்கு ஆகறது? மனசாட்சியே இல்லாமல் நடந்திருக்காங்களே!  அவங்களுக்கு உரிய தண்டனை கொடுத்தே ஆகணும். கொஞ்சம் கூடக் கருணை காட்டக் கூடாது. ஆனால் உடனேயே  இந்த மனித உரிமைக்காரங்க வந்துடுவாங்க! மனித உரிமை அது, இதுனு சொல்லிக் கொண்டு. வயித்தை எரியுது! பெத்தவளுக்கு எப்படி இருக்கும்?  கண்ணை மூடினால் அந்தக் குழந்தை இப்படிக் கஷ்டப்பட்டிருக்குமோ, பயமுறுத்தி இருப்பானோ, இப்போ அதன் உடம்பு எப்படி இருக்கோ, மனநிலை எப்படி இருக்கோ என்றெல்லாம் தோணுது! நம்மால் முடிஞ்சது இப்படிப் புலம்பறது ஒண்ணுதான்! என்ன செய்ய! 

இவங்களுக்கு எல்லாம் தைரியம் வந்ததே தில்லி "நிர்பயா" வழக்கில் தண்டனை பெற்றவன் சின்ன வயசுனு சொல்லி விடுதலை ஆகி வந்ததும் அவனுக்குக் கிடைச்ச பணத்தையும், தையல் மிஷின் கொடுத்ததையும் பார்த்து வந்திருக்கும்! நம்மையும் எதுவும் சொல்ல மாட்டாங்க! எப்படியும் மனித உரிமைக்கழகம் வழக்கை ஏற்று நடத்தி நமக்கெல்லாம் விடுதலை வாங்கிக் கொடுத்துடும்னு நம்பிக்கையிலே இருந்திருப்பாங்க! என்னவோ போங்க! நடப்பது எதுவுமே சரியல்ல! எங்கேயும், எல்லா இடங்களிலேயும்! இதுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் குடும்ப வாழ்க்கை சிதைந்து வருவதே! அந்தக் குழந்தைக்கே ஒரு தாத்தாவோ, பாட்டியோ இருந்திருந்தால் கண்காணிப்பு இருந்திருக்குமோ? பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு என்ன இருந்தாலும் கண்காணிப்புக் குறைவு தான். குழந்தைகள் தானாகக் கதவைத் திறந்து வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஏதோ ஓர் உணவு அல்லது ஸ்நாக்ஸ் ஏதானும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தாயோ, தகப்பனோ யார் முதல்லே வராங்கனு காத்திருக்கணும்.

வரவங்க வேலை அலுப்புடன் வருவாங்க! இது ஆண், பெண் யாராக இருந்தாலும் பொருந்தும். எனினும் தாய் என்பதால் அவள் வந்தவுடன் குழந்தைக்கு எதையோ செய்து கொடுக்கணும். அல்லது குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து சூடு செய்து கொடுக்கணும். இடைப்பட்ட அந்த மூணு மணி நேரம் தனியாக இருக்கும் குழந்தைக்கு என்ன நடந்தது என்றோ அது எங்கே போயிருந்தது என்றோ, அல்லது யார் யார் அந்தக் குழந்தையை வந்து பார்த்தார்கள் என்பதோ அந்தப் பெற்றோருக்குக் குழந்தை சொன்னால் தான் தெரியும். அதுவும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கையில் அதைக் குழந்தை தைரியமாகப் பெற்றோரிடம் சொல்லணும். பெற்றோருக்குக் கேட்கப் பொறுமை இருக்கணும். குழந்தை சொல்வதை நம்பணும். அக்கம்பக்கம் யாரிடமானும் அவங்க குழந்தைகளுக்கு இப்படி நடக்குதானு மறைமுகமா விசாரித்துத் தெரிந்து கொள்ளணும். குற்றவாளியைக் கையும் களவுமாப் பிடிச்சுக் காவல் துறையிடம் முன்னிறுத்தணும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைக்குச் செல்லும் பெற்றோரால் குழந்தைகள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் பொறுமை இல்லையோ? இல்லை எனில் அந்தக் குழந்தைக்குத் தொடர்ந்து இவ்வாறு நடந்திருக்குமா? அதுவும் போதையில் வேறே இருந்திருக்கே! தாய்க்கு மாற்றங்கள் தெரியாமலா இருந்திருக்கும்? இப்படி ஒரு குழந்தையைத் தனியாக விட்டுவிட்டுப் பொறுப்பின்றிச் செல்ல அந்தத் தாய்க்கு எவ்வாறு மனம் துணிந்தது? அவள் சூழ்நிலை காரணமா? ஒண்ணும் புரியலை! ஆனால் குற்றவாளிகளுக்குச்  சிறிதும் கருணை காட்டாமல் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! 

Monday, July 16, 2018

மாயமா,மந்திரமா, தந்திரமா!

என்னவோ விசித்திரமான அனுபவங்கள் கணினியோடு ஏற்படுகின்றன. சில நாட்கள் முன்னர் இணையம் இணைப்புக் கிடைத்ததும் உள்ளே நுழைந்தால் உடனே திரும்ப டெஸ்க் டாப் வந்துடும். சரி, இணைப்புத் தான் சரியா இருந்திருக்காதுனு நினைச்சேன். அதுக்கு அப்புறமா எல்லாப் பின்னூட்டங்களும் மெயில் பாக்ஸுக்கு வராமல் டாஷ் போர்டுக்கு வந்து கமென்ட் பக்கம் திறந்து அவெயிடிங் கமென்ட் மாடரேஷன் க்ளிக் செய்தால் தான் கமென்ட்டுகள் கிடைக்கும். இப்போவும் அப்படித் தான். வெளியிடும் கமென்டுகள் எதுவும் மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை. அது இந்த வலைப்பக்கம் மட்டுமில்லாமல் நான் எழுதும் பிற வலைப்பக்கங்களிலும் வேறு ஐடிகளிலும் இப்படித் தான் இருந்து வருது. ஶ்ரீராம் சொன்னபடி கமென்ட் ஆப்ஷன் க்ளிக் செய்தால் உள்ளே போகிறது. !!!!!!!!!!!!!!!!!! :)

 இப்போ என்னடான்னா இந்த வலைப்பக்கத்து sivamgss@gmail.com log in செய்து உள்ளே வந்தால் ஜிமெயில் பக்கம் திறக்கும் முன்னே தானாக லாக் அவுட் ஆகிறது.  இது கடந்த ஒரு வாரத்துக்கும் மேலே நடக்கும் கூத்து! பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு பாஸ்வேர்ட் மாத்தலாம்னு போனால் உன்னோட பழைய பாஸ்வேர்ட் நினைவில் இருப்பதைப் போடுனு சொன்னது. சரினு தினம் பயன்படுத்தும் கடவுச் சொல்லைப் போட்டேன். ஹிஹிஹி! உடனேயே "நீ கீதா தான்! வேறே ஆள் இல்லை!  உன்னோட இப்போதைய பாஸ்வேர்ட் உனக்குத் தெரிஞ்சிருப்பதாலே மாத்தணும்னு இல்லை! அப்படியே தொடர்ந்து கொள்!" அப்படினு உத்தரவு கொடுக்கவே தொடர்ந்தேன்! என்னத்தைச் சொல்றது. மறுபடி மறுபடி அதே பிடுங்கல். இரண்டு மடிக்கணினிகளிலும் சோதித்துப் பார்த்தேன். இது கணினி பிரச்னை இல்லைனு புரிஞ்சது.

சில நாட்கள் முன்னர் புது ஜிமெயிலுக்கு மாறிக்கோனு ரொம்ப உபசாரம் பண்ணியது. வேணாம் போ அப்படினு அலட்சியமா அதை ஒதுக்கினேன். அந்தக் கோபமா? என்னனு தெரியலை! சரினு இன்னிக்குக் காலம்பர ஒரு முக்கியமான மெயில் பார்க்கையில் இதே போல் ஆகவும் நான் மறுபடியும் லாக் இன் செய்யாமல் சேஞ்ச் பாஸ்வேர்ட் கொடுத்தேன். அப்போவும் மேற்கண்ட கேள்விகள். இப்போதைய பாஸ்வேர்ட் தெரியுமா என! சரினு அதை டைப்பினதும் மீண்டும் மேற்சொன்ன கமென்டுகள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் தான் கீதானு எனக்குத் தெரியாதா என்ன? விடாமல் கடவுச் சொல்லை மாத்தினேன். மாத்திட்டு சோதிச்சேன். ஒண்ணும் ஆகலை போல இருக்கவே கணினியை அணைச்சுட்டு வேலை செய்யப்போயிட்டேன். எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு  இப்போ வந்து கணினியைத் திறந்து அதே மெயிலில் புதுக் கடவுச் சொல்லைப் போட்டுத் திறந்தால்  புது பாஸ்வேர்டுக்கும் அதே கதி! currently being used in one other location அப்படினு எச்சரிக்கைச் செய்தி வேறே தினம் தினம்! போதுண்டா சாமினு இருக்கு! :))))) இத்தனைக்கும் நான் சன் தொலைக்காட்சியின் "மாயா" வெல்லாம் பார்க்கிறதே இல்லை! :P :P :P :P

 அதான் போச்சுன்னா கணினியை ரீ சார்ஜ் செய்யறச்சே இரண்டு லைட் எரியும். ஒண்ணு வெளிர் நீலம் இன்னொண்ணு சிவப்பு! இரண்டும் வெளிர் நீலத்துக்கு வந்துட்டால் கணினி 100% சார்ஜ் ஆயிருக்குனு தெரிஞ்சு அணைக்கலாம். இது ஒரு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுடும். ஆனால் இப்போ நாலைந்து நாட்களாக அந்தச் சிவப்பு விளக்கு அணைவதே இல்லை. இரண்டு மணி நேரம் வரைபோட்டு வைத்து விட்டுப் பின்னர் கணினியைத் திறந்து எத்தனை சதவீதம் சார்ஜ் ஆகி இருக்குனு தெரிஞ்சு கொண்ட பின்னர் கணினியை மின் இணைப்பில் இருந்து துண்டிக்கிறேன்.  வோல்டேஜ் ஏறி இறங்குகையில் கணினி மின் இணைப்பில் இருந்தால் பிரச்னை என்பதால் இதைக் கவனிக்க வேண்டி இருக்கு. அலைபேசியையும் அப்படித் தான் சார்ஜ் ஆகி விட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவேன். ஏற்கெனவே இடி இடிக்கையில் அலைபேசியில் பேசினவங்களுக்கு விபத்து ஏற்பட்டதுனு படிச்சதிலே இருந்து கொஞ்சம் எச்சரிக்கை! என்றாலும் எப்போதுமே மின்னணு சாதனங்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டி இருக்கு! 

Thursday, July 12, 2018

நலம் தானே! நலம் தானே! உடலும் உள்ளமும் நலம் தானே!

2 நாட்களாக ஒரே படுத்தல்! படுத்துக் கொண்டே இருத்தல்னு ஆகிப் போச்சு! :( என்னமோ தெரியலை. எப்போவும் செய்யறாப்போல் தான் உ.கி. குருமா செய்தேன் சப்பாத்திக்கு! ஆனால் சாப்பிடும்போதே கொஞ்சம் அரை மனசு தான். சாப்பிடப் பிடிக்கலை! பாதிக் குருமாவை எறிஞ்சுட்டேன்! என்றாலும் சாப்பிட்டது ஒத்துக்கலை போல! அன்றிரவு படுக்கும்போதே வயிறு கொஞ்சம் பிரச்னை செய்தது. தூங்கி எழுந்தால் சரியாகும்னு நினைச்சேன். அதிகாலை 2 மணியில் இருந்து வயிறு உப்புசம்! வலி! தலைவலி, குமட்டல் இத்யாதி! தலையணையில் சரியாப் படுத்துக்காததால் தலைவலினு நினைத்து சமாதானம் செய்து கொண்டு மறுபடி படுத்தேன். தூக்கம் ஒரு தரம் கலைஞ்சால் கலைஞ்சது தான். வரவே இல்லை!

அப்புறமாக் காலை வழக்கம்போல் எழுந்து வேலைகளைப் பார்த்தேன் காஃபி குடிக்கையில் கூட ஒரு மாதிரியாவே இருந்தது. அதோடு பயங்கரமாப் பசி! மயக்கம்! கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. பிஸ்கட் எடுத்துக் கொண்டு காஃபியைக் குடிச்சேன். வீட்டுவேலைகளைப் பார்க்கையில் மறுபடி மறுபடி வயிற்றில் வலி. அடுத்தடுத்து ஏப்பம். எனக்கு இப்படி எல்லாம் வந்ததில்லை. சரினு ஜீரகம், சோம்பு, இலவங்கம், பட்டை, கிராம்பு, ஏலக்காயைப் பொடித்துப் போட்டுக் கஷாயம் வைத்துக் குடித்தேன். உடனே கிளம்பிக் கொண்டு வந்தது வாந்தி! அடுத்தடுத்து 2,3 முறை எடுத்தபின்னர் கொஞ்சம் சுமாராக இருக்கவே குளித்து அன்றாட சமையல் வேலைகளைப் பார்த்தேன். கரைச்சுக் குடிச்சுக்கலாம்னு மிளகு ரசம் வைச்சேன். ஆனால் சாப்பிட முடியுமானு சந்தேகமாவே இருந்தது. சரி மோர்சாதம் சாப்பிடலாம்னு கொஞ்சம் போல் சாதத்தில் நிறைய மோர் விட்டுக் குடித்தேன். சிறிது நேரத்துக்கெல்லாம் எல்லாம் வெளியே வந்து விட்டது.  உடனே போய்க் காட்டிவிட்டு மருந்துகள் வாங்கி வந்து எடுத்துண்டாச்சு.

போய்ப் படுத்துட்டேன். மூணு மணிக்கு எழுந்து ராகு கால விளக்கேத்திட்டுக்  கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கலாம்னு நினைச்சா மறுபடி அதே! அதே! கணினியைத் திறந்தவள் போய்ப் படுத்துட்டேன். ஆறு மணிக்குத் தான் சாயங்கால நேரம் படுக்க வேண்டாம்னு எழுந்து  உட்கார்ந்தேன். ஏற்கெனவே இட்லி மாவு இருந்ததால் அதில் ரங்க்ஸுக்கு மட்டும் தோசை வார்க்கலாம்னு முடிவு செய்தேன். அதுக்குள்ளே மறுபடி 2,3 தரம் வாந்தி. உடனே அவர் என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டு அவர் மட்டும் போய்ச் சொல்லி வாந்தி நிற்க மாத்திரை கேட்டு வாங்கி வந்தார். ஹார்லிக்ஸ் குடிச்சுட்டுப் போட்டுக்கலாம். திட உணவு வேண்டாம்னு முடிவு செய்தேன். அவருக்கு தோசை வார்க்கும்போதே கீழே துளசி வந்திருப்பதாகப் பாதுகாவலர் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனே அவங்களை வரவேற்கத் தயாரானோம்.

ஒண்ணும் இல்லை கொடுக்க. ஆகவே தோசையை ஆஃபர் பண்ணலாம்னு நினைச்சேன். தித்திப்பு எதுவுமே இல்லையேனு யோசனையா இருந்தது. அவங்க வந்து பார்த்துட்டு எதுவுமே வேணாம், முரளி கடையில் காஃபி குடிச்சுட்டு, பஜ்ஜி, வடை சாப்பிட்டுத் தான் வந்தோம்னு ஃபோட்டோ எல்லாம் காட்டினாங்க. சும்மாவே யாரானும் வேணாம்னு சொன்னால் உபசாரம் பண்ணிக் கொடுக்கத் தெரியாத எனக்கு அன்னைக்கு அவங்க சொன்னதும் சரினு பேசாமல் இருந்துட்டேன். ரங்க்ஸுக்குத் தான் மனசு ஆகலை. சாப்பிடப் பண்ணி வைச்சிருந்த ரிப்பன் பக்கோடா (நாடாத் தேன்குழல்) வை எடுத்துக் கொடுத்தார். அவங்க தொடவே இல்லை. சுமார் ஒரு மணி நேரம் இருந்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க இருக்கும்போதே ஹார்லிக்ஸ் குடிச்சுட்டேன் என்பதால் மாத்திரைகளைப் போட்டுப் படுத்துட்டேன்.

நேத்திக்கும் எழுந்துக்க முடியலை! கொஞ்சம் முடியாமல் தான் இருந்தது. ஆகவே நேத்திக்கும் கணினியைத் திறக்கலை! மொபைல் வழியே முகநூல் மட்டும் பார்த்தேன். துளசி ஃபோட்டோ எல்லாம் போட்டிருக்காங்க! இனி தான் போய்ப்பார்க்கணும். யாரோட பதிவுக்கும் போகலை! இனி தான் போகணும். இன்னிக்கு அமாவாசை என்பதாலும் வங்கி வேலைகள் நான் நேரிலே போய் செய்ய வேண்டி இருந்ததாலும் இன்னிக்கும் இத்தனை நேரம் வர முடியலை. வாந்தி நிற்க நாக்கின் அடியில் வைச்சுக்க ஒரு சின்ன மாத்திரை கொடுத்த பின்னர் தான் நின்னது. ஆனாலும் அந்த மாத்திரையின் கசப்பு! :( இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு நாளைக்குப் பின்னர் இன்னிக்குத் தான் அன்னத்தைக் கண்ணால் பார்த்தேன். :)

Sunday, July 08, 2018

சர்க்கரையா ! கவலைப்பட வேண்டாம்!

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு எனக்குக் கடந்த 2,3 வருடங்களாய்த் தான். அதுவும் அவ்வப்போது தலை காட்டும். சில சமயம் அதிகம் இருக்கும். பல சமயங்களிலும் இருக்கவே இருக்காது.  3 மாதத்துக்கான சராசரி சர்க்கரை அளவில் சர்க்கரையே காட்டாது! ஆனால் ரங்க்ஸுக்கோ 2இட்லிக்குப்பதிலா 3சாப்பிட்டாலே சர்க்கரை துள்ளிக் குதிக்கும். நான் என்னோடசர்க்கரைக்காக அவ்வளவா கவலைப்பட்டதில்லை. படுவதும் இல்லை. ஆனால் அவரோ இதே புலம்பல்! எந்த எந்த வகையில் சர்க்கரையைக் குறைக்கலாம்னு பார்ப்பார்.அது சம்பந்தமான யூ ட்யூப்கள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, ஆங்கில மருத்துவர்கள் சொல்வது, மற்றும் சிலர் சொல்லும் வெந்தயம், கொத்துமல்லி, ஜீரகக் கஷாயம், பார்லி, சம்பா கோதுமை, கருஞ்சீரகம் போட்ட கஷாயம்,ஆவாரம்பூக் கஷாயம், நெல்லிக்காய்ச் சாறு, பாகல்காய்ச் சாறு என எதையும் விடலை. அவரோடு சேர்ந்து எனக்குச் சர்க்கரை இருக்கோ இல்லையோ கவலைப்பட்டுக்காமல் நானும் குடிப்பேன். இதிலே நெல்லிக்காய்ச் சாறு சாப்பிடும்போது உண்மையிலேயே சர்க்கரை அளவு குறையத் தான் செய்தது. ஆனால் நம்ம ரங்க்ஸிடம் கொஞ்ச நாளிலேயே அதை மாத்தணும்னு தோணி வேறே யாரோ சொன்ன மேற்சொன்ன ஏதாவது கஷாயத்துக்கு மாறுவார். நிலவேம்புக் கஷாயமும் சாப்பிட்டுப் பார்த்தாச்சு. திரிபலா சூரணமும் எடுத்துக் கொண்டாச்சு.

நேத்திக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தா உடனே இன்னிக்குச் சர்க்கரை எகிறிக் குதிக்கும். அப்போத் தான் இங்கே குடியிருப்பு வளாகத்திலே ஒரு மாமி அவங்க எடுத்துக்கும் ஆயுர்வேத மருந்து பத்திச் சொல்லி இருக்காங்க. அவங்க எடுத்துக் கொண்ட ஆயுர்வேத மருத்துவம் முழங்கால் வலிக்கு. ரங்க்ஸும் என்னோட பொறுக்க முடியாத கால்வலிக்குத் தான் அவங்க கிட்டே கேட்டிருக்கார். ஏனெனில் சில நாட்கள் என்னால் நிற்கக் கூட முடியாமல் போகும்.  இரவு எழுந்து கழிவறைக்குச் சென்று வர 20 நிமிஷம் ஆகும். தத்தித் தத்தி நடக்க வேண்டி இருக்கும். வலக்கால் ஆடுசதையில் முழங்காலுக்குக் கீழே இருந்து கணு வரை தொட்டாலே வலி! கத்துவேன். இரவுகளில் க்ராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு காலை 3 மணிக்கே ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் பாடாய்ப் படுத்தும்.  காலை எழுந்ததும் இரு முழங்கால்களும் பிடித்துக் கொண்டு தூக்கி வைத்து நடக்க முடியாது! தேய்த்துத் தேய்த்து நடப்பேன். ருமாடிஸமோ எனச் சோதனை செய்ததில் நெகடிவ் என வந்து விட்டது. ஆகவே ஆங்கில மருத்துவர் கொடுத்த ஆன்டிபயாடிக்கை அவ்வப்போது ரொம்பத் தாங்க முடியாத சமயங்களில் சென்னையிலிருந்து வரவழைத்து ( இங்கே கிடைப்பதில்லை. சென்னையிலும் மேற்கு மாம்பலத்தில் ஒரே ஒரு கடையில் தான், என் தம்பி வாங்கி அனுப்புவார்) சாப்பிடுவேன்.

இந்நிலையில் இந்த ஆயுர்வேத மருந்தை முயன்று பார்க்கலாம். ஏற்கெனவே நான் சென்னையில் வாரியர் மருத்துவசாலைக்கே சென்று பார்த்து விட்டேன். என்றாலும் இப்போ சர்க்கரைக்கானும் நிவாரணம் பெறலாம்னு நம்ம ரங்க்ஸ் முடிவு செய்து அந்த மாமி சொன்ன மருத்துவமனையைத் தேடிச் சென்றார். நம்ம ரங்க்ஸிடம் ஒரு குணம். எந்தப்பெயரையும் நினைவில் வைச்சுக்க மாட்டார். என் பெயரைத் தவிர! அதை மறந்தால் பூகம்பம்னு நினைவு வைச்சிருப்பாரோ? தெரியலை! :)))))) ஆகவே அந்த மாமி சொன்னது ஆயுர்வேத வாரியர் மருத்துவமனை என்பதை மறந்து விட்டு அதே தெருவில் அந்த ஆயுர்வேத மருத்துவமனை ஓர் குறுக்குச் சந்தில் இருக்கு! அதற்கு நேரே முக்கிய ரஸ்தாவில் அகத்தியர் சித்தமருத்துவமனை, பாரம்பரிய மருத்துவர் எம்.என்.கோபாலகிருஷ்ணன், என்ற பெயருடன் ஓர் சித்தமருத்துவ மனை இருக்க அங்கே போய்த் தகவல்கள் சேகரித்து வந்து விட்டார். இந்த ஆயுர்வேத மருத்துவமனையும் அங்கேயே இருப்பதைப்பார்க்கவே இல்லை. ஹிஹிஹி!

ஒரு நல்ல நாள் பார்த்து (உண்மையாகவே) இரண்டு பேரும் போனோம். கூட்டமோ கூட்டம்! தலை சுத்தியது. காலை பதினோரு மணிக்கு மருத்துவர் வருவார்னு சொன்னாங்க. வந்தார். ஆனால் எங்களைப் பார்க்கையில் மதியம் 2 மணி ஆகிவிட்டது. எந்தவிதச் சோதனைகளும் இல்லை. நாடியை மட்டும் பார்த்துக் கேட்டு நாடி பேசுவதை வைத்து மருந்தைத் தீர்மானிக்கிறார். அதை நம்மிடம் முதலிலேயே சொல்லி விடுகிறார். சர்க்கரை அளவு கடந்த 2 மாதங்களுக்கானது எடுத்துச் சென்றிருந்தோம். கட்டாயமாய்ச் சர்க்கரையைக் குறைக்கலாம் என உறுதிமொழி கொடுத்தார். என்னுடைய கால் பிரச்னையைச் சொல்லவும் காலில் எந்த இடத்தில் வலி  எனத் தொட்டுப் பார்க்க நான் அலறிய அலறலில் வெளியே இருந்தவங்கல்லாம் பயந்துட்டாங்கனு நம்ம ரங்க்ஸோட கணிப்பு! அதையும் குணப்படுத்தலாம் எனச் சொல்லி விட்டு மருந்துகளை எழுதினார். ஆனால் அந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை நம்ம கையில் கொடுப்பதில்லை. நமக்கு ஓர் அடையாளச் சீட்டு மட்டுமே பெயர், வரிசை எண் போட்டுத் தருகிறார்கள்.

முதல் முதல் போகும்போது மருத்துவருக்கான ஃபீஸாக 200 ரூ வசூலிக்கின்றனர். ஆனால் மருந்துகள் பதினைந்து நாட்களுக்கு சர்க்கரை நோய்க்கு மட்டும் 1,500 ரு ஆகிறது. எனக்கு முழங்கால் வலிக்கும் சேர்ந்து சிகிச்சை என்பதால் 3,000க்கும் மேல் ஆகி விட்டது. என்றாலும் இது சோதனை முயற்சி தானே என வாங்கி வந்தோம். 2 நாட்களிலேயே என் கால்களில் அது வரை இருந்த பாரம், அழுத்தம், இறுக்கம் குறைய ஆரம்பித்தது. ரங்க்ஸே சொல்ல ஆரம்பித்தார். நடையில் வித்தியாசம் தெரிகிறது என. இப்போக் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது வரும் முழங்கால் வலியைத் தவிர காலில் வலி அவ்வளவாக இல்லை! சர்க்கரை அளவும் எனக்கு நார்மலுக்கு வந்து விட்டது(பதினைந்து நாட்களில்) ரங்க்ஸுக்கு அவ்வளவு குறையலை என்றாலும் 175/135 என்ற அளவில் இருக்கிறது. அடுத்த பதினைந்து நாட்களுக்கான மருந்தை வாங்கி வந்து இன்றோடு ஒரு மாதம் முடியப் போகிறது. எனக்கு உடம்பில் முன்னைவிட அசதி, சோர்வு குறைந்திருப்பதை உணர்கிறேன். மனச்சோர்வு வேறே! அது தனி! ஆனால் உடல் சொன்னபடி கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த மருத்துவர் மாதம் ஆறு நாட்கள் மட்டுமே ஶ்ரீரங்கத்தில் இருப்பார். பூர்விகம் பாலக்காடு என்றாலும் அவர் இப்போது இருப்பது திருவானைக்கா என்றாலும் மாதம் 9,10,11 தேதிகள் மற்றும் 24,25,26 தேதிகள் ஶ்ரீரங்கம். மற்ற நாட்கள் தஞ்சை, மதுரை, கோவை போன்ற ஊர்களில் மருத்துவம் பார்க்கச் செல்லுகிறார். பல ஆய்வுகள் செய்திருப்பதாகவும் செய்து வருவதாகவும் சொன்னார். சர்க்கரையைக் குறைக்கும் எண்ணம் உள்ளவர்கள் உங்கள் ஊருக்கு இவர் வந்தால் முயன்று பார்க்கலாம். எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடும் இல்லை. வழக்கம் போல் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். அகத்திக்கீரை தவிர்த்து. தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுப்பதாகச் சொன்னார். ஶ்ரீரங்கத்தில் மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் இவரது ஆலோசனை இல்லம் அமைந்துள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இவரது மருந்துகளின் பெயர்கள் எதுவும் நமக்குச் சொல்லுவதில்லை. ப்ரிஸ்க்ரிப்ஷன் அவர்களிடமே இருக்கு! நாம் போய் நம்முடைய பெயர், வரிசை எண் உள்ள அடையாளச் சீட்டைக் கொடுத்தால் மருத்துவர் இல்லாத நேரங்களிலும் கூடத் தேவையான மருந்துகளை அடுத்து அவர் வரும் நாட்கள் வரை சாப்பிடும்படி வாங்கி வைத்துக் கொள்ளலாம்.பெயர்கள் தெரியாததால் என்ன என்ன மருந்துகள் எனக் கொடுக்க முடியவில்லை. ஆனால் எல்லாமே காப்ஸ்யூல் வடிவில். எனக்கு மட்டும் ஒரு சூரணம் கொடுத்திருக்கார் வெந்நீரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடணும்.

இங்கே உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் மட்டும் இவரது பேட்டி வருகிறதாம். இரண்டு, மூன்று நாட்கள் முன்னர் நியூஸ்7 அல்லது நியூஸ் 18 எதிலேனு தெரியலை. அருண் என்னும் அரசு சித்தமருத்துவரும் இதே கருத்தைக் கூறினார். மேலும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் சித்தமருத்துவப்பிரிவு தனியாக இருக்கிறது. யாருக்குத் தேவையோ அவங்க அங்கேயும் சென்று விசாரிக்கலாம். சென்னை அண்ணா நகரில் மாநில அரசு நடத்தும் சித்த மருத்துவ மனையும், தாம்பரத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மருத்துவமனையும் உள்ளது. அங்கேயும் விசாரிக்கலாம். எப்படியோ நாங்க எங்கோ போக நினைச்சு இந்த மருத்துவமனையைக் கண்டு பிடித்தோம். நன்மையாகவே முடிந்தது. இதை முழுவதும் எழுதி சேமிக்கையில் தவறாய் பப்ளிஷ் கொடுத்திருக்கேன் போல! பப்ளிஷ் ஆகி இருக்கு. கருத்துகள் வந்திருக்கானு இனிமேத் தான் பார்க்கணும்.  இப்போத் தான் மெயிலுக்கு எதுவுமே வரதில்லையே! :)))) தகவல்களை முழுவதும் போடுவதற்குள் அது என்னமோ அவசரம் அவசரமா பப்ளிஷ் ஆயிக்குது! :(

Thursday, July 05, 2018

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பானுமதி வெங்கடேஸ்வரன்!


நம் இனிய சிநேகிதி பானுமதிக்கு இன்று பிறந்த நாளாம். நேத்திக்கு வீட்டுக்குக் கணவரோடு வந்தாங்க. அவங்களும் சொல்லலை. அவங்க கணவரும் சொல்லலை! முன்னரே தெரிஞ்சிருந்தா அட்வான்ஸா கேக் வாங்கி வைச்சிருந்திருக்கலாம்! அதனால் பரவாயில்லை. படம் போட்டுடறேன்.

birthday cake க்கான பட முடிவுபடங்களுக்கு நன்றி கூகிளார்!


birthday greetings க்கான பட முடிவு

Monday, July 02, 2018

கருடா! சௌக்கியமா?

Image may contain: 1 person


ஃபேஸ் புக்கில் நெருங்கிய நண்பர் ஒரு பதிவில் ஶ்ரீரங்கம் கருட மண்டபம் பெரிய கருடனின் படம் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் சிலர் கொடுத்த கருத்துகளில் ஒரு  நண்பர் /நண்பி ஒருத்தரின் சந்தேகம்!

அவர்   
வணக்கம்
பாராட்டுக்கள், இங்கே இன்னொரு ரவிவர்மா!!! ஒரு சிறு ஐயம். எல்லாத் திருக்கோயில்களிலும் (திருவெள்ளியங்குடி தவிர) ஸ்ரீ கருடாழ்வார் நின்ற திருக்கோலத்திலோ அல்லது வீராசனத்திலோ தான் வீற்றிருப்பார், ஆனால் திருவரங்கத்தில் ஏன் இந்த வித்யாசமாக வீற்றிருக்கிறார்


என் பதில்!
திருவரங்கத்தில் பெருமாள் அரிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். ஆகவே அங்கே கருடாழ்வாருக்கு வேலை இல்லை. எனினும் பெருமாள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம் என்பதால் பறக்கத் தயாரான கோலத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு வஸ்திரம் சாத்துவது எனில் பெரிய விஷயம் . கொழுக்கட்டை நிவேதனம் செய்வார்கள்

நண்பர்/நண்பி

பெருமாள் அரிதுயிலில் இருக்கும் மற்ற திருக்கோயில்களில் அவ்வாறு இல்லையே

என் பதில்
அந்தக் கோயில்களில் கேட்கவும்.

இந்த என் பதிலில் மேற்கண்ட நபர் என்ன பிழைகண்டார் எனத் தெரியவில்லை. ஏனெனில் இதற்கு அவர் கொடுத்த பதில் மிகக் கடுமையாக இருந்தது. மற்றக் கோயில்களைப் பற்றி இங்கே ஏன் சொல்லக் கூடாது என்றும் நீ என்ன ஶ்ரீரங்கம் கோயிலின் சொந்தக்காரியா என்னும்படியும் பொருள் கொள்ளும்படிக் கடுமையான வார்த்தைகளை எழுதி இருந்தார். அதோடு பெருமாள் கோயில்களில் கருட சேவை முக்கியம் என்பதும் கருட சேவை ஶ்ரீரங்கம் கோயிலிலும் உண்டு என்றும் அதுவும் எனக்குத் தெரியாதா என்றும் கேட்டிருந்தார். கருடசேவைக்குக் கருட வாகனம் தான் பெருமாளுக்கு. அதுவும் நம் பெருமாளுக்கு. இவர் கேட்டது பெரிய பெருமாளின்  பெரிய கருடனைப் பற்றி. கருட மண்டபத்தில் வீற்றிருக்கும் கருடன் குறித்துக் கேட்டிருந்தார். அதுக்குத் தான் நான் மேற்கண்ட பதிலை அனுப்பிவிட்டு ஶ்ரீரங்கம் கோயிலுக்கும் மற்றக் கோயில்களுக்கும் உள்ள வித்தியாசம் ஏதேனும் கிடைக்கிறதா என கூகிளில் தேடினேன். கிடைக்கவில்லை. அல்லது எனக்குத் தேடப் பொறுமை இல்லை. எதுக்கும் அவங்களிடம் கொஞ்சம்பொறுங்க கேட்டுச் சொல்றேன்னு சொல்லலாம்னு திரும்பி வந்தால் அவங்களோட கடுமையான கமென்ட். அதற்கு நான் பதில் சொல்வதற்குள்ளாக அது திடீரென நீக்கப்பட்டது!  எனினும் அவங்க கொடுத்த கருத்தை நான் படிச்சதால் பதில் சொன்னேன்.

கீழே என் பதில்.

வணக்கம் Nandhitha Kaappiyan நான் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது உங்கள் கருத்தை நீக்கி இருக்கிறீர்கள். அதனால் பரவாயில்லை. எனக்குத் தெரிஞ்சு நான் கோயிலின் எவ்விதமான அதிகாரத்திலும் இருப்பதாக எங்கேயும் எப்போவும் சொல்லிக் கொண்டதில்லை. நீங்க உங்க கருத்திலே கேட்டிருந்தீங்க!நீங்க என்ன கோயிலின் அதிகாரபூர்வமான அதிகாரியானு. சாதாரணமான ஒரு பக்தை கூட இல்லை! அதுக்கே ரொம்ப தூரம்போயாகணும். :) நீண்ட பதிலுக்கு மன்னிக்கவும்.

எனக்குத் தெரிந்தவரை, அறிந்தவரை கோயிலின் பழமை வாய்ந்த பட்டாசாரியார்கள் ஊர்க்காரர்கள் சொல்வது இந்த ஊர்ப் பெருமாள் பெரிய பெருமாள், அவருக்கேற்ற கருட வாகனம்! அதான் கருடனும் பெரியவர்! பெருமாள் எப்போ வரும்னு காத்துட்டு இருக்கார்னு தான் சொல்வாங்க. இதைக் குறித்து நான் படித்த ஆதாரத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். கிடைக்கலை. அவகாசம் தேவை!

நீங்க சொன்ன மாதிரி இங்கேயும்கருட வாகனம் உண்டு. வெள்ளி, தங்க கருட வாகனங்கள். ஆனால் அதில் பவனி வருபவர் நம்பெருமாள் தான். பெரிய பெருமாள் இல்லை. கருட வாகன சேவை இல்லாத பெருமாள் கோயிலே இல்லை என்பது எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மேலே சொன்ன "ஆனால் திருவரங்கத்தில் ஏன் இந்த வித்யாசமாக வீற்றிருக்கிறார்?" இந்தக் கேள்வியைக் கேட்டது நீங்கள் தான் என்பதை முன்னரே கவனித்திருந்தால் பதிலே சொல்லி இருக்க மாட்டேன். தவறு என் மீது தான் மன்னிக்கவும். நீங்கள் அறியாத விஷயங்கள் இல்லை! ஆகவே உங்களுக்குத் தெரிந்த ஒன்றை நான் தவறாய்க் கூறியதற்கு மிகவும் மன்னிக்கவும்.

நம்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆகவே அவர் கருட வாகனத்தில் எழுந்தருளுவார்

மேற்கண்ட என் பதிலுக்கு
அவர் கொடுத்த பதில்!


 Geetha Sambasivam அந்த அந்த கோயில்களில் கேட்கவும் என்ற உத்தரவிட்டதனால் தான் அவ்வாறு கேட்க நேர்ந்தது, எல்லாத் திருக்கோயில்களிலும் உற்சவர் தான் திருவிழாவில் எழுந்தருளுவார், மூலவர் என்றுமே வெளியில் வருவதில்லை.

இது உத்தரவு என அவர்களுக்குப்பட்டிருக்கிறது. எல்லாக் கோயில்கள் பற்றியும் அதன் திருவிழாக்கள், நடைமுறை பற்றியும் எனக்குத் தெரியாதே! ஆகவே சம்பந்தப் பட்ட கோயில்களில் கேட்டால் சொல்வார்கள் என்று நினைத்துத் தான் பதில் கொடுத்தேன். அது தவறு எனப் புரிஞ்சுக்கலை. அவ்வளவெல்லாம் மூளை இல்லை. அது வேலையும் செய்யலை! :( ஆனாலும் அவங்க விடவில்லை. திரும்பத் திரும்ப நான் உத்தரவு கொடுக்கிறேன் என்னும் தொனியிலேயே பேசிட்டு இருந்தாங்க! அதோடு ஶ்ரீரங்கம் கோயில்களில் கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல ஒரு தளமே இருக்கு. அதையும் அவங்களுக்குச் சுட்டி இருந்தேன். 

என் பதில்

இந்த இடத்தைத் தெரியுமா?விரைவான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
கேள்விகளும் பதில்களும்
கே: Why this Temple que system is very poorly organised. Free and paid que are treated as animals. What the temple organisers are doing. One day let them take the frer que and find the people isssues.
ப: Many temples i visited are like that. But here i got a better crowd without much mess up.. i think the devotees ourself shud try not to make problems..
(மேலும் 16 பதில்கள்)
எல்லாக் கேள்விகளையும் காட்டு (140)
பாப்புலர் டைம்ஸ்

நேரம் இருந்தால் இங்கே சென்று உங்கள் சந்தேகத்தைக் கேட்கவும். தீர்த்து வைப்பார்கள். இதே போல் அந்த அந்தக் கோயில்களிலும் கேட்கலாம்.

மேற்கண்ட பதிலையே மீண்டும் சொல்லி இருந்தேன். அதுவும் அவங்களுக்குத் தவறாகவே தோன்றி இருக்கிறது. அதோடு இல்லாமல் எல்லாக் கோயில்களிலும் மூலவர் வருவதில்லை என்ற அவர்களின் கருத்துக்கு எதிராக,

என் பதில்

ஶ்ரீரங்கத்தில் கருட மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் கருடன் மூலவர்! மூலவருக்கு உரியவர்! அவர் எப்படி வெளியே வருவார்? எல்லாக் கோயில்களிலும் மூலவர் வர மாட்டார் எனினும் சிதம்பரம் கோயிலில் மூலவரான நடராஜர் தான் வெளியே வருவார். வருகிறார், வந்து கொண்டு இருக்கிறார் இனியும் வருவார்.

என்றும் பதில் சொன்னேன்.  அதுக்கு அவங்க மறுபடியும்,

நண்பர்/நண்பி

ஏன் இங்கு கேட்கக் கூடாதா? இது என்ன புதுவிதமான உத்தரவு?

என்று கேட்டிருந்தார். என்றாலும் நான் விடாமல் மீண்டும் மீண்டும்,
கீழ்க்கண்ட பதிலைக் கொடுத்தேன்.

என் பதில்

/அந்த அந்த கோயில்களில் கேட்கவும் என்ற உத்தரவிட்டதனால் தான் அவ்வாறு கேட்க // நாம் எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தைப் பொறுத்தது அது!

அவங்க சரியாப் புரிஞ்சுக்கலை என்பதை எடுத்துச் சொன்னேன். இது எல்லோருடனும் சொல்வது தான். ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு சம்பிரதாயம், நடைமுறை, மரபுகள் இருக்கின்றனவே!  ஆகையால் தான் அப்படிச் சொன்னேன். இதை நான் இங்கு தான் கேட்பேன், நீ பதில் சொல்லித் தான் ஆகணும்னு அவர் தான் உத்தரவு போடுகிறார். ஆனால் என்னை நான் உத்தரவு போடுவதாகச் சொல்கிறார். மனம் ரொம்பவே வருந்தி விட்டது. இன்னமும் இது ஆறவில்லை. அவங்க விடாமல் அவங்க சொல்வதையே சொன்னார்கள்.

மீண்டும் அவர் பதில்மீ

சொல்வதைச் சொல்லும் விதமாகச் சொன்னால் புரிந்து கொள்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள்! தங்கள் வார்த்தைகளில் அதிகாரத்வனி தெரிந்தது அதனால் தான் அவ்வாறு பதில் எழுதினேன்.

என் பதில்

 Nandhitha Kaappiyan உங்களோட புரிதல் அவ்வளவு தான். எனக்குத் தெரிந்ததைத் தான் நான் சொல்ல முடியும். மற்றப் பெருமாள் கோயில்கள் பற்றி நான் எவ்வாறு சொல்ல முடியும்? உங்களுக்கு எந்தக் கோயில் பத்தித் தெரிஞ்சுக்கணுமோ அங்கே கேட்டால் சொல்லுவார்கள். எத்தனை முறை கேட்டாலும் இதை அதிகாரம் என நினைத்தாலும் இதான் என் பதில்! முதலிலேயே உங்க பெயரைப் பார்த்திருந்தால் நான் பதிலே சொல்லி இருக்க மாட்டேன். உங்களைப்புண் படுத்தியதற்கு மிகவும் மன்னிக்கவும். தாழ்மையான மன்னிப்புக் கேட்டுக்கிறேன். _/\_

மன்னிப்பும் கேட்டுக்கொண்டு விட்டேன். என்றாலும் மேலும் மேலும் இகழ்ச்சியாகப் பேசியதோடு அல்லாமல் உனக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா என்றெல்லாம் கேட்டார்.

அவர் சொன்னது!

மன்னிப்பெல்லாம் எதற்கு, விட்டுத் தள்ளுங்கள், நானும் ஓரளவு வைகானஸம் பாஞ்ச ராத்திரம்(பாத்ம புராணத்தில் உள்ள பரமேஸ்வர சம்ஹிதை) முதலியவற்றைப் படித்திருக்கிறேன், என்னைக் கண்டு எதற்காக ஒதுங்கவேண்டும்? என் புரிதல் பற்றித் தெரிந்து கொண்டமைக்கு நன்றி,

मौनान्मूक: प्रवचनपटुर्वातुलो जल्पको वा
धृष्ट: पाश्र्वे वसति च तदा दूरतश्चाप्रगल्भ:।
क्षान्त्याभीरुर्यदि न सहते प्रायशो नाभिजात:
सेवाधर्म: परमगौनो योगिनामप्यगम्य:॥
தங்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்தால் நல்லது இல்லையேல் யாரிடமாவது இதன்பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுகிறேன்

என்று எழுதி இருக்கிறார். என்னத்தைச் சொல்வது! :(

அப்படியும் மீண்டும் அவங்களுக்கு கருடனைப் பற்றிப் புரிய வைக்கக் கீழ்க்கண்ட பகுதியை திரு கைலாஷி அவர்களின் வலைப்பதிவில் இருந்து போட்டேன்.

நான் சொன்னது!

திருவரங்கத்தில் எல்லாம் பெரியதுதான் கோவில் - பெரிய கோவில், பேரும் பெரிது, ஊரும் பெரிது. பெருமாள் - இராம பெருமான் வழிபட்ட பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டி, ஊர் - பேரரங்கம். தளிகை - பெரிய அவசரம், வாத்யம் - பெரிய மேளம், பட்சணம் - பெரிய திருப்பணியாரம் என்று அனைத்துமே பெரியதுதான்.

பெரியாழ்வார் பாசுரம் ( கருடன் மற்றும் திருவரங்கம்)
செருவாளும்புள்ளானன்மண்ணாளன் செருசெய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன்பகலாளனென்னையாளன் ஏழுலகப்பெரும் புரவாளன்
திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்றதிருவரங்கமே.

இதைச் சொல்லிவிட்டுக் கடைசியாக


எனக்குத் தமிழே தகராறு! சம்ஸ்கிருதம் எல்லாம் எங்கே இருந்து தெரியும்! உங்கள் முயற்சிக்கு நன்றி. :)"" என்று சொல்லி முடித்தேன்.


 நல்லவேளையா அவங்க இதுக்கு பதில் எதுவும் சொல்லலை. இவங்க எனக்கு சுமார் ஏழெட்டு வருடங்களாகத் தெரிஞ்சவங்க தான். இருந்திருந்து என் பெண் அல்லது பிள்ளை வயசு இருப்பாங்க! ஆணா, பெண்ணா தெரியலை. சிலர் பெண் பெயரில் எழுதுவதாகச் சொன்னார்கள். மழலைகள் குழுமத்தில் கரிகாலன் பற்றி எழுதினப்போ என்னிடம், "கரிகாலன்" என்று எப்படிக் கூப்பிடலாம்!" என வாதம் செய்தார். இத்தனைக்கும் கரிகாலன் என்ற பெயர் நான் வைக்கலை. சரித்திரத்திலேயே குறிப்பிட்டிருக்கு என்று சொல்லியும் விடலை! திரும்பத் திரும்ப கரிகாலன் என்று சொன்னது அந்த அரசனை அவமதிக்கிறாப்போல். இந்தப்பெயரைச் சொல்லி எப்படிக் குறிப்பிடலாம் என்றே கேட்டார்கள். இது போல் சில பதிவுகளில் இவங்க இன்னும் சிலவற்றுக்குக் கேட்டிருந்தார்கள். ஆகவே இவங்க பெயரைக் கண்டாலே ஒதுங்கிப் போவது என் வழக்கம். இந்தப் பதிவில் ஶ்ரீரங்கம் குறித்தும் அந்த கருடன் குறித்தும் கேள்வி இருக்கவே ஓர் ஆர்வத்தில் பதில் சொல்லி விட்டேன். உடனே மற்றக் கோயில்களில் ஏன் அப்படி இல்லை என்று கேட்கிறார். அதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? கோயில் கட்டினவங்க கூட இப்போ இல்லை! :( எழுதி வைச்சது தானே! அதுவும் எல்லாக் கோயில்கள் பற்றியும் தெரிஞ்சுண்டு உடனே சொல்லணும்னா எப்படி முடியும்? ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு பத்ததி! வைகானச ஆகமம், பாஞ்சராத்திர ஆகமம் இவற்றுக்கும் கருடாழ்வார் இங்கே அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

திருப்பாற்கடலில் இருந்து இந்தப் பிரணவ விமானம் மேலெழுந்தபோது கருடன் அதைத் தாங்கி வந்தானாம். அப்படியே இங்கே வைக்கப்பட்ட விமானத்தோடு பெருமாள் எப்போக் கூப்பிடுவார் என கருடன் காத்திருப்பதாகத் தான் இங்குள்ள பெரியோர்கள் சொல்கின்றனர். எனக்குத் தெரிந்ததைத் தான் நான் சொல்ல முடியும்! இதிலே நான் என்ன தப்பு செய்திருக்கேன் என்பதை நண்பர்களான நீங்கள் எல்லோரும் எந்தவிதமான மனத் தடங்கலும் இல்லாமல் தவறு என் பக்கம் எனில் என்ன தவறு, என்ன சொல்லி இருக்கணும் என்பதைச் சுட்டிக் காட்டுமாறு வேண்டுகிறேன்.

இதைப்பதிவிட வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இரண்டு நாட்களாக மன உளைச்சல் தாங்கலை. அதிரா மாதிரி மனோபாவத்தை இறைவனிடம் வேண்டிக் கொண்டு இதுவும் கடந்து போம் என நினைக்க வேண்டும். அத்தகைய மனோபாவம் எனக்கும் கொடு பிள்ளையாரப்பா!