எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 31, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 80


தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதை சொல்லியதாவது:" லட்சுமணா, பாவியாகிய நான் மிகுந்த பாவம் செய்ததாலேயே இத்தகையதொரு தண்டனையை அனுபவிக்கின்றேன். என் மாமியார்கள் அனைவரிடமும், நான் அவர்களின் நலனைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கவும். மன்னரிடம், நான் அவரைத் தவிர வேறொருவரை மனதிலும் நினைத்தவள் இல்லை என்பது அவருக்கே தெரியும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தவும். மேலும் மன்னரிடம் நான் சொன்னதாய் இதைச் சொல்வாய் லட்சுமணா! "அரசே! மக்களின் அவதூறுப் பேச்சைத் தாங்க முடியாமல் நீங்கள் என்னைத் துறந்திருக்கின்றீர்கள். இது அரசனின் கடமை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு உங்களைத் தவிர, வேறு கதி இல்லை அரசே! ஒரு மனைவியாகவும், உங்கள் பட்டமகிஷியாகவும், உங்களுக்கு நேரும், அவதூறிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் மாபெரும் கடமை எனக்கும் உள்ளது. ஆகையால் இந்த அவதூறு உங்களைப் பாதிக்கும் என்று நீங்கள் கருதுவதால் நானும் உங்களை விட்டு விலகியே இருக்கின்றேன். உங்கள் மனதில் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்திருக்கின்றீர்களோ, அத்தகையதொரு இடம் குடிமக்களுக்கும் நீங்கள் கொடுத்து வருகின்றீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

"என்னுடைய இந்த உடலும், உள்ளமும், நீங்கள் அருகாமையில் இல்லாததால் அடையப் போகும்,துன்பங்களைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அரசே, மக்களுடைய இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள், அதை அவர்கள் உணரும் வகையில் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன். திருமணம் ஆன ஒரு பெண்ணுக்குக் கணவனே, குரு, தெய்வம் அனைத்தும் என்றாகிவிடுகின்றது. ஆகவே நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டு தங்கள் கட்டளைப்படி நடப்பேன் என உறுதி அளிக்கின்றேன்." லட்சுமணா, இதை நீ நான் சொன்னதாய் ராமரிடம் கூறுவாயாக!"

"மேலும் லட்சுமணா, இதோ, என்னுடைய இந்த வயிற்றைப் பார், கர்ப்பிணி ஆகிவிட்ட நிலையில் தான், இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகின்றது என்னும் நிலைமையில் தான் நீ என்னைக் காட்டில் கொண்டு வந்து விட்டிருக்கின்றாய் என்பதையும் சற்றும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்வாய்!" என்று சொல்லிக் கொண்டே, சீதை தன் கர்ப்ப வயிற்றை லட்சுமணனுக்குத் தொட்டுக் காட்டினாள்.

லட்சுமணன் கதறினான். தலையைத் தரையில் மோதிக் கொண்டு அழுதான். " என் தாயே, நான் என்ன பாவம் செய்தேன்?? தங்கள் திருவடிகள் தவிர, மற்றவற்றைக் காணாத என் கண்கள், இன்று இந்தக் காட்சியைக் காணும்படி நேர்ந்ததா?? இதுவும் நான் செய்த பாவம் தான்! என்னால் இதைத் தாங்க முடியவில்லையே!" என்று கதறினான் லட்சுமணன். பின்னர் சீதையை நமஸ்கரித்து வலம், வந்து மீண்டும் படகில் ஏறிக் கங்கையைக் கடந்தான். அக்கரையில் சுமந்திரம் ரதத்துடன் காத்திருந்தார். இக்கரையில் நிர்க்கதியான சீதை செய்வதறியாது திகைத்து நின்றாள். அவள் படகைப் பார்த்த வண்ணமே நிற்க அக்கரையை அடைந்த லட்சுமணன், தேரில் ஏறிக் கொள்ளுவதும், தேர் கிளம்புவதும் கண்களில் பட்டது. மனதில் வெறுமை சூழ்ந்து கொள்ள சீதை துக்கம் தாங்க முடியாமல் பெரியதாக அலறி அழுதாள். காட்டில் கூவிக் கொண்டிருந்த குயில்களும், ஆடிக் கொண்டிருந்த மயில்களும், விளையாடிக் கொண்டிருந்த மற்ற விலங்கினங்களும் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு சீதை அழுவதைக் கவனித்ததோ என்று எண்ணும்படிக் காட்டில் சீதையின் அழுகுரல் தவிர வேறொன்றும் ஒலிக்கவில்லை.

ராமனின் அரச லட்சணம்!

கொஞ்சநாட்களாய் பயம் காட்டிக் கொண்டிருந்தது உடம்பு, ஞாயிறு அன்றிலிருந்து முடியாமல் போச்சு. அதனாலேயே பதிவுகள் போடமுடியவில்லை. வழக்கம்போல் டாடா இண்டிகாம் தொந்தரவுனு நினைச்சுக்கட்டுமேனு தான் எதுவும் சொல்லவும் இல்லை. அதுவும் தவிர, எல்லாருக்கும் ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்துடன் முடிக்கணும்னும் ஒரு ஆசை இருந்திருக்குனு நினைக்கிறேன். எழுதுகின்றது ஒரு மனிதனின் கதை. அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடிக்குச் சொல்லவேண்டும் அல்லவா?? ஆகவே உத்தரகாண்டத்தையும் படிப்பதால் எந்தத் தவறும் இல்லை. இந்தச் சாதுர்மாஸ்யத்தில் வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலும் தினந்தோறும் அகண்டநாம பஜனையும், ராமாயணப் ப்ரவசனமும் நடைபெறும். பெரும்பாலும் துளசி ராமாயணமே படிக்கப் பட்டாலும், உத்தரகாண்டம் படிக்காமல் முடிப்பதில்லை. கட்டாயமாய்ப் படிப்பார்கள். சீதைக்கு நேர்ந்தது அநியாயம், என்றும், அக்கிரமம் என்றும் சொன்னாலும், இன்னொரு பக்கம் ராஜ நீதி, ராஜாவின் தர்மம் அங்கே நிலைநாட்டப் படுகின்றது. மனைவியை விட குடிமக்களின் சொல் பெரியதா என்பது தற்காலத்துக்குப் பொருந்தினாலும், அரசனின் பொறுப்பு குடிமக்களுக்கு எந்தவிதக் குறையும் வைக்காமலும், குறை சொல்ல இடம் வைக்காமலும் ஆட்சிபுரிவதே அரசதர்மம் என்பதும் இதன் மூலம் எடுத்துச் சொல்லப் படுகின்றது. சீதையைப் பிரிந்து வாழ்வது ராமருக்கு மட்டும் வருத்தம் இல்லையா? அன்பு மனைவியைப் பிரிந்து வாழ்வது எத்தகைய கடினமான விஷயம் என்பதும், இதன் மூலம் ஒரு அரசனின் தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இது தனக்குத் தானேயும் ராமர் கொடுத்துக் கொண்ட தண்டனை என்றும் சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் கொடுத்த வாக்கைக் காக்கவேண்டி ராமர் இன்னும் சில நாட்களில் தன் அருமைத் தம்பி, தனக்கு நிழல் போன்ற லட்சுமணனையும் தியாகம் செய்யப் போகின்றார்.

கே ஆர் எஸ் சீதையை காட்டுக்கு அனுப்பும் ராமர் சீதையின் கூட லட்சுமணனை மட்டும் அனுப்பியதற்கு என்ன குறிப்பிட்ட காரணம் எனக் கேட்கின்றார். குறிப்பிட்ட காரணம் எதுவும் வால்மீகியில் சொல்லப் படவில்லை என்றாலும், லட்சுமணன் ஏற்கெனவே ராமருடனும், சீதையுடனும் காட்டுக்குச் சென்றவன். காட்டில் எங்கே இருந்தால் சீதை சுகமாய் வாழமுடியும் என்பதை அறிந்தவன். மேலும் ராமரே வால்மீகி ஆசிரமத்தில் விடச் சொல்லுகின்றார். காட்டைப் பற்றி நன்கு அறிந்த லட்சுமணன், தானே கூடச் செல்ல முடியும்? மேலும் ராமர் கூடச் சென்றால் அவரால் சீதையைப் பிரிய முடியுமா? சந்தேகமே! சீதைக்கும் ராமர் கூட வந்தால் பிரிய மனம் வராது அல்லவா? பரதனோ, சத்ருக்கனனோ கூட அவ்வாறு செய்யத் தயங்குவார்கள். ஆனால் லட்சுமணன் தன் கடமை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு கடமையைப் பலன் கருதாது செய்து முடிப்பான். அதனாலும் சொல்லி இருக்கலாம். ராமர் மேல் அவதூறு வீசிக் கொண்டே இருப்பார்கள், உண்மைதான், அதில் தான் அவரின் பெருமையே நிற்கின்றது அல்லவா? அத்தனை அவதூற்றையும் தாங்கிக் கொண்டு காதல் மனைவியையும், பெற்ற குழந்தைகளையும் தியாகம் செய்துவிட்டு, ஒரு ராஜ்யத்தை குடிமக்களின் நன்மைக்காகவே ஒரு அரசன் நடத்தவேண்டும் என்றால்??? ராஜ்யத்தையும், அதன் சட்டதிட்டங்களையும் நன்றாய் மதிக்கும் ஒரு முதல்குடிமகன் ராமன் தான் இல்லையா??? "மர்யாதா புருஷோத்தமன்" என்ற பெயருக்கு மிகவும் தகுதியானவன் இல்லையா? பெண்களுக்குக் கஷ்டம் வந்தால் வலக்கண்ணும், வலத்தோளும் துடிக்கும் என்பார்கள். அதுவே இன்பம் என்றால் இடக்கண்ணும், இடத்தோளும். இதை வைத்து ஒரு திரைப்படப்பாடலே வந்திருக்கு! எம்.ஜி.ஆர்.&ஜெயலலிதா படம்??? தெரியலை! "என் இடது கண்ணும் துடித்தது, உன்னைக் கண்டேன், இந்நாள் பொன்னாள்!" என்று கதாநாயகி பாடுவதாயும், "என் வலது கண்ணும் துடித்தது!" என்று கதாநாயகனும் பாடுவதாய் வரும்.

மெளலிக்கு பட்டாபிஷேகத்தைக் கணக்குப் பண்ணி 600 பதிவைக் கொண்டு வந்திருக்கலாமே என்ற எண்ணம். நான் கவனிக்கவே இல்லை, அப்புறம் தானே கணக்குப் பண்ண! அன்னிக்கு ஏதோ தற்செயலாய்க் கவனிச்சேன். இதிலேயே ஒருவேளை கணக்கில் வராத ட்ராப்டுகளும் சேர்ந்திருக்கலாம். :D அம்பிக்கு மொக்கை எப்போ போடப் போறேன்னு துடிதுடிப்பு! அதான் ராமாயணத்தை எப்போ முடிக்கப் போறீங்கனு நேரிலும், பின்னூட்டத்திலும் துளைச்சு எடுத்துண்டு இருக்கார். :P மொக்கைக்கு எனத் தனிக்கடை திறந்திருக்கேனே அம்பி, என்றாலும் சிலருக்குக் கடை மாற்றப் பிடிக்காது. கோபிக்கும், அதுவே!. கைப்புள்ள வெளிப்படையாகவே சொல்லிவிட்டார், மொக்கை போட்டுட்டுக் கூப்பிடுங்க, கூப்பிடாமலே வந்து கமெண்டறோம்னு! என்னத்தைச் சொல்றது? இந்தப் பதிவே ஒரு மொக்கையா ஆயிடுச்சே! நிறுத்திக்கிறேன். ராமாயணத்தில் சீதையைத் தவிக்க விட்டு வந்திருக்கோமே!! என்ன ஆச்சுனு பார்க்கலாமா??? மற்றபடி 600 பதிவுகளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Tuesday, July 29, 2008

600-வது பதிவு! கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 79

600-வது பதிவு

தற்செயலாக நேற்றுத் தான் கவனித்தேன், 599 பதிவு ஆகி இருந்ததை! இது 600-வது பதிவு. அப்படி ஒண்ணும் முக்கியமா எழுதலைனாலும், எழுதினவரைக்கும் முழு திருப்தியோட இருப்பது இந்த ராமாயணம் பதிவு மட்டுமே. அதிகப் பின்னூட்டம் வரலைனாலும், சிலவற்றில் பின்னூட்டமே இல்லை எனினும், தனி மடல்களில் வரும் பாராட்டுக்களே ஊக்கம் ஊட்டுபவையாக இருக்கின்றன. அப்படி மடலே வரலைனாலும் எழுதறதை நிறுத்தி இருக்கவும் மாட்டேன், எனினும், என்னோட சிறு முயற்சிக்குப்பலன் இருக்கின்றது என்ற வகையில் மகிழ்ச்சியே! பின்னூட்டம் கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி, சீதை என்ன ஆனாள் எனப் பார்ப்போமா??
*************************************************************************************

பொழுது விடிந்தது, மற்றவர்கள் அனைவருக்கும், ஆனால் சீதைக்கு இல்லை. எனினும் பேதையான சீதை இதை அறியமாட்டாள். அவள் எப்போதும்போல் மனமகிழ்வுடனேயே இருந்தாள். லட்சுமணன் ஆறாத்துயரத்துடன் சுமந்திரரிடம் சென்று, ரதம் தயார் செய்யும்படிக் கூறிவிட்டு, சீதையின் அந்தப்புரத்திற்குச் சென்று அவளை நமஸ்கரித்தான். பின்னர் அவளிடம், ராமர் அவளைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளை இட்டதாயும், தயார் ஆகி வருமாறும், ரதம் தயார் நிலையில் இருப்பதையும் தெரிவிக்கின்றான். சீதை மிக்க மகிழ்வோடு, ஒவ்வொரு ரிஷி பத்தினிகளுக்கும் அளிக்கும் வகையில் பல்வேறு விதமான பரிசுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கின்றாள். மனதிற்குள், ஒரு இரவிலேயே தன் கணவன் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தது பற்றிய பெருமிதத்துடனும், அநேகவிதமான பரிசுப் பொருட்களுடனும், சீதை ரதத்தில் ஏறி அமர்ந்தாள். அவள் நிலையைக் கண்ட லட்சுமணன் மிக்க வேதனை அடைந்தான். ரதம் கிளம்பியது. ராமர் மனதில் சூன்யம் சூழ்ந்தது.ரதம் செல்லும்போதே சீதை லட்சுமணனிடம் தனக்கு ஏனோ மனதில் மிக்க வேதனை தோன்றுவதாயும், அபசகுனங்கள் தோன்றுவதாயும், வலது கண்ணும், வலது தோளும் துடிப்பதாயும் கூறுகின்றாள். மனதில் ஏதோ இனம் தெரியாத வெறுமை சூழ்வதாயும் சொல்லும் அவள், "லட்சுமணா, உன்னுடைய அண்ணனுக்கு ஏதும் நேராமல் நலமாய் இருக்கவேண்டும், என் மாமியார்கள், நலமாய் இருக்கவேண்டும், மற்ற இரு மைத்துனர்களும், உங்கள் மூவரின் மனைவிமாரும், என் சகோதரிகளும் நலமாய் இருக்க வேண்டும், இதற்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்." என்று கூறினாள். லட்சுமணன் அவளுடைய பரிசுத்தமான உள்ளத்தை மனதில் போற்றிய வண்ணம், சற்று நேரத்தில் தனக்கு நேரப் போகும் துக்கத்தை உணராமல் மற்றவர்கள் கஷ்டப் படுவார்களோ என எண்ணித் தவிக்கும் அவளைத் தேற்றினான். ரதம் கங்கைக் கரையை அடைந்தது. கீழே இறங்கி ஓய்வெடுத்துக் கொண்ட போது, துயரத்தை அடக்க முடியாமல் லட்சுமணன் "ஓ"வென வாய்விட்டுக் கதறி அழுதான். பேதையும், மனதில் கூடத் தனக்கு நேரிடப் போகும் அளவிட முடியாத இழப்பை நினைக்காதவளும் ஆன சீதை, ஒருவேளை ராமரை விட்டுச் சற்று நேரம் அதிகம் பிரிந்து இருப்பதாலேயே லட்சுமணன் துன்பப் படுகின்றான் என எண்ணி, அவனைத் தேற்றுகின்றாள். "நாம் அக்கரை சென்று அனைவரையும் பார்த்துவிட்டுப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பி விடுவோமே? ஏன் கலங்குகின்றாய்? எனக்கும் ராமரைப் பிரிந்து அதிக நேரம் இருக்க முடியாது தான், லட்சுமணா, வெட்கத்தை விட்டுச் சொல்கின்றேன். நீ உன்னைத் தேற்றிக் கொள்வாய்!" என்று சொல்லவும், லட்சுமணன் படகு தயாராகிவிட்டதால் அக்கரைக்குச் செல்லலாம் எனக் கூறுகின்றான்.

அக்கரையைப் படகு அடைகின்றது. இருவரும் கீழே இறங்கியதும், லட்சுமணன் தன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதையை வலம் வந்தான். "தாய்க்கு நிகரானவளே! அனைவரும் ஏசப் போகும் ஒரு காரியத்தை என்னைச் செய்யும்படி என் அண்ணன் ஆணை! நீ எவ்வளவு பரிசுத்தமானவள் என்பதும், என் அண்ணனைத் தவிர மற்றொருவரை நினையாதவள் என்பதும் நான் அறிவேன். தயவு செய்து, தேவி, இந்தக் காரியத்தை நான் என் முழு மனதோடு செய்வதாய் நினைத்து விடாதீர்கள். காலம், காலத்துக்கும் எனக்கு நேரிடப் போகும் பழிச் சொல்லுக்கு நான் காரணம் இல்லை!" என்று வேண்டுகின்றான் சீதையிடம். சீதைக்கு இப்போது தான் சற்று மனக் கலக்கம் வருகின்றது. ஏதோ தனக்குச் சற்றும் உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை லட்சுமணன் இப்போது செய்யப் போகின்றான் என்பதை உணர்ந்தாள்.

"ஏதோ பெரும் சுமையை உள்ளத்தில் சுமந்திருக்கின்றாய் லட்சுமணா, அது என்ன? சொல்லிவிடு! மன்னரும், என் கணவரும் ஆன ஸ்ரீராமர் உன்னிடம் ஏதோ விரும்பத் தகாத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்கின்றாரா?? சற்றும் மறைக்காமல் உள்ளது உள்ளபடிச் சொல்லிவிடு லட்சுமணா!" என்று சீதை கேட்க, லட்சுமணன், பத்ரனிடம் ராமர் கேட்டு அறிந்த செய்தியைக் கூறுகின்றான். மற்றவர்களும் அந்தச் செய்தியை உறுதி செய்ததையும், நாட்டு மக்கள் பேசுகின்ற அவதூறு காரணமாய், தேவர்களாலும், அக்னியாலும், போற்றப்பட்டு, வாழ்த்தப் பட்ட உங்களைக் காட்டில் விட்டுவிட்டு, ஆசிரமங்களுக்கு அருகில் அநாதை போல் விட்டுவிட்டு வருமாறு ராமர் என்னிடம் கூறி உள்ளார். ஆனால் தேவி, இதைச் சொல்ல அவர் எவ்வளவு வேதனைப் பட்டார் என்பதும், அவர் மனம் முற்றிலும் உடைந்துவிட்டது என்பதும் நான் அறிவேன். மனம் தளரவேண்டாம், தேவி, ரிஷி, முனிவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள். அதிலும் இங்கே ரிஷிகளில் மிக உயர்ந்தவரும்,எங்கள் தந்தையான தசரதரின் நண்பரும், ஆன வால்மீகியின் ஆசிரமம் உள்ளது. தாங்கள் விரும்பினால் அங்கேயே தங்கிக் கொள்ளலாம். ராமரை மனதில் நினைத்தவண்ணம் அந்த ஆசிரமத்தில் வாழுமாறு தங்களை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்ரேன். உங்கள் சிறப்பு இன்னும் ஓங்கி ஒளி விட்டுப் பிரகாசிக்கவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என நம்புகின்றேன்." என்றான் லட்சுமணன்.சீதை அளவிடமுடியாத துயரத்துடன் கீழே வீழ்ந்தாள். கதறி அழுதாள். பின்னர் லட்சுமணனிடம் சொல்கின்றாள்.

"லட்சுமணா, ஒரு கணத்துக்கேனும், மனதாலும், உடலாலும், நன்னடத்தையில் இருந்து தவறாத எனக்கு இப்படிப் பட்ட துன்பங்கள் நேருமளவுக்கு நான் என்ன பாவம் செய்தேனோ??? என்னை பிரம்மதேவன் துன்பங்கள் அனுபவிப்பதற்கெனவே சிருஷ்டித்தானோ?? என் பதியைப் பிரிந்து ஆசிரமத்தில் தனிமையில் நான் வாழவும் வேண்டுமோ?? ஐயகோ! தற்கொலை செய்து கொள்வோமெனில் ராமரின் குலவாரிசு என் வயிற்றில் வளருகின்றதே! அதற்கும் முடியாதே!! ரிஷிகளிடம் நான் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு ஆசிரமத்தில் தங்குவேன்? ஒன்றும் புரியவில்லையே! சரி, லட்சுமணா, நீ என்ன செய்ய முடியும்? மன்னரின் ஆணை அதுவானால் நீ திரும்பிச் செல்வாய்! ஆனால் மன்னருக்கு நான் தெரிவிக்க வேண்டிய செய்திகளைச் சொல்கின்றேன். அவற்றை மன்னரிடம் நான் கூறியதாய்க் கூறுவாய்!" என்று சொல்கின்றாள் சீதை.

Monday, July 28, 2008

கதை, கதையாம் , காரணமாம் - ராமாயணம் பகுதி 78


ராமரின் பட்டாபிஷேகம் முடிந்தது. அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப் பட்டு அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிந்து சில ஆண்டுகள். சீதை முதல் முதலாய்க் கருவுற்றாள். பட்டமகிஷி அல்லவா?? அனைவரின் மனமகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ராமரும் குதூகலத்தில் ஆழ்ந்தார். சீதையிடம் உனக்கு என்ன இஷ்டமோ அதை நிறைவேற்றித் தருவது என்னுடைய பொறுப்பாகும், என்ன வேண்டுமோ கேள், என்கின்றார். சீதையின் நாவில் இது என்ன??? சனி பகவான் வந்து உட்கார்ந்தானோ??? சீதை கேட்கின்றாள்: "கிழங்குகளையும், கனிகளையுமே உண்டு நாம் வாழ்ந்து வந்த அந்தக் காட்டு வாழ்வை மீண்டும் ஒருமுறை வாழ ஆசைப் படுகின்றேன். ரிஷி, முனிவர்களின் ஆசிரமத்தில் ஒரு நாளாவது அவர்களுடன் பொழுதைக் கழிக்க ஆசைப்படுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் அதை நிறைவேற்றித் தருவதாய்ச் சொல்கின்றார். அப்போது அவரைக் காண தூதர்கள் வந்திருப்பதாய்த் தகவல் வர, சீதையை அங்கேயே விட்டு விட்டு, ராமர் மட்டும், வந்திருப்பவர்களைக் கண்டு தன் அரசவைக் கடமையை நிறைவேற்றும் வண்ணம் சென்றார். அங்கே அறிவிலும், விவேகத்திலும், புத்தி சாதுரியத்திலும் சிறந்த பலர் அமர்ந்திருக்க பொதுவான பல விஷயங்கள் பேசப் பட்டன. பல முடிவுகள் எடுக்கப் பட்டன. அப்போது ராமர் அங்கே இருந்தவர்களில் குறிப்பாக பத்ரன் என்பவனைப் பார்த்து, "ஒரு அரசன் தன் கடமையைச் சரிவரச் செய்து வருகின்றானா என்பது பற்றிக் குடிமக்கள் பேசுவதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். நம் ராஜ்யத்தில் நீங்கள் சென்ற பகுதியில் உள்ள மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர்?? குறிப்பாக என் அரசாட்சியைப் பற்றியும், என் தம்பிமார்கள் உதவியைப் பற்றியும், என் மனைவியும், பட்டமகிஷியுமான சீதையைப் பற்றியும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய விரும்புகின்றேன்." என்று கேட்கின்றார்.

பத்ரன் முதலில் நாட்டு மக்கள் ராமரை மிகவும் புகழ்ந்து பேசுவதையும், அவரது வீரத்தைப் பாராட்டுவதையும் மட்டுமே சொன்னான். ஆனால் அவன் முழுதும் உண்மை பேசுகின்றானா என்பதில் சந்தேகம் வரவே ராமர் அவனைப் பார்த்து, "முழுதும் உண்மையைச் சொல்லுங்கள். குறைகள் ஏதேனும் என்னிடம் இருப்பதாய் மக்கள் பேசிக் கொண்டாலும் அவற்றையும் சொல்லுங்கள். அந்தக் குறையைக் களைந்துவிடுகின்றேன். மக்கள் மன மகிழ்ச்சியே ஒரு மன்னனுக்குத் தலையாய கடமை ஆகும்." என்று கேட்கின்றார். பத்ரன் உடனே இரு கைகளையும் கூப்பியவண்ணம், ராமரைப் பார்த்து வணங்கிக் கொண்டே, "அரசே, மக்கள் நீங்கள் கடல் மேல் பாலம் கட்டி கடல் கடந்தது பற்றியும், ராவணனை வெற்றி கொண்டது பற்றியும், சீதையை மீட்டது பற்றியும் புகழ்ந்தே பேசுகின்றனர். உங்கள் அரசாட்சியிலும் யாதொரு குறையையும் அவர்கள் காணவில்லை. ஆனால் ராமருக்குப் பெண்ணாசை அதிகம் ஆகிவிட்டது. அதன் காரணமாகவே, ராவணனால் பலவந்தமாய் அபகரிக்கப் பட்டு, அவனால் மடியில் அமர்த்தப் பட்டு இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே ராட்சதர்களின் காவலின் கீழ் அசோகவனத்தில் வைக்கப் பட்ட சீதையை ராமர் மீண்டும் சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்துவாரா? எவ்வாறு சீதையை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்?? நம் நாட்டு அரசனே இவ்வாறு இருந்தால் பின்னர் நாம் என்ன செய்வது?? நம் மனைவிமார்களும் இவ்வாறு நடந்து கொண்டால், இனி நாமும் அதைச் சகித்துக் கொண்டு வாழவேண்டுமே?? "யதா, ராஜா!, ததா ப்ரஜா!" {"அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள்"} என்று தானே சொல்கின்றனர்?" என்று பல இடங்களிலும், கிராம மக்கள் கூடப் பேசுகின்றனர். " என்று இவ்விதம் பத்ரன் ராமரிடம் சொன்னான்.

ராமர் மனம் நொந்து மற்றவர்களைப் பார்த்து இதன் முழு விபரமும் உங்களில் யாருக்குத் தெரியும் எனக் கேட்க, அனைவரும் பத்ரன் சொல்வது உண்மையே எனவும், பல இடங்களிலும் மக்கள் இவ்வாறே பேசிக் கொள்வதாயும், வேதனையுடனேயே உறுதி செய்தனர். ராமர் உடனேயே முகவாட்டத்துடனும், நிலைகுலைந்த தோற்றத்துடனும், தன் தம்பிகளை அழைத்து ஆலோசனை செய்தார். வந்த தம்பிகள் மூவருக்கும் ராமரின் தோற்றம் அதிர்ச்சியைக் கொடுத்தது. சீதையைப் பிரிந்து இருந்தபோது இருந்த தோற்றத்தை விட மோசமான தோற்றத்தில் காட்சி அளித்த ராமரைப் பார்த்த மூவரும், திடுக்கிட்டு நிற்க, தம்பிகளைப் பார்த்த ராமரின் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தது. கண்களில் கண்ணீருடனும், மனதில் வேதனையுடனும், தாங்க மாட்டாத துக்கத்துடனும், ராமர் சொல்கின்றார்:" என் அருமைச் செல்வங்களான தம்பிகளே! நீங்கள் மூவருமே எனக்குச் சொத்தைவிடப் பிரியமானவர்கள் ஆவீர்கள். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையைக் கேளுங்கள்." என்று சொல்லிவிட்டு, ராமர் பத்ரன் கொண்டு வந்த செய்தியையும், மற்றவர்கள் அதை உறுதி செய்ததையும் கூறுகின்றார்.

"தம்பிகளே! நான் என்ன செய்வேன்??? நான் பிறந்ததோ புகழ் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில்! சீதை உதித்ததோ புகழ் பெற்ற ஜனகன் குலத்தில்! ராவணனால் அபகரிக்கப் பட்ட சீதையை மீட்டதும், உடனே அயோத்திக்கு அழைத்து வருதல் முறையில்லை என்றே அவள் மீது குற்றம் சொன்னேன். ஆனால் என் உள் மனதுக்குத் தெரியும், ஜானகி எந்தக் குற்றமும் அற்ற புனிதமானவள் என. எனினும், என் வேண்டுகோளை ஏற்று அவள் அக்னிப்ரவேசமும் செய்துவிட்டாளே??? வானவர்களாலும், தேவர்களாலும், அக்னியாலும் சீதை புனிதமானவள் என உறுதி செய்யப் பட்டிருக்க இப்போது இந்த ராஜ்யத்து மக்கள் இவ்விதம் பேசுகின்றார்கள் என்றால் என்ன செய்வேன் நான்???? இந்த அவதூறுப் பேச்சு ஒரு தீ போல் பரவுகின்றது என நினைக்கின்றேன். ஒரு அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுக்க வேண்டும்.நாட்டு மக்களை இந்த அவதூற்றைப் பரப்பா வண்ணம் தடுக்க வேண்டும். என்னுடைய குடிமக்களின் நலனுக்காக நான் என் உயிரையும் கொடுத்தாகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் என் உயிரினும் மேலாக நான் நினைக்கும் உங்களையும் நான் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறிருக்கும்போது சீதையை மட்டும் நான் எவ்வாறு அந்தப்புரத்தில் வைத்திருக்க முடியும்??? சீதையை நான் தியாகம் செய்தே ஆகவேண்டும். ஒரு அரசன் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு வந்திருக்கும் இந்த சந்தேகத்தை நான் போக்கியே ஆகவேண்டும். ஆகவே லட்சுமணா! சீதையை நீ உடனேயே ரதத்தில் வைத்து அழைத்துச் சென்று கங்கைக்கு மறுகரையில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகே விட்டுவிட்டு வந்துவிடு. துன்பம் என்னும் கடலில் நான் மூழ்கியே ஆகவேண்டும் என்ற விதியோ இது??? வேண்டாம், வேண்டாம், லட்சுமணா, உன்னிடம் நான் மறுமொழி எதுவும் கேட்கவில்லை! நீ எதுவும் பேசவேண்டாம்! நான் சொன்னதைச் செய்து முடி! அது போதும்! என் அருமைச் சகோதரர்களே, இவ்விஷயத்தில் எந்த சமாதானமும் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டாம்.

மேலும் சீதையே காட்டுக்குச் செல்ல ஆசைப் பட்டாள். ஆகவே லட்சுமணா, சீதையை உடனேயே அழைத்துச் சென்று கங்கையின் மறுகரையில் விட்டுவிட்டு வா! சுமந்திரரை ரதத்தைத் தயார் செய்யச் சொல்வாய்! இது என் ஆணை!" என்று கூறிவிட்டு ராமர் தனி அறைக்குச் சென்று விட்டார்.

லட்சுமணன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பரதனும், சத்ருக்கனனும் திகைத்து நின்றனர்.

அக்னிப்ரவேசத்தோடு சீதையின் துயரம் முடியவில்லை. இப்போது மற்றொரு துயரம் அவளை ஆக்கிரமிக்கின்றது. மேலும் மேலும் சீதை படும் துயரங்களுக்குக் காரணம் என்ன?? அதை நாம் கதையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம் இல்லையா???

Sunday, July 27, 2008

கோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா!

கண்ணனைச் சுற்றிக் கோபியர்கள் இருப்பதும், கண்ணன் அவர்களோடு புல்லாங்குழல் இசைத்தவண்ணம் சுற்றி வந்து விளையாடுவதுமான கோலத்தைக் கண்டு, வியக்காதவர் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எண்ணம், சிலருக்கு என்ன இந்தக் கண்ணன் எப்போப் பார்த்தாலும் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருந்தால் அவன் வீட்டில் அடுப்பு எப்படி ஊதமுடியும்னு! இன்னும் சிலருக்கு இப்படி ஊர் சுற்றியாக இருக்கானேனு! குழந்தைகளுக்கோ கண்ணன் படிக்கவே மாட்டான் போலிருக்கே, அவங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களானு தோணுது! சில வயதானவர்களோ, எப்போப் பார்த்தாலும் பொண்ணுங்க புடை சூழ இருக்கானே, நல்ல அதிர்ஷ்டம் தான்னு நினைக்கிறாங்க. இளைஞர்களோ எனில், ஆஹா, நாம் எத்தனையோ முயற்சிகள் செய்யறோம், இந்தப் பொண்ணுங்களைக் கடலை போடணும்னு, ஆனால் இந்தக் கண்ணன் புல்லாங்குழல் எடுத்து ஊதினால் அவன் பின்னாடியே போகுதுங்களே என்ன விஷயம்னு யோசிக்கிறாங்க. இப்படி ஒவ்வொருவர் கண்ணன் கோபியர்களோடு இருப்பதைப் பற்றி யோசிச்சிட்டு இருக்காங்க இல்லையா?

பொதுவாக அனைவருக்குமே புரியாத ஒரு விஷயம், கண்ணன் என்ன இப்படி ஒரு பெண்பித்தனாய் இருக்கின்றான் என்பதே! பெண்களைச் சுற்றி அலையறானே இவனையும் ஒரு கடவுள் என்றோ, கீதையை உபதேசித்தவன் என்றோ சொல்லவா முடியும்??? கடவுள் என்று சொல்லப் படும் கண்ணனே இப்படி இருந்தால் சாமானிய மனிதனான நாம் இருக்கக் கூடாதா? என்றும் பலர் எண்ணம். ஆதிசங்கரர் ஒருமுறை சிஷ்யர்களோடு சென்று கொண்டிருக்கையில் அவருக்குத் தாகம் ஏற்பட, அப்போது அங்கே வந்த ஒரு தொழுநோயாளியான பிச்சைக்காரனின் மண்பாண்டத்தில் இருந்த நீரை வாங்கிக் குடித்தாராம், தாகம் தீரவேண்டும் என. சிஷ்யர்கள் முகம் சுளிக்க, சங்கரர் அந்த மாற்றத்தைக் கவனித்தும் ஒன்றும் சொல்லவில்லையாம். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் தாகம் எடுக்கின்றது என்று சொன்ன சங்கரர், அங்கே ஒரு கொல்லன் தன் உலையில் இரும்புக் குழம்பைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அதை வாங்கிக் குடித்தாராம். அப்போது தான் சீடர்களுக்குப் புரிந்ததாம், அவர் உண்மையான ஞானி என்றும், எந்தவிதமான ஆசாபாசங்களும், வலி, வேதனைகளும், உணர்வுகளும் அவரை அண்டாது என்று. அத்தகையதொரு நிகழ்வே மேற்கண்ட கோபியர்களோடு கண்ணன் ஆடும் நிகழ்வும். கண்ணன் ஒவ்வொரு கோபியரோடும் ஆடுகின்றான், பாடுகின்றான், விளையாடுகின்றான். சாப்பிடுகின்றான். சண்டை போடுகின்றான்.

"தீராத விளையாட்டுப் பிள்ளை!"யாக இருக்கின்றான் கண்ணன். பெண்களுக்குத் தீராத தொல்லையாகவும் இருக்கின்றான். ஒரே மனிதன் ஒவ்வொரு பெண்ணோடும் எப்படி ஆட முடியும், பாடமுடியும்???? ஏனெனில் கண்ணன் ஒவ்வொரு மனிதருள்ளும் உறைகின்றான். இந்த உலகத்தில் நாயகன் ஒருவனே. அவன் தான் கண்ணன், மற்றவர் அனைவருமே ஆண்,பெண் அடங்கலாய் அனைவருமே நாயகியர் தான். கண்ணன் ஒருவனே நாயகன். ஆகவே அந்தக் கண்ணன் அனைத்து நாயகியரான கோபியர்களுடன், ஆடாமல், பாடாமல், விளையாடாமல்,சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது எவ்வாறு?? இதை நாயன்மார்களும் சொல்லி இருக்கின்றனர். "

"முன்னம் அவனுடைய திருநாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்"

என்று நாயகி பாவத்தில் எழுதி இருக்கின்றனர். இப்படி நாயகி, நாயகன் பாவத்திலேயே ஆழ்வார்களும் பாசுரங்கள் பாடி இருக்கின்றனர். ஆண்டாளின் அனைத்துப் பாசுரங்களுமே பெரியாழ்வார் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு எழுதியதே என்று திரு ராஜாஜி கூறுவது உண்டு. அப்படி எழுதப் பட்டதே அஷ்டபதி என்னும் மகா காவியம். இதில் கண்ணனின் ராசலீலை வர்ணிக்கப் பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களால் இதன் உட்கருத்து புரிந்து கொள்ளப் படாமல் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றது. ஏதோ கண்ணன் கோபியரோடு குளிக்கப் போனான், போன இடத்தில் ஆடிப் பாடினான். அவன் ஒரு ஸ்திரீலோலன் என்றே புரிதல் பெருமளவில் இருக்கின்றது. கண்ணனின் இந்த ராசலீலையின் உட்கருத்தை அநேகர் புரிந்து கொள்ளாமலேயே இதை ஒரு அருவருப்பான விஷயமாகவும், பெருமாளே இப்படி என்றால் அவன் பக்தர்கள் எப்படி இருப்பார்களோ என்று சந்தேகமாகவும் பேச இடமளிக்கின்றது. இதைப் பற்றி எந்தப் புதிய 13, 14-ம் ஆழ்வார்களும் கவலைப்பட்டுக்கவே இல்லை. அவங்க கவலை எல்லாம் தில்லை பற்றியே தொல்லை கொடுக்குது. ஆகவே நாம் கவலைப்பட்டுக்க முடிவு செய்து விட்டு அதைப் பற்றிப் போட முனைந்த பதிவு இது:

"கண்ணனைச் சுற்றிய கோபியர்கள்: கோபியர்களின் ஆடை அவிழ்ந்து கிடக்கின்றது. அத்தனை கோபியர்களும், நதியில் நீராடி, மூழ்கித் திளைத்து சுகானுபவம் பெற இறங்குகின்றனர். நதியில் மூழ்க,மூழ்க அந்த நீரின் இனிய அனுபவத்தில் மூழ்கிப் போகின்றனர். கரையில் இருக்கும் ஆடைகளின் நினைவோ, ஏன், கண்ணன் நினைவோ கூட இல்லை அவர்களுக்கு! பார்த்தான் கண்ணன், தன் குழலெடுத்து ஊதுகின்றான். கோபியர் திரும்பிப் பார்க்கின்றனர். உடனே சட்டென அவர்கள் ஆடைகளை எடுத்துக் கொண்ட கண்ணன் மரத்தில் ஏறி மறைகின்றான். கோபியர் பதறுகின்றனர். ஆஹா, ஆடை இல்லாமல் எப்படி வெளியே வருவது??? கண்ணா,மணிவண்ணா, கோவிந்தா, கோபாலா, ஆடைகளைக் கொடுத்துவிடு, ஸ்ரீதரா, ருஷிகேசா, தாமோதரா, கேசவா, ஆடைகளைக் கொடுப்பாய்! நந்தகோபன் மகனே! இது என்ன விளையாட்டு?? கொடுத்துடுப்பா! கொடுத்துடு! ம்ஹும், கண்ணனா கொடுப்பான்? மறுக்கின்றான். பின்னே என்ன செய்வது?? என்னிடம் வாருங்கள்! வந்து கேளுங்கள் கொடுக்கப் படும் என்று உணர்த்துகின்றான் கோவிந்தன். கோபியர்களுக்குப் புரிகின்றது.

பிறக்கும்போது சர்வ ஞானத்துடனும் பிறக்கின்றோம். ஆனால் வளர, வளர, இவ்வுலக இன்பங்களில் மனம் தோயத் தோய இறைவனை மறக்கின்றோம். இறைவனால் படைக்கப் பட்டவர்கள் என்பதே மறக்கின்றது. ஆனால் இல்வாழ்வின் துன்பங்கள் ஆடையில்லாத மனிதர்களைப் போல நம்மை மனம் பதற வைக்கின்றது. இறைவனைத் தேட வைக்கின்றது. எனினும், நாம் அப்போதும், நம் தேவைக்குத் தான் இறைவனைத் தேடுகின்றோம், அவன் துணையை நாடுகின்றோம், அவனிடம் நம்முடைய வேண்டுகோளை விடுவிக்கின்றோம். எனினும் இறைவன் பொறுமையுடனேயே இருக்கின்றான். நமக்குப் புரியும் எனக் காத்திருக்கின்றான். நமக்கும் புரிகின்றது ஒருநாள், ஆஹா, அவனிடம் நாம் பரிபூரண சரணாகதி அடையவேண்டாமா? அப்போது தானே அவன் அருள் பூரணமாய்க் கிட்டும் என்று உணருகின்றோம். உடனேயே நம்,மகிழ்ச்சி, ஏக்கம், காமம், கோபம், தாபம், பாசம், ஆசை, உணர்வுகள் என்று நம்முடைய அனைத்து உணர்வுகளையும், இறைவனிடம் அர்ப்பணித்துப் பரிபூரணச் சரணாகதி அடைகின்றோம். நம்முடைய "நான்" என்னும் அகத்தை மறக்கவேண்டும். இறைவனே அகமும், புறமும் என உணரவேண்டும். அகத்தினுள்ளே இருப்பதும் அவனே என உணரவேண்டும், இதைத் தான் ராசக்ரீடை என்னும் அழகிய காட்சி உணர்த்துகின்றது. சற்று விளக்கமாய்ப் பார்ப்போமா??

இங்கே கோபியர்களாய் இருப்பவர்கள் அனைவரும் இவ்வுலக மக்களாகிய நாமே தான். பிறக்கும்போது ஞானத்துடனேயே பிரம்மமாய்த் தான் பிறக்கின்றோம். ஆனால் நாளாவட்டத்தில், சம்சாகர சாகரம் என்னும் நதியில் மூழ்கி, கடலில் மூழ்கி, நம்மை நாமே மட்டுமில்லாமல், இந்த உலகையும், நம்மையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையே மறக்கின்றோம். நாம் கழட்டிய ஞானம் தான் இங்கே கரையில் இருக்கும் ஆடைகள். இறைவன் நாம் ஞானத்தைத் துறந்து அஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து நம்மைக் கூப்பிடுகின்றான். எனினும் இந்த உலக மயக்கத்தில் மூழ்கி இருக்கும் நமக்கு அது காதில் விழுவதில்லை. அதனால் ஞானமாகிய ஆடையை இறைவனே திரும்ப எடுத்துக் கொண்டு விடுகின்றான். நமக்குத் துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே. அப்போதுதான் இறைவனைப் பூரணமாய் நினைக்க ஆரம்பிக்கின்றோம். அவனிடம் பிரார்த்திக்கின்றோம். எனக்கு விடிவு இல்லையா? என் கஷ்டங்களுக்கு முடிவு இல்லையா எனக் கேட்கின்றோம்.

கண்ணன் சொல்கின்றான்:"வா, என்னிடம் வந்துவிடு! என்னிடம் சரணாகதி அடைந்துவிடு! உன்னை நான் காக்கின்றேன்." என்று சொல்கின்றான். ஞானமாகிய ஆடையைக் காட்டுகின்றான். என்னிடம் வா, தருகின்றேன் என்று ஆசை காட்டுகின்றான். இறைவனைச் சரணடைந்தால் ஞானமும், அதைத் தொடர்ந்த மோட்சமும் கிட்டும் என உணர்த்துகின்றான்.
கீதையிலே கண்ணன் சொல்கின்றான்:

"அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே!
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்!"

என்று, எந்த மக்கள் கண்ணனையே சிந்திக்கின்றார்களோ அவர்களின் யோக க்ஷேமத்தையே தான் தாங்குவதாய்க் கூறுகின்றான் கண்ணன். கண்ணனையே நினைத்து, கண்ணனுக்கே மனத்தை அர்ப்பணம் செய்து, கண்ணனுக்கே பக்தி செலுத்தி, கண்ணனுக்கே வழிபாடுகள் செய்து, கண்ணனைத் தவிர வேறொருவரைத் தொழாமல், கண்ணனையே அடையவேண்டும் என்று எண்ணுவதே இந்த ராசக்ரீடையின் உட்பொருள்.

Wednesday, July 23, 2008

ராமர் அயோத்தி திரும்புதல்-கம்பர் காட்டும் காட்சிகள்!

ராமர் அயோத்திக்குத் திரும்பும் வேளையில், பாரத்வாஜர் ஆசிரமத்தில் தங்க நேரிடுகின்றது. அதனால் ராமர் முன்னால் அனுமனை அனுப்பி, பரதனுக்குச் செய்தி சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றார். ராமர் அயோத்தி வந்து சேரச் சற்றே தாமதம் நேரிட்டதாயும், அதைக் கண்ட பரதன், ராமர் எப்போது வருவார் என ஜோதிடர்களை அழைத்துக் கேட்டதாயும், அவர்கள் பதினான்கு வருடம் முடிந்து விட்ட காரணத்தால் ராமர் வர வேண்டும் என்று சொல்லியதாகவும் கம்பர் கூறுகின்றார். பின்னரும் ராமர் வந்து சேரவில்லை எனக் கலங்கிய பரதன் அதனால் உடல் நலம் கெட்டு மயங்கி விழுகின்றான். ராமருக்குத் தீங்கு நேரிட்டிருக்குமோ என அஞ்சுகின்றான். இல்லை, ராமன் எனக்கு ராஜ்யம் ஆள ஆசை வந்துவிட்டிருக்கும் இத்தனை வருடங்களில், அதனால் நானே ராஜ்யம் ஆள வேண்டும் என விட்டு விட்டானோ எனவும் எண்ணுகின்றான் பரதன்.

பின்னர் பரதன் ராமன் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் நான் உயிர் துறக்கப் போவது திண்ணம் எனக் கருதி உயிர் துறக்கத் தீர்மானிக்கின்றான். ஆகவே நகரிலிருந்து சத்ருக்கனனை வரவழைத்து அவனிடம் ராமர் குறிப்பிட்ட நாளில் வராததால், தான் முன்னரே கூறியபடி உயிர் துறக்கப் போவதாய்த் தெரிவிக்கின்றான்.
பாடல் எண் 4110
"என்னது ஆகும்கொல் அவ்வரம் என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னனாதி என் சொல்லை மறாது என்றான்."
சத்ருக்கனனை நாட்டை ராமர் வரும்வரைக்கும் ஆண்டு வரும்படிக் கூறுகின்றான். சத்ருக்கனன் மறுக்கின்றான். நீ மட்டும் உயிர் துறப்பாய், கடைசித் தம்பியான நான் மட்டும் எந்தவித நாணமும், அச்சமும் இல்லாமல் கவலை ஏதுமின்றி ராஜ்யத்தை ஆள முடியுமா எனக் கேட்கின்றான்.
பாடல் எண் 4113

"கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி போனவன்
தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும்
ஒரு தம்பி அயலே நாணாது
யானாம் இவ் அரசு ஆள்வென் என்னே
இவ்வரசாட்சி இனிதே அம்மா"


ஆனால் பரதன், ராமர் வரும்வரைக்கும் ராஜ்யத்தைப் பொறுப்பான நபர்களிடம் ஒப்படைக்கவேண்டும் ஆகவே சத்ருக்கனன் உயிர் துறக்க முடியாது என ஆணை இடுகின்றான்.

இந்த நிகழ்ச்சி கெளசலையின் காதுகள் வரை எட்டி அவள் துடிதுடிக்கின்றாள். பரதனைத் தீயில் விழாமல் காக்க வேண்டி, தன் வயதையும், உடல் நலத்தையும், முதுமையையும் யோசிக்காமல் ஓடி வருகின்றாள். பரதனைத் தீயில் விழக்கூடாது என வற்புறுத்தும் கெளசலை, ஆயிரம் ராமர்கள் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பரதனைப் புகழ்ந்தும் பேசுகின்றாள். அந்தப் பாடல் இதோ! :
பாடல் எண் 4122

"எண்ணில் கோடி ராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ!"

ஆனாலும் பரதன் அவள் வார்த்தையையும் மீறித் தீக்குளிக்கத் தயார் ஆகின்றான். தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ஆன நான், வாக்குத் தவற மாட்டேன் அவரைப் போலவே.
பாடல் எண் 4127

"யானும் மெய்யினுக்கு இன்னுயிர் ஈந்து போய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல்வழக்கு அன்றோ


ஆகவே நான் உயிர் துறப்பேன் என்று கூறி பரதன் தீக்குளிக்கத் தயார் ஆகும் வேளையிலேயே அனுமன் அங்கே வந்து சேருவதாய்க் கூறுகின்றார் கம்பர். இங்கேயும் அனுமன் “கண்டேன் சீதையை” என்னும் தொனியிலேயே சொல்லுவதாய்ப் பாடல் வருகின்றது. அந்தப் பாடல் இதோ:
பாடல் எண்: 4130 யுத்த காண்டம்

“அய்யன் வந்தனன்: ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? “ என்று உரைத்து, உள் புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான். “

என்று சொல்கின்றார் கம்பர். இதை அடுத்துக் கம்பர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை வர்ணித்துவிட்டு அதோடு ராமாயணத்தை முடிக்கின்றார். ஆனால் நாம் உத்தர காண்டத்தை நாளை முதல் பார்க்கப் போகின்றோம்.

Tuesday, July 22, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 77

ராமர் வரப் போகும் செய்தி கேட்டு மகிழ்ந்த பரதன்,ராமரின் பாதுகைகளைத்தன் தலையில் தாங்கிய வண்ணம் பாதுகைகளுக்கு மேலே வெண்கொற்றக் குடையுடனேயே, மந்திரி, பிரதானிகளுடனும், சகலவிதமான மரியாதைகளுடனும் ராமரை எதிர்கொண்டழைக்கப் புறப்பட்டான். தாய்மார்கள் மூவரும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர். கெளசலையின் தலைமையில் மூவரும் பல்லக்கில் அமர, சத்ருக்கனனோ ராமர் வரும் வழியெல்லாம் அலங்காரம் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்று, அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினான். அயோத்தி மக்கள் அனைவருக்கும் ராமர் திரும்பி வெற்றித் திருமகளுடனும், சீதையுடனும், லட்சுமணன் மற்றும் அனைத்து வீரர்களுடனும் வரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு அல்லாமல், அனைவருமே ராமரை எதிர்கொண்டு அழைக்க விரும்பி நந்திகிராமம் நோக்கிப் புறப்பட்டு வர ஆரம்பித்தனர். பொறுத்துப் பார்க்கக் கூடிய அளவு நேரம் கடந்தும் ராமரைக் காணாமல் பரதன் கலங்கி, ஒரு வானரத்தின் பொறுப்பற்ற பேச்சை நம்பினோமோ என எண்ணி, அனுமனை விசாரிக்கத் தொடங்கினான். அப்போது விண்ணில் பலத்த சப்தம் எழும்ப, புஷ்பகம் தோன்றியது. அதைப் பார்த்த அனுமன் அதோ அவர்கள் வருகின்றனர் என்று கூறிக் காட்ட பரதனும், மேலே பார்த்தான். ராமர், சீதை, லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன் மற்றும் பலரும் அமர்ந்திருந்த புஷ்பகம் கண்ணில் பட்டதும், பரதன் தன் இருகையும் கூப்பிக் கொண்டு ராம்ரை நோக்கித் தொழுதவண்ணம் கண்ணில் நீர் பெருக நின்றான். புஷ்பகம் தரையில் இறங்கியது.

பரதன் புஷ்பகத்தால் தூக்கப் பட்டு, அதனுள் நுழைய, ராமர் அவனைக் கண்டு மகிழ்வோடு கட்டி அணைத்துத் தன் பாசத்தைத் தெரிவித்தார். பின்னர் லட்சுமணனோடு அளவளாவிவிட்டு பரதன் சீதைக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்தான். அனைவரையும் பார்த்து ராமருக்கு உதவியதற்காகத் தன் நன்றியையும், ராமர் போலவே தானும், சத்ருக்கனனும் நட்போடு பழகுவோம் எனவும் தெரிவித்தான். சுக்ரீவனை நீ எங்கள் ஐந்தாவது சகோதரன் என்று கூறிய பரதன், விபீஷணனுக்கும் தன் நன்றியத் தெரிவித்தான். சத்ருக்கனனும் அவ்வாறே அனைவருக்கும் தன் மரியாதைகளையும், நன்றியையும் தெரிவிக்க, பதினான்கு வருஷம் கழித்துச் சந்திக்கும் தன் தாயை ராமர் வணங்கினார். பின்னர் சுமித்திரை, கைகேயி போன்றோருக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் வசிஷ்டரையும் வணங்கினார். பரதன் ராமரின் பாதுகைகளை அவர் காலடியில் வைத்துவிட்டு அவரை வணங்கி, அவரிடம் சொல்கின்றான்."நீங்கள் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருந்த ராஜ்யத்தை நான் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கின்றேன். உங்கள் அருளினாலும், உதவியினாலும் தானியக் கிடங்கும், பொக்கிஷமும் நிரம்பி வழிகின்றது. படை வீரர்கள், அரண்மனை, கிடங்குகள் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொள்ளும்படி வேண்டுகின்றேன்."

பின்னர் அனைவரும் நந்திகிராம ஆசிரமத்தை அடைந்தனர். ராமர் புஷ்பகம் குபேரனையே போய் அடையவேண்டும் என விரும்ப அவ்வாறே அந்த விமானம் மீண்டும் குபேரனையே போய்ச் சேர்ந்தது. பரதன் ராஜ்ய பாரத்தை ராமரை ஏற்கும்படி வேண்டினான். அயோத்தியின் உண்மையான அரசர் ஆன ராமர் இருக்கும்போது தான் இந்தச் சுமையைத் தாங்கமுடியாது எனவும் தெரிவிக்கின்றான். ராமருக்குப் பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. ராமரின் சடைமுடி அவிழ்க்கப் பட்டு, ஒரு அரசனுக்குரிய அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் கூட இருந்து உதவ, ராமரின் அலங்காரங்கள் நடக்கின்றன. சீதைக்கு கெளசலையின் மேற்பார்வையில் அரண்மனைப் பெண்டிரும், சுமித்திரை, கைகேயியும் உதவ அலங்காரங்கள் செய்கின்றனர். சுமந்திரர் வழக்கம்போல் அரசனின் தேரை ஓட்டி வர, ராமரும், சீதையும் அதில் அமர்ந்தனர். அனைவரும் பின் தொடர, நந்திகிராமத்தில் இருந்து அயோத்தியை வந்தடைந்தனர்.

ரிஷிகள் வேதம் ஓதினர். தேவகீதம் முழங்கப் பட்டது. வாத்தியங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினார்கள். பரதன் தேரோட்டியாகப் பொறுப்பு ஏற்க, சத்ருக்கனன் வெண்கொற்றக் குடை பிடிக்க, லட்சுமணன் சாமரம் வீச, விபீஷணன் இன்னொரு பக்கம் சாமரம் வீச பவனி வருகின்றார் ராமர். மறுநாள் விடியும் முன்னர் நான்கு பொற்குடங்களில் நான்கு பக்கத்து சமுத்திரத்திலிருந்தும் நீர் கொண்டுவரச் சொல்லி ஜாம்பவான், அனுமன், கவயன், ரிஷபன் ஆகிய வானர வீரர்களுக்குப் பரதன் வேண்டுகோள் விடுக்க அவ்வாறே கொண்டுவரப் பட்டது. பல நதிகளில் இருந்தும் புனித நீர் சேகரிக்கப் பட்டது. விலை உயர்ந்த ரத்தின சிம்மாசனத்தில் ராமரையும் சீதையையும் அமர்த்தினார்கள். பின்னர் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயனர், கெளதமர், விஜயர் போன்ற ரிஷிகள் வேத மந்திரங்களை முறைப்படி ஓதி, புனித நீரினால் ராமருக்கும், சீதைக்கும் பட்டாபிஷேகம் செய்தனர். மனுவின் வம்சத்தில் வந்த பிரசித்தி பெற்ற மன்னர்களினால் அணியப் பட்ட சிறப்பு வாய்ந்த கிரீடம் வசிஷ்டரால் ராமருக்கு அணிவிக்கப் பட்டது. சத்ருக்கனன் வெண்கொற்றக் குடை ஏந்த, சுக்ரீவனும், விபீஷணனும் சாமரம் வீச, வாய்தேவன் பொன்னும், மணியும் கலந்த நூறுதாமரைகளைக் கொண்ட மாலையைப் பரிசாய்க் கொடுக்க கந்தர்வர்கள் தேவ கானம் இசைக்க ராமர் மணி முடி சூடினார்.

ராமரின் பட்டாபிஷேகம் இனிதாய் முடிந்தது. ராமர் அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். தான, தருமங்களை அரச முறைப்படி செய்தார். எனினும் நம் ராமாயணக் கதையின் இன்னும் உத்தரகாண்டம் இருக்கின்றது. அதுவும் வரும். உத்தரகாண்டம் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கின்றது. சீதைக்கு மீண்டும், மீண்டும் நேரும் துக்கம், அதனால் அவள் பட்ட துன்பங்கள். ராமரின் நிலை! ராமரின் மறைவு! அனைத்தையும் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னர் சற்றே கம்பராமாயணத்தில் ராமர் அயோத்தி திரும்பும் முன்னர் பரதனின் நிலை பற்றியும், ராம பட்டாபிஷேகம் பற்றியும் பார்க்கலாம். கம்பர் தன் ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு முடித்திருக்கின்றார்.

துளசி ராமாயணத்தில் சீதை அக்னிப்ரவேசத்தில் அக்னியில் இறங்குவது மாயசீதை என்றும், மாயசீதை அக்னியில் இறங்கி மாயமாகிவிட்டதாயும், பின்னர் உண்மையான சீதை வெளியே வருவதாயும் சொல்லி இருக்கின்றார். அதே போல் உத்தர காண்டம் துளசிதாஸ் எழுதி இருப்பது வால்மீகியில் இருந்து மாறுபட்டே இருக்கின்றது. பொதுவாக ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு தான் முடிப்பார்கள். ராமருக்கு நேரிடும் துக்கத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்றோ என்னவோ தெரியவில்லை. ஆனால் நாம் முதலில் இருந்தே ஒரு மனிதனின் கதையாகவே பார்த்து வந்திருப்பதால், அந்த மனிதனுக்கு நேரிடும் அனைத்துத் துன்பங்களையும் பார்த்துவிடுவோமே!!

Sunday, July 20, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி- 76


பாரத்வாஜரும், "ராமா, மரவுரி தரித்துக் காட்டுக்குச் சென்ற போது உன் நிலை கண்டு மனம் நொந்த நான், இப்போது நீ எதிரிகளை வீழ்த்திவிட்டு வெற்றி வீரனாய் அயோத்திக்கு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். காட்டில் உனக்கு நேர்ந்தவைகள் அனைத்தையும் நான் அறிவேன். சீதை அபகரிக்கப் பட்டதும், நீ தேடி அலைந்ததும், சுக்ரீவன் உதவி பெற்றதும், சேதுவைக் கட்டியதும், கடல் தாண்டியதும், ராவணனை வீழ்த்தியதும், பின்னர் அனைத்துத் தேவாதி தேவர்களும் நேரில் வந்து உன்னை வாழ்த்தியதும், அனைத்தையும் என் தவ வலிமையால் நான் அறிந்து கொண்டே.ன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக!” என்று சொல்கின்றார். ராமர் வழியில் உள்ள மரங்களெல்லாம், பூத்துக் குலுங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, பரத்வாஜரும் அவ்வாறே அருளினார்.


பின்னர் ராமர் அனுமனைப் பார்த்து, நீ விரைவில் சிருங்கவேரபுரம் சென்று அங்கே குகன் என்னும் என்னுடைய நண்பனைப் பார்த்து நாம் அனைவரும் நலம் எனவும் அயோத்தி திரும்புவதையும் சொல்லுவாய். அவனிடம் கேட்டு பரதன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு பரதனைப் பார்த்து அனைத்து விஷயங்களையும் எடுத்துச் சொல்லு.நாம் அயோத்தி திரும்புகின்றோம் வெற்றியோடும், சீதையோடும் என்பதையும் அவனுக்கு எடுத்துச் சொல்வாய். ஈசன் அருளால் எங்கள் தந்தை நேரில் வந்து எங்கள் அனைவரையும் வாழ்த்தியதையும் தெரிவி. விபீஷணன், சுக்ரீவனோடு மற்ற வானரங்கள் புடை சூழ நான் அயோத்தியை நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் சொல்வாய் என அனுப்பி வைக்கிறார். பின்னர் அனுமனிடம் சொல்லுகின்றார்; இந்தச் செய்தியை நீ சொல்லும்போது பரதனின் முகபாவம் எப்படி உள்ளது என்பதையும் ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுகின்றதா என்பதையும் கண்டுவிட்டு எனக்குத் தெரிவிக்க வேண்டும். நான் திரும்புவது குறித்து உண்மையில் பரதன் என்ன நினைக்கின்றான் என்பது எனக்குத் தெரியவேண்டும். ராஜ்யத்தை இத்தனை வருஷங்கள் பரதன் நிர்வகித்து வந்திருக்கின்றான். என்ன இருந்தாலும் ராஜ்ய ஆசை யாரை விட்டது? அதிலும் இத்தனை சுகபோகங்களும், சகலவிதமான செளகரியங்களும், வசதிகளும் உள்ள ராஜ்யம் யாரைத் தான் கவராது??? ஒருவேளை பரதனுக்கு இத்தனை வருஷங்களில் இந்த ராஜ்யத்தின் மீது ஆசை ஏற்பட்டிருந்தால் அந்த ஆசையை நான் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லவா?? அது என் கடமை. என்று சொல்லி அனுப்புகின்றார் ராமர். அவ்வாறே அனுமனும் சென்று அயோத்தியை மிக மிக வேகமாய் அடைய வேண்டி விரைந்தார்.

அயோத்தியை மிக வேகமாய் அடைந்த அனுமன் அங்கே சிருங்கவேரபுரத்தில் குஹனைக் கண்டு, ராமரின் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து விரைவாக நந்திகிராமத்தை அடைந்தார். அங்கே பரதன் தவக் கோலம் பூண்டு ராமரின் பாதுகைகளை வைத்து நேர்மையான, உண்மையான மந்திரி, பிரதானிகளுடன், மக்கள் தொண்டை உண்மையான மகேசன் சேவையாக நினைத்து ஆட்சி புரிந்து வந்திருப்பதைக் கண்டு, மகிழ்ச்சி கொண்டார் அனுமன். அயோத்தி மக்களும் தங்கள் அன்பை பரதன் பால் காட்டும்விதமாய், பரதன் அனைத்தையும் துறந்து வாழும்போது தாங்கள் மட்டும் மகிழ்வான விஷயங்களில் ஈடுபடுதல் நல்லதல்ல என இருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் அனுமன் போய்ச் சேர்ந்ததும், பரதனைக் கண்டு வணங்கி இரு கையும் கூப்பியவண்ணம் ராமனின் செய்தியைத் தெரிவித்தார். எந்த ராமரை நினைத்து வருந்தி, அவர் வரவைக் குறித்து ஏங்குகின்றீர்களோ அந்த ராமர் வருகின்றார். ராவணனைக் கொன்று சீதையை மீட்டு, நண்பர்கள், லட்சுமணன், மற்றும் வானரப் படைகளுடன் சகலவிதமான பெருமைகளையும் ஈட்டிய ராமர் வந்து கொண்டிருக்கின்றார் என்று அனுமன் தெரிவிக்கின்றான். செய்தி கேட்ட பரதன் ஆனந்தத்தில் மூர்ச்சை அடைந்தான். பின்னர் ஒருவாறு மூர்ச்சை தெளிந்து எழுந்து அனுமனைக் கட்டித் தழுவித் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினான். அனுமனிடம் ராமர் வந்து அரசை ஏற்றுக் கொள்ளப் போவது பற்றிய தன் ஆனந்தத்தையும் சொல்கின்றான் பரதன். அனுமன் அப்போது ராமர் அயோத்தியில் இருந்து கைகேயியின் வரங்களினால் தசரதச் சக்கரவர்த்தி ராமரைக் காட்டுக்கு அனுப்பியது முதல் அன்று வரை நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துச் சொல்லி முடிக்கின்றார். ராமர் வந்து கொண்டு இருக்கின்றார் என்றும் சொல்லவே அயோத்தி நகரம் கொண்டாட்டங்களை ஆரம்பித்தது, பரதனின் மகிழ்வுக்கு எல்லை இல்லை.

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி - 75

சீதையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட ராமரின் எதிரே பரமசிவன் காட்சி அளித்தார். ராமர் அயோத்திக்குத் திரும்பிச் சென்று இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நாட்டும் வண்ணம் அரசாட்சி செய்து பின் மேலுலகம் திரும்புவார் என்று, இப்போது ராமரைக் காண அவரது தந்தையான தசரதர் வந்திருப்பதாயும் சொல்கின்றார். ராமருக்கும், சீதைக்கும் தசரதர் காட்சி அளிக்கின்றார். ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ராமர், சீதை இருவரையும் தவிர கூடி இருந்த மற்றவர்கள் பார்த்ததாய் வால்மீகி சொல்லவில்லை. ஏதோ அதிசயம் ஒன்று நடக்கின்றது என்ற அளவில் மட்டுமே புரிந்து கொண்டதாய்ச் சொல்கின்றார். தசரதன் தன் அருமை மகன் ராமனை ஆரத் தழுவிக் கொண்டு தன் மகன் புருஷர்களில் உத்தமன் எனத் தான் உணர்ந்து கொண்டு விட்டதாய்ச் சொல்கின்றார். பதினான்கு வருட வனவாசமும் முடிவடையப் போகின்றதால் ராமர் சீக்கிரமாய் அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு ஈடு இணையற்ற வகையில் அரசாட்சி செய்து நீண்ட நெடுங்காலம் பெரும் புகழோடு வாழ்வார் எனவும் வாழ்த்துகின்றார் தசரதர். அப்போது ராமர் தன் தந்தையிடம், கைகேயியையும், பரதனையும் விலக்கிவிடுவதாய்ச் சொன்னதை மறந்து அவர்கள் இருவரையும் அந்தக் கடுமையான சாபத்தில் இருந்து விடுவிக்க வேண்டினார். தசரதரும் அவ்வாறே ஆகட்டும் என வாக்களித்தார்.

பின்னர் லட்சுமணனுக்கும் ராமருக்குத் தொடர்ந்து சேவைகள் செய்து வருமாறு ஆசி கூறிவிட்டு, சீதையைப் பார்த்து, ராமன் இப்போது நடந்து கொண்ட விதத்தாலும், இங்கே நடந்த இந்த அக்னிப் பிரவேச நிகழ்ச்சியாலும் சீதையின் மனம் துன்புறக் கூடாது என்றும் சொல்லிவிட்டு, உன்னுடைய தூய்மை அனைவருக்கும் புரியவே இவ்வாறு நடந்தது. செய்ய முடியாத ஒரு காரியத்தை நீ செய்ததால் உன்னுடைய புகழ் மற்றப் பெண்களின் புகழை விட ஓங்கும். இனி உன் கணவனின் பணிவிடைகளில் நீ இன்புற்று இருப்பாயாக என்று சொல்லிவிட்டுப் பின்னர் அனைவரும் மேலுலகம் செல்கின்றனர். பின்னர் இந்திரன் ராமரைப் பார்த்து, ஏதாவது வரம் வேண்டிப் பெற்றுக் கொள்வாய் எனச் சொல்ல ராமரும், இந்தப் போரில் உயிர் நீத்த அனைத்து வானரங்களும் உயிர் பெற்று எழ வேண்டும் என்பதே தனக்கு வேண்டிய வரம் என்றும் சொல்லி விட்டு, அவர்கள் முழு ஆரோக்கியத்தோடும் எழச் செய்யும்படிக்கும் பிரார்த்திக்கின்றார். இந்திரன் இது மிக அரிதான வரம் எனினும் நான் வாக்குக் கொடுத்துவிட்டதால் நீ கேட்டது கேட்டபடி நடக்கும் எனச் சொல்ல, இறந்த வானரர்கள் அனைவரும் தூங்கி எழுவது போல் எழுந்தனர். பின்னர் ராமரை நீ மீண்டும் அயோத்திக்குச் செல்வாய். உன்னுடைய பிரிவால் வாடி, வருந்தி தவங்களையும், கடும் விரதங்களையும் செய்து கொண்டிருக்கும் பரத, சத்ருக்கனர்களைக் காக்க வேண்டியும், அவர்களை மகிழ்விக்க வேண்டியும் விரைவில் அயோத்தி
செல்வாய். என்று கூறிவிட்டு அனைவரும் மறைந்தனர். மறுநாள் விபீஷணன் ராமரைச் சகல வசதிகளோடும் நீராடி, நல்லாடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்து அனைவரையும் மகிழ்விக்கக் கோர, ராமரோ, தான் உடனே சென்று பரதனையும், சத்ருக்கனனையும் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். விரைவாக அயோத்திக்கு அருகே இருக்கும் நந்திகிராமம் செல்லவேண்டும் எனவும், கால்நடையாகச் சென்றால் பல நாட்களாகிவிடும் என்பதால் அது வரையில் பரதன் தாங்க மாட்டான் எனவும் சொல்கின்றார். விபீஷணனும் உடனேயே, ராவணனால் அபகரித்துவரப் பட்ட குபேரனின் புஷ்பகம் இங்கேயே இருப்பதாயும், அதில் அமர்ந்து வெகு விரைவில் அயோத்தி சென்று விடலாம் எனவும் சொல்கின்றான். ஆனால் ராமர் இலங்கையில் சில நாட்கள் தங்கிச் செல்வதே தனக்கு விருப்பம் எனவும் சொல்கின்றான். ராமர் விபீஷணன் செய்த உதவிகளைப் பாராட்டிப் பேசிவிட்டு, இப்போது தங்க நேரம் இல்லை எனவும், பரதனைச் சென்று உடனேயே பார்க்க வேண்டும் எனவும், தாயார்களைப் பார்க்க வேண்டும் எனவும் சொல்கின்றார். ஆகவே விடை கொடுக்குமாறு கேட்கின்றார். விபீஷணன் மிக்க மரியாதையுடனே ராமரை வணங்கி, மேலும் என்ன வேண்டும் எனக் கேட்க, போரில் சாகசங்கள் பல புரிந்த வானரங்களுக்குப் பரிசளிக்கும்படிச் சொல்கின்றார் ராமர். அவ்வாறே வானரங்கள் அவர்கள் விரும்பிய வண்ணம் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் எனப் பரிசைப் பெற்றனர். பின்னர் வானரங்களையும், சுக்ரீவனையும், விபீஷணனையும் பார்த்து ராமர் அவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடத்துக்குச் செல்லலாம் எனவும், தனக்கு விடை கொடுக்குமாறும் கேட்கின்றார்.
விபீஷணனும், சுக்ரீவனும், ராமரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் கண்டு களிக்க தாங்கள் அயோத்தி வர விரும்புவதாய்ச் சொல்ல, ராமர் அனைவரையும் புஷ்பகத்தில் ஏற்றிக் கொள்கின்றார். புஷ்பகம் பெரும் சப்தத்துடன் விண்ணில் எழும்பியது. சீதையிடம் புஷ்பகத்தில் சென்று கொண்டிருந்த சமயம், ராமர் ஒவ்வொரு இடமாய்க் காட்டுகின்றார். “இதோ பார், இது தான் நான் ராவணனை வீழ்த்திய இடம். இதுதான் முக்கியமான அரக்கர்கள் ஒவ்வொருவராய் வீழ்த்தப் பட்ட இடம். இதோ இந்தக் கடற்கரையில் தான் நாங்கள் இறங்கினோம். இதோ இந்த இடத்தில் தான் நளசேது கடல் மீது கட்டப் பட்டது. அதோ பார், எங்கும் வியாபித்திருக்கும் மகாதேவன், எனக்கு அருள் புரிந்து அணை கட்ட உதவிய இடம் இது தான். இந்தக் கடற்கரையில் உள்ள இந்தப் புனிதமான இடம் இனிமேல் சேதுபந்தனம் என அழைக்கப் படும். சகல பாவங்களையும் போக்கும் புண்ணிய இடமாய்க் கருதப் படும், என்று சொல்லிவிட்டு, விபீஷண சரணாகதி நடந்த இடம், வாலி வதம் நடந்த இடம் என ஒவ்வொரு இடமாய்க் காட்டி வருகின்றார். . ராமேஸ்வரத்தில் ராமர் சிவனைப் பூஜித்து ராவணனைக் கொன்ற பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்தார் என்பது பற்றிய குறிப்பு வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ஆனால் ஸ்காந்த புராணத்தில் இது பற்றிய குறிப்பு வருகின்றது. ஆகவே அதன் அடிப்படையில் அங்கே ராமநாதஸ்வாமி கோயில் எழும்பி இன்றளவும் அனைவராலும் புனிதமான இடமாய்க் கருதி வழிபடப் பட்டு வருகின்றது. ஸ்காந்த புராணத்தில் மகாதேவனாகிய ஈசன் ராமரிடம், “ ராமா , உன்னால் பிரதிஷ்டை செய்யப் பட்ட இந்த லிங்கத்தை யார் வழிபடுகின்றார்களோ, அவர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். சேதுபந்தனம் நடந்த தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, இங்கே என்னைத் தரிசனம் செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நீங்கும்,” என்று அருளியதாய் ஸ்காந்த புராணத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது. பின்னர் வழியில் கிஷ்கிந்தை நகர் தெரிய, ராமரும் அந்த நகரைச் சீதைக்குக் காட்டினார். சீதை நம்முடன் சுக்ரீவன் மனைவியும், தாரையும் மற்ற வானரங்களின் மனைவிமார்களும் அயோத்திக்கு வரட்டும் என வேண்ட, அவ்வாறே புஷ்பகம் அங்கே கீழே இறங்கி, மற்றவர்களையும் ஏற்றிக் கொண்டு கிளம்பியது. ராமர் ஒவ்வொரு இடமாய்ச் சீதைக்குக் காட்டிக் கொண்டே வருகின்றார். பரதன் வந்து சந்தித்த இடம், யமுனை நதி, பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என ஒவ்வொன்றாக வந்தது, சரயு நதியும் கண்ணில் பட்டது. அங்கிருந்தே அயோத்தியும் கண்ணில் தெரிய ஆரம்பித்தது. பரத்வாஜரின் ஆசிரமத்தில் விமானம் இறங்கி, அனைவரும் அவரை வணங்கி நமஸ்கரிக்க, ராமர், அனைவரின் நலன் பற்றியும் பரத்வாஜரிடம் விசாரிக்கின்றார்.

Friday, July 18, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 74




அக்னியில் இறங்கிய சீதையைப் பார்த்து அனைவரும் அலறிக் கதற ராமர் கண்களில் குளமாய்க் கண்ணீர் பெருகியது. ரிஷிகளும், தேவர்களும், கந்தர்வர்களும் பார்த்துப் பதறிக் கொண்டிருந்தனர். அப்போது ராமரின் எதிரில் எமன், குபேரன், பித்ரு தேவர்கள், இந்திரன், வருணன், பிரம்மா போன்றோர் பரமசிவனுடன் அங்கே தோன்றினார்கள். ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள் அவர்கள். "ராமா, நீ யார் என்பதை மறந்துவிட்டாயோ??? அனைத்துக்கும் நீயே அதிபதி! நீ எவ்வாறு சீதை அக்னியில் பிரவேசிப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டு இருக்கின்றாய்?? ஆரம்பமும், நீயே! நடுவிலும் நீயே! முடிவிலும் நீயே! அனைத்தும் அறிந்தவன் நீ! காரண, காரியங்களை அறிந்தவன் நீ! நீயே ஒரு சாமானிய மனிதன் போல் இப்படி சீதையை அலட்சியமாய் நடத்தலாமா?" என்று கேட்க, ராமரோ அவர்களைப் பார்த்துச் சற்றே குழப்பத்துடன், "நான் தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன் என்பதாய்த் தான் என்னை அறிந்திருக்கின்றேன். படைக்கும் கடவுளான பிரம்மனே! உண்மையில் நான் யார்? எங்கிருந்து, எதன் பொருட்டு வந்தேன்?" என்று கேட்கின்றார்.


பிரம்மா சொல்கின்றார். "ராமா, நீயே ஆரம்பம், நீயே முடிவு, நீயே நடுவில் இருப்பவனும் ஆவாய்! படைப்பவனும் நீயே, காப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே! இயக்கமும் நீயே! இயங்காமையும் உன்னாலேயே! அகில உலகமும் உன்னாலேயே இயங்குகின்றது. கையில் சங்கு, சக்ரத்தை ஏந்திய மகாவிஷ்ணு நீயே! அனைத்து உலகத்து மாந்தர்களின் விதியும் நீயே! நீயே கண்ணன், நீயே பலராமன், நீயே கார்த்திகேயன் என்னும் ஸ்கந்தன்! ஆற்றலும் நீயே, அடங்குவதும் உன்னாலேயே! வேதங்கள் நீயே! "ஓ"ங்கார சொரூபமும் நீயே! அனைவரையும் பாதுகாப்பவனும் நீயே!அழிப்பவனும் நீயே! நீ இல்லாத இடமே இல்லை. அனைத்து உயிர்களிலும் நீயே நிறைந்திருக்கின்றாய்! நீ எப்போது, எங்கே, என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என யாராலும் அறிய முடியாதது, இந்த பூமியிலும், மண்ணிலும், செடி, கொடிகளிலும், மலரும் பூக்களிலும், மலராத மொட்டுக்களிலும், விண்ணிலும், காற்றிலும், மேகங்களிலும், இடி, மின்னலிலும், மழை பொழிவதிலும், மலைகளிலும், சமுத்திரங்களின் நீரிலும், ஆற்றுப் பெருக்கிலும், மிருகங்களின் உயிர்களிலும், மனித உயிர்களிலும், இன்னும் தேவாசுர உயிர்களிலும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் நீயே! அனைத்துக்கும் ஆதாரம் நீயே! சூரிய, சந்திரர்கள் உன் கண்கள். நீ உன் கண்ணை மூடினால் இரவு. திறந்தால் பகல். உன் கோபம் நெருப்பை ஒத்தது என்றால் உன் சாந்தமே சந்திரன் ஆவான். உன் பொறுமை, உறுதி பூமி எனின் உன் இதயம் பிரம்மாவாகிய நான் ஆவேன், உன் நாவில் சரஸ்வதி இருக்கின்றாள். நீயே மூவுலகையும் ஆளும் அந்த மகாவிஷ்ணு ஆவாய்! சீதையே உன்னுடைய தேவி ஆன மகாலட்சுமி ஆவாள்." என்று சொல்கின்றார் பிரம்மா. வால்மீகி ராமாயணத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டம், பிரம்மா ராமரைப் பார்த்துச் சொல்லுவது ஒரு ஸ்லோகமாகவே இருக்கின்றது. இதைப் பாராயணம் செய்பவர்கள் இருக்கின்றனர். கூடிய சீக்கிரம் பாராயணம் செய்ய வசதியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து போட முயலுகின்றேன்.அப்போது அக்னியில் இருந்து அக்னிதேவன், தன் கரங்களில் சீதையைத் தாங்கியவண்ணம் எழுந்தான். சீதையோ அன்றலர்ந்த மலர் போல் அக்னியில் இறங்கும்போது எவ்வாறு சர்வாலங்கார பூஷிதையாகக் காணப் பட்டாளோ அவ்வாறே சற்றும் மெருகு குன்றாமல் காணப்பட்டாள். அக்னி தேவனோ ராமனிடம், "ராமா, இதோ உன் அருமை மனைவி சீதை! அரக்கர்கள் கூட்டத்தில், அரக்கிகளின் காவலில் இருந்த சமயத்தில் கூட இவள் தன்னை இழக்கவில்லை. உன்னையே நினைத்திருந்தாள் அன்றோ??? இவள் தூய்மையானவள். இவளை ஏற்றுக் கொள்வாயாக. இதை என் உத்தரவாகச் சொல்லுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் மகிழ்வுடனேயே, அக்னியிடம், ராவணன் வீட்டில், அவனுடைய அசோகவனத்தில் பதினான்கு மாதங்கள் வாழ்ந்துவிட்ட சீதையை நான் தவறாய் நினைக்கவில்லை எனினும், இவ்வுலக மக்கள் மத்தியில் அவளுடைய தூய்மையை நிரூபிக்காமல் நான் ஏற்பது எங்கனம் முறையாகும்?? ஒரு அரசனாகக் கூடிய நான் பெண்ணாசையால் அவ்வாறு செய்தேன் என்று என்னைத் தூஷிப்பார்கள் அல்லவா?? என் மனது அறியும், என் மனைவி தூய்மையானவள் என்று. எனினும் அவளுடைய மேன்மையை உலகும் அறியவேண்டியே இவ்விதம் அவள் செய்யும்போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவன் ஆகிவிட்டேன். ராவணன் அவளை ஏதும் செய்திருக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். நெருப்பை ஒத்த என் மனைவியை நான் எவ்வாறு பிரிந்திருக்க முடியும்?" என்று சொல்லிவிட்டு சீதையை ஏற்றுக் கொள்கின்றார் ராமர்.

Thursday, July 17, 2008

கரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே!

karikkulam has left a new comment on your post "சீதையின் அக்னிப்ரவேசம் சரியானதா?? இல்லையா? தொடர்ச்...":

//உங்களை உங்க வீட்டுக்காரர் தீக்குளிக்கச் சொல்றார். ஏன்னாக்கா, யாரோ ஒருத்த தப்பா பேசிட்டான்.//

தப்பாப் பேசினதுக்கெல்லாம் தீக்குளிக்கச் சொல்ல மாட்டார் என் கணவர். ராமரும் இங்கே சீதையைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை. சீதை தானாகவே எடுத்த முடிவு. அப்படிப் பார்த்தால், யாரோ ஒருத்தர் தப்பாப் பேசினால் எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவும் மாட்டாள். கணவன் தப்பாக நினைத்துவிட்டானோ என்ற துயரத்திலேயே பெண்கள் தீக்குளிக்கின்றார்கள், இன்றும், எப்போவும். ஆகவே ஆணின் பார்வைதான் மாற வேண்டும். சீதை தீக்குளித்ததும், கணவன் தன்னைத் தப்பாய் நினைத்துவிட்டானோ என்ற எண்ணத்தால் தான்.

//எப்படி இருக்கும் உங்களுக்கு? நன்னா பேஷா இருக்குமா?//

கணவர் அப்படி நினைச்சால் தான் வருத்தமா இருக்கும் கரிகுலம், மத்தபடி யார் என்ன சொன்னாலும் என்ன செய்ய முடியும்??? கணவன், மனைவி சரியாகப் புரிந்து கொண்டாலே போதும், இல்லையா? ஆகவே இங்கே இந்தக் கேள்விக்கே இடமில்லை.

//ஏன், ராமன் கூட சீதையை விட்டுத் தனியாகத்தான் இருந்தான். சீதை ஏன் நாலுபேரு தப்பா பேச்சுவான்னு, தீக்குளிக்க சொல்லவில்லை?//

ராமன் தனியாக எங்கே இருந்தான்? தம்பி லட்சுமணனோடு சீதையைத் தேடி அலைந்தான். வழியில்ஜடாயு, வானரங்கள் ஆகியோரைப் பார்க்கிறான். வானரங்கள் கூட இருக்கின்றரே????? அதை மறந்து விட்டீர்களா? ராமனோ, அசோகவனத்தில் சீதையோ, தப்பாய் நடந்ததாய் எங்கானும், யாரானும் ஒரு பேச்சுப் பேசி இருக்காங்களா என்ன? ஆகவே சீதை ராமரை சந்தேகிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவருக்குமே நன்றாகத் தெரியும், உலகத்தார் கண்களுக்கு உண்மை நிரூபிக்கப் பட வேண்டும் என.. சீதை தான் அந்நியர் வீட்டில் இருந்தாளே ஒழிய, ராமன் நகருக்குள் எந்த இடத்திலும் நுழையவே இல்லை. தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி 14 வருடம் வனவாசம்.அந்தப் பதினான்கு வருடம் முடியும் முன்னர் அவன் எந்த நகருக்குள்ளும் நுழைந்து தன் பிரதிக்ஞையை உடைக்க விரும்பவில்லை. தனியாக இருந்தபோதும், தன் தவங்களைக் கைவிடவில்லை என்று ராமனே, சீதையிடம் சொல்கின்றானே, இந்தச் சந்திப்பின் போது. அதைக் கவனியுங்கள்.

//கீதா சாம்பசிவம்! ஒரு தப்பை தப்புன்னு சொல்ல உங்களால் முடியவில்லை. என்னா, அது ராமன் புகழை மங்க வைக்கும்.//

ராமன் செய்தது சரினு யாருமே சொன்னதில்லையே திரு கரிகுலம்! ஒரு சாதாரண மனிதன் போல, அற்ப எண்ணம் கொண்டவனாக நடந்து கொண்டான் என்றே சொல்லி இருக்கிறேன், வால்மீகியும் அப்படியே தான் சொல்லி இருக்கின்றார். அதை மறுக்கவேண்டுமென்றால், நான் கம்பராமாயணம் மட்டுமே எழுதி, ராமனை ஒரு அவதார புருஷன் என்று சொல்லி இருக்க வேண்டும் இல்லையா?? அப்படி எங்கே சொன்னேன்??இன்றைய மனிதன் எப்படித் தன் மனைவியிடம் கோபம் வரும்போது நடப்பானோ அப்படித் தான் இதிகாச ராமனும் நடந்து கொண்டான். அதை யாரும், எங்கேயும், எப்போதும் மறுத்துப் பேசியதில்லை. அதனால் ராமன் புகழ் மங்காது. தன் தவறை உணர்ந்து வருந்தும்போதுதான் ஒருவர் புகழ் ஓங்கும். அந்த விதத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும்போதுதான், ராமன் புகழே ஓங்கியது என்று சொல்லலாமோ???

//இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது. நாமெ எங்கேயே போய்விட்டோம். இன்னும் நீங்கள் அந்தகாலத்தில் பெண்ணை ஆணின் அடிமையாகவௌம், ஆணின் சுகத்திற்காகவும் படைக்கப்பட்டதாகவும் நம்பி பிறந்து வளரும் சிறுமிகளை கெடுக்கிறீர்கள். //

இந்தக் காலம் என்ன, புரியாதவங்களுக்கு, அல்லது புரிந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பவர்களுக்கு, கண்ணிருந்தும் பார்க்க மாட்டேன் என்பவர்களுக்கு எந்தக் காலத்துக்குமே, எப்போவுமே ஒத்து வராது திரு கரிகுலம். நாம் எங்கேயோ போய்விட்டோம்! அது உண்மைதான்! இந்த நாட்டின் ஜீவனை விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிரோம். நான் அந்தக் காலத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள். இல்லை, ஆணின் அடிமை என்று சொல்கிறீர்கள் பெண்ணை, உண்மையில் இப்போது தான் பெண்கள் அடிமைத்தனத்திற்கும், உண்மையான விடுதலைக்கும் வேறுபாடு தெரியாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர் சுதந்திரம் என்ற பெயரில். பெண் என்பவள் மாபெரும் சக்தி! அதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, நீங்களும், ஆணின் அடிமையாகவும், ஆணின் சுகத்திற்காகவுமே பெண்கள் படைக்கப் பட்டதாய் நம்பிப் பிறந்து வளரும் சிறுமிகள் என ஒட்டு மொத்தப் பெண்குலத்தையும் சொல்லவேண்டாம். தன்னைத் தான் உணர்ந்த எந்தப் பெண்ணும் இவ்வாறு நினைக்க மாட்டாள். குடும்பம் என்பது இரட்டை மாட்டு வண்டி திரு கரிகுலம், ஒரு மாடு படுத்தாலும் வண்டி ஒடாது. ஆகவே அதை உணர்ந்த எந்தப் பெண்ணும் என்னைத் தவறாகவே நினைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கின்றது. வாழ்த்துகள் கரிகுலம். நன்றியும் கூட பதில் தர வாய்ப்பளித்தமைக்கு.

Wednesday, July 16, 2008

சீதையின் அக்னிப்ரவேசம் சரியானதா?? இல்லையா? தொடர்ச்சி!


பலரும் சீதை ஏன் மெய்யாலும் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை எனவே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். முக்கியமாய் வேந்தர் கேட்கின்றார். ஏனெனில் கம்பர் தன் ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றதைப் பற்றி எழுதும்போது, தொட்டுத் தூக்கிச் சென்றதாய் எழுதவே இல்லை அல்லவா? அதை நாம் முன்பே பார்த்தோம். பர்ணசாலையோடு பெயர்த்து ராவணன் தூக்கிச் சென்றதாகவே கூறுகின்றார். அதிலும் ஒரு காத தூரம் பூமியைப் பெயர்த்து எடுத்து சீதையைத் தீண்டாமலேயே தூக்கிச் சென்றதாய்க் கூறுகின்றார் கம்பர். தீண்டாமல் தூக்கிச் சென்றிருக்கும்போது மெய்யால் என்று கம்பரால் எப்படி எழுத முடியும்? அப்புறம் அவர் முன்னம் எழுதியது தவறென ஆகாதோ?? ஆகவே அவர் அக்னிப்ரவேசத்தின்போது சீதை மனத்தினால், வாக்கினால் மறு உற்றேனெனின் என்று மட்டுமே கூறியதாய் எழுதிவிட்டார். மேலும் ராவணனுக்கோ வேதவதி மூலம் கிடைத்த சாபம் இருக்கிறது. அவன் எவ்வாறு சீதையை அவள் சம்மதம் இல்லாமல் தீண்ட முடியும்??? தொட்டுத் தூக்கிச் சென்றதைக் கம்பர் எழுதவில்லை எனினும், வால்மீகி எழுதி உள்ளார். அந்த அளவே தான் அவனால் முடியும். அதுவும் தலைமுடியைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாய் வால்மீகி கூறுகின்றார். இஷ்டமில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணை அந்த அளவுக்குக் கூடப் பலவந்தப் படுத்தித் தானே தூக்கிச் செல்லமுடியும்??? அதை வால்மீகி மறுக்கவில்லை, சீதையும் மறுக்கவில்லை, ராமரும் மறுக்கவில்லை, அதனாலேயே வால்மீகி மனதால், வாக்கால், காயத்தால் என்று சொல்லி இருக்கின்றார். தொட்டுத் தூக்கிச் சென்றதால் சீதையின் கற்பு போய்விட்டது என எவ்வாறு கூறமுடியும்???

ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும். அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை, தடுக்கவில்லை. தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால், உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. தன் மனைவி தனக்கு வேண்டும், ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது. என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம். ஏனெனில், இதே ராமர், சீதையுடன் சேருவதற்காக சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்த அதே ராமர், பின்னால், இதே சீதையைத் துறக்கவும் போகின்றார். தன் நாட்டு மக்கள் பேசியதற்காக! ஒரு அரசனாய்த் தன் கடமையைச் செய்யப் போகின்றார். ஆங்கிலப் பழமொழி, “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருத்தல் வேண்டும்” என்று சொல்லுவதுண்டு. இங்கே ராமரின் மனைவிக்கு அந்தக் கதி நேரிட்டிருக்கின்றது. மக்கள் மனதில் சந்தேகம் உதித்ததும், ராமர் உடனே மனைவியைத் துறக்கவும் தயாராகின்றார். அதையும் பார்ப்போம். இனி அக்னிப்ரவேசத்துக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று நாளைக்குப் பார்ப்போமா???

Sunday, July 13, 2008

அக்னிப் பிரவேசத்தில் சீதை! கம்பரும், வால்மீகியும்!

அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும், அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும், ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும், வால்மீகி எழுதி இருக்கின்றார். கம்பரும் அதை ஒட்டியே எழுதி இருக்கின்றார். எனினும் வால்மீகி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் சீதை சொல்வதாய்ச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். ஆனால் கம்பர் இங்கே என்ன எழுதுகின்றார் எனில், மீட்சிப் படலம்: சீதையின் துயர நிலை: பாடல் எண்: 3976

கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா என்றாள்
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்
"


என்று சொல்கின்றார். ஆனால் கம்பரோ எனில் சீதையை, ராவணன் தூக்கிச் செல்லும்போது, அந்தப் பர்ணசாலையையே பெயர்த்தெடுத்ததாய்த் தான் சொல்லுகின்றார். வால்மீகி, ராவணன் தொட்டுத் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாகவே சொல்லிவிடுகின்றார். இவ்வாறு இருக்கும்போது வால்மீகி சொல்லும்போது, சீதை, மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லுவதாயே சொல்லுகின்றார். ஆனால் கம்பரோ எனில், "மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்" என்று சீதை சொல்லுவதாய்ச் சொல்கின்றார். இந்த வாக்கே பெரும்பாலும் நம் தமிழறிந்த நல்லோர்களால் ஏற்கப் பட்டிருப்பதால் இது என்ன? இவ்வாறு சீதை சொல்லி இருப்பதால் உடலால் சீதை கெட்டிருப்பாள் என்றல்லவோ எண்ண நேரிடுகின்றது? என மனதுக்குள்ளாகவாவது எண்ணுகின்றனர் அல்லவா?

ஆனால் இந்தப் புதிரைத் தான் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் அவர்கள் விடுவித்ததாய், நீதிபதி திரு மகாராஜன் கூறுகின்றார். அவர் கூறுவதாவது:
"சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் அதுவரை விடுபடாத ஒரு புதிரை பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்கள் விடிவித்தார். அதுவரை பண்டிதமணி, சோமசுந்தரபாரதி போன்றவர்களால் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட புதிர் அது. அக்னி பிரவேசத்தின்போது சீதை தீயை வலம் வந்து,
"மனத்தினால் வாக்கால், மறுவுற்றேனெனில்
சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா" என்கின்றாள். அவள் ஏன் மெய்யால் என்று சொல்லவில்லை என்பதுதான் புதிர்.
If I have been sullied
In mind or speech,
Burn me, Oh, Fire-God,
With all thy ire" என்பது பேராசிரியரின் ஆங்கில ஆக்கம். விடை காண முடியாமல் அறிஞர்கள் திணறிய இந்தப் புதிருக்குத் தீர்வை அந்தக் கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் சொன்னார் பேராசிரியர்.

ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒதெல்லோவில் வில்லன் இயகோ ஒதெல்லோ மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்து விடுகின்றான். அதைக் கேட்டுவிட்டு ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான். அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான். அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள்:
"எனக்கு அந்தப் பெயரா இயாகோ?"
எந்தப் பெயர் ராணி?"
இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று."


இதோ கீழே டெஸ்டிமோனாவின் வார்த்தைகளும், ஒதெல்லோ அவளைச் சொன்ன வார்த்தையும்.
Impudent strumpet!

DESDEMONA DESDEMONA
I cannot tell. Those that do teach young babes
Do it with gentle means and easy tasks:
He might have chid me so; for, in good faith,
I am a child to chiding.

IAGO
What's the matter, lady?

EMILIA
Alas, Iago, my lord hath so bewhored her.
Thrown such despite and heavy terms upon her,
As true hearts cannot bear.

DESDEMONA
Am I that name, Iago?

IAGO
What name, fair lady?

DESDEMONA
Such as she says my lord did say I was.

EMILIA
He call'd her whore: a beggar in his drink
Could not have laid such terms upon his callat.

ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது. சீதைக்கும் அதே நிலைமைதான். "மெய்" தூய்மை பற்றிய களங்கம் மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலும். கதை கட்டிவிடவும் முடியும். எனவே அதைச் சொல்லக் கூசுகின்றாள் சீதை. இந்தத் தீர்வை அங்கே இருந்த பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இது இலந்தை ராமசாமி என்பவரால் எழுதப் பட்ட "இலக்கியச் சீனி அ.சீ.ரா. வாழ்வும், வாக்கும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.

இலந்தை ராமசாமி எழுதிய இந்தப் புத்தகத்தின் மின்னாக்கத்தை எனக்குக் கொடுத்து உதவிய முத்தமிழ்க்குழும சகோதரருக்கும், ஒதெல்லோ நாடகப் பிரதியைக் கொடுத்து உதவிய முத்தமிழ்க் குழும சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Saturday, July 12, 2008

கதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73

சீதை திகைக்க, வானரங்களும், அரக்கர்களும், விபீஷணனும், சுக்ரீவனும் நடுங்கினர். லட்சுமணன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. உலகே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போலும் காட்சி அளித்தது. ராமரோ மேலும் சொல்கின்றார்:"ராவணனால் தூக்கிச் செல்லப் பட்டபோது அவன் கைகளுக்கிடையே சிக்கியவளும், அவனால் தீய நோக்கத்தோடு பார்க்கப்பட்டவளும் நீயே! இப்படிப் பட்ட உன்னை குலப்பெருமையக் காப்பாற்ற வேண்டிய நான் எவ்வாறு ஏற்க முடியும்?? உன்னை நான் மீட்டதின் காரணமே, என் குலப் பெருமையை நிலைநாட்டவும், எனக்கு இழைக்கப் பட்ட அவமதிப்பு நீங்கவுமே. உனக்கு எங்கே, எவருடன் இருக்க இஷ்டமோ அவர்களோ நீ இருந்து கொள்வாய். இத்தனை பேரழகியான உன்னை, ராவணன் இடத்தில் பதினான்கு மாதங்கள் இருந்த உன்னை, பிரிந்திருப்பதை ராவணன் வெகுகாலம் தாங்கி இருந்திருக்க மாட்டான்." ராமரின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட சீதை, கதறி அழுதாள். பின்னர் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசுகின்றாள்:" ஒரு அற்ப மனிதன், தன் மனைவியிடம் பேசுகின்ற முறையில் தாங்கள் இப்போது என்னிடம் பேசினீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் நடக்கவில்லை என்பது தங்கள் மனதுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒழுக்கமற்ற பெண்கள் இருக்கின்றார்கள் தான். அதை வைத்து அனைத்துப் பெண்களையும் ஒரே மாதிரி எனச் சிந்திக்கக் கூடாது அல்லவா? ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டது என் விருப்பத்தின் பேரில் நடந்த ஒன்றல்லவே? அப்போது நான் எதையும் செய்யமுடியாத நிலையில் அல்லவோ இருந்தேன்? ஆனால் என் உடல் தான் அவனால் தூக்கிச் செல்லப் பட்டதே தவிர, என் உள்ளம் தங்களையே நினைத்துக் கதறிக் கொண்டிருந்தது. தங்கள் தூய அன்பை உணர்ந்த நான் பிறிதொருவரின் அன்பையும் விரும்புவேனோ?

என் இதயம் உங்களை அன்றி மற்றொருவரை நினைக்கவில்லை. தாங்கள் இப்படி ஒரு முடிவுக்குத் தான் வருவதாய் இருந்தால், அனுமனை ஏன் தூது அனுப்பினீர்கள்? ஏன் என்னை ராவணன் தூக்கிச் சென்றதுமே துறக்கவில்லை? அல்லது அனுமனிடம் தூது அனுப்பும்போது சொல்லி இருந்தால், இந்த யுத்தமே செய்திருக்க வேண்டாம் அல்லவா? ஒரு சாதாரண மனிதன் போல் பேசிவிட்டீர்களே? என்னை நன்றாக அறிந்திருக்கும் உங்கள் வாயிலிருந்தா இப்படிப் பட்ட வார்த்தைகள் வருகின்றன? லட்சுமணா, நெருப்பை மூட்டு. பொய்யான இந்த அவதூறுகளைக் கேட்டுக் கொண்டும் நான் உயிர் வாழவேண்டுமா? என் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவதூறாய்ப் பேசும் கணவரால், நான் அக்னிப்ரவேசம் செய்வது ஒன்றே ஒரே வழி." என்று லட்சுமணனைத் தீ மூட்டும்படி சீதை வேண்டுகின்றாள்.
சீதையின் வார்த்தைகளைக் கேட்ட லட்சுமணன், ராமரின் முகத்தைப் பார்க்கின்றான். மிகவும் மனம் நொந்து போன லட்சுமணன், ராமருக்கும் அதில் சம்மதம் என முகக் குறிப்பில் இருந்து அறிகின்றான். ராமரோ, ஊழிக்காலத்து காலருத்திரனைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார். அவர் கோபம் தணிவதாய்த் தெரியவில்லை. யாருக்கும் ராமர் அருகே நெருங்கவும் அச்சமாய் இருந்தது. யாரும் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை, யாரும் யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை. லட்சுமணன் தீ மூட்டினான். சீதை முதலில் ராமரையும் பின்னர் அந்தத் தீயையும், மும்முறை வலம் வந்தாள். அக்னியை நெருங்கினாள். தன் கைகளைக் குவித்த வண்ணம் அக்னியை மட்டுமின்றி, அனைத்துத் தெய்வங்களையும் துதித்த வண்ணம் சீதை சொல்லத் தொடங்கினாள்:

"என் இதயம் ராமரை விட்டு அகலாதது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!

என் நடத்தை அப்பழுக்கற்றது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!

மனம், வாக்கு, காயம் என்ற உணர்வுகளினால் நான் தூய்மையானவள் தான் என்றால், ஏ அக்னியே என்னைக் காப்பாய்!

ஏ சூரியதேவா, ஏ சந்திர தேவா, ஏ வாயுதேவா,
திக்குகளுக்கு அதிபதிகளே,
வருணா, பூமாதேவியே! உஷத் கால தேவதையே!
பகலுக்கு உரியவளே, சந்தியாகால தேவதையே
இரவுக்கு உரியவளே,
நீங்கள் அனைவருமே நான் தூய்மையானவள், பவித்திரமானவள் என்பதை நன்கு அறிவீர்கள் என்பது உண்மையானால், ஏ அக்னியே நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!"

இவ்வாறு உரக்கப் பிரார்த்தித்துக் கொண்டு, சற்றும் அச்சமில்லாமல், குளிர் நீரிலோ, நிலவொளியிலோ பிரயாணம் செய்வதைப் போன்ற எண்ணத்துடன் சீதை அக்னிக்குள் பிரவேசித்தாள். அங்கே குழுமி இருந்தவர்கள் அனைவருமே அலறித் துடித்தனர். ராமர் கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது. லட்சுமணன் இந்தக் காட்சியைக் காணச் சகியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதான். வானரங்களும், அரக்கர்களும் பதறித் துடித்தனர். விண்ணிலிருந்து தேவர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அக்னிப்ரவேசத்தைப் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தனர். அக்னிக்குள் ப்ரவேசித்த சீதையோ தங்கம் போல் ஒளியுடனே பிரகாசித்தாள்.
*************************************************************************************
இப்போது ராமர் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். சீதை அக்னிக்குள் ப்ரவேசம் செய்தபோது சொன்ன வார்த்தைகள் கம்பராமாயணத்தில் வேறு மாதிரியாக வருகின்றது. அது பற்றிய விவாதங்கள் இன்னும் முடியவில்லை. சீதை என்ன சொல்கின்றாள், கம்பர் வாயிலாக என்று பார்ப்போமா? அப்புறம் அது பற்றிய தமிழறிஞர் ஒருவரின் கருத்தும், அது பற்றிய அந்தத் தமிழறிஞர் குறிப்பிட்டுச் சொல்லும் ஆங்கில நாடகம் ஒன்றின் குறிப்பும், பார்க்கலாம். கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் சொல்லலாம்.

குறிப்பிட்ட கட்டுரை, பிரதி எடுக்க முடியவில்லை. ஆகவே அதைக் கீழே தட்டச்சு செய்கின்றேன்.

"நீதிபதி மகாராஜன் அவர்கள் கம்பனைக் கண்டு ஆனந்தித்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கின்றார். என்பதாய்க் கட்டுரை ஆரம்பிக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவு, நீதிபதி மகாராஜன் அவர்களால், பேராசிரியரும், இலக்கிய அறிஞரும் ஆன திரு அ.சீனிவாச ராகவன் அவர்களின் இலக்கிய ஆய்வைக் குறித்தது. திரு அ.சீனிவாசராகவன் அவர்கள் சீதை சொன்ன வார்த்தைகளுக்கு எவ்வாறு நாம் பொருள் கொள்ளவேண்டும் என்பதை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் டெஸ்டிமோனோ சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு நிரூபிக்கின்றார் என்பதாய்க் கட்டுரை வருகின்றது. இனி கட்டுரையும், சீதை சொன்ன வார்த்தைகளாய்க் கம்பன் சொல்வதும்.

Thursday, July 10, 2008

கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72

ராவணன் கொல்லப் பட்டான். அரக்கர்களின் தலையாய தலைவன், இந்திரனை வென்றவன், பிரம்மாவின் வரங்களைப் பெற்றவன், தனக்கு நிகர் தானே தான் என்று பெருமையுடன் இருந்தவன் கொல்லப் பட்டான். பலவிதமான யாகங்களையும், வழிபாடுகளையும் செய்தவன், சிவபக்திச் செல்வன், சாமகான வித்தகன், கொல்லப் பட்டான். எதனால்?? பிறன் மனை விழைந்ததினால். இத்துணைச் சிறப்புக்களையும் பெற்றவன் பிறன் மனை விழைந்த ஒரே காரணத்தினால் ஒரு மனிதனால் கொல்லப் பட்டான். அரக்கர் குலமே திகைத்து நின்றது. விபீஷணன், அவ்வளவு நேரம், தன்னுடைய உடன்பிறந்த மூத்த சகோதரனைக் கொல்ல வேண்டி யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது கதறி அழ ஆரம்பித்தான். "தானாடாவிட்டாலும், தன் சதை ஆடும்" என்பது உறுதியாகிவிட்டதோ??? பலவாறு ராவணனின் பெருமையைச் சொல்லிச் சொல்லிக் கதறுகின்றான் விபீஷணன். சுத்த வீரனும், பெருமை வாய்ந்தவனும், தர்ம வழியிலும், அற வழியிலும் அரசை நடத்தியவன் என்று வேறு கூறுகின்றான். துக்கம் அளவுக்கு மீறியதாலும், தன்னுடைய அண்ணன் என்ற பாசத்தாலும் விபீஷணன் நிலை தடுமாறித் தன்னை மறந்தானோ??

ராமர் விபீஷணனைத் தேற்றுகின்றார். போர்க்களத்தில் கடும் சண்டை போட்டு வீர மரணம் அடைந்த க்ஷத்திரியர்களுக்காக அழுவது சாத்திரத்துக்கும், தர்மத்துக்கும் விரோதமானது என்கின்றார். தன் வீரத்தைக் காட்டிவிட்டே ராவணன் இறந்திருக்கின்றான் என்று கூறும் ராமர் அவன் சக்தியற்றுப் போய் வீரமிழந்து போய் இறக்கவில்லை என்றும் எடுத்துச் சொல்கின்றார். மேலும் தேவேந்திரனையும், தேவர்களையும், ராவணன் அச்சுறுத்தி வந்ததையும் எடுத்துச் சொல்லி, ராவணன் இறந்தது உலக நன்மைக்காகவே, என்றும் இதற்காக வருந்த வேண்டாம், எனவும் மேலே ஆகவேண்டியதைப் பார்க்கும்படியாகவும் விபீஷணனிடம் சொல்ல, அவனும் ராவணன் ஒரு அரசனுக்கு உரிய மரியாதைகளுடன் ஈமச்சடங்குகளைப் பெறவேண்டும் என்றும், தானே அவனுக்கு ஈமச் சடங்குகளைச் செய்வதாயும் கூற, ராமரும் அவ்வாறே ஆகட்டும், இறந்தவர்களிடம் பகைமை பாராட்டுவது அழகல்ல, ஆகையால் ராவணன் இனி எனக்கும் உரியவனே. அவனுக்கு உரிய மரியாதையுடன் அவன் ஈமச் சடங்குகள் நடக்கும் என உறுதி அளிக்கின்றார். இந்நிலையில் ராவணனின் மனைவிமார்களும் பட்ட மகிஷியான மண்டோதரியும் வந்து தங்கள் துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு அழுகின்றார்கள். மண்டோதரி ராவணன் தன் பேச்சைக் கேட்டிருந்தால், சீதையை விடுவித்திருந்தால், ராமருடன் நட்புப் பாராட்டி இருந்தால் இக்கதி நேரிட்டிருக்காதே எனப் புலம்ப அனைவரும் அவளைத் தேற்றுகின்றார்கள்.

ராவணனின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு, அது நடக்க ஆரம்பிக்கும்போது திடீரென விபீஷணன் இறுதிச் சடங்குகள் செய்ய முரண்பட, ராமர் மீண்டும் அவனைத் தேற்றி, அவனுக்கு அறிவுரைகள் சொல்லி, தான் ராவணன் மேல் கொண்ட கோபம் தனக்கு இப்போது இல்லை என்றும், இறந்த ஒருவன் மேல் விரோதம் பாராட்டக் கூடாது எனவும் பலவாறு எடுத்துச் சொல்லி, விபீஷணனை ஈமச் சடங்குகள் செய்ய வைக்கின்றார். இந்திரனனின் தேரோட்டியைத் திரும்ப அனுப்பிர ராமர், பின்னர் லட்சுமணனை அழைத்து விபீஷணனுக்கு உடனடியாகப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறும், இன்னும் பதினான்கு வருஷங்கள் முடிவடையாத காரணத்தால், தாம் நகருக்குள் நுழைய முடியாது எனவும், லட்சுமணனே அனைத்தையும் பார்த்துச் செய்யுமாறும் கூறுகின்றார் ராமர். அவ்வாறே லட்சுமணன் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்து விபீஷணனுக்கு முறையாகப் பட்டாபிஷேகமும் நடக்கின்றது. விபீஷணன், ராமரை வணங்கி ஆசிபெறச் சென்றான். அப்போது ராமர் அனுமனைப் பார்த்து, இப்போது இலங்கை அரசன் ஆகிவிட்ட இந்த விபீஷணன் அனுமதி பெற்று நீ சீதையைக் கண்டு அவள் நலனை விசாரித்து வருவாய்! அவள் எண்ணம் என்ன என்றும் தெரிந்து கொண்டு வருவாய்! இங்கே அனைவரும் நலம் எனவும் தெரிவிப்பாய்! அவள் என்ன சொல்கின்றாள் எனத் தெரிந்து கொண்டு வருவாய்." என்று சொல்லி அனுப்புகின்றார்.
இரண்டாம் முறையாக ராமரால் தூதுவனாய் அனுப்பப் பட்ட அனுமன், நடக்கப் போவது ஒன்றையும் அறியாமல், மகிழ்ச்சியுடனேயே சென்றார். சீதையிடம் அனைத்து விபரங்களையும் தெரிவித்த அனுமன், ராவணன் இறந்ததையும், விபீஷணன் இப்போது இலங்கை அரசன் எனவும் சொல்லிவிட்டு, ராமர் அவளிடம், இனி அஞ்சுவதற்கு ஏதுமில்லை எனவும், சொந்த இடத்திலேயே வசிப்பதுபோல் அவள் நிம்மதி கொள்ளலாம் எனச் சொன்னதாயும், விபீஷணன் சீதையைச் சந்தித்துத் தன் மரியாதைகளைத் தெரிவிக்க ஆசைப் படுவதாயும் சொல்கின்றார். பேச நா எழாமல் தவித்தாள் சீதை. அனுமன் என்ன விஷயம், இத்தனை மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியும் என்னிடம் பேசாமல் மெளனமாய் இருப்பது எதனால் என்று கேட்கவும், தன் கணவனின் வீரத்தையும், வெற்றியையும் கேட்டதும் தனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை என்று சொல்லும் சீதை, இதைவிடப் பெரிய பரிசு ஏதும் இருக்க முடியாது எனவும் சொல்கின்றாள். சீதைக்க்க் காவல் இருந்த அரக்கிகளைத் தான் கொன்றுவிடவா என அனுமன் கேட்டதற்கு அவ்வாறு செய்யவேண்டாம், ராவணன் உத்திரவின்படியே அவர்கள் அவ்விதம் நடந்தனர், தவறு அவர்கள் மேல் இல்லை என்று சொன்ன சீதை, தான் ராமரை உடனே பார்க்கவேண்டும் எனச் சொல்லி அனுப்புகின்றாள். உடனே ராமரிடம் வந்து சீதை சொன்னதைத் தெரிவிக்கின்றார் அனுமன். ராமரின் முகம் இருண்டது. கண்களில் நீர் பெருகியது. செய்வதறியாது திகைத்தார் ராமர். ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு ராமர் விபீஷணனிடம் விதேக தேசத்து ராஜகுமாரியான சீதையை நன்னீராட்டி, சகலவித அலங்காரங்களையும் செய்வித்து, ஆபரணங்களைப் பூட்டி இவ்விடம் அழைத்துவரச்சொல்லவும், தாமதம் வேண்டாம் என்று சொல்கின்றார். விபீஷணனும் மகிழ்வோடு, சீதையிடம் சென்று ராமரின் விருப்பத்தைச் சொல்ல, சீதை தான் இப்போது இருக்கும் கோலத்திலேயே சென்று ராமரைக் காண விரும்புவதாய்ச் சொல்ல, விபீஷணனோ, ராமர் இவ்வாறு குறிப்பிட்டுச் சொன்னார் என்றால், அதன்படியே நாம் செய்வதே நல்லது. என்று கூற, கணவன் இவ்வாறு சொல்வதின் காரணம் ஏதோ இருக்கின்றது என ஊகம் செய்தவளாய்ச் சீதையும் சம்மதித்து, தன் நீராட்டலை முடித்துக் கொண்டு சகலவித அலங்காரங்களோடும், ஆபரணங்களோடும், அலங்கார பூஷிதையாக ராமர் இருக்குமிடம் நோக்கி வந்தாள். ராமர் குனிந்த தலை நிமிரவில்லை. வானரப் படைகள் சீதையைக் காணக் கூட்டம் கூடினர். நெரிசல் அதிகம் ஆனது. ஒருவரோடொருவர் முண்டி அடித்துக் கொண்டு சீதையைக் காண விரைய, அங்கே பெருங்குழப்பம் ஏற்பட்டது. விபீஷணனும், மற்ற அரக்கர்களும், வானரப் படைத்தலைவர்களும் கூட்டத்தை ஒழுங்கு செய்ய முனைந்தனர். ராமர் கடுங்கோபத்துடன் விபீஷணனைப் பார்த்து, "ஏன் இப்படி வானரப் படைகளைத் துன்புறுத்துகின்றாய்? இந்தக் கொடுமையை நிறுத்து. சீதைக்கு உயர்ந்த மரியாதைகளோ, உன்னுடைய காவலோ பாதுகாப்பு அல்ல. அவளுடைய நன்னடத்தை ஒன்றே பாதுகாப்பு. ஆகவே அவளை பொதுமக்கள் முன்னிலையில் வரச் செய்வதில் தவறொன்றுமில்லை. கால்நடையாகப் பல்லக்கை விட்டு இறங்கி வரச் சொல். வானரங்கள் விதேக தேசத்து ராஜகுமாரியைப் பார்க்கட்டும், அதனால் பெரும் தவறு நேராது." என்று சொல்கின்றார்.

ராமரின் கோபத்தைப் புரிந்துகொண்ட விபீஷணன் அவ்வாறே செய்ய, லட்சுமணன், அனுமன் சுக்ரீவன் போன்றோர் மனம் மிக வருந்தினர். சீதையின் மீது ராமருக்குள்ள அன்பையும், அவள் இல்லாமல் ராமர் துடித்த துடிப்பையும் கண்ணால் கண்டு வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு, ராமர் சீதையின்மேல் ஏதோ கோபத்துடன் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்டார்கள். கோபத்தின் காரணம் தெரியவில்லை. சீதையோ ஏதும் அறியாதவளாகவே, மிக்க மகிழ்வோடு பல்லக்கை விட்டு இறங்கி, ராம்ரின் எதிரே வந்து நின்று, தன் கணவனைக் கண்ணார, மனமார,தன் ஐம்புலன்களும் மகிழ்வுறும்படியான மகிழ்வோடு பார்த்தாள். இது என்ன?? ராமரின் முகம் ஏன் சுருங்குகின்றது? ஏன் பொலிவில்லாமல் காட்சி அளிக்கின்றது? எல்லாம் நம்மை ஒருமுறை பார்த்தாரானால் சரியாகிவிடும், சீதை மீண்டும் ராமரை நோக்க, ராமரின் வாயிலிருந்து வரும் சொற்களோ இடிபோல் சீதையின் காதில் விழுகின்றது. தன் காதையே நம்பமுடியாதவளாய்ச் சீதை ராமரை வெறிக்கின்றாள். அப்படி என்னதான் ராமர் சொன்னார்?

"ஜனகனின் புத்திரியே!, உன்னை நான் மீட்டது என் கெளரவத்தை நிலைநாட்டவே. இந்த யுத்தம் உன்னைக் கருதி மேற்கொள்ளப் பட்டது அல்ல. என்னுடைய தவங்களினால் தூய்மை பெற்றிருந்த நான் அவற்றின் வலிமை கொண்டும், என் வீரத்தின் வலிமை கொண்டும், இக்ஷ்வாகு குலத்திற்கு நேரிட்ட இழுக்கைக் களைவதற்காகவும், என் வரலாற்றை இழுக்கில்லாமல் நிலைநாட்டவுமே,அவதூறுகளைத் தவிர்க்கவுமே உன்னை மீட்கும் காரணத்தால் இந்தப் போரை மேற்கொண்டேன். இனி நீ எங்கு செல்லவேண்டுமோ அங்கே செல்வாய்! உன் மனம்போல் நீ செல்லலாம். இதோ என் இளவல் லட்சுமணன் இருக்கின்றான், அல்லது பரதனுடனோ நீ யாரோடு வேண்டுமானாலும் வாழலாம்!"

ராமர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளா இவை? அல்லது விஷப் பாம்புகள் தன்னை கடித்துவிட்டதா? அல்லது ராவணனின் வேறு வடிவமா? என்ன இது? ஒன்றும் புரியவில்லையே? தன்னை உள்ளும், புறமும் நன்கு அறிந்த தன்னுடைய கணவன் வாயிலிருந்தா இத்தகைய கொடும் வார்த்தைகள்? ஆஹா, அன்றே விஷம் அருந்தி உயிர்விடாமல் போனோமே? சீதைக்கு யோசிக்கக் கூட முடியவில்லை, தலை சுழன்றது. எதிரிலிருக்கும் ராமரும் சுழன்றார். பக்கத்திலிருக்கும் அனைத்தும் சுழன்றன. இந்த உலகே சுழன்றது. சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி பூமியை நனைக்கத் துவங்கியது. அங்கே உலகமே ஸ்தம்பித்து நின்றது. பூமிதேவி தன் சுழற்சியை நிறுத்திவிட்டாளோ???????

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71

“என்னுடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல், நீ எப்படி தேரைத் திருப்பிக் கொண்டு வரலாம். என்னைக் கோழை என நினைத்தாயோ? அற்பமதி படைத்தவன் என நினைத்தாயோ??? உன் இஷ்டப் படி தேரைத் திருப்பிவிட்டாயே? தீயவனே! எதிரியின் கண் எதிரேயே என்னை இவ்வாறு இழிவு செய்த நீ எனக்கு எப்படி நண்பனும், ஊழியனும் ஆவாய்?? எப்படி இவ்வாறு செய்யத் துணிந்தாய்?? ஆஹா, என்னுடைய போர்த்திறனையும், இத்தனை காலமாய்ப் பல தவங்களும், விரதங்களும், வழிபாடுகளும், வேள்விகளும் நடத்தை நான் பெற்ற அனைத்துக் கெளரவங்களையும் இந்த ஒரு நொடியில் நாசமாக்கி விட்டாயே? முதலில் தேரைத் திருப்புவாயாக! என்னிடமிருந்து நீ பெற்ற நன்மைகளை மறந்துவிட்டாயா?? “ என்று கடுமையாகக் கடிந்து கொள்கின்றான்.

தேரோட்டி மிக்க வணக்கத்துடன், “ஐயா, தங்களிடமிருந்து பெற்ற நன்மைகளை நான் மறந்து செய்ந்நன்றி கொன்றவன் ஆகிவிடவில்லை. எதிரிகள் யாரும் என்னை அவர்கள் பக்கம் இழுத்தும் விடவில்லை. தங்கள் நன்மைக்காக வேண்டியே நான் தேரைத் திருப்பவேண்டியதாயிற்று. மேலும் தாங்களும், கடும் யுத்தத்தின் காரணமாயும், மன உளைச்சல் காரணமாயும் களைத்துவிட்டீர்கள். தங்கள் தேரின் இந்தக் குதிரைகளும் களைத்துவிட்டன. உங்கள் வீரம் நான் அறியாத ஒன்றா?? நான் தேரை மட்டும் ஓட்டினால் சரியாகவும் இருக்காது ஐயா, தங்கள் பலம், வீரம் மட்டுமின்றி உங்கள் உடல் சோர்வு, மனச்சோர்வு அனைத்தையுமே நான் கவனித்தாகவேண்டும். உங்கள் உடல்நிலையோ, மனநிலையோ மேலும் யுத்தம் செய்யக் கூடிய தகுதியில் இருக்கின்றதா எனவும் நான் கவனிக்கவேண்டும். ஐயா, தேரைச் செலுத்தும் பூமியைக் கூட நான் கவனித்து, எங்கே வேகம் வேண்டுமோ, அங்கே வேகமாயும், எங்கே மெதுவாய்ச் செல்லவேண்டுமோ, அங்கே மெதுவாயும், எந்த இடத்தில் எதிரிப் படையை ஊடுருவ முடியுமோ அங்கே ஊடுருவதல் செய்தல் , எப்போது பின்வாங்க வேண்டுமோ அப்போது பின் வாங்குதல் என முறையாகச் செய்யவேண்டும் ஐயா! இதில் தங்கள் நலன் ஒன்றே என் கருத்து.” என்று மிகவும் தயவாகச் சொல்கின்றான்.

ராவணன் மனம் ஒருவாறு மகிழ்ந்தது. தேரோட்டிக்கு அப்போது தன் கையில் இருந்த ஆபரணங்களில் ஒன்றைப் பரிசாக அளித்துவிட்டுத் தேரைத் திரும்ப யுத்த களத்திற்கு ஓட்டச் சொன்னான். தேரும் திரும்பியது. இதனிடையில் ராமரும் களைத்துப் போயிருந்தமையால், அவரும் சற்று இளைப்பாறுவதோடு அல்லாமல், ராவணனை வெல்வது எப்படி என்ற சிந்தனையும் செய்ய ஆரம்பித்தார். அப்போது இந்த யுத்தத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள், ரிஷிகள், முனிவர்களில் இருந்த சிறப்பும், தனிப் பெருமையும் வாய்ந்த அகத்தியர் ராமன் இருக்கும் இடம் நோக்கி வந்தார். ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்."ராமா, என்றும் அழியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் இப்போது உன்னிடம் கூறுகின்றேன். இந்தப் பூவுலகில் நிலையானவனும், அனைவரும் ஏற்கக் கூடியவனும், தினம் தவறாமல் தன் ஒளியால் அனைவரையும் வாழ்விப்பவனும், கண்ணால் காணக் கூடிய ஒரு கடவுளும், அழிவற்றவனும், அனைவராலும் தினம் தினம் வணங்கப் படுபவனும் அந்த சூரியன் ஒருவனே ஆவான்! அவனே பிரம்மா, அவனே விஷ்ணு, அவனே ருத்திரன், அவனே கார்த்திகேயன், அவனே ப்ரஜாபதி, அவனே இந்திரன், அவனே குபேரன்! காலனும் அவனே! சோமனும் அவனே! வருணனும் அவனே! வசுக்களும் அவனே, மருத்துக்களும் அவனே, பித்ருக்களும் அவனே! வாயுவும் அவனே, அக்னியும் அவனே, மனுவும் அவனே, பருவங்களும் அவனே, ஒளியும் அவனே, இருளும் அவனே, இந்த உலகின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அவனே நிறைந்துள்ளான். அப்படிப் பட்ட சூரியனைக் குறித்த இந்தத் துதியை உனக்கு நான் இப்போது சொல்கின்றேன். இந்தத் துதியை நீ மும்முறை தோத்தரித்து, அந்தச் சூரியனை வேண்டிக் கொண்டு, பிரார்த்தித்துக் கொண்டு ஒருமித்த மனத்தோடு சூரியனை வழிபட்டு, நீ ராவணனை வெல்வாய்! சக்தி வாய்ந்த இந்தத் துதி சாஸ்வதம் ஆனது, என்றும் நிலையானது, புனிதமானது. எல்லாப் பாவங்களையும் ஒழிக்கவல்லது. எதிரிகளை அழிக்கவல்லது." என்று சொல்லிவிட்டு "ஆதித்ய ஹ்ருதயம்"என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அகஸ்தியரின் உபதேசத்தைக் கேட்ட ராமரும், அவ்வாறே மனக் குழப்பம் நீங்கி, ஆதித்திய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை மும்முறை, ஒரு மனதுடன் சூரியனை நோக்கித் துதிக்கவும், அவருடைய குழப்பமும், கலக்கமும் நீங்கித் தெளிவு பெற்றார். மீண்டும் யுத்தம் செய்யத் தயாராக வந்த ராவணனைப் பார்த்து அவனை வென்றே தீருவது என்ற மன உறுதியோடு ராமரும் மீண்டும் ராவணனோடு போருக்குத் தயார் ஆனார். அவருடைய மன உறுதியையும், தன்னை முழுமனத்தோடு துதித்ததையும் கண்ட சூரியனும் அவருக்கு "ஜெயம் உண்டாகட்டும்" என்று ஆசி வழங்கினான். சகுனங்களும் ராமருக்கு சாதகமாகவே சுபமாக ஏற்பட்டன. சகுன சாஸ்திரத்தில் வல்லவர்கள் ஆன அனைவரும் மட்டுமின்றி, ராமரும் சகுன சாஸ்திரத்தை அறிந்தவர் ஆதலால் அவரும் மனம் மகிழ்ந்தார். ராவணனுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராவணனும் அறிந்திருந்தான். எனினும் தீரத்துடன் போரிட முன்வந்தான். கடும்போர் மூண்டது. அங்கே ராவணனின் தேரில் ரத்த மழை பொழிந்தது. பூமி நடுங்கியது. பறவைகள் இறந்து வீழ்ந்தன ராவணனின் தேரில். கழுகுகள் வட்டமிட்டன. அனைத்தையும் எதிர்கொண்டு ராவணன் ராமரோடு போரிட்டான். அசுர குலத்தைச் சேர்ந்த ராவணனுக்கும், மனிதன் ஆன ராமனுக்கும் நடந்த பெரும்போரை வர்ணிக்க இயலாது. இரு தரப்பு வீரர்களும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு, ஓவியத்தில் எழுதிய சித்திரங்களைப் போல் அசையாமல் நின்று அவர்கள் இருவரின் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். விண்ணிலோ எனில், தேவர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், ரிஷி, முனிவர்களும் ஏற்கெனவே கூடி இருந்தனர். இந்திரனின் தேரை வீழ்த்த ராவணன் விடுத்த அஸ்திரம் பயனற்றுப் போய்விட்டது. கூடியவரையில் அம்புகள் குறிதவறாமல் போய் ராமரைக் காயப் படுத்தினாலும் பெரும் சேதம் ஒன்றும் நேரிடவில்லை. ராவணனால் ராமருக்கு சேதத்தை விளைவிக்க முடியவில்லை.தேரோட்டிகள் முழு மனதோடு ஒத்துழைக்க இருவருமே தீரத்துடனும், வேகத்துடனும் போரிட்டனர். போர் இன்னும் ஒரு முடிவுக்க வரவில்லையே என ரிஷி, முனிவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ராவணன் கொல்லப் படவேண்டும், ராமர் ஜெயிக்கவேண்டும் என்ற பிரார்த்தனையில் மூழ்கினர் அனைவரும். ராமரும் தன் அம்பினால் ராவணனின் தலையை அறுத்து வீழ்த்துகின்றார். எனினும், என்ன ஆச்சரியம்?? அவன் தலை திரும்பத் திரும்ப முளைக்கின்றதே? ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். கரன், தூஷணன், மாரீசன், விராதன், வாலி போன்றோரை வென்ற நம் அஸ்திரங்கள் ராவணனிடம் பயன் இல்லாமல் போவதேன்? எனினும் விடாமல் யுத்தம் செய்தார் ராமர். இரவும், வந்தது, யுத்தமும் தொடர்ந்தது. மீண்டும் பகல் வந்தது, மீண்டும் யுத்தம் நிற்காமல் தொடர்ந்தது. அப்போது இந்திரனின் தேரோட்டியான மாதலி, ராமரிடம், "இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு சமபலத்தைக் காட்டிக் கொண்டிருப்பீர்கள்? ராவணன் அழியும் நேரம் வந்துவிட்டது. பிரம்மா இதற்கெனத் தனியாகத் தங்களுக்கு அருளி இருக்கும் அஸ்திரத்தை ஏவ வேண்டிய நேரம் வந்துவிட்டது." எனக் கூறினான்.ராமரும் பிரம்மாவை வேண்டிக் கொண்டு, அகத்தியரால் தனக்கு அளிக்கப் பட்ட அந்த விசேஷமான அஸ்திரத்தை எடுக்கின்றார். அந்த அஸ்திரத்துக்கு உரிய மந்திரங்களைச் சொல்லியவண்ணம், அஸ்திரம் குறி தவறாமல் ராவணனை வீழ்த்தவேண்டும் என வேண்டிக் கொண்டு, ஊழித் தீபோலவும், உலகையே அழிக்கக் கூடிய வல்லமை கொண்டதும், அனைத்து ஜீவராசிகளையும் ஒழித்துவிடுமோ என்ற அச்சத்தைத் தரக்கூடியதும் ஆன அந்த அஸ்திரத்தை வில்லில் பூட்டி, நாண் ஏற்றினார். அஸ்திரம் பாய்ந்தது. ராவணனின் இதயத்தைப் பிளந்து அவனுடைய உயிரை எடுத்துவிட்டு, மீண்டும் அந்த அஸ்திரம் ராமரின் அம்பறாத் தூணிக்கே வந்து சேர்ந்தது. ராவணன் இறந்தான். அரக்கர் படை கலக்கத்துடன் ஓடிச் சிதறியது. வானரங்கள் ஜெயகோஷம் போட்டனர். வாத்தியங்கள் மங்கள இசை இசைத்தன. விண்ணில் இருந்து வானவர்கள் பூமாரி பொழிந்தனர். ரிஷி, முனிவர்கள் ராமரை வாழ்த்திப் பாடினர். சூரியனின் ஒளி பிரகாசித்தது.

விபீஷணன் விம்மி, விம்மி அழுதான்.

Wednesday, July 09, 2008

கதை, கதையாம் காரணமாம் -ராமாயணம் பகுதி 70

திரும்பத் திரும்ப அருமைத் தம்பி லட்சுமணன் தாக்கப் படுவதை நினைந்து ராமர் மனம் வேதனையில் ஆழ்ந்தது. லட்சுமணன் மார்பில் பதிந்த வேலை எடுக்க முனைந்தனர். ஆனால் வேலோ மார்பைத் துளைத்துக் கொண்டு சென்று பூமியில் பதிந்து விட்டிருந்தது. ராமர் தன் கையினால் வேலைப் பிடுங்க முனைந்தார். ஆனால் அவராலும் முடியவில்லை. அதற்குள் ராவணனோ ராமரைத் தன் அம்புகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்தான். ராவணனின் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு ராமர் லட்சுமணனை எப்படியாவது காப்பாற்றத் துடித்தார். பின்னர் அனுமனையும், சுக்ரீவனையும் பார்த்து, லட்சுமணனைச் சற்று நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, ராவணனுக்குத் தான் பதில் தாக்குதல் கொடுக்கவேண்டும் என்று சொல்கின்றார். நான் யார், எப்படிப் பட்ட வீரன் என்பதை ராவணனுக்குக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், தன் வீரத்தைக் கண்டு தேவாதிதேவர்களும், ரிஷி, முனிவர்களும் கண்டு பிரமிக்கப் போகின்றார்கள் என்றும், தான் கற்ற போர்த்தொழில் வித்தை அனைத்தையும் இந்தப் போர்க்களத்தில் தான் காட்டப் போவதாயும் தெரிவிக்கின்றார். ராவணனை நோக்கி முன்னேறுகின்றார் ராமர். இருவருக்கும் கடும்போர் மூண்டது. ராமரின் அம்புகளின் வேகத்தைத் தாங்க முடியவில்லை ராவணனால். அவனால் முடிந்தவரையில் முயன்று பார்த்துவிட்டுப் பின்னர் சற்று மறைந்திருந்துவிட்டு வரலாம் என போர்க்களத்தில் இருந்து ஓடி மறைந்தான் ராவணன்.இதனிடையில் லட்சுமணனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதா எனப் பார்க்கச் சென்றார் ராமர். ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த இளவலைப் பார்த்த ராமரின் மனம் பதறியது. சுஷேணன் என்னும் வானரத்திடம் தன் கவலையைத் தெரிவிக்கின்றார் ராமர். என் பலத்தையே நான் இழந்துவிட்டேனோ என்று புலம்புகின்றார். லட்சுமணனுக்கு ஏதானும் நடந்துவிட்டால் எவ்வாறு உயிர் தரிப்பேன் என்று கண்ணில் கண்ணீர் பெருகச் சொல்கின்றார். லட்சுமணனின் முனகலையும், வேதனையையும் பார்க்கும்போது செய்வதறியாது தவிக்கின்றேனே, என்று கலக்கம் உற்ற ராமர், தன் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் தன் பார்வையை மறைப்பதையும், தன் அங்கங்கள் பதறுவதையும், உணர்ந்தவராய், லட்சுமணன் இல்லாமல் இனித் தான் வெற்றி பெற்றும் என்ன பயன் என்று கேட்கின்றார். "என் மனைவியான சீதையைத் திரும்பப் பெறுவதற்காக இந்த யுத்தம் செய்யும் எனக்கு உதவியாக வந்த என் தம்பி இனி எனக்குத் திரும்பக் கிடைப்பானா?" என்று கவலை மேலிடுகின்றது ராமருக்கு. மனைவியோ, மற்ற உறவின்முறைகளோ கிடைப்பது கடினம் அல்ல.. ஆனால் லட்சுமணன் போன்ற அறிவிலும், அன்பிலும், முன்யோசனையிலும், துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கெடுப்பவனும், தன்னைப் பற்றி நினையாமல் அண்ணனின் செளகரியத்தையே நினைப்பவனும் ஆன தம்பி எங்கே கிடைப்பான்? என வேதனைப் படுகின்றார் ராமர்.. என்ன பாவம் செய்தேனோ, இப்படிப்பட்ட தம்பி அடிபட்டுக் கீழே வீழ்ந்து கிடந்து வேதனையில் துடிப்பதைக் காண, தம்பி, என்னை மன்னித்துவிடு, என்று கதறுகின்றார் ராமர். அவரைத் தேற்றிய சுஷேணன், அனுமனைப் பார்த்து, நீ மீண்டும் இமயமலைச் சாரல் சென்று சஞ்சீவி மலையில் இருந்து விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸம்தானி, ஆகிய மூன்று முக்கிய மூலிகைகளைக் கொண்டுவா, லட்சுமணனை உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்றும் சொல்கின்றான் சுஷேணன், அனுமனிடம்.மீண்டும் சென்ற அனுமன் மீண்டும் மூலிகைகளை இனம் காணமுடியாமல் தவித்ததால் மீண்டும் சிகரத்தை மட்டும் கொண்டு போவதால் காலதாமதமும், மீண்டும், மீண்டும் வரவேண்டியும் இருக்கும் என நினைத்தவராய், இம்முறை மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்கின்றார். மூலிகை மருந்துகள் உள்ள மலையே வந்ததும், லட்சுமணனுக்கு அதன் சாறு பிழிந்து மூக்கின்வழியே செலுத்தப் பட்டதும், லட்சுமணன் மூச்சுவிட ஆரம்பித்து மெல்ல, மெல்ல எழுந்தும் அமர்ந்தான். தம்பியை உயிருடன் கண்ட மகிழ்ச்சியில் ராமரும் மனம் மகிழ்ந்தார். மேலும் சொல்கின்றார்:”நீ இல்லாமல் நான் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தால் அதனால் என்ன பயன்?? நல்லவேளையாக மரணத்தின் பிடியிலிருந்து நீ தப்பி வந்தாயே?” என்று கூறவும், லட்சுமணன் அவரை எடுத்த காரியத்தை முடிக்கவேண்டுகின்றான். ராவணன் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாகவே மரணம் அடையவேண்டுமென்றும், செய்த சபதத்தையும், கொடுத்த வாக்கையும் ராமர் நிறைவேற்ற வேண்டுமென்றும் சொல்கின்றார். ராமரும் உடன்பட்டு மீண்டும் ராவணனுடன் போருக்குத் தயார் ஆகின்றார். ராவணனும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றவனாய்ப் போர்க்களம் வந்து சேருகின்றான். ராமருக்கும், ராவணனுக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கின்றது. கடுமையாக இரு வரும் போரிட்டனர். ராவணனோ அதி அற்புதமான ரதத்தில் அமர்ந்திருக்க, ராமரோ தரையில் நின்று கொண்டே போரிட நேர்ந்தது. யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இந்த வித்தியாசம் புரிந்ததோடல்லாமல், தரையில் நின்று கொண்டே போரிட்டாலும் ராமரின் வீரம், ராவணனைச் செயலிழக்கச் செய்தது என்பதையும் கண்டு கொண்டார்கள்.. அப்போது அவர்களிடையே ராமருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்டாகியது. உடனேயே தேவேந்திரனின் ரதத்தை அனுப்ப முடிவு செய்து, தேவேந்திரன் தன்னுடைய ரதசாரதியாகிய மாதலியை அழைத்து, ரதத்துடன் உடனே பூமிக்குச் சென்று ராமருக்கு உதவி செய்யுமாறு கூற அவனும் அவ்வாறே புறப்பட்டுச் சென்று ராமரை வணங்கி இந்திரனுடைய தேரையும், ஆயுதங்களையும் காட்டி இதன் மீது அமர்ந்துகொண்டு ராவணனுடன் போரிட்டு அவனை வெல்லுமாறு கூறுகின்றான்.

தேரை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு, ராமர் அதில் ஏறி அமர்ந்தார். மீண்டும் சண்டை ஆரம்பம் ஆனது. ஆனால் இம்முறை ராவணனின் கையே ஓங்கி நின்றது. தன் அம்புகளாலும், பாணங்களாலும் ராமரைத் திணற அடித்துக் கொண்டிருந்தான் ராவணன். இலங்கேசுவரனின் இடைவிடாத தாக்குதல்கள் ராமரை நிலைகுலையச் செய்ததோடு அல்லாமல், தன்னுடைய வில்லில் அம்புகளைப் பூட்டி, நாண் ஏற்றவும் முடியாமல் தவிக்கவும் நேரிட்டது அவருக்கு. கோபம் கொண்ட ராமர் விட்ட பெருமூச்சு, பெரும் புயற்காற்றைப் போல் வேகத்தோடு வந்தது. அவர் பார்வையை நான்கு புறமும் செலுத்தியபோது சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று விண்ணை வெட்டுவது போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்தப் பார்வையில் பொசுங்கிவிடுவோமோ என சகல ஜீவராசிகளும் நடுங்கின. மூச்சின் வேகத்தில் விண்ணில் வட்டமிடும் மேகங்கள் சுழன்றன. கடலானது பொங்கிக் கரைக்கு வரத் தொடங்கியது. சூரியனின் ஒளி குன்றியது. ராவணன் மிக மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்தான். ராமரின் கோபத்தைக் கண்டு அஞ்சியவண்ணமே அவன் அந்த ஆயுதத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். போரில் இறந்த அனைத்து அரக்கர்கள் சார்பிலும் இந்த ஆயுதத்தைச் செலுத்தி ராமரையும், லட்சுமணனையும் , வானரப் படைகளையும் அடியோடு அழிக்கும்படியான வல்லமை பொருந்தியது இந்த ஆயுதம் என்று கூவிக் கொண்டே அதைச் செலுத்தினான் இலங்கேசுவரன்.


ராமர் அந்த ஆயுதத்தைத் தடுக்க முயன்றபோது முதலில் அவரால் முடியவில்லை. பின்னர் இந்திரனின் சிறப்பு வாய்ந்த சூலத்தினால் அந்த ஆயுதத்தைப் பொடிப் பொடியாக்கினார். ராவணனின் குதிரைகளை வெட்டி வீழ்த்திவிட்டு அவன் மார்பில் பாணங்களைச் செலுத்த ஆரம்பித்தார். ராவணன் உடலில் இருந்து செந்நிறக் குருதிப் பூக்கள் தோன்றின. எனினும் ராவணன் தீரத்துடனும், மன உறுதியுடனும் போரிட்டான். அதைக் கண்ட ராமர் அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொல்கின்றார்:” ஏ, இலங்கேசுவரா! அபலலயான சீதையை, அவள் சம்மதம் இல்லாமலும், தன்னந்தனியாக இருக்கும் வேளையிலும் பார்த்து நீ அபகரித்துக் கொண்டு வந்தாயே? என் பலத்தை நீ அறியவில்லை, அறியாமல் அபகரணம் செய்துவந்த நீயும் ஒரு வீரனா? மாற்றான் மனைவியைக் கோழைத்தனமாய் ஒருவரும் இல்லாத சமயம் கொண்டு வந்து வைத்துள்ள நீயும் ஒரு வீரனா? உனக்கு வெட்கமாய் இல்லையா? மனசாட்சி உள்ளவர்களுக்கே ஏற்படும் தயக்கமும், வெட்கமும் உனக்கு அப்போது ஏற்படவில்லையா? நீ இந்தக் காரியம் செய்ததினால் உன்னை, வீராதி வீரன், என்றும் சூராதி சூரன் என்றும் நினைத்துக் கொண்டுள்ளாய் அல்லவா? அது தவறு என உனக்குத் தெரியாமல் போனதும், உனக்கு வெட்கமும், அவமானமும் ஏற்படாததும் விந்தை தான். என் முன்னே நீ அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியுமா? அது முடியாதென்பதால் தானே, என்னை அப்புறப்படுத்திவிட்டு, நான் இல்லாதபோது என் மனைவியை அபகரித்து வந்திருக்கின்றாய்? உன்னை நான் இன்றே கொல்லுவேன். உன் தலையை அறுத்துத் தள்ளப் போகின்றேன். என் அம்பினால் உன் மார்பு பிளக்கப் பட்டு குருதி பெருகும். அந்தக் குருதியைக் கழுகுகளும், பறவைகளும் வந்து பருகட்டும். “ என்று ராமர் கூறிவிட்டு ராவணன் மீது மீண்டும் அம்பு மழை பொழியத் தொடங்கினார். கூடவே வானரர்களும் சேர்ந்து ராவணனைத் தாக்கத் தொடங்கினார்கள். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராவணன் பிரமித்து நிற்கவே, செய்வதறியாது திகைத்த அவனைக் காக்க வேண்டி, ராவணனின் தேரோட்டி, தேரை யுத்த களத்தில் இருந்து திருப்பி வேறுபக்கம் ஓட்டிச் சென்றான். ராவணனுக்குக் கோபம் பெருகியது. மிக்க கோபத்துடன் அவன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான்.